‘காயத்ரி’ திரைப்படம்/நாவல் பற்றி சாரதா

காயத்ரி திரைப்படத்தைப் பற்றிய பதிவிலிருந்து தாவித்தாவி சாரதாவின் இந்த சுவாரசியமான பின்னூட்டத்தைப் பார்த்தேன். இப்போது ஒரு பதிவாகவே போட்டுவிட்டேன். ஓவர் டு சாரதா!

gayatri_film‘காயத்ரி’ நாவல், அப்போது பிரபலமாக இருந்த தினமணிகதிர் என்ற வார இதழில்தான் வெளியானது. வெளியானபோது நான் படிக்கவில்லை, அப்போது பிறந்திருந்திருப்பேனா என்பதும் தெரியாது. ஆனால் அந்நாளில் வெளியான நாவல்களை நான் படிக்க உதவியாக இருந்தது, சென்னை மயிலாப்பூரில் இயங்கிய ஒரு லெண்டிங் லைப்ரரி (காசு கொடுத்துப்படிக்க வேண்டும்… ஒரு புத்தகத்தை இத்தனை நாளைக்குள் திருப்பித் தரவேண்டும்… அதற்குள் படித்துவிட்டுக் கொடுக்காவிட்டால் மறுகட்டணம் என்ற ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு). அந்நிபந்தனைகளுக்குட்பட்டு அங்கே வாங்கிப்படிப்பதில் ஒரு மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம், நாவல்கள் அனைத்தும் பதிப்பகங்களில் வெளியான புத்தகங்கள் அல்ல. குமுதம், விகடன், கதிர், கல்கி போன்ற வார இதழ்களில் கிழித்து பைண்ட் செய்யப்பட்டவை. கதை யோட்டத்துடன் அமைந்த கண்ணைக்கவரும் அழகான படங்களுடன், அடிஷனல் போனஸாக அப்பக்கங்களில் வெளியாகியிருக்கும் துணுக்குகள், ஜோக்குகள் இவைகளுடன். கிழித்து பைண்ட் செய்யப்பட்ட நாவல்களில் இரட்டிப்பு சந்தோஷம் என்னவென்றால்… ஒன்று, வார இதழ்களில் படிக்கும் போது கிடைக்கும் ஆனந்தம். இன்னொன்று, கதையை எங்காவது ரொம்ப சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்தி “தொடரும்” என்று போட்டுவிடுவார்களோ என்ற பயமின்றி படிக்கலாம்.

இவ்வகையில், பைண்ட் செய்யப்பட’காயத்ரி’ நாவலைப் படித்துவிட்டு, அதே ஆவலுடன் ‘காயத்ரி’ திரைப்படம் பார்க்கச்சென்றபோது படம் ‘சப்’பென்று இருந்தது. கதையில் கணேஷ்-வசந்த் இருவரும் காயத்ரியைக் காப்பாற்றி அழைத்து வருவதாக இருந்த முடிவை மாற்றி, படத்தில் காயத்ரி இறந்துபோய் விடுவதுபோல முடித்திருப்பார்கள். ஆக, படம் முழுக்க பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீண் என்பதுபோல தெரியும்.

காயத்ரி திரைப்படத்தில் கணேஷ் ரோலில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும், வசந்த் ரோலில் வெண்ணிற ஆடை மூர்த்தியும் நடித்திருந்தனர். சுஜாதாவின் எல்லாக் கதைகளிலும் கணேஷ் ரோல் கொஞ்சம் சீரியஸானது என்பதும் வசந்த் ரோல் கொஞ்சம் கோமாளித்தனமானது என்பதும் நமக்குத்தெரிந்தது தானே. ஆனால் காயத்ரி நாவலில் முழுவீச்சில் வந்த கணேஷ் ரோலை (வசந்த் ரோலையும்தான்) வெட்டிக்குறைத்து, ஒரு கெஸ்ட் ரோலுக்கும் கொஞ்சம் அதிகமாக சுருக்கி விட்டனர்.

படத்தில் முதலில் அந்த “அக்கா” ரோலுக்கு பிரமீளாவைத்தான் புக் செய்திருந்தார்களாம். இடையில் எப்படி ராஜசுலோச்சனா மாற்றப்பட்டார் என்பது தெரியவில்லை. நல்லதுதான். பிரமீளாவிடம் ராஜசுலோச்சனா வின் அடாவடித்தனத்தை பார்த்திருக்க முடியாது.

படம் பார்த்த நமக்கே இவ்வளவு ஏமாற்றம் எனும்போது, கதையைக் கருவுற்ற சுஜாதாவின் ஏமாற்றம் எப்படியிருக்கும் என்று உணரலாம். ‘காயத்ரி’ ரிலீஸானபோது ‘ப்ரியா’ தயாரிப்பில் இருந்தது. காயத்ரியைப்பார்த்து அதிர்ந்த எழுத்தாளர் சுஜாதா, குமுதம் பேட்டியில், “பஞ்சு (அருணாச்சலம்)கதையைக் கேட்டாரே என்பதற்காகக் கொடுத்தேன். பஞ்சு பஞ்சாக்கிவிட்டார். ப்ரியா என்ன கதியாகப்போகிறாளோ” என்று சொல்லியிருந்தார். அவர் பயந்ததுபோலவே நடந்தது. ஆனால் எஸ்.பி.தமிழரசிக்கு ‘கல்லாப்பெட்டி’ நிறைந்தது (உபயம் ரஜினி + இளையராஜா + சிங்கப்பூர்).

(காயத்ரி நாவலின் கடைசி வரி இன்னும் நினைவிருக்கிறது…..

காயத்ரியை ஏற்றிக்கொண்டு வந்த கார், ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலைநோக்கி விரைந்தது. காயத்ரி “ஏன் ஓட்டலுக்குப் போறீங்க?. உங்க வீட்டிலேயே தங்கிக்கிறேனே. உங்க மேல எனக்கு நம்பிக்கையிருக்கு”. அதற்கு வசந்த், “உங்களுக்கு நம்பிக்கையிருக்கு. ஆனா எங்க மேல எங்களுக்கு நம்பிக்கையில்லே”. கார், ஓட்டல் காம்பவுண்டுக்குள் நுழைந்தது).

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், திரைப்படங்கள், விருந்தினர் பதிவுகள்

தரையில் இறங்கும் விமானங்கள்

indumathiஇது ஒரு guest post. தோழி சாரதாவை இப்போதெல்லாம் இணையத்தில் பார்க்க முடிவதில்லை. சந்திரபிரபா எழுதிய பின்னூட்டம் ஒன்றிலிருந்து தாவித் தாவிப் போய் இதைப் பிடித்து பதித்திருக்கிறேன். ஓவர் டு சாரதா!

எழுத்தாளர் இந்துமதியின் பல்வேறு நாவல்களில், என் மனதை மிகவும் கவர்ந்த ஒன்று என்றால் என் மனதில் பளிச்சென்று நினைவுக்கு வருவது ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ தான். (அவரது பல நாவல்கள் எனக்குப்பிடிக்காது என்பது வேறு விஷயம்)

பொதுவாக நாவல்கள் என்றால் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். அல்லது கதாசிரியர் தனது வார்த்தைகளில் காட்சிகளை விவரித்துக்கொண்டு போவார். இது இன்னொரு ரகம். அல்லது கதாசிரியர் தனது கற்பனை வளத்தைக்காட்ட, எல்லை தாண்டி அதீதமாக வர்ணித்துக்கொண்டு போவார். இவையெல்லாம் இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் மூலமாகவே ஒரு கதையை, நாவலை நகர்த்திக்கொண்டு போக முடியுமா? அப்படி அபூர்வமாக அமைந்த ஒரு நாவல்தான், இந்துமதி எழுதிய “தரையில் இறங்கும் விமானங்கள்”.

இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் மன உணர்வுகள் நம்முடன் பேசும். மிகக் குறைந்த அளவே பாத்திரங்கள். பரமு என்கிற பரமசிவம் அண்ணன். அவனுக்கு விஸ்வம் என்றொரு தம்பி. விஸ்வத்துக்கு பாசமே உருவான ஒரு அண்ணி, ரொம்ப கண்டிக்காமல் பொறுப்பை உணர வைக்க எத்தனிக்கும் அப்பா. பாதியில் மறைந்துவிடும் அம்மா. விஸ்வம், வாழ்க்கையை எந்திரமாக அல்லாது கலையாக ரசித்து வாழத் துடிப்பவன். அவனுக்கு காதல், திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை, பல பட்சங்களுக்கு கீழே. படிப்பு, படித்த பின் வேலை, வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்தைத் தொடர்ந்து குழந்தைகள், பின் அவர்களை ஆளாக்க போராட்டம்….. இவ்வளவுதான் வாழ்க்கையா? இதுக்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்படும் வித்தியாசமான வாலிபன்.

அவனுடைய உலகமே வேறு. அதனுள் தனக்குத் தானே மனக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு அதிலேயே சஞ்சரித்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வாழும் அவனுக்கு முதல் இடியாக வந்தது அம்மாவின் மறைவு. ஆனால் அதையும் கூட பேரிழப்பாக தோன்றாதவாறு அவனுக்கு இன்னொரு தாயாய் அண்ணி இருந்து ஈடு கட்ட, அவன் தொடர்ந்து தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு தாக்குதலுக்கு ஆட்பட்டது அண்ணனின் வேலை மாற்றலின் போது. இனியும் அவன் கற்பனை உலகில் உலவிக்கொண்டிருக்க முடியாது என்று அப்பா பக்குவமாக எடுத்துச் சொல்லி குடும்பப் பொறுப்புக்களை சுமக்க வைக்க, அதுவரை வானத்திலேயே பறந்து கொண்டிருந்த விமானம் தரையிறங்குகிறது.

