மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

அனேகமாக ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாகிறதாம்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கு.ப.ரா.வின். வீரம்மாளின் காளை சிறுகதையையும் கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! முதலில் இளமை இதோ இதோ Happy New Year! என்று ஏதாவது தமிழ் பாட்டு வீடியோவை இணைக்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் படிக்கும் நாலு பேர் மேல் பரிதாபப்பட்டு விட்டுவிட்டேன்.

இந்த வருஷத்தில் என்ன படிப்பது என்று பார்த்தால் இரண்டு வருஷம் முன்னால் போட்ட பட்டியலையே இன்னும் முடிக்கவில்லை. பேசாமல் பட்டியலை சின்னதாக்கிக் கொண்டேன். இந்த வருஷமாவது War and Peace படித்துவிட வேண்டும். கவிதைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.

போன வருஷம் நான் கண்டெடுத்த எழுத்தாளர்கள் F.X. Toole (Rope Burns), Patrick Modiano (Suspended Sentences), Ted Chiang மற்றும் Bernard Cornwell. தமிழில் குறிப்பிடும்படி புதிய எழுத்தாளர் எவரையும் நான் படிக்கவில்லை. எனக்குத்தான் தெரியவில்லை என்று தோன்றுகிறது. நண்பர்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள், தமிழ் புத்தகங்கள் யாராவது, ஏதாவது உண்டா?

நான் போன வருஷம் படித்தவற்றில் பரிந்துரைப்பவை கீழே:

சிறுகதைகள்/குறுநாவல்கள்:

  1. டெட் சியாங்கின் Exhalation சிறுகதை
  2. டெட் சியாங்கின் Truth of Fact, Truth of Feeling சிறுகதை
  3. டெட் சியாங்கின் Merchant and the Alchemist’s Gate சிறுகதை
  4. லா.ச.ரா.வின் பாற்கடல் சிறுகதை
  5. கு. அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் சிறுகதை
  6. ஜெயமோகனின் பழைய பாதைகள் சிறுகதை
  7. ஷோபா சக்தியின் கண்டிவீரன் சிறுகதை
  8. திலீப்குமாரின் சிறுகதைத் தொகுப்பு – ‘ரமாவும் உமாவும்
  9. அசோகமித்ரன் சிறுகதைபுலிக்கலைஞன்
  10. சுந்தர ராமசாமி சிறுகதை – பிரசாதம்
  11. ஐசக் அசிமோவின் SF சிறுகதைத் தொகுப்பு – ‘I, Robot
  12. பாட்ரிக் மோடியானோவின் குறுநாவல் தொகுப்பு – ‘Suspended Sentences
  13. தங்கர் பச்சானின் 2 சிறுகதைகள் – குடிமுந்திரி, வெள்ளை மாடு
  14. F.X. Toole எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு – Rope Burns (Film: Million Dollar Baby)
  15. பூமணியின் சிறுகதை – ‘ரீதி
  16. கு.ப.ரா.வின் சிறுகதை – வீரம்மாளின் காளை
  17. லா.ச.ரா.வின் சிறுகதை – மண்
  18. சுந்தர ராமசாமியின் சிறுகதை – ‘விகாசம்
  19. அ. முத்துலிங்கத்தின் சிறுகதை – ‘கடவுச்சொல்

சரித்திர நாவல்கள்:

  1. பெர்னார்ட் கார்ன்வெல்லின் உத்ரெட் நாவல்கள் – Last Kingdom, Pale Horseman, Lords of the North, Sword Song, Burning Land, Death of Kings, Pagan Lord, Empty Throne, Warriors of the Storm, Flame Bearer
  2. பெர்னார்ட் கார்ன்வெல்லின் ஆர்தர் நாவல்கள் – Winter King, Enemy of God, Excalibur
  3. பெர்னார்ட் கார்ன்வெல்லின் Grail நாவல்கள் – Archer’s Tale, Vagabond, Heretic & 1356
  4. ராபர்ட் ஹாரிசின் சிசரோ trilogy – Imperium, Lustrum & Dictator

மர்ம நாவல்கள்:

  1. அகதா கிறிஸ்டியின் ‘Murder in the Orient Express

கவிதைகள்

  1. ‘கவிதை’ – Jabberwocky
  2. குறுந்தொகை கவிதை – காமம் காமம் என்ப

அபுனைவுகள்:

  1. ஃபிலிப் பெடி எழுதிய A Walk in the Clouds (நியூ யார்க் நகரின் இரட்டை கோபுரத்தின் நடுவில் கயிற்றைக் கட்டி நடந்தவர் – Walk என்று திரைப்படமாகவும் வந்தது.
  2. ஏப்ரஹாம் லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை
  3. ராபர்ட் எல். ஹார்ட்க்ரேவ் எழுதிய ‘Nadars of Tamil Nadu
  4. பாரி எஸ்டப்ரூக்கின் அபுனைவு – Tomatoland
  5. ராபர்டோ சாவியானோவின் கட்டுரை – Angelina Jolie
  6. எம்.வி.வி.யின் Memoirs – “எனது இலக்கிய நண்பர்கள்
  7. லாரி பேக்கர் எழுதிய Manual of Cost Cuts for Strong Acceptable Housing

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

பாலகுமாரனுக்கு பிடித்த புத்தகங்கள்

பாலகுமாரனின் ஒரிஜினல் சுட்டி இங்கே. யார் போட்ட பட்டியலும் இன்னொருவருக்கு முழுதாக ஒத்துப் போகப் போவதில்லை, இருந்தாலும் அவர் சொல்லி இருக்கும் புத்தகங்களில் பெருவாரியானவை நல்ல படைப்புகள். வசதிக்காக பட்டியலை இங்கே மீண்டும் போட்டிருக்கிறேன், என் குறிப்புகளுடன்.

படித்த நாவல்கள்:

