டிவி கண்டுபிடிப்பு பற்றிய நாடகம்: Farnsworth Invention

ஆரன் சோர்கின் புகழ் பெற்ற A Few Good Men திரைப்படத்தின் மூல நாடகத்தை எழுதியவர். Farnsworth Invention அந்த அளவு வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவு புகழ் பெற்ற நாடகம்தான்.

என்ன கதை? இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. ரேடியோ அபாயங்களை அறிவிக்கும் கருவியாக மட்டும் பயன்பட்டுக் கொண்டிருந்த நேரம். டேவிட் சார்னாஃப் வானொலியின் சாத்தியங்களை உணர்ந்திருக்கிறார். அதை மெதுமெதுவாக பொழுதுபோக்கு சாதனமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தொலைக்காட்சியையும் உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார். அதே காலகட்டத்தில் ஃபிலோ ஃபார்ன்ஸ்வொர்த்தும் தொலைக்காட்சியை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார். சார்னாஃப் விஞ்ஞானியோ தொழில் நுட்ப வல்லுனரோ அல்லர். அவர் வெற்றி அடைந்த தொழில் முனைவர். ஏராளமான பணத்தைக் கொட்டி, பெரிய விஞ்ஞானக் குழு ஒன்றை நிறுவி இருக்கிறார். ஃபார்ன்ஸ்வொர்த் தொழில் நுட்ப வல்லுனர் மட்டுமே. ஏதோ சில முதலாளிகள் (venture capitalists) துணிந்து போட்ட கொஞ்சமான முதல், நண்பர்கள், கிடைத்தவர்களை வைத்து முயன்று கொண்டிருக்கிறார். இரண்டு பேராலும் முழு வெற்றி அடையமுடியவில்லை. சார்னாஃப் ஒரு விதத்தில் ஃபார்ன்ஸ்வொர்த்தின் கண்டுபிடிப்புகளை “திருடி” வெற்றி பெறுகிறார்.

இந்த நாடகத்தின் வெற்றி தொடக்க நிறுவனம் (startup) vs பெரும் நிறுவனம் என்ற இருமையைக் காட்டுவதுதான். தொடக்க நிறுவனத்தில் இருக்கும் உற்சாக மனநிலை பெரும் நிறுவனங்களில் இருப்பதில்லை. நல்ல தலைமை இருந்தால் இன்றும் தொடக்க நிறுவனங்கள் வெற்றி பெறத்தான் செய்கின்றன. ஃபார்ன்ஸ்வொர்த்தின் தொடக்க நிலை நிறுவனத்தில் அந்த உத்வேகத்தை சித்தரிப்பதில்தான் இந்த நாடகத்தின் வெற்றி இருக்கிறது. ஃபார்ன்ஸ்வொர்த்தின் இடைவிடா முயற்சி, அறிவுத்தாகம் ஆகியவற்றை நம்புகத்தன்மையோடு விவரிப்பது கஷ்டம். சோர்கின் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆனால் இது வரலாற்றை மாற்றுவது. உண்மையான ஃபார்ன்ஸ்வொர்த் சார்னாஃப் மீது வழக்கு தொடுத்தார், பத்து லட்சம் டாலர்களை உரிமக் கட்டணமாகப் பெற்றார். ஃபார்ன்ஸ்வொர்த் தோற்றால்தான் நாடகத்துக்கு சரியான முடிவு கிடைக்கும் என்று வரலாற்றை மாற்றிவிட்டார். கர்ணன் தோற்றே ஆக வேண்டும் இல்லையா, அவன் மற்ற பாண்டவர்களைக் கொன்றுவிட்டாலோ அல்லது அர்ஜுனனையோ தனது சக்தி ஆயுதத்தால் கொன்றுவிட்டாலோ காவியம் எப்படி நகர முடியும்? அந்த மாதிரிதான்.

ஆனால் சார்னாஃப் ஏற்படுத்தியது இன்றும் இருக்கும் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனமான NBC. ஃபார்ன்ஸ்வொர்த்துக்கு கிடைத்த பத்து லட்சம் டாலர் பெரிய தொகைதான், ஆனால் அதனால் நிலைத்து நிற்கும் விளைவு எதுவும் இல்லை. இன்றும் அப்ப்டித்தானே? ஸ்டீவ் ஜாப்ஸ்தான் ஆப்பிளை கட்டமைக்க முடிகிறது, வோஸ்நியாக்கால் ஆரம்பிக்கத்தான் முடிகிறது.

படியுங்கள். முடிந்தால் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

ஆரன் சோர்கின்: A Few Good Men

A Few Good Men நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று. அருமையான நடிப்பு, அதுவும் ஜாக் நிக்கல்ஸன் just sizzles. You can’t handle the truth! என்பது இன்று படிமமாகவே ஆகிவிட்ட வசனம்.

டாம் க்ருய்ஸ், டெமி மூர், கெவின் பேகன் நடித்து ராப் ரெய்னர் இயக்கத்தில் வந்த திரைப்படம் (1992)

அப்போதிலிருந்தே இதன் மூல நாடக வடிவத்தைப் பார்க்க/படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் கை வந்தது. திரைப்படம் நாடகத்தை ஏறக்குறைய அப்படியே பிரதிபலித்திருக்கிறது. நல்ல கதையோடு சிறந்த நடிப்பும் சேரும்போது நாடகங்களும் திரைப்படங்களும் மூலப் புத்தகத்தை விட ஒரு படி மேலே போய்விடுகின்றன, திரைப்படத்தை மட்டும் பார்த்தவர்கள் எதையும் தவற விட்டுவிடவில்லை.

நாடகம் 1989-இல் முதல் முறையாக நடிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் திரைப்பட உரிமையை விற்று வந்த பணத்தில்தான் நாடகம் அரங்கேறியதாம்.

திரைப்படம் வந்து முப்பது வருஷம் இருக்கும் என்று நினைக்கிறேன். கதை சுருக்கமாக: க்யூபாவில் அமெரிக்காவுக்கு ஒரு ராணுவ தளம் இன்னும் இருக்கிறது – குவாண்டனமோ. அங்கே எழுதப்படாத சில விதிகளை மீறும் ஒரு வீரனை “கவனிக்கும்படி” வேறு இரு வீரர்கள் பணிக்கப்படுகிறார்கள். நிலை விபரீதமாகி அவன் இறந்தே போகிறான். இது மேலதிகாரிகளின் சட்டவிரோதமான ஆணையின் விபரீத விளைவு என்று தெரிந்தால் அந்த அதிகாரிகளின் முன்னேற்றம் பாதிக்கப்படும் என்பதால் திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள் என்று அந்த இரு வீரர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது, அந்த வீரர்களை பலிகடா ஆக்கிவிடுகிறார்கள். ராணுவ விசாரணை (court martial) நடைபெறுகிறது. என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

பாத்திரப் படைப்பு பிரமாதம். தான் தலைமை தாங்கும் படையை எப்படி நடத்த வேண்டும் என்பது முற்றிலும் தன் முடிவு, தன் உரிமை, தன்னை எவரும் கேள்வி கேட்கக் கூடாது என்று நினைக்கும் கர்னல் ஜெஸ்ஸப், விடாமல் நோண்டும் பெண் வக்கீல் ஜோ, ஆத்ம கௌரவத்தை விட்டுக் கொடுக்க மறுக்கும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் கார்ப்பொரல் டாஸன், மேலதிகாரி டாஸன் சொன்னதை அப்படியே செய்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாத சிப்பாய் டௌனி என்று ஒவ்வொரு பாத்திரமும் செதுக்கப்பட்டிருக்கிறது.

