பிடித்த சிறுகதை – சா. கந்தசாமியின் “தக்கையின் மீது நான்கு கண்கள்”

அற்புதமான சிறுகதை. மீன் பிடிப்பதில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் போட்டி, கௌரவப் பிரச்சினை, தான் வெல்லாத இடத்தில் சிறுவன் வெல்வதை தாத்தாவால் ஜீரணிக்க முடியவில்லை என்று சுருக்கலாம், ஆனால் அது கதையின் வீரியத்தை காட்டவில்லை.

இந்தச் சிறுகதை ஜெயமோகன் பட்டியலிலும் எஸ்ரா பட்டியலிலும் இடம் பெறுகிறது. அ. ராமசாமி இந்த சிறுகதையை இங்கே அலசுகிறார். இயக்குனர் வசந்த் இதை ஒரு குறும்படமாக எடுத்துள்ளார், அதற்கு தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.

கந்தசாமி விசாரணை கமிஷன் என்ற நாவலுக்காக 1998-இல் சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். அவரது சாயாவனம் தமிழின் உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று. அவரது இன்னும் இரண்டு சிறுகதைகள் – ஹிரண்யவதம், சாந்தகுமாரி – ஜெயமோகன் பட்டியலில் இடம் பெறுகின்றன. கந்தசாமியின் ஒரு பேட்டியை இங்கே படிக்கலாம்.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சா. கந்தசாமி பக்கம்

சாயாவனம்

(இது ஒரு மீள் பதிவு. கூட்டாஞ்சோறு தளத்தில் சில நாட்கள் முன் வெளியிடப்பட்டது. RV ஒரு நாள் ஓய்வு எடுக்கும் பொழுது இதை வெளியிடலாம் என்று பார்த்தேன். பொறுக்க முடியவில்லை. சாயாவனத்தைப் பற்றி சுப்ரபாரதிமணியனின் அப்பா என்ற இடுகையில் குறிப்பிட்டிருந்தான். அதனால் நீங்கள் ”ஆவலாக” இருப்பீர்கள் என்று நினைத்துக் கொண்டு வெளியிட்டுவிட்டேன்)

நல்ல இலக்கியம். இதை படிக்கும் வரை என்னவாக இருக்கும் என்று ஊகம் செய்ய முடியாத தலைப்பு. சா. கந்தசாமி எப்படி கதையை எடுத்துச் செல்வார் என்றும் எப்படி முடிப்பார் என்றும் சற்றும் யூகிக்க முடியவில்லை. எனக்கு பரிச்சயமேயில்லாத கதை. ஆனால் முதல் சில பக்கங்களிலேயே ஒரு உயர் ரக இலக்கியம் படிக்கிறோம் என்று தோன்றி விட்டது. ஏற்கனவே ஆர்வியிடம் ரெக்கமண்டேஷன் வேறு வந்திருந்தது.

சா.கந்தசாமி சாயாவனம் நாவலில் சோஷியலிஸத்திற்க்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள போராட்டங்களை கதை களத்தின் மற்றும் பாத்திரங்களின் மூலமாகவும் மிகவும் புத்திசாலித்தனமாகவும், மென்மையாகவும் கையாண்டிருக்கிறார். வித்தியாசமான படிவம். நாயகன் சாயாவனத்தில் மாற்றங்களை புகுத்தி கிராமத்தின் இயற்க்கையையும், மக்களின் இயல்பையும் தடம் புரள செய்து தடுமாற்றம் தருகிறான். கதை முழுவதும் நாயகனாக தோன்றுபவன் இறுதியில் வில்லனாக இருப்பானோ என்று வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறார் கந்தசாமி.

இந்த கதை முழுவதும் ஒரு குறியீடாக பார்க்கலாம் என்று பாவண்ணன் சொல்வது முழுவதும் ஏற்றுக் கொள்ளமுடிகிறது. பரந்த குறியீடாக எடுத்துக் கொண்டு படித்தால், கதையில் வரும் பல கட்டங்களை நிஜத்துடன் தொடர்புபடுத்தி பார்த்து பல விஷயங்களை ஊடுருவி அறியலாம். சிதம்பரம் தன் உணர்வுகள் சராசரி மனிதர்களின் உணர்வுகளோடு ஒத்து போகாமல் தவிக்கும் பொழுது எந்த அளவுக்கு முதலாளித்துவம் ஒருவனுக்கு அகச் சரிவை விளைவிக்கக் கூடும் எனபதும், யதார்த்தத்தை விட்டு விலக்கி வைக்கும் என்பதும், எளிய மக்களின் நுண்ணுணர்வுகளை முரட்டுத்தனமாக அழிக்கும் என்பதும் குறியீடாக வெளிப்படுத்துகிறார் சா. கந்தசாமி.

