விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன்

எனக்கு சிறு வயதிலிருந்தே கவிதை என்றால் கொஞ்சம் ஒவ்வாமை. பாரதியைத் தவிர்த்து வேறு யார் கவிதைகளையும் விரும்பிப் படித்ததில்லை. 20-22 வயதில் பாரதியின் கவித்துவத்தை, உத்வேகத்தை மலையாளி நண்பன் ஒருவனுக்கு மொழிபெயர்க்க முடியாமல் போன நொடியிலிருந்து பாரதியே நல்ல கவிஞர்தானா என்று கொஞ்சம் சந்தேகம். தமிழில் பாரதியையும் பிச்சமூர்த்தியையும் விட்டால் சுமாரான கவிஞர்கள் கூட கிடையாது என்றுதான் நினைத்திருந்தேன். (அப்போது சங்க இலக்கியம், கம்பன் பற்றி எல்லாம் ஸ்னானப்ராப்தி கூட கிடையாது.) பத்து வருஷத்துக்கு முன்பு கூட எனக்குப் பிடித்த கவிதைகள் என்று தமிழ் ஆங்கிலம் எல்லாவற்றையும் சேர்த்து 20-30 சொல்ல முடிந்தால் அதிகம். 50 வயதுக்குப் பிறகுதான் எனக்கு நற்றிணையும் குறுந்தொகையும் அகநானூறுமே பிடிபட ஆரம்பித்தது. (ஏ.கே. ராமானுஜன் வாழ்க!)

விஷ்ணுபுரம் விருதை தமிழின் முக்கிய விருதுகளில் ஒன்றாகக் கருதுகிறேன்.  விருது பெற்றவர்கள் பற்றி வரும் கட்டுரைகளை ஆர்வத்துடன் படிப்பேன். ஆனால் என் கவிதை ஒவ்வாமையால் கவிஞர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும்போதெல்லாம் அந்தக் கட்டுரைகளை புறம் தள்ளிவிடுவேன்; அப்படியே படித்தாலும் மேலோட்டமாக skim செய்வேன், அவ்வளவுதான்.

இந்த முறை விக்ரமாதித்யன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் அப்படித்தான். ஆனால் நாளை அமெரிக்கா திரும்ப வேண்டும், இரவு தூக்கம் பிடிக்கவில்லை. விக்ரமாதித்யன் பற்றி ஜெயமோகன் எழுதியதை படிக்க ஆரம்பித்தேன். அவரது கண்ணில்:

லக்ஷ்மி மணிவண்ணன் ஒருமுறை உரையாடும் போது சொன்னார். அவருடைய கவிதைகளைப் பிறிதொருவர் எழுதியிருந்தால் அவை கவிதைகள் ஆகாது என்று. கவிதையை எழுதிவிட்டு அதனருகே நின்றிருக்கிறார் அவர். கவிதையைத் தன் வாழ்க்கையால் சூழ வளைத்து ஒரு பின்புல உலகை உருவாக்குகிறார். கவிதைக்கு விரிந்த அனுபவப் புலத்தை தன் வாழ்க்கையால் அவர் அளிக்கிறார். ஆகவே அவருடைய கவிதை என்பதனால் மட்டுமே அவை கவிதைகள்.

ஜெயமோகனின் இந்த முத்தாய்ப்பை நான் வன்மையாக மறுக்கிறேன். விக்ரமாதித்யன் மது அருந்தினால் எனக்கென்ன, மாடு மேய்த்தால் எனக்கென்ன? எழுத்தாளனும் கவிஞனும் தன் எழுத்தின் வீச்சை எப்படி வந்தடைகிறான் என்பது வெறும் மேலதிகத் தகவல் மட்டுமே. அது சில சமயம் சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் எழுத்தாளனின் ஆளுமையும் வாழ்க்கையும்தான் அவனது வரிகளை கவிதை ஆக்குகின்றன என்றால் அது கவிதையே அல்ல என்று நான் உறுதியாகக் கருதுகிறேன்.

மேலும்

கவிஞன் சாம்பல் கரைக்க
கங்கையும் காணாது குமரியும் போதாது!

இதோ
இன்னும் சிறிது நேரத்தில் விடிந்துவிடும்
இந்த
பவளக்கொடி கூத்து முடிந்துவிடும்
இவன்
அர்ச்சுன மகாராசா வேஷம் கலைந்து ஊர்திரும்பலாம்
இன்னும்
இரண்டு மூன்று நாளைக்குக் கவலையில்லை
குடிக்கூலி பாக்கி
கொடுத்துவிடலாம்
கொஞ்சம்
அரிசி வாங்கிப் போட்டுவிடலாம்
வீட்டுச் செலவுக்கும்
திட்டமாகத் தந்துவிடலாம்
பிள்ளைகளுக்கு
பண்டம் வாங்கிக்கொண்டு போகலாம்
சொர்க்கம் ஒயின்ஸில்
கடன் சொல்ல வேண்டாம்
இன்னொரு நாள் இன்னொரு திருவிழாவில்
கூத்துப்போடும்வரை எதிர்பார்த்து
காத்திருக்கவேண்டிய மனசு
இஷ்டத்துக்கும் கொண்டாடும் இன்று

கற்பூர வாசனை சரியாகத் தெரியாத எனக்கே இது கவிதை என்று புரிகிறது. ஆளுமைதான் இதை எல்லாம் கவிதை ஆக்குகிறது என்பது விக்ரமாதித்யனை குறைத்து மதிப்பிடுவது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

சில சமயம் கவிதையும் எழுத்தும் உருவான process சுவாரசியமாக இருக்கிறதுதான். ஆனால் ஷேக்ஸ்பியரின், பெர்னார்ட் ஷாவின், பிரேம்சந்தின், தி.ஜா.வின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களது output-தான் முக்கியம், எழுத்து உருவான process ஒரு அடிக்குறிப்பு (footnote) மட்டுமே. விக்ரமாதித்யனுக்காக வேறு விதிகள் இருக்க முடியாது.

என் போன்ற ஞானசூன்யங்களை விடுங்கள், “ஆகாசம் நீல நிறம்” தொகுப்பை 1987-இல் படித்தபோதே ஜெயமோகன் விக்ரமாதித்யனின் ஆளுமையைப் பற்றி அறிவாரா? இல்லை படித்த பிறகு அண்ணாச்சியை அறிமுகம் செய்துகொண்டாரா? அறிமுகம் ஆன பிறகு கவிதைத் தொகுப்பைப் பற்றி ஜெயமோகனுடைய எண்ணங்கள் மாறினவா என்ன? அவற்றை முதலில் அவர் குப்பை என்று நினைத்தார், பிறகு அண்ணாச்சி பழக்கம் ஆன பிறகு அவை உன்னதமான கவிதைகளாக மாறிவிட்டனவா? இது என்ன பைத்தியக்காரத்தனம்?