உண்மை மெதுமெதுவாக வெளிப்படுவது, குறுக்கு விசாரணைகள், வக்கீல்கள் காஃபி, ஜோ, சாம், ராஸ் எல்லாரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டே இருப்பது (banter) சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையின் அடிப்படைக் கேள்விகளில் ஒன்றல்லவா இது? உரிமை உள்ளவர், மேலதிகாரி இட்ட தவறான ஆணையை நிறைவேற்ற வேண்டுமா? தசரதன் சொன்னால் ராமன் காட்டுக்குப் போக வேண்டுமா? திரௌபதி பணயம் வைக்கப்பட்டால் பீமன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அண்ணன் ஆணையை சிரமேற்கொள்வதையே தன் வாழ்வாகக் கொண்டிருக்கும் துச்சாதனன் குற்றவாளியா இல்லையா? புத்தகத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது “unit, corps, God, country”. My country, right or wrong. அவற்றுக்காக எந்தத் தியாகமும் செய்யலாம். அது சரிதான் என்றால் ஹிட்லர் காலத்து ஜெர்மானியர்கள் எல்லாருமே குற்றவாளிகள்தானா?

ஆரன் சோர்கின் நாடகங்கள், திரைக்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர். அவரேதான் திரைக்கதையையும் எழுதி இருக்கிறார். நாடகத்தின் வசனங்களில் முக்கால்வாசியாவது அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காட்சிகளிலோ 90 சதவிகிதம் அப்படியேதான் இருக்கிறது.

திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் அனேகமாக இருக்கமாட்டார்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் உடனடியாகப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆர்வம் இருப்பவர்கள் நாடகத்தையும் படிக்கலாம்/பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

கிரீஷ் கார்நாட்: நாகமண்டலா

கார்நாடின் நாடகங்களில் ஏதோ குறைகிற உணர்வு ஏற்படும். அப்படி எந்தக் குறையும் தெரியாத நாடகங்களில் ஒன்று நாகமண்டலா.

நாகமண்டலா நாட்டார் நாடகம் ஒன்றை, கூத்து ஒன்றை, பாசரின் நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாட்டார் கதையை குறை இல்லாமல், மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்கிறார். கார்நாட் செய்திருப்பதெல்லாம் நகாசு வேலைகள் மட்டுமே. அதனால்தான் இந்த நாடகம் சிறப்பாக வந்திருக்கிறது.

நாகமண்டலாவின் கதை பல காலமாக சொல்லப்படும் நாட்டார் கதைதான். மதனகாமராஜன் கதை ஒன்றில் கூட வருகிறது. கணவன் அப்பண்ணாவை தன் பக்கம் இழுப்பதற்காக தயாரிக்கப்பட்ட வசிய மருந்தை பயத்தினால் மனைவி ராணி பாம்புப்புற்றில் கொட்டி விடுகிறாள். ராஜநாகம் வசியமாகி விடுகிறது. இரவில் அப்பண்ணா போல் உருவம் எடுத்து வந்து ராணியுடன் கூடுகிறது. கர்ப்பம் ஆனது தெரிந்ததும் கணவன் நான் தொடாமலே எப்படி கர்ப்பம் என்று கத்துகிறான். மனைவி தான் உத்தமி என்கிறாள். தன் கற்பை நிரூபிக்க பாம்புப் புற்றில் கைவிட்டு சத்தியம் செய்கிறாள் – என்னவென்று? நான் தொட்டது இரண்டே ஆண்கள், ஒன்று என் கணவன், இன்னொன்று இந்த நாகம் என்று! நாகம் அவள் தலை மேல் படம் எடுக்கிறது, அவள் தோளில் மாலையாகிறது. ஊரார் தெய்வப்பிறவி என்று கொண்டாடுகிறார்கள். கணவன் மனைவி சேர்கிறார்கள். ஆனால் ராணியை மறக்க முடியாத நாகம் அவள் தலை முடியையே தூக்குக் கயிறாக பயன்படுத்தி இறந்துவிடுகிறது. இதற்குள் உண்மை தெரிந்த ராணி தன் மகனை ஈமச் சடங்குகள் செய்யச் சொல்கிறாள்.

ராணி செய்யும் சத்தியத்தில்தான் கதை கதையாகிறது. சிறப்பான denouement.

ஆரம்பக் காட்சியை கார்நாட் மிக நன்றாக எழுதி இருக்கிறார். ஊரிலிருக்கும் சுடர்கள் எல்லாம் இரவில் கோவிலில் கூடுவது நல்ல கற்பனை. எல்லாரையும் போரடித்து தூங்க வைக்கும் நாடக ஆசிரியர் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம், கதை மனதிலிருந்து தப்பி இளம் பெண் உருவத்தில் வருவது என்று நல்ல காட்சிகள்.

நாகமண்டலா கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து அஷ்வத் இயக்கத்தில் திரைப்படமாக (1997) வந்தது. இங்கே பார்க்கலாம்.

நாகமண்டலா நல்ல நாடகம். படியுங்கள், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

காளிதாசனைப் பற்றிய நாடகம் – ஆஷாட் கா ஏக் தின்

ஆஷாட் கா ஏக் தின் ஹிந்தியின் முதல் நவீன நாடகம் என கருதப்படுகிறது. மோஹன் ராகேஷ் 1958-இல் எழுதியது. சங்கீத நாடக் அகடமி அடுத்த வருஷமே அதை சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுத்தது. 1971-இல் மணி கால் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்தது. திரைப்படம் எங்காவது இணையத்தில் கிடைத்தால் எனக்கும் சொல்லுங்கள்!

ஆஷாட் கா ஏக் தின் நான் படித்த நல்ல நாடகங்களில் ஒன்று. ஆனால் இதை நாடகமாகப் பார்ப்பது இன்னும் சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதனால்தான் திரைப்படம் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

ஏன் சிறந்த நாடகம்? காளிதாசனின் படைப்பூக்கம் எங்கிருந்து வந்தது என்று ஒரு நல்ல கற்பனையை முன்வைக்கிறது. ஆசாபாசங்கள் எப்படி படைப்பூக்கத்தை உருவாக்கலாம் என்று காட்டுகிறது. உலகியல் வெற்றி, படைப்பில் வெற்றி இரண்டுக்கும் நடுவில் இருக்கக் கூடிய இழுபறியை அருமையாக சித்தரிக்கிறது. உண்மையான மனிதர்களின் சித்தரிப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக நம் வேர்கள், அதிலும் இளமை அனுபவங்களின் தாக்கம் எப்படி நம் வாழ்வை என்றும் பாதிக்கின்றன என்று காட்டுகிறது.

நாடகத்தின் முதல் பகுதியில் காளிதாசன் இமயமலைச்சாரலில் ஒரு சிறு கிராமத்தில் வாழும் இளம் கவிஞன். மல்லிகாவை காதலிக்கிறான். அவனது புகழ் கொஞ்சம் வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது. ராஜா விக்ரமாதித்தன் தனது அரசவைக்கு வரும்படி அழைக்கிறான். போக வேண்டும் என்று ஆசை. போனால் காதல் பலவீனம் அடைந்துவிடும் என்பது ஆழ்மனதில் தெரிந்திருக்கிறது. ஆனால் மல்லிகாவே போகும்படி சொல்கிறாள். இத்தனைக்கும் காளிதாசனின் சுயநலத்தைப் பற்றி – சுயநலம் அல்ல, self-centeredness – பற்றி மல்லிகாவின் அம்மா அவளை எச்சரிக்கிறாள். மல்லிகாவின் பேரைக் கெடுத்துவிட்டு காளிதாசன் போவதைக் கண்டு இருவருக்கும் தெரிந்த விலோம் ஆத்திரப்பட்டு பேசுகிறான்.

