சுப்ரபாரதிமணியனின் ‘கூண்டும் வெளியும்’

சுப்ரபாரதிமணியன் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். ஆனால் அவரது படைப்புகளைப் படிக்க நான் எப்போதுமே கொஞ்சம் கஷ்டப்படுவேன். அவரது dry ஆன எதார்த்தவாத எழுத்தைப் படிக்க வழக்கத்தை விட அதிக கவனமும் உழைப்பும் தேவைப்படுகிறது.

அவரது அப்பா சிறுகதைத் தொகுப்பு நல்ல உதாரணம். அதை வாங்கி பத்து வருஷத்துக்குப் பிறகுதான் அதை படிக்கும், புரிந்து கொள்ளும், ரசிக்கும், maturity எனக்கு உருவானது. மிக அருமையான சிறுகதைகள், ஆனால் முதல் முறை படிக்கும்போது இந்த அழுமூஞ்சிக் கதைகளை எவன் படிப்பான் என்று புத்தகத்தை பரணில் தூக்கிப் போட்டுவிட்டேன்.

இதனால் அவரது படைப்புகளைப் படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே போகும் நிலை. கடைசியில் ஒரு வழியாக கூண்டும் வெளியும் தொகுதியைப் படித்தேன். இந்த முறையும் ஒரு முறைக்கு இரண்டு முறையாகப் படிக்க வேண்டி இருந்தது.

இவற்றில் எனக்கு மிகவும் பிடித்திருந்த சிறுகதை வழித்துணை. தொன்மச் சாயலுடன் ஒரு எதார்த்தவாதக் கதை! இறந்துபோன தாத்தாவுடன் தன் ரசனையைப் பகிர்ந்து கொள்ளும் பேரனுக்கு திருமணம் ஆகிறது.

நிலை, வதை, சுழல் எல்லாவற்றிலும் அவரது டச் சிறப்பாக வெளிப்படுகிறது. நிலையில் ஒரு ஏழை இளைஞனின் தவிப்பு; வதையில் பணம் பற்றாத நிலையில் அப்பாவுக்கு சிகிச்சை பார்க்க முடியாமல் அப்பாவின் இறப்பு; சுழலில் மகனுக்கு வேலை போக அப்பா ஐந்துக்கும் பத்துக்கும் வேலைக்குப் போக வேண்டிய நிலை.

மற்றவற்றில் கூண்டும் வெளியும் ஊகிக்கக் கூடிய சிறுகதைதான். ஆனால் நடைமுறை வாழ்க்கையின் குரூரம் நன்றாக வெளிப்படுகிறது.

பிற சிறுகதைகளை நான் பெரிதாக ரசிக்கவில்லை. அதற்கான maturity உருவாக இன்னும் பத்து வருஷம் ஆகுமோ என்னவோ!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

சுப்ரபாரதிமணியனின் “அப்பா”

(மீள்பதிப்பு)

சுப்ரபாரதி மணியனை எனக்குத் தெரியும். (அவருக்கு என்னைத் தெரியுமா என்று கேட்டு மானத்தை வாங்காதீர்கள்.) நான் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் சந்தித்திருக்கிறேன். மிக நல்ல மனிதர். அப்போது விகடன் குமுதமே அங்கே கிடைப்பது கொஞ்சம் கஷ்டம். இவர் சிரமப்பட்டு வருஷாவருஷம் ஒரு புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் அங்கே போய் சாயாவனம் புத்தகம் வாங்கியபோது அவர் கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்த மாதிரி வெளிச்சம்! தமிழன் புஸ்தகம் வாங்குவதே அரிது. அப்படி வாங்கினாலும் சுஜாதாவை தாண்டுவது அதுவும் அந்தக் காலத்தில் மிக அரிது. அவருக்கு யாருடா இந்த பையன் சாயாவனம் எல்லாம் வாங்கறானே என்று ஒரு ஆச்சரியம். அவருக்குத் தெரியுமா நம்ம சுயரூபம்?

