நிழல் முற்றம் – பெருமாள் முருகன்

ஸ்ரீ விஜயா தியேட்டரில் உள்ள சோடா கடையில் வேலை பார்க்கும் சத்தி என்கிற சக்திவேல், இடைவெளி நேரத்தில் சோடா நிரப்பி, விற்று, கழுவி என ஆரம்பித்து அடுத்ததாக வெளியிடப்படும் படத்திற்கு ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டும் வேலை வரை செய்து அங்கேயே வாழ்ந்து வருபவன். சத்தியோடு அவனுடைய நெருங்கிய நண்பன் நடேசன், கணேசன், பூதன் என மற்ற பையன்களும் அந்த தியேட்டரின் வளாகத்திற்க்கு உள்ளே உள்ள டீக்கடை, சைக்கிள் நிறுத்தும் இடம், டிக்கெட் கவுன்டர்களில் சொல்லப்படும் வேலைகளை செய்து அங்கேயே தங்கி வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நண்பகல் ஆட்டம் தொடங்குவதோடு ஆரம்பம் ஆகி இரண்டாம் ஆட்டம் முடிந்து சோடா கடை மூடும் வரை ஓடிக் கொண்டேயிருக்கிறது. அந்த வாழ்க்கையின் ஒரு கால பகுதியை அதில் சம்பந்தப்பட்ட மனிதர்களை, அவர்களுக்கிடையே உள்ள உறவுகளை சத்தியின் வழியே சொல்கிறது பெருமாள் முருகனின்நிழல் முற்றம்’ நாவல்.

விளிம்பு நிலை என்று சொல்லத் தக்க வறுமையில் இருக்கும் வாழ்க்கையிலும் மற்ற எவரைப் போலவே கிடைக்கும் நேரங்களில் அந்த வாழ்க்கையின் உள்ளே எல்லா சந்தோஷங்களையும் அனுபவிக்கும் மனிதர்களாக தான் அவர்கள் உள்ளனர். கிடைக்கும் சொற்ப பணத்தில் சாப்பாட்டை குறைத்துக் கொண்டு போதை மாத்திரைகளையும், கஞ்சாவையும் புகைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தையை பார்க்கும் போது உண்டாகும் விளையாட்டு தனமும், பசியாறிய பிறகு கிணற்றில் சென்று விழுந்து கும்மாளமிடுவதும் என எங்கும் காணகிடைக்கும் மனிதர்களின் அதே ஆசைகளும் உணர்வுகளும் அவர்களுக்கும் உள்ளது, அவைகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுது அனுபவித்தும் கொள்கிறார்கள்.

இடையில் குஷ்டரோகம் பிடித்து பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் சத்தியின் அப்பா அவனைக் காண வருகிறார். தன்னைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாத சத்தி, தன் தந்தை ஒரு பிச்சைகாரன் என்பது வெளியே தெரிந்துவிடுமோ என்கிற பயத்திலும், எரிச்சலிலும் திட்டி அனுப்பி விடுகிறான். அவர் கை வைக்காமல் கொண்டு வந்த சோற்றை தின்னாமல், அவர் கொடுத்த காசை மட்டும் வாங்கிக் கொண்டு இனிமேல் தியேட்டருக்கு வரக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறான். நடேசனின் பாட்டி – அப்பாவின் தாயார் – அவனுக்கு சமைத்து எடுத்து வருகிறார். அதை சாப்பிட்டு விட்டு செலவிற்க்கு காசு தர முடியாது, போய் அப்பனிடம் வாங்கி கொள்ளுமாறு விரட்டி விடுகிறான். அதை பார்க்க பொறுக்காமல் சத்தி பாட்டிக்கு தன் பணத்தை கொடுத்து விடுகிறான்.

தினமும் தியேட்டர் கலெக்ஷனில் கமிஷன் வாங்கி போகும் படக் கம்பெனிகாரன் ஒரு நாள் சத்திக்கு மதுவும், மிக்சரும் கொடுத்து உடலுறவு கொள்கிறான். “அண்ணே..அண்ணே..” என்பதை தவிர சத்தி எதுவும் சொல் இயலவில்லை. பிறகு அதுவே படக்காரனுக்கு பழக்கமாகி விடுகிறது.

ஒருவரிலிருந்து மற்றவர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் எடுத்துக் கொள்ளும் ஆதாயங்கள் நாவல் முழுவதும் கதையோட்டமாக வருகிறது. தியேட்டர் தண்ணி தொட்டியிலிருந்து சோடாக்காரர் தன் கடைக்கு தெரியாமல் திருடிக் கொள்ளும் தண்ணீர், காசில்லாமல் குடித்த கலருக்காக டிக்கெட் வாங்காமல் சோடாகடை காரருக்கு தெரிந்தவர்களை அனுப்பும் மானேஜர், எம்ஜியார் படத்திற்க்கு கூட்டம் அதிகமாகும் சமயத்தில் முன்னரே டிக்கெட்டை வாங்கி பிளாக்கில் விற்கும் சத்தி, நடேசன் மற்றும் கூட்டாளிகள், இரண்டாம் ஆட்டத்தில் தூங்கி கொண்டிருப்பவனின் புதிய செருப்பை பையன்களும், சோடாகடைகாரருமாக திருடி கடைக்குள் ஒளித்து வைத்து கொள்வது என தினப்படி விஷயங்களாக அவை நடைபெறுகின்றன. இவை எதிலும் குற்றவுணர்வோ, தன்னிரக்கமோ, நியாயபடுத்துதல்களோ எதுவும் இல்லை.

சோடா கடைகாரருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நிலப் பிரச்சனை நடக்கிறது. மற்றவன் காட்டில் தடம் போடுவதற்கு சம்மதிக்காததால் சோடா கடைகாரருக்கு இடைஞ்சல். இரவோடு இரவாக வேலையாட்களை வைத்து சண்டைக்காரனின் இடம் வழியே தடம் போட்டு விடலாம் என திட்டமிடுகிறார். அப்போது பிரச்சனை ஏற்பட்டால் அடி கொடுக்கவும், வாங்கவும் தியேட்டர் பையன்களுக்கு வீட்டில் தண்ணியும் , சாப்பாடும் போட்டு காவலுக்கு கூட்டி செல்கிறார்.

ஒரு நாள் இரவு சோடா கடைக்கு உள்ளே யாரோ நுழைந்து எல்லாவற்றையும் அடித்து நாசப்படுத்தி விடுகிறார்கள். யாரென தெரியாமல் அடுத்த நாள் அவர் எல்லோரையும் பிடித்து அடிக்கிறார். சத்தியும் மதியம் அரை தூக்கத்தில் போய் அடி வாங்குகிறான், அப்போது தான் வேலைக்கு வருகிற வாட்ச்மேன் கிழவனும் அடி வாங்குகிறான். இறுதியில் பூதன் தான் அங்கிருந்து ஓடிப் போவதற்கு முன் இதை செய்திருக்க வேண்டும் என எல்லோரும் கண்டுபிடிக்கிறார்கள். விரக்தியில் நடேசனும் இல்லாமல் – நடேசன் தடம் போன போது நடந்த சண்டையில் இறந்திருக்கலாம் என யூகிக்கலாம் – சத்தி தியேட்டரை விட்டுக் கிளம்புகிறான். சோடா கடைகாரர் திரும்ப வரும்படி கூப்பிடுகிறார், வேண்டாம் என்று நினைத்தாலும் மறுபடியும் சத்தி தியேட்டரை நோக்கி போகிறான்.

ஒரு வர்த்தக நிறுவனத்தின் முகமறியா மனிதர்களின் கதைகளுக்கு மாதிரியாக இந்த நாவலின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு விரிவான சித்தரிப்பும், உளப்போராட்டங்களும் நாவலில் சொல்லப்படவில்லை. அந்த தியேட்டரின் வாடிக்கையாக வந்து போகும் பார்வையாளர்களை குறித்தும் பெரிதாக சொல்லப்படவில்லை. இவை வாசிப்பதற்கு ஒரு போதாமை உணர்வை கொடுக்கிறது.

நிழல் முற்றத்தின் சிறப்பாக தோன்றியது என்னவென்றால் அதில் காட்டப்படும் வாழ்க்கை வாசிப்பவருக்காக வாழ்ந்து காட்டப்படவில்லை. அதில் உள்ள மகிழ்ச்சியும், துயரங்களும், கோபங்களும் மிக இயல்பாக எல்லா நிலையிலும் உள்ள மனிதர்களுக்கிடையில் நடப்பவைகளாகவே உள்ளன. கதை மாந்தர்கள் எவரும் தங்களுடைய நிலையை எண்ணி தன்னிரக்கத்துடன் பேசிக்கொண்டும், சமூக அவலங்களை பார்த்து விரக்தியுடன் புலம்பிக் கொண்டும் அவ்வாழ்க்கைக்கு வெளியே நிற்கவில்லை. அதில் சொல்லப்பட்ட வாழ்க்கைக்கு உள்ளே மட்டுமே அவர்கள் வாழ்கிறார்கள், யதார்தத்தை போல. அவ்விதத்தில் எனக்கு இந்த நாவல் அதிகம் அறியப்படாத வாழ்க்கையை, உலகை ஒரு துளியேனும் நேர்மையுடன் காட்டியது என்றுதான் கூற வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்:
பெருமாள் முருகன் பக்கம்
முத்துகிருஷ்ணன் பதிவுகள்
தமிழ் நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
பெருமாள் முருகனின் தளம்
நிழல் முற்றம் பற்றி ஆர்வி
நிழல் முற்றம் பற்றி ரெங்கசுப்ரமணி

மொழி – எமர்சன்

emerson

மனிதனுக்கு இயற்கையின் மூலம் கிடைத்த மூன்றாவது பயன் மொழி ஆகும். இயற்கை என்ற ஊடகம் மூலம் மொழி மூன்று படி நிலைகளில் மனிதனுள் மொழி உருவாகிறது.

1. மனித மனதிற்குள்ளே உள்ள சகல சொற்களும் இயற்கையில் அவன் கண்டு, அனுபவப்பட்ட ஏதோ ஒன்றின் அடிப்படயிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. அவன் அனுபவத்திற்குள் வந்த இயற்கையின் உறுப்பை மற்றொன்றை சுட்டும் சின்னமாக மாற்றி சேர்த்துக் கொள்கிறான். சொற்களின் மூலத்தை தேடிச் சென்றால், ஆதிமொழியில் இயற்கையில் காணக் கிடைக்கும் ஒரு பொருளின் வரைபடத்தில் தான் சென்று முடியும். அதனாலேயே பழங்குடிகளும், குழந்தைகளும் தங்களைச் சுற்றி உள்ள உலகத்தை பெயற்சொற்கள் கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

 2. முதல் நிலையில் வார்த்தைகள் இயற்கை அங்கங்களின்  குறியீடு என்றால் அடுத்ததாக இயற்கையின் அங்கங்கள் மனித எண்ணங்களின் கூறியீடுகளாக உள்ளன. அவற்றைக் கொண்டே மனிதன் தன் மனவோட்டங்களை வெளிப்படுத்துகிறான். மனித மனம் அருவமான உணர்ச்சிகளுக்கு குறியீடுகளாக இயற்கை செயல்பாடுகளையும், மாறும் அதன் நிலைகளையும் தொடர்புறுத்திக் கொள்கிறது. மாறும் பருவ நிலைகளை மனநிலைகளை உணர்த்தும் உவமைகளாக, பாயும் வேங்கையை வீரனை சுட்டுவதாக, எறும்பின் இயல்பை விடாமுயற்சியின், சுறுசுறுப்பின் சின்னமாக, இன்னும் பல விதங்களில் இயற்கையில் காணகிடைக்கும் செயல்களை தன் மனதின் வெளிப்பாடுகளாக பெரிதாக்கி, மாற்றி அமைத்து தன் மொழியில் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.

 இயற்கையை தன் என்ண்ணங்களின் மொழிபெயர்ப்பாக மிக சிறந்த முறையில் மாற்ற கூடிய ஒருவன் தன் மொழியை இயற்கையின் அருகிலிருந்து அவதானிப்பதன் வழியாகவே உருவாக்கியிருப்பான். அதன் பொருட்டே ஒரு விவசாயியின், முதிர்ந்த கிராமத்தானின் சொற்கள் என்றும் மனிதர்களுக்கு நேர்மையின், உண்மையின் வாக்காக தோன்றுகின்றன. எண்ணங்களில் தூய்மையும், எளிமையும், தன் மனதை துல்லியமாக மற்றவர் அறிய உரைக்க வேண்டும் என்ற உந்துதலையும் கொண்டவர்கள் இயற்கையிலிருந்தே தன்னை வெளிப்படுத்தும் சொற்களை பெற்று இருப்பார்கள்.

 புகழ், அதிகாரம், செல்வம் போன்றவற்றை மட்டுமே அடைய மறைமுகமாக ஆசைப்படுகையில் இயற்கை, மொழியின் வழியே எதை சுட்டுவதற்காக எடுத்தாளப்பட்டதோ அதை விட்டு வெகு தூரத்தில் சென்று விடுகிறது. காகித பணத்தைப் போல ஒரு வார்த்தைக்கு விளக்கமாக மற்றொரு வார்த்தை என திரிக்கப்பட்டு அதன் அசல் மதிப்பு மிகவும் தாழ்ந்து நசிந்து விடுகிறது. என்றும் மனிதனின் வீழ்ச்சியை மொழியின் வீழ்ச்சி பின்தொடர்ந்து வருகிறது. எவ்வளவு காலங்கள் இயற்கையிலிருந்து விலக்கி வைத்து மொழியினூடே உண்மை மறைக்கப்பட்டாலும், மனதின் உண்மையை உரைக்கும் வலுவுடைய, நேர்மையுடைய மனிதன் அதை கையிலெடுக்கையில் இதுவரை படிந்திருந்த களிம்புகளை உதறிக்கொண்டு மொழி இயற்கையிலிருந்து புதிய குறியீடுகளை வாங்கி தன் மேல் உடுத்திக் கொண்டு எழுந்து வரும். அப்படி மீண்டெழுந்த மொழி மனித சமூகங்களை அடுத்த மேல் நிலைக்கு ஒட்டுமொத்தமாக நகர்த்தும் வல்லமையை பெற்றிருப்பதை நாம் காணலாம்.