ஜெயமோகன் தேர்ந்த வாசகர், விமர்சகர். இலக்கியம் என்று வந்துவிட்டால் அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர். சில சமயம் அப்படி அலசாமல் இலக்கியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலை எடுக்கிறார், எடுத்திருக்கிறார். உதாரணமாக நவீனத்துவம், பின்நவீனத்துவம் இதெல்லாம் என்ன என்று புரியாதவர்களுக்கு பாலகுமாரனிலிருந்து அசோகமித்திரனுக்கு போவது கடினம் என்பார். பாலகுமாரனைக் கடந்து அசோகமித்திரனையே படிக்க முடியாதவன், அசோகமித்திரன் எழுத்தே புரியாதவன், நவீனத்துவம் theory பற்றி எங்கே படிக்கப் போகிறான், எப்படி புரிந்து கொள்வான்? அப்படி முதலில் theoretical foundation-ஐ நன்கு கற்று பிறகுதான் அசோகமித்திரனைப் படிப்பான் என்பது பகல் கனவு. அவரே கூட புனைவுகளைப் படித்த பிறகுதான் புனைவுகளை வகைப்படுத்தி இருப்பார், அப்படி வகைப்படுத்துவதின் அடிப்படைகளைப் பற்றி படித்திருப்பார், புரிந்து கொண்டிருப்பார் என்பதுதான் என் யூகம்.

அண்ணாச்சியின் ஆளுமை அவரது கவிதைகளின் கவர்ச்சியை ஜெயமோகனுக்கு இன்னும் அதிகரித்திருக்கலாம். ஆனால் அடிப்படையில் அவை நல்ல கவிதைகளாக இல்லாவிட்டால் ஒரு நாளும் எழுதுபவரின் ஆளுமை அவற்றை கவிதைகளாக மாற்ற முடியாது. குடிகாரர்கள், நிலையான வாழ்க்கை அமையாதவர்கள் எழுதுவதெல்லாம் நல்ல கவிதை ஆகிவிடுமா என்ன? ஆளுமை, பின்புலம் தனக்கு இன்னும் ஆழ்ந்த புரிதலைத் தருகிறது என்று சொல்ல வந்தவர் இந்த வரிகளை கவிதை ஆக்குவது அண்ணாச்சியின் ஆளுமைதான் என்று சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.

வேறு வழியில்லை 🙂 விக்ரமாதித்யனின் கவிதைகளை நானேதான் படித்து எனக்கு ஒத்து வருமா என்ற முடிவுக்கு வரவேண்டும். ஜெயமோகன் போட்டிருக்கும் கோட்டை என்னால் ரோடாக மாற்றிக் கொள்ள முடியாது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தொகுக்கப்பட்ட பக்கம்: விமர்சனம்

இலக்கிய அழகியல் தேவைதானா?

ஜெயமோகனின் ஒரு பதிவில் ஒரு வாசகர்

நான் இந்தக்கதை இந்தவகையான அழகியல்கொண்டது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உண்டா? இந்த விமர்சன முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் வாசித்தால் இலக்கியம் புரியாதா? இவை ஏன் எனக்கும் இலக்கியத்திற்கும் நடுவே வர வேண்டும்?

என்று கேட்டிருந்தார். ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவருடைய நாவல் என்ற புத்தகத்தின் தேவை என்ன, இந்த மாதிரி புத்தகங்களை வகைப்படுத்தி என்ன ஆகப் போகிறது என்று கேட்டேன். கொஞ்சம் கூட எரிச்சல் அடையாமல் பதில் சொன்னார். இத்தனை வருஷம் கழித்தும் ஏறக்குறைய அதே கேள்வி-பதிலைப் படிக்கும்போது கொஞ்சம் புன்முறுவல் வந்தது. எனக்கு முன்னால் பத்து பேர் கேட்டிருப்பார்கள், இன்னும் பத்து பேர் கேட்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் அன்றும் சரி இன்றும் சரி நான் ஜெயமோகனிடமிருந்து வேறுபடும் புள்ளி இது. ஜெயமோகன்

நீங்கள் ஒரு தாய் உணவகத்துக்குச் செல்கிறீர்கள். அங்கே சீன உணவுக்குரிய சுவைச்சாறை [sauce ] எதிர்பார்க்க மாட்டீர்கள். அந்த தாய் உணவு என்ன வகை, அதன் தனிச்சுவை என்ன என்று தெரிந்திருப்பீர்கள். அதைச் சுவைக்க தயாராக இருப்பீர்கள். என் நாக்கு ஒன்றுதான், எளிய சுவைஞன் நான், நான் ஏன் சமையற்கலை பற்றியும் சமையல்வடிவங்கள் பற்றியும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று கேட்க மாட்டீர்கள். அங்கே இட்லிச்சுவையை எதிர்பார்த்தால் நீங்கள் ஒரு கோமாளி.

என்று oversimplify செய்கிறார். அந்த வாசகர் – எந்த வாசகருமே சரி – அசோகமித்திரன் பாணியை எதிர்பார்த்து ஜெயமோகனைப் படித்தேன், ஏமாற்றம் அடைந்தேன் என்றா சொல்கிறார்? கிடைப்பதை சாப்பிடுவேன், எனக்கு சுவை பிடித்திருந்தால் போதும் என்கிறார். சீன உணவகத்தில் இட்லி நன்றாக இருந்தால் சாப்பிடக் கூடாது என்று என்ன விதி?

அவரது இன்னொரு oversimplification –

பிரியாணி நல்லது, பால்பாயசமும் சுவையானது. பால்பாயசத்தில் ஒருதுண்டு பிரியாணி விழுந்தால் சாப்பிடமுடியாது.

பிரியாணி துண்டு விழுந்த பாயசத்தை சாப்பிட முடியாதுதான், ஆனால் அந்த முடிவுக்கு வர பாயசத்திற்கு பசும்பால் பயன்படுத்தப்பட்ட்தா, எருமைப்பாலா, சிக்கன் பிரியாணியா, மட்டனா, பிரியாணி மொகலாயர் காலத்தில் முதன்முதலாக சமைக்கப்பட்டதா, இல்லை வேத காலத்திலா, என்ற ஆராய்ச்சி தேவையற்றது என்று அவர் பாணியிலேயே நானும் oversimplify செய்கிறேன்.

ஜெயமோகன் பாணியிலேயே சொன்னால் சோற்றை சுவைத்தால் மட்டும் போதாது, அரிசி பொன்னி அரிசியா இல்லை சோனா மசூரியா என்று தெரிந்து கொள்வதில் ஜெயமோகனுக்கு ஆர்வம் இருக்கிறது. அது அவருக்குத் தேவையாகவும் இருக்கிறது. எல்லாருக்கும் ஆர்வம் இருக்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? சுவை மட்டுமே போதும் என்பவர்களுக்கு சோறு நன்றாக இருந்தால் போதும்!

ஜெயமோகனின் சிறப்பான வாதமாக நான் கருதுவது

அவ்வாறு இலக்கணத்தை ஓரளவேனும் அறியாவிட்டால் நமக்குப் பழகிய, நாம் ஏற்கனவே ரசித்த ஒன்றை ஒவ்வொரு படைப்பிலும் எதிர்பார்ப்போம். ஏதேனும் ஒன்றை அளவுகோலாகக் கொண்டு பிறவற்றை நிராகரிப்போம். அதைவிடப் பெரும்பிழை ஓர் அழகியல்வடிவம் எதை தன் தனிச்சிறப்பாக்க் கொண்டுள்ளதோ அதையே அதன் குறைபாடு என்று புரிந்துகொள்வோம். அவ்வாறு எழுதப்படும் சக்கைவிமர்சனங்கள் இன்று ஏராளமாக உருவாகின்றன. இலக்கியத்திற்கு இவை பெருந்தடைகள்.