கஷ்டப்பட்டு ஒரு தமிழ் சங்கம் வேறு நடத்தினார். ஏதோ ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த பெரிய மனிதர் அறிவிக்கப்பட்டிருந்த தலைப்பை விட்டுவிட்டு வேறு எதையோ பேசினார்.வந்த எரிச்சலில் நான் அவரது தமிழ் சங்கம் பக்கம் போகும் ஆசையை விட்டுவிட்டேன். இப்போது தோன்றுகிறது – புத்தகங்களை இரவல் வாங்கவாவது அவரை நாலு முறை போய் பார்த்திருக்கலாம். ஒரு புத்தகக் கண்காட்சியிலாவது கூடமாட ஏதாவது உதவி செய்திருக்கலாம். நல்ல மனிதர்களை பழக்கம் செய்து கொள்ளவே அப்போதெல்லாம் ஒரு வினோத தயக்கம்!

கண்காட்சியில் இவர் எழுதிய “அப்பா” என்ற சிறுகதை தொகுப்பை obligation-க்காகத்தான் வாங்கினேன். அப்போதெல்லாம் சுஜாதாதான் என் ஆதர்ச தமிழ் எழுத்தாளர். சுஜாதா இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வேறு எழுதி இருந்தார், புத்தகத்தை வாங்க அதுவும் ஒரு காரணம். அந்த முன்னுரையில் பாதி புரியவில்லை, ரொம்ப high funda ஆக இருந்தது, அது இன்னொரு காரணம்.

சுப்ரபாரதிமணியன் கொஞ்சம் dry ஆக எழுதும் எதார்த்தவாதக்காரர். எல்லா கதையிலும் சோகம் நிரம்பி இருக்கும், வீழ்ச்சி இருக்கும், நிறைய நுண்விவரங்கள் இருக்கும். வாழ்க்கையின் சின்ன சின்ன விஷயங்களில் கதை கண்டுபிடிக்கும் பார்வை. அதையெல்லாம் ரசிக்கத் தெரியாத வயது. ஏதோ கொஞ்சம் சீரியஸாக படித்தாலும் மாதுரி தீக்ஷித் “ஏக் தோ தீன்” என்று ஆடிப் பாடுவதுதான் மிஸ் செய்யக்கூடாத ஒன்றாக இருந்த காலம். புத்தகங்கள் படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டியது மிக முக்கியமாக இருந்தது. இரண்டு கதை படித்துவிட்டு இந்த மாதிரி அழுமூஞ்சிக் கதைகள் படிக்க பிடிக்காமல் பரணில் தூக்கிப்போட்டுவிட்டேன். ஒரு பத்து வருஷம் கழித்து புரட்டிப் பார்த்தேன். நல்ல எழுத்தாளர் என்று தெரிந்தது. சுஜாதா தன் முன்னுரையில் குறை சொல்லி இருந்த ஒரு கதை எனக்கு நல்ல கதை என்று பட்டது. அட என் ரசனை சுஜாதாவிடமிருந்து வேறுபடுகிறதே என்று வியந்தது நினைவிருக்கிறது. சுஜாதாவின் முன்னுரை வேறு புரிந்துவிட்டது. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்!

அப்பா: பற்றாக்குறை குடும்பம். சின்ன மகனோடு தங்கி இருக்கும் அப்பா. பெரியவனைப் பார்க்க வரும்போது ஒரு பியர் – இல்லை இல்லை பீர் – குடித்துக் கொள்வார். அவனிடமிருந்து கொஞ்சம் பணம் வாங்கிக் கொள்வார். திடீரென்று தன் பேரனுக்கு நல்ல ஜட்டிகள் வாங்கி வருகிறார். பணம் எங்கே கிடைத்தது?

