இ.பா. இப்போது சாஹித்ய அகடமி ஃபெல்லோ

சாஹித்ய அகடமி ஃபெல்லோவாக இந்திரா பார்த்தசாரதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இ.பா.வுக்கு 91 வயது ஆகிவிட்டதாம். ஏதோ இப்போதாவது தேர்ந்தெடுத்தார்களே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

தமிழுக்காக இது வரை ஐந்தே பேர்தான் ஃபெல்லோவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ராஜாஜி (1969), தெ.பொ. மீனாட்சிசுந்தரம் (1975), ஜெயகாந்தன் (1996), கமில் சுவலபில் (1996), இப்போது இ.பா.

கி.ரா., அசோகமித்ரன், சுந்தர ராமசாமி, க.நா.சு., லா.ச.ரா., தி.ஜா. போன்றவர்களுக்கு இந்த கௌரவம் கொடுத்திருக்கப்பட வேண்டும். அது என்ன ஓரவஞ்சனையோ தெரியவில்லை. சரி, பூமணிக்காவது அடுத்த முறை கொடுத்துவிடுங்கப்பா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், விருதுகள்

ராமானுஜர் – இந்திரா பார்த்தசாரதியின் நாடகம், பி.ஸ்ரீ.யின் புத்தகம்

சமீபத்தில் பி.ஸ்ரீ. எழுதிய ராமானுஜர் என்ற புத்தகத்தைப் படித்தேன். 1965-இல் இந்தப் புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய இ.பா. தொகுத்திருக்கும் குருபரம்பரைக் கதைகளைத்தான் தொகுத்திருக்கிறார். ஆனால் பி.ஸ்ரீ. எழுதுவதற்கும் பழைய குருபரம்பரைக் கதைகளை நேராகப் படிப்பதற்கும் பெரிய வித்தியாசமே இல்லை. புத்தகத்தைப் பற்றி எழுத ஒன்றுமே இல்லை, ஏறக்குறைய ஒரு காலட்சேபத்தைப் படிப்பது போல இருந்தது. இதற்கு சாஹித்ய அகாடமி விருது என்று தெரிந்தபோது எவண்டா இதைப் பரிந்துரைத்தான் என்று கடுப்புதான் வந்தது.

pi_sriபி.ஸ்ரீ.யின் ராமானுஜர் ஒரு தொன்மத்தின் நாயகர். ஆனால் இ.பா.வின். ராமானுஜர் நம் காலத்தவர் – உண்மையில் எந்நாளும் சம்காலத்தவராகவே தோன்றுவார். காந்தி போன்றவர். பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் படிக்கும்போது இ.பா. இந்த நிகழ்ச்சியை எப்படி விவரித்திருக்கிறார் என்றுதான் மனம் போய்க் கொண்டிருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால் இ.பா.வின் நாடகம் எப்படியோ என் மனதில் ராமானுஜர் தொன்மம்+வரலாற்றுக்கு gold standard ஆகி இருக்கிறது! இத்தனைக்கும் குருபரம்பரைக் கதைகள் வரலாற்றை தொன்மமாக மாற்றுகின்றன என்றுதான் நினைக்கிறேன். வரலாற்று நிபுணர்கள் இந்த குருபரம்பரைக் கதைகளில் பலவற்றை மறுக்கிறார்கள். உதாரணமாக டாக்டர் நாகசாமியின் கட்டுரையைப் பாருங்கள்.

பி.ஸ்ரீ.யின் புத்தகத்தைப் பற்றி எழுதுவதை விட இ.பா.வின் நாடகத்தைப் பற்றி எழுதுவது உத்தமம் என்று அக்டோபர் 2010-இல் எழுதிய பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

ராமானுஜர் நான் admire செய்யும் ஆன்மீகவாதிகளில் ஒருவர். அவருடைய ஆன்மீகத்தை – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் – பற்றி பேசும் அளவுக்கெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பஞ்சமரை திருக்குலத்தாராக்கி, அவர்களுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமைகளைப் பெற்றுத் தர போராடிய எந்த ஆன்மீகவாதியும் என் பெருமதிப்புக்குரியவரே. எல்லா ஜாதியினரையும் ராமானுஜர் வைணவம் என்ற குடைக்குக் கீழே கொண்டு வர முயன்றார், ஆனால் காலம் போகப் போக அந்த குடைக்கு கீழே வந்தவரெல்லாம் பிராமணர் – அதுவும் அய்யங்கார் – ஆகிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். (பசவருக்கும் இப்படித்தான் ஆனது.) திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கற்றதை ராமானுஜர் மற்றவருக்கு சொல்லும் கதை உண்மையோ பொய்யோ – ஒரு உன்னத மனிதரை நமக்கு காட்டுகிறது. இந்திரா பார்த்தசாரதியையும் ராமானுஜரின் சமூக நோக்கு கவர்ந்திருக்கிறது. அந்த நோக்கை emphasize செய்து ராமானுஜர் பற்றிய சுவாரசியமான வைஷ்ணவ குரு பரம்பரை கதைகளை (legends) அவர் ராமானுஜர் என்ற நாடகம் ஆக்கி இருக்கிறார்.

இ.பா.வின் வார்த்தைகளில்:

தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவர் எப்படி நமக்கு சமகாலத்தவராய் இருக்கிறார் என்பதை உணர்த்துவதே இந்த நாடகத்தின் நோக்கம். ஸ்ரீராமானுஜர் வரலாற்றை நாடகமாக்குவது சுலபமான காரியமல்ல என்பது எனக்குத் தெரிந்ததுதான். ராமானுஜர் ஓர் அற்புதமான சிந்தனையாளர் மட்டுமன்றி, மாபெரும் செயல்வீரர். அவரைப் பற்றி நாடகம் எழுத வேண்டும் என்ற உந்துதலை அதுதான் ஏற்படுத்தியது.

