இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 9

rainer_maria_rilkeஃபுரோபெர்க், ஸ்வீடன்
நவம்பர் 4, 1904

அன்புள்ள கப்பஸ்,
கடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது. நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்களின் கேள்விகளுக்குளே மறுபடியும் பயணிக்க நான் விரும்பவில்லை. உங்களுடைய அவநம்பிக்கை, அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இடையில் உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒருங்கிசைவு அல்லது உங்களை ஒடுக்கும் சகலவிதமான சஞ்சலங்களைக் குறித்து நான் சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன். இனி நான் வேண்டுவதெல்லாம் உங்களுக்குளே தாங்கிக் கொள்வதற்கான பொறுமை, நம்பிக்கை உருவாவதற்கான எளிமை, மற்றவர்களோடு இருக்கையில் உணரும் தனிமையின் போது வாழ்க்கையின் கடினத்தின் மீது ஏற்படும் கூடுதலான நம்பிக்கை போன்றவைகளே. அதைத் தவிர்த்து, வாழ்க்கையை உங்களைக் கொண்டு நடை பெற விடுங்கள். என் சொற்களை நம்புங்கள்: வாழ்க்கை எப்போதும் சரியாகவே நடை பெறுகிறது.

அடுத்தது உணர்ச்சிகளைக் குறித்து: உங்களை ஒருமுகப்படுத்தி, எழுச்சி செய்யக் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் தூய்மையானவையே. உங்களை ஒரு பக்கமாக பிடித்து, இழுத்து மனதை உருச்சிதைவு செய்யும் உணர்ச்சியே தூய்மையற்றது. உங்களுடைய குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் உருவாகும் எல்லா உணர்ச்சிகளும் சிறப்பானவை. உங்களுடைய சிறந்த வாழ்க்கை கணங்களில் உணர்ந்ததை விட இன்னும் கூடுதலாக உங்களை நிறைவுடன் உணரச் செய்பவை எல்லம் சரியானவை. போதையேற்றாமல், மனக்குழப்பம் இல்லாமல் ஆனால் ஆழத்தில் கண்டு கொள்ள முடிந்த ஆனந்தத்தால் உங்களுடைய ரத்தம் முழுவதிலும் தீவிரமேற்றக் கூடியவை கூட நல்லதே. நான் எதைக் குறித்து பேசுகிறேன் எனப் புரிகிறதா?

உங்களுடைய சந்தேகங்களை முறையாக பழக்கிக் கொண்டால் அவைகளையும் ஒரு நற்குணமாக மாற்றலாம். சந்தேகங்கள் உங்களுடைய அறிதலாக வேண்டும், விமர்சனமாக வேண்டும். உங்களுக்குளே எதையாவது அழிக்க முற்படும் பொழுது அதனிடன் கேள்விகளைக் கேளுங்கள். இது ஏன் உனக்கு அசிங்கமாக தெரிகிறது என வினவுங்கள். அதற்கான ஆதாரங்களை கோரி, அவைகளை சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் பிறகு சந்தேகம் உங்கள் முன் அதிர்ச்சியுற்று நிற்பதை காணலாம், சங்கோஜம் கொள்வதை உணரலாம், ஏன் சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட கேட்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள், வாதங்களை முன் வைக்க வற்புறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் இதைப் போலவே கருத்துடன், பிடிவாதத்துடன் செயல்படுங்கள்: ஒரு நாள் உங்களை அழிப்பதில் இருந்து விலகி அது உங்களுடைய மிகச் சிறந்த சேவகனாக மாறிவிடும் – உங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பும் கருவிகளுள் மிகவும் சாமர்த்தியமான ஒன்றாக கூட மாறி விடலாம்.

இவ்வளவு மட்டுமே இன்று என்னால் கூற முடியும், கப்பஸ். ஆனால், இந்த கடிதத்துடன் “ ப்ரேக் ஜெர்மன் லேபர்” பத்திரிக்கையில் வெளிவந்த என்னுடைய சிறு கவிதையையும் சேர்த்து அனுப்புகிறேன். அதில், இன்னும் கூடுதலாக உங்களுடன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து பேசுகிறேன் மற்றும் அவற்றின் சிறப்பையும், மகிமையையும் சொல்கிறேன்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 8

rainer_maria_rilkeஃப்ளாடி, ஸுவீடன்,
ஆகஸ்ட் 12, 1904.

அன்புள்ள கப்பஸ்,
நான் பேசும் விஷயங்கள் உங்களுக்கு எவ்வகையிலும் உதவி புரியாது என்றபோதும், உங்களுடன் இன்னும் சிறிது நேரம் பேச விரும்புகிறேன். உங்களுக்கு உதவக் கூடிய சொற்களை கண்டெடுக்க என்னால் முடியவில்லை. உங்களுக்கு பல துயரங்கள் உள்ளன, உங்களை விலகி சென்றுவிட்ட பெரும் துயரங்கள். சமீபத்தில் உங்களை கடந்து சென்ற மனத்துயரம் மிகுந்த கடினமாக இருந்ததாக கூறியிருந்தீர்கள். தயவு கூர்ந்து, உங்களிடமே கேட்டுப் பாருங்கள், இத்தகைய பெரும் சோகங்கள் கூட உங்களினூடே கடந்து போய் விட்டன அல்லவா? உங்களுக்குள்ளே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம்; எங்கோ, உங்கள் இருப்பின் ஆழங்களில் சோகத்துடன் இருந்த சமயங்களில் முக்கியமான மாறுதல்களை நீங்கள் அடைந்திருக்கக்கூடும். சோகங்களிலே மிகவும் அபாயமானவை, பொதுவெளியில் நாம் சுமந்து செல்லும் துயரங்களே. புறத்தில் உள்ள கூச்சலில் மூழ்கடிப்பதற்காக நாம் கொண்டு அலையும் மனத் துயரங்கள், முட்டாள்தனமாகவும், மேம்போக்காகவும் சிகிழ்ச்சையளிக்கப் பட்ட நோயை போன்றவையாகும்; சிறிது காலத்திற்கு பின்வாங்கிக் கொண்டு பிறகு அதிக கொடூரத்துடன் கட்டவிழ்த்து வெளிவரும்; நமக்குளே சேகரம் ஆகி, நம் வாழ்க்கையாகி விடும் – நாம் வாழ இயலா வாழ்க்கை, நிராகரிக்கப் பட்ட, இழக்கப்பட்ட, மரணத்தை கொண்டு சேர்க்கும் வாழ்க்கை. நம் அறிவின் எல்லைகளுக்கு அப்பால் பார்க்க முடிந்தால், நம் முன்னெண்ணங்களின் வெளிக் கட்டுமானங்களைத் தாண்டி அறிய முடிந்தால், துயரங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை விட அதிக நம்பிக்கையுடன் தாங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஏனென்றால் துயரத்தின் பொழுதுகளில் தான் நாமறியா ஒன்று நம்முள் நுழைகிறது; நமது உணர்ச்சிகள், சங்கோஜத்துடன் மௌனமாகின்றன, நம்முள்ளே உள்ள அத்தனையும் பின்வாங்குகின்றன, அமைதி எழுகிறது, புதியதொரு அனுபவம், யாரும் அறிந்திராத அனுபவம், எல்லாவற்றிற்கும் நடுவில் ஒன்றுமே கூறாமல் நிற்கிறது.

நமது துயரங்கள் அனைத்தும் நெருக்கடியின் கணங்கள் என்று எனக்கு தோன்றுகிறது; ஏனென்றால் அந்நியமான இருப்பு ஒன்று நம்முள்ளே நுழைந்து விட்டமையால், நாம் நம்பிய, பழகிப் போன அனைத்தும் அந்த கணத்தில் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டதால், மாற்றத்தின் இடையில் ஒரு கணம் கூட ஸ்திரமாக நிற்க முடியாத நிலையில் நாம் இருப்பதால் – அந்த நேரங்களில் ஸ்தம்பித்துப் போன நமது உணர்ச்சிகளின் துடிப்பைக் கேட்க இயலாமல், முடக்குவாதம் போன்றதொரு நிலையை உணர்கின்றோம். அதனால் தான் துயரங்களும் கடந்து போய் விடுகின்றன: நம்முள் நுழைந்த புதியதொன்று, நம்மோடு இன்னும் ஒன்றாக இணைந்து , இதயத்தின் உள்ளே நுழைந்து, அதன் உள்ளார்ந்த அறைக்குள் சென்றுவிடுகிறது, பிறகு அது அங்கு கூட இருப்பதில்லை – அதற்குள்ளாகவே நமது ரத்த ஓட்டத்தில் கலந்து விட்டது . அது என்னவென்று நாம் அறிவதேயில்லை. ஏதுவுமே நடக்கவில்லை என நம்மையே எளிதில் நம்பவைத்து விடலாம், ஆனால் விருந்தினர் வந்த வீடு மாற்றம் கொள்வதைப் போல நாமும் மாறியிருப்போம். உள்ளே நுழைந்தது என்ன என்று நம்மால் வார்த்தையில் கூற இயலாது, நமக்கு தெரியாமலே கூட இருக்கலாம்; ஆனால் எதிர்காலம் நடந்தேறுவதற்கு முன்னரே நம்முள்ளே இன்று நுழைந்து, மாற்றங்களை அடைவதற்கான அறிகுறிகளை உணர முடியும். அதனால் துயரத்தின் பொழுதுகளில் தனிமையில், விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்: எதிர்காலம் நமக்குள்ளே நுழையும் நிகழ்வற்ற, அசைவற்ற பொழுதுகளே வாழ்க்கைக்கு மிக அருகாமையில் உள்ளன; அல்லாது, பெரும் ஓசையுடன், தற்செயல்களின் தருணங்களில் வெளியிலிருந்து உள்ளே நுழைவது போல தோன்றும் தருணங்களில் அல்ல. துக்கத்தின் தருணங்களில் நாம் கூடுதல் அமைதியுடனும், பொறுமையிடனும், திறந்த மனதுடனும் இருப்போமேயானால் அதிக ஆழத்துடனும், சாந்தத்துடனும் நம்முள்ளே அந்த இருப்பு நுழையும்; அதை இன்னும் அதிகமாக நமதாக்கிக் கொள்ளலாம்.

பின்னர், அது மற்றவர்களுக்கு நிகழ்கையில் நமது ஆழங்களில் அதை உணர்ந்து கொள்ள முடியும். அது மிகவும் அவசியமானது. அதை நோக்கியே சிறிது சிறிதாக நமது வளர்ச்சி வெளிப்படும் – இது மிகவும் அவசியமானது ஏனென்றால் அவ்வகையில் நாம் அறியாதது எதுவும் நடைபெறாது, நிகழும் கணங்கள் எல்லாம் நமக்குளே வெகுகாலமாக இருந்தவைகளே. ஏற்கனவே மனிதர்கள் பல விஷயங்களைக் குறித்து மறுசிந்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்: விதி என்பது வெளியிலிருந்து நமக்குள்ளே வருவது இல்லை, மாறாக நம்முள்ளே இருந்து வெளியே வருவது என்பதையும் படிப்படியாக உணர்ந்து கொள்வார்கள். அது அவர்கள் மிகவும் பழக்கப்படாத ஒன்று என்பதால் அவர்களுக்குள்ளே இருந்து வெளிப்படுவது என்னவென்று உணர்வதில்லை; அவர்களுடைய குழப்பத்தாலும், பயத்தாலும் அதை உணர்ந்த கணத்தில் அது தங்களுக்குள்ளே வெளியேயிருந்து நுழைந்தது என நினைத்துக் கொள்கிறார்கள். அதைப் போன்ற ஒன்று தமக்குள்ளே இருந்ததில்லை என்று சத்தியம் செய்கிறார்கள். நீண்ட காலமாக எப்படி சூரியனின் இயக்கத்தைக் குறித்து மனிதர்களுக்கு தவறான கருத்து இருந்ததோ அதைப்போலவே வரும் காலங்களைக் குறித்தும் அவர்கள் தவறான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அன்பு கப்பஸ்,எதிர்காலம் ஸ்திரமாக நிற்கிறது, ஆனால் நாம் தான் முடிவற்ற வெளியில் நகருகிறோம்.

நமக்கு அது கடினமற்றதாக எவ்வாறு இருக்க முடியும்?

தனிமையை பற்றிய பேச்சின் தொடர்ச்சியாக – தெள்ளத் தெளிவாக தெரிவது என்னவென்றால் தனிமையை தனியாக பாகுபடுத்தி தேர்ந்தெடுக்கவோ, விலக்கி வைக்கவோ முடியாது. நாம் அனைவரும் தனித்தவர்களே. அது உண்மையில்லை என நம்புவதற்காக நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். அவ்வளவுதான் செய்ய இயலும். ஆனால் நாம் தனிமையானவர்களே என்பதை உணர்ந்து கொள்ளல் இன்னும் எத்தனை மேம்பட்டது; ஆம், இந்த புரிதலில் இருந்து ஆரம்பிப்பது கூட சிறப்பானது. நம் பார்வை பழகிய புள்ளிகளை எல்லாம் அது பிடுங்கிக் கொண்டு போய்விடும், தூரத்தில் இருந்தவை எல்லாம் முடிவில்லா தொலைவில் விலகிப் போய்விடும். ஆகையால் நிச்சயமாக அந்த எண்ணம் நம்மை கொஞ்சம் மூர்ச்சையடையச் செய்யும். ஒரு மனிதனை அவனுடைய அறையிலிருந்து தூக்கி எந்தவொரு முன்னறிவிப்பும், தயார்படுத்துதலும் இல்லாமல் பெரும் மலைத்தொடரின் உச்சியில் கொண்டு நிற்கவைத்தால் அதைப் போன்ற உணர்வைத் தான் அடைவான்: ஒப்பிடமுடியா பாதுகாப்பின்மை, பெயரற்ற இடத்தில் கைவிடப்பட்ட உணர்வு எல்லாம் சேர்ந்து அவனை அழித்து விடும். கீழே விழுந்து கொண்டிருப்பதைப் போலவும், ஆகாயத்தில் பெரும் விசையுடன் எறியப்பட்டதைப் போலவும் அல்லது ஆயிரம் துண்டுகளாக வெடித்து சிதறுவதைப் போலவும் அவன் உணர்வான்: அவன் புலன்களின் நிலையை புரிய வைப்பதற்காக மூளை எத்தனை பிரம்மாண்டமான பொய்யை அவனிடம் சொல்ல வேண்டியிருக்கும். இப்படித் தான் தனிமையை அடையும் மனிதனுக்கும் எல்லா தொலைவுகளும், அளவுகளும் மாறிப் போய்விடும்; இவைகளில் பல மாற்றங்கள் திடீரென ஏற்பட்டுவிடுவதால் – மலையுச்சியில் விடப்பட்ட அந்த மனிதனைப் போல – அசாதாரணமான கற்பனைகளும், புரியாத உணர்வுகளும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு அவனுள் எழும்.

ஆனால் அவற்றை அனுபவிப்பது நமக்கு மிகவும் அவசியமானது. யதார்த்தத்தை நம்மால் முடிந்த அளவிற்கு அகண்ட மனதுடன் ஒத்துக் கொள்ள வேண்டும், இதுவரை நினைத்துப் பார்த்திராத விஷயங்கள் கூட அந்த பார்வைக்குள்ளே ஒரு சாத்தியமாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே இறுதியில் நம்மிடன் கோரப்படும் மனதைரியம் ஆகும்: புரியாத, மிகவும் அசாதாரணமான, விளக்கவே முடியாத வாழ்க்கை அனுபவங்களை எதிர் கொள்ளும் தைரியம். இந்த விஷயத்தில் மனிதர்கள் காட்டிய கோழைத்தனம் வாழ்விற்கு கணக்கிட முடியாத தீங்கை ஏற்படுத்தி விட்டது; “பேய் அனுபவங்கள்”, “ஆவி உலகம்”, மரணம் போன்று நமது வாழ்விற்கு மிகவும் நெருங்கிய தொடர்புள்ள அனுபவங்களை நமது பயத்தால் ஒதுக்கி விட்டோம். அவற்றை புரிந்து கொள்வதற்கான புலன்களின் செயல் திறனையும் படிப்படியாக இழந்து விட்டோம். கடவுளைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் புரிந்து கொள்ள முடியாதவைகளின் மேல் கொண்ட பயம் தனிமனிதனின் யதார்த்தத்தை வற்றச் செய்தது மட்டுமல்லாமல்; அது சக மனிதனிடம் உள்ள உறவையும் குறுக்கி விட்டது, முடிவில்லா சாத்தியங்களை உடைய ஆற்றுப் படுகையில் இருந்து எடுத்து கரையிலுள்ள தரிசு நிலத்தில் வைத்ததைப் போல. மனித உறவுகளுக்கு மத்தியில் திரும்பத் திரும்ப ஏற்படும் இந்த சலிப்பிற்கு நமது அலட்சியம் மற்றும் புரியாத அனுபவங்களுக்கு முன்னால் நிற்கையில் அவற்றை நம்மால் எதிர் கொள்ளமுடியாது என்ற கோழைத்தனமும் காரணம் ஆகும்.