இன்னொரு முறை மௌனம்: ஐந்து மணமாகாத இளைஞர்கள் ஒரு போர்ஷனில், 35 வயது கணவன், 18 வயது இளம் மனைவி, 27 வயது கணவனின் தங்கை மூவரும் இன்னொரு போர்ஷனில். அவ்வளவுதான் கதை. இந்தத் தொகுப்பில் சுஜாதாவுக்கு பிடித்த கதை இதுதான். மிக subtle ஆக எழுதப்பட்டது.

இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில்: திருமணத்தில் தலைப்பாகை கட்டிவிடும் தொழில் செய்பவர். ரெடிமேட் தலைப்பாகை வந்தால் என்னாவது?

நிழல் உறவு: மோர்க்காரியுடன் பந்தம் உள்ள குடும்பம். பல வருஷம் கழித்து மோர்க்காரியின் மகனை சந்திக்கிறார்கள். அவனுக்கு அம்மா மீது அலட்சியம். பந்தம் நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

சில வேறு தினங்கள்: கோழிச்சண்டை மட்டுமே தெரிந்த கொஞ்சம் பொறுப்பில்லாத அப்பா. அம்மா ஒரு நாள் அவரை எதிர்க்கிறாள். இந்த மாதிரி ஒரு கதை எழுத முடிந்தால்!

அடையாளம்: வேற்று ஜாதி மாப்பிளைத் தோழன். சுமாரான கதை.

அது ஒரு பருவம்: மொட்டைக் கடிதத்தால் கல்யாணம் நின்று போன அக்காவின் துயரம்.

கை குலுக்க நிறைய சந்தர்ப்பங்கள்: கல்யாணத்தில் குடத்திலிருந்து மோதிரம் எடுக்கும் சடங்கு. கணவனே மூன்று முறையும் வெல்கிறான். மனைவிக்கு வருத்தம். இந்த சாதாரண நிகழ்ச்சியை மிக அருமையாக எழுதி இருக்கிறார்.

வெளிச்சமற்றவை: ஒரு ஏழை உறவுக்காரி தான் சார்ந்திருக்கும் குடும்பத்தினரால் படும் காயங்கள். நல்ல எழுத்து.

ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்: சுஜாதா இதைத்தான் சிறுகதை வடிவம் சரியாக வரவில்லை, தேவைக்கு அதிகமான விவரங்கள் என்று சொல்கிறார். எனக்கு அந்த விவரங்கள்தான் இந்த கதையை எங்கோ கொண்டு செல்கின்றன என்று தோன்றுகிறது. இந்த மாதிரி கதையைத்தான் ஒரு இருபது வருஷம் முன்னால் என்னால் ரசித்திருக்க முடியாது. ஜெயமோகன் இந்தக் கதையை தனக்கு பிடித்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். இந்தச் சிறுகதை வெளிவந்தபோது இந்தக் கதையை படி படி என்று நண்பர்களுக்கெல்லாம் கடிதம் எழுதினாராம். எஸ். ராமகிருஷ்ணனும் இதை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் லிஸ்டில் குறிப்பிடுகிறார்.

கோடை: கடுமையான கோடை. எல்லாரும் வீட்டில் வெந்து சாகிறார்கள். ஒரு கூலிக்காரன் ஒரு மர நிழலில் கட்டில் போட்டு தூங்குகிறான். அவ்வளவுதான் கதை. இதிலும் ஒரு கதையைக் காண ஆழமான பார்வை வேண்டும்!

வெடி: கிணறு வெட்ட வெடி வைப்பவன் கொஞ்சம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டு தலைமறைவாக இருக்கிறான். சிறுவன் லக்ஷ்மி வெடி வைப்பதைப் பார்த்து எனக்கும் ஒன்று கொடு என்று கேட்கிறான். மனிதருக்கு அபாரமான பார்வை!

உறுத்தல்: மாமன் மச்சான் சண்டை. மச்சான் போடா பொட்டைப் பயலே என்று சொல்லிவிடுகிறான். மாமன் நாடகத்தில் பெண் வேடம் போட்டவர்!

சாயம்: ஹோலி பண்டிகையில் மாட்டிக் கொள்ளும் தமிழன்.

