டம்பாச்சாரி விலாசம்

டம்பாச்சாரி விலாசம் 1847-இல் எழுதப்பட்ட ரொம்பப் பழைய நாடகம். (தமிழ் விக்கி தளம் 1867 என்கிறது, ஆனால் என் குறிப்புகளின்படி 1847தான், எங்கே பார்த்தேன் என்பதுதான் நினைவில்லை) பாய்ஸ் கம்பெனி பாணி நாடகங்களில் இதுவே முதல் நாடகம் என்று எங்கோ படித்த நினைவு. தகவல் அல்லது நினைவு தவறாக இருக்க வாய்ப்புண்டு. பம்மல் சம்பந்த முதலியார் போன்ற முன்னோடியே இந்த நாடகத்தை முன்னோடி நாடகம் என்று குறிப்பிடுகிறார். ரத்தக்கண்ணீர் நாடகம்/திரைப்படத்தின் மூல வடிவம் இதுவே என்றும் சொல்லப்படுகிறது.

எனக்கு பழைய நாடகங்களில் ஈர்ப்பு உண்டு. அதுவும் எத்தனை அரதப்பழசோ அத்தனை தூரம் ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது 🙂 டம்பாச்சாரி விலாசம் திரைப்படமாக மறு ஆக்கம் செய்யப்பட்டதும் ஈர்ப்பை அதிகரிக்கிறது. (ஆனால் ரத்தக்கண்ணீர் திரைப்படமே எனக்கு பெரிதாக சுவாரசியப்படவில்லை.) ஒரே பிரச்சினை, ஆர்க்கைவ் தளத்தில் கிடைக்கும் மின்பிரதியின் தரம் கொஞ்சம் மோசம். படிப்பது கஷ்டம். தம் கட்டிப் படித்தாலோ அவ்வப்போது கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது.

டம்பாச்சாரி விலாசம் அந்தக் காலத்திற்கு பெரும் புரட்சியாக இருந்திருக்க வேண்டும். ராமன், கிருஷ்ணன் என்று தெரிந்த கதை இல்லை; ராஜா ராணி கிடையாது; அன்றைய சமூகம்தான் பின்புலம் (மிகைப்படுத்தப்பட்ட பின்புலமாக இருக்கலாம்.)

நாடகத்தின் நடை பெரிய மாற்றமாக இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன். பாட்டுகளும் வசனங்களும் கலந்து வருகின்றன. பல முறை ஒரு பாடலை விளக்கியே வசனம் வருகிறது. அன்றைய பேச்சு மொழி நிறையவே பயன்படுத்தப்படுகிறது. பல மொழி வார்த்தைகள் இயல்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. தெலுகு வேலைக்காரன் – பெத்தபோயி – என்றால் அவன் தெலுங்கில்தான் பேசுகிறான். சோக்ரா உருதுவில். ஆங்கிலம் பீட்டர் விடுவது போல அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கிறது. நாடகத்தின் மொழியே தமிழ் நாடகத் துறையில் முன்னடியாக இருந்திருக்க வேண்டும். முதலியாரின் வார்த்தைகளிலேயே (எழுத்துப் பிழைகளைத் திருத்தி இருக்கிறேன்.)

இந்நூலில் தெலுங்கு, பார்சி, இங்கிலீஷ் முதலாகிய தேசிய மொழிகளும் வாராங்க போராங்க வாராங்கோ போராங்கோ அவங்கோ இவங்கோ முதலாகிய கிராமிய மொழிகளும் ஸமஸ்கிருத நாடகங்கள் போலவும் தமிழ்க் குறவஞ்சி முதலானவைக்கள் போலவும் வேண்டிய இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

டம்பாச்சாரியும் அவன் நண்பர்களும் பீட்டர் விடுவதற்கு ஒரே ஒரு உதாரணம் கீழே.

வெயிட்டு செய் சட்டுவாஜீ
கெயிட்டுபோற் பறந்தே ஓடி
ஃபெயிட்டனைப் போட்டுக் கொண்டென்
ரயிட்டரை வரச் சொல்வாயே

ஆங்கிலத்தில் – “Wait, my assistant! Fly like a kite and ask my clerk to come back in the pheaton!”

கதைப் பின்னல் இன்று காலாவதியாகிவிட்ட ஒன்றுதான். என்ன நடக்கப் போகிறது என்பது மிக வெளிப்படை, கதையின் போக்கு வெகு சுலபமாகப் புரிந்திருக்கும். உதாரணமாக வில்லன் பேர்கள் எல்லாம் குடிகேடன், ஆயிரப் புளுகன் என்றுதான் இருக்கும். அவர்கள் அறிமுகக் காட்சியில் தான் எத்தனை குடும்பத்தைக் கெடுத்தேன், தான் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வேன் எனறு விளக்கி பாட்டு பாடுவார்க்ள். டம்பாச்சாரியும் அவர்கள் வில்லத்தனத்தை மெச்சி எதிர்பாட்டு பாடுவார். எதற்கு குடிகேடனை தன் நண்பராகக் கொள்கிறார் என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. பாத்திரப் படைப்புகளில் எந்த நுணுக்கமும் கிடையாது. ஆனால் டம்பாச்சாரி போன்ற ஒரு ஜமீந்தார், அவனை ஏமாற்றி வாழும் ஒட்டுண்ணி வில்லன்கள், தாசி, தாசியின் அம்மா, தாசிகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் “மாமா”, வைத்தியர், சில பல வேலைக்காரர்கள், நேர்மையான பணியாட்கள், உத்தம மனைவி என்று பல சமூகத் தட்டுகளில் பாத்திரங்களை படைத்ததே பெரும் புரட்சியாக இருக்க வேண்டும். (மிருச்சகடிகம், மத்தவிலாசப் பிரகசனம் போன்ற விதிவிலக்குகளில் இப்படிப்பட்ட பாத்திரங்கள் இருக்கலாம்.)

ஒரு வரியில் சொன்னால் – உண்மையான முன்னோடி நாடகம்.

நாடகத்தை எழுதியவர் காசி விஸ்வநாத முதலியார். சைதாபுரத்துக்காரர், அதாவது இன்றைய சைதாப்பேட்டைக்காரர். 1806இல் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். முதலில் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகவும் பிறகு மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறார். டம்பாச்சாரி விலாசம் தவிர, தாசில்தார் விலாசம், பிரம்ம சமாஜ விலாசம் ஆகிய நாடகங்களை எழுதி இருக்கிறார்.

1880க்குப் பிறகு புகழ் பெற்று விளங்கிய பாலாமணி அம்மாள் குழுவினர் இந்த நடிகத்தை அடிக்கடி நடத்துவார்களாம். வசூல் குறையும்போதெல்லாம் இந்த நாடகத்தை போட்டுவிடுவார்களாம். தாசி மதனசுந்தரியாக பாலாமணி அம்மாளும் டம்பாச்சாரி பாத்திரத்தில் ராஜாம்பாள்/கோகிலாம்பாள்/வடிவாம்பாள் ஆகியோரும் நடித்தனர், பிற்காலத்தில் சி.எஸ். சாமண்ணா ஐயர் ஒரே நாளில் பல பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ் பெற்றார் என்றும் மூத்த நடிகர் சட்டாம்பிள்ளை வெங்கடராமன் தகவல் தருகிறார். (அவர் இன்னொரு மூத்த நடிகரான சாரங்கபாணியிடம் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம்.)

