டோபா டேக் சிங் (சாதத் ஹாசன் மாண்டோ சிறுகதை)

என் முதல் மொழிபெயர்ப்பு இதுதான். பத்து வருஷத்துக்கு முன் மொழிபெயர்த்தபோது நிறைய மொழிபெயர்க்கலாம் என்று எண்ணி இருந்தேன், பெரிதாக ஒன்றும் கிழிக்க முடிக்கவில்லை. என்றாவது இஸ்மத் சுக்டாயின் Lihaaf (போர்வை, கம்பளி, ரஜாய், Quilt) சிறுகதையையாவது மொழிபெயர்க்க வேண்டும்.

பத்து வருஷத்துக்கு முன் பதித்தபோது சிறந்த சிறுகதைகள் என்று நான் ஒரு தொகுப்பு வெளியிட்டால் இது இடம் பெறாது என்று எழுதி இருந்தேன். இன்று சிறந்த இந்திய சிறுகதைகள் தொகுப்பிலாவது இடம் கொடுத்துவிடுவேன். Playing to the gallery இருக்கிறது என்று தோன்றுகிறதுதான், (ஜெயமோகன் இன்னும் கடுமையாக விமர்சிக்கிறார்.) இருந்தாலும் அன்று நினைத்ததை விட இன்னும் நல்ல சிறுகதை என்று நினைக்கிறேன்.

மொழிபெயர்த்தபோது – ஒரிஜினல் பதிவில், ஜெயமோகன் எழுதிய மறுமொழிகளிலிருந்து: (அவர் மன்றோ என்று உச்சரிக்க வேண்டும் என்று சொல்கிறார், ஆனால் மாண்டோதான் பிரபலமாக இருக்கிறது. மாண்டோ திரைப்படத்திலும் மாண்டோ என்றுதான் உச்சரிக்கிறார்கள்.) இப்போதெல்லாம் அவர் இந்தப் பக்கம் வருவதில்லை என்று நினைக்கிறேன், அதில் அவருக்கு நஷ்டமில்லை, எனக்குத்தான்…

மன்றோவின் பாணி [சமூகப்பிரச்சினை+ மனிதாபிமானம்+அதிர்ச்சி மதிப்பு என்ற சூத்திரம்] பின்னர் பெரும் புகழ் பெற்றது. குஷ்வந்த்ச சிங் அவரது முதன்மையான சீடர். பீஷ்ம சாஹ்னி [தமஸ்], குல்ஸார்[திரைக்கதைக்காரர்], விஜய் தெண்டுல்கர் [சகாராம் பைண்டர் போன்ற நாடகங்கள்] உதாரணம்.

ஒரு குல்ஸார் கதை. பிரிவினை. இந்து தம்பதிகளுக்கு இரட்டைக்குழந்தை பிறந்திருக்கிறது. பாகிஸ்தானில் இருந்து ரயிலில் ஏறி இந்தியா வருகிறார்கள். உக்கிரமான நெரிசல். ஒரு குழந்தை செத்துவிடுகிறது. ரயில் நிற்காது. வெளியே இறங்க முடியாது. மலஜலம் கழிப்பதும் உட்காரும் அதே இருக்கையில்.செத்த குழந்தையை தூக்கி வீச சொல்கிறார்கள். தாய் பிடிவாதமாக மறுக்கிறாள். ராவி நதி வருகிறது. தாய் தூங்கிக்கொண்டிருக்கிறாள். சத்தம் போடாமல் பிடுங்கி வீசி விடு. நாளைக்கு அழுகிவிடும் என்று சக பயணிகள் சொல்கிறார்கள். கணவன் கை நடுங்க சட்டென்று பிள்ளையை பிடுங்கி வீசுகிறான். அது அழுதது போல் இருக்கிறது. கொஞ்ச நேரம் கழித்து பார்க்கிறான். கையில் எஞ்சியது செத்த குழந்தை [ராவி நதிக்கரையில்] மன்றோ பாணி என்பது இதுதான்.

…நல்ல என்பது பொதுப்படையான வார்த்தை. படித்தால் பிடித்தால் மட்டும் போதாது. கூடவே வரவேண்டும். வளர வேண்டும். எத்தனை படித்தாலும் அதில் மேலும் மிஞ்ச வேண்டும்…நல்ல கதை முடிவேயில்லாத வாசிப்பை அளிப்பது – புதுமைப்பித்தனின் கபாடபுரம் போல, செல்லம்மாள் போல…


இன்று உருதுவில் எழுதப்பட்ட ஒரு கதையை மொழிபெயர்த்திருக்கிறேன். எழுதியவர் சாதத் ஹாசன் மாண்டோ. மாண்டோ உருதுவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்று கருதப்படுபவர். இந்தியாவில் பிறந்தவர். பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குப் போனவர். பிரிவினையைப் பற்றி பல கதைகள் எழுதி இருக்கிறார்.

டோபா டேக் சிங் அவரது மாஸ்டர்பீஸ் என்று கருதப்படுகிறது. என் கண்ணில் பல குறைகள் தென்படுகின்றன, நான் இதை என் anthology-இல் சேர்க்கமாட்டேன். ஆனாலும் நல்ல கதை, படிக்க வேண்டிய கதை என்று கருதுகிறேன். பிரிவினை எப்பேர்ப்பட்ட அடி என்பதை அவர் கதைகளில் உணர முடிகிறது. ஆனால் கலைத்தன்மை என்பது குறைவுதான். குரூரம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையில் வெளிப்பட்டதை நேரடியாக காட்டுகிறார், அவ்வளவுதான். குறிப்பாக தண்டா கோஷ்ட் கதையில். அவரது Wages of Labor நல்ல denouement உள்ளது. க

எனக்கு மொழிபெயர்ப்பதில் – குறிப்பாக ஹிந்தி/பஞ்சாபி வார்த்தைகளை மொழிபெயர்ப்பதில் கொஞ்சம் ததிங்கினத்தோம்தான். லால்டீன் என்றால் என்ன என்று தெரியவில்லை சிவப்பு நிறம் என்று எழுதி இருக்கிறேன். 🙂 மூங் தாலுக்கு தமிழில் என்ன என்று தெரியவில்லை, உளுத்தம்பருப்பு என்று எழுதி இருக்கிறேன். உரத் தால்தான் உளுத்தம்பருப்பு. பாசிப்பருப்பு. பேசாமல் ஆங்கிலத்திலேயே படித்துக் கொள்கிறோம் என்பவர்களுக்காக இந்த சுட்டி. (எனக்கு உருது எல்லாம் தெரியாது, உருதுவிலிருந்து யாரோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், அதைத்தான் நான் தமிழில்)

பில்டப் போதும் என்று நினைக்கிறேன். கதை கீழே.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இரண்டு மூன்று வருஷத்துக்குப் பிறகு இரு அரசுகளும் கைதிகளை மாற்றிக் கொண்டது போல பைத்தியக்காரர்களையும் மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. அதாவது இந்திய பைத்தியக்கார மருத்துவமனைகளில் உள்ள முஸ்லிம் பைத்தியக்காரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாகிஸ்தானிய பைத்தியக்கார மருத்துவமனைகளில் உள்ள ஹிந்து மற்றும் சீக்கிய பைத்தியக்காரர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானித்தன.

இது புத்திசாலித்தனமான முடிவா இல்லையா என்று என்னால் சொல்ல முடியாது. எப்படி இருந்தாலும் இந்த பைத்தியக்காரர் மாற்றம் நடைபெற வேண்டிய தேதியை இரு தரப்பு உயர் அதிகாரிகளும் முடிவு செய்துவிட்டார்கள். எல்லா விவரங்களையும் தீர்மானித்து விட்டார்கள். இந்தியாவில் உள்ள முஸ்லிம் பைத்தியக்காரர்களுக்கு இந்தியாவிலேயே யாராவது உறவினர் இருந்தால் அவர்கள் அங்கேயே தங்கலாம். அப்படி இல்லை என்றால் போயாக வேண்டும். இங்கே பாகிஸ்தானில் இருந்து அனேகமாக எல்லா ஹிந்துக்களும் சீக்கியர்களும் போய்விட்டார்கள், எனவே இந்த உறவினர் என்ற கேள்வியே எழவில்லை. எல்லாரையும் அனுப்ப வேண்டியதுதான்.

இந்தியாவில் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்கே லாகூர் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு விஷயம் தெரிந்தபோது அங்கே தங்கி இருந்த பைத்தியங்கள் எல்லாம் இந்த செய்தியை காரசாரமாக விவாதித்தன. அங்கே இருந்த ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் பனிரண்டு வருஷமாக தவறாமல் “ஜமீந்தார்” செய்தித்தாள் படிப்பவர். அவரது நண்பர் ஒருவர் அவரைக் கேட்டார்: “மவுல்வி சாஹேப்! இந்த பாகிஸ்தான் என்பது என்ன?” ஆழ்ந்து யோசித்த பிறகு மவுல்வி சாஹேப் சொன்னார் – “அது இந்தியாவில் ஷேவிங் ரேசர் செட் உற்பத்தி செய்யும் ஒரு இடம்.”

அந்த பதிலைக் கேட்டதும், மவுல்வி சாஹபின் நண்பர் திருப்தி அடைந்தார்.

ஒரு சீக்கியப் பைத்தியக்காரர் இன்னொரு சீக்கியப் பைத்தியக்காரரைக் கேட்டார்: “சர்தார்ஜி, நம்மை எதற்கு இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்? நமக்கு அங்கே பேசப்படும் பாஷை கூடத் தெரியாது.”

அந்த சர்தார்ஜி புன்னகையோடு சொன்னார்: “எனக்கு இந்திய பாஷை புரியும். இந்தியர்கள் எல்லாரும் திமிர் பிடித்த சைத்தான்கள்.”

குளிக்கும்போது ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் மிகுந்த உத்வேகத்தோடு “பாகிஸ்தான் ஜிந்தாபாத்!” என்று கத்தினார். உத்வேகம் மிக அதிகமாக இருந்ததால் கத்தும்போதே தரையில் வழுக்கி விழுந்து மயக்கமானார்.

மருத்துவமனைகளில் இருந்த சிலர் உண்மையில் பைத்தியங்கள் இல்லை. அப்படிப்பட்ட போலிப் பைத்தியங்களில் அநேகமானவர்கள் கொலைகாரர்கள். அவர்களது குடும்பங்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை பைத்தியம் என்று அறிவித்து தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றி இருந்தன. அவர்களுக்கு ஓரளவு இந்தியா ஏன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, பாகிஸ்தான் என்றால் என்ன என்பதெல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் எல்லா விவரங்களும் தெரியவில்லை. செய்தித்தாள்களில் எல்லா விவரங்களும் வரவும் இல்லை. அவர்களை காவல் காத்தவர்கள் அனேகமாக படிப்பறிவில்லாதவர்கள், அவர்களுக்கும் நிறைய விவரங்கள் தெரியவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காயிதே-ஆஜம் முகமது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார் என்பதுதான். அந்த பாகிஸ்தான் எங்கே இருக்கிறது, அதன் எல்லைகள் என்ன என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் இந்த போலிப் பைத்தியங்களும் தாங்கள் இப்போது இருப்பது இந்தியாவா பாகிஸ்தானா என்று தெரியாமல் குழம்பினார்கள். இப்போது இருப்பது இந்தியாதான் என்றால் பாகிஸ்தான் எங்கே இருக்கிறது? இப்போது இருப்பது பாகிஸ்தான் என்றால், அதை எப்படி இரண்டு மூன்று வருஷம் முன்னால் கூட இந்தியா என்று அழைத்தார்கள்?

ஒரு பைத்தியக்காரர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி யோசித்து யோசித்து இன்னும் குழம்பிப் போனார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு இரண்டு மணி நேரம் மூச்சு விடாமல் பிரிவினையின் சாதக பாதகங்களைப் பற்றி உரையாற்றினார். மருத்துவனமனைக் காவலர்கள் அவரைக் கீழே வரும்படி சொன்னபோது அவர் இன்னும் மேலே ஏறிக்கொண்டார். அவர்கள் அவரை பயமுறுத்த ஆரம்பித்தபோது அவர் சொன்னார்: “நான் இந்தியாவிலும் வாழ மாட்டேன், பாகிஸ்தானிலும் வாழ மாட்டேன். இந்த மரத்தில்தான் வாழப் போகிறேன்!” மிகவும் கஷ்டப்பட்டு அவரைக் கீழே இறக்கினார்கள். கீழே வந்ததும் அவர் தன் ஹிந்து, சீக்கிய நண்பர்களை கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார். அவரால் அந்த நண்பர்கள் அவரை விட்டு பிரிந்து போகப் போகிறார்கள் என்ற எண்ணத்தைத் தாங்க முடியவில்லை.

