யானை டாக்டர்கள்

ஜெயமோகனின் யானை டாக்டர் (பகுதி 1, 2, 3)எனக்குப் பிடித்த புனைவுகளில் ஒன்று. ஊருக்கே பிடித்த புனைவுதான். அதன் நாயகரும் யானை டாக்டருமான டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) உண்மை மனிதர் என்பது அந்தக் கதையின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

உள்ளூர் நூலகத்துக்குப் போனபோது தற்செயலாக கண்ணில் பட்ட புத்தகம் ஜேனி சோடோஷ் எழுதிய “Elephant Doctor“. “கதாபாத்திரங்களின்” பெயர்களை நினைவு வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே கொஞ்சம் கஷ்டம். வழக்கம் போலவே டாக்டர் கே என்றோ கிருஷ்ணமூர்த்தி என்றோ நினைவில்லை, யானை டாக்டர் என்றுதான் நினைவிருந்தது. அவரைப் பற்றிய புத்தகமோ என்று எடுத்துப் பார்த்தேன். இவர் பெயர் டாக்டர் கேகே (கே.கே. சர்மா). கே, கேகே என்ற பெயர்களில் குழம்பி ஜெயமோகனின் உண்மை நாயகன்தானாக்கும் என்று படித்துப் பார்த்தேன்.

இருவருக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் அதிசயப்பட வைக்கின்றன. கேகே அஸ்ஸாமியர். கே தமிழர். கேகேவுக்கு குடும்பம் உண்டு. கேவுக்கு யானைகள்தான் குடும்பம் போலிருக்கிறது. கேகேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. கேவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்காததுதான் யானை டாக்டர் சிறுகதையின் முன்புலம் (foreground). கேகேதான் மயக்கமருந்தை துப்பாக்கி போன்ற ஒரு கருவியின் மூலம் யானைகளுக்கு செலுத்துவதில் முன்னோடி. கே யானைகளின் சவப்பரிசோதனையின் முன்னோடி என்று யானை டாக்டர் கதையில் சொல்லப்படுகிறது. கேகே சர்க்கஸ் யானைகளின் பராமரிப்பு பரிசோதனைக் குழுவின் உறுப்பினர், சர்க்கஸ் யானைகளின் உடல் நலத்தைப் பேண பெரும் முயற்சிகள் எடுத்திருக்கிறார்; கே கோவில் யானைகளுக்கு “விடுமுறை” போல காட்டு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்று போராடி வென்றிருக்கிறார். கேகே காட்டு யானைகளுக்கு மருத்துவம் பார்த்திருக்கிறார், ஆனால் அவரது பணி பொதுவாக பழக்கப்படுத்தப்பட்ட யானைகளுடன்தான். அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது, ஆளைக் கொல்கிறது, அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் கேகேவைத்தான் அழைப்பார்களாம். கேவின் பணி காட்டு யானைகளுடன்தான் அதிகம் போலிருக்கிறது, தமிழகம்/கேரளப் பகுதிகளில் அவர்தான் யானை டாக்டர். யானை டாக்டர் புனைவில் கே அழுகிய சடலம் ஒன்றை ஆராயும்போது அவர் உடல் முழுதும் புழுக்கள்; ஒரு யானைக்கு எனிமா கொடுத்து 10-15 கிலோ யானை மலம் கேகே மேல் கொட்டி இருக்கிறது. கே வயதில் மூத்தவர் – 1929-இல் பிறந்திருக்கிறார். கேகே 1961-இல்.

ஜேனி சோடோஷின் புத்தகம் சிறுவர்களைத்தான் குறி வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ஜெயமோகனின் கதையைப் படித்திராவிட்டால் இதைப் புரட்டிக் கூட பார்த்திருக்கமாட்டேன். புத்தகம் பெரியவர்களுக்கு சுவாரசியப்படாது என்றுதான் தோன்றுகிறது.

ஆனாலும் தகவல்கள் எனக்கு சுவாரசியமாகத்தான் இருந்தன. சிறு வயதில் பழக்கப்படுத்தப்பட்ட யானை ஒன்றோடு சில வருஷம் வாழ்ந்ததால் யானை என்றால் கேகேவுக்கு கொள்ளை இஷ்டம். நன்றாகப் படித்திருக்கிறார், டாக்டராகப் போ என்று குடும்பத்தார் சொல்ல இவரோ கால்நடை மருத்துவம் பயின்றிருக்கிறார். யானை மருத்துவம் அப்போது படிக்கும் நிலையில் இல்லை. (கே எழுதி இருந்தால்தான் உண்டு என்று நினைக்கிறேன்.) இருந்தாலும் இவர் ஆடு/மாடு/நாய்/பூனைக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டே முனைவர் படிப்பு படித்துக் கொண்டிருக்கிறார். முதன்முதலாக யானைக்கு வைத்தியம் பார்க்கும் வாய்ப்பு, ஆனால் யானையை நெருங்க முடியாத நிலை. மிருகக்காட்சி சாலை அதிகாரியின் உதவியுடன் மயக்கமருந்து தரும் துப்பாக்கியை பழகிக் கொண்டு யானையை மயக்கம் அடைய வைத்து வைத்தியம் பார்த்திருக்கிறார். இவரது மைத்துனர், வனத்துறை அதிகாரி நாராயண் மதம் பிடித்த யானை ஒன்று மக்களைத் தாக்குகிறது என்று இவரை அழைக்க, இவர்கள் எல்லாரும் மயக்கமருந்து துப்பாக்கியோடு யானையை நெருங்கி இருக்கிறார்கள், யானை இவரது மைத்துனரை மிதித்தே கொன்றுவிட்டது. யானைகளுக்கு இலவச முகாம் எல்லாம் நடத்தி இருக்கிறார். மின்சாரம் தாக்கி காயம்பட்ட யானைகளுக்கு சிகிச்சை தந்து காப்பாற்றி இருக்கிறார். அவர் மருத்துவம் செய்த யானை ஒன்று 15-20 வருஷங்களுக்குப் பிறகு சர்க்கஸ் யானையாக இருக்கும்போதும் இவரை நினைவில் வைத்துக் கொண்டு துதிக்கையால் அணைத்துக் கொண்டிருக்கிறது!