வாதம் சிறப்பானதுதான், ஆனால் அது universal truth அல்ல. ஆனால் அது அவருடைய வாசிப்பு உலகத்தில் உண்மையாக இருக்கலாம், அது எல்லாருக்கும் பொருந்துவது அல்ல என்பதைத்தான் அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் வாசிப்பில் அப்படி படைப்பில் புதிய ஒன்றைப் பார்க்கும் தருணம்தான் எனக்கு வாசிப்பின் உச்சக்கட்டமாக இருக்கிறது. குமுதம் விகடன் படித்து வளர்ந்த காலத்தில் எனக்கு சாயாவனம் கண்திறப்பாக இருந்தது. புதுமைப்பித்தனை முதன்முதலாக துணைப்பாடத்தில் வாசித்தபோது – ஒரு நாள் கழிந்தது சிறுகதை – உன்னதமான அனுபவமாக இருந்தது. அவ்வளவு ஏன் பி.ஜி. வுட்ஹவுசை முதன் முறையாகப் படித்தது கூட மறக்க முடியாத அனுபவமாகத்தான் இருக்கிறது – படித்து முப்பது முப்பதைந்து வருஷம் இருக்கும், இன்னும் அப்பாவின் நண்பர் வீட்டில் கெக்கெபிக்கே என்று வாய்விட்டு சிரித்தது தெள்ளத் தெளிவாக நினைவிருக்கும் சிறப்பான வாசிப்பு அனுபவம். கவிதையக் கண்டால் ஓடுபவன்தான், ஆனால் சமீபத்தில்தான் சங்கப் பாடல்களை கண்டுபிடித்திருக்கிறேன். ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன’ என்ற ஒரு வரிதான் மேலும் சங்கப் பாடல்களைத் தேட வைக்கிறது. கவிதை எனக்கு பழக்கம் இல்லாதது என்பதற்காக நான் எந்த அளவுகோலையும் முதுகில் சுமந்து கொண்டு அந்த வரியைப் படிக்கவில்லை. ஜெயமோகனே அப்படி எந்த அளவுகோலையும் சுமந்துகொண்டுதான் படைப்புகளைப் படிக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. என் நினைப்பு தவறாக இருந்தாலும் கூட அதை அவர் universal truth ஆகப் புரிந்து கொள்வதும் முன்வைப்பதும் குறுகிய கண்ணோட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது.

இவ்வளவு ஏன், விஷ்ணுபுரம் மாதிரி ஒரு நாவலை அதற்கு முன் படித்ததே இல்லைதான், இத்தனைக்கு விஷ்ணுபுரம் மாதிரி ஒரு காவியப் படைப்பை முழுமையாக உள்வாங்க பயிற்சி பயனுள்ளதாக இருக்கும் என்றே கருதுகிறேன், ஆனால் விஷ்ணுபுரத்தில் சுஜாதா பாணி தெரியவில்லை, அசோகமித்திரன் தளத்தைக் காணவில்லை என்றெல்லாம் ஒரு கணம் கூட எந்த எண்ணமும் எழவில்லை. அப்படி குறைப்படும் யாரையும், விஷ்ணுபுரத்தை அது சுஜாதா பாணியில் இல்லை என்று புறம் தள்ளும் இலக்கிய ஆர்வம் உள்ள எவரையும் நான் கண்டதில்லை. ஜெயமோகனும் அப்படி யாரையும் பார்த்திருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

அடாணா ராகத்தின் ஸ்வர வரிசை என்ன, ஆரோஹண அவரோஹணம் என்ன, அது 72 மேளகர்த்தா ராகங்களில் எங்கே இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு ‘பாலகனகமய‘ கீர்த்தனையை கேட்டு ரசிக்கலாம். ‘யார் தருவார் இந்த அரியாசனம்‘, ‘வருகிறாள் உன்னைத் தேடி‘, ‘ஆப் கி நஜரோன்னே சம்ஜா‘ எல்லாம் அடாணா ராகத்தில் இருக்கின்றன் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். இல்லை ‘யார் தருவார்’, ‘பாலகனகமய’, ‘ஆப் கி நஜரோன்’ மாதிரி பாடல்களை கேட்டு ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம். நாலு முறை கேட்டால் அவை ஒரே பாணியில் இருப்பது தெரியும். அதன் side-effect ஆக அவற்றை வைத்து அடாணா ராகத்தை அடையாளப் படுத்தலாம். என் போன்றவர்கள் இரண்டாவது வகை. நான் நவீனத்துவம் என்றால் என்ன என்று இலக்கியக் கோட்பாடுகளைப் படித்துவிட்டு அதற்கு உதாரணமாக அசோகமித்திரனைப் படிக்கவில்லை, அசோகமித்திரனைப் படித்துத்தான் நவீனத்துவம் என்ன என்று புரிந்து கொண்டேன். அப்படி புரிந்து கொண்டது ஒரு afterthought மட்டுமே. நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாதது (இன்னும் கூட சரியாகத் தெரியாது, யாராவது கேட்டால் அசோகமித்திரன் மாதிரி எழுத்துப்பா என்றுதான் சிம்பிளாக சொல்லிவிடுவேன்) அசோகமித்திரனைப் படிக்க, அவரது மேதமையைப் புரிந்து கொள்ள எந்த விதத்திலும் தடையாகவும் இல்லை.

ஜெயமோகன் தன் ஸ்டைலுக்கு ஒத்து வரும் அணுகுமுறையே எல்லாருக்கும் சரியானது என்று கருதுகிறார். இலக்கியமும் வாசிப்பும் அப்படி சட்டகத்தில் பொருத்திவிடக் கூடியவை அல்ல என்பதே என் அனுபவத்தால் நான் உணர்ந்திருக்கும் உண்மை.

ஜெயமோகன் மேலும் விளக்குகிறார் –

வெவ்வேறு வகையான இலக்கிய அழகியல் முறைகள் வாழ்க்கையை வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு நோக்கங்களுக்காக அணுகும்பொருட்டு உருவானவை. அவற்றை அறிந்து வாசிப்பதற்குப்பெயர்தான் இலக்கியவாசிப்பு. எல்லாவற்றையும் ‘கதையாக’ வாசிப்பது இலக்கியத்திற்கு எதிரானது. ஓர் இலக்கிய அழகியல் முறையின் இலக்கணத்தை அறிவது அதைக் கையாண்டுள்ள படைப்பை முழுமையாக அறிய உதவக்கூடியது.