இரண்டாவது பகுதியில் காளிதாசன் புகழின் உச்சியில் இருக்கிறான். அரச குலப் பெண்ணை மணந்து கொள்கிறான். காஷ்மீரத்தின் சிற்றரசனாகப் பொறுப்பேற்கப் போகும் வழியில் தன் கிராமத்தில் தங்குகிறான். ஆனால் மல்லிகாவை சந்திக்க வரவில்லை, தன் மனைவியை அனுப்புகிறான். மல்லிகா இப்போது உலகியல் ரீதியாக கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறாள். பேச்சுவாக்கில் மேகதூதம் இந்தக் கிராமத்து சூழ்நிலையை வைத்து எழுதப்பட்டது என்று மல்லிகாவிடம் அவள் சொல்கிறாள். அவன் மனைவி மல்லிகாவிடம் நீ தலைநகரத்தில் பணிப்பெண்ணாக வா என்று அழைக்கிறாள், மல்லிகா மறுத்துவிடுகிறாள்.

மூன்றாவது பகுதியில் மீண்டும் காளிதாசன் மல்லிகாவை சந்திக்க வருகிறான், தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான். மல்லிகாவுக்கு இப்போது விலோம் மூலமாக ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிந்ததும் சென்றுவிடுகிறான்.

நாடகத்தின் பெரிய பலம் உண்மையான மனிதர்களின் சித்தரிப்பு. அதிலும் உண்மைகளை எதிர்கொள்ள விரும்பாத மனித மனத்தை பிரமாதமாகச் சித்தரிக்கிறார். காளிதாசனுக்குத் தெரியாதா தான் உஜ்ஜயினிக்கு சென்றால் மல்லிகாவின் கதி அதோகதிதான் என்று? ஆனாலும் செல்கிறான். மல்லிகாவுக்குத் தெரியாதா காளிதாசன் தன்னை கைவிட்டுவிடுவான் என்று? ஆனாலும் போகும்படி சொல்கிறாள். காளிதாசனால் குறைந்தபட்சம் மல்லிகாவை சந்தித்திருக்க முடியாதா? தன்னால் அவள் கண்களை எதிர்கொண்டிருக்க முடியாது என்று சாக்கு சொல்கிறான். காளிதாசனின் மனைவிக்கு உண்மையிலேயே மல்லிகாவுக்கும் காளிதாசனுக்கும் என்ன உறவு என்று புரியவில்லையா? சொல்லிக் கொண்டே போகலாம்.

மிகச் சிறந்த காட்சியாக நான் கருதுவது காளிதான் குமாரசம்பவத்தின் உமாவும் மேகதூதத்தின் யக்ஷிணியும் சகுந்தலையும் மல்லிகாவேதான், அவற்றின் சூழல் இந்த கிராமம்தான் என்று சொல்லும் இடம். வேர்கள் எத்தனை ஆழமானவை என்று காட்டும் இடம்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பார்ப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று யூகிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

நான் பார்த்த முதல் நாடகம்: காஷிராம் கொத்வால்

22-23 வயதுக்கு முன் எனக்கு நாடகம் என்றால் என்ன என்று சரியான புரிதல் இருந்ததில்லை. என் சிறு வயதில் பார்த்த மகா போர் தெருக்கூத்துக்களோ, கிரேசி மோகன், எஸ்.வி. சேகரின் ஜோக் தோரணங்களோ எனக்கு நாடக வடிவத்தை புரியவைக்கவில்லை. பெர்னார்ட் ஷா, இப்சன், ஆர்தர் மில்லர், டென்னசி வில்லியம்ஸ், பெர்டோல்ட் ப்ரெக்ட் போன்றவர்களின் எழுத்து பிடித்திருந்தது. ஆனால் நாடகத்தின் வடிவம் பிடிபடவில்லை. வடிவம் பிடிபடவில்லை என்று புரிந்து கொள்ளும் அறிவு கூட அப்போது இல்லை.

அப்போதுதான் காஷிராம் கொத்வால் நாடகத்தைப் பார்த்தேன். நாடகம் என்றால் என்ன அரை மணி நேரம் நாடகம் பார்த்தவுடன் சடாரென்று புரிந்துவிட்டது. ஷா, இப்சன், மில்லர், டென்னசி வில்லியம்ஸ் – குறிப்பாக ப்ரெக்டை – வேறு லெவலில் புரிந்து கொள்ள முடிந்தது. கிரேக்க நாடகங்களின் கோரசைக் காணும்போதெல்லாம் ஏண்டா உயிரை வாங்குகிறீர்கள் என்று அலுப்பு முதல் பத்து நிமிஷத்திலேயே மறைந்து கோரஸின் பங்களிப்பு என்ன என்று புரிந்தது. நாடகத்தின் லாஜிஸ்டிக் குறைகளை – பெரிய பெரிய செட் போட முடியாது, வெளிப்புறப் படப்பிடிப்பு கிடையாது இத்யாதி – எத்தனை அழகான கலையாக மாற்ற முடியும், எத்தனை சுலபமாக அதைக் கடக்க முடியும் என்று புரிந்தது. பாட்டையும், நடனத்தையும் எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்று தெரிந்தது. நாடகம் எத்தனை அற்புதமான மீடியம் என்று முதன்முதலாகப் புரிந்தது.

சிறந்த நாடகம் என்பதைப் பார்க்கத்தான் வேண்டும். ஷேக்ஸ்பியராகவே இருந்தாலும் சரி, நல்ல நடிகர்கள் கொண்ட ஒரு நாடகத்தைப் பார்க்கும் அனுபவமே தனி. எத்தனை சிறப்பான எழுத்தாக இருந்தாலும் சரி, நாடகமாகப் பார்ப்பது அதை இன்னும் உயர்த்தக் கூடியது. (மோசமான நடிப்பு கொடுமைப்படுத்திவிடும் என்பதும் உண்மைதான்.) பல முறை சுமாரான எழுத்தைக் கூட நாடகமாகப் பார்ப்பது இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது.

சமீபத்தில் காஷிராம் கொத்வால் நாடகத்தை மீண்டும் படித்தேன். விஜய் டெண்டுல்கர் அருமையாக எழுதி இருக்கிறார்தான். ஆனால் நாடகம் எழுத்தை விட மிகச் சிறப்பானது. யூட்யூபில் கிடைக்கிறது. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

கதையை வெகு சுருக்கமாக எழுதிவிடலாம். 18-ஆம் நூற்றாண்டின் புனே. ராஜா, பேஷ்வா எல்லாரும் இருந்தாலும் அதிகாரம் செலுத்துவது மந்திரி நானா ஃபட்னவிஸ்தான். பிராமணர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. பிராமணர்கள் தாசிகளின் பின்னால் அலைகிறார்கள், இரவில் வீடு தங்குவதில்லை. நானாவும் பெண் பித்தர். கன்னோசி பிராமணன் – வெளியூர்க்காரன் – அநியாயமாக திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறான். புனே மக்களைப் பழி வாங்குகிறேன் என்று சபதம் எடுத்து தன் மகளையே நானாவுக்குக் கூட்டிக் கொடுக்கிறான். அதற்குப் பரிசாக புனேவின் காவல்துறை அதிகாரி பதவி – கொத்வால் பதவி – கிடைக்கிறது. அடக்குமுறை ராஜ்யம் செய்கிறான். அவன் மகள் இறந்து போகிறாள். அது காஷிராமின் கொடுமைகளை இன்னும் அதிகரிக்கிறது. காஷிராமின் கோபத்தைக் கண்டு அஞ்சும் நானா அவன் என்ன செய்தாலும் கண்டுகொள்வதில்லை. மாங்காய் திருடிய குற்றத்துக்காக சின்ன சிறை அறையில் பலரையும் திணிக்க, 22 பேர் இறந்து போகிறார்கள். புனே நகரம் கொதித்து எழுகிறது. நானா தனக்கு காஷிராமால் இனி மேல் பெரிய பயன் இல்லை என்பதால் படு கூலாக காஷிராமை கொல்ல உத்தரவு தருகிறார்.

