ஜேன் ஆஸ்டன் எழுதிய “Pride and Prejudice”

மீள்பதிப்பு, முதல் பதிவு ஏப்ரல் 2011-இல். மீண்டும் படித்ததால் இதை மீள்பதிக்கிறேன்.

எத்தனை முறை படித்தாலும் அலுக்காத நாவல்கள் என்று எனக்கு ஒரு சின்ன லிஸ்ட் இருக்கிறது. அந்த லிஸ்டில் உள்ள நாவல் Pride and Prejudice.

பதின்ம வயதில் முதல் முறையாகப் படித்தேன். அப்போதுதான் சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி போன்றவர்களைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தேன். ஜேன் ஆஸ்டன் ஒரு விதத்தில் இவர்களது முன்னோடிதான். அந்த மாதிரி ஸ்டைல் கதைதானே, இதை மட்டும் ரசிப்பானேன் என்று பல முறை யோசித்திருக்கிறேன், இன்னும் விடை சரியாக பிடிபடவில்லை. காதல் நாவல்கள் மீது இருக்கும் பயத்தால் ஆஸ்டெனின் பிற புத்தகங்களைப் படிக்கக் கூட இன்னும் தைரியம் வரவில்லை. (தமிழ் திரைப்படமான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கூட இவர் எழுதிய Sense and Sensibility நாவல்தானாம்.)

கதை அனேகமாக எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஒரு சிறு “நகரம்” அங்கே மிஸ்டர் பென்னட், மிசஸ் பென்னட், அவர்களுக்கு மணமாகாத ஐந்து பெண்கள் – ஜேன், எலிசபெத், மேரி, கிட்டி மற்றும் லிடியா. இன்று சவுகரியமாக இருந்தாலும், மிஸ்டர் பென்னட் இறந்தால் அவர்களது நிலங்கள் தூரத்து உறவினர் காலின்சுக்கு போய்ச்சேரும். குடும்பம் கஷ்டப்படும். மிசஸ் பென்னட் எல்லாப் பெண்களுக்கு மணம் ஆக வேண்டுமே என்று துடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு eligible bachelor பிங்க்லி அங்கே “குடியேறுகிறார்”. பிங்க்லிக்கும் ஜேனுக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது. பிங்க்லியின் நண்பன் டார்சி. பெரும் பணக்காரன். Pride-இன் உருவகம். எலிசபெத்தான் Prejudice. டார்சியைப் பிடிக்கவே இல்லை. ஆனால் டார்சி மெதுமெதுவாக எலிசபெத்தை விரும்பத் தொடங்குகிறான். எலிசபெத்தின் குடும்ப அந்தஸ்து சரி இல்லாததால் மட்டும்தான் அந்த ஈர்ப்பு இன்னும் காதலில் போய் முடியவில்லை. அந்தஸ்து வித்தியாசம், மற்றும் ஜேனுக்கு பிங்க்லி மேல் காதல் கீதல் எதுவும் இல்லை என்று நினைத்து டார்சி பிங்க்லியையும் ஜேனையும் பிரிக்கிறான். மீண்டும் எலிசபெத்தை சந்திக்க நேரிடும்போது டார்சியால் தன காதலை அமுக்கிவைக்க முடியவில்லை, எலிசபெத்திடம் தன்னை மணக்க கேட்கிறான். எலிசபெத் மறுத்துவிடுகிறாள். அவளுக்கு ஜேனையும் பிங்க்லியையும் பிரித்தது டார்சிதான் என்று தெரியும்; மேலும் விக்ஹம் என்ற நண்பன் விஷயத்தில் டார்சி ஏமாற்றிவிட்டான் என்று குற்றம் சாட்டுகிறாள். டார்சி ஒரு ஆணவக்காரன், பழகும் விதம் தெரியாதவன் என்று நினைக்கிறாள். ஆனால் விக்ஹம் ஒரு பொய்யன் என்று டார்சி நிரூபிக்கிறான்.

தற்செயலாக டார்சியை அவன் வீட்டுப்பக்கம் சந்திக்க நேரிடுகிறது. டார்சி எந்த வித resentment-உம் இல்லாமல் மிகவும் நட்பு பாராட்டி நடந்து கொள்கிறான். எலிசபெத்தின் மனம் மாறத் தொடங்குகிறது. அப்போது கடைசித் தங்கை லிடியா விக்ஹமுடன் ஓடிப் போய்விட்டதாகவும், கல்யாணம் நடக்கவில்லை என்றும் தெரியவருகிறது. அன்றைய சமூகத்தில் அது பெரும் தலைக்குனிவு. கடிதம் வரும்போது அங்கு இருக்கும் டார்சியிடம் எல்லாவற்றையும் எலிசபெத் சொல்லிவிடுகிறாள். எப்படியோ அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து, பணத்தை செலவழித்து கல்யாணம் என்று ஒன்றை செய்து பூசி மெழுகுகிறார்கள். அந்தஸ்து பார்க்கும் டார்சி இனி மேல் தன்னிடம் வரமாட்டான் என்பது எலிசபெத்துக்கு ஏமாற்றம். ஆனால் அவர்களை கண்டுபிடித்ததும், திருமணம் செய்து வைக்க முக்கிய காரணமாக இருந்ததும் டார்சிதான் என்று எலிசபெத்துக்கு தெரியவருகிறது. காதல் கைகூடுகிறது.