அழகியல்வடிவங்களை கொஞ்சம் புரிந்துகொள்ளும்போது நாம் படைப்புக்கு அணுக்கமான வாசகர்களாக ஆகிறோம்

ஜெயமோகனின் அணுகுமுறையில் நான் பிழை காணவில்லை. அழகியல் வடிவங்களை புரிந்து கொண்டால்தான் வாசிப்பு முழுமை அடைகிறது என்பது அவருக்கு சரியான அணுகுமுறையாக இருக்கலாம். ஆனால் நேரடியாக இலக்கியத்தை அணுகுவதும் இன்னொரு, equally valid முறை என்பதை மட்டுமே அழுத்திச் சொல்கிறேன். உதாரணமாக, ‘அவரோ வாரார் முல்லையும் பூத்தன‘ என்பது எனக்கு உன்னதமான கவிதை. அது முல்லைத் திணையா பாலைத் திணையா என்பதெல்லாம் எனக்கு இரண்டாம் பத்தாம் பட்சம். அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்குக் கிடைத்த அனுபவத்தில் ஒரு அணு கூட குறைந்துவிடப் போவதில்லை. கவிதையைப் படித்து ஓரிரு வருஷத்துக்குப் பிறகுதான் ஏ.கே. ராமானுஜன் புண்ணியத்தில் அது எந்தத் திணை என்று தெரிந்தது. ‘அப்படியா’ என்று மனதில் ஒரு நொடி தோன்றியது. இன்று படித்ததெல்லாம் மறந்துவிட்டாலும் முல்லைப்பூ சொல்லப்படுவதால் அது முல்லைத் திணை என்று தெரிகிறது, அடுத்த இரண்டு வரியில் இடையர்கள் வருவதால் அது முல்லைத்திணை என்பது உறுதிப்படுகிறது. ஆனால் இது முல்லைத் திணையா என்ற யோசனை ஓடும் ஒவ்வொரு கணமும் ஒரு distraction-தான். I resent/begrudge every second I spend away from the poem proper. கவிதையை மனதில் அசை போடுவதை விட்டுவிட்டு திணையைப் பற்றி சிந்திப்பதெல்லாம் சாரத்தை விட்டுவிட்டு சக்கையில் கவனம் செலுத்துவதுதான்.

இந்த வாதம் எங்களுக்குள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. தன் தரப்பை ஜெயமோகனும் என் தரப்பை நானும் முழுமையாகச் சொல்லிவிட்டோம். அவர் பாவம், திருப்பி திருப்பி கேட்கிறார்கள், சொல்லிக் கொண்டே இருக்கிறார். என்னை யாரும் கேட்பதில்லை, இருந்தாலும் ‘எல்லாரும் நல்லா பாத்துக்கங்க, நானும் ரௌடிதான்’ என்று நானும் அவ்வப்போது திருப்பி திருப்பி சொல்கிறேன், அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கியக் கோட்பாடுகள்

ஏமாற்றிய ஜெயமோகன்

s.ramakrishnanஎஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல் ஒரு அதீத, அமானுஷ்ய சூழ்நிலையை சித்தரிக்கிறது. நன்றாகவே சித்தரிக்கிறது. ஆனால் அமானுஷ்ய சூழ்நிலை என்பது மட்டுமே உள்ள, அதைத் தாண்டாத சிறுகதைகளை எழுத்தாளர் பார் எனக்கு எப்படி எல்லாம் எழுதத் தெரியும் என்று பீற்றிக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. நேரடியாக, ஆனால் ஆரவாரம் இல்லாத எம்.ஆர். ஜேம்ஸ் போன்றவர்களின் எழுத்துக்களே என்னைக் கவர்கின்றன. மேலும் எம்.ஆர். ஜேம்ஸே இலக்கியம் படைத்துவிடவில்லை, சும்மா ஒரு genre-இல் சிறந்த படைப்புகளை எழுதி இருக்கிறார் என்று எண்ணும்போது இந்தச் சிறுகதை எல்லாம் முக்கியமானவையே அல்ல.

நான் இந்தச் சிறுகதையைப் படிக்க ஒரே காரணம்தான் – ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் தாவரங்களின் உரையாடல் இடம் பெறுகிறது. ஆனால் அவரே இந்தச் சிறுகதையை ‘ஒட்டுமொத்தமாக எழுதப்பட்ட காகித மதிப்புக்கூட இல்லாத குப்பை’ என்று வேறொரு இடத்தில் காட்டமாக விமர்சிக்கிறார். பட்டியல் போட்டபோது இருந்த உங்கள் கருத்துக்கள் மாறிவிட்டனவா என்று கேட்டபோது அவர் ‘இந்தக் கதை எனக்கு முக்கியமானதல்ல, ஆனால் தமிழில் பொதுவாக முக்கியமானது, நான் என் அழகியல் நோக்கு மட்டுமே வெளிப்படும் பட்டியலைப் போடவில்லை’ என்று விளக்கம் அளித்தார். விளக்கம் என்னை திருப்திப்படுத்தவில்லை.

jeyamohanஎதற்காக ஜெயமோகனின் பட்டியலை முக்கியமானதாகக் கருதுகிறோம்? ஒரே காரணம்தான் – அவரது ரசனை மீதுள்ள நம்பிக்கை. குப்பைகளைத் தேர்ந்தெடுக்கமாட்டார் என்று எண்ணுகிறோம். அதனால்தான் அவரது பட்டியலில் உள்ள சிறுகதைகளைத் தேடிப் பிடித்து படிக்கிறோம். காகித மதிப்பு கூட இல்லாத குப்பை, ஆனால் தமிழில் முக்கியமான சிறுகதை என்ற இரண்டு எண்ணங்களும் ஒரே நேரத்தில் ஒருவர் மனதில் இருக்க முடியாது. அன்று அப்படி எண்ணினேன், இன்று என் எண்ணம் மாறிவிட்டது என்றால் சரி. இல்லை முன்னோடி முயற்சி, இன்று காலாவதி ஆகிவிட்டது என்றால் அது வேறுவிதம். குப்பை, ஆனால் தமிழில் ஒரு genre-இன் பிரதிநிதி, இல்லை ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி, இல்லை ஒரு இயக்கத்தின் பிரதிநிதி, அதனால் முக்கியமானது என்றால் கல்கி, துப்பறியும் சாம்பு, ரா.கி. ரங்கராஜன், பாக்யம் ராமசாமி, சிவசங்கரி, கோவி. மணிசேகரன் எல்லாரும் கூட பிரதிநிதித்துவப்பட வேண்டும்.

வாசகன் எதற்காக தன் நேரத்தை வீணடித்து குப்பைகளை படிக்க வேண்டும்? ஜெயமோகன் ஆடுவது போங்காட்டம் என்றே நான் கருதுகிறேன். குறைந்தபட்சம் அவர் ஒரு disclaimer ஆவது போட்டிருக்க வேண்டும். மிச்சம் இருக்கும் சிறுகதைகளில் எது உண்மையிலேயே அவர் பரிந்துரைப்பது, எதெல்லாம் அவர் ஏதோ கல்லூரி பேராசிரியர் மனநிலையில் தேர்ந்தெடுத்தது என்று எப்படி கண்டுபிடிப்பது?

ஜெயமோகனிடம் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நேரடியாக கேட்டுவிடுவேன், இங்கிதம் எல்லாம் பார்க்கமாட்டேன். அவரும் அனேகமாக விளக்கம் சொல்லிப் பார்ப்பார், நான் விடாமல் வாதித்துக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்துக்கு மேல் கிடக்கிறான் பிராந்தன் என்று விட்டுவிடுவார். 🙂 இந்த விஷயத்திலும் அப்படித்தான் நடந்தது. எனக்கு ஏமாற்றம்தான். இப்போதெல்லாம் அவரது சிறுகதைத் தேர்வு பட்டியலை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன்…

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், எஸ்.ரா. பக்கம்

ஜெயமோகன், பிஏகேவைப் பற்றி நமக்கென்ன?

பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிக்காக முதலில் தயார் செய்த உரை இதுதான். பழைய பஞ்சாங்கங்களைக் கிளறியபோது கிடைத்தது. அதை முடித்து பதித்திருக்கிறேன்.


