காந்தி, நான், ஜெயமோகன்

Gandhiஎனக்குத் தெரிந்த வரை மனச்சோர்வே இல்லாமல் எல்லா பின்னடைவுகளையும் சந்தித்த ஒரே மனிதர் காந்திதான். அவர் நினைத்ததெல்லாம் நடக்கவில்லைதான். அவரது நோக்கங்களை முழுதாக செயல்படுத்துவதில் அவருக்கு தோல்விதான். ஆனாலும் அவரது வாழ்வே மனித குலத்தின் வெற்றிதான்.

சமீபத்தில்தான் ஜெயமோகனின் இந்தப் பழைய பதிவைப் பார்த்தேன். ஜெயமோகன்

கடுமையான காந்தி வெறுப்பு கல்விமட்டத்திலேயே எனக்குக் கிடைத்தது. அதை இங்கே பரப்பியவர்கள் கிறித்தவ, கம்யூனிசக் கருத்தியல் கொண்டவர்கள்.

என்றும்

நான் பல கிறித்தவக் கல்வி நிறுவனங்களில் கடுமையான காந்தி வெறுப்பு கற்றுக்கொடுக்கப்படுவதை நேரில் கண்டிருக்கிறேன்.

என்றும் எழுதுகிறார்.

jeyamohanநான் ஜெயமோகனின் தலைமுறைக்காரன். செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளில் படித்தேன். 3 கிறித்துவ கல்வி நிறுவனங்களில் (செய்யூர் லிட்டில் ஃப்ளவர் பள்ளி, தாம்பரம் கார்லி பள்ளி, செங்கல்பட்டு செயிண்ட் ஜோசப் பள்ளி) படித்தேன். ஒரு நிறுவனத்திலும், காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கேட்டதில்லை, ஒரு ஆசிரியரும் காந்தியைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை சொன்னதில்லை. காந்தி மட்டுமல்ல, எந்தத் தலைவரைப் பற்றியும் யாரும் தவறாகப் பேசியதில்லை. ஏதாவது பேசினால் அது புகழாரமாகத்தான் இருக்கும். மிச்ச மாணவப் பருவம் பொறியியல் கல்லூரிகளில் கழிந்தது. அங்கே எப்போதும் ஒரு சிறு SFI (கம்யூனிச சார்பு) கோஷ்டி உண்டு. ஒரு வேளை அவர்கள் காந்தியை விமர்சித்திருக்கலாம். ஆனால் அது ஒரு விளிம்பு நிலைக் குழு, மாணவர்களிடம் பெரிய முக்கியத்துவம் இருந்ததில்லை. உயிர் நண்பன் தங்கமணிமாறன் திராவிடக் கழகப் பின்னணி உள்ள குடும்பத்தவன். ஆனால் நான்தான் ஈ.வெ.ரா.வை விமர்சித்திருக்கிறேன், அவன் காந்தியைப் பற்றி ஒரு வார்த்தை தவறாகச் சொன்னதில்லை.

காந்தியைப் பற்றி விமர்சனங்களை நான் படித்தது பிற்காலத்தில் நானாகப் புத்தகங்களைத் தேடிப் பிடித்து படிக்க ஆரம்பித்தபோதுதான். ஜிகிரி தோஸ்த் ஸ்ரீகுமார் கம்யூனிச சார்புடையவன். காந்தியைப் பற்றி நானும் அவனும் நிறைய பேசி இருக்கிறோம், விமர்சித்திருக்கிறோம், ஆனால் காந்தி வெறுப்பு என்பதை இணையம் பரவலாகும்முன் கண்டதில்லை.

நான் மனிதர்களை நம்புபவன். எனக்கு வெறுப்பு அஜெண்டா என்பது அதீதமாக இல்லாத வரை கண்ணில் படுமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் ஒரே தலைமுறையைச் சேர்ந்த இருவருக்கு கல்வி நிலையங்களில் இப்படி வேறுபட்ட அனுபவங்கள் கிடைத்திருப்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஜெயமோகன் சொல்வதைப் பார்த்தால் இப்படிப்பட்டவர்கள் மிக அதிகமாக இருப்பதைப் போலவும், அதுவும் பல வருஷங்களாக இருப்பதைப் போலவும் தெரிகிறது.

உங்கள் அனுபவம் என்ன? பள்ளிகளில் காந்தி வெறுப்பு கற்றுத் தரப்படுவதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

பின்குறிப்பு 1: என் எண்ணத்தில் காந்தியை வெறுப்பவர்கள் இரண்டு வகை. ஒன்று சிரிப்பு புரட்சியாளர்கள். வினவு மாதிரி. இரண்டு வரி படித்தால் இதெல்லாம் காமெடி பீஸ் என்று புரிந்துவிடும். காந்தியை வெறுக்கிறேன் என்றால் தனக்குப் பெரிய சிந்தனையாளர் என்ற இமேஜ் கிடைக்கும் என்று நப்பாசைப்படுகிறவர்கள். இரண்டு காந்தியின் inclusive agenda ஒத்துவராதவர்கள். இவர்கள் அனேகமாக ஒரு குழுவை முன்னிறுத்தி இன்னொரு குழுவை வெறுப்பவர்கள்.

பின்குறிப்பு 2:எனக்கு காந்தி மேல் விமர்சனம் உண்டு. கிலாஃபத் இயக்கம் ஒரு உதாரணம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம், ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகனின் ஒரிஜினல் பதிவு

ஜெயமோகன் மேல் ட்ராட்ஸ்கி மருதுக்கு என்ன கோபம்?

kaaviyath_thalaivanகாவியத்தலைவன் திரைப்படம் சொதப்பிவிட்டது, அதற்கு ஜெயமோகன் முக்கிய காரணம் என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

trostky_marudhuஅவரது வார்த்தைகளில்:

இயக்குனருக்கு துணை இருக்கும் எழுத்தாளருக்கு முதலில் அந்த காலத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த எழுத்தாளர் மீது பெரிய நம்பிக்கை எனக்கு கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளரை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு முன் காட்சிப்படுத்தி சிந்திக்கும் சக்தியுள்ள ஒருவரை நீங்கள் தேட வேண்டும். நீங்கள் தேடி காட்சிப்படுத்துவதற்கான தரவுகளை சேர்த்த பின்பே ஒரு கதாசிரியர் தேவை. மெலிதான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அதை ஒழுங்கு செய்ய எழுத்தாளர் தேவை. ஆனால், அப்படி வரும் எழுத்தாளர் உங்களிடம் இப்படியான குறையிருக்கிறது என்று சொல்லாமலே, தான் சம்பாதித்து போவதற்குத்தான் பார்க்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போதே அது தெரிகிறது. வசனத்துக்கும் காலத்துக்கும் சம்பந்தமேயில்லை. அவர் தனித்து இயங்குகிறார்.

….
உள்ளே பேசியதை அந்த இயக்குநர் கேட்கவில்லை என்றால், வெளியே வந்து அதை பேசவேண்டுமல்லவா? அப்படியாக எழுத்தாளருக்கு நேர்மை இல்லாததும், வேறு புறம் பேசுவதுமாக இருப்பது சரியில்லைதானே!

….
எழுத்தாளர், பதினைந்து நாளிலே எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார், அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் இயங்குகிறார்.

jeyamohanநான் தமிழ் சினிமா உலகத்தைப் பற்றிப் பெரிதாக அறிந்தவனல்ல. ஆனால் வசனகர்த்தாவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய ரோல் இருக்கிறதா என்ன? இயக்குனர் அல்லது ஸ்டார் நடிகர்தான் படத்தை உருவாக்குகிறார் என்றுதான் தோன்றுகிறது. அப்படி என்றால் இயக்குனர் அல்லவா தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்?

காவியத்தலைவன் படத்தில் ஜெயமோகனின் திறமை வெளிப்படவில்லைதான். விமர்சனத்தில் “வசந்தபாலன் போர் வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார்” என்று நானும் ஜெயமோகனின் பங்களிப்பைப் பற்றி சொல்லி இருந்தேன். கேட்டதை செய்து கொடுக்கும் வசனகர்த்தாவை எப்படி பொறுப்பாளி ஆக்குகிறார் என்று புரியவில்லை. அதுவும் தாக்குவதுதான் தாக்குகிறார், பெயரைக் குறிப்பிடாமல் ஏன் ஒளிய வேண்டும் என்று தெரியவில்லை.

மருதுவின் ஓவியங்கள், குறிப்பாக பின்னணி நிறங்கள் எனக்குப் பிடித்தமானவை. தமிழ் அரசர்களின் உடைகள், நகைகள் பற்றிய அவரது எண்ணங்களை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த மாதிரி பேரைச் சொல்லாமல் விமர்சிப்பது தனி மனிதத் தாக்குதலாகவே தெரிகிறது. இதை விட அதிகமான நேரடித் தன்மையை அவரிடம் எதிர்பார்த்தேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ஜெயமோகன் பக்கம்

சாஹித்ய அகாடமி விருது பற்றிய ஜெயமோகனின் ஒற்றைப் பரிமாணக் கோணம்

jeyamohanசாஹித்ய அகாடமி விருது பற்றி ஜெயமோகனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அது “மிகச் சிறியவர்களுக்கான மிகச் சிறிய விளையாட்டு”, தான் அதை முக்கியமாகக் கருதவில்லை, வருஷாவருஷம் விருது அறிவிக்கப்படும்போது அவரது நலம் விரும்பிகள் அவரை அழைத்து “உங்களுக்கு இந்த வருஷம் கிடைச்சிரும்னு நினைச்சேன்” என்று ஆதங்கப்படுவதை தனக்கு அவமதிப்பாக உணர்கிறேன் என்று எழுதி இருக்கிறார். என் கருத்து வேறு. அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது

கலைமாமணி விருது பெற்றால் கௌரவமா? இல்லை. ஏனென்றால் அது இலக்கிய மதிப்பீட்டை சுட்டவில்லை. நீக்கப்பட்ட பெயர் பெற்ற விருது நமக்கு கிடைக்கும்போது நாம் கீழே போகிறோம். சாகித்ய அகாதமி அப்படி ஆகிவிட்டது. அதைப் பெறுவது எந்த இலக்கிய மதிப்பையும் சுட்டவில்லை. அதை பெற்றவர்களால் அது கீழே கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதன் மூலம் உள்ள லாபம் விளம்பரம்தான். அது இன்றைய நிலையில் எனக்குத் தேவை இல்லை. ஆனால் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதன் மூலம் கௌரவம் மிக்க விருதுகள் உண்டு. எந்த விருதும் அதை முன்னால் பெற்றவர்கள் எவர் என்பதனால்தான் முக்கியமானது. அது உருவாகும் ஒரு வரிசையால்

என்று சொன்னார்.

அவர் சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆம் சாஹித்ய அகாடமி விருதுகள் பல தரம் தாழ்ந்த படைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனதான். ஒரு காலத்தில் இலக்கியம் என்று நினைத்திருக்குக் கூடிய சாத்தியக்கூறு உள்ள அலை ஓசை, அகிலனின் எழுத்து எல்லாவற்றையும் honest mistake என்று விட்டுவிட்டாலும் கோவி. மணிசேகரன் போன்றவர்களுக்கும் சாஹித்ய அகாடமி விருது, ஜெயமோகனுக்கும் சாஹித்ய அகாடமி விருது என்றால் அவர் இது எனக்கு கௌரவம்தானா என்று யோசிப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால் யானை என்றால் துதிக்கை மட்டுமே என்ற கோணம் இது. யானைக்குத் துதிக்கை பிரதானம்தான், ஆனால் அதன் பின்னால் பெரிய உடலும் இருக்கிறது. விருதுகளின் முக்கியத்துவம் எழுத்தாளனை கௌரவப்படுத்துவது மட்டுமல்ல. எழுத்தாளனை இன்னும் ஒரு பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதும் கூடத்தான். என்னுடைய இலக்கிய வாசக நண்பன் மனீஷ் ஷர்மாவுக்கு ஜெயமோகனைப் பற்றித் தெரிந்திருக்க நான் மட்டுமே காரணம். டெல்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஏன் அமெரிக்காவிலும் அண்டார்க்டிகாவிலும் வாழும் பிற மனீஷ்கள் அவரைப் பற்றியும் எந்த விருதும் பெறாத புதுமைப்பித்தனைப் பற்றியும் எப்படித் தெரிந்து கொள்ள? சாஹித்ய அகாடமி விருதோ ஞானபீட விருதோ பெறாத எத்தனை பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்கிறது?

