உண்மையான 5 SF கணிப்புகள்

நிலவுக்கு போவது: 1865, ஜூல்ஸ் வெர்ன், From the Earth to the Moon: A Direct Route in 97 Hours, 20 Minutes. வெர்ன் 97 மணி நேரம் என்று எழுதினார், உண்மையில் 75 மணி நேரம்தான் ஆயிற்று. 🙂 வெர்ன் எழுதியது போல பீரங்கியிலிருந்து ராக்கெட் ஏவப்படவில்லை. ஆனால் அவர் காலத்திற்கு அது நல்ல கற்பனைதான்.

டாப்லெட் கம்ப்யூட்டர்கள்: 1968, ஆர்தர் சி. க்ளார்க், 2001: A Space Odyssey. கறாராகச் சொன்னால் முதலில் திரைப்படம்தான் வந்தது, பிறகுதான் அதை க்ளார்க் நாவலாகவும் எழுதினார். திரைக்கதையை அமைத்ததில் ஸ்டான்லி குப்ரிக்குக்கும் பங்குண்டு என்று நினைவு. க்ளார்க் இவற்றுக்கு வைத்த பேர் நியூஸ்பாட். இன்று ஐபாட்கள். அவர் செய்திகள் மட்டுமே படிக்கப்படும் என்று காட்சியை வடிவமைத்திருந்தார். இணைத்துள்ள வீடியோவைப் பாருங்கள், இன்று ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் காட்சி (ஐபாடுக்கு பதிலாக ஃபோன்களை நோண்டிக் கொண்டிருக்கிறோம்)

இன்டர்நெட்: இதுவும் கொஞ்சம் ஏமாற்றுதான். ஆனால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அதை உடனுக்குடன் பார்ப்பது, தெரிந்து கொள்வது என்று மார்க் ட்வைய்னின் இந்தக் கதையில் – From the ‘London Times’ of 1904– வருகிறது.

அலைபேசிகள்: என் தலைமுறைக்காரர்கள் அனேகருக்கு ஸ்டார் ட்ரெக்தான் அலைபேசிகளை அறிமுகம் செய்து வைத்தது.

ஹோலோகிராம்: என் தலைமுறைக்காரர்களுக்கு ஸ்டார் வார்ஸ்தான். சுஜாதா ரசிகர்கள் கொலையுதிர்காலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

மூலக்கட்டுரை இங்கே. சிலிகன்ஷெல்ஃபில் திரைப்படங்களையும் சேர்ப்பது கொஞ்சம் ஏமாற்று வேலைதான், இருந்தாலும் நான் உத்தமன் இல்லையே!

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

பிடித்த SF சிறுகதை: ஃப்ரெடெரிக் ப்ரௌன் எழுதிய Arena

இந்தச் சிறுகதையை என் பதின்ம வயதுகளில் முதல் முறையாகப் படித்தேன்.

நேரான, சிம்பிளான கரு/கதை. பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் போர். மனிதர்களின் பிரதிநிதியாக ஒருவன், வேற்று கிரகத்து பிரதிநிதியாக பல வளையும் கரங்கள் (tenatcles) கொண்ட உருண்டு செல்லும் கோளம் இருவருக்கும் நடுவில் துவந்த யுத்தம். அவ்வளவுதான் கதை.

அப்போதெல்லாம் மாபெரும் வீரனாக உலகை வெல்ல வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன்னால் பிறக்காமல் போய்விட்டோமே என்று கொஞ்சம் வருத்தம். இந்தச் சிறுகதை என்னைக் கவர்ந்ததில் என்ன வியப்பு!

1944-இல் எழுதப்பட்ட சிறுகதை. பின்னாளில் ஸ்டார் ட்ரெக் தொலைக்காட்சித் தொடர் இந்தச் சிறுகதையை ஒரு அத்தியாயத்துக்கு (episode) பயன்படுத்திக் கொண்டது. 1965-க்கு முற்பட்ட 20 சிறந்த SF சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இன்றும் பிடித்துத்தான் இருக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ப்ரெடெரிக் ப்ரௌனின் ஒரு இரண்டு வரி சிறுகதை – Knock – மிகவும் புகழ் பெற்றது.

Imagine all human beings swept off the face of the earth, excepting one man. Imagine this man in some vast city, New York or London. Imagine him on the third or fourth day of his solitude sitting in a house and hearing a ring at the door-bell!

