மௌக்ளி கதைகள்

அனேகமாக மௌக்ளிதான் கிப்ளிங்கின் மிகப் பிரபலமான படைப்பாக இருக்க வேண்டும். ஆனால் ஜங்கிள் புக்கில் மௌக்ளியைப் பற்றி மூன்றே மூன்று கதைகள்தான் உண்டு – Mowgli’s Brothers, Kaa’s Hunting, Tiger! Tiger! அவற்றில் நமக்குத் தெரியும் சித்திரம் மௌக்ளி ஓநாய்களிடம் வளர்ந்த சிறுவன், அவனை ஷெர் கான் என்ற புலி வேட்டையாட முயல்கிறது, அகேலா என்ற ஓநாய்த் தலைவன் பலவீனம் அடையும்போது மௌக்ளி ஓநாய்க் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான், மௌக்ளி கிராமத்திலும் நிம்மதியாக வாழமுடியவில்லை, ஆனால் புலியை வெல்கிறான் என்பதுதான். மௌக்ளியின் நண்பர்கள் சிறுத்தை பகீரா, கரடி பலூ, மலைப்பாம்பு கா. அவன் சகோதரர்கள் அவனுடன் வளர்ந்த ஓநாய்கள்.

இத்தனை அருமையான பாத்திரப் படைப்பை, களத்தை இன்னும் விவரித்திருக்கலாமே என்று நான் சிறு வயதில் கொஞ்சம் வருத்தப்பட்டேன். வளர்ந்த பிறகு செகண்ட் ஜங்கிள் புக் என்ற புத்தகத்தைப் படித்தேன். அதில் ஐந்து மௌக்ளி கதைகள் இருக்கின்றன. மூன்றுதான் மௌக்ளியின் சாகசங்கள். மௌக்ளி இப்போது காட்டுக்கு அரசன். தன்னை விரட்டிய கிராமத்தவரை பழிவாங்க மௌக்ளி கிராமத்தை அழிப்பது (Letting In the Jungle), ஊடுருவி வரும் செந்நாய்க் கூட்டத்தோடு போர் (Red Dog), காட்டிலாகாவில் வேலைக்கு சேர்வது (In the Rukh) என்று. இரண்டு கதைகளில் புலிக்கு எப்படி வரிகள் வந்தன (How Fear Came), புதையலைக் காக்கும் நாகம் (King’s Ankus) என்று கதை சொல்கிறார். செந்நாய்ப் போர் எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை.

இந்த எட்டு கதைகளையும் ஒன்றாகத் தொகுத்து All the Mowgli Stories என்று வெளியிட்டிருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். (எனக்கு முடி கொட்டிப் போன பிறகும் குழந்தைகள் புத்தகங்கள் பிடிக்கிறது. உள்ளத்தில் குழந்தையோ?) கட்டாயம் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!

கிப்ளிங்கை நாட்டார் மரபை, கதைகளை மேலை நாட்டவருக்கு கொண்டு போனவர் என்று நான் கருதுகிறேன். அதுவே அவரது சாதனை. அவரது sheer inventiveness-க்கு நான் பெரிய ரசிகன். இந்தக் கதைகள் எல்லாம் அவரே உருவாக்கின நாட்டார் கதைகள் அல்லவா?

தொடர்புடைய சுட்டிகள்:
கிப்ளிங்கின் ஜங்கிள் புக்
ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ்

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்

ஜஸ்ட் சோ ஸ்டோரீஸ் – சோ ச்வீட்

குழந்தைகளுக்கு எழுதுவது ஒரு கலை. அதில் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு. கிப்ளிங் அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஜஸ்ட் சோ ஸ்டோரீசைப் படிக்கக் கூடாது, குழந்தைகளுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அதுவும் சின்ன வயதிலேயே ஆங்கிலம் புரியும் குழந்தைகளுக்கு கட்டாயம் படித்துக் காட்ட வேண்டும். படங்களோடு இருந்தால் இன்னும் உத்தமம். பெரியவர்களுக்கே குஷி பிறக்கும்!