மேன்மக்கள், வேறென்ன சொல்ல? சிறுவர் புத்தகமாக இருந்தாலும் என்னைப் போலவே நீங்களும் தகவல்களால் கவரப்படலாம். யானை டாக்டர் கதையைப் படிக்கவில்லை என்றால் தவறவிடாதீர்கள்!

(டாக்டர் கேயின் புகைப்படம் கிடைக்கவில்லை)

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், இந்திய அபுனைவுகள், சிறுவர் புத்தகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

ஜெயமோகன் 60

ஜெயமோகனுக்கு அறுபது வயதாகப் போகிறது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கில்லை. செப்டம்பர் 18 பிறந்த நாளாம். ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு virgo. இந்திய முறைப்படி ராசி தெரியவில்லை.

ஜெயமோகனை எழுத்தாளராக நன்றாகவே அறிவேன். தமிழில் பல நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் மூன்று பேரை நான் மேதைகள் என்று மதிப்பிடுகிறேன். இன்று இருப்பவர் ஜெயமோகன் மட்டுமே. (மற்ற இருவர்: புதுமைப்பித்தன், அசோகமித்திரன்) ராட்சசன் என்று செல்லமாக நினைத்துக் கொள்வதுண்டு. 🙂 என் கண்ணில் நோபல் பரிசுக்கு தகுதியானவர், ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரபலம் ஆனால்தான் அதெல்லாம் நடக்கும். இப்படி மதிப்பிட வேண்டும் என்றால் அவர் எழுத்தை கணிசமான அளவில் படித்திருக்க வேண்டும் இல்லையா? அதனால்தான் எழுத்தாளராக நன்றாகவே அறிவேன் என்கிறேன்.

எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இன்று அவர் ஒரு இயக்கமாகவே மாறிவிட்டிருக்கிறார். ஒரு குழுவை தன் வழிகாட்டுதலில் பணியாற்ற வைத்திருக்கிறார். இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்று கனவு கண்ட க.நா.சு. பார்த்திருந்தால் பூரித்துப் போயிருப்பார்.

விஷ்ணுபுரம் விருது பல குடத்திலிட்ட விளக்குகளை சின்னக் குன்றிலாவது ஏற்றி இருக்கிறது. கவிஞர்களைப் பற்றி கருத்து சொல்லும் அருகதை எனக்கு இல்லை, படிக்காதவர்கள் உண்டு, ஆனால் எனக்கு பரிச்சயமான எழுத்துக்கள் அங்கீகாரத்துக்கு முற்றிலும் தகுதியானவை. சாஹித்ய அகடமி போன்று வச்சா குடுமி சிரைச்சா மொட்டை என்ற arbitrary அளவுகோல்கள் கிடையாது. எழுத்தின் தரம் ஒன்றே தகுதி. அதிலும் அவர் தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது மிகச் சிறந்த பணி.

தமிழ் விக்கி அடுத்த பெரிய பணி. ஏழெட்டு மாதங்களில் இதை உருவாக்கியது இயக்கமாக மாறியதால்தான் நடந்திருக்கிறது.

ஜெயமோகனை ஒரு ஆளுமையாக சுமாராக அறிவேன். அவரோடு வருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று நினைத்தால் இதற்கெல்லாமா சண்டை போட்டோம் என்றுதான் தோன்றுகிறது. நினைவில் இருப்பது நெகிழ்வான தருணங்கள் மட்டுமே, என் இங்கிதக் குறைவான கேள்விகளுக்கும் அவர் பொறுமையாக பதில் சொன்னது மட்டுமே. அவரோடு கழித்த நாட்களின், பேசிக் கொண்டிருந்த தருணங்களின் மனதில் புன்முறுவலை வரவழைக்கின்றன. குறிப்பாக அவர் பகவத்கீதையைப் பற்றி என்னோடு தொலைபேசியில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தது. பிறகு வெண்முரசில் அதெல்லாம் வந்தது. கோடம்பாக்கம் ஹைரோடில் ஏதோ ஒரு விடுதியில் தங்கி இருந்தார், நான் பத்து நிமிஷம் தொலைவில் கோடம்பாக்கம் ஹைரோடில் இருக்கிறேன் என்று சொன்னபோது அந்த ரோட் எங்கே இருக்கிறது என்று என்னை திருப்பிக் கேட்டது.

நீடூழி வாழ்க, இன்றைய சாதனைகளை எல்லாம் கடந்து செல்க என்று வாழ்த்துகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

நாமார்க்கும் குடியல்லோம் – ஜெயமோகன்

இந்தப் பதிவை ஃபிப்ரவரி 2021-இல் எழுத ஆரம்பித்தேன். எழுதி முடிக்கவே கைவரவில்லை. அதுவும் ஜெயமோகனே தன்னைப் பற்றி “நாமார்க்கும் குடியல்லோம்” என்று மார்ச்சிலோ என்னவோ சொல்லிக் கொண்டார். நான் அவரை சரியாகவே கணித்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன், அப்படியும் எழுதி முடிக்கவே கை வரவில்லை.