ஆனால் எவனொருவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பானோ, எந்தவொரு அனுபவத்தையும் தேவையில்லை என ஒதுக்காமல் இருப்பானோ, அவன் மட்டுமே சக மனிதரிடம் கொண்ட உறவை உயிர்த்துடிப்புள்ள ஒன்றாக பாவித்து அதில் வாழ்வான். அத்தகைய மனிதனின் உள்ளத்தை ஒரு விஸ்தாரமான அறையாக உவமைப் படுத்திப் பார்த்தோமேயானால், மற்ற மனிதர்கள் அவர்களுடைய அறையின் ஒரு மூலையை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறார்கள், ஜன்னலுக்கு அருகே ஒரு இடம், நேர் கோட்டில் சென்று வர ஒரு குறுகிய சிறு பாதை. அவ்வகையில் அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. ஆனால், இருட்டறையின் சுவர்களைத் தொட்டு அதில் பல உருவங்களை மனதில் கற்பனை செய்து கொண்டு, தங்களுடைய சிறைக் கூடங்களின் பயங்கரத்தை தாண்டிச் செல்லும் போவின் கதைகளில் காட்டப்படும் கைதிகளின் ஊடே தெரியும் மனிதனின் பாதுகாப்பின்மை தான் எத்தனை உக்கிரமானது. நாம் கைதிகள் அல்ல. நம்மை பிடிப்பதற்கான பொறிகளோ, கண்ணிகளோ எங்கும் இல்லை மற்றும் நாம் அச்சம் கொள்வதற்கு எதுவும் இல்லை. நமக்கு மிகவும் இணக்கமான விதத்தில் இந்த வாழ்விற்குள் நாம் வைக்கப்பட்டுள்ளோம் மற்றும் பல ஆயிரம் வருடங்களாக ஏற்பட்டு வரும் ஒத்திசைவின் காரணமாக இந்த வாழ்க்கையை மிகவும் சிறப்பாக பிரதிபலிக்கிறோம்; நாம் ஒன்றும் செய்யாமல் ஸ்திரமாக இருந்தோம் என்றால் நம்மைச் சுற்றி உள்ள எதிலிருந்தும் வேறுபட்டு தெரிய மாட்டோம்.

நமது உலகைக் குறித்து அவநம்பிக்கை கொள்ள தேவையில்லை ஏனென்றால் அது நமக்கு எதிராக செயல்படுவது இல்லை. இங்கு கொடூரங்கள் உள்ளதென்றால் அது நமக்குள்ளே இருக்கும் கொடூரமே; இங்கு படுகுழிகள் உள்ளதென்றால் அந்த படுகுழிகள் நமக்கு சொந்தமானவையே; இங்கு அபாயங்கள் உள்ளதென்றால் அவற்றை நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். கடினமான விஷயங்களின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இன்று மிகவும் அந்நியமாக தெரிபவை எல்லாம் நம்பிக்கைக்குரிய, அந்தரங்கமான அனுபவங்களாக மாறிவிடும். எல்லா மனித இனங்களின் தொடக்கத்தில் உருவான புராண கதைகளில் வரும் கொடூரமான யட்சிகள் இறுதி கணத்தில் அழகான தேவதைகளாக மாறிவிடுவதை எங்ஙனம் மறக்க இயலும்? நமது மனங்களில் குடியிருக்கும் யட்சிகளும், தேவதைகளும் நாம் ஒரு முறையேனும் வீரத்துடனும், அழகுடனும் செயல்படுவதை பார்க்க காத்திருக்கலாம் அல்லவா. நம்மை பயமுறுத்துபவை எல்லாம், ஆழத்தில், நமது அன்பை வேண்டி நிற்பவைகளாக கூட இருக்கலாம்.

ஆகையால், கப்பஸ், நீங்கள் இதுவரை கண்டிராத அளவிற்கு பெரிய துயரத்தை எதிர் கொண்டாலும் அச்சம் கொள்ளலாகாது; நீங்கள் ஆற்றும் செயல்களின் மீதும், உங்கள் கைகளின் மீதும் பதட்டமோ, இருண்மையோ கடந்து சென்றால் பயப்படாதீர்கள். உங்களுக்குள்ளே ஏதோவொன்று நடைபெறுகிறது, வாழ்க்கை உங்களை கை விட்டுவிடவில்லை, உங்களை அதன் கைகளில் ஏந்திக் கொண்டு கீழே சரியாமல் பார்த்துக் கொள்கிறது என நீங்கள் உணர வேண்டும். அமைதியின்மையும், விசனமும், மனத்தளர்ச்சியும் உங்களுக்குளே எதை நிகழ்த்துகின்றன என அறிந்து கொள்வதற்கு முன்பே எதற்காக அவைகளை வாழ்க்கையிலிருந்து பூட்டி வைக்கிறீர்கள்? இவையெல்லாம் எங்கிருந்து வருகிறது, எங்கு சென்றுகொண்டிருக்கிறது போன்ற கேள்விகளை கொண்டு எதற்காக உங்களையே வருத்திக் கொள்கிறீர்கள்? அதுவும், நீங்கள் நிலைமாற்றத்தின் மத்தியில் இருக்கிறீர்கள் என்று அறிந்து கொண்டு; மற்ற எல்லாவற்றையும் விட மாற்றத்தை வேண்டும் என வரம் கேட்டுக் கொண்டு எதற்காக இப்போது அதில் உங்களை துயரப்படுத்துகிறீர்கள்?

உங்களுடைய எதிர்வினைகளில் ஏதேனும் கெடுதல் இன்னும் உண்டென்றால், நான் சொல்வதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்; நோய்நிலை என்பது உயிரினம் தன்னை அந்நியமான ஒன்றிலிருந்து விடுவித்துக் கொள்ளும் வழிவகையாகும்; அது பிணிகளைந்து சுகப்படுவதற்கு அதை நோய்நிலையில் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும். திரு கப்பஸ், உங்களுக்குள்ளே பல மாற்றங்கள் நடைபெறும் இந்த காலங்களில், நோயுற்றவர் போல பொறுமையுடனும், குணமடைபவரை போன்ற நம்பிக்கையுடனும் இருத்தல் வேண்டும். மேலும், உங்களை பராமரித்து கவனித்துக் கொள்ளும் மருத்துவரும் நீங்கள் தான். ஆனால் எல்லா நோய் காலங்களிலும் பல நாட்கள் பொறுமையோடு காத்திருத்தல் அல்லாது ஒரு மருத்துவர் செய்யக் கூடிய காரியம் வேறொன்றுமில்லை. மற்ற எல்லாவற்றை காட்டிலும் அதைத் தான் இப்போது நீங்கள் செய்ய வேண்டும்.

எப்பொழுதும் உங்களையே கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்து அவசர முடிவுகளை எடுக்காதீர்கள்; அவைகளை நடை பெற அனுமதியுங்கள். இல்லாவிடில், குற்றவுணர்ச்சியுடன் ( ஒழுக்கம் சார்ந்து) உங்கள் கடந்த காலங்களை எளிதில் காண ஆரம்பித்துவிடுவீர்கள்; இயல்பிலேயே அதற்கும் இன்று நீங்கள் சந்திக்கும் எல்லாவற்றிற்கும் தொடர்புண்டு. பால்ய காலத்தின் பிழைகளும், ஆசைகளும், ஏக்கங்களும் அல்ல இன்று நீங்கள் ஞாபகத்தில் மீட்டி கண்டனம் செய்பவை. தனிமை மிகுந்த, ஆதரவற்ற குழந்தைப் பருவம் என்பது மிகவும் கடினமானதும், சிக்கலானதும், பல தாக்கங்களுக்கு எளிதில் அடிமையாவதும் ஆகும்; அதே நேரம் உண்மையான வாழ்க்கையிலிருந்து எல்லாவகையிலும் துண்டிக்கப்பட்டதும் கூட; அங்கு ஒரு தீயொழுக்கம் நுழைந்தால் அதை வெறுமனே தீயொழுக்கம் என ஒருவர் குறிப்பிட மாட்டார். எப்படியிருந்தாலும் நாம் எப்போதும் பெயர்களின் மீது கவனம் கொள்ளல் வேண்டும். பல நேரங்களில் வாழ்க்கை, செய்த செயலின் பெயரின் காரணமாக நொறுங்கி விழும்; அதற்கு பின்னே இருக்கும் பெயறற்ற, தனிப்பட்ட செயலால் அல்ல –அது நடை பெற்ற நேரத்தில் மிக அவசியமானதாகவும், வாழ்க்கை மிக இயல்பாக தனக்குள்ளே சேர்த்துக் கொண்ட செயலாகவும் கூட அது இருந்திருக்கலாம்.

வெற்றியை மிகைமதிப்பிடுவதன் காரணத்தால் நீங்கள் செலவிடும் ஆற்றல் பிரம்மாண்டமாக தெரிகிறது; நீங்கள் நினைத்ததைப் போன்று “பெரிய காரியத்தை” எதையும் சாதிக்கவில்லை; இங்கு “பெரிய காரியம்” என்பது முன்பே இங்கு ஒன்று இருந்தது, அதன் மேல் இருந்த பொய்யான தோற்றத்தை நீங்கள் உண்மையான ஒன்றை கொண்டு மாற்றி வைத்தீர்கள். அதுவும் இல்லையென்றிருந்தால் உங்களுடைய வெற்றிக்கு தார்மீக எதிர்வினை என்பதைத் தாண்டி எவ்வித மதிப்பும் இருந்திருக்காது; ஆனால் இன்று அது உங்கள் வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. கப்பஸ், உங்களுடைய வாழ்க்கையை பல வாழ்த்துக்களுடன் எண்ணிப் பார்க்கிறேன். அந்த வாழ்க்கை “பிரம்மாண்டமான விஷயங்களை” நோக்கி குழந்தைப் பருவத்தில் எப்படி ஏக்கம் கொண்டது என உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? இன்று அதைவிட பிரம்மாண்டமான, சிறந்த விஷயங்களை நோக்கி ஏக்கம் கொண்டுள்ளதை நான் காண்கிறேன். அதன் காரணமே, அது கடினம் கொள்வதை விடுவதுமில்லை, தொடர்ந்து வளர்ந்து கொண்டிருப்பதை நிறுத்துவதுமில்லை.

உங்களிடம் நான் சொல்ல வேண்டியது ஒன்று உண்டென்றால்: உங்களுக்கு ஆறுதலை அளிக்க முயலும் இந்த மனிதன் அமைதி கூடிய, இந்த வார்த்தைகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என நினைத்து விடாதீர்கள். அவன் வாழ்க்கையும் பல உபாதைகளும், துயரங்களும் உள்ளடக்கிக் கொண்டு உங்களுடையதை விட வெகு பின்னால் இருக்கிறது. அங்ஙனம் இல்லையென்றால் அவனால் இந்த சொற்களை கண்டடைந்திருக்க முடியாது.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 7

ரோம்,
மே 14, 1904

அன்புள்ள திரு. கப்பஸ்,
கடைசியாக நீங்கள் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைக்கப் பெற்று பல நாட்கள் கழிந்து விட்டன. அதற்கு பதிலளிக்காததற்காக என் மீது வருத்தம் கொள்ளாதீர்கள். முதலில் வேலைப் பளு, பிறகு பல இடைஞல்கள், இறுதியாக தொடர்ந்து கொண்டேயிருக்கும் உடல் நலக்குறைவு எல்லாம் சேர்ந்து என்னை பதிலளிக்க விடவில்லை: ஏனென்றால் என் பதிலகள் அமைதியுடன் கூடிய மகிழ்ச்சியான நாட்களில் இருந்து உங்களை அடைய வேண்டும் என விரும்பினேன். இப்போது உடல் நிலை மறுபடியும் சீரடைந்தது போல உணருகிறேன் ( வசந்த காலத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் சீதோஷண நிலைமாற்றங்களை இங்கும் தாங்கிக் கொள்ள கடினமாக உள்ளது). திரு. கப்பஸ் மறுபடியும் என் வாழ்த்துக்களை சொல்லி உங்களுடன் அதைப் பற்றியும், உங்களுடைய கடிதத்திற்கான பதிலையும் என்னால் இயன்ற வரை பேச முயற்சிக்கிறேன்.

நீங்கள் அனுப்பிய பாடலை பிரதி எடுத்துள்ளேன் ஏனென்றால் அது அற்புதமானதாகவும், எளிமையுடன் மனதிற்குள் நுழைய கூடியதுமாக இருந்தது. நீங்கள் எனக்கு வாசிக்க அனுப்பிய கவிதைகளில் அதுவே மிகச் சிறந்த கவிதையாகும். இப்போது நான் எடுத்த பிரதியை உங்களுக்கு அனுப்புகிறேன் ஏனென்றால் மற்றவருடைய கையெழுத்தில் தன்னுடைய படைப்பை வாசிப்பதால் கிடைக்கும் புதிய அனுபவங்கள் மிகவும் முக்கியமானது என நான் அறிவேன். இந்த கவிதையை இதற்கு முன் அறிந்திராதது போல வாசித்துப் பாருங்கள்; உங்கள் மனதின் ஆழத்தில் அக்கவிதை உங்களுக்கேயானது என உணர்வீர்கள்.
இந்த பாடலையும், அதோடு உங்கள் கடிதத்தையும் வாசித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

ஏதோ ஒன்று நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் தனிமையிலிருந்து உங்களை வெளியில் தள்ளுவதைப் போன்று உருவாகும் உணர்வை நினைத்து குழம்பிவிடாதீர்கள். அந்த உணர்வையே பொறுமையுடனும், விவேகத்துடனும் உபயோகித்தால் உங்கள் ஏகாந்தத்தை இன்னும் பல தொலைவிற்கு நீட்டிக் கொள்ள இயலும். பெரும்பான்மையான மனிதர்கள் (பாரம்பரியத்தின் வழியே) தங்களுக்கான பதில்களை ஏளிமையிலும் எளிமையான தீர்வை நோக்கி திருப்பியிருக்கிறார்கள். ஆனால் எது கடினமானதோ அதன் மேல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உயிருள்ளவை அனைத்தும் அதன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளன; இயற்கையில் உள்ள சகலமும் வளர்ந்து தன்னையே இயன்ற வரை பாதுகாத்துக் கொள்கின்றன, அதே நேரம் தன்னுடைய இயல்பை மாற்றாமல் எல்லா எதிர்ப்புகளையும் தாங்கிக் கொண்டு தொடர்கின்றன. தனிமையில் இருப்பது நல்லது ஏனென்றால் தனிமை கடினமானது; ஒன்று கடினமானது என்பதே அதை மேற்கொள்வதற்கான இன்னொரு காரணமாகும்.

