பல வருஷங்களாக இந்த சிறுகதையைப் பற்றி விமர்சனங்களைக் கேட்டிருக்கிறேன். சுராவின் பிராமண ஜாதி மேட்டிமைத்தனம் வெளிப்படும் சிறுகதை என்பார்கள். உதாரணத்துக்கு இங்கே ஒரு விமர்சனம்.
சுராவின் எழுத்தில் பிராமண ஜாதி மேட்டிமைத்தனம் வெளிப்படுகிறது என்றால் எனக்கு ஆச்சரியம்தான். நானும் அவரது நாற்பது ஐம்பது சிறுகதைகள், இரண்டு நாவல்கள், நினைவோடை அபுனைவுகள், கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வரியில் கூட இது வரை நான் கண்டதில்லை. என்றாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
ஜெயமோகன் சமீபத்தில் சுட்டி கொடுத்திருந்தார். கட்டுரையைக் கூட படிக்கவில்லை, நேராக சிறுகதைக்குப் போய்விட்டேன். படித்த பிறகு முதலில் தோன்றிய எண்ணம் – “இத்தனை தற்குறிகளாடா நீங்கள் எல்லாம்!”. உண்மையில் இந்தச் சிறுகதையில் ஜாதி மேட்டிமைத்தனத்தை கண்டுபிடிக்க அபாரத் திறமை வேண்டும்.
சுருக்கமாக கதை – தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த தாயம்மா கிறிஸ்துவப் பாதிரியாரின் உதவியால் கிராமத்திலேயே நன்றாகப் படிக்கிறாள். கிராமத்தில் பள்ளி கட்டப்படும்போது தாழ்ந்த ஜாதி என்ற உறுத்தல்கள் இருந்தாலும் அவளை தலைமை ஆசிரியை ஆக்குகிறார்கள். மெத்தப் படித்தவளுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை. நாலாம் வகுப்பு படிக்கும் சிறுவனுடன் உறவு கொண்டதாக பழி – அது உண்மையா பொய்யா என்பது உங்கள் வாசிப்பைப் பொறுத்தது. அடி வாங்கி ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறாள். இறுதிக் காலத்தில் மீண்டும் அங்கே வந்து அனாதையாக சாகிறாள்.
விமர்சனம் இதுதான் – சுரா சொல்ல வருவது எத்தனை படித்தாலும் தலித் பெண் “இழிவானவள்தான்”. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் என்றுதான் சுரா சொல்லாமல் சொல்கிறார்.
சிறுகதையில் வெளிப்படுவதோ அடக்குமுறைக்கு எதிரான உணர்வு. தாயம்மா அடிபடும்போதும் சரி, சாவதற்கு ஒரு இடம் கொடு என்று கெஞ்சும்போதும் சரி, பகலில் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டால் இரவில் கிணற்றில் தண்ணீர் இறைத்துக் குளிக்கும்போதும் சரி, அய்யோ என்று மனம் பதைக்காமல் இருக்க முடியாது. ஜாதீய மேட்டிமைத்தனத்துக்கு எதிரான எழுத்து என்பதை விட ஆண் என்ற மேட்டிமைத்தனத்துக்கு எதிர்ப்பு என்றுதான் எனக்குப் படுகிறது.
சிறுகதையை மேலோட்டமாகப் படித்தால் கூட கதையை எழுதுபவரின் sympathies யாருடன் இருக்கிறது என்று புரியாமல் இருக்க முடியாது. தாயம்மா அடிபட்ட காட்சியை தங்கக்கண் விவரிக்கும்போது கேட்பவர்களின் reactions –
“பாவிகெ கைகளெ முறிக்க ஆளில்லையா?”
“படைச்சவனே, நீ பாத்துக்கிட்டிருந்தையா?”
தங்கக்கண்ணின் குரல் தழுதழுக்கிறது.
இந்த வரிகளைப் படித்த பிறகுமா ஜாதீய மேட்டிமைத்தனம் என்றெல்லாம் உளறுகிறார்கள்? மண்டையில் இருப்பது மூளையா புண்ணாக்கா?
எனக்கும் சிறுகதை மேல் விமர்சனம் உண்டு. கலைவடிவம் கூடவில்லை என்றே கருதுகிறேன். இதை விட சிறந்த சிறுகதைகளை சுராவே எழுதி இருக்கிறார். அதுவும் தங்கக்கண்ணுக்கு சம்பளம் 40 ரூபாய், காலம் என்று சில இடங்களில் சொதப்பிவிட்டார்.