ஜெயமோகன் தலை சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். மேதை. ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுத்தார். ஞானபீட விருது கிடைத்தால் ஏற்கமாட்டேன் என்கிறார். இத்தனைக்கும் சென்ற காலத்தில் சில பல விருதுகளை ஏற்றுக் கொண்டவர்தான். இன்று விருதுகளை மறுப்பது வெறும் ஆணவமா? பொருளியல் ரீதியாக அவர் அடைந்துள்ள வெற்றி அவரது அகங்காரத்தை உசுப்பி விட்டிருக்கிறதா? கொடுக்கும் நிலையில் நான் இருக்கிறேன், பெற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்ற பெருமிதமா? இல்லை பாஜக ஆட்சியில் இருக்கும்போது விருதை ஏற்கமாட்டேன் என்பது அவரது அரசியல் நிலையின் பிரதிபலிப்பா, ஹிந்துத்துவ எதிர்ப்பா? நாளை நோபல் பரிசு கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ள மறுப்பாரா?

இது வெட்டி ஆராய்ச்சி என்பதை ஒத்துக் கொள்கிறேன். கறாராகப் பார்த்தால் விருதுகளை ஏற்பதும் மறுப்பதும் அவர் இஷ்டம், அவர் சவுகரியம். ஏன் மறுக்கிறேன் என்று கூட அவர் யாருக்கும் எந்த விளக்கமும் தர வேண்டிய அவசியம் இல்லைதான்.

இது வெறும் ஆணவமோ, பொருளியல் வெற்றியால் உண்டான அகங்காரமோ இல்லை என்பது என் உறுதியான கருத்து. இது தன் மேதமையை தானே நன்றாக உணர்ந்து அடையும் பெருமிதத்தின் விளைவு. பொருளியல் தேவைகள் இருந்திருந்தால் ஒரு வேளை சில விருதுகளை ஏற்றுக் கொண்டிருக்கலாம். அதுவும் இன்றில்லை. அரசியல் ஹிந்துத்துவத்தை எதிர்ப்பவர்தான், ஆனால் பத்மஸ்ரீ விருதை மறுக்க அது காரணமில்லை என்று கருதுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் நிராகரித்திருப்பார் என்று தோன்றுகிறது. ஏனென்றால் கணிசமான அளவில் இந்தப் விருதுகள் அரசியல் காரணங்களுக்காகத்தான் தரப்படுகின்றன. தரம் தெரியாமல் தரப்படும் பரிசிலை பாணன் நிராகரிப்பது போலத்தான். “மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?” என்று கேட்ட கம்பன் போலத்தான். நாமார்க்கும் குடியல்லோம்!

ஆனால் ஜெயமோகன் விருதுகளை ஏற்க மறுப்பது தவறு என்பதும் என் உறுதியான கருத்து. ஜெயமோகன் – அதுவும் சினிமா பிரபல ஜெயமோகன், சர்ச்சைக்குள்ளாகும் ஜெயமோகன் – இன்று தமிழ்நாடறிந்த ஒருவர். பத்துக்கு இரண்டு பேராவது அவர் பேரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். தமிழ்நாட்டுக்கு வெளியே? பத்து லட்சத்தில் இரண்டு பேர் அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தால் அதிகம். எப்படி தெரிந்து கொள்வார்கள்? விருதுகள் பெறாவிட்டால் தகழியும் பஷீரும், அனந்தமூர்த்தியும், கோபிநாத் மோஹந்தியும், மஹாஸ்வேதாதேவியும், அம்ரிதா ப்ரீதமும் நம் பிரக்ஞையில் இருப்பார்களா? ஜெயமோகனை மொழிபெயர்ப்பது சுலபமல்ல. ஆனால் வெளியே தெரிந்தால் இன்னும் நாலு பேர் முன்வருவார்கள் இல்லையா? அதனால்தான் அவர் கௌரவிக்கப்பட வேண்டும், அவரும் அந்த கௌரவங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே விரும்புகிறேன்.

அவருக்கு மட்டுமல்ல, அசோகமித்திரனுக்கு பத்மபூஷன், பத்மஸ்ரீ ஏதாவது கிடைத்திருக்க வேண்டும். கி.ரா.வுக்கு சட்டுபுட்டென்று கொடுத்தே ஆக வேண்டும். நாஞ்சிலும் எஸ்ராவும் பூமணியும் எதிர்காலத்தில் இந்த விருதுகளைப் பெற வேண்டும்…

ஜெயமோகன் தான் காகிதத்தில் எழுதினால் போதும், அந்தக் காகிதப் பிரதியை நெருங்கிய நண்பர்கள் படித்தால் போதும் என்று கூட நினைக்கலாம். (அசோகவனம் என்னாச்சு சார்?) அது அவரது உரிமை. ஆனால் அதை புத்தகமாகப் போட்டால், இணையத்தில் பதிப்பித்தால், இன்னும் நாலு பேருக்கு இலக்கியத்தில் ஆர்வம் வரலாம். டாவின்சியும் மைக்கேலாஞ்சலோவும் தங்கள் வீட்டு சுவரில் மட்டும் ஓவியம் எழுதி திருப்திப்பட்டுக் கொள்வது அவர்கள் இஷ்டம்தான். ஆனால் மோனாலிசாவையும் சிஸ்டைன் ஆலயத்தையும் பார்த்து பரவசப்பட வேண்டும் என்றே நம்மில் அனேகர் விரும்புவோம். அந்த எண்ணத்தின் நீட்டிப்புதான் அவர் விருதுகளை ஏற்க வேண்டும் என்று நினைப்பதும்…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

பரிந்துரை: ஜெயமோகனின் “கந்தர்வன்”

இன்று படித்த சிறுகதை – கந்தர்வன்.

