படித்திருக்கிறீர்களா புத்தகம் பற்றி சில முறை எழுதி இருக்கிறேன். எனக்கு அது ஒரு seminal புத்தகம். செகந்தராபாத் புத்தகக் கண்காட்சி ஒன்றில் வாங்கிய கையோடு அங்கேயே வராந்தாவில் படித்தேன், படித்து முடித்தவுடன் அதில் குறிப்பிட்டிருந்த புத்தகங்களைக் கண்காட்சியில் தேடினேன். கிடைத்தது எஸ்விவி எழுதிய உல்லாச வேளை ஒன்றுதான். படிக்கும்போது பிடித்திருந்தது. 20-25 வருஷங்களுக்குப் பிறகு மீள்வாசிப்பில் வெறும் fluff என்றும் தோன்றியது.
அதனால் ஒரு குறைவுமில்லை. க.நா.சு.வின் ரசனையும் என் ரசனையும் வேறு. ஆனால் புத்தகங்களை க.நா.சு. அணுகும் முறையும் நான் அணுகும் முறையும் ஒன்றுதான். அதனால் பசுபதி சார் தளத்தில் இந்தக் கட்டுரையைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. வசதிக்காக கீழேயும் பதித்திருக்கிறேன். பசுபதி சாருக்கு நன்றி!
தினசரி பழகி, விருப்பும் வெறுப்பும் கொள்கிற மனிதர்களை அறிகிற அளவுக்கு அவர்களையும் நாம் அறிந்து கொள்ள எஸ்.வி.வி.யின் மேதை நமக்கு உதவுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லாவற்றையும் கவனித்து, சுலபமாக மனத்தில் பதியும்படியாக விஷயங்களைச் சொல்லியிருக்கிறார் எஸ்.வி.வி.! ஹாஸ்யமாக எழுதியதால்தான் அவருக்குப் பெருமை என்று சொல்லமுடியாது. உண்மைக்கும் கலைக்கும் விரோதமில்லாமல், முரண்பாடில்லாமல், அந்த ஹாஸ்யத்தைக் கையாள முடிந்தது என்பதுதான் எஸ்.வி.வி. யின் தனிச்சிறப்பு.
உல்லாச வேளை என்கிற நூலை நாவல் என்று சொல்வதா? கதைத் தொகுப்பு என்று சொல்வதா? வெறும் கட்டுரைகள் என்று சொல்வதா? மூன்றுமே சொல்லலாம். இலக்கியத்தில் அது எந்த வகுப்பில் சேரும் என்பது பற்றி எஸ்.வி.வி.க்கு ஒரு போதும், தன் எந்த எழுத்திலுமே கவலையிருந்ததில்லை. கலை என்கிற ஞாபகமே அற்ற ஒரு கலைஞர் அவர். இலக்கிய நண்பர்கள் கூட்டமொன்றில் அவர் தான் எழுதுகிறது எப்படி? என்பதைப் பற்றி விவரித்துச் சொன்னார்:
“பேனாவை எடுக்கும்போது எனக்கு என்ன எழுதப் போகிறேன் என்றே தெரியாது. கதைத் திட்டமோ , கதாநாயகன், நாயகியின் பெயரோ என் மனத்திலிராது. சட்டென்று ஏதாவது ஒரு பெயர் வரும். அவன் ஸ்டேஷனுக்குப் போவான். ஸ்டேஷனுக்குப் போய் என்ன செய்வான்? டிக்கெட் வாங்குவான். எந்த ஊருக்கு? ஏதாவது ஒரு ஊருக்கு. தனக்கா? தனக்காகவும் இருக்கலாம், வேறு யாருக்காகவும் இருக்கலாம். அது ரெயில் கிளம்பும்போது தெரிந்திருந்தால் போதுமே! கதாநாயகி அநேகமாக அவன் அறிந்தவளாகவே இருப்பாள். ஆனால், அவளைக் கதாநாயகியாக அதுவரை அறிந்திருக்கமாட்டான் அவன். நான் மனசு வைத்தால்தான் அறிந்துகொள்ள முடியும்…”
எஸ்.வி.வி.யை மற்ற எழுத்தாளர்களிடமிருந்து பிரித்து வைத்தன அவருடைய கண்களும் காதுகளும் என்று சொன்னால் அது மிகையல்ல. காண்பது பூராவையும் கண்ணில் வாங்கவும், கேட்பது பூராவையும் கொச்சை மொழி அந்தரார்த்தங்கள் உள்படக் காதில் வாங்கவும் அவருக்கு ஒரு சக்தியிருந்தது. தான் பார்த்ததையும் கேட்டதையும் அப்படி அப்படியே அழகு பெறச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் எஸ். வி. வி.