 3. மனிதனின் எண்ணங்களையும் அவனுடைய சிறிய வாழ்வின் அலுவல்களையும் நடத்திச் செல்லும் மொழியின் வாகனமாக இருப்பது மட்டும் தான் இயற்கை உள்ளதா? அது உண்மையென்றால் மனிதனை சூழ்ந்துள்ள இயற்கையின் பொருட்களும், நிகழ்வுகளும் தங்களுக்கென்று ஒரு உண்மையை கொண்டிருக்கவில்லை என்று பொருள்படுகிறது. இயற்கையின் மொழி வெறுமனே மனித மனதின் உவமைகளே என்று குறுக்கப்பட்டு விடுகிறது. அதுவல்ல உண்மை. இயற்கையின் எல்லா கூறுகளும் தன் இருப்பின் வழியே காலாதீதமான, மேலான உண்மையை, தனி மனிதனுக்கும், மனித இனத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

Muthukrishnanஇயற்கையின் செயல்கள் வழியே மனிதன் கண்டு கொண்ட அழியா உண்மைகள் பல. அவை எல்லாம் பழமொழிகளாகவும், கதைகளாகவும், விழுமியங்களாகவும், நீதிகளாகவும் அதன் மனதில் தேங்கிவிட்டன. உதாரணமாக காக்கை உட்கார பனை மரம் சரிந்தது, ஓடும் நீர் தெளிந்து இருக்கும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பல முக்கியமற்ற தினசரி அவதானிப்புகள் சகல மனிதர்களுக்கும் என்றும் அழியாத உண்மைகளை சொல்வதாக மாறிவிட்டன. இங்கு உள்ளவைகளை எல்லாம் உருவாக்கிய ஆற்றல் அல்லது ஆன்மா என்ற ஒன்று இயற்கையின் வழியே ஆதார உண்மைகளை கண்ணாடியினூடே செலுத்தப்பட்ட ஒளியாக உன்னத மனங்களுக்கு சில நேரங்களில் அளிக்கிறது. இயற்கை என்ற புதிரின் முன்னால் மனிதர்களுள் சிறந்த மனங்கள் அந்த செய்தியை எதிர்பார்த்து வரலாறு முழுவதும் காத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அவ்வண்ணம் இயற்கையை பிரித்து பேருண்மைகளை கண்டு கொள்ளும் மனிதனுக்கு அதன் ஒவ்வொரு பொருளும், நிகழ்வும் ஆன்மாவின் புதியதொரு பக்கத்தை திறந்து வைத்துக் கொண்டேயிருக்கிறது.  புலப்படா உண்மைகள் இயற்கையின் வழியே பிரித்தறியப்பட்டு மனித அறிவின் பகுதியாக சேகரிக்கபடும் போது அவை மனித ஆற்றலின் மற்றுமொரு ஆயுதமாக மாற்றம் கொண்டு விடுகிறது. 


இது வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பல்ல என்பதை மீண்டும் சொல்லிவிடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புடைய சுட்டி: எமர்சனின் மூலக் கட்டுரை
எமர்சனின் “அழகு” கட்டுரை பற்றி முத்துகிருஷ்ணன்

எமர்சனின் “அழகு” கட்டுரை பற்றி முத்துகிருஷ்ணன்

emersonரால்ஃப் வால்டோ எமர்சனின் இயற்கை (Nature, 1936) என்ற கட்டுரை தொகுப்பில் “அழகு” என்ற மூன்றாவது கட்டுரையைப் பற்றீ – முத்துகிருஷ்ணன்.

அழகு – எமர்ஸன்

இயற்கையை விளை பொருளாக பார்ப்பதற்கு அடுத்தபடியாக அதை அழகானதாக பார்ப்பதை குறித்து எமர்ஸன் கூறுகிறார். அழகு என்பது புதிய நிறங்கள், புத்துணர்ச்சி கொள்ள வைக்கும் சூழ்நிலைகள், கிளர்ச்சியூட்டும் வடிவங்கள் போன்றவற்றை கூறலாம்.
கட்டுரையில் அவர் இயற்கை அழகை மூன்று கூறுகளாக பிரித்துப் பார்க்கிறார். முதல் அழகுணர்ச்சியை இயற்கையின் மூலமாக கிடைக்கும் ஒரு விளைபொருளைப் போலவே மனிதன் உணர்கிறான். அது புறத்தில் உணரப்படும் அழகாகும். அடைந்த கூடத்தில் நெடுநேரம் ஒரு வேலையில் கழித்து விட்டு கடற்கரையின் முன்னாலும், பெரும் இமயங்களுக்கு முன்னலும் போய் நிற்கையில் ஏற்படும் விடுபடலை குறிக்கும் அழகுணர்ச்சி என்று அதைக் கூறலாம். அழகின் அக்கூறை உணர்கையில் அங்கு மனிதனை வந்தடையும் காட்சியில், தொடுகையில், ஒலிகளில் புதியவைகளை கண்டுகொள்வான். ஓடும் நீரிலும், கடலின் பரப்பிலும், அந்தி நேர ஒளியில் மிளிரும் மேகங்களின் வடிவங்கள் வழியே அவன் உணரும் அழகு என்பது வெளியே உள்ளது. அது அவனை அமைதிபடுத்தலாம், சந்தோஷப்படுத்தலாம். ஆனால் சிறிது நேரத்தில் அந்த கூறுகள் பழகிப் போய் மற்றொரு புதிய அனுபவத்திற்காக அவன் தேடல் ஆரம்பமாகிவிடும்.

இரண்டாவது அழகென்பது வெளியே உணரப்படும் அழகினூடே அவன் அகத்தின் உள்ளே செல்லும் பயணமே. அழகென்பது புலன்களின் வழியே தன்னையே காண்பது. அழகின் வெளி ஆபரணங்களை துளைத்து அதில் அழகென தான் உணர்வது எதை என்றும், அவற்றின் எல்லா வடிவங்களிலும் மறையாமல் நின்றிருக்கும் மறை பொருள் என்ன என்றும் தன் அகத்தின் வழியே கேட்டுக் கொள்ளும் கேள்விகளின் பதில்களே அவை. அப்படிபட்ட அழகை கண்டு கொள்ளும் ஒருவனுக்கு ஒவ்வொரு முறையும் புதுப்புது புறக் காட்சிகளும், சூழ்நிலைகளும் தேவைப்படுவதில்லை. வெளிர் வானமும், கூழங்கற்களும், காய்ந்த சருகுகளையும் பார்த்துக் கொண்டு அவனால் வெகு தூரம் அழகை ரசிக்க முடியும். அவற்றினூடே அறுபடாமல் செல்லும் நிலையான ஒன்றை பிடித்துக் கொண்டு செல்ல முடியும். அகபுறம் என்று சொல்லப்படுவதைப் போல புற அழகும், அக அழகும் ஒன்றை ஒன்று சமன் செய்யும் நிலை அது என எமர்ஸன் குறிப்பிடுகிறார். இதுவே அழகில் தெய்வீகத்தைக் காண்பது எனலாம்.

Muthukrishnanஅகங்காரம் அழிந்த நிலையில் கண்களை மட்டும் வைத்து இயற்கையை உள்வாங்கிக் கொண்டு உள்ளும், புறமும் வேறுபாடில்லாமல் காணும் அழகை விட உயர்ந்ததாக அவர் கூறும் மூன்றாவது நிலை- அந்த அழகை மனிதன் உருவாக்கும் நிலை என்பதாகும். இயற்கையில் தான் காணும் அழகை முழுவதுமாக உள்வாங்கி அதை கலையாக வெளிப்படுத்தும் பொழுது அவன் இயற்கை அழகை உணர்வதன் அதிகபட்ச சாத்தியத்தை எட்டுகிறான் எனலாம். இயற்கையின் அழகு மனிதனின் அகம் வழியே மறுவாக்கம் செய்யப்படும் பொழுது அதன் ஒரு துளி முடிவிலா ஒன்றை சுட்டிக் காட்டி நிற்கிறது. அதை உருவாக்குவதே கலையின் நோக்கமாக இருக்க முடியும். இயற்கை அழகின் ஆதாரத்தை பிரதிபலிக்கும் எந்தவொரு படைப்பும் அதன் உள்ளே உண்மை, நன்மை, அழகு என்ற முக்குணங்களையும் கொண்டிருக்கும் என்கிறார்.

இயற்கை இருப்பதற்கான காரணம் என்ற கேள்விக்கும் அதன் அழகு என்பது மறுக்கமுடியாத உண்மை என்றாலும் அது மட்டுமே இறுதி உண்மை என்றாகி விடாது என முடிக்கிறார்.

மீண்டும் ஆர்வி:
என் சொந்த அநுபவத்தில் நான் முதல் நிலையைத் தாண்டியதில்லை. கடுமையான அழுத்தத்தில் இருந்து விடுபடும் உணர்ச்சி இந்த நிலையில் முக்கியமானதுதான், ஆனால் அது மட்டுமே இந்த நிலை இல்லை என்பதுதான் என் சொந்த அநுபவம். சூரிய உதயம், அஸ்தமனம், வானவில், அருவிகள், நதிகள், கடற்கரை, யானைகள், பனி பெய்வது, யோசமிடி, க்ராண்ட் கான்யன், நயாகரா, காவேரி, கங்கையின் பெரும் நீர்ப்பரப்பு, கோதாவரியின் மீது நீண்ட ரயில்வே பாலம் மாதிரி எத்தனையோ இடங்களில் மனம் விம்மி முழுமை பெற்றிருக்கிறது. என் அநுபவம் எனக்கு, எமர்சனின் அநுபவம் அவருக்கு…

பொதுவாக எமர்சனின் கட்டுரைகள் படிக்க எளிமையானவை. எனக்குப் புதிய தரிசனம் என்று சொல்லிக் கொள்ளும்படி எதுவும் கிடைத்ததில்லை. ஆனால் தோரோவின் கதை வேறு. வால்டன் எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று…

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

எட் எட்மோவின் சிறுகதை – முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில்

Muthukrishnan15000 வருஷங்களுக்கு மேல் இருந்த ஒரு அமெரிக்க செவ்விந்திய குடியிருப்பு 1957-இல் ஒரு புது அணை கட்டும்போது முழுகியது. நடந்த இந்த நிகழ்ச்சியை அமெரிக்க இந்திய எழுத்தாளர் எட் எட்மோ  After Celilo என்ற சிறுகதையாக எழுதி இருக்கிறார். <a href="“>முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் இந்தச் சிறுகதை சமீபத்தில் சொல்வனத்தில் வெளிவந்தது. வசதிக்காக கீழே கட்பேஸ்ட் செய்திருக்கிறேன். படித்துப் பாருங்களேன்!


ஸெலிலோவிற்கு பிறகு

நான் கிளம்பியதற்கு என்ன காரணமாகவிருந்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. வாலிபத்தின் கிளர்ச்சியாக இருந்திருக்கலாம். அறிவையும், படைப்பூக்கத்தையும் குறித்த தேடல் காரணமென நான் நினைக்க விரும்புகிறேன். மின்னலை வழிகாட்டியாகவும், நிலவைப் பாதுகாவலனாகவும் கொண்டு, என் பெருவிரலை உலகத்தை நோக்கி நீட்டி, சாலை ஓரத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அது 1964ஆம் ஆண்டின் வசந்தம், கல்லூரியின் கைப்பந்து விளையாட்டில் கிடைத்த பெருமைகளெல்லாம் முடிந்து, ஒளியிழந்த எதிர்காலம் தான் என்னெதிரே நின்றது. கொலம்பியா ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு சென்றிருந்த பல சமயங்கள் நினைவிற்கு வந்தன. அந்த ஆறு, பதில் விருந்துபசாரத்தை எதிர்பார்க்காது, என்றும் வரவேற்கும் நண்பனாக இருந்தது.

celilo_fallsபேஸ் பால் தொப்பி, வைக்கோல் குல்லாய், இரும்புத் தொப்பி அணிந்து கொண்டு வரும் வெள்ளையர்களை ஸெலிலோ அருவி, சுற்றுலாப் பயணிகளாக ஈர்த்தது. அவர்களில் சிலர் வழுக்கைத் தலையர். சாரக்கட்டில் நின்று பழங்குடி இந்தியர்கள் மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க வந்தார்கள். வெயிலால் கன்றிச் சிவந்த கழுத்தில் கருப்புக் கண்ணாடியைத் தொங்க விட்டுக் கொண்டும், பெர்முடா கால்சட்டைக்கு கீழே வீங்கிய உருண்டை முழங்கால்களுமாக வரும் சுற்றுலாப் பயணிகள். அவர்களுடைய பிள்ளைகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் சேர்ந்து நின்று படம் எடுத்துக் கொள்வதற்காக எங்களுக்குக் கால் டாலர் கொடுப்பார்கள். சின்னஞ்சிறு வெள்ளைக்கார பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைப் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது நான் எட்டி அவளை இறுக்கமாகப் பிடித்துக் குலுங்கிச் சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது நிஜமாகவே பயம் தரும் அனுபவம் தானே! ஆறு அமைதி தருவதாயிருந்தது. நான் அதன் இதம் தரும் நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே, வெள்ளி நிற அலைகளில் சூரியனின் பிரதிபலிப்பைக் காண்பேன்.