அன்பு செலுத்துதல் சிறந்தது; காரணம், அதுவும் கடினமானது. ஒரு மனிதன் சகமனிதன் மேல் கொள்ளும் அன்பு என்பது – நமக்கு கொடுக்கப்பட்டவைகளில் மிகவும் கடினமான செயலாகும் – இறுதியான பரீட்சை மற்றும் நிரூபணம் – மற்ற எல்லா செயல்களும் அந்த கடின செயலுக்கான முன்னேற்பாடுகளே. அந்த காரணத்தினாலேயே, இளையவர்கள் – எல்லா விஷயங்களிலும் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் – அன்பு செலுத்தும் திறனற்று இருக்கிறார்கள்; அது அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் கற்றுக் கொள்ளும் காலம் என்பது நீண்ட, தனிமை மிகுந்த, வாழ்க்கையில் வெகு தூரம் உள்ளே செல்லும் பயணமாகும். நேசித்தல் என்பது தொடக்கத்திலேயே ஒன்று சேர்ந்து, சரணடைந்து, மற்றவருடன் ஒன்று கலப்பதன்று ( தெளிவற்று, முழுமையடையாமல், பொருந்தாமல் தொடர்வதாக இருந்தால், அவ்விருவர் சேர்ந்ததனால் தான் என்ன பயன்?). தன்னுடைய நேசம் தனிமனிதன் கனிவதற்கும், தனக்குள்ளேயே மற்றொன்றாக மாறுவதற்கும், தன் அன்பு செலுத்தும் மனிதருக்காக தன்னுள்ளே இன்னொரு உலகமாக மாறுவதற்கும் தூண்டுதலாக அமைய வேண்டும். அவனிடத்தில் கோரப்படும் மிகப்பெரிய கோரிக்கையாகும், அவனை தேர்வு செய்ததன் மூலம் அது அவனை பல தொலைவுகளுக்கு இட்டுச் செல்லும். தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இந்த உணர்வின் மூலமே (எப்போதும் கூர்ந்து கேட்டுக் கொண்டே, இரவு பகலாக தன்னையே செதுக்கி) இளையவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும்; அதை நிகழ்த்தி முடிப்பதற்கான அளவிற்கு மட்டும் தான் நமது வாழ்க்கை பெரியதாக உள்ளது போலும்.

ஆனால் இதே விஷயத்தில் தான் இளையவர்கள் மிக மோசமாக தவறு செய்கிறார்கள் (அவர்களுக்குரிய இயல்பான பொறுமையின்மையால்) . காதலில் ஒருவரின் மேல் மற்றொருவர் பாய்ந்து, தமக்கே உரிய ஒழுங்கின்மையாலும், பதட்டத்தாலும், சீரற்ற இயல்பாலும், தம்மையே சிதறடிக்கிறார்கள்: பிறகு நடப்பது என்ன? தங்களுடைய கூடல் என பாதி உடைந்து போனவைகளையும், அதனால வரக்கூடிய மகிழ்ச்சியையும், எதிர்காலங்களையும் வைத்து வாழ்க்கையால் என்ன செய்ய இயலும்? இப்படியாக மற்றவருக்காக ஒருவர் தன்னயே இழந்து, அடுத்து வருபவரையும் இழந்து, அதற்கடுத்து வருபவரையும் இழக்கிறார். எந்தவொரு நன்மையும் கொடுக்க முடியாத பயனற்ற இந்த குழப்பங்களுக்கு மாற்றாக பலஇதமான நுண்ணுணர்வுகளைக் கொண்ட விஷயங்களை பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்களுக்கு இறுதியில் எஞ்சுவது கொஞ்சம் அருவருப்பும், ஏமாற்றமும், அகத்தின் ஏழ்மையுமே – பிறகு அவைகளிலிருந்து தப்பி அபாயமான இந்த சாலையில் கட்டப்பட்டிருக்கும் பொதுக் கூடங்கள் போன்ற மரபுகளின் உள்ளே அடைந்து விடுவார்கள். மனித அனுபவத்தின் மற்ற எந்த பரப்பை விடவும் இதில் மட்டுமே அதிகமான பொது மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாக்கப்பட்டும், உயிர்ப்புடனும் பலவிதமான கண்டுபிடிப்புகள், படகுகள், நீர்த்துறைகள் என இதற்கு உண்டு; சமூகம் இவ்விஷயத்தில் எல்லா வகையான அகதி முகாம்களை உருவாக்கி வைத்துள்ளது, ஏனென்றால் காதல் வாழ்வை ஒரு கேளிக்கையாக உருவகித்து வைத்திருப்பதால், அதற்கு எளிமையான, மலிவான, பாதுகாப்பு மிகுந்த சூழ்நிலையை அளிக்க வேண்டியுள்ளது.

பல இளைஞர்கள் தவறாக காதலில் விழுந்து – அதாவது, தங்களுடைய தனிமையை விட்டுக் கொடுத்து, முழுவதுமாக மற்றவரிடம் சரணடைந்து (சராசரி மனிதன் தொடர்ந்து அதையே செய்துக் கொண்டிருப்பான்) – பிறகு தாம் ஒடுக்கப்பட்டதாக உணர்ந்து அந்த சூழ்நிலையையும் வாழத் தகுந்ததாக, பலனளிப்பதாக மாற்ற மிக அந்தரங்கமாக முயலுகிறார்கள் என்பது உண்மை. அவர்களுடைய தன்னியல்பு அவர்களுக்கு உரைப்பது என்னவென்றால் காதலில் உதிக்கும் கேள்விகள், எல்லாவற்றையும் விட முக்கியமான அந்த கேள்விகள், முன்னரே அறியப்பட்ட ஒப்பந்தங்கள் கொண்டு பொதுவெளியில் தீர்க்கப்பட முடியாது; அவை ஒரு மனிதனிலிருந்து மற்றவருக்கு செலுத்தப்படும் மிக அந்தரங்கமான கேள்விகளாகும், அவைகளுக்கு மிகவும் அந்தரங்கமான பதில்களே தேவைப்படுகிறது. ஆனால், தம்மையே மற்றவர் மீது வீசி எறிந்து ஒருவர் மற்றவருடைய எல்லைகோடு எதுவென்று பகுத்தறிய இயலாமல் இருப்பவர்கள், தமக்கென்று தனித்துவமாக எதுவும் இல்லாதவர்கள், எங்ஙனம் ஆழப் புதைந்து போன தனிமையிலிருந்து தம்மை வெளிக் கொண்டுவர இயலும்?

அவர்களின் செயல்பாடுகள் பரஸ்பர இயலாமையால் ஏற்படுகிறது, பிறகு நல்ல எண்ணங்களுடன் தங்களை நோக்கி வரும் சமூக மரபுகளிலிருந்து (உதாரணத்திற்கு திருமணம்) தப்பித்துக் கொள்ள, அதைவிட தெளிவற்ற மற்றொரு மரபு சார்ந்த தீர்வுகளின் பிடியில் போய் விழுந்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்களை சுற்றி இருப்பது வெறும் மரபுகளே. எங்கெல்லாம் மனிதர்கள் முதிராமல் உருக்கி, கலங்கிய இணைதலைக் கொள்கிறார்களோ; அங்கு நடைபெறும் செயல்கள் யாவும் மரபானவையே; பிறகு அந்த உறவுகளின் குழப்பங்கள் அவற்றிற்கே உரிய மரபான தளைகளில் சென்று முடிகிறது. அவை எவ்வளவு அசாதாரணமாக தெரிந்தாலும்; அவர்களின் பிரிவு கூட வழக்கமான முறையில், தனிப்பட்டதாக இல்லாமல், உறுதியும், பலனுமற்ற தற்செயலான முடிவாகவே இருக்கும்.

ஆழ்ந்து நோக்கினால் மரணத்திற்கும், இப்படிப்பட்ட கடினமான அன்பிற்கும் எங்கேயும் சரியான தீர்வோ, தெளிவோ, பாதையின் குறிப்போ இல்லாதிருப்பதை புரிந்து கொள்ள முடியும்; ஏனென்றால் நமக்குள் பொதிந்து, அடுத்தவருக்கு அனுப்பிவிடும் இவ்விரண்டு காரியங்களுக்கும் எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட பொது விதிகள் என்று எதுவும் கிடையாது. ஆனால் எங்ஙனம் வாழ்க்கையை தனிமனிதராக சோதித்துப் பார்க்கிறோமோ அதைப் போலவே இவைகளும் தனிமனிதர்களாக நம் உள்ளே நெருக்கமாக சந்திக்கும். இவ்வகையான அன்பு கொள்வதால் நம்முடைய வளர்ச்சியில் அவை ஏற்படுத்தும் மாற்றங்கள் என்பது இவ்வாழ்க்கையையும் தாண்டிய விஷயங்களாகும்; தொடக்க நிலையில் உள்ள நாம் அதற்கெல்லாம் தகுதியானவர்கள் அல்ல. இருந்தாலும் கூட அதை தாங்கிக் கொண்டு, அன்பு செலுத்துதல் என்பதை கற்றுக் கொள்ளலாக கொண்டு, எளிமையான, அற்பமான விஷயங்களில் மற்றவர்களைப் போல நம்முடைய தனி இருப்பை தொலைத்து விடாமல் இருந்தோமென்றால் – நம்மைப் பின்தொடர்பவர்களுக்கு அதுவே ஒரு சிறு பாதையாகவும், முன்னேறிச் செல்வதற்கு ஒளியாகவும் இருக்கக் கூடும். அது போதுமானது.

நாம் இப்போதுதான் ஒரு மனிதனுக்கும் இரண்டாவது மனிதன் மீது உள்ள உறவைக் குறித்த பாரபட்சமற்று, முன்முடிவுகளற்று பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அப்படிப்பட்ட உறவுகளில் வாழ்வதற்கான நமது முயற்சிகளுக்கு முன் உதரணங்கள் கிடையாது. இருந்தாலும் கூட காலத்தின் மாற்றங்கள் பல விஷயங்களை தொடக்க காலங்களில் நமக்கு அளித்துள்ளது.

சிறுமியும், பெண்ணும் அவர்களுடைய சமீபத்திய தனிப்பட்ட வளர்ச்சியில் சிறிது காலங்களுக்கு மட்டுமே ஆணின் குணத்தையும், செயல்களையும் பிரதிபலிப்பார்கள். நிலைமாற்றத்தின் உறுதியற்ற காலங்கள் கழிந்த பின்பு – அவர்கள் ஆண்களின் உருக்குலைக்கும் தாக்கங்களிலிருந்து அவர்களுடைய தன்னியல்பை தூய்மைப்படுத்தி எடுத்துக் கொள்வதற்கே இத்தனை வேஷங்களின் வழியே பயணித்தார்கள் என்பது புரிய வரும். மேம்போக்கான பார்வையை கொண்டிருக்கும் ஆண் – அவன் அன்பு செலுத்தும் எதையும் குறைத்தே மதிப்பிடுபவன் – போலன்றி; தன்னுள்ளே ஒரு உயிரை இன்னும் நெருக்கமாகவும், உயிர்ப்போடும், நம்பிக்கையுடனும் கொண்டிருக்கும் பெண் தன் ஆழங்களில் கூடுதல் கனிவுடனும், மனிதத்துவத்துடனும் இருப்பாள். கருப்பையில் எல்லா துன்பத்திற்கு மத்தியிலும் சுமக்கப்படும் பெண்ணின் மனிதாபிமானம், மரபு சார்ந்த பெண்மை என்ற வெளித்தோற்றத்தை அவள் உதிர்க்கையில் வெளிப்படும் – அதன் வரவை எதிர்ப்பார்க்காத ஆண்கள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவார்கள். இன்னும் சில காலங்களில் (இப்போதே வட ஐரோப்பாவின் சில நாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன) பெண்களின் பெயர்கள் வெறும் ஆண்களின் எதிர்மறை என்பதைக் கடந்து தனித்துவமான வாழ்க்கையாகவும், யதார்த்தமாகவும் மாறிவிடுவார்கள்: பெண் மானுட இனம்.

இந்த முன்னேறல் (ஆரம்பத்தில் ஆணின் விருப்பத்திற்கு எதிராக இருப்பினும்) காதல் அனுபவத்தை மாற்றி அமைத்துவிடும்: தவறுகள் நிரம்பிய அனுபவங்களிலிருந்து வடிவமாற்றம் பெற்று ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் உறவு என்றாகி விடும். இனிமேலும் அது ஆணிடம் இருந்து பெண்ணை நோக்கி பாயும் உறவு என்று இருக்காது. கூடுதல் மனிதத்துவம் கொண்ட இந்த அன்பு ( முடிவில்லா பரிவும், மென்மையும், கருணையும், தெளிவும் கொண்ட) நம்மை சிரமத்துடன் தயார்படுத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒத்ததாகும் : இரு மனிதர்களின் தன்னியல்பும், தனிமையும் தம்மையே பாதுகாத்து, வரையரை செய்து கொண்டு ஒன்று மற்றொன்றை வாழ்த்தி வரவேற்க வழிவகுக்கும் அன்பாகும்.

இன்னும் ஒரு செய்தி. நீங்கள் சிறுவனாக இருந்த பொழுது உணர்ந்த பெரும் அன்பு உங்களுக்கு தொலைந்து போய்விட்டது என எண்ணாதீர்கள். உங்களுடைய அந்த கால ஆசைகள் அன்று முதிராமல் இருந்த தால் தான் இன்று வாழ்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ள இயலும்? அன்பு, உங்கள் நினைவுகளில் உறுதியுடனும், உக்கிரத்துடனும் இருப்பதற்கு காரணம் அதுவே முதல் முறையாக ஆழ்ந்த தனிமையிலும், அக செயல்பாடுகளிலும் உங்களை ஈடுபட வைத்ததால் தான் என நான் நம்புகிறேன்.
திரு. கப்பஸ், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 6

ரோம்,
டிஸம்பர் 23, 1903

என் அன்பிற்குரிய கப்பஸ்,
என்னிடமிருந்து வாழ்த்துச் செய்தி இல்லாமல் உங்களுடைய கிறுஸ்துமஸ் நாள் அமைவதில் எனக்கு விருப்பமில்லை. அதுவும் இந்த விடுமுறை தினங்களின் மத்தியில் தனிமையை கூடுதல் பாரத்துடன் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும் வேளையில். ஆனால் அந்த தனிமை மிகுந்த விரிவை உடையது என்பதை நீங்கள் கண்டு கொண்டால் மகிழ்ச்சியடைவீர்கள். (நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டியது) இத்தனை விரிவை அடையாத தனிமை உண்டென்றால் அது என்ன; இங்கிருப்பது ஒரே ஒரு தனிமை தான், அது மிகவும் விசாலமானது, சுமப்பதற்கு மிகவும் சிரமானதும் கூட. ஏறத்தாழ அனைவருமே, தங்களுடைய வாழ்க்கையில் சில மணி நேரங்களாவது மனமுவந்து சக மனிதர்களுடன் கூடிப் பழகுவதற்கும் – அது எத்தனை அற்பமான, மதிப்பற்ற விஷயமாக இருந்தாலும் – அடுத்தவரிடம் வெளிப்படையாக சிறு வகையிலாவது ஒத்துப் போவதற்கும் விரும்புவான். ஆனால் இந்த சில மணி நேரங்கள் தான் தனிமை நம்முள்ளே பெரிதாக நிறையும் பொழுதுகளாக இருக்கலாம்; ஏனென்றால் தனிமையின் வளர்ச்சி, சிறுவர்களின் வளர்ச்சியைப் போலவும் அல்லது வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போலவும் மிகவும் துயரமானதாகும். ஆனால் அது உங்களை குழப்பிவிடக் கூடாது. இறுதியில், அவசியமானது என்பது இது தான்: ஏகாந்தம், மிகவும் விசாலமடைந்த ஏகாந்தம். உங்களுக்குளே பல மணி நேரங்கள் யாரையும் கண்டடையாமல் தனியாக நடத்தல் – அது தான் நீங்கள் அடைய வேண்டியது. குழந்தையாக இருந்த போது மூத்தவர்கள் உங்களைச் சுற்றி அவர்களுக்கே உரிய பெரியதும், முக்கியமானதுமாகிய விஷயங்களில் ஆழ்ந்து வலம் வந்து கொண்டிருக்கையில், அவர்கள் செய்யும் காரியங்கள் எதையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்திருப்பீர்கள். இன்று நீங்கள் அடைய வேண்டியது அந்த குழந்தையின் தனிமையையே.