இவரது பலம் எந்த ஒரு அற்ப நிகழ்ச்சியிலும் ஒரு கதைக் கருவை காண்பது. மத்தியான நேரத்தில் மரத்தடியில் தூங்குவதில் எல்லாம் ஒரு கதையைப் பார்க்க முடிகிறது. Subtlety கை வந்த கலை.

பலவீனம் கதைகளில் சுவாரசியம் குறைவாக இருப்பது. எந்தக் கதையும் விறுவிறு என்று போவதில்லை, சரளமான நடை இல்லை. அசோகமித்ரன் பாணியில் வேண்டுமென்றே சுவாரசியத்தை குறைத்து எழுதுகிறாரோ என்று தோன்றுகிறது. அசோகமித்ரன் பாணியிலேயே வெளியிலிருந்து பார்க்கும் ஒரு பார்வையாளர் கமெண்டரி கொடுப்பதைப் போல பெரும்பாலான கதைகள் அமைந்திருக்கின்றன. அதுவும் ஒரு droning குரலில் அந்தக் கால ஆல் இந்திய ரேடியோ கமெண்டரி கேட்பது போல ஒரு feeling. உணர்ச்சி பொங்கும் சீன் என்று ஒன்று எந்தக் கதையிலும் கிடையாது. மேலும் sometimes he is too subtle. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் கதையில் உள்ள subtlety சுஜாதா மாதிரி ஒரு தேர்ந்த வாசகருக்கே பிடிபடுவது கஷ்டம் என்றால் என் போன்றவர்கள் என்னாவது? இவர் ஒரு acquired taste என்றுதான் சொல்ல வேண்டும்.

பாலகுமாரன், தி.ஜா., ஜெயமோகன் போன்றவர்களை படித்துவிட்டு இவரை ரசிப்பது கொஞ்சம் கஷ்டமே. ஆனால் முயற்சி செய்து படியுங்கள், படிக்க படிக்க, அவரது subtlety பிடிபட பிடிபட கதைகளும் பிடித்துவிடும்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
சுப்ரபாரதிமணியனின் வலைத்தளம்

சுஜாதாவின் முன்னுரை

subrabharathimanianசுப்ரபாரதிமணியன் என் மனதுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய சிறுகதைகள் வாழைப்பழம் போல அவசரமாக விழுங்கிவிட ஏற்றவை அல்ல. மாதுளம்பழம் போல மெதுவாக உரித்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சாப்பிட வேண்டும். மனதில் மெதுவாக அசை போடலாம். மங்கலான இரவில் மொட்டை மாடியில் பழைய தமிழ் சினிமா பாட்டுகளைக் கேட்கிற சுகம் அவரது எழுத்தில் உண்டு.

sujathaஅவரது புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது “அப்பா” என்ற சிறுகதைத் தொகுப்பு. மனிதருக்கு மரத்தடியில் தூங்குவது, லக்ஷ்மி வெடி வெடிப்பது எல்லாம் அருமையான கதையாக உருவாகிறது.

அவர் செகந்தராபாதில் வாழ்ந்த காலங்களில் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். அங்கே நான் சுஜாதா புத்தகங்களைத்தான் தேடிப் போனேன். ஆனால் என்னென்னவோ வாங்கினேன். அப்புறம் கண்காட்சி நடத்துகிறாரே, இவர் புத்தகம் ஒன்றாவது வாங்க வேண்டுமோ என்று கொஞ்சம் சலித்துக் கொண்டேதான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். அதுவும் சுஜாதா முன்னுரை எழுதி இருக்கிறாரே, மோசமாக இருக்காது என்று ஒரு கணிப்பு. ஆனால் முதல் ஒன்றிரண்டு கதைகளைப் படித்த பிறகு இந்த அழுவாச்சி கதைகளை எல்லாம் எவன் படிப்பான் என்று பரணில் தூக்கிப் போட்டுவிட்டேன். ஓரளவு வயதான பிறகு, முதிர்ச்சி வந்த பிறகுதான் இதெல்லாம் எவ்வளவு உன்னதமான எழுத்து என்று புரிந்தது. சுஜாதாவின் முன்னுரை புரியவும் செய்தது, எங்கெல்லாம் சுஜாதாவின் கருத்திலிருந்து என் கருத்துகள் வேறுபடுகின்றன என்பதும் தெரிந்தது. வாசகனாக எனக்கு ஓரளவு தேர்ச்சி வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன்.

