ஜெயமோகன், பிஏகேவைப் பற்றி நமக்கென்ன?

பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிக்காக முதலில் தயார் செய்த உரை இதுதான். பழைய பஞ்சாங்கங்களைக் கிளறியபோது கிடைத்தது. அதை முடித்து பதித்திருக்கிறேன்.


இன்று விடுமுறை நாள். நல்ல மதிய நேரம். பிள்ளைகளுக்கு பள்ளி இல்லை. அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது சுற்றாமல் இங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? ஜெயமோகனுக்கும் பிஏகேவுக்கும் நம் வாழ்க்கையில் என்ன முக்கியத்துவம்?

குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் தெளிவான விடை இருக்கிறது. இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தில் ஆழ்ந்து அனுபவித்தவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். அதனால் இந்த பின்மதியப் பொழுது சுவாரசியமாகக் கழியும் என்று எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு தேனீரும் சமோசாவும் வேறு கிடைக்கின்றன.

கண்ணோட்டத்தை கொஞ்சம் விரிவாக்கினால் இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் நம் வாழ்வில் என்ன இடம் என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக நாம் இலக்கியத்தைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்? இலக்கியம் படிப்பதனால் நமக்கு எந்த லாபமுமில்லை, சம்பளம் உயரப் போவதில்லை, வேலை உயர்வு கிடைக்கப் போவதில்லை, வீட்டுக்கடன் தீரப் போவதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நஷ்டம்தான். அந்த நேரத்தில் ரொம்ப நாளாக தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வேலைகளை செய்யலாம். உடல் இளைக்க ஒரு வாக் போகலாம். இங்கே இரண்டு மணி நேரம் செலவழித்து என்னத்தை பெறப் போகிறோம்?

இன்று இங்கே வந்திருக்கும் பெரும்பான்மையினர் – என்னையும் சேர்த்து – மத்திய வர்க்கப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். இன்று குறைந்தபட்சம் உயர் மத்திய தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறோம். அனேகமாக நம் பெற்றோர்களை விட சௌகரியமான வாழ்க்கையை அடைந்துவிட்டோம். வாழ்வில் லௌகீக ரீதியாக ஓரளவாவது வெற்றி அடைந்துவிட்டோம். பெரும்பாலானவர்களுக்கு செய்யும் பணியும் வாழ்விற்கு ருசி சேர்க்கிறது. ஏறக்குறைய அனைவருக்குமே குடும்பமும் குழந்தைகளும் வாழ்க்கையை பொருள் உள்ளவையாக செய்கின்றன.

ஆனால் இப்போது மாஸ்லோவின் Theory of Needs வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். கணிசமானவர்கள் மீண்டும் மீண்டும் அதே தினத்தை வாழ்வது போல – தினமும் மூன்று வேளையும் கத்தரிக்காய் பொரியலையே சாப்பிடுவது போல – உணர ஆரம்பிக்கிறோம். டி.எஸ். எலியட் சொன்னது போல

Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning

என்று நித்தநித்தம் எதற்காக ஓடுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அலுவலக டென்ஷன்கள், பிள்ளைகளின் படிப்பு, பணச்சிக்கல்கள், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் சுமைகள் – இவற்றின் எடை நம்மை அழுத்த ஆரம்பிக்கிறது. நம்மில் சிலராவது இது என்ன வாழ்க்கை என்று அலுத்துக் கொள்கிறோம், வாழ்வு வெறுமையாகக் கூடும் என்பது நம்மை பயமுறுத்த ஆரம்பிக்கிறது. சிலருக்கு midlife crisis ஆக மாறுகிறது.

ஆனால் இலக்கியமோ முடிவில்லாத சுவை கொண்டது. ஒவ்வொரு புத்தகத்திலும் புதிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. காந்தி இறந்து அறுபத்தைந்து வருஷம் ஆகிவிட்டாலும் அந்த மாமனிதருக்கு அருகே செல்ல கலங்கிய நதியில் நீந்திப் போகலாம். மிகச் சுலபமாக ஆறு உலகத்தைக் கடந்து ஏழாம் உலகத்துக்கே சென்று நம்மில் எவருக்கும் பரிச்சயம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களை – இல்லை இல்லை உருப்படிகளை – பக்கத்தில் சென்று பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் புதிய புதிய உலகங்களைக் காட்டிக் கொண்டே இருப்பது இன்று இரண்டுதான் – இலக்கியமும் சினிமாவும். இத்தனை சுகத்தை, சுவாரசியத்தை வேறு எங்கு பெற முடியும்?

அதுவும் மனித இனத்துக்கு கதைகளில் இருக்கும் ஆர்வம் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களில் நம் கூட்டுத் தேர்வுகள் – wisdom of the crowds – உயர்தரமான படைப்புகளை மட்டும்தான் இன்றும் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகின்றன. அதனால் கண்டதையும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். மகாபாரதமும் ஈடிபஸ் ரெக்சும் ஷேக்ஸ்பியரும் டால்ஸ்டாயும் மனித இனத்தின் சொத்துக்கள். இலக்கியத்தை படிப்பதில் ஒரு விதத்தில் நஷ்டம்தான் என்று முன்னால் சொன்னேன். ஆனால் இந்த சொத்துக்களை அனுபவிக்காமல் போனால் நமக்கு நஷ்டம்தான். வானவில்லையோ, காலையில் பூத்திருக்கும் பவழமல்லி மலர்களையோ, சூரியோதயத்தையோ, நயாகராவில் கொட்டும் நீரையோ, மாமல்லபுரத்து மஹிஷன் சிற்பத்தையோ, சிஸ்டைன் chapel-இன் கூரையில் விரல் நீட்டும் முதல் மனிதனையோ பார்க்கும்போது; ஐந்தாவது சிம்ஃப்னியையோ, இமாஜின்/தில்-ஏ-நாதான்/எந்தரோ மஹானுபாவுலு/இது ஒரு பொன்மாலைப் பொழுது போன்ற பாட்டுகளைக் கேட்கும்போது; மும்பையின் முதல் பருவ அடைமழையில் ஆடிக் கொண்டே நனையும்போது; நம் இரண்டு வயதுக் குழந்தை நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்க்கும்போது; மனம் விம்மி விரியும் அனுபவத்துக்கு எந்த வகையில் குறைந்ததல்ல நல்ல இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்படும் அனுபவம். அதுவும் உங்களுக்கான இலக்கியத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது, உங்கள் உணர்வுகளை நீங்களே தரிசிக்கும்போது ஏற்படும் சுகானுபவத்தை விவரிக்க முயல்வது வார்த்தைகளின் போதாமையைத்தான் காட்டப் போகிறது.

சரி என்ன காரணத்தாலோ இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது, புத்தகம் படிக்கிறோம். விஷ்ணுபுரத்தையோ, புலிநகக் கொன்றையையோ அறம் சிறுகதைகளையோ கலங்கிய நதியையோ வெண்முரசையோ படிக்கும்போது நம்மில் சிலராவது மெய்சிலிர்க்கிறோம். நம் வாழ்வில் ஏதோ தாக்கம் கூட ஏற்படலாம். ஆனால் எழுதியவரைப் பற்றி நமக்கென்ன? புத்தகத்தைப் படிப்பதை விட்டுவிட்டு இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறோம்? மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஒரு பிரபலத்தைப் பார்க்கும், அவர் பேசுவதைக் கேட்கும் ஆசை மட்டும்தானா? முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் எம்ஜிஆரைப் பார்க்கப் போனவர்களுக்கு இருந்த காரணங்கள்தானா?

jeyamohanஎன் கண்ணில் இலக்கியவாதிகள் மற்ற பிரபலங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும் சரிதான்; நன்றாக பேசத் தெரியவில்லை என்றாலும் சரிதான். குறைந்தபட்சம் நம் மனதில் அவர்கள் படைப்புகளைப் பற்றி கலைந்து கிடக்கும் எண்ணங்களை அவர்களிடம் பேசித் தொகுத்துக் கொள்ள முடியும். அவர்கள் படைப்புகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நமக்கே மொழிபெயர்த்துச் சொல்லி தெளிவாக்கிவிடுவார்கள்.

நம் அதிர்ஷ்டம் ஜெயமோகன், பி.ஏ.கே. இருவருக்கு கூச்ச சுபாவத்துக்கும் வெகு தூரம். பார்த்த இரண்டாவது நிமிஷத்தில் வெகு சகஜமாக பேசுபவர்கள். பேசத் தெரிந்தவர்கள். எண்ணங்களை, கருத்துக்களை அழகாக தொகுத்துச் சொல்லக் கூடியவர்கள். மற்றவர் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்டு அதை ஒட்டியும் வெட்டியும் வாதிடுபவர்கள். அதனால் இரண்டு மணி நேரம் விரயம் ஆகாது என்பது நிச்சயம்.

p_a_krishnanஇது வெறும் சம்பிரதாய மேடைப் புகழ்ச்சி அல்ல. ஐந்தாறு வருஷங்கள் முன்னால் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரை சந்திக்க நான் நிறையவே தயங்கினேன். ஒரு வயதுக்கு மேல் புதியவர்களை சந்திப்பது, பழகுவது கொஞ்சம் கஷ்டம்தான். மேலும் சந்தித்து அவரிடம் என்ன பேசுவது? விஷ்ணுபுரம் ஒரு மாபெரும் சாதனை என்றா? அது நான் சொல்லியா தெரிய வேண்டும்? அவரை சந்திக்கும் நேரத்தில் இன்னும் நூறு பக்கமாவது படிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் சந்தித்த இரண்டாம் நிமிஷத்தில் ஏதோ வெகு காலமாகப் பழகிய பழைய நண்பரைப் பார்ப்பது போலத்தான் உணர்ந்தேன். இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட இழுத்து வைத்து அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பேசுவதில் ஜெயமோகன் மன்னர்தான். அதற்குப் பிறகு எழுத்தாளர்களை மிஸ் செய்வதில்லை. அவர்களிலும் பிஏகேவும் நாஞ்சிலும்தான் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

இதற்கு மேலும் பேசினால் அடி விழலாம். அதனால் கடைசியாக என் மகள் ஸ்ரேயாவுக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். என்ன பேசுவது, இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கு என்ன தேவை என்ற மாதிரி கேள்விகள் எழும்போதெல்லாம் அவளைத்தான் கேட்பேன். அதுவும் காரில் போகும்போது வரும்போதுதான், அப்போதுதான் அவள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. ஸ்ரேயா சொன்ன வார்த்தைகள்தான் – literature is fun, it shows me an alternate reality, I can observe what goes on when people face problems – இந்த உரையின் ஊற்றுக்கண். நன்றி, ஸ்ரேயா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்

ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் – அறிமுக உரை

காலில் அடிபட்டு எங்கும் நகரமுடியாத நிலை. பழைய பஞ்சாங்கங்களைக் கிளறிக் கொண்டிருக்கிறேன். அப்போது கண்ணில் பட்டது – சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன்/பி.ஏ. கிருஷ்ணனை பாரதி தமிழ் சங்க விழாவில் அறிமுகப்படுத்தி பேசிய பேச்சு.