துருக்கிய மொழியில் எழுதும் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? ஒர்ஹான் பாமுக் என்ற ஒற்றைத் துருக்கிய எழுத்தாளரைத் தவிர்த்து வேறு யாரைப் பற்றியும் தெரியாதது ஏன்? Bridge on Drina, Woman in the Dunes பற்றி நமக்கு எப்படித் தெரிய வருகிறது? அந்த நோபல் பரிசு அவர்களை கௌரவப்படுத்த மட்டுமல்ல – இப்படி ஒரு படைப்பாளி இந்த மொழியில் எழுதுகிறார், இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்துப் படியுங்கள் என்று நமக்குப் பரிந்துரைக்கவும்தான்.

சாஹித்ய அகாடமி தகுதி இல்லாத மனிதர்களால் வழிநடத்தப்படலாம். மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். நாளை கருணாநிதிக்குக் கூட விருது கொடுக்கலாம். ஆனால் பல மொழிகள் நிறைந்த இந்த நாட்டில் ஒரு மொழியின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி இன்னொரு மொழியினர் தெரிந்து கொள்ள சாஹித்ய அகாடமியும் ஞானபீடமும் அவசியமாகின்றன. அதை சரியான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அவற்றை நான் நிராகரிக்கிறேன், அவற்றுக்கு நான் மேலானவன் என்று ஜெயமோகன் சொல்வது வெறும் மேட்டிமைவாதமாகவே எனக்குத் தெரிகிறது.

மேலும் சாஹித்ய அகாடமி விருது தகுதி அற்றவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. இ.பா., கி.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், தி.ஜா., சா. கந்தசாமி, எம்விவி, அசோகமித்ரன், பூமணி போன்றவர்கள் தகுதி அற்றவர்களா என்ன? குத்துமதிப்பாக ஒரு ஐம்பது சதவிகிதமாவது நல்ல படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்காதா என்ன? கன்னடத்திலும், மலையாளத்திலும், வங்காளத்திலும் இப்படி தகுதி அற்றவர்களுக்கு விருது கொடுக்கப்படுகிறது என்ற குரல் எழுவதாகத் தெரியவில்லை. தமிழின் அரசியல் சூழ்நிலை அப்படி இருக்கிறது. அதை மாற்ற வேண்டியது அவசியம். வரிசையாக ஜெயமோகன், கண்மணி குணசேகரன், ஆ. மாதவன், பிஏகே, முத்துலிங்கம், எஸ்ரா, சுப்ரபாரதிமணியன், அம்பை, பெருமாள் முருகன் என்று பத்து பேருக்குக் கொடுத்தால் பதினொன்றாவதாக குரும்பூர் குப்புசாமிக்கு கொடுப்பது கஷ்டம்.

இயல் விருது மேல் விமர்சனங்களை வைத்த ஜெயமோகனுக்கு இன்று இயல் விருது கொடுக்கப்பட்டு அவரும் ஏற்றுக் கொண்ட மாதிரி சாஹித்ய அகாடமி விருது மட்டும் நாளை உருப்பட வாய்ப்பே இல்லையா என்ன? அதற்கு இன்னும் சில நாஞ்சில்களையும், ஜோ டி க்ருஸ்களையும் கௌரவிக்க வேண்டும். ஜெயமோகன் அது எனக்கு கௌரவக் குறைச்சல் என்று சொன்னால் அது அவருக்குக் கிடைப்பது கஷ்டம். சாஹித்ய அகாடமி உருப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

குறிப்பு: நான் இந்தத் தளத்தில் politically correct ஆக இருக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. ஜெயமோகன் என்னை விடவும் மோசம். 🙂 இருந்தாலும் அவர் குறிப்பிட்ட நபர் – “அவர் பெற்ற விருது எனக்கும் கொடுக்கப்படுவது எனக்கு அவமானம்” யாரென்று அவர் அனுமதி இல்லாமல் வெளியிடுவதற்கில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டி: சாஹித்ய அகாடமி விருது, தான் விமர்சித்த இயல் விருதை இன்று ஏன் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஜெயமோகன் விளக்குகிறார்.

வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள்

venmurasu_release_function

நண்பர் செந்தில்குமார் தேவன் வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து அனுப்பலாமே என்று கேட்கும்வரை எனக்காகத் தோன்றவே இல்லை. என்னையும் என் மகாபாரதப் பித்தையும் ஜெயமோகனுக்கு ஓரளவு தெரியும், இந்த வரிசையை மிகவும் ரசித்துப் படித்திருப்பேன், படிப்பேன், இது தொடர வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புவேன், ஒவ்வொரு நாளும் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் என்பதை எல்லாம் அவர் நன்றாகவே அறிவார். இதில் வெளி உலகத்துக்காக ஒரு வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டுமா, ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு என்று கொஞ்சம் யோசித்தேன். வாழ்த்து அவர் பூரித்துப் போய்விடுவார் என்பதற்காக அல்ல, என் மன நிறைவை வெளிப்படுத்த என்று புரிந்த அடுத்த கணம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

மகாபாரதமே உலகின் ஆகச் சிறந்த காவியம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மை மனிதர்களால், ஆனால் அசாதாரண மனிதர்களால் நிறைந்தது, அந்த மனிதர்கள் முன் எப்போது இருக்கும் இரண்டு வழிகள், அவர்கள் தேர்வுகள் அந்தப் பாத்திரங்களை என் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி பல வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது இறந்து போன என் பாட்டியின் மடியில் அமர்ந்து பீமனைப் பற்றி கதை கேட்டதே இன்னும் மறக்கவில்லை. பீமனும் கர்ணனும் சகுனியும் துரோணரும் பூரிஸ்ரவசும் பகதத்தனும் கடோத்கஜனும் எனக்கு அண்டை வீட்டு மனிதர்கள் மாதிரிதான், அடிக்கடி அந்தப் பக்கம் போய் வருவேன்.

மகாபாரதத்திற்கு சிறந்த மறுவாசிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் அவற்றுள் பல பாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையை எடுத்துக் கொண்டு விரிக்கின்றன. (காண்டேகரின் யயாதி, எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி). பாரதத்தின் மொத்தக் கதையையும் பேச முற்படுபவையும் தங்களை ஒரு கோணத்தில் குறுக்கிக் கொள்கின்றன. (பர்வாவின் யதார்த்தச் சித்தரிப்பு, ரெண்டாமூழமில் பீமனின் கோணம், யுகாந்தரில் ஐராவதி கார்வேயின் சில பல கேள்விகள்). பாரதத்தின் அகண்ட வீச்சு பெரும் எழுத்தாளர்களைக் கூட பயமுறுத்தி இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வாழ்நாளும் ஒரே தளத்தில் கழிந்துவிடுமோ என்ற பயம் காவியங்கள் படைக்கும் திறம் படைத்தவர்களைக் கூட மகாபாரதத்தின் முழுமையான மறுவாசிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்திருக்க வேண்டும்.

மேலும் ஜீனியஸ் எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு காவியத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சுலபமல்ல. புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ இதை முன்னெடுக்க முடியாது. அவர்களால் இதன் ஒரு (சிறு) பகுதியை இலக்கியம் ஆக்க முடியலாம். புதுமைப்பித்தன் செய்தும் இருக்கிறார். (சாப விமோசனம்) ஆனால் முழு பாரதத்தின் மறுவாசிப்பு என்பதற்கு வேறு மாதிரியான mindset வேண்டும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் எழுதும் திறம் வேண்டும்!

jeyamohanஜெயமோகன் தன் வாழ்வின் சரியான நேரத்தில் சரியான தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஷ்ணுபுரத்தையே இது வரை வந்த தமிழ் நாவல்களில் சிறந்ததாகக் கருதுகிறேன். இந்த முயற்சி அதையும் விஞ்சும் அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் தளராத உற்சாகமும் சோர்வடையாத மனமும் அருளி இந்த முயற்சி பாரதத்துக்கும் ஜெய்மோகனுக்கும் பெருவெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று – பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என்று கம்பன் தன்னைப் பற்றீ சொல்லிக் கொண்டானாம். பாரதமும் பாற்கடல்தான், ஜெயமோகனாலும் கரைத்து குடித்துவிட முடியாது. உதாரணத்துக்கு ஜெயமோகன மகாபாரதத்தில் ஒரு சின்ன “முரண்பாடு”; துருபதனின் வீழ்ச்சியை கண்டதும் எழும் துரோணரின் புன்னகை அர்ஜுனனின் மனதில் இருக்கும் பீடத்திலிருந்து துரோணரை இறக்கிவிடுகிறது. ஆனால் கர்ணன் அவரது குருகுலத்தில் அவமதிக்கப்படும்போதோ, அல்லது ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்படும்போதோ அர்ஜுனனுக்கு அவரிடமோ, பீமனிடமோ, எவரிடமும் மனவிலக்கம் ஏற்படுவதில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், வெண்முரசு பக்கம்

பித்து

பக் குங்குரு பாந்து மீரா நாச்சி ரே என்று தொடங்கும் ஒரு மீரா பஜன் உண்டு. அதைக் கேட்கும்போதெல்லாம் இப்படி ஒரு பித்துப் பிடித்த நிலை எப்படி உருவாகிறது என்று மனதுக்குள் ஒரு இழை ஓடிக் கொண்டே இருக்கும்.

விஷ் கா ப்யாலா ராணாஜி நே பேஜா பீவத் மீரா ஹாஜி ரே! என்று எப்படி வாழ முடிந்தது? கண்ணனைக் கோவிலில் கும்பிட்டால் என்ன அரண்மனையில் வணங்கினால் என்ன? விஷத்தை அருந்தவும் தயார், ஆனால் கண்ணன் விக்ரகம் முன்னால் பாடாமல் இருக்க மாட்டேன் என்று என்ன ஒரு அசட்டுப் பிடிவாதம்? அப்பா, அம்மா, கணவன், குடும்பம் எதுவும் வேண்டாம் என்று இது என்ன பித்து நிலை? எதைத் தேடினாள்? என்ன கிடைத்தது? எனக்கு கொஞ்சமும் புரிவதில்லை. புரியாத விஷயத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளக் கூடாது என்று இத்தனை எளிமையாக தன் உறுதியை வெளிப்படுத்தும் நயத்தை, மெட்டின் இனிமையை, எம்.எஸ்ஸின் குரலை ரசித்துவிட்டு நகர்ந்துவிடத்தான் முயற்சி செய்கிறேன், ஆனாலும் சில சமயம் மண்டை காய்ந்து போகிறது.

andalஅதையும் மிஞ்சும் கிறுக்குத்தனம் நம்மூர் ஆண்டாளிடம்தான்.

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று
உன்னித்தெழுந்த என் தடமுலைகள்
மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் காண் மன்மதனே!

என்றெல்லாம் ஒரு பெண்ணுக்குத் தோன்றுமா? கண்ணன் கர்ப்பக்கிரகத்திலிருந்து இறங்கி வந்து தன்னை மணப்பான் என்று உண்மையிலேயே அந்தப் பெண் நினைத்திருந்தாளா? ஏதாவது hallucinatory நோயா? பெரியாழ்வார் ஏதோ கண்ணனைக் குழந்தையாக நினைத்து நாலு பாட்டு பாடினேன், என் பெண் இப்படி கிறுக்காகிவிட்டாளே என்று துக்கித்திருக்க மாட்டாரா? கண்ணனை சபித்திருக்க மாட்டாரா? தன் பெண் காலத்தால் அழியாத கவிதை எழுதி இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியில் கொஞ்சம் துக்கம் குறைந்திருக்குமா?

thulukka_nacchiyarமீராவுக்காவது வழிபடும் தெய்வம், நீண்ட பாரம்பரியம் என்று நிறைய இருக்கிறது. ஆண்டாள் கண்ணனை மணக்க வேண்டும் என்று வெறியோடு இருந்திருக்கிறாள். ஆனால் ஒரு விக்ரகத்தை – பொம்மையை – இழக்க முடியாமல் ரங்கநாதர் பின்னால் அலைந்த துலுக்க நாச்சியாரை எப்படிப் புரிந்து கொள்வது?