  1. கமலாம்பாள் சரித்திரம் – ராஜம் ஐயர்: கமலாம்பாள் சரித்திரத்தைத்தான் நான் தமிழின் முதல் நாவல் என்று கருதுகிறேன். பிரதாப முதலியார் ட்ரெய்லர் மாதிரிதான்.
  2. பொன்னியின் செல்வன்கல்கி: அற்புதமான கதைப் பின்னாலும் முடிச்சுகளும் கொண்ட நாவல். தமிழின் சிறந்த சரித்திர நாவல் இதுவே என்று ஒரு காலத்தில் எண்ணி இருந்தேன். இப்போது வானம் வசப்படும், மானுடம் வெல்லும் இரண்டும் பொ. செல்வனோடு முதல் இடத்துக்கு போட்டி போடுகின்றன.
  3. மோகமுள், செம்பருத்திதி.ஜானகிராமன்: மோகமுள் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று. செம்பருத்தி இப்போது சரியாக நினைவில்லை.
  4. மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன்தேவன் மிஸ்டர் வேதாந்தம் என் கண்ணில் தேறாது. ஜ. ஜகன்னாதன் நல்ல நாவல்.
  5. பசித்த மானுடம்கரிச்சான் குஞ்சு: எனக்கு முழுதாகப் புரிந்துவிட்டது என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  6. ஜே.ஜே. சில குறிப்புகள்சுந்தர ராமசாமி: படித்துப் பல வருஷம் ஆகிவிட்டது. சாதனை என்று அப்போது நினைத்தேன், மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.
  7. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்ஜெயகாந்தன்: பிரமாதமான பாத்திரப் படைப்பு. சாதனை.
  8. 18வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள்அசோகமித்திரன்: கரைந்த நிழல்கள் ஒரு tour de force. ப. அட்சக்கோடும் சிறந்த நாவல்.
  9. சாயாவனம்சா. கந்தசாமி: சாயாவனம்தான் நான் முதன்முதலாகப் படித்த இலக்கியம் என்று நினைக்கிறேன். கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.
  10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி: என் கண்ணில் இது முழுதாக வெற்றி அடையாத படைப்புதான்.
  11. வாடிவாசல்சி.சு.செல்லப்பா: குறுநாவல் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான புத்தகம்.
  12. தலைமுறைகள்நீல. பத்மநாபன்: சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. வட்டார வழக்குக்காகவே படிக்கலாம்.
  13. குறிஞ்சி மலர்நா. பார்த்தசாரதி: இன்று மகா தட்டையான படைப்பாகத்தான் தெரிகிறது. ஆனால் எழுதப்பட்டபோது இதன் லட்சியவாதம் பெரிய தாக்கத்தை உருவாக்கியது என்பதை மறுப்பதற்கில்லை.
  14. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி: நல்ல நாவல், படிக்க வேண்டிய நாவல்.
  15. வாசவேஸ்வரம்கிருத்திகா அற்புதமான நாவல்.
  16. தரையில் இறங்கும் விமானங்கள்இந்துமதியின் பிற புத்தகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும்போது எப்படி இந்த ஒரு புத்தகம் மட்டும் இலக்கியமாக இருக்கிறது என்று வியந்திருக்கிறேன்.
  17. பிறகுபூமணி இன்னும் ஒரு சிறந்த நாவல்.
  18. கதவு/கோபல்ல கிராமம்கி. ராஜநாராயணன்: கி.ரா.வெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் நோபல் நிச்சயம்.
  19. கடல்புரத்தில்வண்ணநிலவன்: பல வருஷங்கள் முன்னால் படித்தபோது என்னைப் பெரிதாகக் கவரவில்லை. மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும்.
  20. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்: சில புத்தகங்கள் மனதில் ஒரு ஸ்பெஷல் இடத்தைப் எடுத்துக் கொள்கின்றன. எ.பெ. ராமசேஷன் எனக்கு அப்படித்தான். படிக்காதவர்கள் அதிருஷ்டசாலிகள், அவர்களுக்கு ஒரு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  21. நாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்: இதுவும் ஒரு சாதனை.
  22. புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்: ஹெப்சிபா எழுத்தாளர். அவர் படைத்திருப்பது இலக்கியம். அவருக்கு பெண் எழுத்தாளர் என்று அடைமொழி எல்லாம் கொடுக்கத் தேவையில்லை.
  23. யவனராணிசாண்டில்யன்: சிறு வயதில் படித்தபோது இளஞ்செழியனின் சாகசங்கள் மனதைக் கவர்ந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவையெல்லாம் எம்ஜிஆர் பட சாகசங்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
  24. வழிப்போக்கன் – சாவி உப்பு சப்பில்லாத வாரப் பத்திரிகை தொடர்கதை. இதையெல்லாம் பாலகுமாரன் எப்படி விரும்பிப் படித்தாரோ தெரியவில்லை. இந்த லிஸ்டில் உள்ள மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

படிக்காதவை:

  1. வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராம்:
  2. எங்கே போகிறோம் – அகிலன்: அகிலன் உருப்படியாக எதையாவது எழுதி இருப்பார் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.
  3. அலைவாய்க் கரையில் – ராஜம் கிருஷ்ணன்:
  4. புதிய கோணங்கி – கிருத்திகா
  5. கடலோடி – நரசையா
  6. சின்னம்மாஎஸ்.ஏ.பி.
  7. படகு வீடு – ரா.கி.ரங்கராஜன்
  8. புயலில் ஒரு தோணி – ப.சிங்காரம்

சிறுகதைகள், தொகுப்புகள்:

  1. மங்கையர்க்கரசியின் காதல்வ.வே.சு.ஐயர்: முன்னோடி சிறுகதை. பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம்.
  2. புதுமைப்பித்தன் சிறுகதைகள்: புதுமைப்பித்தனைத்தான் நான் தமிழின் நம்பர் ஒன் எழுத்தாளர் என்று கருதுகிறேன். என்றாவது நான் பணக்காரன் ஆனால் அவரது எழுத்துகளை மொழிபெயர்த்து விளம்பரம் செய்து எல்லாரையும் படிக்க வைப்பேன்…
  3. மூங்கில் குருத்துதிலீப் குமார் மீண்டும் மீண்டும் anthologize செய்யப்படும் இந்தச் சிறுகதை சிறப்பானதுதான். ஆனால் திலீப் குமாரின் கடவு சிறுகதையே எனக்கு எல்லாவற்றிலும் மிகவும் பிடித்தமானது.
  4. சிறிது வெளிச்சம்கு.ப.ரா.: நல்ல சிறுகதை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
  5. தெய்வம் பிறந்ததுகு. அழகிரிசாமி
  6. கலைக்க முடியாத ஒப்பனைகள்வண்ணதாசன்: நல்ல சிறுகதை.
  7. சிறகுகள் முறியும்அம்பை: இந்த மாதிரி பெண்ணிய சிறுகதை எழுத அம்பைக்கு சொல்லித் தர வேண்டுமா என்ன?
  8. இன்று நிஜம் – சுப்ரமண்ய ராஜு
  9. தேவன் வருகைசுஜாதா
  10. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், ஒரு மனுஷிபிரபஞ்சன்
  11. கல்லிற்கு கீழும் பூக்கள் – மாலன்
  12. அப்பாவும் இரண்டு ரிக்ஷாக்காரர்களும் – ம.வெ. சிவகுமார்
  13. பச்சைக்கனவுலா.ச.ரா.
  14. நுணலும் புனலும்ஆ. மாதவன்
  15. மௌனி சிறுகதைகள் – மௌனி
  16. நினைவுப் பாதை – நகுலன்
  17. சம்மதங்கள் – ஜெயந்தன்
  18. நீர்மைந. முத்துசாமி பேரை கிளிக்கினால் அழியாச்சுடர்கள் தளத்தில் படிக்கலாம். எனக்கு சிறுகதை புரியவில்லை.
  19. சோற்றுப்பட்டாளம் – சு. சமுத்திரம்
  20. குசிகர் குட்டிக் கதைகள் – அ. மாதவய்யா
  21. ஒரு ஜெருசேலம் – பா. ஜெயப்ரகாசம்
  22. ஒளியின் முன்ஆர். சூடாமணி

கவிதைகள்

  1. அன்று வேறு கிழமை – ஞானக்கூத்தன்
  2. பெரிய புராணம் – சேக்கிழார்
  3. நாச்சியார் திருமொழி – ஆண்டாள்
  4. அழகின் சிரிப்பு – பாரதிதாசன்
  5. வழித்துணை – ந. பிச்சமூர்த்தி
  6. தீர்த்த யாத்திரை – கலாப்ரியா
  7. வரும் போகும் – சி. மணி
  8. சுட்டுவிரல்/பால்வீதி – அப்துல் ரஹ்மான்
  9. கைப்பிடி அளவு கடல் – தர்மு சிவராமு
  10. ஆகாசம் நீல நிறம் – விக்ரமாதித்யன்
  11. நடுநிசி நாய்கள் – சுந்தர ராமசாமி

கட்டுரைகள்

  1. பாரதியார் கட்டுரைகள் – சி. சுப்பிரமணிய பாரதி
  2. பாலையும் வாழையும் – வெங்கட் சாமிநாதன்
  3. சங்கத் தமிழ் – கலைஞர் மு. கருணாநிதி
  4. வளரும் தமிழ் – தமிழண்ணல்
  5. மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் – ஞானி
  6. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் – வைரமுத்து

வாழ்க்கை சரித்திரம்

  1. என் சரித்திரம் – உ.வே. சாமிநாத ஐயர்
  2. காரல் மார்க்ஸ் – வெ. சாமிநாத சர்மா

நாடகங்கள்

  1. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்சி. என். அண்ணாதுரை எழுதிய இந்த நாடகம் என் ரசனைக்கு ஒத்து வராவிட்டாலும் தமிழுக்கு முக்கியமான நாடகம்தான். ஆவணம் என்ற விதத்திலும் முக்கியமானது.

