மெக்காலேயின் கல்வித் திட்டம்

பல நாட்களாக வருஷங்களாக கேட்டுக் கொண்டிருக்கும், ஏறக்குறைய பொது பிரக்ஞையில் வரலாற்று உண்மையாகவே ஏற்கப்பட்ட ஒரு கருத்தாக்கம் – மெக்காலே இந்தியர்களை குமாஸ்தாக்களாக மாற்ற போட்ட திட்டம்தான் இந்தியக் கல்வி அமைப்பு. பாரம்பரியக் கல்வியைத் தவிர்த்து ஆங்கிலக் கல்வி, மேலைக் கலாசாரம் ஆகியவற்றை முன் வைக்கும் திட்டத்தை உருவாக்கி இந்தியர்களை ஏறக்குறைய அடிமைகளாகவே வைக்கும் நீண்ட கால சதியை செயல்படுத்தினார். சதி என்பது கொஞ்சம் அதிகப்படி என்று கருதுபவர்களும் மெக்காலே திட்டம் இந்திய கல்வி முறையை நிராகரிப்பதன் மூலம் குமாஸ்தா வர்க்கத்தைத்தான் உருவாக்கியது என்கிறார்கள்.

ஆனால் பல தலைமுறைகளாக இந்தியர்கள் மெக்காலே திட்டப்படிதான் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் கிடைத்து 70 வருஷம் ஆகிவிட்டது, காங்கிரஸ் மாநில அரசுகளை அமைத்து 80 வருஷம் ஆகிவிட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள கல்விமுறைக்கு அடிப்படையில் பெரிய வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காந்தியும் நேருவும் ராஜாஜியும் ஏன் பாரதியும் திலகரும் கோகலேயும் விவேகானந்தரும் அம்பேத்கரும் சவர்க்காரும் அண்ணாதுரையும் இந்த முறையில்தான் கல்வி கற்றிருக்கிறார்கள்.

என்றாவது ஒரு நாள் மெக்காலே என்னதான் சொன்னார் என்று படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இங்கே சுட்டி கிடைத்தது.

மெக்காலேயின் வாதங்களை இப்படி சுருக்கலாம்.
1. சமஸ்கிருதத்திலும் அரபியிலும் அறிவியலின் பெரும் சாதனைகள் எதுவும் இல்லை.

2. இவற்றின் இலக்கிய வளமும் ஆங்கிலத்தின் இலக்கிய வளத்தோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

3. இந்தியர்கள் அவர்கள் சொந்தப் பணத்தை செலவழித்து ஆங்கிலம் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அரபியும் சமஸ்கிருதமும் கற்க அவர்களுக்கு நாம் stipend தருகிறோம். நாம் பதித்திருக்கும் சமஸ்கிருத, அரபி புத்தகங்களை யாரும் வாங்கவில்லை.

4. ஐநூறு அறுநூறு வருஷங்களுக்கு முன் ஆங்கிலேயர்களான நாம் லத்தீனும் கிரேக்கமும் கற்றோம், ஏனென்றால் இலக்கியமும் அறிவியலும் அப்போது அந்த மொழிகளில்தான் செழித்திருந்தது. அதைப் போன்ற நிலையில்தான் இன்று இந்தியர்கள் இருக்கிறார்கள்.

5. ஒரு வாதத்தை அவர் மொழியிலேயே தருகிறேன்.

In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, –a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.

6. இந்தியர்களின் கல்விக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பணத்தை ஆங்கிலக் கல்வி முறையை செயல்படுத்தி செலவழிப்பதே உசிதம்.

மெக்காலேயின் வாதங்கள் எதுவும் எனக்கு தவறாகத் தெரியவில்லை. 1835-இல் மேலை மொழிகளின் மூலம்தான் அன்றைய அறிவியல் உச்சங்களை கற்க முடியும். மெக்காலேவுக்கு தெரிந்த அரபி, சமஸ்கிருத இலக்கியம் மிஞ்சி மிஞ்சிப் போனால் 1001 இரவுகள், சாகுந்தலம் ஆக இருக்கும். அன்றைய இந்தியர்களுக்கே காளிதாசனும் வால்மீகியும் பழக்கம்தானா என்று எனக்கு சந்தேகம்தான். அவரது முடிவுகள் தவறானதாக இருக்கலாம், ஆனால் அவருக்கு கிடைத்த தகவல்களை வைத்து அவர் அப்படி முடிவெடுத்தது வியப்பாக இல்லை.