இரண்டு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். ராஜன் எங்களிடம் சொல்லி இருந்தார் – இரண்டு மணிக்கு நிகழ்ச்சி என்றால் நம் மக்கள் எல்லாரும் இரண்டரைக்குத்தான் வருவார்கள், அது வரை நேரத்தை நிரப்ப முப்பத்தெட்டாவது வட்டச் செயலாளர் போல எதையாவது பேசி வை என்று சொல்லி இருந்தார். அன்று காலையில் இருவரையும் அறிமுகப்படுத்தி பேசு என்று சொன்னார். ஏற்கனவே தயார் செய்தது எனக்கே திருப்தியாக இல்லை. சரி இவரே ஐடியா கொடுக்கிறாரே என்று கிடுகிடுவென்று ஒரு அறிமுகத்தை தயார் செய்தேன்.

என் பேச்சுதான் முதலில். 2:10 வாக்கில் நான் மேடையேற வேண்டும். கஷ்ட காலம், ராஜன் தொகுப்பாளினி நித்யாவிடமும் அறிமுகப்படுத்தி பேச சொல்லி இருக்கிறார். 2:00 மணியிலிருந்து 2:10 வரை நான் எழுதி வைத்திருந்ததை எல்லாம் நித்யா பேசிக் கொண்டிருந்தார், நான் பேச நினைத்ததெல்லாம் நித்யா பேசிவிட்டதால் என்னத்தை பேசுவது என்று தெரியாமல் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தேன்.

சம்பிரதாயமான அறிமுகம் என்றில்லாமல் என் தனிப்பட்ட அனுபவங்களை, நான் உணர்ந்தவற்றை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்தேன். பிரிண்ட் செய்து வைத்திருந்த பேப்பரில் சில நோட்ஸ்களை கிறுக்கிக் கொண்டேன். தயார் செய்து வைத்திருந்ததில் என் பரிந்துரைகளின் பட்டியல் ஒன்று இருந்தது, அதை மட்டும் பயன்படுத்திக் கொண்டேன்.

காகிதக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தபோது அந்த நோட்ஸ் கண்ணில் பட்டது. அதைத்தான் தட்டச்சி இருக்கிறேன்…

நண்பர்களே,

இது இலக்கியக் கூட்டம். இன்றைய முக்கிய நிகழ்ச்சி – ஒரே நிகழ்ச்சி – ஜெயமோகன், பி.ஏ. கிருஷ்ணன் இருவர் பேசுவது மட்டும்தான். அவர்கள் பேசுவதை கேட்க வந்திருக்கும் வாசகர்களிடம் இந்த அறிமுகம் எல்லாம் தேவையா, அவர்கள் எழுத்தைப் படிக்காமலா இங்கே ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள் என்று எனக்கு ஒரு கேள்வி உண்டு. இந்த அறிமுகம் எல்லாம் வெற்று சம்பிரதாயம்தான் என்றுதான் தோன்றுகிறது. அதனால் அவர்கள் எழுத்தைப் பற்றிய என்னுடைய பர்சனல் கருத்துகளை, விமர்சனங்களைத்தான் முன்வைக்கப் போகிறேன்.

பிஏகே வயதில் மூத்தவராக இருந்தாலும் ஜெயமோகன்தான் மூத்த எழுத்தாளர். அதனால் ஜெயமோகனிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்.

தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதான். ஆனால் என் கருத்தில் பிரதாப முதலியார் சரித்திரம் இலக்கியம் இல்லை, முன்னோடி முயற்சி மட்டுமே. என்னைப் பொறுத்த வரை தமிழில் புனைவு இலக்கியம் என்பது 1893-ஆம் ஆண்டு வெளிவந்த ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்திலிருந்துதான் தொடங்குகிறது. கிட்டத்தட்ட நூற்று இருபது ஆண்டுகள் நீண்ட இந்த புனைவிலக்கிய வரலாறு புதுமைப்பித்தன், கு.ப.ரா., ந. பிச்சமூர்த்தி, க.நா.சு., எம்.வி. வெங்கட்ராம், ஜெயகாந்தன், பூமணி, சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், நாஞ்சில், பிஏகே என்று பல சாதனையாளர்களை சந்தித்திருக்கிறது. இந்த நீண்ட வரிசையில் புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும்தான் நான் மேதைகள் என்று வகைப்படுத்துவேன்.

jeyamohanவிஷ்ணுபுரத்தைப் பற்றி பேசாமல் ஜெயமோகன் என்ற எழுத்தாளரைப் பற்றி பேச முடியாது. ஆனால் ஆயிரம் பக்கம் உள்ள விஷ்ணுபுரத்தைப் பற்றி அரை நிமிஷத்தில் எப்படிப் பேச? என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். இந்திய தத்துவ மரபில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. உலகே மாயம் என்றால் சரி இருந்துவிட்டுப் போகட்டும் லஞ்சுக்கு என்ன என்று கேட்கும் ஆசாமி நான். விஷ்ணுபுரத்தின் இரண்டாம் பகுதி தத்துவப் பகுதி என்றே சொல்லலாம். என்னைக் கட்டிப்போட்ட பகுதி அது. புத்தகத்தை கீழே வைக்காமல் வாசித்தேன்.

விஷ்ணுபுரத்தையே ஜெயமோகனின் நாவல்களில் தலை சிறந்ததாகக் கருதுகிறேன். தமிழ் நாவல்களிலேயே அதைத்தான் சிறந்த நாவல் என்று கருதுகிறேன்.

பின் தொடரும் நிழலின் குரல், காடு, வெள்ளை யானை நாவல்களையும் நான் தமிழ் நாவல்களின் முதல் வரிசையில் வைப்பேன். நான் இன்னும் கொற்றவையைப் படித்து முடிக்கவில்லை. ஜெயமோகன் இன்னும் வெண்முரசை எழுதி முடிக்கவில்லை. அனேகமாக இவை இரண்டும் முதல் வரிசையில்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக நீலம் பகுதி. இதற்கு முன் இது போன்ற முயற்சி நிச்சயமாகத் தமிழில் வந்ததில்லை. உலக இலக்கியத்திலும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை.

நாவல்களில் மட்டுமல்ல, ஜெயமோகன் சிறுகதைகளிலும் சாதனையாளர்தான். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை உலகத் தரத்தில் எழுதப்பட்டவை. எனக்குப் பிடித்த 10 சிறுகதைகளை பின்னால் பட்டியலாகத் தருகிறேன்.

ஜெயமோகனின் இன்னொரு முக்கியப் பங்களிப்பாக நான் கருதுவது காந்தியின் சிந்தனைகளை என் போன்றவர்களுக்கு “மொழிபெயர்ப்பது”. காந்தி என்ன செய்தார் என்பது நம் அனைவருக்கும் அனேகமாகத் தெரியும். ஆனால் அவரது சிந்தனைகள், அவை எப்படி பரிணாமம் அடைந்தன என்பதை பல கட்டுரைகளில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். இன்றைய காந்தி புத்தகத்தை நான் பலமாக பரிந்துரைக்கிறேன். அயோத்திதாசர் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் முக்கியமானவை.

ஜெயமோகனின் மற்றொரு முக்கிய பங்களிப்பு இலக்கிய விமர்சனம். சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள் என்று அவர் போட்டிருக்கும் பட்டியல்கள் தமிழ் சூழ்நிலையில் seminal பங்களிப்புகள். குறிப்பாக வணிக இலக்கியத்துக்கு அவர் தந்திருக்கும் அங்கீகாரம் மிக முக்கியமானது.

ஜெயமோகன் அதீதங்களின் எழுத்தாளர். அசோகமித்ரனுக்கு நேர் எதிர். எதிர்மறை விமர்சனம் என்று சொன்னால் சில சமயம் அதீதத்தின் மீது அதீதம் என்பது திகட்டிவிடுகிறது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை அவரிடமே ஒரு முறை சொல்லி இருக்கிறேன், அவர் சாதாரணத்தைப் பற்றி என்ன எழுதுவது என்று என்னைத் திருப்பிக் கேட்டார். அப்படி எழுதுவது அவருக்கு கஷ்டமாக இருக்காது, ஆனால் மனம் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

பேசிக் கொண்டே போகலாம், ஆனால் இளையவருக்கு தாவிவிடப் போகிறேன்.

p_a_krishnanபிஏகேவின் பங்களிப்பை எண்ணிக்கையால் அளவிட முடியாது. அவர் இரண்டு நாவல்கள், இரண்டு மூன்று அபுனைவுகளை மட்டும்தான் எழுதி இருக்கிறார். ஆனால் அவர் தமிழின் முதல் வரிசை எழுத்தாளர் என்று கூரை மேல் ஏறிக் கூவவும் நான் தயங்க மாட்டேன்.

புலிநகக் கொன்றை தமிழின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு குடும்பத்தின் கதையை சட்டகமாக வைத்து 1870களிலிருந்து 1970கள் வரை தமிழக அரசியலில் வெவ்வேறு கட்டங்களில் ஓங்கி நின்ற சித்தாந்தங்களை விவரிக்கும் அரசியல் நாவல் இது. அதிலும் நெருக்கடி நிலை காலத்தில் போலீசிடம் சிக்கி இறக்கும் நம்பி பாத்திரம் மறக்க முடியாதது.

கலங்கிய நதி நாவலில் காந்தி ஒரு பாத்திரமாக இல்லை. ஆனால் அது காந்தியைப் பற்றிய நாவல்தான். காந்திக்கு மிக அருகே நம்மை கொண்டு செல்கிறார்.

மேற்கத்திய ஓவியங்கள் அவருடைய முக்கியமான அபுனைவு. பாலாஜி அதைப் பற்றி விவரமாகப் பேசப் போகிறார்.

இருவரையும் படித்திருப்பீர்கள் என்று முன்னால் சொன்னேன். அப்படிப் படிக்கவில்லை என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள். இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் இப்படி அணுகுவது உங்களுக்கு சுலபமாக இருக்கலாம்.

ஜெயமோகனின் நாவல்களில் ஏழாம் உலகத்திலிருந்தோ வெள்ளை யானையிலிருந்தோ ஆரம்பிக்கலாம். அங்கிருந்து நான் பரிந்துரைக்கும் வரிசை: காடு, பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம், கொற்றவை. எனக்கு பர்சனலாக கஷ்டமாக இருந்த, ஆனால் உயர்ந்த படைப்பு – வெண்முரசு வரிசையில் வந்த நீலம்.

நான் பரிந்துரைக்கும் பத்து சிறுகதைகள்.
<

 1. மாடன் மோட்சம்
 2. ஊமைச்செந்நாய்
 3. படுகை
 4. திசைகளின் நடுவே
 5. வணங்கான் (பகுதி 1, பகுதி 2)
 6. அறம்
 7. யானை டாக்டர்(பகுதி 1, பகுதி 2, பகுதி 3)
 8. பித்தம்
 9. அவதாரம்
 10. லங்காதகனம்

அபுனைவுகள்
இன்றைய காந்தி
அயோத்திதாசர் பற்றிய கட்டுரைகள் (புத்தகமாக வந்ததா என்று தெரியவில்லை)

பட்டியல்கள்:
சிறந்த தமிழ் நாவல்கள்
சிறந்த தமிழ் சிறுகதைகள்
ஜெயமோகன் இந்தப் பட்டியல்களைப் போட்டு பதினைந்து வருஷம் ஆகிவிட்டது, நீங்கள் இவற்றை update செய்ய வேண்டும்.