இயற்கையின் எந்த உயர்வையும் மதிக்கும் மற்றும் ரசிக்கும் உணர்வையும் இழந்து விடும் சிதம்பரம் அவன் குறிக்கோள் ஒன்றைத்தவிர எதையும் பார்க்கும் சக்தியை இழந்துவிடுகிறான். அதனால் அழிவு என்பது அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இயற்கையை அழித்து அதன் மேல் மாநகரங்களாக உருவாகிய கான்கிரீட் காடுகளின் பின்னால் பல ரசனையிழந்த சிதம்பரங்களின் குறிகோள்கள் பல எளிய மக்களின் மேல் மூர்க்கமாக திணிக்கப்பட்டுள்ளதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. தன்னைச் சார்ந்தவன் என்பதால் சிவனாண்டித் தேவர் பல வருடஙகளாக பார்த்து வந்த தோட்டப் பிரதேசங்களை சிதம்பரத்திற்க்காக அவன் இஷ்டப்படி விட்டுவிடுவது, உறவுகள் மதியை மயக்கி எளிய மனிதனின் எண்ணங்களினை முரணடையச் செய்யும் வல்லமை படைத்தது என்பது புரிகிறது.

பார்ட்டர் சிஸ்டம் (பண்ட மாற்று முறை) எவ்வளவு தூரம் மக்களை பேராசை கொள்ளாதவாறு பாதுகாக்க முடியும் என்பது சாயாவனத்தின் மக்கள் மனப்போக்குகளிலன் மூலம் கவனிக்க முடிகிறது. கரன்சி நோட்டுகள் இல்லாமல் வாழமுடியும் என்று சொல்கிறார் கந்தசாமி. முடியுமா?

தனி மனிதனாக சிதம்பரம் சாயாவனத்தில் போராட்டம் நடத்தியதை படிக்கும் பொழுது எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் “The Old Man and the Sea” நாவலை நினைவுப்ப்டுத்தியது. சிதம்பரம் பறவையை நெருப்பில் தூக்கி எறியும் கட்டம் “Farewell to Arms”ல் எறும்புகளின் மேல் விஸ்கியை ஊற்றிய காட்சி நினைவில் தோன்றியது.

இலக்கியத்தை எவ்வளவு வலிமை பொருந்தியதாக படைக்க முடியும் என்பதை அவர் சம்பவங்களின் மூலமும் ஆளுமைகளின் மூலமும் நமக்கு கற்றுத் தருவது போல் இருக்கிறது. நிச்சயம் சாயாவனத்தை பல்கலைகழகங்கள் தங்கள் இலக்கிய பாடதிட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே சாயாவனத்தை பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகள் இருக்கிறதா?

ஆர்வியின் பிற்சேர்க்கை: சாயாவனம் அனேகமாக நான் முதன்முதல் படித்த நல்ல இலக்கியம். முதல் முறை படித்தபோது பத்து வயதிருக்கலாம். அந்த கதையை பல தளங்களில் படிக்க முடியும். பத்து வயதில் அது எனக்கு காட்டை அழிக்கும் சாகசக் கதையாகவே இருந்தது. கடைசி பக்கத்தில் புளி போச்சே என்ற புலம்பல் திடீரென்று சாகசங்களுக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்று உணர்த்தியது. அந்த புலம்பல் அந்த வயதிலும் புரிந்தது, அந்த புரிதல் இன்னும் அகலவில்லை. அதற்குப் பின் பெரியவனாகி வேறு வேறு தளங்களில் சாயாவனத்தை படித்தாலும், அந்த முதல் insight மறக்கவே இல்லை. அது வரையில் அனேகமாக நேர்கோட்டில் போகும் கதைகளையே – சிறுவர் கதைகள், சாண்டில்யன், etc. – படித்திருந்த எனக்கு புனைகதைகளின் சாத்தியம் எவ்வளவு பரந்தது என்று காட்டிய முதல் புத்தகம் இதுதான். மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும், இப்போது இன்னும் ஒரு லெவலில் படிக்க முடியுமோ என்னவோ.