அவர்களுடைய செயலகள் அலங்கோலமானது, தொழில்கள் கல்லாக இறுகிப் போய் வாழ்க்கையுடன் எவ்வகையிலும் தொடர்பற்று போனவை என்று நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்றால், அவைகளை ஒரு குழந்தையின் பார்வையில், பரிச்சயமில்லாத ஒன்றைப் பார்ப்பதைப் போல, உங்கள் ஏகாந்தத்தின் ஆழங்களிலிருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? ஒரு குழந்தையின் ‘அறிவுபூர்வமான விளங்கிக் கொள்ளாமை’ என்ற குணாதசியத்தை கொடுத்து அதற்கு பதிலாக பாதுகாப்பின்மையையும், வெறுப்பையும் எடுத்துக் கொள்ள ஏன் விழைகிறீர்கள்? ‘விளங்கிக் கொள்ளாமை’ என்ற பண்பே ஒரு வகையில் தனிமையில் இருப்பதைப் போன்றது மற்றும் வெறுப்பும், ஏதிர்ப்பும் நீங்கள் எதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என எண்ணுகிறீர்களோ அதில் மீண்டும் ஈடுபடுவதால் உண்டாவது தானே.

சிந்தித்து பாருங்கள் ஐயா, நீங்கள் உங்களுக்குளே சுமந்து அலையும் உலகத்தை பற்றி. அந்த சிந்தனைகளுக்கு எப்படி வேண்டுமென்றாலும் பெயரிட்டுக் கொள்ளுங்கள்: பால்யகால ஞாபகங்கள் என்றோ அல்லது எதிர்காலத்தை நோக்கிய ஏக்கம் என்றோ – உங்கள் மனதிற்குள் என்ன எழுகிறதோ அதை கருத்துடன் அவதானித்தால் போதும்; மேலும் அதை நீங்கள் கவனித்தவைகளில் எல்லாவற்றிலும் மேலானதாக உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அகத்தின் ஆழங்களில் நடைபெறும் எல்லாமே உங்களுடைய முழு அன்பை பெறும் தகுதி உடையவையாகும்; அந்த எண்ணங்களை ஏதோ ஒரு வழியில் அடைந்து அவற்றில் செயல்படவும் மற்றும் மற்றவர்களின் மீது நீங்கள் வைத்திருக்கும் மனப்பான்மையை அவர்களுக்கு தெளிவுபடுத்த அதிக நேரத்தையும், தைரியத்தையும் விரயம் செய்யாமலிருக்கவும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். உங்களுக்கென ஒரு மனப்போக்கு உள்ளதென சொன்னது யார்? உங்களுடைய உத்தியோகம் கடுமையானது என்றும், நீங்கள் மறுக்கும் பல காரியங்களை உள்ளடக்கியது என்றும் நான் அறிவேன். உங்களுடைய இந்த புலம்பல்களை நான் முன்னரே எதிர்பார்த்திருந்தேன். இப்பொது அது நடந்து விட்டமையால், இனி நான் உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வேண்டுமென்றால், மற்ற தொழிலகளும் இத்தகைய இயல்புகளைக் கொண்டவை தான் – தனிமனிதன் மேல் கோரிக்கைகளையும், துவேஷத்தையும் வீசி – புத்தியை மந்தமாக்கும் அலுவல்களை தொடர்ந்து செய்து தன்னையே ஊமையாகவும், முசுடாகவும் மாற்றிக் கொண்டவர்களின் வெறுப்பில் ஊறிய தொழில்கள்தான்.

நீங்கள் வாழும் சூழ்நிலை மற்றவைகளை விட எவ்வகையிலும் அதிகம் மரபொழுங்குகளையும், முன்முடிவுகளையும், பிழை புரிதல்களையும் கொண்டதல்ல. அப்படி இன்றிருப்பதை விட அதிக சுதந்திரத்தை வேறு ஒரு சூழ்நிலை தருவதாக உரிமை கோரினால், நினைவில் வைத்துக் கொள்க, மெய்ம்மையில் மட்டுமே உண்மையான வாழ்க்கை உள்ளது. தன்னுள்ளே தனிமையில் உள்ள மனிதன் மட்டுமே மெய்ம்மையின் ஆழ்ந்த விதிகளுக்குள் வசிக்கிறான். அம்மனிதன் சூரிய உதயத்திற்கு முன் நின்று கொண்டோ அல்லது பரபரப்பான ஒரு மாலைப் பொழுதை பார்த்துக் கொண்டோ, அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உள்ளூர உணரும் பொழுது, தூய வாழ்க்கையின் மத்தியில் இருக்கும் பொழுதே மற்ற எல்லா சம்பவங்களும், விஷயங்களும் சடலத்திலிருந்து பிரிவது போல அவனிடமிருந்து உதிர்ந்துவிடும்.

கப்பஸ், ஒரு அதிகாரியாக நேர் கொள்ளும் அனுபவங்களை, இங்கு நிலைநாட்டப் பட்டுள்ள எந்தவொரு தொழிலிலும் உணர்ந்திருப்பீர்கள்; ஆம், வெளியில் சமூகத்துடன் எளிதான, சுதந்திரமான தொடர்புடைய தொழில் என்றாலும் கூட, முடக்கப்படும் உணர்விலிருந்து நீங்கள் தப்பியிருக்க முடியாது. எல்லா இடங்களும் இதைப் போலத்தான் உள்ளன; அதற்காக பதட்டமும், துயரமும் கொள்ள வேண்டியதில்லை; மற்றவர்களிடம் பகிர்வதற்கு ஒன்றுமில்லை என்றால் இயற்கைக்கு அருகில் இருங்கள். இயற்கையும், மிருகங்களுக்கும் இடையில் சதா ஏதோவொன்று நடை பெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. அதில் நீங்கள் பங்கு பெறலாம்; குழந்தைகள் இன்னும் நீங்கள் குழந்தையாக இருந்ததைப் போலத் தான் மகிழ்ச்சியுடனும், சோகத்துடனும் இருக்கிறார்கள். உங்களுடைய பால்ய பருவத்தை ஞாபகப்படுத்திக் கொண்டால், அவர்களுக்கு மத்தியில் நீங்களும் வாழலாம். பெரியவர்களுக்கு என்று எதுவுமில்லை, அவர்களுடைய கௌரவத்திற்கு மதிப்பு கிடையாது.

பால்ய காலங்களின் அமைதியிலும், எளிமையிலும் எப்போதும் கூட இருந்த இறைவன் மீது இன்று நம்பிக்கை இழந்து விட்டதால், அக்காலங்களை பற்றி நினைப்பதற்கே அச்சப்படுகிறீர்கள் என்றால்; அன்புள்ள கப்பஸ் உண்மையிலேயே இறைவனை நீங்கள் இழந்து விட்டீர்களா என்பதே நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வியாகும். இன்று வரை நீங்கள் இறைவனை உங்கள் உள்ளே வைத்திருக்கவில்லை என்பது தானே மேலான உண்மையாக இருக்க முடியும்? மாறாக இறைவன் எப்போது உங்களுடன் இருந்திருக்கிறான் என நினைக்கிறீர்கள்? குழந்தைப் பருவத்திலா? ஒரு குழந்தையால் இறைவனை தாங்கிக் கொள்ள இயலுமா, பெரியவர்களே மிகவும் சிரமப்பட்டு , தம்மை அழுத்தும் அவனுடைய பெரும் பாரத்தை சுமக்கையில்? உண்மையில் இறைவனை தன்னுளே குடிவைத்திருப்பவர் ஒரு சிறு கல்லைப் போல அதை தொலைத்துவிட முடியும் என எண்ணுகிறீர்களா? இறைவன் குடியிருக்கும் ஒருவரை இறைவனால் மட்டுமே தொலைக்க முடியும் என உங்களுக்கு தோன்றவில்லையா? அப்படி இல்லாமல், உங்கள் பால்யத்திலும், இதற்கு முன் எப்பொழுதும் இறைவன் இருந்திருக்கவே இல்லை என்று நினைத்தால், கிறுஸ்து தன் ஏக்கத்தாலும், முகமது தன் கர்வத்தாலும் ஏமாற்றப்பட்டார்கள் என நீங்கள் சந்தேகித்தால் – மற்றும் நாம் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இந்த கணத்தில் கூட இறைவன் கிடையாது என்ற எண்ணம் உங்களை அச்சுறுத்துகிறது என்றால் – அப்படி என்றுமே இல்லாத இறைவனை தொலைந்து போன ஒன்றாக நீங்கள் தேடுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

இறைவனை, நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒருவராக ஏன் நீங்கள் நினைத்து கொள்ளக் கூடாது? நாமெல்லாம் இலைகளாக இருக்கும் மரத்தின் முழு முற்றான கனியாக, நம்மை நோக்கி முடிவிலியின் எல்லா திசைகளிலிருந்தும் சதா வந்து கொண்டிருக்கும் ஒருவராக, என்றோ ஒரு நாள் நம்மை வந்தடைவராக ஏன் உருவகித்துக் கொள்ளக் கூடாது? அவருடைய பிறப்பு இனி வரும் யுகங்களில் நிகழப் போவதாகவும், அது நடைபெறுவதற்கு முன்பான வரலாற்றின் உன்னதமான கர்ப்ப காலங்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும், நினைத்துக் கொள்வதற்கு எது தடையாக உள்ளது? இங்கு திரும்பத் திரும்ப நடைபெறும் எல்லாமே ஒரு தொடக்கம் என்று உணரவில்லையா? அது அவருடைய தொடக்கம், ஏனென்றால் எல்லா தொடக்கங்களும் அதனளவில் அழகானவை. இறைவனே பூரணமானவன் என்றால், அதற்கு முன் வருவபவை எல்லாம் அதிலிருந்து சிறிதேனும் குறைபட்டவையாக தானே இருக்க முடியும்? இறுதியில் இவை அனைத்தையும் உள்ளடக்கி வருபவன் என்பதால் அவருடைய வரவு கடைசியில் தானே நிகழ முடியும்? நாம் தேடிக் கொண்டிருப்பவன் ஏற்கனவே இங்கிருக்கிறான் என்றால் நமது இருத்தலுக்குத் தான் பொருள் என்ன?

வண்டுகள் தேனைச் சேகரிப்பதைப் போல நாமும் இங்கிருப்பவைகளிலிருந்து இனிமையானதை சேகரித்து அவரை உருவாக்குவோம். முக்கியமற்ற, அற்பமானவைகளிலிருந்து (அன்பினால் உருவாக்கப்பட்டால்) நாம் தொடங்கி, உழைத்து, அதன் பிறகு கிடைக்கும் இளைப்பாறல் எல்லாவற்றையும் கொண்டு, அமைதியுடனும், ஏகாந்தத்தின் மகிழ்வுடனும் நாம் அவரை உருவாக்குவோம். அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காமல், தனியனாக, நாம் கண்களால் வருங்காலத்தில் காண இயலாத இறைவனை உருவாக்க ஆரம்பிப்போம்; தம் வாழ்நாளில் கண் கொண்டு காணாமல் நம்மை இன்று உருவாக்கிய முன்னோர்களைப் போல. இருந்தும், பல காலங்களுக்கு முன் இறந்து போன முன்னோர்கள், நம் விதியின் பாரமாக, முனங்கும் குருதியாக, நம்முள்ளே காலத்தின் ஆழங்களில் இருந்து எழுந்து வரும் குறிப்புணர்வாக, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

என்றோ ஒரு நாள் அவருக்குளே உறைந்திருப்பீர்கள் என நீங்கள் நம்பிக்கை கொள்வதை வேண்டாம் என எது தடுக்கிறது?

அன்புள்ள, திரு கப்பஸ், கிறுஸ்துமஸை இந்த பக்தியுடன் கொண்டாடுங்கள். நீங்கள் அடையும் துயரம் அவருக்கு தேவை என்றிருக்கலாம்; நிலைமாற்றத்தின் இந்த காலங்களில் தான் உங்களுக்குள்ளே உள்ள அனைத்தும் அவரை நோக்கி திரும்பியிருக்கலாம், எப்படி பிள்ளைப் பருவங்களில் இருந்ததோ அது போல. பொறுமையுடனும், வெறுப்பற்றும் இருக்கவும். குறைந்தபட்சம் நாம் செய்யக் கூடியது, அவர் நம்முள் உருவாவதை – பூமி வசந்த காலம் வர நினைக்கையில் அது நடந்தேற சிரமப்படுத்துவதை விட அதிகமாக – கடினமாக்காமல் இருப்பதே.

மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் இருங்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5

விவாதச் சூழல்

நண்பர் முத்துகிருஷ்ணனின் பதிவு.

நண்பர் ஒருவருடன் காலை நடையின் போது இலக்கியம் குறித்தும், எழுத்தாளர் ஒருவரின் கட்டுரை குறித்தும் விவாதித்துக் கொண்டிருந்தேன். அந்த விவாதம் தீர்க்கமான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கவில்லை. தினசரி வாழ்க்கையை குறித்து ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றத்தின் இடையே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த தலைப்பு உள்ளே நுழைந்து விட்டது. முடிவில் அது சுவாரசியமான விவாதமாக அமைந்தது. அதன் தலைப்பை தோராயமாக இப்படி வைத்துக் கொள்ளலாம் – “மனிதனுக்கு கலை, இலக்கியம் போன்ற துறைகளில் ஆர்வம் பிறப்பிலேயே எழுகிறதா அல்லது தொடர் பயிற்சியின் விளைவாக உருவாவதா?” எங்களுடைய நிலைப்பாடு அந்த கட்டுரையுடன் உடன்பட்டும், எதிர்த்தும் இருக்கவில்லை. இங்கு விவாதத்திற்கு உள்ளானது அக்கட்டுரையை குறித்த எங்களுடைய நுண்புரிதல்கள் மட்டுமே.

விவாதத்தின் முடிவு என்ன, அப்போது பகிரப்பட்ட கருத்துக்கள் என்ன என்பதை இங்கு விளக்க முற்படவில்லை. எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்து அதைப் பற்றி – விவாதச் சூழலைப் பற்றி – யோசித்துப் பார்க்கையில் சில விஷயங்கள் புலப்பட்டன. அவைகளே இங்கு பகிரப்பட உள்ளன.

முதலாவதாக, நல்ல விவாத சூழல் உருவாவதற்கு பங்கெடுப்பவர்களின் இடையே பொதுவான கூறுகள் இருத்தல் வேண்டும். எங்களுக்கிடையில் அன்று இருந்தது இரு பொதுக் கூறுகள். ஒன்று – நாங்கள் இருவரும் நன்கு பரிச்சயமானவர்கள். அந்த காலையல்ல நாங்கள் முதலில் சந்தித்துக் கொள்வதோ அல்லது மற்றவரை அறிந்து கொள்வதோ. இரண்டு – பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையை நாங்கள் முன்னரே வாசித்திருந்தோம். விவாதத்தின் தளம் குறித்து பேசுபவர் அனைவரும் (ஒரு வாக்கியம் எதிர்வினை ஆற்றுபவர் கூட) சுயமாக அறிந்திருக்க வேண்டும்.