என்னைக் கவர்ந்த அம்சங்கள்:

சங்கட ஹர்ஜி! ஹர்ஜ் என்பது ஹிந்தியில் புழக்கத்தில் இருக்கும் வார்த்தை. எங்களுக்கு சங்கடங்கள் இருக்கின்றன என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்களாம். ஒரு பிராதை அரசனிடம் சேர்ப்பதில் எத்தனை பிரச்சினைகள்! சாமி முன்னால் நின்று வரம் கேட்பதற்கு முன் ஆயிரம் பூசாரிகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. இன்றும் அப்படித்தானே! இதை மிகச் சிறப்பாக சித்தரிக்கிறார்.

நுண்விவரங்கள்: காராய்மைக்காரர் (விவசாயி) vs ஊராய்மைக்காரர் (ஊர் அதிகாரி?) சங்கட ஹர்ஜியில் அத்தனை பூசாரிகளையும் அரசனையும் புகழ வேண்டி இருக்கிறது. வரி கட்டுவதில் பிரச்சினைகள் மட்டுமல்ல, அனுகூலங்களும் இருக்கின்றன. கோவிலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவனுக்கு கொள்ளி போட்டால் முதல் மரியாதை கிடைக்க நல்ல வாய்ப்பு. வெள்ளிக் கண்டிகை குலச்சின்னம், ஜாதிச் சின்னமாக இருப்பது. சொல்லிக் கொண்டே போகலாம். மெய்நிகர் உலகத்தை உருவாக்கி இருக்கிறார்.

எனக்கு பெரிய மானிட தரிசனம் கிடைக்கவில்லை என்பதையும் பதிவு செய்துவிடுகிறேன். ஜெயமோகன் கதையின் முடிச்சு பெரிய தரிசனம் தரும் என்று நினைத்திருக்கலாம். அதிலும் முருகப்பனின் உருவத்தைப் பற்றிய சிறு சித்தரிப்பு (இழுத்து இழுத்து நடப்பது, குலுங்கும் தொந்தி), இளைஞன் அணஞ்ச பெருமாள் ஊரில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பதைப் பற்றி பெரிய விவரிப்பு இரண்டையும் அப்படி மானுட தரிசனம் தர வேண்டும் என்பதற்காகவே எழுதி இருக்கலாம். எனக்கு இவை இரண்டிலும் தொழில் நுட்பத் திறமை மட்டும்தான் தெரிகிறது.

நானும் எப்படியாவது மீண்டும் படிக்க ஆரம்பித்துவிட வேண்டும் – ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது – என்று பார்க்கிறேன். ஒரு நாள் படித்தால் அடுத்த ஒன்பது நாள் படிக்க முடிவதில்லை. இந்த மாதிரி நாலு கதை வந்தால் எண்ணம் நிறைவேறிவிடும் என்று நினைக்கிறேன்.


கந்தர்வனின் தொடர்ச்சியாக இந்த சிறுகதை – யட்சன். நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் என்னைப் பொறுத்த வரை இதன் கவர்ச்சி என்பது இது கந்தர்வனின் தொடர்ச்சியாக இருப்பதுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

காந்தி பற்றி ஜெயமோகன்

எனக்கு காந்தி மேல் விமர்சனங்கள் உண்டு. முக்கியமான விமர்சனம் காந்தியின் வழியில் நடப்பது, சமரசம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டம் என்பதுதான். நேருவும் ராஜாஜியும் படேலும் கூட அப்படி சமரசம் இல்லாமல் தங்கள் வாழ்வை நடத்த முடியவில்லை. என் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி முடியும்? காந்தி என் கண் முன்னால் தினமும் இருந்தால், என் பிரக்ஞையில் எப்போதும் இருந்தால் சமரசம் குறையலாம். ஆனால் காந்தி போன்ற உன்னத மனிதர்கள் அபூர்வமாகவே பிறக்கிறார்கள் உருவாகிறார்கள், தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். அவர் போய் எழுபது வருஷம் ஆகிவிட்டது, வாழ்வின் எத்தனையோ சின்னச் சின்னப் பிரச்சினைகளில் காந்தியை எங்கிருந்து நினைவில் வைத்துக் கொள்வது?

எனக்கு விளக்க உரைகள் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. கோனார் நோட்ஸ் எதற்கு, அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை நேராகப் படித்துக் கொள்கிறேனே என்றுதான் நினைப்பேன். அதிலும் வீடியோ எல்லாம் பார்க்க எனக்கு பொறுமையே இருப்பதில்லை. வரி வடிவத்தில் (transcript) இருந்தால் விரைவில் படித்துக் கொள்ளலாமே என்று தோன்றும். ஆனால் காந்தியின் எழுத்துக்களை படிப்பது எனக்கு சுலபமாக இல்லை. ஜெயமோகன் ஒருவருடைய விளக்கங்களை மட்டுமே விரும்பிப் படிக்கிறேன். காந்தியை இன்னும் நெருக்கமாக உணர வைத்தவர் அவர் ஒருவரே.  அவரது வீடியோ உரைகளையும் பார்க்க எனக்கு சாதாரணமாக பொறுமை இருப்பது இல்லைதான், ஆனால் என்னையும் இந்த உரை கட்டிப் போட்டு வைத்தது.

