எண்பதுகளின் நடு துவங்கி தமிழின் வழக்கமான சுஜாதா, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களையும் சு.ரா., க.நா.சு. போன்ற தீவீர இலக்கிய எழுத்தாளர்களையும் தாண்டி கிட்டத்தட்ட சுஜாதாவையும் தி.ஜானகிராமனையும் கலந்தவொரு நடையில் பல புது எழுத்தாளர்களை கல்கி, தினமணி கதிர் போன்ற பத்திரிகைகள் அறிமுகப்படுத்தின. அவற்றில் முக்கியமானவர்களாக எனது கவனத்தை ஈர்த்தவர்களாக ம.வே. சிவகுமார், ஜீவராமுள் பிரமுள், இரா. முருகன், பா. ராகவன், ரவிச்சந்திரன் போன்றோர் இருந்தனர். இவர்களது கதைகள் தமிழில் ஒரு இடைப்பட்ட பேரலல் எழுத்தை உருவாக்கின. இவர்களின் கதைகளை கல்கி தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
எளிய சுவாரசியமான நடையில் அமைந்திருந்த அவரது மத்திமர் கதைகள் அப்பொழுது என்னை வெகுவாக வசீகரித்தன. ஒரு சாதாரண வங்கி ஊழியரின் சினிமா நாடகக் கனவுகள் அது தொடர்பாக அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்று தனது அனுபவங்களையே அவர் பாப்கார்ன் கனவுகள் என்றொரு தொடராக எழுதினார். தினமணிக்கதிரில் வெளி வந்த அவரது வேடந்தாங்கல் அவரது முக்கியமானதொரு நாவல். நெய்வேலி குவார்ட்டர்ஸ்களில் ஆரம்பிக்கும் ஒரு இளைஞனின் விடலைப் பருவத்தில் இருந்து துவங்கும் நாவல் அது.
ம.வே. சிவகுமாரின் சிறுகதைகள் அப்பாவும் ரிக்ஷாக்காரரும் என்று தலைப்பில் தொகுக்கப் பட்டு வந்தன. கிழக்கு பதிப்பகம் சமீபத்திய சிறுகதைகளை பிரசுரித்துள்ளது என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் கமலஹாசன் எழுத்தாளர்களை தன் சினிமாக்களில் இணைத்துக் கொள்ளும் திட்டத்தின் மூலமாக அவர் தேவர் மகன் சினிமாவிலும் பணியாற்றினார். அதன் பின்னர் தொலைக்காட்சித் தொடர்களுக்குள் சென்றார். அதில் ஏற்பட்ட விரக்தியிலும் வெறுப்பிலும் வடக்கிருந்து உயிர் துறக்கப் போவதாக திண்ணை.காமில் தனது தற்கொலை முயற்சியை அறிவித்தார். அப்பொழுது அவரை நான் அழைத்துப் பேசினேன். தமிழ் நாட்டில் எழுத்தாளர்கள் என்று அல்ல எவரும் எதற்காகவும் எந்தவொரு அங்கீகாரத்தையும் எதிர்பார்க்க முடியாது என்பதையும் அவருக்கு உண்மையான விருது என்பது என்னைப் போன்ற வாசகர்கள் அவரை நினைவில் வைத்திருப்பது மட்டுமே என்பதைச் சொன்னேன். அவருக்கு அது பெருத்த ஆறுதலாக இருந்தது. அப்பொழுது வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவை ஒத்தி வைத்திருந்த சிவகுமார் இப்பொழுது எந்த திசை நோக்கி மறைந்தார் என்பது தெரியவில்லை. அவரது வேடந்தாங்கல் அவர் பெயரைச் சொல்லி நிற்கும்.
பா. ராகவன் அவரோடு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவர் சிவகுமாரை நினைவு கூரும் இரண்டு கட்டுரைகள் இங்கே மற்றும் இங்கே.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள், ராஜன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: தென்றல் இதழில் சிவகுமாரின் ஒரு சிறுகதை (Registration Required)