குரு பரம்பரைப்படி: ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சி யாதவப் பிரகாசர் என்பவரிடம் அத்வைதம் கற்கிறார். சிஷ்யன் போகும் போக்கு பிடிக்காததால் காசிக்கோ எங்கோ போகும்போது யா. பிரகாசர் ராமானுஜரை கொல்ல முயற்சிக்கிறார். ஆனால் ராமானுஜர் தப்பிவிடுகிறார். அவர் மனைவி தஞ்சம்மா. தஞ்சம்மா ராமானுஜரின் சமூக நோக்கை ஏற்பவர் அல்ல, ஜாதி வித்தியாசம் பார்ப்பவர். ராமானுஜரின் பிராமண ஜாதியில் பிறக்காத குருமார்களை தஞ்சம்மா அவமதிப்பது அவர் துறவறம் ஏற்க இன்னுமொரு தூண்டுதலாக அமைகிறது. ஆளவந்தார் அவரை வைஷ்ணவர்களின் அடுத்த தலைவராக, தன் வாரிசாக நியமிக்கிறார். பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி என்று பல ஆசிரியர்கள். திருக்கோஷ்டியூர் நம்பியிடம் ரகசியமான வைணவ தத்துவங்களை கற்கச் செல்கிறார் ராமானுஜர். தி. நம்பி இவற்றை யாருக்கும் சொல்லக்கூடாது, சொன்னால் நரகத்துக்கு போவாய் என்று எச்சரிக்கிறார். ஆனால் ராமானுஜரோ கோபுரத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு எல்லாருக்கும் சொல்லித் தருகிறார். இத்தனை பேர் பிழைக்கும்போது நான் ஒருவன் நரகத்துக்குப் போனால் பரவாயில்லை என்று சொல்கிறார். தலித் மாறனேர் நம்பிக்கு உதவி செய்ததால் பிராமண பெரிய நம்பியை தள்ளி வைக்கிறார்கள். ஆனால் ரங்கநாதன் உற்சவமாக ஸ்ரீரங்கம் வீதிகளில் வரும்போது தேர் அவர் வீட்டு வாசலிலிருந்து நகரமாட்டேன் என்கிறது. பெரிய நம்பிக்கு கொடுக்கப்பட்ட தண்டனை வாபஸ் வாங்கிய பிறகுதான் தேரை நகர்த்த முடிகிறது. பல ஜாதிக்காரர்களான முதலியாண்டான்+கூரேசர் (பிராமணர்கள்), உறங்காவில்லி-பொன்னாச்சி (மறவர்?) என்று பல சிஷ்யர்கள். ஜாதி சம்பிரதாயம் உடைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் இவர்கள் எதிரியான நாலூரான் சதியால் சோழ அரசன் ராமானுஜரை கைது செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் அவரது பிரதம சிஷ்யரான கூரேசர் தான்தான் ராமானுஜன் என்று சொல்லி கைதாகிறார். கூரேசரை குருடாக்குகிறான் நாலூரான். இன்றைய கர்நாடகத்துக்கு தப்பிச் செல்லும் ராமானுஜர் ஒரு இளவரசியை பிடித்திருக்கும் பேயை ஓட்டி ராஜாவின் ஆதரவைப் பெறுகிறார். அங்கே வைஷ்ணவத்தை ஸ்தாபிக்கிறார்/வலுப்படுத்துகிறார். துலுக்க நாச்சியாரை சந்திக்கிறார். மீண்டு வந்து கூரேசன் உதவியுடன் பல பாஷ்யங்களை எழுதுகிறார். 120 வயதில் மரணம்…

இ.பா. இந்த குரு பரம்பரைக் கதையை நாடகம் ஆக்கி இருக்கிறார். பல supernatural legends-ஐ சாதாரண நிகழ்ச்சிகளாக காட்டுகிறார். (ராமானுஜர் பேய் ஓட்டும் காட்சி) ராமானுஜரின் சமூக சீர்திருத்த உணர்வுகளை தூக்கிப் பிடிக்கிறார். ராமானுஜர் வைணவத்தை ஆன்மீகமாக மட்டும் இல்லாமல் சமூகத்தை மாற்றும் ஒரு சக்தியாக பார்ப்பதாக நமக்கு தோன்ற வைக்கிறார் இ.பா. இது historically accurate-தானா என்று எனக்கு கேள்விகள் உண்டு. ராமானுஜருக்கு ஆன்மீகமே முக்கியம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு ஆகியவை இரண்டாம் பட்சமே என்றுதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் ராமானுஜரின் ஆன்மீகத்தைப் பற்றி – குறிப்பாக விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி – எனக்கு தெரிந்தது பூஜ்யமே. இ.பா.வுக்கு என்னை விட ராமானுஜர் பற்றியும், அவரது ஆன்மிகம் பற்றியும், பொதுவாக வைஷ்ணவம் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ராமானுஜரின் வாழ்க்கை legends பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு revelation ஆக இருக்கலாம். படிப்பதை விட இந்த நாடகம் பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ராமானுஜர் வாழ்வின் உச்சக்கட்டம் அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் உத்தரவை மீறி எல்லாருக்கும் மந்திரோபதேசம் செய்வதுதான். தான் ஒருவன் நரகம் போனாலும் இத்தனை பேர் உய்வார்கள் என்று அவர் நினைத்தது அற்புதமான ஒரு தருணம். ஆனால் இ.பா. எழுதி இருக்கும் விதம் அவ்வளவு exciting ஆக இல்லை. அதே போல நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும் என்று வரம் கேட்கும் கூரேசரிடம் ஆயிரம் ராமானுஜன் ஒரு கூரேசனுக்கு சமம் ஆகார் என்று சொல்லும் நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்று. இவற்றை underplay செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். இ.பா. அப்படி நினைக்கவில்லை. 🙂

இந்த நாடகத்துக்காக இ.பா. சரஸ்வதி சம்மான் விருது பெற்றிருக்கிறார்.

படிக்கலாம். தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. அதனால் நிச்சயமாக படிக்கலாம். ஆனால் பார்க்க முடிந்தால் இன்னும் நல்லது.