எவ்வளவுதான் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலும், அது அங்கேயே பறந்து கொண்டிருக்க முடியாது ஒரு சமயத்தில், குறைந்தபட்சம் எரிபொருள் தீரும் நிலையிலாவது அது தரையிறங்கியே தீர வேண்டும். இறங்கிய பின்னும் அது தன் பழைய நினைப்பில் சிறிது தூரம் மூச்சிரைக்க ஓடி ஒரு நிலைக்கு வந்தே தீர வேண்டும் என்ற ய்தார்த்த உண்மையை விளக்கும் அருமையான நாவல்.

இதில் மனதை கொள்ளை கொள்ளும் விஷயம், நான் முன்பே குறிப்பிட்டது போல உரையாடல்கள் மிகக் குறைவாக, உள்ளத்துக்குள்ளே தோன்றும் எண்ண ஓட்டங்களையே அதிகமாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால், இந்துமதியின் மற்றைய நாவல்களினின்றும் இது தனித்து நிற்கிறது. கதையில் வரும் வர்ணனைகள்தான் எவ்வளவு யதார்த்தமானவை, எவ்வளவு ஜீவனுள்ளவை. வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகும் விஸ்வம், அந்த அலுவலக வெளி வராந்தாவில் காத்திருக்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கும் மரக் கூட்டமும், அதில் துள்ளி விளையாடும் அணிலும் அப்படியே தத்ரூபமாக நம் கண் முன்னே தோன்றுகின்றன. மீண்டும் அதே அலுவலகத்துக்கு இண்ட்டர்வியூவுக்குப் போகும்போது விஸ்வத்தின் மனம் குதூகலிக்கிறது, வேலை கிடைக்கும் என்பதை எண்ணி அல்ல, மறுபடியும் அந்த காம்பவுண்டில் நிற்கும் மரக் கூட்டத்தையும் அதில் விளையாடும் அணிலையும் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில். அந்த அளவுக்கு இயற்கையை நேசிக்கும் அவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த எந்திர வாழ்க்கைக்கு ஆட்படுகிறான் என்பதை இந்துமதி விவரிக்கும் அழகே தனி.

மனதைக் கவரும் பல இடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் தெருப் பக்கம் விளக்கை அணைத்து விட்டு விஸ்வமும் அண்ணியும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தூரத்தில் மெல்ல ஒலிக்கும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மாட்டு வண்டிகள் வரிசையாக தங்கள் வாசலைக் கடந்து போகும்போது மணல் நறநறவென்று அரைபடுவதும், மெல்ல மெல்ல மணிச் சத்தம் தூர தூரமாகப் போய் அடங்கிப்போக, ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த்து போல விஸ்வம் நினைத்துக் கொண்டிருக்க, ‘விஸ்வம் கொஞ்ச நேரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்தது போல தோன்றியதில்லையா?’ என்று அண்ணி கேட்க அவன் அதிர்ச்சியடைவது.

ஒரு அண்ணிக்கும் கொழுந்தனுக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போல சித்தரிப்பதில் கதாசிரியை பெரும் வெற்றி கண்டுள்ளார். விஸ்வம், அண்ணன் பரமு, அண்ணி, அப்பா, அம்மா என்று எல்லோருமே கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத, நம் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் கள்ளம் கபடமில்லாத வெகுளியான பாத்திரங்கள். அது மட்டுமல்ல இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள். யாரும் யாருக்கும் குழி பறிக்காதவர்கள். அதனால் இக்கதையில் திடீர் திருப்பம் போன்ற சுனாமிகள், சூறாவளிகள் எதுவுமின்றி, சம்பவங்கள் மனதை தென்றலாய் வருடிப் போகும். கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

இக்கதை தூரதர்ஷன் சேனலில் தொலைக்காட்சித் தொடராகக் கூட வந்ததாகச் சொன்னார்கள். பார்க்கவில்லை, பார்க்காததற்கு வருந்தவுமில்லை. காரணம், நான் படித்திருந்த சில நல்ல நாவல்கள் தொடராகவோ, திரைப்படமாகவோ உருவானபோது அதன் ஜீவன் பலமாக சிதைந்து போனதைப் பார்த்து வேதனை அடைந்தவள் நான்.

‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை பலர் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பெண் எழுத்தாளர்கள், தமிழ் நாவல்கள், விருந்தினர் பதிவுகள்

தொடர்புடைய சுட்டி: ஆர்வியின் பதிவு

 

அசோகமித்ரன் பரிந்துரைகள்

இது நண்பர் செல்வராஜின் பதிவு.

asokamithranஅசோகமித்திரன் டாப் 10 நாவல்களாக “காலக்கண்ணாடி” என்ற கட்டுரை நூலில் குறிப்பிடும் நாவல்கள்

 1. பிரதாப முதலியார் சரித்திரம்
 2. கமலாம்பாள் சரித்திரம்
 3. தியாகபூமி
 4. மண்ணாசை
 5. நாகம்மாள்
 6. வாழ்ந்தவர் கெட்டால்
 7. தில்லானா மோகனாம்பாள்

8-10 இடங்களுக்கு அவர் பரிந்துரைக்கும் நாவல்கள்

 1. அசடு
 2. அவன் ஆனது
 3. உயிர்த்தேன்
 4. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்
 5. ஒரு புளியமரத்தின் கதை
 6. கரிக்கோடுகள்
 7. காகித மலர்கள்
 8. நினைவுப் பாதை
 9. பள்ளிகொண்டபுரம்
 10. கிருஷ்ணப் பருந்து
 11. நதிமூலம்
 12. சுதந்திர பூமி

படைப்பாளிகளின் உலகம்” என்ற கட்டுரை நூலில் இந்திய விடுதலைக்குப் பின் வெளியான தமிழ் நாவல்களின் மைல் கற்கள் என குறிப்பிடும் நாவல்கள்

 1. மோகமுள்
 2. அசுரகணம்
 3. அறுவடை
 4. ஒரு புளியமரத்தின் கதை
 5. தலைமுறைகள்
 6. கரைந்த நிழல்கள்
 7. மலரும் சருகும்
 8. அம்மா வந்தாள்
 9. காகித மலர்கள்
 10. தந்திரபூமி
 11. கடல்புரத்தில்

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், பரிந்துரைகள், மற்றும் Guest Posts

தொடர்புடைய சுட்டிகள்: அசோகமித்ரன் பரிந்துரைகள் 1, 2, கோபியின் பதிவு

தமிழ்ப் பேராசிரியை சுசீலா

m_a_susilaஎம்.ஏ. சுசீலா சிறந்த வாசகி. பல முக்கிய நாவல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவ்வப்போது கதைகளும் எழுதுகிறார். (சில கதைகளில் பிரச்சார நெடி தூக்கல் என்பது என் எண்ணம், தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்ற நம்பிக்கைதான் – உதாரணம்: கண் திறந்திட வேண்டும்) கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்ப் பேராசிரியர்கள்/பேராசிரியைகள் என்றாலே சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவது நல்லது என்ற என் தப்பபிப்ராயத்தை மாற்றியவர் அவர்தான். என்றாவது அவர் மெச்சும்படி ஒரு கதை எழுத வேண்டும்…

சுசீலாவின் ஆய்வுகளில் விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்றால் நமக்கெல்லாம் பிரதாப முதலியார் சரித்திரம் தெரியும்; மிஞ்சிப் போனால் கமலாம்பாள் சரித்திரமும் பத்மாவதி சரித்திரமும் தெரியும். சுசீலா தேடிக் கண்டுபிடித்து படித்து, அதைப் பற்றி உரை நிகழ்த்தி, புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்!

அவரிடம் தொணதொணத்து வாங்கிய பதிவு கீழே…

என் அனுபவப் பகிர்வுகள்-பேராசிரியராக…

அறிமுகம்

பிறந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் நடக்கும் கம்பன் விழா,  தமிழில் எனக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்தது.  அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியை.  வீடு முழுதும் புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.  இளமையிலேயே படிப்பதில் ஆர்வம். புத்தகங்களுடனான உறவு அதிகம். தமிழ் மீடியத்தில் உயர்நிலைக் கல்வி முடித்தபின் கல்லூரியில் பி.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படித்த நான், பின்பு தமிழில் முதுகலை பயில நினைத்ததற்குக் காரணம் இந்தப் பின்னணிதான்.  எம்.ஏ., தமிழ் முடித்தவுடன் 1970இல் மதுரை பாத்திமா கல்லூரியில் வேலை கிடைத்தது.  எனது முனைவர் பட்டப் படிப்பு எல்லாம் வேலை பார்த்துக் கொண்டே படித்ததுதான்.  ஆசிரியையாகப் பணிபுரிந்தாலும் படைப்பிலக்கியத்தின் மேல் நிறைய ஆர்வம்.

1979-இல் நான் எழுதிய முதல் சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து கால இடைவெளி விட்டு விட்டு [வேலை,வீட்டுப்பொறுப்பு காரணமாய்] 70க்கு மேற்பட்ட சிறுகதைகள்
நூல் வடிவத்தில். இது வரை 4 சிறுகதைத் தொகுப்புகள், 4 கட்டுரைத் தொகுப்புகள், நூல்கள், தஸ்தயெவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்’, ’அசடன்’என 2 மொழிபெயர்ப்புகள் என்று 10 நூல்கள்.
2007-ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதிலும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்

தமிழ்ப் பேராசிரியராக என் பங்களிப்பு:

வெட்டுப்புலி புகழ் தமிழ்மகனுக்கு அளித்த ‘ஆனந்த விகடன்’ பேட்டியில் பிரசுரிக்கப்படாமல் விடுபட்டு, அவரது வலையில் வெளியானதிலிருந்து