1957இல், அரசாங்கம் த டால்ஸ் அணையைக் (The Dalles Dam) கட்டி, பாரம்பரியமாக இநதியர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி எங்களை வெளியேற்றியது. அப்பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை ஆனால் அவர்கள் அதை வளர்ச்சி என அழைத்தார்கள். எங்கள் மக்களின் வீடுகளில் அவர்கள் கூட்டங்கள் நடத்தியது எனக்கு ஞாபகம் உள்ளது. அந்த நேரத்தில் எங்களுடைய எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்பட்டு, நமக்கும் என்ன ஆகுமோ என யோசிப்போம்.

என் அப்பா த டால்ஸ் வர்த்தகக் குழுமத்தில் திட்ட வரைபடங்களைப் பார்த்திருந்தார், அதனால் ஸெலிலோவின் மக்களை எச்சரிக்க முயன்றார். ஆனால் அவர்கள் என் அப்பாவை கிழட்டுச் சீனாக்காரன் எனக் கேலி செய்தார்கள், ஏனென்றால் அவர் மற்ற கிராமத்தினரைப் போலத் தலைமுடியைப் பின்னிக் கொள்வதில்லை. பொறியாளர்கள், யூனியன் பாஸிஃபிக் ரயில் நிறுவனத்தின் புது ரயில்பாதைக்காக பூமியைத் தகர்த்துச் சமன்படுத்த ஆரம்பித்த பிறகே, கிராமத்து இந்தியர்கள் அரசாங்கம் தன் திட்டங்களைச் செயல்படுத்த முனைப்பாயிருக்கிறது என்பதை அறிந்தார்கள். 1930களில் போனெவில் அணை கட்டப்பட்ட போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஹெர்மென் நீரோடைப் பகுதி இந்தியர்களின் அழிக்கப்பட்ட மீன் பிடிப் பகுதிகளுக்கோ, வீடுகளுக்கோ இழப்பீடு ஏதும்கொடுக்கப்படவில்லை என்பதைப் பலர் மறுபடி நினைவு கொண்டனர்.

என் அப்பா ஸெலிலோ கிராமத்தாரை ஒருங்கிணைத்து, அவர்கள் தொடர்ந்து கூடிப் பேசுவதற்கு ஏற்பாடு செய்தார். அரசாங்கம் எங்களைச் சட்டை செய்யாமல் வெளியேற்றி விட்டு, மீன் பிடிக்கும் தொழிலுக்கும், வீடுகளுக்கும் இழப்பீடு தராமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்கக் கூட்டரசின் மக்களவையின் உயர் மன்றத்தில், ஓரெகன் மாநிலத்தின் செனட்டரான நியூபெர்கருக்கு அப்பா கடிதம் எழுதினார். அவரும் மக்களவையில் அரசாங்கம் எங்கள் மீன்வளங்களுக்கு இழப்பீடு கொடுப்பதோடு, புது வீடுகளும் கட்டித் தர வேண்டும் என்று கோரும் ஒரு மசோதாவை முன்வைத்தார். அந்த நேரத்தில் இழப்பீட்டு தொகை குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. எங்கள் சமூகத் தலைவரின் மகன், “எங்களுடைய உலர்த்தும் கூடத்தில் உள்ள ஒவ்வொரு பலகைக்கும் நீங்கள் 50 டாலர் இழப்பீடாகக் கொடுக்க வேண்டும், ஏனென்றால் இது எங்களுடைய வாழ்க்கை முறை,” என்று கூறினான். அரசாங்கத்து மனிதனுக்கு மிகுந்த கோபம் வந்து விட்டது. அவர்கள் கொடுக்க வரும் “நியாயமான” தொகையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் அல்லது வாஸ்கோ மாவட்ட நீதிபதியிடம் போய் எங்களுடைய பூமியைப் புறம்போக்கு நிலமாக அறிவிக்கச் சொல்லி, எந்த இழப்பீடும் கொடுக்காமல் எல்லாவற்றையும் புல்டோஸர் வைத்து தரை மட்டமாக்கி விடுவோம் என இந்தியர்களாகிய எங்களிடம் சொன்னான்.

வேலையாட்கள் ஒரு நாளின் நில அளவைச் செய்து முடித்தவுடன், எங்களில் சில பையன்கள் அளவைக்குப் பயன்படவெனப் புதைக்கப்பட்ட சிறு கம்புகளை பூமியில் இருந்து உருவி எடுத்து விட்டு, அந்தக் குழிகளை மூடிவிட்டு, குச்சிகளைப் பற்ற வைத்து சிறு தீயில் எரிய விடுவோம். மற்றவர்கள் முகடுகளில் ஏறி சிறு குழலுள்ள துப்பாக்கிகளால் மண்ணைச் சுமந்து செல்லும் பெரிய லாரிகளை நோக்கி சுடுவார்கள். ஏதாவது ஒரு ஓட்டுனர் லாரியை நிறுத்தினால் நாங்கள் மகிழ்ந்து சிரிப்போம். எங்களுக்கேயான சிறு வழிகளில், அணை கட்டுவதை நிறுத்த முயன்றோம்.

இறுதியில், நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, எங்களுடைய வீடுகளை நாங்கள் எரிக்க வேண்டி வந்தது. நான் எதை எடுத்துச் செல்வது, எதை எரிய விட்டுச் செல்வது என முடிவெடுக்க வேண்டியதாயிற்று. அப்பா தீயைப் பற்ற வைக்கப் போகும் கடைசி நேரத்தில் வீட்டிற்குள் மறுபடியும் ஓடிச் சென்று படுக்கையருகில் இருந்த இழுப்பறை மேஜையை எடுத்து வந்தேன். அது பழைய பாணி அலங்காரப் பெட்டி. பின்னாளில் நான் அதை புதுப்பித்த பின், அது மதிப்பு வாய்ந்த பழம்பொருளானது. மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த மனதோடு வீடு எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்கு ஆற்றின் மறு பக்கத்தில் வேறு புது வீடு கிடைக்கவிருந்தது.

முழுதும் வெள்ளையர்கள் மட்டுமே வாழும் சமூகத்திற்கு – வாஷிங்டன் மாநிலத்தின் விஷ்ரம் என்ற ஊருக்கு– நாங்கள் குடி மாறிப் போனோம். ஒரு வருடப் போராட்டத்திற்கு பின் நானும், என் சகோதரனும் பள்ளியில் சேர அனுமதிக்கப்பட்டோம். ஒரு சமயம், வெள்ளைக்காரச் சிறுமி ஒருத்தி, ஏதோ காரணத்திற்காக என்மேல் மிகவும் கோபம் கொண்டாள். என் மேல் துப்பிவிட்டு, என்னை முன்பிருந்த இடத்திற்கே திரும்பிப் போய் விடுமாறு சொன்னாள். என் என்னால் அப்படித் திரும்பிப் போயிருக்க முடியாது ஏனென்றால் என் வீடு முன்னமிருந்த இடத்தில் அப்போது ஒரு நெடுஞ்சாலை இருந்தது. . அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என எனக்குப் புரியவில்லை.


நான் கொலம்பியா நதியின் வட கரையில் நின்ற நேரம், பிரகாசமான சூரிய அஸ்தமனமாகவிருந்தது. அப்போது ஒரு நீலநிறக் கார் அருகில் வந்து நின்றது.

“எவ்வளவு தூரம் போகணும்?” வாலிபன் கேட்டான்.

“போர்ட்லாண்ட்”, நம்பிக்கையோடு கூடிய எதிர்பார்ப்புடன் கூறினேன்.

“ஏறிக் கொள்,” என்றான் அவன்.

சிகரெட் ஒன்றை என்னிடம் கொடுத்தான். அந்தப் பயணம் முழுக்க அரட்டையும், அமெரிக்க தென் மாநிலங்களின் நாட்டுப்புற மரபிசையும், சமகாலத் திரளிசையுமாகக் கழிந்தது. ஹூட் ஆற்றுப் பாலத்தைக் கடந்து, மேற்கு நோக்கிப் பயணித்தோம். கேஸ்கேட் லாக்ஸ் நகர் வரை மட்டுமே தான் பயணிப்பதாக அவன் கூறினான். அந்த இலவசப் பயணத்திற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததைச் சொன்னேன். நெடுஞ்சாலையை விட்டு வெளியேறும் இடத்தில் என்னை இறக்கி விட்டான்.

“நல்லது நடக்கட்டும்,” எனக் கூவினான்.

“நன்றி ஐயா,” எனப் பதில் கூறினேன்.

சூரியன் முழுவதுமாக இறங்கி அனேகமாக இருட்டாகி விட்டது. நான் பயப்பட ஆரம்பித்தேன். ஏதாவது போலிஸ்காரன் சிற்றூரிலிருந்து ஓடிப் போன இளைஞனைத் தேடிக் கொண்டிருக்கலாம்.

முகப்பு விளக்குகளின் ஒளி என் மேல் பட ஒரு கார் அருகில் வந்து நின்றது. அது சாமான்களை ஏற்றிச் செல்லும் சிறு ட்ரக் வண்டி. அதன் பக்கவாட்டில் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தேன். ஓட்டுனர் இடத்தில் உயரமான கருப்பு மனிதன் உட்கார்ந்திருந்தான்.

“உள்ளே ஏறிக் கொள், சின்னப் பையா,” என ஆணையிடுவது போல கூறினான்.

நான் தயங்கினேன். ஆனால் அவன் சலிப்போடு கேட்டான், “உனக்கு சவாரி வேண்டுமா, இல்லையா?”

நான் ஏறிக் கொண்டேன், பிறகு போர்ட்லாண்டை அடையும் வரையில் சிறிது பேசிக் கொண்டோம். பர்ன்ஸைட் பாலத்தின் கிழக்குப் பகுதி வரை என்னை கூட்டிச் சென்று – அங்கு தான் வீடற்றவர்களும், ஊர் சுற்றிகளும் தங்குவார்கள் – இறக்கி விட்டான்.

“பாலத்தைக் கடந்து செல் பையா, உன்னுடைய மனிதர்களை அங்கு காண்பாய்,” எதார்த்தத்தைச் சுட்டும் தொனியில் சொன்னான்.

அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு பாலத்தைக் கடப்பதற்காக நடக்க ஆரம்பித்தேன்.


ed_edmoபதிப்பாசிரியர் குறிப்பு: எட் எட்மோ (1946- ) ஷோஷான் – பான்னாக் சமூகக் குழுவைச் சேர்ந்த அமெரிக்கப் பழங்குடியினர். அனேக அமெரிக்கப் பழங்குடியினத்து எழுத்தாளர்களைப் போலவே இவரும் தம் மக்களின் அழிந்து வரும் சமூகப் பழக்கவழக்க்ங்கள், பண்பாட்டின் அரிய தன்மைகள் பற்றி எழுதவும், பேசவும் செய்கிறார். குறிப்பாகச் சிறு குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதன் மூலம் தத்தமது சமுதாயங்களின் தொன்மை மேலும் அருமை பற்றிய விழிப்புணர்வைக் கொடுக்க முயல்கிறார். இங்கு மொழி பெயர்க்கப்பட்ட கதை ‘Talking Leaves: Contemporary Native American Short Stories- An Anthology’ என்கிற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ‘After Celilo’ என்கிற இக்கதை 1991 ஆம் வருடம் எழுதப்பட்டது. இந்தத் தொகுப்பு வெளியான வருடம் 1991. பிரசுரகர்த்தர் டெல் பப்ளிஷிங்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பக்கம், எழுத்துக்கள்

தொடர்புடைய சுட்டி: வைகை அணையில் முழுகிய கிராமம் ஒன்றைப் பற்றிய வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்

எரிமலை வளாகங்கள் – 1

முத்துகிருஷ்ணன் சமீபத்தில் ஊர் சுற்றிய அனுபவங்கள் இங்கே.

Lassen-1கோடை காலத்தின் வெப்பத்தை அனுபவிக்க கிடைக்கும் கடைசி சந்தர்ப்பமாக அமைவது லேபர் நாள் விடுமுறை மட்டுமே. இந்த முறை சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே செல்லலாம் என ஒரு மாதத்திற்கு முன்பே முடிவெடுத்தாகி விட்டது. முன்பு வேலை பார்த்த இடத்தில் பழக்கமாகி, பின்பு ஒரே நாளில் இருவருக்கும் வேலை போய் இன்னும் நெருக்கமான நட்பாகி போன நண்பன, அவனுடைய மனைவி, நான் என மூன்று பேர் இறுதியில் கிளம்பலாம் என முடிவானது. எப்போதும் போல பொறுப்பாக பராக்கு பார்த்துக் கொண்டே வருவது என்னுடைய பழக்கம் என்பதால் அவர்கள் இருவரும் பயணத் திட்டத்தை வகுத்தார்கள். நான் எல்லாவற்றிற்கும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினேன். என் தரப்பிலிருந்து வைக்கப்பட்ட ஒரே கோரிக்கை – கலிஃபோர்னியாவின் எல்லையை தாண்டி ஒரு இடத்திற்கு சென்று வரவேண்டும் என்பதே. காரில் செல்லாம் என்று முடிவெடுத்திருந்ததால் மற்றொரு மாநிலத்தில் நுழைய கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு விட்டது.

Lassen-2ஏதோவொரு திட்டத்தை வகுத்து என்னிடம் சொன்னார்கள் அதில் கிரேட்டர் ஏரி, ஷாஸ்தா மலை, ஓரிகன் மாநிலம் என்ற மூன்று சொற்களைக் கேட்டவுடன் உடனே ஆமோதித்து விட்டேன். வேறெதுவும் தெரியாது, அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டவில்லை. 10 மணிநேரம் சாலையில் மாறும் நிலவெளிகளினூடே ஒரு பயணம் என்ற எண்ணம் மட்டும் உற்சாகத்தைக் கொடுத்தது.

