பாசர்: மகாபாரத நாடகங்கள்

பாசரின் மகாபாரத நாடகங்கள் எனக்கு தெருக்கூத்துகளை நினைவுபடுத்துகின்றன. நேரடியான, எளிமையான பாத்திரப் படைப்பு. சில சமயம் அவரது கற்பனையில் எழுந்த சம்பவங்கள். எனக்கு மகாபாரதப் பித்து உண்டு; என்னை இவை கவர்வதில் என்ன வியப்பு?

பாசர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்காரராக இருக்கலாம். காளிதாசர் அவரைப் பற்றி குறிப்பிடுவதால் காளிதாசருக்கு முந்தையவர் என்பது தெளிவு. பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தின் விதிமுறைகள் இவரது நாடகங்களில் மீறப்படுகின்றன, அதனால் இவர் பரத முனிவருக்கும் முந்தையவராக இருக்கலாம்.

பாசரின் நாடகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை சுவாரசியமான நாவலாகவே எழுதலாம். கணபதி சாஸ்திரி பாசரின் 13 நாடகங்களை ஏட்டுச்சுவடி வடிவில் கேரளத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் கண்டெடுத்திருக்கிறார். இவை கொடியெட்டம் (சமஸ்கிருதத் தெருக்கூத்து வடிவம் போலிருக்கிறது) நிகழ்ச்சிகளில் நடிப்பதற்காக எழுதப்பட்டவையாம். பாசரின் மூலவடிவத்தை நடிப்பதற்கேற்ப மாற்றி இருக்கலாம் என்கிறார்கள். சாஸ்திரிதான் இவை பாசரின் நாடகங்கள் என்று நிறுவி பதித்திருக்கிறார். பிற்காலத்தில் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை பதித்தவரும் இவரேதானாம். சாஸ்திரிக்கு முன்னால் ஸ்வப்னவாசவதத்தம் நாடகம் மட்டும் கிடைத்திருக்கிறது.

13-இல் ஆறு மகாபாரத நாடகங்கள். மத்யமவியயோகம், பஞ்சராத்ரம், தூதவாக்கியம், தூதகடோத்கஜம், கர்ணபாரம், உறுபங்கம்.

பாசரின் நாடகங்கள் பொதுவாக அளவில் சிறியவை. ஓரிரு காட்சிகள்தான். அவருடைய திறமை வெளிப்படுவது பாத்திரப் படைப்பில் அவர் காட்டும் வேறுபாடுகள்தான். உறுபங்கத்தின் துரியோதனன் அவலச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்துகிறான். தொடை உடைந்து வீழ்ந்தாலும் அவன் மேன்மை தெரிகிறது. தூத கடோத்கஜம் நாடகத்தில் கடோத்கஜனின் வீரம் பிரமாதமாக வெளிப்படுகிறது. தூதவாக்கியத்தில் கிருஷ்ணனும் துரியோதனனும் பேசும் காட்சிகளில் நெருப்பு பறக்கிறது. மத்யமவியயோகத்தில் மத்யமன் என்ற வார்த்தையை வைத்து விளையாடுகிறார். அதிலும் கடோத்கஜன் பாத்திரம் அருமை.

எல்லாமே நல்ல நாடகங்கள்தான். ஏதாவது ஒன்றைப் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது உறுபங்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது பஞ்சராத்ரம். படிப்பதை விட பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நாடகங்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே.


மத்யமவியயோகத்தின் ஆரம்பம் பகாசுரன் கதையை நினைவுபடுத்துகிறது. பகாசுரனுக்கு பதில் கடோத்கஜன். தன் அன்னை இடும்பியின் பசி தீர்க்க அவனுக்கு ஒரு மனித உடல் வேண்டும். ஒரு பிராமணக் குடும்பத்தைப் பிடித்துக் கொள்கிறான். அதில் ஒருவர் மாற்றி ஒருவர் நான் போகிறேன் நான் போகிறேன் என்கிறார்கள். கடைசியில் போவது நடுமகன் – மத்யமன். மத்யமனைக் கூப்பிட்டால் மத்யம பாண்டவன் – பீமன் – வருகிறான்!


பஞ்சராத்ரத்தின் முதல் வரி அருமை.