நாம் நேரில் அறிந்து கொண்டவர்களையே பல சமயங்களில் எஸ்.வி.வி.யின் எழுத்துக்களிலும் அறிந்து கொள்கிறோம். ஒரு திடமான பழங்கால அறிவுடனும், அநுபவ முதிர்ச்சியுடனும் இன்றைய வாழ்க்கையின் விசேஷங்களை, முக்கியமல்லாவிட்டாலும் அநுபவிக்கக் கூடிய அதிசயங்களை, எடுத்துச் சொன்னவர் எஸ்.வி.வி. இதைத் தினசரி பேச்சுத் தமிழில் சொன்னார் என்பதும், இயற்கையாகவுள்ள ஒரு ஹாஸ்யத்துடனும் சொன்னார் என்பதும் தனி விசேஷங்கள்தான்.
நேற்று – இன்று என்கிற இரண்டு தத்துவங்களுக்குமிடையே இவ்வுலகில் என்றுமே போராட்டம் நடந்து கொண்டுதான் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கள், தகப்பன் பிள்ளை, தாய் மகன் என்கிற உறவுகள் சிநேக உறவுகள் அல்ல, வெறுப்பு உறவுகளே என்று நிரூபிக்க இந்தக் காலத்தில் வெகுவாக முயன்று ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள். மனோதத்துவம் என்கிற கானல் நீரிலே எஸ்.வி.விக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது. அவர் கொண்டுள்ள முடிவுகளும் வற்புறுத்துகிற தன்மைகளும் வாழ்க்கையை நேர்ப் பார்வை பார்த்து அவர் அறிந்து கொண்டவை. ஆனால் நேற்று – இன்று என்கிற தத்துவத்தின் போராட்டத்தை அவரைப்போல தம் தலைமுறைக்கு விவரித்துள்ளவர்கள் வேறு யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். போராட்டம் என்றோ, தத்துவம் என்றோ, இது பெரிய விஷயம் என்றோ சொல்லாமல் (உணராமல் என்று கூடச் சொல்லலாம்) லேசாகச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறார்.
எஸ்.வி.வி. ஒரு கலைஞர். அவர் எந்த விஷயத்தை எடுத்துக் கையாளலாம், எந்த விஷயத்தைக் கைவிட்டு விட வேண்டுமென்று யாரும் சட்டம் விதிக்க முடியாது. எதுவும், எவ்வளவு சிறிய விஷயமுமே, அவர் நோக்குக்கு உட்பட்டதுதான் – கலைக்கு அஸ்திவாரம்தான்.
உல்லாச வேளையில் நாம் அறிந்து கொள்கிறவர்கள் எல்லோரும் நம்மை விட்டு அகலாத தோழர்கள். முகத்தைச் சுளிக்காமல் நாம் எங்கு சென்றாலும் நம்முடன் கூட வருவார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
முப்பது வருஷங்களுக்கு முன் நான் கோவையில் இண்டர்மீடியேட் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது எஸ்.வி.வி. என்கிற மூன்று எழுத்துக்கள் கொண்ட பெயருடன் ஒருவர் தன் முதற் கட்டுரையை ஹிந்துப் பத்திரிகையில் வெளியிட்டார். ஆங்கிலத்தில்தான் எழுதினார் என்றாலும், அது முழுக்க முழுக்கத் தமிழ்க் கட்டுரைதான் என்றே சொல்லலாம். தமிழன் ஆங்கிலம் எழுதினால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று ஆங்கிலத்தில் ஆசை கொண்டிருந்த எனக்கு அப்போது தோன்றியது. எஸ்.வி.வி. ஒரு ஏழெட்டு வருஷங்களுக்குப் பிறகு தமிழில் எழுதத் தொடங்கினார். அதனால் இன்றையத் தமிழ் இலக்கியம் ஒரு தனி வளம் பெறவே செய்திருக்கிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்