அமிதவ் கோஷுக்கு ஞானபீடம்

என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா! என்பது மாதிரிதான் இந்தப் பதிவு. கோஷுக்கு விருது கிடைத்து ஒன்றிரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

அமிதவ் கோஷ் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் எழுத்தாளர்களில் ஒருவர். இது வரைக்கும் ஒரே ஒரு புத்தகம்தான் படிக்க முடிந்திருக்கிறது. அந்த புத்தக அறிமுகத்தை மீள்பதித்திருக்கிறேன். மின்னூலும் இணைத்திருக்கிறேன்.

இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் தேவையா? – அமிதவ் கோஷின் “Countdown”


இந்தியா பாகிஸ்தானின் அணு ஆயுத ப்ரோக்ராம்களைப் பற்றி. 1998 மே மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை வெடித்து பரிசோதனை செய்த காலகட்டத்தில் எழுதப்பட்டது.

என்ன சொல்கிறார்?

  1. 74 பொக்ரான் சோதனைகளுக்குப் பிறகு அக்கம்பக்க கிராமங்களில் கான்சர் உட்பட்ட பல நோய்கள். கோஷ் கேடோலாய் (Khetoloi) என்ற கிராமத்துக்குப் போயிருக்கிறார், அங்கே எல்லாரும் மகா ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அங்கே ஒரு ஆஸ்பத்திரி கூட இல்லை. 98 சோதனைகளும் பொக்ரானில்தான்.
  2. இந்தியா அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்தியது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் நமக்கு அபாயம் என்ற எண்ணத்தால் இல்லை. வல்லரசுக் கனவுதான் காரணம். இதை கே. சுப்ரமண்யம் – ராணுவ நிபுணர் – உறுதி செய்திருக்கிறார். அந்நியர்களிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியா மீண்டும் தன் பலத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஆசை ஒரு முக்கிய காரணம். (அன்றைய பா.ஜ.க. அரசுக்கு ஆங்கிலேயர் மட்டும் அன்னியர் இல்லை)
  3. அன்றைய ராணுவ மந்திரி ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். 74 பொக்ரான் சோதனைகளை எதிர்த்த வெகு சிலரில் ஃபெர்னாண்டசும் ஒருவர். அவருக்கு இன்னும் தயக்கங்கள் இருந்தன. ஃபெர்னாண்டசின் “பேட்டி” மிகவும் பிரமாதம், அவரது ஆளுமையைக் காட்டுகிறது.
  4. சியாசென் பனி ஆறு பக்கம் ஃபெர்னாண்டஸ் கோஷையும் கூட்டி கொண்டு போயிருக்கிறார். மிகுந்த செலவில் சியாசெனில் இந்திய ராணுவம் தனது இருப்பைத் தொடர்கிறது. ஏன்? National prestige.
  5. கோஷ் பாகிஸ்தானுக்குப் போய் அங்கும் பலரை சந்தித்திருக்கிறார். பாகிஸ்தான் இந்தியாவின் அணு ஆயுதங்களை எப்படிப் பார்க்கிறது? பெருத்த அபாயமாகத்தான்.
  6. மொத்தத்தில் அணு ஆயுதங்களால் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பைசா பிரயோஜனமில்லை. ஆனால் national prestige இடிக்கிறது.

கோஷின் கருத்துகளோடு நான் அனேகமாக இசைகிறேன். அணு ஆயுதங்களின் பயனைப் பற்றி இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே எனக்கு உறுதியான கருத்துகள் உண்டு. அணு ஆயுதங்கள் இந்தியாவுக்கு தேவை என்று நினைப்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய கருத்துக்கள். ஆயுதம் கீயுதம் பற்றி எல்லாம் அக்கறை இல்லாதவர்களும் படிக்க சுவாரசியமான புத்தகம். குறிப்பாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அஸ்மா ஜஹாங்கீர் பற்றிய பக்கங்கள். pdf சுட்டியை இணைத்திருக்கிறேன். சின்னப் புத்தகம். நூறு பக்கம் இருந்தால் அதிகம். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கோஷ் எழுதிய Great Derangement (2016) என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். சுனாமி, பூகம்பம், வெள்ளம் ஆகியவை அவ்வப்போது ஏற்படுத்தும் பெரும் அழிவுகளுக்கு மும்பை, நியூ யார்க், எந்தப் பெருநகரமும் தயாராக இல்லை, உலகம் வெப்பமயமாவது இந்தப் பேரழிவுகளின் சாத்தியத்தை அதிகப்படுத்துகிறது என்கிறார். புதிய விஷயம் எதுவுமில்லை, சுவாரசியமாகவும் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: Countdown மின்னூல்