பேராசியர் பணி காலத்தில் நீங்கள் செய்த முக்கிய பங்களிப்பாகக் கருதுவது?
உண்மையில் என் பங்களிப்பின் தாக்கத்தை மதிப்பிட வேண்டியது என் மாணவர்கள்தான்…!
மொழி, இலக்கியக் கல்வியை ஊதியம் பெறுவதற்கு வழி காட்டும் கல்வியாக மட்டுமே ஆக்கி விடாமல் இலக்கியத்தின் மீதான மெய்யான ஆர்வத்தையும் தாகத்தையும் வளர்த்தெடுக்கும் பட்டறைகளாக என் வகுப்பறைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன் என்ற மனநிறைவு எனக்கு இருக்கிறது. மரபிலக்கியப் பயிற்சியோடு தேங்கிப்போய் விடாமல் சம கால நவீனத் தமிழிலக்கியங்களையும் விமரிசனங்களையும், திறனாய்வுகளையும் மாணவர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் என்னால் இயன்ற வரையில் செய்திருக்கிறேன். பல்வேறு தன்னாட்சிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் பாடத் திட்டக்குழுவில் இருந்தபோது சமகாலப்போக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வடிவமைக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களை சரிவரப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். படைப்பாளிகளாகப் பரிணாமம் கொள்ளக்கூடிய மாணவர்களை இனம் கண்டு அவர்களது படைப்பாற்றல் மேம்படத் தூண்டுதல் அளித்திருக்கிறேன்.அவர்களில் ஒரு சிலர் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களாகவும் முத்திரை பதித்திருக்கிறார்கள். பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணி ஆற்றியதால், பெரும்பாலான நேரங்களில் பாடங்களோடு ஒருங்கிணைத்துப் பெண்ணியக் கோட்பாடுகளைச் சரியான புரிதலுடன் முன் வைப்பதற்கு ஏற்ற களமாக என் வகுப்பறையே எனக்கு அமைந்து போனது; அவற்றைச் சரியான கோணத்தில் உள் வாங்கிக் கொண்டு பல பெண்ணியச் சிந்தனையாளர்களும், படைப்பாளிகளும், இயக்கப் போராளிகளும் கூட என் மாணவிகளிலிலிருந்து உருவாகி இருக்கிறார்கள்.

மாணவிகளோடு சில…

அனுபவம்-1

6 ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு!
“அம்மா… என்னை நினைவிருக்கிறதா? நான்தான் தேனம்மை…” என்றது அந்தக் குரல். ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்து வரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும். அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி – அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது.

ஆசிரியப் பணியில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருந்தாலும் பெயர்களையும், முகங்களையும் நினைவில் தக்க வைத்துக் கொள்ளும் கலையில் மட்டும் எப்போதுமே நான் சற்று சுமார்தான். ஆனால் தேனம்மை விஷயத்தில் அப்படி நேரவில்லை; நேரவும் வாய்பில்லை. காரணம் மாணவப் பருவத்திலேயே தேனம்மை என் மீது கொண்டிருந்த கள்ளமற்ற பாசம், பிடிப்பு. அதற்கெல்லாம் மேலாகத் தான் ஒரு வேதியியல் மாணவியாக இருந்தபோதும் தமிழ் வகுப்புக்களில் காட்டிய அதீத ஆர்வம். (வேறு வழியில்லாமல் தமிழிலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களை விட வேதியியல்,இயற்பியல்,விலங்கியல்,வணிகம் போன்ற துறைகளில் பயில்பவர்கள் தமிழை ஆர்வத்தோடு அணுகுவது நான் கண்டிருக்கும் அனுபவ உண்மை.)

சின்னச் சின்னத் தாள்களிலும் கையேடுகளிலும் கவிதைகளை எழுதி எழுதி என்னிடம் தந்தபடி என் ஒப்புதலை, விமரிசனத்தைப் பெறுவதற்காக சிறுபிள்ளை போலக் காத்திருக்கும் வற்றாத படைப்பிலக்கிய தாகம். கல்லூரி நூலகம் போதாதென்று என்னிடம் பல சமகாலப் படைப்புக்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம். இவை அனைத்தும் தேனம்மையை ஒரு விசேடமான மாணவியாக்கி என் நெஞ்சில் நிறுத்தி வைத்திருந்ததால் நினைவுகளுக்குள் துழாவிக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இல்லாமல் போயிற்று.

“தேனம்மையா! எப்படி இருக்கிறாய், எங்கே இருக்கிறாய், என் தொலைபேசி எண்ணை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்று கே.பி.சுந்தராம்பாள் பாணியில் கேள்விகளாய் அடுக்கிக் கொண்டு போனேன். மதுரையில் அப்போது வசித்து வந்த தேனம்மை, பாரதி புத்தக நிலையம் சென்றதும் அங்கே இருந்த குற்றமும் தண்டனையும் மொழியாக்க நூலில் என் பெயரைக் கண்டு பதிப்பாளரிடம் கைபேசி எண்ணை வாங்கி உடனே என்னைத் தொடர்பு கொண்டதும் அப்போதுதான் தெரிந்தது.

கதை அதோடு முடிந்துவிடவில்லை. அந்த நூலை வாங்கி முழுவதும் படித்து விட்டுப் பெரியதொரு விமரிசனக் கடிதத்தையும் எழுதி எனக்குத் தபாலில் அனுப்புமளவுக்குத் தேனம்மையின் ஆர்வம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அந்தக் கடிதத்தை நானே தட்டச்சு செய்து என் வலைத் தளத்திலும் ஏற்றியிருக்கிறேன்.

அவையெல்லாம் கடந்த காலங்கள்! இந்த மூன்று ஆண்டுகளுக்குள் தன் தணியாத ஆர்வத்தால் இணையத்துக்குள் நுழைந்த என் மாணவி – தேனம்மை லெட்சுமணனாகி வலையுலகில் தனி முத்திரை பதித்தபடி, பல இதழ்களில் கவிஞராய், கதையாளியாய், கட்டுரையாளராய், மிகச் சிறந்த ஒரு வலைப் பதிவராய்ப் பாராட்டுக்களைக் குவித்து வருவதோடு ‘சாதனை அரசிகள்’என்ற தன் முதல் நூலையும் [இப்போது ‘ங்கா’, ‘அன்னப் பட்சி’ என்று இன்னும் இரண்டு கவிதை நூல்கள் – அன்னப் பட்சி எனக்கு சமர்ப்பணம்,அதற்கு அணிந்துரையும் தந்திருக்கிறேன்] வெளிட்டுச் சாதனை படைத்திருக்கும் தேனம்மை என்னைப் பெருமைப்படுத்துகிறார்.
பி.கு; எப்போதோ ‘80களில் நான் எழுதிய கடிதம் ஒன்றையும் தன் தளத்தில் பத்திரப்படுத்திப் போட்டிருக்கிறது அந்தப் பாசக்காரப்பெண்.

அனுபவம்-2

இலக்கியம் படிப்பவர்கள் – உண்மையாகவே அதில் தோய்ந்து கலப்பவர்கள் – வாழ்வின் இனிய தருணங்களானாலும், நெருக்கடியான சூழல்களானாலும் தங்களை இளைப்பாற்றிக் கொள்ளவும் களிப்பேற்றிக் கொள்ளவும் இலக்கியத்தின் துணையையே நாடுவதுண்டு;

மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையிலுள்ள உறவை நோயாளிக்கும், மருத்துவனுக்கும் இடையிலுள்ள உறவாக எடுத்துரைக்கும் குலசேகர ஆழ்வாரின்

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே

[புண்ணை ஆற்ற வேண்டுமென்பதற்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்கிறார். காரமான மருந்துகளை வைத்துக் கட்டுகிறார். நோயாளி, வலி தாங்காமல், எரிச்சல் பொறுக்காமல் கத்துகிறான்;துடிக்கிறான். ஆனாலும் அதற்காக மருத்துவரை ஒதுக்கி விட முடிகிறதா என்ன? காயம் முழுமையாக ஆறி அவன் பூரண குணம் பெறும் வரை, மீண்டும் மீண்டும் ‘மாளாத காதலுடன்’ அவன் நாடிப் போவது அந்த வைத்தியரைத்தான். இறைவனும் கூட ஒரு வகை வைத்தியன்தான்; பிறவிப்பிணிக்கு மருந்திடும் அற்புத மருத்துவன் அவன்.]
என்ற இந்தப் பாடலை முதலாம் ஆண்டு எம்.ஏ.தமிழ் மாணவியருக்கு அப்போது நான் கற்பித்துக் கொண்டிருந்தேன்.

இந்தப் பாடல் சார்ந்த சுவாரசியமான-சற்றுத் துன்பமான நிகழ்வு ஒன்று அப்போது நேர்ந்தது. முதல் வரிசையில் அமர்ந்து இலக்கியப் பாடல்களை ரசித்துக் கேட்கும் மாணவி ஒருத்தி, சில நாட்களாய்க் கல்லூரிக்கு வரவில்லை.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் கூட இருந்தாள் அவள் என்று நான் கேள்விப்பட்டேன். திடீரென்று இரண்டு நாட்கள் சென்றபின் அவளிடமிருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு.(அது செல்பேசி இல்லாத பொற்காலம்)

“அம்மா! அந்த ‘வாளால் அறுத்துச் சுடினும்’ பாட்டைக் கொஞ்சம் சொல்லுங்கம்மா எழுதிக்கிறேன்” என்றாள் அவள்.

“அதிருக்கட்டும்.அப்பா எப்படி இருக்கிறார்?”- இது நான்.

“அதுதாம்மா. சக்கரையாலே காலிலே சீழ் வச்சுப் புண்ணா இருக்கு. டாக்டர் ‘ஆபரேஷன்’ செய்யணும்கிறார். அப்பத்தான் நான் டாக்டர்கிட்டே இந்தப் பாட்டைப் பத்திச் சொன்னேன். அவருக்குப் பாட்டை முழுசாத் தெரிஞ்சிக்கணுமாம். சொல்லுங்கம்மா” என்று தன் கோரிக்கையைத் தொடர்ந்தாள் அவள்.

தந்தைக்கு நேர்ந்திருக்கும் சிக்கல், மருத்துவமனைச் சூழல் என எல்லாவற்றையும் கடந்து – ஆனாலும் அதற்குள் தான் கற்ற இலக்கியத்தையும் முடிச்சுப் போட்டு மருத்துவரிடமும் அதைப் பகிரத் துடிக்கும் அந்தப் பெண்ணின் ஆர்வம். இத்தனை நாள் ஆசிரியத் தொழில் செய்ததற்கு ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது என்பதையும், வெறுமே பதவுரை பொழிப்புரை சொல்லி மதிப்பெண் வாங்க வைப்பதைவிட மிக நல்ல பலன் இது என்பதையும் பொட்டில் அடித்தாற்போல எனக்கு விளங்க வைத்தது.

