கல்கி எழுதிய புத்தக அறிமுகங்கள்/விமரசனங்கள் என்று ஒரு புத்தகம் – படித்தேன் ரசித்தேன் – கிடைத்தது. நானே அறிமுகம் எழுதி போரடிக்கிறது. அதனால் 1953 ஜனவரியின்போது அவர் கு. அழகிரிசாமி யின் அன்பளிப்பு சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய விமர்சனத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன்.
கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு”
ஒருவன் நம்பத் தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், “என்னப்பா கதை சொல்லுகிறாயே?” என்கிறோம். “இதென்ன கதையா இருக்கிறதே”, “என்னடா, கதை அளக்கிறாய்?” என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, “கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகலடங்கியதாக இருக்கும்” என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.
அதே சமயத்தில் கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
“அது அப்படி நடந்திருக்க முடியாது.”
“இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.”
“இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.”
“அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன்று”
என்றெல்லாம் எடுத்துக் காட்டி, “ஆகையால் கதை சுத்த அபத்தம்! தள்ளு குப்பையில்!” என்று ஒரே போடாய்ப் போட்டுவிடுகிறார்கள்.
விமரிசர்கர்கள் இப்படி சொல்கிறார்களே என்பதற்காக கதை ஆசிரியர் வாழ்க்கையில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சிகளையே அப்பட்டமாக எழுதிக் கொண்டு போனால், படிக்கும் ரசிகர்கள் “நடை நன்றாய்த்தானிருக்கிறது. போக்கும் சரியாகத்தானிருக்கிறது. ஆனால் கதை ஒன்றுமில்லையே?” என்று ஏமாற்றமடைகிறார்கள். முன்னால் அவ்விதம் சொன்ன விமர்சகர்களும் ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டு, “உப்பு சப்பு இல்லை. விறுவிறுப்பு இல்லை. இதற்குக் கதை என்று பெயர் என்ன கேடு? தள்ளு குப்பையில்!” என்று சொல்லிவிடுகிறார்கள்.
என் சொந்த அனுபவத்தில் நான் கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டிருப்பது என்னவென்றால், வாழ்க்கையில் உண்மையாக நிகழும் பல சம்பவங்கள் கதை ஆசிரியர்கள் புனையும் அபூர்வக் கற்பனைகளைக் காட்டிலும் மிக அதிசயமானவை என்பதுதான். ஒரு சாதாரண உதாரணத்தைச் சொல்லுகிறேன்.
ராமச்சந்திரன் தன் தோழன் முத்துசாமியைத் தேடிக் கொண்டு மயிலாப்பூருக்குப் புறப்பட்டான். முத்துசாமி மயிலாப்பூரில் ஏதோ ஒரு சந்தில் வாடகை வீட்டில் இருக்கிறான் என்று மட்டும் அவனுக்குத் தெரியுமே தவிர, சரியான விலாசம் தெரியாது. அன்றைக்கு மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம் என்பதும் ராமச்ச்சந்திரனுக்குத் தெரியாது. மயிலாப்பூரில் நாலு மாடவீதிகளிலும் ஒரு லட்சம் ஜனங்கள் அன்று கூடி இருந்தார்கள்.
ராமச்சந்திரன் “இன்றைக்குப் பார்த்து வந்தோமே! என்ன அறிவீனம்! முத்துசாமியையாவது இந்தக் கூட்டத்தில் இன்று கண்டுபிடிக்கவாவது?” என்று எண்ணிக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போகத் தீர்மானித்தான். கூட்டத்தில் புகுந்து முண்டியடித்து அவன் போய்க் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவன் பேரில் தடால் என்று முட்டிக் கொண்டான். “அட ராமச்சந்திரா!” என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே சாக்ஷாத் முத்துசாமி நின்று கொண்டு பல்லை இளித்தான்!
இவ்வாறு ஒரு கதையில் எழுதினால் விமர்சகர்கள் பிய்த்து வாங்கிவிடுவார்கள். “ஒரு லட்சம் ஜனங்கள் இருந்த கூட்டத்தில் ராமச்சந்திரன் முத்துசாமியின் மேலேதானா முட்டி கொள்ள வேண்டும்? அது எப்படி சாத்தியம்? நம்பக் கூடியதாயில்லை” என்று ஒரேயடியாய்ச் சாதிப்பார்கள். ஆனால் மேற்கூறியது என் சொந்த அனுபவத்திலேயே நடந்திருக்கிறது. அதைக் காட்டிலும் பன்மடங்கு வியப்பளிக்கக் கூடிய அபூர்வ சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. நீங்கள் ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தால் உங்கள் ஒவ்வொருவருடைய அனுபவத்திலும் இம்மாதிரி எத்தனையோ நிகழ்ந்திருக்கும்.