அவ்வளவுதான் கதை!

இந்தப் பதிவை எழுதும்போது Dark Interlude என்ற சிறுகதையையும் படித்தேன். நல்ல கரு. எதிர்காலத்திலிருந்து வரும் ஒருவன் இன்றைய அமெரிக்காவில் ஒரு பெண்ணை மணக்கிறான். அவன் கால்பகுதி கறுப்பன், மணந்தது வெள்ளை இனப் பெண். அவன் உடலில் நீக்ரோ ரத்தம் ஓடுவது தெரியும்போது வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் என்ற மனநிலை உள்ளவர்கள் அதை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆனால் என் கண்ணில் நன்றாக எழுதப்படவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

சூரிய கிரஹணம் – ஐசக் அசிமோவின் “Nightfall”

கூடிய விரைவில் அமெரிக்காவில் சூரிய கிரஹணம். இந்தக் கதையை மீள்பதிப்பது பொருத்தமாக இருக்கும்…

nightfallசூரிய கிரஹணம் நடந்து பல காலம் ஆயிற்று. கிரஹணம் என்றால் என்னவென்றே தெரியாத மக்கள். சூரிய கிரஹணம் நடந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்?

Nightfall சிறுகதையும் அப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் விவரிக்கிறது. பல சூரியன்களைச் சுற்றி வரும் கிரகம். இரவு என்றால் என்னவென்றே தெரியாது. அதிசய நிகழ்ச்சியாக எல்லா சூரியன்களும் மறையப் போகின்றன. பல லட்சம் நட்சத்திரங்கள் தெரிகின்றன. கிரகவாசிகளுக்கு என்ன தோன்றும்?

issac_asimovஎனக்கு சிறுகதை பிரமாதமாகப் படவில்லை. ஆனால் சிறுகதை செல்லாத இடங்கள் – என்னவெல்லாம் நடக்கும், எப்படி எல்லாம் உணர்வார்கள் – என்று என் மனதில் ஓடும் எண்ணங்கள்தான் இந்தச் சிறுகதையை உயர்த்துகின்றன. அசிமோவும் என்னவெல்லாம் நடக்கும் என்று சொல்ல முயற்சிக்கிறார்தான். ஆனால் அதற்கு அவரை விடத் திறமையான ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைக்கிறேன்.

1941-இல் எழுதப்பட்ட சிறுகதை. அனேகமாக எல்லாருடைய டாப்-டென் Sci-Fi பட்டியல்களிலும் இடம் பெறும்.

மின்னூலை இணைத்திருக்கிறேன். கட்டாயம் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விஞ்ஞானப் புனைவுகள்

அசிமோவின் ரோபோ துப்பறியும் நாவல்கள்

issac_asimovதுப்பறியும் கதைகள், SF இரண்டும் எனக்கு பிடித்தமான genre-கள். அசிமோவின் எலைஜா பேலி நாவல்கள் இந்த இரண்டு genre-களையும் ஓரளவு வெற்றிகரமாக இணைக்கின்றன.

அசிமோவின் எந்திரன்கள் அசிமோவின் புகழ் பெற்ற மூன்று விதிகளால் கட்டப்பட்டவர்கள்.

  • A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.
  • A robot must obey orders given it by human beings except where such orders would conflict with the First Law.
  • A robot must protect its own existence as long as such protection does not conflict with the First or Second Law.