“துன்பம் நேர்கையில் …..தமிழில் பாடி நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” என்ற பாரதிதாசனின் வரிகள் புதிய அர்த்தச் செறிவோடு மனதுக்குள் சிம்மாசனம் இட்டு அமர்ந்த அரிய நாள் அது.

தாள் திருத்தும்போது சில சுவாரசியங்கள்

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, விடைத்தாள் திருத்தப் போன இடத்தில் வாய்த்த வேடிக்கையான அனுபவம் ஒன்று. இலக்கணத்தில் எப்போதுமே தற்குறிப்பேற்றத்துக்குத் தனியான ஓரிடம் உண்டு. இயற்கையாக தன்னிச்சையாக நடக்கும் நிகழ்ச்சிகளுக்குள் கவிஞன் புதிதான ஒரு அர்த்தப் பரிமாணத்தை ஏற்றிக் கூறுவதே தற்குறிப்பேற்றம். (தன் குறிப்பையும் அத்துடன் ஏற்றிக் கூறுதல்!) சிலம்பில் கண்ணகி கோவலனின் கரம் பற்றி முதன்முதலாக மதுரை நகருக்குள் நுழைகிறாள்.
மதிலின் உச்சியில் பறந்து கொண்டிருக்கும் வண்ணமயமான கொடிகள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கின்றன. மதுரைக்குள் நுழைந்தால் அவளுக்காகப் பேரின்னல் காத்திருக்கிறது என்பதால் அவளை வராதே என்று சொல்லுபவை போல அவை காற்றில் அசைந்தன என்று அதில் தன் குறிப்பை ஏற்றுகிறார் இளங்கோ.

போருழந்து எடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல மறித்துக் கை காட்ட

இது அழகான உவமைதான்; அற்புதமான கற்பனைதான். ஆனாலும் காலம் காலமாக வேறு எடுத்துக்காட்டுக்களே சொல்லப்படாமல் இந்தப் பாடல் வரிகள் மட்டுமே வகுப்பறைகளில் திரும்பத் திரும்ப வறட்டுத்தனமாக எடுத்தாளப்பட்டு வந்ததால் பொருளும், இலக்கணக் கோட்பாடும் புரிகிறதோ புரியவில்லையோ தற்குறிப்பேற்றம் என்றாலே இந்த வரிகளை உருப்போட்டு எழுதி விட்டால் போதும் மதிப்பெண் கிடைத்துவிடும் என்ற மனநிலைக்கு ஆட்பட்டுப் போயிருந்தார்கள் மாணவர்கள்.
அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேதான் பொது விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்தபோது மாறுதலான ஒரு விடைத்தாள் கையில் சிக்கியது.
அந்தத் தாளில் தற்குறிப்பேற்றத்துக்குச் சான்றாகக் கீழ்க்காணும் கண்ணதாசனின் வரிகள் இடம் பெற்றிருந்தன.

மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது

இயற்கையாக மூடித் திறக்கும் காதலியின் விழிகள், பார் பார் என்று தன்னை அழைப்பது போலவும், காற்றில் பறக்கும் அவளது சேலை தன்னை அன்போடு அழைப்பது போலவும் காதலனுக்குப் படுகிறது என்று கூறும் இந்த வரிகளை மேற்கோளாகத் தந்திருக்கும் மாணவர் மேலே சொன்ன சிலம்பின் உதாரணத்தை மட்டுமே இயந்திரம் போல எழுதிவிட்டுப் போகும் வேறு எவரையும் விட அந்த இலக்கணக் கோட்பாட்டை முழுமையாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறாரென்று எனக்குப் பட்டதால் மானசீகமாக அவரது தனித்தன்மையைப் பாராட்டியபடி, முழு மதிப்பெண் வழங்கினேன்.


வழி வழி வந்த செக்குமாட்டுத் தனத்தில் ஊறிய நம் கல்வி அமைப்பு அதை அத்தனை சுலபமாக அங்கீகரித்து விடுமா என்ன? நான் திருத்தும் விடைத்தாள்களைப் பார்வையிடும் பொறுப்பிலிருந்த முதன்மைத் திருத்துநர் வினாக் குறியை முகத்தில் தேக்கியவாறு என்னை அழைத்தார்.

“என்னம்மா இது? சினிமா பாட்டை எழுதியிருக்கான், முழு மார்க்கைப் போட்டிருக்கீங்களே!” அந்தக் கேள்வியின் மிக மோசமான அபத்தத்தைத் தாங்கிக் கொண்டபடி நிதானமாகப் பதில் சொன்னேன்.

“அதில் தற்குறிப்பேற்றம் இருக்கிறதா இல்லையா பாருங்க சார்”

“அதுக்காக?”

அவர் ஏதோ பேச முற்பட்டார். அடுத்த அபத்தத்துக்கு ஆயத்தமாக இல்லாத நான், “இவ்வளவு நாளிலே இப்பதான் ஒரு மாணவர் தற்குறிப்பேற்றம்னா என்னன்னு சரியா விளங்கிக்கிகிட்டிருக்கார்னு நினைக்கிறேன். எனக்கு அதிகாரம் இருந்தா அவருடைய தனித்தன்மைக்காகவே இன்னும் கூட அதிகமா மார்க் போட்டிருப்பேன்” என்றபடி அங்கிருந்து நகர்ந்தேன்.
ஆனால் அவரது பரிசீலனைக்குப் பிறகு – நான் அந்த மாணவருக்கு வழங்கிய மதிப்பெண்கள் நிச்சயம் மாற்றப்பட்டிருக்கும் என்பது எளிதாக எதிர்பார்க்கக் கூடியதுதான்!

இது மிக மிகச் சாதாரணமான சராசரியான ஒரு சம்பவம்தான் என்றாலும் இத்தனை ஆண்டுகளின் நகர்வுகளுக்குப் பின்னும் இவ்வாறான நிலைகளில் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை..என்பதோடு இன்னும் மோசமான சறுக்கல்களும் கூடச் சம்பவித்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.

கீழ் மட்டம் தொடங்கி உயர் பட்டம் பெறும் கட்டம் வரை, மாணவர்களின் சுயத்தை – தனித்துவமான சிந்தனைகளை அழிக்கும் பலிபீடங்களாகவே பெரும்பாலான கல்விக் கூடங்கள் இன்று வரையிலும் கூட விளங்கிக் கொண்டிருக்கின்றன என்கிற கசப்பான நிஜம் நெஞ்சைச் சுடுகிறது.

பேராசிரியர்களோடு

தமிழ்ப் பேராசிரியர்களை கோவை ஞானி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன் எனப் பலரும் கிழிகிழி என்று கிழிப்பதற்கு நான் வருத்தமே படுவதில்லை; ஒரே தரப்பில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதான உறுத்தலும் இல்லை. உண்மை உண்மைதானே!! நான் பணிபுரிந்த காலத்தில் ஒரு வேற்று மதப் பேராசிரியர் எம் ஏ தமிழுக்குக் கம்ப ராமாயணம் கற்பித்து வந்தார். ஜெ சொல்லும் ஜேசுதாசன் போல அல்ல! இந்திரஜித் யாரென்று கூடச் சொல்லாமல் அந்த வகுப்பு தொடர துறைத் தலைவர் வரை செய்தி போய் பிறகு முதல்வர் வரை விசாரணை. அலட்டிக் கொள்ளாமல் அவர் சொன்ன பதில் இதுதான்!

“நான் ஒரு கிறிஸ்தவர். எனக்கு ஏன் அதெல்லாம் தெரிய வேண்டும்?”

இந்த அபத்தங்களுக்கு எங்கே போய் முட்டிக்கொள்வது? பேராசிரியராக இருந்தேன் என்று சொல்லக்கூட சமயங்களில் கூச்சமும் வெட்கமுமாகவே இருக்கிறது. திறமையானவர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு வாங்கும் சம்பளத்துக்கும் மனசாட்சிக்கும் உண்மையாக இருப்பவர்களும் இல்லாமல் இல்லை; ஆனால் மேலே சொன்னவர்களால் “மரத்தில் மறைகிறது மாமத யானைகள்”. என்னைப் பொறுத்தவரை முதல் நாள் வேலையில் அடியெடுத்து வைத்த மாதிரியே இறுதி நாள் வரை இருக்க வேண்டுமென மனதில் முடிந்து கொண்டேன்; ஓரளவு அப்படி இருந்திருக்கிறேன் என்பதன் சாட்சியங்களாக எங்கிருந்தோ என் மாணவிகள் சாட்சியம் அளித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். அது போதும்…

இன்றைய தமிழாய்வுகள் குறித்த கோபம்

‘ஆய்தல்’ என்ற சொல்லுக்கு “உள்ளதன் நுணுக்கம்’ என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம். அப்படி நுணுகிப் போகாவிட்டாலும் கூடச் சரியான புரிதல் கூட இல்லாமல், எடுத்துக் கொண்ட பொருளை நுனிப்புல் மேய்ந்தபடி பட்டம் பெற முனையும் முனைவர்களும், அந்தப் படுபாதகத்துக்குத் துணைபோகும் வழிகாட்டிகளும் என்னைக் கோபப் படுத்துகிறார்கள். பதவி உயர்வுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் தமிழாய்வு தரம் குன்றிப் போவதைத் தாங்கிக் கொள்ள முடியாத என் மன உளைச்சலின் வடிகால்களே கீழே உள்ள கட்டுரைகள். [நன்றி; வடக்கு வாசல்]

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?
கல்வித் தரத்தில் அக்கறை கொண்டோரின் மேலான கவனத்திற்கு


தொகுக்கப்பட்ட பக்கம்: அனுபவங்கள்

வெங்கடரமணன் எண்ணங்கள்

Venkatramananபல மாதங்களுக்கு முன் சென்னை நண்பர் வெங்கடரமணனிடம் இன்று டாப்பில் இருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் யார் என்று கேட்டிருந்தேன். அவருடைய விலாவாரியான பதில் இன்று மீண்டும் கண்ணில் பட்டது, அதை மீள்பதித்திருக்கிறேன். இப்போது இந்த நிலையில் ஏதேனும் மாற்றங்கள் உண்டா?