செப்டம்பர் 1 அதிகாலை கிளம்பி லாஸென் எரிமலை தேசியப் பூங்காவிற்கு செல்வது என முடிவெடுத்தோம். சான் ஹோஸே விமான நிலையத்திலிருந்து வாடகைக்கு கார் எடுத்து விட்டோம். முந்தைய நாள் இரவு கிளம்பி நண்பனின் வீட்டிற்கு போய் விட்டேன். படுப்பதற்கு 12 மணி ஆகி விட்டது. காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கண் எரிய குளித்து, பிஸ்கட், டீ குடித்துவிட்டு 4 மணி வாக்கில் கிளம்பி விட்டோம். எப்போதும் போல நான் பின்னால் உட்கார்ந்து கொண்டு இருட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

Lassen-3கார் எதன் மீதோ ஏறியபோது உண்டான அதிர்வில் எழுந்தேன். நெடுஞ்சாலை எண் 5 இல் வடக்கு நோக்கி வளைகுடா பகுதியின் குன்றுகள் சூழ்ந்த நிலங்களிலிருந்து விடுபட்டு வெட்டவெளியில் பயணப்பட்டுக் கொண்டிருந்தோம். கீழ் திசையில் சூரிய உதயத்தின் நீல நிற வானம் உருவாகிக் கொண்டிருந்தது. கடைசியாக சூரிய உதயத்தை எப்போது பார்த்தேன் என்ற ஞாபகம் இல்லை, பார்த்திருக்கவே வாய்ப்பிலை என்றுதான் தோன்றுகிறது. தூக்கம் கலைந்து விட்டது. பக்கத்தில் பூனைக் குட்டியை போல் காமிரா இருந்தது. வலது பக்கமாக திரும்பி கண்ணாடிக்கு அருகில் முகத்தை வைத்துக் கொண்டு – கண்ணாடியில் படர்ந்த மூச்சு காற்றின் ஆவியை துடைத்துக் கொண்டே – எழப் போகும் சூரியனின் திசையை பார்த்துக் கொண்டே இருந்தேன். Lassen-4தெளிந்த வானம் என்றாலும் அடி வானில் மெல்லிய நீரோட்டம் போல மேகங்கள் இருந்தன. நிலப்பரப்பின் அடியிலிருந்து வரும் விடி வெள்ளியின் வெளிச்சம் மஞ்சள் நிறமாவதற்கு முன்னாலேயே மேகங்களால் கீறப்பட்டு வெவ்வேறு அடர்த்தியுடன் கூடிய நீல கோடுகளாக வெளிவந்தது. காமிராவால் உள்ளிழுக்க முடியாத அளவு மெல்லிய நிற பேதங்களுடைய கிரணங்களாக நீல வானம் சில நிமிடங்கள் இருந்தது. ஒரு விளையாட்டு போல அந்த கிரணங்களை கண்களை சிறுத்து நோக்கினால் காணாமல் போகும் ஆனால் எதையும் குறிப்பிட்டு கவனிக்காமல் மொத்தமாக கிழக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவை தம்மை வெளிக்காட்டும். சில நிமிடங்களில் மஞ்சள் ஒளி சூழ சிகப்பு நிறத்தில் சூரியன் உதயமானது. காமிராவை கொண்டு பல புகைப்படங்களை எடுத்தேன். ஓடும் வாகனத்தில் இருந்து குறைந்த ஒளியுள்ள ஒன்றை படம் பிடிக்க விலைகூடிய லென்ஸ் தேவைப்படுவதால் சகிக்கக் கூடிய தரத்தில் ஒன்றிரண்டு புகைப்படங்கள் மட்டுமே சாத்தியப்பட்டது.

நண்பன் பெங்களூரில் பிறந்து, வளர்ந்தவன். ராக், டிரான்ஸ், மெட்டாலிக்கா என்று பெரிய தொகுப்பை காரில் ஓட விட்டுக் கொண்டிருந்தான். காலை சாப்பாட்டிற்காக ரெட் பிளஃப் என்ற சிற்றூரின் உணவு விடுதிக்கு சென்றோம். அது மாதிரி அமெரிக்க சிற்றூரின் உணவு விடுதி. சமைப்பவரும், பரிமாறுபவரும், சாப்பிட வருபவரும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள். பேர் சொல்லி கூப்பிட்டு பேசிக் கொண்டார்கள். மூன்று இந்தியர்கள் நுழைந்தவுடன் சில தலைகள் திரும்பின, ஒரு முறை கூர்ந்து பார்த்துவிட்டு தம் வேலைகளுக்கு திரும்பிச் சென்றன. பான் கேக், காபி, ஆம்லெட் என சிற்றுண்டியை முடித்துவிட்டு லாசென் எரிமலைப் பூங்காவை 10 மணி அளவில் அடைந்தோம்.

Lassen-6Lassen-7லாஸெனின் முகப்பை அடைவதற்கு பல மைல்களுக்கு முன்பே மலைகள் சூழ்ந்த இடங்களுக்குள் வந்து விட்டோம். நூற்றாண்டுகளாக பொங்கி, வெடித்த எரிமலையிலிருந்து வீசப்பட்ட எரியும் கற்கள் சாலையின் இரு புறங்களிலும் குளிர்ந்து, கருமை நிறம் கொண்ட பாறைகளாக சிதறிக் கிடந்தன. பல மைல்களுக்கு சீரான இடைவெளியில் கிடப்பதைப் காணும் பொழுது அவை வீசி எறியப்பட்ட இடம் வெகு தொலைவில் உள்ளது என புலப்பட்டது. இள மஞ்சள் நிறத்திற்கு மாறிப் போன புற்களும் சிறு தாவரங்களும் அந்த பாறைகளை மூடியிருந்தன.

Lassen-8லாஸென் பூங்காவின் அதிகாரப்பூர்வமான முகப்பில் வந்து அனுமதிச் சீட்டு வாங்கி உள்ளே நுழைந்தோம். கூடாரமிட்டு இரவைக் கழிப்பதற்கான எல்லா இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பிவிட்டன என்று அறிவிப்பு பலகையில் இட்டிருந்தார்கள். நாங்கள் வாகனம் செல்லும் சாலையினூடே லாஸெனைக் கடந்து செல்வதாக மட்டுமே திட்டமிட்டிருந்தோம். நல்ல பனிப் பொழிவு ஏற்படும் இடம் என்றாலும் கூட கோடை வெயில் உக்கிரமாக இருந்தது.

Lassen-9சாலையின் வழியே கடக்கும் போது லாஸெனில் காணக் கிடைப்பது ஏரிகளும், பள்ளத்தாக்குகளும்தான். அனுபவமின்மையால் முதலில் எதிர்கொண்ட ஏரியை காண இறங்கி விட்டோம். அதன் பெயர் எமரெல்ட் ஏரி. பெயருக்கு ஏற்றாற் போல பளிங்கு பச்சை நிறமுடைய நீரினாலமைந்த ஏரி அது. அதே நேரம் பெயருக்கு பொருத்தம் இல்லாத ஒரு குளம் மட்டுமே. அரை வட்ட வடிவில் எழுந்திருந்த சிறு மலைகளை சுவர்களாக கொண்டு அவற்றிலிருந்து உருகும் பனியால் நிரம்பிய மரகத ஏரி. அந்த இடத்தின் தனியியல்பு என்பது காட்சி அல்ல, அங்கிருந்த நிசப்தமே. காற்றின் சலனங்கள் ஏதுமில்லால் நீர் நின்று கொண்டிருப்பது போலிருந்தது. நாங்கள் யாரும் இயல்பாகவே பேசவில்லை. நான் காமிராவைக் கொண்டு படம் பிடித்துக் கொண்டிருந்தேன். அரை மணி நேரம் கழித்து, செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமானதால் அவர்கள் போகலாம் என சொன்னார்கள்.

Lassen-10அடுத்தது. சில மைல்களுக்குள்ளேயே ஹெலன் ஏரியை அடைந்தோம். முந்தையது போலில்லாமல் இது ஒரு ஏரி என்று சொல்லத் தக்க வண்ணம் விரிந்து கிடந்தது. சாலை ஏரியைச் சுற்றி மேலே செல்வதால் அதை பார்த்துக் கொண்டே சென்றோம். எமெரெல்ட் ஏரியில் செலவழித்த நேரத்தை இங்கே சேமித்துக் கொள்ளலாம் என்று இறங்கவில்லை. ஹெலன் ஏரியைச் சுற்றி மரங்களற்ற மலைச் சுவர்கள் மட்டுமே இருந்த காரணத்தாலோ என்னவோ அது ஒற்றை நீல நிறமோடு இருந்தது. ஹெலனை கடக்கும் பொழுது துணுக்குற செய்யும் காட்சி சாலையின் மறு பக்கத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் மலைகள்தான். சாலையிலிருந்து ஆரம்பிக்கும் மலைகளில் ஒரு செடி கூட வளரவில்லை. மொத்த மலையும் உடைக்கப்பட்ட பல லட்சம் பெரும் கற்குவியல்களால் உருவாகியுள்ளது. வானத்திலிருந்து இறங்கி வந்த பெருந்தச்சன் எதையோ கட்டி எழுப்ப ஆயுத்தமாகி பிறகு கைவிட்டு சென்ற கதையின் சான்றுகள் போல அவை பல மைல்களுக்கு கொட்டிக் கிடந்தன. இன்னும் ஒரு மாதத்தில் இவையனைத்தும் பனியின் அடியில் புதைந்து விடும். அப்போது இந்த இடம் மேலும் அழகாக தோன்றலாம் ஆனால் இந்த பிரம்மாண்டம் மிச்சமிருக்குமா என்பது சந்தேகமே.

அந்த சாலையின் அதிகபட்ச உயரமான 8500 அடி வரை சென்று கீழிறங்கினோம். அடுத்ததாக லாஸென் எரிமலை சிகரத்தை பார்த்து உருவாகியிருந்த ஸம்மிட் ஏரியில் என்று இறங்கினோம். 7000 அடி உயரத்தில் அமைந்திருந்த அந்த ஏரி 10,000 அடி உயரத்தை கொண்ட லாஸென் சிகரத்தை பார்த்துக் கிடந்தது. அடர்ந்த ஆஸ்பென் மற்றும் பைன் மரங்களால் சூழப்பட்ட கரையில் ஒதுக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு செய்தவர்கள் கூடாரமிட்டிருந்தார்கள். சிலரை பார்க்க முடிந்தது, மற்றவர்கள் முதுகில் பைகளைய்க் கட்டிக் கொண்டு மலைகளினூடே நடக்க சென்றுவிட்டார்கள். வெயில் உச்சிக்கு ஏறிவிட்டிருந்தமையால் கண் கூசும் அளவிற்கு ஏரி மிளிர்ந்து கொண்டிருந்தது. வெறும் மரங்களினால் ஆன கரையும், மலையும், வீசிக் கொண்டிருக்கும் காற்றும் சேர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் பச்சை நீறமாக ஸம்மிட் ஏரி இருந்தது. சுற்றளவில் பெரிதாக இருப்பினும் ஆழமற்ற ஏரி அது. நான்கடி உயரமுடைய பாறைகளும், சரிந்து கிடக்கும் மரங்களும் ஏரியின் நடுவே நீர் மட்டத்தை தாண்டி வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. முகப்பில் வாங்கிய வரைபடத்தில் போட்டிருந்தபடி, லாஸெனின் மிகச் சிறந்த இடங்களை ( ஓவிய மணற்குன்று, ஸல்ஃபர் கரைகள்) காண பல கிலோ மீட்டர் நடக்க வேண்டும். மறுபடியும் அனுபவமின்மையால் குடி தண்ணீர் நாங்கள் வைத்திருக்கவில்லை. கொஞ்ச நேரம் ஏரி கரை வழியே அதைச் சுற்றி வந்தோம். பிறகு அதிகரித்துக் கொண்டேயிருக்கும் வெப்பத்தில் தண்ணீர் இல்லாமல் காட்டிற்குள் அதிகம் நடக்க வேண்டாம் என வேண்டா வெறுப்பாக முடிவெடுத்துவிட்டு திரும்பினோம்.

Lassen-12லாஸென் எரிமலை கடைசியாக 1915இல் மிகப் பெரிதாக வெடித்தது. அதிலிருந்து வெளிவந்த புகையும், சாம்பலும், எரியும் கற்களும் மலையின் வடக்கு நிலவெளியை முழுவதுமாக அழித்து விட்டன. அடுத்த 100 ஆண்டுகளில் சிறிது சிறிதாக மண்ணும், தாவரங்களும் தங்களை புதுப்பித்து மலைச்சரிவை சுற்றி வளர ஆரம்பித்துள்ளன. அந்த பேரழிவின் காரணமாக சம்மிட் ஏரிக்கு வடக்கே உள்ள நிலப்பகுதிக்கு “அழிக்கப்பட்ட இடம்” என்ற பெயரிட்டுள்ளார்கள். மலைப்புறம் முழுவதும் ஸெடர், பைன், ஆஸ்பென் மரங்களால் சூழப்பட்ட சாலையில் பயணித்து பூங்காவின் முடிவில் இருந்த மன்ஸானிடா ஏரியை அடைந்தோம். வருகிற பாதை முழுவதும் பல்வேறு சிறு ஓடைகளையும், ஏரிகளையும் பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த ஏரியை பார்ப்பதை விட வயிற்று பசி முக்கியமாக இருந்தது. விருந்தினர் கூடத்தில் வழி கேட்டு முக்கிய சாலையில் இருந்து பிரிந்து அரை மைல் தூரத்தில் இருந்த ஓய்வெடுக்கும் பகுதிக்கு சென்றோம். பெரும் ராட்சஸர்கள் போல் வளர்ந்திருந்த மரங்களுக்கு மத்தியில் மரத்தாலான வீடுகளும், பெட்றோல் கிடங்கும், ஒரு உணவு விடுதியும் கொண்ட ஓய்வு பகுதியில் பிஸ்ஸாவுடன் மதிய சாப்பாடு முடிந்தது.

