சிலிக்கன் ஷெல்ப் கூட்டங்களில் 2011ல் பேசப்பட்ட புத்தகங்கள்

சென்ற வருடம் சிலிக்கன் ஷெலப் இலக்கிய வட்டம் புத்தகங்களையும் சில சமயங்களில் பொதுவான தலைப்புகளையும் எடுத்துக் கொண்டு “அலசியது”. சென்ற வருடம் நண்பர்கள் சிலர் (அன்பரசன், அருணா)  இடம் பெயர்ந்ததால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. ஆனால் புது  உறுப்பினர்கள் கலந்து வருகிறார்கள். அந்த ஆர்வத்தில் குழுமத்தை விரிவு படுத்தவும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் முயற்சி எடுத்து வருகிறோம்.

சென்ற வருடம் கீழ் வரும் இந்தத் தலைப்புகளில் பேசப்பட்டது

புயலில் ஒரு தோணி – ப. சிங்காரம்
ஏழாம் உலகம்ஜெயமோகன்
புலிநகக்கொன்றை – பி.ஏ. கிருஷ்ணன்
18ஆம் அட்சக்கோடு அசோகமித்ரன்
ஒரு புளியமரத்தின் கதைசுந்தரராமசாமி
எட்டுத் திக்கும் மதயானை – நாஞ்சில்நாடன்
அண்ணா ஹசாரே
உபபாண்டவம் – எஸ். ராமகிருஷ்ணன்
ஜடாயு அளித்த கம்பராமாயண உரை
ஆழிசூழ் உலகு – ஜோ டி’குரூஸ்
இலக்கியம் வரலாறு (உதவி – நவீன இலக்கியம் ஜெயமோகன்)
கம்போடிய தாய்லாந்து அனுபவம் – உறுப்பினர் விஸ்வநாத், மற்றும் ஜெயமோகனின் குறுந்தொகை சொற்பொழிவு

ஜெயமோகன் சிலிக்கன் ஷெல்ப்புக்கு அளித்த அறிவுரை இங்கே – விவாதத்தின் நெறிமுறைகள்

சிலிக்கன்ஷெல்ஃப் இலக்கிய வட்டம் டிசம்பர் 2011 கூட்டம்

சிலிக்கன் ஷெல்ஃப் இலக்கிய வட்டத்தின் டிசம்பர் 2011 கூட்டம் நேற்று (ஜனவரி 7) தரமான நேரமாக கழிந்தது. முதலில் உறுப்பினர்கள் அதிகமாக வரமுடியாத காரணத்தால் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கக்கூடும என்ற நினைத்தது ஒரு தவறாகியது. மேலும் எதிர் நோக்கியிருந்த நிகழ்ச்சிகள் யாவும் கைகூடவில்லை. மனம் தளர்ந்திருந்தது. ஆனால் நிகழ்ந்தது வேறு. மிகச் சிறப்பான நேரமாகிவிட்டது. இதுபோல் எதிர்பார்ப்புகள் அதிகமாக இல்லாத சமயத்தில் கூட்டம் சிறப்பாக அமைவது மேலும் மன்ற சந்திப்புகளை நடத்திச் செல்ல உற்சாகத்தை கொடுக்கிறது.