சுஜாதா இன்னிக்கும் டாப்புதான்! பாலகுமாரனுக்கும் இன்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை! ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது! கிழக்கு பதிப்பகம் பத்ரியைக் கேட்டால் இல்லைம்பார்!)

ஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (உங்க தோஸ்த்!) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒண்ணு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க! ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம் கொடுத்து நடிகநடிகையரை ஊழியர்களாக வைத்துக்கொள்ளும் முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர் ( பட்டியலைப் பார்க்கவும்! எத்தனை பேர் கிழக்கில் கிட்டத்தட்டப் பிரத்தியேகமாக எழுதுகின்றனர்னு தெரியவரும்!)

மேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்!(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்!) அதேபோல் இன்று கிழக்கில் “You name it! We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன். (விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்!).

இன்று படைப்புதான் கிட்டத்தட்ட முக்கியமாகப் படுகிறது! ஆனாலும் என்.சொக்கன், பா.ராகவன் என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது!(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்!). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்! “கிழக்கு ப்ளஸ்” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

எஸ்.ராவிற்கு விகடனின் துணையெழுத்திற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி அகம்புறம் எழுதிய வண்ணதாசனுக்கும், நாஞ்சில் நாடனுக்கு தீதும் நன்றும் தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.

பெண்களிடம் ரமணிசந்திரன் இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க! (தொடர்பான நண்பன் நந்தாவின் – – சூடான இடுகையும் மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது!)

மேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க?!)

மற்றபடி எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! எனிஇந்தியன், விருபா, கிழக்கு, காமதேனு, விகடன், உயிர்மை என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!)

இது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

ஆங்… சொல்ல மறந்துட்டேன்! ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள்! 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

“யப்பா! இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன்! நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன்! (Either that or “மாட்டினான்டா ஒருத்தன்! செத்தான்…!”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன்! எழுதாம விட்டது நிறைய! பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும்! இல்லை தனிமடலிடவும். ஒண்ணும் அவசரமில்லை!

அன்புடன்
வெங்கட்ரமணன்

பி.கு. கடைசியா ஒரு இணைப்பு! – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லம் கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்! கட்டாயம் படித்துப் பாருங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: References, Guest Posts

ரோஹின்டன் மிஸ்திரி எழுதிய “எ ஃபைன் பாலன்ஸ்”

இது நண்பர் பாலாஜி (பாலாஜி ஸ்ரீனிவாசன் இல்லை) எழுதிய பதிவு. அவருக்கு நன்றி!

A Fine Balance” நாவலை நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் வாசிக்கத் துவங்கினேன். Rohinton Mistry-யின் பெயரை இணையத்தில் யாரோ சொல்லிக் கேட்டிருந்ததால் நூலகத்தில் இப்புத்தகத்தைப் பார்த்ததும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

கூட்டமான மும்பை ரயிலில் பிரயாணம் செய்யும் 3 பாத்திரங்களின் அறிமுகத்தோடு துவங்குகிறது இந்த நாவல். 18 அல்லது 19 வயதுடைய ஓம் பிரகாஷ், அவனது பெரியப்பா ஈஸ்வர் மற்றும் கல்லூரி மாணவன் மானெக். முதல் இருவரும் வேலை தேடியும், மானெக் தங்கும் இடம் தேடியும் செல்கிறார்கள். மூவர் செல்லும் இடம் ஒன்றே. அது நான்காவது கதாபாத்திரம், தினா தலாலின் வீடு. இந்தப் புள்ளியிலிருந்து பின்னோக்கிச் சென்று இவர்களின் முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளும், இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்த சூழ்நிலைகளையும் விவரிக்கிறது.

தினா தலால், காதலித்துக் கைப்பிடித்த கணவன் மூன்றே வருடங்களில் விபத்தில் மரணமடைந்த பின், உறவென்று இருக்கும் ஒரே அண்ணனின் தயவில் வாழ நேர்ந்தவள். வெறும் சமூகத்திற்கு பயந்தே தன்னை காப்பாற்றும் அண்ணனின் தயவில் வாழ விருப்பமில்லாமல், சுயமாய் சம்பாத்தித்து வாழத் துடிப்பவள். தோழிகளின் உதவியால் தையல் வேலை கிடைக்க, தனியே வாழ முனைகிறாள். வரும் வருமானம் போதவில்லை. ஆனால் வேலையோ நிறைய. இரண்டையும் சமாளிக்க, வீட்டை உள்வாடகைக்கும்,தையல் வேலைக்கு ஆட்களையும் வைத்துக் கொள்ள முடிவு செய்கிறாள். வாடகைக்கு மானேக்கும், வேலைக்கு ஓம் பிரகாஷ் மற்றும் ஈஸ்வரும் வந்து சேர்கிறார்கள். இவர்களைச் சுற்றி பின்னப்பட்ட கதை.

தினாவின் முந்தைய வாழ்க்கை, அவள் அண்ணனுடன் சிறு வயது முதல் ஏற்படும் உரசல்கள், 3 வருட மண வாழ்க்கை போன்றவை மேல் நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்புகள்.

ஈஸ்வரும், ஓம் பிரகாஷும் வட இந்தியக் கிராமத்திலிருந்து, மும்பைக்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள். செருப்புத் தைக்கும் வேலையைக் குலத் தொழிலாகக் கொண்ட இவர்கள் குடும்பம் எதிர் கொள்ளும் சாதிக் கொடுமைகளும், மும்பை வந்த பிறகு இவர்களின் வாழ்க்கை முறையும் அடித்தட்டு மக்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது.

மானெக், ஒரு மலை வாசஸ்தலத்திலிருந்து, கல்லூரியில் சேர்ந்து படிக்க மும்பைக்கு வரும் மாணவன். அவன் தந்தை ஒரு மளிகைக் கடை வைத்திருப்பவர். மகன் நன்கு படித்து முன்னேற வேண்டும் என்று விரும்பி, மானேக்கின் விருப்பத்திற்கு மாறாக அவனை மும்பைக்கு அனுப்புகிறார். இது கீழ் நடுத்தர வர்க்கத்தின் பிரதிபலிப்பு.

நால்வருக்கும் ஒருவரது உதவி மற்றவருக்குத் தேவைப்படுகிறது. தினாவிர்க்கு மானேக்க்கின் மூலம் வரும் வாடகைப் பணம், ஈஸ்வர் மற்றும் ஓம் பிரகாஷ் மூலம் வரும் உபரி வருமானம் ஆகியவை முக்கியம். மானேக்கிற்கு, கல்லூரி விடுதியில் ஏற்ப்பட்ட கசப்பான அனுபவங்களினாலும், மும்பையில் தினாவின் வீட்டைத் தவிர குறைவான வாடகையில் வேறு இடம் கிடைக்காத காரணத்தினாலும் அங்கு இருப்பது அவசியம். மற்ற இருவருக்கும் மும்பையில் பல வேலை தேடி அலைந்த பிறகு கிடைத்த இவ்வேலையை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். இதனால் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் சந்தேகங்களும், அர்த்தமற்ற பயங்களும் கலந்த ஒரு வாழ்க்கை தரிசனத்தைக் காட்டுகிறார் மிஸ்திரி.

ஈஸ்வர், ஓம் பிரகாஷ் ஆகியோரது கிராம வாழ்க்கையைப் பற்றி எழுதும்போது தலித் கொடுமைகள், மேல் சாதியினர் தலித்துகளுக்கு இழைத்த கொடுமைகளை மிக விவரமாக எழுதுகிறார். போதாக்குறைக்கு, ஈஸ்வரின் முன் தலைமுறையிலிருந்து விவரிக்கத் தொடங்குவதால், சுதந்திரத்தை ஒட்டி நடந்த ஹிந்து-முஸ்லிம் கலவரத்தையும் சேர்த்திருக்கிறார். இது தவிர, எமர்ஜென்சிக் காலத்தை ஒட்டி நடக்கும் இக்கதையில், மானேக்கின் கல்லூரி நண்பன் அவினாஷின் திடீர் தலைமறைவு, பின்னர் அவனது மரணமாக வெளிவரும் சம்பவம் ராஜன் கொலை வழக்கின் பாதிப்பில் எழுதியதோ என்ற சந்தேகம் எனக்கு.

மேலும் அந்தச் சமயத்தில் சஞ்சய் காந்தியின் கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நடந்த அட்டூழியங்களையும் கதைக்குள் புகுத்திவிடுகிறார். ‘இந்தியால இப்போ எமர்ஜென்சி வரணும் அப்போதான் இந்த பஸ், ரயிலெல்லாம் சரியான நேரத்துக்கு வரும்’ என்னும் வகையில் அரசியல் பேசும் ஆட்களையே பார்த்த எனக்கு, அன்று எமர்ஜென்சியினால் விளைந்த கொடுமைகளும், மனித உரிமை மீறல்களும் பெரும் அதிர்ச்சியையும், அருவருப்பையும் வரவழைத்தன. இதோடு இந்நாவலில் எளிமையான, நேரடியான அரசியல் அங்கதமும் உண்டு.

இவை தவிர, ஈஸ்வரும், ஓம் பிரகாஷும் மும்பையில் சந்திக்கும் பல்வகைப்பட்ட மனிதர்கள் – ராஜாராம் (தலைமுடியை சேகரித்து, விற்று வாழ்பவன்), குரங்காட்டி (Monkey Man), பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்தும் Beggar Master (ஏழாம் உலகத்தின் போத்திவேலு பண்டாரத்தை நினைவூட்டும் பாத்திரம்). இவர்கள் மூலம் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை நுணுக்கமாக விவரிக்கிறார்.