ஒரு பைத்தியக்காரர் நிறைய படித்த ரேடியோ எஞ்சினியர். அவர் எப்போதும் பிற பைத்தியக்காரர்களிடமிருந்து தள்ளியே இருப்பார். தோட்டத்தில் இருந்த ஒரு ஒற்றையடிப் பாதையில் முன்னும் பின்னும் நடந்து கொண்டே இருப்பார். இந்த செய்தியைக் கேட்டதும் அவர் தன் துணிகளை எல்லாம் கழற்றி ஒப்படைத்துவிட்டு மருத்துவமனை முழுதும் நிர்வாணமாக ஓடினார்.

சிநியோட் நகரத்திலிருந்து முற்காலத்தில் முஸ்லிம் லீக்கின் பெரும் ஆதரவாளராக இருந்த ஒரு முஸ்லிம் பைத்தியக்காரர் வந்திருந்தார். நல்ல குண்டு. அவர் ஒரு நாளைக்கு பதினைந்து பதினாறு முறை குளிப்பவர். இந்த செய்தி கிடைத்ததும் குளிப்பதை நிறுத்திவிட்டார். அவர் பெயர் முகமது அலி. ஒரு நாள் அவர் தான்தான் காயிதே-ஆஜம் முகமது அலி ஜின்னா என்று அறிவித்தார். இதைக் கேட்டதும் அங்கிருந்த ஒரு சீக்கியப் பைத்தியக்காரர் தான்தான் மாஸ்டர் தாராசிங் என்று அறிவித்தார். ரத்த ஆறு ஓடி இருக்கும், நல்ல வேளையாக டாக்டர்கள் இருவரையும் அபாயகரமான பைத்தியக்காரர்கள் என்று முடிவு செய்து இரண்டு பேரையும் வேறு வேறு கட்டடங்களுக்கு மாற்றிவிட்டனர்.

லாஹூரின் ஒரு இளம் ஹிந்து வக்கீல் காதல் தோல்வியால் பைத்தியமானவர். அமிர்தசரஸ் இப்போது இந்தியாவில் இருக்கிறது என்று கேட்டதும் அவர் மிகவும் துக்கம் அடைந்தார். ஏனென்றால் அவர் காதலித்த ஹிந்துப் பெண் அமிர்தசரஸ்காரி. அவள் அவரை நிராகரித்திருந்தபோதும் அவர் அவளை இன்னும் மறக்கவில்லை. தன்னையும் தன் காதலியையும் வேறு வேறு நாட்டுக்காரர்களாக ஆக்கிய முஸ்லிம் தலைவர்களை அவர் சபித்துக் கொண்டே இருந்தார்.

இப்போது இந்த பைத்தியக்காரர் மாற்றம் செய்தி வந்ததும் பல பைத்தியங்களும் அவருக்கு நீங்கள் இந்தியாவுக்குப் போய்விடலாம் என்று தேறுதல் சொல்ல வந்தார்கள். ஆனால் அந்த வக்கீல் பைத்தியம் லாஹூரிலிருந்து போக விரும்பவில்லை. அமிர்தசரசில் தான் வக்கீலாக வெற்றி பெற முடியுமா என்று அவருக்கு அச்சம்.

ஐரோப்பிய வார்டில் இரண்டு ஆங்கிலோ-இந்திய பைத்தியங்கள் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை தந்துவிட்டு போய்விட்டார்கள் என்று தெரிந்து மிகவும் கவலைப்பட்டார்கள். தாழ்ந்த குரலில் தங்கள் நிலை எப்படி எல்லாம் மாறுமோ என்று அவர்கள் விவாதித்துக் கொண்டார்கள். ஐரோப்பிய வார்ட் என்று ஒன்று இருக்குமா இருக்காதா? இங்கிலீஷ் காலை உணவு கிடைக்குமா கிடைக்காதா? காலையில் ப்ரெட்டுக்கு பதிலாக எழவெடுத்த சப்பாத்தியை சாப்பிட வேண்டி வருமா?

ஒரு சீக்கியப் பைத்தியம் பதினைந்து வருஷமாக அங்கே இருந்தவர். அவர் தனக்கே உரிய ஒரு விசித்திர மொழியில் பேசிக் கொள்வார். அடிக்கடி இப்படி சொல்வார் – “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனிக்கவில்லை பாசிப்பருப்பு சிவந்தது!” அவர் தூங்குவதே இல்லை. காவலர்கள் அவர் பதினைந்து வருஷத்தில் ஒரு நொடி கூட தூங்கியதில்லை என்று சொல்வார்கள். அபூர்வமாக அவர் சில சமயம் ஒரு சுவரில் சாய்ந்துகொள்வார்.

எப்போதும் நின்றுகொண்டே இருப்பதால் அவரது கால்களும் பாதங்களும் வீங்கிக் கிடக்கும். ஆனாலும் அவர் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ள மறுத்துவிடுவார். எப்போது பைத்தியக்காரர்கள் மாற்றம் பற்றி பேச்சு எழுந்தாலும் நின்று அதை கவனிப்பார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று இவரை யாராவது கேட்டால் “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனிக்கவில்லை பாசிப்பருப்பு பாகிஸ்தான் கோர்னமென்ட்” என்று சொல்வார்.

கொஞ்ச நாள் கழித்து “பாகிஸ்தான் கோர்னமென்ட்” என்று சொல்வதற்கு பதிலாக “டோபா டேக் சிங் கோர்னமென்ட்” என்று சொல்ல ஆரம்பித்தார். சக பைத்தியங்களிடம் டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது, இந்தியாவிலா, பாகிஸ்தானிலா என்று கேட்க ஆரம்பித்தார். யாருக்கும் தெரியவில்லை. இதைப் பற்றி பேச ஆரம்பித்தால் குழப்பம் இன்னும் அதிகரித்தது. ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்த சியால்கோட் இன்று பாகிஸ்தானில் இருக்கிறதாம். இன்று பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் நாளை இந்தியாவுக்குப் போகக் கூடும். ஒரு வேளை இந்தியா முழுவதும் பாகிஸ்தானாக மாறிவிடலாம். நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்கும் என்று யார் உறுதி தர முடியும்?

இந்த சீக்கிய பைத்தியத்தின் தலைமுடி சரியாக வராமல் உதிர்ந்து கொண்டிருந்தது. அபூர்வமாகவே தலைக்கு குளிப்பதால் தலை முடியும் தாடியும் சிக்குப் பிடித்து பார்க்கவே கொஞ்சம் பயங்கரமாக இருந்தார். ஆனால் உண்மையில் அவரால் யாருக்கும் எந்த அபாயமும் இல்லை. பதினைந்து வருஷத்தில் அவர் யாருடனும் சண்டை போட்டதே இல்லை.

மருத்துவமனை காவலர்களுக்கு டோபா டேக் சிங் என்ற பிரதேசத்தில் அவருக்கு நிலம் இருந்தது என்று தெரிந்திருந்தது. அங்கே பணக்கார மிராசுதாராக இருந்தவருக்கு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டது. அவரது உறவினர்கள் அவரை கனத்த சங்கிலிகளில் பிணைத்து பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள்.

அவரது குடும்பம் மாதாமாதம் அவரை பார்க்க வந்துகொண்டிருந்தது. அவரது உடல் நிலை நன்றாக இருக்கிறது என்று உறுதிப்படுத்திக்கொண்டு போவார்கள். பல வருஷங்களாக இது நடந்து கொண்டிருந்தது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினைகள் ஆரம்பித்ததும் அவர்களின் வருகை நின்றுவிட்டது.

அவர் பெயர் பஷான் சிங். ஆனால் எல்லாரும் அவரை இப்போது டோபா டேக் சிங் என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். அவருக்கு நேரத்தைப் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாவிட்டாலும் அவருக்கு தன் உறவினர்கள் வரும் நேரம் எது என்று ஒரு மாதிரி தெரிந்தது. தன்னைப் பார்த்துக் கொள்பவரிடம் தன் உறவினர்கள் வரும் நேரம் என்பார். சரியாக அந்த நாளில் குளித்து, தலைக்கு எண்ணெய் தடவி தலை சீவி, நல்ல உடைகளை அணிந்து தன் உறவினர்களை சந்திப்பார்.

அவர்கள் அவரை ஏதாவது கேட்டால் அவர் பதில் சொல்லமாட்டார். அப்படி சொன்னால் அது – “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு சிவப்பு.”

பஷான் சிங்குக்கு ஒரு பதினைந்து வயதுப் பெண் இருந்தாள். மாதாமாதம் ஒரு விரல் அளவுக்கு உயரமாவாள். அவள் யாரென்று பஷான் சிங்குக்குத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிறு குழந்தையாக இருந்தபோது அப்பாவைப் பார்க்கும்போது அவள் அழுவாள். இப்போது ஓரளவு பெரியவள் ஆன பிறகும் அவள் அழுகை தொடர்ந்தது.

பிரிவினைப் பிரச்சினைகள் தொடங்கியபின் பஷான் சிங் சக பைத்தியங்களை டோபா டேக் சிங் பற்றி கேட்க ஆரம்பித்தார். யாராலும் அவருக்கு திருப்தி தரும் பதில்களைத் தர முடியவில்லை. அவர் கவலை அதிகரித்துக் கொண்டே போனது.

அவரது உறவினர்களும் அவரைப் பார்க்க வருவதை நிறுத்தி விட்டார்கள். முன்பெல்லாம் அவர்கள் எப்போது வருவார்கள் என்று அவரால் சரியாக யூகிக்க முடிந்தது. இப்போதோ அவருக்கு உள்ளே இருக்கும் குரல் அமுக்கப்பட்டுவிட்டது என்று தோன்றியது. தனக்காக பூ, துணிமணிகள், இனிப்பு வகைகள் கொண்டு வந்து தனக்கு ஆறுதலாகப் பேசும் அந்த மனிதர்களைப் பார்க்க அவர் துடித்தார். நிச்சயமாக அவர்களால் டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறதா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா என்று சொல்ல முடியும். அவர்கள் டோபா டேக் சிங்கிலிருந்து வருகிறார்கள் என்றே அவர் நினைத்திருந்தார்.

மருத்துவமனையில் தன்னைக் கடவுள் என்று நினைத்துக் கொண்ட இன்னொரு பைத்தியம் இருந்தார். ஒரு நாள் பஷான் சிங் அவரை டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறதா பாகிஸ்தானில் இருக்கிறதா என்று கேட்டார். வெடிச்சிரிப்போடு அவர் சொன்னார்: “இரண்டு இடத்திலும் இல்லை, ஏனென்றால் நான் அதை எங்கே வைப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை!”

பஷான் சிங் இந்த “கடவுளை” டோபா டேக் சிங்கைப் பற்றி ஒரு முடிவெடுத்து தன் குழப்பத்தைத் தீர்க்கும்படி கெஞ்சினார். ஆனால் “கடவுள்” வேறு வேலைகளில் மும்முரமாக இருந்ததால் பஷான் சிங்கின் வேண்டுகோளை கவனிக்க மறுத்தார். ஒரு நாள் பஷான் சிங் கோபம் அடைந்து கத்தினார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு வாஹே குருஜி கால்சா வாஹே குருஜி! ஜோ போலே சோ நிஹால் சத் ஸ்ரீ அகால்!”

அவர் இப்படி சொல்ல நினைத்திருக்கலாம்: “நீ முஸ்லிம்களின் கடவுள், சீக்கியக் கடவுளாக இருந்திருந்தால் எனக்கு உதவி செய்திருப்பாய்.”

பைத்தியக்காரர்கள் இட மாற்றத்துக்கு சில நாட்களுக்கு முன்னால் பஷான் சிங்கின் முஸ்லிம் நண்பர் ஒருவர் டோபா டேக் சிங்கிலிருந்து வந்தார். அவர் முன்னே பின்னே பைத்தியக்கார ஆஸ்பத்திரி பக்கம் வந்ததில்லை. அவரைப் பார்த்ததும் பஷான் சிங் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே போக ஆரம்பித்தார். ஆனால் மருத்துவமனை காவலர் ஒருவர் அவரை நிறுத்தினார்.

“உன் நண்பன் ஃபஸ்லுத்தின் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

ஃபஸ்லுத்தினைப் ஓரக் கண்ணால் பார்த்து பஷான் சிங் ஏதோ முணுமுணுத்தார். ஃபஸ்லுத்தின் கொஞ்சம் முன்னால் போய் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். “உன்னைப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் நேரமே கிடைக்கவில்லை” என்று சொன்னார். “உன் உறவினர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு பத்திரமாகப் போய்விட்டார்கள். என்னால் என்னென்ன உதவி செய்ய முடியுமா அதை எல்லாம் செய்தேன். உன் பெண் ரூப் கவுர்…”

பஷான் சிங்குக்கு ஏதோ நினைவு வந்த மாதிரி இருந்தது. “பெண் ரூப் கவுர்” என்று சொன்னார்.