பிஏகே
புலிநகக் கொன்றை
கலங்கிய நதி
மேற்கத்திய ஓவியங்கள்

தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கு காடு, புலிநகக் கொன்றை, கலங்கிய நதி ஆகியவற்றுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

இந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியும் இரண்டு வார்த்தைகள். இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தை ஆழ்ந்து அனுபவிப்பவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். மிக சுவாரசியமான பேச்சாளர்கள்

ஜெயமோகன் தன் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் ஊர் சுற்றுவதும் மட்டுமே என்று வாழ்பவர். பிஏகே இவற்றில்தான் மும்முரமாக இருக்கிறார், ஆனால் இதுதான் என் வாழ்வின் குறிக்கோள் என்று சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நிகழ்ச்சிகள், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்

பி.ஏ.கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’

p_a_krishnanசிலிகன் பள்ளத்தாக்கு பாரதி தமிழ்ச் சங்கம் எழுத்தாளர்கள் ஜெயமோகனையும் பி.ஏ. கிருஷ்ணனையும் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நண்பர் பாலாஜி ஆற்றிய உரை கீழே.

தன்னுடைய புத்தகத்தில் திரு. பி.ஏ. கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை சொல்கிறார்: ஐம்பது வருடங்களுக்கு முன்னால் திருநெல்வேலி ஜங்ஷனில் ஒரு டாக்டரின் வரவேற்பு அறையில் ஒரு படம் ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அந்த ஓவியத்தில் ஒருவனின் உடல் மேஜை மேல் கிடத்தப்பட்டிருந்தது. இடக்கை அறுக்கப்பட்டு உள்ளே இருக்கும் சதை தெளிவாகத் தெரிந்தது. மருத்துவர் ஒருவர் கையில் கூர்மையான உலோகக் குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் படம் பி.ஏ.கேவை ஈர்த்திருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து ஹேக்கில் மாரிட்ஸ்ஹ்யூஸ் மியூஸியத்தில் அந்த ஓவியத்தை பிஏகே பார்க்கிறார், பழைய நினைவுகள் வெள்ளமிடுகின்றன. எத்தனை வருடங்கள் ஆனாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில் அந்த பிம்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

rembrandt_anatomy_lesson_of_dr_tulp

அந்த ஓவியம் “Anatomy lesson of Dr. Tulp” ரெம்ப்ராண்ட்டுடையது.

நான் அந்த ஓவியத்தை முதன் முதலில் பார்த்தது, ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் டிரிவியாவை படிக்கும்போது. அதில் ஒரு பானல் அப்படியே அனாடமி லெசனைப் போலவே அமைந்திருக்கும்.
asterix_obelix_anatomy_lesson_of_dr_tulp

எத்தனையோ ஓவியங்கள் நம்முன் பல வடிவங்களில் வந்து போகின்றன. சில மனதுக்குள் தங்கிவிடுகின்றன. மகத்தான ஓவியங்கள் பல வகைகளில் நம் சிந்தனைகளை, நம் கற்பனையை தூண்டிவிடுகின்றன. இதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம். இங்குள்ள பல ஆபீஸ் வரவேற்பறைகளில் இருக்கும் வான் கோவின் Sunflowers, இல்லை மோனேவின் வாட்டல் லில்லீஸ். திரும்பத் திரும்ப பாப்புலர் கல்ச்சரில் தன் தடங்களை பதித்துக்கொண்டே செல்கின்றன இவ்வோவியங்கள். திரு. ஜெயமோகன் அடிக்கடி கூறும் செவ்விலக்கியத்தின் பாதிப்பு இதைப் போலத்தான். சில தினங்களுக்கு முன் ஒரு தமிழ் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலைப் பற்றி. ஆர்.கே நகரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர், டிராஃபிக் ராமசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் பெரிய அலையில் அடித்து செல்லப்படுவதாக ஒரு கார்ட்டூன். கார்ட்டூன் முக்கியமில்லை. ஆனால், அதில் அந்த அலை… அப்படியே ஹொகுசாயின் Great wave off Kanagawaவை நகல் எடுத்திருந்தது. அலை என்றாலே அந்த ஓவியம் ஞாபகத்துக்கு வருதே, அது தான் ஓவியத்தின் மகத்துவம்.
great_wave_off_kanagawa

மேற்கத்திய ஓவியங்கள் பி.ஏ.கே எழுதி சென்ற வருடம் வெளியான புத்தகம். இது முதல் பாகம். குகை ஓவியங்களிலிருந்து ஃபெரெஞ்சு புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை. இதை ஒரு எளிய அறிமுகம் என்றோ, நமக்கு புரிய வேண்டும் என்று அச்சுப்பிச்சு நகைச்சுவையோ இல்லாமல், ஒரு ஆத்மார்த்தமான கலாரசிகனால், வரலாற்று மாணவனால் எழுதப்பட்ட புத்தகம். இதையெல்லாம் ரசிக்கணும், ஏன்னா இந்த ஓவியங்களில் இன்னின்ன சூட்சுமங்கள் இருக்கின்றனன்னு ஒரு கோடு போட்டு காண்பிக்கிறார்.

இது போல பல அறிமுகப் புத்தகங்கள் இங்கிலீஷில் வந்திருந்தாலும், அவற்றை விட இது ஒரு படி மேலே இருக்கிறது. முதல் காரணம், ஒவ்வொரு ஓவியத்தையும் பி.ஏ.கே பல வருடங்களாக பார்த்து, படித்து, அனுபவித்து எழுதியிருக்கிறது. வெர்மியரின் girl with the pearl earring பார்க்கும்போது அவர் சொல்கிறார் “நம்மாழ்வார் சொல்லும் அடங்கெழில் சம்பத்து என்ற செல்வ சமுத்திரத்தின் ஒரு திவலை இந்த ஓவியம்”. ஒரு தேர்ந்த ரசிகரின், தன் பயணங்களின் மூலம் பல ஓவியங்களைப் பார்த்தவரின் அனுபவம் நமக்கு இந்தப் புத்தகம் மூலம் கிடைக்கிறது.
vermeer_girl_with_a_pearl_earring

இன்னொன்று, அறிமுகப் புத்தகங்கள் ஒரே சீரான ஸ்ட்ரக்சர் கொண்டவை. எல்லா ஓவியர்களைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பு, அவர்களுடைய படைப்புகளின் ஒன்று இரண்டு எடுத்து அவற்றை விவரித்தல் என்று. பி.ஏ.கேக்கு அப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால், அவருக்கு பிடித்த ஓவியர்களைப் பற்றி விரிவாக எழுத முடிகிறது. டியூரரைப் பற்றி ஒரு முழு சாப்டர். ஓவியர்களிலேயே மிகவும் கலகக்காரனான, சுவாரஸ்யமான வாழ்க்கை வாழ்ந்த காரவாஜ்ஜியோ வாழ்க்கையைப் பற்றி சில பக்கங்களுக்கு வர்ணனை. எனக்குப் பிடித்த டச்சு ஓவியர்கள் ஹல்ஸ், வெர்மியர், ரெம்ப்ராண்ட் பற்றி ஒரு சாப்டர் என்று. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார், எதை ஓரிரு வாக்கியங்களில் கடந்து போகிறார் என்பதை வைத்தே அவரது ரசனையை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

merkatthiya_oviyangalசுமார் 160 ஓவியங்களை விவரிக்கிறது இந்த புத்தகம். ஹார்ட் கவர், முற்றிலும் வண்ணப் பக்கங்கள் என்று எதிலும் காம்பிரமைஸ் செய்துக்கொள்ளாமல் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் சொல்லியிருப்பது போல், தமிழில் இப்போது தான் நாவல் இலக்கியம் என்றால் கல்கி, மு.வ, அகிலன், நா. பா, லக்ஷ்மி என்று அவர்களை கடந்து வர ஆரம்பித்திருக்கிறார்கள். அதே போல், ஓவியத்தைப் பொறுத்த வரையில் தமிழனின் புரிதல்கள் மணியம் செல்வன், மணியம், கோபுலுவோடு முடிந்துவிடுகிறது. இந்த நிலையில் மேற்கத்திய ஓவியங்களைப் பற்றி எழதி பயமுறுத்த வேண்டுமா என்பதற்கு பதில் சொல்கிறார், நல்ல ஓவியங்கள் திறனாய்வாளர்களுக்குப் புதிராக இருக்கும், பல கேள்விகளை எழுப்பும், ஆனால் சாதாரணப் பார்வையாளர்களுக்குச் சொற்களால் விளக்க முடியாத அளவுக்கு பேருவகையை கொடுக்கும், கேட்காமலே பதில்களையும் அளிக்கும் என்கிறார். இதற்கு மேல் இந்தப் புத்தகத்தின் மதிப்பை, இது பட்டியலிடும் ஓவியங்களப் பற்றி கூற முடியுமா என்பது சந்தேகமே.

balaji_srinviasanஇது முதல் பாகம்தான். இரண்டாம் பாகத்தில், இம்பெரஷனிஸத்தையும், மற்ற புதிய மாடர்னிஸ்ட் பெயின்டிங்களையும் பி.ஏ.கே எப்படி கொண்டுவரப் போகிறார் என்று பார்க்க ஆவலாக இருக்கிறேன். இப்படி ஒரு முயற்சி வெளியே வர வேண்டுமானால், முன்பதிவு செலுத்தி வாங்க ஆர்வலர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்ததை முதல் பாகத்துக்கு அனுப்பினோம். இங்கு வந்துள்ளவர்கள் இரண்டாம் பாகத்துக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கத்திய ஓவியங்கள். காலச்சுவடு பதிப்பகம். 2014 வெளியீடு.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: இதே புத்தகத்தைப் பற்றி ஆர்வி

பி.ஏ. கிருஷ்ணனின் “மேற்கத்திய ஓவியங்கள்”

merkatthiya_oviyangalUnputdownable.

மேற்கத்திய ஓவியங்களை ரசிக்காதவர் யாருமில்லை. ஆனால் அவற்றை மேம்போக்காகப் பார்ப்பவர்கள்தான் நம்முள் அனேகம். முதல் பார்வையில் பிடிக்கும் பிடிக்காது என்பது தெரிந்துவிடுகிறது. பிடித்திருந்தால் எந்தக் கூறு நம்மைக் கவர்ந்தது என்று ஒரு நிமிஷம் உற்றுப் பார்க்கிறோம், அது வண்ணங்களோ, இல்லை ஒளி பிரதிபலிப்பதோ, இல்லை தத்ரூபமாக இருப்பதோ இல்லை ஏதோ ஒரு உணர்வை நம்முள் எழுப்புவதோ ஏதோ ஒன்று என்று தெரிகிறது. அடுத்த ஓவியத்துக்கு உடனே நகர்ந்துவிடுகிறோம். அந்த ஓவியங்களை முழுமையாக, வேண்டாம், நம்மைக் கவரக் கூடிய வேறு கூறுகள் இருக்கின்றனவா என்று கூட பார்ப்பதில்லை, பார்க்கத் தெரிவதில்லை.