Lassen-13எல்லா இடங்களிலும் குளியலறையும், கழிப்பறையும் மிக சுத்தமாக பராமரித்து வருகிறார்கள். இந்தியர்களும், சீனர்களும்தான் பார்த்துவிட்டு நகரும் சுற்றுலா பயணிகளாக இருந்தனர். அமெரிக்கர்கள் அல்லது வெள்ளையர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய வண்டியோடு ஒரு வீட்டையும் வைத்து இழுத்து வந்து அங்கு தங்குவதற்காக வருகிறார்கள். பெரிது, சிறிது, வெள்ளை, பழுப்பு என எல்லா விதங்களிலும் நாய்களை அவர்களுடன் காண முடிந்தது.

Lassen-19காரில் பெட்ரோல் நிரப்பி விட்டு அடுத்ததாக லாவா படுகைகளை நோக்கி கிளம்பினோம். லாஸெனில் இருந்து ஓரிகனை நோக்கி செல்லும் நெடுஞ்சாலை 139இல் இருந்து மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் சென்றால் மோடாக் இயற்கை பூங்காவின் உள்ளே லாவா படுகைகள் அமைந்துள்ளன. மோடாக் என்பது ஒரு செவ்விந்திய குழுவின் பெயராகும். காலம்காலமாக அவர்களுடைய காலச்சாரத்தின் பகுதியாக இங்கிருக்கும் லாவா படுகைகளும், நிலத்தடி குகைகளும் இருந்து வந்துள்ளன. எழுதப்பட்ட வரலாறு உருவான காலத்திற்கு முன்பே கற்கால மனிதர்களின் உறைவிடமாகவும் இந்த பகுதி இருந்துள்ளது. 139இல் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் பொழுது அப்படி ஒரு இடத்திற்குதான் நாம் செல்கிறொம் என்று உள்ளுணர்வில் தோன்றுகிறது . ஒரு வாகனம் மட்டுமே போககூடிய அளவு குறுகிய, உடைந்த சாலை, சுற்றிலும் மஞ்சள் பூக்கள் கொண்ட இரண்டடி புதர்களால் சூழப்பட்டு, புரியாத வடிவில் எழுந்திருக்கும் சிறு குன்றுகள், அவற்றைத் தாண்டி வானமும் மண்ணும் தொடும் தூரம் வரை விரிந்து கிடக்கும் வெளி, அதில் எதையோ பார்த்துக் கொண்டு நிற்கும் தூரத்து ஒற்றை மலைகள் என 15 மைல்களுக்கு மனித நாகரிகத்தை விட்டு விலகி விலகிச் செல்வது போன்ற ஒரு பயணம். விருந்தினர் கூடத்தின் கூரையை பார்ப்பது வரை நாங்கள் செல்வது சரியான பாதைதானா என்ற குறுகுறுப்பு மனதில் இருந்தது. அப்போது நேரம் மாலை 4:30 மணி. 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டை வாங்கிவிட்டு விசாரித்தோம். அங்கிருக்கும் குகைகளை எப்போதும் போய் பார்க்கலாம் ஆனால் அவர்றை பார்க்க கட்டாயம் கைவிளக்குகள் வேண்டும். அந்த அலுவலகத்தில் விளக்குகளை மாலை 5 மணி வரை வாடகைக்கு தருகிறார்கள். மறுபடியும் அனுபவமின்மையால் ஒரு குகையை பார்க்க வருகையில் கை விளக்கை கொண்டு வர வேண்டும் என்ற அறிவு எங்களுக்கு இல்லை. ஆனால் சிரத்தையுடன் பிஸ்கட், சிப்ஸ் போன்றவற்றை தேவைக்கு ஏற்றவாறு கொண்டு வந்திருந்தோம். வேறு வழியில்லை கிரேட்டர் ஏரியிலிருந்து திரும்புகையில்தான் குகைகளை பார்க்க இயலும் என்பது தெளிவானது. மிக சொற்ப எண்ணிக்கையில்தான் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அங்கு வேறென்ன பார்ப்பதற்கு உள்ளது என விசாரித்ததில், குகைகள் தவிர லாவாவால் உருவான எரிமலை பள்ளம், புகைபோக்கி போன்ற பாறை உருவாக்கங்கள் மற்றும் பல லட்சம் ஆண்டுகளாக பொழிந்து வடிந்து போன தீக் குழம்புகளை கண்டவாறே செல்லக் கூடிய ஒரு சுற்றுச் சாலை போன்றவற்றைக் குறித்த தகவல்கள் கிடைத்தன.

இப்போது நண்பர்கள் இருவரும் என்னை ஓட்ட சொல்லிவிட்டார்கள். குதிரை போன்று இருந்த க்ரைஸ்லர் காரில் தார் போடப்படாத ரோட்டில் பின்னால் பார்க்க முடியாத அளவிற்கு புழுதியை கிளப்பிக் கொண்டு பயணிக்க ஆரம்பித்தோம்.

Lassen-20விருந்தினர் விடுதியை விட கூடுதல் ஆளரவமற்ற பகுதியில் “Mammoth Crater” என்ற இடத்தை தேடிச் சென்றோம். கிரைஸலரின் அகலத்தில் முக்கால் பகுதியே பொருந்தும் ரோட்டில் சென்று அடைந்தோம். உண்மையில் அது ஒரு பெரிய ராட்சஸனின் திறந்த வாய் போலிருந்தது. சிறு எரிமலையின் விளிம்பிலிருந்து நடுவே பார்ப்பது போன்ற ஒரு உணர்வை அந்த பள்ளம் உண்டாக்கியது. விளிம்பிலிருந்து பள்ளத்தை அருகில் சென்று பார்க்க தடுப்பு கம்பிகளுடன் சிறு படிக்கட்டு அமைத்திருக்கிறார்கள். பராமரிப்பு அற்று அது பாதியில் உடைந்திருந்தது. ஆனாலும் அதன் வழியே இறங்கி போய் பார்வையாளர் இடத்திலிருந்து பள்ளத்தைப் பார்த்தோம். மூன்று பக்கங்களிலிருந்தும் பெரும் மணல் சரிவைப் போல நிலம் சரிந்து விழுந்து கிடந்தது. அதன் சுற்றளவு நிச்சயமாக ஒரு மைலுக்கு கூடுதலாகவும், ஆழம் பத்து மாடிக் கட்டடம் அளவிற்கும் இருக்கலாம். அந்த சரிவில் பல மரங்கள் வளர்ந்திருந்தன. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இங்குதான் பூமி விலகி லாவா அருவியாக இந்த பகுதி முழுவதும் எரிந்து ஓடியிருக்கிறது. இன்று எல்லாம் அடங்கி தொல்லைத் தரக்கூடிய அமைதியும், ஆழத்தையும் தன்னில் வைத்துக் கொண்டு வாய் பிளந்து கிடக்கிறது. ஆழத்தையும், விரிவையும் ஒரு சேர கண்களாலும், மனதாலும் உள்வாங்க இயலவில்லை. ஒன்றை பார்க்கையில் மற்றொன்று சிறிதாகி விடுகிறது. இதைப் போன்ற இடங்களில் மனது இங்கும் அங்கும் ஓடுவது போல தோன்றுவது உண்டு, அது அங்கிருக்கும் அமைதியால் கூட இருக்கலாம். நெற்றியில் அடிக்கும் சூரிய ஒளியால் அந்த ஆழத்தை ஒரு புகைப்படம் கூட சரியாக உள்வாங்கவில்லை.

அடுத்ததாக சுற்றுச் சாலையை பிடிக்கும் வழியில் இருந்த லாவா புகைபோக்கிகளை பார்வையிட்டோம். சம வெளியில் எரிமலைக் குழம்பு வெடித்து வெளிவருகையில் அது சிறு குன்றுகளாக உறைந்து விடும். அது சில காலங்களில் ஒரு கட்டுமானமாக மாறி அதன் நடுவில் உள்ள குழிகளின் வழியே லாவா வழிந்து கொண்டேயிருக்கும். நாளடைவில் வெளியிலிருந்து பார்ப்பதற்கு அவை இயற்கையாக உருவான பிரம்மாண்ட புகைபோக்கிகளாக மாறிவிடும். அப்படி உருவான மூன்று புகைபோக்கி சகோதிரிகள் அங்கிருந்தனர். அந்த குன்றுகள் இறுகிப் போன கூர்மையான முனைக் கொண்ட கருப்பு களிமண் பாறைகளை போல இருந்தன. எனக்கு அவற்றை பார்த்த போது ஜுராஸிக் பார்க் படத்தில் டைனோசரின் சாணத்தை பிரம்மண்டமாக்கி அங்கு வைத்திருப்பது போல தோன்றியது. ஒவ்வொன்றிற்கும் நடுவே மேலெழும் குழாய் போன்ற அமைப்பு உருவாகியிருந்தது. ஒன்றில் மட்டுமே துளை இருந்தது மற்றவைகள் மூடிவிட்டன. அந்த சிறு துளையைச் சுற்றி கம்பிகளால் ஆன வேலி போட்டிருந்தார்கள். ஒரு தடுப்பு கம்பியை மட்டும் மேல் நோக்கி நகர்த்திக் கொள்ளும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதை தூக்கிவிட்டு நெஞ்சு வரை உள்ளே நுழைத்து பூமியின் ஆழத்திற்கு குடைந்து போகும் துளையை செங்குத்தாக கண்டேன், படம் பிடித்தேன், ஆ,ஓ என கத்தி எதிரொலித்தேன்.

அடுத்ததாக ஓரிகன் செல்லும் நெடுந்சாலையை அடையும் சுற்றுச் சாலையில் பயணம் தொடங்கியது. மடாக் இயற்கை காட்டில் வழியே அமைந்திருந்த சாலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை போன்ற நிலம் மாறி செழிப்பான நிலம் எங்களை எதிர் கொண்டது. எரிமலை சாம்பல்களும், பாறைகளும் குளிர்ந்த பிறகு அவ்விடம் செழிப்படையும் என்பது கண்முன்னே தெரிந்தது. இங்கு நடந்தது எரிமலை வெடிப்பு அல்ல, மாறாக சம வெளியிலும், சிறு மலைகளிலும் பூமி பிரிந்து உருவான லாவாவின் பிரம்மாண்ட ஒழுக்கு. அந்த சாலை “சாத்தானின் வளாகம்” என்ற பெயரிடப்பட்ட லாவா ஒழுக்கை அறுத்துச் சென்றது. சாலையில் இடது பக்கம் ஆயிரம் அடி உயரமான மதிலைப் போன்று சீரான மலை, வலது பக்கம் சம வெளி. மலையிலும், சமவெளியிலும் மஞ்சள் நிறத்தில் காய்ந்து போன நெடும் புற்கள். ஆனால் அவற்றின் இடையில் மலையின் மறு பக்கத்திலிருந்து நிரம்பி வடிந்ததைப் போல பல மைல்களுக்கு சாய்வாக வரி வரியாக கருப்பு பாறைகள். சம வெளியில் அவையெல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் சுனையைப் போல ஓடி, உறைந்து போனதற்கான சான்றுகள் கொத்திப் போடப்பட்ட நிலம் போல மஞ்சள் புல்வெளியின் நடுவே பெரும் வளாகமாக கிடந்தது.

தண்ணீர் தொட்டியிலிருந்து ததும்பி வடியும் நீரை தரையிலிருந்து எறும்பு காண்பதைப் போல, பல லட்சம் வருடம் முன்பு இங்கு நடந்த இயற்கையின் தாண்டவத்தின் மௌன சாட்சிகளை இருபக்கங்களிலும் பார்த்துக் கொண்டே பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த பகுதியை கடந்தவுடன் முழுவதுமாக பாறைகளும், மலைகளும் பின்வாங்கி, புல்வெளிகளும், டூலே ஏரியின் நீண்ட கரையும் ஆரம்பித்து விட்டது. டூலே ஏரியின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த பறவைகளை காணும் இடத்தில் நின்று ஏரியையும், அங்கு வந்து இறங்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவை என்ன பறவைகள் என தெரியவில்லை. குருவிகளைப் போல வெடுக்கென்று திசை திருப்பி பறந்து கொண்டிருந்தன. நண்பன் அதன் பெயர் “Swallow” என்று கூறினான். அதைத் தவிர காடைகளை அடையாளம் காண முடிந்தது. அங்கிருந்து ஏரியின் மறுபுறம் அமைந்த சிறு மலையும், விளைச்சல் நிலங்களும், தானிய கிடங்குகளும், அந்த நேரம் கடந்து சென்று கொண்டிருந்த ரயில் வண்டியும் கார்ட்டூனில் வரும் பொம்மைகளைப் போல தெரிந்தன.

லாவா மலைகளின் மறுபக்கம் நடைபெறும் சூரிய அஸ்தமனத்தை காண இயலாது என்பதால் மேலும் காத்திருக்காமல் ஓரிகனை நோக்கி கிளம்பி விட்டோம். ஓரிகனுக்கான பயணம் நெடுஞ்ச்சாலை 111இல் வலது பக்கம் விளைச்சல் நிலங்களும், இடது பக்கம் சரி சமமாக வரும் ரயில் தண்டாவளங்களுடன் சென்றது. எல்லா விளைச்சல் நிலங்களும் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டன. அவற்றில் குறைந்தபட்சம் 4 தானிய கிடங்குகளும், தானியங்களை பொதிவதற்கான கருவிகள் கொண்ட கட்டடங்களும் இருந்தன. வளைகுடா பகுதியிலிருந்து இதை முதலில் பார்த்திருந்தால் ஆச்சரியப்பட்டிருப்போம், லாவா மலையிலிருந்து வந்து இதைப் பார்த்த போது ஆரம்பத்திலிருந்த ஆச்சரியம் சலிப்பாக மாறிவிட்டது.

