வீழ்ச்சி

வினவு தளம் ஆரம்பித்த காலத்தில் நான் அங்கே செயலாக இருந்தேன். அவர்கள் ஆரம்பித்த ஒரு வருஷத்தில் தொகுத்துப் போட்ட புத்தகத்தில் என் பங்களிப்பும் உண்டாம். அவர்களுடைய வார்த்தைகளில்:

வினவின் விவாதங்களில் சண்டாமிருதம் செய்யும் அண்ணன் ஆர்.வியின் வாதங்களெல்லாம் மும்பை நூலில் இருப்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியாது.

ஆனால் ஹிந்துக்கள் – குறிப்பாக பார்ப்பனர்கள் பற்றிய வினவு தளத்தின் இரட்டை நிலை கசப்பை அதிகப்படுத்திக் கொண்டே போனது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்றால் பொங்கி எழுபவர்கள் பார்ப்பனர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்று எப்படி எழுதுகிறார்கள், வெறும் அரசியல் நிலையும் இயக்க சார்பும் கண்ணை இப்படியும் மறைக்குமா என்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. இப்போது எப்படியோ தெரியாது, அப்போதெல்லாம் “பார்ப்பன” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களால் ஃபாசிசம் என்ற வாரத்தையை எழுதவே முடியாது.  முசோலினியின் ஃபாசிச இயக்கத்தைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கூட பார்ப்பன ஃபாசிசம் என்றுதான் எழுதுவார்கள். அணுகுமுறையில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக் காட்டினால் பதில் வராது, ஊரைச் சுற்றுவார்கள், தனி மனிதத் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் தலைமுழுகிவிட்டேன்.

அந்த காலகட்டத்தில்தான் தீவிர ஹிந்துத்துவர்களான ஜடாயு மற்றும் அரவிந்தன் நீலகண்டன் அறிமுகமானார்கள். அரசியல் நம்பிக்கைகள் வேறாக இருந்தன, ஆனால் தெளிவாகத் தங்கள் கருத்துக்களை முன்வைத்தார்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தன, ஆனால் ஒருவர் நிலையை மற்றவரால் புரிந்து கொள்ள முடிந்தது. வினவு தளத்தில் பல அரை வேக்காட்டு பதில்களை சந்தித்த எனக்கு தர்க்கபூர்வமாக சிந்திக்கக் கூடியவர்களிடம், நாகரீகமான மொழியில் பேசக் கூடியவர்களிடம் பேசுவது பெரிய relief ஆக இருந்தது. எங்கே இசைவு இருந்தது, எங்கே என்ன பேசினாலும் இசைவு வராது என்றெல்லாம் தெளிவாகப் புரிந்தது.

ஜடாயுவின் கம்ப ராமாயணம் பற்றிய பேச்சும் எழுத்தும் கவிதை என்றால் ஓடும் எனக்கே கொஞ்சம் ஆர்வத்தை ஏற்படுத்தின. சிறந்த வாசகர்கள் என்று தெரிந்தது. ஜடாயு ஆசிரியராக இருந்த (இருக்கும்?) தமிழ் ஹிந்து தளத்தில் நானும் அவ்வப்போது எழுதினேன். என் மஹாபாரதக் கதைகள் அனேகமாக அந்தத் தளத்தில்தான் பதிக்கப்பட்டன. அரவிந்தன் அமெரிக்கா வந்தபோது என் வீட்டில் நண்பர்களுடன் அவருடைய கலந்துரையாடல் நடந்தது என்று நினைவு. (ஒரு வேளை ஜடாயு மட்டும்தானோ, சரியாக நினைவில்லை.)

இன்று அரசியல் நிலை அவர்களை எத்தனை மாற்றி இருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது. ஜடாயு போன்ற ஒரு சிறந்த வாசகர் மோடிக்கு எதிரான அறிக்கையில் கையெழுத்திட்ட கி. ராஜநாராயணனுக்கு இந்திய அரசு என்ன மயிருக்கு (அவருடைய வார்த்தைப் பிரயோகம்) பத்மஸ்ரீ விருது வழங்க வேண்டும் என்று கேட்டார். மோடிக்கு எதிரான அரசியல் நிலைக்கும் கி.ரா.வின் இலக்கிய சாதனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், கி.ரா. மோடியை எதிர்க்கவில்லை, வெறுக்கிறார் என்று அடுத்த கட்டத்துக்கு தாவினார். எதிர்ப்பு என்பது வெறுப்பு அல்ல, அப்படி வெறுப்பாகவே இருந்தாலும் சரி, அதற்கும் கி.ரா.வின் இலக்கிய சாதனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டதற்கு கி.ரா.வுக்கு மோடி மீதல்ல, ஹிந்து மதத்தின் மீதே, இந்தியப் பண்பாட்டின் மீதே வெறுப்பு என்று முடித்துக கொண்டார். யாருக்கு ஹிந்து மதத்தின் மீது வெறுப்பு? முஸ்லிம் அடக்குமுறைக்கு பயந்து ஊர்விட்டு ஊர் வந்த நாயக்கர் வாய்மொழி வரலாற்றை கோபல்ல கிராமத்தில் பதிவு செய்த கி.ரா.வுக்கு! மோடிக்கு எதிராக வாக்களித்த நாற்பத்து சொச்சம் கோடி இந்தியர்களும் தேசத் துரோகிகள் என்பதில் தெளிவாக இருக்கிறார். (அரவிந்தன் கி.ரா.வுக்கு தகுதி இருந்தால், இலக்கிய சாதனையாளர் என்றால் விருது வழங்குவதில் தவறில்லை என்றார். பாவம், கி.ரா. இலக்கியத்தில் சாதனை புரிந்திருக்கிறாரா இல்லையா என்று அவருக்குத் தெரியவில்லை.)

அரவிந்தன் நிலையோ இதை விட மோசம். வினவு தளத்துக்கு பார்ப்பன ஃபாசிசம் என்றால் இவருக்கு “நேருவிய” அடைமொழி இல்லாமல் ஃபாசிசம் என்று எழுதவே முடிவதில்லை. வாயுத் தொந்தரவு ஏற்பட்டால் அதற்கும் காரணம் நேற்று சாப்பிட்ட பருப்பு வடை அல்ல, நேருவிய ஃபாசிசமே  என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

சவர்க்கார் அந்தமானில் பட்ட துன்பங்களை நேரு படவில்லை, அவரது சிறைவாசம் சொகுசானது என்றெல்லாம் எழுதுகிறார். விட்டால் திலகர் சிறையில் செக்கிழுக்கவில்லை, அதனால் அவரது தியாகம் வ.உ.சி.யை விடக் குறைவானது என்று சொல்லுவார் போல. இவர் இப்படி எழுதினால் இன்னொரு பிராந்தன் அப்பா மோதிலால் வக்கீல் தொழிலை விட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகும் விடுமுறைக்கு ஐரோப்பா செல்லக் கூடிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தன் உல்லாச வாழ்க்கையை தியாகம் செய்து சிறை சென்றார், சவர்க்கார் தன் சாதாரண (ஒரு வேளை ஏழையோ?) வாழ்க்கையைத்தானே தியாகம் செய்தார் அதனால் நேருவின் தியாகமே உயர்ந்தது என்று எழுதுவான். சரி அப்படி சிறையில் எத்தனை கஷ்டம் என்பதுதான் பங்களிப்பை தீர்மானிக்கும் அளவுகோல் என்றால் ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கவனமாக ஆங்கில அரசை எதிர்க்காமல் பார்த்துக் கொண்ட, சிறை இருந்த பக்கம் கூட செல்லாத கோல்வால்கரை ஏன் ஹிந்துத்துவர்கள் உயர்த்திப் பிடிக்கிறீர்கள்? கோல்வால்கர் நேருவை விடத் “தாழ்ந்தவர்” என்றும் ஒத்துக் கொள்வாரா?

