(பழைய) சினிமாவில் பாரதியார் பாடல்கள்

இந்த யூட்யூப் சுட்டியில் பல அரிய பாரதி பாடல்கள் கிடைக்கின்றன. குறிப்பாக டி.ஆர். மஹாலிங்கம் குரலில் “மோகத்தைக் கொன்றுவிடு“, எம்எல்வி குரலில் “சுட்டும் விழிச்சுடர்தான்” மற்றும் “கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்” ஆகியவற்றை நான் முன்னே கேட்டதில்லை, பரிந்துரைக்கிறேன். Usual suspects ஆன “சின்னஞ்சிறு கிளியே“, டி.ஆர். மகாலிங்கம் குரலில் “சோலை மலரொளியோ“, கப்பலோட்டிய தமிழன் படத்தில் திருச்சி லோகநாதன் குரலில் பாடங்கள் எல்லாம் இருக்கவே இருக்கின்றன. தேவநாராயணன் என்பவரை நான் முன்னே பின்னே கேட்டதே இல்லை, உச்சரிப்பிலிருந்தும் பாடும் பாணியிலிருந்தும் தெலுங்கர் என்று யூகிக்கிறேன், “மங்கியதோர் நிலவினிலே” பாடல் charming ஆக இருந்தது.

கட்டாயம் பாருங்கள்/கேளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

பரத நாட்டியப் பதம் – அதுவும் சொல்லுவாள்

ஓரிரு வருஷங்களுக்கு முன் என் உறவுக்காரப் பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. மதுமிதாவுக்கு அப்போது இரண்டு மூன்று வயதில் குழந்தை. அப்போதும் விடாமல் பயிற்சி செய்து அரங்கேற்றம் செய்த மதுமிதாவுக்கு ஒரு சலாம்!

அரங்கேற்றத்தில் ஒரு பதத்தை முதல்முறையாகக் கேட்டேன். கேட்டவுடன் இது பரதநாட்டியம் தேவதாசிகளின் ஏரியாவாக மட்டும் இருந்த காலத்தில் – 18, 19-ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் – சதிர்களில் ஆடுவதற்காக எழுதப்பட்ட பதம் என்று தெளிவாகத் தெரிந்தது. நாயகன் இன்னொரு பெண்ணுடன் (தாசியுடன்) குலவுகிறான், அவள் செல்வத்தில் கொழிக்கிறாள் என்ற ஆங்காரத்தை வெளிப்படுத்தும் பதம். நாயகன் இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டிருப்பதில் கூட பிரச்சினை இல்லை, ஆனால் அதன் விளைவாக அவள் பட்டும் நகையுமாக மினுக்குவதில்தான் பிரச்சினை. அதனால்தான் இருவரும் தாசிகளாக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

எழுதியவர் வைத்தீஸ்வரன்கோவில் சுப்பராம ஐயர். சுப்பராம ஐயர் பல பதங்களை எழுதி இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் அவரது காலம் எதுவென்று தெரியவில்லை. பதத்திலும் வைத்தீஸ்வரன் கோவில் பற்றிய ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் சதிர் மிகவும் பிரபலமாக இருந்தது என்று கேள்வி.

நாட்டியம் ஆட நல்ல ஸ்கோப் உள்ள பதம். மதுவின் வீடியோ இல்லாததால், சுதாராணி ரகுபதியின் வீடியோவை இணைத்திருக்கிறேன். சு. ரகுபதிக்கு கொஞ்சம் வயதான களை இருப்பதால், நாயகன் அவளை விட்டு நீங்கவும் காரணம் இருக்கிறது என்று நம் கற்பனையை ஓட விட்டுக் கொள்ளலாம்.

பாடல் வரிகள்:
அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

மதியும் நதி அணைந்த வைத்தீஸ்வரன் நாட்டின்
பதியான முருகேசன் செய்த காரியத்திற்கு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

எந்நேரமும் இங்கே வந்து நகை என்றும் துணி என்றும் இரவல் கேட்ட நாள் போச்சே!
எனக்கெதிரியாக அவள் சன்னக்காரையிட்ட மெத்தை வீடும் உண்டாச்சே!
உன்னதம் உன்னதமான கட்டிலாச்சு மெத்தையாச்சு
உயர்ந்த மக்மல் தெண்டு பட்டுப் புடவையுமாச்சு
தன்னை விட பாக்யசாலி கிடையாதென்று எண்ணமாச்சு
தனியே இருந்தவளுக்கு தாதிமார் உண்டாச்சு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