May he protect us all: he whose names are Bhishma and Drona, Karna and Arjuna, Duryodhana and Bhima, Yudhishthira and Shakuni, Uttara, Virata as well as Abhimanyu.

எல்லா நாடகமும் ஒரே மாதிரி ஆரம்பிக்கிறது. நாடகத்தின் “தயாரிப்பாளர்” கடவுளரை வாழ்த்துவார்; என்னவோ சத்தம் கேட்கிறதே என்பார். அந்த சத்தம்தான் நாடகப் பாத்திரங்களின் அறிமுகக் காட்சி. இரண்டாவது, மூன்றாவது முறை படிக்கும்போது தானாக புன்னகை வருகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நாடகம் பஞ்சராத்ரம். அது கதையையே மாற்றுகிறது. அஞ்ஞாதவாசம் நடந்து கொண்டிருக்கிறது. துரோணர் துரியோதனனிடம் குருதட்சிணை கேட்கிறார் – என்ன குருதட்சிணை? பாண்டவர்களுக்கு நாட்டை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்! துரியோதனனுக்கு மனமில்லை. ஆனால் துரோணரை மறுக்க முடியாது. அதனால் ஐந்து நாட்களுக்குள் பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் கொடுத்துவிடுகிறேன் என்கிறான். துரோணர் அது எப்படி ஐந்து நாளில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அப்போது கீசகன் இறந்த செய்தி கிடைக்கிறது. பீஷம்ர் இதை பீமன்தான் செய்திருப்பான் என்று புரிந்து கொள்கிறார். துரோணரை ஒத்துக் கொள்ளச் சொல்கிறார். விராடன் மீது படையெடுக்கச் சொல்கிறார். துரியோதனன் தரப்பில் போரிடும் முக்கிய வீரன் அபிமன்யு! காண்டீபத்தின் ஒலி கேட்டதும் துரோணரும் பீஷ்மரும் திரும்பிவிடுகிறார்கள். கௌரவப் படை தோற்கிறது. ஆனால் சாதாரண வீரன் தோற்றத்தில் இருக்கும் பீமன் அபிமன்யுவை “சிறைப்பிடிக்கிறான்” – உண்மையில் பாசத்தால் அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறான். அபிமன்யு சிறைப்பட்டான் என்றதும் துரியோதனன் என் சகோதரர்களோடு நான் சண்டை போடலாம், ஆனால் அபிமன்யுவை வெளியாட்கள் சிறைப்பிடிப்பதை ஒரு நாளும் ஏற்க முடியாது என்று பொங்கி எழுகிறான். சகுனியும் கர்ணனும் அவனை முழுமனதாக வழிமொழிகிறார்கள். பீஷ்மர் ஓடும் தேரின் குதிரைகளை சாதாரண வீரன் கையால் பிடித்து நிறுத்தினான் என்றதும் அது பீமன் என்று கண்டுகொள்கிறார். அதற்குள் உத்தரனே அபிமன்யு-உத்தரை திருமணச் செய்தியோடு வருகிறான். துரியோதனனும் பாண்டவர்களுக்கு அவர்கள் ராஜ்யத்தை திரும்பித் தருகிறான்!

இந்த நாடகத்தின் முதல் காட்சியில் பீஷ்மரும் துரோணரும் பேசிக் கொள்வது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.


தூதவாக்கியம் கண்ணன் தூது. துரியோதனனும் கண்ணனும் பொங்குவது நன்றாக வந்திருக்கிறது.


தூதகடோத்கஜம் வியாச பாரதத்தில் கிடையாது. அபிமன்யு வதத்திற்குப் பிறகு கடோத்கஜன் அர்ஜுனன் சபதத்தைப் பற்றி கௌரவர்களுக்கு அறிவிக்கிறான். கடோத்கஜன் பாத்திரம் அருமையாக வந்திருக்கிறது.


கர்ணபாரம் கர்ணன் இந்திரனுக்கு கவச குண்டலங்களைத் தானம் தரும் காட்சி. அதை 17-ஆம் நாள் போரின் ஆரம்பத்தில் வடிவமைத்திருக்கிறார்.


உறுபங்கம் சிறப்பான நாடகம். விரிவாக இங்கே.