சிறப்பான எழுத்து. அன்றைய புனே நகரத்தை சில கோடுகளை வரைந்தே வெளிப்படுத்திவிடுகிறார். குறிப்பாக அன்றைய பிராமணர்களின் அதிகார நிலை, decadence (சரியான தமிழ் வார்த்தை என்ன?) பிரமாதமாக காட்டப்படுகிறது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி – பிராமண ஆண்கள் தாசிகளின் நடனத்தைப் பார்த்துவிட்டு, அவர்களோடு சுகித்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். பிராமண மனைவிகளோடு தொடர்பு கொண்டுள்ள மராட்டிய சர்தார்கள் அவர்கள் வீட்டிலிருந்து திரும்புகிறார்கள். இரண்டு குழுவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஹோஹோ என்று நகைத்துக் கொள்கிறார்கள். மிக அருமையான காட்சி!

நாடகமாகப் பார்ப்பதில் என்ன லாபம்? முதலாவதாக காட்சி அமைப்புகள். கோரஸ் – பத்து பனிரண்டு நடிகர்கள் – அவ்வப்போது தன்னை வீடாக, கதவாக, கோவிலாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறது. மிக அழகான, கலை அம்சம் நிறைந்த காட்சி அமைப்பு. இரண்டாவதாக, பாட்டும் நடனமும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம். மராத்திய மண்ணின் லாவணிகளும் அபங்கங்களும் நாடகத்தில் அருமையாக பின்னிப் பிணைந்திருக்கின்றன. மூன்றாவதாக நாட்டார் கூறுகள். மஹாராஷ்டிராவின் தமாஷா வடிவத்தை செவ்வியல்படுத்தியது போல இருக்கிறது. லாவணி என்றால் என்ன, தமாஷா என்றால் என்ன என்று தெரியாவிட்டால் கூட ரசிக்க முடியும். நான்காவதாக, நல்ல நடிகர்கள் பிய்த்து உதறக் கூடிய பாத்திரங்கள். மோகன் அகாஷேவைப் பற்றி மராத்திய நாடக உலகுக்கு வெளியே தெரியவில்லை, ஆனால் அவர் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர். ஓம் பூரியை காஷிராமாகப் பார்த்த நினைவிருக்கிறது, ஆனால் திரைப்படத்தில் பார்த்ததை நாடகத்தோடு குழப்பிக் கொள்கிறேனோ என்று சந்தேகம்.

நானா ஃபட்னவிஸ் உண்மை மனிதர். மூன்றாம் பானிபட் போருக்குப் பின் அவர்தான் மராத்திய அரசை நடத்தி இருக்கிறார். நவீன சாணக்கியர் என்றே கருதப்படுகிறார். அவர் பெண்பித்தர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். காஷிராம் கொத்வாலும் உண்மை மனிதர். கிட்டத்தட்ட 15 வருஷம் கொத்வாலாக இருந்திருக்கிறார். புனே மீது அடக்குமுறை ராஜ்ஜியம் நடத்தினாராம். மொரோபா கனோபா 1863-இல் எழுதிய ஒரு கதையை அடிப்படையாக வைத்து விஜய் டெண்டுல்கர் இந்த நாடகத்தை எழுதி இருக்கிறார்.

நாடகம் வந்த காலத்தில் பிராமணர்களை இழிவுபடுத்துகிறது என்றும், நானாவை இழிவுபடுத்துகிறது என்றும் சிவசேனா போராட்டங்களை நடத்தி இருக்கிறது.

விஜய் டெண்டுல்கர் இந்தியாவின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். அவர் எழுதிய “ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே!” நாடகத்தையும் பரிந்துரைக்கிறேன். பாதல் சர்க்காரையும் இவரையும்தான் நான் முதல் இடத்தில் வைக்கிறேன். கிரீஷ் கார்னாட், மோகன் ராகேஷ் போன்றவர்களுக்கு அடுத்த இடம்.

நல்ல நாடகங்களைப் பார்க்கும் அதிருஷ்டம் எனக்கு அபூர்வமாகத்தான் கிடைக்கிறது. அதனால்தானோ என்னவோ காஷிராம் கொத்வால் இன்னும் என் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கிறது. அதுவும் மோகன் அகாஷே போன்ற சிறந்த நடிகர்கள் நடித்துப் பார்த்தது பெரிய அதிருஷ்டம். ஓம் பூரி நாயகனாக நடித்து திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

Ma Rainey’s Black Bottom

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு சிறுகதைக்கு கரு மனதில் வந்தது. அதை எழுதிவிட்டு அதற்கப்புறம் பதிவுகளைத் தொடரலாம் என்று நினைத்தேன். சிறுகதை பாதியில் stuck ஆகி நிற்கிறது. சரி பதிவுகளையாவது தொடர்கிறேன்.

Ma Rainey’s Black Bottom திரைப்படத்தைத்தான் முதலில் பார்த்தேன். நெட்ஃப்ளிக்ஸில் இருக்கிறது. வயோலா டேவிஸ், சாட்விக் போஸ்மன் நடித்தது. நல்ல திரைப்படம், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ஆகஸ்ட் வில்சன் எழுதிய நாடகத்தைத்தான் திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தது. நாடகத்தைத் தேடிப் பிடித்து படித்தேன். நல்ல நாடகமும் கூட. நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளது. திரைப்படம் நாடகத்தை ஏறக்குறைய அப்படியே பிரதிபலிக்கிறது.

மா ரெய்னி உண்மை நபர். அமெரிக்கக் கறுப்பர். Blues இசைப்பாணியின் முன்னோடி. Mother of the Blues என்றே அறியப்பட்டவர். 150 வருஷங்களுக்கு முன் – 1886-இல் – பிறந்து 1939-இல் மறைந்தவர். Ma Rainey’s Black Bottom என்பது அவருடைய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. அதிலிருந்து ஒரு இசைத் துணுக்கு கீழே.

1927-இல் சிகாகோவில் ஒரு நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் நாடகம். மா ரெய்னி அப்போது புகழ் பெற்ற பாடகி. பொதுவாக மா ரெய்னி அப்போது கறுப்பர்கள் நிறைந்த இடங்களில் நேரடியாக கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். கறுப்பர்கள் அதிகமாக இருந்த அமெரிக்காவின் தென் மாநிலங்களில்தான் அனேகமாக இந்த மாதிரி கச்சேரிகள் நடக்கும். ஆனால் இப்போது வெள்ளையர்கள் பிரக்ஞையிலும் நுழைந்து கொண்டிருந்தார். மேலும் ஒலிப்பதிவுகள், ரெகார்டுகள் பிரபலமாகிக் கொண்டிருந்த தருணம்.

சிகாகோவில் ஒரு ரெகார்டிங் கம்பெனி மா ரெய்னியின் சில பாடல்களை அன்று ஒலிப்பதிவு செய்யப் போகிறது. மா ரெய்னியின் வெள்ளைக்கார மானேஜர் இர்வின், ஸ்டுடியோவின் வெள்ளைக்கார அதிபர் ஸ்டர்டிவண்ட் ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். பின்னணி இசைக்கலைஞர்களான டொலீடோ, கட்லர், ஸ்லோ ட்ராக் (Slow Drag), லெவீ வந்தாயிற்று. முதல் மூவரும் அனுபவம் உள்ளவர்கள், மா ரெய்னியுடன் பல நாட்களாக, ஆண்டுகளாக வாசிப்பவர்கள். லெவீ இளைஞன், குழுவுக்கு கொஞ்சம் புதியவன். தானே இசையை உருவாக்க விரும்புபவன். மா ரெய்னியின் புகழ் பெற்ற பாடல்களையே மாற்றி இசை அமைக்கிறான், அது மானேஜர் இர்வினுக்கு பிடித்தும் இருக்கிறது. ஆனால் கட்லரும் மற்றவர்களும் மா ரெய்னி அப்படி மாற்றுவதை அனுமதிக்க மாட்டார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள், லெவீயை அதை உணர வைக்க முயற்சி செய்கிறார்கள்.

