ஜெயமோகன் “ஹிந்து என உணர்தல்” என்று சமீபத்தில் ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.
அவரது பதிவை இப்படி சுருக்கிக் கொள்கிறேன்.
- அறிவியக்கத்தில் செயல்படுபவன் மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாள வேண்டும்.
- மரபின் சிந்தனைகளின் பெரும் பகுதி மதத்திலேயே உள்ளது.
- மதம் வெறும் நம்பிக்கையோ, ஆசாரங்களின் தொகுதியோ, சட்ட திட்டங்களோ மட்டும் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது.
- அதிலும் இந்து மதம் மிகத் தொன்மையானது. அதன் ஒரு பகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது.
- இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில் பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து.
- நான் அப்படி இந்து மதத்துடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்?
- எந்த மதத்தின், சிந்தனை மரபின் நடைமுறை உலகியலுக்கும் அதன் லட்சியவாதத்துக்கும் தூரம் இருக்கத்தான் செய்கிறது. தூரம் மதத்துக்கு மதம், மரபுக்கு மரபு வேறுபடுகிறது. அந்த தூரத்தை வைத்து ஒரு மரபை நிராகரிப்பதில் பொருளில்லை.
- தனிப்பட்ட முறையில் வேதாந்தம் ஜெயமோகனின் தேடலுக்கான வழி.
என் பதின்ம வயதுகளில் மனிதன்தான் கடவுளை உருவாக்கினான், கடவுள் எல்லாம் சும்மா டுமீல், ஆனால் எதற்கும் கொஞ்சம் பக்தியோடு இருந்து கொள்வோம், தப்பித் தவறி உண்மையிலேயே கடவுள் இருந்து தொலைத்துவிடப் போகிறார் என்றெல்லாம் நானே சொந்தமாக புரட்சிகரமாக யோசித்து சில முடிவுகளை அடைந்திருந்தேன். வயது அதிகரிக்க அதிகரிக்க சில சமயம் ஆஸ்திகனாக, சில சமயம் நாஸ்திகனாக, சில சமயம் இரண்டும்கெட்டானாக எல்லாம் இருந்திருக்கிறேன்.
ஆனால் அன்று தோன்றியவைதான் அனேகமாக இன்றும்; நான் ஹிந்துவாகப் பிறந்தது ஒரு விபத்து. ஹிந்துவாகப் பிறந்தது மட்டுமல்ல, ஆணாகப் பிறந்ததும் விபத்துதான்; தமிழனாக, இந்தியனாக, மத்தியதர வர்க்க குடும்பத்தில், அய்யர் ஜாதியில் பிறந்தது எல்லாம் விபத்துதான். விபத்தைப் பற்றி பெருமை அடைய எதுவுமில்லை, அதனால் “உயர்ந்த” அய்யர் ஜாதிக்காரன் என்றோ, பல நூறு ஆண்டுகள் முன்னால் ஓதப்பட்ட யஜுர்வேத மரபினன் என்றோ, விஸ்வாமித்ரரும் கடவுளின் அவதாரம் என்றே கருதப்படும் பரசுராமரும் என் குல மூத்தவர்க்ள என்றோ, கல்லானாலும் கணவன் என்று மனைவியை விட ஒரு படி உயரத்தில் இருக்கிறேன் என்றோ, கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்க் குடியினன் என்றோ, இந்தியன் என்றோ, ஹிந்து என்றோ எந்தப் பெருமிதமும் இல்லை; அதே நேரத்தில் எந்தச் சிறுமையும் இல்லை. யாதும் ஊரே; யாவரும் கேளிர். யாரோ எப்போதோ போட்ட எல்லைக் கோடுகளில் எனக்கென்ன பெருமிதம்? தீதும் நன்றும் பிறர் தர வாரா, அந்தப் பிறரில் ராமனும் கிருஷ்ணனும் வியாசனும் காந்தியும் புதுமைப்பித்தனும் அசோகமித்ரனும் ஜெயமோகனும் இருந்தாலும் சரி; மாபெரும் மரபு ஒன்றின் தொடர்ச்சியான பல கோடி கண்ணிகளில் ஒருவனாக இருந்தாலும் சரி.