எனக்கு தர்க்க ரீதியாக சிந்திப்பதுதான் இயல்பாக வருகிறது. இது மாதிரி உணரும், இது போன்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் அதிருஷ்டம் எனக்கில்லை. என் சிறு வயதில் என் அம்மா கோவில், சாமி என்று மணிக்கணக்காக விக்ரகத்தைப் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பாள். அதனால் சாமி, பூஜை என்று அலையும் சில மாமா மாமிகளை பார்த்திருக்கிறேன். நடிக்கிறார்கள் என்றுதான் எனக்குத் தோன்றியது. வெளியே சொன்னால் அம்மா சோறு போடமாட்டாள் என்று கம்மென்று இருப்பேன். கண்ணன் என் தெய்வம், கண்ணன் என் காதலன், கண்ணன் என் விளையாட்டு பொம்மை என்ற எண்ணங்களிலேயே பித்துப் பிடித்துப் போகிறவர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. எனக்குப் பிடிபடுவதெல்லாம் ஓவியம் வரைய வேண்டுமென்று தன் 40 வருஷ வாழ்க்கையை விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கும் ஸ்ட்ரிக்லாண்ட் வரைதான்.

jeyamohanஆனால் ஜெயமோகன் தற்போது எழுதி வரும் மகாபாரதத் தொடர்நீலம் – இது மாதிரி பித்து நிலையை கொஞ்சம் புரிய வைக்கிறது. நீருக்கு வெளியே கொஞ்சம் நீட்டிக் கொண்டிருக்கும் பாறையைப் போல. எனக்கு பிடிபடுவது மேலே தெரியும் சின்ன இடம்தான். ஆனால் கீழே பூதாகாரமான பாறை இருக்கிறது என்ற பிரக்ஞையாவது இருக்கிறது. ராதையின் பாத்திரப் படைப்பு, பர்சானபுரியின் பிச்சி என்ற பட்டம் அற்புதமாக இருக்கிறது.

இத்தனைக்கும் இது வரையில் வந்தவற்றில் நீலம் மட்டுமே எனக்கு கொஞ்சம் சுமாரான பகுதி. எனக்கு அரைகுறையாகவே பிடிபடும் இந்தப் பித்து நிலை என்னை இந்தப் பகுதியோடு முழுமையாக ஒட்டவிடாமல் செய்கிறது. முன்னால் வந்த வண்ணக்கடல், மழைப்பாடல், வெண்முரசு எல்லாவற்றிலும் நான் முழுகிப் போயிருக்கிறேன். பீஷ்மரும் துரோணரும் பீமனும் சகுனியும் எனக்கு எப்போதுமே நான் அடிக்கடி போக முடியும் உலகத்தின் மனிதர்கள். அவர்களை இன்னும் அருகில் பார்த்தது போல இருந்தது. இந்தக் கண்ணனோ எனக்கு அந்நியமானவன். எல்லாரையும் கஞ்சா அடித்தது போன்ற ஒரு நிலையில் ஆழ்த்துகிறான். ஜெயமோகன் கண்ணனுக்கும் எனக்கும் உள்ள தூரத்தை அதிகரித்திருக்கிறார்.

வண்ணக்கடலும் மழைப்பாடலும் வெண்முரசும் சிறந்த படைப்புகள்தான். ஆனால் யயாதியும் ரெண்டாமூழமும் பர்வாவும் அதே ரேஞ்சில் உள்ள படைப்புகள். நீலம் மாதிரி ஒரு படைப்பைப் பார்ப்பதரிது. தனித்துவம் நிறைந்த படைப்பு. (unique) என்னை மாதிரி ஆட்கள் கவித்துவமான உரைநடை என்று சொல்வார்கள். கவிதைகளைப் புரிந்து கொள்பவர்கள் உரைநடையில் எழுதப்படும் கவிதை என்பார்கள் என்று நினைக்கிறேன். கவிதைக்கும் எனக்கு ரொம்ப தூரம், அதனால்தான் என்னால் முழுதாக ஒன்ற முடியவில்லையோ என்னவோ. ஒன்ற முடிகிறதோ இல்லையோ, தவற விடாதீர்கள், கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள், ஜெயமோகன் பக்கம்

ஜெயமோகனின் “கொற்றவை”

Visuஎன் பதிவுகளைப் பற்றி எனக்கு ஒரு மனக்குறை உண்டு. பல வேறு காரணங்களால் (நேரக்குறை, வாசிப்பு அனுபவத்தை அடுத்தவருக்கு உணர்த்த முடியாது என்ற முடிவு…) என்னால் பொதுவாக புத்தக அறிமுகம் என்ற நிலையைத் தாண்ட முடிவதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால் நான் பொதுவாக அகலமாக உழுகிறேன். ஆழமாக உழ ஆளில்லை என்பதுதான் உண்மை நிலை.

அந்த மனக்குறையை பொதுவாக விசுவின் பதிவுகள் தீர்த்து வைக்கின்றன. விசுவின் பதிவுகள் பொதுவாக செறிவானவை, நல்ல ஆழமாகவே உழுகிறார். விஷ்ணுபுரத்தைப் பற்றி இன்னும் நினைவு கூரக் கூடிய பதிவுகளை எழுதினார், இப்போது கொற்றவைக்கு வந்திருக்கிறார். ஓவர் டு விசு!

jeyamohanமுதல் முறை கொற்றவையை இரண்டு வருடங்களுக்கு முன்பு படித்தேன். அபாரமான மொழி. முதல் வாசிப்பில் மொழியின் அழகை தாண்ட முடியவில்லை. நிறைய புதிய சொற்கள், ஒலி அமைதியுடன் கூடிய அற்புதமான வரிகள். கொற்றவையை ஒரே மூச்சில் தொடர்ந்து படிப்பது, ஒரு பெர்ஃப்யூம் கடைக்குள் நுழைந்து, எல்லா வாசனை திரவியங்களையும் சேர்த்து நுகர்வது போல. கிறங்கடிக்கும். திகட்டத் துவங்கும். மொழியில் மயங்கி பக்கங்களுக்கிடையில் வேறுபாடு உணர முடியாமல் போகும். பெர்ஃப்யூம் கடைகளில் வெவ்வேறு திரவியங்களுக்கிடையே வேறுபாடு உணர காபி கொட்டைகள் நிறைந்த குப்பி ஒன்றை வைத்திருப்பார்கள். இடைஇடையே காபி குப்பியை நுகர்ந்து, அதன் கசப்பு மணம் நாசியில் ஏறிய பின், மீண்டும் அடுத்த வாசனை திரவியத்தை நுகரலாம். நாசி தெளிவாக புதிய வாசனையை உணரும். அது போல, கொற்றவை படிக்கும்போது, சூடிய பூ சூடற்க தொகுதியிலிருந்து ஒரு கதை படிப்பேன். நாஞ்சில் கதையின் கசப்பு ஏறிய பின், மீண்டும் தித்திக்கும் கொற்றவை. இரண்டு மாதங்களில் கொற்றவையை ஒரு முறை படிக்க முடிந்தது. அப்பொழுதே எழுதத் தோன்றினாலும், சிலப்பதிகாரம் படித்ததில்லை. இப்போது, சிலப்பதிகாரத்தையும், மீண்டும் கொற்றவையை இரு முறை வாசித்தபின் கொற்றவை குறித்து எழுத முடியுமென்று தோன்றுகிறது.

kannagiகடந்த ஐம்பது ஆண்டுகளில் பல இந்திய மொழிகளில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்திருக்கும்போது, தமிழ் நவீனத்துவர்கள், சிலப்பதிகாரத்தையோ, மணிமேகலையையோ ஏன் மறுஆக்கம் செய்யவில்லை? குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்த பொறுப்பற்ற கணவன், கற்பினால் தளையிடப்பட்ட பெண்கள், போலி என்கவுண்டர் போல நிகழும் கோவலன் கொலை என்று பல வகையிலும் சிலம்பு ஒரு துன்பியல் கதை. முடிவை சிறிது மாற்றி, கதையை சமகாலத்தில் (1970களில்) நடப்பதுபோல எழுதினாலே அது ஒரு நவீனத்துவ நாவல்தான். பழமை மீதிருந்த உதாசீனம், ‘தமிழியர்கள்’ பழைய இலக்கியங்களை ஆக்ரமித்தது மற்றும் திராவிட இயக்கத்தினரின் jingoism போன்றவை நவீனத்துவர்களுக்கு ஒரு வகை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். மறைந்த எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்வஸ்[1], லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் பெருந்துயரம் தங்களுக்கென்று தங்கள் மரபிலிருந்து எடுத்துப் பயன்படுத்த படிமங்களே எதுவும் இல்லை, தான் அதை உருவாக்க வேண்டியிருந்தது என்கிறார். நவீனத்துவ தமிழ் நாவல்களை படிப்பதில் உள்ள ஆகப் பெரிய சோகம் தமிழ் படிமங்களை அவை பயன்படுத்தவில்லை என்பதுதான். நவீனத் தமிழ் இலக்கியத்தின் தொடக்கமான புதுமைப்பித்தனிடமிருந்து அவருடைய யதார்த்தவாதத்தையும், நக்கல் நையாண்டி நடையையும் நவீனத்துவர்கள் பெற்றுக்கொண்டனர். அவருடைய கடைசி காலத்து படைப்புகளான கயிற்றரவு, ‘கபாடபுரம்’ போன்றவற்றை நவீனத்துவம் கண்டுகொள்ளவில்லை. கபாடபுரம் சிறுகதையின் சாரமும் கொற்றவையின் மையமும் ஒன்றுதான். [அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகி, கபாடபுரத்தை கடல் கொள்கிறது.] கபாடபுரம் யதார்த்த உலகில் துவங்கி, ஆசிரியரின் நக்கல் கலந்த குரல் கதை முழுக்க ஓங்கி ஒலித்து, கடைசி சில பத்திகளில் காலாதீதத்தில் சென்று முடிவடைகிறது. கொற்றவை நேரெதிர். முற்றிலும் யதார்த்தம் கலவாத கனவு போன்ற நடையில், காலாதீதத்தில் துவங்கி, கடைசி சில பக்கங்களில் ஆசிரியரின் குரலுடன் தற்காலத்தில் முடிவடைகிறது. புதுமைப்பித்தன் சைவ பின்புலத்தில் [எரிமலை – நெற்றிக்கண்ணை திறக்கும் ஈசன்] தமிழ் மரபை ஆராயும்போது, ஜெயமோகன் சாக்த (தாய் தெய்வ) மரபில் [பொங்கும் கடல் – வெறிக்கூத்தாடும் கொற்றவை] கொற்றவையை எழுதியுள்ளார். [கன்யாகுமரியை வெறிக்கூத்தாடும் கொற்றவையின் வடிவில், பொங்கிவந்த கடலின் உருவகமாக ஜெ. எழுதியிருக்கும்போது, ‘ஆழி சூழ் உலகில்ஜோ டி க்ரூஸ், குமரி அன்னையை, கிறித்தவ விழுமியத்தின் சாரமான தியாகத்திற்கு உருவகிக்கிறார். பொங்கி வரும் கடலிலிருந்து தன் குடியை காக்க, தன்னை பலியிடுகிறாள் கெழுகடல் கரை நிற்கும் செல்வி.]

jeyamohan_kotravaiவிஷ்ணுபுரத்தைப் போலவே, கொற்றவையும் ‘கபாடபுர’த்திலிருந்து, சில தூண்டுதல்களை பெற்றிருந்தாலும், அதன் பெரும்பகுதி, சிலப்பதிகாரத்தின் மறுபுனைவு. சிலம்பின் சாரத்தை தக்க வைத்துகொண்டே, கதை மாந்தர்களையும், நிகழ்வுகளையும் மாற்றி எழுதியிருக்கிறார். உதாரணமாக, சிலம்பில் செங்குட்டுவன் வடமன்னர்களான கனகவிஜயரின் முடித்தலை நெரித்து, அவர்தம் கதிர்முடியில் பத்தினிக் கோட்டத்து கால்கோள் கற்களை ஏற்றிய வீரன். இனைபுணர் எகினத்து இளமயிர் செறித்த துணை அனைப்பள்ளியில் [இளங்கோ!! 🙂 :-)] காத்திருக்கும் வேண்மாளை காணச் செல்லும் காதலன். கொற்றவையிலோ, செங்குன்றத்தின் குறுமர் நிறுவிய கண்ணகி சிலையின் பதிட்டை விழாவிற்கு சென்று அச்சிலையை நீள்நேரம் நோக்கி, பின்பு செங்குன்றின் உச்சியில் படுத்து விரிவானை நோக்கியடி, மண்ணாளும் நெறி எது என்று வியக்கும் மன்னன். சமணத் துறவி கவுந்தி, கொற்றவையில் கோவலனுக்கு துறவியாகவும், கண்ணகிக்கு நீலி எனும் பேயாகவும் (உக்கிரதெய்வம்) வழித்துணையாக வருகிறாள். சிலம்பில், பழையன் குட்டுவன் பற்றி ஒரு வரி வருகிறது. கொற்றவையிலோ, அவன் முக்கியமான எதிர்நிலை பாத்திரம். சிலம்பிலுள்ள மிகச் சிறிய நிகழ்வுகளைக் கூட மாற்றுகிறார் ஜெ. மாதவியிடமிருந்து திரும்பிவரும் கோவலனை, யாரென்று தெரியாமல் “காவலன் போலும்” என அறிவிக்கும் கண்ணகியின் சேடி, கொற்றவையில் “ஆ கள்வன்!” என்கிறாள். சொல்லிக் கொண்டே போகலாம். சில முக்கியமானவற்றை கீழே தொகுத்துள்ளேன்.