மொழிபெயர்ப்புகள்:

  1. அழிந்த பிறகு, பாட்டியின் நினைவுகள் – சிவராம கரந்த்
  2. அந்நியன் – ஆல்பெர் காம்யு
  3. வால்காவிலிருந்து கங்கை வரைராகுல சாங்க்ரித்தியாயன் இன்னுமொரு பிரமாதமான எழுத்து. இதை பாலகுமாரன் கட்டுரை என்று வரிசைப்படுத்தி இருக்கிறார்!
  4. சிறுகதைகள் – ஓ. ஹென்றியின் சிறுகதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். Gift of the Magi, Last Leaf மாதிரி ஒரு சில சிறுகதைகளே மனதில் நிற்கின்றன. அவரை பேரிலக்கியம் படைத்தவர் என்று சொல்வதற்கில்லை.

இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம். என் நினைவில் தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், லா.ச.ரா, அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும் படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். —— பாலகுமாரன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

மாட்டுப் பொங்கல் ஸ்பெஷல் – சி.சு. செல்லப்பாவின் “வாடிவாசல்”

மீள்பதிப்பு. (சிறு திருத்தங்களுடன்)

மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் என்ற குறுநாவல்தான் நினைவு வருகிறது. ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மன நிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும் ‘ என்ற அசரீரிக் குரல் தமிழ மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை என்பதும் ஒரு நல்ல ஜல்லிக்கட்டு சிறுகதை.

உங்களுக்கு நினைவிருக்கும் நல்ல மாட்டுப்பொங்கல், பொங்கல், ஜல்லிக்கட்டு கதைகள் பற்றி எழுதுங்களேன்!

கு.ப.ரா.வின் “கனகாம்பரம்”

அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து இன்னும் ஒரு சிறுகதை.

எனக்கு மிகவும் பிடித்த கு.ப.ரா. சிறுகதை கனகாம்பரம்தான். நேரடியாக எழுதப்பட்ட கதைதான். ஆனாலும் மனிதர்களின் அந்தராத்மாவை நுட்பமாக படம் பிடித்துக் காட்டிவிடுகிறார்.

கு.ப.ரா.வின் சில சிறுகதைகள் மட்டுமே உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. அவர் எழுதிய நல்ல சிறுகதைகளின் எண்ணிக்கை குறைவே. ஆனாலும் அவர் முக்கியமான தமிழ் எழுத்தாளரே; அதற்கு காரணம் அவரது உச்சத்தைத் தொட்ட சிறுகதைகளின் தரம் மட்டுமல்ல; அவரது சிறுகதைகளின் ambience-உம் கூடத்தான். ஒரு மாபெரும் சமூக மாற்றம் – ஐரோப்பிய விழுமியங்களை நாம் அறிந்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும், நமது மத்திய தர வர்க்கமும் அதன் விழுமியங்களும் உருவாகும் தருணம் – நடக்கும் தருணத்தில் அவர் எழுதினார். பழைய விழுமியங்களை கைகழுவிவிட்டு தான் ஒரு புரட்சிக்காரன் என்று காட்டிக் கொள்ளும் ஆர்வம், அதே நேரத்தில் ரத்தத்தில் ஊறிய பழைய விழுமியங்களை உண்மையாக கைவிட முடியாத மனநிலையைக் காட்ட விரும்பினார். அது இந்த சிறுகதையில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. எனக்கு அவரே அந்த மாதிரி இரண்டும்கெட்டான் நிலையில்தான் இருந்தார் என்றே தோன்றுகிறது. காமத்தை பின்புலமாக வைத்து பல கதைகள் எழுதினாலும், அவருடைய உள்மனதில் platonic, உன்னத காதல் என்ற ஒரு பிம்பம் இருந்திருக்க வேண்டும். (நூருன்னிசா கதை, ஏமாற்றம் அளித்த காணாமலே காதல் சிறுகதைத் தொகுப்பு)

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆச்சரியம் இது ஜெயமோகனின் பெரிய லிஸ்டில் கூட இடம் பெறவில்லை. என் anthology-யில் இடம் பெறும்.