இருக்க இனி ஒன்றுமில்லை என்ற நிலையிலும், இழக்க இனி ஒன்றுமில்லை என்று போராடத் துணியும் இந்தப் பாத்திரங்கள் மூலம், இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அதே நேரம் அர்த்தமற்ற அரசியலாலும், சமூகத்தின் அக்கறையின்மையினாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட இவர்களது வாழ்க்கையைப் பார்க்கும் போது, நம் அடிப்படைக் கட்டமைப்பின் மீதே ஒரு அவநம்பிக்கையை தோற்றுவிக்கிறார். மொத்தத்தில் நாவலை வாசித்து முடிக்கும் போது ஒரு நீண்ட காலத்தைக் கடந்து வந்ததைப் போன்ற ஆயாசம் ஏற்ப்படுகிறது. அதையும் தாண்டி ஒரு முழுமையான வாழ்க்கைச் சித்திரம் கிடைப்பதால் வாசிப்பனுபவத்திற்க்குக் குறை இல்லை.

என்னைப் பொறுத்தவரை வாசிக்க வேண்டிய, நீண்ட நாவல் என்றாலும் வாசிக்கக் கூடிய புத்தகம் இது. கண்டிப்பாக வாசியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

ஆயுள் தண்டனை – நரசய்யா

(திருமதி லலிதாவின் புத்தக விமர்சனம் – அது சரி யார் இந்த லலிதா?  இந்தத் தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான RVக்கு படிக்க சொல்லிக் கொடுத்ததே அவர் தான். இவர் ஒரு தேர்ந்த வாசகர். சிலிக்கன் ஷெல்ப் இலக்கிய வட்டத்தின் guest உறுப்பினர்.  சென்னையில் வசிக்கிறார். ஆமாம், திருமதி லலிதா ஆர்வியின் தாய்தான் 🙂 )

அண்மையில நான் படித்த நரசய்யாவி்ன் ஆயுள் தண்டனை மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று 94-வயது மூதாட்டி வாழ்க்கையின் நிலையாமையை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார். தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை மனதில் இருத்தி தன் பேரனுக்கு அரிய தத்துவங்களச் சுலபமாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் பாங்கு உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது.

உயர் பதவியில் இருக்கும் தன் பேரனைப் பார்த்து பாட்டி கேட்கிறாள். ‘உன் கடடுப்பாட்டில் பணியாற்றும் ஒருவரை வேறு பணியிடத்திற்கு மாற்றும் அதிகாரம் உனக்கு உள்ளதா?’

‘ஆம். உண்டு’ இது பேரனின் பதில். அந்த நபர் பணிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னசெய்வாய்? என்று பாட்டி கேட்க, ‘வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி விடுவேன்’என்கிறான் பேரன்.

மீண்டும் கேள்விக்கணை தொடுக்கிறாள் பாட்டி. ‘மேலும் அந்தக் காலிப் பணியிடத்தில் வேறு ஒரு நபரை மாற்றவோ அல்லது நியமிக்கவோ கூட உனக்கு அதிகாரம் உண்டா?’ ‘இல்லை’ என்கிறான் பேரன்.

பாட்டி மெளனம் காக்கிறாள். சற்று நேரம் பதில் இல்லை. கண் முன்னே அவள் வாழ்க்கை சினிமா போல் மனத்திரையில் மலர்கிறது.

‘வாழ்க்கைப் பயணத்தில் நீண்டகாலம் பயணிக்கும் பயணி நான். ஆனால் என்னுடன் இருந்த பலரும் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.அதில் முதியவர்கள், இளையவர்கள் என எத்தனையோ பேர்  அடக்கம். என்னை வேறு இடத்திற்கு மாற்ற இறைவனுக்கு மனமில்லை போலும். ஒரு வேளை என்னை அனுப்பக் காலி இடம் ஏதுமில்லையோ என்னவோ? இருந்து அனுபவிக்கவேண்டும் என்பதுதான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதோ? இதுதான் எனக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை என்று நினைக்கிறேன்.’ பாட்டியின் குரலில் விரக்தி தொனித்தது.

பாட்டியின் கூற்று எத்தனை உண்மை! ‘தண்டனை ஆயுளுக்கும் இருக்கலாம். ஆயுசாலேயும் இருக்கலாம் இல்லையா?’ பாட்டியின் வினா பேரனின் சிந்தனையைத் தூண்டியது. இன்றைய ஆதர்சவாதியான பேரன் ‘constant quantity theory’ என்பதையும் உடலில் எந்த விதக் கோளாறும் இல்லாமல் இருக்கும் பாட்டியின் உடல்நிலை டாக்டர்களே வியக்கும் “clinical wonder”என்பதையும் ஒப்பிட்டுப் பாரக்காமல் இருக்க முடியவில்லை.

கடைசியில் பாட்டி ‘சதாயுசா நன்னா ஐஸ்வர்யத்தோடு, ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்’ என்று மனமார பேரனை வாழ்த்துகிறாள். பேரனுக்கு சற்றே நெருடல் மனதில். உடனே பிறக்கிறது கேள்வி.

‘பாட்டி நீண்ட ஆயுஸ் உங்களுக்குத் தண்டனை என்றால் எனக்கும் அதே தண்டனைதானா?’ பேரன் குழம்புகிறான். பாட்டி சொன்னாள். ‘முகூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ நது தூமாயுதம் சிரம். இது மகாபாரதத்திலே, உத்யோக பர்வத்திலே வரது. ராணி விதுலை சொல்றா. அப்படீன்னா யுகங்களுக்கும் பொகஞ்சுண்டு இருக்கிறத விட ஒரு கணத்துக்குப் ப்ரகாசிச்சுட்டுப் போறது உத்தமம்.”

ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான் என்பதுதான் கதையின் முத்தாய்ப்பே.

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு நரசய்யாவே எழுதிய மறுமொழி:

எப்படி ஏன் என்று தெரியாமல் வைத்திருப்பது ஆண்டவனின் முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. செப் 15, 2011 ல் இடபபட்ட இந்த இடுகை இன்று, மதுரையில் எங்கள் தாயார் சிரார்த்தத்திற்கு வந்திருக்கும் எனது கண்களில் பட்டது! நானே மறந்துவிட்டேன். ஆனால் இன்று பார்க்கநேர்ந்தபோது இவ்விடுகை இட்டவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் எனவே தோன்றிற்று.
உங்களுக்கும் உமது தாயாருக்கும் எனது நன்றிகள்.
ஏனென்றால் நான் தான் அக்கதை எழுதிய நரசய்யா!

தொடர்புடைய சுட்டிகள்:
தென்றல் இதழில் நரசய்யாவின் நேர்காணல் முதல் பகுதி, இரண்டாம் பகுதி (Registration Required) சுட்டிகள் கொடுத்த நண்பர் அரவிந்துக்கு நன்றி!

பாரதி வைத்த மூன்று நெருப்புகள்

இன்று பாரதி நினைவு நாள். (செப்டம்பர் 11) என் அப்பா ராமசாமி எழுதிய guest post. அப்பாவின் நடைக்கும் என் நடைக்கும் உள்ள வித்தியாசம் ஆச்சரியப்படுத்துகிறது. ஓவர் டு அப்பா!

செப்டம்பர் 11-ஆம் தேதி அன்றுதான் பாரதிர பா ரதம் ஓட்டிய அமரகவி பாரதியின் நினைவு நாள். பாரதி “யார்” என்று கேட்காமல் ஆண்டுதோறும் அந்த நாளைக் கொண்டாடி வருகிறோம். அன்னார் சிலைக்கு மாலை அணிவித்தல், தேசிய கவி, கவிதை மூலம் விடுதலை வேட்கையைத் தூண்டிய புரட்சியாளர் சமுதாயச் சீர்திருத்தவாதி என்பன போன்ற புகழ் மாலைகள் சூட்டிப் பெருமை கொள்கிறோம். ஆனால் அந்தக் கவிஞன் இதயத்தில் கோபம் பல இடங்களில் கொப்பளிக்கிறது. மக்களை,சமூகத்தை பலவகையிலும் சாடுகிறான். கொழுந்து விட்டு எரியும் அந்தக் கனல் மூன்று இடங்களிலும் தீயிட்டுக் கொளுத்துகிற அளவுக்கு இருந்தது என்றால் அது மிகையாகாது.

முதலாவதாக நாம் பெண்ணியம், பெண் விடுதலை போன்ற விஷயங்களைப் பெருமையுடன் பெருமளவில் விவாதிக்கிறோம். அலசி அலசி பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம். ஆனால் அன்றே பாரதி “பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும் “பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று விடுதலைக் கும்மியிலும் பலவாறு பாடி மகிழ்கிறான். சக்தி, சக்தி எங்கும் சக்தி என உரத்துக் கூறிப் பெருமிதம் கொள்கிறான். ஆனால் பெண்களுக்கு இழுக்கு என்றால் அவன் நெஞ்சம் பொறுப்பதில்லை. “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்று வெகுண்டெழுகிறான். இதுதான் அய்யா, பாரதி பற்ற வைக்கும் முதல் நெருப்பு!

இரண்டாவதாக நாம் இலவசக் கல்வி, சமச்சீர் கல்வி,உயர் கல்வி, தொழிற் கல்வி என்றெல்லாம் அதிக அளவில் தர்க்கம் செய்கிறோம். மேடைகளில் முழங்குகிறோம். ஆனால் அடிப்படைக் கல்வியை, வாழ்க்கைக் கல்வியைப் பெருமளவில் மறந்துவிட்டோமே? கல்விக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து கொடுக்கத் தவறிவிட்டோமே? இளஞ்சிறார் வாழ்க்கை வளம் பெற நல்ல பல ஆயத்தங்கள் செய்துவிட்டோமா? அமைப்புகளை உருவாக்கி இருக்கிறோமா? மீண்டும் பாரதி இங்கும் அறைகூவல் விடுக்கிறான்.

“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்” போன்ற நற்காரியங்கள் பலவிருந்தாலும் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்ற உண்மையை முழுமையாக பாரதி உணர்ந்த காரணத்தால், “கல்வி வேண்டும், கல்விச் சாலைகள் வேண்டாவா?” என்று வினவுகிறான். மீண்டும் கவிஞன் குரல் உரத்துக் கேட்கிறது.