லெவீக்கு ஒரு பின்கதை இருக்கிறது. அவனது சிறு வயதில் வெள்ளையர்கள் அவனுடைய அம்மாவை அவன் கண் முன்னாலேயே கற்பழிக்கிறார்கள். வீட்டுக்கு திரும்பும் அப்பா குடும்பத்தை பத்திரமாக வேறு இடத்துக்கு குடிபெயர்த்துகிறார். அதற்குப் பிறகு கற்பழித்தவர்களில் பாதி பேரைக் கொல்கிறார். மீதிப் பேரைக் கொல்வதற்கு முன் அவரை மற்றவர்கள் கொன்றுவிடுகிறார்கள். கடவுள் நம்பிக்கை போய்விட்டது. நிறைய மன அழுத்தத்தில் இருக்கிறான். கடவுள் நம்பிக்கை உள்ள மற்ற இசைக்கலைஞர்களிடம் சின்னச் சின்ன பூசல்கள். கட்லருடன் கைகலப்பே ஏற்படுகிறது.

லெவீ வெள்ளையர்களிடம் சிரித்துப் பேசினாலும், உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கிறான். மா ரெய்னியிடம் வெள்ளையர்களுக்கு காரியம் ஆக வேண்டும், குறிப்பாக மானேஜர் இர்வினுக்கு காரியம் ஆக வேண்டும், அதனால் பணிந்து போகிறார்கள். அதே போல இப்போது வெள்ளையர்களிடம் பணிந்து போனாலும் மா ரெய்னி போன்ற இடத்துக்கு வர வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறான். குறிப்பாக புதிய பாடல்களை பதிவு செய்ய விரும்புகிறான், அது அவனை பிரபலமான கலைஞனாக்கினால் பிறகு இந்த மாதிரி கூழைக் கும்பிடு போட வேண்டாம் என்று உணர்ந்திருக்கிறான்.

மா ரெய்னி ஒலிப்பதிவுக்கு தாமதமாக வருகிறார். கூட அவரது பெண் காதலியும். அவரது காருக்கு சின்ன விபத்து, மா இறங்கி ஒரு போலீஸ்காரனோடு தகராறு செய்கிறார். போலீஸ்காரனுக்கு ஒரு கறுப்பரிடம் கார் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லை. மானேஜர் இர்வின் வந்து சமாதானம் செய்கிறான். மாவின் உறவுக்காரப் பையனுக்கு திக்குவாய், ஆனால் அந்தப் பையனும் ஒலிப்பதிவில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ஒத்திகையின்போது பையன் சொதப்பிக் கொண்டே இருக்கிறான்.

லெவீ மா ரெய்னியின் பெண் காதலிக்கு நூல் விடுகிறான். அந்தப் பெண்ணும் பதிலுக்கு நூல் விடுகிறாள். மா அவனை எச்சரிக்கிறாள். மா லெவீ தனக்கு ஒத்துவரமாட்டான் என்று உணர்ந்திருக்கிறாள், அவனை வேலையை விட்டு துரத்திவிடுகிறாள். மாவின் பிடிவாதங்களுக்கு எல்லாம் மானேஜரும் வளைந்து கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் மாவுக்கும் வேலை ஆக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது.

ஒரு வழியாக ஒலிப்பதிவு முடிகிறது. லெவீ தன் புதிய பாடல்களைப் பற்றி ஸ்டர்டிவாண்டிடம் கேட்கிறான். ஸ்டர்டிவாண்ட் எனக்குப் பிடிக்கவில்லை, ஐந்து டாலர் தருகிறேன் என்கிறான். லெவீயால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவனது புதிய ஷூக்கள தற்செயலாக மிதித்துவிடும் டொலீடோவோடு பெரிய சண்டை ஏற்படுகிறது, மன அழுத்தத்துக்கு வடிகாலே இல்லாத லெவீ டொலீடோவை கத்தியால் குத்திவிடுகிறான்.

கறுப்பர்களின் மீது நடத்தப்பட்ட/நடத்தப்படும் அடக்குமுறை மிக சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. அதிகரித்துக் கொண்டே போகும் மன அழுத்தம் மிக அற்புதமாக. எம்விவியின் பைத்தியக்காரப் பிள்ளை சிறுகதை ஒன்றில்தான் இத்தனை அற்புதமாக மன அழுத்தத்தின் சித்தரிப்பை பார்த்திருக்கிறேன்.

அனேகமாக அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தாலும் குறிப்பாக சாட்விக் போஸ்மன், வயோலா டேவிஸ் பிரமாதம். திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். முடிந்தால் நாடகத்தையும் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள், திரைப்படங்கள்

கிரீஷ் கார்னாட் நாடகம் – யயாதி

கார்னாடுக்கு எழுதிய அஞ்சலியில் நான் படிக்க விரும்பும் நாடகம் யயாதி என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது படிக்க முடிந்ததால் எழுதுகிறேன்.

யயாதி உலக இலக்கியங்களிலேயே அபூர்வமான, எல்லா காலங்களிலும் வாழும், சிறந்த கரு. கில்கமேஷ் இறப்பு என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முயல்வதைப் போல; கெய்ன் “Am I my brother’s keeper?” என்று கேட்பதைப் போல; ஏப்ரஹாம் கடவுளுக்கு தன் ஒரே மகனை பலி தர முயல்வதைப் போல; கர்ணன் குந்திக்கு வரம் தருவதைப் போல; அபிமன்யு வதத்தைப் போல; ஈடிபசுக்கும் கண்ணகிக்கும் ஊழ்வினை வந்து உறுத்துவதைப் போல; முதுமை என்றால் என்ன? முதுமையைத் தவிர்க்க என்ன விலை தருவீர்கள்?

கார்னாடுக்கும் அது தெரிந்திருக்கிறது. தொன்மத்தை கொஞ்சம் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்கிறார். தேவயானி என் வலது கையைப் பற்றி என் கணவரானார் என்று பெருமிதத்தோடு சொல்லுவதும், சர்மிஷ்டை விஷத்தை அருந்த முயலும்போது யயாதி அவளது வலது கையை யயாதி பற்றித் தடுப்பதும் சிறப்பான காட்சி அமைப்பு. புரு தன் வீரதீர சாகச பாரம்பரியத்தை அலுப்போடு நோக்குவதும் சிறந்த பாத்திரப் படைப்பு. புருவின் மனைவி என் கணவரின் இளமையை நீர் ஏற்றதால் எனக்கும் கணவனாக வாரும் என்று அழைக்க, யயாதி இளமையை மீண்டும் புருவுக்கு அளித்து சர்மிஷ்டையோடு வெளியேறுவது நல்ல காட்சி.

ஆனால் நாடகத்தில் எனக்கு சிறந்த தருணமாகத் தெரிந்தது யயாதி-தேவயானி-சர்மிஷ்டை-புரு காட்சிகள் அல்ல. சேடி ஸ்வர்ணலதா தன் கணவன் தன் மீது சந்தேகப்படுவதை விவரிப்பதுதான். ஸ்வர்ணா ஏழைக் குடும்பத்தவள். கல்வி கற்க பணம் இல்லை. ஒரு பிராமணன் சோறு போட்டால் போதும் என்று முன்வருகிறான். ஆனால் நான் வெறும் சோற்றுக்கு சொல்லித் தருகிறேன் என்பது வெளியே தெரிந்தால் என் மார்க்கெட் போய்விடும், அதனால் ஒவ்வொரு நாள் இரவும் ரகசியமாக, யாரும் பார்க்காதபோது வருகிறேன், சாப்பிட்டுவிட்டு சொல்லித் தருகிறேன் என்று சொல்கிறான். ஸ்வர்ணாவின் கணவனுக்கு இது தெரிகிறது, குருவும் தன் மனைவிக்கும் உறவு இருந்ததோ என்று சந்தேகம். உறவு இருந்தது என்று தெரிந்தால் அவனுக்கு பிரச்சினை இருந்திருக்காது, ஏதோ தவறு என்று விட்டுவிடுவான், ஆனால் உறவு இல்லை என்று மனைவி சொல்வதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், சந்தேகம்தான் அவனைக் கொல்கிறது. மனித மனத்தின் சிறப்பான விவரிப்பு.

