கீரனூர் ஜாகிர் ராஜாவின் “கருத்த லெப்பை”

keeranoor_zakir_rajaபோன மாதம் சிலிகன் ஷெல்ஃப் குழுமத்தில் இதைப் பற்றிப் பேசினோம். நினைவு இருக்கும்போதே பதிவு செய்துவிடுகிறேன்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்தப் புத்தகம் ஒரு நாவலின் ஆரம்பம் போலத்தான் இருக்கிறது. இன்னும் நிறைய எழுதி இருக்கலாம், இருக்க வேண்டும். ஆனால் எழுதிய அளவிலேயே குறிப்பிடப்பட வேண்டிய புத்தகம்தான்.

karuttha_lebbaiநாவலில் இரண்டு சரடுகள் செல்கின்றன. ஒன்று முஸ்லிம்களிடையே நிலவும் “ஜாதி” நிலை. இதன் முக்கிய விசை பொருளாதார நிலைதான் என்றாலும் பிறப்பாலேயே குழுக்கள் உருவாக்கி இருப்பதை ராஜா நன்றாகச் சித்தரிக்கிறார். லெப்பைகளும் ராவுத்தர்களும் பிறப்பால் எற்படும் குழுமங்களே. இதில் ராவுத்தர் ஆதிக்க ஜாதியாக இருப்பதும், லெப்பைகள் அவர்களைச் சார்ந்த ஏழை ஜாதியாக இருப்பதும், ராவுத்தர்கள் லெப்பைகளை அடக்கி ஆள்வதும் காட்டப்படுகின்றன. அக்காவை கிறுக்கு மாப்பிள்ளைக்கும் மணம் செய்து வைப்பது, ஜமாஅத் தேர்தல், லெப்பைகளுக்கு விழுந்த ஒன்பது ஓட்டு, என்று போகிறது. இது யதார்த்தவாதச் சரடு. Genuine சித்தரிப்புகள். இந்தச் சரடு அதிகமாகப் பேசப்படாத முஸ்லிம்களைப் பற்றி இருப்பதுதான் இதன் முக்கியத்துவம்.

இரண்டாவது சரடு கொஞ்சம் விசித்திரமானது. கருத்த லெப்பைக்கு உருவங்கள் மீது இருக்கும் மோகம், சாத்தானை ஜவ்வு மிட்டாயில் பார்க்க விரும்பும் குணம், சூஃபிகள் ஏன் வேதங்கள் மீது இருக்கும் கவர்ச்சி, சூனியம் கீனியம் என்று போகும் ஒரு பாட்டி, முகமது நபியின் உருவத்தைப் பார்க்க குரானிலேயே வழி இருக்கிறது, சில சூத்திரங்களை சரியாக ஜெபிக்க வேண்டும் என்று சொல்லும் இன்னொரு பாட்டி, முகமதை உருவமாகப் பார்க்க விரும்பும் லெப்பை என்று போகிறது.எது உண்மை, எது கனவு என்றே தெரியாத ஒரு நிலை. உதாரணமாக கடைசியில் லெப்பைக்கு விழும் கல்லடி நிஜம்தானா?

யதார்த்தவாத நாவல் என்ற அளவிலும் குறிப்பிட வேண்டிய நாவல்தான். உண்மையைச் சொல்லப் போனால் யதார்த்தச் சரடுதான் மாயாவாதச் சரடை விட வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரை வெற்றி பெறாத மாயச் சரடுதான் நாவலை உயர்த்துகிறது.

சில நண்பர்கள் இது நீல. பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை நினைவுறுத்துவதாகச் சொன்னார்கள். பிறந்த சூழ்நிலையால் கட்டுண்டிருக்கும் இளைஞன், அக்காவின் பொருந்தாத மணம் என்பதெல்லாம் எனக்கு superficial – மேலோட்டமான ஒற்றுமைகளாகத்தான் தெரிகிறது.

ராஜாவின் ஒரு பேட்டியிலிருந்து அவர் கலைகளைக் கூட உருவங்கள் சித்தரிப்பால் எதிர்க்கும் வஹாபியிசக் கூறுகளுக்கு எதிராக, சூஃபிகள், தர்காக்கள், போன்றவற்றுக்கு ஆதரவாக தன் குரலை எழுப்பும் நோக்கத்தோடு இதை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஒரு புத்தகத்திலிருந்து சொல்லிவிட முடியாதுதான். ஆனால் ஜாகிர் ராஜா முக்கியமான தமிழ்ப் படைப்பாளி என்றுதான் தோன்றுகிறது. அவரது பிற படைப்புகளைத் தேடிப் படிக்க வேண்டும். குறிப்பாக மீன்காரத் தெரு. மீன்காரத் தெருவைப் பற்றி இந்த குறுநாவலிலும் இரண்டு மூன்று வரிகள் வருகின்றன.