காந்தியம் எங்கே தோல்வி அடைகிறது என்பதைப் பற்றி அருமையாக உரை ஆற்றி இருக்கிறார். எனக்கு ஏற்கனவே இவர் சொல்வதைப் போன்ற எண்ணங்கள்தான் – ஆனால் என் எண்ணங்களை எனக்கே தெளிவாக்கிவிட்டார்.

அதிகம் விவரிக்க விரும்பவில்லை. பார்த்துக் கொள்ளுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்

ஜெயமோகன் மனதில் எழுப்பிய காட்சி

வெண்முரசைப் படிப்பது விட்டுபோய்விட்டது. மன உளைச்சல்கள், வேலைப்பளு எல்லாம் மகாபாரதப் பித்தையே பின்தள்ளிவிட்டன. மேலும் மகாபாரதத்தை வெறும் புனைவாக மட்டும் பார்ப்பது எனக்கு கொஞ்சம் கஷ்டம். மனதில் இருக்கும் பிம்பங்களை ஜெயமோகன் அவ்வப்போது உடைப்பது எனக்கு உறுத்துகிறது. உதாரணம்: பாரதப்போரை வெறும் இனக்குழுக்களின் – ஷத்ரியர் vs அ-ஷத்ரியர்களின் அதிகாரப் போட்டியாக சித்தரிப்பது. எனக்கு அது விழுமியங்களின் மோதல் – அவர் அதை விழுமியங்களின் மோதலாகவும் சித்தரிக்கிறார். எனக்கு அதுதான் dominant ஆக இருக்க வேண்டும்.

இருந்தாலும் அவ்வப்போது திடீரென்று ஏதாவது ஒரு அத்தியாயத்தைப் படிப்பேன். புத்தகத்தை எங்காவது ஒரு பக்கத்தில் திறந்து படிப்பது போலத்தான். குறிப்பாக வண்ணக்கடலை எத்தனை முறை படித்தாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது. நீலத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது புதிதாத கண்ணில் படும். நீலத்தின் மொழி மிகச் செறிவானது.

சில நாட்களுக்கு முன் படித்த அத்தியாயத்தில் அக்ரூரர் கிருஷ்ணனை சந்திக்க வருகிறார். கவிதையின் சுவை அறியாத எனக்கே இது கவித்துவமான மொழி என்று தெரிகிறது. மொழியையும் நடையையும் வியந்து கொண்டே இருந்தேன்.

வேராய் தடியாய் கிளையாய் இலையாய் தளிராய் மலராய் நிறைந்த மண். சாறாய் தேனாய் ஊறிய நீர். காற்றாய் எழுந்த மணம். அனலாய் எழுந்த நிறம். வானாய் நிறைந்த நடனம். ஆக்களும் மரங்களும் புட்களும் பூச்சிகளும் புழுக்களும் எனச்சூழ்ந்த உயிர்ப்பெருக்கு. உயிரென வந்த இறைப்பெருக்கு. இறையின் சாரமென எழுந்த இசைப்பெருக்கு.

இந்த வரிகளில் அப்படியே நின்றுவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் வேராய் தடியாய் கிளையாய் இலையாய் தளிராய் மலராய் நிறைந்த மண் என்ற வரியிலேயே நின்றுவிட்டேன். எங்கோ எப்போதோ காடுகளில் மண்ணே தெரியாமல் வேரும் புல்லும் இலையும் மலருமாய் நிறைந்திருந்த நிலப்பரப்பைப் பார்த்தது – எங்கே என்று கூடத் தெரியவில்லை – அப்படியே மனக்கண் முன்னால் எழுகிறது. கணினியை மூடி வைத்துவிட்டு அந்தக் காட்சியையே நினைத்துக் கொண்டிருந்தேன். நினைவில் வேறு என்ன வருகிறது என்பதையே உன்னித்துக் கொண்டிருந்தேன், துரதிருஷ்டவசமாக எங்கே பார்த்தேன் என்பது கூட நினைவு வரவில்லை. ஓக்லண்டின் Redwood Regional Park? Muir Woods? Bryce Canyon-இல் நாள் முழுவதும் நடந்து இரவில் கூடாரம் அடித்து தங்கியபோது? ஷாஸ்தா மலைகளில் எங்கேயாவது?

ராட்சஸன். வாழ்க!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

பிடித்த சிறுகதை – ஜெயமோகனின் “சாவி”

ஜெயமோகன் எழுதிய 100 கரோனா சிறுகதைகளை இங்கும் அங்குமாகத்தான் படிக்க முடிந்தது. படித்த சில சிறுகதைகளால் மீண்டும் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் மீண்டிருக்கிறது. பார்ப்போம்.

எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதைகளில் ஒன்று சாவி. மனிதனை பிற விலங்குகளிலிருந்து பிரிப்பது எது? என்னைப் பொறுத்த வரையில் அது அறிவுத்தேடல் மட்டுமே. அதுவும் உடனடிப் பயன் எதுவும் இல்லாத அறிவுத்தேடல் மட்டுமே. (இலக்கியம், இசை, கலை எல்லாம் இரண்டாம் படியில்தான் இருக்கின்றன.)