அஞ்சலியில் சொன்னது போல:

கார்னாடின் நாடகங்களில் எனக்கு எப்போதும் ஏதோ குறைகிறது என்பதை சொல்ல வேண்டி இருக்கிறது. கார்னாடின் வேர்கள் இந்தியாவில் – அதுவும் கர்நாடகத்தில்தான் இருக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரிடம் ஒரு அன்னியத் தன்மை தெரிகிறது. பார் நான் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதுகிறேன் என்று அவர் வலிந்து சொல்வது போலத் தோன்றுகிறது. எனக்கு இதை சரியாக விளக்கத் தெரியவில்லை. விஜய் டெண்டுல்கரின் நாடகங்களிலோ, பாதல் சர்க்காரின் நாடகங்களிலோ எனக்கு இப்படித் தெரிவதில்லை.

யயாதி நாடகத்தைப் படித்தபோது இன்னும் கொஞ்சம் தெளிவு கிடைத்தது. கார்னாடின் வேர்கள் இந்தியாவில் இருந்தாலும் அவர் எப்போதும் எழுப்ப விரும்புவது மேலை நாட்டு பாணி கட்டிடங்களையே. இப்சனும் ஸ்ட்ரிண்ட்பர்கும், யூஜீன் ஓ’நீலும்தான் ஆர்தர் மில்லரும்தான் அவரது ஆதர்சங்கள் என்று நினைக்கிறேன். அதனால் அவரது நாடகங்களில் வசனம் மூலமாகவே பாத்திரங்களின் தோலை உரித்து அவர்களது உண்மை எண்ணங்களை, சுயரூபத்தை அவர்களே உணர்வது போன்ற காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. அவை பல சமயம் செயற்கையாகத் தெரிகின்றன, கதையோட்டத்தில் ஒட்டவில்லை. Wannabe O’Neill என்று தோன்றுகிறது.

நாடகக் கலையின் ஜாம்பவானான சத்யதேவ் தூபே முதலில் இதை நாடகமாக இயக்கினாராம். அம்ரீஷ் பூரிதான் அந்தக் காலத்தில் யயாதியாக நடித்தாராம்.

கார்னாட் தன் 22 வயதில் எழுதிய நாடகம். அவரது பிற்கால நாடகங்கள் – குறிப்பாக ஹயவதனா, நாகமண்டலா, தலேதண்டா – ஆகியவற்றிலும் இந்த ஒட்டாமல் இருப்பது தெரியத்தான் செய்கிறது, ஆனால் குறைவாக. இது சிறந்த முயற்சி, குறிப்பிட வேண்டிய இந்திய நாடகம், ஆனால் இந்தியாவின் டாப் டென் நாடகங்கள் என்று எடுத்தால் கூட வராது.

குறைகள் இருந்தாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

ஷேக்ஸ்பியர் நாடகம் – Tempest

பொதுவாக ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களைத்தான் (tragedies) நான் விரும்புகிறேன். மாக்பெத்திலும் ஹாம்லெட்டிலும் கிங் லியரிலும் ரிச்சர்ட் III-இலும் ஜூலியஸ் சீசரிலும்தான் அவர் உச்சங்களை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம்.

அவரது இன்பியல் நாடகங்கள் மசாலா படங்களைத்தான் எனக்கு நினைவுபடுத்துகின்றன.வார்த்தை விளையாட்டு இருக்கும். அது கருணாநிதியோ, சக்தி கிருஷ்ணசாமியோ, கண்ணதாசனோ எழுதக் கூடிய வசனங்களை நினைவுபடுத்தும். நாடோடி மன்னன் வசனம் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன். நகைச்சுவைக்கு என்று தனியாக ஒரு track இருக்கும். அந்த நகைச்சுவை காலாவாதி ஆகிவிட்ட என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை பகுதிகளைத்தான் எனக்கு நினைவுபடுத்துகிறது.

டெம்பெஸ்ட் சின்ன வயதில் தம் கட்டிப் படித்த நாடகம். பதின்ம வயதுகளில் ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் படிக்க எனக்கு கஷ்டமாக இருந்தது. இப்போதும் சுலபம் என்று சொல்லமாட்டேன், ஆனால் படிக்க முடிகிறது.

மீள்வாசிப்பு என் எண்ணங்களை உறுதிப்படுத்தியது. நகைச்சுவை track, counter-கள், இழுவையான எம்ஜிஆர்-சரோஜா தேவி டைப் காதல் என்று பல மசாலா படக் கூறுகள் இருந்தன. பழைய சந்திர்லேகா, நாடோடி மன்னன் திரைப்படம் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். நடிக்கப்பட்ட காலத்தில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் மிகவும் ரிச்சாக நாடகமாக்கலாம். புயல் காட்சிகள், அமானுஷ்ய காட்சிகள் என்று பிரமாதப்படுத்திவிடலாம். ஆனால் நாடகம் மனித இயல்புகளைப் பற்றியது அல்ல, படித்த பிறகு நமக்கு பெரிதாக மனதில் எந்த சிந்தனையும் ஓடப்போவதில்லை.

கதை மிகவும் சிம்பிளானது. மிலனின் அரசரான ப்ராஸ்பரோவும் அவரது 2-3 வயது மகள் மிராண்டாவும் அவரது தம்பி அன்டோனியோவின் சதியால் பதவியை இழந்து ஒரு தீவில் சேர்கிறார்கள். தம்பிக்கு உறுதுணையாக இருப்பவர் நேபிள்சின் மன்னர் அலோன்சோ. ப்ராஸ்பரோ மந்திரவாதி, அவர் நினைத்தால் புயலடிக்கும், கடல் கொந்தளிக்கும், பல அமானுஷ்ய சக்திகள் – குறிப்பாக ஏரியல் – அவருக்கு அடிமையாக இருக்கின்றன. 10-12 வருஷங்கள் கழித்து ப்ராஸ்பரோவின் எதிரிகள் கப்பலில் வரும்போது ப்ராஸ்பரோ பெரும் புயலை ஏற்படுத்தி அவர்கள் எல்லாரையும் தன் தீவில் கொண்டு சேர்க்கிறார். நேபிள்சின் இளவரசன் ஃபெர்டினாண்டுக்கும் மிராண்டாவுக்கும் கண்டதும் காதல். எதிரிகளுக்கு பாடம் கற்பித்து, அவர்களை மன்னித்து, இளம் ஜோடியை சேர்த்து வைத்து, ப்ராஸ்பரோ மீண்டும் மிலனின் மன்னராகிறார்.

சாதாரணமாக ஷேக்ஸ்பியர் ஏதாவது பழைய கதையை எடுத்து அதை நாடகமாக மாற்றுவார். டெம்பெஸ்ட் அவருடைய ஒரிஜினல் கதையாம். 1610-1611-இல் எழுதப்பட்டது.

டெம்பெஸ்ட் பெருவெற்றி அடைந்த நாடகம். ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று. இன்றும் நாடகமாக, ஒரு visual spectacle ஆக பார்க்கக் கூடிய நாடகம்தான். ஆனால் என் கண்ணில் இது மாக்பெத் போன்றோ ஹாம்லெட் போன்றோ பெரும் இலக்கியம் இல்லை. ஏறக்குறைய வணிக எழுத்துதான்.

