ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை – Shooting an Elephant

நாம் – குறிப்பாக இந்தியர்கள் – எப்போதும் காலனியத்தை பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம். எப்போதாவது பாதித்தவர் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் அனேகமாக அவர்கள் நம்மை அடிமைப்படுத்துவதில் எந்தத் தவறும் காணாதவர்கள், மேட்டிமை மனநிலை கொண்டவர்கள், நம்மை எப்போதுமே இரண்டாம்தர மனிதர்கள் என்று நினைப்பவர்கள். மிக அபூர்வமாக அது தவறு என்று உணர்பவர்கள், அதைத் திருத்தப் போராடுபவர்கள். ஆனால் கணிசமானவர்கள் அது தவறு என்று உணர்ந்தும் அதற்காக ஒன்றும் செய்ய முடியாத கையாலாகதவர்கள். அவர்களுக்கு இந்தப் பக்கமும் போக முடியாது, அந்தப் பக்கமும் போக முடியாது. பீஷ்மரும் துரோணரும் தவறு என்று தெரிந்தும் கௌரவர்களுக்காக போராடுவதைப் போன்ற மனநிலைதான்.

அந்தக் கண்ணோட்டம் ஜார்ஜ் ஆர்வெல்லின் இந்தக் கட்டுரையில் – Shooting an Elephant – சிறப்பாக வெளிப்படுகிறது. யானை ஊரை நாசம் செய்கிறது. வெள்ளைக்கார துரைதான் பிரச்சினையை சமாளிக்க வேண்டும். துரை துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருவதற்குள் யானை அமைதி அடைந்துவிடுகிறது. ஆனால் துரை யானையைக் கொல்வதைப் பார்க்க ஊரே கூடி இருக்கிறது. துரைக்கு யானையைக் கொல்லவும் மனதில்லை, ஆனால் கொல்லாமல் போனால் ஊரே சிரிக்கும். துரை என்ன செய்வார்?

ஆர்வெல் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1984, Animal Farm போன்ற பிரமாதமான, நல்ல நாவல்களை எழுதி இருக்கிறார். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது அவர் எழுதிய Homage to Catalonia என்ற அபுனைவுதான்.

கட்டுரையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜார்ஜ் ஆர்வெல் பக்கம்