பின்குறிப்பு: பி.ஸ்ரீ. எழுதிய மணிவாசகர் சரித்திரம் என்ற புத்தகமும் கிடைத்தது. இதுவும் தெரிந்த விஷயங்களைத்தான் திரும்பக் கூறுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், விருதுகள், இ.பா. பக்கம்

தொடர்புடைய பக்கம்: ராமானுஜரும் குலோத்துங்க சோழனும் – டாக்டர் ஆர். நாகசாமி

கால வெள்ளம் – இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாவல்

(திருத்தங்களுடன் மீள்பதிப்பு)

இந்திரா பார்த்தசாரதி என்னை அவ்வளவாக கவர்ந்ததில்லை. அவர் புத்தகங்களில் அறிவுஜீவிகள் பேசிக் கொண்டே இருப்பார்கள். புத்திசாலித்தனத்தை வலிந்து புகுத்துகிறார், இதோ பார் என் கதாபாத்திரங்கள் எத்தனை அறிவிஜீவித்தனமாக, உண்மையைப் பேசுகிறார்கள், எதிர்கொள்கிறார்கள் என்று செயற்கையாகக் காட்டுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவரது புகழ் பெற்ற அங்கத நடை பொதுவாக எனக்கு ஒரு புன்முறுவலை கூட வரவழைப்பதில்லை. (சில விதிவிலக்குகள் உண்டு, தன் மனைவியின் தோழியின் பிசினஸ் செய்யும் கணவனோடு ஒரு மாலை நேர சம்பாஷணையாக வரும் கதைக்கு – பெயர் மறந்துவிட்டது, ஒரு இனிய மாலைப் பொழுது – விழுந்து புரண்டு சிரித்திருக்கிறேன்.)

ஆனால் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளர் என்று கருதப்படுகிறார். கருதப்படுகிறார் என்ன, என் கண்ணிலும் முக்கியமான எழுத்தாளர்தான். ஆனால் என் கண்ணில் அவரது முக்கியத்துவம் என்பது அவரது தாக்கம்தான், அவரது பாணிதான். அறிவுஜீவி கதைகள் என்ற sub-genre அவரால்தான் உருவாக்கப்பட்டது என்றே சொல்லுவேன். அவரது பாணியில் அவரை விஞ்சும் பல படைப்புகளை அவரது சீடர்கள் – குறிப்பாக ஆதவன் – எழுதிவிட்டார்கள். அவர் போட்ட கோட்டில்தான் அவர்கள் ரோடு போட்டிருக்கிறார்கள்.

குருதிப்புனல் சாக்திய அகாடமி விருது பெற்றது, அவரும் பத்மஸ்ரீ விருது வாங்கியவர்.

அவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவரது முதல் நாவலான காலவெள்ளம்தான். பிற்கால நாவல்களில் அவர் படைத்திருக்கும் பாத்திரங்கள் பொதுவாக தமிழனுக்கு கொஞ்சம் அன்னியமானவை போலவே இருக்கும். இந்த நாவலில் அப்படி கிடையாது. ஆனால் கதையோட்டத்தில், கதைப் பின்னலில் அனேக முதல் நாவல்களைப் போலவே சில rough edges இருக்கின்றன.

1920-40 வாக்கில் நடக்கும் கதை. ஸ்ரீரங்கத்து பணக்கார ஐயங்கார் பெண் குழந்தை வேண்டுமென்று ஏழைப் பெண்ணை இரண்டாவது கல்யாணம் செய்துகொள்கிறார். இரண்டு மனைவிக்கும் சேர்த்து நான்கு குழந்தைகள். முதல் மனைவி இறந்துவிடுகிறாள். இரண்டாவது மனைவி பிரிந்து போய்விடுகிறாள். மூத்த பையன் அப்பாவின் கண்டிப்பு பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இரண்டாவது பையன் அவ்வளவு உருப்படவில்லை. மூன்றாவது பையன் நன்றாக படிக்கிறான், நாற்பதுகளின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறான். கடைசி பெண் ஏதோ தகராறில் வாழாவெட்டியாக இருக்கிறாள். நன்கு படிக்கும் பையன் தலையெடுத்து தங்கையை கணவனோடு சேர்த்து வைக்கிறான், தன் அம்மாவை சந்திக்கிறான் என்று கதை போகிறது. அவருக்கு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமோ என்னவோ, கதை திடீரென்று முடிந்துவிடுகிறது.

பாத்திரங்கள் உண்மையாகத் தோன்றுகின்றன. நல்ல craft தெரிகிறது. மற்ற பல புத்தகங்களில் இருப்பது போல பேசிக்கொண்டே இருக்கவில்லை!

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

இந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்”

மீள்பதிப்பு, முதல் பதிப்பு செப்டம்பர் 2010-இல்.

இதுதான் இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களில் பிரபலமானது என்று நினைக்கிறேன். சாகித்ய அகாடமி விருது வென்ற படைப்பு.

இ.பா.வின் நாவல்களில் இது சிறந்த ஒன்றுதான். ஆனால் எனக்கு இ.பா.வைப் பற்றி உயர்ந்த அபிப்ராயம் இல்லை. அவருடைய அங்கதம், எழுத்து பொதுவாக என் ரசனைக்கு ஒத்து வருவதில்லை.

குருதிப்புனல் கீழ்வெண்மணியில் 44 தலித்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இது நம் வரலாற்றில் அழியாத களங்கம். கூலி அதிகமாக கேட்டதற்காக எரிக்கப்பட்டிருக்கிறார்கள். எரித்த கோபால கிருஷ்ண நாயுடு நிரபராதி என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது!

இதைப் பற்றி எனக்கு தெரிந்து மூன்று நாவல்கள்தான் வந்திருக்கின்றன. ஒன்று குருதிப்புனல், இரண்டு சோலை சுந்தரப் பெருமாளின்செந்நெல்“, மூன்று பாட்டாளி எழுதி சமீபத்தில் வந்த “கீழைத்தீ“. இந்த மாதிரி ஒரு சம்பவத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியம்தான்.