ஆளும் ஆங்கிலேயர்களுக்கும் ஆளப்படும் இந்தியர்களுக்கும் நடுவே பாலமாக “a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect” உருவாக்கப்பட வேண்டும் என்ற கூற்றுதான் மெக்காலேவை திட்டுபவர்கள் அனைவரும் பயன்படுத்துவது. அவரது கண்ணோட்டத்தில் இது மிகச்சரி. கோடிக்கணக்கான இந்தியர்களை ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்கள் ஆள வேண்டும் என்றால் அப்படித்தான் செய்தாக வேண்டும். நடுவே ஒரு பாலம் இருந்தாக வேண்டும். ஒரு அதிகார வர்க்கம் உருவாக்கப்பட வேண்டும். சோழ அரசுக்கு அனேகமாக கிராம அதிகாரிகள் அப்படி இருந்திருப்பார்கள். மொகலாய அரசுக்கு மன்சப்தார்கள் அப்படித்தான் இருந்தார்கள். மதுரை நாயக்கர் அரசுக்கு பாளையக்காரர்கள். இதில் தவறென்ன?

மெக்காலேயின் காலனிய ஆதிக்க மனநிலை இந்தப் பேச்சில் வெளிப்படுகிறது என்பதை மறுக்கவே முடியாது. அவருக்கு இந்தியர்கள் அறிவுநிலையில் தாழ்ந்தவர்களே. ஆங்கிலேயர்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அன்று லட்சத்தில் ஒரு ஆங்கிலேயன் வேறு மாதிரி நினைத்திருப்பான் என்று நான் கருதவில்லை. துரைகள் ஆட்சியின் கீழ் வாழ்ந்த, அவர்களோடு தொடர்பு இருந்த இந்தியர்களே அப்படி நினைத்திருக்கமாட்டார்கள். அன்றைய சமூக விழுமியங்களை மெக்காலே மட்டும் மீறிவிடுவார், இன்றைய விழுமியங்களை கைக்கொள்வார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? பாரதியார் கூட பெண்கள் காதலொருவனின் காரியம் யாவிலும் கை கொடுக்க வேண்டும் என்றுதான் பாடி இருக்கிறார், ஆண்கள் காதலியின் காரியங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று பாடவில்லை. அதனால் அவர் பெண்ணை கீழே வைக்கிறார் என்று பொருளல்ல, அன்றைய விழுமியங்களை கொஞ்சம் தாண்டி இருக்கிறார் என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

மெக்காலேயின் திட்டமே மேலை அறிவியலை இந்தியாவுக்கு கொண்டு வந்தது என்று நினைக்கிறேன். அதன் விளைவாக இந்தியாவின் எழுதப்படாத, முறை செய்யப்படாத அறிவியல் மறைந்து போயிருக்கும் என்பதும் உண்மைதான். ஆனால் சமஸ்கிருதத்திலும் அரபியிலும் கல்வி கற்றிருந்தால் மட்டும் அது செழித்து வளர்ந்திருக்காது என்று நினைக்கிறேன். அதனால் மெக்காலே வாழ்த்தப்பட வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

ரகசியமாய் ஒரு ரேடியோ ஸ்டேஷன்

1942. வெள்ளையனே வெளியேறு இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம். தலைவர்கள் எல்லாம் சிறையில். ஆனால் இளைஞர்கள் உற்சாகமாகத்தான் இருந்தார்கள். தங்கள் எதிர்ப்பைக் காட்ட, சாகசங்கள் செய்யத் துடித்துக் கொண்டிருந்தார்கள். அஹிம்சை, வன்முறை அற்ற போராட்டம் என்பது – காந்தியை தெய்வமாகக் கொண்டாடியபோதும் – கொஞ்சம் பின்னால் தள்ளப்பட்டது. அன்று ‘சின்னத்’ தலைவரான காமராஜ் தானே சிறை செல்லத் தயாராகும் வரை அவருக்கு முழு பாதுகாப்பு இருந்தது. சின்ன அண்ணாமலை சிறை வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஸ்டேஷன் இடிக்கப்பட்டு அவர் மீட்கப்பட்டார். அவர்களின் போராட்டங்கள் எல்லாம் இன்று மறக்கப்பட்டுவிட்டன என்பதுதான் சோகம்.