அதற்காக பெருமிதம் என்பதே இல்லையா? கொஞ்சூண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த மனித இனத்தின் சாதனைகளுக்காக. என் பெண் கலிஃபோர்னியாவில் சாண்டா பார்பரா என்ற இடத்தில் படித்தாள். நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நான்கு மணி நேர கார் பயணம். ஒவ்வொரு முறையும் மலைகளை அகழ்ந்து ரோடு போட்டவர்களை நினைத்து வியந்திருக்கிறேன். சான் ஃப்ரான்சிஸ்கோவின் கோல்டன் கேட் பாலத்தைக் கண்டு பெருமிதம் கொண்டிருக்கிறேன். மகாபலிபுரத்தின் மகிஷாசுரன் புடைப்புச் சிற்பம் என் மனதை விம்மச் செய்கிறது. கைலாசநாதர் கோவிலைக் கண்டபோது என் மார்பு விரிந்ததை உணர்ந்தேன். கோடலின் தேற்றம், ரூதர்ஃபோர்டின் பரிசோதனைகள், Riemann’s hypothesis, NP vs P problems என்று மனித குலத்தின் சாதனைகளுக்காக பெருமிதம் கொள்கிறேன். தஞ்சை பெரிய கோவிலை வடிவமைத்த பெயரில்லாதவர்கள்; சிஸ்டைன் ஆலயத்தின் மேற்கூரையில் ஓவியம் தீட்டிய மைக்கலாஞ்சலோ; கோனிக்ஸ்பர்கின் ஏழு பாலங்களையும் ஒரே ரவுண்டில் கடக்க முடியுமா என்று சிந்தித்த ஆய்லர்; என்று பல ஆயிரம் சாதனையாளர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அந்தப் பெருமிதத்தில் “அவனே அறிவான்; ஒரு வேளை அறியானோ?” என்ற ரிக்வேதப் பாடலும் உண்டு; “அவரோ வாரார்; முல்லையும் பூத்தன” என்று குறுந்தொகைப் பாடலும் உண்டு; “உன்னித்தெழுந்த என் தடமுலைகள் மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்ற ஆண்டாள் பாசுரமும் உண்டு; “It tolls for thee” என்ற ஜான் டோன் கவிதையும் உண்டு. “How Dark?” என்ற வோலே சோயிங்கா கவிதையும் உண்டு. மகாபாரதமும் உண்டு. கில்கமேஷும் உண்டு. அர்த்தசாஸ்திரத்தின் இரக்கமே அற்ற லாஜிக்கும் உண்டு. ஷேக்ஸ்பியரும் உண்டு. மோபி டிக்கும் உண்டு. தியாகராஜரும் உண்டு. பீத்தோவனும் உண்டு. பீட்டில்ஸும் உண்டு. இட்லி தோசையும் உண்டு. கும்பகோணம் டிகிரி காப்பியும் உண்டு. அய்யர் வீட்டு பருப்பு ரசம் பிடிக்கும் என்பதால் அய்யங்கார் வீட்டு புளியோதரையோ, செட்டிநாடு கோழியோ, கேரள சக்கைப் பிரதமனோ வங்காளத்து ரசகுல்லாவோ இத்தாலிய ரவியோலியோ ஜப்பானிய சுஷியோ பாஸ்டனின் க்ளாம் சௌடரோ ஃப்ரான்சின் க்ரீம் ப்ரூலேயோ விலக்கல்ல. அந்தப் பெருமிதத்தில் ஹிந்து மரபு, கிறிஸ்துவப் மரபு, யஜூர்வேத மரபு, திருப்புகழ் மரபு என்பதெலாம் தகவல்தான். உலகின் எந்த மூலையிலிருந்து வந்தது என்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
இது பெருமிதமா, வியப்பா, சாதனையாளர்கள் முன் தலை தாழ்த்துவதா? எல்லாம் சேர்ந்து கட்டி அடித்த ஒரு உணர்வு என்பதுதான் சரி.