குருதிப்புனலில் டெல்லிவாசியான சிவா இரண்டு வருஷத்துக்கு முன் கீழ்வெண்மணி மாதிரி ஒரு கிராமத்துக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட தன் நண்பன் கோபாலைத் தேடி வருவதுடன் தொடங்குகிறது. கிராமத்தில் மிராசுதார் கண்ணையா நாயுடுவுக்கும் காம்ரேட் ராமையாவுக்கும் ஏற்கனவே பிரச்சினை. கூலி அதிகம் வேண்டுமென்று போராடுபவர்களுக்கு ராமையாதான் de facto தலைவர். அவருடன்தான் கோபால் தங்கி இருக்கிறான். நாயுடுவின் அப்பாவின் வைப்பாட்டி மகன் வடிவேலு அங்கே ஒரு டீக்கடை நடத்துகிறான். நாயுடுவுக்கு ஆண்மைக் குறைவு. தான் வீரியத்தை நிரூபிக்க அவர் நிறைய வைப்பாட்டி வைத்துக் கொண்டு ஷோ காட்டுகிறார். பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டுமென்று எண்ணி அவரிடம் பேசிப் பார்க்கப் போகும்போது ஆண்மையைப் பற்றி கோபால் இரண்டு வார்த்தை விடுகிறான். நாயுடு அவனை ஆள் வைத்து அடிக்கிறான். வடிவேலு, ஒரு ஹரிஜனப் பெண் கடத்தப்படுகிறார்கள். துப்பறிவதற்காக கோபால் நாயுடுவின் ஷோ வைப்பாட்டி பங்கஜத்தை சந்திக்கப் போகிறான். பங்கஜத்துக்கு எப்போதுமே கோபால் மேல் கண். கடத்தப்பட்டவர்கள் பங்கஜத்தின் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிகிறது. அப்போது ஏற்படும் அடிதடியில் நாயுடுவின் அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். ராமையா மேல் பழி போட்டு அரெஸ்ட். தகராறு வலுத்துக்கொண்டே போகிறது. ஒரு “பறையன்” நாயுடுவை அடிக்கிறான். கடைசியில் நாயுடுவின் ஆட்கள் போலீஸ் பாதுகாப்போடு குழந்தைகளும் பெண்களும் நிரம்பி இருக்கும் குடிசைக்கு தீ வைக்கிறார்கள், கோபால் வன்முறையே வழி என்று தீர்மானிக்கிறான்.

நாயுடுவுக்கு கொலை வெறி கிளம்ப மூன்று காரணங்கள்: கூலிக்கார பசங்க நம்மை எதிர்த்து பேசுவதா என்ற ஆத்திரம்; உயர்ந்த ஜாதியில் பிறந்த தன்னை ஒரு பறப் பையன் அடித்துவிட்டானே என்ற வெறி; எல்லாவற்றையும் விட முக்கியமாக தன் குறையை சுட்டிக்காட்டும்போது வரும் கையாலாகாத கோபம். கூலிக்காரர்களின் “புரட்சி” தோற்க நாயுடு தரப்பின் பண, அரசியல், ஜாதி பலமும், தற்செயலாக புரட்சிக்கு தலைமை ஏற்கும் கோபால்/சிவாவின் அனுபவமின்மையும் காரணங்கள்.

புத்தகத்தின் பலம் கீழ்வெண்மணி பற்றி ஒருவர் துணிந்து எழுதியது. அது பெரிய விஷயம். பலவீனம், அனாவசியமாக ஆண்மைக்குறைவு என்று எங்கேயோ போனது. படிப்பவர்களுக்கு, ஏதோ ஆண்டவன் குறை வைத்துவிட்டான், அவனை திருப்பி திருப்பி சீண்டினார்கள், அதில் வந்த கடுப்பில் தீ வைத்துவிட்டான் என்று தோன்றினால் ஆச்சரியம் இல்லை. அது இ.பா.வின் நோக்கம் இல்லைதான்; அவரது உண்மையான நோக்கம் சிறு, பர்சனல் விஷயங்கள் பெரும் அனர்த்தங்களுக்கு காரணங்களாக அமைவதுண்டு, அதுவே வாழ்க்கையின் அபத்தம் என்று சொல்லுவதுதான் என்று நினைக்கிறேன். ஆனால் அயோக்கியத்தனம் செய்தாலும் இத்தனை நாள் இவ்வளவு குரூரமாக நடக்காதவன் ஏன் இப்படி மாற வேண்டுமென்று தோன்றலாம். அதுதான் இ.பா.வின் தோல்வி. பொதுவாக இ.பா.வின் கதைகளில் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பது போல இதிலும் உண்டு, ஆனால் ஆக்ஷன் கொஞ்சம் அதிகம். 🙂

ஜெயமோகன் இதை தன் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

குறைகள் இருந்தாலும் கட்டாயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

பிற்சேர்க்கை: நண்பர் ஸ்ரீனிவாஸ் தரும் தகவல்கள்:

ஜெமினி கணேசனின் மகள் ஜீஜீயைக் கல்யாணம் செய்த ஸ்ரீதர் ராஜன் கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ராஜேஷ், பூர்ணிமா (பாக்கியராஜ்) ஆகியோரை வைத்து இந்த நாவலை 80களில் திரைப்படமாக்கினார். கதாநாயகி இல்லாமல் தமிழ்ப்படம் ஓடாது என்பதால், ஓர் ஆண்பாத்திரம் தேய்ந்து பெண் பாத்திரமாகப் பூர்ணிமையானது.

குருதிப்புனல் முன்னுரையில் இ.பா.

தமிழில் சாஹித்ய அகாடமி பரிசு பெற்ற இந்நாவல், வங்க மொழியில் ஆக்கம் பெற்றது. மொழி பெயர்ப்புக்காகச் சாஹித்ய அகாடமி பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மொழிபெயர்த்தவர் கல்கத்தா சு. கிருஷ்ணமூர்த்தி.

இந்நாவல் வெளியானபோது, பல விவாதங்களுக்குள்ளானது. கீழ்வெண்மணிச் சம்பவத்தைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாவலை மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தாக்கி எழுதினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றது. ஆனால் கேரள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ‘தேசாபிமானி’ இந்நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

‘நாவலாசிரியரின் ஃப்ராயிட் அணுகுமுறை, விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தி விட்டது’ என்று தமிழக மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தைக் கேரள, வங்காள மார்க்ஸியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இந்நாவலைப் பற்றிய ஒரு செய்தி.

ஓர் உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு படைப்பாளி எழுதும்போது அவன் சம்பவங்களை உள்வாங்கிக் கொண்டு சம்பவங்களின் தீவிரத்தை மலினப்படுத்தாமல், அவன் கற்பனைக்கேற்ப புதினம் உருவாக்குவதில் தவறேதுமில்லை என்பதுதான் என் கருத்து.