இரண்டாவதாக, விவாதத் தளத்தை குறித்து அனைவருக்கும் தோராயமாக சம அளவில் உள்ளார்ந்த ஆர்வம் இருக்க வேண்டும். (தீவிரமற்ற சமமான ஈடுபாடுதான் வெற்று அரட்டைகளை மிக ஆர்வமுடையதாக்குகிறதோ எனத் தோன்றுகிறது) . வெறும் கோட்பாடு சார்ந்த சார்பு நிலை நலம் பயக்கும் விவாதத் தளத்தை உருவாக்கும் என்ற கூற்றின் மேல் எனக்கு ஐயமுண்டு. யதார்த்த வாழ்வில் கேள்விகளை உருவாக்கி, நம்மை சலனப்படுத்திய விஷயங்கள் விவாதமாக வருகையில், அங்கே ‘விளங்கிக் கொள்ளல்’ என்ற தேவை ‘என் நிலைப்பாட்டை வலியுறுத்தல்’ என்ற தேவையை மீறி நிற்கிறது. அதன் முக்கிய பயன், ஒருவர் மற்றொருவரின் வாதத்தை செவிமடுத்துக் கேட்டுக் கொள்கிறார். இங்கு ‘கேட்டல்’ என்பது வெறுமே பேசுவதற்கு கொடுக்கப்படும் அவகாசம் என்பதற்கு மேலாக, மற்றவர் பேசுகையில் நம் மனதில் கோட்டைகளை எழுப்பி, அகழிகளை நிரப்பி அவருடைய கருத்துக்கள் உள்ளே நுழையும் முன்னரே கொல்லாமல் விடுவது என்ற பொருளில் எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாவதாக, ஒரு விவாதத்தின் போக்கு கடைசிவரை திசை திரும்பாமல் இருத்தல் வேண்டும். லேசர் ஒளியைப் போன்ற கூர்மையை கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் தரையில் சிந்திய பாதரசம் போல் சிதறிவிடக் கூடாது. மட்டுறுத்தல் என்பதன் தேவையை அங்கு உணர முடிகிறது. நாங்கள் இருவர் மட்டுமே இருந்ததாலோ என்னவோ விவாதம் வெகுவாக திசை திரும்பவில்லை. ஆனால் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கை உயருகையில் நிச்சயமாக ‘விவாத அதிகாரியின்’ அவசியம் வருகிறது. யோசிக்கையில் மட்டுறுத்தல் என்பது இரு பகுதிகளைக் கொண்டது. ஒன்று – விவாதத்தின் நகர்வு அதற்கு மறைமுகமாகக் கூட தொடர்பில்லாத விஷயங்களால் திசை மாறாமல் கண்காணித்தல் (தனி மனித விமர்சனம், தேவையற்ற உதாரணங்கள், மட்டு மீறிய உணர்ச்சி இன்ன பிற). இரண்டு – இது விவாதத்தின் நெடுக வர வேண்டிய ஒன்று. பொதுவாக, ஒரு விவாத தலைப்பிற்குள் பல சிறு தலைப்புகள் பகிரப்படும். ஒரு பெரும் போரின் உள்ளே வெவ்வேறு படைகளுக்கிடையில், வெவ்வேறு இடங்களில் நடக்கும் சிறு சண்டைகள் போல. அந்த போரின் முடிவு என்பது சிறு பூசல்களின் வெற்றி தோல்வியின் கூட்டலே. மட்டுறுத்துபவர் இந்த சிறிய தலைப்புகளை முடித்து வைக்க வேண்டும். உதிரி நூல்களாக விவாதங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கக் கூடாது. குறைந்தபட்சம் முடிக்க முடியாத சிறு திரிகளை விவாதப் போக்கில் உருவான அடுத்த திரியுடன் இணைக்க செய்யலாம். காரணம், சிறு வாதங்களுக்காக சொல்லப்பட்ட கருத்துக்களும், எதிர்கருத்துக்களும், மனதில் உருவான உணர்வுகளும் முடிக்கப் படாமல் இருந்தால் அதுவும் ஒரு விதமான திசை திருப்பலே. நம்மை அறியாமலேயே விவாதத்தின் அடுத்த கட்டங்களில் அவை மனதிற்குள் பாரமாகி விடுகின்றன.

இறுதியாக பங்குபெறுபவர்கள் செய்ய வேண்டியது – ஒருவர் தன் கருத்தை கூறி முடிக்கும் வரை காத்திருந்து, பிறகு தனது ஆதரவையோ, எதிர்ப்பையோ, மாறுபட்ட கண்ணோட்டத்தையோ தெரிவித்தல் வேண்டும். ‘நீங்க சொல்றத ஒத்துக்குறேன்’ என்பதும் ‘அதெப்படீங்க நீங்க சொல்றது?’ என்பதும் விவாதத்தின் தரத்தை ஒரு போலவே தாழ்த்தி விடுகிறது என எனக்குத் தோன்றுகிறது. எங்களுடைய விவாதத்தில் எவரும் தன்னுடைய தரப்பை ஒவ்வொரு முறையும் மிக அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசவில்லை. தன் கருத்துக்களை அதிக நேரம் எடுத்து விலாவாரியாக விளக்குவதால் ஏற்படும் தாக்கம் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை.

நான் அன்று காலைப் பொழுதில் பேசியதை அசை போடுகையில் ஒன்று புலப்பட்டது. என் தரப்பை முன் வைப்பதற்கும், நண்பரின் வாதங்களுக்கு எதிர்வினையாற்றுவதற்கும் உபயோகப்படுத்திய உதாரணங்கள், அந்த கணத்தில் உருக்கொண்டவை. அவை வேர் கொண்டிருந்த பின்புலத் தகவல்களை இந்த விவாதத்தின் கண்ணோட்டத்தில் முதலில் வாசிக்கவில்லை. எங்களுடைய அறிதலின் பரப்பு விரிந்தால் அவ்விவாதம் மேலும் செறிவாகக் கூடிய சாத்தியம் உள்ளது என்பது தெளிவாகிறது. மேலும், அந்த விவாதத்தையோ அல்லது அதன் சாரமான கேள்வியை முன்வைத்தோ தகவல்களை தெரிந்து கொண்டு பேசினால் இன்னும் பல திறப்புகளை அடைய முடியும் எனத் தோன்றுகிறது. (குறைந்த பட்சம் அந்தக் கட்டுரையின் பிரதி கையில் இருந்திருந்தால் கூட போதுமானது). ஒரு விவாதம் என்றுமே முடிவடைவதில்லை. விவாதிப்பவர் நகர்ந்து விட்டாலும் பரஸ்பரம் மனதிற்குள் கொளுத்தப்பட்ட திரி மேலதிகத் தகவல்களையும், அனுபவங்களையும், கால மாற்றங்களையும் பற்றிக் கொண்டு சதா மனதிற்குள் எரிந்து கொண்டேதான் இருக்கும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 5

ரோம்,
அக்டோபர் 29, 1903

உங்களுடைய கடிதம் ஆகஸ்ட் 29 அன்று ஃப்ளோரன்ஸ் நகரத்தில் என்னை வந்தடைந்தது; அதற்கு மிகவும் தாமதமாக – இரண்டு மாதங்கள் கழித்து – பதிலளிக்கிறேன். என்னுடைய மெத்தனத்தை மன்னிக்கவும். நான் பயணம் செல்லுகையில் கடிதம் எழுதுவதை விரும்புவதில்லை. ஏனென்றால் கடிதம் எழுதுவதற்கு மிக அத்தியாவசியமான உபகரணங்களுடன் சேர்த்து அமைதியும், ஏகாந்தமும், மிகவும் பரிச்சயமற்ற நேரமும் எனக்கு தேவைபடுகிறது.

நாங்கள் ஆறு வாரங்களுக்கு முன், ஆட்களற்ற, வெக்கை மிகுந்த ரோம் நகரத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த சூழ்நிலையில், தங்குவதற்கு ஏற்ற இடம் கிடைப்பதற்க்கு உண்டான பிரச்சனைகளால், எங்களை சூழ்ந்திருந்த அமைதியின்மை முடிவற்றது போல தோன்றியது. அதோடு, ரோம் நகரம் ( அதோடு பழக்கப்படுத்திக் கொள்ளாதவருக்கு) ஒருவரை ஆரம்ப நாட்களில் துயரத்தால் கட்டிப் போட்டுவிடுகிறது. அதற்கு காரணம் இந்நகரத்தின் ஜீவனற்ற அருங்காட்சியகத்தை ஒத்த சூழல்; கடந்த காலங்களின் செல்வ செழிப்புகளை வலிந்து முன்னே கொண்டு வந்து (கடந்த கால செழிப்புகளை நம்பி தற்காலத்தின் ஒரு சிறு பகுதி வாழ்ந்து வருகிறது), கல்விமான்களாலும், கலை ஆர்வலர்களாலும் மட்டுமீறிய அளவிற்கு அவற்றின் மதிப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களின் நகலாக நடந்து கொள்ளும் இத்தாலியின் சராசரி சுற்றுலாப் பயணியின் பார்ப்பவை எல்லாமே மற்றொரு காலகட்டத்தின், நம்மைச் சாராத மற்றொரு வாழ்க்கை சூழலின் தற்செயலாக எஞ்சியுள்ள சிதைந்து, அழிந்து கொண்டிருக்கும் பொருட்களே; இறுதியில், சில வாரங்கள் மன எதிர்ப்பு கழிந்த பின் ஒருவர் இந்நகரில் மிச்சமிருக்கும் சிறு குழப்பத்துடன் சமநிலையை அடைய முடியும். பிறகு தனக்குத் தானே ஒருவர் சொல்லிக் கொள்வது: “மற்ற இடங்களை விட இந்த இடம் கூடுதல் அழகுடையது அல்ல. தலைமுறைகளாக போற்றப்பட்டும், மிகச் சிறந்த பணியாளர்களின் கைகள் கொண்டு செப்பனிடப்பட்டு பாதுகாக்கப்படும் இப்பொருட்களில் மதிப்போ, அழகோ, உணர்வோ எதுவும் இல்லை, இல்லவே இல்லை”.

ஆனால் இங்கும் அழகுள்ளது ஏனென்றால் எல்லா இடங்களுமே மிகுதியான அழகு கொண்டவை. முடிவில்லா உயிர்த்துடிப்புடைய நீர் இங்கே சிறு புராதன கால்வாய்களினூடே ஓடி, பெரு நகரை வந்தடைந்து, அந்நகரின் பல சதுக்கங்களில் வெள்ளைக் கற்களால் அமைக்கப்பட்ட வட்டில்களில் நடனமாடிக் கொண்டிருக்கிறது. அதே நீர் தன்னையே விரித்து அகலமான பல குளங்களில் பகல் முழுவதும் முணமுணுத்துக் கொண்டேயிருக்கிறது; நட்சத்திரங்கள் நிறைந்த, மென்காற்று வீசும் பரந்த இரவு முணுமுணுப்பின் ஓசையை கூடுதலாக உயர்த்துகிறது. இங்கு தோட்டங்கள் உள்ளன, இருபுறமும் வரிசையான மரங்கள் உடைய சாலைகளை மறக்க இயலாது மற்றும் மைக்கேலேஞ்சலோ வடிவமைத்த படிகட்டுகள், கீழ்நோக்கிச் செல்லும் அருவியைப் போன்ற உருவமைப்பில் உருவாக்கப்பட்ட படிக்கட்டுகள்; அவை இறங்குகையில் அலைகளிலிருந்து படிகள் உருவாகி வரும். இக்காட்சிகளின் வழியே ஒருவர் தன்னை மறுபடியும் திரட்டிக் கொண்டு, இறுகப் பிடித்து பாரமேற்றும் மற்றவைகளின் ஓயாத இரைச்சலில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இயலும். நாம் அன்புகொள்ளக் கூடிய நித்தியதன்மையையும், பங்கேற்க கூடிய தனிமையையும் தன்னகத்தே கொண்டுள்ள வெகு சில பொருட்களை இங்கே ஒருவர் மெதுவாக இனம் காண கற்றுக் கொள்வார்.

நான் இன்னும் நகரத்தில் தான் வசிக்கிறேன், காபிடாலில், பண்டைய ரோமின் கலைகளிலிருந்து நம்மிடம் வந்துள்ள மிக அழகான குதிரை வீரனின் சிலை இருக்கும் இடத்திற்கு அருகில்; அது மார்க்கஸ் ஆரெலியஸ்யின் சிலை. ஆனால் சில வாரங்களில் இந்நகரின் இரைச்சல்களிலும், சம்பவங்களிலும் இருந்து ஒளிந்து பெரிய சோலை ஒன்றின் உள்ளே அமைந்திருக்கும் அமைதி கொண்ட, பழைய கோடைவீடு ஒன்றிற்கு என் வசிப்பை மாற்றி விடுவேன். பனிக்காலம் முழுவதும் அங்கே இருப்பேன்; அந்த தனிமையை அனுபவித்து, மகிழ்ச்சிகரமான வேலை நிரம்பிய மணிநேரங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கு இன்னும் இயல்பாக இருப்பேன்; உங்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதுவேன், அதில் நீங்கள் அனுப்பிய கடிதத்தை குறித்து நான் சொல்ல வேண்டிய சிலவற்றை கூறுவேன். இப்போது உங்களிடம் ஒன்றை கூற வேண்டும் (முன்னரே அதை சொல்லாமல் இருந்தது என் தவறு தான்); நீங்கள் அனுப்பிய புத்தகம் (அதில் உங்களுடைய படைப்புகள் சிலவும் உள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்) இன்னும் வந்து சேரவில்லை. உங்களிடம் அவை வார்ப்ஸ்விட் நகரத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதா? (அவர்கள் வெளிதேசங்களுக்கு பொதிகளை மேலனுப்புவதில்லை). இருப்பதில் அது தான் நம்பிக்கை மிகுந்த சாத்தியம், அது உறுதிபட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். நீங்கள் அனுப்பிய பொதி தொலைந்து போகவில்லை என எதிர்பார்க்கிறேன் – துரதிருஷ்டவசமாக இத்தாலியின் அஞ்சல் துறை இருக்கும் நிலையில், அப்படி நடந்திருந்தாலும் அதில் அசாதாரணம் ஏதுமில்லை.

அந்த புத்தகம் என்னை வந்தடைந்திருந்தால் மகிழ்ந்திருப்பேன் (உங்களுடமிருந்து வரும் எதுவும் எனக்கும் மகிழ்ச்சியே); அதைப் போலவே இந்த இடப்பட்ட காலத்தில் உங்களிடமிருந்து உருவான கவிதைகளும். நான் எப்பொழுதும் ( நான் வைத்துக் கொள்வதற்காக அனுப்பும்) உங்கள் கவிதைகளை திரும்பத் திரும்ப வாசித்து, அவற்றை உள்ளார்ந்து அனுபவிக்கிறேன்.
நல்வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: கடிதம் 1, 2, 3, 4

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 4

வார்ப்ஸ்விட், ப்ரீமென் நகரின் அருகில்,
ஜூலை 16, 1903

சுமார், பத்து நாட்களுக்கு முன் பாரீஸிலிருந்து, தளர்ச்சியும் உடல் நலக்குறைவுடனும், கிளம்பி இந்த அற்புதமான வட சமவெளிப் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியின் விசாலமும், அமைதியும், வானமும் என்னை மறுபடியும் சுகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நீண்ட மழை காலத்தின் நடுவினில் வந்து சேர்ந்தேன்; அமைதியின்றி ஓலமிட்டுக் கொண்டிருந்த நிலவெளி இன்று தான் முதல் முறையாக அடங்கியது. பிரகாசமான இக்கணத்தில் என் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன், ஐயா.

என் அன்பிற்குரிய திரு. கப்பஸ்: உங்கள் கடிதமொன்று வெகு காலமாக பதிலளிக்கப்படாமல் என்னிடம் உள்ளது; நான் அதை மறந்து விட்டேன் என்பதனால் அல்ல. மாறாக பல கடிதங்களின் மத்தியில் அதைக் காணும் போதெல்லாம் மறுபடியும் வாசிக்க வைக்கும் கடிதம் அது. அக்கடிதத்தில் நீங்கள் எனக்கு மிக அருகில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். அது நீங்கள் மே மாதம் இரண்டாம் நாள் அனுப்பிய கடிதம்; நிச்சயமாக உங்களுக்கு அக்கடிதம் நினைவில் இருக்கும் என நம்புகிறேன். இத்தருணத்தில், தொலைதூரத்தில் உள்ள இவ்விடத்தின் அமைதியில் அக்கடிதத்தை வாசிக்கையில், வாழ்க்கையை நோக்கிய உங்களுடைய இனிமையான பதட்டம் என் மனதை உருக்குகிறது – பாரீஸில் இருந்ததை விட மேலாகவே, ஏனென்றால் அங்கு அளவிற்கு அதிகமான கூச்சலால், சகலமும் எதிரொலித்து தேய்ந்து மாறிப் போய்விடுகிறது. இங்கே, கடல் காற்று அசைந்து செல்லும் மிகப்பெரிய நிலவெளியால் சூழப்பட்ட இடத்தில், எனக்கு தோன்றுவது என்னவென்றால்: ஆழங்களில் தமக்கென ஒரு வாழ்க்கையை கொண்டிருக்கும் உங்களுடைய கேள்விகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பதிலளிக்கக் கூடியவர் எங்கேயும் இல்லை. நினைத்ததை தெளிவாக உரைக்கும் திறமை கொண்டவர் கூட உங்களுக்கு உதவி செய்ய இயலாது, ஏனென்றால் அவ்வார்த்தைகள் சுட்டுவது சொல்லிவிட முடியாத, நுண்மையான ஒன்றை பற்றியே. இருந்தாலும் கூட, இந்த தருணத்தில் என் கண்களின் முன்னால் உள்ள காட்சியைப் போன்ற விஷயங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வைத்தால், உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்காமலேயே இருந்து விடாது என நான் எண்ணுகிறேன். இயற்கையின் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், அதில் யாரும் கவனிக்காமல் விடும் சிறு விஷயங்கள் திடீரென்று அளவிட முடியாத பிரம்மாண்டத்தை அடைந்து விடும்; எளியவைகளின் மீது நீங்கள் அன்பு கொள்வீர்கள் என்றால்; அந்த அன்பை சேவகம் செய்பவரைப் போல, ஒரு ஏழையின் நம்பிக்கையை அடைவதற்கு என்பதைப் போல; மிகவும் அடக்கத்துடன் பிரயோகிப்பீர்கள் என்றால்; கூடுதல் ஒத்திசைவுடனும், சமரசத்தோடும் சகல காரியங்களும் உங்களுக்கு எளிதாகிவிடும்; உங்களுடைய விழிப்பு நிலையில் அப்படி தோன்றாவிட்டாலும், ஆழ் மனதின் அறிவில் தெரிந்துவிடும்.