இன்று விடுமுறை நாள். நல்ல மதிய நேரம். பிள்ளைகளுக்கு பள்ளி இல்லை. அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது சுற்றாமல் இங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? ஜெயமோகனுக்கும் பிஏகேவுக்கும் நம் வாழ்க்கையில் என்ன முக்கியத்துவம்?

குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் தெளிவான விடை இருக்கிறது. இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தில் ஆழ்ந்து அனுபவித்தவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். அதனால் இந்த பின்மதியப் பொழுது சுவாரசியமாகக் கழியும் என்று எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு தேனீரும் சமோசாவும் வேறு கிடைக்கின்றன.

கண்ணோட்டத்தை கொஞ்சம் விரிவாக்கினால் இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் நம் வாழ்வில் என்ன இடம் என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக நாம் இலக்கியத்தைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்? இலக்கியம் படிப்பதனால் நமக்கு எந்த லாபமுமில்லை, சம்பளம் உயரப் போவதில்லை, வேலை உயர்வு கிடைக்கப் போவதில்லை, வீட்டுக்கடன் தீரப் போவதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நஷ்டம்தான். அந்த நேரத்தில் ரொம்ப நாளாக தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வேலைகளை செய்யலாம். உடல் இளைக்க ஒரு வாக் போகலாம். இங்கே இரண்டு மணி நேரம் செலவழித்து என்னத்தை பெறப் போகிறோம்?

இன்று இங்கே வந்திருக்கும் பெரும்பான்மையினர் – என்னையும் சேர்த்து – மத்திய வர்க்கப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். இன்று குறைந்தபட்சம் உயர் மத்திய தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறோம். அனேகமாக நம் பெற்றோர்களை விட சௌகரியமான வாழ்க்கையை அடைந்துவிட்டோம். வாழ்வில் லௌகீக ரீதியாக ஓரளவாவது வெற்றி அடைந்துவிட்டோம். பெரும்பாலானவர்களுக்கு செய்யும் பணியும் வாழ்விற்கு ருசி சேர்க்கிறது. ஏறக்குறைய அனைவருக்குமே குடும்பமும் குழந்தைகளும் வாழ்க்கையை பொருள் உள்ளவையாக செய்கின்றன.

ஆனால் இப்போது மாஸ்லோவின் Theory of Needs வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். கணிசமானவர்கள் மீண்டும் மீண்டும் அதே தினத்தை வாழ்வது போல – தினமும் மூன்று வேளையும் கத்தரிக்காய் பொரியலையே சாப்பிடுவது போல – உணர ஆரம்பிக்கிறோம். டி.எஸ். எலியட் சொன்னது போல

Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning

என்று நித்தநித்தம் எதற்காக ஓடுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அலுவலக டென்ஷன்கள், பிள்ளைகளின் படிப்பு, பணச்சிக்கல்கள், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் சுமைகள் – இவற்றின் எடை நம்மை அழுத்த ஆரம்பிக்கிறது. நம்மில் சிலராவது இது என்ன வாழ்க்கை என்று அலுத்துக் கொள்கிறோம், வாழ்வு வெறுமையாகக் கூடும் என்பது நம்மை பயமுறுத்த ஆரம்பிக்கிறது. சிலருக்கு midlife crisis ஆக மாறுகிறது.

ஆனால் இலக்கியமோ முடிவில்லாத சுவை கொண்டது. ஒவ்வொரு புத்தகத்திலும் புதிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. காந்தி இறந்து அறுபத்தைந்து வருஷம் ஆகிவிட்டாலும் அந்த மாமனிதருக்கு அருகே செல்ல கலங்கிய நதியில் நீந்திப் போகலாம். மிகச் சுலபமாக ஆறு உலகத்தைக் கடந்து ஏழாம் உலகத்துக்கே சென்று நம்மில் எவருக்கும் பரிச்சயம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களை – இல்லை இல்லை உருப்படிகளை – பக்கத்தில் சென்று பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் புதிய புதிய உலகங்களைக் காட்டிக் கொண்டே இருப்பது இன்று இரண்டுதான் – இலக்கியமும் சினிமாவும். இத்தனை சுகத்தை, சுவாரசியத்தை வேறு எங்கு பெற முடியும்?

அதுவும் மனித இனத்துக்கு கதைகளில் இருக்கும் ஆர்வம் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களில் நம் கூட்டுத் தேர்வுகள் – wisdom of the crowds – உயர்தரமான படைப்புகளை மட்டும்தான் இன்றும் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகின்றன. அதனால் கண்டதையும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். மகாபாரதமும் ஈடிபஸ் ரெக்சும் ஷேக்ஸ்பியரும் டால்ஸ்டாயும் மனித இனத்தின் சொத்துக்கள். இலக்கியத்தை படிப்பதில் ஒரு விதத்தில் நஷ்டம்தான் என்று முன்னால் சொன்னேன். ஆனால் இந்த சொத்துக்களை அனுபவிக்காமல் போனால் நமக்கு நஷ்டம்தான். வானவில்லையோ, காலையில் பூத்திருக்கும் பவழமல்லி மலர்களையோ, சூரியோதயத்தையோ, நயாகராவில் கொட்டும் நீரையோ, மாமல்லபுரத்து மஹிஷன் சிற்பத்தையோ, சிஸ்டைன் chapel-இன் கூரையில் விரல் நீட்டும் முதல் மனிதனையோ பார்க்கும்போது; ஐந்தாவது சிம்ஃப்னியையோ, இமாஜின்/தில்-ஏ-நாதான்/எந்தரோ மஹானுபாவுலு/இது ஒரு பொன்மாலைப் பொழுது போன்ற பாட்டுகளைக் கேட்கும்போது; மும்பையின் முதல் பருவ அடைமழையில் ஆடிக் கொண்டே நனையும்போது; நம் இரண்டு வயதுக் குழந்தை நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்க்கும்போது; மனம் விம்மி விரியும் அனுபவத்துக்கு எந்த வகையில் குறைந்ததல்ல நல்ல இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்படும் அனுபவம். அதுவும் உங்களுக்கான இலக்கியத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது, உங்கள் உணர்வுகளை நீங்களே தரிசிக்கும்போது ஏற்படும் சுகானுபவத்தை விவரிக்க முயல்வது வார்த்தைகளின் போதாமையைத்தான் காட்டப் போகிறது.

சரி என்ன காரணத்தாலோ இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது, புத்தகம் படிக்கிறோம். விஷ்ணுபுரத்தையோ, புலிநகக் கொன்றையையோ அறம் சிறுகதைகளையோ கலங்கிய நதியையோ வெண்முரசையோ படிக்கும்போது நம்மில் சிலராவது மெய்சிலிர்க்கிறோம். நம் வாழ்வில் ஏதோ தாக்கம் கூட ஏற்படலாம். ஆனால் எழுதியவரைப் பற்றி நமக்கென்ன? புத்தகத்தைப் படிப்பதை விட்டுவிட்டு இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறோம்? மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஒரு பிரபலத்தைப் பார்க்கும், அவர் பேசுவதைக் கேட்கும் ஆசை மட்டும்தானா? முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் எம்ஜிஆரைப் பார்க்கப் போனவர்களுக்கு இருந்த காரணங்கள்தானா?

jeyamohanஎன் கண்ணில் இலக்கியவாதிகள் மற்ற பிரபலங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும் சரிதான்; நன்றாக பேசத் தெரியவில்லை என்றாலும் சரிதான். குறைந்தபட்சம் நம் மனதில் அவர்கள் படைப்புகளைப் பற்றி கலைந்து கிடக்கும் எண்ணங்களை அவர்களிடம் பேசித் தொகுத்துக் கொள்ள முடியும். அவர்கள் படைப்புகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நமக்கே மொழிபெயர்த்துச் சொல்லி தெளிவாக்கிவிடுவார்கள்.