எளிய கதைதான்; டம்பாச்சாரி வீண் டம்பத்துக்காக பரம்பரையாக வந்த பணத்தை கோட்டை விடுகிறான். ஒட்டுண்ணி நண்பர்கள், தாசி மதனசுந்தரி அவனை சுத்தமாக மொட்டை அடித்துவிடுகிறார்கள். ஆனாலும் கடனை வாங்கி இவர்களுக்காக செலவழித்துக் கொண்டே இருக்கிறான். மனைவி மக்களைத் துரத்திவிடுகிறான். கடனைத் திருப்ப முடியாமல் சிறை. தப்பித்து வந்தால் தாசியும் நண்பர் என்று நினைத்தவர்களும் அவஐ அவமதிக்கிறார்கள், மனம் திருந்துகிறான். அப்பர் சுவாமிகள் உபதேசம் செய்கிறார். அவன் அப்பா அவனுக்கு தான் சேர்த்து வைத்ததில் கொஞ்சம்தான் கண்ணில் காட்டி இருக்கிறார், அதனால் முன் போலவே சொகுசு வாழ்க்கை, சுபம்! (ரத்தக் கண்ணீர் போல நோய், பிச்சை எடுக்கும் நிலை எல்லாம் வரவில்லை)

நாடகத்தில் அங்கங்கே ஒரு வரியைப் படித்ததும் நிறுத்திவிடுவேன். அதிலிருந்து அன்றைய சமூகச் சூழ்நிலை பற்றி கீற்று போல ஒரு குறுக்குவெட்டு சித்திரம் கிடைக்கிறது.

முதல் பக்கத்திலேயே எனக்கு களைகட்டிவிட்டது. எழுதியவர் முதலியார், மெய்ப்பு பார்த்து பதித்தவர் ராவுத்தர். ஜாதி ஆசாரம் மிகுந்த காலத்தில் கூட இப்படி எல்லாம் தொழில் முறை உறவு இருந்திருக்கிறது.

வடமொழி, தமிழ், தெலுகு ஆகியவற்றில் பெரும் புலவர்கள் என்று முதல் பக்கத்தில் ஒரு பட்டியல் போடுகிறார், அதாவது அன்று இந்த மூன்று மொழிகளுமே படித்தவர்களுக்கு முக்கியமாக இருந்திருக்க வேண்டும்.

கை வறண்ட பிறகு கடன் வாங்கப் பகல் வேஷம் போட்டு டிஸ்கவுண்டு செய்வதால் டிஸ்கவுண்டு மேஸ்டராகி கோர்ட்டு வழக்குகளாடி இன்ஸால்வெண்டு ஆக்டில் வருவதால் இன்ஸால்வேண்டு மேஸ்டராகி பின்பு பிழைக்க வகை தெரியாதவர்களாததால் ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, குடிகேடன், இவர்களில் ஒருவாராகி…

இந்த வரியில் அப்படியே நின்றுவிட்டேன். அது என்ன டிஸ்கவுண்டு மேஸ்டர், தலைப்பாகை மாற்றி? (தலைப்பாகை மாற்றிக்கு பின்னால் விளக்கம் வருகிறது, அவன் தொப்பியை கழற்றி இவனுக்கும் இவன் தொப்பியைக் கழற்றி அவனுக்கும் போடுபவனாம், குல்லா போடுபவன் என்று பிற்காலத்தில் மாறி இருக்க வேண்டும்) திவால் ஆவது 1850களிலேயே சாதாரண நிகழ்ச்சியா? அப்படி என்றால் ஆங்கிலேய ஆட்சி, சட்டம், நீதிமன்றங்கள் எல்லாம் அப்போதே எத்தனை வலுவாக நிறுவப்பட்டிருக்க வேண்டும்? நீதிமன்றங்களில் முதலியார் நிறையப் பார்த்திருப்பார் என்று யூகிக்கிறேன்.

அப்புறம் நிறைய disclaimer – அதில் ஒன்று.

சற்பிராமண… அந்தணர்களை நான் தூஷிக்கவில்லை. பிராமண ஆசாரங்களிலிருந்து வழுவி… தாழ்ந்த குலத்தாருக்கு ஸ்தீரிகளை பிணைத்து வைக்கிற அப்படிப்பட்ட மகா நீசமான சீவனம் செய்கிறவர்களை மாத்திரமே எடுத்துச் சொல்ல வந்தது

அப்படி என்றால் இதையே பிழைப்பாக சில பல பிராமணர்களாவது கொண்டிருக்க வேண்டும்! இந்த நாடகத்தின் கும்பகோணம் ஐயரின் மறுவடிவம்தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி!

சில வர்த்தகர்கள்… குஜராத்திப் பேட்டையில் நடப்பது போல அதிக வட்டி முதலாகியா லாபத்தை இச்சித்து

குஜராத்திப் பேட்டைதான் இன்றைய சௌகார்பேட்டையா? 200 வருஷங்களுக்கு முன்பே வட்டி வியாபாரம் செய்யும் குஜராத்திகள் குடியிருப்பு சென்னையில் இருந்ததா?

வினோதரசமஞ்சரி புத்தகத்தை எழுதிய அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார், நன்னூலைப் பதிப்பித்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் உட்பட்ட 20-30 பேர் சாற்றுக்கவிகள் (வாழ்த்துக்கள்) கொடுத்திருக்கிறார்கள். முதலியார் அன்று சென்னை பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் பயிற்றுவித்த தமிழாசிரியர்கள் பலரிடமிருந்தும் சாற்றுக்கவிகளை பெற்றிருக்கிறார். வேலூர் சுப்பராய முதலியார் மகாபாரதத்தை கீர்த்தனையாகப் பாடி இருக்கிறாராம், யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (லலிதாராமிடம் விசாரித்தேன், அவரே கேள்விப்பட்டதில்லை. தேடிப் பார்க்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.)

விசாகப் பெருமாளையர்தான் அப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் தலைமை தமிழாசிரியராம். முதலியாரின் வார்த்தைகளிலேயே –

மகா-ஸ்ரீ-ஸ்ரீ கம்பெனியாரால் ஏற்படுத்தப்பட்ட யூனிவர்சிடி எனும் சென்னை சகலசாஸ்திரசாலை தமிழ்த் தலைமை புலமை நடாத்தும் இயற்றமிழாசிரியராகிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர்

கம்பெனி என்று இங்கே சொல்லி இருப்பது இந்த நாடகம் கம்பெனி நாட்களில், அதாவது 1857-க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற என் குறிப்புக்கு வலு சேர்க்கிறது. மேலும் கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன் என்று ஒரு இடத்தில் வருகிறது. எல்ஃபின்ஸ்டோன் 1842 வரைதான் சென்னை கவர்னராக இருந்தவர்.

சென்னை கவர்மெண்டு நார்மல் ஸ்கூல் தமிழ்த் தலைமைப் புலவர் கோமளபுரம் இராசகோபாலப் பிள்ளை வாழ்த்துப்பா கொடுத்திருக்கிறார், அது என்ன நார்மல் ஸ்கூல், இன்று என்ன பெயர் என்று தெரியவில்லை. பச்சையப்பா கல்லூரி அப்போதே இருந்தது என்று தெரிகிறது, பச்சையப்ப முதலியாரது சென்னைப் பலகலைச்சாலையில் தமிழ்த்தலைமை புலமை நடாத்தும் வித்துவான் சுப்பராயப் பிள்ளையும் கொடுத்திருக்கிறார். அதே பல்கலையில் தமிழ்ப் புலமை நடாத்தும் கூவம் ராஜா திரிபுராந்தக முதலியாரும், கூவம் சுப்பராய முதலியாரும் கொடுத்திருக்கிறார்கள். கூவம் என்று அப்போது ஒரு ஊர் இருந்திருக்கிறது! பல்கலை என்ற வார்த்தை அப்போதே புழக்கத்தில் இருந்திருக்கிறது.

