ஹாரி பாட்டர் எழுத்தாளரின் மர்ம நாவல்கள்

j_k_rowlingபுகழ் பெற்ற ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே. ரௌலிங் இப்போதெல்லாம் மர்ம நாவல்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தன் ஒரிஜினல் பெயரில் எழுதினால் வாசகர்களின் எதிர்பார்ப்பு வேறு விதமாக இருக்கும் என்பதால் ஒரு புனைபெயரில் – ராபர்ட் கால்ப்ரெய்த் – எழுதுகிறார். இது வரை இரண்டு நாவல்கள் வந்திருக்கின்றன – Cuckoo’s Calling (2013) மற்றும் Silkworm (2014). ஒன்றே ஒன்று படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது Cuckoo’s Calling.

நாவல்களின் நாயகன் ஸ்ட்ரைக் ஒரு துப்பறிபவன். ஆஃப்கானிஸ்தான் போரில் ஒரு காலை இழந்தவன் (டாக்டர் வாட்சனின் எதிரொலி!) வாட்சனும் ஹோம்ஸும் தற்செயலாக இணைவது போல இங்கே அவனது அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபினும் ஸ்ட்ரைக்கும் ஒரு டீமாக பரிணமிக்கிறார்கள். ஆனால் ஏறக்குறைய சமமான பார்ட்னர்கள். ஸ்ட்ரைக் ஒரு பிரபல ராக் ஸ்டார் பாடகனுக்குப் பிறந்த மகன், ஆனால் மகனாக ஏற்றுக் கொள்ளப்படாதவன். அவனுக்கு ஒரு காதலி, ஆனால் அந்தக் காதல் அவனுக்கு கஷ்டங்களைத்தான் கொடுக்கிறது.

Cuckoo’s Calling நாவலில் பிரபல மாடல் லூலா லாண்ட்ரி இறக்கிறாள். அது தற்செயல் விபத்து என்று போலீஸ் முடிவு செய்துவிடுகிறது. லூலாவின் அண்ணன் ப்ரிஸ்டோ – ஒரு வக்கீல் – மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்ட்ரைக்கை தொடர்பு கொள்கிறான். தான் லூலாவின் மரணம் ஒரு கொலை என்று நம்புவதாகவும், அதைத் துப்பற்றிய வேண்டும் என்றும் ஸ்ட்ரைக்கை கேட்டுக் கொள்கிறான். ஒன்பது பத்து வயதில் இறந்து போன ப்ரிஸ்டோவின் அண்ணன் ஸ்ட்ரைக்கின் பள்ளி நண்பன், அதனால்தான் ப்ரிஸ்டோ ஸ்ட்ரைக்கைத் தேடி வந்திருக்கிறான். மர்மம் மெதுமெதுவாக அவிழ்கிறது. தற்காலிகமாக வேலை செய்ய வரும் ராபின் ஸ்ட்ரைக்குக்கு பல உதவிகள் செய்கிறாள், கடைசியில் செகரட்டரியாக சேர்ந்து விடுகிறாள்.

Silkworm நாவலில் ஒரு எழுத்தாளன் காணாமல் போகிறான். அவன் மனைவி அவனைக் கண்டுபிடிக்க ஸ்ட்ரைக்கை அணுகுகிறாள். அவன் கடைசியாக எழுதிய புத்தகத்தில் – இன்னும் வெளியிடப்படவில்லை – ஏழு நிஜ மனிதர்களை கேவலமாகச் சித்தரித்திருக்கிறான் – அவன் மனைவி, காதலி, அவனுடைய புத்தக ஏஜெண்ட், அவனுடன் ஒரு காலத்தில் போட்டியிட்ட சக எழுத்தாளன், பதிப்பாளன், பதிப்பகத்தின் தலைமை எடிட்டர் இப்படி. கடைசி பக்கங்களில் எல்லாரும் அவனை ஒரு டேபிள் மீது வைத்து அவனை வெட்டி சாப்பிடுவது போல ஒரு காட்சி. ஸ்ட்ரைக் அவனை அதே போல ஒரு டைனிங் டேபிளில் வெட்டப்பட்ட பிணமாக கண்டுபிடிக்கிறான். ஏழு பேரில் யார் கொலை செய்தார்கள் என்பதுதான் மர்மம்.

Career of Evil நாவலில் ஸ்ட் ரைக் மீது மரண கடுப்பில் இருக்கும் வில்லன் ராபினுக்கு ஒரு பெண்ணின் காலை வெட்டி அனுப்புகிறான். ஸ்ட் ரைக் மூன்று பேர் மேல் சந்தேகப்படுகிறான். யார் குற்றவாளி என்பதுதான் மர்மம்.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய துப்பறியும் நாவல்கள் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஹாரி பாட்டர் பக்கம்