ஆனாலும் அவற்றையெல்லாம் கதைகளில் அப்படியே எழுதினால் “ஒரு நாளும் நடந்திருக்க முடியாத சம்பவங்கள்” என்று விமர்சகர்கள் சொல்லுவார்கள். நீங்களும் நானும் அவர்களை ஆமோதித்து “கதை இயற்கையாக இல்லை” என்று சொல்லிவிடுவோம்.
ஆகவே கதை எழுதும் ஆசிரியர் கத்தியின் விளிம்பின் மேலே நடப்பதைக் காட்டிலும் கடினமான வித்தையைக் கையாள வேண்டியவராகிறார்.
கதையில் உள்ளத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும் வர வேண்டும். அதே சமயத்தில் “இப்படி நடந்திருக்க முடியமா?” என்ற சந்தகத்தை எழுப்பக் கூடிய நிகழ்ச்சிகளையும் விளக்க வேண்டும்.
பிரத்தியட்சமாகப் பார்த்த உண்மையான நிகழ்ச்சிகளாயிருக்கலாம். ஆனால் படிக்கும்போது “இது நம்பக் கூடியதா?” என்று தோன்றுமானால், கதை பயனற்றதாகிவிடுகிறது.
சுருங்கச் சொன்னால், கதையில் கதையும் இருக்க வேண்டும். அத சமயத்தில் அது கதையாகவும் தோன்றக் கூடாது!
இம்மாதிரி கதைகள் புனைவது எவ்வளவு கடினமான கலை என்பதைக் கதை எழுதும் துறையில் இறங்கி வெற்றியோ தோல்வியோ அடைந்தவர்கள்தான் உணர முடியும்.
இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீ கு. அழகிரிசாமி அத்தகைய கடினமான கலையில் அபூர்வமான வெற்றி அடைந்திருக்கிறார். மிக மிகச் சாதாரணமான வாழ்க்கைச் சம்பவங்களையும் குடும்ப நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொண்டு கதைகள் புனைந்திருக்கிறார். படிக்கும்போது இது கதை என்ற உணர்ச்சியே ஏற்படுவதில்லை. நம் நண்பர்கள், நம் பந்துக்கள், நமக்கு அக்கம்பக்கத்திலுள்ளவர்கள், நமக்குச் சற்று தூரத்தில் உள்ளவர்கள், நாம் நன்றாகக் கேள்விப்பட்டு அறிந்திருப்பவர்கள் ஆகியவர்களைப் பற்றியே படித்ததாகத் தோன்றுகிறது.
ஓரிடத்திலாவது “இப்படி நடந்திருக்குமா? இது நம்பத் தக்கதா?” என்று ஐயம் தோன்றுவதில்லை. ஆனாலும் கதை என்னமோ நம் கவனத்தைக் கவர்ந்து இழுத்துச் செல்கிறது. கதாபாத்திரங்கள் நம் உள்ளத்தை அடியோடு கவர்ந்துவிடுகிறார்கள்.
இந்நூலில் உள்ள கதைகளில் நாம் தினந்தோறும் பார்த்துப் பழகியவர்களையே பார்க்கிறோம்; அவர்களுடைய பேச்சுகளைக் கேட்கிறோம்; அவர்களுடைய இன்ப துன்பங்களில் பங்கு கொள்கிறோம்; அவர்களுடைய பெருமிதத்தில் நாமும் பெருமிதமடைகிறோம்; அவர்களுடைய ஆசாபங்கத்தில் நம் நெஞ்சையும் நெகிழ விடுகிறோம்.
இந்தக் கதைகளில் வருகிறவர்கள் எல்லாரும் சாதாரண மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும்தான். ஆயினும் அவர்களைக் கதை ஆசிரியர் ஏதோ ஜால வித்தையினால் அபூர்வமான கதபாத்திரங்கலாகத் திகழும்படி செய்திருக்கிறார். அவர்கள் நம்மை விட்டுப் போகாமல் சுற்றித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்படியும் செய்துவிட்டிருக்கிறார்.
குழந்தை சாரங்கராஜன் நம் கண்ணினும் இனிய கண்மணியாகிவிடுகிறான். அவனை அழைத்து வந்து ஏதேனும் ஒரு புத்தகத்தில் ‘அன்பளிப்பு‘ என்று எழுதிக் கொடுக்க நம் உள்ளம் துடிதுடிக்கிறது.