இரவு 8:30 மணிக்கு க்ளாமத் அருவி நகரில் தங்கும் விடுதியை அடைந்தோம். க்ளாமத் அருவி பெரிய ஊர் என சொல்லி விட இயலாது. 9 மணிக்கு எரியும் பசியுடன் மறுபடியும் ஊருக்குள் சென்ற போது ஆள் நடமாட்டம் அற்று இருந்தது. இணையத்தில் பார்த்து வைத்திருந்த கடைகள் எல்லாம் 9 மணிக்கு மூடி விட்டார்கள். நம்பகத்தன்மையோடு கூடிய ருசியுடன் சாப்பிட டென்னிஸ் தொடர் சங்கிலி உணவு விடுதிக்கு 10:30 மணி வாக்கில் சென்றோம். அடுத்த நாள் கிரேட்டர் ஏரிக்கு காலை 9 மணிக்கு கிளம்பலாம் என்று முடிவானது. அதற்கு பின், இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கலாம் என நோட் புத்தகத்தை எடுத்து வைத்து படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்த ஞாபகம் உள்ளது.


தொகுக்கப்பட்ட பக்கம்: பயணங்கள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

முந்திரிக் காட்டு வாழ்க்கை – “உயிர்த்தண்ணீர்” சிறுகதைத் தொகுப்பு

KANMANIமுந்திரிக் காடுகளை மையமாக கொண்ட அடித்தள மக்களின் வாழ்க்கையை சொல்லும் கதைகளே கண்மணி குணசேகரனின் உயிர்த்தண்ணீர் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுதி அந்த  குடும்பங்களின் பெண்களை மையமாக கொண்டும் மறு பாதி ஆண்களை மையமாக கொண்டும் உருவாக்கப்பட்ட சிறுகதைகளைக் கொண்டுள்ளது. சாதி அடுக்கிலும், பொருளாதார நிலையிலும் அடித்தளத்தில் உள்ள மனிதர்களின் வாழ்கை அவர்களின் வட்டார வழக்கிலேயே கதைகளாக விரிகின்றன. எனக்கு மிகவும் பிடித்த சில கதைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அழுத்தி கொண்டிருக்கும் வறுமை, சீக்கிரத்தில் விட்டு கொடுக்க முடியாத தன்மானம், குடும்ப மானம், இவைகளுக்கு இடையில் மனிதனுக்கே உரிய சிறு ஆசைகளையும், ஏக்கங்களையும் கொண்ட மனது என பெண்களின் வாழ்க்கைத் தருணங்கள் முதற் பாதியின் கதைகளாக உள்ளன. தன் வீட்டை கூட்டி பெருக்குவதற்கு பூ துடைப்பம் வேண்டும் என தவிக்கிறாள் செல்லியம்மா. ஈக்கல் துடைப்பத்தை உபயோகிக்கையில் பூந்துடைப்பத்தை பற்றி கனவு காண்கிறாள். சீவு முள்ளை காட்டில் இருந்து எடுத்து வரும் பிள்ளையும் கல்யாணமாகிப் போய்விட்டாள். எங்கிருந்தோ சீவுமுள்ளை எடுத்து வீட்டில் பத்திரப்படுத்தி வைக்கிறாள். ஆசையுடன் அதை அடித்து, தன்னுடைய பழைய புடவையை கிழித்து அதை சுற்றி கட்டி பூந்துடைப்பம் செய்து விடுகிறாள். சாணி மொழுகிய தரை காய்ந்ததும் அதை கொண்டு பெருக்க வேண்டும் எனக் காத்திருக்கையில் வெளியிலிருந்து வந்த கணவன் கெட்டியறுக்க காட்டுக்குக் கிளம்புமாறு அவசரப்படுத்துகிறான். அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்த பூனை சுவருக்கு மேல் வைக்கப்பட்டிருந்த துடைப்பத்தைக் கீழே தள்ளி விடுகிறது. அவள் கவனிப்பதற்கு முன்னால் எருமைமாடு ஒன்று பூந்துடைப்பத்தை வாயில் எடுத்து அசை போட ஆரம்பிக்கிறது. சாணம் மொழுகிய முற்றத்தையே வெறுமையோடு பார்த்து கொண்டிருக்கையில் காட்டிற்குக் கிளம்புமாறு வெளியிலிருந்து கணவன் கத்துகிறான். ‘சுத்தம்’ என்ற இக்கதை முதற்பாதி தொகுப்பில் உள்ள மற்ற கதைகளின் சாரத்தை சொல்வது போல அமைந்துள்ளது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ள இடைவெளிகளில் பொக்கிஷமாக வளர்த்த ஆசைகள், என்றாவது கைகூடும் என்ற எதிர்பார்ப்புகள் பலதும் அந்த கணத்தில் காரணமேயில்லாமல் நசிந்து போய்விடும் அவலம். வாழ்வாதாரத்திற்கான அடுத்த வேலை காத்திருக்கிறது, இழந்ததை பகிரவோ, அதை குறித்து தன்னிரக்கத்தின் கதகதப்பில் அரற்றிக் கொள்ளவோ நேரமில்லாமல் வேலையை பார்க்க வேண்டும் என்ற நிதர்சனம் போன்றவை இந்த கதையை முந்திரிக் காட்டிலிருந்து விலக்கி மிகவும் பொதுவான வாழ்க்கையை உணர்த்துவதாக மாற்றிவிடுகிறது.

குருதி என்ற கதையில் மாதவிடாய் நாட்களில் ஒரு முறை மின்னல் வெட்டை அருகில் பார்த்து பயந்ததில் இருந்து குமாரிக்கு அந்த நாட்களில் தாங்க முடியாத வலி ஏற்பட ஆரம்பித்துவிட்டது. மாதவிடாய் நாட்கள் நெருங்கும் பொழுது அவளுக்கு மனதில் பதைப்பு தொற்றிக் கொள்ளும். வலி ஒருபுறம், அதை குணப்படுத்தவோ, குறைக்கவோ மருத்துவம் பார்க்க இயலாத குடும்ப நிலை மறுபுறம் என்ற நிலையில் அந்த நாட்களை இயலாமையுடன் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் குமாரியின் முன் இருக்கும் ஒரே வழி. மூன்று பெண் பிள்ளைகள் உள்ள அந்த வீட்டில் அம்மா எப்போதும் சிடுசிடுப்புடன்தான் இருப்பாள். அப்பா நலம் விசாரிப்பதை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். மற்ற இருவருக்கும் அந்த நாட்களில் வேலை பார்க்காமல் இருக்கலாம் என்பதில் சந்தோஷம். ஆனால் குமாரிக்கு தாண்டி செல்ல வேண்டிய வதை நாட்கள் அவை. ஒரு நிலையில் இதற்கு என்னதான் தீர்வு என்ற கேள்விக்கு அம்மா கல்யாணம் ஆகி மூணு மாசத்துல இந்த பிரச்சனை வராது என தீர்வு சொல்கிறாள். இதில் யாரும் மோசமானவர்கள் இல்லை. ஆனால் அன்றைய நிலையில் தாயாக அவளால் அதை தாண்டி இதுவும் செய்ய இயலாது என்பதுதான் யதார்த்தம். அவளை சொல்லியும் குற்றம் இல்லை என்று குமாரி நினைப்பதோடு கதை முடிகிறது.

இரண்டாவது பாதியில் உள்ள கதைகள் அச்சமூகத்தின் ஆண்களை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இழவு வீட்டில் மோளம் அடிக்கும் சின்ன குண்டு, பன்றி வளர்க்கும் செல்வராசு, மருமகள் சேமிப்பை திருடி விற்று வெத்தலை வாங்கி குதப்பும் கலியன், காசிற்காக சுடுகாட்டில் கொடும்பாவிக்கு காவல் இருக்கும் குப்பன் போன்ற கதை மாந்தர்களை குறித்த கதைகள் அவை. சாதி, வர்க்க அடுக்கில் கீழே இருந்தாலும், வறுமையின் நிழலிலேயே காலத்தை கடத்தினாலும் அந்த  மனிதர்கள் தங்களுடைய தன்மானத்தை இழப்பதில்லை. ‘குலைவு’ என்ற கதையின் செல்வராசும், ‘கொடும்பாவியின்’ குப்பனும் அம்மனிதர்களையே நினைவுபடுத்தினார்கள்.

செல்வராசு பன்றி வளர்ப்பவன். மனைவி எங்கிருந்தோ ஓட்டி வந்த பன்றி இரவு குட்டி போட்டுவிட்டு பசி தாங்காமல் மற்றவரின் கிழங்கு தோட்டத்தை கிண்டி நாசப்படுத்தி விடுகிறது. ஊர் திருவிழாவில் மின்சார விளக்கு பிடித்து கொண்டு நிற்பதற்காக விதிக்கப்பட்ட சாதி தொழிலுக்கு வழக்கத்திற்கு மாறாக இருநூறு ரூபாய் கூலி கேட்டு வாங்கி கொண்டதால் ஊர்காரர்களுக்கு செல்வராசு மேல் கோபம். அதை மனதில் வைத்து கொண்டு பன்றியால் ஏற்பட்ட இழப்புக்கு பஞ்சாயத்தை கூட்டி இருநூறு ரூபாயை அபராதமாக பிடுங்கி விடுகிறார்கள். அதை நினைத்து தன் பன்றியையும் ஓட்டி வந்த மனைவியையும் கரித்து கொட்டிக் கொண்டே இருக்கிறான். அந்த நேரம் பொன்ராசு புதிதாக வாங்கிய பன்றி ஒன்றை சைக்கிளில் கட்டி கொண்டு வருகிறான். ஊரின் நிலைமையையும், பறிபோன காசை பற்றியும் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் சைக்கிள் அசைந்து விழுந்ததில், அதிலிருந்த பன்றி தரையில் கிடந்த கல்லில் தலையும், சைக்கிள் கைப்பிடியில் கழுத்தும் குத்தி பன்றி செத்து விடுகிறது. இரண்டு நாள் கழித்துதான் சந்தையை திறப்பார்கள், அது வரை இறைச்சியை விற்க முடியாது, கொடுத்த பணம் எல்லாம் வீணாகி விட்டது என புலம்பிக் கொண்டே கழுத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் ரத்தத்துடன் பொன்ராசு சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதை செல்வராசு பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இரண்டாவது பாதியில் உள்ள கதைகளில் இதுவே எனக்கு மிகவும் பிடித்த கதை. 200 ரூபாய் என்பது செல்வராசுவிற்கு மிகவும் அதிகமான தொகை. அதை இழக்க காரணமான பன்றியை திட்டிக் கொண்டே அதற்கும், அதன் குட்டிகளுக்கும் காவல் இருக்கிறான். அபராதத்திற்கு பதிலாக எங்கிருந்தோ ஓட்டிக் கொண்டு வரப்பட்ட அந்த பன்றிகளை பஞ்சாயத்து மனிதர்களிடம் கறிக்காக கொடுத்திருந்தால் அவனுக்கு அந்த பணம் மிச்சமாகியிருக்கலாம் என்றாலும் அவன் அதை கொடுக்கவில்லை. குட்டி போட்ட பன்றியின் பசியை அவனால் புரிந்து கொள்ளமுடிகிறது, அதை பணத்திற்காக குற்றமாக பார்த்து விட்டுவிட முடியவில்லை. திருவிழாவில் சாதிரீதியாக தனக்கு விதிக்கப்பட்ட கட்டுபாட்டை தெரிந்தே மீறுகிறான். அதற்கு காரணம் சொல்வதை போல தன்னை விட அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என மனதிற்கும் வேறு வேறு காரணங்களை சொல்லிக் கொண்டேயிருக்கிறான். அதை நிரூபிப்பதை போல தன்னை நம்பியிருக்கும் ஒரு ஜீவனை அவனால் பணத்திற்காக விட்டுக் கொடுக்க முடியவில்லை. பன்றி வளர்ப்பவர்களின் வாழ்க்கையின் பிரச்சனைகள், நிரந்தரமற்ற தன்மை போன்றவற்றை பொன்ராசு வழியாக கதை சொல்லி செல்கிறது.

கொடும்பாவி கதையில் வரும் குப்பன் கூட செல்வராசு போன்றவன்தான். ஊர் திருவிழாவிற்கு போகாமல் ஐம்பது ரூபாவிற்காக ஊர் பிராயசித்தமாக கொடும்பாவியை மயானத்தில் எரித்து அதற்கு காவல் இருக்கிறான். திருவிழாவில் ஊற்றப்படும் கூழை நினைத்து அவனுடைய மனம் ஏங்குகிறது. ஊருக்காக கொடும்பாவி எரிக்கப் போனதை சொல்லி மனைவி நிறைய கூழ் வாங்கி வீட்டில் வைத்திருப்பாள் என நம்பிக்கையோடு உட்கார்ந்திருக்கிறான். ஊர் மனிதர்களின் பார்வையில் வெறும் ஐம்பது ரூபாய்க்காக திருவிழாவிற்கு வராமல் இருக்கும் குப்பனை கண்டு இளக்காரம் தோன்றுகிறது. ஆனால் 50 ரூபாய் கடன் கொடுத்தவன் அதை கேட்டு கேவலப்படுத்தி விட்டதால் அடிபட்ட தன்மானமே குப்பனை அதை செய்ய வைத்தது என யாருக்கும் தெரியாது. கூழை நினைத்து ஏங்கிக் கொண்டே காசு கிடைக்கையில் அதை கடன்காரன் முகத்தில் விட்டு எறிவதைப் போல கனவு கண்டு கொண்டும் மயானத்தில் குப்பன் உட்கார்ந்திருக்கிறான்.