மூன்று வாவிகள்:
சிலப்பதிகாரத்தில் பாலை வழியே செல்லும் கண்ணகி, கோவலன், கவுந்தி மூவரும் மாடல மறையவன் என்ற அந்தனனிடம் மதுரைக்கு வழி கேட்கிறார்கள். அவன், மூன்று வழிகளை சொல்லி, அம்மூன்றில், இடைப்பட்ட வழியில் மாலிருஞ்சோலை வரும். அங்கு புண்ணிய சரவணம், பவகாரணம், இட்டசித்தி என்ற மூன்று வாவிகள் உள்ளன; மூன்று வாவிகளையும் காக்கும் தெய்வங்களின் அனுமதி பெற்ற பின், அவற்றில் மூழ்கினால், முறையே தொன்னூலாகிய ஐந்திரத்தை கற்ற பலன், முன்வினை/வருவினை/நிகழ்வினை அறிதல் மற்றும் வேண்டியது கிடைக்கும் என்கிறான். இம்மூன்றிலும் மூழ்காவிட்டாலும், மாலின் திருவடி தொழுதால், இம்மூன்றில் மூழ்கிய பலனை ஒருங்கே அடையலாம் என்கிறான். இன்மூன்று குளங்களும், “இதைச் செய்தால் இது கிடைக்கும்” என்ற அடைப்படையில் சடங்காகவும், அதைவிட பெரியது சரணாகதி (பக்தி) என்ற அளவிலேயே வருகிறது. சடங்கையும், பக்தியையும் ஏற்காத சமணத்துறவியாகிய கவுந்தி, மாடல மறையவனிடம் வாவிகளில் மூழ்க வேண்டியதில்லை என்று வாதிடுகிறார்.

kannagi_kovalan_kavunthi_adigalகொற்றவையில் கண்ணகி, கோவலன், கவுந்தி வடிவில் வழித்துணையாக வரும் நீலியும் மாடல மறையவனிடம் வழி கேட்கிறார்கள். அவன் வழிகளையும், வாவிகளையும் விவரிக்கக் கேட்டு, கோவலனுக்கு, அம்மூன்று வாவிகளிலும் மூழ்கி வாழ்க்கையை அறியும் ஆவல் ஏற்படுகிறது. கோவலனை, அவனுடைய கனவின் மூலம் இம்மூன்று வழிகளில் அழைத்துச் செல்கிறாள் நீலி. அறிவருள் வாவியில் (புண்ணிய சரவணம்) மூழ்கும் கோவலனுக்கு, வாவியின் தேவதையான நலமருள் நங்கை, வாவியின் மூன்று படிகளை விவரிக்கிறது. மூன்று படிகளையும் கடந்து சென்றாலே, மெய்மையின் ஊற்றை அறிய முடியும் என்றும், ஆனால் மூன்று படிகளையும் கடந்தவர் எவருமில்லை என்கிறது. தன் அறிதலைப்பற்றி, முதற்படியில் நன்மையையும், இரண்டாவது படியில் தீமையயையும் கடந்து, இவை இரண்டும் இல்லாத, காலம் உறைந்து நிற்கும் மூன்றாவது படியை கடக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து திரும்புகிறான் கோவலன். வானாறு வீழ்ந்தும் நிறையாத சுனையை கனவில் கானும் மாயைக்கு, சித்தார்த்தன் பிறக்கிறான். மனைவி, குழந்தைகள் பிறந்த பின்னரும், சித்தார்த்தனின் கண்களில் துயர் எஞ்சி இருக்கிறது. மனையை, அரசை துறந்து, கதவம் பல திறந்து, புதவம் பல புகுந்து, அறிவின் வழியில் பயனித்த சித்தார்த்தன், சூழந்து, அகன்று, ஆழ்ந்து, உயர்ந்த வழியின் முடிவில் உள்ளது பெரும் பாழ் என்று அறிகிறான். அறிவின் வழியில் செல்லும் நவீனத்துவம் சென்றடைந்த பெரும் பாழ். பிறப்பறு வாவியில் (பவகாரணம்) மூழ்கி தன் முன்வினையை அறியும் கோவலன், எங்கோ தன்னைப்போலவே ஒருவனை காண்கிறான். கலிங்க மன்னர் குலம் கபிலபுரம், சிங்கபுரம் என இரண்டாக பிரிந்து, உட்பூசலிடுகிறது. கபிலபுரத்து அமைச்சன் மகன் சங்கமன், தன் இல்லாள் நீலியுடன் நகர் நீங்கி, வாழ்வுக்காக சோழ நாட்டு புகாருக்கு செல்லும் வழியில், சிங்கபுரத்தில், மனைவியின் நகைகளை விற்கும்போது, தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். தன் வருவினையை அறிவதற்காக மீண்டும் மூழ்கும் கோவலன், எதிர்காலத்தில், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலில் சன்னதம் வந்து வெறியாடும் பெண்ணின் காலடியில் சிறுகல்லாக தன்னை காண்கிறான். வாவியின் ஓவியப் பாவை வருத்தத்துடன் பார்க்க, நிகழ்வினையை அறியாமலே வாவியிலிருந்து வெளியேறுகிறான். வேண்டியது கிடைக்கும் விருப்பறு வாவியில், எதுவும் வேண்டாமலே எழுந்துவிடுகிறான் கோவலன்.

ilango_adigalகோவலனின் கனவில் வரும் வாவிகள் இளங்கோவின் வாழ்வில் வரும் பகுதிகளாகின்றன. அரசு துறந்து, குணநாட்டில் சாக்கிய நெறியேற்று துறவறம் பூண்ட இளங்கோ, பற்பல நூல்களையும், பல மொழிகளையும் கற்று, மாணவர்களுக்கு ஆலமரத்தடியில் அமர்ந்து போதிக்கிறார். மதுரை கூலவாணிகன் சாத்தனின் மூலம், கண்ணகி கதை கேட்டு, அறியாப் பெண்ணை அறிவமர் செல்வியாக ஆக்கிய பெருவல்லமையை வியக்கிறார். வாவிகளில் வரும் ஓவியப்பாவை போல, மேற்குமலைக் குகையில் நிலவொளியில் ஒளிரும் இடச்சிறுகால்விரல் மணி அணிந்த ஓவியம், இளங்கோவை, கண்ணகியை பற்றி அறிய புறப்படத் தூண்டுகிறது. தமிழ் நிலமெங்கும் அலையும் இளங்கோவிற்கு, அறிவருள் வாவியில் வழிகாட்டும் நலமருள் நங்கையைப் போல, மணிமேகலை தன்னறம் உணர்த்துகிறார். அதன் பின் பௌத்தம் வகுத்த அறிவின் பாதையிலிருந்து விலகி, கன்னியாகுமரி அன்னையின் முன், விரிகடலே அன்னையாக சுடர, தன்னறம் உணர்ந்து, கண்ணகியின் கதையை காலத்தில் அழியாத காப்பியமாக இயற்றி, பின்பு சபரணமலையில் ஐய்யனாக நிறைவடைகிறார்.

seermaiமூன்று வாவிகளும் படிமங்களாக ஞானம், தியானம், கற்பனை என இந்து மரபு குறிக்கும் அறிதலின் மூன்று வழிகளை சுட்டுகின்றது. இம்முன்றிலும் பயனித்து வாழ்வில் நிறைவடைந்தவராகிறார் இளங்கோ. வைதீகத்தைவிட அவைதீக மரபுகளை பலபடிகள் தூக்கலாகவே ஆதரிக்கும் ஜெ. தன் நாவல்களில், அறிவின்/ஞானத்தின் எல்லைகளை எப்போதும் வரையறை செய்ய தவறுவதில்லை. தமிழ் நாவல்களில் இந்திய தத்துவங்கள் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்திய தத்துவ மரபுகளை தமிழ் நாவல்களில் இணைத்தது, ஜெ.வுடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று. [அரவிந்த் எழுதிய சீர்மை நாவலும் இம்மூன்று வழிகளையும் பற்றி பேசுகிறது. பக்தியை முழுமுற்றாக நிராகரிக்கும் கென் ஞானத்திலும், தியானத்திலும் அவன் தேடிய முழுமையை அடைய முடியாதபோது, கேன்சரால் பாதிக்கப்பட்ட த்ரேயாவிற்கு கற்பனையில் (ஓவியக்கலையில்) முழுமை கை கூடுகிறது. அதுவும் மேற்கத்திய தத்துவம் சுட்டும் முழுமுதல் சீர்மை இல்லாமல், கீழை தத்துவம் சுட்டும் சிறிது குறைபாடு உடைய முழுமையில். அவள் அடைந்த முழுமையை சொற்களில் நூலாக்கி, அது ‘நிறுவனப்படுத்தப்படும்போது’ அவன் மனம் கனக்கிறது. காட்சிப்படுத்துதல், தத்துவத்தை புனைவில் பொருத்துதல் என சீர்மை எனக்கு மிகப் பிடித்திருந்தது. விரிவாக எழுத வேண்டும்.]