காவஸ்கரின் சுயசரிதை – ‘Sunny Days’

என் பதின்ம வயதுகளில் – எழுபது-எண்பதுகளில் – கிரிக்கெட் பைத்தியம் இல்லாத நடுத்தர வர்க்க இந்திய இளைஞன் கிடையாது. காவஸ்கரா-விஸ்வநாத்தா, பேடியா-சந்திரசேகரா, பிரசன்னாவா-வெங்கட்டா என்று விவாதிக்காதவர்கள் அபூர்வம். அன்று காவஸ்கர் வெளிப்படையாக, politically incorrect-ஆக, பேசிவிடுவார். அன்றைய சிஸ்டத்தில் அது அபூர்வம். அப்படி பேசியபோதும் அவருக்கு எந்தப் பின்விளைவும் ஏற்பட்டதில்லை. அவரை டீமிலிருந்து விலக்க முடியாத நிலையில் அவர் ஒரு பத்து பனிரண்டு வருஷமாவது இருந்தார். அப்படி பல வெளிப்படையான கருத்துக்களை அவர் எழுதி இருக்கும் புத்தகம் Sunny Days. அந்த நாளில் சர்ச்சைக்குள்ளான புத்தகம். சக விளையாட்டு வீரர்கள், கிரிக்கெட் போர்ட் நிர்வாகிகள் எல்லாரையும் பற்றி விமர்சித்திருக்கிறார். அங்கங்கே அடக்கி வாசித்திருப்பது தெரிந்தாலும் – குறிப்பாக பட்டோடி-வடேகர்-பேடி பூசல்கள் பற்றி – இத்தனை வெளிப்படையாக இன்று கூட பேசுவது அபூர்வமே.

Sunny Days வெளிவந்தபோது அவருக்கு முப்பது வயது கூட ஆகி இருக்காது. 1976-இல் நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு டூர் சென்ற வரைதான் எழுதப்பட்டிருக்கிறது.

அன்றைய சிஸ்டத்தில் – ஏன் இன்று கூட – இந்திய கிரிக்கெட் ஒரு feudal அமைப்பு. நிர்வாகிகளுக்காக கிரிக்கெட் வீரர்கள் ஏறக்குறைய பயப்பட வேண்டிய நிலை. கிரிக்கெட் வீரர்களுக்கு புகழ் இருந்தது, ஆனால் பணம் குறைவு. கிரிக்கெட் வாழ்வு முடிந்துவிட்டால் பணத்துக்காக அவஸ்தைப்பட வேண்டி இருக்கலாம். ஒரு காலத்தின் ஸ்டாரான சலீம் துரானி பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். சோல்கர் அன்று ஒரு ஸ்டார். ஆனால் ஏதோ ஒரு சோட்டா நிர்வாகிக்கு பயந்து அற்ப விஷயத்துக்காக பொய் சொல்கிறார். சீனியர் வீரர்களைப் பற்றி ஜூனியர்கள் பேசக்கூடாது. வெளிநாட்டு வீரர்களைக் கண்டால் – அதுவும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்களைக் கண்டால் – கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை பரவலாக இருந்த நேரம்.

காவஸ்கரால் இவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் தைரியமாகப் பேசுகிறார். எஞ்சினியர் போன்ற சீனியர் வீரர்கள் எப்படி தங்கள் தவறுகள் வெளிப்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்று வெளிப்படையாக சுட்டிக் காட்டுகிறார். தன் தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்ட முயற்சிப்பதில்லை. (ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக மெதுவாக ஆடி 36 ரன் எடுத்த உலக மகா சொதப்பலைப் பற்றி தன்னால் அவுட் ஆகக் கூட முடியவில்லை என்று சொல்கிறார்.) 1974 இங்கிலாந்து டூரில் சுதீர் நாயக் தான் shoplift செய்தேன் என்று ஒப்புக்கொண்டது நிர்வாகிகளின் தவறான அறிவுரையால்தான் என்று கருதுவதை வெளிப்படையாக எழுதுகிறார். அவர் அடக்கி வாசித்திருப்பது 1974 இங்கிலாந்து டூரின் போது பெரிதாக வெடித்த வடேகர்-பேடி பூசலைப் பற்றித்தான்.