சாற்றுக்கவிகளில் பாதி எனக்கு புரியவில்லை, கோனார் நோட்ஸ் தேவைப்படுகிறது. அதுவும் செட்டியார் சிலேடையில் புகுந்து விளையாடுகிறார். அவர் “கற்பனை” என்ற வார்த்தையை நான்கு விதத்தில் பயன்படுத்துகிறார், எனக்கு மூன்றுதான் புரிந்தது. (கல் பனை மரம் போன்ற துதிக்கை உள்ள பிள்ளையார், கற்பு நெறி, கற்பனை..)

அங்குசபாசனுக்கும் அருள் குமரேசனுக்கும் மங்களம் என்று தொடங்குபவர் மகுட விக்டோரியா, மஹா பார்லிமெண்டார், அகில போர்ட் ஆஃப் கன்ட்ரோல், ஹானரபில் கம்பெனி, தகவு மைசூர் கர்த்தர் (மைசூர் மஹாராஜா), தஞ்சாவூர்க் கொற்றவர், புகழு நவாப், புனித கவர்னர், சுப்ரீம் கோர்ட்டார், சதர் கோர்ட்டார் என்று எல்லாருக்கும் மங்களத்தை அடுக்கிக் கொண்டே போகிறார்.

அங்கங்கே அன்றைய பெரிய மனிதர்கள் – கவர்னர் லார்ட் எல்ஃபின்ஸ்டோன், கவுன்சில் மெம்பர் (காஜுலு) லக்ஷ்மிநரசு, செல்வந்தர்கள் பச்சையப்ப முதலியார், மணலி சின்னையா பிள்ளை, கோமள சீனிவாசப் பிள்ளை, திருத்தணிகை விசாகப் பெருமாளையர், (மழவை) மகாலிங்க ஐயர் – ஆகியோரின் பேரை நுழைத்துவிடுகிறார். சில இடங்களில் அவர் பெயரையும் நுழைத்துக் கொள்கிறார். வீட்டில் திருடியவன் அதிகெட்டிக்காரன் என்று ஒரு இடத்தில் சொல்லிவிட்டு அன்றைய பெயர் பெற்ற திருடர்களின் பட்டியல் ஒன்று தருகிறார் – தண்டையார்பேட்டை குமரன், ஏரிவாய் தாண்டவராயன், தலைவிரிச்சான் ரத்னசபாபதி, தீவட்டிச் செல்லன் அப்புக்காத்தான்….

டம்பாச்சாரி அறிமுகக் காட்சியில் காதில் பச்சை முருகு காந்தி வீசும் சீமை ரவைக் கடுக்கன்; திருத்தமாக வாரப்பட்ட கன்னக் கருத்த ஜுலுப்பா (தலைமுடி என்று புரிகிறது, அனேகமாக உருது வார்த்தையான ஜுல்ஃப் என்று நினைக்கிறேன்), காதுக்கு கீழே கிருதா, முறுக்கிய மீசை, செஞ்சாய வேஷ்டி, கொக்கி மாட்டிய இஸ்திரி ஜாக்கெட்டு, சரிகை ஷால், நவாத்தின மோதிரம், கைக்குள் டப்பி (பொடி டப்பியா?), அக்கிள் (கைக்)குட்டை, வாட்ச், நெக்கில் (கழுத்தில்) செயின், ஜோடுகள், புனுகு ஜவ்வாது அணிந்து வருகிறான். இதுதான் அன்றைய ஸ்டைல் போலிருக்கிறது.

அவனிடம் சிப்பந்திகளாக சட்டுவாஜி (அப்படி என்றால்?), சோக்ரா, தவசுப்பிள்ளை, உக்காபர்தார் (ஹூக்காக்களை தயார் செய்பவர்), பெத்தபோயி (வீட்டு சாமான்களை சுத்தம் செய்பவர்), ரயிட்டர் (ரைட்டர், இவர்தான் சம்பளப் பட்டுவாடா செய்கிறவர் போலிருக்கிறது), தாருகா (சிப்பந்திகளின் மேலாளர் என்று நினைக்கிறேன்), கணக்கப் பிள்ளை, கோச்சுமான், வாட்ச்மேக்கர் (கடிகாரங்களுக்கு சாவி கொடுக்கும் பணியைச் செய்பவர்), பாரா சவுக் சேவகர் (வாயிற்காவல்), மஸால்ஜீக்கள் (வாசலில் லாந்தர் ஏற்றுபவர்கள்), பியூன்கள் என்று ஒரு பட்டாளமே வேலை செய்கிறது. இதில் உக்காபர்தார் சர்வசாதாரணமாக பான்சோத் (பெஹன்சோத், தமிழில் வக்காளவோழி) என்று வ்சனம் பேசுகிறார்! சிப்பந்திகள் திருடுகிறார்கள், ஆனால் எஜமானர் பொருட்படுத்துவதில்லை. டம்பாச்சாரி கணக்கரிடம் கைமாற்று வேண்டி இருந்தால் குஜராத்தி பேட்டையில் வாங்காதே, அவர்கள் ஒரே நாளில் எல்லா சொத்தையும் ஜப்தி செய்து அபகரித்துவிடுவார்கள் என்கிறான்.

முதல் காட்சியில் டம்பாச்சாரியின் நண்பர்கள் – குடிகேடன், ஜகஜாலப் புரட்டன், ஆயிரப் புளுகன், தலைப்பாகை மாற்றி, இன்சால்வெண்டு மேஸ்டர், டிஸ்கவுண்டு மேஸ்டர், பகல் வேஷக்காரன், கவிராஜசிங்கம் கதிரைவேல் பண்டிதர் – விருந்துண்ண வருகிறார்கள். டம்பாச்சாரியின் சிற்றப்பா. மகா கஞ்சனான பரமலோபன் அவர்களுடன் சண்டை போடுகிறான். ஆனால் டம்பாச்சாரி சுகங்களை அனுபவிக்க மட்டும் ஒரு சங்கமே அமைக்கத் திட்டமிடுகிறான். அவனை மயக்க வேண்டும் என்று மதனசுந்தரி என்ற தாசி திட்டம் போடுகிறாள். கும்பகோணம் ஐயர் தூது போகிறார். மதனசுந்தரிக்கு மிட்டா, ஜமீன், கம்பெனி பத்திரங்கள் எல்லாவற்றையும் விற்று, முன்னோர் கட்டிய சத்திரங்களை இடித்து, அதிலிருந்து உத்தரங்கள் எல்லாவற்றையும் எடுத்து மெத்தை வீடு கட்டித் தருகிறான். கவர்ச்சிக் காட்சிக்காக நீ நிர்வாணமாக நின்றுகொண்டு எனக்கு எண்ணெய் தேய்த்துவிடு என்கிறான். (பிற்காலத்தில் பாலாமணி அம்மாள் என்ற அன்றைய நட்சத்திர நாடக நடிகை தாராசசாங்கம் என்ற நாடகத்தில் பார்ப்பவர்களுக்கு உடையே இல்லாத மாதிரி தோன்றும் மெல்லிய உடை அணிந்து எண்ணெய் தேய்த்துவிடும் காட்சி படுபிரபலம் என்று எம்.ஆர். ராதா எங்கோ எழுதி இருப்பதாக நினைவு.)

பூரி, ரொட்டி, ஆப்பம், வெண்ணெய், முட்டை, டீ ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள். டீ என்றால் தேநீர்தானா என்று தெரியவில்லை! ரொட்டியை வெட்டு என்பதிலிருந்து அது இன்றைய unsliced bread ஆக இருக்க வேண்டும் என்று யூகிக்கிறேன்.