இதன் மறுபக்கம்: சில பிரபல ஓவியங்களோ நமக்கு ஒண்றும் பிரமாதமாகத் தெரிவதில்லை. மோனாலிசாவில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களை எனக்குத் தெரியும். எனக்கு என்னவோ இருக்கிறது, அது என்ன என்று என்னால் விளக்க முடிந்ததில்லை. ஜியோட்டோவின் ஓவியங்கள் இரண்டு பரிமாணங்களில்தானே தெரிகிறது, இதென்ன பிரமாத ஓவியம் என்று நானே பி.ஏ.கே.வை கேட்டிருக்கிறேன். அதுவும் ஓவிய ம்யூசியங்களில் சென்று பார்க்கும்போது கிடுகிடுவென்று திகட்டிவிடுகிறது, ஐம்பத்தி ஒன்றாவது ஓவியத்தில் இரண்டு நொடிக்கு மேல் செலவழிக்க முடிவதில்லை.

p_a_krishnanநம்மைப் போன்றவர்களுக்கு பி.ஏ.கே.வின் புத்தகம் ஒரு வரப்பிரசாதம். அவர் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அதோ பார் மாபெரும் ஓவியன் ரூபன்ஸ், வரலாற்றில் அவன் இடம் என்ன, அவன் ஓவியத்தில் என்ன புரட்சி செய்தான் என்பதை விட, இதோ பார் ரூபன்சின் ஒரு ஓவியம், அதில் நான் இன்னின்ன கூறுகளை ரசித்தேன், இங்கே ஆணியின் நிழல் விழுந்திருக்கிறதை கவனி, இங்கே ஜன்னல் உடைந்து அதன் வழியாக ஒளி வருவதைப் பார் என்று ஓவியத்தைப் பற்றித்தான் அதிகம் பேசுகிறார். அவர் ஒரு நிபுணராக இந்தப் புத்தகத்தை எழுதவில்லை, விஷய ஞானம் உள்ள சக ரசிகராக, உங்கள் தோள் மீது கை போட்டுக்கொண்டு ஒரு நண்பராக இந்த ஓவியங்களை விளக்குகிறார்.

உலகின் முதல் ஓவியம் என்று கருதப்படும் ஃபரான்சின் குகை ஓவியங்களிலிருந்து ஆரம்பித்து, பண்டைய எகிப்து, கிரீஸ், ரோமப் பேரரசு, மறுமலர்ச்சிக்கு முந்தைய காலம், ஜியோட்டோ, போஷ், டூரர், போட்டிசெல்லி, டாவின்சி, மைக்கேலாஞ்செலோ, ரஃபேல், ப்ருகெல், ரெம்ப்ராண்ட், வெர்மீர், வான் ஐக், கோயா என்று ஒருவரை விடவில்லை. ஒவ்வொரு முக்கியமான ஓவியருக்கும் சில முக்கியமான ஓவியங்களையாவது பதித்து அவற்றை விளக்கி இருக்கிறார். தமிழில் இது மாதிரி ஒரு முயற்சியை நான் பார்த்ததே கேள்விப்பட்டதே இல்லை. கட்டாயம் வாங்கிப் படியுங்கள்!

அவர் தேர்ந்தெடுத்த ஓவியங்களில் 90 சதமாவது எனக்கும் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்தன. அதுவும் சமீபத்தில் அவற்றில் சிலவற்றை நேரில் பார்க்கவும் முடிந்தது. That makes this book extra special!

சில புத்தகங்கள் மனதுக்கு நெருக்கமானவையாக ஆகிவிடுகின்றன. அவற்றில் ஒன்று. அடுத்த பாகம் எப்போது வரும் என்று காத்திருக்கிறேன்!

இவர்கள் இலக்கியத்தில் அறம்

(30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை)

நண்பர்களே,

விதை ஒன்றை நான் அவதானித்த கொண்டிருந்த பொழுது வாழ்வியல் சார்ந்த ஒரு மேன்மையான உருவகத்தை அதனிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒரு விதை பூமிக்குள் விதைக்கப்படுகிறது. இரண்டு அங்கங்களுடன் அதன் வாழ்க்கை பயணம் துவங்குகிறது. இரண்டு வெவ்வேறு திசைகளில். ஒன்று, கீழ் திசை. தாழ்ந்த திசை. அது ஒரு இருண்ட இடம். புழுக்கமான இடம். இன்னும் சொல்லபோனால் புழுக்கள் நெளியும், ஜந்துக்கள் வசிக்கும் ஒரு இடம். அந்த விதை தனக்காக, தன்னை பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள, தன் சுயநலனுக்காக சஞ்சரிக்குமிடம். ஆனால் அதற்கு வேறு வழியில்லை. அப்படிதான் அது தன்னை நிலை நாட்டிக்கொண்டாக வேண்டியுள்ளது. பூமிக்குள் நடக்கும் அந்த போராட்டத்தில் மேலும் மேலும் வென்று, தன் இருத்தலை தாங்கி நிற்கும் உறுதியான வேர் பகுதியாக பரிணமிக்கிறது.

இரண்டாவது அங்கம் மேல் திசையில் வளர்கிறது. உயர்ந்த திசை. அது வெளிச்சமான இடம். காற்றோட்டம் நிறைந்தது. மகிழ்ச்சியான இடம். அது தன்னை பிறருக்காக அர்பணிக்குமிடம். அதாவது அது செடியாக வளரும் பொழுதே பிறருக்காக தன்னை அர்பணிக்க தொடங்குகிறது. விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தன்னை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. அது தன் இலைகளை தருகிறது. காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. நிழல் கொடுக்கிறது. இறுதியில் மனிதன் தன்னை அழித்த பிறகும் பல வகையில் உதவிக்கொண்டிருக்கிறது. காகிதமாக, கதவாக, நாற்காலியாக, கட்டிலாக அல்லது எரிபொருளாக.

இது இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை முறை. சராசரி மனிதர்களின் வாழ்க்கை இரண்டாவது அங்கம் இல்லாத ஒரு ஊணமுற்ற வாழ்க்கை. நல்ல ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கை ஊணமற்றது. அவன் உலக லௌகீகம் என்ற இருண்ட, புழுக்கமான இடத்தில் தன்னை நிலை நாட்டிகொள்ள ஒரு புறம் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகுக்காக தன்னை அர்பணிக்கவும் தொடங்கிவிடுகிறான். அந்த அர்பணிப்பின் பலனை அவன் மறைந்த பிறகும் உலகம் அனுபவிக்கிறது. அந்த அர்பணிப்பின் சமுதாய அங்கீகரிப்பே அவனுக்கு அது பெற்று தரும் பரிசுகளும், பதக்கங்களும்.

ஆனால் தவறிழைக்க வேண்டாம். நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை மேற்கொள்ளவில்லை.  அவர்கள் தங்கள் எழுத்தின் உன்னதத்தையே இலக்காக கொண்டிருக்கிறார்கள். கலங்கிய நதி, தலை கீழ் விகிதம் என்றெல்லாம் இவர்கள் படைத்தது ஏதோ நான்கு பேருக்கு பொழுது போகட்டுமே, நமக்கும் பரிசு கிடைக்கட்டுமே என்பதற்காக அல்ல. அவை, தான் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். அவர்களின் படைப்புகளை கூர்ந்து நோக்கும் பொழுது, அவை வாசகர்களின் நுண்ணுணர்வுகளுடன் உறவாடி, கலந்துறையாடி அவர்களின் வாழ்க்கையை அறம் நோக்கி திசை திருப்பும் முயற்சிகள் என்பது புலப்படும். அந்த முயற்சியின் உன்னதத்தையே தங்கள் இலக்காக கொண்டு பயணிக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதை Excellence என்று கூறுகிறார்கள். தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்து விட்டதாக நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் மேன்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். அதாவது “Raising the Bar” என்கிறோமே-அதை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். வாசகர்களான நமக்கு இது ஒரு பெரும் கொடை. இது போன்ற படைப்பூக்கமே புதிய கதவுகளை நமக்கு திறக்கிறது. புதிய எல்லைகளை நம் முன் விரிக்கிறது. இதன் நன்மைகளை நாம் ஒரு சமுதாய சாத்தியமாக அமைத்துக் கொள்ள இலக்கிய வாசிப்பை ஒரு சமுதாயமாக வளர்த்துதெடுக்க வேண்டும்.

இவற்றை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு, ஏன் இலக்கியம் பக்கம் கவனம் செலுத்தவேண்டும்? லௌகீகவாதிகளுக்கு இலக்கியம் எம்முறையில் தொடர்புடையது? அப்படியே ஒரு தொடர்பை கண்டுகொண்டாலும், எவ்விதத்தில் தான் அது நடைமுறைக்கு சாத்தியம்? என்ற கேள்விகளே மிஞ்சுகிறது. அதற்கு லௌகீகவாதிகள் தாங்கள் பயணம் செய்யும் வேகத்தடத்திலிருந்து மெதுதடத்திற்கு தடம் மாறி சிந்திக்கவேண்டும். இன்று நாம் இருப்பின் அச்சாக கருதுவது என்ன? அல்லும் பகலும் அனவரதமும் நாம் சிந்திப்பது பொருள்-பணம். அந்த பொருளை ஈட்டித்தரும் தொழிலையோ அல்லது அந்தத் தொழிலால் வரும் பொருளையோதான் நாம் வாழ்க்கையாக உருமாற்றி அறத்தை நம்மிடமிருந்து அறுத்தெறிந்து வாழ்க்கையே நாம் தொலைத்து நிற்கிறோம். அதை நாம் நம் வாழ்க்கையின் பின் பகுதிகளிலேயே உணர்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

பணத்தையே குறியாகக் கொண்டு வாழும் பொழுது அதற்கு இடைஞ்சலாக கருதி நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை புறக்கணிக்கிறோம். பண்புகளை புறக்கணிக்கிறோம். பிறர் காட்டும் அன்பை புறக்கணிக்கிறோம். பிறரிடம் காட்ட வேண்டிய அன்பை புறக்கணிக்கிறோம். முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நமது வாழ்க்கைமுறைகளையும் புறக்கணிக்கிறோம். நம் அடையாளத்தை புறக்கணிக்கிறோம். சொல்லப்போனால் இவற்றையெல்லாம் பிற்போக்கு என்று எள்ளி நகையாடி, இன்னும் மானுட உயர்பண்புகளையும், நம் அடையாளங்களையும் கடைபிடிப்பவர்களை அசௌகரியப் படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். அந்த அசௌகர்ய, அவமானங்களால் மன வலுவற்ற சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஒட்டு மொத்த மக்களின் எண்ணங்களும் சீர்குலைந்து மானுட கலாச்சாரம் சிதைக்கப்பட்டு நாளடைவில் எப்படியும் வாழலாம் என்று நியாயப்படுத்தி, கடைபிடித்து, கடைபிடிக்கவைத்து சமுதாய அறத்தை வீழ்ச் செய்கிறோம்.

இப்பொழுது நாம் அப்படிப்பட்ட ஒரு புள்ளியில் தான் நின்று கொண்டிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் நாடனுடன், பி.ஏ.கேயுடனும் வெவ்வேறு சந்தர்பத்தில் உரையாடி கொண்டிருந்த பொழுது இருவருமே சமுதாய அறச் சரிவை பல வகையில் சிந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பல குணாதிசயங்களை பட்டியலிட்டார்கள்.