காவஸ்கர் இந்தக் காலகட்டத்தில் மிகப் பிரமாதமாக விளையாடினார். அவர் கொஞ்சம் கோட்டை விட்டிருந்தாலும் அவரை கிரிக்கெட் நிர்வாகம் இப்படி வெளிப்படையாக எழுதியதற்கு டீமிலிருந்து தூக்கி இருக்கும். அவருக்கு ஏதோ தண்டனை கிடைத்தது என்று நினைவு, ஆனால் சரியாக நினைவில்லை.

இந்தப் புத்தகம் கிரிக்கெட் அபிமானிகளுக்குத்தான். என் போன்ற கிரிக்கெட் பைத்தியங்க்ள் தவறவிடக்கூடாத நூல்.

படித்த இன்னொரு கிரிக்கெட் புத்தகத்தைப் பற்றி தனியாக எழுதுவதற்கில்லை – முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் எழுதிய ‘Cricket As I See It‘. நமக்கு நம்மூர் கிரிக்கெட்தான் சுவாரசியமாக இருக்கிறது, இதைத் தவிர்த்திருக்க வேண்டும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தங்கள் – முன்னாள் மந்திரி ஜெய்ராம் ரமேஷ் நினைவு கூர்கிறார்

சில சமயம் புத்தகம் மகா போரடித்தாலும் அதன் உள்ளடக்கத்தின் மீது உள்ள ஆர்வத்தால் படித்து முடிக்க நேரிடும். ‘To the Brink and Beyond‘ அப்படிப்பட்ட ஒரு புத்தகம்.

காலம் 1991. ராஜீவ் இறந்து காங்கிரஸ் நரசிம்ம ராவின் தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நிலை மகாமோசமாக இருக்கிறது. கடனைக் கட்ட வேண்டிய கெடு நெருங்கிவிட்டது, ஆனால் டாலர்களில் கட்ட வேண்டும், டாலர்கள் குறைவாக இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஜெய்ராம் ரமேஷ் ராவுக்கு உதவியாளராக பிரதமரின் அலுவலகத்தில் சேர்கிறார். மன்மோகன் சிங், ராவ் இருவரையும் – அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, அவர்களது தீர்வுகளை – அருகிலிருந்து பார்க்கிறார். ஆனால் சில மாதங்களிலேயே அவரை திட்டக் குழுவுக்கு (Planning Commission) மாற்றிவிடுகிறார்கள். அந்த ஆறேழு மாத அனுபவங்களைத்தான் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார்.

முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். எனக்கு இந்தப் பொருளாதார உத்திகள் எல்லாம் புரிவதே இல்லை. உதாரணமாக டாலருக்கு நிகராக உள்ள ரூபாயின் மதிப்பைக் குறைத்தால் என்ன பயன் விளைந்துவிடும்? ஒரு வளையலுக்கு ஒரு டாலர் விலை என்று வைத்துக் கொள்வோம். ரூபாயின் மதிப்பை பாதியாகக் குறைக்கிறோம். நமக்கு நூறு டாலர் வேண்டுமென்றால் அதை சம்பாதிக்க முன்னால் நூறு வளையல் விற்றோம், இப்போது இருநூறு பொருள் விற்க வேண்டும். அமெரிக்கர்களுக்கு மலிவாகக் கிடைப்பதால் அதை அதிகமாக வாங்குகிறார்கள். சரி இதற்கு வளையலின் விலையை அரை டாலராகக் குறைத்துவிடலாமே! என்ன வித்தியாசம்?

சரி என் குழப்பங்களை விடுவோம், இந்தப் புத்தகத்துக்கு வருவோம். ஜெய்ராம் ரமேஷ் ராவ் சிங்கை நிதி அமைச்சராக ஆக்கும்போது நடந்த விஷயங்களை விவரிக்கிறார். அன்றைய காங்கிரஸ் இன்னும் சோஷலிசம் பேசும் காங்கிரஸ்தான். நிதி நிலைமை மோசமாக இருப்பது தெரிந்ததும் ராவ் ஒரு நிபுணரைத்தான் நிதி அமைச்சராக்க வேண்டும் என்று நினைக்கிறார். அன்று முக்கியத் தலைவராக இருந்த பிரனாப் முகர்ஜி தான்தான் அடுத்த நிதி அமைச்சர் என்று நினைப்பில் இருக்கிறார், ஆனால் முகர்ஜிக்கு திட்டக் குழுவின் தலைவர் பதவிதான். சிங் அமைச்சரானதும் நிலைமையை சமாளிக்க ஐஎம்எஃபிடம் கடன் வாங்க வேண்டும், பல மானியங்களை ஒழிக்க வேண்டும், ஏற்றுமதிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும், ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும், அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார். சோஷலிச நினைவு போகாத காங்கிரஸ் எதிர்க்கிறது. ராவ் அவ்வப்போது கொஞ்சம் ஜகா வாங்கினாலும் சிங்கின் திட்டங்கள் நடந்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அவ்வளவுதான் இந்தப் புத்தகம் காட்டும் காட்சி.