நாவல்களில் சித்தரிக்கப்படும் எதிர்கால உலகத்தில் பூமிக்கு வெளியே 50 கிரகங்களில் மனிதர்கள் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர்கள் ஸ்பேசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களது வாழ்க்கை முறை ரோபோக்களை – எந்திரன்களை – அடிப்படையாகக் கொண்டது. 200, 300 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள். பூமியோ நெரிசல் மிக்க நகரங்களை சுற்றி இயங்குகிறது. நகரங்கள் மண்ணுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கின்றன. திறந்த வெளியில் நடமாடுவது கூட மனிதர்களுக்கு பழக்கம் விட்டுப்போயிருக்கிறது, பயப்படுகிறார்கள். மனிதர்கள் எழுபது, எண்பது வயது வரைதான் உயிரோடிருக்கிறார்கள். எந்திரன்கள் பயன்படுத்தப்பட்டாலும் எந்திரன்களைப் பற்றி நிறைய பயம், அவநம்பிக்கை இருக்கிறது. அந்த அவநம்பிக்கை ஸ்பேசர்களிடமும் இருக்கிறது. ஸ்பேசர்கள் எந்திரன்களால் சொகுசாக வாழ்கிறார்கள். ஸ்பேசர்கள் ஒஸ்தி, மனிதர்கள் மட்டம் என்ற எண்ணம் ஸ்பேசர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் அச்சு அசல் மனிதனைப் போன்ற ஒரு எந்திரன் – டானீல் – உருவாக்கப்படுகிறது. மனிதர்களால் டானீல் எந்திரன் என்று கண்டுபிடிக்கவே முடியாது. அந்தப் பின்புலத்தில் மூன்று மர்மங்கள். முதல் மர்மத்தில் – Caves of Steel (1954) – டானீலை உருவாக்கிய விஞ்ஞானி கொல்லப்படுகிறார். எந்திரன்களிடம் அவநம்பிக்கை கொண்ட எலைஜா டானீலுடன் சேர்ந்து துப்பறிய வேண்டி இருக்கிறது. இரண்டாவது புத்தகத்தில் – Naked Sun (1957) – சோலாரியா என்ற கிரகத்தில் நடக்கும் கொலையை எலைஜாவும் டானீலும் சேர்ந்து துப்பறிகிறார்கள். மூன்றாவது புத்தகத்தில் – Robots of Dawn (1983) – ஆரோரா கிரகத்தில் டானீலைப் போன்ற இன்னொரு எந்திரன் ‘கொல்லப்படுகிறது’.

Mirror Image என்ற ஒரு சிறுகதையும் உண்டு. இதே சட்டகம்தான்.

பேலி மறைந்த பிறகும் டானீல் மட்டும் வரும் இன்னொரு கதையும் – Robots and the Empire (1985) – உண்டு. அதில் எந்திரன்கள் ஏற்கனவே உள்ள மூன்று விதிகளை விடவும் முக்கியமான இன்னொரு விதியை தாங்களே கண்டுபிடிக்கிறார்கள். Zeroth Law of Robotics!

கதைகளின் பலம் அதன் சட்டகம் மட்டும்தான். துப்பறிவது அத்தனையும் இந்த எந்திரன்களை கட்டுப்படுத்தும் விதிகளின் அடிப்படையில் மட்டுமே. கணிதத்தில் சில அடிப்படை விதிகளைக் கொண்டு தேற்றம் தேற்றமாக நிரூபிக்கலாம். அசிமோவின் அணுகுமுறையும் அதேதான். கொஞ்சம் கீழான நிலையில் இருக்கும் மனிதர்கள் மீது ஸ்பேசர்களுக்கு இளக்காரம் இருக்கிறது. அதனால் எலைஜாவின் அணுகுமுறை என்பது ஒரு ஸ்பேசரை ‘சந்தித்து’ ஏதாவது ஒரு அனுமானத்தை முன்வைப்பார். அவை இந்த விதிகளின் அடிப்படையில் நிறுவப்படும், அல்லது மறுக்கப்படும். அதில் ஏதாவது ஒரு நூலைப் பிடித்துக் கொண்டு அடுத்த அனுமானத்துக்கு எலைஜா செல்வார்.

கதையின் பலவீனம் அசிமோவுக்கு எழுத்தின் தொழில் நுட்பம் (craft) கை வரவே இல்லை என்பதுதான். புனைவை ஃபார்முலாக்களின் அடிப்படையில் எழுத முடியாது. அசிமோவ் ஃபார்முலாக்களைத் தாண்டவே இல்லை. தட்டையான எழுத்து. டெம்ப்ளேட் கதாபாத்திரங்கள். ஏறக்குறைய ஒவ்வொரு அத்தியாத்திலும் எலைஜா யார் குற்றவாளி என்ற ஒரு யூகத்தை முன் வைப்பார். அது தவறாக இருக்கும். அடுத்த யூகம், அடுத்த அத்தியாயம் என்று போய்க் கொண்டே இருக்கும். தரிசனங்கள் என்றெல்லாம் அசிமோவ் அலட்டிக் கொள்வதே இல்லை. அதனால் நல்ல கருக்களை உடைய கதைகளும் மோசமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. இவையும் அப்படித்தான். சிறுகதைகளில் இது பெரிதாகத் தெரியாவிட்டாலும், நாவல்களாக எழுதப்படும்போது இந்தக் குறை பூதாகாரமாகத் தெரிகிறது.

