சில பல வருஷங்களாகவே வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள். அதுவும் சாண் ஏறினால் முழம் சறுக்கலாகவே இருக்கிறது. மூக்கு வரை மூழ்கி இருக்கும்போது மூச்சு விடுவதில்தான் முழு கவனம் இருக்கிறது, (ஆஹா! மூனாவுக்கு மூனா, என்ன ஒரு எதுகை மொகனை!) பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை அர்த்தம் இல்லாத, வெறுமையான வாழ்க்கை என்பதை எல்லாம் உணர்ந்து செயல்பட முடிவதில்லை. இன்றைய தலை போகும் பிரச்சினையால் கடந்த மாதம் இந்தியா சென்றிருந்தேன்.
தலை போகிற பிரச்சினைதான், ஆனாலும் இலக்கியம் பற்றி பேசும் ஒரு கூட்டத்தில் எட்டிப் பார்த்தேன். (அங்கே ஒரு மருத்துவரை சந்திக்கப் போகிறேன் என்று என்னிடம் நானே கொஞ்சம் பொய் சொல்லிக் கொண்டேன்.) அதுவும் ஒரு மணி நேரம் தாமதமாக சென்று முறுக்கும் ஜாங்கிரியும் சாப்பிடவுடன் கிளம்பிவிட்டேன். ஆனால் அங்கே இருந்த ஒரு மணி நேரம் உண்மையிலேயே நிறைவாக இருந்தது.
வெண்முரசு இலக்கியக் கூட்டம். சௌந்தரின் யோகா மையத்தில் நடந்தது. அங்கே எனக்குத் தெரிந்த ஒரே முகம் ஜாஜா என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜகோபாலன். இந்த முறை சென்றபோது அறிமுகப்படுத்திக் கொண்ட மாரிராஜ் இருந்தார். ஜெயமோகன் தளம் வழியாக கேள்விப்பட்டிருந்த காளிப்ரசாத் இருந்தார். ரகுராமன், மற்றும் பத்மநாபன் அறிமுகம் ஆனார்கள். இன்னும் பெரிய பட்டியல் இருக்கிறது, ஆனால் என்ன அட்டெண்டன்சா எடுக்கிறேன்? 🙂
20-25 பேர் இருக்கலாம். ஒவ்வொருவரும் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். வெண்முரசை ஊன்றிப் படித்திருக்கிறார்கள். ஜெயமோகனில் ஊறித் திளைத்திருக்கிறார்கள். வெண்முரசு பற்றிய கூட்டம், அதனால் பிற புத்தகங்களைப் பற்றி அதிகமாக பேச்சு இல்லை. ஆனால் போகிற போக்கில் அவர்கள் உதிர்த்த சில வார்த்தைகளிலிருந்து ஆழமான வாசிப்பு உடையவர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. (சிலிகன் ஷெல்ஃபைப் படிக்கும் சென்னை வாசகர்களில் பாதி பேர் அங்கே இருந்தார்கள் என்று நினைக்கிறேன். 🙂 )
இலக்கியம் பற்றி பேச நாலு பேர் இருந்தாலே அதிகம். 40-50 பேர் உள்ள ஒரு கூட்டம் மாதாமாதம் கூடிப் பேசுகிறது. ஒவ்வொரு மாதமும் 20-25 பேராவது வருகிறார்கள். சென்னையின் ‘நடு சென்டரான’ கோபாலபுரத்திலிருந்து வடபழனி போவதற்கே எனக்கெல்லாம் தாவு தீர்ந்துவிடுகிறது, இவர்கள் சென்னையின் பல மூலைகளிலிருந்து – செங்கல்பட்டு, குரோம்பேட்டை, அம்பத்தூர் என்றெல்லாம் பேர் கேட்டேன் – வருகிறார்கள். ஜெயமோகன் வந்தால் எண்ணிக்கை 100-150 பேராக அதிகரித்துவிடுமாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது. மேலும் மேலும் சிறப்பாக நடக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
என் அவசரம், நான் நடுவில் கிளம்பிவிட்டேன். வெண்முரசில் நளன் பற்றி ஜாஜா பேசியதில் பாதியையாவது கேட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். க்ஷத்ரிய தமயந்தியை விட ஒரு படி கீழாகவே – நிஷாதனாகவே தன்னை எப்போதும் உணரும் நளன், கலி vs இந்திரன், gentrification என்ற கோணத்தை நன்றாக விளக்கிக் கொண்டிருந்தார். ஜெயமோகனின் புகழ் பெற்ற சிறுகதையான மாடன் மோட்சத்தின் motif அங்கும் வெளிப்படுகிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.
நளன் கதையை நிஷாத-க்ஷத்ரிய டென்ஷனாக ஜெயமோகன் சித்தரிப்பது எனக்கு முழு இசைவில்லாத விஷயம்தான். என்னைப் பொறுத்த வரையில் நளன் கதையின் வசீகரத்தை, குறிப்பாக நளன்-தமயந்தி காதலை அந்த சித்தரிப்பு குறைத்துவிடுகிறது. பாரதத்தையே அவர் க்ஷத்ரிய-யாதவ மோதலாக, இனக்குழுக்களின் மோதலாக சித்தரிப்பது பாரதத்தின் வீச்சை குறைக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. ஆனால் எழுத்தாளன் என்ன எழுத வேண்டும், எதை சித்தரிக்க வேண்டும் என்று வாசகனா சொல்ல முடியும்?
வாசிப்பின் பயன் என்ன என்று சில சமயம் என்னை நானே கேட்டுக் கொள்வதுண்டு. சஹிருதயர்களை சந்திப்பதில் ஏற்படும் நிறைவுக்கு விலை மதிப்பு போட முடியமா என்ன?
தொடர்பு: இலக்கிய நிகழ்ச்சிகள்