ஃபஸ்லுத்தின் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார்: ” அவளும்… அவளும் நன்றாக இருக்கிறாள். உன் உறவினர்களோடு போய்விட்டாள்.”

பஷான் சிங் மவுனமாக இருந்தார். ஃபஸ்லுத்தின் தொடர்ந்தார்: “நீ நன்றாக இருக்கிறாயா என்று என்னைப் பார்த்து வர சொன்னார்கள். இப்போது நீயும் இந்தியாவுக்குப் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். பல்பீர் சிங் அண்ணனுக்கும் வதாதா சிங் அண்ணனுக்கும் ஏன் வணக்கங்களை சொல்லு. இம்ராத் கவுர் அக்காவுக்கும்… பல்பீர் சிங் அண்ணனிடம் நான் நன்றாக இருக்கிறேன் என்று சொல்லு. அவர் விட்டுப் போன இரண்டு பழுப்பு நிறப் பசுக்களில் ஒன்று குட்டி போட்டிருக்கிறது. இன்னொன்றும் குட்டி போட்டது, ஆனால் ஆறு நாளைக்கப்புறம் செத்துப் போய்விட்டது. அப்புறம்… ஏதாவது செய்ய வேண்டுமென்றால் சொல்லச் சொல்லு. நான் கட்டாயமாக செய்வேன். உனக்கு கொஞ்சம் இனிப்பு வாங்கி வந்திருக்கிறேன்.”

பஷான் சிங் இனிப்புகளை காவலரிடம் கொடுத்தார். “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார்.

ஃபஸ்லுத்தின் அதிர்ந்தார். “டோபா டேக் சிங்? எங்கே இருக்கிறதா? இத்தனை நாள் எங்கே இருந்ததோ அங்கேயேதான்” என்று சொன்னார்.

“பாகிஸ்தானிலா இந்தியாவிலா?” என்று பஷான் சிங் விடாமல் கேட்டார்.

ஃபஸ்லுத்தின் மேலும் குழப்பம் அடைந்தார். “இந்தியாவில் இருக்கிறது. இல்லை இல்லை பாகிஸ்தானில்.”

பஷான் சிங் முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு பாகிஸ்தான் ஹிந்துஸ்தான்!”

பைத்தியக்காரர்கள் இடமாற்றத்துக்கு வேண்டிய எல்லா முன் ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டன. இடம் மாற வேண்டிய பைத்தியக்காரர்கள் பட்டியல், என்று மாற வேண்டும் என்ற நாள் எல்லாம் முடிவு செய்யப்பட்டது.

அன்று மிகவும் குளிராக இருந்தது. லாஹூரின் ஹிந்து, சீக்கிய பைத்தியங்களை ட்ரக்குகளில் போலீஸ் மேற்பார்வையில் ஏற்றினார்கள். வாகா எல்லையில் பாகிஸ்தானி இந்திய அதிகாரிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து எல்லா ஏற்பாடுகளையும் முடித்தார்கள். அப்புறம் மாற்றம் தொடங்கியது. இரவு பூராவும் நடந்தது.

பைத்தியங்களை இறக்கி எல்லையைக் கடக்க வைப்பது சுலபமாக இல்லை. சிலர் லாரிகளிலிருந்து இறங்கவே மறுத்தார்கள். வெளியே வந்தவர்கள் அங்கும் இங்கும் அலைந்தார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருந்தது. நிர்வாணமாக சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு உடுத்திவிட காவலர்கள் முயற்சி செய்தார்கள். அப்படி உடுத்திவிடப்பட்ட துணிகளை அவர்கள் மீண்டும் கிழித்தெறிந்தார்கள். சிலர் திட்டினார்கள், சிலர் பாடினார்கள், சிலர் சண்டை போட்டார்கள். எல்லாரும் அழுதுகொண்டும் பேசிக்கொண்டும் இருந்தார்கள், ஆனால் எதுவும் புரியவில்லை. பைத்தியக்காரப் பெண்கள் தனியாக கூக்குரல் போட்டார்கள். குளிரோ பற்களை நடுக்க வைத்துக் கொண்டிருந்தது.

முக்கால்வாசி பைத்தியங்களுக்கு இந்த இடமாற்றம் பிடிக்கவில்லை. எதற்காக தங்களை தெரியாத ஒரு இடத்துக்கு பலவந்தமாக அனுப்பவேண்டும் என்று அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. சில அரைப்பைத்தியங்கள் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கூவினார்கள். இதைக் கேட்டு ஆத்திரப்பட்ட சில சீக்கியப் பைத்தியங்களோடு கைகலப்பு ஏற்பட்டது.

பஷான் சிங்கின் முறை வந்தபோது அவர் அங்கே இருந்த அதிகாரியிடம் கேட்டார்: “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? இந்தியாவிலா பாகிஸ்தானிலா?”

அதிகாரி சிரித்தார். “பாகிஸ்தானில்” என்று சொன்னார்.

அதைக் கேட்டதும் பஷான் சிங் பாகிஸ்தான் பக்கம் ஓடினார். பாகிஸ்தானி காவலர்கள் அவரைப் பிடித்து மீண்டும் இந்தியா பக்கம் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் அவர் நகர மறுத்தார்.

“டோபா டேக் சிங் இங்கேதான் இருக்கிறது!” என்று கத்தினார். பிறகு உரத்த குரலில் கூவ ஆரம்பித்தார்: “மேலே வெல்லம் வெல்லம் மாடி கவனம் இல்லை பாசிப்பருப்பு டோபா டேக் சிங் பாகிஸ்தான்!”

அதிகாரிகள் டோபா டேக் சிங் இந்தியாவில் இருக்கிறது என்று அவரை நம்ப வைக்கப் பார்த்தார்கள். அங்கே இல்லை என்றால் உடனே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். ஆனால் அவர் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

அவரால் எதுவும் அபாயம் இல்லை என்பதால் காவலர்கள் அவரை விட்டுவிட்டு பிற வேலைகளைப் பார்த்தார்கள். அவர் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இரவு முழுதும் அமைதியாக இருந்தார். காலை சூரிய உதயத்துக்கு முன் அவர் பெரிய குரல் கொடுத்தார். எல்லா அதிகாரிகளும் ஓடி வந்தார்கள். பதினைந்து வருஷமாக நின்றுகொண்டே இருந்தவர் இன்று தரையில் குப்புறப் படுத்துக் கிடந்தார். இந்தியா ஒரு முள் வெளிக்குப் பின்னால் ஒரு பக்கம் இருந்தது. பாகிஸ்தான் இன்னொரு வெளிக்குப் பின்னால் இன்னொரு பக்கம் இருந்தது. டோபா டேக் சிங் இரண்டுக்கும் நடுவில் பெயரற்ற மண்ணில் விழுந்து கிடந்தார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாதத் ஹாசன் மாண்டோ பற்றிய விக்கி குறிப்பு

டோபா டேக் சிங் – ஆங்கிலத்தில்
தண்டா கோஷ்ட் – ஆங்கிலத்தில்
இன்னொரு கதை – ஆங்கிலத்தில்

முன்னோடி பெண்ணிய எழுத்து – Sultana’s Dream

ரொகேயா ஹுசேன் பேகம் வங்காள மாநிலத்தில் 1880-இல் பிறந்தவர். 1932-இல் இறந்துவிட்டார். பெண் கல்வி, முன்னேற்றத்துக்காக பாடுபட்டிருக்கிறார். அவர் எழுதிய Sultana’s Dream என்ற சிறுகதை கண்ணில் பட்டது. Charming!

இந்தச் சிறுகதையை அம்பை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ரொகேயாவைப் பற்றி ஒரு அறிமுகக் கட்டுரையும் எழுதி இருக்கிறார்.

முன்னோடி எழுத்தாக இருப்பதுதான் இதன் charm-ஓ என்றும் தோன்றுகிறது. எப்படி இருந்தால் என்ன? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

சாதத் ஹாசன் மாண்டோ

மாண்டோ முக்கியமான இந்திய எழுத்தாளர்களில் ஒருவர். இத்தனைக்கும் என் கண்ணில் அவர் எழுத்தில் கலை அம்சம் கொஞ்சம் குறைவுதான். ஆனால் அவரது எழுத்துகளில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் வலி, ஹிந்துவோ, முஸ்லிமோ, மனிதர்களில் குரூரமும் வேதனையும் வெளிப்படுவதில், சமூகத்தின் கட்டுக்கள் தளர்ந்துவிடும்போது எத்தனை கீழே இறங்க முடிகிறது என்று காட்டுவதில் உண்மை தெறிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் அதுவே அவரது வெற்றி.

விடுதலைக்கு முன் ஹிந்தி சினிமா உலகில் ஓரளவு வெற்றி பெற்ற எழுத்தாளர். ஆபாசமான சிறுகதைகள் எழுதினார் என்று அவர் மீதும் இஸ்மத் சுக்டாய் மீதும் வழக்குகள் போடப்பட்டன. பிரிவினையின்போது ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் லாகூருக்குப் போய்விட்டார். அவருடைய நெருங்கிய நண்பரான அன்றைய பிரபல ஹீரோ நடிகர் ஷ்யாமே தனக்கு வேண்டியவர்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டார்கள் என்று தெரிந்த அந்த சில நிமிஷங்களில் ஏற்பட்ட கோபத்தில் மாண்டோவையே முஸ்லிம் என்ற காரணத்துக்காக கொல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஒத்துக்கொண்டார், அதை மாண்டோவால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஷ்யாமின் நட்பு அந்த் சில நிமிஷப் பிசிருக்கு பிறகு மாறவே இல்லை, பிற்காலத்தில் மாண்டோவுக்கு பண உதவி செய்தார் என்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு – லாஹூருக்கு குடிபெயர்ந்தாலும் அவரது மனமும் வேர்களும் மும்பையில்தான் இருந்தன என்றே கணிக்கிறேன். பாகிஸ்தானில் குடியேறிய பிறகு கஷ்ட ஜீவனம்தான். மீண்டும் ஆபாச எழுத்தாளர் என்று வழக்குகளையும் சந்தித்தார். பாகிஸ்தானில் குடியேறி இருந்தாலும், என் கண்ணில் அவர் இந்திய எழுத்தாளர்தான், பாகிஸ்தானி எழுத்தாளர் அல்லர். பாகிஸ்தானி எழுத்து என்று ஒன்று இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என்பதையும் வெளிப்படையாக சொல்லிவிடுகிறேன்.

அவருடைய பிரிவினைக் கதைகளில் தெரிவது ஷ்யாமுக்கு நேர்ந்த அந்த சில நிமிஷங்கள்தான், அதன் வெளிப்பாடுகளும் விளைவுகளும்தான். மீண்டும் மீண்டும் மனித மனத்தின் அடிப்படை குரூரம், அந்த சில நிமிஷங்கள்/நாட்கள் உண்மையாக வெளிப்படுகிறது.

சமீபத்தில் நவாசுதீன் சித்திகி நடித்து மாண்டோ என்று திரைப்படம் வந்தது. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

டோபா டேக்சிங் அவரது புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரையில் இதுவே அவரது சிறந்த சிறுகதை. நானே தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

கோல் தோ எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை. அந்தப் பெண் தன் பைஜாமா நாடாவை அவிழ்க்கும் இடம் உண்மையிலேயே படிப்பவரின் ஆழத்தைத் தொடும்.

Assignment இன்னொரு நல்ல சிறுகதை. இதை எல்லாம் விவரிப்பது கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்!

தண்டா கோஷ்ட் இன்னொரு புகழ் பெற்ற சிறுகதை. என்னைப் பொறுத்த வரை இதில் கலையம்சம் கொஞ்சம் குறைவு. வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. ஆனால் உண்மையும் இருக்கிறது.

ஆக்ரி சல்யூட் இன்னொரு சிறப்பான சிறுகதை. இரண்டாம் உலகப்போரில் தோளோடு தோள் நின்று போராடிய ரூப் நவாசும் ராம்சிங்கும் இன்று காஷ்மீர் போரில் எதிர்முகாம்களில்.

Wages of Labor சிறப்பான denouement உள்ள சிறுகதை. படியுங்கள்!

Mozelle என் கண்ணில் சுமாரான சிறுகதைதான்.

பிரிவினைக்கு முன்னும் சில பாலியல் references உள்ள கதைகள், விபசாரத்தைப் பற்றியும் “தவறான உறவுகள்” பற்றியும் எழுதி இருக்கிறார்தான். ஆனால் அவற்றில் கொஞ்சம் செயற்கைத்தன்மை, வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும் என்ற விழைவு தெரிகிறது. முற்போக்குக் கதை எழுத வேண்டும் என்ற விழைவுதான் என் கண்ணில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

Ten Rupees அவரது புகழ் பெற்ற சிறுகதைகளில் ஒன்று, இதற்கு சரியான எடுத்துக்காட்டு. பதின்ம வயதுப் பெண் விபச்சாரத்துக்கு அனுப்பப்படுகிறாள். அவளிடம் இன்னும் சிறுமித்தனம் பாக்கி இருக்கிறது. உண்மை இருக்கிறதுதான், ஆனால் முன்னமே சொன்ன மாதிரி முற்போக்குக் கதை எழுத வேண்டும் என்ற விழைவுதான் என் கண்ணில் துருத்திக் கொண்டு நிற்கிறது.