சமீபத்தில் அவர் அந்த முன்னுரையின் ஒரு பகுதியை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தார். வசதிக்காக கீழே கொடுத்திருக்கிறேன்.


சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: (ஒரு பகுதி)
சுப்ரபாரதிமணியனின் “அப்பா” : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில்தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள் நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன, தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப் போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள்.

இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள். பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.

இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:

சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.

தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே. தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலை போவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.

இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது. நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம், சுஜாதா பக்கம்

சுப்ரபாரதிமணியனின் கடிதம்

பழைய காகிதங்களைக் கிளறிக் கொண்டிருந்தபோது கிடைத்த கடிதம். அவர் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு செகந்தராபாதில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் போய் சாயாவனம் வாங்கியபோது அவரது கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்தது. சுஜாதாவும் கல்கியும் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த காலம் அது. அவர் என் லெவலும் அதுதான் என்று தெரியாமல் எனக்கு நல்ல நல்ல புத்தகங்களை எல்லாம் சிபாரிசு செய்தார். நானும் அவரால் கொஞ்சம் நல்ல புத்தகங்கள் படித்தேன்.

1990-ஆம் வருஷம் வாக்கில் எனக்கு பம்பாய்க்கு மாற்றல் ஆனது. அப்போது அவரிடம் ஏன் எழுதுகிறீர்கள் என்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் எழுதிய பதிலில் அவருடைய creative தவிப்பும் தெரிகிறது, தான் காலம் கடந்து நிற்கும் எழுத்தாளன் என்ற பெருமிதமும் தெரிகிறது.

திரு RVS,

வணக்கம், நலம் குறித்த விருப்பம். தங்களை நன்கறிவேன். நல்ல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின் வாங்கிய தரத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்கிறது. பம்பாய் வாழ்க்கை எப்படி உள்ளது?

ஏன் எழுதுகிறேன் என்ற தங்கள் கேள்வி நியாயமானது.

வாழ்க்கை எனக்கு பலவிதக் கோணங்களைத் தருகிறது. என் சொந்த அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள் (இதர நண்பர்களின் அனுபவங்கள், பத்திரிகை செய்திகள் etc.) என்னை வாழ்க்கை பற்றி பல மதிப்பீடுகளைத் தருகிறது. இதனால் காட்சி ரூபமாகவும், படிமமாகவும் பல விஷயங்கள் என் மனதுள் உள்ளன. இந்த காட்சி ரூபங்களை, நினைவுகளை, குறிப்புகளை நான் சும்மா வைத்திருக்க முடிவதில்லை. எழுத்தாளன் என்ற ரீதியில் இவற்றை இலக்கிய ரீதியாக பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். பதிவை எழுத்தாக்குகிறேன். இந்தப் பதிவு கலை, இலக்கியம், கலாச்சார ரீதியில் பாதிப்புகளைக் கொண்டிருக்கலாம்.

என் சமகால வாழ்க்கையின் அனுபவங்களை எழுத்தில் படிக்கும் ஒருவன் என் வாழ்க்கையினூடே இந்தியனின் வாழ்க்கை அனுபவங்களை, கலாச்சார விஷயங்களை, காலத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்வான். 20 or 30 or 50 வருஷம் கழித்துப் படிக்கும் ஒரு இலக்கிய ஆசிரியன்/சரித்திர ஆசிரியன் என் இலக்கிய பதிவிலிருந்து பல விஷயங்களைக் காணுவான்.