மின்பிரதிகள்: மத்யமவியயோகம், உறுபங்கம்

தொகுக்கப்பட்ட பக்கம்: மகாபாரதப் பக்கம்

தமிழகத்தில் மகாபாரத நாட்டார் கதைகள்

நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது.

எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மாயாபஜார் (1957) திரைப்படத்தின் மூலம் சசிரேகா பரிணயம்/அபிமன்யு சுந்தரி கதை. அத்தை மகன்/மகள் முறைப்பையன்/முறைப்பெண் என்ற பழக்கம் உள்ள தமிழக/ஆந்திரப் பகுதிகளில்தான் இந்தக் கதை உருவாக முடியும். (சுபத்திரை அர்ஜுனனின் மாமன் மகள்தான் என்றாலும் முறை வைத்து உரிமை கொண்டாடுவதாக வியாசபாரதத்தில் இல்லை.) இது ஒரு கலை வடிவமாக, கற்பனை நாடகமாக, நடனமாக சோழர் காலத்தில் ஆரம்பித்திருக்கலாம். எப்படி ஆரம்பித்ததோ, ஜாவா வரை பரவி ககவின் என்ற காவிய வடிவம் எடுத்திருக்கிறது. இன்றும்   இந்தக் கதை ஆந்திரத்தில் பிரபலமாக இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன.

கலை மரபு என்பதில் நான் நாடகம், திரைப்படம், கூத்து, பிரசங்கம்/கதாகாலட்சேபம், கதைப்பாடல் எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை.

காலட்சேபத்தை அந்தக் காலத்தில் எல்லா ஜாதியினரும் கேட்க முடிந்ததா என்று தெரியவில்லை. காலட்சேபம் கோவிலுக்குள்தான் நடைபெறும், கோவிலுக்குள் பிரவேசிக்க “கீழ்ஜாதியினர்” பல போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது தெரிந்த விஷயம். ஆனால் பிரசங்கங்கள் (நான் பார்த்த வரையில்) கோவிலுக்கு வெளியே நடக்கும். எல்லாரும் கேட்கலாம் என்று நினைக்கிறேன். நாடகத்துக்கே கூட “தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு” அனுமதி இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிடையாதாம் என்று எங்கேயோ படித்தேன். அவர்கள் தங்களுக்கென்று தனியாக அரங்கங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருந்ததாம்.

அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை.

மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம் (குறவஞ்சி) ஆகியவற்றின் அடிப்படை வடிவம் மலைக்குறத்தி ஆருடம் சொல்வது. மின்னொளியாள் தன் கணவன் அர்ஜுனன் வருவானா என்று குறத்தியிடம் ஆருடம் கேட்கிறாள். மின்னொளியாள் என்ற பேரைக் கூட நான் கேட்டதில்லை. அர்ஜுனனோடு மணம் நடந்த கதையும் என்ன என்று தெரியவில்லை. மின்னொளியாள் குறம் 1874-இல் பதிக்கப்பட்டதாம். இப்போது சென்னை அரசு நூலகத்தில் கையெழுத்துப்படியாக மட்டுமே கிடைக்கிறதாம். அல்லி குறம் பாடலுக்கு வித்வான் குறம் என்ற பெயரும் இருக்கிறதாம். திரௌபதி குறம் மிகச் சிறப்பான இசைப்பாடல்.

துகிலுரிகாதை, பஞ்சபாண்டவர் வனவாசம், கண்ணன் தூது, திரௌபதி கண்ணி, தருமர் அஸ்வமேத யாகம் என்ற கதைப்பாடல்களும் இருக்கின்றனவாம். இவை புகழேந்திப் புலவர் எழுதியதாகத் தெரியவில்லை, ஆனால் எழுதியவர் யாரென்றும் தெரியவில்லை.

கர்ணமோட்சம், கர்ண மகாராஜா சண்டை போன்ற தெருக்கூத்துகள் பிரபலமாக இருக்கின்றன. கூவாகத்தில் திருநங்கைகள் திருவிழாவில் அரவான் கூத்து ஒன்று பாரம்பரியமாக நடிக்கப்படுகிறாதாம்.