நண்பர்களில் ஆயிரப் புளுகன் என்ற பாத்திரம் பேசும் வசனம் –

அகப்பட்டவர்களை ஏமாற்றி அவர்களுக்கு ஆயிரம் பொய்களைச் சொல்லி ஜகஜல்லி அடித்து கையிலிருப்பதைத் தட்டிக் கொண்டு சடகோபம் வைத்து வருகிறேன்

ஏமாற்றுவதற்கு சடகோபம் வைப்பது என்று சொல்வதை இது வரை பார்த்ததில்லை. ஜல்லி அடிப்பது என்று சுஜாதாவைத் தவிர வேறு யாரும் பய்ன்படுத்திப் பார்த்ததில்லை.

தலைப்பாகை மாற்றி காப்பிரைட்டுகளைத் திருடுவான் என்று ஒரு வரி வருகிறது. அப்படி என்றால் 1850களுக்கு முன்பே காப்பிரைட் சட்டங்கள் வழக்கில் இருந்திருக்கின்றன.

கவிராஜ பண்டிதர்

ஆசுபத்திரியில் கடிக்கவிடுவது அட்டை

என்று ஒரு இடத்தில் சொல்கிறார். அட்டைகளை கடிக்கவிட்டு மாசுள்ள ரத்தத்தை வெளியேற்றுவது அப்போதும் பழக்கத்தில் இருந்திருக்கிறது.

நண்பர்களுக்கு ஏற்படுத்திய விருந்தில் சீஸ்கேக், ஸ்பஞ்ச் கேக், பட்டர் கேக், ஃப்ரெஞ்சு மகரூன், மாகரோனி, ஃபிங்கர்கேக், மஃபின் பரிமாறப்படுகின்றன. இவற்றில் அனேகமானவற்றை நான் அமெரிக்கா வந்த பிறகுதான் கேள்வியே பட்டேன். 1850களிலேயே இவை சென்னையில் கிடைத்தனவா?

தாசி மதனசுந்தரிக்கு அவள் தாய் சொல்லித் தரும் உத்திகளில் ஒன்று –

மார்பின் மீதும் எந்தன் உத்தரீயம் போடு ஒரு பக்கம் தெரியவே

டம்பாச்சாரிக்கு கடன் கொடுப்பவர்களில் கோமுட்டி செட்டியார் புல்லையா செட்டியும் ஒருவர். அவர் எப்படி முன்னேறினார் என்பதை விவரிக்கிறார்.

முருக்கிலை தைத்து விற்றும் ஊசற்பட்டாணி விற்றும்
சரக்குள மளிகை வைத்தும் சராப்பு பேரங்கள் செய்தும்…

முதல் முதல் அரிசி போட்டு முருக்கிலை வாங்கி தைத்து விற்று துட்டாக்கி அந்தத் துட்டுக்கு பட்டாணி வாங்கி வறுத்து விற்றுப் பணமாக்கி அந்தப் பணத்துக்கு மிளகாய் புளி வாங்கி விற்று ரூபாயாக்கி, அந்த ரூபாய்க்கு கருமாந்திரத்தில் கொடுக்கப்பட்ட வஸ்திரங்களை குச்சிலிக் கடையில் பார்ப்பார் கொண்டு வந்து விற்க, அதுகளை வாங்கி ஜவுளி பேரம் செய்து ரூபாயை வராகனாக்கி அந்த வராகனைக் கொண்டு சராப்புக் கடை வைத்து வாங்கும்போது ஒன்பது மாற்றை ஏழு மாற்றுப் பொன்னென்றும் விற்கும்போது ஏழு மாற்றை ஒன்பது மாற்றென்றும் சொல்லி விற்று மேற்படி வராகன் மொத்தத்தை ஆயிரம் பதினாயிரம் லட்சமாகப் பெருக்கி அதைக் கோடிக்கணக்காக்க பேராசை பூண்டு டம்பாச்சாரிக்கு டிஸ்கவுண்டு கடன் கொடுத்து ஏமாந்து போக புல்லைய செட்டியார் வருகிற விதம் காண்க

கடன் கொடுக்கும் இன்னொருவர் கப்பல் வியாபாரம் செய்யும் ஷேக் மீரா லப்பை. லப்பை வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்று மயிர்முளைஞ்சான் கட்டை (வசம்பாம்!). இன்னொன்று குண்டி கிளிஞ்சாலும் கிளியாத முத்து வண்ணச் சேலை. அதைத் தவிர முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம், பச்சை, கெம்புக்கல், வைடூரியம், சீப்பு சிக்காங்கோல், சவுரி மயிர், குங்குமப்பூ, கோரோஜனம், ஜாதிக்காய், சாபத்திரி, லவங்கம், மொட்டைக் கொப்பரை, ருத்திராட்சம் என்று எல்லாவற்றையும் இறக்குமதி செய்கிறார். கடன் திருப்பி வரவில்லை என்றதும் வக்காளவோளி, கண்டாரோளி, தாயோளி என்றெல்லாம் டம்பாச்சாரியை திட்டுகிறார். இருவரும் டம்பாச்சாரி மீது கேஸ் போட, “படித்த” லாயர் துபாஷி அவர்களை சுலபமாக ஏமாற்றுகிறார்.

பண்டாரங்கள் பத்ரகிரி பாணியில்

ஆங்காரம் உள்ளெழுப்பி ஐம்புலனில் மனம் செல்ல
தூங்காமல் வேசியுடன் சுகித்திருப்பது எக்காலம்?

என்று பாடுகிறார்கள்.

நாடகத்தின் நடுவில் சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார் எழுதிய சமையல் நூலை வாங்கி நண்பர்களுக்குக் கொடுப்போம் என்று ஒரு வரி வருகிறது. சமையல் புத்தகங்கள் வர ஆரம்பித்துவிட்டன் போலிருக்கிறது!

முன்னோடி நாடகம். ஆனால் நாடகத்தில் அதைத் தவிரவும் கவர்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம் போல. கறாராகப் பார்த்தால் காலாவதி ஆகிவிட்டதுதான், ஆனால் I found it charming. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

எஸ்.வி. சஹஸ்ரநாமம் – தமிழ் நாடகங்களில் பாரதி

எஸ்.வி. சஹஸ்ரநாமம் பெயர் நினைவிருந்தால் உங்களுக்கு நாற்பது வயதாவது இருக்க வேண்டும். மிக இயல்பான நடிகர். திரைப்படங்கள் மூலம்தான் இன்று கொஞ்சமாவது நினைவில் இருக்கிறார், ஆனால் நாடகம் நாடகம் என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

பசுபதி சார் தளத்தில் அவர் 1981-இல் எழுதிய ஒரு கட்டுரை கிடைத்தது, அவருக்கு நன்றி! பாரதியை அவர் எப்படி எல்லாம் தனது நாடகங்களில் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுதி இருக்கிறார். பாரதிக்கும் முன்னால் இருந்த நாடக உலகம் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கிறார்.

கனபரிமாண காட்சி முறையை அவரது நாடகம் ஒன்றில் கலை இயக்குனர் கலாசாகரம் ராஜகோபால் அறிமுகப்படுத்தினாராம். அது என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்!

வசதிக்காக கட்டுரையை தட்டச்சி இருக்கிறேன். ஓவர் டு சஹஸ்ரநாமம் சார்!


தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் சீடர்களான டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் நான் சேர்ந்த புதிதில் அநேகமாக எல்லா நாடகங்களும் புராண, இதிகாச வகைகளாக இருந்தன. அத்துடன் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடியனவாகவும் இருந்தன. பிறகு கால மாறுதலுக்கேற்ற வகையில் சமுதாயச் சீர்திருத்த நாடகங்கள் மேடைக்கு வர காரணமாக இருந்தவர் நாடக மேதை எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான். நடிகர் எம்.கே. ராதா அவர்களின் தந்தை.