சாவுக்கு மோளம் அடிப்பவனின் ஒரு நாள் வாழ்க்கையை “சின்ன குண்டு” கதை காட்டுகிறது. பாடையை தாங்கும் கழி கிடைத்தால் அதில் வரும் பணத்தை கொண்டு தன் வீட்டு கூரையை சரி செய்யலாம் என சின்ன குண்டு நாள் முழுவது சாவு வீட்டில் யோசித்துக் கொண்டேயிருக்கிறான். மோளம் அடிப்பவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வருடமும் ஒரு ஊரை தங்களுக்குள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வது, அவர்களுக்குளேயே வசதி பொறுத்து உருவாகியிருக்கும் அதிகார அடுக்கு, கிடைக்கும் பணத்தின் பங்கீட்டில் அதனால் உருவாகும் வேற்றுமைகள், சாவு வீட்டின் காட்சி என விவரணைகளால் இந்த கதை தனித்து நின்றது.

வட்டார வழக்கு வசனங்களில் மட்டுமல்லாது கதை சொல்லலிலும், விவரணைகளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கதை மாந்தர்களின் குரலிலேயே எல்லா கதைகளும் ஒலிக்கின்றன. எனக்கு புரிந்தவரை இவர்கள் இன்ன சாதியினர் என்று எங்கும் குறிப்பிட்டு சொல்லப்படவில்லை. தன்மானம், சகிப்புதன்மை, கருணை என எல்லோரிடமும் இருக்கும் உன்னதங்கள் சாதி, வர்க்க அடுக்குகளாலும், வறுமையாலும் ஒடுங்கி போன முந்திரி காட்டு மனிதர்களிலும் உறைந்திருப்பதை அவர்களுடைய குரலிலேயே சொல்லும் இந்த கதைகள் வாசிப்பதற்கு நன்றாக இருந்தன.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள், கண்மணி குணசேகரன், முத்துக்கிருஷ்ணன் பதிவுகள்

எல்லா நாளும் கார்த்திகை – பவா செல்லதுரை

கால இடைவெளி அதிகரிக்கும் தோறும், கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கையில் சிறு சம்பவங்கள் நினைவிலிருந்து உதிர்ந்து விடுகின்றன. தீவிரமான அனுபவங்கள் சுருங்கி அவற்றின் சாரம் மட்டுமே மனதில் எஞ்சுகிறது. அவைகளை மீட்டெடுக்கையில் சரி, தப்பு, வீண், வேடிக்கை என ஒரு மன உணர்வாகவே வெளி வருகிறது. முன்பொரு காலத்தில் நாம் சந்தித்த, பழகிய, பயணித்த மனிதர்களும் அப்படிப்பட்ட அசையா பிம்பங்களாகவே மனதில் தங்கி விடுகின்றனர். குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும், வேலையிடத்திலும் என் மனதில் தங்கி விட்ட ஆளுமைகளின் பிம்பங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டன. இப்படித்தான் எல்லோரும் ஞாபக சேமிப்புகளை மனதிற்குள் அடுக்கி வைத்திருப்பார்களாக இருக்கலாம்.

அதைப் போல பவா செல்லதுரை தான் அறிந்த மனிதர்களின் ஆளுமையை சிறு சம்பவங்கள் மூலம் மீட்டெடுத்து படைத்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு வம்சி வெளியீடாகிய ‘எல்லா நாளும் கார்த்திகை’ என்ற புத்தகம். பவாவின் இரு வாசகர்கள் இந்நூலுக்கு சிறந்த முன்னுரை எழுதியுள்ளார்கள். சுவாரசியம் கலந்து எழுதப்பட்டுள்ள இந்த தொகுப்பில் மொத்தம் 22 மனிதர்களைப் பற்றிய ஆசிரியரின் அனுபவங்களும், அதனால் அவதானிக்கப்பட்ட குணாதசியங்களும் நேரடியாகவும், சில நேரம் கவித்துவத்தோடும் விவரிக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பரப்பிலும், திரைப்படத் துறையிலும் எல்லோராலும் அறியப்பட்டுள்ள ஆளுமைகளுக்கு இடையில் ஆசிரியரின் சில நெருங்கிய நண்பர்களைப் பற்றிய உருக்கமான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.

பவா செல்லதுரை தான் பழகிய மனிதர்களிடன் அவதானித்த சிறந்த குணங்களின் வழியாகவே அவர்களை உருவகிக்கிறார். சில நேரங்களில் அவர்களுடைய படைப்புகளைக் குறித்து பெரிய அபிப்ராயம் இல்லை என்று வெளிப்படையாக கூறினாலும், அவர்களுடைய எதிர்மறை குணங்களைப் பற்றிய புறவயமான அவதானிப்பை பதிவு செய்வதைக் கூட தவிர்த்து விடுகிறார்.

பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாலோ அல்லது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலோ பவாவிடம் எல்லோரும் மிக சீக்கிரம் உரிமையுடன் பழக ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது போல தோன்றுகிறது. மம்மூட்டியைக் குறித்த கட்டுரை பொதுவெளியில் காணக்கிடைக்கும் நட்சத்திரத்திற்கு வெகுவாக மாறுபட்ட மனிதரை காட்டியது. லெனின் என்ற திரைப்படக் கலைஞனின் முழு ஆளுமையை மிகவும் அழகாக ஒரு கட்டுரையில் உருவாக்கியுள்ளார்.

“பொங்கல் பண்டிகைக்கு நான் ஏன் விவசாயிக்கு வாழ்த்து சொல்லணும்னு வந்து நிக்குறீங்க?” என்று சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி குழுவை நாசர் கேட்டதை பார்த்துள்ளேன். அந்த கேள்விக்கு பின்னால் உள்ள ஆளுமையை “ஒப்பனையற்ற முகம்” என்ற கட்டுரை வெளிச்சமிடுகிறது. ஒரு சிறுகதையைப் போல எதிர்பாராத முடிச்சுடன் நிறைவடைகிறது பி.சி.ஸ்ரீராம் குறித்த நினைவலை.
பவாவின் வெளியில் அறியப்படாத மனிதர்களில் திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞராகிய கிரீஷ் ஃபேலன் என்ற வெளிநாட்டுகாரர், கைலாஷ் சிவன் என்ற கவிஞர், புற்று நோயால் இளமையிலேயே மரித்த ராஜவேல் குறித்த நெருக்கமான மனப்பதிவுகளை அளிக்கிறார். ஜெயகாந்தன் குறித்த தனிக் கட்டுரை இருந்தாலும் வேறு சில கட்டுரைகளிலும் அவர் வந்து போகிறார் சில சமயம் சம்பவங்களில் ஜெகேவாக, சில சமயம் அவரைக் குறித்த ஞாபக மீட்டலாக.

மற்றவைகளிலிருந்து கோணங்கி மற்றும் சுந்தர ராமசாமியைக் குறித்த கட்டுரைகள் வித்தியாசமாக எனக்குத் தோன்றியது. கோணங்கியை குறித்த ‘கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல்குதிரை’ என்ற கட்டுரை ஒப்பு நோக்கையில் மற்ற கட்டுரைகளைப் போல நேரடியாக எழுதப் படவில்லை. இலக்கிய உலகில் என்ன நடந்தது எனத் தெரிந்திருந்தால் அக்கட்டுரையின் உவமைகளை இன்னும் ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ‘மொழியின் பலிபீடம்’ என்ற சுராவைக் குறித்த கட்டுரையில் பவா அவருடன் ஒரு முறை கூட நேரில் பழகிய அனுபவம் இருந்ததாகக் காட்டவில்லை. சில செவிவழிச் செய்திகள் மூலமாகவும், சுராவின் கதை ஒன்றின் சுருக்கமாகவும் அவரைப் பற்றிய பிம்பத்தை முன்வைக்கிறார். இதுவே தொகுப்பின் பலவீனமான கட்டுரை என்பது என் எண்ணம்.

இந்த கட்டுரை வழியாக ஆசிரியர் அறியாமலேயே அவரைக் குறித்தும், அவருடைய குடும்பத்தைக் குறித்தும் பல அறிந்து கொள்ள முடிகிறது. அது பேசப்பட்ட மனிதர்கள் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுவதால் தான் என்று யூகித்துக் கொள்கிறேன்.

இதைப் போன்று நான் வாசித்த பிற அனுபவக் கட்டுரைகளுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இந்த ஆளுமைகள் எல்லோரும் (பெரும்பாலும்) பவாவைத் தேடி வருகிறார்கள். அதனால் பெரும்பான்மையான சம்பவங்கள் திருவண்ணாமலையில் நடைபெறுகின்றன. ஆசிரியர் தான் விரும்பிய ஆளுமைகளை காண வெவ்வேறு இடங்களுக்கு சென்றதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படவேயில்லை. அவ்வகையில் மறைமுகமாக திருவண்ணமலையும் ‘எல்லா நாளும் கார்த்திகை’யின் பகுதியாக வாசிப்பு முடிகையில் எஞ்சுகிறது.

கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா

keeranoor_zakir_rajaதமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா. சமீபத்தில் அவர் எழுதி, ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவல் ‘கருத்த லெப்பை’. எழுபது பக்கங்களுக்கும் குறைவான இந்த நாவல் கருத்த லெப்பை என்கிற ஜபருல்லாஹ் என்ற இளைஞனின் கதையை சொல்வதாகும்.

karuttha_lebbaiலெப்பை என்பவர்கள் வசதியில் ராவுத்தர்களை விட குறைந்தவர்கள், அதனால் அதிகாரம் என்று எதுவுமில்லாதவர்கள். முன்பு குதிரை வியாபாரம் செய்து, பிறகு கயிறு வியாபாரம் செய்து வரும் ராவுத்தர்களுக்கு ஓதிக் கொடுத்தும், அவர்களுடைய கடை நிலை அலுவல்கள் செய்தும் லெப்பைகள் வாழ்கிறார்கள். ராவுத்தர்கள் வீட்டிற்கு முறுக்கு சுட்டுக் கொடுக்கும் பாத்துமாவின் இளைய மகன் கருத்த லெப்பை. அவனுடைய அக்கா ருக்கையா. அவர்களுடைய அப்பா ராவுத்தர் குடும்பங்களில் ஓதிக் கொடுத்தும், எடுபிடி வேலையும் செய்கிறார் என்றாலும் கூட வீட்டின் வருமானம் பாத்துமாவை நம்பித்தான் உள்ளது.

லெப்பைகளுக்கு மத்தியில் சகஜமாக பழகும் ஒரே ராவுத்தர் மிட்டாய் அமீது. குழந்தைகளுக்கு பல வடிவங்களில் மிட்டாயை செய்து விற்று பிழைப்பு நடத்துகிறார். ஊரிலிருந்து விலகி இருக்கும் சாம்பன் மடத்தில் எங்கிருந்தோ வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாவாதான் கருத்த லெப்பையின் மானசீக குரு.

பித்து லெப்பை வம்சாவளியில் வந்த ஈசாகின் வயது முதிர்ந்த, புத்தி சுவாதீனமற்ற தம்பி பதுருதீனுக்கு ருக்கையாவை பாத்துமா திருமணம் செய்து கொடுத்து விடுகிறாள். வவ்வா கொட்டகை என்ற பித்து கொட்டகையில் விலங்கிடப்பட்ட பதுருதீனுடன் ஈசாக்கின் கட்டுப்பாடில் ருக்கையா வாழ்ந்து வருகிறாள்.

பள்ளிவாசல் மகாசபை நிர்வாகத்திற்கு முதன்முறையாக இந்த முறை லெப்பைகள் சார்பாக நூர் முகமது போட்டியிட்டு தோற்கிறார். லெப்பை ஒருவன் போட்டியிட்டு ஒன்பது ஓட்டு வாங்கிவிட்டான் என்பதை காரியதரிசி அஹமது கனி ராவுத்தரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இதைத் தொடர அனுமதிக்க கூடாது என்பதாலும், நூர் லெப்பைக்கு ஒன்பது பேர் ஓட்டு போட்டுவிட்டார்கள் என்பதற்கு தண்டனையாகவும் ராவுத்தர் கம்பெனியிலிருந்து லெப்பைகளை வேலையை விட்டு நீக்குகிறார்கள். அதில் வேலையிழந்து கருத்த லெப்பையின் அப்பாவும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஒருநாள் தெருவில் அலங்கோலமாக பத்ருதீனையும், அழுது கொண்டிருக்கும் ருக்கையாவையும் காண சகிக்காமல் அவளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான்.

ருக்கையாவையும், கருத்த லெப்பையையும் சிறு வயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்தவர் கொடிகால் மாமு என்கிற நூர் முகமது லெப்பை. நூர் லெப்பைக்கு மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக தன்னுடைய வண்டியை அனுப்ப மறுத்து விடுகிறார் கனி ராவுத்தர். நூர் முகமது இறந்து விடுகிறார். ஈசாக் மறுபடியும் வந்து ருக்கையாவை தன்னுடைய பித்து கொட்டகைக்கு கூட்டிக் கொண்டு போய் விடுகிறான்.

கருத்த லெப்பை தன்னுடைய அப்பாவின் தாயான ராதியம்மாவிடம் அவர்களுடைய கனவில் வரும் நாயகம் ரசூலுல்லாவின் உருவத்தை விவரிக்க சொல்லி கேட்கிறான். இறைவனுக்கு உருவம் வைக்கக் கூடாது என்பது தெரிந்தும் ராதியம்மா சொன்னதை காகிதத்தில் பதிந்து மிட்டாய் அமீதிடம் கொடுத்து சின்னா பிள்ளையின் வீட்டில் ரகசியமாக அதை சிலையாக வடிக்கச் சொல்கிறான்.

பத்ருதீன் உடல்நிலை மோசமாகி சாவிற்கு அருகிலிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈசாக்கை அடித்து போட்டுவிட்டு அவனைக் கூட்டிக் கொண்டு பாலசமுத்திரம் கன்னி பீவி தர்க்காவிற்கு ருக்கையா கிளம்பி போகிறாள்.