நீங்கள் மிகவும் இளையவர், எல்லா வகையான ஆரம்பங்களுக்கும் முன்னால் நின்று கொண்டிருப்பவர்; உங்களிடம் என்னால் இயன்றவரை வேண்டிக் கொள்வது இது தான் – இங்கள் இதயத்தில் தீர்க்கப் படாதவைகளுடன் பொறுமையோடு இருங்கள் மற்றும் அக்கேள்விகளை பூட்டிய அறைகளைப் போலவோ அல்லது வேற்று மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களைப் போலவோ நேசிக்க முயற்சி செய்யுங்கள். பதில்களை தேடாதீர்கள், உங்களுக்கு அவை கொடுக்கப்பட மாட்டாது ஏனென்றால் உங்களால் அவற்றை வாழ்ந்து அறிய முடியாது. எல்லாவற்றையும் வாழ்ந்து உணர வேண்டும் என்பதே முக்கியம். இப்போது உங்கள் கேள்விகளை கொண்டு வாழுங்கள். எதிர்காலத்தில் ஒரு நாள், நீங்கள் அறியாமலேயே படிப்படியாக வாழ்ந்து உங்கள் விடையை அடையலாம். நீங்கள் படைத்தலுக்கும், உருவாக்குதலுக்கும் உரிய உள்ளாற்றலை , ஆசீர்வதிக்கப்பட்ட, தூய வாழ்க்கை முறையாக கொண்டிருக்கலாம். உங்களை அதற்கு பழக்கிக் கொள்ளுங்கள் – ஆனால் நேர்கொள்வது அத்தனையையும் எடுத்துக் கொள்ளுங்கள்; பெரும் நம்பிக்கையோடு, உங்கள் அகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சுயவிருப்பத்தின் மூலம் உங்களிடம் அவை வரும் வரை, எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளுங்கள்; எதன் மீதும் வெறுப்படையாதீர்கள். ஆமாம், காமம் கடினமானது. ஆனால் நம் பொறுப்பிலாக்கப்பட்டுள்ள எல்லா கடமைகளும் கடினமானவையே; அநேகமாக முக்கியம் வாய்ந்த விஷயங்கள் எல்லாமே கடினமானது தான்; எல்லா விஷயங்களும் முக்கியமானது. இதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய இயல்பையும், திறனையும் கொண்டு, உங்களுடைய அனுபவங்களையும், பால்யபருவத்தையும், அதன் உறுதியையும் வைத்து, காமத்தின் பால் உங்களுக்கான தனிப்பட்ட உறவை (பாரம்பரியமும், மரபும் உருவாக்கும் தாக்கம் இல்லாமல்) உருவாக்கிக் கொண்டால், அதில் உங்களை தொலைத்து விடுவீர்களோ என்ற அச்சமும், உங்களுடைய அரிதான உடைமைகளை இழக்க நேரிடுமோ என்ற பதட்டமும் கொள்ளத் தேவையில்லை.

உடலின்பம் என்பது புலனின்பமே, ஒன்றை காண்பதற்கும் அல்லது கனிந்த பழம் நாக்கினில் உருவாக்கும் உணர்வுக்கும் அதற்கும் வேறுபாடு கிடையாது. அது நமக்கு அளிக்கப்பட்ட ஒரு சிறந்த, முடிவற்ற அறிதலாகும். இவ்வுலகைப் பற்றிய முழுமையான, ஒளிரும் அறிவாகும். அதை நாம் ஏற்றுக் கொள்வது தவறல்ல; தவறு எங்கேயென்றால், அவ்வறிவை மனிதர்கள் விரயப்படுத்தி, தளர்ந்து போகும் தருணங்களில் அதை கிளர்ச்சியூட்டுவதற்காகவும் தம்மையே திசை திருப்புவதற்காகவும் உபயோகப்படுத்துகையில் தான். மனிதர்கள் உண்பதைக் கூட வேறு விஷயமாக மாற்றி விட்டார்கள்: தேவை ஒரு பக்கமும், மிகுதி மறுபக்கமுமாக; இந்த தேவையை குறித்த எண்ணத்தின் தெளிவை கலங்கலாக்கி விட்டார்கள்; அதைப் போலவே வாழ்க்கை தன்னையே புதிப்பித்துக் கொள்ளும் எல்லா ஆழமான, எளிய தேவைகளையும் கலங்கலாக்கி விட்டார்கள். ஆனால் தனிமனிதன் அத்தேவைகளை தெளிவுபடுத்திக் கொண்டு அதற்கேற்ப வாழ முடியும் (யாரையும் சார்ந்திருக்காத, தனி மனிதன் மட்டுமே). சகல மிருகங்களிலும், தாவரங்களிலும் காணும் அழகானது, நிலைத்திருக்கும் அன்பும், ஏக்கமும் தான் என்பதை நினைவில் கொள்வான். தாவரங்களும், மிருகங்களும் பொறுமையுடனும், சம்மதத்துடனும் ஒன்று சேர்ந்து, இனவிருத்தி அடைந்து வளர்வது உடலின்பத்தினாலோ, உடல்வலி கொண்டோ அல்லாமல் அதைவிட உயர்ந்த – சுகத்தையும், வலியையும் விட சிறந்த, விருப்பாற்றலையும், எதிர்த்து தாங்கும் சக்தியையும் விட வல்லமை கொண்ட – ஒரு தேவையை பூர்த்தி செய்வதற்கே என்பதைக் காண்பான். சிறு விஷயங்களில் கூட நிரம்பியிருக்கும் இந்த மர்மத்தை, மனிதர்கள் பணிவுடன் ஏற்றுக் கொண்டு, இன்னும் சிரத்தையுடன் தாங்கி, அனுபவித்து, அதன் பாரத்தை உணர்ந்தால் சிறப்பாக இருக்கும். அத்தேவையின் இன்னொரு முகமான, தங்களால் உருவாக்கவல்ல பயனைக் குறித்து மரியாதைக் கொண்டால், நன்றாக இருக்கும். மனிதர்களினால் உண்டாகும் பயன் உடல் கொண்டோ மனம் கொண்டோ ஏற்படலாம், ஏனென்றால் அவை இரண்டும் ஒரே தேவையின் இரு வேறு வெளிப்பாடுகளே. மனதில் உருவாக்கப்படும் படைப்பும் உடல் வழியே தான் ஆரம்பமாகிறது. அதுவும் உடல் உணரும் இன்பத்தின் இயல்பை கொண்டது ஆனால் அதைவிட மிருதுவானதும், அதிக இன்பமுடையதும், பலமுறை திரும்ப உணரக்கூடியதும் ஆகும்.

படைப்பவனாகவும், வடிவம் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் ஈர்ப்பு – அது புறவடிவில் இவ்வுலகத்தில் தொடர்ந்து நடந்தேறுவதாலும், எல்லா விலங்குகளும், பொருட்களும் அதை ஆயிரம் மடங்கு நம்மிடம் ஒப்புதல் அளிப்பதாலும் உருவானது. அந்த இன்பம் சந்ததிகள் வழியாக கோடிக்கணக்கான உயிர்கள் கருவாகி, உயிர்பெற்ற நினைவுகளை கொண்டிருப்பதால் தான் விவரிக்கமுடியாத அளவிற்கு நாம் அழகுடனும், வளமுடனும் அவற்றை உணர்கிறோம். ஒரு படைப்பூக்கம் கொண்ட எண்ணம் மறக்கப்பட்ட ஆயிரம் காதல் இரவுகளை உயிர்ப்பித்து அவற்றை இன்னும் மேன்மைபடுத்தக் கூடியது. இரவு பொழுதுகளில் ஒன்று கூடி, பிணைந்து இன்பத்தில் திளைப்பவர்கள், எதிர்கால கவிஞர்களின் வார்த்தைகளற்ற பரவசத்தை உரைக்கும் பாடல்களுக்கு தித்திப்பையும், ஆழத்தையும், வலிமையையும் சேகரிக்கும் செயலை புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதன் வழியே அவர்கள் எதிர்காலத்தை அழைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் வெறும் உடல்களை மட்டும் தழுவிக் கொண்டார்கள் என்றாலும் கூட, எதிர்காலம் வந்தே தீரும், ஒரு புதிய மனிதன் உருவாகிறான், இங்கு நடந்த சிறு விபத்தின் வழியே ஒரு புது விதி விழித்தெழுகிறது, அதன் வழியே விதை ஒன்று தன்னை வரவேற்கும் முட்டை ஒன்றை அடைகிறது. வெளிப்பரப்புகளை கண்டு குழம்பி விடாதீர்கள்; ஆழ் நிலைகளில் எல்லாம் ஒரு விதியாக மாறிவிடுகிறது. இந்த பிரபஞ்ச மர்மத்தை பொய்யாகவும், தவறாகவும் வாழ்பவர்கள் (நிறைய மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்) அதை இழக்கிறார்கள். ஆனால் திறக்கப்படாத கடிதத்தைப் போல அதை எதிர்காலத்திற்கு அனுப்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களையும், பெயர்களையும் கண்டு குழம்பி விடாதீர்கள். அவற்றிற்கு எல்லாம் மேலே தாய்மையுணர்வு, பகிர்ந்து கொள்வதற்கான ஏக்கமாக உருமாறி இருக்கலாம். தன்னையே முன்னுணர்ந்து அதற்காக தயார்படுத்திக் கொண்டு, பதட்டத்துடனும், ஏக்கத்துடனும் காத்திருக்கும் தாய்மையுணர்வே ஒரு பெண்ணின் (நீங்கள் அழகாக குறிப்பிட்டதைப் போல – “இன்னும் எதையும் அடையாத”) அழகு. தாயின் அழகு அவள் காட்டும் தாய்மையுணர்வு; வயதான முதிர்ந்தவளின் அழகு அதன் நினைவுகள். எனக்கு தோன்றுவது; ஆணின் உள்ளும் உடலாலும், மனத்தாலும் தாய்மையுணர்வு உண்டு. அவனுள்ளே உள்ள ஆழத்தின் முழுமையிலிருந்து உருவாக்கும் பொழுது ; அவன் வழியே உருவாகும் உயிர் கூட அவன் பிரசவிப்பதைப் போன்றது தான். உலகம் புரிந்து வைத்திருப்பதைக் காட்டிலும் இரு பாலரும் ஒத்த இயல்புடையவர்கள் என நான் நினைக்கிறேன். இவ்வுலகின் புதுப்பிறப்பு நிகழ்வதற்கு ஆணும், பெண்ணும் தம்முள் உள்ள பிழையான உணர்வுகளை களைந்து, ஒருவரையொருவர் எதிர்பதமாக நாடாமல், சகோதரத்துவத்துடன், நட்புணர்ச்சியுடன் சகமனிதர்களாக இணைந்து- தம்மீது ஏற்றப்பட்டிருக்கும் காமம் என்ற பாரத்தை பொறுமையுடனும், முனைப்புடனும் தாங்க வேண்டும்.

என்றோ ஒருநாள் பல மனிதர்களுக்கு சாத்தியப்படக் கூடியதை, தனி மனிதன் தன்னை தயார்படுத்திக் கொண்டு, பெரிய தவறுகளை நிகழ்த்தாமல், இன்றே அடைந்து விடலாம். ஆதலால், உங்கள் தனிமையை நேசித்து, அது தரும் வலியுடன் பாட முயற்சி செய்யுங்கள். எழுதுங்கள், அது அருகிலிருப்பவரையும் தூரத்தில் வைத்து விடும். உங்களுக்கு அருகிலிருப்பதெல்லாம் வெகு தொலைவில் சென்றுவிட்டது என்றால் உங்கள் மனப்பரப்பின் விசாலம் நட்சத்திரங்களுக்கு இடையில் மிகவும் பெரிதாக ஆகிவிட்டது எனலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு சந்தோஷம் அடையுங்கள்; அதில் மற்ற எவரையும் கூட அழைத்து செல்ல இயலாது, அதனால் பின்தங்கியவர்களின் மீது கருணையோடு இருங்கள்; அவர்களின் முன் அமைதியாகவும், நம்பிக்கையுடனும் நடந்து கொள்ளுங்கள்; அவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத உங்களுடைய ஐயங்களையும், நம்பிக்கைகளையும், ஆனந்தத்தையும் சொல்லி அவர்களை பயமுறுத்தி, அவதிக்குள்ளாக்காதீர்கள். உங்களுக்கிடையே பொதுவான ஒன்றை கண்டு கொள்ளுங்கள்; அவர்களைக் காணும் பொழுது அவர்களுடைய பார்வையில் இவ்வாழ்க்கையின் மேல் அன்பு கொள்ளுங்கள். வயது முதிர்ந்தவர்களிடம் கூடதலாக விட்டுக் கொடுங்கள் ஏனென்றால் நீங்கள் விரும்பும் தனிமையை கண்டு அவர்கள் அஞ்சுவார்கள். முடிந்தவரை பெற்றவர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் உறவுப் பிரச்சனைகளுக்கான காரணிகளை தவிர்த்து விடுங்கள். அது குழந்தைகளின் ஆற்றலையும், பெரியவர்களின் அன்பையும் வீணடித்து விடுகிறது. அவர்களிடம் அறிவுரை கேட்காதீர்கள்; அவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்காதீர்கள். ஆனால் அவர்களுக்குளே உங்களுக்காக பரம்பரை சொத்தைப் போல சேகரித்து வைக்கப்பட்டுள்ள அன்பின் மீது நம்பிக்கை வைத்திருங்கள். அந்த அன்பில் உள்ள வல்லமையும், ஆசீர்வாதத்தையும் கொண்டு அதனுள்ளேயே வேண்டிய தூரம் வரை பயணிக்க இயலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை முற்றிலும் சுதந்திர மனிதனாக மாற்றப் போகும் தொழில் ஒன்றில் நீங்கள் சேரப் போவது குறித்து மகிழ்ச்சி. இந்த வேலை உங்களுடைய அகவாழ்க்கையை முடக்குகிறதா என பொறுமையோடு கண்டறியவும். என்னைப் பொறுத்தவரை உங்களுடைய தொழில் கடினமானதும், உழைப்பை அதிகம் கோரக்கூடியதும் ஆகும். மிக அதிகமான மரபொழுங்குகளை கடைபிடிக்க வேண்டி வருவதால் அந்த செயல்களைக் குறித்த தனிப்பட்ட உள்ளார்ந்த பார்வைகளை செலுத்த இயலாது. ஆனால் இத்தரப்பட்ட பரிச்சயமற்ற சூழ்நிலைகளிலும் கூட உங்களுடைய தனிமை ஒரு பக்கபலமாக, உறைவிடமாக, சரியான பாதையை காட்டுவதாக இருக்கும் என நினைக்கிறேன்.