உதாரணமாக, தமிழர் ஒருவரின் வீட்டின் வழியே செல்லும் அறிமுகமில்லாத ஒருவன் வந்து தண்ணீர் கேட்டால் தண்ணீருக்கு பதில் மோர் கொடுக்கும் காலம் இருந்தது. வழிபோக்கன் ஒருவன் இரவு தங்க இடம் கேட்டால் வீட்டின் வாசல் பக்கம் உள்ள திண்ணையையாவது ஒழித்து கொடுக்கும் வழக்கம் இருந்த காலம் உண்டு. தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றிருந்த காலம் உண்டு. வீட்டிற்கு எவரேனும் வந்தால் அவரை உட்கார வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் அறிமுகமில்லாதவன் ஆபத்தானவன் என்ற நொண்டிச்சாக்கை பேசி, நாம் முன் கதவை இரும்புத் தாழ் போடுகிறோம். ஆபத்து அன்றும் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஆபத்திற்கிடையே தான் அன்பை தக்கவைத்தார்கள். இது போன்ற அடிப்படை பண்பை தக்க வைத்தார்கள். மானுட அறத்தை தக்கவைத்தார்கள்.

இன்று நம் சமுதாய சூழலில் பலர் மாபெரும் சித்தாந்தவாதிகளின் வல்லமைக்கான சங்கற்பம், அப்ஜெக்டிவிஸம் போன்ற கருத்துகளை உள்நோக்கத்துடன் தங்கள் வசதிப்படி அறத்திற்கு எதிர்மறையாக திரித்தும், திரித்ததை வளர்த்தும் எடுத்து பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பட்ட கொள்கைகளே மக்களிடம் ஊடுருவி இன்று சராசரி மக்கள் அறத்தை மறந்து சுயநலத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தப் போக்கை மறுபரிசீலனை செய்ய நம்மிடம் ஒரு கருவி இருக்கிறது. நாம் நம் தொழிலில் பலகாலங்கள் பணிபுரிந்த பிறகு Refresher course எனப்படும் வலுவூட்டும் ஆதரவு பயிற்சி கொடுக்கப்படும். இங்கு டிரைவிங் லைசென்ஸை புதுபிக்க வேண்டுமானால் கூட சில இடங்களில் இந்த வலுவூட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்றைய சமுதாய சூழலில், பள்ளியில் படித்த அறக் கல்வியை கடந்து  வயது வந்தபிறகு அறம் பற்றி முறையான கல்வி நமக்கு கிடைப்பதில்லை.  அந்த வெற்றிடத்தை அறத்தை பிரச்சாரம் செய்யும் நல்ல இலக்கியங்கள் நிரப்புகிறது. பிஏகே அவர்களின் கலங்கிய நதி ரமேஷ் சந்திரனாகட்டும், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் சிவதானுவாகட்டும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டும் இல்லை. அவர்கள் அறத்தின் குறியீடு. அந்த இலக்கியங்கள் அறத்தின் சொல் வெளிப்பாடு. சங்க கால இலக்கியமான திருக்குறள், ஆத்திச்சுடி போன்றவற்றின் நவீன விரிவான வடிவம்.

இலக்கியங்கள் நம் வாழ்க்கையை நாம் மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் தேடி அடைந்தால் மிகவும் சிறப்பு. ஏன் தேடி அடைகிறோம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியையும் பக்குவத்தையும் ஓரளவு அடைந்துவிட்டோம் என்பதாலேயே. இது தவிர, சந்தர்ப்ப வசத்தால் இலக்கியம் நம்மை அடைந்தாலும் தவறொன்றுமில்லை. ஆனால் அதை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும்.  இன்றைய சூழலில், சமகாலத்தில், நாஞ்சில் நாடன், பிஏகே போன்ற எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் படைப்புகளை கொண்டாடினால் அது சமூகத்தில் அறத்தை நாம் மீண்டும் சென்றடையும் ஒரு வழியாகும். அதுவே அவர்களின் எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி, பதக்கம், பரிசு.

நன்றி.

சொல்லவே இல்ல!

பி.ஏ. கிருஷ்ணன் சொன்ன ஒரு ஜோக்:

அவரது பால்யகால நண்பர் ஒருவர் புலிநகக் கொன்றை புத்தகத்தைப் பார்த்துவிட்டு சொன்னாராம் – “டேய் நீ botany எல்லாம் எப்படா படிச்சே?”

பின்குறிப்பு: அப்போது ராஜன் அங்கே இருந்தார். அவருக்கு ஒரு சின்னக் குழப்பம். நண்பர் zoology எப்ப படிச்சே என்று கேட்காமல் botany பற்றி ஏன் விசாரிக்கிறார்?

பி.ஏ. கிருஷ்ணனின் இலக்கிய இடம்

ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் நான் பி.ஏ. கிருஷ்ணனைப் பற்றி பேசியது.

பி.ஏ.கே. இரண்டு நாவல்கள்தான் எழுதி இருக்கிறார் – புலிநகக் கொன்றை, கலங்கிய நதி. சிறுகதைகள் எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை. சில கட்டுரைகளை எழுதி இருக்கிறார், அவை திரும்பிச் சென்ற தருணம், அக்ரஹாரத்தில் பெரியார் என்று தொகுப்புகளாக வந்திருக்கின்றன.

இலக்கியம் என்பது என்ன? இதை வரையறுப்பது மிகவும் கஷ்டமான செயல். ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் என்ற புகழ் பெற்ற அமெரிக்க நீதிபதி ஒரு முறை சொன்னாராம் – “ஆபாசம் என்ன என்பதை என்னால் வரையறுக்க முடியாது, ஆனால் இது ஆபாசமா இல்லையா என்று பார்த்தால் சொல்லிவிடுவேன்” என்று. அப்படித்தான் வரையறுக்க முடிகிறதோ இல்லையோ படிக்கும் ஒவ்வொருவருக்கும் எது இலக்கியம் எது இல்லை என்று தெரிகிறது.

ஒவ்வொரு முறையும் இலக்கியம் என்பது என்ன என்ற கேள்வியை என்னை நானே கேட்டுக் கொள்ளும்போது வேறு வேறு விதமாக விடையளிக்கிறேன். இன்றைக்கு இப்படி சொல்வேன் – ஒரு நல்ல நாவல் சுவாரசியமான ஒரு கதையை, உண்மையான பாத்திரங்கள், சம்பவங்கள் மூலம் முன்னால் வைக்கிறது. ஆனால் கதை புறவயமான சம்பவங்களோடு நின்றுவிடும்போது நல்ல த்ரில்லர், துப்பறியும் கதை, social/historical romances என்ற அளவோடு நின்றுவிடுகிறது. அதன் பின்புலத்தில் வேறு ஒரு கரு, ஒரு தரிசனம் ஓடும்போது, அகவயமான சித்தரிப்பு படிப்பவர்களின் மனதில் கேள்விகளை எழுப்பும்போது, படிப்பவர்களை யோசிக்க வைக்கும்போது அது இலக்கியம் ஆகிறது.

பி.ஏ.கே.யின் இரண்டு நாவல்களும் இந்த வரையறைப்படி பார்த்தால் சிறந்த இலக்கியப் படைப்புகள். புலிநகக் கொன்றை ஒரு உண்டியல் கடை (வட்டிக்கு கடன் தருபவர், அந்தக் கால வங்கி) குடும்பத்தின் கிட்டத்தட்ட இருநூறு வருஷங்களை சித்தரிக்கிறது. மேல்தட்டு, பணக்கார, பிராமணக் குடும்பம். நம் எல்லாருக்கும் தெரிந்த வரலாற்று நிகழ்ச்சிகள் அந்தக் குடும்பத்தைத் தொட்டுச் செல்கின்றன. வரலாறு அந்தக் குடும்பத்தை எப்படி எல்லாம் தொடுகிறது என்பது பின்புலத்தின் முக்கியக் கரு. A cross-section of history through unofficial eyes என்று சொல்லலாம். ஊமைத்துரையின் தொடரும் போர், விதவா விவாகம், திருநெல்வேலிப் “புரட்சி”, ஆஷ் கொலை, சுதந்திரப் போராட்டம் என்று தொடர்ந்து சென்று நெருக்கடி நிலை காலத்தில் முடிகிறது. பொன்னா பாட்டி, ஆண்டாள், நம்பி மறக்க முடியாத பாத்திரங்கள். குறிப்பாக நம்பியின் மரணத்தின் குரூரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உண்மைச் சம்பவத்தால் inspire ஆன சம்பவம் என்பது அதன் poignancy-ஐ அதிகரிக்கிறது.

கலங்கிய நதியை மேலோட்டமாக ஒரு இடைநிலை அரசு அதிகாரியின் சுவாரசியமான அனுபவங்கள் என்று சொல்லலாம். இ.பா.வை டெல்லி அதிகார வர்க்கத்தை அங்கதமாக சித்தரிப்பதில் வல்லவர் என்று சொல்வார்கள். பி.ஏ.கே. beats இ.பா. at his own game. Bureaucracy-யின் வெட்டி அதிகார விளையாட்டுகளை பிரமாதமாக நக்கல் அடிக்கிறார். நம்பகத் தன்மை உள்ள சித்தரிப்பு. அவர் விவரிக்கும் ஒரு ஊழலை புரிந்து கொள்ள எனக்கு நேரம் ஆயிற்று; பி.ஏ.கே. அது உண்மையாக நடந்தது என்றும் இந்தப் புத்தகத்தை எழுத முக்கியமான உந்துதல் அந்தப் பணத்தை எப்படியாவது திருப்பி வாங்குவதற்கு ஒரு push தருவது என்றும் சொன்னார். அஸ்ஸாமில் கடத்தப்பட்ட ஒரு என்ஜினியரை மீட்கச் செல்லும் சந்திரனின் குழப்பங்கள், போராட்டங்கள், அஸ்ஸாமில் எல்லாருக்கும் இந்தப் போராளிகளுடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பது, காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் சித்தரிப்பு, சிம்மாசலம் கோவிலில் பசுக்களை கசாப்பு கடைக்கு விற்பது எல்லாம் வெகு யதார்த்தமாக இருக்கின்றன. அடியில் ஓடும் கருவாக காந்தி. குறிப்பாக சந்திரனின் அப்பா காந்தியைப் பற்றி பேசும் இடம் மிகவும் அற்புதமானது.

பி.ஏ.கே.வின் இந்த இரண்டு புத்தகங்களுமே, புத்தகங்களின் தரிசனங்கள் எல்லாம், என் தர்க்க அறிவைத் தூண்டுகின்றன, என் மூளையைத் தொடுகின்றன, ஆனால் என் உள்ளத்தைத் தொடவில்லை. குறை என்று சொன்னால் இதைத்தான் சொல்ல வேண்டும். இத்தனைக்கும் நம்பியின் மரணம், ராஜ்வன்ஷி போன்ற பாத்திரங்கள், காந்தியைப் பற்றிய சித்தரிப்பு எல்லாம் உள்ளத்தைத் தொடத்தான் செய்கின்றன, ஆனால் புத்தகத்துக்குள் முழுகிவிடுவது என்பது நடக்கவில்லை. கதையை வெளியே இருந்துதான் பார்க்கிறேன், உத்திகளை, வடிவ கச்சிதத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன், கதைக்குள்ளே போய்விடுவது என்பது நடக்கவில்லை. These books deal with the reader at the cerebral level only. குறை என்று சொல்ல வேண்டுமென்றால் இதைத்தான் சொல்வேன். பி.ஏ.கே.வே இவை அரசியல் நாவல்கள், இந்த எதிர்பார்ப்புடன்தான் நான் படித்திருக்க வேண்டும் என்று விளக்கினார்.