அப்படி மறக்கப்பட்ட ஒரு போராட்டம் கண்ணில் பட்டது. உஷா மேத்தா. 22 வயது கல்லூரி மாணவி. பட்டப்படிப்பு முடிந்து வக்கீலுக்கு படித்துக் கொண்டிருக்கிறார். செய்திகள் கடுமையாக தணிக்கை செய்யப்படுகின்றன. லட்சத்துக்கும் மேலான இந்தியர்கள், முக்கியத் தலைவர்கள் எல்லாம் சிறையில், ஆனால் இந்தக் கைதுகளைப் பற்றி செய்திகளே பத்திரிகைகளில் வரவில்லை. என்ன நடக்கிறது என்று வெளியில் தெரியவில்லை. உஷா தனது வீட்டில் படிப்பெல்லாம் அப்புறம்தான், இப்போது வேறு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு பதினைந்து நாள் ஆளையே காணோம். தனது நண்பர்கள் – விட்டல்பாய் ஜவேரி, சந்த்ரகாந்த் ஜவேரி, பாபுபாய் தக்கர், நானக் மோத்வானி – ஆகியோரோடு ஒரு ரேடியோ ஸ்டேஷனை உருவாக்குகிறார். மோத்வானியின் குடும்பம் சிகாகா ரேடியோ என்று ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருக்கிறது, அதனால் வேண்டிய கருவிகளும், தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் கிடைக்கின்றன/கிடைக்கின்றனர்.

1942, ஆகஸ்ட் 14 அன்று முதல் முறையாக உஷா மேத்தாவின் அறிவிப்பு:

This is the Congress radio calling on [a wavelength of] 42.34 meters from somewhere in India.

அப்புறம் ஒரே அமர்க்களம்தான். ரேடியோ ஸ்டேஷனின் இடத்தை தினம் தினமும் மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள், போலீசால் எங்கே, யாரால் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காந்தியின் அறிக்கை, மற்ற தலைவர்களைப் பற்றிய செய்திகள், வடமேற்கு மாகாணத்திலிருந்து கன்யாகுமரி வரை என்ன நடக்கிறது என்று செய்திகள், ராம் மனோஹர் லோஹியா, அச்யுத் பட்வர்தன் ஆகியோரின் ஆக்ரோஷமான உரைகள், தேசபக்திப் பாடல்கள் என்று நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.

நடத்துவதற்கான பணம்? பம்பாயின் வியாபாரிகள் பலரும் உதவி இருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் அரசு தேடுதேடு என்று தேடி இருக்கிறது. வழக்கம் போல அங்கே பணி புரிந்த ஒருவரின் துரோகத்தால் கடைசியில் பிடித்துவிட்டார்கள். மூன்றே மாதம் – 88 நாட்களே – நடத்தப்பட்டிருக்கிறது.

உஷா கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் விசாரணைக்காக தனிமைச் சிறையில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் வாயையே திறக்கவில்லை. பிறகு நான்கு வருஷங்கள் சிறை தண்டனை. 1946-இல் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்த பிறகுதான் அவருக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவரது உடல்நிலை மிக மோசமாக இருந்திருக்கிறது. படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார்.

சில வருஷங்கள் கழித்து உடல்நிலை தேறி முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். கல்லூரியில் பணியாற்றி இருக்கிறார். காந்தியவாதியாகவே தன் வாழ்நாளைக் கழித்திருக்கிறார். பத்ம விபூஷண் விருது கொடுத்திருக்கிறார்கள். (அவருக்கு துணையாக இருந்த வித்தல்பாய் ஜவேரி – ரேடியோ மட்டுமல்ல, வேறு பல பணிகளும் புரிந்தவர் பத்ம பூஷண் விருது பெற்றிருக்கிறார்). நாடு போகும் போக்கைக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறார். 1990-இல், 80 வயதில்தான் இறந்திருக்கிறார்.

எப்போதுமே அந்த மூன்று மாதங்களைத்தான் தன் வாழ்வின் உன்னதமான காலகட்டமாக கருதி இருக்கிறார். இன்று நாவல்தான் நினைவுக்கு வந்தது.