ஹடக் (Humiliation) மிகச் சிறப்பாக வந்திருக்கக் கூடிய சிறுகதை. விபச்சாரி இரவு இரண்டு மணிக்கு எழுப்பப்படுகிறாள். ஒரு வாடிக்கையாளர் வந்து போய்விட்டார். மதுவினால் தலைவலி வேறு. கீழே காரில் இன்னொரு வாடிக்கையாளர் காத்திருக்கிறார். வேண்டாவெறுப்பாக எழுந்து தன்னிடம் இருப்பதிலேயே சிறப்பான புடவையை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு கீழே காருக்கு அருகே போகிறாள். காருக்குள் இருக்கும் சேட் இவள் மீது டார்ச்சை அடித்துப் பார்க்கிறார். முகம் சுளிக்கிறார், கார் உடனடியாக கிளம்பிப் போய்விடுகிறது. மிகவும் அருமையான கரு, மாண்டோவும் அருமையாக இந்தக் கணம் வரை கொண்டு வருகிறார். ஆனால் அதற்குப் பிறகு அவளது மன ஓட்டங்கள் என்று இரண்டு பக்கம் வருகிறது. இதையெல்லாம் சொல்லாமல் வாசகன் ஊகத்துக்கே விட்டுவிட வேண்டும். துருத்திக் கொண்டு நிற்கிறது. அதற்குப் பிறகு அவள் புற உலகத்தில் என்ன செய்கிறாள் என்பதை மட்டும் காட்டி இருந்தால் இந்தச் சிறுகதை எங்கோ போயிருக்கும்.

நான் படித்த வரையில் A Wet Afternoon சிறுகதை ஒன்றில்தான் இந்தத் துருத்தல் குறைவாக இருக்கிறது. சிறுவனுக்கு முதன்முதலாக பாலியல் உணர்வுகள் ஏற்படுவதை நன்றாக விவரித்திருப்பார்.

நான் மாண்டோவின் எல்லா சிறுகதைகளையும் படித்தவனில்லை. ஆனால் தண்டா கோஷ்ட், கோல் தோ, Assignment ஆகிய 3 புகழ் பெற்ற சிறுகதைகளிலும் முஸ்லிம்கள்தான் victims. தண்டா கோஷ்ட் மற்றும் Assignment சிறுகதைகளில் சீக்கியர்கள்தான் வில்லன்கள், கோல் தோவில் வில்லனே கிடையாது. எல்லா பிரிவினை சிறுகதைகளிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை. இது தற்செயலா இல்லை பாகிஸ்தானில் வாழ்ந்து கொண்டு முஸ்லிம்களை வில்லன்களாகக் காட்டுவது அபாயம் என்ற உணர்வா, இல்லை அவருக்கு blind spot-ஆ என்று தெரியவில்லை. தற்செயல்தான் போலிருக்கிறது, Mozelle சிறுகதையில் முஸ்லிம்கள்தான் வில்லன்கள்.

எப்படி இருந்தாலும் சரி, அவரது பிரிவினை சிறுகதைகளை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். குறிப்பாக டோபா டேக்சிங், கோல் தோ, Assignment, Wages of Labor, ஆக்ரி சல்யூட் மற்றும் தண்டா கோஷ்ட். ஹடக், A Wet Afternoon இரண்டையும் கூடப் பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய இலக்கியம்

மகேந்திரவர்ம பல்லவர் எழுதிய நாடகங்கள்

(மீள்பதிவு)

நாடகங்களைப் பற்றிய என்னுடைய புரிதல் கொஞ்சம் மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன். King Stag போன்ற நாடகங்களை நாலைந்து வருஷம் முன்னால் பரிந்துரைத்திருக்கமாட்டேன் என்று தோன்றுகிறது. நாடகம் நடிக்கப்பட வேண்டும், படித்து உணர்வது கொஞ்சம் அரைகுறைதான் என்பதை முன்னைவிட இப்போது கொஞ்சம் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன். காரணம் என் மூத்த மகள் ஸ்ரேயா நடித்த பள்ளி நாடகங்களைப் பார்த்ததுதான்.

சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் வேறு இந்த நாடகங்களைப் பற்றி எழுதி இருந்தார். பழைய பதிவும் கண்ணில் பட்டது. இதையெல்லாம் நடித்துத்தான் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. மீள்பதித்திருக்கிறேன்.

மகேந்திரவர்ம பல்லவர்மத்தவிலாச பிரகசனம்” என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஓரங்க நாடகம் எழுதியதாகப் படித்திருக்கிறேன். இதெல்லாம் எங்கே கிடைக்கப் போகிறது என்று நான் தேடியது கூட இல்லை. தற்செயலாக வரலாறு.காம் தளத்தில் பார்த்தேன். (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5). அதைத் தவிர அவர் எழுதிய “பகவத்தஜுகம்” என்ற இன்னொரு ஓரங்க நாடகமும் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5) கிடைத்தது. எம்.சி. லாக்வுட் என்பவர் மொழிபெயர்த்ததை இங்கே பதித்திருக்கிறார்கள். தளம் நடத்துபவர்கள் – கமலக்கண்ணன், ராமச்சந்திரன், லாவண்யா, கோகுல், கிருபாஷங்கர் வாழ்க!

ஆனால் ஏழாம் நூற்றாண்டில் – கிட்டத்தட்ட 1400 வருஷங்களுக்கு முன்னால் எழுதப்படவில்லை என்றால் இந்த நாடகங்களை யாரும் சீந்தக் கூட மாட்டோம். அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது. அதாவது அன்று சிரித்திருக்கலாம்.

matthavilasa_prahasanaபிரகசனம் நாடகத்தில் கபாலிகனின் திருவோட்டைக் காணோம். புத்த பிக்ஷு, பாசுபதன், பைத்தியக்காரன், கபாலிகன் எல்லோரும் திருவோட்டுக்கு சண்டை போடுகிறார்கள். அவ்வளவுதான் நாடகம். நாடகத்தின் முக்கியத்துவம் எழுதியது மகேந்திரவர்மரே என்று சூத்திரதாரி அழுத்திச் சொல்வது, காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலைக் குறிப்பிடுவது, கபாலிக, பாசுபத, ஜைன,புத்த மதங்களின் நடப்புமுறையை விவரிப்பது போன்றவைதான். ஒரு இடத்தில் திருவோட்டை துணியில் மறைத்திருப்பதைக் குறிப்பிடுவது இரட்டை அர்த்த வசனம் மாதிரி இருக்கிறது.

bhagvadajjukamபகவத்தஜுகம் நாடகத்தில் நகைச்சுவை என்பது சாமியார் உடலில் கணிகையின் உயிரும் கணிகையின் உடலில் சாமியார் உயிரும் புகுந்துவிட அவர்கள் பேசுவதுதான். இன்று குழந்தைத்தனமாக இருக்கிறது. இருந்தாலும் அன்று பார்த்தவர்கள் சிரித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாடகத்தை பல்லவர் எழுதினாரா இல்லை போதாயனர் எழுதினாரா என்று சந்தேகம் இருக்கிறதாம். இருந்தாலும் மாமண்டூர் கல்வெட்டு பல்லவர் எழுதியதுதான் என்று உறுதியாகச் சொல்கிறதாம்.

நாடகங்கள் இன்னும் கேரளத்தில் நடிக்கப்படுகின்றனவாம்.

நாடகத்தின் தரத்துக்காக அல்ல, வயதுக்காக கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சின்ன நாடகம்தான். பத்து நிமிஷத்தில் படித்துவிடலாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
மத்தவிலாசப் பிரகசனம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5)
பகவத்தஜுகம் – மின்புத்தகம் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4, பகுதி 5)
மத்தவிலாசப் பிரகசனம் – விக்கி குறிப்பு

ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள்

(மீள்பதிவு, திருத்தங்களுடன்)

\இந்து சுந்தரேசன் புத்தகங்களைப் பற்றிய பதிவில் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றி இரா. முருகன் “Vernacular (Tamil, Malayalam, Kannada, Marathi etc) writing is miles ahead of these.” என்று சொல்லி இருந்தார். உண்மையே. இருந்தாலும் அத்தனையும் குப்பை என்று சொல்லிவிடுவதற்கில்லை. பொதுவாக இந்தியர்கள் எழுதும் ஆங்கில இலக்கியம் சுமார்தான். நினைவு வரும் சில நல்ல புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி இந்தப் பதிவில்.

என்னைப் பொறுத்த வரையில் முதன்மையானவர் ஆர்.கே. நாராயண்தான். இத்தனைக்கும் பொதுவாக அவரது கதைகளில் எல்லாம் சுவாரசியம் குறைவுதான். சில நாவல்களை – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma – ரசித்திருக்கிறேன். சுவாமியின் உலகம் மிகவும் சுவாரசியமானது. நிறைய நம்பகத்தன்மை உடையது. மனைவியை இழந்தவரின் துக்கம் English Teacher-இல் genuine ஆக வெளிப்பட்டிருக்கும். Waiting for the Mahatma எனக்குப் பிடித்த “சுதந்திரப் போராட்ட நாவல்களில்” ஒன்று. அவருடைய புகழ் பெற்ற பல புத்தகங்கள் – Guide, Man-Eater of Malgudi, Mr. Sampath, Vendor of Sweets, Financial Expert மாதிரி – எனக்கு கொஞ்சம் போர் அடித்தன. ஆனால் அவை எல்லாம் சேர்ந்து தரும் ஒரு சிறு நகர ambience எனக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சம் படித்த, professional மற்றும் சிறுதொழில் அதிபர்கள் வர்க்கத்தின் கண்களிலிருந்து அந்த சிறு நகரத்தை பார்த்து அதை நமக்கும் சொல்கிறார். (அந்த நகரம் மைசூராகத்தான் இருக்க வேண்டும்.)

முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய கதைகள் – கூலி, Untouchable – இரண்டு படித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. ஒரு கதையில் கக்கூஸ் கழுவும் பங்கி ஜாதியைச் சேர்ந்த ஒருவன் வாழ்க்கையில் ஒரு நாள் விவரிக்கப்படுகிறது – அவன் காந்தியின் ஒரு பேச்சை கேட்பது நினைவிருக்கிறது. நல்ல framework உள்ள கதை என்று அப்போது நினைத்தேன்.

ராஜாராவ் எழுதிய ஒரே ஒரு புத்தகம் – காந்தபுரா – படித்திருக்கிறேன். நன்றாக ஆரம்பித்து நன்றாகப் போகும். ஆனால் என்னவோ பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கும். இன்னும் ஒரு சுதந்திரப் போராட்ட நாவல்.

நாராயண், ஆனந்த், ராவ் மூவரும் இந்திய ஆங்கில புனைவுலகத்தின் “முதல் மூவர்” என்று கருதப்படுகிறார்கள். இரா. முருகன் சொல்வது போல மூவரையும் விஞ்சும் பல இந்திய மொழி எழுத்தாளர்கள் உண்டு. உதாரணமாக ராஜாராவ் பைரப்பாவின் அருகே கூட வரமுடியாது. ஆர்.கே. நாராயண் ஒருவர்தான் – அதுவும் Swami and Friends மட்டும்தான் – இன்னொரு ஐம்பது வருஷம் போனாலும் நினைவில் இருப்பார்/இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜிம் கார்பெட் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவர் “முதல் மூவரில்” ஒருவர் இல்லைதான். ஆனால் நல்ல, விறுவிறுப்பான புத்தகங்களை எழுதி இருக்கிறார். Maneater of Kumaon ஒரு கிளாசிக். அதை மட்டுமாவது கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன். ராஜாராவை விட, முல்க் ராஜ் ஆனந்தை விட இவர்தான் நினைவில் இருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது. கார்பெட் ஒரு ஆங்கிலேய அதிகாரி. “வேட்டைக்காரர்”. மனிதர்களை சாப்பிட ஆரம்பித்துவிட்ட பல புலிகளை, சிறுத்தைகளை சுட்டுக் கொன்றிருக்கிறார். அவர் எழுதியவை எல்லாம் அந்த வேட்டை அனுபவங்கள்தான் (non-fiction).

குஷ்வந்த் சிங்கின் கதைகளில் Train to Pakistan மட்டுமே படித்திருக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை பின்புலக் கதை. படிக்கலாம். அவரது மிச்ச புனைவுகளை புரட்டித்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் நல்ல அபிப்ராயம் இல்லை.