நான் கம்பெனியில் சேரும்போது அவர் இருக்கவில்லை. பிறகு வந்து சேர்ந்தார்கள். அவரால் தயாரான சமூக நாடகங்கள் ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம், ஆனந்தகிருஷ்ணன்; இவ்வளவும் ஜே.ஆர். ரங்கராஜு அவர்களால் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டவை. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல் மேனகாவும் கந்தசாமி முதலியார் அவர்களால்தான் மேடையில் நாடகமாக ஆக்கப்பட்டது. அவர்தான் எனது குரு. நாடக ஆசிரியர். எனக்கு நல்ல பாத்திரங்களை அளித்து அதிலே, பயிற்சி அளித்து பிறர் பாராட்டைப் பெறும் பாக்கியமும் நான் பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் திரு எம். கந்தசாமி முதலியார் அவர்கள்தான்.

தேசீய விடுதலைப் போராட்டம் மும்முரமாகத் தொடங்கியபோது சமுதாயத்தின் ஒரு பகுதியான கலைஞர்களும் தங்கள் தொழில் மூலம் தேசீயப் போராட்டத்துக்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள். நாடகங்கள் எதுவானாலும் தேசியக் கிளர்ச்சிக்குத் தேவையான பணிகளில் மக்கள் மனத்தைப் பண்படுத்தும்படியாக தங்கள் நடிப்பு, இசை அனைத்தையும் பயன்படுத்தலானார்கள். தேசியப் போராட்டத்தில் தமிழகத்துக் கலைஞர்களுக்கு பெரும் பங்குண்டு. பாரதியாரின் பல பாடல்கள் நாடகங்களில் பாடப்பட்டன.

1946-ஆம் ஆண்டில் என்.எஸ்.கே. நாடக சபாவை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. அப்பொழுது புதிதாக நாடகம் போட வேண்டும் என்ற எண்ணத்தில் திரு. ப. நீலகண்டன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். “தியாக உள்ளம்” என்ற ஒரு கதையைக் குழுவில் படித்துக் காண்பித்தார். அந்தக் கதை கருத்துடையதாகவும் விடுதலைப் போராட்ட எழுச்சிக்குத் தூண்டுவதாகவும் இருந்தது. இரண்டொரு பாத்திரங்களை புதிதாக உருவாக்கி “நாம் இருவர்” என்று அந்நாடகத்துக்கு பெயரிட்டு தயாரிக்க ஏற்பாடு செய்தோம். இதில் இடம் பெற்ற பாரதியின் பாடல்கள் வெற்றிக்கு வழி காட்டின. இந்தச் சமயத்தில் மகாத்மா காந்தியடிகள் சென்னை வந்திருந்தார்கள். அப்போது பிரார்த்தனைக் கூட்டத்தில் நாங்கள் குழுவுடன் கலந்து கொள்வோம். எந்த நேரமும் புதிய நாடகத்தை வெற்றிகரமாக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும் எனக்கு மகாத்மா தரிசனமும் நாடக வெற்றிக்கான வழியைக் காட்டியது. அதன் பலன்… மூன்று நான்கு காட்சிகளும் தேசியப் பாடல்களும் ஒரு சகோதரியின் பாகமும் உருவாகின. மகாத்மாவின் சிலையும் நாடகத்தில் முக்கியப் பங்கேற்றது. நாடகம் மிக வெற்றிகரமாக மேடை ஏறியது.

அன்று அந்த நாடகத்துக்குத் தலைமை ஏற்று, நாடகத்தை மிக மிக அழகாக ரசித்துப் பாராட்டி ஆசிரியரையும் கலைஞர்களையும் வாழ்த்தியவர் திரு. வ.ரா. அவர்கள். அவரைச் சந்திப்பதற்கு முன்னால், எனது எண்ணங்களில் கலக்கமும், செயலிலே தடுமாற்றமும், பார்வையில் சூன்யமும் இருந்தன. அந்தப் பெரியாரின் நட்பும் உறவும் கிடைத்த பின் எனது எண்ணங்களில் தெளிவு ஏற்பட்டது; செயலிலே நிதானம் ஏற்பட்டது; பார்வையிலே பிரகாசம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு திரு. ப. நீலகண்டன் அவர்களால் கொடுக்கப்பட்டது “இரத்த சோதனை” என்ற ஒரு நாடகம். அதை ஆதாரமாகக் கொண்டு பல மாற்றங்களுடன் “பைத்தியக்காரன்” என்ற நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகத்தின் மூலம் திரைப்படத்திலும் நான் முக்கிய பாத்திரமேற்று நடித்து, திரைக்கதை வசனமும் எழுதியதில் வெற்றியும் புகழும் கிடைத்தன; திரைப்பட வாழ்க்கைக்கு இது வழிகாட்டியது.

திரைப்படத்தில் நடிப்பதும், நாடகத்தில் நடிப்பதுமாகச் சில நாட்கள் சென்றன. திரைப்படத்து வருமானம் நாடக மேடையில் புதிய முறையில் நாடகங்களை நடத்தவும், காட்சிகளை அமைப்பதற்கும் உதவியாக இருந்தது.

1952-ஆம் ஆண்டு எங்களது சொந்தக் குழுவான சேவா ஸ்டேஜ் நாடக சபா ஆரம்பிக்கப்பட்டது. இலக்கியத் தரம் படைத்த பல எழுத்தாளர்களை நாடக ஆசிரியராக அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பைப் பெற்றோம். அந்த வரிசையில் திரு என்.வி. ராஜாமணி, திரு. தி. ஜானகிராமன், குகன், கு. அழகிரிசாமி, திரு. கோமல் சுவாமிநாதன், திரு. தாமரைமணாளன், திரு. மல்லியம் ராஜகோபால், திரு. எம்.கே. மணி சாஸ்திரி, திரு. கௌசிக் போன்றவர்கள்.

திரு. கலாசாகரம் ராஜகோபால் அவர்கள் கலை இயக்குனராக பணி மேற்கொண்டு, புதிய முறையில் காட்சி அமைப்புகளில் பலரும் பாராட்டும்படி சாதனைகள் செய்தார். கனபரிமாண காட்சி முறையை முதன்முதலில் தமிழக மேடைக்கு அறிமுகம் செய்து வைத்தார். நாடகத்தில் சுழலும் காட்சியையும் அமைத்துக் கொடுத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக “நாடகக் கல்வி நிலையம்” ஒன்று ஆரம்பித்து, நடிப்பு – நாடகத் தயாரிப்பு – நாடகம் எழுதுவது – நாடகக் காட்சி அமைப்பு, என்று நான்கு பிரிவுகளை ஏற்படுத்தி, அதில் 16 மாணவ மாணவியர் பயிற்சி பெற வழி செய்தோம். அதில் தோன்றியவர்தான் இன்று புகழடைந்துள்ள நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன். நடிகையர் வரிசையில் டி.கே. வசந்தாவும் தேர்ச்சி படைத்தவர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்கு பெருமை உண்டு.

இந்த நாடகக் கல்வி நிலையத்தில் நடிப்புப் பயிற்சி அளிப்பது என்னுடைய கடமையாக இருந்தது. எனது வெகு நாளைய ஆசை மஹாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மேடை ஏற்ற வேண்டும் என்பது. அதற்காக நானாகவே மஹாகவியின் கவிதைகளில் வர்ணனைகளை எல்லாம் நீக்கிவிட்டு, நாடக உணர்ச்சிகளுக்கு வேண்டிய உரையாடல்களை மட்டும் தொகுத்து, கல்வி நிலைய மாணவர்களுக்கு மொழிப் பயிற்சிக்கு வலிமை ஊட்டுவதற்காகப் பயன்படுத்தினேன்.