அரவிந்தனை மறுத்து கருத்து சொன்னால் அவர் முன் வைக்கும் வாதம் ஒன்றே ஒன்றுதான் – என் கருத்தை மறுப்பவனுக்கு மூளையில்லை! அவரது மொழியோ – சிங்கம், சிறுமதி, பருப்பு, கொட்டை என்று திராவிடக் கட்சிகளின் வாரிசாக மாறிக் கொண்டிருக்கிறார். காளிமுத்து கெட்டார்! சாம்பிளுக்கு ஒன்று.

நேருவிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறது இந்த சிறுமதி… இந்த லட்சணத்தில் என்னிடம் வந்து இண்டக்ரிட்டி பருப்புவிதை பட்டாணி விதை பூசணி விதை என கொட்டை பிரச்சனை வேறு செய்கிறது இந்த ஆபாசம்.

அரவிந்தன் JNU-வில் மாணவர்களை அடித்தவர்கள் கத்தி கம்போடு அல்ல, எந்திரத் துப்பாக்கிகளோடு போயிருக்க வேண்டும் என்ற ஒரு பதிவை தன் timeline-இல் பகிர்ந்துகொண்டார். உண்மையிலேயே சுட்டுத் தள்ளி படுகொலை செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்று அதிர்ச்சியோடு நான் கேட்டபோது நான் வன்முறையை ஆதரிக்கவில்லை, ஆனால் JNU எப்படி பணியாற்றுகிறது என்பது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார். வன்முறையை எதிர்ப்பவர் விடுதியில் இருக்கும் மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தால் புரிந்து கொள்ளலாம். கத்தி கபடா பத்தாது, துப்பாக்கி கொண்டு போயிருந்திருக்க வேண்டும் என்று பகிர்ந்தது புரியவில்லை. சரி ஏதோ இந்த அளவுக்காவது சொல்கிறாரே, JNU மேல் உள்ள கோபம் அப்படி வெளிப்பட்டிருக்கிறது, யோசிக்காமல் பகிர்ந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். அடுத்த படியாக சட்டத்துக்கு விரோதமாக துப்பாக்கி தூக்குபவராக பரிணமிக்காமல் இருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

சுதாகர் கஸ்தூரி முஸ்லிம்கள் கற்பழிக்க வந்தால் ஹிந்துப் பெண்கள் பேசாமல் படுத்துக்கொள்ள வேண்டும் என்று காந்தி சொன்னதாக ஒரு பதிவு போட்டார். உடனே பலரும் காந்தியைப் போன்ற ஒரு காதகன் கிடையாது என்று ஜிங்குஜிங்கென்று குதித்தார்கள். சுதாகர் காந்தி “மாமா” என்று – அதாவது pimp என்று அழைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் எழுதினார். அது தவறான மேற்கோள், பயன்படுத்தப்பட்ட தரவு வேண்டுமென்றே இல்லாத ஒன்றைச் சொல்கிறது என்று தெளிவாக நிரூபிக்கப்பட்ட பிறகும் தன் பதிவை மாற்ற அவருக்கு நேரம் பிடித்தது. வேண்டுமென்றேதான் போட்டேன், ஆனால் எனக்கு உள்நோக்கமில்லை என்கிறார். குத்துமதிப்பாக அவருடைய வார்த்தைகளில் – It was deliberate, but I had no ulterior motive. உள்நோக்கமில்லை என்றால் என்ன வெளிநோக்கத்தோடு போட்டார் என்று எனக்குப் புரியவில்லை. ஜிங்குஜிங்கென்று குதித்தவர்கள் ஒருவராவது – சுதாகர் உட்பட – அடடா தவறாகப் புரிந்து கொண்டுவிட்டோம், தவறான மேற்கோளை அடிப்படையாக வைத்து எதிர்வினை புரிந்துவிட்டோம் என்று சொல்ல வேண்டுமே!  குறைந்தபட்சம் காந்தியை மாமா என்று சொன்னது தவறு என்றாவது சொல்ல வேண்டுமே!  அதுதான் கிடையாது. அடிப்படை நேர்மை இல்லாத கூட்டம்.

சுதாகர் இன்னமும் காந்தி அப்படி சொல்லி இருக்கலாம், அப்படி காந்தி சொல்லவில்லை என்று நிரூபிக்கப்படும் வரைக்கும் இப்படி தவறான குற்றச்சாட்டை வைத்தவர்களுக்கு சந்தேகத்தின் பலன் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். குற்றம் சாட்டுபவர் அல்லவா தரவு தர வேண்டும்? சுதாகர் தன் பக்கத்து வீட்டுக்காரன் கையை வெட்ட வேண்டும் என்று வியாழக்கிழமை மாதுங்காவில் தமிழ் மன்றக் கூட்டத்தில் தன் உரையில் சொன்னார் என்று நான் சொன்னால்; மாதுங்கா தமிழ் மன்றக் கூட்டத்தில் சுதாகர் உரையாற்றவே இல்லை என்று நிரூபிக்கப்பட்டால்; சுதாகர் இது வரை போட்ட நூற்றுக்கணக்கான ஃபேஸ்புக் பதிவுகள், ஆற்றிய சில பல உரைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து அவர் எந்த உரையிலும், எந்த பதிவிலும், அப்படி சொல்லவில்லை என்று நிரூபிக்கப்படும் வரைக்கும் எனக்கு அவர் சந்தேகத்தின் பலனை அளித்துவிடுவாராக்கும்! நானும் ரௌடிதான், கையை வெட்டச் சொன்னாலும் சொல்லி இருப்பேன் என்பாராக்கும்!