ஆனால் ஜெய்ராம் ரமேஷ் போரடிக்கிறார். தனக்கு எத்தனை முக்கிய மனிதர்களைத் தெரியும், தான் எப்படி பேச்சை எழுதிக் கொடுத்தேன், (ராவ் இவர் எழுதிக் கொடுத்ததை பயன்படுத்துவதே இல்லை), தான் தான் என்று தன்னிலேயே முழுகிக் கிடக்கிறார். இந்த நிகழ்ச்சிகளை விவரிக்கும் வேறு புத்தகமே இல்லாததால்தான் தம் கட்டிப் படித்தேன்.

ஆவணம் மட்டும்தான். ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

பெரிசு – ராஜாஜி பற்றி ஒரு வெள்ளைக்காரி

rajajiமோனிகா ஃபெல்டன் பிரிட்டிஷ் பெண். எம்.பி.யாக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 1955-56 வாக்கில் இந்தியா வந்து ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுத முயன்றிருக்கிறார். இரண்டு மூன்று வருஷம் இந்தியாவில் தங்கி, ராஜாஜியை அடிக்கடி சந்தித்திருக்கிறார். அந்த நினைவுகளைத்தான் ‘I Meet Rajaji’ என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார்.

Intimate Portrait என்று சொல்வார்கள். இந்தப் புத்தகத்தின் charm அதுதான். பெரிசு அவ்வப்போது செய்யும் குசும்பு, விடாமல் செய்த முயற்சிகள், நேருவை விமர்சிக்கும்போதும் அதன் ஊடாகத் தெரியும் அவர்களது பரஸ்பர அன்பு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை ஆகியவற்றை அருகிலிருந்து பார்த்த ஒருவரின் நினைவுகள்.

ராஜாஜி அப்போது அரசியலிலிருந்து விலகி இருந்த நேரம். தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஏறக்குறைய வெளியேற்றப்பட்டிருந்தார். வியாசர் விருந்து, ராமாயணம் எல்லாம் அப்போது வெளியாகி இருந்தன. அவருக்கு வாழ்க்கை வரலாறு போன்றவற்றில் பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனால் மோனிகா ஃபெல்டனோடு நட்பு உருவாகி இருக்கிறது. முதலில் மரியாதைக்காக சந்தித்திருப்பார், மோனிகா கண்ணில் தான் ஒரு ஹீரோ என்பது அந்த நட்பு உருவாக வழிவகுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்தக் கட்டத்தில் ராஜாஜி பெரிதாக எதையும் செய்யவில்லை. அதனால் இன்றைக்கு நமக்கு சுவாரசியமாக இருக்கக் கூடிய வம்புகள் எதுவும் இல்லை. காமராஜின் பேர் ஒரே ஒரு இடத்தில் வருகிறது. நேருவை விமர்சித்தாலும் அடக்கித்தான் வாசித்திருக்கிறார். லைசன்ஸ் கோட்டா பர்மிட் ராஜ் என்று கடுமையான வார்த்தைகள் இல்லை. நேருவும் ராஜாஜியின் விமர்சனத்துக்கு பதிலாக தான் ராஜாஜியை பெரிதும் மதிப்பதாகவும், பெரிசு கொஞ்சம் தாட்சணியம் காட்ட வேண்டும் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்.

ராஜாஜி அப்போது சென்னையில்தான் வசித்தார். அவருடைய நேரம் எல்லாம் ஸ்வராஜ்யா பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதிலும் அவ்வப்போது கூட்டங்களில் பேசுவதிலும்தான் போய்க் கொண்டிருந்தது. அவருடைய நண்பர்கள் எல்லாரும் கிழவர்கள். மோனிகா உடனிருந்த இரண்டு மூன்று வருஷங்களில் அவருடைய நண்பர்கள் சிலர் இறந்திருக்கிறார்கள். ராஜாஜிக்கும் ஆரோக்கியம் ஒன்றும் பிரமாதமாக இல்லை. வாழ்க்கை வரலாறு என்பதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் இந்த நிலையில் அவரை தினமும் தேடி வந்து பேசும் ஒரு பெண்ணோடு அவருக்கு நட்பு உருவாகாதா என்ன?