மங்கம்மாள் அரை அடி முன்னால் நகர்ந்து வந்து நின்று “எங்க வீட்டுக்கும்தான் ராஜா வந்திருக்கிறான். வேணும்னா வந்து பாரு” என்று சொல்லும் காட்சி மனதிலிருந்து அகலுவதில்லை. அவனைத் தொடர்ந்து சென்று அந்த ராஜாவை நாமும் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாகிறது.
கல்யாண கிருஷ்ணனைத் தொடர்ந்து அந்தமான் தீவு வரைக்கும் போக நாமும் தயாராகிறோம்; செல்கிறோம். ஆனால் அங்கேயிருந்தும் அவன் டிமிக்கி கொடுத்துவிட்டானே! ஒரு வேளை காஞ்சிபுரம் கருட சேவைக்குப் போனால் அவனைக் கண்டுபிடிக்கலாமோ?
நிருபமாவும் கோவிந்தராஜனும் கல்யாணம் செய்து கொண்ட பிறகு கட்டாயம் ஒரு தடவை மாமல்லபுரத்துக்குப் போகத்தான் செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து நாமும் போனால் என்ன?
ஐயோ! அழகம்மாள் எதற்காக அப்படிப் பிலாக்கணம் பாடி அழுகிறாள்? அவள் புருஷன் எதற்காக விம்முகிறான்? இரண்டு பேருக்கும் நடுவில் அகப்பட்டு அவர்களுடைய புதல்வன் கோபாலு அப்படித் தவிக்கிறானே! அவனுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்லித் தேற்றுவது?
இவ்விதமெல்லாம் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெள்ளத்தில் நம்மையும் இழுத்தடித்துத் தத்தளிக்கும்படி செய்திருக்கிறார்.
ஸ்ரீ கு. அழகிரிசாமிக்குக் கதை புனையும் கலை அற்புதமாக வந்திருக்கிறது. சாதாரண புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் அவருக்குக் கை கொடுத்து உதவி இருக்கிறார்கள்.
கதை ஆசிரியர் எதற்காக கதை எழுதுகிறார்? கடவுள் எதற்காக இந்த உலகத்தைப் படிக்கிறாரோ, அதே காரணத்துக்காகத்தான். இந்த உலகத்தில் எத்தனையோ குறைபாடுகள் இருக்கின்றன. இலக்கிய விமர்சகரை இந்த உலகத்தைப் பற்றி விமர்சனம் எழுதச் சொன்னால் இதில் உள்ள குற்றம் குறைகளை எடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கிவிடுவார்! ஆனாலும் இவ்வளவு குறைபாடுகளை உடைய உலகத்தை சிருஷ்டி செய்வதில் கடவுள் ஆனந்தம் அடைகிறார். இல்லாவிடில் இவ்வளவு சிரமமான சிருஷ்டித் தொழிலில் பிடிவாதமாக ஈடுபட்டிருக்கமாட்டார் அல்லவா? அது போலவே கதை ஆசிரியர்களும் கதை புனைவதில் ஏற்படும் ஆனந்தம் காரணமாகவே கதை எழுதுகிறார்கள. தாங்கள் எழுதும் கதைகளை யாராவது படித்தாலும் படிக்காவிட்டாலும், பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும், அதனால் ஊதியம் ஏதேனும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், கதை ஆசிரியர்கள் கதை எழுதிக் கொண்டுதானிருப்பார்கள்.
ஆனாலும் பிறர் படிக்கிறார்கள் என்றும் படித்துப் பாராட்டுகிறார்கள் என்றும் அறிந்தால் கதை ஆசிரியர்களுக்கு உற்சாகம் உண்டாகத்தான் செய்கிறது.
இன்ப துன்பங்களைக் கலந்து நிற்கும் எல்லாம வல்ல இறைவனுக்கே அவருடைய சிருஷ்டியைக் குறித்து பக்தர்கள் பாராட்டிப் புகழ்வதில் விசேஷ ஆனந்தம் ஏற்படுவதாக இதிகாச புராணங்களிலிருந்து அறிகிறோம்.
அப்படியிருக்க, சாதாரண இன்ப துன்பங்களுக்கு உரிய மனிதர்களான ஆசிரியர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?
ஸ்ரீ கு. அழகிரிசாமி அவர்களின் இந்த அருமையான சிறுகதைத் தொகுதியைத் தமிழ்நாட்டுச் சிறுகதை ரசிகர்கள் படித்துப் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். அதன் பயனாக ஸ்ரீ கு. அழகிரிசாமி அவர்கள் மேலும் மேலும் இத்தகைய அற்புத சிருஷ்டிகளைத் தந்து புதுத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்!
Like this:
Like ஏற்றப்படுகின்றது...