காரல் மார்க்ஸின் ஆதர்ச எழுத்தாளர் ஷேக்ஸ்பியர் என்பது தமிழக மார்க்ஸிஸ் கம்யூனிஸ்ட்காரர்களுக்கு ஏன் தெரியாமல் போயிற்று என்பதுதான் என்னுடைய ஆதங்கம்.

அணமையில் தமிழக மார்க்ஸியக் கட்சி இந்நாவலை அப்பொழுது எதிர்த்தது தவறுதான் என்று ஒப்புக் கொண்டிருப்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்நாவல் ஆங்கிலத்தைத் தவிர ஐந்து இந்திய மொழிகளில் (ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, மலையாளம்) மொழி பெயர்ப்பாகி உள்ளது.

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அமரர் க.நா. சுப்ரமண்யம்

.

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:

 • கீழ்வெண்மணி நாவல்கள்
 • ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை

  indira partthasarathiஇ.பா.வை நான் அவ்வளவாக ரசித்ததில்லை. அவருடைய பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆவது சில சமயம்தான். புகழ் பெற்ற நாவல்கள் – குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, கிருஷ்ணா கிருஷ்ணா, தந்திரபூமி, சுதந்திரபூமி, ஏசுவின் தோழர்கள் – எல்லாம் எனக்கு குறைபட்ட நாவல்களாகவே தெரிகின்றன. அவருடைய நாவல்களில் inside joke அதிகம் என்று நினைக்கிறேன். டெல்லி வாழ் தமிழ் அறிவுஜீவிக் கூட்டம் இது யார் அது யார் என்று புரிந்துகொண்டு அவற்றை ரசித்திருக்கலாம். இவற்றை எல்லாம் விட அறிவுஜீவித்தனம் அவ்வளவாக வெளிப்படாத அவருடைய முதல் நாவலான காலவெள்ளம் இயற்கையாக இருந்தது, எனக்குப் பிடித்திருந்தது.

  அவருடைய நாடகங்களைப் பார்க்க வேண்டும், படிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நந்தன் கதையைப் படித்தபோது இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பானேன் என்றுதான் தோன்றியது. ஆனால் அதை பார்த்தது – இத்தனைக்கும் வீடியோவில் பார்த்தது – ஒரு நல்ல அனுபவம். ராமானுஜர், அவுரங்கசீப் எல்லாவற்றையும் என்றாவது பார்க்க வேண்டும்.

  இப்படி குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும் இ.பா. என் கண்ணிலும் இலக்கியவாதிதான். அவர் படைப்பது இலக்கியம்தான். எல்லாவிதமான இலக்கியமும் எனக்கு பிடித்துவிடுவதில்லை என்பதை நான் அவர் மூலம் அறிந்து கொண்டேன், அவ்வளவுதான். அவர் மேல் மரியாதை இருக்கிறது, ஆனால் அவரது படைப்புலகம் எனக்கானதல்ல. அவரது வாரிசு என்று சொல்லக் கூடிய ஆதவனின் படைப்புலகமோ, ஆஹா, என்னுடையது, என்னுடையது, என்னுடையதேதான்!

  ஜெயமோகன் அவரது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், குருதிப்புனல், தந்திரபூமி, சுதந்திரபூமி ஆகியவற்றை இரண்டாம் வரிசைத் தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கப் காப்பி, குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும், இளஞ்செழியன் கொடுத்த பேட்டி ஆகியவற்றை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். (Disclaimer: இந்த சிறுகதைகள் அவரது அழகியல் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல, ஒரு திறனாய்வாளனின் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்.) எஸ்ரா குருதிப்புனல் நாவலை சிறந்த நூறு தமிழ் நாவல்கள் பட்டியலிலும், ஒரு கப் காப்பியை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  ஒரு கப் காப்பியை பற்றி எழுதத்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். அது எங்கெல்லாமோ போய்விட்டது.

  இ.பா. பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆகும் சிறுகதை இது. கொடுமையான வறுமையில் வாழும் பிராமணக் குடும்பம். குடும்பத் தலைவன் ராஜப்பாவுக்கு புரோகிதம் செய்ய மந்திரம் தெரியாது. கல்யாணத்திலும், கருமாதியிலும் பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்ற நம்புபவர்களை வைத்து பிழைக்கிறார்கள். அதற்காக ராஜப்பாவுக்கு குடுமி, ஸ்ரீசூர்ணம், பஞ்சகச்சம் என்று வெளிவேஷம். ஒரு நாள் காலை எழுந்ததும் வீட்டில் காப்பிப்பொடி இல்லை, வாங்கப் பணமும் இல்லை, பக்கத்து, எதிர்வீட்டில் இனி மேல் இரவல் வாங்கவும் முடியாது. எதிர்பாராமல் பால்ய சினேகிதனை சந்தித்தால் அவன் ராஜப்பாவின் வெளிவேஷத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு பரம வைதிகன் ஹோட்டல் காப்பி குடிப்பானா என்று காப்பி வாங்கித்தர மாட்டேன் என்கிறான்! கொடுமையான வாழ்க்கையை சித்தரிக்கும்போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

  போன பாராவைப் திருப்பிப் படித்தால் இந்தக் கதையை எல்லாம் விவரிக்க முடியாது என்று புரிகிறது, படித்துக் கொள்ளுங்கள்! இ.பா. படைப்பது இலக்கியம்தான் என்பதில் எனக்குக் கூட கொஞ்சமும் சந்தேகம் இல்லை என்றால் அதற்கு இதைப் போன்ற சிறுகதைகளும் இன்னொரு காரணம்.

  கத்தி போலக் கூர்மையான வரிகளில் ஒன்று:

  காலத்தை அனுசரித்து கோயிலில் பெருமாளுக்கு காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.

  இதே மாதிரி ஒரு கருவை வைத்து பதினைந்து வருஷம் முன்னால் நானும் ஒரு கதை எழுதினேன். மனதிற்குள் நல்ல கதை எழுதிவிட்டேன் என்று பெருமை வேறு. அதற்கப்புறம் இந்தக் கதையைப் படித்தேன். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு என் கதையை வெளியே விடுவது என்று கம்மென்றிருக்கிறேன்.

