நாஞ்சில் நாடனின் நாவல்களில் (படித்த வரை) என்னை மிகவும் கவர்ந்த நாவல் இதுதான். தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை, சதுரங்க குதிரை எல்லாவற்றையும் விட ஒரு மாற்று மேலாகவே மதிப்பிடுவேன்.
ஒரு மாலை தற்செயலாக புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க உட்கார்ந்தேன். கீழே வைக்கவே இல்லை.நாஞ்சில் எதிரிலே இருந்திருந்தால் அவர் காலில் விழுந்திருப்பேன். படித்து முடித்தபின் மனம் கலங்கி இருந்தது.
ஏன் மனம் கலங்கியது என்று யோசித்துப் பார்த்திருக்கிறேன். சண்முகத்தின் நிலையிலிருந்து நான் சில இன்ச் தூரத்தில் தப்பியதால் மட்டும்தானா? என் தனிப்பட்ட அனுபவங்களுக்கு, உணர்வுகளுக்கு அருகில் இருப்பதால் மட்டும்தானா? கொஞ்சம் நிலை மாறி இருந்தால் இந்த மாதிரி வாழ்க்கையில் வீழ்ந்திருப்பேன், தப்பித்தேன் என்ற எண்ணத்தினாலா? இல்லை, சதுரங்க குதிரை நாராயணன் நிலைக்கு இன்னும் அருகிலே இருந்திருக்கிறேன். ஆனால் சதுரங்க குதிரையில் கூறியது கூறல் இருக்கிறது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. என் வாழ்க்கைக்கு இன்னும் அருகே உள்ள புத்தகத்தில் நொட்டை சொல்பவனை இந்தப் புத்தகம் இப்படி தாக்குகிறது என்றால் அது என் அனுபவங்களுக்கு அருகில் இருக்கிறது என்பதனால் மட்டுமாக இருக்க முடியாது; சண்முகத்தின் இடத்தில் என்னை வைத்து பார்க்க முடிகிறது என்பதால் மட்டும் இருக்க முடியாது.
அதிலும் இந்தக் கதையை எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் பொருத்திப் பார்க்கலாம். மெக்சிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்கா வந்து விவசாயக் கூலி வேலை பார்ப்பவர்கள்; சட்டபூர்வமாக H1-விசா பெற்றும் ஏறக்குறைய அடிமை வேலை பார்க்கும் பல IT பணியாளர்கள்; 1908-இல் கதிராமங்கலத்திலிருந்து சென்னைக்கு குடியேறி சட்டக் கல்லூரியில் குமாஸ்தா வேலை பார்த்து, மனைவிக்கும் தனக்கும் மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் இறந்த என் தாத்தா; நகரங்களுக்கு சாரிசாரியாக குடியேறி எப்படியோ பிழைக்கும் கோடிக்கணக்கானவர்கள்; இரவில் உலா வரும் கூர்க்கா; கட்டிட வேலை செய்யும் பிஹாரி; டாஸ்மாக்கில் சலம்புபவன்; சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பேரையும் ஒரே ஒரு மனிதன் சோற்றுக்கும் கழிப்பதற்கும் அல்லாடுவதை வைத்துக் காட்டிவிடுகிறார்.
சண்முகத்தின் தேவைகள் அதிகமில்லை. ஊரில் இருக்கும் குடும்பத்துக்கு கொஞ்சம் பணம் அனுப்ப வேண்டும். அப்படி பணம் அனுப்ப சம்பாதிக்க வேண்டும். சம்பளத்தில் சோற்றுக்கும், படுக்கைக்கும் கொஞ்சம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் சம்பாதிக்க முடியாது. தேவைகளுக்கும் சம்பாத்தியத்துக்கும் இருக்கும் தூரம், பற்றாக்குறைதான் கதை. கதை முழுவதும் தின்பதிலும் கழிப்பதிலும் படுப்பதிலும் உள்ள சிரமங்கள்தான். இதனால் ஏற்படும் மன அழுத்தம், வெறுமை பற்றி அவர் ஒரு வார்த்தை எழுதவில்லை. ஆனால் கதை முழுவதும் வியாபித்திருப்பது அவைதான்.