இவற்றைத் தவிர ஆரவல்லி-சூரவல்லி இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பிரபலமாக இருந்தது. சின்ன அர்ஜுனன் சண்டை, விஸ்வகேது திருமணம், திரௌபதி கண்ணி, மணிமாலன் சண்டை போன்றவற்றைப் பற்றியும் இந்தப் பதிவை எழுதும்போது தெரிந்துகொண்டேன். ஆரவல்லி திரைப்படம் இன்றும் மக்கள் நினைவில் கொஞ்சம் இருக்கிறது – சின்னக்குட்டி நாத்தனா பாடலால்.

புலந்திரன், பவளக்கொடி, ஆரவல்லி-சூரவல்லி, பொன்னருவி மசக்கை, திரௌபதி குறம் போன்ற நாட்டார் கதைகள் தமிழகத்தில் மட்டும்தான் காணக் கிடைக்கின்றன. இந்தக் கதைப்பாடல்களின் சாரத்தை இங்கே படிக்கலாம். அல்லி, பவளக்கொடி, பொன்னருவி கதைப்பாடல்கள் பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்க்கும் கதைகள் அதனால் அவற்றை பெண்கள் படிக்கக் கூடாது என்று நீலாம்பிகை (மறைமலை அடிகளின் மகள்) எழுதி இருக்கிறார்!

இவற்றில் மிக சுவாரசியமான வேறுபாடுகள் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக திரௌபதி குறம் என்ற பாடலில் திரௌபதி குறத்தியாக மாறுவேடம் அணிந்து அஸ்தினபுரத்துக்கு வந்து துரியோதனன் மனைவி, காந்தாரி, துரியோதனனுக்கு குறி சொல்கிறாள். குறத்தி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது அபூர்வம். அதனால் கொண்டை போட்டு பூ முடித்து வருகிறாள்! பாஞ்சாலி சபதம் போயே போச்!

புகழேந்திப் புலவரின் கதைப்பாடல்களில் கர்ணன் பாத்திரப் படைப்பு சுவாரசியமானது. கர்ணன் வீரன் மட்டுமல்ல, விவேகியும் கூட.  துரியோதனன் வில்லத்தனம் செய்யும்போது அவனைத் திருத்த முயற்சிக்கிறான், சரியான ஆலோசனைகள் தருகிறான். இதை பல பாடல்களில் காண முடிகிறது. ஏணியேற்றம் பாடலில் துரியோதனனை அல்லி விடுவிப்பது கர்ணன் வேண்டுகோளினால்தான், கர்ணன் மீதுள்ள மரியாதையால்தான்.

சல்லியன் கௌரவரோடு சேர்ந்தது பாரதப் போருக்கு சற்று முன்தான். ஆனால் இந்தப் பாடல்களில் வனவாச காலத்திலேயே சல்லியன் கௌரவர் பக்கம் என்றுதான் வருகிறது. சகுனி என்று ஒரு வரி ஆரம்பித்தால் அதன் இரண்டாவது பகுதி சல்லியன் என்றுதான் ஆரம்பிக்கும். எதுகை மோனைக்காகத்தான் இப்படி என்று நினைக்கிறேன்.

அல்லியும் மகாபாரதத்தில் சித்ராங்கதா என்று குறிப்பிடப்படும் அரசியும் ஒன்றுதான் என்பது தெளிவு. ஆனால் சித்ராங்கதா மகன் பப்ருவாஹனன் அர்ஜுனனை பாரதப் போருக்குப் பிறகு தோற்கடிப்பது என்று எல்லாம் இந்தக் கதைகளில் வருவதில்லை. மாறாக அல்லி மகன் புலந்திரன் பவளத்தேர் வேண்டுமென்று அழுது அல்லி மாதிரியே அல்லி ராஜ்யம் நடத்தும் பவளக்கொடியை அர்ஜுனன் மணக்க மூலகாரணமாக இருக்கிறான். புலந்திரன் களவு கதையில் துரியோதனனின் தங்கை மகள் கலந்தாரியை மணக்கிறான். புலந்திரன் தூது கதையில் பாரதப் போருக்கு முன் தூது போகிறான். சின்ன அர்ஜுனன் சண்டை என்ற கதையிலோ துரியோதனனால் வளர்க்கப்படும் புலந்திரன்-கலந்தாரியின் மகன் சின்ன அர்ஜுனன் அப்படி அவன் தூது வரும்போது அவனுடன் போரிடுகிறான்!