மரபுத் தொடர்ச்சி மகா முக்கியம்தான். யூக்ளிட் இல்லையேல் நியூட்டன் இல்லை. கியோட்டோ இல்லையேல் டாவின்சி இல்லை. வியாசர் இல்லையேல் ஜெயமோகன் இல்லை. திருப்பதி மலை ஏறும்போது இது வரை எத்தனை கோடி பேர் ஏறிய மலை, எத்தனை ஆயிரம் ஆண்டு ஏறிய மலை, எத்தனை ஆண்டு காலம் தரிசித்த சிலை என்ற எண்ணம் பெருநிறைவை எனக்கும் ஏற்படுத்துகிறது. வைத்தீஸ்வரன்கோவிலில் என் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் பிறந்த சூழலையும் தாண்டி இருப்பதும் என் மரபே. தாய்மொழியும், பாஸ்போர்ட்டும், (சில சமயம்) வணங்கும் தெய்வமும் என் மரபைக் குறுக்கி விடுவதில்லை.
ஜெயமோகனும் இதை கோடி காட்டுகிறார். அவருக்கு என் கருத்துகளில் ஆட்சேபணை எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன். அவர் சொல்ல வருவதை இப்படி புரிந்து கொள்கிறேன். ஹிந்து மதம் மாபெரும் அறிவுச் சிந்தனை தொடர்ச்சி. நம்முடைய விழுமியங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் நியாயமாகத் தெரிந்தது அநியாயம் என்று இன்று தெரியலாம். திருத்திக் கொள்வோம். அன்று உலகியல் ரீதியாக நடந்த அநியாயத்துக்காக இன்று ஹிந்து மதத்தை நிராகரிப்பதில் பொருளில்லை. அப்படி அவர் சொல்வதில் எனக்கு முழு சம்மதமே.
ஜெயமோகன் ஹிந்து மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறார், அவரது அடையாளத்தைக் உருவாக்கிக் கொள்கிறார்., பெரும் கனவுகளைக் காண்கிறார், அதை ஏன் தவிர்க்க வேண்டும், வேறு எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும் என்று கேட்கிறார். அவரோடு நான் வேறுபடுவது இந்த ஒரு இடத்தில்தான், அதிலும் ஒரு சிறிய புள்ளியில்தான். நான் ஹிந்து மதத்திற்கும் வெளியே உள்ளதும் என் மரபேதான், அப்படி மனித இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும்போது இன்னும் மகத்தான மரபோடு இணைகிறேன், இன்னும் பெரும் கனவுகளைக் காண்கிறேன், அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்று கேட்கிறேன். அதாவது ஹிந்து என்று மட்டும் அடையாளப்படுத்திக் கூடாது என்பதல்ல, அது மட்டும் எனக்கு போதவில்லை, அதற்கு மேலும் அடையாளப்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
இப்படி சொல்கிறேனே! நான் அய்யர் ஜாதியில் பிறந்தவன். பொடி அடைத்த கத்திரிக்காய் கறியை சாப்பிடும்போது இதை எப்படிரா கண்டுபிடித்தார்கள் என்று மகிழ்ந்து கொள்கிறேன். நான் தமிழன்; “பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்படா நாருடை ஒசியலற்றே” என்று படிக்கும்போது இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே கவிதை எழுதிய என் முப்பாட்டனை நினைத்து பெருமை கொள்கிறேன். நான் இந்தியன். மகாபாரதத்தை விட உயர்ந்த இலக்கியம் உலகில் இல்லை என்று பெருமிதம் கொள்கிறேன். நான் மனிதன். டீகார்டஸ் வடிவ கணிதத்தை அல்ஜீப்ராவின் ஒரு பகுதியாக ஆக்கியதைப் பார்த்து ஆஹா! என்று வியக்கிறேன்.