ஆனால் பல அருமையான இடங்களும் உண்டு. தாயம்மா வயதுக்கு வந்ததும் பாதிரியாரின் வீட்டுக்குப் போய் படிப்பது நின்றுவிடுகிறது. பாதிரியார் தாயம்மாவின் வீட்டுக்கு வருகிறார்.
“தாயம்மா மிகவும் கெட்டிக்காரி. தினமும் இங்கு வந்து தென்னை மரத்தடியில் உட்கார்ந்து பாடம் சொல்லித் தருகிறேன்” என்கிறார் பாதிரியார். பெண்கள் அழத் தொடங்கிவிட்டார்கள். “அய்யா, நீங்க போட்டிருக்கிற செருப்பாலே எங்க கன்னத்திலே அடியுங்க அய்யா. இப்பமே புள்ளையைக் கூட்டிக்கிட்டுப் போங்க. ஆசை தீர மட்டும் சொல்லிக்கொடுங்க” என்று எல்லாப் பெண்களும் சேர்ந்து
கத்தியிருக்கிறார்கள்.
.
கவித்துவமான இடம். இதற்கு சமமாக வெண்முரசில் திரௌபதி துகிலுரியப்படும்போது கௌரவர் வீட்டுப் பெண்கள் அனைவரும் தங்கள் மேலாடைகளை திரௌபதி மேல் வீசும் இடத்தைத்தான் சொல்வேன்.
ஊரிலேயே அதிகம் படித்த தாயம்மாவை புதிதாகத் திறக்கப்படும் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாகப் போடலாமா என்று கேள்வி எழுகிறது.
இப்படியும் ஒரு யோசனையா? போடலாமாவா? போட வேண்டும். அவளுக்கிருக்கும் யோக்கியதை உங்களில் எந்த நாய்க்கு இருக்கிறது? தாழ்ந்த ஜாதிப்பிள்ளை. தாழ்ந்த ஜாதிப்பிள்ளைதான். அதற்காக? அந்தப் பிள்ளையைத் தலைமையாசிரியையாகப் போடவில்லையென்றால் நான் கமிட்டியிலிருந்து வெளியே போகிறேன் என்கிறார் மோகன்தாஸ். அவர் சுதந்திரத் தியாகி. மூன்று வருடம் கடுங்காவலில் வாடியவர். அவருக்கு ரத்தம் கொதிக்கிறது.
ஜெயமோகனின் கட்டுரையை அப்புறமாகப் படித்தேன். எனக்கே புரிகிறது என்றால் அவர் வேறென்ன சொல்லப் போகிறார்? கூடுதலாக இது எத்தனை தூரம் உண்மை என்ற கேள்வியை எழுப்புகிறார். தாயம்மாளின் கதையை விவரிக்கும் தங்கக்கண் கதை அளக்கக் கூடியவன் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். அவரது கண்களில் சுரா வரலாறு எப்படி உருவாகிறது என்ற கேள்வியை எழுப்புகிறார். எனக்கோ இது உண்மையா பொய்யா என்ற கேள்வியே அர்த்தமற்றதாக இருக்கிறது.
ஆனால் என் வாசிப்பில் சிறுவனுடன் உறவு என்பதும் பொய்யாகத்தான் தெரிகிறது என்பதையும் பதிவு செய்கிறேன். சிறுவன் கன்னம் வீங்கி இருக்கிறது என்ற குறிப்பிலிருந்து அவனுக்கு அடி விழுந்தது என்றே நான் புரிந்து கொள்கிறேன். உறவு கொண்டால் கன்னம் ஏன் வீங்கப் போகிறது?
சுரா இந்த சிறுகதையை 2005-இல் எழுதினாராம். எதிர்வினைகளால் மிகவும் நொந்துபோனாராம். இதெல்லாம் ரொம்பக் கொடுமை. சுரா மாதிரி ஒரு புத்திசாலி பிராமண ஜாதி மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்த எண்ணி இருந்தால் அது இன்னும் subtle ஆக வெளிப்பட்டிருக்கும்!
இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், காலம், சம்பளம் போன்றவற்றில் சொதப்பாமல் இருந்திருந்தால், இது சுராவின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இருந்திருக்கக் கூடும்.
தொகுக்கப்பட்ட பக்கம்: சுரா பக்கம்