இந்தக் கவிதை நாடகப் பயிற்சி நடக்கும் சமயம் அமரர் அவ்வை சண்முகம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் வகுப்பு முடிந்து போகும்போது, என்னிடம் தனியாகக் கூப்பிட்டு, இந்தக் கவிதை நாடகத்தை, தொழில்முறை நாடகம் நடத்தும் உங்கள் நடிகர்களைக் கொண்டு மேடை ஏற்றினால் பெருமையாக இருக்குமே எனத் தெரிவித்தார். பிறகு இதே கவிதை நாடகத்தை திரு. பி.எஸ். ராமையா அவர்களிடம் கொடுத்து தொழில் நடிகர்களான நாங்கள் நடிப்பதற்கேற்ற முறையில் நாடக உணர்ச்சியும் பண்பாடும் மெருகேற்றித் தொகுத்தளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டபடி அவரும் செய்து கொடுத்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற ஆதரவுடன் நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். இது வரை எங்களுக்குக் கிடைக்காத பாராட்டும் வாழ்த்துக்களும் மஹாகவியின் கவிதை நாடகத்தில் நாங்கள் பெற்றோம். அமரர் அவ்வை சண்முகத்துக்கு எனது மானசீகமான அஞ்சலியை நான் இப்போதும் செலுத்திக் கொள்ளுகிறேன்.

இந்த மஹாகவியின் பாஞ்சாலி சபதம் எங்களுக்குத் தமிழகத்தில் மட்டுமல்ல, பம்பாய், கல்கத்தா, டில்லி போன்ற நகரங்களிலெல்லாம் பெருமையும், புகழும் ஏற்படக் காரணமாக இருந்தது. டில்லி தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பான முதல் தமிழ் நாடகம் என்ற சிறப்பையும் அடைந்தது. கல்கத்தாவில் மஹாகவி தாகூர் நூற்றாண்டு விழாவில் இந்த நாடகம் நடத்தும் நல்வாய்ப்பையும் பெற்றோம். பெரிய அளவில் அரங்கம் அமைத்திருந்தார்கள். நாடகம் முடிந்ததும் பல வங்காள ரசிகர்கள், கலைஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மேடையில் உள்ளே வந்து, எங்களை நேரடியாகப் பாராட்டினார்கள். அவர்கள் “எங்களுக்கு மொழி தெரியாவிட்டாலும், இனிமையான சொற்களை இசை போலக் கேட்க முடிந்தது, காட்சிகளும் நடிப்பும், வெகுவாக எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின, இந்த நாடகம் எங்கள மனத்தில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

தென்னகமும் வடநாடும் மட்டுமல்லாமல் பாரதியார் கவிதை மூலம் என்னுடன் ரஷ்யாவுக்கும் பயணமானார். ஆம்! 1961-ஆம் ஆண்டில் பாரதீய நாட்டிய சங்கத்தார் நாடகக் கலையை அறிவது சம்பந்தமாக கலைத் தூதுக்குழு ஒன்றை ரஷ்யாவுக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தனர். அதில் தமிழகத்தின் சார்பில் என்னைத் தேர்ந்தெடுத்திருந்தனர். என்னுடன் வங்காள நாட்டு மின்சார நிபுணரான திரு. தபன் சென் அவர்களும் உடன் வந்தார்கள். இவர் மத்திய சர்க்காரது நாடகப் பயிற்சிப் பள்ளியில் சிறந்த நாடகத் தயாரிப்பாளர். நான் வயதில் மூத்தவனாக இருந்தபடியால் என்னை அந்தக் கலைத் தூதுக்குழுவின் தலைவராக அனுப்பி வைத்தார்கள்.

ரஷ்யா செல்லும்போது பாரதியின் கவிதை நாடகமான பாஞ்சாலி சபதத்தை எங்கள் குழு நடிகர்களைக் கொண்டு டேப்பில் ஒலிப்பதிவு செய்து எடுத்துப்போய் மாஸ்கோ வானொலி நிலையத்தில் கொடுத்தேன். அதற்கு அவர்கள் உடன் ஒரு தொகையையும் கொடுத்துவிட்டார்கள். இரு முறை பாஞ்சாலி சபதத்தை ஒலிபரப்பியதாக என் ரஷ்ய நண்பர் திரு. செம்பியன் அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்தார்கள்.

பாஞ்சாலி சபதம் கவிதை நாடகம் வெளிநாட்டிலும் எனக்குப் பெருமை தேடிக் கொடுத்துள்ளது.

எனது நாடகக்கலை அனுபவத்தில் எத்தனையோ பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன என்றாலும் திருச்சியில் 1959-ஆம் ஆண்டில் கலை இலக்கியப் பெருமன்றம் ஆதரவில் பாஞ்சாலி சபதம் நாடகம் நடைபெறும்போது அவர்கள், செப்பேடு தகட்டில் “பாரதிக் கலைஞன்” என்று பொறுத்துக் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள் கரத்தால் பாராட்டி வழங்கச் செய்ததை நான் இன்னும் பெரிதாக மதித்துப் போற்றி வருகிறேன்.

பாரதியாருக்கு நாடக உணர்வுகள் மிகுதியாக இருந்திருக்கின்றன. பாஞ்சாலி சபதம் இரண்டாவது சூதாட்டச் சருக்கம் ஆரம்பிக்கும் முன் கடவுள் வாழ்த்து வருகிறது. அது நாடகக் கலைக்கு இலக்கணம் யாத்துள்ளதைப் போலுள்ளது. அதை இங்கே எடுத்துக் சொல்ல விரும்புகிறேன்.

தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல் சிந்திப்பார்க்கே
கவிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல் கண்ணீர்த்
துளிவர உள்ளுருக்குதல் இங்கிவை எல்லாம் நீ அருளும் தொழில்களன்றோ!
ஒளிவளருன் தமிழ்வாணீ! அடியேனேற் கிவையனைத்தும் உதவுவாயே!

நாடக உணர்வுகளைத் தட்டி எழுப்பவும் மஹா கவிஞர் தவறவில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம், தமிழ் நாடகங்கள்

தமிழ் நாடகம்: மெரினா

சமீபத்தில் சில மெரினா நாடகங்களை முதல் முறையாகவோ அல்லது மீண்டும் ஒரு முறையோ படித்தேன். அதனால் இந்தப் பழைய பதிவை மேம்படுத்தி மீள்பதித்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் மெரினாவின் நாடகங்கள் மிகவும் பிரபலம். தாம்பரத்தைத் தாண்டாத சபா நாடக உலகில் பிரகாசித்தார்.தனிக்குடித்தனம், கால்கட்டு, ஊர் வம்பு மாதிரி சில பல. அவை ஒரு காலகட்டத்தின் – குறிப்பாக எழுபதுகளின், நகர்ப்புற பிராமணர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டு வந்தன. அவர் விவரிக்கும் குடும்பத்துக்குள் நடக்கும் சண்டைகள் ஏறக்குறைய அதே மொழியில் நடந்துகொண்டிருந்தன.

பொதுவாக மெரீனா நகர்ப்புற – அதுவும் சென்னை நகர, மத்தியதர வாழ்க்கையை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களின் வாழ்க்கையை சித்தரித்தார். அன்றைய சபா நாடகங்களைப் பார்த்த பெருவாரியானவர்கள் பிராமணர்களே. இவர்களில் பெரும்பாலோர் விகடன் வாசகர்களும் கூட. அவரது எழுத்துக்கு இப்படி ஒரு மார்க்கெட் இருந்தது அவருக்கு பெரிய பலம். அதுவே அவரது பலவீனமும் கூட. குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. நாடகங்களில் பிற ஜாதிப் பாத்திரங்கள் வந்தாலும் (தனிக்குடித்தனம் குடை நாயுடு)  ஒரு பிராமணரின் கண்ணோட்டத்திலேயே அவர்களும் சிந்திப்பது போலத்தான் தோன்றும்..