முழு கட்டுரையையும் படித்துப் பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பக்கங்கள்:
உஷா மேத்தா விகிபீடியாவில்
விட்டல்பாய் ஜவேரி விகிபீடியாவில்
காங்கிரஸ் ரேடியோ விகிபீடியாவில்

காந்தி-சுபாஷ் போஸ் தகராறுகள்

காந்திக்கும் சுபாஷ் சந்திர போசுக்கும் முப்பதுகளின் இறுதியில் ஒத்துப் போகவில்லை. சுபாஷுக்கு காந்தி மீது எக்கச்சக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும் காந்தியின் நிதானப் போக்கைப் பொறுத்துக் கொள்வது கடினமாக இருந்தது. காந்தி சுபாஷின் அவசரப் போக்கு இளைஞர்களை தவறான பாதைக்கு செலுத்திவிடும், விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்று நினைத்திருக்கிறார். சுபாஷின் எண்ணங்களும் நேருவின் எண்ணங்களும் ஒத்துப் போனாலும் காந்தி முகாமிலிருந்து விலகி வேறொருவரை ஆதரிப்பது என்பது நேருவுக்கு சாத்தியமே இல்லை. நேருவே இப்படி என்றால் படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

1938-இல் சுபாஷ் காங்கிரஸ் தலைவராக ஆனபோது கூட இந்தப் பூசல் பெரிதாக வெடிக்கவில்லை. ஆனால் 1939-இலும் சுபாஷ் தலைவர் பதவிக்குப் போட்டி இட்டபோது காந்தி அவருக்கு எதிராக பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். பட்டாபியின் தோல்வி தனது தோல்வி என்று வெளிப்படையாக அறிவித்தார். படேல் சுபாஷுக்கு ஓட்டு போடுவது நாட்டுக்குத் தீமை, தேசத் துரோகம் என்றே சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சுபாஷ் ஜெயித்தார். அவர் ஜெயிக்க முத்துராமலிங்கத் தேவர் பெரும் உதவியாக இருந்தாராம்.

பிரச்சினை பூதாகாரமாக வெடித்திருக்கிறது. ஜபல்பூர் அருகில் உள்ள திரிபுரியில் காங்கிரஸ் மாநாடு நடந்திருக்கிறது. காந்தி ஏதோ சமஸ்தானத்தில் சத்தியாக்கிரகம் என்று வரவில்லை போலிருக்கிறது. போசுக்கு உடல்நிலை மோசமாக இருந்திருக்கிறது, இருந்தாலும் வந்து தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். இரண்டு கோஷ்டிகளும் முட்டிக் கொண்டிருக்கின்றன. ராஜாஜி அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் பிரதமர். (பிரதமர் என்றுதான் அப்போதெல்லாம் சொல்வார்கள்). அவர் காந்தி என்ற படகு பழையதாக இருந்தாலும் பெரியது, உறுதியானது, அனுபவம் உள்ள படகோட்டியால் செலுத்தப்படுவது, சுபாஷ் என்ற புதிய படகு பார்க்க அழகாக இருக்கலாம், ஆனால் ஓட்டைப் படகு என்று மாநாட்டில் பேசி இருக்கிறார். கோவிந்த வல்லப பந்த் காந்தியின் தலைமையே தேவை, அதனால் காரியக் கமிட்டியை அவரே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். எம்.என். ராய், மற்றும் நாரிமன் போசுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

காரியக் கமிட்டி விவகாரம் தீர்வதாக இல்லை. காந்திக்கும் போசுக்கும் கடிதப் போக்குவரத்து நடந்திருக்கிறது. போஸ் எவ்வளவு தூரம் தழைந்து வந்தாலும் காந்தி பிடி கொடுக்கவே இல்லை. போஸ் நான் ஏழு பேரை நியமிக்கிறேன், படேல் எழுவர் பேரைச் சொல்லட்டும் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். காந்தி மாற்றுத் தரப்புக்கு இடம் தரவே முடியாது, வேண்டுமென்றால் நீங்களே எல்லாரையும் நியமித்துக் கொள்ளுங்கள் என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார். நமக்குள் பரஸ்பரம் நம்பிக்கை இல்லை, மரியாதை கூட இல்லை என்று காந்தி எழுதி இருக்கிறார். காந்திக்குத்தான் நம்பிக்கை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை ‘திரிபுரி முதல் கல்கத்தா வரை‘ என்ற சிறு புத்தகமாக சக்திதாசன் எழுதி இருக்கிறார். முக்கியமான ஆவணம். மின்பிரதியை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: ஷ்யாம் பெனகலின் ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்’ படம் மரண மொக்கை. தவிருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

மாநில சுயாட்சியா, திராவிடஸ்தானா?