“நான் எழுதத் தொடங்குவதற்கு முதல் காரணம் என்னை அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது. இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக் கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை” என்ற கார்க்கியின் வார்த்தைகள் என்னுடையதாகவும்.

6 மாத இடைவெளிக்குப் பின் சந்திப்போம். நலம் குறித்த விருப்பம்.

மணி மணியான கையெழுத்து. ஆனால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருக்கிறார், 20 வருஷம் கழித்து கண்ணை சுருக்கி சுருக்கி படிக்க வேண்டி இருக்கிறது. 🙂 என் கடிதத்தில் போதுமான அளவு தபால் தலை இல்லாததால் ஒரு ரூபாய் அபராதம் கட்டி வாங்கிக் கொண்டேன் என்று எழுதி இருந்தார். 🙂

பம்பாயிலிருந்து நான் மீண்டும் செகந்தராபாத் திரும்பவே இல்லை. சுப்ரபாரதிமணியனையும் அதற்குப் பிறகு சந்திக்கவே இல்லை. அருமையான மனிதர். என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து அவரோடு ஒரு காப்பியாவது சாப்பிட வேண்டும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
சுப்ரபாரதிமணியனும் புத்தகக் கண்காட்சியும்
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு – அப்பா

சுப்ரபாரதிமணியன் தேர்வுகள்

சுப்ரபாரதிமணியனின் ஒரு பதிவிலிருந்து கட் பேஸ்ட் செய்தது.

தமிழின் சில முக்கிய நாவல்கள்

  1. நாகம்மாள் – ஆர். சண்முகசுந்தரம்
  2. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்ஜெயகாந்தன்
  3. ஒரு நாள் – க.நா. சுப்ரமணியம்
  4. மோகமுள் – தி. ஜானகிராமன்
  5. ஒரு புளிய மரத்தின் கதைசுந்தர ராமசாமி
  6. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்
  7. நாளை மற்றுமொரு நாளே – ஜி. நாகராஜன்
  8. மானசரோவர் – அசோகமித்திரன்
  9. வெக்கைபூமணி
  10. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்
  11. துறைமுகம் – தோப்பில் முகமது மீரான்
  12. காகித மலர்கள் – ஆதவன்
  13. சாயாவனம் – சா. கந்தசாமி
  14. புயலில் ஒரு தோணி – ப. சிங்காரம்
  15. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
  16. தலைகீழ் விகிதங்கள்நாஞ்சில்நாடன்
  17. வாக்குமூலம் – நகுலன்
  18. மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்
  19. மண்ணகத்துப் பூந்துளிகள் – ராஜம் கிருஷ்ணன்
  20. செடல் – இமயம்
  21. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
  22. ரப்பர்ஜெயமோகன்
  23. மூன்று விரல் – இரா. முருகன்
  24. அலெக்சாண்டரும், ஒரு கோப்பைத் தேனீரும் – எம்.ஜி. சுரேஷ்
  25. மணியபேரா – சி.ஆர். ரவீந்திரன்
  26. நல்ல நிலம் – பாவை சந்திரன்
  27. கங்கணம்பெருமாள் முருகன்
  28. ரத்தம் ஒரே நிறம் – சுஜாதா
  29. நீர்த்துளி – சுப்ரபாரதிமணியன்

கடந்த ஆண்டின் (2011) சில சிறந்த நாவல்கள்

  1. உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ. முத்துலிங்கம்
  2. கொற்கை – ஜோ டி குரூஸ்
  3. ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்
  4. கால்கள் – அபிலாஷ்
  5. நிழலின் தனிமை – தேவிபாரதி
  6. கண்ணகி – தமிழ்ச்செல்வி
  7. வல்லினமே மெல்லினமே.. – வாசந்தி
  8. மறுபக்கம் – பொன்னீலன்
  9. படுகளம் – ப.க. பொன்னுசாமி
  10. குவியம் – ஜெயந்தி சங்கர் (சிங்கப்பூர்)
  11. விடியல் – அ. ரங்கசாமி (மலேசியா)
  12. சூதாட்டம் ஆடும் காலம் – ரெ.கார்த்திகேசு (மலேசியா)

