சஞ்சாரம் 2018க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது எனக்கு முதல் வரிசை நாவல் இல்லை.
சஞ்சாரத்தின் பலம் அது காட்டும் உலகம். நாதஸ்வரக் கலைஞர்களின் உலகம். மறைந்து கொண்டிருக்கும் உலகம். எப்படி இருந்தது, எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சிறப்பாகக் காட்டுகிறார். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலத்தின் உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் புரிய வைக்கிறார். அவர்களின் லெவலில் இருப்பவர்களின் அழிச்சாட்டியங்கள் எப்படி பொறுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன, குடி, இஷ்டப்படும்போது வாசிப்பது, வாசிப்பில் மயங்கிக் கிடக்கும் கூட்டம் எல்லாவற்றையும் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். அங்கங்கே தொன்மம்தான். கண் தெரியாத நாதஸ்வர வித்வான் தன்னாசி அத்தியாயத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.
தொன்மமாக்கல் ஒரு பலவீனமும்தான். எஸ்ரா அவ்வப்போது வலிந்து தொன்மத்தன்மையை புகுத்த முயற்சி செய்வார். சில சமயம் அது செயற்கையாக இருக்கும். இந்த நாவலில் பல இடங்களில் வெற்றி அடைந்தாலும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது. உதாரணமாக மாலிக் காபூர் கல் யானையை இசையை கேட்க வைக்கும் நாதஸ்வரக் கலைஞனை டெல்லிக்கு அழைத்துச் செல்வது அருமை. ஆனால் டெல்லியில் தன் இசையால் மாலிக் கபூரை அலாவுதீன் கில்ஜிக்கு துரோகம் செய்ய வைப்பது செயற்கையாக இருக்கிறது.
நேரடியாக சொல்லப்படும் கதை. உண்மையில் கதை, கதைப்பின்னல் என்று எதுவும் இல்லை. எனக்கு அதெல்லாம் ஒரு குறையும் இல்லை. காட்சிகளின், சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு வரவர உண்மையான சித்தரிப்பு பத்தவில்லை, ஏதாவது தரிசனம் கிடைக்குமா என்று தேடுகிறேன். ஆனால் இது உண்மையான சித்தரிப்பைத் தாண்டிய படைப்பு.
வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல்வாதி தேர்தலில் நிற்கும்போது ஏற்படும் அவமானங்கள், லண்டனுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றும் இடை, கல்யாணத்தில் ஏற்படும் அவமானங்கள் எல்லாவற்றையும் சிறந்த காட்சிகளாகக் கொண்டு வந்திருக்கிறார். கலைக்கு மதிப்பு குறைந்துகொண்டே போனாலும் இன்னும் எச்சங்கள் இருக்கின்றன என்று காட்டுகிறார். குறிப்பாக ஊமை ஐயர் போன்ற ஒரு ரசிகர். நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் வெள்ளைக்கார ஹாக்கின்ஸ். இசையை விரும்பிக் கற்றுக் கொள்ளும் முஸ்லிம் அபு ஆறுமுகம். இசை தெரிந்தாலும் கற்றுக் கொடுக்க முடிந்தாலும் சிறப்பாக வாசிக்க முடியாத ராகவையா. பழைய ஜமீந்தார், வானொலி நிலையத்து அதிகாரி வரும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கலைஞனுக்கு மதிப்பு இல்லை, ஜாதி குறுக்கே நிற்கிறது.
வ.ரா. தமிழ் பெரியார்கள் புத்தகத்தில் சத்தியமூர்த்தியைப் பற்றி விவரிப்பார்; சத்தியமூர்த்தி நேருவுக்கு இணையான அரசியல் அறிவுள்ளவர்; ராஜாஜிக்கு இணையான தர்க்க அறிவுள்ளவர். சட்டசபை விவகாரங்களில் நிபுணர். யார் என்ன சொன்னாலும் மனச் சோர்வடைவதில்லை. சிறந்த தேசபக்தர். ஆனாலும் அவரிடம் ஏதோ குறை இருக்கிரது, மக்கள் அவரை நம்புவதில்லை என்பார்.
எஸ்ராவும் அப்படித்தான். எல்லாம் உண்டு, ஆனாலும் என்னவோ குறைகிறது. எனக்கு மகாபாரதப் பித்து அதிகம், கவிதையைக் கண்டால் ஓடுபவன்தான், கம்பனைக் கூட படிக்க முடியாமல் கஷ்டப்படுபவன்தான், ஆனால் வில்லிபாரதம், அல்லி அரசாணி மாலை எல்லாம் கூட படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு உபபாண்டவம் நினைவில் தங்கவே இல்லை. என்ன படித்தோம் என்பது தெரியவே இல்லை. அதே மாதிரிதான், ஏதோ ஒன்று இந்தப் புத்தகத்தையும் அடுத்த படிக்கு போகமுடியாமல் தடுக்கிறது.
எஸ்ராவின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது உறுபசி. அதில்தான் அவரது உச்சத்தை அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. என்றாவது அதைப் பற்றி எழுத வேண்டும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: எஸ்ரா பக்கம்