  Irony-க்காகத்தான் அடிக்கடி முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. அவஸ்தைகள் சிறுகதையிலும் அப்படித்தான் தோன்றுகிறது.

  அவருடைய தேவர் வருக சிறுகதையைப் பற்றி தனியாக எழுத முடியாது, அவ்வளவு worth இல்லை. விஷ்ணு பதினோராவது அவதாரம் எடுக்கிறார் – அரசியல்வாதியாக! தவிர்க்கலாம். இதுவாவது பரவாயில்லை, தொலைவு போன்ற சிறுகதைகளில் என்னதான் சொல்ல வருகிறார்?

  தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

  இ.பா.வின் “உச்சி வெய்யில்” – தேசிய விருது பெற்ற திரைப்படத்தின் மூலக்கதை

  marupakkam

  ஒரே ஒரு இரண்டு தமிழ்ப்படங்கள் இது வரை சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கின்றன. ஒன்று கஞ்சிவரம் (திருத்திய கோபிக்கு நன்றி!) இன்னொன்று சிவகுமார், ராதா, ஜெயபாரதி நடித்து கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம். மூலக்கதை இ.பா.வுடையது.

  indira partthasarathi

  எளிமையான கதைக்கருதான். ஆசாரசீலர், வேதாந்த சிம்மம் வேம்பு ஐயரின் மகன் டெல்லியில் ஒரு கிறிஸ்துவப் பெண்ணை மணந்து கொள்கிறான். வேம்பு மகன் வீட்டுக்கு வரலாம், மருமகள் காலெடுத்து வைக்கக்கூடாது என்கிறார். ஆனால் மகன் மணவாழ்வு முறிவடைந்தது என்று கேட்டதும் அதிர்ச்சியில் தீவிரமாக உடல் நலம் பாதிக்கப்படுகிறது. தன் அம்மாவுக்காக தான் மிகவும் விரும்பிய, தன்னை விரும்பிய தன் முதல் மனைவி அவயத்தை தள்ளி வைத்து வேறு மணம் புரிந்து கொண்டதின் குற்ற உணர்ச்சிதான் அது, தான் செய்த தவறு தன் மகன் தலையில் விடிந்திருக்கிறது என்பது மெதுவாக எல்லாருக்கும் தெரிய வருகிறது.

  இ.பா. சிறப்பாக எழுதியிருக்கிறார். அவர் உணர்ச்சிகரமான ஒரு கதையை எழுதுவார் என்று நான் நினைத்ததில்லை. அவருடைய hallmark cynicism எதுவும் இல்லாத கதை. அதுவே இந்தக் கதைக்கு ஒரு special charm-ஐத் தருகிறது. அதுவும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த அம்மா பாத்திரம்தான். அந்தப் பாத்திரத்தில் எத்தனை சொல்லப்படாத கதைகள்? இத்தனை காலம் ஒன்றாக வாழ்ந்தும் வேம்புவின் மனதில் அவயம்தான் வியாபித்திருக்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது எப்படி உணர்ந்திருப்பாள்? ஏற்கனவே தெரிந்திருக்கும் என்றும் வைத்துக் கொள்ளலாம், ஆனால் அது ஊருக்கே தெளிவாகத் தெரியும்போது எப்படி உணர்ந்திருப்பாள்?

  சிறுகதை 1968-இல் எழுதப்பட்டிருக்கிறது. வாசகர் வட்டம் அப்போது பதிப்பித்ததாம். இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.

  I wrote Utchi Veyil in 1968, soon after my father’s death. Happening in Kumbakonam, my native town, this was my first long story based outside Delhi. The novella was published by Vacakar Vattam, an innovative publishing concern in the sixties that was, perhaps, ahead of its time. The story, when published along with five more novellas of up and coming writers like me, won critical acclaim as ‘a totally different piece of fiction portraying the distinctive cultural flavour of Tanjavur district.’ I thoroughly enjoyed writing this short novel, as it had some autobiographical references.

  திரைப்படமும் சிறப்பாக வந்திருக்கிறது. ராதா, சிவகுமார், ஜெயபாரதி எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இலவசமாக இங்கே பார்க்கலாம்.

  உச்சி வெயில் சிறுகதையை நான் ஒரு தொகுப்பில்தான் படித்தேன். இந்தத் தொகுப்பில் விட அதிகமாக என்னைக் கவர்ந்த, ஒரு இ.பா. trademark சிறுகதை உண்டு – “ஒரு இனிய மாலைப்பொழுது“. பேராசிரியரின் மனைவி வெகுநாள் கழித்து சந்தித்த தன் கல்லூரித் தோழியையும் அவள் கணவனையும் விருந்துக்கு அழைத்திருக்கிறாள். தோழியின் கணவன் மர வியாபாரி. பேராசிரியரும் மர வியாபாரியும் பேசிக் கொள்வது க்ளாசிக். அபத்தத்தின் உச்சம். இருவருக்கும் பேச பொதுவாக விஷயமே இல்லை, இவர் கவிதையைப் பற்றிப் பேச, அவர் டைனிங் டேபிளில் அடக்கவிலை என்ன இருக்கும் என்று யூகிக்கிறார். தஞ்சாவூர் குசும்பு என்பார்கள், அது இ.பா.விடம் நிறையவே இருக்கிறது! கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

  இந்தக் கதையைப் பற்றி இ.பா. சொல்கிறார்.

  I wrote ‘A Pleasant Evening’ to tease my wife. She had invited her former classmate and her husband, a stiff-collared, blue-blooded bureaucrat for dinner. In my story I made him a timber merchant. I found conversation between me and him was tough and heavygoing and, as the evening began to fade, the rest was silence!

  இந்தத் தொகுப்பில் இருக்கும் “பயணம்” சிறுகதை டிபிகல் இ.பா. அம்மாவின் பிணம், ஆனால் லாஜிஸ்டிக்ஸ் பற்றியே கதை. இ.பா.வே சொல்வது –

  ‘The Journey’, was written soon after my mother’s death in Delhi in 1969. Of course, I am not a ‘fingering slave’ ‘to peep’ and fictionalise ‘over my mother’s grave’, as Wordsworth would say, but I could not have helped an intrinsic part of me, detaching itself from my sorrowing self, to watch and observe others, who had arrived at the funeral to play the role, expected of them.

  ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த மூன்று சிறுகதைகளும் கிடைக்கின்றன. (High Noon and Other Stories)

  இவற்றைத் தவிரவும் மூன்று சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் உண்டு. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் சிறுகதை ஜெயமோகனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளில் ஒன்று. இதை ஏன் பரிந்துரைக்கிறார் என்று என்னால் சரியாகப் புரிந்து கொள்ளமுடியவில்லை. சுமைகள் சிறுகதையின் நாயகன் அழகற்றவன். ஒரு அழகியை மணக்கிறார்ன். அவள் ஒரு பணக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்வதை வெளிப்படையாக சொல்லி விவாகரத்து வாங்குகிறான். தீர்ப்பு சிறுகதையிலோ இளமையில் இருந்த அழகு போனதை அழகை பூஜிக்கும் இருவர் எப்படி அணுகுகிறார்கள் என்று கற்பனை செய்திருக்கிறார்.


  தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம், திரைப்படங்கள்

  தொடர்புடைய சுட்டி: மறுபக்கம் திரைப்படம் பார்க்க

  இந்திரா பார்த்தசாரதியின் “ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன”

  indira partthasarathiஇ.பா. என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அல்லர். என்னைப் பொறுத்த வரையில் அவரது எழுத்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவருடைய அங்கதம் எனக்கு பெரிதாக அப்பீல் ஆவதே இல்லை. இ.பா.வின் புத்தகங்கள் எனக்கு பியர் மீது இருக்கும் நுரை போலத்தான் தெரிகின்றன. Frothy, but no substance.

  என்னைப் பொறுத்த வரை இ.பா.வின் பெரிய பங்களிப்பு என்பது அவரது சிஷ்யர்கள்தான். அவரது பாணியில் அவரை விட பெரும் வெற்றி பெற்ற படைப்புகளை (ஆதவன், என் பெயர் ராமசேஷன்) எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவில் கூட அவரது பாதிப்பு உண்டு.

  helicopterkal_keezhe_irangivittanaஇ.பா.வின் பாணி என்பது என்ன? தன் உள்ளத்து உணர்ச்சிகளை, குழப்பங்களை, வாழ்க்கையின் அபத்தங்களை நேர்மையாக, தயங்காமல் வெளிப்படையாகப் பேசும் அறிவு ஜீவிகள். அவ்வளவுதான். அந்த பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது, அதனால்தான் இ.பா.வுக்கு ஒரு இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது. என்னைக் கவரவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என் கண்ணிலும் அவர் இலக்கியவாதிதான். அவருடைய இலக்கியங்கள் என் வரையில் தோல்வி.

  ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டனவும் அப்படித்தான். டெல்லியின் உயர் அதிகாரி அமிர்தம் தன் பழைய காதலியின் சாயலில் இருக்கும் இளம் பெண் பானுவைச் சந்திக்கிறான். இருவருக்கும் பரஸ்பர கவர்ச்சி ஏற்படுகிறது. அமிர்தத்தின் மனைவி திலகம் சண்டை போடுகிறாள். பானு விலக, அமிர்தத்துக்கு திலகத்தின் தேவை புரிகிறது.

  கதை எல்லாம் முக்கியமில்லை. அமிர்தத்தின் பலவீனங்களை அமிர்தம், பானு, திலகம், நண்பன் பானர்ஜி எல்லாரும் அணுகும் விதம்தான் முக்கியம். அதுதான் நாவலின் பலம். இளம் பெண் மீது ஆசை. மண வாழ்வை உதற முடியாத மனநிலை. ஆசைக்கு நேர்மையாக இருப்பதா இல்லை திலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கா? பானுவும் பானர்ஜியும் நேர்மையாக இரு என்கிறார்கள். பந்தங்கள் வலிமையாக இல்லாவிட்டாலும் அது எவ்வளவு கஷ்டம் என்பதை திறமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.

  இ.பா.வின் பிற புத்தகங்களைப் போலத்தான் இதுவும். படிக்கலாம். படித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.

  ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் வரிசையில் வைக்கிறார். அவரது வார்த்தைகளில்:

  அறிவு ஜீவித்தனத்திற்கும், அன்றாட வாழ்வின் அபத்தத்திற்கும் இடையேயான இடைவெளியில் முன்நுனியால் கிண்டிப் பரிசோதித்தபடி நகரும் இந்திரா பார்த்தசாரதியின் பார்வை தமிழுக்கு முன்னோடியானது. அறிவு ஜீவி அன்றாட வாழ்வை நடிக்கிறார். இல்லை அன்றாட வாழ்விலிருந்தபடி அறிவு ஜீவிதனத்தை நடிக்கிறாரா? தீர்மானிப்பது சிரமம். ‘கடைசியில வழி தவறின புருஷன் பெண்டாட்டிட்டயே திரும்பி வரான் ‘ — மாமி, ‘அதான் அவனுக்குத் தண்டனையா ? ‘ —- அறிவு ஜீவி மாமாவின் பதில் உரையாடல்களில் பாசாங்கற்ற துல்லியம் இந்திரா பார்த்தசாரதியின் பலம். பிற்பாடு வந்த நகர்சார் எழுத்தாளர்களின் இந்த ‘கையமைதி ‘ இழக்கப் பெற்றுவிட்டது. காரணம் சுஜாதாவின் ஆர்ப்பாட்டமான கூறல் முறையின் தவறான பாதிப்பு.

  நான் ரசித்த வரிகளையே அவரும் quote செய்திருக்கிறார். ஆனால் அது அமிர்தமும் திலகமும் பேசுவது. இவர் quote செய்திருக்கும் விதம் பக்கத்து வீட்டு மாமிக்கும் திலகத்தும் நடக்கும் பேச்சு போல தோன்ற வைக்கிறது


  தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்

  அவுரங்கசீப் மற்றும் நந்தன் கதை – இந்திரா பார்த்தசாரதியின் இரு நாடகங்கள்

  இ.பா. என் மனத்தை அவ்வளவாகக் கவர்வதில்லை. அவருடைய படைப்புகளில் சிறந்ததாக நான் கருதும் கிருஷ்ணா கிருஷ்ணா கூட உலக மகா படைப்பு இல்லை.