இரண்டு நாவல்கள்தான், ஆனால் பி.ஏ.கே. தமிழ் இலக்கிய உலகில் உயர்ந்த இடத்தை அடைந்துவிட்டார். முக்கியமான தமிழ் படைப்பாளியாகிவிட்டார்.

பி.ஏ.கே.யைப் பற்றி இந்த அறிமுகத்தை என் 14 வயதுப் பெண் ஸ்ரேயாவின் உதவி இல்லாமல் எழுதி இருக்க முடியாது. என்ன பேசுவது என்று குழம்பிக் கொண்டிருந்தேன். ஸ்ரேயாவிடம் இரண்டு கதைகளையும் விவரித்தேன். அவள் மனதில் பதிந்தது நம்பியின் மரணம். ஆறிப் போகும் டீ. பஸ்ஸில் போன முதல்வர். Going nuts about nuts. என் மனதில் எது பதிந்திருக்கிறது என்பதை என்னை உணர வைத்தாள். இரண்டு புத்தகங்களும் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அமெரிக்காவில் வளரும் உங்கள் குழந்தைகளுக்கும் படிக்கக் கொடுக்கலாம். சவுகரியம்!

ஸ்ரேயாவிடம் நீ இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தால் படிப்பாயா என்று கேட்டேன். அவள் யோசித்துவிட்டு “You know, like, maybe, perhaps, I may read the Muddy River, like, like, maybe, it is kind of sort of different from what I like, usually read, and like, actually like, you know, but it would be easier to kind of sort of understand; maybe, perhaps, I would, like, you know, like it!” என்று சொன்னாள். I like that!

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம்

பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய “கலங்கிய நதி”

நண்பர் விசு ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியது

நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில் வாசித்துவிடக்கூடிய எளிய நாவல். கதை நடக்கும் காலம் அதிகபட்சம் சில வருடங்கள், கதையின் களம் பெரும்பகுதி அஸ்ஸாம்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். குணமடைந்து கொண்டிருக்கும் ஓய்வு நேரத்தில், தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘This street has no other side’ என்ற நாவலை எழுதுகிறார். ‘This street has no other side’ நாவல், அந்த நாவலில் சொல்லப்படாத நிகழ்வுகள் மற்றும் நாவலின் விமர்சனத்தை உள்ளடக்கியதே ‘கலங்கிய நதி’. இந்த நாவலுக்குள் நாவல் வடிவத்தில், எது புனைவு, எது நிஜம் என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். நாவலில் மூன்று சரடுகள் உள்ளன. (அவை)

 1. அஸ்ஸாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளரை மீட்கப் போராடும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன்
 2. Transmission tower கட்டுமானத்தில் நடைபெறும் நுண்மையான ஊழலை கண்டுபிடித்து ஆராயும் ரமேஷ் சந்திரன்
 3. ரமேஷ் சந்திரனுக்கும் அவர் மனைவி சுகன்யா, செக்ரட்டரி அனுபமா, திருமதி. கோஷ் உள்ளிட்ட மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவு

அரசு அதிகார வரைமுறைகளில் உள்ள அபத்தத்தை, தமிழ் நாவல்களிலேயே, இந்நாவல் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கும் வேறோரு நாவல் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அரசு அதிகாரிகளின் தோரனை, ஜூனியர் அதிகாரிகளை ஏவலர்களாக நடத்தும் மனப்பாங்கு போன்றவற்றை சித்தரிக்கும் பகுதிகள் சிறந்த நகைச்சுவை கதைகள் போல உள்ளன. இதில் உள்ள அங்கத அம்சத்திற்கு ஒரு உதாரணம்: உயர் அதிகாரியின் தேநீர் ஆறிப்போவதை அவருக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நினைவுபடுத்த அலாரம் நிறுவ பரிந்துரைக்கும் பகுதி. அதே சமயம், இந்தக் கூட்டம்தான் இந்தியாவை ஆள்கிறது என நினைக்கும்போது, comedy, dark comedyயாக மாறுகிறது.

நாவலின் ஒரு சரடான ஊழல் பற்றி பார்ப்போம். விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற சொல்லாட்சியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழலை இந்நாவலில் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான், Transmission tower கட்டுமான ஊழல் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்றே புரிகிறது. அஸ்ஸாமிய மின்பகிர்மான கம்பெனிக்காக, Transmission towerகள் கட்டுவதை குத்தகைக்கெடுத்த நிறுவனம், அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகிற்கு வரிவிலக்கு பெறுகிறது. ஆனால், வரிவிலக்கு பெற்ற தொகையை வரி கட்டியதாக கணக்குகாட்டி ஊழல் செய்கிறார்கள். ஊழலின் அளவு முப்பது கோடிதான். 2ஜி காலத்தில் இந்த ஊழல் ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மிக நுட்பமான முறையில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும், அந்த சிறிய தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலையும் நம்பகத்தன்மையோடு சித்தரித்திருக்கிறார். (இதுவும் ஒரு உண்மையில் நடைபெற்ற ஊழலின் புனைவு வடிவமே).

அடுத்ததாக தீவிரவாதப் பிரச்சனை. உல்ஃபா தீவிரவாதிகள், அஸ்ஸாமிய மின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் நியமிக்கப்படுகிறார். பிரச்சனை சூடாக இருக்கும் வரை ஊடங்களும், அரசும் மீட்பில் முனைப்பாக இருக்கின்றனர். பின்பு, ரமேஷைத் தவிர யாரும் வேறு யாரும் கண்டுகொள்விதில்லை. கடைசியில், யாரும் கண்டு கொள்ளாமல் போவதாலேயே, தீவிரவாதிகள் முதலில் கேட்ட பணயத் தொகையில் இருபது மடங்கு குறைவான தொகைக்கு விடுவிக்கின்றனர். இந்நாவலில், பகதத்தனின் கதை, ஜதிங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் கன்றுகள் என பல்வேறு விதமாக தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறை, லட்சியவாதம், சித்தாந்தம் என்றால் பூச்சிக்கொல்லிகளில் வீரியமான ரகங்கள் என்றே நினைக்கிறோம். சித்தாந்தத்தினாலோ, லட்சியத்தாலோ ஈர்க்கப்படுதல் என்றால் என்னவென்றே புரியவில்லை. சென்ற ஆண்டு கம்போடியா சென்று வந்தேன். மார்க்சிய சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பிழையின் வடுவாக, கம்போடியத் தலைநகர் ப்னோம்பென்னில் ஐந்து மாடி கட்டிட உயரத்திற்கு, மண்டையோடுகளால் ஆன ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. அதைப்பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கம்போடிய கொலைக்களங்கள், நாஜிக்களின் ஆஸ்விட்ச் கொலைமுகாம், இலங்கையில் நடைபெறும் அழிவுகள் போன்றவற்றை பார்க்கும்போது, எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டாலும், நாளடைவில் அழிவிற்கு இட்டுச்செல்லாத சித்தாந்தங்களே இல்லையோ என்று தோன்றுகிறது. விதிவிலக்காக காந்தி இருக்கிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் சேவைக்காக வந்த அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா சாயலில் அமைக்கப்பட்ட ராஜவன்ஷி, இந்நாவலில் உள்ள ஒளிமிக்க பாத்திரம். சரத் சந்திர சின்ஹா பற்றி, ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘ என்று காலச்சுவடில் கட்டுரை எழுதியிருக்கிறார் கிருஷ்ணன். சின்ஹாவை பற்றி படிக்கும்போது, இப்படி ஒருவர் இருந்தாரா என்று மனம் நம்ப மறுக்கிறது; அவ்வையின் ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ தான் நினைவிற்கு வருகிறது.

நாவலில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அடையும் வழியாக காந்தியம் குறிப்பிடப்படுகிறது. இந்திய மதப் பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும், தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி நம்பிக்கையோடு சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்த பின் நதி தெளிவாகிவிடும், முன்பை விட மிகத் தெளிவாக” என்று. கலங்கிய நதி தெளிவடையும் என்ற நம்பிக்கையோடு, திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

[தமிழிங்கிலீஷில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்]

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
கலங்கிய நதி பற்றி பாலாஜி
புலிநகக் கொன்றை, திரும்பிச் சென்ற தருணம்
சரத் சந்திர சின்ஹா பற்றி பி.ஏ. கிருஷ்ணன் – ‘கிழவருடன் இரண்டு நாட்கள்

பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை”

பாலாஜி ஸ்ரீனிவாசன் ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியதை இங்கே பதித்திருக்கிறேன்.

புலிநகக் கொன்றை திரு. பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் முதல் நாவல். இதன் மூல வடிவம் ஆங்கிலத்தில் “The Tiger Claw Tree” என்ற பெயரில் 1998இல் வெளிவந்தது. 2002ஆம் ஆண்டில் அவரே இதை “புலிநகக் கொன்றை” என்று தமிழில் எழுதியிருக்கிறார்.

எங்கள் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் வட்டத்தில் இந்தப் புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் அலசி விவாதித்தோம். எல்லோருக்கும் பிடித்த நாவலாக இது அமைந்தது.

தலைப்பிலேயே நம்மை உள்ளிழுக்கிறார் பிஏகே. Tiger Claw Tree என்ற டைட்டிலை ஏ.கே. ராமானுஜத்தின் ஐங்குறுநூறு பாடல் ஒன்றின் மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கிறார். (எழுத்தாளர் விக்ரம் சந்திராவின் நாவல் Red Earth and Pouring Rain டைட்டிலும் இதில் இருந்து தான் எடுக்கப்பட்டது).

புலிநகக் கொன்றை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் வரலாற்றைக் கூறுகிறது. 1870-இல் இருந்து கிட்டத்தட்ட 1970 வரையிலான நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் அதற்கும் முன்பாக முதல் தலைமுறையின் மூதாதையர்களைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. ஆக, கட்டபொம்மன் காலத்திலிருந்து ஆரம்பித்து விரிவடைகிறது.

குடும்பத்தின் வயதான பாட்டி சாகக் கிடக்கிறாள் என்ற எளிய ஆரம்பமாக இருந்தாலும் இது சாதாரண குடும்ப வரலாற்றை சொல்லும் நாவல் இல்லை. மாறாக, இது ஒரு out and out பொலிட்டிகல் நாவல். கதாபாத்திரங்கள் அவர்கள் காலகட்டத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டு அதை ஆழமாக விவாதிக்கிறார்கள். ஒரு நூறு பக்கங்களுக்கு குடும்பக் கதையாக செல்லும் நாவல், நீண்ட பாய்ச்சலில் அரசியல் சூழலுக்குள்ளே செல்கிறது. நம்மாழ்வார் என்னும் கேரக்டர், தீவிரவாத காங்கிரஸ் பின்னால் செல்கிறார். திலகரின் எழுத்துக்களால் கவரப்பட்டு, ஆயுதப் புரட்சியால் விடுதலை வரும் என்று உழைக்கிறார். வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொல்லும் சம்பவம் அவர் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் மகன் மதுரகவி, காங்கிரஸ்காரராக ஆரம்பித்து கம்யூனிஸத்தால் உந்தப்பட்டு தீவிர கம்யூனிஸவாதி ஆகிறார்.

