கென் ஃபாலட் எழுதிய “Key to Rebecca”

ken_follettஇந்த நாவலை முதன்முதலாகப் படிக்கும்போது நான் பதின்ம வயதினன். விறுவிறுவென்று போகும் சாகசக் கதை. கிளுகிளு கில்மா சீன்களும் உண்டு. பதின்ம வயதில் பிடித்துப் போக வேறென்ன வேண்டும்?

ஓரளவு வயதான பிறகு வரலாற்றில் ஆர்வம் வந்து கையில் கிடைத்ததை எல்லாம் படித்தேன். அதுவும் English Patient திரைப்படமாக வந்தபோது ஆபரேஷன் சலாம் பற்றி படித்தேன். அட இது ‘Key to Rebecca’ கதையை நினைவுபடுத்துகிறதே, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். சமீபத்தில்தான் கண்ணில் பட்டது.

இன்று படிக்கும்போதும் நல்ல சாகசக் கதை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் துரதிருஷ்டம், கில்மா சீன்களில் அன்றிருந்த கிளுகிளுப்பு இன்றில்லை. 🙂 ஆனால் இன்று இந்தப் புத்தகத்தில் இருக்கும் கவர்ச்சி அதன் அடிப்படையாக அமைந்த உண்மை சம்பவங்கள்தான். இது என் கண்ணில் சாகச நாவல் என்பதை விட (சமீபத்திய) சரித்திர நாவல்தான்.

ரொம்ப சிம்பிளான கதை. இரண்டாம் உலகப் போர். இங்கிலாந்துக்கு எகிப்து ஏறக்குறைய ஒரு காலனிதான். கெய்ரோவில் ராணுவத்தின் முக்கியமான தலைமையகம் இருக்கிறது. ரோமலின் தலைமையில் ஜெர்மன் படைகளுக்கு ஏறுமுகம், எகிப்து விழுந்துவிடுமோ என்ற சூழ்நிலை. இந்த நிலையில் பல தடைகளை மீறி ஜெர்மன் உளவாளி வுல்ஃப் கெய்ரோவுக்கு வந்து சேர்கிறான். ஒரு பெல்லி டான்சரின் உதவியோடு இங்கிலாந்து ராணுவத்தின் திட்டங்கள் பற்றிய தகவல்களை ரோமலுக்கு ரேடியோ மூலம் செய்தியாக அனுப்புகிறான். செய்திகள் சங்கேத முறையில் அனுப்பப்படுகின்றன – அதற்குத்தான் டாஃப்னே டு மாரியரின் Rebecca புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. ரோமலுக்கு எதிரியின் திட்டங்கள் தெரிந்துவிடுவதால் பெருவெற்றி அடைகிறார்.

ஜெர்மான் உளவு அமைப்பு வுல்ஃபிடம் நிறைய ஆங்கிலப் பணத்தை கொடுத்தனுப்பி இருக்கிறது, ஆனால் எல்லாம் கள்ள நோட்டு. இது வுல்ஃபுக்கே தெரியாது. ஆரம்பத்திலிருந்தே கெய்ரோவில் ஒரு ஜெர்மன் உளவாளி இருக்கிறானோ என்று சந்தேகப்படும் மேஜர் வாண்டாம் கள்ள நோட்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை ஆராய்ந்து மெதுமெதுவாக வுல்ஃபை நெருங்குகிறான். கடைசியில் வுல்ஃபை சிறைப்பிடித்து, ரோமலுக்கு பொய்யான செய்தியை அனுப்பி, ரோமல் தோற்று, வாண்டாமுக்கு ஒரு காதலி கிடைத்து, சுபம்!

புத்தகத்தின் இன்னொரு சுவாரசியம் பின்னாளில் எகிப்தின் அதிபரான சதாத்தும் ஒரு பாத்திரமாக வருவது. சதாத் ஜெர்மன் உதவியுடன் ஆங்கிலேயர்களை விரட்டி சுதந்திர எகிப்தை அடைய முயற்சிக்கிறார். (தோல்வி)

ரோமலுக்கும் அவருக்கு மேலதிகாரியாக இருந்த கெஸ்ஸல்ரிங்குக்கும் உள்ள டென்ஷன்களும் விவரிக்கப்படுகின்றன. அதுவும் சுவாரசியமான பகுதி.

சரித்திரமும் இதற்கு நெருக்கமானதுதான். ஒன்றல்ல, இரண்டு ஜெர்மன் உளவாளிகள் – எப்ளர் மற்றும் சாண்ட்ஸ்டெட் – கெய்ரோவை ரகசியமாக அடைகிறார்கள். ஒரு பெல்லி டான்சரின் உதவியோடு தகவல்களை சேகரிக்கப் பார்க்கிறார்கள். தகவல்களை ரகசிய மொழியில் அனுப்ப Rebecca புத்தகத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். கள்ள நோட்டுகளை பறக்க விட்டிருக்கிறார்கள். சதாத்தின் உதவியையும் நாடி இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தகவலும் ரோமலைப் போய்ச் சேரவில்லையாம், ரோமல் இவர்கள் உதவி இல்லாமலேதான் பெருவெற்றிகளை அடைந்திருக்கிறார்.

எப்ளர் தன் அனுபவங்களை புத்தகமாக – Rommel Ruft Kairo – எழுதி இருக்கிறார். லியோனார்ட் மோஸ்லி எழுதிய Cat and the Mice புத்தகமும் ஓரளவு பிரபலமானது. சதாத் தன் வாழ்க்கை வரலாற்றில் எப்ளரும் சாண்ட்ஸ்டெடும் ஓபி அடித்தார்கள், பெண்களோடு உல்லாசமாக இருப்பதில்தான் குறியாக இருந்தார்கள் என்கிறாராம். கெஸ்ஸல்ரிங் ரோமலோடு தனக்கு இருந்த பிணக்குகளை தன் புத்தகங்களில் குறிப்பிடுகிறார்.

இது இலக்கியம் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்காகவும், சரித்திரப் பின்னணிக்காகவும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஒற்றன் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: கென் ஃபாலட்டின் தளம்