இதற்கு மேல் எதுவும் எழுத விரும்பவில்லை. இங்கே கதைகள் இருக்கின்றன, மகன், மகள், nephew, niece, நண்பர்களின் குழந்தைகள் யாருக்காவது படித்துக் காட்டுங்கள்! அப்படி யாரும் கிடைக்காவிட்டால் உங்கள் உள்ளேயே இன்னும் இருக்கும் குழந்தைக்காகப் படியுங்கள்!

தொடர்புள்ள சுட்டிகள்: ஜங்கிள்புக்

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்

கிப்ளிங்கின் “ஜங்கிள் புக்”

ஜங்கிள் புக்கைப் படிக்கும்போது எனக்கு பதினைந்து வயது இருக்கலாம். கிப்ளிங்கின் sheer inventiveness என்னை பிரமிக்க வைத்தது. ஓநாய்ப் பையன் மௌக்ளி, மலைப்பாம்பு காவின் கண்களும் நடனமும் என்று பல விதமான சித்தரிப்புகளை கற்பனை செய்யவே ஒரு அபாரமான புத்தி வேண்டும் என்று தோன்றியது. பற்றாக்குறைக்கு ஜங்கிள் புக் படத்தையும் பார்த்தேன். அதே ஃப்ரேம்வொர்க்கை வைத்துக்கொண்டு இன்னொரு அற்புதத்தை வால்ட் டிஸ்னிக்காரர்கள் படைத்திருந்தார்கள். குறிப்பாக பலு (கரடி), ஹாத்தி (யானை), கா, லூயி (குரங்கு), மௌக்ளி காதல் வசப்படுவது, பாட்டுகள் என்று கலக்கி இருந்தார்கள். கிப்ளிங்கின் கற்பனை எவ்வளவு வளமானதாக இருந்தால் இப்படி இன்னொரு கதையைப் படைக்க முடியும்!

இந்தியாவை பாம்புகள், யானைகள், Indian Rope Trick மாதிரி பல exotic விஷயங்கள் உள்ள ஒரு fantasy பூமியாக மேலை நாட்டவர்களுக்கு காட்டுவது, அதனால் புகழ் பெறுவது என்று (இன்றும் தொடரும்) ஒரு trend உண்டு. ஒரு விதத்தில் பார்த்தால் கிப்ளிங்தான் அதைத் தொடங்கி வைத்தார். ஆனால் அவரது கதைகளில் இல்லாததது patronizing tone. அவருடைய கண்களில் இந்தியர்களின் value system வேறு. அதை அவராலேயே முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பல இடங்களில் கோடி காட்டி இருக்கிறார். அப்படிப்பட்டவையே அவருடைய சிறந்த புனைவுகள். அவரை நாட்டார் மரபை ஆங்கில வாசகர்களுக்கு கொண்டு போகிறவர் என்று கருதுகிறேன். அதுவே அவரது ஸ்பெஷாலிடி. அதை அவரே கூட உணர்ந்ததில்லை என்று தோன்றுகிறது.

இதில் மௌக்ளி கதைகள் மூன்றுதான். முதல் கதையில் மௌக்ளி ஓநாய்க் கூட்டத்தில் சேர்வதும் பிரிவதும். இரண்டாவதில் கா குரங்குகளை வேட்டையாடுவது. மூன்றாவதில் மௌக்ளி ஷேர் கானை கொல்வது. மிச்சக் கதைகளில் எனக்குப் பிடித்தது ரிக்கி-டிக்கி-டாவி. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை.

கூகிள் புக்ஸில் கிடைக்கிறது.

நான் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதப் போவதில்லை. படியுங்கள், குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள், படிக்க வையுங்கள், சினிமா பாருங்கள், குழந்தைகளுக்கு காட்டுங்கள். அவ்வளவுதான்.

இரண்டு பாட்டுகளின் வீடியோக்கள் கீழே.

Bare Necessities

Louie’s Song

தொகுக்கப்பட்ட பக்கம்: கிப்ளிங் பக்கம்