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தக சிபாரிசுகள்சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: சுப்ரபாரதிமணியன் தளம்

சுப்ரபாரதிமணியன் தளத்தில் என் பதிவு

இன்று எதேச்சையாக எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் தளம் பக்கம் போனேன். அவர் என்னுடைய ஒரு பதிவை அங்கே வெளியிட்டிருப்பதைக் கண்டு அப்டியே ஷாக்காயிட்டேன். ரொம்ப நாளைக்கு முன்னால் அவரது அப்பா என்று சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதி இருந்தேன். அதை ஒரு பொருட்டாக மதித்து அவர் மீள்பதித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

எனக்கு அப்பா சிறுகதைத் தொகுப்பு பிரமாதம். ஆனால் அதைப் படிப்பதற்கான மெச்சுரிடி 25 வருஷத்துக்கு முன்னால் அதை வாங்கியபோது எனக்கு இல்லை. புத்தகத்தை விடுங்கள், அதற்கு சுஜாதா எழுதிய முன்னுரை கூட அப்போது சரியாகப் புரியவில்லை. ஒரு பத்து பதினைந்து வருஷத்துக்கு முன்தான் அதில் உள்ள subtle ஆன சில கதைகள் புரிந்தன.

சுப்ரபாரதிமணியன் ஒரு acquired taste என்பதை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன். அவரது கதைகளில் யதார்த்தம் அதிகம், சுவாரசியம் குறைவு. அதை அவர் வேண்டுமென்றேதான் தன் பாணியாக வைத்திருக்கிறார். கவனமாகப் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையா என்று தோன்றிவிடலாம். எந்த அற்ப விஷயத்திலும் ஒரு கதையைக் காண்பதுதான் அவரது ஸ்பெஷாலிடி – வெயில் காலத்தில் மரத்தடியில் ஒருவன் தூங்குகிறான் என்பதெல்லாம் அவருக்கு கதைக்கரு. அவரது சாயத்திரை எடுத்து வைத்திருக்கிறேன், இந்த வருஷம் முடிவதற்குள்ளாவது படிக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்
தொடர்புடைய சுட்டி: என் ஒரிஜினல் பதிவு

சுப்ரபாரதிமணியன் – புத்தகக் கண்காட்சி

சுப்ரபாரதிமணியன் செகந்தராபாதில் நடத்தி வந்த புத்தகக் கண்காட்சிகளைப் பற்றி சமீபத்தில் இப்படி எழுதி இருந்தேன்.

தமிழ், தமிழ் வாசிப்பு ஆகியவற்றுக்கு உண்மையாக உழைத்தவர். அவருக்கு ஒரு கை கொடுத்திருக்கலாம். புத்தகக் கண்காட்சியில் உட்கார்ந்து பில்லாவது போட்டிருக்கலாம். நான் ஒன்றும் பெரிதாக வெட்டி முறிக்கவில்லை. என் துரதிருஷ்டம், அந்த வயதில் தோன்றவில்லை. ஒரு விஷயத்தை ஆர்கனைஸ் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அந்தக் காலத்தில் தெரியவே இல்லை.

அவருடைய இந்த கட்டுரை தற்செயலாக கண்ணில் பட்டது. உதவிக்கு யாரும் இல்லை என்று அவரும் அங்கலாய்த்ததுக் கொண்டிருக்கிறார். இன்னும் வருத்தமாக இருக்கிறது. நேரம் நிறைய இருக்கும்போது இதெல்லாம் தோன்றவில்லை. தோன்றும்போது நேரமே இருப்பதில்லை!

ஓ செகந்தராபாத்! என்ற புத்தகத்திலிருந்து இது ஒரு excerpt என்று நினைக்கிறேன். யாராவது படித்திருக்கிறீர்களா? படித்திருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு – அப்பா