அலையன்ஸ் பதிப்பகம் கு.ப.ரா.வின் எல்லா எழுத்துகளையும் – மொழிபெயர்ப்புகள் உட்பட – தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சுஜாதா, ஆர்வி நால்வரும் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள்

சமீபத்தில் சுஜாதாவுக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நான் அடிக்கடி quote செய்வது ஜெயமோகனின் சிறுகதை சிபாரிசுகள், மற்றும் எஸ்.ரா.வின் சிபாரிசுகள். அப்புறம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள் என்றும் ஒரு லிஸ்ட் போட்டிருந்தேன். நாங்கள் நான்கு பேருமே சிறந்தது என்று சொல்லும் சிறுகதைகள்:

  1. அசோகமித்ரனின் புலிக்கலைஞன்
  2. திலீப் குமாரின் கடிதம்
  3. கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு
  4. கு. அழகிரிசாமியின் அன்பளிப்பு
  5. சுந்தர ராமசாமியின் பிரசாதம்
  6. வண்ணநிலவனின் எஸ்தர்

ஜெயமோகன், எஸ்.ரா., சுஜாதா ஆகியோர் எங்கே, நீ எங்கே என்று நினைப்பவர்களுக்காக: அவர்கள் மூன்று பேரும் தேர்ந்தெடுத்த, நான் தேர்ந்தெடுக்காத சிறுகதைகள்.

  1. ஆ. மாதவனின் நாயனம்
  2. வண்ணதாசனின் நிலை
  3. கு.ப.ரா.வின் விடியுமா?

இவை மூன்றுமே நல்ல சிறுகதைகள்தான். ஆனால் என் லிஸ்டில் வராது.

நாங்கள் நால்வரும் சிறுகதைகளை தேர்ந்தெடுக்க வேறு வேறு methodology-களை பயன்படுத்தி இருக்கிறோம்.

ஜெயமோகன் தன் கணிப்பில் சிறந்த சிறுகதையா இல்லையா என்று மட்டும் பார்க்கிறார். எத்தனை சிறுகதை இந்த எழுத்தாளருக்கு என்றெல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. தன் கணிப்பில் சிறந்த சிறுகதைகள் என்னவோ அவை அத்தனையும் லிஸ்ட் போட்டுவிட வேண்டும் என்று நினைக்கிறார். உதாரணமாக புதுமைப்பித்தனின் 12 கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர் லிஸ்ட் மிக பெரியது. 250+ சிறுகதைகள் இங்கே உண்டு.

சுஜாதா ஒரு எழுத்தாளருக்கு ஒரு கதை மட்டும் என்ற விதி வைத்திருக்கிறார். அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சு.ரா., கி.ரா. தி.ஜா. போன்ற மாஸ்டர்களுக்கு ஒரே கதைதான் என்பது கொஞ்சம் கடுமையான விதி. அவருடைய லிஸ்ட் இதனால் மிக குறுகிவிட்டது.

எஸ்.ரா. இருவருக்கும் நடுவில். நூறு சிறுகதைகள் உள்ள லிஸ்ட் என்று arbitrary ஆக முடிவு செய்துவிட்டார். ஒரு எழுத்தாளருக்கு இரண்டு அல்லது மூன்று சிறுகதைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்று அவருக்கு ஒரு கணக்கு இருக்கிறது.

இந்த லிஸ்டில் சில ஆச்சரியங்கள் இருக்கின்றன. புதுமைப்பித்தன் இல்லை. தி.ஜா. இல்லை. கி.ரா. இல்லை. காரணம் இந்த methodology-தான். சுஜாதா ஒரு எழுத்தாளரின் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்தது எஸ்.ராவின் எண்ணத்தில் அவரது மூன்றாவது அல்லது நான்காவது சிறந்த கதையாக இருந்தால் போச்சு. லிஸ்டில் வராது!