காப்பியத்தின் மையம்:
kannagi_paandianதென்னில மக்களின் முதல் தெய்வம் கன்னி. தென்திசையும், மாகடலும் கருமையாகவும், மரணமாகவும் தொன்மக்களுக்கு அச்சமூட்டுகிறது. இருளையும், ஆழியையும் கண்டு அஞ்சாத முக்கண்ணனும், ஆழியானும் தமிழ் நிலத்தின் தெய்வங்களாகிறார்கள். வெண்கல யுகத்தில் இருக்கும் தென்நிலத்திற்கு, இரும்பை அறிமுகப்படுத்தும் குறுமுனி, குமரி முனையில் தெய்வங்களின் அன்னையான கன்னி அன்னைக்கு சிலையெடுத்து, அன்னையின் வலச்சிலம்பு மறவர்களுக்கும், இடச்சிலம்பு வணிகர்களுக்கும், வலதுகால் நீள்விரல் மணி உழவர்களுக்கும், இடதுகால் நீள்விரல்மணி பரதவர்களுக்கும், வலச்சிறுவிரல் மணி இடையர்களுக்கும், இடச்சிறுவிரல் மணி மலைவேடர்களுக்கும் என தமிழ்குடிகளே அன்னையின் உடலென வகுத்ததாகவும், கன்னியின் ஆட்சியில் தென்நிலம் வாழ்ந்ததாகவும், பின்பு தென்நிலம் பலமுறை கடற்கோளால் அழிய, தொல்குலங்கள் புதிய நிலங்களை நோக்கி பயனித்ததாகவும், புகார் நகர பெருவணிகன் மாநாய்க்கன் இல்லத்தில் முதுபாணன் பாடுகிறார். கண்ணை அன்னை காக்கும் புகார் நகர வணிகர் குடியில் மாநாய்கனின் மகளாக கண்ணகியும், கருங்கண் கொற்றவை காக்கும் பாலை நிலத்து மறவர் குல தலைவன் பழையன் குட்டுவனின் மகளாக வேல்நெடுங்கண்ணியும் பிறக்கிறார்கள். குலதெய்வங்களின் அடையாளமாக கண்ணகிக்கு வலச்சிலம்பும், நெடுங்கண்ணிக்கு இடச்சிலம்பும் அனிவிக்கப்பட்டு அவரவர் ஊர்களில் சிலம்பணி விழாக்கள் நடைபெறுகிறது. பின்பு கண்ணகி கோவலனையும், நெடுங்கண்ணி பாண்டியனையும் மணக்கிறார்கள். காலம் உருண்டோடுகிறது. பட்டத்தரசியான தன் மகள் வயிற்று வாரிசு மூலம், மதுரையை மீண்டும் தன்குடி ஆளவேண்டும் என்ற கனவில் இருக்கிறார் மறக்குலத் தலைவன் பழையன் குட்டுவன். ஊர்தோறும் மறவர் படை, வணிகர்களையும், உமணர்களையும் கொள்ளையிடுகின்றனர்; வேளிர்களின் விதைநெல்லை கவர்கிறார்கள்; மல்லர்களை அடிமைகளாக வடவணிகர்களுக்கு விற்கிறார்கள். பெண்களை கவர்ந்து செல்கிறார்கள். நாடு முழுவதும் அறம் வழுவி, குடிப்பூசல்கள் எழுகின்றது. பரந்த நிலத்தில், அரசின் செங்கோல் எல்லா இடங்களிலும் செல்லமுடியாது, பூசல்கள் எழத்தான் செய்யும் என்கிறான் பாண்டியன். மன்னனின் கோல், அறவோர் நூல், மறையோர் சொல் செல்லா இடங்களிலும் செல்லும் ஒன்றுள்ளது, அது அறம் என்கிறார் அமைச்சர். அமைச்சரின் நற்சொற்களை ஏற்காத பாண்டியன், குடிகளின் குறைகளை களையாமல் கேளிக்கைகளில் ஈடுபடுகிறான். இவ்வாறு, மதுரையே ஒரு கொந்தளிப்பான சூழலில் இருக்கும்போது, வாழ்வு தேடி கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வருகிறார்கள். தனக்கு எதிராக எழும் பிற குலத்தலைவர்களை சதிகள்மூலம் கொன்று, பிற குலங்களின்மேல் தன் குலத்தின் உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, பிற குடிகளிடம் இல்லாத, தன்குடி அடையாளமான, மந்தனச் சொற்கள் பதித்த சிலம்பைக் கொண்டு சிலம்பணி விழா எடுக்க திட்டமிடுகிறார் பழையன். எல்லா குடிகளுக்கும் அன்னையின் அணிகலன் குடியடையாளமாக உள்ளதாகவும், பழையனிடம் வலச்சிலம்பு இருப்பது போல, தமிழ் நிலத்தில் எங்கோ இடச்சிலம்பும் இருக்கும்மெனவும், அது வெளிப்படும்போது, குடிகளுக்கிடையே பெருமை சிறுமை இல்லை என அறிவீர்கள் என்கிறார்கள் பிறகுடித் தலைவர்கள். சிலம்பணி விழாவிற்கு முன் சிலம்பு திருடப்படுகிறது; கண்ணகியின் வலது சிலம்பை விற்க வந்த கோவலன் தவறாக குற்றம் சாட்டப்பட்டு கொலையாகிறான். அதுகேட்டு சன்னதம் கொண்டு எழுந்த கண்ணகி, எரிதழல் கொற்றவையாக மதுரை நகர் புகுகிறாள். கோவலனின் கொலை, மதுரையில் கலகம் வெடிக்க ஒரு நிமித்தமாகிறது. பெண்களும், வடவணிகர்களுக்கு அடிமைகளாக விற்க கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து தப்பிவந்த கடைசியர்களும் முன்னெடுக்க மதுரை தீக்கிரையாகிறது. கண்ணகியின் இடச்சிலம்பை கண்டு பாண்டியன் எல்லாக்குடிகளும் சமமானவையே, ஒன்றே, குடியாளும் அன்னையே அறமென்றுணர்ந்து உயிர் துறக்கிறான். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகிறது.

உரைசால் பத்தினிகளை உயர்ந்தோர் ஏத்தும் காவியமில்லை கொற்றவை. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறில் ஒரு கதை வருகிறது. விவேகானந்தரின் தாத்தா துர்கா சரணர், திருமணமாகி குழந்தை பெற்ற பின், இளமையிலே துறவறம் பூண்டு வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். பல வருடங்கள் கழித்து, சரணரின் மனைவி, காசியாத்திரை சென்று, தெய்வங்களை தரிசித்தபடியே செல்லும்போது, ஒருநாள் படிகளில் கால் இடறி மூர்ச்சித்து விழுந்து, ஒரு துறவியால் காக்கப்படுகிறார். மூர்ச்சை தெளிவித்த துறவி, துர்கா சரணர்! “மூர்சித்து விழுந்த மனைவியை காப்பாற்றி, தன் மனைவி என்று தெரிந்து வியப்பில் மூழ்கினார். இருப்பினும் சிறிது நேரத்தில் உணர்ச்சியை கட்டுப்படுத்திவிட்டு, “இதெல்லாம் மாயை” என்று முனுமுனுத்தபடியே அப்பால் போய்விட்டார். இதற்காக அவர் மனைவி கவலைப்படவில்லை. எதுவுமே நடவாதது போல எழுந்து, கோவிலுக்குள் சென்று, இறைவனை வலம் வரத் தொடங்கினார்” என்று எழுதுகிறார் அ.லெ. நடராஜன். மரபாக சொல்லப்படும் இது போன்ற கதை, இலக்கியமாகும்போது கொற்றவையின் மகதி கதை போல இருக்கும்.

மகதியிடம் கண்ணகி கேட்டாள் “பிறகு உங்கள் கணவனை கண்டீர்களா?”. “ஆம்” என்றாள் மகதி. “அவன் மூதிரவன் ஆகித் துவராடையும் கப்பரையுமாக இவ்வழி ஒரு நாள் வந்தான். வரகரிச் சோற்றை பிச்சையாக ஏற்று இரவில் படுத்தான். அன்றிரவு நான் படுத்த கற்படுக்கையருகே மறுநாள் மென்பூழி மீது அவன் பாதம் வந்து நின்று மீண்ட தடம் தெரிந்தது” என்றாள் மகதி. “அவனிடம் நீங்கள் ஏன் பேசவில்லை?” என்றாள் கண்ணகி. “துறப்பதற்கு வீடு விட்டிறங்க வேண்டியதில்லையே” என்றாள் முதுபார்ப்பினி.

madhavi_kovalanசிலம்பில், மாதவி பாடும் கானல்வரி பாடல்களை தவறாக பொருள்கொண்டு, அவள் வேறெவரையோ நினைத்து பாடுகிறாள் என ஐயுற்று, மாதவிடமிருந்து பிரிந்து கண்ணகியிடம் மீள்கிறான் கோவலன். கொற்றவையிலோ, மாதவியுடன் காமத்தில் திளைத்து, பெண் காமத்தின் ஊற்றுமுகம், குழந்தைக்கான விழைவென என அறிந்து, அதிர்ந்து, மாதவி கருவுற்றதை உணர்ந்துகொண்டபின், அவளிடமிருந்து விலகி, கண்ணகியிடம் மீள்கிறான்.[2] குலம் தந்த வான்பொருள் குன்றத்தை தொலைத்துவிட்டு வரும் கோவலனின் மேல் ஏற்படும் வெறுப்பை தன்னுள் மறைத்து, மரபு வகுத்தபடி பத்தினிகளுக்குரிய அருளும் விழிகளும், சொற்களுமாக அவனை ஆரத் தழுவி ஏற்றுக்கொள்கிறாள் கண்ணகி. பின்பு, ஐவகை நிலத்தில் பயனித்து, தமிழ் நிலமெங்கும் பெண்கள் படும் துயரை கண்டும், குலக்கதைகளாக நீலி சொல்லும் கதைகளை (செல்லி, வள்ளி, ஆதிமந்தி, யசோதரை..) கேட்டும் கண்ணகியின் குண இயல்பு மாறுகிறது. கற்பு, நெறி என சொற்களால் கட்டப்பட்டுள்ள சிறையை கண்டு கொள்கிறாள். ஒரு இனமே அடிமைப்பட்டு, அவ்வினத்தின் ஆண்கள் அடிமைகளாக விற்கப்படுவதைக் கண்டும் அவள் கலங்குவதில்லை; “நான் அக்களமர் குலபெண்டிரை எண்ணிச் சற்றே ஆறுதல் கொள்கிறேன். அவர்கள் தங்கள் ஆண்களை நம்பி வாழப்போவதில்லை. ஆகவே இவர்கள் விற்கப்படினும் அவர்கள் இழப்பது ஏதுமில்லை!” என்கிறாள். கற்பு வழுவியர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கொல்லப்படும் கன்னியரும், பெண்களும் அக்குலங்களின் தெய்வங்களாகிறார்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தாரை வானுறையும் தெய்வங்களில் வைக்கும் நம் மரபு, வையத்தில் வாழ்வெடுத்து வாழாது போனவர்களையும் தெய்வங்களாக்குகிறது. குலம்தோறும் ஆற்றியிருக்கும் பெண்களை கண்டு, அவர்கள் துயர் பாடும் தேவந்தியின் பாடலாக ஒலிக்கும்

முட்டுவேன்கொல்! தாக்குவேன்கொல்!
ஓரேன்யானும் ஓர்பெற்றி மேலிட்டு
ஆஅல் எனக் கூவுவேன்கொல்!
அலமரல் அசைவிளி அலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!

சங்கப்பாடல் மூலம், பெண்களின் துயர்பாடும் காவியமாகவே விரிகிறது கொற்றவை.

சிலப்பதிகாரத்தில் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுவதை விளக்க, கோவலன்-பரதன் கதை விவரிக்கப்படுகிறது. [நீலியின் நகைகளை விற்கும்போது, சங்கமனை அரசனிடம் தவறாக காட்டிக்கொடுக்கும் பரதன், இப்பிறவியில் கோவலனாக பிறந்து ஊழ்வினையால் மதுரையில் கொலையாகிறான்]. கொற்றவையில் சங்கமன்-நீலி போல கோவலன்-கண்ணகி வருகிறார்கள். ஊழ்வினை என்ற கருத்தை முன் வைக்கவில்லை ஆசிரியர். காலத்தின் சுழற்சியில் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மகதி-பார்ப்பனன் போல சித்தார்த்தன்-யசோதரை, கடலில் குதிக்கும் செல்லி போல மணிமேகலை, நீலி-சங்கமன் போல கண்ணகி-கோவலன், மீண்டும் மீண்டும் அழியும் மதுரை என காலத்தின் சுழற்சி மீண்டும் மீண்டும் சுட்டப்படுகிறது.

****

உலகின் பெரும்பான்மையான கலாச்சாரங்கள், தாங்களே உலகின் முதல் குடி என்றும், தங்களிடமிருந்தே பிற கலாச்சாரங்களும், மொழிகளும் தோன்றின என்கின்றன. இந்தியாவிற்குள் பல்வேறு காலகட்டங்களில் வந்த இனங்கள், பல நூற்றாண்டுகளாக அதிகாரத்திற்காகவும், வாழ்வாதரத்திற்காகவும் போரிட்டும், கலந்தும் வாழ்கின்றன. போர்களும், இனக்கலப்புகளும், மேல்-கீழ் அடுக்குகளும் தவிர்க்க முடியாதவையும் கூட. அதுபோல மேல்-கீழ் என்பதும் காலத்திற்கேற்ப மாறுபவையும்கூட. பெரும்பாலான தமிழ் மனங்களில் ‘லெமூரியா’, ‘ஆரிய படையெடுப்பு’ போன்றவை ஒரு நிறுவப்பட்ட உண்மையாக இருக்கிறது. கல்லூரி முடிக்கும்வரை எனக்கும் அது நிறுவப்பட்ட உண்மையே. தமிழகத்தைவிட்டு வெளியே சென்றது முதல் (வேலைக்காக பெங்களூருக்கு), அக்கருத்தில் மாற்றம் ஏற்பட்டது. கொற்றவையில் வரும் ‘நீர்’ பகுதி, கற்பனையிலும், மொழியிலும், தமிழில் எழுதப்பட்டுள்ளவற்றிலே சிறந்தது. ஆனால் கருத்தளவில் ‘ஆரிய படையெடுப்பை’ மனநிலையை நீடிக்கச்செய்யக்கூடியது. எனக்கு தனித்தமிழ் தேசியத்தில் உடன்பாடில்லை. ஆனால், தனித்தமிழ் தேசத்திற்கு ஒரு விவிலியம் எழுதினால், கொற்றவையின் “நீர்” பகுதியை அதன் ஆதியாகமமாக வைக்கலாம். [உலகின் மிக இளைய நாடான தெற்கு சூடானில் பல்வேறு இனக் குழுக்களுக்குள் நிகழும் உள்நாட்டுப்போரை கவனித்தாலே, ஆரிய-திராவிடம் இட்டுச் செல்லக் கூடிய முடிவை ஊகிக்கலாம். கண்முன்னே இலங்கை உதாரணமாக உள்ளது]. இருப்பினும், ஒரு புனைவில் என்ன எழுதவேண்டும் என்பது ஆசிரியருடைய முழுஉரிமை.