ஏதோ தவறான மேற்கோள் என்று அம்பை பல முறை சொன்ன பிறகாவது ஆமாம் தவறான மேற்கோள் என்று பதிவை மாற்றினாரே, அந்த வரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

ஹிந்துத்துவ “அறிவுஜீவிகளே” வினவு தளம் ரேஞ்சில்தான் யோசிக்கிறார்கள், வெறும் பிரச்சார நோக்கத்துக்காக, ஒருவரை ஒருவர் சொரிந்து கொள்வதற்காக மட்டும்தான் பேசுகிறார்கள்/எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் முன் வைக்கும் அரசியல் ஹிந்துத்துவத்தில் ஒரு சுக்கும் இல்லை என்று தெளிவாகப் புரிகிறது…

ஃபெய்ஸ் அஹமது ஃபெய்ஸ் கவிதையும் சர்ச்சையும்

ஃபெய்ஸ் அஹமத் ஃபெய்ஸ் புகழ் பெற்ற உருது கவிஞர். அவருடைய புகழ் பெற்ற கவிதையான ‘ஹம் தேக்கேங்கே‘ ஐஐடி கான்பூரில் மாணவர் அமைப்பால் பாடப்பட்டிருக்கிறது, அதற்கு ஹிந்துத்துவர்கள் – குறிப்பாக டாக்டர் வாஷி ஷர்மா (ஐஐடி கான்பூரில் பேராசிரியர் போலிருக்கிறது) – எதிர்க்கிறார்கள். நண்பர் ஜடாயு ஷர்மாவின் பதிவுக்கு சுட்டி கொடுத்திருந்தார்.

ஷர்மாவின் வாதங்கள் அனேகமாக கில்லி போல இருந்தன. அவர் ஆட்சேபிக்கும் வரிகளுக்கு பொருள் அவர் சொல்வதுதான் என்றால் அவரது வாதங்கள் செறிவானவையே. ஆனால் சினிமா வசனம் புரியும் லெவலில் மட்டுமே உள்ள என் ஹிந்தியை வைத்துக் கொண்டு இதுதான் பொருள் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. இதுவோ ஹிந்தி கூட இல்லை, உருது. முழு கவிதையையும் படித்துப் பார்த்தேன் – மர்தூதே ஹராம், மஸ்நத், கல்கே குதா என்று என்னென்னவோ வார்த்தைகள். அதிலும் நமக்கு தமிழிலேயே கவிதை புரிவதில்லை…

சரி ஷர்மா ஆட்சேபிக்கும் இரண்டு வரிகளையாவது சரியாகப் புரிந்து கொள்வோம் என்று முயற்சித்தேன். அந்த வரிகள்

ஜப் அர்சே குதா கே காபே சே
சப் பூத் உத்வாயே ஜாயேங்கே

Jab arz-e-khuda ke kaabe se
Sab but uthwae jayenge

இந்த வரிகளைப் படித்ததும் நான் முதலில் புரிந்து கொண்டது

நாம் பார்க்கத்தான் போகிறோம்…(மெக்காவின்) காபாவிலிருந்து சிலைகளை அகற்றும் நாளை…

காபாவிலிருந்து சிலைகளை அகற்றினால் இவருக்கென்ன போச்சு என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்ல. ஜடாயு ஹிந்தி/சமஸ்கிருதம் மற்றும் உருது அறிந்தவர். அவரிடமே காபா என்றால் மெக்காவின் காபாதானே என்று கேட்டேன். அவர் இல்லை, காபா என்றால் இறைவனின் – அல்லாவின் – வீடு என்று பொருள் என்று சொன்னார். காபாவிலிருந்து சிலைகள் அகற்றப்பட்டு பல நூறு வருஷம் ஆகிவிட்டது, அகற்றப்படும் நாளை இனி எதிர்காலத்தில் எப்படி பார்க்க முடியும் என்றும் கேட்டார். எனக்கு ஹிந்தியில் இறந்த/நிகழ்/எதிர்காலம், ஆண்பால்/பெண்பால் எல்லாம் கொஞ்சம் தகராறுதான். அட ஆமாம், உத்வாயே ஜாயேங்கே என்றல்லவா இருக்கிறது என்று அப்போதுதான் உறைத்தது.

ஆனால் அல்லாவின் வீட்டிலிருந்து சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று சொன்னால் என்ன தவறு என்று புரியவில்லை. ஷர்மா தன் பதிவில் ‘அல்லாவின் வீட்டிலிருந்து’ என்பதை சௌகரியமாக சாய்சில் விட்டுவிட்டு சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று எப்படி சொல்லலாம் என்று கொந்தளிக்கிறார். அவர் வீட்டில் மெக்காவின் காபா படம் இருக்கக்கூடாது, அகற்றப்பட வேண்டும் என்று அவர் சொல்கிறாரோ இல்லையோ, நினைக்கவாவது செய்வார். அதுவும் ஆட்சேபிக்க வேண்டிய விஷயம்தானா? கோவில்கள் இருக்கும் தெருவில் அதற்கு அருகேயே பள்ளிவாசல்கள்/சர்ச்சுகள் திறக்கப்படுகின்றன, இது கூடாது என்று ஜடாயுவே அவ்வப்போது பொங்கி எழுவதைப் பார்த்திருக்கிறேன், பக்கத்தில் சர்ச் இருக்கக் கூடாது என்று ஜடாயு சொல்வதும் ஆட்சேபிக்க வேண்டியதுதானோ?

ஜடாயுவையே இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன், என் நேரத்தை வீணடிக்காதே என்று ஒதுங்கிவிட்டார். 🙂

ஷர்மாவின் அடிப்படை சரியாக இருந்தால் அவரது வாதங்கள் பொருள் உள்ளவையே. ஆனால் பில்டிங் ஸ்ட்ராங்காக இருந்து என்ன பயன்? பேஸ்மெண்ட் படு வீக்காக இருக்கிறதே?

இந்தக் கவிதை என்ன context-இல் பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்க வேண்டும், இதை முஸ்லிம்கள் ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தவே பயன்படுத்துகிறார்கள் என்று யாராவது வாதிட்டால்: context பற்றி ஷர்மா சொல்வதை paraphrase செய்கிறேன். “இந்தக் கவிதை என்ன context-இல் பாடப்பட்டது என்பதைப் பற்றி எனக்கென்ன? இதன் வார்த்தைகள்தான் எனக்கு முக்கியம்” – அதையேதான் உங்களுக்கும் சொல்ல வேண்டி இருக்கும்.

ஆனால் இந்தக் கவிதையின் context சுவாரசியமானது. ஜியா-உல்-ஹக் பாகிஸ்தான் அதிபராக இருந்தபோது எழுதப்பட்டதாம். மறைமுகமாக ஜியாவின் ஆட்சி முடிவுக்கு வரும் நாளை பார்க்கத்தான் போகிறோம் என்று சொல்கிறதாம்.