அவருடைய பையன் நம்பி, கம்யூனிஸ்டாகி அதனால் அவன் வாழ்க்கையே சூறையாடப்படுகிறது.

இந்தக் குடும்பத்தில் இழையோடும் சரடு இளவயதில் நிகழும் துர்மரணங்கள். விதியின் வலிய விளையாட்டு ஒவ்வொரு முறையும் எதிர்பாராத விதமாக அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணமாக ஊமைத்துரை காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் பிஏகே விவரிக்கிறார். இந்த கனெக்ஷன் வலிந்து நுழைக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது.

பொன்னா பாட்டி பல இடங்களில் காப்ரியல் கார்ஸியா மார்குவெஸின் 100 years of solitudeஇல் வரும் உர்சுலா பாட்டியை ஞாபகப்படுத்துகிறாள்.

நிறைய யோசித்தால் எந்த வித சித்தாந்தத்தையும் முழுவதுமாக நம்பமுடியாது என்ற அடிச்சரடு இந்த நாவலில் மறுபடியும் மறுபடியும் வருகிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, அவர்கள் நம்பிய கொள்கைகளை திரும்பத் திரும்ப மறுபரிசீலனை செய்கிறார்கள். இதற்கு அச்சாரமாக வரும் கண்ணன் என்ற காரெக்டர். அவனால் தான் எதை நம்புகிறோம், எதை நம்ப வேண்டும் என்று நிலையாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால், அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் (அவன் தங்கை, காதலி, அண்ணி) அவனை விடத் தெளிவாக இருக்கிறார்கள்.

இது மேல்தட்டு குடும்பத்தின் கதை. அதனால் நாவல் முழுவதும் இவர்களின் வருமானம் பற்றிய கவலையோ பசி, வறுமை போன்றவைகள் இடம்பெறவில்லை. நிலம் நீச்சு எக்கச்சக்கம். உண்டியல் கடை குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பம்.

பிஏகேயின் முதல் டச், பொன்னாவின் மகள், இளம் விதவை ஆண்டாள் மறுமணம். நம்மாழ்வார் சுதேசமித்திரன் ஆசிரியர் பொண்ணுக்கு மறுமணம் செய்தது போல ஆண்டாளுக்கும் செய்யவேண்டும் என்று கூறுகிறான். இது ஜீயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. சம்பிரதாயமான குடும்பத்தில் புதுவித கருத்துக்கள் வருவதற்கு ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறையில் நம்மாழ்வார், கல்யாணம் ஆன பிறகும் மனைவியை விட்டுவிட்டு செல்கிறார். உச்சக்கட்டமாக நம்மாழ்வாரின் மகன் மதுரகவி, தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அடுத்ததாக வரும் தலைமுறையில் கண்ணன் அரசியலில் கால் நனைத்தாலும் கடைசியில் அதிலிருந்து விலகி, தன் வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிக்கிறான். ஒரு வகையில் பார்த்தால், இந்தியாவின் psyche இதில் தெரியும். 1970 வரை இளைஞ்ர்கள் அரசியலில் ஆர்வமாக பங்கெடுத்து, அதன் பின் அந்த ஆர்வம் குறைய ஆரம்பித்திருப்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். நம் காலகட்டத்தில் எல்லா போராட்டங்களும் “யாரோ” செய்கிறார்கள் என்று டிவியில் பார்த்துவிட்டு போய்விடுகிறோம். இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா, அரசியல் இப்படியெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறதா என்று எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

நாவலின் ஸ்கோப் பெரிதாக இருப்பதால் அதில் பிஏகே அத்தனை விதமான தகவல்களையும் உள்ளே இழுத்து சுவையாக எடுத்துச் செல்ல முடிகிறது. வ.உ.சி, சிவா, பாரதி, வ.வே.சு ஐயர், பெரியார், ராஜாஜி எல்லாரும் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். அறியாத தகவல்கள் பக்கத்துக்கு பக்கம் அள்ளித் தெறிக்கிறார் பிஏகே (எம்.ஆர். ராதா எம்ஜியாரை சுட்ட தினம் சோபர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாட ஆரம்பிக்கும் நாள்) என்று. பிஏகேயின் ஜெனரல் நாலெட்ஜ் நன்கு வெளிப்படுகிறது. இது எல்லாம் நேம் ட்ராப்பிங்காக இல்லாமல் ஆழமாக அன்றைய சூழலை நம் மனதில் கொண்டு வருகிறது. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பல. ஆழமாக மனதில் நிற்கின்றன. நம்மாழ்வார், நம்பி, கண்ணன் போன்ற ஆண் பாத்திரங்களுக்கு மத்தியில் ஆண்டாள், ரோஸா, பொன்னா பாட்டி போன்ற மிகவும் பவர்ஃபுலான பெண் பாத்திரங்கள். குறிப்பாக, ஆண்டாள் பாத்திரத்தை வைத்து ஒரு தனி நாவலே எழுதலாம். உபரி பாத்திரங்கள் கூட மனதில் நிற்கின்றன (ஜெர்மன் ஐயங்கார், கோபால பிள்ளை, நரசிம்மன் போன்றோர்).

எனக்குப் பிடித்த இன்னொன்று, இதில் வரும் literary references. ஷேக்ஸ்பியர், கம்பனில் இருந்து ஜி.கே. செஸ்டர்டன், மார்க்சிய சிந்தனையாளர்கள் வரை நிறைய ரெஃபெரன்ஸஸ். பல எழுத்தாளர்களை கூகிள் செய்து பார்க்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கதை மாந்தர்கள் படிக்கும் புத்தகங்கள். ரெம்ப்ராண்டின் The anatomy Lesson of Dr.Tulp போன்ற ஓவியங்கள் பற்றிய குறிப்பும் படிக்க சுவையாக இருக்கிறது. என்னைப் போன்ற ட்ரிவியா, க்விஸ்ஸிங் buffகளுக்கு மறுபடியும் மறுபடியும் படிக்கக்கூடிய நாவலாக அமைந்திருக்கிறது.

பிஏகேயின் சென்ஸ் ஆஃப் ஹியூமர் பற்றி குறிப்பிடவேண்டும். கதை நெடுக பல நகைச்சுவை சம்பவங்கள். உதாரணத்துக்கு, கல்லூரி பேராசிரியர்கள் கோட், டை அணியவேண்டும் என்பதை எதிர்த்து போராடுகிறார்கள். கல்லூரி முதல்வர் கண்டிப்பானவர். அவருக்கு எதிராக சுவரொட்டி போராட்டம். ஒரு சுவரொட்டி அவரை “ஜின்னா மைனர்” என்றது. ஜின்னா நல்ல உடை அணிவதில் பிரியம் உள்ளவர் என்பது நெல்லையில் பலருக்குத் தெரியாது. “காந்தி பிறந்த மண்ணில் கால் சாராய் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் ஜின்னா மைனரே! டை கட்டச் சொல்வது எதற்காக? உம் பின்னால் கை கட்டிச் செல்வதற்கா? கோட்டு போடச் சொல்வது எதற்காக? உமக்குப் பின் பாட்டுப் பாடுவதற்கா?” மற்றொரு சுவரொட்டி அவரை இட்லரின் மறுபிறப்பு என்றது. “இட்லரின் மறுபிறப்பே! ஆசிரியரை மூச்சடைக்க வைக்காதே! அன்று ஆஸ்விட்ஸ்! இன்று இறுக்கமான வகுப்பறைகள்!”

இதற்கு கல்லூரி முதல்வரின் கமெண்ட் “காலேஜுப் பசங்க ஜின்னாவைக் கண்டானா ஹிட்லரைக் கண்டானா? ஆஸ்விட்ஸாம்ல ஆஸ்விட்ஸு. நாளைக்கு முப்பது தோசை திங்கிறவங்க ஒரு நாளு உள்ளாலுமே அங்க போனாத் தெரியும்”.

நாவலின் மையக் கருத்து வரலாறு நமக்காக காத்திருப்பதில்லை. சில சமயம் நம்மை மீறி போய்விடுகிறது, சில சமயம் நம்மை உள்ளே இழுத்து மாற்றிவிடுகிறது, சில சமயம் நம்மை விளிம்பில் நிற்கவைத்து உள்ளே இழுக்காமல் சென்றுவிடுகிறது. இந்த கதையில் இது எல்லாம் நடக்கிறது. இது அப்படி வரலாற்றால் சுழட்டி அடிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை.

எழுத்தாளர் ஒரு சமூகத்தின் மனசாட்சி என்று சொல்வார்கள். இந்த நாவல் ஒரு நூறாண்டு கால தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றின் மனசாட்சி.

A well-written novel that we can’t put down. கண்டிப்பாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி“, “திரும்பிச் சென்ற தருணம்

சிலிக்கன் ஷெல்ஃப் மே கூட்டம் – பாகம் 2 (பி.ஏ.கே.யுடன் ஒரு சந்திப்பு)

(விசு எழுதிய பாகம் – என்ன பேசப்பட்டது என்பதை பற்றிய குறிப்புகள் அடங்கியது)

திரு. பகவதி பெருமாளின் (பக்ஸ்) இல்லத்தில் ஜுன் 9, சனிக்கிழமை மதியம் (2.00  – 7.00 ) ‘கலங்கிய நதி‘ நாவலை எழுதிய எழுத்தாளர் திரு. P.A.கிருஷ்ணனுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. முதல் இரண்டு மணிநேரம் கலங்கிய நதி நாவலைப் பற்றியும், பின்பு பொதுவாகவும் விவாதம் இருந்தது.

சரியாக இரண்டு மணிக்கு கிருஷ்ணன் ராஜனுடன் வந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் 10-15 பேர் வந்தபின் கலந்துரையாடல் ஆரம்பித்தது. கடந்த இருவது வருடங்களில், இந்திய இலக்கியச் சூழலில், தமிழ் அளவிற்கு மற்ற மொழிகளில் படைப்புகள் வருவதில்லை; புத்தக விற்பனையில் மட்டுமல்லாது, இலக்கியத் தரமான படைப்புகளிலும் தமிழ்தான் முதலிடம் என்றார் கிருஷ்ணன்.

பக்ஸ், நான், பாலாஜி உட்பட சிலர், கலங்கிய நதியின் ஆங்கில வடிவத்தை ( ‘Muddy River’ ) படித்திருந்தோம். ஆர்.வி, சுந்தரேஷ் உள்ளிட்டோர் தமிழ் வடிவத்தை ( ‘கலங்கிய நதி’ ) படித்திருந்தார்கள். கலங்கிய நதி பற்றி நாவலை படித்தவர்கள், மற்றவர்களுக்காக,  சுருக்கமாக நாவலைப் பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

நாவலில் வரும் அங்கத அம்சத்தை முதலில் பேசினோம். அரசு அலுவலக வரைமுறைகளின் சித்தரிப்பில் உள்ள அங்கதம் மிக அருமை என்றனர் அனைவரும். நாவலில் வரும் தேநீர் – அலாரம் பகுதியை ஒரு முறை கிருஷ்ணன் படித்துக்காட்டினார். அப்பொழுதே உரையாடல் களைகட்டத் தொடங்கியது.