தொகுக்கப்பட்ட பக்கம்: கீரனூர் ஜாகிர் ராஜாவின் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
ஜாகிர் ராஜாவின் தளம்
ஜாகிர் ராஜாவின் பேட்டி
கருத்த லெப்பை பற்றி முத்துகிருஷ்ணன்

கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா

keeranoor_zakir_rajaதமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா. சமீபத்தில் அவர் எழுதி, ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவல் ‘கருத்த லெப்பை’. எழுபது பக்கங்களுக்கும் குறைவான இந்த நாவல் கருத்த லெப்பை என்கிற ஜபருல்லாஹ் என்ற இளைஞனின் கதையை சொல்வதாகும்.

karuttha_lebbaiலெப்பை என்பவர்கள் வசதியில் ராவுத்தர்களை விட குறைந்தவர்கள், அதனால் அதிகாரம் என்று எதுவுமில்லாதவர்கள். முன்பு குதிரை வியாபாரம் செய்து, பிறகு கயிறு வியாபாரம் செய்து வரும் ராவுத்தர்களுக்கு ஓதிக் கொடுத்தும், அவர்களுடைய கடை நிலை அலுவல்கள் செய்தும் லெப்பைகள் வாழ்கிறார்கள். ராவுத்தர்கள் வீட்டிற்கு முறுக்கு சுட்டுக் கொடுக்கும் பாத்துமாவின் இளைய மகன் கருத்த லெப்பை. அவனுடைய அக்கா ருக்கையா. அவர்களுடைய அப்பா ராவுத்தர் குடும்பங்களில் ஓதிக் கொடுத்தும், எடுபிடி வேலையும் செய்கிறார் என்றாலும் கூட வீட்டின் வருமானம் பாத்துமாவை நம்பித்தான் உள்ளது.

லெப்பைகளுக்கு மத்தியில் சகஜமாக பழகும் ஒரே ராவுத்தர் மிட்டாய் அமீது. குழந்தைகளுக்கு பல வடிவங்களில் மிட்டாயை செய்து விற்று பிழைப்பு நடத்துகிறார். ஊரிலிருந்து விலகி இருக்கும் சாம்பன் மடத்தில் எங்கிருந்தோ வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாவாதான் கருத்த லெப்பையின் மானசீக குரு.

பித்து லெப்பை வம்சாவளியில் வந்த ஈசாகின் வயது முதிர்ந்த, புத்தி சுவாதீனமற்ற தம்பி பதுருதீனுக்கு ருக்கையாவை பாத்துமா திருமணம் செய்து கொடுத்து விடுகிறாள். வவ்வா கொட்டகை என்ற பித்து கொட்டகையில் விலங்கிடப்பட்ட பதுருதீனுடன் ஈசாக்கின் கட்டுப்பாடில் ருக்கையா வாழ்ந்து வருகிறாள்.

பள்ளிவாசல் மகாசபை நிர்வாகத்திற்கு முதன்முறையாக இந்த முறை லெப்பைகள் சார்பாக நூர் முகமது போட்டியிட்டு தோற்கிறார். லெப்பை ஒருவன் போட்டியிட்டு ஒன்பது ஓட்டு வாங்கிவிட்டான் என்பதை காரியதரிசி அஹமது கனி ராவுத்தரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இதைத் தொடர அனுமதிக்க கூடாது என்பதாலும், நூர் லெப்பைக்கு ஒன்பது பேர் ஓட்டு போட்டுவிட்டார்கள் என்பதற்கு தண்டனையாகவும் ராவுத்தர் கம்பெனியிலிருந்து லெப்பைகளை வேலையை விட்டு நீக்குகிறார்கள். அதில் வேலையிழந்து கருத்த லெப்பையின் அப்பாவும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஒருநாள் தெருவில் அலங்கோலமாக பத்ருதீனையும், அழுது கொண்டிருக்கும் ருக்கையாவையும் காண சகிக்காமல் அவளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான்.

ருக்கையாவையும், கருத்த லெப்பையையும் சிறு வயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்தவர் கொடிகால் மாமு என்கிற நூர் முகமது லெப்பை. நூர் லெப்பைக்கு மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக தன்னுடைய வண்டியை அனுப்ப மறுத்து விடுகிறார் கனி ராவுத்தர். நூர் முகமது இறந்து விடுகிறார். ஈசாக் மறுபடியும் வந்து ருக்கையாவை தன்னுடைய பித்து கொட்டகைக்கு கூட்டிக் கொண்டு போய் விடுகிறான்.

கருத்த லெப்பை தன்னுடைய அப்பாவின் தாயான ராதியம்மாவிடம் அவர்களுடைய கனவில் வரும் நாயகம் ரசூலுல்லாவின் உருவத்தை விவரிக்க சொல்லி கேட்கிறான். இறைவனுக்கு உருவம் வைக்கக் கூடாது என்பது தெரிந்தும் ராதியம்மா சொன்னதை காகிதத்தில் பதிந்து மிட்டாய் அமீதிடம் கொடுத்து சின்னா பிள்ளையின் வீட்டில் ரகசியமாக அதை சிலையாக வடிக்கச் சொல்கிறான்.

பத்ருதீன் உடல்நிலை மோசமாகி சாவிற்கு அருகிலிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈசாக்கை அடித்து போட்டுவிட்டு அவனைக் கூட்டிக் கொண்டு பாலசமுத்திரம் கன்னி பீவி தர்க்காவிற்கு ருக்கையா கிளம்பி போகிறாள்.