முடிந்தால் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷேக்ஸ்பியர் பக்கம்

A Raisin in the Sun – Groundbreaking Play

லொரெயின் ஹன்ஸ்பெர்ரி எழுதிய A Raisin in the Sun (1959) அமெரிக்க நாடக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. கறுப்பினப் பெண் எழுதி, ஒரு கறுப்பர் – லாய்ட் ரிச்சர்ட்ஸ் – இயக்கிய நாடகம் பிராட்வேயில் அரங்கேறுவது அதுவே முதல் முறை. (பிராட்வே நியூ யார்க்கில் நாடகங்கள் அரங்கேறும் இடம். அங்கே ஒரு நாடகம் நடத்தப்படுவது பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.) ஆனால் அதை விட எனக்கு முக்கியமாகத் தெரிவது கறுப்பர்கள் பெருவாரியான பாத்திரங்களாக ஒரு நாடகத்தில், அதுவும் பிராட்வே நாடகத்தில் இடம் பெறுவது அதுவே முதல் முறை. ஒரே ஒரு கதாபாத்திரம்தான் வெள்ளை இனத்தவர் என்று நினைக்கிறேன்.

கச்சிதமாக எழுதப்பட்ட நாடகம். ஏறக்குறைய டெம்ப்ளேட் கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இத்தனை சுவாரசியமாகவும் இலக்கியத் தரத்தோடும் நாடகத்தை உருவாக்க முடியும் என்று ஹன்ஸ்பெர்ரி காட்டுகிறார். நடிக்க நிறைய ஸ்கோப் உடையது. நல்ல நடிகர்கள் புகுந்து விளையாடலாம். முதல் முறை நாடகமாக நடிக்கப்பட்ட போது நாயகனாக நடித்தவர் சிட்னி பாய்டியர். படிக்கும்போதே இத்தனை பிரமாகமாக இருப்பது நல்ல நடிப்பும் சேர்ந்துகொண்டால் எங்கேயோ போய்விடும்.

இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலம். சிகாகோவில் கீழ் மத்திய தர வர்க்க, கறுப்பர் குடும்பம். ஒண்டுக் குடித்தனத்தில் பாட்டி லேனா, அப்பா வால்டர் லீ, அம்மா ரூத், அத்தை பெனதியா, சிறுவன் ட்ராவிஸ் என்று வாழ்கிறார்கள். பணப் பற்றாக்குறை எப்போதும் உண்டு. லேனாவிற்கு இன்ஷூரன்ஸ் பணம் பத்தாயிரம் வர வேண்டும். வால்டர் லீ கார் ட்ரைவராக வேலை செய்கிறார். எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்ற துடிப்பு. பணம் இல்லாமல் எந்த பிசினசிலும் இறங்க முடியாத நிலை. அம்மா அந்தப் பணத்தை தனக்கு தரமாட்டாளா, அதை வைத்து இந்த அடிமை வேலையை விட்டு ஒழித்துவிட்டு முன்னேற மாட்டோமா என்று பரிதவிக்கிறார். வால்டரின் மனைவி ரூத் எல்லாரையும் அரவணைத்து செல்கிறார், ஆனால் வாழ்க்கை – குறிப்பாக ஒண்டுக் குடித்தன வாழ்க்கை – அவரை தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. இளைஞி பெனதியா அண்ணனோடு சண்டை போட்டுக் கொண்டு, இரண்டு இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

வால்டர் லீ அம்மாவிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மதுக்கடை வைக்க விரும்புகிறார். அம்மாவுக்கோ இஷ்டமில்லை. பணம் வந்தவுடன் ஒரு வீட்டை வாங்க அட்வான்ஸ் கொடுக்கிறாள். ஒண்டுக்குடித்தன வாழ்க்கையை விட்டு வெளியேறலாம் என்ற எண்ணமே ரூத்திற்கு புது உற்சாகம் தருகிறது. பணம் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்ததும் வால்டருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. அவரது தவிப்பைக் கண்டு லேனா வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ், பெனதியாவின் படிப்புக்கு கொஞ்சம் பணம் எடுத்து வைத்துவிடலாம், மிச்சத்தை நீ வைத்துக் கொள் என்று வால்டரிடம் கொடுத்துவிடுகிறாள். வால்டர் புது மனிதராக மாறுகிறார். உற்சாகத்துடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

லேனா அட்வான்ஸ் கொடுத்த வீடு வெள்ளையர்கள் வாழும் ஒரு காலனி. அங்கே குடி போகப்போகும் முதல் கறுப்பர் குடும்பம் இதுதான். கறுப்பர் குடும்பம் அங்கே வருவதை விரும்பாத அந்த காலனி மக்கள், உனக்கு மேலே கொஞ்சம் பணம் தருகிறோம், வீட்டை எங்களுக்கே விற்றுவிடு என்று பேரம் பேசுகிறார்கள். வால்டர் லீ அவர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகிறார்.

வால்டரின் நண்பன் பணத்தை திருடிக் கொண்டு ஓடிவிடுகிறான். வால்டர் தோல்வியின் சுமையைத் தாங்க முடியாமல் உட்கார்ந்திருக்கிறார். சரி வீடு வேண்டாம், பணம் கொடுங்கள் என்று காலனி சங்கத்து நிர்வாகியிடம் பேசுகிறார். லேனா அடிமைகளாக வாழ்ந்த நினைவிருக்கிறது, எப்போது ஏழைகளாகத்தான் இருந்தோம், ஆனால் நீ எங்களோடு சரிக்கு சமமாக வாழத் தகுதி அற்றவன்(ள்) என்ற இழிநிலையை என்றுமே ஏற்றதில்லை, இப்போதும் கூடாது என்று கடுமையாக ஆட்சேபிக்கிறாள். வால்டர் லீ நம் போன்றவர்களுக்கு இதுதான் விதி, நம்மால் என்றுமே இந்த இழிவை மீற முடியாது என்று தளர்ச்சியோடு சொல்கிறார்.

ஆனால் கடைசி நேரத்தில் வால்டர் லீயின் மனம் மாறுகிறது. நாங்கள் அங்கேதான் குடியேறப் போகிறோம் என்று அடித்துச் சொல்லிவிடுகிறார். சுபம்!

பெனதியா வால்டர் லீ பணத்தை கோட்டை விட்டதற்காக நீ எல்லாம் ஒரு மனிதனா ரேஞ்சில் வால்டர் லீயைக் கழுவி ஊற்றும்போது லேனா சொல்வது எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்.

Child, when do you think is the time to love somebody the most? When they done good and made things easy for everybody? Well then, you ain’t through learning—because that ain’t the time at all. It’s when he’s at his lowest and can’t believe in hisself ’cause the world done whipped him so! When you starts measuring somebody, measure him right, child, measure him right. Make sure you done taken into account what hills and valleys he come through before he got to wherever he is.

உண்மைதானே! உண்மையான உறவுகளும் நண்பர்களும் அப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்!

வெய்யிலில் கிடக்கும் திராட்சை சுருங்கிப் போவது போல ஒவ்வொரு நாளும் பிரச்சினைகளில், மன அழுத்தத்தில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களும் சுருங்கிப் போகிறார்கள் – அதனால்தான் ஹன்ஸ்பெர்ரி A Raisin in the Sun என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. வால்டர் லீ, ரூத், லேனாவுடன் மனம் ஒன்ற முடிகிறது.

கறுப்பர் பின்புலம் முக்கியமானதுதான். ஆனால் இதை எந்தப் பின்புலத்திலும் பொருத்திக் கொள்ளலாம். கலிஃபோர்னியாவில் வாழும் உணவு விடுதி வெயிட்டர் குடும்பத்துக்கோ, சென்னையில் வாழும் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்துக்கோ இது அன்னியமானதல்ல.

