மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

அனேகமாக ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாகிறதாம்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கு.ப.ரா.வின். வீரம்மாளின் காளை சிறுகதையையும் கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.

வாடிவாசல் பற்றி அசோகமித்ரன் எழுதியது இங்கே. என் ரசனையோடு நிறைய ஒத்துப் போகும் நண்பர் ரெங்கசுப்ரமணியின் விமர்சனம் இங்கே. வாடிவாசல் புத்தக விளம்பரம் – அன்றும் இன்றும்.

இன்னும் ஒரு சிறந்த ஜல்லிக்கட்டு சிறுகதை – கு.ப.ரா. எழுதிய வீரம்மாளின் காளை. அவரது நல்ல சிறுகதைகளில் ஒன்று. கட்டாயம் படியுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

சி.சு. செல்லப்பா சிறுகதைகள்: சரசாவின் பொம்மை

வாடிவாசல் அளவுக்கு செல்லப்பாவின் பிற படைப்புகள் பேசப்படுவதில்லை. நானும் அதிகம் படித்ததில்லை, கிடைப்பதும் இல்லை. வாடிவாசல் அளவுக்கு பிற படைப்புகள் இருக்காது என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு.

சரசாவின் பொம்மை என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு (1942) கிடைத்தது. எண்ணம் இன்னும் உறுதிப்பட்டது. நேரடியான சிறுகதைகள். வாழ்வின் ஒரு தருணத்தை காட்ட மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார், சில பல சமயம் வெற்றியும் பெறுகிறார். ஆனால் எந்தச் சிறுகதையும் தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்று நான் ஒரு பட்டியல் போட்டால் அதில் இடம் பெறாது.

செல்லப்பாவின் வெற்றி கதை நிகழ்ச்சிகள் நாம் சர்வசாதாரணமாக பார்க்கும் நிகழ்ச்சிகளாக இருப்பதுதான். நிகழ்ச்சியின் சூழ்நிலையை கதை முழுவதும் விஸ்தாரமாக விவரிப்பார். கடைசியில் ஒரு முத்தாய்ப்பு. அனேகமாக புன்னகை வருகிறது. கதைகளின் எளிமை மற்றும் நம்பகத்தன்மை, சரளமான நடை இந்த உணர்வை அழுத்தமாக ஏற்படுத்துகின்றன. மறைந்துபோன அந்தக் காலம் – 11-12 வயதில் திருமணம், 15-16 வயதில் கணவன் வீட்டுக்குச் செல்லும் சிறுமிகள் – கதைகளில் தெரிவது இவற்றின் கவர்ச்சியை அதிகப்படுத்துகிறது.

சரசாவின் பொம்மை இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதை. ஆறு வயது சிறுமியுடன் என்னை கல்யாணம் செய்து கொள் என்று விளையாட்டுப் பேச்சு பேசும் இளைஞன்; சிறுமி வளர்கிறாள், அப்படி விளையாடுவது நின்றுவிடுகிறது. அந்த விளையாட்டுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் தனக்கு சிறுமி விளையாட்டு பொம்மை அல்ல, சிறுமிக்குத்தான் தான் விளையாட்டு பொம்மை என்று உணர்வது நல்ல தரிசனம். ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் இடம் பெறுகிறது.

மூடி இருந்தது சிறுகதை கவித்துவமானது. சிறையிலிருந்து விடுதலை அடையும் நாயகன். கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கின்றன. வெளியே வந்து பார்க்கிறான். தொடுவானத்துக்கு அப்பாலும் அவனுக்கு ஒரு கதவு தெரிகிறது.

வாழ்க்கை சிறுகதை ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி சிறுகதையை நினைவுபடுத்துகிறது. சாவும் பிணமும் வெட்டியானுக்குத் தொழில்தானே! விரிவாக இங்கே.

ஆறுதல் இன்னொரு நல்ல சிறுகதை. குழந்தையை தற்செயலாக தள்ளிவிடும் அப்பா; குழந்தை கோபித்துக்கொண்டு அப்பாவிடம் வர மறுக்கிறது. குழந்தை தூங்கும்போது அவளுக்கு முத்தம் தரும் அப்பன், தூங்கும் குழந்தை முரண்டு பிடிக்காது என்று எண்ணம் ஓடுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் இன்னும் ஒரு நல்ல சிறுகதை. நகரத்தில் இளசுகள் குடித்தனம். மனைவி பகட்டாக அலங்காரம் செய்து கொள்கிறாள். ஊரிலிருந்து மைத்துனன் வந்ததும் கிராமப் பெண் போலவே மாறிவிடுகிறாள், எங்கே தன்னைப் பற்றி கிராமத்தில் போய் ஏதாவது சொல்லிவிடுவானோ என்ற கூச்சம். மைத்துனன் ஊருக்குப் போகிறான். அண்ணனுக்கு அனுப்பவே மனசில்லை. ரயில் ஏற்றிவிட்டு திரும்பி வந்தால் மனைவி அலங்காரபூஷணியாக நிற்கிறாள். சுடுசொல். இதை சிறப்பாக எழுதி இருக்கிறார்.