கையில் இல்லாதவள் ரெண்டு காசைக் கண்டவுடன் கர்வம் மீறிப் போச்சே!
கருமணிக்கும் வழி இல்லாது நின்றவளுக்கு கழுத்தில் கண்டசரம் உண்டாச்சே!
ரெண்டு கைக்கும் தங்கத்தினால் காப்பும் கொலுசுமாச்சு
ரத்தினங்கள் இழைத்த ஜடை பில்லை நாகமாச்சு
கண்ட இடத்தில் நின்றவளுக்கு கட்டுக்காவல் உண்டாச்சு
கறந்து குடிக்க ஒரு கொட்டில் மாடும் உண்டாச்சு

அதுவும் சொல்லுவாள் – அவள்
அனேகம் சொல்லுவாள்
அவள் மேல் குற்றம் என்னடி!

சௌராஷ்டிர ராகம், ஆதி தாளம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இசை

அருணாசல கவிராயரின் ராம நாடகம்

அருணாசலக் கவிராயர் தமிழ் மூவரில் ஒருவர். கர்நாடக இசைக்கு தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி போன்று தமிழிசைக்கு இவரையும் முத்துதாண்டவரையும் மாரிமுத்தா பிள்ளையையும் சொல்வார்கள்.

அவரது ஏன் பள்ளி கொண்டீரய்யா சாஹித்யம் பிரபலமானது. ‘மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடன் வழி நடந்த இளைப்போ’ என்ற வரிகளில் வரும் துள்ளல் கூடப் பாடுகிறோமோ இல்லையோ வாய்க்குள்ளேயே முனங்கவாவது வைக்கும். அவரது ராமநாடகக் கீர்த்தனைகளும் மிக அருமை. யாரோ இவர் யாரோ, கண்டேன் கண்டேன் சீதையை, ராமனுக்கு மன்னன் முடி தரித்தானே போன்ற பல பாடல்கள் இன்றும் பாடப்படுகின்றன.

அவரைப் பற்றிய ஒரு கட்டுரை கண்ணில் பட்டது. கவிராயர் தமிழ் மூவரில் ஒருவர், அவர் எழுதிய சில கீர்த்தனைகளை கேட்டிருக்கிறேன், அவ்வளவுதான். கட்டுரை எனக்கு பல தகவல்களைத் தந்தது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஏன் பள்ளி கொண்டீரய்யா மஹாராஜபுரம் சந்தானம் குரலில் கீழே

தொகுக்கப்பட்ட பக்கம்: இசை

கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்

மீண்டும் நேரக்குறைவு. இந்த வாரம் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். சரி சுட்டிகள், இணைப்புகளைக் கொடுத்து இந்த வாரத்தை ஓட்டுகிறேன்.

gopalakrishna_bharathiஎன் தலைமுறைக்காரர்கள் எங்கோ எப்போதோ கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்களைக் கேட்டிருப்பார்கள். நல்ல குரல் வளம் உள்ளவர்கள் பாடினால் கேட்க சுகமாக இருக்கும். உதாரணத்துக்கு நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிய ஒன்று.

ப்ராஜெக்ட் மதுரையில் புண்ணியவான்கள் அவரது பாடல்களைத் தொகுத்துப் போட்டிருக்கிறார்கள். சுட்டி கொடுக்கத்தான் இந்தப் பதிவு.

பாரதியாரின் நந்தனார் இசை நாடகம் மிகப் பிரபலம், ஆனால் அவர் வேறு ஏதாவது எழுதினாரா என்று தெரியவில்லை. இந்தத் தொகுப்பில் எல்லாம் நந்தனார் பாட்டு மாதிரிதான் இருக்கிறது.

தமிழ் விக்கிபீடியாவிலிருந்து:

நந்தனார் சரித்திரத்தைத் தன் காலத்திலேயே வெளியிட்டார் கோபாலகிருஷ்ண பாரதியார். ஆனால் அப்போது திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இதில் உள்ள இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது பொருள் குற்றம், கருத்தில் பிழை எனச் சொல்லி இந்த நந்தனார் சரித்திரத்திற்குப் பாயிரம் எழுதிக் கொடுக்க மறுத்து வந்தார். பின்னால் கோபாலகிருஷ்ண பாரதியார் நடையாக நடந்து, மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் மனதைத் தன் இசையால் மாற்றி, பாயிரம் எழுதி வாங்கினார் என உ. வே. சாமிநாதையர் தன்னுடைய என் சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: இசை