ஆனால் ஹிந்துவாக இருப்பதில் பல சௌகரியங்கள் உண்டு. எதற்கு வேண்டுமானாலும் ஒரு முன் உதாரணம் கண்டுபிடித்துக் கொள்ளலாம். கடவுள் இல்லை என்று சொன்னாலும் ஹிந்துதான். மதநூல் , ஒரே குரு, என்று எதுவுமில்லை, அதனால் சிந்தனைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. அதனால் பதின்ம வயதிலிருந்தே – நான் சொந்தமாக மண்டையைக் குழப்பிக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்தே – நான் ஹிந்துவேதான். பைபிளில் அங்கங்கே தெரியும் லட்சியவாதம் என்னைக் கவர்ந்தாலும், யூத பார்சி மதங்களின் தொன்மை என்னைக் கவர்ந்தாலும் நான் ஹிந்துவேதான். எனக்கு வேண்டிய ஆன்மீகத் தேடலை நானேதான் முட்டி மோதி பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் ஒரே மதம்; எனக்கு ஆன்மீகத் தேடலே கிடையாதா, அது என் சொந்தப் பிரச்சினை என்று சொல்லும் ஒரே மதம் எனக்குத் தெரிந்த வரையில் ஹிந்து மதம் ஒன்றுதான். அதனால் நான் ஹிந்துவேதான். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்; அப்போதும் ஹிந்துவாகவேதான் பிறக்க விரும்புகிறேன். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதுதான் எனக்கு மதக் கோட்பாடு. (நாளை அதுவும் மாறலாம்.) கிருஷ்ணனும் அல்லாவும் ஏசுவும் ஜெஹோவாவும் கூட எனக்கு தீதையும் நன்றையும் தந்துவிட முடியாது என்றுதான் கருதுகிறேன். அந்தக் கோட்பாட்டை நான் ஹிந்து மதத்தில்தான் கடைப்பிடிக்க முடியும்.
நான் எழுதியதை மீண்டும் படித்தால் அறிவு, இலக்கிய, கலை சாதனைகள்தான் எனக்கு பெரிதாகத் தெரிகிறது என்பது எனக்கே தெளிவாகிறது. காந்தியைத் தவிர வேறு எந்த தலைவரும் எனக்கு முக்கியமாகப் படவில்லை. அலெக்சாண்டரும் சீசரும் ராஜராஜனும் ஜெங்கிஸ் கானும் பீட்டர் சக்ரவர்த்தியும் அக்பரும் சிவாஜியும் எனக்கு இரண்டாம்பட்சம்தான். ஒரு வேளை அறிவியல் சாதனைகள் என்று இந்திய மரபில் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால்தான் என் மனம் சுலபமாக இந்தியாவிற்கு வெளியே செல்கிறதோ என்னவோ. ஜெயமோகனுக்கு அறிவியல் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். அவருக்கு ஒரு பஞ்ச் டயலாக்! – “எனக்கு அழகியல்தான் முக்கியம், அறிவியல் அல்ல”
மறுபடியும் சொல்கிறேன். இதெல்லாம் கொஞ்சூண்டுதான். என் மரபு, என் குலம், என் இனம் இத்தனை சாதனைகள் புரிந்ததா என்ற வியப்புதான். (இதே மனித குலத்தின் சிறுமைகள் ஏன் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை, நான் ஏன் ஹிட்லரையும் ஔரங்கசீப்பையும் கோட்சேயையும் நினைத்து சோர்வடைவதில்லை என்பது எனக்கே இன்னும் தெளிவாகவில்லை.) நான் உண்மையில் பெருமிதம் கொள்வதும் சிறுமை கொள்வதும் என் செயல்களுக்காக மட்டுமே. அப்படி பெருமிதப்படும்படி இனி மேல்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான் சோகம்…
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...