அடுத்து, நாவலின் ஒரு சரடான, மின்செலுத்தீட்டு கோபுர (transmission tower 🙂 ) ஊழலை பற்றி பேசினோம். 2ஜி காலத்தில், முப்பது கோடி ஒரு ஊழலா, இதைவிட பெரிய ஊழல் (!!) இல்லையா என்றனர் ஆர்.வியும், பாலாஜியும். ஊழலின் அளவை கூட்டி எழுதியிருக்கலாம், நம்பர் முக்கியமில்லை, எவ்வளவு நூதனமான முறையில் ஊழல் செய்கிறார்கள், சிறிய தொகையாக இருந்தாலும், அதைக்கூட வசூலிக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதே தன் நோக்கம் என்றார். ஆனால், இனி வரும் காலங்களில், தகவல் அறியும் உரிமை போன்ற சட்டங்களால் ஊழல் குறையும் என்பதில் தனக்குச் சந்தேகமில்லை என்றார். ஊழலை ஒட்டிய விவாதத்தில், அன்னா ஹசாரே இயக்கத்தில் பிழைகள் பல இருப்பினும்,  அது தோல்வி அடைந்திருப்பினும், its a right step in the right direction என்றார்.

பகதத்தனின் கதை, ஜத்திங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல / காமாக்யா கோவில்களுக்கு நேர்ந்துவிடப்படும் ஆடுகள் என பலவாறாக, தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளதை நானும், ராஜனும் குறிப்பிட்டோம். பின்பு, அதையொட்டி விவாதம் தொடர்ந்தது. அஸ்ஸாமிய தீவிரவாதத்தின் தோற்றுவாயைப்பற்றி விளக்கினார் கிருஷ்ணன். 1971 வங்கதேசப் போரின் விளைவாக, வங்கதேச இஸ்லாமிய அகதிகள் அதிக அளவில் அஸ்ஸாமில் குடியேறினர். இது, அஸ்ஸாமிய மக்கள்பரவலில் (demography) பெரும் மாற்றத்தை உருவாக்கியது; மேலும், வளமான பிரம்மபுத்திரா நதிப்படுகையில் குடியேறிய அகதிகள், தங்கள் கடின உழைப்பால் முன்னேறினர்; தன்னைவிட ஏழையாக இருந்த அண்டைவீட்டான் வளமானதை பொருக்காமல், ‘அஸ்ஸாம் அஸ்ஸாமியருக்கே’ என்ற போராட்டம் ஆரம்பித்தது. சமூகப்பிரச்சனையை, மத்திய அரசு சட்ட ஒழுங்குப் பிரச்சனையாகக் கருதி, ஆயுதம் கொண்டு அடக்கமுற்பட்டமையே, அஸ்ஸாம் பற்றி எரிய காரணமானது; இந்திய அரசின் ‘பெரிய அண்ணன்’ தனத்தினால், இஸ்லாமிய அகதிகளுக்கெதிராக உருவான உல்ஃபா, இந்தியாவிற்கெதிராக திரும்பியது என்றார். (நாவலில், காந்தியவாதியான முன்னாள் முதலமைச்சரின் கூற்றாக இவை வரும்).

எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் உயர்ந்த லட்சியவாதத்தின் அடிப்படையில் தொடங்கப்படும், பின்பு, நாளடைவில், அதிகாரப்போட்டியின் விளைவாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, தன் கொள்கையிலிருந்து இறங்கி, தாழ்ந்து, அழிவை நோக்கிச் செல்லும் என்றே நமக்கு வரலாறு சொல்கிறது.  சமீபத்திய உதாரணம் LTTE என்றார். (‘கலங்கிய நதி’ இலங்கை தமிழ் உறவுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ‘Muddy River’ அஸ்ஸாமிய மக்களுக்கும், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, திரும்பிவராத திரு.கோஷிற்கும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது ). உல்ஃபாவிற்கும் அதுவே கதி என்றார். சீனா, மியான்மர் போன்ற நாடுகள் உல்ஃபாவிற்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டமை போன்றவற்றை காரணம் காட்டி, உல்ஃபாவோ, வேறு வடகிழக்குத் தீவிரவாத குழுக்களோ இனி threat இல்லையென்றார்.

நாவலில், சமூகப்பிரச்சனைகளுக்கு தீவிரவாதத்திற்கு மாற்றாக காந்தியம் குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற கேள்விக்கு, காந்தியம் மட்டுமே தீர்வல்ல, ஆனால், அது தீர்விற்கு நல்ல வழிமுறையாக இருக்கலாம் என்றே சொல்கிறேன் என்றார். சுதந்திர போராட்டத்தின்போது, அம்பேத்கரோ, ஜின்னாவோ ஒரு தரப்பிற்காக மட்டுமே பேசினார்கள்; காந்தி மட்டுமே அனைவருக்காவும் பேசினார்; காந்தியின் கடைசி முப்பது நாட்கள், இயேசுநாதரின் கடைசி நாட்களைப் போன்றதே; தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்தபின் தெளிவாகிவிடும், முன்பைவிட மிகத்தெளிவாக ” – பிரிவினையின்  கோர தாண்டவத்தின் நடுவிலும்கூட, காந்தி எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார் பாருங்கள்; காந்தியின் optimism பிரமிக்கவைக்கிறது என்றார். ‘கலங்கிய நதி ..’ வரிகளை படித்துக்காட்டினார். நதி எப்போது தெளிவடையும் என்று தெரியாது என்றார்.

மேலும், தமிழ்நாட்டைப்போல் இல்லாமல், அஸ்ஸாமிய முதல்வர்களை எளிதாக நேரில் சந்திக்கமுடியும் என்ற கிருஷ்ணன், நாவலைப் பற்றி, அஸ்ஸாமிலிருந்து பாஸிட்டிவ்வாகவே விமர்சனங்கள் வந்தன என்றார்.

விவாதம் மார்க்ஸியத்தை நோக்கித் திரும்பியது. சுந்தரேஷ், திரு.சந்திரா [சிம்மக் குரலோன் என்ற பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட குரலுடைய ஒருவரை அன்றுதான் சந்தித்தேன் :-).] , அருண் உள்ளிட்டோர் மார்க்ஸியம் காலாவதியாகிவிட்டது என்றனர். சிறிது நேரம் சூடாக விவாதம் நிகழ்ந்தது. மார்க்ஸிய சித்தாந்தம் காலாவதியானாலும், மார்க்ஸிய கருவிகள் (பொருள்முதல்வாத முரணியக்கம்,..)  இன்றும் முக்கியமானது என்ற கிருஷ்ணன், மேற்கொண்டு விவாதத்தை எழுத்தில் தொடரலாம் என்றார்.

பின்பு நாவலின் வடிவம் பற்றி பேசினோம். நாவலின் கதை எளிமையானது [தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவரை மீட்கப் போராடும் ஒரு எளிய அரசு அதிகாரி, மற்றும் அந்த அதிகாரி வெளிக்கொணரும் ஊழல்.] முதல் வடிவம் எழுதியபின், அது தட்டையானதாக இருந்தது. ஆகவே, அனுபமா உள்ளிட்ட கதாபாத்திரங்களை சேர்த்தேன்; நாவலுக்குள் நாவலை விமர்சிக்கும் வடிவத்தில் எழுதினேன் என்றார். புதிதாக வந்திருந்த செந்தில், இரண்டு வரி எழுதுவதே கடினமாக இருக்கிறது, எப்படித்தான் பக்கம்பக்கமாக நாவல் எழுதுகிறீர்களோ என்று கேட்டார். அதற்குத்தான் நாவலை எழுத ஏழு வருடம் எடுத்துக்கொண்டேன் என்றார் கிருஷ்ணன். கடத்தப்பட்டவரை மீட்பதில், சந்திரனுக்கு தெரியாமல் சில நிகழ்வுகள் நடந்ததாக சித்தரித்ததன் மூலம், சந்திரனை ஒரு ‘சூப்பர் ஹீரோ’ ஆக்காமல், மிக இயல்பாக சித்தரித்திருந்தீர்கள் என்றார் ஆர்.வி.

ஆர்.வி, பாலாஜி, சுந்தரேஷ் உள்ளிட்டோர், கலங்கிய நதியைவிட புலிநகக் கொன்றை தங்களை மிகவும் கவர்ந்தது என்றனர். புலிநகக் கொன்றையின் கதைக்களம், தமிழகமாக இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு பிடித்திருக்கலாம், வட இந்திய நண்பர்களுக்கு கலங்கிய நதி பிடித்திருந்தது; அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன் என்றார்.

தன் இரு நாவல்களுமே அரசியல் நாவல்கள் என்ற கிருஷ்ணனிடன், 1970களோடு தமிழ்நாட்டில் கல்லூரிகள் apolitical ஆகி, 1970களுக்கு பிந்தய மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் போய்விட்டதை குறிப்பிட்ட பாலாஜி, அதற்கேற்றார்போல, 200 வருட கதையைச் சொல்லும் புலிநகக் கொன்றையை 1970களில் முடித்தீர்களா என்று கேட்டார். அதை ஆமோதித்த கிருஷ்ணன், 1970களுக்கு பின் நடந்தவை என, புலிநகக் கொன்றை – 2 எழுத ஒரு திட்டமிருக்கிறது என்றார்.

தன் அடுத்த புத்தகத்தை பற்றியும் சில தகவல்களை பகிர்ந்தார். தமிழர்/இந்தியர்களுக்கு வரலாற்றை பதிவு செய்வதில் அக்கறை இல்லை, வெள்ளையர் பதிவுசெய்தவற்றையும் நாம் முழுமையாக ஆராயவில்லை என்றார். மருது பாண்டியர், ஊமைத்துரை, வெள்ளையர்கள் பின்னனியில் கதை இருக்கலாம், அதிகபட்சம் நானூறு பக்கங்கள் இருக்கும் என்றார். ( தலையனை சைஸ் புத்தகங்கள் எழுதுவதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்!!).

புதிதாக வந்தவர்கள் மாலை ஐந்து மணி வாக்கில் கிளம்பிச் சென்றபின், சிலிக்கான் ஷெல்ஃப் குழும நண்பர்கள் மேலும் இரண்டு மணி நேரம் கிருஷ்ணனுடன் செலவிட்டோம். அவரை கவர்ந்த நாவல்களைப் பற்றியும், அரசியல், சினிமா என்று பல தளங்களிலும்  உரையாடினோம்.

ஐந்து மணிநேரம், சிறிது கூட சோர்வடையாமல் எங்களுடன் பேசிக்கொண்டிருந்த திரு.கிருஷ்ணன் அவர்களுக்கு சிலிக்கான் செஷ்ஃப் சார்பாக நன்றிகள். சிறப்பான உணவு மற்றும் இடம் ஏற்பாடு செய்த பக்ஸ் மற்றும் சித்ரா தம்பதிகளுக்கு ம் நன்றிகள். கலிஃபோர்னியாவிற்கு வருகை தரும் தமிழ் எழுத்தாளுமைகளையும், வாசகர்களையும் இனைக்கும் பாலமாக செயல்படும் அண்ணன் ராஜன் அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜே.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்

தொடர்புடைய பிற இடுகை:
பாகம் 1
‘கலங்கிய நதி