****

கொற்றவையும் விஷ்ணுபுரமும் :

சூலமும், சொல்லும், திகிரியும் தாங்கிய மூவர்க்கு ஆயினும்,
காலம் என்று ஒன்று உண்டம்மா

என்ற கம்ப ராமாயண வரிகள் விஷ்ணுபுரத்திற்கானது. இவ்வரிகளுடன் சேர்த்து,

பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு
கைத் தாங்கிய தருமமூர்த்தியும், அங்கையின்
நெல்லிபோல் அனைத்தும் நோக்கினும்
மங்கையர் மன நிலை உணர வல்லரோ?

என்பதும் கொற்றவைக்கான வரிகள்.

vishnupuram சுருக்கப்பட்ட வடிவம் கொற்றவையின் கடைசி பகுதியில் உள்ளது. விஷ்ணுபுர கோயில் போல கொடுங்கோளூர் மாமங்கலை ஆலயம் இருக்கிறது. அக்னிதத்தரின் சொல் விஷ்ணுபுரத்தை ஆள்வது போல, நெடுநாட்கள் கைவிடப்பட்டு கிடந்த ஆலயத்தை மீண்டும் கட்டிய சங்கரத்திருவடித்தானத்தின் சொல் மாமங்கலை ஆலயத்தை ஆள்வதாக சொல்கிறார் காலசூரி. முகமதியர் படையுடன் இனைந்து கடையர் மக்கள் விஷ்ணுபுரத்தை இடித்ததுபோல, டச்சுப் படையுடன் புலையர்கள் கொடுங்கோளூரை அழிக்கிறார்கள். பெருமூப்பன் சிலை விஷ்ணுவாகவும், ததாகதராகவும் ஆனது போல, குறுமர்களின் கன்னியன்னை மாமங்கலையாகவும், அறிவமர்செல்வியாகவும் ஆகிறாள்.

விஷ்ணுபுரத்தின் முதற்பகுயில் வரும் சங்கர்ஷணனின் காவிய அரங்கேற்றம், பாண்டியன், இரண்டாம் பகுதியில் அஜிதரின் ஞானசபை விவாத வெற்றிக்குப் பின் வரும் நிகழ்வுகள், அஜிதரின் மரணம் என விஷ்ணுபுரத்தில் அமைப்பை சார்ந்த எதுவும் உயர்வாக பேசப்படவில்லை. உயர்வாக சித்தரிக்கப்பட்ட சுடுகாட்டு சித்தன், குறத்தி நீலி போன்றோர் அமைப்பிற்கு வெளியே உள்ளவர்கள். ஒப்புநோக்க கொற்றவையில் கண்ணகி, சேரன் செங்குட்டுவன், இளங்கோ, சாத்தன், மணிமேகலை, தேவந்தி, நீலி என நிறைய நேர்நிலை கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். விஷ்ணுபுர ஞான சபையில் தன் பெருங்காவியத்தை அரங்கேற்றிய பின்னர், சங்கர்ஷணன் மனம் வெறுத்து விஷ்ணுபுரத்தை விட்டு விலகிச் செல்கிறான். தான் இயற்றிய காவியமே பயனற்றது என நினைக்கிறான். கொற்றவையில், இளங்கோ சிலப்பதிகாரத்தை இயற்றி தன் சீடனிடம் தந்து, சேரனின் அவையில் அரங்கேற்றச் சொன்ன பின்னர், சபரண மலையில் உண்ணாநோன்பு நோற்று உயிர் துறக்கிறார். விஷ்ணுபுரத்தை ஒப்பிட்டால், கொற்றவையில் “அமைப்பு” ஓரளவிற்கு நேர்நிலையாக சித்தரிப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு விஷ்ணுபுரத்தில் அஜிதர் மரணத்தையும், கொற்றவையில் கண்ணகி மரணத்தையும் ஒப்பிடலாம்.

ஞானத்தின் படிகளில் ஏறி, விஷ்ணுபுரத்தை வென்ற அஜிதர், தன் இறுதி தருணத்தில், ஒரு குவளை நீருக்கில்லாமல், உயிர் துறக்கிறார். அவருடைய அமைப்பினரே அவர் மறைவை, ஒரு மாதம் கழித்து வரும் சித்திரா பௌர்ணமியன்று அறிவித்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர். ஞானத்தை தேடிவந்த நரோபா பயந்து ஓடுகிறான். வெண்குதிரையின் மீதேறி சொர்க்கம் புகுந்த ஆழ்வார் கதையும் அவ்வாறே. அவர் மறைந்தவுடன், அவரிடத்தை நிரப்ப வேறொரு ஆழ்வார் உருவாக்கப்படுகிறார். ஞானமும், பக்தியும் அமைப்பிற்குள் சிறைப்படுத்தப்படுகின்றன.

கண்ணகி செங்குன்றத்தில் மேழ மாத முழுநிலவு நாளில், பொன்மலர் பூத்த வேங்கை மரத்தடியில் உள்ள கற்பாறையில் கண் மூடியமர்ந்து உயிர் துறக்கிறாள். ஒளிரும் வானில், கார் திரண்டு வெண்ணிற யானை என உருக்கொண்டு மெல்ல அசைந்து வர, அதன்மீது சுடரொளி சிதற நிலவு ஏறியமர்ந்து கொள்கிறது. சேரன், அவன் அமைச்சர்கள், வணிகர்கள் என அனைவரும் சேர்ந்து கண்ணகிக்கு கோயில் கட்டுவதன் மூலம், கண்ணகி நிறுவனப்படுத்தப்படுகிறாள். சைவம், வைணவம், சாக்கியம், சமணம் என நான்கு பெருமதங்களும் மங்கலமடந்தையை தங்களவராக கருதுகின்றன. ஆனால், விழாவில் பங்கேற்ற களைப்பில் ஊர் உறங்க, அடுத்த விடியலிலே, கோயில் கருவறை இருளுக்குள் இருந்து கரிய சிலை வெளிவருகிறது. வஞ்சி நகரின் கிழக்கே இருக்கும் புலையர் குடியின் கன்னி சன்னதம் கொண்டு எழுகிறாள். கொற்றவை குறிக்கும் அறம் அமைப்பிற்குள் அடங்காதது என பொருள் கொள்ளலாம்.

kannagi_kovil

சேரன் செங்குட்டுவன் காலத்தில், குறுமர்களை (மலைக் குறவர்கள்) ஆரத் தழுவி நலம் விசாரித்து, தான் மார்பில் அணிந்திருந்த ஆரத்தை அவர்களுக்கு அனிவிக்கிறான். குறுமர்களுக்கு கண்ணகி கோயிலில் முதல் பூசனை நடத்தும் உரிமையிருக்கிறது. பல நூற்றாண்டுகள் சென்றபின், தம்புரான் காலத்தில் குறுமர்கள் தீண்டப்படுவதில்லை. கொடுங்கோளூர் கோயிலில் குறுமர்கள் பூசை முடித்த பின்னர், தீட்டுக் கழிப்பட்ட பின்பே அடிகளும், மறையவர்களும் மீண்டும் கோயிலுக்குள் உள்ளே வருகிறார்கள்

என்கிறது கொற்றவை. விஷ்ணுபுரமும், கொற்றவையும் தலித்துகள் குறித்து கிட்டத்தட்ட ஒரே பார்வையை முன் வைக்கின்றன. இந்து மரபின் மைய படிமங்கள் தலித்துகளுடையது. ‘பிறர்’ அதை அபகரித்துக்கொண்டனர். ஆதியில் இந்து சமூகம் நெகிழ்வுடன் இருந்து, பின்பு நிலவுடைமை காரணிகளால் இறுகிவிட்டது எனும் கருத்து ஜெயமோகனின் இந்துத்துவா திரிபு; தலித்துகள் இந்துக்களல்ல, அவர்கள் எப்பொழுமே ஒடுக்கப்பட்டிருந்தனர், ஜெயமோகன் தன் நாவல்களில் இந்துத்துவத்தை வலிய புகுத்துகிறார் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காகவே, முனைவர் வி.ஆர். சந்திரன் எழுதிய “கொடுங்கோளூர் கண்ணகி” ஆய்வுக்கட்டுரையை மொழி பெயர்த்திருக்கிறார். அந்நூல், கொடுங்கோளூர் கண்ணகி கோயிலின் சடங்குகளை விரிவாக விவரிக்கிறது. சடங்குகளில் புலையர்களுக்குரிய முக்கியத்துவத்தை ஆவணப்படுத்துகிறது. தமிழ்நாட்டிலுள்ள கோயில்களின் திருவிழாக்கள், சடங்குகள் குறித்தும் இதுபோன்ற பல நூல்கள் வரவேண்டும். நம் வரலாறை அறிய அவை பெருமளவில் உதவும்.

****

காந்தி போல ஒருவருக்கு, விஷ்ணுபுர சமூகத்தில் இடமிருந்திருக்குமா என்று நினைக்கும்போது, கொற்றவையில் அவருக்கான இடம் தாராளமாக இருக்கிறது. இறுகிய அமைப்பை எதிர்த்து, ஒரு விழுமியத்தை முன்வைத்து போராடுபவர், பின்பு வென்று, அவ்வமைப்பின் முகமாகிறார். காலத்தில் அப்புதிய அமைப்பும், முன்புபோலவே இறுகும்தோறும், புதிதாக போராடுபவர்களுக்கு, அவர் முன்வைத்த விழுமியமே தூண்டுகோலாக இருக்கிறது. [உதா: காலனிய அரசு — காந்தி — சுதந்திர இந்தியா — அண்ணா ஹசாரே] போல [பாண்டிய அரசு — கண்ணகி — கண்ணகிக்கு கோயில் கட்டும் சேர நாடு — சேர நாட்டு புலையர்குடியில் சன்னதம் கொண்டெழும் கன்னி]. செவ்வியல் மறுஆக்கங்களில், கம்பராமாயணம் எப்படி ஒரு உச்சமோ [3], அதுபோல நவீன மறுஆக்கங்களில் கொற்றவை ஒரு உச்சம். எழுத விரும்பும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய க்ளாஸிக் கொற்றவை.

******

பின்குறிப்பு :
[1]. ஜெ., கொற்றவை எழுதுவதற்கு ‘பாலையில் கைவிடப்பட்ட கொற்றவை ஆலயம்’ என்ற படிமம் தூண்டுகோலாக இருந்தது என்கிறார். மார்க்குவஸ் தான் புனைவு எழுதுவதற்கும் படிமங்கள் (visual imagery) தூண்டுகோலாக இருக்கும் என்கிறார்.

[2] சிலம்பிலும் கோவலன் அத்திரியில் பரிசுப்பொருட்களுடன் வந்து தன் குலதெய்வத்தின் பெயரை சூட்டியதாக மணிமேகலைதான் சொல்கிறாரே தவிர, கோவலனும் மாதவியும் சேர்ந்திருக்கும் பாடல்களில் மணிமேகலை பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. [கடல்கோளால் அழிந்த காகந்தி நகரின் கதை எதை குறிக்கிறது? காகந்தியும், மதுரையும் இருவேறு முகங்களா? அரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாவது போல, பெண்ணின் தனிமையும் துயரமும் நகரங்களை அழிக்கும் வல்லமை பெற்றதல்லவா? நண்பர்கள் யாராவது தெளிவுபடுத்தலாம்.]