அபிமன்னன் சுந்தரி மாலையின் மின்பிரதி தமிழ் இணைய நூலகத்தில் கிடைக்கிறது. சங்கரதாஸ் ஸ்வாமிகள் அபிமன்யு சுந்தரி என்ற பேரில் 1921-இல் நாடகமாகவும் எழுதினார்.சசிரேகா பரிணயம் என்ற பெயரில் ஆந்திராவில் இதே கதை பிரபலம். சுந்தரியின் பெயர் மட்டும் சசிரேகா என்று மாறிவிடுகிறது. மாயாபஜார் (1957) திரைப்படத்தின் மூலக்கருவும் இதுவே. இந்தோனேஷியாவிலும் இதைப் பற்றிய கதைப்பாடல் – ககவின் – பிரபலமாம்.கடோத்கஜன்-அரவான் உதவியுடன் அபிமன்யு பலராமரின் மகள் சுந்தரியை மணக்கிறான்.

அல்லி அரசாணி மாலையில் ஆண்களை வெறுக்கும் அல்லி ராணியை அர்ஜுனன் மணமுடிக்கிறான். அல்லி வியாசபாரதத்தின் சித்ராங்கதாதான் என்பது தெளிவு. மேலே சொன்ன மாதிரி அல்லியைச் சுற்றி வேறு கதைகளும் எழுந்திருக்கின்றன.

ஏணியேற்றம் அல்லி தொன்மத்தின் இன்னொரு பகுதி. துரியோதனன் அல்லியை அடைய விரும்பி அவமானப்படுகிறான்.

பவளக்கொடி மாலையை சங்கரதாஸ் ஸ்வாமிகள் பவளக்கொடி என்ற பேரில் பிற்காலத்தில் நாடகமாகவும் எழுதினார். அல்லி மகன் புலந்திரனுக்கு பவளத்தேரை பரிசாகத் தருவதற்காக ஆண்களை வெறுக்கும் பவளக்கொடியின் மனதை வென்று அர்ஜுனன அவளை மணக்கிறான்.

புலந்திரன் களவு மாலையும் அல்லி தொன்மத்தின் தொடர்ச்சி. பிற்காலத்தில் நாடகமாகவும் வந்தது. புலந்திரன் துரியோதனனின் தங்கை துச்சலையின் மகள் கலந்தாரியை மணக்கிறான்.

புலந்திரன் தூதும் பிற்காலத்தில் நாடகமாகவும் வந்தது. புலந்திரன் கௌரவர்களிடம் தூது செல்கிறான்.

சின்ன அர்ஜுனன் சண்டை என்று ஒரு மகா குழப்பமான நாடகம் ஒன்றைப் படித்தேன். இதில் புலந்திரன் தூது போகிறான்; அஸ்தினாபுரத்தில் ஹனுமான் லங்கையில் நந்தவனத்தை அழித்தது போல ஒரு நந்தவனத்தை அழிக்கிறான். வந்தது பலந்திரன் என்று அஸ்தினாபுரத்தில் தெரியவில்லை. யார் என்று கண்டுபிடித்து அவனை எதிர்க்க கர்ணன் ஆலோசனையில் புலந்திரன்-கலந்தாரியின் மகன் சின்ன அர்ஜுனன் (துச்சளையின் பேரன்) போகிறான். போகிற வழியில் துரியோதனன் மனைவி, துச்சாதனன் மனைவி, மற்ற கௌரவர்களின் மனைவிகள் எல்லாரும் திரௌபதியைப் பற்றி இழிவாகப் பாடி கும்மி அடிப்பதைக் கேட்கிறான். உடனே அவர்கள் சேலைகளை உருவி நிர்வாணமாக ஓட விடுகிறான். இதைக் கேட்டு அவனோடு போரிட வந்து துச்சாதனனை நாகாஸ்திரத்தால் கட்டிவிடுகிறான். பிறகு தான் நந்தவனத்தை அழித்தவனோடு சண்டை போட வேண்டும் என்பது நினைவு வந்து புலந்திரனோடு சண்டை. அப்பா-மகன் என்று தெரிந்து சமாதானம் ஆகிறார்கள். நாடகம் முடியப் போவதால் புலந்திரன்   அஸ்தினாபுரத்தில் பாண்டவர் கட்சியை எடுத்துச் சொல்ல, துரியோதனன் மறுக்க, புலந்திரன் திரும்புகிறான். ஒரு நாடகம் பார்க்கப் போனால் நாலு நாடகத்தை அரைகுறையாகக் காட்டுவார்கள் போலிருக்கிறது.