அம்மாவின் முறுக்கு விற்ற காசை சின்னா பிள்ளை வீட்டிற்கு வாடகையாக கொடுத்து விட்டு அமீது உருவாக்கிய களிமண் உருவத்தை வெளியில் கொண்டு வைக்கிறான் கருத்த லெப்பை. அவன் மீது எல்லா திசைகளிலிருந்தும் கல்லடி விழுகிறது. உதிரத்துடன் தரையில் விழுகையில் மழை வலுப்பதுடன் நாவல் முடிகிறது.

சமூகத்தில் தங்களுடைய இடம் இதுதான் என்று ஒத்துக் கொண்டும் வாழும் லெப்பைகளுக்கு மத்தியில் கருத்த லெப்பை மட்டும் விதிவிலக்காக உள்ளான். அக்கா ருக்கையா, கொடிக்கால் மாமு, சின்ன பேச்சி தவிர மற்ற எவர் மீதும் லெப்பை என்பதற்காக அவன் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. லெப்பை என்ற காரணத்தினால் புத்தி சுவாதீனமற்றவனுக்கு தெரிந்தே ருக்கையாவை திருமணம் செய்து கொடுத்தார்கள் என்பது அவனை லெப்பைகளின் மேல் குரோதத்தை ஏற்படுத்துகிறது. அவன் வாசிக்கும் புத்தகங்களும், ராவுத்தர்கள் தம்மை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மிதித்து கேவலப்படுத்துவதும் இயல்பாகவே அவர்கள் மேலும் தீராக் கோபத்தை உருவாக்குகிறது.

ஆனால் மற்ற எவரையும் விட அவன் கோபம் கொள்வது தன்னுடைய இயலாமையைக் குறித்து மட்டுமே. தன் அக்காவின் நிலையைக் குறித்து அங்கலாய்க்கும் பொழுதும், அவன் மயக்கத்தில் கிடக்கையில் உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் போர்டர் குத்புதீனை காணும் பொழுதும் அவனுள் அது புகைந்து அடங்குவதை உணர முடிகிறது. அதற்கு காரணம் அவனால் துறக்க முடியாத அடையாளங்கள் மற்றும் அவற்றின் வழியாக வரும் கட்டுப்பாடுகள்தான்.

சிறு வயதில் மற்ற பிள்ளைகள் மிட்டாய் அமீதிடம் தேளும், பாம்பும் செய்து தரச் சொல்லி கேட்கையில் கருத்த லெப்பை மட்டும் சைத்தானை செய்து தரச் சொல்கிறான். அந்த உருவம் வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களால் உருவாக்கி கொடுக்கிறார் அமீது. அது கருத்த லெப்பையின் சைத்தான். அவன் எதிர்படுவது எல்லாம் வெறும் துருவங்கள் மட்டுமே. அவன் பாட்டி நாணியம்மா, ரதியம்மா இருவரும் நேரெதிர் துருவங்கள். ராவுத்தர்களூம், லெப்பைகளும் இரு துருவங்கள். அவனுடைய கனவுகளும், யதார்த்தங்களும் இரு வேறு மூலைகளில் உள்ளன.

மதம், இனம் என எல்லா அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாம்பன் மடத்தின் பாவாவை சந்திக்கும் பொழுது பெய்யும் மழை அவன் கல்லடிபடும் பொழுதும் பெய்கிறது. இறுதியில் இறைவனின் உருவத்தை அதே அமீதிடம் செய்ய வைத்து அதோடு தன்னை அழித்து கொள்ளும் பொழுது, கருத்த லெப்பை என்ற அடையாளங்கள் முழுவதுமாக மறைந்து வெறும் ஜபருல்லாவாக எழுகிறான் என்றே நான் புரிந்து கொண்டேன்.

இந்த நாவலில் வேறு சில இழைகளும் உள்ளன. குறிப்பாக ருக்கையாவின் கனவுகளும், எதார்த்தமும், இறுதியில் அதை உடைத்து அவள் வெளியேறுவதையும் சொல்லலாம். கருத்த லெப்பை விடுதலை அடையும் அதே நேரத்தில் அவளும் பித்து கொட்டகையை விட்டும், ஈசாக்கை விட்டும் விலகுவது குறிப்படத்தக்கது. அதைப் போலவே பூக்களையும், இலைகளையும் உதிர்க்கும் முக்கு முருங்கை மரம், கருத்த லெப்பையின் பூனை ‘ஹிட்லர்’ என சில படிமங்களும் உள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் விரிக்கப்படவில்லை

நாவலில் நடக்கும் சம்பவங்களின் கால அளவை கணிக்க முடியவில்லை. ஒரு மாதமா அல்லது ஒரு வருடமா என குறிப்பிட்டு சொல்ல முடியாது. இன்னும் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இவை விமர்சனங்கள் என்பதை விட எதிர்பார்ப்புகள் மட்டுமே.

கருத்த லெப்பை எளிதில் வாசித்து விடக் கூடிய சிறப்பான குறுநாவல்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புள்ள பக்கம்: ஜாகிர் ராஜாவின் தளம்

2013 புத்தகக் கண்காட்சியில் முத்துகிருஷ்ணன்

Muthukrishnanஇந்த வருடம் புத்தக கண்காட்சியின் பொழுது சென்னையில் இருந்தேன். ஒரு நாள் சுற்றிப் பார்க்க நேரம் வைத்தது. முதல் தடவை என்பதால் நன்றாகவே பராக்கு பார்த்தேன். என்ன, ஒரு காபி 20 ரூபாய் என்பது சகிக்க முடியவில்லை. ஆனால் சென்னை விமான நிலையத்தில் ஒரு டீ 60 ரூபாய் என்று பார்த்தவுடன் புத்தக கண்காட்சி எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றியது.

சில அவதானிப்புகள்:

  1. பல தொலைக்காட்சி சானல்கள் சிறு குழந்தைகளையும், மற்ற வாடிக்கையாளர்களையும் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
  2. எஃப்எம் வானொலியில் தினமும் கண்காட்சியை பற்றிய நேர்காணல்களும், அறிவிப்புகளும் சொல்லிய வண்ணம் இருந்தனர்.
  3. வளைத்து வளைத்து “பொன்னியின் செல்வனை” எல்லா கடைகளிலும் பல விதமான புத்தக வடிவமைப்பில் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
  4. அதற்கு அடுத்ததாக எங்கும் சுஜாதா, எதிலும் சுஜாதா…
  5. சாஹித்ய அகாடமி புத்தக ஸ்டாலில் எல்லா புத்தகங்களும் ஒப்பு நோக்கையில் சகாய விலைக்கு வைத்திருந்தார்கள்.
  6. “சார் உங்களோட குழந்தைகளுக்கு ஐ க்யூ குறைவா இருக்கானு செக் பண்ணலாம். அதுக்கு நம்ம ஸ்டாலுக்குள்ள வாங்க சார்” என்று கூப்பிட்டு கொண்டிருந்தார்கள். அது ஏதோ competitive exam பயிற்சி தொடர்பானது என புரிந்து கொண்டேன். பெற்றோர்களிடம் கேள்வி கேட்டே பிள்ளைகளின் அறிவை கணித்துவிடும் எதோ புதிய தொழில் நுட்பம் போல இருக்கு. என்னிடம் 3, 4 தடவை வரும்போதும் போகும்போதும் கேட்டார்கள். கடைசியில் “நமக்கு குழந்தைகள் இருக்கோ” அப்படின்னு சின்ன ஐயம் வந்துவிட்டது.
  7. மனுஷ்யபுத்திரன் யாருக்கோ காணொளி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
  8. காற்றோட்டம் சரில்லை. பின் மாலை கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தவுடன் வெப்பமும், காற்று பற்றாக்குறையும் உணர முடிந்தது.

இனி நான் வாங்கிய புத்தகங்கள்.

  1. காந்தி எல்லைகளுக்கு அப்பால் – சொல்புதிது பதிப்பகம் – சுனில் கிருஷ்ணன் தொகுத்தவர்
  2. அனுபவங்கள், அறிதல்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில் ஜெயமோகன்) – United Writers பதிப்பகம்
  3. வாழிய நிலனே – கட்டுரைகள் சுகுமாரன் – உயிர்மை பதிப்பு
  4. எல்லா நாளும் கார்த்திகை – அனுபவங்கள் பவா செல்லத்துரை – வம்சி பதிப்பு
  5. உணவுப் பண்பாடு – அ.கா. பெருமாள் – New Century Book House
  6. அர்ஜுனனின் தமிழ் காதலிகள் – அ.கா. பெருமாள் – காலச்சுவடு பதிப்பகம்
  7. ராமன் எத்தனை ராமனடி – அ.கா. பெருமாள் – காலச்சுவடு பதிப்பகம்
  8. நடந்தாய் வாழி, காவேரி! – சிட்டி & தி. ஜானகிராமன் – காலச்சுவடு
  9. இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் (தமிழில் ஆ.மாதவன்) – சாஹித்ய அகாடமி
  10. வரலாறு, சமூகம், நிலா உறவுகள் – இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் – பாரதி புத்தகாலயம்
  11. மீன்காரத் தெரு – கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  12. கருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா – ஆழி பதிப்பகம்
  13. அஞ்சுவண்ணம் தெரு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம் பதிப்பகம்
  14. கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள் – உயிர்மை பதிப்பகம்
  15. உயரப் பறத்தல் – வண்ணதாசன் சிறுகதைகள் – சந்தியா பதிப்பகம்
  16. பெயர் தெரியாமல் ஒரு பறவை – வண்ணதாசன் சிறுகதைகள் – சந்தியா பதிப்பகம்
  17. கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம் – மகத்தான நாவல் வரிசை, நற்றிணை பதிப்பகம்
  18. ஆத்மாநாம் படைப்புகள் – காலச்சுவடு பதிப்பகம்
  19. நினைவின் தாழ்வாரங்கள் – கலாப்ரியா – சந்தியா பதிப்பகம்
  20. பூரணி பொற்கலை – சிறுகதைகள், கண்மணி குணசேகரன் – தமிழினி பதிப்பகம்
  21. உயிர்த்தண்ணீர் – சிறுகதைகள், கண்மணி குணசேகரன் – தமிழினி பதிப்பகம்
  22. பண்டைக்கால இந்திய – எஸ்.ஏ. டாங்கே (தமிழில் எஸ். ராமகிருஷ்ணன்) – New Century Book House

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், புத்தக சிபாரிசுகள்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 10 – இறுதி கடிதம்

rainer_maria_rilkeபாரீஸ்,
கிருஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908

உங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.

ஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப்போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.

ஒலிகளுக்கும், அசைவுகளுக்கும் தனி அறைகளை உண்டாகும் அந்த அமைதி மிகவும் தீவிரமானதாக இருந்திருக்க கூடும். அதோடு சேர்த்து ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் ஒருங்கிசைவின் உள்ளார்ந்த ஸ்வரம் போல ஒலிக்கும் தூரத்து கடலின் ஒலியையும் சேர்த்துக் கொண்டால், உங்களிடமிருந்து இனி எப்போதும் துடைத்தழித்து விட முடியாத அந்த தனிமையை மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டுமே என்னால் செய்ய இயலும். மூதாதையரின் உதிரம் எப்படி நம்முடைய ரத்தத்துடன் கலந்து இன்னொரு முறை பிரதியெடுக்க முடியாத, தனித்துவமான மனிதர்களாக இந்த வாழ்க்கையில் மாற்றியதோ அதைப் போல அந்த தனிமையும் உங்களுக்குள்ளே பெயரிட முடியாத தாக்கத்தையும், மென்மையான, தீர்க்கமான ஒன்றாக செயல்படும்.

ஆமாம்: உங்களுக்கு கிடைத்துள்ள நிலையான, சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கையைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. சுற்றி நிறைய மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் கிடைத்திருக்கும் – சீருடைகளும், பதவியும், வேலையும்- கூடுதல் தீவிரத்தையும், அவசிய தேவையையும் உருவாக்கி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். அது தற்சார்பு கொண்ட எச்சரிக்கையுணர்வை அனுமதிப்பதோடு சேர்த்து அதை மேலும் வளர்க்கவும் செய்யும். நம் மீது தாக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் எப்போதும் இருப்போமேயானால் அது மகத்தான விஷயங்களின் முன் நம்மை கொண்டு போய் நிறுத்தும் – அது மட்டுமே நமக்கு போதுமானது.

கலையும் வாழ்வதற்கான ஒரு வழிதான். ஒருவர் வெளியே எப்படி வாழ்ந்தாலும் தம்மை அறியாமலேயே கலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். உண்மைக்கு அருகாமையில் இருக்கும் தோறும் ஒருவர் கலையின் அருகில் இருக்கிறார். தன்னளவில் கலையுணர்வு குறைந்த செயல்கள் தம்மை எவ்வளவு தான் கலையின் அருகிலிருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவை யதார்த்தத்தில் கலையின் இருப்பை மறுதலித்து, அழிக்கின்றன – உதாரணமாக, மொத்தமாக பத்திரிக்கையியல், பெரும்பான்மையான விமர்சனங்கள், முக்கால்வாசி தங்களை இலக்கியம் என பறைசாற்றிக் கொள்பவை போன்றவைகளைச் சொல்லலாம். நீங்கள் அந்த தொழில்கள் எதிலும் போய் மாட்டிக் கொள்ளாமல் – சிறிது மென்மையற்ற யதார்த்தத்தில் – தனிமையுடனும், மனதைரியத்துடனும் இருப்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு.

புது வருடம் உங்களுக்கு இன்னும் அதில் உறுதுணையும், ஆற்றலையும் அளிக்கட்டும்.

என்றும் உங்களுடைய,
ஆர்.எம். ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8, 9