இன்னும் பெரிய கதை சுருக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் விக்கியில் பார்க்கலாம்.

கதையின் பலங்கள் என்று நான் கருதுவது:

  1. எலிசபெத் பென்னெட்டின் குணச்சித்திரம். ஒரு ஜாலியான, எல்லாரிடமும் சிரித்துப் பேசும், அழகான இளம் பெண். டார்சி என்ன, யாராயிருந்தாலும் காதலில் விழும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.
  2. டயலாக்: மெல்லிய நகைச்சுவை இழைந்தோடும், கூர்மையான பேச்சு. எங்கும் வாய்விட்டு சிரிப்பதற்கில்லை, ஆனால் சுவாரசியமான வெட்டிப் பேச்சு என்று சொல்லலாம். உதாரணமாக மிசஸ் கார்டினர் எலிசபெத்துக்கும் எலிசபெத் மிசஸ் கார்டினருக்கும் எழுதும் கடிதங்கள்; மிஸ்டர் பென்னெட் அநேக இடங்களில், குறிப்பாக விக்ஹாமை பற்றி சொல்பவை.
  3. சில பல துணைப் பாத்திரங்கள்: மிஸ்டர் அண்ட் மிசஸ் பென்னெட், காலின்ஸ், லேடி காதரின், விக்ஹாம் என்று பலரை மிக அருமையாக சித்தரித்திருக்கிறார். காலின்ஸ் தன் “முதலாளி அம்மா” லேடி காத்தரினுக்கு அடிக்கும் ஜால்ரா, லேடி காதரினின் அந்தஸ்து+ஆணவம், மிஸ்டர் பென்னட்டின் நக்கல் ஆகியவற்றை வைத்து அவர்கள் காரக்டரை வெளியே கொண்டு வருவது எல்லாமே ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் வெகு சில கோடுகளில், ஒரே ஒரு உறுப்பை மட்டும் prominent ஆக வரைந்து, தத்ரூபமாக ஒரு சித்திரத்தை கொண்டு வருவது போலிருக்கிறது.
  4. டார்சியின் மாற்றம் – மெதுமெதுவாக டார்சி எலிசபெத்தின் பால் ஈர்க்கப்படுவது, பெம்பர்லியில் அவர்கள் சந்திப்பது.
  5. இன்று இல்லாத ஒரு உலகம் – எப்படி பழக வேண்டும் என்பதற்கு பல விதிகள் உள்ள உலகம், பல படிகள் உள்ள ஒரு சமூகம் தத்ரூபமாக காட்டப்படுவது.
  6. முக்கியமாக படிப்பது ஒரு சந்தோஷத்தை தருகிறது. சில சமயம் அடுத்தவர் சந்தோஷத்தை பார்க்கும்போது நமக்கு சின்ன குஷி வருவதைப் போல. இளம் காதலர்கள், சின்ன குழந்தைகள், நண்பர்கள் ஜாலியாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்குள்ளும் ஒரு சின்ன மகிழ்ச்சி துளிர்ப்பதைப் போல..

திரைப்படமாக, சீரியலாக எல்லாம் வந்திருக்கிறது. சமீபத்தில் கூட ஐஸ்வர்யா ராய் நடித்து Bride and Prejudice என்று வந்திருக்கிறது. எனக்குப் பிடித்தது லாரன்ஸ் ஒலிவியர் நடித்த கறுப்பு வெள்ளை திரைப்படம்தான்.

1813-இல் வெளியான இந்த நாவலில் வரும் பல விஷயங்கள் இன்று cliche-க்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்றும் படிக்க முடிகிறது. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

மர்மக் கதை எழுத்தாளர் பி.டி. ஜேம்ஸ் 2011இல் இந்தக் கதாபாத்திரங்களை வைத்து ஒரு த்ரில்லரை – Death Comes to Pemberley – எழுதி இருக்கிறார். பாத்திரங்களை அவர் ஜேன் ஆஸ்டனுக்கு உண்மையாக சித்தரிக்க முடிந்தாலும் கதை சுவாரசியப்படவில்லை. டார்சியும் லிஸ்சியும் விக்ஹமும் கொலைக் கேசுக்கு சரிப்படமாட்டார்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜேன் ஆஸ்டென்