அந்தக் காலத்தில் ராஜாஜி அணு ஆயுதங்களை உலகம் கைவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். மோனிகாவும் இதில் தீவிரமாக இருந்தார். ஆனால் ராஜாஜி அரசியல் அதிகாரம் இல்லாத ஒரு வயதான கிழவனால் எதையும் பெரிதாக கிழித்துவிட முடியாது என்பதை மோனிகாவை விட நன்றாகவே உணர்ந்திருந்தார். World Peace Council மாதிரி சில அமைப்புகளுக்கு தந்தி அனுப்புவது, நியூ யார்க் டைம்ஸ் மாதிரி பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதுவது, குருஷ்சேவுக்கு கடிதம் எழுதுவது இது மாதிரி முயற்சிகளை செய்து கொண்டிருந்தார். குருஷ்சேவ் இவருடைய கடிதங்களுக்கு தொடர்ச்சியாக பதில் எழுதி இருக்கிறார். காந்தி மாதிரியே சின்னச் சின்ன வெற்றிகளுக்கு முயன்றிருக்கிறார். ஹைட்ரஜன் குண்டு வெடிப்பு சோதனைகளை குருஷ்சேவ் ஒரு வருஷம் நிறுத்தி வைத்திருந்திருக்கிறார்.

ராஜாஜிக்கு அப்போது ஓரளவு fan following இருந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் அது ராஜாஜியின் பழைய நண்பர்கள், வயதானவர்கள், பிராமணர்களோடு குறுகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் கல்லூரி நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசி இருக்கிறார். மாறாக ஹைதராபாத், கல்கத்தாவில் அவரைப் பார்க்க, அவர் சொல்வதைக் கேட்க இளைஞர்கள், ஏழைகள் கூடி இருக்கிறார்கள்.

ராஜாஜி நேருவுக்கு சமமான ஆகிருதி உள்ள தலைவர் இல்லாதது நேருவை பலவீனப்படுத்துகிறது என்று நினைத்திருக்கிறார். ஒரு இடத்தில் சொல்கிறார் – காந்தி இருந்திருந்தால் பின்னணியில் அவரது தாக்கம் இருந்து கொண்டே இருக்கும். படேல் போய்விட்டார்; ஆசாத் அவ்வளவு பயன்படமாட்டார். (useless என்று சொன்னதாக நினைவு). நானோ ஓய்வு பெற்றுவிட்டேன். யாராலும் நேருவை எதிர்த்து ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்.

1959-இல் ஸ்வதந்திரா கட்சி அறிவிப்புடன் புத்தகம் முடிகிறது.

புத்தகம் எல்லாருக்குமானது இல்லை. மோனிகா ராஜாஜி ஒதுங்கி இருந்த நாட்களைத்தான் விவரிக்கிறார். அதனால் சுவாரசியம் குறைவு. ஆனால் அவரது ஆளுமை வெளிப்படுகிறது. என் புத்தக அலமாரிக்காக நான் வாங்குவேன்.

நாரண. துரைக்கண்ணனும் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கிறார். குறிப்பாக சொல்ல ஒன்றுமில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டி: மோனிகா ஃபெல்டன் பற்றிய விக்கி குறிப்பு

மராத்திய ராணி தாராபாய்

tarabaiதாராபாய் சத்ரபதி சிவாஜியின் மருமகள். சிவாஜியின் இரண்டாவது மகனான ராஜாராமின் மனைவி. தாராபாயின் அத்தை சிவாஜியின் மனைவிகளில் ஒருவர். ஜலதீபம் படித்தவர்களுக்கு பரிச்சயமான பேராகத்தான் இருக்கும்.

மராத்திய அரசை சிவாஜியின் இறப்புக்குப் பிறகு உயிரோடு வைத்திருந்ததில் தாராபாயின் பங்கு முக்கியமானது. பிரஜ் கிஷோர் எழுதி இருக்கும் இந்தப் புத்தகம் – Tarabai and Her Times – தாராபாயின் காலத்தில் மராத்திய அரசு எப்படி உயிர் பிழைத்தது, எப்படி மீண்டும் வலுக் கொண்டது, எப்படி பேரரசாக மாறியது என்பதை விவரிக்கிறது. இது பிரஜ் கிஷோரின் முனைவர் பட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாம். அதை ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார்.

பிரஜ் கிஷோரின் தனிப்பட்ட எண்ணங்கள் இதில் ஊடுறுவவதை அவரால் முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை. அவரது மராத்திய சார்பு, மராத்திய அரசிலும் ஷாஹூ அரசராவதே சரியானது போன்றவை தெரிகின்றன. இருந்தாலும் நடுநிலையோடு எழுத முயற்சித்திருக்கிறார்.