குழும உறுப்பினர் விஷ்வனாத்தின் கம்போடிய-தாய்லாந்து பயணம் பற்றிய informal presentation மிகவும் சிறப்பாக இருந்தது. எப்படி போல்பாட் அரசு நிலக் கண்ணி வெடி (landmines) வைத்து அன்னியர்கள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொண்டு நாட்டை பினனகர்த்தி சென்றது இன்றும் அங்கு அமைந்துள்ள sign boards சொல்லும் நிதர்சன உண்மையாக இருக்கிறது, அங்கோர்வாட்டில் எவ்வாறெல்லாம் கோயில்கள் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, disproportionate cost of housing, நீர் நில வளம், டாலர் செலுத்தும் ஆதிக்கம், பணம் கொடுக்கும் சீன மற்றும் அமேரிக்க நிர்வாக ஆதிக்க முறை, தாய்லாந்தில் எப்படி பால் சுற்றுலா குற்ற உணர்ச்சியின்றி ஆதிக்கம் செலுத்துகிறது என்பது பற்றி passionateஆக சொல்லிச் கொண்டே சென்றார். கேட்கும் ஆர்வத்தில் ஒன்றரை மணி நேரம் சென்றதே தெரியவில்லை. அவரை ராஜன் தூண்டியவாறு இருந்தார். விஷ்வனாத் இருபதுகளில் இருப்பவர்.  இந்த வயதில் அவருடைய இலக்கிய ஆர்வங்களும், பயண ஆர்வங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின. சென்ற ஆண்டு மெக்ஸிகோ பயணம் மேற்கொண்டிருந்தார்.  பயணம் பண்ணுவது வியப்பில்லை என்றாலும் அவருடைய  கூர்ந்த அவதானிப்புகள் மற்றும் தலங்களை பற்றிய நுண்குறிப்புகளை தன்னுள் வாங்கி கொண்டு
மற்றவர்களுக்கு விளக்குவது போன்ற திறமைகள் பாராட்டுக்குரியது. இலக்கியத்தில் பங்களிக்க வேண்டும் என்ற கனவை வைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள். விஷ்வனாத் இபபடி ஒரு பயணத்தை  குழுமத்தில் பகிர்ந்து கொண்டது ஒரு travelogue வாசித்த அனுபவத்தை கொடுத்தது. மேலும் அவர் பயண அனுபவத்தை கூட்டாஞ்சோறு தளத்தில் எழுதுவதாக கூறியிருக்கிறார்.

உணவு பரிமாறப்பட்ட வேளையில் கியர் மாற்றப்பட்டு ஜெயமோகனின் டிசம்பர் 23ஆம் தேதி குறுந்தொகை
பற்றிய சொற்பொழிவு ஆரம்பமாகியது. முன்னதாக வேறு ஒரு தலைப்பில் ஜெயமோகன் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு நிகழவில்லை. அந்த குறை குறுந்தொகை சொற்பொழிவு மூலம் தீர்ந்தது. ஒன்று நிச்சயம் சொல்லலாம். ஜெயமோகன் பேச்சை கேட்பது – lecture or casual conversation – ஒரு well spent time தான். இணையம் முழுவதும் பேசப்பட்டு முடிந்துள்ளது. சிறப்பான பேச்சு. குறிஞ்சி நிலத்திற்கே எடுத்துச் சென்றது. இரண்டு முறை கேட்டுள்ளேன். இன்னும் கேட்பேன் என் நினைக்கிறேன்.  இதிலெல்லாம் ஏன் பள்ளிக்கூடத்தில் பாடமாக சொல்லிக் கொடுக்கும் பொழுது பலருக்கு (சரி, எனக்கு) நாட்டமில்லை? ஆசிரியர் ஜெயமோகனாக இல்லாத கோளாறா? இல்லை கற்றுக் கொடுக்கப்படும் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவனின் வயதுக்கு ஒவ்வாததா? தருணம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். சங்க காலத்தில் ”அப்படியே கொல்லன் சென்றுக் கொண்டிருக்கும்பொழுது பாடுகிறான்” என்று அவர் விளக்கும் பொழுது சங்ககாலம் என்ற காலத்திற்கான மாபெரும் கதவின் திறவுகோள் திடீரென திறந்து கொண்டது போல் ஒரு உணர்வு. உடனே சங்கச்சித்திரங்களை படிக்கத் தோன்றுகிறது. இது தான் ஜெயமோகனின் வெற்றி. முதலாளித்துவ உலகமயத்தில் தமிழர்கள் வாழ்க்கை ஒற்றை நோக்க லட்சியமாக குறுக்கப்பட்ட அவலத்திலிருந்து மீண்டும் மீட்கும் முயற்சியாக ”கற்பூரம் என்ற எழுதப்பட்ட டப்பாவை” வைத்துகொண்டே கற்பூர வாசனை மட்டுமல்ல கற்பூரம் எப்படியிருக்கும் என்றும் உணரவைக்கிறீர்கள். இனம் புரியாமல் ஏனோ மனம் நெகிழ்கிறது. ஐயா! உங்கள் பணி தொடரட்டும்.