பொன்னருவி மசக்கை கர்ணனுக்கும் அவன் மனைவி பொன்னருவிக்கும் நடக்கும் குடும்ப சண்டை.

திரௌபதி குறம் சிறப்பான இசைப்பாடல். வனவாச காலத்தில் திரௌபதி குறத்தி வேடமிட்டு துரியோதனன் மனைவியிடம் பாண்டவர் வெற்றி அடைவார்கள் என்று குறி சொல்கிறாள். துரியோதனன் இது திரௌபதி என உணர்ந்து அவளை சிறைப்படுத்துகிறான். அர்ஜுனன் வந்து அவளை மீட்கிறான். 1880-இல் பதிக்கப்பட்டதாம். சென்னை அரசு நூலகத்தில் கையெழுத்துப்படியாக மட்டுமே இருந்ததாம். இணையத்தில் ஒரு மின்பிரதி கிடைத்தது.

கர்ணமோட்சம், கர்ண மகாராஜா சண்டை போன்ற தெருக்கூத்துகள் பிரபலமாக இருக்கின்றன. விஸ்வகேது திருமணம் என்ற கூத்து கர்ணனின் மகன் விருஷகேதுவின்  திருமணத்தைப் பற்றியாம். மணிமாலன் சண்டை பீமன் கல்யாண சௌகந்திக மலரைத் தேடிச்செல்லும்போது குபேரனின் படைத்தலைவன் மணிமாலனோடு நடத்தும் போரைப் பற்றியது.

மெலட்டூரைச் சேர்ந்த வையாபுரிச் சித்தர் என்பவர் அரவான் களப்பலி என்ற இசை நாடகத்தை எழுதி இருக்கிறார். இது இன்னும் மெலட்டூர் பகுதிகளில் நடிக்கப்படுகிறதாம். கண்ணன் ஐந்து பாண்டவர்கள், திரௌபதி எல்லாரிடம் அரவானை பலி இட வேண்டும் என்றும் சொல்ல, ஒவ்வொருவரும் ராஜ்யமே வேண்டாம் என்று மறுக்க, பிறகு அரவானே ஒவ்வொருவரிடம் சென்று விடை பெற்று வர என்று போகிறது.

பாரத அம்மானையை எழுதியவர் சையது முகம்மது அண்ணாவியார் என்ற இஸ்லாமியக் கவிஞர்! கவிஞர் கா.மு. ஷெரீஃப் அண்ணாவியாரின் சொந்த ஊரான அதிராம்பட்டினம், சுற்றுவட்டாரங்களில் பாடப்பட்டு வருவதைப் பார்த்திருக்கிறாராம்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் மழை பெய்யாவிட்டால் வில்லிபாரதத்திலிருந்து விராடபர்வம் படிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவும் ஒரு கலை வடிவே – ஏறக்குறைய காலட்சேபம் மாதிரி. முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்பே இப்பழக்கம் அருகிக் கொண்டிருந்தது.

திரௌபதி வழிபாடு தமிழ் பாரம்பரியத்தில் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் மட்டும் திரௌபதிக்கு 300 கோவில்கள் இருக்கின்றனவாம். வடதமிழகத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன். திரௌபதி விழா என்று சிறு வயதில் நானே பார்த்திருக்கிறேன். தமிழ் வம்சாவளியினர் வாழும் ஃபிஜி, மற்றும் ரீயூனியன் தீவுகளில் காந்தாரி வழிபாடும் உள்ளதாம். திரௌபதி வழிபாட்டு சடங்குகளில் மகாபாரத பாராயணம், தெருக்கூத்து, தீமிதி, கூத்தாண்டவர் திருவிழா எல்லாம் உண்டு.