மனோகர் மல்கோங்கர் ஆறேழு மாதங்களுக்கு முன்தான் இறந்துபோனார். அவர் இறந்தபோது நான் எழுதிய அஞ்சலியை இங்கே படிக்கலாம். எனக்கு Bend in the Ganges புத்தகம் பிடித்திருந்தது.

பதின்ம வயதில் ரஸ்கின் பாண்ட் சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். பாண்ட் ஆங்கிலோ-இந்தியர். அவர் எழுதிய என்ற கதை ஜூனூன் என்ற புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படமாக வந்தது. அதைப் படிக்க வேண்டும் பார்க்கிறேன், இன்னும் கிடைக்கவில்லை. படத்தை ஷ்யாம் பெனகல் இயக்கி இருந்தார். சஷி கபூர், ஷபனா ஆஸ்மி, நசீருதின் ஷா மற்றும் பலர் நடித்திருந்தனர். நல்ல படம்.

சேதன் பகத் இன்றைய கூல் எழுத்தாளர். என் கண்ணில் படுசுமார். ஐஐடி பின்புலத்தில் எழுதப்பட்ட Five Point Someone புத்தகம்தான் 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மூலக்கதை. இன்றைய நகர்ப்புற, IT இளைஞர் கூட்டத்தை குறி வைத்து எழுதுகிறார், அந்த மார்க்கெட்டில் ஒரு ஸ்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

முன்னாள் அமைச்சர், ஐ.நா. சபையில் பெரிய பதவியில் இருந்த சஷி தரூர் Great Indian Novel என்ற மகாபாரதம் சார்ந்த ஒரு படைப்பை எழுதி இருக்கிறார். அந்தக் காலத்தில் பிடித்திருந்தது.

சல்மான் ரஷ்டியின் Haroun and the Sea of Stories படிக்க ஆரம்பித்தேன். மிக நன்றாக இருந்தது. சரியான மூட் வர வேண்டும் என்று மூடி வைத்துவிட்டேன், பல வருஷம் ஆகியும் மூட் இன்னும் வரவில்லை. அவரது புகழ் பெற்ற Midnight’s Children புத்தகத்தை யாராவது படித்திருக்கிறீர்களா? எப்படி இருக்கிறது?

சுகேது மேத்தாவின் Maximum City புத்தகத்தை (Non-Fiction) நான் விரும்பிப் படித்தேன். மும்பைக்கு (கொஞ்ச நாள்) திரும்பி வரும் ஒரு அமெரிக்க இந்தியனின் வாழ்க்கை. எப்படியோ மிஷன் காஷ்மீர் என்ற படத்தில் வேறு பணி புரிவார். கொஞ்சம் நீளமான புத்தகம் என்றாலும் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விக்ரம் சந்த்ராவின் Sacred Games நன்றாக ஆரம்பித்தது. பெரிய புத்தகம், பாதியில் நிறுத்தினேன், இன்னும் தொடர முடியவில்லை. இது ஒரு விதத்தில் Maximum City புத்தகத்தின் companion volume என்று தோன்றுகிறது.

உபமன்யு சாட்டர்ஜியின் English, August எனக்கு பிடித்திருந்தது. ஒரு ஹை கிளாஸ் குடும்பத்தில் பிறந்து கலெக்டர் ஆகும் ஒருவனின் அனுபவங்கள். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சாம்ராட் உபாத்யாய் என்ற நேபாளி எழுத்தாளரை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். Royal Ghosts என்ற சிறுகதைத் தொகுப்பு கொஞ்சம் subtle ஆக இருந்தது. ஆனால் இப்போது சட்டென்று கதைகள் எதுவும் நினைவு வரவில்லை.

அனுராக் மாத்தூரின் Inscrutable Americans கொஞ்ச நாள் பாப்புலராக இருந்தது. ஒரு இந்திய சிறு நகர சூழலிலிருந்து அமெரிக்காவில் படிக்க வரும் ஒருவனின் அனுபவங்கள். சூப்பர்மார்க்கெட்டில் பேரம் பேச முயற்சிப்பது, வாஷிங் மெஷினைப் பார்த்துக் கொண்டே இருப்பது என்று ஜோக்குகள் வரும். அந்தக் காலத்தில் சிரித்தேன்.

அசோக் பாங்கர் ராமாயணத்தை science fiction பாணியில் (Prince of Ayodhya, Siege of Mithila, Demons of Chitrakut, Armies of Hanuman, Bridge of Rama, King of Ayodhya)எழுதிக் கொண்டு வருகிறார். எனக்கு ரசிக்கவில்லை. ஆனால் ஒரு சூப்பர்ஹீரோ காமிக்ஸ் புத்தகத்தின் ambience-ஐ கொண்டு வந்திருப்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். அதற்கு தொழில் திறமை வேண்டும்.

அமிஷ் திரிபாதி இன்னும் பிரபலமானவர். அவருடைய மெலுஹா-சிவா புத்தகங்கள் சக்கைப்போடு போட்டிருக்கின்றன. மார்வெல் காமிக்ஸ் தரத்தில் இருக்கும், சுமாரான புத்தகங்களே. ஆனால் அவரது கற்ப்னை வளத்துக்கு ஒரு ஜே!

வேத் மேத்தா சிறு வயதிலேயே கண்களை இழந்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தது நிலைமையை சமாளிக்க ஓரளவு உதவியது. நிறைய எழுதி இருக்கிறார். அனேகமாக தான் பிறந்து வளர்ந்தது, உறவினர்கள் பற்றிய Non-fictionதான். எனக்குப் பிடித்தது Daddyji. டாடிஜியை படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

விகாஸ் ஸ்வரூப்பின் Q and A என்ற புத்தகம்தான் ஸ்லம்டாக் மில்லியனர் படமாக வந்தது. அவரைப் பற்றி கொஞ்சம் விவரமாக இங்கே.

டார்க்வின் ஹால் சில சுமாரான துப்பறியும் கதைகளை, ஆனால் நல்ல இந்திய சித்தரிப்பு உள்ள கதைகளை எழுதி இருக்கிறார்.

ஷோபா தே எழுதுவதெல்லாம் குப்பை. இளம் வயதில் செக்ஸ் பற்றி நிறைய எழுதுவார் என்று Sisters, Socialite Evenings மாதிரி சில புத்தகங்களை தேடிப் பிடித்து படித்திருக்கிறேன்.

ஜும்பா லாஹிரியை எனக்கு கொஞ்சம் பிடிக்கும். இப்போது கதைகள் எதுவும் நினைவு வரவில்லை என்றாலும் அவரது Interpreter of Maladies சிறுகதைத் தொகுப்பு ஓரளவு பிடித்திருந்தது. பாரதி முகர்ஜி (Middleman and Other Stories, Jasmine) இன்று ஓரளவு புகழ் பெற்ற இந்திய-அமெரிக்க எழுத்தாளர். எனக்கு அவர் கதைகள் எல்லாம் சுமாராகத்தான் இருக்கிறது. சித்ரா பானர்ஜி திவாகருணி கொஞ்சம் பிரபலமான அமெரிக்க இந்தியன் எழுத்தாளர். என் கண்ணில் சுமார்தான். இவர்கள் மூவருமே NRI எழுத்தாளர்கள். அவர்களின் கதைகளின் களம் அமெரிக்காதான். இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியினரை வைத்து கதைகள் எழுதப்பட்டிருக்கும். இன்னொரு NRI எழுத்தாளரான இந்து சுந்தரேசன் பற்றி பதிவே போட்டுவிட்டேன்.

கவிதா தாஸ்வானி ஒரு அமெரிக்க இந்திய எழுத்தாளர். என் பனிரண்டு வயது பெண்ணுக்குப் பிடிக்குமோ என்று For Matrimonial Purposes புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்தேன், கடைசியில் நான்தான் படித்தேன். இதெல்லாம் டீனேஜர்களுக்காக எழுதப்படும் மில்ஸ் அண்ட் பூன் பாணி (காதல் இல்லை) புத்தகங்கள்.

ஷாமினி ஃப்ளிண்ட் ஒரு மலேசிய/சிங்கப்பூர் இந்திய வம்சாவளி எழுத்தாளர். இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் சில நாவலகளை எழுதி இருக்கிறார். A Most Peculiar Malaysian Murder (2009), A Curious Indian Cadaver (2012). இந்திய வம்சாவளி எழுத்தாளர் என்றுதான் படித்தேன். நீங்களும் அந்தத் தவறை செய்யாதீர்கள்.

கா.சி. வேங்கடரமணி பழைய காலத்து தமிழ் எழுத்தாளர். தேசபக்தன் கந்தன், முருகன் ஒரு உழவன் என்று இரண்டு நாவல்கள் ஓரளவு பிரபலமானவை. அவற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டு பிறகு தமிழில் அவரே மீண்டும் எழுதினாராம். இவரைப் போலவே மாதவையா, எஸ்.வி.வி. போன்றவர்களும் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறார்களாம். சமீபத்தில் பி.ஏ. கிருஷ்ணன் கூட புலிநகக்கொன்றை நாவலை முதலில் ஆங்கிலத்தில் “Tiger Claw Tree” என்று எழுதிவிட்டு பிறகுதான் தமிழில் மொழிபெயர்த்தாராம். வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்காரின் சில நாடகங்களைத்தான் அவரது மருமகன் வி.சி. கோபாலரத்தினம் தமிழ்ப்படுத்தி இருக்கிறார். அப்படி தமிழ்படுத்தப்பட்ட நாடகத்தைப் பற்றி சமீபத்தில்தான் ஒரு பதிவு எழுதி இருந்தேன்.

அமிதவ் கோஷ் எழுதிய Countdown எனக்கு பிடித்த புத்தகங்களில் ஒன்று. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவைதானா என்ற கேள்வியை எழுப்புகிறார். நாவல்களை இனி மேல்தான் படிக்க வேண்டும்.

இவர்களைத் தவிர இந்திய பின்புலத்தில் எழுதும் பிற நாட்டவர்களும் உண்டு. ஹெச்.ஆர். எஃப். கீட்டிங்(H.R.F. Keating) இன்ஸ்பெக்டர் கோடே(Ghote) என்ற பாத்திரத்தை வைத்து துப்பறியும் கதைகள் எழுதி இருக்கிறார். ஜான் மாஸ்டர்ஸ் ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலோ-இந்தியர்களை வைத்து சில நல்ல கதைகளை (Bhowani Junction) எழுதி இருக்கிறார். கிப்ளிங்கைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

அமித் வர்மா (My Friend Sancho), த்ரிடி உம்ரீகர், மனில் சூரி(Death of Vishnu, Age of Shiva), இந்திரா சின்ஹா (Animal People), விக்ரம் சேத் (Golden Gate, Suitable Boy), நயனதாரா செகால், ஆலன் சீலி (Trotternama), அருந்ததி ராய்(God of Small Things), ரோஹின்டன் மிஸ்திரி(Such a Long Journey), ஹரி குன்ஸ்ரு (Transmission), பல இஸ்மாயில் மெர்ச்சன்ட் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ருத் ஜப்வாலா, சஷி தேஷ்பாண்டே (Long Silence – இதை வாஸந்தி தமிழில் மவுனப்புயல் என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார்), அனிதா தேசாய் (Bye Bye Blackbird), கிரண் தேசாய் (அனிதா தேசாயின் மகள் – Hulabaloo in the Guava Orchard), ஜி.வி. தேசானி (All About H. Hatterr), குர்சரண் தாஸ் (A Fine Family), நிரத் சவுதுரி (Autobiography of an Unknown Indian), அர்விந்த் அடிகா (White Tiger) ஆகிய புத்தகங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்ததில்லை. நீங்கள் யாராவது?

உயர்தர புத்தகம் என்று சொல்லக் கூடியவை மிகக் குறைவே (Swami and Friends, Man-Eater of Kumaon). படிக்கக் கூடியவை என்று பல உண்டு. உங்களுக்குப் பிடித்தவை இருந்தால் அவற்றைப் பற்றியும் சொல்லுங்களேன்! என்னுடைய “படிக்கலாம்” லிஸ்டை வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன். நான் சிறு வயதில் படித்து இப்போது மங்கலாக மட்டுமே நினைவிருப்பதை சேர்க்கவில்லை.