[3]. தமிழில் எழுதப்பட்டுள்ள முதன்மையான செவ்வியல் மறுஆக்கம் கம்பராமாயணம். வால்மீகி ராமாயணத்தின் மையக் கதை ஒட்டி எழுதப்பட்டாலும், கம்பர், ராமாயண கதாப்பாத்திரங்களை உருமாற்றி, நிகழ்வுகளின் காலவரிசையை மாற்றி தன்னுடையை ராமாயணத்தை எழுதியிருக்கிறார். பேரிலக்கியங்களை மறுஆக்கம் செய்து பேரிலக்கியங்களை படைக்கும் மரபு தமிழில் இருந்திருக்கிறது. கம்ப ராமாயணத்தையும், வால்மீகி ராமாயணத்திலும் ஜடாயு, தாரை கதாப்பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று பார்க்கலாம்.

ஜடாயு:jatayu_rama
[வால்மீகி] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். “கழுகு வடிவில் இருக்கும் அரக்கனான ஜடாயு, சீதையை உண்டுவிட்டது. சீதை ஜடாயுவுடன் போராடியதால், ஜடாயுவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜடாயுவை இப்போதே கொல்வேன்” என்று ஆர்ப்பரித்தபடியே ஜடாயுவை நோக்கி செல்கிறான் ராமன். ஜடாயு ராமனிடம் சரணடைந்து, ராவணன் கவர்ந்து சென்றது பற்றி தெரிவிக்கிறது. ஜடாயுவை தவறாக எண்ணியதை நினைத்து வருந்துகிறான் ராமன்.

[கம்பன்] சீதையை கவர்ந்து சென்றபின், குற்றுயிராக கிடக்கும் ஜடாயுவை ராமன் காண்கிறான். சீதையை கவரும்போது, ஜடாயுவிற்கு துனையாக, ராவணனுடன் போரிடாமல் வேடிக்கை பார்த்ததற்காக, தேவர்களையும், முனிவர்களையும் முனிந்து அவர்களை தண்டிக்கப்போகிறேன் என்கிறான் ராமன். ஜடாயு, ராமனிடம், தேவர்களோ, முனிவர்களோ ராவணனை எதிர்த்திருந்தால், தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்பட்டிருக்கும். தவறு தேவர்களிடமோ, முனிவர்களிடமோ இல்லை. சீதையை வனத்தில் தனியே விட்டுவிட்டு மானின் பின்போன உன்னிடத்தில். ஆகவே, உலகை பழிசொல்லவேண்டாம் என்று ராமனுக்கு அறிவுரை வழங்குகிறார். ராமன் தன் தவறை உணர்ந்து வருந்தி, ஜடாயுவை தன் தந்தை என்றே அழைக்கிறான்.

வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடைத் தமியள் வைக,
கொம்பு இழை மானின் பின் போய், குலப் பழி கூட்டிக் கொண்டீர்;
அம்பு இழை வரி வில் செங் கை ஐயன்மீர்! ஆயும் காலை,
உம் பிழை என்பது அல்லால், உலகம் செய் பிழையும் உண்டோ?

தாரை:tara_sugriva_lakshmana
மழைக்காலம் முடிந்தபின் சீதையை தேடத்தொடங்குவோம் என்று ராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்து, கள்ளிலும், காமத்திலும் உழன்றுகொண்டிருக்கும் சுக்ரீவனை எச்சரிக்க லட்சுமனனை அனுப்புகிறான் ராமன். கிஷ்கிந்தையை நோக்கி மிகுசினத்தோடு வரும் லட்சுமனனை எதிர்கொள்ள தாரையை அனுப்பவேண்டும் என்கிறார் அனுமன்.

[வால்மீகி] குறைஆடைகள் அனிந்து, வானரப் பெண்கள் சூழ, கண்கள் படபடக்க, இடை அசைந்தாட, உடைகள் நெகிழ, லட்சுமணனுக்கு அருகில் சென்று வணங்கி நிற்கிறாள் தாரை. வானர மகளிரால் சூழப்பட்டு, வெகு அருகில் நிற்கும் தாரையால் லட்சுமணன் வெட்கி கோபம் தனிகிறான். தாரை அவனிடம், சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டுகிறாள்.

[கம்பன்] குறைந்த ஆடைகள் அணிந்த வானர பெண்கள் சூழ தாரை வருகிறார். வாலி இறந்ததால், மங்கல அணி, நகைகள் அணியாமல், குங்கும சந்தன குழம்புகள் பூசப்படாத மார்புகளும், பாக்குமரம் போன்ற கழுத்தும் மறையும்படி மேலாடை போர்த்தி வந்த தாரையை கண்டவுடன், லட்சுமணனுக்கு கணவனை இழந்த தன் தாய் சுமித்திரை நினைவுக்கு வர கண்கள் பனிக்கிறான். சுக்ரீவனின் பிழை பொறுக்குமாறு வேண்டியபின், லட்சுமணனிடம், “சீதையை தேடுவதற்கு, வாலியை கொன்ற அம்பும், வில்லும் போதாதோ? வேறு துணையும் வேண்டுமோ? தேவியை தேடுவதற்கு ஆட்கள் தேடுகிறீர்களே” என்று சொல்வதை கேட்டும் லட்சுமணண் நாணுகிறான்.

….
தார் குலாம் அலங்கல் மார்பன், தாயரை நினைந்து நைந்தான். 50
…..
மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான். 51
……..
‘ஆண்டு போர் வாலி ஆற்றல் மாற்றியது அம்பு ஒன்று ஆயின்,
வேண்டுமோ, துணையும் நும்பால்? வில்லுனும் மிக்கது உண்டோ ?
தேண்டுவார்த் தேடுகின்றீர், தேவியை; அதனைச் செவ்வே
பூண்டு நின்று உய்த்தற்பாலார், நும் கழல் புகுந்துளோரும்.’ 58
……
என்று அவள் உரைத்த மாற்றம் யாவையும் இனிது கேட்டு,
நன்று உணர் கேள்வியாளன், அருள்வர, நாண் உட்கொண்டான்,
நின்றனன்;…59

வெறும் கழுகாக இருக்கும் ஜடாயு, கம்பனில் ராமனுக்கு அறிவுரை கூறும் தந்தையாகிறார். ஆதிகாவியத்தில் காமவல்லியாக வரும் தாரை கம்பராமாயணத்தில் அன்னையாகவும், அறச்சீற்றம் மிக்கவளாகவும் வருகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விசு பதிவுகள்

ஜெயமோகனின் ‘வெண்முரசு’

மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
10 வருடங்கள் – தினமும் இணையத்தில்
2014 புத்தாண்டு முதல்…

Venmurasu

வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்

ஜெயமோகன்

www.jeyamohan.in

ஜெயமோகன் தளத்தில் புதியவர்களின் சிறுகதைகள்

(மீள்பதிவு – ஜெயமோகன் தளத்தில் வந்த கட்டுரை – சில சிறு மாற்றங்களுடன்)

jeyamohanசில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகன் குழுமத்தில் இது வரை அச்சிலோ இணையத்திலோ வராத சிறுகதைகளை குழுமத்தில் போஸ்ட் செய்தால் நல்ல சிறுகதைகளைத் தான் தேர்ந்தெடுப்பேன் என்று ஜெயமோகன் சொல்லி இருந்தார். குழுமப் பக்கங்களில் நிறைய வந்து குவிந்தன. அவற்றில் 12 சிறுகதைகளத் தேர்ந்தெடுத்து தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

இப்படி செய்ய வேண்டும் என்று ஜெயமோகனுக்கு எந்தக் கட்டாயமும் இல்லை. நல்ல வாசகர்கள், இலக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் வேண்டும் என்று அவர் முகாம்கள், குழுமம், விஷ்ணுபுரம் விருது, இலக்கிய விவாதங்களை ஊக்குவிப்பது, எல்லாரும் வழக்கம் போல மவுனமாக இருந்தாலும் (அதுவும் குழுமத்தில் அவர் பல பேருக்குக் கடவுள். யாரும் மறுத்து ஒரு வார்த்தை சொல்லமாட்டார்கள்.) தொடர்ந்து “வாங்க பேசலாம்” என்று அழைத்துக் கொண்டே இருப்பது, இவை எல்லாம் மிக அற்புதமான விஷயங்கள். இவர் அளவு இல்லாவிட்டாலும், வேறு சில சமயங்களில், வேறு சில குழுமங்களில் நானும் பலரையும் involve செய்ய வேண்டும் என்று கஷ்டப்பட்டிருக்கிறேன். அடுத்தவர்களின் மவுனம் நம்மை எத்தனை தளர்ச்சி கொள்ளச் செய்யும் என்று எனக்கும் ஓரளவு அனுபவம் உண்டு. ஆனால் இவருக்கு மட்டும் தளர்ச்சி வரவே வராதா என்று வியக்க வைக்கிறார். ஏண்டா(டி) யாரும் எதுவும் இந்த சிறுகதைகளைப் பற்றி உருப்படியா விவாதிக்க மாட்டேங்கறீங்க என்று இப்போது எல்லாரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். “ஒன்று, பேசத் தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாக வரவிலலை என்பதற்கு மேலாக எவருக்கும் எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆகவே சும்மா இருக்கிறார்கள்” என்று குழும விவாதத்தில் சொல்லி இருந்தார். அது என்னவோ வாஸ்தவம்தான். நானெல்லாம் படிக்கும் அனுபவத்தை அடுத்தவருக்கு விளக்குவது என்பது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு வந்து கொஞ்ச நாளாயிற்று. ஆனால் அவர் திட்ட ஆரம்பித்த பிறகு அதையாவது சொல்லி வைப்போமே என்றுதான் எழுதுகிறேன். மேலும் நான் சிலிகான் ஷெல்ஃப் தவிர வேறு இணைய தளங்களில் பெரிதாக பங்கெடுப்பதும் இல்லை. இப்போதும் ஜெயமோகன் தார்க்குச்சி போடாவிட்டால் இதை எழுதி இருக்க மாட்டேன்.

உண்மையைச் சொல்லப் போனால் முதல் கதையான தனசேகரின் உறவு படித்து நன்றாக இருக்கிறதே என்று நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு வந்த கதைகளில் நல்ல கூறுகள் இருந்தாலும் நாலு பேரிடம் பேசும் அளவுக்கு என் மனதைத் தொடவில்லை. ஜெயமோகன் தளத்தில் வராவிட்டால் ராஜகோபாலனின் வாயுக் கோளாறு, கே.ஜே. அஷோக் குமாரின் வாசலில் நின்ற உருவம் ஆகியவற்றை நான் படித்திருப்பேனா என்பதே சந்தேகம்தான்.

முதலில் நான் நல்ல சிறுகதையில் எதிர்பார்ப்பது என்ன என்று சொல்லிவிடுகிறேன். சிறுகதையைப் படித்து முடித்த பின்னும் கதை முடியாமல் இருப்பது (Lady or the Tiger); தரிசனம் – மனிதனை மனிதனாக அமைக்கும் உணர்ச்சிகள் (பால்வண்ணம் பிள்ளை); மனதில் கேள்விகளை எழுப்புவது (மாஞ்சு); ஒரு காட்சியை அப்படியே கொண்டுவருவது (புலிக்கலைஞன்); புத்திசாலித்தனமான முடிவுகள் (Star). இப்போதைக்கு இவ்வளவுதான் நினைவு வருகிறது.

இந்த சீரிசில் வந்தவற்றில் நான் சிறந்த கதையாகக் கருதுவது உறவைத்தான். மனித உறவுகளை அருமையாக வெளிக் கொணர்ந்த சிறுகதை. இரண்டு ஜோடிகளையும் point-counterpoint ஆக கட்டமைத்திருப்பது அருமை. பந்தம் என்பது அலட்சியம் (indifference) ஒன்றைத் தவிர வேறு எதையும் தாங்கும் என்று எனக்கு ஒரு தியரி உண்டு. அது உண்மையோ பொய்யோ, அந்த தியரியை சிறப்பாகக் காட்டி இருக்கிறார். ஒவ்வொரு சின்னக் கூறும் நகாசு செய்யப்பட்டிருக்கிறது. மேகமலையின் மீது முருகண்ணனுக்கு உள்ள ஈர்ப்பாகட்டும், திடீரென்று சந்திக்கும் அண்ணனாகட்டும், கதை திறமையாக சந்தானத்தின் பிரச்சினையிலிருந்து முருகண்ணனுக்கு மாறுவதாகட்டும், மிக இயற்கையாகக் காட்டப்படுகிறது.