ஃபெய்ஸ் மிக சுவாரசியமான மனிதர். முரண்பாடுகள் நிறைந்தவர். கம்யூனிஸ்ட். கம்யூனிஸ்ட் மதநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பாகிஸ்தானில் ஏன் இருக்கிறார்? அவருக்கு பாகிஸ்தானை விட இந்தியாவே தன் அரசியலுக்கு ஏற்ற நாடு என்று தோன்றவில்லையா? (இந்தியாவிலும் சுதந்திரத்துக்கு பின் கம்யூனிஸ்டுகள் அடக்கப்பட்டார்கள்தான், ஆனால் குறைந்தபட்சம் அரசியல் சட்டம் மதச்சார்பற்றது.) மனித நேயத்தை வெளிப்படுத்திய கவிஞர் என்கிறார்கள், ஆனால் அன்றைய கிழக்கு வங்காளம் அடக்குமுறைக்கு ஆளானபோது அரசுப் பணியில் இருந்து கொண்டு அதை நியாயப்படுத்தி இருக்கிறார். புட்டோவின் நண்பர் போலிருக்கிறது, புட்டோ நில உடமை ஆதிக்கவாதிகளின் பிரதிநிதி. அப்புறம் என்ன கம்யூனிசமோ தெரியவில்லை. கம்யூனிச புரட்சி செய்து அன்றைய பாகிஸ்தான் அரசாங்கத்தை கவிழ்க்கப் பார்த்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அரசு பிற்காலத்தில் அவருக்கு நிஷானி பாகிஸ்தான் விருது (பாகிஸ்தானின் பாரத ரத்னா) கொடுத்திருக்கிறது. இன்றைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஹம் தேக்கேங்கே கவிதையைத் தன் பிரச்சாரத்தில் பயன்படுத்தினாராம்.

என் கண்ணில் அப்படி உன்னதக் கவிதை அல்லதான். ஆனால் அதன் பின்னணி எனக்கு இதை சுவாரசியப்படுத்துகிறது.

கவிதையையும் அதன் மொழிபெயர்ப்பையும் கீழே கொடுத்திருக்கிறேன். மொழிபெயர்த்தவர் ஹிந்துத்துவர் அல்லர் என்று நிச்சயமாகத் தெரிகிறது, அதனால் மொழிபெயர்ப்பில் எதுவும் ஆட்சேபிக்கும் வகையில் இல்லை. கவிதையின் nuances சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றதா என்றெல்லாம் பார்க்கும் அளவுக்கு எனக்கு ஹிந்தி/உருது பத்தாது என்பதையும் சொல்லிவிடுகிறேன். (கஜாலாவுக்கு நன்றி, ஒரிஜினல் பதிவு இங்கே.)

Hum dekhenge
Lazim hai ke hum bhi dekhenge
Wo din ke jis ka wada hai
Jo lauh-e-azl mein likha hai

Jab zulm-o-sitam ke koh-e-garan
Rooi ki tarah ur jaenge
Hum mehkoomon ke paaon tale
Ye dharti dhar dhar dharkegi
Aur ahl-e-hakam ke sar oopar
Jab bijli kar kar karkegi

Jab arz-e-Khuda ke kaabe se
Sab but uthwae jaenge
Hum ahl-e-safa mardood-e-harm
Masnad pe bethae jaenge
Sab taaj uchale jaenge
Sab takht girae jaenge

Bas naam rahega Allah ka
Jo ghayab bhi hai hazir bhi
Jo manzar bhi hai nazir bhi
Utthega an-al-haq ka nara
Jo mai bhi hoon tum bhi ho
Aur raaj karegi Khalq-e-Khuda
Jo mai bhi hoon aur tum bhi ho


Ghazala’s Translation

We shall witness
It is certain that we too, shall witness
the day that has been promised
of which has been written on the slate of eternity

When the enormous mountains of tyranny
blow away like cotton.
Under our feet- the feet of the oppressed-
when the earth will pulsate deafeningly
and on the heads of our rulers
when lightning will strike.

From the abode of God
When icons of falsehood will be taken out,
When we- the faithful- who have been barred out of sacred places
will be seated on high cushions
When the crowns will be tossed,
When the thrones will be brought down.

Only The name will survive
Who cannot be seen but is also present
Who is the spectacle and the beholder, both
I am the Truth- the cry will rise,
Which is I, as well as you
And then God’s creation will rule
Which is I, as well as you

தொகுக்கப்பட்ட பக்கம்: கவிதைகள்

Citizenship Amendment Bill

சாதாரணமாக நான் சிலிகன் ஷெல்ஃபில் அரசியல், சமகால நிகழ்வுகளைத் தவிர்ப்பேன். ஏனோ இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.

Citizenship Amendment Bill-ஐ நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். முஸ்லிம் அல்லாதவர்கள் பாகிஸ்தானில் அரசியல் சட்டப்படி இரண்டாம் நிலை குடிமகன்கள்தான். அவர்களுக்கு இந்தியாவில் இடம் கொடுக்கப்படுவது எல்லா விதத்திலும் சரியே.

சிலர் இது மத அடிப்படையில் உருவாக்கப்ப்பட்ட சட்டமாயிற்றே, அரசியல் சட்டப்படி செல்லாது என்கிறார்கள். நான் நிபுணன் அல்லன். ஆனால் அரசியல் சட்டம் இந்தியக் குடிமகன்களிடம் மத அடிப்படையில் பாகுபாடு இல்லை என்கிறது, இந்தியக் குடிமகன்கள் அல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அதனால் இது சட்டப்படி சரியே என்று தோன்றுகிறது.

ஃபேஸ்புக்கில் நண்பர் ஜடாயு இந்த திட்டத்தை

laudable humanitarian law that provides succor to Hindus and other minorities persecuted and driven away from neighboring Islamic countries

என்று பாராட்டி இருந்தார். சரியாகத்தான் சொல்கிறார் என்று நினைத்தேன். பிறகு பின்னூட்டம் ஒன்றில் பாகிஸ்தானில் அஹமதியா முஸ்லிம்களும் அடக்கப்படுகிறார்கள், அவர்களுக்கும் குடியுரிமை தரலாமே என்று ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ஜடாயுவின் பதில்:

Regarding Ahmaddiyas, why the *&$% should India worry about them? What have they got to do with India? If one Muslim group kills another Mulsim group somewhere in the world, how the &*$% does it matter to India?

சட்டம் மனித நேய அடிப்படையில் உருவானது, ஆனால் சனியன் பிடித்த அஹமதியாக்கள் அழிந்து போகட்டுமே என்கிறார். இந்த இரண்டு நிலைகளுக்கும் இருக்கும் முரண்பாடு அவருக்கே புரியவில்லையா, அவரை அவரே ஏமாற்றிக் கொள்கிறாரா? அஹமதியாக்களுக்கு humanitarian consideration எதுவும் இல்லையா? அவர்கள் என்ன கால்நடைகளா? கால்நடைகளுக்கும் கீழே என்று ஜடாயு நினைத்தாலும் நினைக்கலாம், அவருக்கு கோமாதா குலமாதா.