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
…………
நகர்களெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியிலாத தோரூரை
தீயினுக்கு இரையாக மடுத்தல்

மீண்டும் பாரதியின் நெருப்பு; ஆம் பாரதியின் இரண்டாவது நெருப்பு.

சிறுமை கொண்டு பொங்கியவன் பாரதி. தவறென்று தெரிந்தால் தயக்கமின்றித் தட்டிக் கேட்கும் வல்லமை படைத்தவன். பாண்டவர்களின் மூத்தோன், தருமன் சூதாடி உடைமைகளனைத்தையும் – இளவல்கள், மனைவி அனைவரையும் இழந்தான். பாஞ்சாலி கெளரவ ஸபையில் அவமதிக்கப்பட்டாள். தவறு செய்த அண்ணனை, மூத்தவன் என்று கூடப் பாராமல் பீமன் சொற்களால் கவிஞன் சாடுகிறான்.

இது பொறுப்பதில்லை தம்பி!
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்

மூன்றாவது முறையாக கவிஞன் பாரதியின் கனல் தெறிக்கும் சொற்கள் இது. பாரதியின் மூன்றாம் நெருப்பு.

பாரதி நினைவு நாளில், நாமும் வாய்ச்சொல் வீரராக இல்லாமல், செயல் வீரராக மாறி, அவனுடைய முற்போக்கு கருத்துக்களை நடைமுறைப்படுத்த சூளுரைப்போம்.

P.S. ஏன் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் கவிதையை விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.

‘நடந்தாய் வாழி காவேரி’ – சாரதாவின் குறிப்புகள்

தி.ஜா. பற்றி சொல்வனம் சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது என்றதும் தி.ஜா. பற்றி எழுதலாமே என்று எனக்கும் தோன்றியது. ஆனால் நண்பர் பாலாஜி சமீபத்தில் இப்போதெல்லாம் தி.ஜா.வை படிக்க முடியவில்லை என்று சொல்லி இருந்தார், மோகமுள்ளையும் அம்மா வந்தாளையுமாவது மீண்டும் படித்துவிட்டுத்தான் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சாரதாவின் பதிவையாவது மீள்பதிவு செய்கிறேன்.

எங்கள் சினிமா ப்ளாக் அவார்டா கொடுக்கறாங்க தளத்தைப் படிப்பவர்களுக்கு சாரதா பற்றிய அறிமுகம் தேவை இல்லை. அவருடைய சில சினிமா விமர்சனங்களை அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் பதிப்பித்திருக்கிறேன். தி. ஜானகிராமன் மற்றும் சிட்டி இணைந்து எழுதிய travelogue – பயண நூல் – “நடந்தாய் வாழி காவேரி” தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும் புத்தகம். தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும் எழுதியிருக்கிறார்கள். வாசகர் வட்டம் பதிப்பித்த புத்தகம். இப்போது காலச்சுவடு மறுபதிப்பு செய்திருக்கிறதாம். ஓவர் டு சாரதா!

Thi. Janakiraman
Chitti
சென்னை தி.நகர் ‘வாசகர் வட்டம்’ குழுமத்தைச் சேர்ந்த திருவாளர்கள் சிட்டி, மற்றும் தி.ஜானகிராமன் இணைந்து எழுதிய இது போன்ற அற்புத நூலுக்கு மதிப்புரை எழுதும் தகுதியெல்லாம் எனக்கு வந்துவிடவில்லையாதலால், இதை மதிப்புரை எனக் கொள்ள வேண்டாம். நூலைப் படித்து வியந்த (வியக்கும்) ஒரு வாசகி/ரசிகையின் எண்ணத்தில் உருவான சில வரிகள் எனக் கொள்ளலாம். இந்நூல் என்னை வந்தடைந்ததே ஒரு சுவையான கதையென்றாலும், அதை பின்னூட்டத்தில் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் நேரடியாக உள்ளே.

முன்பு வெளிநாட்டு பயணக் கட்டுரைகள் என்றாலே விரும்பிப் படிக்கும் ஆர்வம் கொண்ட எனக்கு சிறிது காலத்திலேயே அவை கிட்டத்தட்ட ஒரே நோக்கில் (தமிழில்: ஸ்டீரியோடைப்) பயணித்து சலிப்பைத் தருகின்றனவோ என்று தோன்றத் துவங்கிவிட்டது. பிரம்மாண்டமான விமான நிலையங்கள், உயரமான கட்டிடங்கள், கட்டுரையாளர் உணவகங்களில் சைவம் கிடைக்காமல் அவதிப்பட்டது, அங்குள்ள தமிழ்க் குடும்பங்களின் ஆதரவு, உபசாரம் மற்றும் உதவிகள், அவற்றுக்கு நன்றிக்கடனாக அவர்களைப் பற்றி சில வரிகள் அல்லது சில பக்கங்கள் (உதவியின் அளவைப் பொறுத்து), இப்படியாக சலிப்பைத் தந்த வேளையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே (மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளில்) பயணித்து எழுதப்பட்ட, வழக்கமான வரைமுறைகளை மீறி, சரியாகச்சொன்னால் அவற்றுக்கு அப்பாற்பட்டு, கையில் எடுத்தால் கீழே வைக்க மனமில்லாத அளவுக்கு ஒரு தேர்ந்த நாவலையும் தோற்கடிக்கும் சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி’ எனும் இந்நூலின் துவக்கமே அருமை.

சில இடங்களின் வர்ணனைகள் நூல் எழுதப்பட்ட காலத்தில் இருந்த நிலைமை சார்ந்தது, இப்போது மாறியிருக்கலாம். ‘மாயவரத்தின் பிரதான சாலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பிரியும் ஒரு மண் சாலையில் ஒரு கைகாட்டி ‘காவேரிப்பட்டினம்’ என்று காட்டிக் கொண்டிருக்க அது சோழர்களின் துறைமுகமான ‘காவிரி புகும் பட்டினம்’ செல்லும் சாலையெனத் தெரிகிறது. ஒரு காலத்தில் துறைமுகத்திலிருந்து தலைநகர் உறையூர் செல்ல அமைக்கப்பட்ட நேர் சாலை இப்போது மணல் சாலையாக, இரு பக்கமும் கருவேல மரங்கள் தோரணம் கட்டி நிற்க, சிள்வண்டுகளை இரைய விட்டிருக்கிறது’ என்ற துவக்கமே நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. காவிரியை, தலை முதல் கால் வரை நேரில் கண்டு ரசிக்கும் ஒரு பயணம் மேற்கொண்டால் என்ன என்று தோன்றியதாகச் சொல்லும் நூலாசிரியர்கள், ‘செயற்கைக் கோள்கள் சந்திரனையும் சுக்கிரனையும் வலம் வந்துகொண்டிருக்கும் இந்த விஞ்ஞான யுகத்தில் இதென்ன விபரீத எண்ணம்?’ என்று தோன்றியதையும் ஒப்புக் கொள்கிறார்கள். சென்னையிலிருந்து தனி வாகனத்தில் நண்பர்கள் சிலருடன் புறப்படும் அவர்கள் நேராகச் செல்வது சீரங்கப்பட்டணத்துக்கு. அதிலிருந்து காவிரிக் கரையூடாகவே செல்லும் அவர்கள் குடகு மலையை அடைந்து, மெர்க்காராவில் தலைக் காவிரியிலிருந்து, பயணித்து வருவதாக சம்பவம்.

ஆனால் அதை அவர்கள் வரி வரியாக விளக்கும் முறையில், நாம் நூலைப் படிப்பதாகத் தெரியாது. அந்த வாகனத்தின் முன்வரிசையில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டே வருவதான உணர்வு நம்மை ஆட்கொள்ளும். அங்கங்கே வரம்பு மீறாத இயல்பான நகைச்சுவை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும். தலைக்காவிரியை நோக்கிப் போகும்போது, ‘சித்தாப்பூர் என்னும் ஊரில் வர்ணா பாம்புகள் அதிகம்’ என்று ஒரு புத்தகத்தில் படித்துவிட்டு பயந்துகொண்டே அந்த ஊருக்குள் நுழைய, வர்ணாவும் இல்லை பாம்பும் இல்லை. வர்ணம் அடித்த வீடுகளும் கடைகளும் தென்பட, காருக்கு தீனி வாங்கும் இடத்தில் அங்கிருந்தவனிடம் வர்ணா பாம்பு எங்கே என்று கேட்க, அவன் பேந்த பேந்த விழித்துவிட்டு, தான் பிறந்ததிலிருந்து ஒரு பாம்பைக் கூட அங்கு பார்த்ததில்லை என்றும், பாம்பாட்டியின் கூடையில்தான் பார்த்திருப்பதாகவும் விளக்கும் இடம் ஒரு உதாரணம். அதைப் படித்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். மெர்க்காராவில் மேகமூட்டங்களுக்கு மத்தியில் நுழைந்து பயணம் செய்யும்போதும், திடீரென பிடித்துக் கொள்ளும் மழையில் நனைந்து கொண்டே பொருட்களை இறக்கும்போதும், நாமும் நனைகிறோம். ஆடுதாண்டு காவிரியைக் காணும்போதும், பண்ணேர்கட்டா பண்னையில் தங்கும்போதும் அப்படியே. ஒகேனக்கலில் ஒரு மன்னார்குடி மாமியின் குடிசை உணவகத்தில் மிளகாய் வத்தல் குழம்பு சாப்பிடும்போதும் நாமும் அதை அனுபவிக்கிறோம். நூலாசிரியர்களின் எழுத்து வன்மை அத்தகையது. அவற்றின் சுவையை பாமரத்தியான எனக்கு சொல்லத் தெரியவில்லை. காவிரித் தாயின் இதயமான மேட்டூர் அணை பற்றி மட்டுமல்ல, அங்கங்கே உள்ள தடுப்பணைகள் பற்றியும் கூட சுவையான தகவல்கள். வழியில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண குடிலில் பெறும் சுவையான அனுபவங்கள். எதைச் சொல்வது, எதை விடுவது. காவிரியோடு கொள்ளிடம் கண்ட அனுபவங்களைச் சொல்லும்போது, அருகே அமைந்துள்ள கங்கைகண்ட சோழபுரத்துக்கும் ஒரு கிளைப்பயணம் (‘விஸிட்’ என்று சொன்னால் சட்டென விளங்கும் அளவுக்கு ஆங்கிலம் நம் மீது அமர்ந்துவிட்டது). அந்த அத்தியாயம் துவங்குவதே ஒரு அழகு.