ஔரங்கசீப் தென்னிந்தியாவை மொகலாயப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்று கடுமையாக முயன்றார். அதற்குத் தடையாக இருப்பது பீஜப்பூர் அரசோ கோல்கொண்டா அரசோ அல்ல, மராத்தியர்களே என்பதை அவர் உணர்ந்திருந்தார். சிவாஜி இறப்பக்குப் பிறகு இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது என்று ஔரங்கசீப் முழுமூச்சாக மராத்தியர்களைத் தாக்கினார். சிவாஜிக்குப் பிறகு அரசனான சாம்பாஜியை (சம்புஜி என்று எழுத வேண்டுமோ என்னவோ தெரியவில்லை) போரில் வென்று சாம்பாஜியை சிறைப்பிடித்தார். முஸ்லிமாக மாறி மொகலாயப் பேரரசின் மேலாண்மையை ஏற்கும் குறுநில மன்னனாகலாம் என்று ஆசை காட்டியபோது சாம்பாஜி மறுக்க, சாம்பாஜி மிகக் குரூரமான முறையில் கொல்லப்பட்டார். ஆனால் சாம்பாஜியின் மகனான ஷாஹூ, மற்றும் மனைவி யேசுபாய் ஆகியோரை வீட்டுக் காவலில் வைத்து மரியாதையோடு நடத்தி இருக்கிறார். யேசுபாய் சாம்பாஜி சிறைப்பிடிக்கப்பட்டதும் தான் சாம்பாஜியைப் பிரிய விரும்பவில்லை என்று தானே போய் தன் குழந்தையோடு சரணடைந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில சாம்பாஜியின் தம்பி ராஜாராம் (இவரை சாம்பாஜி சிறையில் வைத்திருந்தார். சிறையில்தான் தாராபாயோடு திருமணம் எல்லாம்) பொறுப்பேற்றார். ஆனால் மொகலாயர்களை எதிர்க்க முடியாமல் செஞ்சிக் கோட்டைக்கு சென்றார். அங்கும் மொகலாயர்கள் துரத்த அங்கிருந்து தப்பி தஞ்சாவூருக்குச் சென்றார். சிறிய அளவில் மொகலாயர்களை எதிர்க்க ஆரம்பிக்கும்போது இறந்துவிட்டார்.

இப்போதுதான் தாராபாயின் உச்சக்கட்டம். கிட்டத்தட்ட 15 வருஷங்களில் தாராபாய் ஏறக்குறைய அழிந்து போன மராத்திய அரசை மீண்டும் உயிர் கொள்ள வைத்திருக்கிறார். இடைவிடாத தாக்குதல்கள், கோட்டைகளைப் பிடித்தல் என்று விடாமல் முயன்று கொண்டே இருந்திருக்கிறார்.

அன்றைய மராத்தியர்களுக்கு சிவாஜி ஏறக்குறைய தெய்வம். சிவாஜியின் மகன், மருமகள் என்றுதான் எல்லாருக்கும் மதிப்பு. இளைஞனாக வளர்ந்துவிட்ட ஷாஹூ விடுதலை செய்யப்பட, இப்போது தாராபாயை ஆதரிப்பதா, இல்லை ஷாஹூவையா என்று குழப்பம், பூசல்கள், ஏன் போரே கூட நடக்கிறது.

பாலாஜி விஸ்வநாத் (முதல் பேஷ்வா)வின் திறமையால் கனோஜி ஆங்கரே உட்பட்ட தாராபாயின் ஆதரவாளர்கள் சிலர் கட்சி மாறுகிறார்கள். ஷாஹூவின் அரவணைத்து செல்லும் குணம் அவர் கட்சிக்கு பலத்தை சேர்க்கிறது. மெதுமெதுவாக ஷாஹூ மராத்திய அரசராக ஏற்கப்படுகிறார். ராஜாராமின் இன்னொரு மகன் (இவர் பெயரும் சாம்பாஜிதான்) கோலாப்பூரில் இருந்து தெற்குப் பகுதிகளை ஆட்சி செய்கிறார்.

ஷாஹூவுக்கு மகன் இல்லை. அவரது கடைசி காலத்தில் தாராபாய் ஒரு பையனைக் கொண்டுவந்து இவன் ராஜாராமின் பேரன் என்று சொல்லி அவனை ராஜாவாக்குகிறார். ஆனால் பேஷ்வாக்கள் அப்போது மிகவும் பலமாக இருந்தார்கள், தாராபாயால் மீண்டும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லை.