கட்டாயம் பாருங்கள், குறைந்தபட்சம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

அஞ்சலி: கிரீஷ் கார்னாட்

கார்னாட் இறந்துவிட்டார் என்றதும் ஒரு நிமிஷம் நம்பவே முடியவில்லை. என் மனதில் இருக்கும் கார்னாடின் உருவம் வம்சவிருக்‌ஷாவில் நடித்த இளைஞர்தான். அதற்கப்புறம் அவரை வேறு திரைப்படங்களில் பார்த்திருந்தாலும் எப்போதும் இளைஞராகவே தோற்றம் அளித்தார். அவருக்கு 81 வயதாகிவிட்டதா என்று தோன்றியது.

கார்னாடின் முக்கியப் பங்களிப்பு அவர் எழுதிய நாடகங்கள். அவரது திரைப்பட பங்களிப்பு என்னைப் பொறுத்த வரையில் இரண்டாவது இடம்தான் வகிக்கிறது. இத்தனைக்கும் அவர் இயக்கிய வம்சவிருக்‌ஷா, தப்பலியு நீனடே மகனே, மந்தன், உத்சவ் திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.

கார்னாடின் நாடகங்களில் எனக்கு எப்போதும் ஏதோ குறைகிறது என்பதை சொல்ல வேண்டி இருக்கிறது. கார்னாடின் வேர்கள் இந்தியாவில் – அதுவும் கர்நாடகத்தில்தான் இருக்கின்றன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவரிடம் ஒரு அன்னியத் தன்மை தெரிகிறது. பார் நான் எவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதுகிறேன் என்று அவர் வலிந்து சொல்வது போலத் தோன்றுகிறது. எனக்கு இதை சரியாக விளக்கத் தெரியவில்லை. விஜய் டெண்டுல்கரின் நாடகங்களிலோ, பாதல் சர்க்காரின் நாடகங்களிலோ எனக்கு இப்படித் தெரிவதில்லை.

துக்ளக் (1964), ஹயவதனா (1972), நாகமண்டலா (1988), தலேதண்டா (1990), அக்னி மட்டு மலே (1995), திப்பு சுல்தான் கண்ட கனசு (1997), பலி ஆகிய நாடகங்களைப் படித்திருக்கிறேன். யயாதி (1961) நாடகத்தைப் படிக்க விரும்புகிறேன். நான் படித்தவற்றுள் சிறந்த நாடகம் துக்ளக்தான். துக்ளக், ஹயவதனா, நாகமண்டலா, தலேதண்டா ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறேன்.

எப்போதாவது விவரமாக எழுதவேண்டும். இப்போதைக்கு தலேதண்டாவைப் பற்றி முன்னால் எழுதிய ஒரு பதிவை மீள்பதித்திருக்கிறேன்.


girish_karnadதலேதண்டா எழுதப்பட்ட காலத்தில் நான் பெங்களூருவில் நாடகமாகப் பார்த்திருக்கிறேன். நல்ல நாடகம்தான், ஆனால் ஏதோ குறைகிறது என்று உணர்ந்தேன். பல வருஷங்களுக்குப் பின் மீண்டும் படிக்கும்போதும் அப்படியேதான் தோன்றுகிறது.பொதுவாகவே கிரீஷ் கார்னாட் எழுதிய நாடகங்கள் எனக்கு என்னவோ குறையுது என்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகின்றன.

தலேதண்டா என்றால் literal ஆக ‘தலை தண்டம்’ அதாவது என் தலையை வெட்டிக் கொள்ளலாம் என்று அர்த்தமாம். ‘ராமஜன்ம பூமி-பாபர் மசூதி’ பிரச்சினை இருந்த காலத்தில் எழுதப்பட்டது. கார்னாட் மசூதி இடிக்கப்பட்டு ராமர் கோவில் கட்டப்பட்டதை எதிர்ப்பவர் (நானும்தான்), ஆனால் அந்த அரசியல் எண்ணத்தை நாடகத்தின் மூலம் வெளிப்படுத்துவது அதன் இலக்கியத் தரத்தை குறைக்கிறது என்று கருதுகிறேன்.

basavaபசவர் என்று கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைய கர்நாடக மாநிலத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டு காலத்தில் சிவனடியார்களுக்குள் ஜாதி வேற்றுமை இல்லை, எல்லாரும் சமம் என்று ஒரு இயக்கத்தை தொடங்கினார். இன்றைய லிங்காயத்து ஜாதியினர் பசவர்தான் தங்கள் ஜாதியை உருவாக்கினர் என்று பெருமை பேசுவது நகைமுரண். அவரைப் பற்றிய சில கர்ணபரம்பரைக் கதைகளை கார்னாட் நாடகம் ஆக்கி இருக்கிறார்.

நாடகம் ஆரம்பிக்கும் காலத்தில் பசவரின் இயக்கத்தில் இரண்டு லட்சம் சரணர்கள் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சரண் என்று சொல்லி வணக்கம் சொல்வதால் அவர்கள் சரணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஜாதி இல்லை, குறைந்த பட்சம் மேலோட்டமாக இல்லை. பசவர் ராஜா பிஜ்ஜலனிடம் மந்திரியாக இருக்கிறார். பசவரை வீழ்த்த ஒரு கூட்டம் முயன்று கொண்டிருக்கிறது. சரணர்களில் ஒரு பிராமணப் பெண்ணுக்கும் செருப்பு தைப்பவர் குடும்பப் பையனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பசவரே தயங்குகிறார். அவருக்கு ஜாதி மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமூகத்தில் இந்த இருவராலும் வாழ முடியுமா என்று சந்தேகிக்கிறார். பிஜ்ஜலன் திருமணத்தை தடுக்காததால் சுமுகமாக நடந்துவிடுகிறது. பசவர் உலக வாழ்க்கையை விட்டு சன்னியாசி ஆகிறார். பிஜ்ஜலனை சிறைப்படுத்தும் அவன் மகன் சோவிதேவன் பையன், பெண் இருவருடைய அப்பாக்களையும் குரூரமாகக் கொல்கிறான். பசவர் இறந்தும் போகிறார்.

நாடகத்தின் பலம் பாத்திரங்களின் நம்பகத்தன்மை. இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறார் கார்னாட். ஆனால் கதையின் ஊடாக கொஞ்சம் பிரச்சார நெடி அடிக்கிறது. பல இடங்களில் நம்பகத் தன்மையை அதிகரிக்க பாத்திரங்கள் இப்படி இப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்று யூகிக்க முடிகிறது. கலையம்சம் என்னைப் பொறுத்த வரையில் குறைவாக இருக்கிறது. நடுவில் ஒரு இடத்தில் அல்லம பிரபு தனக்கு காண்பித்த mystical காட்சி என்று பசவர் நாலு வரி சொல்கிறார். அதை விவரித்திருந்தால் நாடகம் எங்கோ போயிருக்கும் என்று நினைக்கிறேன். எப்படி விவரிப்பார், கார்னாடுக்கு மத ஒற்றுமை பற்றி பேச வேண்டுமே!

சராசரிக்கு மேல் உள்ள நாடகம்தான். படிக்கலாம்தான். ஆனால் படித்தே ஆக வேண்டிய நாடகம் இல்லை. பார்ப்பது இன்னும் உத்தமம்.

தலேதண்டாவுக்கு 1994-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.

பிற்சேர்க்கை: திப்பு சுல்தான் கண்ட கனசு திப்புவின் “நல்ல” பக்கத்தை மட்டும் காட்டுகிறது. திப்பு பட்டு, சந்தனம் ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்ய முயன்றார். மராத்தியர்களும் நிஜாமும் அவர் பக்கம் இருந்திருந்தால் நிச்சயம் ஆங்கிலேயர்களை ஜெயித்திருப்பார். அதைத்தான் அவர் கனவு கண்டதாக எழுதி இருக்கிறார். படிக்கலாம், பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். பலி எனக்கு pretentious ஆகத் தெரிந்தது. எனக்கான நாடகம் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்