ஏன் எவரெஸ்டின் மீது ஏற வேண்டும்? Because it is there. ஏன் கடலின் ஆழம் வரை போக வேண்டும்? Because it is there. ஏன் நிலாவில் நடக்க வேண்டும்? Because it is there. ஏன் ஆர்க்கிமிடீஸ் வட்டத்தின் பரப்பளவு என்ன என்று ஆராய்ந்து தன் ஃபார்முலாவை நிறுவ வேண்டும்? Because. ஏன் டாலமியும் கோப்பர்நிகஸும் பூமி சூரியனை சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியை சுற்றுகிறதா என்று ஆராய வேண்டும்? Because. ஏன் எண்ணற்ற கணித ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நேரத்தை – இல்லை வாழ்வையே – Squaring the Circle போன்ற பயனற்ற ஆராய்ச்சிகளில் செலவிட வேண்டும்? Because. ஏன் ஆய்லர் கோனிக்ஸ்பர்கின் பாலங்கள் எல்லாவற்றையும் ஒரே சுற்றில் சுற்றி வர முடியுமா என்று ஆராய வேண்டும்? ஒரு பாலத்தில் ஒரு முறை நடந்தால் என்ன இரண்டு முறை நடந்தால் என்ன? Because. ஏன் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் 1+1=2 என்று நிறுவ நூற்றுக்கணக்கான பக்கங்கள் உள்ள புத்தகத்தை எழுத வேண்டும்? Because. ஏன் மனித இனத்தையே, பூமியையே அழிக்கக் கூடிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்? Because.

சாவி சிறுகதை அதைத்தன் காட்டுகிறது. (அறிவுத்தேடல் என்றால் என்ன விளக்க இலக்கியம்தான் வர வேண்டி இருக்கிறது.) குரங்கு ஸ்க்ரூவை இறுக்கும் காட்சி கவிதை.

“நீ இங்கியே இருடே மக்கா…” என்றான். “இங்க எல்லா துக்கமும் உண்டு பாத்துக்க. அங்க வானத்திலே உனக்கு அந்த துக்கமொண்ணும் இல்லை. ஆனா இந்த சந்தோசம் அங்க இல்ல கேட்டியா?”

என்று அரிகிருஷ்ணன் சொல்லுவது முற்றிலும் உண்மை. இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!

மனக்குகை ஓவியங்கள் என்ற புதுமைப்பித்தன் சிறுகதையில் கடவுளை நிராகரித்து நெருப்பை ஊதும் இடத்தை நினைவுபடுத்தியது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

ஜெயமோகனின் “நாவல்” புத்தகம்

ஜெயமோகனிடம் வியக்க வைக்கும் ஒரு குணம் உண்டு. எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி கேட்டாலும் உண்மையிலேயே தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, முன்முடிவுகள் இல்லாமல் கேட்டால் பொறுமையாக, எரிச்சலின் சாயலே இல்லாமல் பதில் சொல்வார்.

அவருடைய நாவல் என்ற புத்தகத்தை நான் சில வருஷங்கள் முன்னால் படித்தேன். அதில் ஒரு நல்ல நாவலின் இலக்கணம் என்ன, சிறுகதை, குறுநாவல், நாவலுக்கு என்ன வித்தியாசம், தமிழில் நாவல்கள் என்று பொதுவாக சொல்லப்படுபவை நீண்ட சிறுகதைகள்/குறுநாவல்களே, அவற்றை நீள்கதை என்றே சொல்ல வேண்டும் என்று அவர் ஸ்டைலில் அடர்த்தியாக, நீளமாக நிறைய இருந்தது. என்னடா இப்படி அறுக்கிறாரே, இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்வது, என்ன பயன் என்று நினைத்துக் கொண்டேன். நானெல்லாம் படிப்பது பிடிக்கிறதா இல்லையா என்ற சிம்பிள் இலக்கணத்தைத் தாண்டுவதில்லை. எது சிறுகதை, எது நாவல் என்பதை எத்தனை பக்கம் இருக்கிறது என்பதை வைத்து தீர்மானித்துக் கொள்ளலாம், அதற்கு மேல் சிக்கலான விதிகள் தேவையில்லை என்று நினைப்பவன். இலக்கணம் என்பது எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும், எல்லாருக்கும் யோசிக்காமல் சுலபமாக இலக்கணத்தை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு எப்போதுமே ஒரு எண்ணம் உண்டு. அதுவும் மானேஜ்மென்ட் புத்தகங்கள் பலவும் விதிகள் சிக்கலாக ஆக அவற்றை apply செய்வது கடினம் என்று சொல்கின்றன, அது நம்ம நினைப்பது சரிதான் என்று என் கருத்தை மேலும் மேலும் பலப்படுத்தியது.

அவர் இங்கே வந்திருந்தபோது அவருடன் ஒரு டிரைவ் போயிருந்தோம். எனக்கு இந்த சபை நாகரீகம் என்பது கொஞ்சம் குறைவு. நான் சார் இப்படி என்னவோ வகைப்படுத்தறீங்களே, என்ன பயன், பிடிக்குது/பிடிக்கலை போதாதா, தி.ஜா. எழுதியது நீள்கதையா நாவலா என்று தெரிந்து கொள்வது மோகமுள்ளை நான் வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளை, அனுபவத்தை மாற்றவா போகிறது, இது எதற்கு வெட்டி ஆராய்ச்சி என்று கேட்டேன். அப்போதெல்லாம் அது கொஞ்சம் நாகரீகக் குறைவு என்பதே தெரியாது. ஜெயமோகன் சொல்வதை வைத்துப் பார்த்தால் நான் இந்த மாதிரி சுந்தர ராமசாமியை கேட்டிருந்தால் அவர் வீட்டில டிவி எத்தனை இன்ச் என்று பேச்சை மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன். 🙂 அவர் உனக்கு பயன் இல்லாமல் இருக்கலாம், மற்றவர்களுக்கு பயன்படலாம் என்று சொன்னார்.