 1. R.K. Narayan – Swami and Friends, English Teacher, Waiting for the Mahatma
 2. Jim Corbett – Man-Eater of Kumaon
 3. Manohar Malgonkar – Bend in the Ganges
 4. Khushwant Singh – Train to Pakistan
 5. Sashi Tharoor – Great Indian Novel
 6. Salman Rushdie – Haroun and the Sea of Stories
 7. Suketu Mehta – Maximum City
 8. Vikram Chandra – Sacred Games
 9. Upamanyu Chatterji – English, August
 10. Ved Mehta – Daddyji
 11. Samrat Upadhyay – Royal Ghosts
 12. Jhumpa Lahiri – Interpreter of Maladies

தொடர்புடைய சுட்டி:
ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் – பரிதோஷ் உத்தமின் லிஸ்ட்

மஹாஸ்வேதாதேவி

மஹாஸ்வேதாதேவி இறந்தபோது அவருக்கு அஞ்சலி எழுத வேண்டும் என்று நினைத்தேன். சாஹித்ய அகடமி, ஞானபீடம், பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்ற எழுத்தாளர். ஆனால் ஒரு வரி கூட படித்ததில்லை, என்னத்தை எழுதுவது? இத்தனை நாள் கழித்துத்தான் படித்தேன், அதனால் இது அவரது புகழ் பெற்ற ஹஜார் சௌராஷிர் மா பற்றிய பதிவாக மாறிவிட்டது.

படித்திருப்பது ஒரு குறுநாவலும் ஒரு சிறுகதையும்தான். ஆனால் மஹாஸ்வேதாதேவி போன தலைமுறை முற்போக்கு எழுத்தாளர்களின் பிரதிநிதி என்று தெளிவாகத் தெரிகிறது. அவரது எழுத்தில் அவரது இடதுசாரி அரசியல் செம்புலப்பெயல்நீர் போலக் கலந்திருக்கிறது. தன் அரசியல் நிலையை வெளிப்படுத்த எழுதுகிறாரா இல்லை தனக்குத் தெரிந்த அரசியல் பின்புலத்தை, அதனால் ஏற்பட்ட உணர்வுகளை எழுதுகிறாரா என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று நினைக்கிறேன். அறுபது-எழுபதுகளின் வங்காளத்தின் அறிவுஜீவி sensibilities-ஐ பிரதிபலிக்கிறார்.

அவரது பலம் அவரது எழுத்தில் இருக்கும் உண்மை. நமது சிஸ்டத்தில் – எல்லா அமைப்புகளிலும்தான் – ஏழைகளுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும், பழங்குடிகளுக்கும் இருக்கும் வழிகள் மிகக் குறைவுதான். சிஸ்டத்தின் பிடியிலிருந்து விடுபட்டு தன் பொருளாதார நிலையை, சமூக அந்தஸ்தை மாற்றுவது கஷ்டம்தான். நேரடியாக பாதிக்கப்படுபவர்களுக்கும், நேரடி பாதிப்பு இல்லாவிட்டாலும் அமைப்புகளில் இருக்கும் அநீதிகளை கண்டு கொந்தளிக்கும் இளைஞர்களுக்கும் இந்திய அரசு அமைப்பின் மீது ஏற்படும் கசப்பு, அந்தக் கசப்பு அதிகபட்சம் போஸ்டர் ஒட்டும் புரட்சியாகத்தான் இருக்கும். ஆனால் அறுபதுகளின் இறுதியில் அது ஆயுதம் ஏந்திய நக்சல்பாரி போராட்டமாகவும் பரிணமித்தது. மத்திய மாநில அரசுகள் இந்தப் போராட்டங்கல் கடுமையாக ஒடுக்கின. போஸ்டர் புரட்சியாளர்கள் கூட வேட்டையாடப்பட்டார்கள். அவர்களின் தரப்பு அவர் எழுத்தில் உண்மைத்தன்மையோடு வெளிப்படுகிறது.

அவரது பலவீனம் அவர் இலக்கியத்துக்கும் பிரச்சாரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணராதது. ஹஜார் சௌராஷி மாவில் 1084 உட்பட்ட சில இளைஞர்கள் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் தரப்பை மிகவும் மெல்லிய குரலில் அங்கங்கே தொட்டுச் செல்கிறார். ஆனால் ‘வில்லன்கள்’ எல்லா விதத்திலும் குறை உள்ளவர்கள். அவனைப் புரிந்து கொள்ளாத பூர்ஷ்வா அப்பாவுக்கும் அண்ணனுக்கும் அண்ணிக்கும் அக்காவுக்கும் அவன் மீது துளி அளவு கூட பாசம் இல்லை. அப்பாவுக்கு வேறு பெண்களோடு உறவு. அக்காவுக்கு பணம், அந்தஸ்து மீதுதான் ஆசை. அண்ணனுக்கு அண்ணிக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை போலிருக்கிறது, அதனால் அவர்கள் இருவருக்கு காமத்தின் மீது அதிக நாட்டம் என்று குறை சொல்கிறார். என்ன சாமியாராக இருக்க வேண்டுமா? இல்லை நக்சல்பாரிகள் காந்தி வழியில் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தார்களா?

ஹஜார் சௌராஷி மா கோவிந்த் நிஹலானி இயக்கத்தில் ஜெயா பாதுரி (பச்சன்), அனுபம் கெர், நந்திதா தாஸ், சீமா பிஸ்வாஸ் நடித்து 1998-இல் திரைப்படமாகவும் வந்தது.

ஹஜார் சௌராஷி மாவை விட எனக்கு திரௌபதி என்ற சிறுகதை பிடித்திருந்தது. அரசு எந்திரத்தால் வேட்டையாடப்படும் சந்தால் போராளிப் பெண்ணின் கதை. கதையில் பிரச்சார நெடியும் செயற்கைத்தன்மையும் தூக்கலாக இருந்தாலும் உண்மை தெறிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

ராஹுல் சாங்கிரித்யாயன் II – பிடித்த சிறுகதை: பிரவாஹன்

வோல்காவிலிருந்து கங்கை வரை பற்றி எழுதி இருந்தேன். அதில் எனக்குப் பிடித்த சிறுகதை இது.

பிரவாஹன் இளவரசன். ஆனால் அவன் ஒரு பிராமண குருகுலத்தில் ஒளித்து வளர்க்கப்படுகிறான். மற்ற உரிமையாளர்கள் எல்லாம் இறந்துவிட அவன் ராஜா ஆகிறான். நாட்டில் உள்ள வைதீக தத்துவங்களை மக்கள் கேள்வி கேட்கிறார்கள். பெரிய “ரிஷிகள்” யாராலும் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. பிரவாஹன் பிரம்மம், மறுபிறவி என்று இரண்டு புதிய கருத்துகளை கொண்டு வருகிறான். யாராலும் உணர முடியாத பிரம்மம் என்ன வேண்டுமானாலும் செய்யும். இந்த பிறவியில் நீ அடிமையா? பரவாயில்லை, உன் கடமையை செய், அடுத்த பிறவியில் பிராமணனாக பிறந்து சுகமாக இருக்கலாம். எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு. இந்த கருத்துகளை யாக்ஞவல்கியருக்கு உபதேசிக்கிறான். அவர் அந்த கருத்துகளை கொண்டு ஜனகனின் அரசவையில் நடக்கும் ஒரு போட்டியில் வெல்கிறார். இந்த கருத்துகள் மதத்தின் ஒரு பகுதி ஆகின்றன.

பிரம்மம் பற்றி பதின்ம வயதுகளில் படித்தபோது இது ரொம்ப சௌகரியமாக இருக்கும் என்று தோன்றியது. கொல்பவனும் பிரம்மம், கொலை செய்யப்படுபவனும் பிரம்மம், திருடுபவனும் பிரம்மம், திருட்டு கொடுப்பவனும் பிரம்மனும், கற்பழிப்பவனும் பிரம்மம், கற்பழிக்கப்படுபவளும் பிரம்மம் என்றால் அறமாவது நெறியாவது? ஜாலிலோ ஜிம்கானாதான்! அப்புறம் மறுபிறவி. அடுத்த ஜன்மத்தில் என்னவாகப் பிறந்தால் இந்த ஜன்மத்தில் என்ன? மயிரே போச்சு. பக்கத்து வீட்டு மாமி ஒருவர் அங்கே நிற்காதே, இங்கே போகாதே, இபபடி எல்லாம் செய்யாதே, அடுத்த ஜன்மத்தில் பாம்பாகப் பிறப்பாய், பல்லியாகப் பிறப்பாய் என்று ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு நாள் பல்லியாகப் பிறந்தால் என்ன மாமி, இரண்டு பூச்சியைப் பிடித்து தின்றுவிட்டு ஜாலியாக இருக்க வேண்டியதுதானே என்று கேட்டுவிட்டேன். அதற்கப்புறம் அவர் கப்சிப், நண்பர்கள் வட்டாரத்தில் என்ன மாதிரி அறிவாளிடா இவன் என்று இரண்டு பேர் வியப்போடு பார்த்தார்கள். பதின்ம வயதில் வேறென்ன வேண்டும்?

எனக்கு இந்த மாதிரி கதைகள் எப்போதுமே பிடிக்கும். நான் எழுதும் மஹாபாரதக் கதைகளும் இந்த மாதிரி ஏதாவது ஒரு தியரியாகத்தான் அனேகமாக இருக்கும். க்ஷத்ரிய ஆதிக்கத்தை ஒழிக்க பிராமண பரசுராமரின் சூழ்ச்சி என்ற ஒரு கான்ஸ்பிரசி தியரியை வைத்து ஒரு கதை எழுதியபோது இந்த பிரம்மம் பற்றிய கான்ஸ்பிரசி தியரி கதை மனதுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. என்ன, ராகுல்ஜி என்னை விட மிகத் திறமையான எழுத்தாளர். அதனால் அவரது சிறுகதை நான் எழுதியதை விட மிக நன்றாக இருக்கிறது. நான் எழுதியது திராவிடக் கழக எழுத்தாளர்களின் கதைகளை விட நன்றாக இருக்கிறது, அவ்வளவுதான். அவர்களை விட நன்றாக எழுத ரொம்ப மெனக்கெட வேண்டியதில்லை. 🙂

சிறுகதையை இங்கே படிக்கலாம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பிரவாஹன் பற்றி நான் வேறு எங்கும் படித்ததில்லை. பிரவாஹன் ராகுல்ஜியின் கற்பனை பாத்திரமா இல்லை இதிகாசங்களில் குறிக்கப்படுபவனா என்று நிச்சயமாக தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டி: வோல்காவிலிருந்து கங்கை வரை

ராகுல் சாங்க்ரித்யாயனின் “வோல்காவிலிருந்து கங்கை வரை”

(மீள்பதிவு)

சிறு வயதிலேயே படித்த தரமான படைப்பு. இன்று படிக்கும்போது குறைகள் தெரியத்தான் செய்கின்றன, ஆனால் குறைகள் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

ஒரு “தாயின்” தலைமையில் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த “ஆரியக்” குழுக்கள் மெதுமெதுவாக விவசாயம், கிராமம், “அசுரர்களோடு” போர்கள், தெய்வங்கள், இந்தியா வருதல், வேதங்கள், ஜாதி, சிறு அரசுகள், மன்னர்கள், சாம்ராஜ்யங்கள், முஸ்லிம்களின் வருகை, ஆங்கிலேய ஆட்சி, சுதந்திரப் போர் என்று பரிணாமிப்பதை சிறுகதைகள் மூலம் சித்தரிக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு சிறுகதை கூட தனியாகப் படித்தால் அவ்வளவு நன்றாக இருக்காது. பிரச்சார நெடி – சாங்க்ரித்யாயன் கம்யூனிஸ்ட் சார்பு உடையவர், ஒரு டிபிகல் அந்தக் கால “முற்போக்கு” நோக்கோடு எழுதுபவர் – கொஞ்சம் அடிக்கத்தான் செய்கிறது. பந்துலமல்லன் போன்ற கதைகள் பழைய ஐதீகக் கதைகளை அப்படியே திருப்பிச் சொல்கிறன. பேசிக் கொண்டே இருப்பார்கள். அவருக்கும் (என்னைப் போலவே) உரையாடல்கள் மூலம்தான் கதையை முன் நகர்த்த முடிந்திருக்கிறது. Subtlety, சொல்லாமல் சொல்வது என்பதெல்லாம் மருந்துக்குக் கூட கிடையாது. தட்டையான பாத்திரப் படைப்புதான். இங்கே சொல்லப்படும் சரித்திரமான வந்தேறிய ஆரியர்கள் இந்தியாவில் இருந்த திராவிடர்களை ஆக்கிரமித்தார்கள் என்ற தியரி உண்மையில்லை என்று இன்று பலரும் கருதுகிறார்கள். (அவர் எழுதியபோது இந்த தியரி பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.)

சில அவசரமாக வரையப்பட்ட ஓவியங்கள் போன்று தோன்றும் கதைகள். ஆனால் அவற்றின் sweep, அவற்றுக்குள்ளே இருக்கும் தொடர்பு அருமை. இத்தனை குறைகள் இருந்தாலும் அது பெரிதாகத் தெரிவதில்லை. மொத்தமாகப் படிக்கும்போது இந்தியாவின் சரித்திரத்தையே காண்பித்துவிடுகிறார். அதுதான் இந்தப் புத்தகத்தை உயர்த்துகிறது.

எனக்கு மிகவும் பிடித்த கதை பிரவாஹன். பிரம்மம் என்ற தியரி எப்படி உண்டானது என்பதை தன் கோணத்தில் கற்பனை செய்திருக்கிறார்.