பாத்திரங்கள் உண்மையாக இருந்தாலும் பொதுவாக கதை, முடிச்சு என்றெல்லாம் எதுவும் இருக்காது. அப்படியே முடிச்சு இருந்தாலும் அது வலிந்து புகுந்தப்பட்டதாக இருக்கும். நாடகத்தின் வெற்றி, சுவாரசியம் எல்லாம் அந்தக் கால ரசிகர்கள் தங்களையே நாடகத்தில் பார்ப்பதுதான்.

அனேகமாக கூத்தபிரானுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். (கூத்தபிரான் ரேடியோ அண்ணா என்றும் புகழ் பெற்றிருந்தார்.) தனிக்குடித்தனத்தின் வெற்றி அதை சினிமா உலகுக்கும் கொண்டு போனது.

வளர்ந்த சூழ்நிலையை விட்டு வெளியேறிய பிறகுதான் அதைப் பிரதிபலிக்கும் படைப்புகளை take it for granted ஆக எடுத்துக் கொள்ளும் மனநிலை மாறுகிறது. அப்படி பிரதிபலிக்கும் படைப்புகளின் நம்பகத்தன்மை அப்போதுதான் கண்ணிலேயே படுகிறது!

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 95 வயதில் இறந்திருக்கிறார். விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவர். விகடன் அறுபது-எழுபதுகளில் பிரபலமாக இருந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். பரணீதரன் என்ற பேரில் ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் எழுதினார். ஸ்ரீதர் என்ற பேரில் கார்ட்டூன்கள் வரைந்தார். மெரினா என்ற பேரில் நாடகங்கள் எழுதினார். மூன்று அவதாரங்களுக்குமே நல்ல மார்க்கெட் இருந்தது. அவரது நாடகங்கள் அனேகமாக விகடனில் தொடராக வந்தன. அதுவும் அவற்றின் பிராபல்யத்துக்கு ஒரு காரணம்.

மெரினாவின் நாடகங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா? பரணீதரனின் பயணக் கட்டுரைகள்? ஸ்ரீதரின் கார்ட்டூன்கள்? உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

பொதுவாக தமிழ் நாடகங்களின் தரம் குறைவு. ஷேக்ஸ்பியரும் இப்சனும் ஷாவும் ப்ரெக்டும் மில்லரும் இங்கே இன்னும் அவதரிக்கவில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது மெரினாவின் உண்மையான சித்தரிப்புகளுக்கு தமிழ் நாடக வரலாற்றில் நிச்சயமாக இடம் உண்டு. ஒரே ஒரு படைப்பை படித்துப் பார்ப்பது என்றால் மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தைப் பரிந்துரைக்கிறேன். தனிக்குடித்தனம், ஊர் வம்பு, கால்கட்டு, எங்கம்மா, மாமியார் மெச்சிய மாப்பிள்ளை ஆகியவற்றை படிக்கலாம், பார்க்கலாம்.


அவர் எழுதிய மாப்பிள்ளை முறுக்கு நாடகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே அவரது மாஸ்டர்பீஸாகக் கருதுகிறேன். எழுபதுகளின் பிராமண மத்திய தரக் குடும்பத்தை தத்ரூபமாகச் சித்தரித்தது. உண்மையில் நான் அவரைப் பற்றி சிலிகன்ஷெல்ஃபில் எழுத இந்த நாடகமே முக்கியக் காரணம்.

இந்த நாடகத்தில் வரும் பாத்திரங்கள் உண்மையானவர்கள். அவர்கள் நடத்தை, பேசும் விதம், பழகும் விதம் எல்லாம் என் அத்தைகளிடமும் மாமாக்களிடமும் அத்தான்களிடமும் அத்தங்காள்களிடமும் சித்தப்பாக்களிடமும் பெரியம்மாக்களிடமும் நான் கண்டவையே. நான் வளர்ந்த சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார். மாமியார்-மருமகள் தகராறுகள், ஷட்டகர்களின் (சகலபாடிகள்) ஈகோ பிரச்சினைகள், சென்னைக்கு வந்தாலும் மாமனார் வீட்டில் தாங்காமல் ஹோட்டலில் தங்கும் மாப்பிள்ளை, பக்கத்து வீட்டில் மைசூர்பாக் வாசனை பிடிக்கும் பாட்ராச்சாரி, டிவி இல்லாத நாட்களில் டிரான்சிஸ்டரில் கிரிக்கெட் கமெண்டரி கேட்டுக்கொண்டே இருக்கும் இளைஞன், பொருளாதார காரணங்களுக்காக வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் இருக்கும் பிரச்சினைகள், பாத்திரச் சீட்டு, நகைச் சீட்டு, புடவை வாங்கிவிட்டு பணம் தரப் படும் அவதி எல்லாம் என் குடும்பத்திலும் உறவினர் நண்பர் குடும்பங்களிலும் அனுபவித்தவையே, பார்த்தவையே. அந்தக் காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார். இதை நாகம்மாள், தலைமுறைகள், கோபல்ல கிராமம் genre படைப்பு. ஆனால் இரண்டாம் வரிசைப் படைப்பு.

என்ன கதை? ஒரு வழக்கமான அப்பா, அம்மா; ஒரு பெண் ரமா பணக்கார மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். இன்னொரு பெண் சாரு சொந்தத்தில் (மத்திய தரக் குடும்பம்) தியாகுவை மணந்து கொண்டிருக்கிறாள். சாருவுக்கும் மாமியாருக்கும் தகராறு. மாமியார் தியாகுவை smother செய்கிறாள். கிருஷ்ணமூர்த்தி மாமனார் வீட்டுக்கு வருவதே இல்லை. வழக்கமான பூசல்கள், சண்டைகள், நேற்று வரை கரித்துக் கொண்டிருந்தவர் நோய்வாய்ப்படும்போது ஆறுதலாக இருப்பது என்று போகிறது. கதாபாத்திரங்கள் உண்மையானவை. கதை? அதைத்தான் காணோம். மெரீனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

குறைகள் இல்லாத படைப்பு என்றெல்லாம் இல்லை. முக்கியமான குறை என்றால் இது நாடகமே இல்லை, நாவலை உரையாடல் வழியாக சொல்கிறார் அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டியம் அவசியம் இல்லை, படித்தாலே போதும். கதை என்று ஒன்று இல்லை. திடீரென்று ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் பின்னால் போய் ஒரு புகைப்படம் எடுத்த மாதிரி இருக்கிறது. புகைப்படம் உண்மையாக, தத்ரூபமாக இருக்கிறது, ஆனால் கலை அம்சம் குறைவு. அதுவும் இருந்திருந்தால்!

மாப்பிள்ளை முறுக்கு டிவி சீரியலாகவும் வந்ததாம். அதைக் கண்டு மெரீனா வெறுத்துப் போய் இனி மேல் டிவி சீரியலுக்கு நாடகங்களைக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம்.


அவர் எழுதிய பிற நாடகங்களில் இவை குறைகள் உள்ள நாடகங்கள்தான் என்றாலும் படிக்க/பார்க்கக் கூடியவை. சுமார் என்ற தரத்திலாவது இருக்கின்றன.