நான் ஏறக்குறைய ஜெயமோகன் methodology-யைப் பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு பிடித்த சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்றுதான் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என் வாசிப்பு இந்த மூன்று பேர் அளவுக்கு பரந்த வாசிப்பு இல்லை. அப்புறம் நான் இவர்களைப் போல தேர்ந்த வாசகன் இல்லை, ஆரம்ப நிலைக்கு கொஞ்சம் மேற்பட்ட வாசகன், அவ்வளவுதான். என் தேர்வுகளின் அடிப்படை என் ரசனை மட்டுமே. பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம், நடு நவீனத்துவம் என்றெல்லாம் நான் யோசிப்பதில்லை. எனக்கு பிடித்திருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அப்புறம் எனக்கு வரலாறு தெரியாது. ஒரு கதை என்ன தாக்கத்தை உருவாக்கியது என்றெல்லாம் நான் கவலைப்படுவதில்லை, தெரியவும் தெரியாது. எல்லாவற்றையும் விட முக்கியம் – நான் அமேரிக்கா வந்து 18 வருசம் ஆகிவிட்டது. என்னுடைய ரேடாரில் இருப்பது அனேகமாக நான் இங்கே வருவதற்கு முன் கேள்விப்பட்ட எழுத்தாளர்களே. ஒரு பெருமாள் முருகனையும் தமயந்தியையும் யூமா. வாசுகியையும் நான் படிப்பதும் படிக்காமல் இருப்பதும் தற்செயலே. எனக்கு தெரிந்த நவீன தமிழ் இலக்கியம் 92-இல் தேக்கம் அடைந்திருக்கிறது. 🙂 இப்போது இணையத்தின் புண்ணியத்தில் இந்த தேக்கம் கொஞ்சம் கொஞ்சம் உடைந்திருக்கிறது.

இந்தியாவிலும் என்ன படிப்பது என்று தெரியாமல் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த பிரச்சினை கொஞ்சம் அதிகமாக உண்டு என்று நினைக்கிறேன். லிஸ்ட் போடுவதும், படிக்க சிபாரிசு செய்வதும் என்ன படிப்பது என்று யோசிப்பவர்களுக்கு கொஞ்சமாவது உதவியாக இருந்தால் ஒரு திருப்தி கிடைக்கும்.

அன்பளிப்பு தவிர்த்த மற்ற கதைகள் அழியாச்சுடர்கள் ராம் புண்ணியத்தில் இணையத்தில் கிடைக்கின்றன. அதையும் ஒரு நாள் போடாமலா போய்விடுவார்? போட்டுவிட்டார். 🙂

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகன் தேர்வு
எஸ்.ரா. தேர்வு
சுஜாதா தேர்வு
ஆர்வி தேர்வு

இந்திரா பார்த்தசாரதி இன்டர்வ்யூ

நண்பர் முரளி இ.பா. ஹிந்துவுக்கு அளித்த பேட்டி என்று இந்த சுட்டியை கொடுத்திருந்தார். அவருக்கும் ஹிந்துவுக்கும் நன்றி!

என் கண்ணில் பட்டவை:
தன் சிறு வயதில் கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு, தி.ஜா. (இ.பா.வின் ஆங்கில ஆசிரியராம்) ஆகியோரை இவர் பயங்கர ஹீரோ வொர்ஷிப்புடன் ஆவென்று பார்ப்பாராம்.
அவருக்கு பிடித்த அவரின் புனைவுகள்: குருதிப்புனல், உச்சி வெயில், வெந்து தணிந்த காடுகள்
இ.பா. இன்றைய முக்கிய தமிழ் எழுத்தாளர்கள் என்று கருதுபவர்கள்: ஜெயமோகன், எஸ்.ரா., சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன். (சாருவின் ஒரே ஒரு புத்தகத்தை – ஜீரோ டிகிரி – மட்டுமே படித்திருக்கிறேன்; அதை மட்டும் வைத்துப் பார்த்தால் சாரு ஒரு முக்கியமான எழுத்தாளர் என்று எனக்கு தோன்றவில்லை. கவிதைகளை கண்டதும் நான் ஓடிவிடுவது வழக்கம், அதனால் மனுஷ்யபுத்திரனை நான் இது வரை படித்ததில்லை.)

சுவாரசியமான பேட்டி, படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

  • இ.பா. ஹிந்துவுக்கு அளித்த பேட்டி
  • குருதிப்புனல்
  • கால வெள்ளம் – இ. பா.வின் முதல் நாவல்
  • ராமானுஜர் – இ. பா. எழுதிய நாடகம்
  • ஏசுவின் தோழர்கள்
  • 2010 – இந்திரா பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