பேராசிரியர் சீனிவாசன் எழுதிய தமிழகத்தில் பாரதம் – வரலாறு-கதையாடல் (2011) சுவாரசியமான புத்தகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் விரிவாக எழுதி இருப்பார் என்று யூகிக்கிறேன்.

பின்குறிப்பு: புகழேந்திப் புலவர் இந்தப் பதிவில் இருக்கும் படத்தைப் போலத்தான் இருந்தாரா என்று கேட்பவர்களுக்கு பிடிசாபம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: மஹாபாரதம்

ரண்டாமூழம்

ரண்டாமூழம் எனக்கு அறிமுகமானது பிரேம் பணிக்கர் எழுதிய பீம்சேன் மூலமாகத்தான். பீம்சேனை ரண்டாமூழத்தின் transcreation என்று சொல்லலாம், அதே கண்ணோட்டத்தை சில மாற்றங்களோடு எழுதினார் என்று சொல்லலாம்.

பீம்சேனைப் படித்து பத்து வருஷமிருக்கும். அப்போதிலிருந்தே ரண்டாமூழம் நாவலைப் படிக்க வேண்டும் என்று எண்ணம், சமீபத்தில்தான் முடிந்தது.

எனக்கு மகாபாரதப் பித்து உண்டு. மகா செயற்கையான, நாடகத்தனமான என்.டி. ராமாராவ் நடித்த மகாபாரதத் திரைப்படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன். மகாபாரதத்தின் மறுவாசிப்புகளைப் படிப்பதென்றால் எனக்கு லட்டு சாப்பிடுவது மாதிரிதான். எனக்கு ரண்டாமூழம் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை. இந்த நாவலைப் பற்றிய என் கணிப்பு சமநிலையானதுதானா என்று நீங்கள்தான் கவலைப்பட வேண்டும்.

ரண்டாமூழம் மகாபாரதத்தை பீமனின் கண்ணோட்டத்தில் விவரிக்கிறது. அவ்வளவுதான் கதை.

பீமன் என்ன செய்தாலும் அது இரண்டாம்பட்சம்தான், அது பெரிதாகக் கருதப்படுவதில்லை, he was always taken for granted என்பதுதான் கதையின் அடிநாதம். க்ஷத்ரிய தர்மப்படி துரியோதனனை வென்றவன்தான் அரசனாக வேண்டும். பாரதத்திலேயே போர் முடிந்ததும் யுதிஷ்டிரன் தனக்கு கிரீடம் வேண்டாம் என்று மறுக்கும் ஒரு காட்சி உண்டு. அது அப்படியே காற்றோடு போய்விடும். பணயம் வைத்தபோதே அண்ணனை மறுத்துப் பேசாத தம்பிகள்; அண்ணனை வற்புறுத்தி அரசனாக்கினார்கள் என்பதுதான் சாதாரணமான புரிதல். இங்கே பீமன் அரசனானால் திரௌபதி அரசியா என்ற கேள்வியை எம்டி எழுப்புகிறார்; திரௌபதிக்கு ஒரு குறைவு வரவேண்டாம் என்றுதான் பீமன் அரியணையை மறுத்தான் என்று புனைகிறார். அதே போல அபிமன்யுவுக்காக அத்தனை பேரும் கொதித்தெழுகிறார்கள். கடோத்கஜன் இறந்தால் கிருஷ்ணன் வெளிப்படையாக மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறான். கஷ்டப்பட்டு சௌகந்திகப் பூவைக் கொண்டு வந்தால் அதை திரௌபதி யுதிஷ்டிரனுக்குத் தருகிறாள். பீமனுக்கு எப்போதும் இரண்டாம் இடம்தான். ஆட்சி அதிகாரமாகட்டும், திரௌபதி மீது உரிமை எல்லாவற்றிலும் யுதிஷ்டிரனுக்குத்தான் முதல் இடம். புகழ் என்றால் அர்ஜுனனுக்கு அடுத்த இடம்தான். எல்லா தகுதிகளும் இருந்தும் காலம் முழுவதும் இரண்டாம் இடத்திலேயே வாழ்பவனின் எண்ணங்கள் என்று சொல்லலாம்.