அசிமோவின் எந்திரன் கரு கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சிறுகதைகளோடு நிறுத்திக் கொள்வது உத்தமம். இந்த நாவல்கள் எல்லாம் என் போன்ற கிறுக்கர்களுக்குத்தான்.

இவற்றைத் தவிர வெண்டல் உர்த் (Wendell Urth) துப்பறியும் சில கதைகள் Asimov’s Mysteries (1968) என்ற புத்தகத்தில் கிடைக்கும். அவையும் இப்படி SF மற்றும் துப்பறியும் கதைகளை கலந்து கட்டி அடிப்பவைதான். அனேகமாக இந்தப் புத்தகத்தின் எல்லா கதைகளுமே அப்படித்தான். படிக்கலாம்.

அசிமோவ் துப்பறியும் கதைகளையும் எழுத முயற்சித்திருக்கிறார். அவரது துப்பறியும் சீரிஸ் Black Widowers. சில சிறுகதைகள் சுமாரான விடுகதைகள் போல இருக்கும். மீண்டும் மீண்டும் ஒரே format-தான். நண்பர்கள் மாதம் ஒரு முறை கூடுவார்கள். ஒரு விருந்தினர் வருவார். ஏதோ ஒரு பிரச்சினையை விவரிப்பார். அதை நண்பர்கள் அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்று பேசுவார்கள். கடைசியில் விருந்தைப் பரிமாறும் waiter ஹென்றி சரியான விடையைக் கண்டுபிடிப்பார். Tales of the Black Widowers (1974), More Tales of the Black Widowers (1976), Casebook of the Black Widowers (1980), Banquets of the Black Widowers (1984), Puzzles of the Black Widowers (1990), Return of the Black Widowers (2003) புத்தகங்களில் எல்லாம் ஒரு கதை கூடத் தேறாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

தொடர்புடைய சுட்டி: அசிமோவின் ‘I, Robot’

ஃபிலிப் கே. டிக் எழுதிய மைனாரிடி ரிபோர்ட்

philip_k_dickமைனாரிடி ரிபோர்ட்டை நான் முதலில் திரைப்படமாகத்தான் பார்த்தேன். நல்ல திரைப்படம். விஷுவலாக மிக நன்றாக இருக்கும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி டாம் க்ருய்ஸ், காலில் ஃபாரல் நடித்தது.

minority_reportபல வருஷங்களுக்குப் பிறகுதான் இந்த திரைப்படத்தின் மூலக்கதை ஃபிலிப் கே. டிக் எழுதிய ஒரு குறுநாவல் என்று தெரிந்தது. டிக் நான் விரும்பிப் படிக்கும் SF எழுத்தாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைத் தேடிப் பிடித்துப் படித்தேன்.

திரைப்படம் வந்து பல வருஷங்களாகிவிட்டதால் கதை சுருக்கமாக: எதிர்காலத்தில் மூன்று idiot savants-களுக்கு நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் என்ன என்று தெரிகிறது. அதை வைத்து குற்றம் நடப்பதற்கு முன்பே – உதாரணமாக கணவன் தன் மனைவியைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் – அடுத்த வெள்ளி இந்தக் கொலை நடக்கப் போகிறது என்பதை கணித்து, அந்தக் கணவனை முன்கூட்டியே கைது செய்துவிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அமைப்பை கதாநாயகன் ஆண்டர்டன் நிறுவி இருக்கிறான். பல வருஷங்களாக இந்த அமைப்பு வெற்றிகரமாக நடந்து வருகிறது. குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. கொலை என்பது இல்லவே இல்லை. இப்போது அந்த அமைப்பு ஆண்டர்டனே ஒரு கொலை – அதுவும் முன்னே பின்னே தெரியாத ஒருவனை கொலை செய்யப் போவதாக தகவல் வருகிறது. ஆண்டர்டன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை.