என் நல்வாழ்த்துக்கள் உங்களுடன் எப்போதும் இருக்கும், அதைப் போலவே என் நம்பிக்கைகளும் உங்களுடன் இருக்கும்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புள்ள சுட்டிகள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 3

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 23, 1903

ஈஸ்டர் திருநாளுக்காக அனுப்பிய கடிதம் மூலம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தீர்கள். ஏனென்றால், அக்கடிதம் உங்களை பற்றிய நல்ல செய்திகளை கூறியது மற்றும் ஜேகப்ஸனின் உன்னதமான கலையை பற்றி நீங்கள் கூறிய விதம், உங்கள் வாழ்க்கையையும் அதன் கேள்விகளையும் இந்த செல்வத்தை நோக்கி நான் தவறாக வழிகாட்டவில்லை என உணர்த்தியது.

இனி ‘நீல்ஸ் லைன்’நாவல் அலங்காரமும், ஆழமும் நிறைந்த ஒரு புத்தகத்தை உங்களுக்கு திறந்து கொடுக்கும். ஒருவர் அதை மறுபடியும் வாசிக்கையில், மேலும் அதில் – வாழ்க்கையின் நுட்பமான வாசனைகளில் தொடங்கி அதன் மிகப் பெரிய கனிகள் வரை – அனைத்தும் அடங்கியிருப்பது போல தோன்றும். அந்த புத்தகத்தில் புரிந்து கொள்ள முடியாதது என்றோ, வாழப்படாதது என்றோ, நினைவுகளின் ஊசலாட்டத்தின் எதிரொலியில் அறிந்திராதது என்றோ எதுவும் இல்லை. அதில் எந்த அனுபவமும் முக்கியமற்றது அல்ல; விதியின் படி நடப்பது போல சிறு சம்பவங்களும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும், விதியே கூட ஒரு அகண்ட விந்தையான துகில் – அதன் ஒவ்வொரு இழையும் முடிவிலா மென்மையை கொண்ட கைகளால் எடுக்கப்பட்டு, இன்னொரு இழையின் அருகாமையில், இன்னும் நூறு இழைகளால் தாங்கப்பட்டு, வைக்கப்பட்டுள்ளது – போலிருக்கும். முதல் முறை வாசிக்கையில் நீங்கள் மிகுந்த சந்தோஷத்தை உணர்வீர்கள் மேலும் அதன் எண்ணிலடங்கா ஆச்சரியங்களை கனவிலிருப்பது போல் கடந்து செல்வீர்கள். பின்னர் இந்த புத்தகங்களை மறுபடியும் பலமுறை இதே திகைப்புடன் வாசிக்கையில், அவை தம்முடைய அற்புதமான ஆற்றல்களையும், நம்மை கவர்ந்திழுக்கும் தன்மையையும், முதல் முறை வாசிப்பதை போலவே கொஞ்சமும் இழந்துவிடுவதில்லை என்றே கூறுவேன்.

அவைகளை மேலும் மேலும் ஒருவர் அனுபவித்து, ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் வாழ்கை நோக்கு இன்னும் மேன்மையும் எளிமையும் பெற்று, வாழ்வின் மீதான நம்பிக்கையில் ஆழம் கூடி, அவர்களுடைய வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாகவும், சிறப்பானதாகவும் ஆனதற்காக, மேலும் மேலும் நன்றியுணர்வு கொள்வார்கள்.

அதற்கு பின்னர் நீங்கள் ‘மேரி க்ருப்பேவுடைய விதியும் ஏக்கங்களையும்’ பற்றிய அற்புதமான புத்தகத்தை வாசிக்க வேண்டும் மற்றும் ஜேகப்சனின் கடிதங்கள், நாட்குறிப்புகள் இறுதியாக முடிவிலா ஓசையுடன் நீடித்திருக்கும் ( சுமாரான மொழிபெயர்ப்பாக இருந்தாலும் கூட) அவருடைய பாடல்களை வாசிக்க வேண்டும். (இந்த காரணத்தாலேயே உங்களுக்கு என் அறிவுரை, இயன்ற போது ஜேகப்சனின் முழு தொகுப்பையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், என்பதுதான். லீப்ஸிக் இல் உள்ள யூஜென் டைடெரிக்ஸ் பதிப்பகத்தில் வந்துள்ள தொகை ஏடுகளில் அவை முழுவதும் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு தொகுப்பின் விலை ஐந்து அல்லது ஆறு மார்க்ஸ் இருக்கலாம் என எண்ணுகிறேன்).

அவருடைய, “இங்கு ரோஜாக்கள் இருந்திருக்க வேண்டும்…”(நிகரில்லா நயமும், வடிவமும் கொண்ட ஆக்கம்) என்ற கதைக்கு முன்னுரை எழுதியவரைப் பற்றிய உங்கள் கருத்து மறுக்க முடியாத உண்மை. ஆனால் உங்களிடம் ஒன்றை இப்பொழுதே வேண்டிக் கொள்கிறேன். இலக்கிய விமர்சனத்தை முடிந்த வரை குறைவாகவே வாசியுங்கள் – அவை பொருளற்று, இறுகி, கல்லாகி முடிவில் உயிரற்று போன சார்புடைய கருத்துகளோ அல்லது இன்று ஒரு கருத்தும் நாளை அதன் எதிர்மறை கருத்தும் ஓங்கி நிற்கும் வெறும் வார்த்தை விளையாட்டுகளோ தான். கலைப் படைப்புகள் முடிவில்லா தனிமையை கொண்டவை; அவற்றை அணுகுவதற்கு விமர்சனத்தை போல பயனற்ற வழி வேறெதும் இல்லை. அன்பு மட்டுமே அவற்றை தீண்டி, தாங்கி, பாரபட்சமற்று இருக்க முடியும். விவாதங்களும், கலந்தாலோசனைகளும் அல்லது அவற்றை போன்றவைகளை விட, உங்கள் மீதும், உங்களுடைய உணர்வுகள் மீதும் நம்பிக்கை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வையில் தவறு இருந்தால், உங்கள் அக வாழ்வின் இயல்பான வளர்ச்சி உங்களை வேறு உள்ளார்ந்த பார்வைகளுக்கு இட்டுச் செல்லும். உங்கள் முடிவுகளை அவற்றிற்கே உரிய தனிமையில், தடங்கலில்லாமல் வளர்ச்சியடைய அனுமதியுங்கள். அவைகளும் மற்ற எல்லா வளர்ச்சிகளைப் போலவே ஆழங்களிலிருந்து வெளி வர வேண்டும்; வற்புறுத்தலோ, துரிதப்படுத்துதலோ இல்லாமல். எல்லா விஷயங்களுமே முதலில் கருக்கொண்டு பிறகு பிறந்து வருகிறது. ஒவ்வொரு உணர்வின் கருவையும் முழுமையாக்கிக் கொள்ளும் – இருளில், பிரக்ஞயற்ற, சொல்லயியலா நிலையில், நம் புரிதல்கள் சென்று அடைய முடியா தொலைவில் பொறுமையுடனும், மிகுந்த தன்னடக்கத்துடனும் –அந்த கணத்திற்காக காத்திருப்பதே, ஒரு கலைஞனாக வாழ்வதற்கான பொருள் ஆகும்: படைத்தலுக்கு நிகரான புரிதலும் கொண்டவனாக.

இதை கடக்கும் நேரத்தை வைத்து கணக்கிட முடியாது, ஒரு வருடம் என்பது ஒரு பொருட்டில்லை, பத்து வருட காலம் என்பது ஒன்றுமில்லை. கலைஞனாக இருப்பது: எண்ணிக்கையிடுவதோ, கணிப்பதோ அல்ல, ஆனால் மரத்தை போல் முதிர்வுறுவதாகும். அது தன் மரச்சாறை வற்புறுத்துவதில்லை, மேலும் பிற்பாடு வேனிற்காலம் வராமல் போய்விடுமோ என அஞ்சாமல், வசந்தகால புயலில் நம்பிக்கையுடன் நிற்கிறது. வேனிற்காலம் வருகிறது. ஆனால் அது, தம்முன் முடிவற்ற காலம் விரிந்து கிடப்பதைப் போல மௌனத்தோடும் விசாலத்தோடும், காத்திருப்பவர்களை மட்டுமே வந்தடைகிறது. ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் அதையே கற்றுக் கொள்கிறேன், வலியுடன் அதை கற்றுக் கொள்வதற்காக நன்றியோடிருக்கிறேன்: பொறுமையில் தான் சகலமும் உள்ளது.

ரிச்சர்ட் டெஹ்மல்: அவருடைய புத்தகங்களில் இருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து (அந்த மனிதனிடமும் தனிப்பட்ட முறையில் சிறிது காலம் பழக கிடைத்த அனுபவத்திலும்) சொல்வது என்னவென்றால், எப்பொழுதெல்லாம் அவருடைய மிக அழகாக எழுதப்பட்ட பக்கத்தை வாசிக்கிறேனோ, அதற்கு அடுத்த பக்கத்திலேயே மொத்த உணர்வையும் அழித்து அந்த மேன்மையை தகுதியற்றதாக மாற்றிவிடுவாரோ என அஞ்சுவேன். அவருடைய இயல்பை நீங்கள் மிக சரியான சொற்றொடர் கொண்டு குறிப்பிட்டீர்கள்; “விரக தாபத்திலேயே வாழும், எழுதும் மனிதர்”. உண்மையில் அந்த எழுத்தாளரின் அனுபவங்களும் நம்பமுடியாத அளவிற்கு காமத்திற்கு, அதன் வலிகளுக்கும், இன்பத்திற்கும், அருகாமையில் உள்ளது. அவ்விரு கூறுகளும் ஏக்கத்தின் மற்றும் பேரின்பத்தின் வேறு வடிவங்களே. “விரக தாபம்”என்பதற்கு பதிலாக “காமம்”என்று ஒருவர் குறிப்பிடுவாறென்றால் – அந்த வார்த்தையின் தூய, மகத்தான பொருளில், மதம் இணைத்து வைத்த பாவம் இல்லாமல் – அவருடைய கலை மிக சிறப்பானதாகவும், முடிவற்றதாகவும் இருக்கும். அவருடைய கவித்திறமை சிறப்பானது, ஆதார இயல்புணர்வைப் போல வலிமையானது. அது தனக்கேயான தணியாத தாளத்துடன் அவருள் இருந்து எரிமலையைப் போல வெடித்து வெளி வருகிறது.

ஆனால் அவருடைய ஆற்றல் எப்பொழுதும் நேரடியாகவும், பாவனையற்றும் இருப்பது போல் தோன்றவில்லை. (ஆனால் அது தான் ஒரு படைப்பாளி நேரிடும் மிகவும் கடினமான பரீட்சை: அவன் சகல நேரங்களிலும் தன்னுடைய சிறந்த பண்புகளைப் பற்றிய பிரக்ஞை யற்றவனாக இருத்தல் வேண்டும், அவற்றின் சார்பற்ற தன்மையையும், களங்கமின்மையையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால்!). இறுதியில் அவருள் இருந்து வெடித்து வெளிவந்து காமத்தை அடைகையில், அதன் தேவைக்கு குறைவான தூயத்தன்மை உடைய ஒருவனை அவரில் கண்டடைகிறது. முதிர்ந்த, அப்பழுக்கற்ற காமத்திற்கு பதிலாக, அது மனிதத்தால் உருவாகாமல், வெறும் ஆணால் உருவான உலகை காண்கிறது. அவ்வுலகில் புணர்ச்சிக்கான எத்தனிப்பும், இடியோசைகளும், அமைதியின்மையும் கொண்டு, ஆணின் முன்முடிவுகளாலும், அகங்காரத்தாலும் உருச்சிதைக்கப்பட்ட, பாரம் கொண்ட அன்பே உள்ளது. அவர் மனிதனாக இல்லாமல் வெறும் ஆணாக மட்டுமே அன்பு செலுத்துவதால், அவருடைய காம உணர்வுகளில், வன்மம் கொண்ட, கட்டற்ற, காலத்திற்குட்பட்ட, நித்தியத்தன்மையற்ற ஏதோவொறு குறுகிய தன்மை, படைப்புகளை குறுக்கி தீர்க்கமற்றதாகவும், ஐயமுடையதாகவும் மாற்றி விடுகிறது. இருந்தாலும் கூட, அதில் சிறப்பானவைகளை ஒருவர் ஆழ்ந்து வாசித்து மகிழலாம். டெஹ்மலின் எல்லையற்ற பயமும், குழப்பமும், ஒழுக்கக்கேடும் நிறைந்த உலகத்தை பற்றிக் கொண்டு, அதில் தன்னை தொலைத்து விடக் கூடாது. அவை – ஒருவரை காலத்திற்குட்பட்ட ஆசைகளை விட பல மடங்கு அலைக்கழித்து ஆனால் மகத்துவத்துவத்தை அடையும் வாய்ப்பையும், என்றைக்குமான தைரியத்தையும் அளிக்கும் – யதார்த்த விதிகளை போன்றவை அல்ல.

இறுதியாக நான் எழுதிய புத்தகங்களை நீங்கள் வாசித்து இன்புறுவதற்காக அனுப்ப மிகவும் ஆசைப் படுகிறேன். ஆனால் நான் ஒரு ஏழை மற்றும் என் புத்தகங்கள் பதிப்பிக்கப் பட்ட உடனேயே அவை என்னுடையவை அல்ல. அவற்றை எனக்காக வாங்கி , ஆசைப்பட்டபடி அதை கருணையுடன் வாசிப்பவர்களுக்கு கொடுப்பதற்கு கூட என்னால் முடிவதில்லை.

அதனால், இன்னொரு துண்டு காகிதத்தில், என் சமீபத்திய புத்தகங்களின் தலைப்புகளையும் (அதன் பதிப்பாளர்களையும்) உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன் (புதிதாக – மொத்தத்தில் 12 அல்லது 13 புத்தகங்கள் பதித்திருப்பேன் என எண்ணுகிறேன்). நீங்களே அதில் ஒன்றோ, இரண்டோ இயன்ற பொழுது வாங்கிக் கொள்ளுங்கள் என விட்டு விடுகிறேன்.

உங்கள் கைகளில் என் புத்தகங்கள் வந்து சேரும் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கம்: மொழிபெயர்ப்புகள், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

தொடர்புள்ள சுட்டிகள்: கடிதம் 1, கடிதம் 2

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 2

வியரெஜோ, இத்தாலி
ஏப்ரல் 5, 1903

பிப்ரவரி 24 அன்று எழுதி அனுப்பிய உங்களுடைய கடிதத்திற்கு தாமதமாக இன்று பதிலளிப்பதற்கு என்னை மன்னிக்க வேண்டுகிறேன். இத்தனை காலமும் உடல் நலமற்று இருந்தேன், நோய்வாய்ப்பட்டு என்று சொல்ல இயலாது, ஆனால் இன்ஃப்ளுயென்ஸா போன்ற உடல் தளர்ச்சியால் எந்த காரியத்தையும் செய்ய முடியாமல் இருந்தேன். என் உடல்நிலை இறுதி வரை முன்னேற்றம் கொள்ளாததால், தெற்கு கடற்கரை பகுதிக்கு வந்தேன், அதன் நலத்தன்மை மீண்டுமொருமுறை எனக்கு உதவியது. ஆனால் நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை, எழுதுவது கடினமாக உள்ளது. ஆதலால் நான் அனுப்ப ஆசைப்பட்ட உங்களுக்கான கடிதத்திற்கு பதிலாக இந்த ஒருசில வரிகளை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நிச்சயமாக, உங்களுடைய ஒவ்வொரு கடிதமும் எனக்கு மனமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதில் உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டு போயிருக்கலாம், அதனாலேயே நீங்கள் பல நேரங்களில் வெறுங்கையுடன் திரும்பிச் செல்லலாம்; ஏனென்றால் முடிவில் முக்கியமான, ஆழ்ந்த விஷயங்களில் நாம் சொல்ல இயலா தனிமையில் தான் உள்ளோம்; ஒரு மனிதன் மற்றொனுவனுக்கு வெற்றிகரமாக உபதேசமோ அல்லது உதவியோ செய்து முடிக்க பல சம்பவங்கள் ஒன்று பட்டு சரியாக நடந்தேற வேண்டியுள்ளது.