தாராபாயின் பலவீனங்களைப் பற்றி பிரஜ் கிஷோர் நிறையவே பேசுகிறார். அவரது அதிகார ஆசைதான் அவரை ஷாஹுவை எதிர்க்க வைத்தது, அது தவறு என்கிறார். அரசியலில் உரிமையாவது கிரிமையாவது? சிவாஜிக்கு என்ன உரிமை இருந்தது? தாராபாய் ஆணாக இருந்திருந்தால் ஷாஹுவால் வென்றிருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

புத்தகத்தில் எனக்கு takeaway என்பது அன்றைய சாதாரண மக்களின் நிலைதான். மொகலாயப் படைகளும் மராத்தியப் படைகளும் நிஜாமின் படைகளும் மாறி மாறி போரிட்டுக் கொண்டிருந்தால் கிராமத்து விவசாயிகளும் சிறு வணிகர்களும் பிழைப்பது எப்படி? கொள்ளை அடிப்பது வாழ்க்கை முறையாகவே இருந்திருக்கிறது.

இதெல்லாம் வரலாற்றில் விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

இந்தியாவில் தடை செய்யப்பட்ட புத்தகம் – “Smash and Grab: Annexation of Sikkim”

sunanda_dutta_rayசுனந்தா தத்தா-ரே எழுதிய இந்தப் புத்தகம் (1984) இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. சிக்கிம் இந்தியாவோடு இணைக்கப்பட்டது இந்திய இம்பீரியலிசம் என்றும் இணைப்பை விமர்சித்தும் எழுதப்பட்டதால் இந்தத் தடை.

சிக்கிம் இன்று இந்தியாவில் ஒரு மாநிலம். ஆனால் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் அது ஒரு தனி நாடு. 300-400 வருஷங்களாக இருந்த நாடு. திபெத், சிக்கிம் இரண்டுமே பிரிட்டிஷார் காலம் வரை சீனாவின் மேலாண்மையை ஏற்றிருந்தனவாம். படைபலம் இல்லாத நாடு, அதனால் நேபாளம், பிரிட்டிஷ் இந்தியா எல்லாம் சிக்கிமின் பல பகுதிகளை பறித்துக் கொண்டன. டார்ஜிலிங் 1947-இல் கூட சிக்கிம் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு ‘வாடகைக்கு’ விட்டிருந்த பகுதியாம்!

தத்தா-ரே வங்காளி. ஸ்டேட்ஸ்மன் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். பணக்கார, அந்தஸ்துள்ள குடும்பப் பின்னணி. சிக்கிமின் அன்றைய ராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் நண்பர் என்று தெரிகிறது.

சிக்கிம் தனிப்பட்ட நாடு, ஆனால் இந்தியா அதை நடத்திய விதம் ஆங்கிலேய அரசு ஒரு இந்திய சமஸ்தானத்தை நடத்திய விதம் மாதிரிதான் இருந்தது, இந்தியாவின் ‘பிரதிநிதிகள்’ – தூதர்கள் அல்ல, அதற்கும் மேலே – ராஜாவிற்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை, ராஜாவின் அமெரிக்க மனைவி சந்தேகத்துடன் பார்க்கப்பட்டாள், சீன-இந்தியா தகராறில் சின்ன நாடான சிக்கிம் விழுங்கப்பட்டுவிட்டது, சிக்கிமோடு இருந்த உடன்படிக்கைகள் எல்லாம் மீறப்பட்டன என்கிறார் தத்தா-ரே.

சிக்கிமுக்கு எங்களால் எந்த ஆபத்துமில்லை என்று சீனா திரும்பத் திரும்ப சொல்லி இருக்கிறது. சிக்கிம் எல்லா விதத்திலும் இந்தியாவின் பக்கம்தான் நின்றிருக்கிறது. சிக்கிம் வழியாக இந்தியப் படைகள் சென்று சீனாவோடு போரிட்டிருக்கின்றன. சிக்கிம் தனி நாடாகத் தொடர்ந்திருந்தால் இந்தியாவுக்கு எந்தப் பாதிப்புமில்லை என்கிறார் தத்தா-ரே.