  ஆனால் தமிழ் நாடக உலகில் இ.பா.வின் பங்களிப்பு பெரியது என்பதை நானும் மறுக்க முடியாது. நாடகம் என்ற வடிவத்தின் சாத்தியங்களை இ.பா. உணர்ந்திருக்கிறார். குறிப்பாக நந்தன் கதை. நந்தன் கதையை நான் படிக்கும்போது கொக்கு தலையில் வெண்ணை வைத்து பிடிப்பது போல இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் நாடகத்தின் வீடியோவைப் பார்த்து அசந்து போய்விட்டேன். நான் பார்த்த சிறந்த தமிழ் நாடகங்களில் ஒன்று. வசனங்களின் சந்தமும், சிறந்த நடிப்பும், இசையை பயன்படுத்திய விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. இது பார்க்க வேண்டிய நாடகம், படிக்க வேண்டியது இல்லை. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவற விடாதீர்கள்.

  ஆனால் நந்தன் நந்தனாராக விரும்பி தன் பறையன் என்ற அடையாளத்தைத் தொலைத்தான், அப்படி தொலைத்ததன் விளைவாகக் கொல்லப்பட்டான் என்பதெல்லாம் எனக்கு சரிப்படுவதில்லை. என் அடையாளம் என்ன என்பதை இ.பா.வா சொல்ல முடியும்? நந்தன் “கொலை” ஒரு சதி என்பது எனக்கு cliche ஆகத்தான் தெரிகிறது. என்னை எந்த விதத்திலும் சிந்திக்க வைக்கக் கூடிய படைப்பு இல்லை. (இ.பா.வின் படிப்புகளைப் பற்றி என்னுடைய முக்கியமான விமர்சனமே அதுதான் – புத்தகத்தை மூடி வைத்த பிறகு மனதில் எந்த சலனமும் இருப்பதில்லை; புத்தகம் திறந்திருக்கும்போது கூட அப்படித்தான்.)

  அவுரங்கசீப் நாடகமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. அவுரங்கசீப்-தாரா ஷூகோ வாரிசு சண்டையை முக்கியக் கருவாக வைத்து மதங்களின் தன்மை, ஷாஜஹானின் தனிப்பட்ட கட்டிடக் கனவு vs மக்களுக்கு அதனால் ஏற்படும் வரிச்சுமை, இசை இல்லாத வாழ்வின் வெறுமை என்று பலவற்றைத் தொட்டுச் செல்கிறார். ஒரு வாசகனுக்கு புதிதாக என்ன இருக்கிறது? எனக்கு ஒன்றுமே இல்லை. பார்த்தால் என் அபிப்ராயம் மாறலாம், இ.பா. நாடகத்தின் சாத்தியங்களை உணர்ந்த அளவுக்கு எனக்குத் தெரியாது…

  இ.பா. தமிழ் நாடக உலகில் சாதனையாளர்தான். கிரேசி மோகன்களும் எஸ்.வி. சேகர்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ் நாடக உலகில் அவர் பங்களிப்பு பெரியதுதான். ஆனால் தமிழில் உலகத்தரம் வாய்ந்த நாடகங்களை எழுதி இருப்பது சுஜாதாவும், சோ ராமசாமியும்தான். சோவின் கோமாளி அடையாளம் அவரது பங்களிப்பை மறைத்துவிடுகிறது.

  தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திரா பார்த்தசாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

  தொடர்புடைய சுட்டி: இ.பா.வின் இன்னொரு நாடகம் – ராமானுஜர்

  இந்திரா பார்த்தசாரதியின் “கிருஷ்ணா கிருஷ்ணா”

  இ.பா.வின் புத்தகங்களின் எனக்கு ஓரளவு பிடித்த ஒன்று. எனக்கிருக்கும் மகாபாரதப் பித்து காரணமாக இருக்கலாம்.

  கிருஷ்ணனின் கதையை ஏறக்குறைய ஒரு காலட்சேப ஸ்டைலில் சொல்கிறார். கிருஷ்ணனே தன்னைக் கொன்ற வேடனிடம், தான் இறப்பதற்கு முன் சில பகுதிகளை நேரடியாக சொல்கிறான். சில பகுதிகளை நாரதர் சொல்கிறார். பாரதம், பாகவதத்தின் பல பகுதிகளை – திரௌபதி சுயம்வரம், வஸ்திராபஹரணம், ஸ்யமந்தகமணி, பாரதப் போர், ஜராசந்தன் வதை, கம்சன், ராதா, பீஷ்மர், கர்ணன், துரியோதனன் மனைவி பானுமதி, ஷைல்பியா – சுவாரசியமாகத் திருப்பிச் சொல்லப்படுகின்றன. மீள்வாசிப்பு என்றோ வேறு கோணம் என்றோ எதுவும் இல்லை, ஸ்டைல்தான் வேறு மாதிரி இருக்கிறது.

  உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை தொண்ணூறு ரூபாய்.

  மகாபாரதப் புத்தகம். எனக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை. அந்தப் பித்து இல்லாதவர்களுக்கு கூறியது கூறலாகத் தெரியலாம்.

  தொடர்புடைய சுட்டிகள்:

 • இ.பா. பக்கம்
 • எழுத்தாளர் இரா. முருகனின் விமர்சனம்
 • பத்ரி சேஷாத்ரியின் விமர்சனம்
 • இந்திரா பார்த்தசாரதி புதிய ப்ளாக் தொடங்கி இருக்கிறார்

  நாலைந்து நாளாக ஊரில் இல்லை. அவ்வப்போது இந்த மாதிரி ஒரு gap விழுந்துவிடுகிறது. அதனால் இன்றைக்கு ஒரு quickie போஸ்ட்.

  இந்திரா பார்த்தசாரதி இப்போது ஒரு ப்ளாக் எழுதத் தொடங்கி இருக்கிறார். கட்டாயம் படியுங்கள்!

  எழுத்தாளர் தளங்கள் போஸ்டிலும் இப்போது இ.பா.வின் தள முகவரியை சேர்த்துவிட்டேன். மேலும் முத்துலிங்கத்தின் தள முகவரி மாறி இருக்கிறது, அதையும் அப்டேட் செய்துவிட்டேன். (தகவல் தந்த ஸ்ரீனிவாசுக்கு நன்றி!)