முறைமைப்பெண் இன்னொரு நல்ல சிறுகதை. அண்ணனுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம் முற்றிப் போய் கேஸ் நடக்கிறது. அண்ணன் சிறைக்குப் போகும் நிலை. தீர்ப்பு சொல்லும்போது தங்கை வேண்டாம் என்று சொல்ல வாயெடுக்கிறாள், ஆனால் கோர்ட்டில் பேசாதே என்று அடக்கிவிடுகிறார்கள். இதே கதையை விவரித்து ஒரு நாடகமாகவும் எழுதி இருக்கிறார். என்னைக் கவர்ந்தது சிறுகதைதான்.

ஞாபகம் கொஞ்சம் subtle ஆன சிறுகதை. இறந்துபோன தங்கை, மறுமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை, தங்கையின் மகளை ஒரு திருமணத்தில் சந்திக்கும் வாய்ப்பு. அண்ணனின் மனநிலையை சிறப்பாக காட்டுகிறார்.

பாத்தியதை மிக எளிமையான, ஆனால் உண்மையான கதை. நேற்று வரை வீட்டில் தன்னோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த தங்கையை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் அண்ணன்.

குருவிக்குஞ்சு, நொண்டிக்குழந்தை இரண்டும் கதை என்ற அளவில் சுமார்தான். ஆனால் குழந்தைகள் உலகத்தை நன்றாகவே காட்டுகின்றன.

பந்தயம் எளிமையான சிறுகதை. ஊர் முரடன் பெரும் கல்லைத் தூக்கி நாடோடிப் பெண்ணை மணக்கிறான். முரடனை முதலில் அறையும் அந்தப் பெண் அவனது வீர சாகசத்தால் ஈர்க்கப்படுவது நன்றாக வந்திருக்கும்.

முதல் கடிதமும் அப்படித்தான். மனைவிக்கு கடிதம் எழுதும் கணவன். என்ன பதில் எழுதுவது என்று தெரியாமல் எதையோ எழுதி அனுப்பும் 12 வயது மனைவி. அது அவனுக்கு பெரும் புதையலாக இருக்கிறது.

செல்லப்பா நிச்சயம் படிக்கக் கூடிய எழுத்தாளர். அவர் புதுமைப்பித்தனோ, ஜெயமோகனோ அல்லர். அவரது குரல் மெலிதாகவே ஒலிக்கிறது. பெரும் போராட்டங்களோ, உணர்ச்சிக் கொந்தளிப்புகளோ, மாபெரும் மானிட தரிசனங்களோ அவரது சிறுகதைகளில் தென்படவில்லை. சுப்ரபாரதிமணியன் போல வாழ்வின் சில தருணங்களைத்தான் காட்ட முயற்சிக்கிறார். அவற்றில் அசோகமித்திரன் போல பெரும் மானுட தரிசனங்கள் தெரிவதில்லை. (அசோகமித்திரனின் கசப்பும் இல்லை.) அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: செல்லப்பா பக்கம்

மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்: சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல்

ஒவ்வொரு மாட்டுப் பொங்கலுக்கும் வாடிவாசல் பற்றிய பதிவை மீள்பதித்துக் கொண்டிருக்கிறேன். அது சரி, மாட்டுப் பொங்கல் என்றால் வாடிவாசல் பற்றி எழுதாமல் எப்படி?

மாட்டுப் பொங்கல் என்றால் எப்போதும் நினைவு வருவது வாடிவாசல் குறுநாவல்தான். ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி.சு. செல்லப்பா எழுதியது. விறுவிறுப்பான கதை. கதையில் முடிச்சு கிடிச்சு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. செல்லாயி அம்மன் ஜல்லிக்கட்டுக்கு – செல்லாயி சல்லிக்கு – இரண்டு கிழக்கத்தியான்கள் – பிச்சி, மருதன் – வருகிறார்கள். பிச்சியின் அப்பா அம்புலித்தேவன் ஜல்லிக்கட்டை நடத்தும் ஜமீன்தாரின் காரிக் காளையால் குத்துப்பட்டு இறந்து போனார். அதற்கு பழி வாங்கும் விதமாக காளையை அடக்க வருகிறார்கள். ஜெயிக்கிறார்களா, காளையால் குத்துப்படுகிறார்களா, ஜமீன்தாரின் மனநிலை என்ன இதுதான் கதை. ஒரு எழுபது எண்பது பக்கம்தான் இருக்கும்.