நம் அதிர்ஷ்டம் ஜெயமோகன், பி.ஏ.கே. இருவருக்கு கூச்ச சுபாவத்துக்கும் வெகு தூரம். பார்த்த இரண்டாவது நிமிஷத்தில் வெகு சகஜமாக பேசுபவர்கள். பேசத் தெரிந்தவர்கள். எண்ணங்களை, கருத்துக்களை அழகாக தொகுத்துச் சொல்லக் கூடியவர்கள். மற்றவர் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்டு அதை ஒட்டியும் வெட்டியும் வாதிடுபவர்கள். அதனால் இரண்டு மணி நேரம் விரயம் ஆகாது என்பது நிச்சயம்.

p_a_krishnanஇது வெறும் சம்பிரதாய மேடைப் புகழ்ச்சி அல்ல. ஐந்தாறு வருஷங்கள் முன்னால் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரை சந்திக்க நான் நிறையவே தயங்கினேன். ஒரு வயதுக்கு மேல் புதியவர்களை சந்திப்பது, பழகுவது கொஞ்சம் கஷ்டம்தான். மேலும் சந்தித்து அவரிடம் என்ன பேசுவது? விஷ்ணுபுரம் ஒரு மாபெரும் சாதனை என்றா? அது நான் சொல்லியா தெரிய வேண்டும்? அவரை சந்திக்கும் நேரத்தில் இன்னும் நூறு பக்கமாவது படிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் சந்தித்த இரண்டாம் நிமிஷத்தில் ஏதோ வெகு காலமாகப் பழகிய பழைய நண்பரைப் பார்ப்பது போலத்தான் உணர்ந்தேன். இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட இழுத்து வைத்து அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பேசுவதில் ஜெயமோகன் மன்னர்தான். அதற்குப் பிறகு எழுத்தாளர்களை மிஸ் செய்வதில்லை. அவர்களிலும் பிஏகேவும் நாஞ்சிலும்தான் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

இதற்கு மேலும் பேசினால் அடி விழலாம். அதனால் கடைசியாக என் மகள் ஸ்ரேயாவுக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். என்ன பேசுவது, இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கு என்ன தேவை என்ற மாதிரி கேள்விகள் எழும்போதெல்லாம் அவளைத்தான் கேட்பேன். அதுவும் காரில் போகும்போது வரும்போதுதான், அப்போதுதான் அவள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. ஸ்ரேயா சொன்ன வார்த்தைகள்தான் – literature is fun, it shows me an alternate reality, I can observe what goes on when people face problems – இந்த உரையின் ஊற்றுக்கண். நன்றி, ஸ்ரேயா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்

க.நா.சு. – நண்பேண்டா!

ka.naa.su.போன பதிவில் க.நா.சு.வின் விமர்சன அணுகுமுறையைப் பற்றி கொஞ்சம் எழுதி இருந்தேன். என்னை விட ஜெயமோகன் பிரமாதமாக அவரது அணுகுமுறையை பற்றி க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறார். அவரது வார்த்தைகளில்:

அவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப் பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரசனையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப் பாருங்கோ’ என்ற அளவுக்கு மேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.

அவருக்கு இலக்கிய ரசனையை விவாதம் மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கிய ரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள், அவன் அகம் உருவாகி வந்த விதம், அவனுடைய உணர்ச்சி நிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக் கொள்ள முடியாது. இலக்கிய ரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக் காட்டினால் மட்டுமே போதுமானது.

க.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கிய விமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக் கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல் செய்து வந்ததும் அதுவே.

‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச் சிறந்த தமிழ் வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்தகைய மிகச் சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்ல வாசகர்களை இலக்கியப் படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்க முடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சு.வுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கி வருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத் தரப்பின் தலைமைக் குரலாக ஒலித்தார். இலக்கிய விமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒரு வேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும் கூட அவர் இலக்கிய விமர்சகராகவே கருதப்படுவார்.

நான் சிறந்த வாசகன் என்றே நானே சொல்ல மாட்டேன். எனக்குப் பரந்த வாசிப்பு உண்டு, ஆனால் ஆழ்ந்த வாசிப்பு உண்டா என்பது எனக்கே சந்தேகம்தான். ஒரு படைப்பு என்னுள் ஒட்டுமொத்தமாக ஏற்படுத்தும் விளைவுகளை நான் மீண்டும் மீண்டும் ஒற்றைப் புள்ளியில் சுருக்கி விடுகிறேன். விஷ்ணுபுரம் என்றால் புரண்டு படுக்கும் அந்த பிரமாண்டமான கரிய சிலை என்னுள் ஏற்படுத்தும் பிரமிப்புதான். அஜிதனின் தத்துவ விவாதங்களும், சங்கர்ஷணனின் காவியமும் அந்த சிலையால் வெகு தூரம் பின்னால் தள்ளப்பட்டுவிடுகின்றன. To Kill A Mockingbird என்றால் அப்பா-மகள் உறவுதான். அன்றைய கறுப்பர்களின் நிலையோ, நிற வெறி சூழ்நிலையோ, பூ ராட்லியின் சித்திரமோ ரொம்பப் பின்னால்தான் இருக்கின்றன. அப்படி ஒற்றைக் குவியமாக சுருக்குவதை நிறுத்தினால்தான் வாசிப்பின் ஆழம் கூடும், அப்படி ஆழம் கூடினால்தான் க.நா.சு.வின் லெவலை நான் என்றாவது நெருங்க முடியும் என்று தோன்றுகிறது.

அவரிடமிருந்து நான் வேறுபடுவது ஒரு விஷயத்தில் மட்டும்தான் – எனக்கு இலக்கிய ரசனை விவாதத்தின் மூலம் மேம்படும் என்ற நம்பிக்கை உண்டு. கலைந்து கிடக்கும் எண்ணங்களை பேசுவதின் மூலம் சில சமயம் தொகுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

முழுக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். முடிந்தால் க.நா.சு.வின். பட்டியல்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரையையும் படித்துப் பாருங்கள்.

நீங்கள் எப்படி? உங்களுக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை உண்டா?

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், க.நா.சு. பக்கம், ஜெயமோகன் பக்கம்

இலக்கிய விமர்சகனின் பணி

யார் சிறந்த வாசகன் பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன்.

என் வாசிப்பு அனுபவம் என்னுடையது மட்டுமே என்று சொல்லி இருந்தேன். ஒரு படைப்பில் எனக்கு கிடைக்கும் தரிசனங்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரிக்க அதிகரிக்க, அது என் தரவரிசையில் உயர்ந்த இடத்துக்குப் போகிறது. அனிதா இளம் மனைவியை விட விஷ்ணுபுரத்தை நான் மிக உயர்ந்த இடத்தில் வைக்க அதுதான் காரணம். ஒரு படைப்பு என்ன மேலும் சிந்திக்க வைக்கும்போது, புதிய உலகங்களை பார்க்க/கற்பனை செய்ய உதவும்போது, மனித இயல்பை தோலுரித்துக் காட்டும்போது (என்னுடைய ஃபேவரிட் உதாரணம் – பால்வண்ணம் பிள்ளை), அதற்கு நான் மேலும் மேலும் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறேன். இது அத்தனையும் என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயேதான் நடக்கின்றன.