‘தொலைவில் நரைநிறத்தில் கோபுரம் தெரியும்போதே மனம் நெகிழத் துவங்கிவிடும். அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் ஏற்படும் அனுபவம். ராஜேந்திர சோழன் ஏன் இதைக் கட்டினான்? தஞ்சையில் ராஜராஜேச்சுரத்தை தந்த தந்தையை மிஞ்சவா? அப்படியானால் அபாரமாகத் திட்டமிட்ட கோபுரத்தை ஏன் பாதியில் மழித்துக் குட்டையாக்கினான்? எந்த தோல்வி, அல்லது உணர்வு அவனைத் தடுத்தது? வளமான காவிரிக்கரையை விட்டு வறண்ட இப்பகுதியில் ஏன் இதைக் கட்டினான்? இப்பகுதி மக்களுக்கும் ஒரு அக வாழ்வைத் தரவா?’ இப்படி நீண்டு செல்லும் நூலாசிரியர்களின் விளக்கம், பின்னர் கொள்ளிடத்தில் மேலணை கீழணை கட்ட கற்களூக்காக பிரிட்டிஷ் அரசாங்கம், இக்கோயிலின் ராஜ மதிலைத் தகர்த்து கருங்கற்களை எடுத்துச் சென்ற சோகத்தைச் சொல்லும்போது நம் மனமும் அழும். (இன்றைக்கும் ராஜ மதிலின்றி, திறந்த கோயிலாகத்தான் நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுரம்).

கல்லணையில் துவங்கி பிரியத் துவங்கிய காவிரியின் கிளையாறுகள், தண்ணீரைப் பிரித்து எடுத்துச்செல்ல, கும்பகோணம் வரும்போதே காவிரி சிறுத்துவிடுகிறது. எனவே, கும்பகோணத்துக்கு கிழக்கே வீரசோழன் கிளைக்கும்போது, ‘காவிரி தந்து, தந்து மெலிந்துகொண்டே போவதைப் பார்க்கும்போது நம் மனதில் சோகம் தலை தூக்குகிறது’ என்று நூலாசிரியர்கள் எழுதும்போது நம் மனதையும் அந்த உணர்வு அழுத்துகிறது. காவிரிக் கரையில் வளர்ந்த கலாச்சாரம்தான் எத்தகையது, பண்பாடுதான் எவ்வளவு உன்னதமானது! குழாயிலும்தான் தண்ணீர் வருகிறது. அதுவே ஆற்றில் ஓடும்போது இப்படியா பாட்டாகக் கேட்கும், இசையாக மலரும், பண்பாடாக வளரும், கோயிலாக உயரும்!

ஆயிரம் தடுப்புக்களில் இன்று காவிரி சிறைப்பட்டிருக்கலாம். ஆனால் அன்றைக்கு கல்லணை கூட கட்டப்படாத நிலையில் கரை புரண்டு ஓடிய காவிரியைப் பார்த்து இளங்கோவடிகள் ஆர்ப்பரித்தது போல இந்நூலைப் படித்த பின் நமக்கும் ஆர்ப்பரிக்கத் தோன்றுகிறது.
‘காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்’

“நடந்தாய் வாழி காவேரி” புத்தகத்தை சாரதா வாங்கிய அனுபவமும் சுவையாக இருக்கிறது. வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடம் நேராக வாங்கி இருக்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்:
சிட்டியின் ப்ளாக் – அவர் மறைவதற்கு ஒரு ஆறேழு மாதம் முன்னால்தான் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
சிட்டியைப் பற்றி ஹிந்து நாளிதழில்
சாரதா இந்தப் புத்தகத்தை லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து நேரடியாக வாங்கினார்

சிறை – விகடனின் திரைப்பட விமர்சனம்

சிறை திரைப்படத்துக்கு விகடன் 56 மார்க் கொடுத்திருக்கிறது. விகடனில் கஞ்சத்தனமாகத்தான் மார்க் போடுவார்கள். 56 மார்க் என்றால் அவர்கள் அகராதியில் மிக நல்ல படம் என்று பொருள். இன்றைக்கு பார்த்தால் எப்படி இருக்குமோ, ஆனால் அன்றைக்கு தமிழ் கூறும் நல்லுலகம் – குறிப்பாக பெண்கள் பெரிதும் விரும்பிப் பார்த்த திரைப்படம். விகடனுக்கு நன்றி சொல்லி, இந்த விமர்சனத்தை இங்கே பதிக்கிறேன்.

கோவி. திருநாயகன், விருத்தாசலம்-3
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பாகீரதி தாலியைக் கழற்றியெறிவது கதைக்குத் தேவையான புரட்சிகரமான கருத்துதான் என்றாலும்கூட, தமிழ்ப் பண்பாட்டுக்கு முரணாக உள்ளதை எண்ணும்போது உறுத்துகிறதே?
பாகீரதியின் இந்த முடிவை, அது எடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு முக்கியத்துவம் தந்து, யதார்த்தமான கண்ணோட்டத்தில் அந்தப் பிரச்னையை அணுகினால், உறுத்தல் இருக்காது!

தாலியின் புனிதத்தையோ, அதன் அவசியத்தையோ மறுப்பதோ, மறப்பதோ இங்கு கதாசிரியையின் எண்ணம் அல்ல. ஆனால், மனத்தால்கூடத் தவறிழைக்காத பெண் பாகீரதி. எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ஒரு கயவனால் அவள் கற்பழிக்கப்பட்டுவிடும்போது, அதை ஜீரணிக்கமுடியாத கணவன், அவளுடன் தொடர்ந்து இல்வாழ்க்கை நடத்த விரும்பாவிட்டாலும், தன்னை நம்பி வந்த அந்த அபலைப் பெண்ணுக்கு உண்ண உணவும் இருக்க இடமும் கொடுக்க வேண்டியது அவனுடைய கடமையல்லவா? அந்தக் கடமையிலிருந்து நழுவி, அவளைப் பசியோடும் பட்டினியோடும் நிர்க்கதியாய் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டுக் கோழையாய் ஓடிவிடும் அந்தக் கணவனின் தாலி அவள் கழுத்தில் இருப்பதும் ஒன்றுதான்; இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்!

எஸ்.கே.பாரி, திருச்சி.
பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கும் நடிகை என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார் லட்சுமி. சரிதானே?
ரொம்ப ரொம்பச் சரி! அப் பாவிப் பெண்ணாகக் கிராமத்தில் வந்து இறங்கும்போது, அருமை மனைவியாகக் கணவனுக்குப் பணிவிடை செய்யும்போது, அவருடன் சிணுங்கிக் கொஞ்சும்போது, எதிர்பாராதவிதமாக அந்தோணியால் கெடுக்கப்படும்போது, வார்த்தைகளால் அவனைச் சித்ரவதை செய்யும்போது, அவன் மரணத்துக்குப் பின் கதறித் துடிக்கும்போது – கற்பனையில் அனுராதாரமணன் கண்ட பாகீரதியைக் கண் முன் நிறுத்தியிருப்பதில் லட்சுமிக்கு 100% வெற்றி! அப்புறம், ராஜேஷை மறந்துவிட்டீர்களே? அந்தோணிசாமியாக அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்!

எஸ்.சாய் கணேஷ், திருச்சி.
விகடனில் வெளியாகிப் பரிசு பெற்ற சிறுகதை, அதே அழுத்தத்துடன் திரையில் சொல்லப்பட்டிருப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சிதானே?
கண்டிப்பாக! விகடனில் வெளியான கதை என்பதற்காக இல்லை. அச்சில் வந்த எந்தக் கதையுமே படமாகும்போது சீர் கெட்டுச் சின்னாபின்னமாவதையே அதிகம் பார்த்திருக்கிறோம்! அதனால்!

இந்தச் சிறுகதையை சினிமா மீடியத்துக்குக் கொண்டு வரும் போது, படிக்கும்போதிருந்த விறுவிறுப்பும் அழுத்தமும் சற்றும் குறையாமல், ஏன், அதைவிட ஒரு படி அதிகமாகவே இருக்கும் அளவுக்குத் திரைக்கதை அமைத்துள்ள டைரக்டர் ஆர்.சி. சக்தியின் திறமைக்கு நாங்கள் கொடுக்க விரும்பும் போனஸ் ஐந்து மார்க்கையும் சேர்த்து…

பெரும்பான்மை வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்: லட்சுமியின் நடிப்பு.

பிடிக்காத அம்சம்: அனுராதாவின் கவர்ச்சி நடனம்.

மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபானந்தன் தரும் தகவல்கள்: அனுராதா ரமணன் அவர்களின் சிறை கதையை தெலுங்கில் மொழிபெயர்த்து “Ilanaati Ahalya” என்ற தலைப்பில் ஆந்த்ர ஜ்யோதி என்ற பத்திரிகையில் வெளி வந்து தெலுங்கு வாசகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு மன நிறைவு கொடுத்த படைப்பு. மூல கதையில் உள்ள வாசத்தை மொழிபெயர்ப்பிலும் வாசகர்கள் உணர வேண்டும் என்பது என்னுடைய அவா. சிறை சினிமா தெலுங்கில் “Siksha” என்ற தலைப்பில் மறு ஆக்கம்(1985) செய்யப்பட்டுள்ளது. பாகீரதியாக சுகாசினி, அந்தோனியாக சரத்பாபு நடித்துள்ளார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சினிமா ஆன எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டிகள்: அனுராதா ரமணன்