Persecuted minorities-க்காக மனித நேய அடிப்படையில் கொண்டு வரப்படும் சட்டமா இல்லை ஹிந்துக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி தனது ஓட்டு வங்கியை பெரிதாக்கிக் கொள்ளப் போடப்படும் திட்டமா? இரண்டும்தான் என்று தோன்றுகிறது.

ஓட்டு வங்கிக்கான திட்டமாகவே இருந்தாலும் சரி, அஹமதியாக்களை கண்டு கொள்ளாவிட்டாலும் சரி, நான் இதை வரவேற்கிறேன். பாதிக்கப்படுபவர்களில் அஹமதியா போன்ற முஸ்லிம் உட்பிரிவினர் சிறிய எண்ணிக்கையே என்று கணிக்கிறேன். நூற்றுக்கு 95 பேருக்கு உதவியாக இருக்கும் எந்தத் திட்டமும் வரவேற்கப்பட வேண்டியதே. நாளை மனிதாபிமான அடிப்படையில் வேறு அரசோ அல்லது பா.ஜ.க. அரசே கூடவோ இரண்டாம் நிலை குடிமகன்களாக நடத்தப்படும் அஹமதியாக்களை, இலங்கை தமிழர்களை, திபேத்திய பௌத்தர்களை, இரானிய பஹாய்களை,  ஐரோப்பாவின் ஜிப்சிகளை, ரோஹிங்யா முஸ்லிம்களையும் வரவேற்கும். பா.ஜ.க. அரசையே பாருங்கள், அவர்களது தேர்தல் manifesto-வில் ஹிந்துக்களை மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார்களாம், ஆனால் இப்போது இந்த சட்டம் ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறிஸ்துவர்களை அனுமதிக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பர்கள் அடிமைகள் இல்லை என்று ஆன பிறகும் சட்டப்படியே பல அடக்குமுறைகளை அனுபவித்தார்கள். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் அவர் செனட்டராக இருந்தபோது 1957-58 வாக்கில் கறுப்பர்களுக்கு ஆதரவான, ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். பல குறைகள் உள்ள சட்டம். அதை எதிர்த்தவர்கள் பலரும் இது பேருக்குத்தான் சட்டம், நடைமுறையில் உதவாது என்று குறை கூறினார்கள். He famously said

Once you break the virginity it’s easier next time.

முதல் படி எடுத்து வைத்திருக்கிறோம், இன்னும் பல படிகளை எதிர்காலத்தில் எடுக்க இது உந்துதலாக அமையட்டும். நமக்கும் it should be easier next time.

பின்குறிப்பு 1: பாகிஸ்தானில் மைனாரிட்டிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது என்று பலரும் சொல்கிறார்கள். நானும் அப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்தப் பதிவுக்காக விக்கிபீடியாவில் பாகிஸ்தானில் சென்சஸ் விவரங்களைப் பார்த்தேன். பதிவில் ஒவ்வொரு சென்சஸிற்கான முழு விவரங்களும் இல்லை. ஆனால் 1951-இல் அன்றைய மேற்கு பாகிஸ்தானில் 2.6% முஸ்லிம் அல்லாதவர்கள் இருந்திருக்கிறார்கள். 1998-இல் இது 3.75% ஆக அதிகரித்திருக்கிறது!  (இன்றைக்கான விவரம் இல்லை.) பாகிஸ்தானில் மைனாரிட்டிகளின் எண்ணிக்கை குறைவது உண்மைதானா இல்லை வெறும் புரளியா?

பின்குறிப்பு 2: அஹமதியாக்கள் பாகிஸ்தானின் அரசியல் சட்டப்படியே முஸ்லிம்கள் அல்லவாம், அவர்களை மைனாரிட்டிகள் என்று தனியாகவே கணக்கெடுக்கிறார்களாம்.

பின்குறிப்பு 3: அரசியல் சட்டப்படி பங்களாதேஷில் மத அடிப்படையில் வேறுபாடு பார்க்க முடியாதாம் – விக்கிபீடியாவில் இருந்து: Bangladesh is a Muslim Majority nation with Islam as its state religion of the country professed by the majority and freedom of religion is guaranteed by its constitution in which it gives equal rights to all citizens irrespective of religion. நடைமுறையில் எப்படியோ, சட்டப்படியாவது அனைவரும் சமம் என்பது வரவேற்க வேண்டிய விஷயம். லிண்டன் ஜான்சனைத்தான் மீண்டும் மேற்கோள் காட்ட வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாட்டு நடப்பு

நரேந்திர மோடி

இது புத்தகங்களுக்கான தளம். ஆனால் கொஞ்ச நாளாக மாதங்களாக வேலைப்பளு அதிகம். படிப்பதே மிகவும் குறைந்துவிட்டது.

வழக்கம் போல நண்பர் ராஜனிடம் நரேந்திர மோடியைப் பற்றி என்னவோ ‘சண்டை’ போட்டுக் கொண்டிருந்தபோது (என்ன கருத்து வேறுபாடு என்று கூட நினைவில்லை) மோடியைப் பற்றி என்னைப் போல் ஒருவன் – யார் செய்தது என்பதல்ல, என்ன செய்யப்பட்டது என்பதுதான் முக்கியம் கருதுபவன், தன்னை ‘நடுநிலையாளன்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவன் – அவருக்கு ஓட்டு போடுவானா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதனால் இந்தப் பதிவு.

குஜராத் கலவரங்களுக்கு முன்பும் மோடியைப் பற்றி – குறிப்பாக நர்மதாவில் சர்தார் சரோவர் அணை கட்டும் முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டிருந்தேன், ஆனால் அழுத்தமாக மனதில் பதியவில்லை. நானெல்லாம் எப்போதும் மேதா பட்கர் கட்சிதான், ஆனால் பலவந்தமாக மக்களை வெளியேற்றியது பற்றி எல்லாம் நான் குறை சொல்ல மாட்டேன். Eminent Domain என்பது அநீதிதான், ஆனால் அரசுக்கு அந்த அளவு அதிகாரம் தேவையாகத்தான் இருக்கிறது. பெரும் அணைகள் அனேகமாக காலப்போக்கில் பயனற்றவை ஆகிவிடுகின்றன என்பது உலகமெங்கும் – குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் – காணக் கிடைக்கிறது. எகிப்தின் அஸ்வான் அணையிலிருந்து நம்மூர் பக்ரா நங்கல் வரை எல்லா பெரிய அணகளிலும் அணைகளின் பின்னால் மணல் மண்டி அடித்து அடித்து அவற்றின் கொள்ளளவைக் குறைத்துக் கொண்டே போகின்றன. ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்று தெரியாமல் இருக்கலாம். தெரிந்த பிறகும் தான் கட்டினேன் என்று பெருமிதத்திற்காக, மக்களிடம் என் சாதனை என்று முன் வைத்து ஓட்டு கேட்பதற்காக அதே தவறைத் திரும்பவும் செய்கிறார், தவறுதான், ஆனால் புரிந்து கொள்ளக் கூடிய தவறு என்று தோன்றியது.