அவர் எப்பவுமே இப்படித்தான் என்று நினைக்கிறேன். நானெல்லாம் பிடிக்கிறது/பிடிக்கவில்லை என்பதைத் தாண்டுவது அபூர்வமே. அவர் ஆஹா இது பிடித்திருக்கிறது, இதுவும் பிடித்திருக்கிறது, இதெல்லாம் ஏன் பிடித்திருக்கிறது, இப்படி எனக்குப் பிடித்திருக்கும் நாவல்களின் பொதுவான குணாதிசயம் என்ன என்று யோசித்து ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொள்கிறார், அதை முன் வைக்கிறார், அதைப் பற்றி விவாதிக்க தயாராக இருக்கிறார் – எத்தனை சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்டாலும் சரி.

ஆனால் அவரது எண்ணங்களில் – வேறு பல உரையாடல்கள், கட்டுரைகள் மூலமாக நான் உணர்ந்து கொண்டது – எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. இலக்கணத்தை புரிந்து கொண்ட பின்னரே இலக்கியத்தை முழுமையாக உள்வாங்க முடியும், ரமணி சந்திரனை மட்டுமே படித்து வளர்பவன் நேராக அசோகமித்திரனுக்கு போய்விட முடியாது, நவீனத்துவம் என்றால் என்ன என்று புரிந்து கொண்டால் மட்டுமே அது இயலும் என்று அவர் கருதுகிறார். அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்பத்ற்கு நான் உட்பட பல உதாரணங்கள் உண்டு. அதுவும் அசோகமித்திரனின் புனைவையே படிக்க முடியாத ஒருவன் அதன் பின் இருக்கும் தியரியைப் படிப்பான் என்பது வீண் கனவு. அசோகமித்திரன் புனைவுகளைப் படித்த பின்னர் அந்த தியரியில் ஆர்வம் வர வாய்ப்பிருக்கிறது, படிப்பதற்கு முன்னால் அல்ல. அந்த தியரியைப் படித்த பின் அவனுடைய படிப்பு இன்னும் கூர்மை ஆகவும் வாய்ப்பிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். வகைப்படுத்துதல் சில சமயம் நமது எதிர்பார்ப்புகளை வழிநடத்தலாம். அவை மட்டுமே இந்த மாதிரி தியரிகளின் பயன் என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு பொதுவாக தியரிகளை விட நேராக படித்துக் கொள்வதுதான் வொர்க் அவுட் ஆகிறது.

பல முறை சொன்னதுதான் – அவருடைய முறை அவருக்கு…

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

ஜெயமோகன் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஜெயமோகன் எழுதிய பெரியம்மாவின் சொற்கள் சிறுகதைக்கு Asymptote என்ற இலக்கிய இதழ் நடத்திய போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது என்று தெரிந்தது. மொழிபெயர்த்த சுசித்ரா ராமச்சந்திரனுக்கு ஒரு ஜே!

விருதுக்கான சிறுகதையைத் தேர்ந்தெடுத்த பிரின்சடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் பெல்லோசின் வார்த்தைகளில்:

I have absolutely no doubt that the prize itself must go to the charming, wonderful, unusual story of “Periyamma’s Words” by the Tamil writer B. Jeyamohan in Suchitra Ramachandran’s translation. It tells of how an illiterate old lady from South India was taught some basic English before being sent to live in the USA—with word definitions being given out of traditional Indian stories in contrast and conjunction with classical stories from the West. By the same token it is also a lesson in learning Tamil (or rather, learning India) for Western readers. It is a witty and heart-warming tale illustrating the paradoxical position of translation itself, as a way of crossing boundaries and as a way of understanding what boundaries cannot be crossed.

என் கண்ணோட்டத்தில் பெரியம்மாவின் சொற்களை விட பல சிறப்பான சிறுகதைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். (இதுவும் நல்ல சிறுகதைதான்) அவையும் மொழிபெயர்க்கப்பட்டால் ஜெயமோகனின் வீச்சு இன்னும் பெருக வாய்ப்பிருக்கிறது என்பது சந்தோஷமாக இருக்கிறது.

எனக்கு பல வருஷங்களாகவே ஒரு மனக்குறை உண்டு. தமிழின் நல்ல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாததாலேயே பிற மொழி வாசகர்களை அடைவதில்லை, அதனால் தமிழ் எழுத்தாளர்களின் சாதனைகள் வெளியே தெரிவதில்லை. இதிலே சாஹித்ய அகாடமி விருது தந்தால் வாங்கமாட்டேன், பத்மஸ்ரீ விருது தந்தால் மறுத்துவிடுவேன் என்று குழந்தை மாதிரி அசட்டுப் பிடிவாதம் பிடிக்கும் ஆளுமைகள் வேறு. விருதுகள் எழுத்தாளரை பிற மொழி வாசகரிடம் கொண்டு சேர்க்கும் என்ற அற்ப விஷயத்தைக் கூட புரிந்து கொள்வதில்லை என்று கொஞ்சம் மனவருத்தம் உண்டு. அப்படி வருத்தப்பவடுதோடு நிறுத்திக் கொள்ளாமல் முனைந்து மொழிபெயர்த்திருக்கும் சுசித்ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் மேலும் மேலும் நல்ல மொழிபெயர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

ஒரிஜினல் சிறுகதை இங்கே. சுசித்ராவின் மொழிபெயர்ப்பு இங்கே.