இன்று உங்களுக்கு இன்னும் இரண்டு விஷயங்களை சொல்ல நினைக்கிறேன்.
முரண்நகை: உங்களை கட்டுப்படுத்த அதை அனுமதிக்காதீர்கள், முக்கியமாக படைப்பூக்கமற்ற காலங்களில். உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில் இருக்கும் பொழுது அதை உபயோகப்படுத்த முயலுங்கள், வாழ்க்கையை புரிந்து கொள்வதற்கு கிடைத்த மேலுமொரு வழியாக. தனித்து நேர்மையாக உபயோகித்தால், அதுவும் மிகவும் மேன்மையானது தான், அதற்காக குற்றமுணர்ச்சி கொள்ள தேவையில்லை. ஆனால் அதன்பால் மிகவும் பரிச்சியத்தையும், கட்டுப்பாடின்மையையும் நீங்கள் உணர ஆரம்பித்தால், அந்த பரிச்சயத்தை கண்டு அச்சமடைந்தால், முன்நிற்கையில் அவை சிறுமைப்பட்டு உதவியற்று போகும், இன்னும் சிறந்த, கருத்தாழம் மிக்க பொருட்கள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். காரண காரியங்களின் ஆழங்களை தேடுங்கள்: அங்கே முரண்நகை இறங்குவதேயில்லை – மகத்துவத்தின் விளிம்பில் வருகையில் இங்ஙனம் உலகை புரிந்து கொள்வது உங்கள் இருப்பின் தேவையால் உருவானதா என கண்டு பிடியுங்கள். மகத்தான விஷயங்களுடைய பாதிப்பின் முன்னால் அது உங்களிலிருந்து உதிர்ந்து விடும் (தற்செயலானது என்றால்) இல்லையேல் (உங்களுடைய ஒரு பகுதி என்றால்) அது இன்னும் வலுவோடு வளர்ந்து, உங்கள் கலையை உருவக்குவதற்கான மற்றுமொரு சக்தி வாய்ந்த கருவியாக மாறிவிடும்.

இரண்டாவதாக உங்களிடம் நான் இன்று சொல்ல வருவது இது தான்: இருக்கும் அநேக புத்தகங்களில், தவிர்க்க முடியாதவை என நான் கண்டுகொண்டவை மிக சிலதே. மற்றும் அவைகளுள் இரண்டு புத்தகங்கள் நான் எங்கிருந்தாலும் எப்போதும் என்னோடு இருக்கும். இங்கே என்னருகிலேயே உள்ளன: பைபிள் மற்றும் சிறந்த டானிஷ் கவிஞராகிய ஜென்ஸ் பீட்டர் ஜேகப்ஸனின் புத்தகங்கள். உங்களுக்கு அவருடைய படைப்புக்களை பற்றி தெரியுமா? அவை எளிதில் கிடைக்கக் கூடும் ஏனென்றால் ரிக்ளேம் யூனிவெர்ஸல் நூலகத்தால் சிறந்த மொழிபெயர்ப்புடன் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. ஆறு சிறுகதைகள் கொண்ட சிறு தொகுப்பையும், அவருடைய நாவல் ‘நீல்ஸ் லைன்’வாங்கிவிட்டு, முதல் சிறுகதையான ‘மோஜென்ஸ்’வாசிக்க ஆரம்பியுங்கள். ஒரு முழு உலகம், அதன் சந்தோஷங்கள், நிறைவு, கற்பனைக்கு எட்டாத விசாலம் ஆகியவற்றால் சூழ்ந்து கொள்ளப்படுவீர்கள். அந்த புத்தகங்களுக்கு உள்ளே சிறிது காலம் வாழுங்கள், அவைகளிலிருந்து வாசிக்க தகுந்தது எவை என கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் எல்லாவற்றையும் விட முக்கியமாக அவைகளை நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கை எவ்வழி சென்றாலும் அந்த நேசம் அயிரம் மடங்காக உங்களுக்கு திரும்பக் கிடைக்கும் – உங்களுடைய வாழ்க்கையை நெய்யும் மிக முக்கியமான இழைகளாகிய அனுபவங்களுக்கும், ஏமாற்றங்களுக்கும், மகிழ்ச்சிகளுக்கும் மத்தியில் அவை இன்னொரு இழையாக கூடிவிடும்.

படைப்பின் சாரத்தையும், அதன் ஆழங்களையும் மற்றும் நித்தியத்தன்மையையும் எனக்கு அளித்தவர்கள் யார் என சொல்ல வேண்டி வந்தால் நான் உரைப்பது இரு பெயர்களை மட்டுமே: ஜேகப்ஸன் மற்றும் அகஸ்ட் ரோடின், வாழும் கலைஞர்களுள் நிகரில்லா சிற்பி.

உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.

முதல் பகுதி இங்கே.

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய ‘வியன்னா இராணுவ கல்லூரியின்’ மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.

1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை மிக குறைவாகதொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை [அவை எப்பொழுதும் இறுதியில் புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன]. விஷயங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கக் கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்ப வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை. பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை. மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, துரிதமாக கடந்து போகும் நமது சிறுவாழ்கையை காட்டிலும் பெரிய வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

மேலே குறிப்பிட்டவற்றை முன்னுரையாக வைத்து, நான் உங்களிடம் சொல்வது: அமைதியான ரகசிய அந்தரங்கத்தின் ஊற்றுகளை கொண்டிருந்தாலும், உங்களுடைய கவிதைகள் அவைகளுக்கென்று ஒரு நடையை கொண்டனவை அல்ல. அதை, உங்களுடைய இறுதி கவிதையான, “என் ஆத்மா”வில் மிகவும் உணர்கிறேன். அங்கே, உங்களுக்கென்று சொந்தமான ஏதோ ஒன்று வார்த்தையாகவும், இன்னிசையாகவும் மாற முயற்சிக்கிறது. “லீயோபார்டிக்கு” என்ற அற்புதமான கவிதையில் அந்த மகத்தான, தனித்த ஆளுமையின் மேல் ஒரு விதமான சகோதரத்துவ உணர்வு ஏற்படுவது போலுள்ளது. அப்படி இருந்தும், அக்கவிதைகள் தம்முள் ஒன்றாக சேர்ந்து வேறெதுவும் ஆக மாறவில்லை, தனித்து நின்றும் எதுவுமாகவில்லை, இறுதி கவிதை மற்றும் லீயோபர்டிக்கு என்ற கவிதையும் கூட. அவைகளுடன் சேர்த்து நீங்கள் அனுப்பியிருந்த கடிதம், உங்கள் கவிதைகளை படிக்கும் போது நான் உணர்ந்த பல பிழைகளை கண்டு கொள்ள உதவியது, என்றாலும், என்னால் அவற்றை திட்டவட்டமாக குறிப்பிட்டு சொல்ல இயலாது.

உங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றனவா என கேட்டிருந்தீர்கள். நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் மற்றவர்களிடம் கேட்டிருப்பீர்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருப்பீர்கள். உங்கள் படைப்புகளை பதிப்பாளர்கள் நிராகரிக்கும் போது, மற்றவர்களின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருந்தியிருப்பீர்கள். நீங்கள், ( என் அறிவுரை உங்களுக்கு வேண்டும் என நீங்கள் கேட்டதால்), இப்படிப்பட்ட செயல்களை செய்யாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வெளியில் தேடுகிறீர்கள், அதைத் தான் தற்பொழுது அநேகமாக தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அறிவுரையோ, உதவியோ வழங்குபவர்கள் யாருமில்லை – யாருமேயில்லை. நீங்கள் ஒன்று மட்டுமே செய்ய வேண்டும். உங்களுக்குள் பயணம் செல்லுங்கள். உங்களை எழுத ஆணையிடும் காரணியை கண்டுபிடியுங்கள். அது தன் வேர்களை உங்கள் இதயத்தின் அடி ஆழங்களுக்குள் பரப்பியிருக்கிறதா என பாருங்கள். நீங்கள் எழுதுவதை தடை செய்தால், உயிரை விட்டு விடுவீர்களா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இவையெல்லாவற்றையும் விட, இரவின் அமைதிப் பொழுதில் இந்த கேள்வியை உங்களிடமே கேளுங்கள்: நான் அவசியம் எழுத வேண்டுமா? ஒரு ஆழ்ந்த பதிலுக்காக உங்களுக்குள் துருவிச் சென்று கேளுங்கள். அந்த பதில் ஒப்புதலோடு ரீங்கரித்தால், மிக முக்கியமான அக்கேள்வியை நீங்கள், “ஆமாம், கட்டாயமாக” என்ற எளிய பதிலுடன் எதிர் கொண்டால், உங்கள் வாழ்கையை இந்த நிர்பந்தத்திற்கு ஏற்ப உருவாக்குங்கள். உங்கள் வாழ்கை, அதன் மிகவும் அடங்கிய, அலட்சியமான பொழுதுகளில் கூட, இந்த உந்துதலின் அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்க வேண்டும். அடுத்து, இயற்கையின் அருகாமையில் வாருங்கள். இதுவரை எவரும் முயற்சித்ததே இல்லை என்பதைப் போல, நீங்கள் பார்த்ததையும், உணர்ந்ததையும், நேசித்ததையும், இழந்ததையும் சொல்ல முயலுங்கள். காதல் கவிதைகளை எழுதாதீர்கள்; மிகவும் எளிமையானதும், சாதாரணமானதுமான அத்தகைய வடிவங்களை தவிர்த்து விடுங்கள். அதில் செயல்படுவது மிகவும் கடினம். மேலான சிறந்த பாரம்பரியங்கள் பல இருக்கும் அவ்வடிவங்களில், தனித்துவம் மிக்க படைப்பை உருவாக்க அபாரமான, முதிர்ந்த திறன் வேண்டும்.

ஆதலால், இப்படிப்பட்ட பொதுவான தளங்களில் இருந்து உங்களை விடுவித்து, தினசரி வாழ்கை என்ன தருகிறதோ அதை எழுதுங்கள். உங்கள் ஆசைகளையும், சோகங்களையும் விவரியுங்கள். மனதில் கடந்து செல்லும் எண்ணங்கள் மற்றும் அழகு எது என நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, இவை எல்லாவற்றையும் இதயமுணர்ந்த, அமைதியான, நேர்மை கொண்ட, அடக்கத்துடன் விவரியுங்கள். உங்களை வெளிப்படுத்தும் போது சுற்றியுள்ள பொருட்கள், உங்களின் கனவு காட்சிகள் மற்றும் ஞாபகத்தில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் தினசரி வாழ்கை வறுமையோடு இருக்கிறதென்றால், அதைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்களையே குற்றப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவ்வாழ்கையின் செல்வங்களை வெளிக் கொண்டுவர முடிந்த ஒரு கவிஞன் இல்லை என ஒப்புக் கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவனுக்கு ஏழ்மையென்றும், துச்சமான ஏழையென்றும் எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறையில் இருந்தாலும் கூட, அதன் சுவர்கள் உலகின் ஓசைகள் எதையும் அனுமதிக்காதென்றாலும் கூட – விலை உயர்ந்த ஆபரணம் போன்ற மதிப்பும் , ஞாபகங்களின் புதையல் கிடங்காகவும் உள்ள உங்கள் பால்யகால பொழுதுகள் உண்டல்லவா? அதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். விசாலமான கடந்த காலங்களில் மூழ்கிக் கிடக்கும் உணர்ச்சிகளை மேலே எழுப்புங்கள்; உங்கள் ஆளுமை இன்னும் வலிமையோடு வளரும்; உங்கள் தனிமை விரிந்து, கடந்து போய்க்கொண்டிருக்கும் மற்ற மனிதர்களின் தூரத்து பேச்சிரைச்சல், வந்தடைய முடியாத அந்தி வெளிச்சம் நீங்கள் வாழும் இடமென்றாகும். அங்ஙனம் இந்த உள்-திரும்புதலாலும், உங்கள் உலகினுள்ளில் மூழ்குவதாலும் கவிதைகள் வெளிவந்தால், மற்றவர்களிடம் அவை நன்றாக உள்ளனவா என கேட்க எண்ண மாட்டீர்கள். பத்திரிக்கைகளுக்கு அப்படைப்புகளின் மேல் ஆர்வமேற்படுத்த மாட்டீர்கள். ஏனென்றால் அவை உங்கள் அன்பிற்குரிய இயற்கை உடமைகளாக, உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக, அதன் ஓர் ஓசையாக காண்பீர்கள். ஓர் கலைப் படைப்பு இன்றியமையாமையால் எழுந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அந்த ஒரு வழி கொண்டே ஒருவர் அதை மதிப்பிட முடியும்.

ஆதலால், என்னால் உங்களுக்கு இதை தவிர வேறு அறிவுரை கூற இயலாது. அதாவது, உங்களுக்கு உள்ளே பயணித்து செல்லுங்கள்; உங்கள் வாழ்கை எவ்வளவு ஆழத்திலிருந்து பாய்கிறது என பாருங்கள், அதன் ஊற்றில், நீங்கள் படைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையை கண்டடைவீர்கள். அந்த பதிலின் பொருளை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், உங்களுக்காகவே கொடுக்கப்பட்டது என எண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை, நீங்கள் ஒரு கவிஞனாக ஆவதற்கு பணிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்கள். அதை உங்கள் விதி என ஏற்று வெளியில் இருந்து என்ன வெகுமதி கிடைக்கும் என ஒரு போதும் கேட்காமல், அதன் பாரத்தையும், மேன்மையையும் தாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு படைப்பாளி தானே தன்னுடைய உலகமாக மாற வேண்டும், அவன் தன் தேவைகளை தன்னிடமும், தன்னை ஒப்புக் கொடுத்த இயற்கையிடமும் கண்டறிய வேண்டும்.

ஆனால், உங்களுக்குள்ளும், அதன் தனிமைக்குள்ளும் இறங்கிய பிறகு நீங்கள் கவிஞனாக ஆவதை கைவிட வேண்டி வரலாம் (நான் சொன்னதைப் போல, ஒருவன் தான் தொடர்ந்து எழுதாமல் வாழ்ந்து விட முடியும் என உணர்ந்தால், அவன் எழுதுவதை விட்டு விட வேண்டும்). அப்படி நேர்ந்தாலும், உங்களுடைய இந்த சுயதேடல் பயனற்றது என்றாகிவிடாது. உங்கள் வாழ்கை அங்கிருந்து அதன் பாதைகளைக் கண்டடையும்; அப்பாதைகள் நன்றாகவும், செழுமையானதாகவும், விசாலமானதாகவும் ஆவதற்கு என் வார்த்தைகளில் கூற முடிந்ததை விட அதிகம் பிரார்த்திக்கிறேன்.

வேறென்ன நான் சொல்ல? எல்லாவற்றையும் தகுந்தபடி வலியுறுத்தியிருக்கிறேன் என்று எனக்குப் படுகிறது. முடிவாக ஒரு சிறு அறிவுரையை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்; அமைதியுடனும், முனைப்புடனும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருங்கள். அமைதி கூடிய நேரங்களில், உங்கள் நுண்ணுர்ச்சிகள் பதிலளிக்க முடிந்த கேள்விகளுக்கு, வெளியில் பதில் தேடி காத்திருப்பது போல் உங்கள் வளர்ச்சியை பலவந்தமாக தடங்கல் செய்வது வேறொன்றுமில்லை.

உங்கள் கடிதத்தில் பேராசிரியர் ஹோராஸெக்கின் பெயரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அன்புமிக்கவரும், கற்றறிந்தவருமாகிய அம்மனிதரின் மேல் எனக்கு ஆண்டுகள் பல கடந்த பின்னும் நன்றியும், மரியாதையும் கொண்டுள்ளேன். என்னைப் இப்பொழுதும் அவர் நினைவு கூறுகிறார் என்பது அவரின் மேன்மையை காட்டுகிறது, நான் அதை வரவேற்கிறேன், என்ற என் உணர்வுகளை தயவு கூர்ந்து அவருக்கு தெரியப்படுத்துவீர்களா?

நீங்கள் என் பொறுப்பிலாக்கிய கவிதைகளை, உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும், என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் மீண்டுமொருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன். என்னால் முடிந்தவரை நேர்மையாக பதிலளித்ததன் மூலம், உங்களுக்கு அந்நியராக இருந்ததைக் காட்டிலும் என் தரத்தை சிறிதேனும் உயர்த்த முயற்சித்திருக்கிறேன்.

என்றும் உண்மையுடன்,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்டம் பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்