விமர்சகர்களோ முன்/பின்/நடு நவீனத்துவம், எதார்த்தவாதம், சர்ரியலிசம், முற்போக்கு இலக்கியம், இலக்கியத்தின் வேர்கள் என்று பல சட்டகங்கள், வரையறைகள், கோட்பாடுகள் மூலமாக இலக்கியத்தைப் பாகுபடுத்த முயற்சிக்கிறார்கள். சாதாரணமாக நான் ஜெயமோகன் தவிர வேறு யாராவது இப்படி எழுதினால் தவிர்த்துவிடுவேன். ஜெயமோகனின் வரையறைகளைப் படிக்கும்போதும் அவரது சட்டகங்கள் குறுகலானவை, அவர் சொல்லும் ஒவ்வொரு விதிக்கும், கோட்பாட்டுக்கும் ஏதோ ஒரு படைப்பு விதிவிலக்காக இருக்கிறதே என்று தோன்றும். அவருடைய வழி அவருக்கானது, அதை எல்லாரிடமும் வலிந்து புகுத்த முடியாது என்று தோன்றும். சில சமயம் அவரிடமே கேட்டதும் உண்டு. சில சமயம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. 🙂

இதனால்தான் நான் பொதுவாக விமர்சகர்களை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நான் அடிக்கடி சொல்வது போல ஷேக்ஸ்பியர் ஆயிரம் பக்கம் எழுதினால் அவரது நாடகங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்களில் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். யார் சீந்துகிறார்கள்?

காலம் செல்லச் செல்ல, மனித இனத்தின் கூட்டு தரவரிசைப்படுத்துதல் – wisdom of the crowds – நல்ல இலக்கியத்தை, காலத்தைக் கடந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன. ஷேக்ஸ்பியரைத்தான் படிக்கிறோம், பென் ஜான்சனையும் மார்லோவையும் பொருட்படுத்துவதில்லை. பலரும் இந்தப் புத்தகம் இலக்கியம், எனக்கு இன்னின்ன தரிசனம் கிடைத்தது என்று சொல்கிறோம். பல்வேறு காலகட்டங்களில் இவற்றைப் படிப்பவர்களும் ஆமாம் எனக்கும் இந்த தரிசனம் கிடைக்கிறது என்று சொல்கிறோம். அந்தப் படைப்புகள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன. பல சமயம் என்னய்யா அறுக்கிறான்(ள்) இதையா இலக்கியம் என்றார்கள் என்று அடுத்த தலைமுறையே அலுத்துக் கொள்கிறது. அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவை மெதுமெதுவாக இலக்கியத்தின் ரேடாரில் இருந்து தொலைந்துபோய் விடுகின்றன.

ஆனால் எனக்கு ஒரு ஷார்ட் லிஸ்ட், பரிந்துரைகள் – அதிலும் குறிப்பாக சமகால, சமீபத்திய இலக்கியத்துக்கு – அவசியமாக இருக்கிறது. எல்லாருக்குமே அது தேவைதான். அதுதான் நல்ல விமர்சகன் எனக்கு செய்யக் கூடிய உதவி. அதனால் விமர்சகர்கள் ஒரு பட்டியலை உருவாக்கினால்; அந்த விமர்சகரின் ரசனை உங்கள் ரசனையோடு ஒத்துப் போனால்; கப்பென்று பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களை ஒரு மோப்ப நாய் போல பயன்படுத்துங்கள். எனக்கு க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகம் ஒரு திருப்புமுனை – seminal என்றே சொல்லலாம். ஆனால் அவர் போட்டிருக்கும் பட்டியலில் பல புத்தகங்கள் ஏமாற்றம் அளித்தன. அவரது தனிப்பட்ட ரசனை சார்ந்த அணுகுமுறை என் சிந்தனை முறைக்கு, வாசிப்பு முறைக்கு ஒத்து வருகிறது. ஆனால் எங்கள் ரசனை வேறுவேறு. ஜெயமோகன் meta-அணுகுமுறை -காலத்தைக் கடந்த இலக்கியம் என்று அங்கீகரிக்கப்பட்டவற்றை அலசி அவற்றுக்குள் உள்ள பொதுவான பண்புகள் என்ன என்று கண்டுபிடிப்பது – மிகச் சரி. ஆனால் அவரது வரையறைகளும் சட்டகங்களும் எனக்கு மிகவும் குறுகலானவையாகத் தெரிகின்றன. ஆனால் அவர் இலக்கியம் என்று ஒரு பட்டியல் போட்டால் – அது என் ரசனைக்கு நன்றாக ஒத்துப் போகிறது.

நல்ல விமர்சகன் என்பவன் அப்படி தன் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு உணர வைப்பவன்(ள்) என்பதுதான் தியரி. அதுதான் இன்றைய இலக்கிய உலகில் விமர்சகனுக்கான வரையறையாக இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த வரையறை வேலைக்காவதில்லை. புத்தகங்களைப் பற்றி படிக்கும்போதும் பேசும்போதும் அட நானும் இப்படி உணர்ந்தேன், நண்பேண்டா என்று அடிக்கடி தோன்றி இருக்கிறது. இல்லை, இவர்கள் சொல்லும் இந்தக் கோணம் எனக்கு இசைவுடையதாக இல்லை என்று அவ்வப்போது தோன்றி இருக்கிறது. சில சமயங்களில் என் எண்ணங்களை – நான் உணர்ந்தவற்றை, எனக்குத் தோன்றியவற்றை – கோர்வையாகத் தொகுத்துக் கொள்ள விமர்சனங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் என் அனுபவத்தில் சிறந்த வாசகர்களாக, வாசிப்பிற்கான தேடல் உள்ளவர்களாக நான் கருதும் ஜெயமோகன், எஸ்ரா, பாவண்ணன், சுஜாதா, வெ.சா., பாலாஜி, விசு, முத்துகிருஷ்ணன் போன்றவர்களால் கூட வெகு அபூர்வமாகவே நானாக உணராத ஒரு கோணத்தை எனக்கு புரிய வைக்க முடிந்திருக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு கிடைக்கும் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு புரிய வைப்பது மிகவும் சிரமம், almost impossible என்றே நான் சில வருஷங்களாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். சிலிகன் ஷெல்ஃப் கூட்டம் என்று அவ்வப்போது கூடி புத்தகங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் நம்முடைய வார்த்தைகளின் போதாமையைத்தான் உணர்ந்திருக்கிறேன். அது என்னுடைய குறையா, இல்லை இதுதான் எல்லாருடைய நிலையுமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

வரையறைகளும் சட்டகங்களுக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பயன்பட்டால்; எது சரியான வாசிப்பு முறை என்பதை வரையறுப்பது உங்களுக்கு உதவியாக இருந்தால்; அதுதான் சரியான வழி என்று உங்களுக்குத் தோன்றினால்; அந்த அணுகுமுறையை பயன்படுத்துங்கள். அதாவது விமர்சகர்கள் சொல்வதில் உங்களுக்கு எது வேலைக்காகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டுவிடுங்கள், அவ்வளவுதான்.