பின்குறிப்பு: தைவான் சென்றிருக்கும் என் நண்பன் ஒருவனிடம் Asymptote பத்திரிகை கிடைத்தால் இரண்டு வாங்கி வா என்று சொல்லி இருந்தேன். இது அச்சுப் பத்திரிகையே இல்லையாம், இணையத்தில் மட்டும்தான் வருகிறதாம். 😦

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

ஜெயமோகன் எழுதிய ‘இந்திய ஞானம்’

ஜெயமோகன் தமிழின் சிறந்த கட்டுரையாளர்களின் முதல் வரிசையில் இருப்பவர். இந்திய தத்துவ நூல்களை நன்றாகப் படித்து உணர்ந்தவர். விஷ்ணுபுரம் எழுதுவதென்றால் சும்மாவா? அவர் இந்திய தத்துவ மரபு, இந்திய, தமிழ் பாரம்பரிய பண்பாட்டுக் கூறுகள் பற்றி எழுதிய அறிமுகப் புத்தகம் இது. பல சமயங்களில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் புத்தகத்தில் கொஞ்சம் coherence குறைவு.

வேதாந்தத்தில் எல்லாம் எனக்குப் பெரிதாக ஆர்வம் கிடையாது. சிறு வயதிலேயே சடங்குகள், வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்களை ஓட்டிவிடு முருகா என்ற மாதிரி துதிப் பாடல்கள் மீது இளக்காரப் பார்வை தோன்றி இருந்தது. ஓரளவு வயது வந்த பிறகு பாரம்பரியம், வேர்கள் என்ற அளவில் மட்டுமே வேதம், உபநிஷதம், கீதை ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு படிக்க முயற்சித்தேன். ஆனால் சரியான புத்தகங்களோ, விளக்கக் கூடிய ஆசிரியர்களோ கிடைக்காததால் என்னால் பெரிதாக முன்னகர முடியவில்லை.

புத்தகத்திலிருந்து என்னுடைய takeaways:

  • இந்து மெய்ஞான மரபின் syllabus – நான்கு வேதங்கள், மூன்று தத்துவங்கள் (உபநிஷதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம்), ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம்), ஆறு மதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம்)
  • இவை ஒன்று இன்னொன்றை மறுத்து விவாதித்து வளர்ந்த பெரிய ஞானத் தொகுப்பு
  • வேதங்கள் இந்திய ஞான மரபின் அடிப்படைகள் அல்ல. ஆறு தரிசனங்களில் நான்கு வேதங்களை நிராகரிப்பவை – சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம்.
  • வேதங்களிலேயே கூட கர்மம்/ஞானம் மற்றும் கருத்து/பொருள் முதல்வாதம் என்ற இரண்டு தரப்பையும் பார்க்கலாம். வேதங்களின் கர்ம காண்டத்தை உபநிஷதங்கள் நிராகரிக்கின்றன.
  • ஆனால் இந்த மாறுபட்ட தரப்புகள் ஒன்றாகப் பின்னி பிணைந்திருக்கின்றன. புளியும் உப்பும் கலந்து சுவையான ரசமாவது போல இவை ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன.
  • இப்படி மாறுபட்ட தரப்புகளை விவாதித்து வளர்ந்து உள்வாங்கி இணைந்து செயல்படுவதுதான் வேத மரபின் தனிப்பட்ட குணாதிசயம்.
  • மகாபாரதம் போன்றவற்றை அப்படிப்பட்ட பண்பாடுகள் கலக்கும் காலமாகப் பார்த்தால் இன்னும் நல்ல insights கிடைக்கின்றன. மீன்காரிக்குப் பிறந்தவரால் வேத வியாசர் ஆக முடிகிறது. ஆனால் கர்ணன் சூதனாகத்தான் வாழ்ந்து முடிகிறான். குலத் தூய்மை முக்கியம் பெற்றுக் கொண்டிருக்கிறது என்று உணரலாம்.
  • வேத மரபு மற்ற பண்பாடுகளுடன் அப்படி கலந்து உரையாடிய காலகட்டத்திலேயே தமிழ்ப் பண்பாடு செவ்வியல் தளத்துக்கு சென்றிருக்கிறது. கல்வி, அகம்/புறம் என்ற பிரிவு, கவிதை என்று இருந்திருக்கிறது. ஆனால் பிற பண்பாடுகளுடன் கலக்கும் சூழல் இல்லை.
  • களப்பிரர் காலத்தில் தமிழில் குறள் உட்பட்ட நீதி நூல்கள் உருவாகின. களப்பிரர் தமிழ் நிலத்தின் மீது கருத்தியல் ஆதிக்கம் செலுத்த அப்படிப்பட்ட நீதி நூல்கள் தேவைப்பட்டிருக்க வேண்டும். குறள் நீதி நூல் மட்டுமல்ல, கவித்துவம் மிளிரும் நூல்.
  • தமிழ்ப் பண்பாட்டின் மீது வைதிக மரபு, ஆசீவகம், சமணம், பௌத்தம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
  • வேதாந்தத்தின் அடுத்த பெரும் பரிணாமம் சங்கரர், ராமானுஜர், மாத்வர் ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • சித்தர் பாடல்கள் இன்றும் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆறு தரிசனங்கள், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆசீவக/சமணக் கூறுகள் பற்றி சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடிய விளக்கங்களோடு எழுதி இருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் பயன் (என்னைப் பொறுத்த வரையில்) இதுதான். இந்தியத் தத்துவ மரபில் என்ன இருக்கிறது, என்ன எதிர்பார்க்கலாம் என்ற அறிமுகம் கிடைக்கிறது. அது முழுதானதோ இல்லையோ, முதல் சில படிகளை எடுத்து வைக்கப் போதுமானது.

மிகச் சிறப்பான அறிமுகம்.  படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்