எடுத்தால் கீழே வைக்க முடியாது. ஜல்லிக்கட்டு உலகத்தை, மறவர்களின் வீரத்தை, அவர்களது நெறிகளை, மிக அருமையாக வடிவ கச்சிதத்தோடு விவரிக்கும் குறுநாவல். நான் ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்ததில்லை. ஆனால் செல்லப்பா அந்த உலகத்தை நம் கண்ணெதிரில் நிறுத்துகிறார். இந்த ஒரு கதையே அவரை தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைநிறுத்த போதுமானது. இன்று யோசித்துப் பார்த்தால் வடிவ கச்சிதம்தான் இந்தக் குறுநாவலை உயர்த்துகிறது என்று தோன்றுகிறது.

வாடிவாசலை ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது வார்த்தைகளில்:

வாடிவாசல் – சி.சு. செல்லப்பா: உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது. மதுரைப்பக்க கிராமம் ஒன்றில் உயிரைப் பணயம் வைத்து காளைகளுடன் மோதும் இளைஞர்களின் கதையை திகிலான சொல்லாட்சியுடன் கூறும் வேகமான கதை. தன் தந்தையைக் கொன்ற அடங்காத காரிக்காளையை ரத்தம் சிந்தி வெல்கிறான் பிச்சி. ‘ரோஷம் ஆகாது தம்பி, மனுசனுக்கானாலும் மாட்டுக்கானாலும்’ என்ற அசரீரிக் குரல் தமிழ் மரபுமனத்தின், கிராமிய அகத்தின் வெளிப்பாடு.

எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தை Oxford University Press வெளிக்கொண்டு வரப்போகிறது என்று நண்பர் ஹேம்கன் தகவல் தருகிறார். இப்போது வந்துவிட்டது. கல்யாணராமன் மொழிபெயர்த்திருக்கிறார்.

தோழி அருணாவின் குறிப்புகள்: எனக்கு 14-15 வயது இருக்கும் பொழுது என் அப்பா வாங்கும் ஒரு சிறுபத்திரிகையில் (காலச்சுவடு என நினைக்கிறேன்) முதன் முதலாக வாடிவாசல் படித்தேன். எனக்கு மிக மன எழுச்சியை வழங்கிய கதை. கதையா, குறுநாவல்/ நாவலா என்று பாகுபாடு பார்க்கவெல்லாம் அப்பொழுது தெரியவில்லை. பிச்சி, மருதன் அவர்களிடம் உடனடி சினேகம் கொள்ளும் கிராமத்து பெருசு, வெல்ல முடியாத காளையை இவன் அடக்க வேண்டும் என ஒருபுறமும் ஆனால் ஒரு வேளை அடக்கி விடுவானோ என்ற பதட்டமுமாய் அவனை அடக்க அழைக்கும் ஜமீந்தார் என கதாபாத்திரங்களை சில பக்கங்களில் வெகு கச்சிதமாகக் காட்டுவார் செல்லப்பா. சிறிது நாள் முன் செய்த மீள்வாசிப்பிலும் என்னை வெகுவாக ஈர்த்தது.

ஜல்லிக்கட்டைப் பற்றிய அவர் அளிக்கும் வர்ணனை ஒரு சித்திரம் போல் என் மனதில் நான் முதல் முறை படித்ததில் இருந்தே பதிந்து விட்டது. அட்டையில் உள்ள ஓவியம் முதன் முறை வேறு மாதிரி இருந்ததோ எனத் தோன்றுகிறது. கோட்டோவியமாக பார்த்த ஞாபகம்.

பாரதிராஜா ஒருவேளை தமிழ் இலக்கியம் படிக்கிறார் என நினைகிறேன். மண்வாசனையில் வரும் ஜல்லிக்கட்டு காளையை கொல்லும் இடம் இப்புத்தகத்தையும், கோபல்ல கிராமத்தில் பெண்ணின் நகைக்காக அவளை தண்ணீரில் சாகடிக்கும் இடம் முதல் மரியாதையையும் ஞாபகப்படுத்துகிறது.