மோடியைப் பற்றி எனக்கு வலுவான கருத்து ஏற்பட்டது 2002 குஜராத் கலவரங்களின்போதுதான். குஜராத் கலவரங்களில் அரசு எந்திரத்தின் ஒத்துழைப்பு (குறைந்தபட்சம் மறைமுக ஒத்துழைப்பு) இருந்தது தெளிவாகத் தெரியும், ஆனால் நீதிமன்றங்களில் ஒருபோதும் நிரூபிக்கப்பட முடியாத உண்மை. 1975-இன் அவசரநிலை அடக்குமுறைகளைப் போல, 1984-இன் சீக்கியர் படுகொலைகளைப் போல, 1993-இன் மும்பை கலவரங்களைப் போல இந்தியாவின் வரலாற்றில் என்றும் துடைக்க முடியாத களங்கம். அதிதீவிர ஹிந்துத்துவரான சுப்ரமணிய சுவாமி ஒரு தனிப்பட்ட பேச்சில் மோடி அரசு மட்டுமல்ல, எந்த அரசுமே நினைத்திருந்தால் சுலபமாக இது போன்ற கலவரங்களைத் தடுத்திருக்க முடியும் என்று சொன்னார். அன்று பிரதமராக இருந்த வாஜ்பேயி மோடி ஆட்சியைக் கலைக்க விரும்பியதாகவும் மோடியை அத்வானிதான் காப்பாற்றியதாகவும் சொல்வார்கள். அந்த அத்வானியின் அரசியல் ஆசைகளை ஏறி மிதித்துத்தான் மோடி பிரதமராக ஆகி இருக்கிறார் என்பது இலக்கியத் தரமான நகைமுரண். (irony)

மோடி பிரதமர் தேர்தலில் நின்றபோது ரத்தக்கறை படிந்த ஒருவருக்கு பிரதமராகும் தார்மீக உரிமை இல்லை என்றுதான் கருதினேன், இன்னமும் கருதுகிறேன். ஆனால் மோடிக்கு எதிராக நின்ற யாருக்கும் பிரதமராகும் தகுதி இல்லை என்பதுதான் உண்மை. இன்னமும் மோடியின் மிகப் பெரிய பலம் ராஹுல் காந்திதான். பப்புதான் எப்போதும் போட்டி என்றால் மோடி சாகும் வரை பிரதமராகத்தான் இருப்பார்.

மோடியின் மீது என்றும் அழியாத களங்கம் இருக்கிறதுதான், ஆனால் குஜராத் கலவரங்களுக்கு பிற்பட்ட மோடியைப் பற்றி தார்மீக ரீதியாக யார் என்ன குறை சொல்லிவிட முடியும்?

மிக எளிமையான கேள்வி – எந்த விதத்தில் பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோஹன் சிங்கை விட பிரதமர் மோடி குறைந்துவிட்டார்? சிங் தனிப்பட்ட முறையில் நேர்மையானவர் என்றால் மோடி மட்டும் தினமும் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறாரா என்ன? மோடி பிரதமர் ஆன பிறகு அமைச்சர்கள் அளவிலாவது லஞ்சம் குறைந்திருக்கிறது என்பது அவரது பரம எதிரிகளே ஒத்துக் கொள்ளும் உண்மை. (அதானி கிதானி என்று ஆரம்பிக்காதீர்கள், இந்தியாவில் கட்சி நடத்த தேவைப்படும் பணத்தை சட்டரீதியாகப் பெற வழியே இல்லை. நேரு-படேல் காலத்திலேயே அப்படித்தான். படேல் 1946-இலோ என்னவோ ராஜேந்திர பிரசாதுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் – ‘இப்படி எல்லாம் சட்டம் இயற்றினால் நமக்கு பணம் கொடுத்த முதலாளிகளுக்கு என்ன பதில் சொல்வது’ என்று கேட்கிறார். படேல் இறந்த அன்று அவரது மகள் மனுபென் படேல் படேலின் வீட்டிலிருந்து சில பல லட்சங்களை நேருவிடம் கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஸ்டேட்மெண்டின் தொனியிலிருந்தே அது கணக்கில் வராத பணம் என்று யூகிக்க முடிகிறது. கட்சி பணம் எதற்கு வங்கியில் இல்லாமல் படேல் வீட்டில் இருக்கிறது?)

ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற முயற்சி தோல்வி என்று விமர்சிக்கிறார்கள். ஆம், 99 சதவிகிதத்துக்கு மேல் பணம் திருப்பி வந்துவிட்டது என்றால் அது தோல்விதான். ஆனால் எல்லா மாட்சிலும் ப்ராட்மன் கூட சதம் அடித்ததில்லை. நல்ல தியரி, நினைத்த அளவு வொர்க் அவுட் ஆகவில்லை. அரசு எட்டடி பாய்ந்தால் கறுப்புப் பண முதலைகள் பதினாறடி பாய்ந்துவிட்டார்கள். அதனால் என்ன? அவரது நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. அதை எல்லா மட்டத்திலும் மக்களும் – ஏழை,மத்ய்மர், பணக்காரர்கள் – உணர்ந்துதான் இருக்கிறார்கள். அதனால்தான் பிரச்சினைகள் இருந்தாலும் அந்த முயற்சி பொதுவாக வரவேற்கப்பட்டது/படுகிறது. இந்த மாதிரி முயற்சி செய்தால் சில பல நடைமுறைப் பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்றுதான் அனேகர் நினைக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அந்தக் காலகட்டத்தில் பொதுவாக சண்டைல கிழியாத சட்டை எங்கருக்கு என்று அலுத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்த்தார்கள். உதாரணத்துக்கு ஒன்று.

ஜிஎஸ்டி என்று அடுத்தது. ஆம் ஜிஎஸ்டி வரி முயற்சியை இன்னும் நன்றாக அமுல்படுத்தி இருக்கலாம்தான். மாதாமாதம் கொஞ்சம் கொஞ்சம் மாற்றுவதற்கு பதில் முதலிலேயே இன்னும் கொஞ்சம் சிந்தித்திருக்கலாம். குறிப்பாக உணவகங்களில் வரியை இன்னும் கொஞ்சம் சீராக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் எந்த அரசும் எந்தக் காலத்திலும் ஒரு புதிய வரி முறையை ஒரு குறையும் இல்லாமல் செயல்படுத்தியதில்லை. யாருக்காவது பாதிப்பு இருந்தே தீரும். எங்காவது ஏதாவது குறை இல்லாமல் நடைமுறைப்படுத்தவே முடியாது. இன்னும் இரண்டு வருஷம் போனால்தான் முயற்சி வெற்றியா இல்லையா என்று சொல்லவே முடியும். நேருவை விதந்தோதுபவர்களில் நானும் ஒருவன் – அதற்காக ஐந்தாண்டு திட்டம் எல்லாம் குற்றம் குறையே இல்லாத திட்டம் என்று சொல்ல முடியுமா என்ன? பசுமைப் புரட்சியால் எந்த பாதிப்பும் இல்லையா? நல்ல நோக்கம், இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற சாதாரணப் புரிதல் கூட இல்லை என்றால் எப்படி?