கதையின் கரு நன்றாகத்தான் இருக்கிறது. கதையும் மோசமில்லை. ஆனால் திரைப்படம் கதையை விட பல மடங்கு பெட்டர். சில கதைகளை விஷுவலாகப் பார்க்கும் அனுபவமே வேறு, இந்தக் கதையும் அவற்றில் ஒன்று. திரைக்கதையும் கதையை விட சிறப்பாகவே இருக்கிறது என்றுதான் தோன்றியது. Adjustment Bureau திரைப்படத்திலும் இப்படித்தான் திரைக்கதை கதையை விட பெட்டர் என்று தோன்றியது.

கதையைப் படிக்கலாம். ஆனால் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

ஐசக் அசிமோவின் ‘I, Robot’

Three Laws of Robotics

  1. A robot may not injure a human being or, through inaction, allow a human being to come to harm.
  2. A robot must obey orders given it by human beings except where such orders would conflict with the First Law.
  3. A robot must protect its own existence as long as such protection does not conflict with the First or Second Law.

issac_asimovமனிதர்களால் உருவாக்கப்படும் ரோபோக்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது ஃப்ராங்கன்ஸ்டைன் காலத்திலிருந்து எந்திரன் சினிமா வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஒரு கரு. தன் கதை உலகத்தில் அந்த அச்சத்தைத் தவிர்க்கவே அசிமோவ் இந்த விதிகளை ஒரு சட்டகமாக வரையறுத்தார். இது என்ன பிரமாதம், சாதாரண காமன் சென்ஸ்தானே என்று தோன்றலாம். ஆனால் இதை வைத்துக் கொண்டு – ஏறக்குறைய கணிதத் தேற்றங்கள் போல இந்த மூன்று விதிகளிலிருந்து ஆரம்பித்து அசிமோவ் ஒரு புது உலகத்தையே படைத்திருக்கிறார்.

அவரது ரோபோக்கள் உலகத்தில் மீண்டும் மீண்டும் இந்த மூன்றே விதிகள் எப்படி ரோபோக்களின் செயல்களை பாதிக்கின்றன என்பதைத்தான் காட்டுகிறார். உதாரணமாக முதல் விதியை எடுத்துக் கொள்ளுங்கள். ரோபோவின் கண்ணெதிரில் ஒரு கொலை நடந்தால் அதை கொலைகாரனுக்கு சின்ன அடி கூட படாமல் எப்படித் தடுப்பது? ரோபோ நீதிபதியாக அமர்ந்திருக்கிறது, ஆயிரம் பேரைக் கொன்ற தீவிரவாதிக்கு எப்படி தண்டனை வழங்கும்? ஒரு மனிதன் ரோபோவை ‘தற்கொலை’ செய்து கொள்ள ஆணையிட்டால், அதை அது கடைப்பிடிக்க வேண்டுமா? அப்படி தன்னைத் தானே அழித்துக் கொண்டால் எதிர்காலத்தில் இன்னொரு மனிதனுக்கு வரும் கஷ்டங்களைத் தவிர்க்க முடியாமல் போகலாம். என்ன செய்வது? பீஷ்மருக்கும் துரோணருக்கும் கர்ணனுக்கும் முன்னால் இருந்த அதே இரண்டு சரியான அல்லது இரண்டு தவறான தேர்வுகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விதான் அசிமோவின் ரோபோ சிறுகதைகளிலும் நாவல்களிலும் மீண்டும் மீண்டும் காட்டப்படுகின்றன.

‘I, Robot’-வில் உள்ள சிறுகதைகள் நாற்பதுகளில் எழுதப்பட்டன. ஐம்பதுகளில் முதல் தொகுப்பு புத்தகமாக வந்தது. அதற்குப் பிறகு பல சிறுகதைகள், நாவல்கள் வந்துவிட்டன.

இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த சிறுகதைகள் Reason – சிந்திக்க ஆரம்பித்த ரோபோவால் தன்னை விட அறிவிலும் ஆற்றலிலும் குறைந்த மனிதர்கள் தன்னைப் படைத்தார்கள் என்று நம்பமுடியவில்லை, அது ஒரு எனர்ஜி கன்வெர்டர்தான் தன்னைப் படைத்த கடவுள் என்று நம்புகிறது, ஒரு மதத்தை ஆரம்பிக்கிறது; Liar! – எப்படியோ மனிதர்களின் ஆழ்மன எண்ணங்களை ஒரு ரோபோவால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை புண்படுத்தக் கூடாது என்பதற்காக அது பொய் சொல்கிறது! Evidence – ரோபோக்கள் பற்றி அச்சம் நிறைந்திருக்கும் காலத்தில் பொறுப்பான பதவிக்கான தேர்தலுக்கு நிற்கும் ஒரு வக்கீல் மனிதன் இல்லை, மனித உருவத்தில் இருக்கும் ரோபோ என்ற சந்தேகம் எழுகிறது. அந்த வக்கீல் பொதுக் கூட்டத்தில் நைநை என்று நச்சரிக்கும் ஒரு மனிதனை கன்னத்தில் ஒரு அறை விடுகிறான். ரோபோக்கள் முதல் விதிப்படி மனிதனை காயப்படுத்த முடியாது என்பதால் அவன் சுலபமாக ஜெயிக்கிறான். ஆனால் அறை வாங்கியது மனிதன்தானா?

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

ஆர்சன் ஸ்காட் கார்ட் எழுதிய Ender’s Game

orson_scott_cardஎனக்குப் பிடித்த SF சிறுகதைகளில் Ender’s Game-உம் ஒன்று.

சிறுகதை 1977-இல் வெளிவந்தது. பிறகு கார்ட் அதை ஒரு நாவலாக 1985-இல் விரிவுபடுத்தினார். பிறகு அது ஒரு சீரிசாகவே விரிவுபடுத்தப்பட்டது. என் கண்ணோட்டத்தில் சிறுகதை படிக்க வேண்டிய ஒன்று. நாவல் ஒரு மாற்று குறைவுதான். சீரிஸ் எல்லாம் தீவிர விசிறிகளுக்கு மட்டும்தான்.

பூமிக்கும் இன்னொரு கிரகத்துக்கும் நடுவே பெரிய போர் நடந்து பூமி மயிரிழையில் தப்பித்திருக்கிறது. அடுத்த போர் எப்போது வருமோ என்று உலகமே அஞ்சுகிறது. அடுத்த போரில் தலைமை தாங்க சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆளற்ற விண்வெளிக் கப்பல்களை இயக்க simulation games மூலம் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். அந்தப் பயிற்சிதான், அந்த விளையாட்டுக்கள்தான், அந்தப் பயிற்சிக்கும் போருக்கும் உள்ள தொடர்புதான் கதை.

enders_gameஎண்டர் வளர்ந்து அடுத்த போருக்கு தலைமை தாங்கக் கூடியவன் என்று எல்லா ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள். எண்டர் ஒரு குழுவின் தலைவன். குழுத்தலைவர்களில் அவன்தான் இளையவன். அவனுக்கு எதிராக விளையாடும் குழுக்களுக்கு பல advantages தரப்படுகின்றன. இருந்தும் அவன் மீண்டும் மீண்டும் தன் திறமையினால் வெல்கிறான். அவனுக்கு துணையாக நிற்பவர்களில் அவனை விட இளையவனான பீன் முக்கியமானவன்.

ஒரு கட்டத்தில் விளையாட்டுகள் போதும் என்று அடுத்த லெவல் பயிற்சி நடக்கிறது. அங்கே ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

விளையாட்டுகளின் எண்டர் வெற்றி பெறுவதுதான் கதையின் கவர்ச்சி. ஒரு வழியில் சிந்திக்கப் பழகுவது எப்படி பலவீனமாக முடியக் கூடும் என்பதை கார்ட் நன்றாக விவரிக்கிறார்.

ஹாரிசன் ஃபோர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

சிறுகதை இணையத்தில் கிடைக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF

அறிவியல் சிறுகதை – A History Lesson

என்னைக் கவர்ந்த சில சிறுகதைகளைப் பற்றி இந்த வாரம் தொடர்கிறேன்.

arthur_c_clarkeஆர்தர் சி. க்ளார்க்கின் புத்திசாலித்தனமான சிறுகதை ஒன்று – A History Lesson.

இது நன்றாக எழுதப்படவில்லை. அமெச்சூர்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது. அறிவியல் சிறுகதைகளின் கவர்ச்சியே அவை எழுப்பும் கேள்விகள்தான். நாம் வரலாற்று ஆதாரங்கள் என்று நம்பும் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் எவ்வளவு உண்மை, எத்தனை பொய், எத்தனை நம் தப்புக்கணக்கு?