அம்மாவின் முறுக்கு விற்ற காசை சின்னா பிள்ளை வீட்டிற்கு வாடகையாக கொடுத்து விட்டு அமீது உருவாக்கிய களிமண் உருவத்தை வெளியில் கொண்டு வைக்கிறான் கருத்த லெப்பை. அவன் மீது எல்லா திசைகளிலிருந்தும் கல்லடி விழுகிறது. உதிரத்துடன் தரையில் விழுகையில் மழை வலுப்பதுடன் நாவல் முடிகிறது.

சமூகத்தில் தங்களுடைய இடம் இதுதான் என்று ஒத்துக் கொண்டும் வாழும் லெப்பைகளுக்கு மத்தியில் கருத்த லெப்பை மட்டும் விதிவிலக்காக உள்ளான். அக்கா ருக்கையா, கொடிக்கால் மாமு, சின்ன பேச்சி தவிர மற்ற எவர் மீதும் லெப்பை என்பதற்காக அவன் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. லெப்பை என்ற காரணத்தினால் புத்தி சுவாதீனமற்றவனுக்கு தெரிந்தே ருக்கையாவை திருமணம் செய்து கொடுத்தார்கள் என்பது அவனை லெப்பைகளின் மேல் குரோதத்தை ஏற்படுத்துகிறது. அவன் வாசிக்கும் புத்தகங்களும், ராவுத்தர்கள் தம்மை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மிதித்து கேவலப்படுத்துவதும் இயல்பாகவே அவர்கள் மேலும் தீராக் கோபத்தை உருவாக்குகிறது.

ஆனால் மற்ற எவரையும் விட அவன் கோபம் கொள்வது தன்னுடைய இயலாமையைக் குறித்து மட்டுமே. தன் அக்காவின் நிலையைக் குறித்து அங்கலாய்க்கும் பொழுதும், அவன் மயக்கத்தில் கிடக்கையில் உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் போர்டர் குத்புதீனை காணும் பொழுதும் அவனுள் அது புகைந்து அடங்குவதை உணர முடிகிறது. அதற்கு காரணம் அவனால் துறக்க முடியாத அடையாளங்கள் மற்றும் அவற்றின் வழியாக வரும் கட்டுப்பாடுகள்தான்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகள் மிட்டாய் அமீதிடம் தேளும், பாம்பும் செய்து தரச் சொல்லி கேட்கையில் கருத்த லெப்பை மட்டும் சைத்தானை செய்து தரச் சொல்கிறான். அந்த உருவம் வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களால் உருவாக்கி கொடுக்கிறார் அமீது. அது கருத்த லெப்பையின் சைத்தான். அவன் எதிர்படுவது எல்லாம் வெறும் துருவங்கள் மட்டுமே. அவன் பாட்டி நாணியம்மா, ரதியம்மா இருவரும் நேரெதிர் துருவங்கள். ராவுத்தர்களூம், லெப்பைகளும் இரு துருவங்கள். அவனுடைய கனவுகளும், யதார்த்தங்களும் இரு வேறு மூலைகளில் உள்ளன.

மதம், இனம் என எல்லா அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாம்பன் மடத்தின் பாவாவை சந்திக்கும் பொழுது பெய்யும் மழை அவன் கல்லடிபடும் பொழுதும் பெய்கிறது. இறுதியில் இறைவனின் உருவத்தை அதே அமீதிடம் செய்ய வைத்து அதோடு தன்னை அழித்து கொள்ளும் பொழுது, கருத்த லெப்பை என்ற அடையாளங்கள் முழுவதுமாக மறைந்து வெறும் ஜபருல்லாவாக எழுகிறான் என்றே நான் புரிந்து கொண்டேன்.

இந்த நாவலில் வேறு சில இழைகளும் உள்ளன. குறிப்பாக ருக்கையாவின் கனவுகளும், எதார்த்தமும், இறுதியில் அதை உடைத்து அவள் வெளியேறுவதையும் சொல்லலாம். கருத்த லெப்பை விடுதலை அடையும் அதே நேரத்தில் அவளும் பித்து கொட்டகையை விட்டும், ஈசாக்கை விட்டும் விலகுவது குறிப்படத்தக்கது. அதைப் போலவே பூக்களையும், இலைகளையும் உதிர்க்கும் முக்கு முருங்கை மரம், கருத்த லெப்பையின் பூனை ‘ஹிட்லர்’ என சில படிமங்களும் உள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் விரிக்கப்படவில்லை

நாவலில் நடக்கும் சம்பவங்களின் கால அளவை கணிக்க முடியவில்லை. ஒரு மாதமா அல்லது ஒரு வருடமா என குறிப்பிட்டு சொல்ல முடியாது. இன்னும் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இவை விமர்சனங்கள் என்பதை விட எதிர்பார்ப்புகள் மட்டுமே.

கருத்த லெப்பை எளிதில் வாசித்து விடக் கூடிய சிறப்பான குறுநாவல்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புள்ள பக்கம்: ஜாகிர் ராஜாவின் தளம்