மோடி நாடு நாடாகப் போனார் என்று குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். என்ன இன்பச் சுற்றுலாவா போனார்? நொட்டை சொல்வதே வேலை. நிறுவனத்துக்கு புதுத் தலைவர் வந்தால் அவருக்கு சில குறைகள் தெரியலாம், அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய அவர் சில முயற்சிகள் எடுக்கலாம். உதாரணமாக எல்லாரும் கோட் சூட்டோடு வந்தால்தான் நிறுவனத்தின் இமேஜ் உயரும் என்று அவருக்குத் தோன்றலாம், அதை அவர் நிறுவன விதியாக்கலாம். உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை என்றால் அதுவும் ஒரு பிரச்சினையா? நிறுவனம் லாபகரமாகச் செயல்படுகிறா என்றுதான் பார்க்க வேண்டும். முன்னால் இருந்த தலைவர்களை விட நன்றாகச் செயல்படுகிறாரா என்றுதான் பார்க்க வேண்டும். இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறைகின்றன, சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது, பணவீக்கம் அதிகம், லஞ்சம் நிறைய என்றெல்லாம் அவர் மீது குற்றம் சாட்டுங்கள், அதுதான் அவரை அளக்கும் metrics. அவர் வருஷம் 365 நாளும் வெளிநாட்டிலேயே இருந்தாலும் சரி, அலுவலகத்துக்கு அண்டர்வேர் மட்டுமே அணிந்து வந்தாலும் சரி, குஜராத்தியில் மட்டுமே பேசினாலும் சரி, அவரது பாதுகாப்புக்காக இருக்கும் கமாண்டோக்களுக்கு சிற்றுண்டியாக கமன் டோக்ளா மட்டுமே பரிமாறினாலும் சரி அதெல்லாம் அவரது பாணி, அவர் செயல்படும் முறை, அதிலெல்லாம் தலையிட எவருக்கும் உரிமை இல்லை.

ஓரளவாவது நியாயமான குறை என்றால் அது கல்பூர்கி, மாட்டிறைச்சி மாதிரி விஷயங்கள்தான். ஆம், கல்பூர்கியிலிருந்து ஆரம்பித்து பல விரும்பத் தகாத கொலைகள் நடந்தன. பல fringe அமைப்புகளுக்கு துளிர்விட்டுப் போய்விட்டது, மாட்டிறைச்சி என்று எல்லை மீறுகிறார்கள். மோடி பிரதமராக இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் அவருடைய தவறு என்று நான் கருதுவது errors of omission, errors of commission அல்ல. முதல் முறையே கொஞ்சம் ஓங்கி சவுண்ட் விட்டிருந்தால் அடுத்த முறை பிரச்சினையே வந்திருக்காது. அவர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பது வெறும் ஓட்டு அரசியல்தான். ஆனால் அவார்ட் வாப்சியும் வெறும் sensational அரசியல்தான். இந்த நிகழ்ச்சிகளை ஊதிப் பெருக்கி நாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிறுபான்மையினர் ஒடுக்கப்படுகிறார்கள், எதிர்க்குரல் கொடுப்பவர்கள் அடக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

மோடியின் மிகப் பெரிய தலைவலி அவரைச் சுற்றி இருக்கும் அதிதீவிர பக்தர்கள்தான். Blind hero worship செய்யும் கூட்டம். அவர் நின்றால், நடந்தால், ஏன் குசு விட்டால் கூட ஆஹா என்ன மணம் என்ன மணம் என்று புல்லரித்துப் போகிறார்கள். ஆனால் எம்ஜிஆருக்கு இருந்த ஒளிவட்டத்தை படிக்காத பாமர மக்களின் குருட்டுத்தனமான நாயக வழிபாடு என்று அவ்வப்போது பொங்குவார்கள். ஹிந்தி கொஞ்சமும் புரியாத நண்பர் ராஜன் மோடியின் ஹிந்தி உரையைக் கேட்டேன், ஒன்றும் புரியாவிட்டாலும் அவரைப் பார்த்து புல்லரித்தேன் என்று ஒரு முறை சொன்னார். ராஜன் மோடி என்று சொல்லவே மாட்டார், வாராது போல் வந்த மாமணி மோடி என்றுதான் எழுதுவார். புனிதப்பசு (Holy cow) மோடியை விமர்சிப்பவன் எதிரி, ஆதரிப்பவன் நண்பன் என்ற அணுகுமுறை. காந்தியே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல என்னும்போது சுண்டைக்காய் மோடி விமர்சிக்கப்பட்டால் மட்டும் ஏன் பொத்துக் கொண்டு வருகிறது? மோடிக்கு இவர்களைத் தவிர வேறு எதிரிகளே வேண்டியதில்லை!

உதாரணத்துக்கு ஒன்று: அதிதீவிர மோடி பக்தர்கள் Demonetization மாபெரும் வெற்றி என்று எரிச்சல் மூட்டும் வகையில் காட்டுக் கூச்சல் போடுகிறார்கள். 99 சதவிகிதப் பணம் திரும்பினால் அது தோல்வி என்று கூடவா இன்னொருவர் விளக்க வேண்டும்? தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சிதான். பலரும் காஷ்மீரில் கல்லெறிவது குறைந்திருக்கிறது, எலெக்ட்ரானிக் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்திருக்கின்றன அதனால் வெற்றி என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். விராட் கோலி நூறு போட்டி ஆடி அதில் 99-இல் டக் அடித்தார் என்றால் கோலி பிரமாதமாக காட்ச் பிடிக்கிறார், குழுவை திறமையாக நடத்திச் செல்கிறார், அதனால் அவர் வெற்றி அடைந்திருக்கிறார் என்றா சால்ஜாப்பு சொல்வீர்கள்? முக்கிய நோக்கம் எதுவோ அது முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்தால்தான் அடுத்த முயற்சி வெற்றி பெற கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறது.

இவர்களாவது பரவாயில்லை, நண்பர் ராஜன் ரூம் போட்டு யோசித்து கணக்கு காட்டாமல் காங்கிரஸ் பிரதமர்கள் சொல்லி ரிசர்வ் வங்கி நிறைய நோட்டு அடித்தது, அதெல்லாம் திரும்பவில்லை, வாராது வந்த மாமணி மோடி நாட்டின் மானத்தைக் காக்க வெளியிலே சொல்லவில்லை என்கிறார். Occam’s Razor, Hanlon’s Razor, Hitchen’s Razor, Alder’s Razor பற்றி படிக்குமாறு அவருக்குப் பரிந்துரைக்கிறேன்.