பசுபதி சாரின் தளத்தில் ஒரு பதிவு கண்ணில் பட்டது.

1946 டிசம்பரில் சென்னையில் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடந்திருக்கிறது. நாமக்கல் கவிஞர், வ.ரா., தூரன் (அன்று பெரியசாமி மட்டும்தான் போலிருக்கிறது), ம.பொ.சி. (அன்று சிவஞான கிராமணி), அன்றைய அமைச்சர் டி.எஸ். அவினாசிலிங்கம், அண்ணாதுரை, ரா.பி. சேதுப்பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு.வ. (அன்று மு. வரதராஜன்தான், மு. வரதராசனார் அல்லர்), தேவநேயப் பாவாணர், ஜீவானந்தம், பம்மல் சம்பந்த முதலியார் போன்ற பலர் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (கல்கி, தேவன் உள்ளிட்ட விகடன் எழுத்தாளர்கள், மணிக்கொடி எழுத்தாளர்கள் யாரையும் காணோம்.). என்.எஸ்.கே. நாடகம் போட்டிருக்கிறார்.

கண்ணில் பட்ட பேர்களில் பலரும் – அண்ணாதுரை, என்.எஸ்.கே. இரண்டு பேரைத் தவிர – காங்கிரஸ், தேசிய இயக்கம் சார்புடையவர்கள். இன்னும் சில மாதங்களில் இந்தியா விடுதலை அடைந்துவிடும் என்று எல்லாரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக தீவிர காங்கிரஸ்காரரான, விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்ற நாமக்கல் கவிஞர் தன் தலைமை உரையில் தமிழனுக்கு தனி நாடு, தனி அரசு வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அன்றைய அரசியலில் தீவிரமாக இருந்த, ராஜாஜியின் அணுக்கரான ம.பொ.சி. கொண்டு வந்த தீர்மானம் கீழே:

தமிழ் நாட்டின் எல்லை குமரி முதல் திருப்பதி வரை ஆகும். இந்த எல்லைக்குள் சுதந்திர இந்தியாவின் ஐக்கியத்துக்கு பாதகமில்லா வகையில், சுதந்திரமுள்ள தமிழர் குடியரசு அமைய வேண்டும். அந்தக் குடியரசின் அரசியலை வேறு எவருடைய தலையீடுமின்றி தாங்களே தயாரித்துக் கொள்ள தமிழ் இனத்தவருக்கு சுய நிர்ணய உரிமை உண்டு.

இந்தத் தீர்மானத்தின் பிற்பகுதியை ம.பொ.சி. கொண்டு வரவில்லையாம். ஆனால் மாநாட்டிற்கு வந்த அத்தனை பேரும் தீர்மானத்தை ஆதரித்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு பேர் இது தமிழ் பாகிஸ்தானுக்கான தீர்மானமா என்று சந்தேகம் எழுப்பி இருக்கிறார்கள், ம.பொ.சி.யே இல்லை என்று விளக்கி இருக்கிறார்.

இது குறைந்த அளவில் மாநில சுயாட்சி (federal structure) வேண்டும் என்ற கோரிக்கை. நாமக்கல் கவிஞரின் கோரிக்கையைப் பார்த்தால் தனி நாடு வேண்டுமென்ற எண்ணம்தான் இப்படி இலைமறைகாயாக சொல்லப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

அன்றைய திராவிட இயக்கம் வெறும் fringe movement அல்ல, அன்றைய அறிவுஜீவிகளிடம் – குறிப்பாக கல்வி அறிவில் உயர்ந்து விளங்கிய அபிராமணர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதைத்தான் நான் இதிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

பிற்சேர்க்கை: ம.பொ.சி.யின் புத்தகங்கள் இரண்டு – மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு மற்றும் சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல் – இணையத்தில் கிடைத்தன. ம.பொ.சி. 1946-இலிருந்தே சமஷ்டி அமைப்பு, மாநிலத்துக்கு அதிகமான அதிகாரங்கள் என்றெல்லாம் பேசி வந்திருக்கிறார். அவர் தொடங்கிய தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கோரிக்கையே மொழிவாரி மாநிலங்கள், திருப்பதியிலிருந்து குமரி வரை உள்ள தமிழ்நாடு, சமஷ்டி அமைப்பு என்பதுதான். காமராஜ் கூட அவரது சில அறிக்கைகளுக்கு ஆதரவு தந்திருக்கிறார். அண்ணாவும் ஈ.வெ.ரா.வும் ம.பொ.சி. நமது திராவிட நாடு கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறார் என்று எழுதி இருக்கிறார்கள் – ம.பொ.சி. அதை மீண்டும் மீண்டும் மறுத்தும் கூட. ஆனால் அவரது குரல் சென்னைக்கு வெளியே கேட்கவே இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