பீமன் அடிப்படையில் ஒரு காட்டு மனிதன் என்பதாக சித்தரிக்கிறார். நாகரீகப் பூச்சு மற்றவர்களோடு ஒப்பிடும்போது கொஞ்சம் குறைவு. இடும்பியோடு வாழ்ந்த காலமே மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதெல்லாம் பீமனின் சித்திரத்தை உயர்த்துகிறது.

நாவலில் நான் மிகவும் ரசித்த இடங்கள் இரண்டு. அண்ணன்காரன், வீராதிவீரன், கர்ணனை தேரோட்டி மகன் என்று இழிவுபடுத்தினோமே என்று பீமன் வருந்தும்போது, குந்தி கர்ணனை உண்மையிலேயே ஒரு அழகான தேரோட்டிக்குத்தான் பெற்றேன் என்று ஒத்துக் கொள்ளும் இடம்; வாயுபுத்திரன் உண்மையிலேயே ஒரு பலசாலியான காட்டு மனிதனின் மகன் என்று குந்தி சொல்லும் இடத்தில் தோன்றும் வெறுமை. இவை இரண்டும் அபாரமான இடங்கள்.

பலவீனங்கள்? பீமனைத் தவிர கதையில் வேறு யாருமில்லை. மற்றவர்கள் கண் வழியாகவும் பீமனைக் காட்டி இருந்தால் நாவல் எங்கோ போயிருக்கும்.

நாவல் பிடித்திருந்தாலும் இந்த நாவலை நான் கூட எழுதி இருக்கலாம் என்று தோன்றிக் கொண்டே இருந்தது. என்னாலேயே எழுத முடியும் என்றால் நான் கொஞ்சம் குறைத்துத்தான் மதிப்பிடுவேன். 🙂

1984-இல் எழுதப்பட்ட நாவல். கீதா கிருஷ்ணன்குட்டியின் ஆங்கில மொழிபெயர்ப்பு. Bhima: Lone Warrior என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

நாவலைக் கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் பிரேம் பணிக்கரின் பீம்சேனையும் படியுங்கள். வித்தியாசங்கள் ரசிக்கும்படி இருக்கும்.

இன்னொரு பீமன் கண்ணோட்ட நாவலைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். விகாஸ் சிங் எழுதிய “Bhima: The Man in the Shadows” ரெண்டாமூழம் நாவலால் inspire ஆனது என்று தோன்றுகிறது. இதில் பீமனுக்கு அர்ஜுனன் மீது கொஞ்சம் சகோதரக் காய்ச்சல். அதிலும் தான் விரும்பும் திரௌபதி மிகவும் விரும்புவது அர்ஜுனனைத்தான் என்பதால் resentment அதிகமாகிறது. மகாபாரதப் பிரியர்களைத் வெறியர்க்களைத் தவிர மற்றவர்கள் ரெண்டாமூழத்தையே படித்துக் கொள்ளலாம். நாவலில் நினைவிருக்கப் போவது சில தியரிகள்தான். தேவர்கள் – இந்திரன், வாயு எல்லாரும் – வேற்றுக் கிரகவாசிகள், அவர்களது அறிவியல் அதிமுன்னேற்றம் அடைந்திருக்கிறது. வாயு பகவானின் ஜீன் ஒன்றால் அவருக்கு தன் உருவத்தை பெரிதாகவோ சிறிதாகவோ மாற்றிக் கொள்ள முடிகிறது, அந்த ஜீன் ஹனுமானுக்கு வந்திருக்கிறது, பீமனில் dormant, கடோத்கஜனுக்கு வந்திருக்கிறது. இந்த மாதிரி சில தியரிகள் புன்னகைக்க வைத்தன.

தொகுக்கப்பட்ட பக்கம்: மஹாபாரதப் பக்கம்

ஜெயமோகனின் ‘வெண்முரசு’

மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
10 வருடங்கள் – தினமும் இணையத்தில்
2014 புத்தாண்டு முதல்…

Venmurasu

வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்

ஜெயமோகன்

www.jeyamohan.in