எதிர்முகாமும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை. ஒரு பக்கம் வாராது வந்த மாமணி என்றால் எழுத்தாளர் பி.ஏ.கே Fuhrer என்ற அடைமொழி இல்லாமல் எழுதுவதில்லை. இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாலா வாழ்ந்தார்கள்? இந்திராவுக்கே சர்வாதிகாரி என்ற அடைமொழி தேவை இல்லை என்றால் மோடிக்கு ஏன்? இவரை மாதிரி நாலு பேர் இருந்தால் போதும், மோடிக்கு வேறு நண்பர்களே தேவை இல்லை.

மோடி சாதனைகள் புரிந்துவிட்டார், இந்தியாவின் நிலை அவரால் மிகவும் உயர்ந்துவிட்டது என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. ஆனால் எந்த விதத்திலும் அவர் அனேக முந்தைய பிரதமர்களுக்கு குறைந்தவர் அல்லர். நேருவை விட சிறந்த பிரதமரை நாம் இது வரை பெறவில்லை. ஆனால் அடுத்த வரிசையில் – சாஸ்திரி, தேசாய், ராஜீவ் (ராஜீவின் கைகளும் ரத்தக் கறை படிந்தவைதான்), ராவ், வாஜ்பேயி வரிசையில் இவரையும் வைக்கலாம். (என் கண்ணில் இந்திரா, சரண்சிங், வி.பி. சிங், சந்திரசேகர், கௌடா, குஜ்ரால், மன்மோஹன் போன்றவர்கள் மோசமான பிரதமர்கள்.)

இந்தியாவை முன்னேற்ற வேண்டும் என்ற விழைவு, அயராத உழைப்பு, நேர்மை, தனிப்பட்ட ஒழுக்கம், நல்ல சகாக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை செயல்பட அனுமதிப்பது, எத்தனை உதவி இருந்தாலும் தனக்கு முட்டுக்கட்டையாக இருப்பார் என்று தோன்றினால் அவர்களை உதறிவிடும் ruthlessness என்று மோடியிடம் பல தலைமைப் பண்புகள் இருக்கின்றன. ஹிந்து ஓட்டு அரசியலுக்காக அவ்வப்போது அடக்கி வாசிப்பதைத் தவிர இன்று வேறு எதுவும் பெரிதாகக் குறை சொல்லிவிட முடியாது. ஓட்டு எப்படியும் விழும் என்ற தைரியம் வந்தால் ஹிந்து ஓட்டு அரசியலுக்காக அடக்கி வாசிப்பதைக் குறைத்துக் கொள்வாரோ என்ற ஒரு நப்பாசை உண்டு.

ஆனால் அவர் காந்தியோ லிங்கனோ ரூசவெல்ட்டோ இல்லை. இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் பெரும் பிரச்சினைகளை வெல்லக் கூடிய திறமை கொண்டவர் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனக்கு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? இந்தியாவின் பிரச்சினைகளை குறைக்கவாவது முடியும் என்று அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. பல கோடி இந்திய வாக்காளர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவருக்கு பிரதமராக தார்மீக உரிமை இல்லை என்று நான் நம்புகிறேன்தான். ஆனால் இந்திரா காந்திக்கும் 66-இலும் சரி, 80-இலும் சரி, அந்தத் தார்மீக உரிமை இல்லை. சரண்சிங்குக்கு இல்லை; ராஜீவுக்கு இல்லை; சந்திரசேகருக்கு, கௌடாவுக்கு, குஜ்ராலுக்கு இல்லை. நேரு, சாஸ்திரி, தேசாய், ராவ், வாஜ்பேயி, மன்மோஹன், 71-இன் இந்திரா தவிர்த்த வேறு யாருக்குமே அந்தத் தார்மீக உரிமை இல்லை.

நிர்வாக ரீதியாக மோடியின் பெரும் குறை என்பது அவர் தன் குஜராத் அணுகுமுறையை இன்னும் விடாததுதான். குஜராத் சின்ன மாநிலம். கஷ்டமாக இருந்தாலும் அவரால் ஒவ்வொரு முயற்சியையும் நேரடியாக கண்காணிக்க முடிந்திருக்கலாம். இந்தியா பல மடங்கு பெரியது. டெல்லியில் உட்கார்ந்திருக்கும் ஒரு குழு எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவது முடியாத காரியம். ஆனால் அவரை குறை சொல்லியும் புண்ணியம் இல்லை. நேரு காலத்திலிருந்தே எல்லாரும் எல்லா திட்டங்களையும் அப்படித்தான் நடத்த முயன்றிருக்கிறார்கள். மோடி காந்தியைத் தன் ரோல் மாடலாகக் கொண்டாரானால் – bottom up approach-ஐ முயன்றாரானால் – வெற்றி பெற வாய்ப்புண்டு. அதாவது இந்தியாவிலேயே மிகப் பெரிய சர்தார் சரோவர் அணை அல்ல, சின்னச் சின்னதாக பல நூறு அணைகள் கட்டும் அணுகுமுறையைக் கைக் கொண்டாரானால் இன்னும் வெற்றி பெறலாம்.

சுருக்கமாகச் சொன்னால்: மோடி நிச்சயமாக above average PM-தான். (இந்தியப் பிரதமர்களின் சராசரித் தரம் மிக மோசம், நேருவுக்கே B-தான் கொடுப்பேன் என்பது வேறு விஷயம்.) இந்தியாவின் பெரும் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சியாவது செய்கிறார். ஆனால் எதிர்ப்பாளர்கள் ‘நடுநிலையாளர்கள்’ என்ற போர்வையில் எதற்கெடுத்தாலும் நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவரது அதிதீவிர ஆதரவாளர்கள் அவர் என்ன செய்தாலும் ஆஹா ஓஹோ பேஷ்பேஷ் என்கிறார்கள். விமர்சனங்கள் கிளம்பினால் என் தலைவனைக் குறை சொன்னா நீ ஒரு தேசத்துரோகி மகனே வகுந்துருவேன் என்று கிளம்புகிறார்கள். மொத்தத்தில் polarizing figure ஆக இருப்பதால் காட்டுக் கூச்சல் மட்டுமே கேட்கிறது, அதுதான் தலைவலியாக இருக்கிறது.

தார்மீக உரிமை இல்லை, இந்தியாவின் பிரச்சினைகளை வெல்லும் திறமை இல்லை என்று ஆயிரம் நொட்டை சொன்னாலும் இன்று எனக்கு இந்திய ஓட்டுரிமை இருந்தால் வேண்டாவெறுப்பாக மோடிக்குத்தான் ஓட்டுப் போடுவேன். பப்புவுக்குப் போடுவதற்கு பதில் தற்கொலையே செய்து கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அரசியல்