தொடர்புடைய பதிவு: ம.பொ.சி. – ஒரு மதிப்பீடு

ஆகஸ்ட் 15, 1947 – கே.எம். முன்ஷியின் கட்டுரை

k_m_munshiமுதல் சுதந்திர தினத்தன்று கே.எம். முன்ஷி எழுதிய நல்ல கட்டுரை. காந்தியின் காலம் முடிந்துவிட்டது, இது நேருவின் காலம் என்கிறார். நேருவையும் படேலையும் பற்றி அவர் சொல்வது:

The partnership of Panditjl and Sardar is a novel phenomenon in world politics Two men of the highest calibre and yet of the most contrary temperament and outlook—one elegant, handsome, courteous, fond of social graces, fascinated with distant values; the other: old, stocky, mysteriously silent, his feet firmly planted on earth—both are gathered in an unbreakable bond of mutual understanding by Gandhian influence. This seems to be the greatest piece of good luck for Independent India.

கட்டுரையை விட அங்கங்கே வரும் வரிகள் மிக சுவாரசியமானவை. முன்ஷியை காங்கிரசை விட்டு விலகும்படி காந்தியே சொல்லி இருக்கிறார். (ஆனால் மூன்று நாலு வருஷம் கழித்து காந்தியே மீண்டும் காங்கிரசில் சேரும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.) அரசியல் நிர்ணய சபைதான் 1947-இல் இருந்திருக்கிறது, அதன் தலைவர் ராஜேந்திர பிரசாத். ஏதாவது பிரச்சினை வந்தால் பிரசாதிடம் விட்டுவிடுங்கள், அவர் பார்த்துக் கொள்வார் என்று உறுப்பினர்கள் நினைத்தார்களாம். அதை அவர் விவரிப்பது –

The Assembly is always in “Leave It to PSmith” sort of mood—to use the phrase of P. G. Wodehouse.

1947-இல் உட்ஹவுஸ் இந்தியாவில் பிரபலமாக இருந்திருக்கிறார்! இப்படிப்பட்ட மேற்கோள் ஹிந்து வாசகர்களுக்கு சுலபமாகப் புரிந்திருக்கும்!

கட்டுரைக்கு கீழே சில விளம்பரங்கள் இருக்கின்றன – பென் ஹர் திரைப்படம், ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படம், நாம் இருவர் திரைப்படம், ரேவதி ரோடரி டூப்ளிகேடர் (அது என்ன ரோடரி டூப்ளிகேடர்?), பெல்ஜியன் சிக்கரி! இதில் நாம் இருவர் திரைப்படத்தின் பேர் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது (We Two!)

கே.எம். முன்ஷி குஜராத்தியர். சுதந்திரப் போராட்ட வீரர். ஐம்பதுகளில் மத்திய அமைச்சராக, கவர்னராக இருந்தவர். பிறகு ராஜாஜியோடு இணைந்து சுதந்திரா கட்சியை நிறுவியர்களில் ஒருவர். பிறகு ஜனசங் கட்சியில் இணைந்தார். கிருஷ்ணாவதாரா என்று மஹாபாரதப் பின்னணியில் ஒரு பெரிய சீரிசை எழுதி இருக்கிறார். (மகாபாரதப் பித்து உள்ள என்னாலேயே தாங்க முடியவில்லை.) பாரதீய வித்யாபவனை நிறுவியவர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு

முதல் அணுகுண்டு

hiroshima

சரியாக 71 ஆண்டுகளுக்கு முன்னால் – ஆகஸ்ட் 6, 1945 அன்று – ஹிரோஷிமாவில் அணுகுண்டு வெடித்தது. மனிதனே இதை விட பெரிய அழிவை விளைத்ததில்லை. அந்த அழிவைப் பற்றி ஒரு வருஷம் கழித்து – 1946இல் – நியூ யார்க்கர் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வரலாறு