இலக்கியத்தை கோட்பாடுகள், சட்டகங்கள் வைத்து பகுப்பது முற்றிலும் பயனற்ற வேலை என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு trivial, அற்பமான உதாரணம் – தலித் இலக்கியம் என்றோ, பிராந்திய இலக்கியம் என்றோ, பின் நவீனத்துவப் புத்தகம் என்றோ பின் குத்தப்பட்ட புத்தகம் (இதெல்லாம் இன்னும் வருகிறதா?) என்றோ அடையாளப்படுத்துவது நமது எதிர்பார்ப்புகளை ஓரளவு தீர்மானிக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒரு வசதிக்கு மட்டும்தான். உண்மையில் தலித் இலக்கியம் என்று எதுவும் இல்லை – தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகம், இலக்கியத் தரம் வாய்ந்தது என்றுதான் சொல்ல முடியும்.

என் அணுகுமுறை க.நா.சு.வின் அணுகுமுறை, என் ரசனை ஜெயமோகனோடு பெரிதளவு ஒத்துப் போகிறது, அதனால் ஜெயமோகனின் பரிந்துரைகளும், பட்டியல்களும் எனக்கு முக்கியமானவை. அவ்வளவுதான் மேட்டர்.

நீங்கள் எப்படி? யாருடைய விமர்சனங்கள், பட்டியல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றன? வரையறைகள், சட்டகங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றனவா? யாரையாவது நல்ல விமர்சகர் என்று நினைக்கிறீர்களா?

பின்குறிப்பு: Wisdom of the crowds பிரச்சினையே இல்லாத அணுகுமுறை அல்ல. காலனிய ஆதிக்கம், இனக்குழுக்களின் அழிவு, அதிகம் தெரியாத மொழிகளில் எழுதப்படுதல் போன்ற காரணங்களால் நல்ல இலக்கியத்தை நாம் இழந்துவிடலாம்தான். தொன்மையான படைப்பு அல்லது ஒரு இனக்குழுவை, மொழியை, பண்பாட்டு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பு போன்ற காரணங்களுக்காக தரம் குறைந்த படைப்புகள் சில சமயம் முன்வைக்கப்படலாம்தான். மனித இனத்தின் இயல்புக்காக நாம் தர வேண்டிய விலை இது.

அடுத்த பகுதி: க.நா.சு.வின் இலக்கிய விமர்சனப் பாணி

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்

யார் சிறந்த வாசகன்?

பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு வருஷம் முன்னால் ஜெயமோகனோடு நடந்த ஒரு விவாதத்தைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் உள்ளூர் சிலிகன் ஷெல்ஃப் கூட்டத்திற்குள் சிறந்த வாசிப்பு என்றால் என்ன, யார் சிறந்த வாசகன் என்று கேட்டிருந்தான். அதைத் தொடர்ந்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொண்டவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

முத்துகிருஷ்ணன்: ஜெயமோகன் கண்ணோட்டத்தில் நல்ல வாசகன் என்பவன் எழுத்தாளனின் படைப்பின் ஆழங்களையும், தரிசனங்களையும் அறிந்து கொள்பவன் மட்டுமே. அவர் இதைப் போன்ற வாசிப்பு பொதுவாக தமிழில் நிகழுவதில்லை என்கிறார். உங்களுடைய வாசிப்பில் நல்ல கதைகளில் இப்படி ஆழங்களை அறிந்த பிறகுதான் அதை நல்ல கதை என்பீர்களா? எனக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. எனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்றால் நீ தரிசனத்தை பார்க்கவில்லை என்றால் ஆகிவிடுகிறதா? அப்படி என்றால் யார் தான் ஒரு கதையை தரமான கதை என்று மதிப்பிடுவது? உலக இலக்கியங்கள் வாசித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த படைப்புகளை கொண்டு இந்த விளக்கத்துக்கு எதிர்வினை அளிக்க முடியுமா?

ராஜன்: தரிசனத்தை கண்டடைபவன் மட்டுமே நல்ல வாசகன் என்ப்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தரிசனம் அவனுக்குப் பின்னால் கூட கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஒருவன் ஒரு கதையைப் படித்து விட்டு ஆத்மார்த்தமாக நல்ல கதை என்று நினைத்தாலே போதுமானது. அதன் முழு அர்த்தத்தையும் உணராத பட்சத்திலும் கூட ஆழங்களை அடையாத பட்சத்திலும் கூட அவன் நல்ல வாசகனே. அப்படி அவன் வேறு எதையேனும் கண்டடைந்தால் ஒரு வேளை அவனுக்கு வாசிப்புக்கான நோபல் கொடுக்கலாம், தேர்ந்த வாசகன் என்று பாராட்டலாம் அவ்வளவே.

ஆர்வி: கறாராகப் பார்த்தால் எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான்(ள்) என்பது வாசகனுக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதே போல பிற வாசகர்களுக்கு கிடைக்கும் தரிசனங்களும் எனக்கு கிடைக்காமல் போகலாம். எனக்கு பிரமாதமான தரிசனங்கள் கிடைத்து உயர்ந்த புத்தகமாகத் தெரிவது அடுத்தவருக்கு ஏமாற்றம் அளிக்கலாம். இன்னொருவருக்கு உயர்ந்த புத்தகமாகத் தெரிவது எனக்கு ஏமாற்றம் அளிக்கலாம். டிக் ஃப்ரான்சிசின் சாகச நாவல்களில், இந்த இலக்கிய விமர்சகரும் சீந்தாத லவ் ஸ்டோரி போன்ற படைப்புகளில் எனக்கு பெரிய தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. காஃப்காவின் Metamorphosis புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு அற்புதமாகக் கூடத் தெரியலாம், ஆனால என்னால் ஒன்றவே முடிவதில்லை.

வேண்டுமென்றால் இது வரை wisdom of the crowds – மனித இனத்தின் கூட்டுத் தேர்வுகள் – காலத்தைக் கடந்த இலக்கியம் என்று எவற்றைத் தேர்ந்தெடுத்திருகிறதோ, அவற்றை சிறந்த இலக்கியம் என்று தன் ரசனையின் அடிப்படையிலும் கருதுபவன் சிறந்த வாசகன் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பு என்பது தனி மனித அனுபவம் என்பதை நீங்களும் ஏற்றால் சிறந்த வாசகன், மோசமான வாசகன் என்பதை விட என் சஹிருதய வாசகன், என் பாணிக்கு ஒத்து வராத வாசகன் என்று பிரிப்பதுதான் சரிப்படுகிறது.

இதை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் பொறுத்த வரை சிறந்த வாசகனுக்கான வரையறை என்ன? உங்களுக்குத் தெரிந்தவர்களில், நீங்கள் படித்தவர்களில் யாரையாவது சிறந்த வாசகர் என்று கருதுகிறீர்களா? எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான் என்பது முக்கியமா இல்லையா? இதையெல்லாம் பேசத்தான் இந்தத் தளம், உங்கள் கருத்துக்களை கட்டாயம் எழுதுங்கள்!

அடுத்த பகுதி – இலக்கிய விமர்சகனின் பணி


தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்