சர்வதேச சட்டம் என்று பார்த்தால் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் சிக்கிம் இந்தியாவின் சமஸ்தானமாகத்தான் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்பதுதான் practical reality. காகிதத்தில் அதன் நிலை புதுக்கோட்டை சமஸ்தானத்தை விட உயர்ந்த நிலையில் இருந்திருக்கலாம், ஆனால் உண்மையில் அவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. படேல் அந்தக் காகிதத்துக்கு மதிப்பு கொடுக்காமல் இந்த ‘சமஸ்தானத்தை’ அன்றே இந்தியாவோடு இணைத்திருந்தால் அதில் எந்தத் தவறும் இருந்திருக்காது.

மேலும் இந்தியாவின் பாதுகாப்பு குறித்த அச்சம்தான் சிக்கிம் இந்தியாவோடு இணைக்கப்பட்டதன் முக்கியக் காரணமாக இருந்தாலும் சிக்கிமின் மக்களும் அதைத்தான் விரும்பி இருக்கிறார்கள் – குறைந்தபட்சம் அதில் அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை.

தத்தா-ரேயின் biases தெளிவாகத் தெரிகின்றன. அவர் ஒரு டிபிகல் அன்றைய பணக்கார, படித்த, ஆனால் கம்யூனிச சார்புடைய வங்காளி. புத்தகத்தில் அவர் சீனாவைப் பற்றி ஒரு வார்த்தை குறை சொல்வதில்லை!

புத்தகம் அலுப்பு தட்டும் வகையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் சிக்கிம் இணைப்பு போன்ற நிகழ்ச்சிகள் பற்றி எதுவும் ஆவணப்படுத்தப்படுவதில்லை, அதனால்தான் இந்தப் புத்தகம் முக்கியமானது.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

கிழவனின் நினைவாக – லாரி பேக்கர்

laurie_bakerலாரி பேக்கரைப் பற்றி நான் கேள்விப்பட்டது என் நண்பன் ஸ்ரீகுமார் மூலம்தான். நானும் பொறியியல் படித்தவன்தான். ஆனால் பேக்கர் வீடுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது ‘அட இது நம்ம வாத்தியார்களுக்குத் தெரியவே இல்லையே’ என்று தோன்றியது. அப்போது ஃபுகுவோகா (One Straw Revolution), Appropriate Technology போன்ற கருத்தாக்கங்கள் எல்லாம் உற்சாகம் தந்தன.

சமீபத்தில் பேக்கர் எழுதிய ஒரு புத்தகம் – Manual of Cost Cuts for Strong Acceptable Housing – கண்ணில் பட்டது. பேரைப் படித்ததுமே படிக்கும் உற்சாகம் போய்விடும். ஆனால் சுவாரசியமான புத்தகம். தலைப்பு மட்டும்தான் போரடிக்கிறது.

அன்றிருந்ததை விட இன்று வீடு கட்டும் பொறியியலோடு தூரம் அதிகம். இருந்தாலும் அவர் சொல்வது இன்னமும் மிகவும் sensible ஆக இருக்கிறது. சென்னையில் வெள்ளத்திற்குப் பிறகு இன்று வீடு கட்டித் தருகிறேன் என்று கிளம்புபவர்கள் இதையெல்லாம் பார்த்தால் நல்லது.

பேக்கர் எழுதிய ஒரு கட்டுரையும் கண்ணில் பட்டது.

சுதந்திரப் போராட்டம், கிராம முன்னேற்றம், ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு, அதே நேரத்தில் அதன் குறைகளைக் கண்டு பயப்படாமல் அவற்றை நிவர்த்திக்க முயற்சி, காதி, சபர்மதி ஆசிரமம், முறைத்துக் கொண்ட மகன் இப்படி ஆயிரம் விஷயங்கள் இருந்தும் நடுவில் லாரி பேக்கர், குமரப்பா மாதிரி ஆட்களை உருவாக்கி இருக்கும் அந்தக் கிழவனை மாதிரி இன்னொருவர் வர நூற்றாண்டுகளாகும்.

அப்படியே அர்விந்த் குப்தாவைப் பற்றியும் ஒரு வார்த்தை. முப்பது வருஷங்களுக்கும் மேலாக மலிவு விலையில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். பலவும் pirated-தான். ஆனால் அவர் மூலம்தான் டோட்டோசான், One Straw Revolution என்று பல புத்தகங்களைப் படித்தேன். இணையம் இல்லாத காலத்தில் இவையெல்லாம் இந்தியாவில் சுலபமாகக் கிடைத்துவிடாது. சிறுவர்களுக்காக பல அறிவியல் சோதனைகள், புத்தகங்களை இன்று இவரது தளத்தில் காணலாம். கட்டாயம் தளத்தைப் போய்ப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்