நான் படித்த சிறந்த புத்தகங்களில் ஒன்று. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

1944-இல் (ஹிந்தியில்) எழுதப்பட்ட புத்தகம். நான் படித்தது தமிழில். கண. முத்தையா மொழிபெயர்ப்பு. தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.

பின்குறிப்பு: சாங்க்ரித்யாயன் இந்திய குறிப்பாக பவுத்த தத்துவங்களில் ஸ்காலராம். இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறாராம். நான் படித்த இன்னொரு புத்தகம் சிந்து முதல் கங்கை வரை. லிச்சாவி குடியரசு மீது மகதப் பேரரசு (பிம்பிசாரன்-அஜாதசத்ரு காலம்) போர் தொடுத்து தோற்றத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட சாண்டில்யன் ஸ்டைல் நாவல். ஆரிய-அனாரிய ரத்தக் கலப்பினால்தான் மன்னர்கள் தலை தூக்குகிறார்கள், குடியரசு முறை அழிகிறது, ஜாதி ஒரு ஏமாற்று, பவுத்த மதத்தின் பெருமை என்று அவருடைய பல தியரிகளை முன் வைத்திருக்கிறார். நயம் இல்லாத புனைவு, புதிதாக ஒன்றுமில்லை. தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராகுல் சாங்க்ரித்யாயன் பற்றி விக்கியில்
பிரவாஹன்

சேதன் பகத்

chetan_bhagatபகத் இன்றைக்கு இந்தியாவில் ஒரு சூப்பர்ஸ்டார். அவருடைய கதைகள் எனக்கு மசாலா படங்களை நினைவுபடுத்துகின்றன. என்ன நடக்கும் என்பது தெரிந்ததுதான், இருந்தாலும் படிக்க முடியும், சில சமயம் ஜாலியாகப் போனாலும் எழுத்தில், நடையில் தெரியும் அமெச்சூர்தனம் எரிச்சல்படுத்துகிறது.

அவருடைய கதைகளில் வர்ணனை, விவரிப்பு எதுவுமிருக்காது. எல்லாம் நேரடியான பேச்சு, எண்ணம்தான். அவருடைய மார்க்கெட் இன்றைய இளைஞர்கள்தான். அவர்கள் நேரடியாக அனுபவிக்கும் மன அழுத்தம் – பரீட்சைகளுக்கு தயார் செய்து கொள்வதாகட்டும், கல்லூரிப் படிப்பாகட்டும், ஆண்-பெண் ஈர்ப்பாகட்டும், படித்துவிட்டு செட்டில் ஆகாமல் உழன்று கொண்டிருப்பதாகட்டும் – இந்தக் கதைகளில் நிறைய வருகிறது. இளைஞர்கள் தட்டையான ஸ்டீரியோடைப்பிங்கையும் மீறி அந்தக் கதைகளில் தங்களையே காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவுரைகளை கதையில் மறைமுகமாகப் புகுத்தி அடிக்கிறார்.

ஒப்பீட்டுக்காக பாலகுமாரனை எடுத்துக் கொள்ளலாம். பாலகுமாரன் நேரடியாக அறிவுரையாகப் பொழிந்து தள்ளுகிறார், ஆனால் புத்தகங்கள் நன்றாக விற்கின்றனவாம். அந்த மாதிரி அறிவுரைகளுக்கு இன்று மவுசு இருக்கிறது. இந்த இளைஞர்களின் மார்க்கெட்தான் இவரது வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகிறது. சுமாரான வணிக எழுத்து என்றுதான் வகைப்படுத்துவேன். எப்படியோ ஹிட்டாகிவிட்டார்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States (2009). இந்த மாதிரி ஒரு நல்ல மசாலா புத்தகத்தைப் படித்து நாளாயிற்று. பஞ்சாபி காதலன், தமிழ் பொண்ணு, அதுவும் மயிலாப்பூர் ஐயர் பொண்ணு, மற்றும் ஸ்டீரியோடைப் பாத்திரங்களை வைத்து கலக்கி இருக்கிறார். நல்ல பொழுதுபோக்கு நாவல். ஆனாலும் தொண்ணூறுகளில் மயிலாப்பூர் ஐயர் குடும்பங்கள் தினமும் வாழை இலையில் சாப்பிடுவது கொஞ்சம் ஓவர். 🙂 பெண்ணும் பையனும் மட்டும் மாடர்ன். ஜாலியாகப் போகிறது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

Five Point Someone (2004) பெரும் வெற்றி பெற்ற புத்தகம். நான் ஐஐடியில் எம்டெக் படித்தவன், அதனால் இதில் நிறைய மிகைப்படுத்தல் இருப்பது தெரிகிறது. அப்படி மூச்சு விடாமல் எல்லாம் நானும் என் நண்பர்களும் படிக்கவில்லை ஆனால் நாங்கள் எல்லாம் நைன் பாயிண்டர்கள்தான். ஐஐடியில் உள்ளே நுழைவதுதான் கஷ்டம், உள்ளே வெற்றி பெற பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. டைம் பாஸ் புத்தகம் என்பதற்கு மேல் பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. எப்படியோ ஹிட் ஆகிவிட்டது, அவ்வளவுதான். சில காட்சிகளை 3 Idiots திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

One Night at the Call Center (2005) புத்தகம் எல்லாம் பயணத்தில் படித்து தூக்கிப் போட்டுவிட வேண்டியவைதான். ஆனால் கடவுள் செல் ஃபோனில் அழைத்துப் பேசும் காட்சி எனக்கு பிடித்திருந்தது.

3 Mistakes of My Life (2008) Kai Po Che சரளமாகப் போகும் வணிக நாவல். குஜராத்தின் ஹிந்துத்துவம் அதிகரித்து வந்து காலத்தில், கலவரங்களின் பின்னணியில் மூன்று நண்பர்களைப் பற்றிய நாவல்.

Revolution 2020-தான் (2011) அவர் எழுதியதில் மிக மோசமானது என்று நினைக்கிறேன். காதல் முக்கோணம், ஊழல் அரசியல்வாதிகளோடு சேர்ந்து வெற்றி பெறும் இளைஞன் லட்சியவாதிக்காக விட்டுக் கொடுப்பது என்று போகிறது.

Half Girlfriend (2014) இன்னொரு மசாலா புத்தகம். பணக்கார, நாகரீகப் பெண், அந்தஸ்துள்ள, ஆனால் ஏழை பீஹார் ஆண் இருவருக்கும் காதல்.

One Indian Girl (2016) எல்லாம் இந்துமதி இன்று ஒரு நாவல் எழுதினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி இருக்கிறது. இவர் எப்படி பிரபலம் ஆனார் என்றுதான் பாதி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

What Young India Wants (2012), Making India Awesome (2015) எல்லாம் வழக்கமான நாடு முன்னேற வேண்டும் புலம்பல்கள்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது 2 States. மிச்சவற்றையும் படிக்கலாம், ஆனால் பொழுதுபோக்கு வணிக நாவல்கள் மட்டுமே.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்

நவீன ஒரிய இலக்கியம்

உபேந்திர கிஷோர் தாஸ் எழுதிய மோலோ ஜோன்ஹோ (Mala Janha) (1928) ஒரு சாதாரண செண்டிமெண்டல் மெலோட்ராமா. கதையின் நாயகி சத்யபாமா நாத் என்பவனை விரும்பியும் எப்போதும் அவனை நாத் அண்ணா என்றே குறிப்பிடுவது மட்டுமே கொஞ்சம் நுட்பமான இடம். நாவலின் தமிழாக்கத்தை (மொழிபெயர்ப்பு: பானுபந்த்) இன்டெர்நெட் ஆர்க்கைவ் தளத்தில் படிக்கலாம்.

இந்த நாவலைப் பற்றி நான் குறிப்பிட ஒரே காரணம்தான். இந்த நாவலின் முன்னுரை ஒரிய மொழி இலக்கியத்தைப் பற்றி ஒரு குறுக்குவெட்டுப் பார்வையைத் தருகிறது. மோலோ ஜோன்ஹோவைத் தவிர்த்து நான் படித்த ஒரே ஒரிய மொழிப் புத்தகம் ஃபகீர் மோஹன் சேனாபதி எழுதிய சா மனா ஆட் குண்ட (Six Acres and a Third) மட்டும்தான். எனக்கு இந்த அறிமுகம் பயனுள்ளதாக இருந்தது. அறிமுகப் பகுதியை மட்டும் அப்படியே தட்டச்சிட்டிருக்கிறேன். எழுதிய ஜானகி வல்லப் மஹந்திக்கும், புத்தகத்தைப் பதித்த நேஷனல் புக் ட்ரஸ்டுக்கும் நன்றி!

சின்ன எச்சரிக்கை: அறிமுகப் பகுதி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைகளை நேரடியாக மொழிபெயர்த்திருக்கிறார், நன்றாக வரவில்லை.

இந்த அறிமுகம் எழுபதுகளில் – 1972க்குப் பிறகு – எழுதப்பட்டது என்று புரிந்தாலும் எந்த வருஷத்தில் எழுதப்பட்டது என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

நவீன ஒரிய இலக்கியம் – ஒரு அறிமுகம்

இந்தியாவின் பிற மாநில மொழிகளைப் போலவே ஒரிய மொழியிலும் நாவல் ஒரு புதுவிதப் படைப்பாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி 30 வருஷங்களில் உருப்பெற்றது. ஆங்கில நாவல்களைத் தழுவியவையாக இருந்தன, இந்தப் புதிய கற்பனைகள். உமேஷ்சந்திர சர்க்காரால் எழுதப்பட்டு 1888-இல் பிரசுரமான பத்மமாலி, ஒரிய மொழியின் முதல் நாவலாகக் கருதப்படுகிறது. இதற்குப் பத்து வருஷங்களுக்கு முன் ராம்சங்கர் ராயால் எழுதப்பட்ட ஸௌதாமினி என்ற சரித்திர நவீனம் கொஞ்ச நாள் வரை ஒரு தற்காலிகமான மாதாந்திர சஞ்சிகையில் தொடர்கதையாக வந்துகொண்டிருந்தது. ஆனால் அது புத்தகமாக வெளியாகவே இல்லை – ஒரு வேளை முற்றுப் பெறாதாதனால் இருக்கலாம். அதனால் ஒரிய மொழியின் முதல் நாவலாசிரியாரகும் பெருமை உமேஷ்சந்திரரையே சாருகிறது.

பத்மமாலி ஒரு சரித்திர நாவல். நீலகிரி என்ற ஒரியா பழங்குடி ஒன்றில் 1835-இல் நடந்த ஒரு உண்மையான நிகழ்ச்சியைஅ அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை இது. சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியையோ, சரித்திரப் புகழ் கொண்ட எந்த தனி நபரைப் பற்றியோ இந்தக் கதை எழுதப்படவில்லை. அடுத்தடுத்த இரு நாடுகளில் கிளம்பிய கலகம், போர், பெண் கடத்தல் முதலிய மயிர்க்கூச்செறிய வைக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் கதை விவரிக்கிறது. இந்த நூல் அக்காலத்து ஒரியா மக்களின் வாழ்க்கையை உண்மையாய்ச் சித்தரிக்கிறது என்பதில் ஐயமில்லை. ஒரிஸ்ஸாவில் ஆங்கில அரசு நிலைபெற்ற 30 வருஷங்களுக்குள் அங்கே வழங்கிய சமூக வாழ்க்கையை விவரிக்கிறது இந்தக் கதை. அக்காலத்தில் அந்நாட்டில் நிலவிய அக்கிரமங்களும், திருட்டும், நீதிமுறையற்ற சூழ்நிலையும், கலகமும், பூசலும் தெளிவாய் விவரிக்கப்படுகின்றன. ஒரிய நாவல் இலக்கியத்தில் ஆரம்பகாலத்தில் இது எழுதப்பட்டது என்றாலும் இதன் நடை சரளமாகவும், பாராட்டுக்குரியதாகவும் இருக்கிறது. இன்றும் இது விரும்பிப் படிக்கப்படுகிறது.

அடுத்து ராம்சங்கர் என்பவர் நாவலாசிரியராக விளங்கினார். விலாசினி என்ற அவருடைய கதை (1892-93) மராட்டியரால் ஆளப்பட்ட ஒரிஸ்ஸாவில் நிகழ்ந்த அநீதி, அக்கிரமங்கள், பஞ்சம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு காதல் கதை.