சிவா கிருஷ்ணமூர்த்தியை என்றாவது பார்ப்பேன். இரண்டு அடி போடலாம் என்று நினைத்திருக்கிறேன். 🙂 பின்னே என்ன, இதே கருவில் நானும் ஒன்றல்ல இரண்டு கதை எழுதி வைத்திருக்கிறேன். ஜெயமோகனே இந்தக் கருவை வைத்து ஒரு கதை எழுதி இருக்கிறாரே (கேரளத்தில் லோல்பட்டாலும் தன் தங்கை வேற்று ஜாதிக்காரனை மணந்து கொண்டுவிட்டாளே என்று கொந்தளிக்கும் மாணிக்கம்?) இதை எப்படி அனுப்புவது என்று நான் பேசாமல் இருந்துவிட்டேன். மனிதர் அந்தக் கருவை நன்றாக டெவலப் செய்திருந்தார். பாத்திரங்கள், சூழல் ஆகியவற்றை நன்றாக சித்தரித்திருந்தார். ஆனால் அந்தக் கதையை ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளனாகத்தான் என்னால் பாராட்ட முடிகிறது, வாசகனாக அல்ல. சம்பவங்களில் ஒரு செயற்கைத் தன்மை? தெரிகிறது. அதாவது ஒன்றைக் காட்ட வேண்டும், அதற்காக ஒரு காட்சியைச் சேர்ப்பது. உதாரணமாக அந்தப் பெண்ணின் ஜாதி என்ன என்று கோடிட்டுக் காட்ட வேண்டும், அதனால் ஊர்க்காரரோடு சந்திப்பு; ஊர்க்காரர் என்று தெரிய வேண்டும், அதனால் தடுக்கி விழுந்து அம்மா என்று தமிழில் முனகுவது. யோசித்துப் பாருங்கள், சரியாக அந்தப் பெண்ணை நோட்டம் விடப்போகும் அன்று சில மணி நேரங்களுக்கு முன்னால் அந்தப் பெண்ணின் பூர்வீக ஊர்க்காரரை தற்செயலாகச் சந்திப்பது கொஞ்சம் சினிமாத் தனமாக இருக்கிறது. ஜெயமோகன் என்னை ஒரு முறை கதைச் சம்பவங்கள் நடக்கக் கூடியதா என்று மட்டும் பார், நடப்பதற்கான சாதகக் கூறு அதிகமா குறைவா என்றெல்லாம் பார்ப்பது முட்டாள்தனம் என்று இடித்திருக்கிறார். அதனால் நடக்கவே முடியாத தற்செயல் இல்லை என்பதையும் அழுத்திச் சொல்லி விடுகிறேன்.

காகிதக்கப்பல் கதையே இல்லை. கவிதை. வேறென்ன சொல்ல?

தொலைதல் நல்ல கூறுகள் உள்ள கதை. உண்மையான பாத்திரங்கள். ஆனால் என் கண்ணில் சுவாரசியம் குறைவு. என்னை இழுத்துப் பிடித்து உட்கார வைக்கவில்லை.

வாயுக்கோளாறு இந்த சீரிசில் இடம் பெற்றிருக்கவே கூடாது என்றுதான் சொல்வேன். ஜாஜா கோபித்துக் கொண்டாலும் சரி, பொய் சொல்வதற்கில்லை. அவர் சொல்ல வந்தது – அபத்தம் (irony) – என்ன என்று புரிகிறது. ஆனால் கதை அந்தக் காலத்து குமுதம் விகடனில் வருவது போல இருக்கிறது. அவர் இதை படித்து முடித்த பின்னும் முடியாத கதை, மனித வாழ்வின் அபத்தத்தைப் பற்றி யோசிக்க வைக்கும் என்று நினைத்திருக்கும். ஆனால் அது ஒரு ஜோக் படிப்பது போன்ற விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.

பீத்தோவனின் ஆவி எழுப்புவது நல்ல கேள்வி. ஆனால் கேள்விக்காகத்தான் படிக்க வேண்டும். கதை கொண்டு செல்லப்பட்ட விதம் என்னைக் கவரவில்லை.

வாசலில் நின்ற உருவம் மூலம் அசோக் குமார் என்ன சாதிக்க விரும்புகிறார்? வாசகனிடம் என்ன விளைவை ஏற்படுத்த விரும்புகிறார்? எனக்கு தொண்ணூறுகளில் சிறு பத்திரிகைகளில் வரும் “அறிவுஜீவிக்” கதைகளை நினைவுபடுத்தியது. அந்த அளவு மோசம் இல்லாவிட்டாலும் நடை வேறு என்னை கொஞ்சம் கஷ்டப்படுத்தியது. அசோக் குமார் கோபித்துக் கொள்ளக் கூடாது.

ustad_abdul_karim_khanசோபானம் கதை எனக்கு ராமைப் பற்றித்தான் யோசிக்க வைத்தது. ராமைப் பொறுத்த வரை இசை என்பது ஒரு mystical அனுபவம் என்று தோன்றுகிறது. அவர் எழுதுவது அந்த அனுபவத்தைப் பற்றி. கான்சாஹிப் அப்படிப்பட்ட mystic-தான். ஆனால் இசையை அந்த இடத்தில் வைக்காத என்னைப் போன்றவர்களுக்கு இந்த அனுபவம் புரியுமா, புரிய வைத்துவிட முடியுமா? செயின்ட்-எக்சூபரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்து நாடோடி ஒருவனை ஐரோப்பிய நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துப் போன அனுபவத்தை விவரிப்பார். அந்த நாடோடியால் இத்த்னை தண்ணீர் வீணாவதைப் புரிந்து கொள்ளவே முடியாது. கடவுள் எப்படி இந்த மாதிரி அனியாயம் செய்யலாம் என்று புலம்பிக் கொண்டே இருப்பான். அந்த மாதிரிதான் இவர் தன் இசை அனுபவத்தை மற்றவர்களுக்கு கை மாற்றுவது. அப்புறம் சோபானம் என்றெல்லாம் புரியாத மாதிரி தலைப்பு வைத்தால் எப்படி? நான் சோபனம் என்று நினைத்துக் கொண்டு முதலிரவுக்கும் இந்தக் கதைக்கும் என்ன தொடர்பு, இது கான்சாஹிபுக்கு சங்கீத சொர்க்கத்தில் முதலிரவு என்கிறாரா என்றெல்லாம் குழம்பினேன். அரபிந்தோவைப் பற்றி வரும் வரிகள் இந்தக் கதையின் காலம் 1950-க்கு முற்பட்டது என்று நிறுவுகின்றன. அப்போது சிங்கப் பெருமாள் கோவில் மாதிரி சின்ன கிராமத்தில் (1940களில் சின்ன கிராமம்) ரயில்வே ஸ்டேஷன் இருந்ததா என்று ராம் doublecheck செய்து கொள்ள வேண்டும். கதை நடந்த காலம் 1937 என்றும் உஸ்தாத் அப்துல் கரீம் கானின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை என்றும் ராம் உறுதி செய்கிறார். உஸ்தாதின் ஒரு அற்புதமான தியாகராஜ கிருதி கீழே.

கன்னிப்படையல் நல்ல முறையில் எழுதப்பட்ட சிறுகதை. அந்த அப்பாவின் தவிப்பு பிரமாதமாக வந்திருக்கிறது. ஆனால் என் கண்ணில் அந்தப் பெண்ணின் தவிப்பு அழுத்தமாக வெளிப்படவில்லை. ஜாஜாவின் விருப்பம் அந்தப் பெண்ணின் தவிப்பு வரவேண்டும் என்பதுதான் என்று நினைக்கிறேன்.

வேஷம் சுமார்தான். காட்டுப்புலி நாட்டுப்புலி எல்லாம் வலிந்து புகுத்தப்பட்ட மாதிரிதான் இருந்தது. லங்காதகனம் மாதிரி எழுத வேண்டும் என்று நினைத்து எழுதிய மாதிரி இருந்தது. ஆனால் இந்தச் சிறுகதை அனேகரால் சிலாகிக்கப்பட்ட சிறுகதை, நானே கூட மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

வாசுதேவன் கதையில் எனக்கு முதலில் உறைத்த விஷயம் முடிவில் வரும் தெலுகு வசனங்கள்தான். “ஊரிக்கதான்” என்றால் “சும்மாதான்” என்று எல்லா தமிழனுக்கும் எப்படி புரியும்? அப்படி கஷ்டப்பட்டு அதை ஒரு தெலுகு குடும்பம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன? சிறுகதையும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை. என் கண்ணோட்டத்தில் சுனீல் இதை வலிந்து subtle ஆக்க முயல்கிறார். மீண்டும் படிக்கும்போது சுனீலின் கதையை நான் சரியாக புரிந்து கொண்டேனா என்று சந்தேகமாக இருக்கிறது. (கருணைக் கொலை நடந்தது, அதை அந்த சிறுமி பார்த்தாள் என்று புரிந்து கொண்டேன்.)

பயணம் சிறுகதையில் நான் மிகவும் ரசித்த விஷயம் இலங்கைத் தமிழ்தான். சிறுகதை எனக்கு சிவாவின் கதையை நினைவுபடுத்தியது. நன்றாக எழுதப்பட்ட சிறுகதை. சிவா, சிவேந்திரன் இருவருக்கும் சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) கை வந்திருக்கிறது.

எனக்கு சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசை வந்தாலும், வழக்கமான சோம்பேறித்தனம்; அந்த சமயத்தில் பார்த்து கதை எதுவும் சரியாக உருவாகவும் இல்லை. என்றாவது மீண்டும் முழு மனதாக உட்கார்ந்து எழுத மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது.

இவற்றில் நான் பரிந்துரைப்பது உறவு – தனசேகர் மற்றும் காகிதக்கப்பல் – சுரேந்திரகுமார்.

தொழில் நுட்ப ரீதியில் (literary craft) திறமையாக எழுதப்பட்டவை யாவரும் கேளிர் – சிவா கிருஷ்ணமூர்த்தி, கன்னிப்படையல் – ராஜகோபாலன் மற்றும் பயணம் – சிவேந்திரன்.

வெற்றி பெறாவிட்டாலும் இலக்கியத்தின் கலை வடிவத்துக்கு அருகே சென்றவை தொலைதல், பீத்தோவனின் ஆவி – வேதா, சோபானம் – ராம், வேஷம் – பிரகாஷ் சங்கரன்.


தொடர்புள்ள சுட்டிகள்:

தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

12. பயணம் – சிவேந்திரன்

11. வாசுதேவன் – சுனீல்கிருஷ்ணன்

10. வேஷம் – பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் – ராஜகோபாலன்

8. சோபானம் – ராம்

7. வாசலில் நின்ற உருவம் – கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு – ராஜகோபாலன்

5. பீத்தோவனின் ஆவி – வேதா

4. தொலைதல் – ஹரன் பிரசன்னா

3. காகிதக்கப்பல் – சுரேந்திரகுமார்

2. யாவரும் கேளிர் – சிவா கிருஷ்ணமூர்த்தி

1. உறவு – தனசேகர்

பிடித்த சிறுகதை – நதிக்கரையில்

நதிக்கரையில் சிறுகதை எனக்குப் பிடித்தமான ஒன்று. பீமன், யுதிஷ்டிரன் ஆகியோரின் சித்திரங்களும், உள்ளே ஆறாத காயமாக இருக்கும் சோகமும் என்ன அற்புதமாக வந்திருக்கின்றன! கடோத்கஜனைத் தழுவ பீமன் ஏங்குவது எந்த அப்பனாலும் உணரக் கூடியது. அந்த சோக நேரத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்த வரிகள் – “உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!”

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம் என்று ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சொல்லிக் கொள்வேன். 🙂 மீண்டும் அப்படி பீற்றிக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயமோகனுக்கு நன்றி!