பக்கத்து ஊரில் பத்து பேரோடு சண்டை போட்டு வென்றவனை காந்தளூர்ச்சாலை களமறுத்தறுளியவன் என்று கல்லில் பதித்தால் கூட பத்து மரக்கால் நெல் கிடைக்கும் என்று சிற்பி கணக்கு போட்டிருக்கலாம். நாளை உலகம் அழிந்து சென்னையில் அறிவாலயம் மட்டும் மிஞ்சினால் பின்னால் வரும் சந்ததிகள் தமிழினத்தில் ஒரே தலைவர் கருணாநிதி என்று வரலாற்றை எழுதலாம். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் கனகவிஜயரை வென்று அவர்கள் மீது இமயத்தின் கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கண்ணகி கோவிலைக் கட்டினான், கரிகாலச் சோழன் இமயத்தை வென்றான் என்கிறது. கனகவிஜயன் என்று எந்த மன்னனையும் என் வடநாட்டு நண்பர்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் மன்னர்கள்தானா இல்லை கோவிலைக் கட்டிய வடநாட்டு மேஸ்திரிகளா? இல்லை உ.வே.சா.வுக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளில் யாராவது பிற்காலப் புலவர் நாலு வரியைச் சேர்த்துவிட்டாரா? இந்த மாதிரி யோசிக்க வைப்பதுதான் இந்தக் கதையின் வெற்றி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள், எழுத்துக்கள்

அறிவியல் சிறுகதை – Surface Tension

james_blishஜேம்ஸ் ப்ளிஷ் எழுதிய (James Blish) Surface Tension எனக்குப் பிடித்த அறிவியல் சிறுகதைகளில் ஒன்று.

விறுவிறுப்பான, கச்சிதமான கதை. எழுப்பும் கேள்விகளோ முடிவற்றன. அறிவியல் சிறுகதைக்கு வேறென்ன வேண்டும்?

சிம்பிளான, நேரான கதை. ஏதோ ஒரு கிரகத்தில் தண்ணீரில் வாழும் மிகச் சிறிதாக்கப்பட்ட, மனித இனம். அவர்களின் தலைவன் தண்ணீரின் எல்லைகளைத் தாண்டி ‘வெளியே’ செல்ல விரும்புகிறான். எதிரிகளை வென்று, நட்பு உயிரினங்களின் நம்பிக்கையைப் பெற்று, சூரியனை நேரடியாகப் பார்த்து ‘விண்வெளிப் பயணத்தை’ வெற்றிகரமாக நடத்துகிறான். ஆனால் அவன் வாழும் தண்ணீரின் எல்லைகளோ ஒரு ஆழமற்ற குட்டையின் (puddle) நீர்க்குமிழியின் எல்லைகள்தான். அந்தக் குமிழியின் ‘Surface Tension’-ஐ உடைத்து வெளியேறுவதுதான் அவன் சாதனை.

நமக்கு பிரமாண்டமான பிரபஞ்சமாகத் தெரிவது வேறு ஒரு உயிரினத்துக்கு வெறும் நீர்க்குமிழியாகத் தெரியலாம். நமக்கு புவியீர்ப்பு விசையாகத் தெரிவது அந்த உயிரினத்துக்கு ‘Surface Tension’ ஆகத் தெரியலாம். நமது எல்லைகள் பிற உயிரினங்களுக்கு எப்படித் தெரிகின்றன, பிற உயிரினங்களின் எல்லைகளைப் பற்றிய நமது புரிதல் முழுமையானதுதானா என்ற முடிவற்ற கேள்விகளைக் கேட்கிறது இந்தச் சிறுகதை. எறும்புகளின் வாழ்க்கையைக் கூட நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது.

கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

1952-இல் வெளியான சிறுகதை. இணையத்தில் பத்திரிகை பக்கங்களையே பிரதி எடுத்திருக்கிறார்கள், அப்போது வரையப்பட்ட படங்களோடு படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட சிறுகதை: அறிவியல் புனைவுகள்

ஆர்தர் சி. க்ளார்க்கின் அறிவியல் சிறுகதை – Nine Billion Names of God

arthur_c_clarkeஎனக்குப் பிடித்த இன்னொரு அறிவியல் சிறுகதை. சின்னக் கதைதான், நான் நாலு வார்த்தை எழுதும் நேரத்துக்குள் படித்தே விடலாம். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: SF