Fakir Mohan Senapatiஇப்படி சரித்திரத்தையும் கற்பனையையும் இணைத்து எழுதும் பாணி பழக்கத்திலிருக்கும்பொழுது இலக்கிய யுகபுருஷர் ஃபகீர் மோஹன் தோன்றினார். அவரால் எழுதப்பட்ட சா மனா ஆட் குண்ட (முதல் பிரசுரம் 1898), லச்மா (1903), மாமூ (1913), பிராயச்சித்த (1915) ஆகிய ஒவ்வொரு நாவலும் ஒரிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கனவாய் கருதப்படுகின்றன. சரித்திர நாவலான லச்மாவைத் தவிர்த்து பிற மூன்று நாவல்களிலும் அவர் பேராசை, அகங்காரம் முதலிய மனித குணங்களின் உண்மையான உருவத்தையும் ஆழத்தையும் சித்தரித்துள்ளார் என்பதுடன் சமூகத்திலுள்ள சாதாரண ஆண்-பெண்களின் வாழ்க்கை யதார்த்தங்களையும் தெளிவாய் எடுத்துக் காட்டியுள்ளார். ஃபகீர் மோஹனின் எழுத்து நடையும் வருணனைகளும் எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கின்றன. நகைச்சுவையைத் திறமையுடன் கையாண்டு அதற்கேற்றவாறு பாத்திரங்களை உருவாக்கி நடமாட வைத்து ஒரிய இலக்கியத்தில் ஒரு புதிய எழுத்துப் பாணியைப் புகுத்தி வளர்த்த நிகரற்ற எழுத்தாளராய் அவர் மதிக்கப்படுகிறார்.

இவருடைய வழியைப் பாராட்டி பின்பற்றிய சமகால ஆசிரியர்கள் பல இருந்தனர். ஆனால், அவருடைய மறைவிற்குப் பிறகு ஒரிய இலக்கியத்தில் ஒரு விதத் தளர்ச்சி உண்டாகிவிட்டது. இந்தத் தளர்ச்சியை அகற்றி, ஒரிய இலக்கியத்தை மக்களுக்கு உகந்ததாக்கப் பெரிதும் முயன்றார், முகுர் பத்திரிகையின் ஆசிரியர் பிரஜசுந்தர் தாஸ் என்பவர். அவர் மூலமாக முகுர் உபன்யாஸ் கிரந்தமாலா வெளிவர ஆரம்பித்தது. சஹகார் பத்திரிகையின் ஆசிரியருடைய முயற்சியால் ஆனந்த லஹரி உபன்யாஸ் மாலா என்ற தொகுப்பும் நாவல்கள் மட்டுமே அடங்கிய பாரதி என்ற மாத சஞ்சிகையும் பிரசுரிக்கப்பட்டன. இவ்விரு ஸ்தாபனங்களின் பிரசுர ஏற்பாடுகளால் பல ஒரிய எழுத்தாளர்களின் கதைகள அச்சாகி வெளிவருதல் சாத்தியமாகிற்று.

ஃபகீர் மோஹனுக்குப் பிறகு வந்த நாவலாசிரியர்களுள் சிந்தாமணி மஹந்தி, குந்தல குமாரி ஸாபத் என்ற இருவர் பெருமை பெற்றுள்ளனர். சிந்தாமணி சமூகக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள எழுதினார். இவைகளில் கதையே முக்கியமாயிருக்கிறது. பாத்திரங்களின் மன இயல்புகளையும் மாறுபாடுகளையும் பற்றிய ஆராய்ச்சி இந்த நாவல்களில் அரிது என்றே சொல்ல வேண்டும். ஐந்து நாவல்களை எழுதியுள்ள குந்தல குமாரி பெண்களின் இயல்புகளைச் சித்தரிப்பதில் தனித் திறமையுள்ளவராக விளங்குகிறார். தன் பாத்திரங்களை முரண்பாடுள்ளவர்களாகவும், முற்போக்கானவர்களாகவும், கூடவே மரபைப் போற்றுகிறவர்களாகவும் சித்தரித்துள்ளார்.

இச்சமயம் சரித்திரக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட பல நாவல்கள் உருவாயின. இப்படிப்பட்ட நூல்களை வெளியிட்டவர்களின் பட்டியலில் சிந்தாமணி ஆசார்ய, தாரிணி சரண் ரத், ராமச்சந்திர ஆசார்ய, ஸ்ரீதர் மஹாபாத்ர முதலியவர்கள் அடங்குவர். முரண்பாடுகளற்ற, ஜனரஞ்சகமான நாவல்களும் சில வெளிவந்தன. நந்தகிஷோர் பல் எழுதிய கனகலதாவும் (1925), வைஷ்ணவ சரண்தாஸின் மோனே மோனேயும் (1926) உபேந்திர கிஷோர் தாசின் மோலோ ஜோன்ஹோவும் (உயிரற்ற நிலா 1928) பிரசித்தமானவை. ஒரிய இலக்கியத்தில் மனோதத்துவத்தை ஆராயும் முதல் படைப்பாக மோனே மோனே கருதப்படுகிறது. தொடர்ந்து, இரண்டாம் உலகப்போர் ஆரம்பிக்கும் முன்பிருந்து சுதந்திரப் போருக்கு அப்புறம் உள்ள இடைக்காலத்தில் கானுசரண் மஹந்தி, கோபிநாத் மஹந்தி, காலிந்திசரண் பாணிகிரஹி, கோதாவரிஷ் மஹாபாத்ர, ராஜ்கிஷோர் பட்நாயக், நித்யானந்த மஹாபாத்ர, கமலாகாந்த் தாஸ், சக்ரதர் மஹாபாத்ர முதலிய பல நாவலாசிரியர்கள் தங்கள் எழுத்தால் ஒரிய இலக்கியத் தரத்தை உயர்த்தியதுடன், தங்களுக்கும் புகழையும் பெருமையையும் தேடிக் கொண்டனர்.

பிற நாட்டின் நாவல்களை ஆதாரமாகக் கொண்டு அந்தக் கதைகளை உத்கல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு மாற்றி அமைப்பதில் கோதவரிஷ் மிச்ர, கோதாவரிஷ் மஹாபாத்ர என்று இரு எழுத்தாளர்களும் முன்னோடிகளாய் அமைந்தனர். காலிந்திசரணின் மாடிரோ மோனிஷோ (மண் பொம்மைகள்) ஒரிய இலக்கியத்தில் மட்டுமன்றி நம் நாட்டு பிற மொழி இலக்கியங்களிலும் பிரசித்தி பெற்றுள்ளது. யதார்த்தமும் லட்சியமும் சமமாய் இழைந்திருக்கும் இந்த நாவல் ஒரு உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது. தியாகம், அடக்கம், பொறுமை, தாராளம், அகிம்சை முதலிய குணங்களின் இருப்பிடமாகச் சித்தரிக்கப்பட்டுள்ள விவசாயி பாஜூவின் வாழ்க்கைச் சித்திரம் மிகவும் மேன்மையானது. தீயவருடைய சதியில் அகப்பட்டுக் கொள்ளும் ஒரு ஏழை விவசாயி தனது வாழ்க்கையில் அடிக்கும் புயலை – சங்கடங்களை தன் தியாக மனப்பான்மையால் பொறுத்துச் சமாளித்து முன்னேறுவதை விவரிக்கிறது இந்நாவல்.

ராஜ்கிஷோர் பட்நாயக்கின் நாவல்களில் மனோதத்துவ ஆராய்ச்சியை விட அன்பும், தன் உணர்ச்சிகளிலேயே மூழ்கியிருக்கும் அனுபவமும் அதிகமாய்ப் புலப்படுகின்றன. இதய மர்மங்களின் சோதனை இவருடைய படைப்புகளின் முக்கிய அம்சம். நித்யானந்த மஹாபாத்ரவின் நூல்களிலும் மனோதத்துவ ஆராய்ச்சியும், உணர்ச்சி வேகத்தால் ஏற்படும் பலாபலன்களின் வர்ணனையும், கற்பனையும் ஒன்றாய் சேர்ந்து இழைகின்றன. சமகால அரசியல் உணர்வு, அகிம்சாபூர்வமான இனப்பெருமை, அதன் விழைவுகள் இவற்றைப் பிரதிபலிக்கும் நாவல்களை எழுதியவர்களில் ஹரேகிருஷ்ண மஹதாபும், ராம் பிரசாத் சிங்கும் முக்கியமானவர்கள்.

தற்கால ஒரிய நாவலாசிரியர்களுள் கானுசரணை விட அதிக நூல்களை வெளியிட்டவர்களோ, மக்களின் ஆதரவை அதிகம் பெற்றவர்களோ வேறு எவரும் இல்லை. கடந்த ஐம்பது வருஷங்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாவல்களைப் பிரசுரித்துள்ளார். அவருடைய கா என்ற நாவலுக்கு சாஹித்ய அகாடமியின் விருது கிட்டியுள்ளது. அவருடைய படைப்புகள் காதல் கதைகள்; வெகு திறமையுடம் பெண் மனதையும், அதனுடன் நடக்கும் போராட்டத்தையும் சித்தரித்துள்ளார். அவருடைய எழுத்து நடை எளிமையும், மென்மையும் உணர்ச்சி உள்ளதாயுமிருக்கிறது. வர்ணனைப் பாணியிலும் பலவிதப் புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.

gopinath_mohantyஇவருடைய தம்பி கோபிநாத், ஒரிய நாவல் இலக்கிய உலகில் விசேஷமாய்க் கருதப்படுபவர். முக்கியமாய் பழங்குடிகளின் ஜீவனைச் சித்தரிப்பதில் கை தேர்ந்தவர். அவருடைய அம்ருத் சந்தான் என்ற படைப்பு சாஹித்ய அகாடமியின் பரிசு பெற்று அவருக்கும் ஒரிய நாவல் இலக்கியத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளது. கதை முக்கியமில்லை அவருடைய நாவல்களில். ஆனால் நுணுக்கமான மனோதத்துவ ஆராய்ச்சியிலும், ஒவ்வொரு சம்பவத்தையும் அலசிப் பார்ப்பதிலும், சூழ்நிலையை உயிர்க்களையுடன் சித்தரிப்பதிலும் அவருடைய நாவல்கள் ஈடிணையற்றூ விளங்குவன. பர்ஜா, தாதிபூடா, அம்ருத் சந்தான் முதலிய நாவல்களில் வனங்களின் இயற்கை அழகையும் பழங்குடி மக்களின் எளிமையான, அழகான, சிலிர்ப்பளிக்கும் வாழ்க்கையையும் ஆசிரியர் திறமையுடன் விவரித்திருக்கிறார். அவருடைய எழுத்து நடையும், வர்ணனைகளும் வித்தியாசமாகவும் விசேஷமாகவும் இருக்கின்றன. எளிமை, புதுமை, கவிநயம், வேகம் ஆகிய் யாவும் மிளிருகின்ற வசன நசை அவருடையது. அவருடய மாடி மடால் நாவலுக்கு பாரதீய ஞானபீடத்தின் சன்மானமும் கிட்டியுள்ளது.

இரண்டு உலகப் போர்களுக்கு இடைக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்களில் பெரும்பாலும் சமூகரீதியான மாறுதல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மிக சமீபத்திய நாவல்களில் லட்சிய நோக்கை விட யதார்த்த நோக்கு அதிகம் இடம் பெறுகிறது. ஃப்கீர் மோஹனின் காலத்தில் பழமையான நாக்ரீகத்தையும், பண்பையும் எதிர்க்கும் குரல் எழும்பியது என்றாலும், அது ஜாதி, பரம்பரை பேதங்களை ஒழிக்க எந்த விதத் தெளிவான வழியையும் காட்டவில்லை. ஆனால் சமகால நாவல்களில் எல்லாப் பாத்திரங்களும் நிலை பெற்றுள்ள சமூக அமைப்பின் எதிரிகளாக இருக்கிறார்கள். நிறைவேறாத காதலின் கொடிய விளைவுகளையும், தவறிழைக்கும் குற்றவாளியையும் அனுதாபத்துடனும், தர்க்க ரீதியாகவும் அறிமுகப்படுத்துவதில் ஆவலுடையவர்களாக இருக்கின்றனர் தற்கால நாவலாசிரியர்கள். மேலும், ஜாதி, சமூக நியமங்கள் மற்றும் பொருளாதார ரீதியான சீர்குலைவுகளின் சித்திரத்தையும், அமைப்புகளுக்கெதிரான விமரிசனத்தையும் இந்நாவல்களில் காணலாம். அறிவாற்றலும், பரந்த நோக்கும் கொண்ட வாழ்க்கையின் உயர்வை வற்புறுத்தும் நாவல்களையும் வெளியிட்டனா பல எழுத்தாளர்கள்.

தற்கால நாவலாசிரியர்களுள் ஞானேந்திர வர்மா, சுரேந்திர மஹந்தி, வசந்தகுமாரி பட்நாயக், விபூதி பட்நாயக், சாந்தனுகுமார் ஆசார்ய முதலியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தொடர்புடைய சுட்டிகள்: இந்திய இலக்கியம்

Rise of the Oriya Novel
ஒரிய இலக்கியம் – விக்கி குறிப்பு
நான் படித்த ஒரே ஒரிய மொழி நாவல்