நாஞ்சிலுக்கு இது கை வந்த கலை. ஹிந்தியில் பை(ன்) ஹாத் கா கேல் என்பார்கள். அவருக்கு இதற்கு இடது கை சுண்டுவிரலே போதும். சதுரங்க குதிரை, தன்ராம் சிங், கடன் வாங்கி கிராமத்துக்கு வந்து பந்தா காட்டி பிறகு கடனை அடைக்க உழைக்க வேண்டி இருக்கும் ஒருவன் (கதை பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது) என்று நிறைய இருக்கிறது. அந்தக் கலை இந்த நாவலில்தான் தன் உச்சத்தை அடைந்திருக்கிறது. கதை முழுவதும் புறவயமான தளத்திலேதான் நடக்கிறது. ஆயிரக்கணக்கான வார்த்தைகளில் சண்முகத்தின் உடலை, புற உலகத்தைக் காட்டுகிறார். அவர் எழுதாத கோடிக்கணக்கான வார்த்தைகள் சண்முகத்தின் உள்ளத்தை, அக உலகத்தைக் காட்டுகின்றன. அதில்தான் அவர் என் மனதையும் அசைத்துவிட்டார்.
கதை சுருக்கமாக; எழுபதுகளின் கிராமத்து, முதல் தலைமுறை பட்டதாரி. வேலை கிடைக்கவில்லை. பெரியப்பாவிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை. துணிந்து பம்பாய்க்கு போகிறான். வேலை கிடைக்கிறது, ஆனால் முன்னால் சொன்ன மாதிரி பற்றாக்குறை. உண்பதிலும் கழிப்பதிலும் உள்ள சிரமங்கள்தான் கதை.
வாழ்க்கை மிகவும் எளிமையானது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. நமக்கு என்ன வேண்டுமோ, எது நம்மை திருப்திப்படுத்துகிறதோ, எது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை மட்டும் செய்தால் போதும். ஆனால் அது ஏன் சுலபமாக இருப்பதில்லை? நம் மீது நமக்கு இருக்கும் பிம்பமும் உண்மை நிலையும் ஏன் இத்தனை மாறுபடுகின்றன? காந்தி போல வாழ்வது மிகச் சுலபமாக இருக்க வேண்டும்; ஏன் நேருவாலும், படேலாலும், ராஜாஜியாலும் கூட அவ்வளவு சுலபமான வாழ்க்கை வாழ முடியவில்லை? Moon and Six Pence நாவலின் நாயகன் தனக்கு விருப்பமானதை மட்டுமே செய்கிறான். குடும்பம், மனைவி, சமூக விழுமியங்கள் எதுவும் அவனைக் கட்டுப்படுத்தவில்லை. அப்படி வாழ்வது ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? சண்முகத்தால் ஏன் தன் கிராமத்துக்கு திரும்ப முடியவில்லை? அல்லது குடும்பத்தை மறந்து ஏன் சௌகரியமாக வாழ முடியவில்லை? இந்த வாழ்க்கை எங்குதான் முடியும்? விடிவுண்டா?
நாஞ்சிலின் உச்சம் இதுதான். (படித்த வரை) கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
பின்குறிப்பு: நாஞ்சிலே தன் நாவல்களை தரவரிசைப்படுத்தியபோது மிதவைக்கு மூன்றாம் இடம்தான் கொடுத்திருந்தார். சதுரங்க குதிரைக்கு இரண்டாம் இடம்; எட்டுத்திக்கும் மதயானைக்கு முதல் இடம்.
பின்குறிப்பு 2: மிதவை புத்தக அட்டையில் தாடியோடு நாஞ்சில்!
பின்குறிப்பு 3: ஜெயமோகன் மிதவையை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (முழு வெற்றி அடையாத, ஆனால் சிறந்த நாவல்கள்) சேர்த்திருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்
Like this:
Like ஏற்றப்படுகின்றது...