தனிக்குடித்தனம்: (1969) இதுதான் மெரினாவின் மாஸ்டர்பீஸ் என சொல்லப்படுகிறது. இரண்டு நண்பர்கள். அவர்களுக்கு கல்யாணம் நடப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் இதுதான் நாடகம். நாராயணன் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று துடிக்கிறான், கடைசியில் அவன் அப்பா அம்மா தனிக்குடித்தனம் போய்விடுகிறார்கள்! இன்று அத்திம்பேர்களும் சைக்கிள்களும் டிரான்சிஸ்டர்களும் நிறைந்திருந்த அந்த உலகத்தின் மெய்நிகர் சித்தரிப்புக்காகத்தான் படிக்க/பார்க்க வேண்டும். சோ ராமசாமி, கே.ஆர். விஜயா, ஒய்.ஜி. மகேந்திரன் நடித்து திரைப்படமாகவும் வந்தது. திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

கால்கட்டு: அவரது இன்னொரு புகழ் பெற்ற நாடகம். சும்மா சத்தமாக மிரட்டிக் கொண்டே இருக்கும் அப்பா, அவர் ஸ்டைல் அது என்பதை நன்றாக உணர்ந்த குடும்பத்தினர், குடும்ப உறுப்பினரான தூரத்து உறவுக்காரர் அம்மாஞ்சி. இப்படிப்பட்ட குடும்பங்கள் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே அருகிக் கொண்டு இருந்தன. பாத்திரப் படைப்பு உண்மையாக இருந்தாலும் கதையைத்தான் காணோம்.

ஊர் வம்பு அவருடைய புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்று. வம்பு பேசும் அய்யாசாமி ஐயரின் பெண்ணுக்கும் இன்னொரு வம்புக்கார அத்தையின் மருமகனுக்கும் கல்யாணம். ஒரு காலத்து பிராமண milieu தத்ரூபமாக இருக்கிறது. ஆனால் இது என் காலத்துக்கும் முற்பட்ட milieu, அவ்வளவாக ஒட்ட முடியவில்லை.

எங்கம்மா: பிராமணக் குடும்பம், மூன்று பிள்ளைகள். முதல் பையன் மனைவிக்கு அடங்கினவன், தனிக்குடித்தனம் போய்விட்டான். இரண்டாமவன் ஜாதி விட்டு கல்யாணம் செய்துகொண்டவன், தனியாக இருக்கிறான். கடைசி பையனுக்கு ஜாதிக்குள்ளேயே பெண் பார்க்கிறார்கள். கல்யாணம், சச்சரவுகள், குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று போகிறது. அப்பா இறந்ததும் ஆசாரமான அம்மா தன் தலித் மருமகளுடன் போய் இருப்பதாக கதை முடிகிறது.

மாமியார் மெச்சிய மாப்பிள்ளை: பிள்ளையை வரப் போகும் பெண்டாட்டி பிரித்துவிடப் போகிறாள் என்று அம்மாவுக்கு பயம், அதனால் கல்யாணம் பண்ணிக் கொல்லாதே என்று பிள்ளைக்கு உபதேசிக்கிறாள். எப்படியோ கல்யாணம் நடக்கிறது. மருமகள் மாமியார் மேல் உயிராக இருக்கிறாள். பிறகு?


இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவை.

காதலென்ன கத்திரிக்காயா: இளைஞன் காதல் காதல் என்று அலைய எதுவும் வொர்க் அவுட் ஆகமாட்டேன் என்கிறது. வாரப்பத்திரிகை தொடர்கதை என்று தெளிவாகத் தெரிகிறது. அறுபதுகளில் ஸ்டவ் ஜோசியம் என்று (உய்ஜா மாதிரி இருக்கிறது, ஸ்டவ் நகருமாம்!) ஒன்று பரபரப்பாக இருந்ததாமே! இந்த நாவலில் வருகிறது

கல்யாண மார்க்கெட்: காதல், மறுக்கும் அப்பா, எப்படியோ சேரும் ஜோடி. தண்டம்.

மாமனார் சரணாகதி: குடும்பத்தை அடக்கி அட்டூழியம் செய்யும் குடும்பத் தலைவர்.

நாடகம் போட்டுப் பார் என்று நாடகம் போடுவதைப் பற்றியே ஒரு குறுநாவல் எழுதி இருக்கிறார். நம்பகத்தன்மை இருந்தாலும் சுவாரசியமாக இல்லை.

வடபழனியில் வால்மீகி: தண்டம். வால்மீகி இன்றைய (அறுபதுகளின்) சென்னைக்குத் திரும்பி வருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: மெரினா பற்றி ஒரு கட்டுரை

மனோன்மணீயம்

மேம்படுத்தப்பட்ட மீள்பதிவு, ஒரிஜினல் பதிவு இங்கே.

manonmaneeyam_sundaram_pillaiசுந்தரம் பிள்ளையைப் பற்றிய பதிவில் மனோன்மணீயம் (1891) நல்ல நாடகம் இல்லை, முன்னோடி நாடகம் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தேன். ஏதோ ஒரு ஆர்வத்தால் நாடகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படித்ததெல்லாம் உரைநடை கதைச்சுருக்கமே, ஒரிஜினல் கவிதை இல்லை என்று தெரிந்தது. நல்ல நாடகம் இல்லை என்று சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன், என் எண்ணம் மாறிவிட்டது.

கவிதையின் கற்பூர வாசனை எனக்குத் தெரிவதில்லைதான். ஆனால் தமிழின் ஆசிரியப்பா மாதிரி சிறந்த சந்தம் உள்ள ஒரு வடிவம் அபூர்வம். அசை பற்றியெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை. ‘தானனா தானா தானனா தானா’ என்ற ஆசிரியப்பா வடிவம் நேர்-நிரை, நேர்-நேர், நேர்-நிரை, நேர்-நேர் என்ற அமைப்பில் இருப்பது அற்புதமான சந்தம். இந்த சந்தத்திலேயே 100, 120 பக்கத்துக்கு எழுதி இருக்கிறார், அபாரம்! ஒரு முறையாவது வாய்விட்டுப் படித்துப் பார்க்க வேண்டும்.

புதுக்கவிதை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் இந்த சந்தத்தை, வெண்பாவின் வடிவ நேர்த்தியை புதுக்கவிதை மறக்கடித்துவிட்டதே என்ற வருத்தத்தை மனோன்மணீயம் ஏற்படுத்திவிட்டது. (எனக்கு கலிப்பா, வஞ்சிப்பா எல்லாம் பள்ளியில் படிக்கும்போதே ததிங்கிணத்தோம்.)

அருமையான சில வரிகள் கீழே.

ஓவியந்தொழில் வலோன் நீவியக் கிழியில்
தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந்
தூரியந்தொடத் தொடத் துலங்குதல் போல
சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட
உருவு தோன்றாவணம் ஒன்றாய்ச் செறிந்து
கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து
சிறிது சிறிதாய் உறுப்புகள் தெளியத்
தோன்றுமித் தோற்றம் நன்றே!

ஸ்டீரியோடைப் பாத்திரங்கள்தான். கதையும் அவருடையதல்லதான். ஆனால் கச்சிதமாக ஒரு கதையை உருவாக்கி/எடுத்தாண்டு இருக்கிறார். வடிவ கச்சிதத்துக்காகவே படிக்கலாம், கவிதையாக எழுதி இருப்பது இதன் தரத்தை உயர்த்துகிறது. படித்துப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

நாடகத்தின் மூலம் லிட்டன் பிரபு எழுதிய Secret Way.

திரைப்படத்தையும் பரிந்துரைக்கிறேன். சுந்தரம் பிள்ளை பதிவிலிருந்து:

மனோன்மணீயம் மனோன்மணி என்ற பேரில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் பி.யூ. சின்னப்பா, டி.ஆர். ராஜகுமாரி நடித்து திரைப்படமாகவும் வந்தது. முழுத் திரைப்படமும் யூட்யூபில் கிடைக்கிறது. கே.வி. மஹாதேவன் இசையமைத்த முதல் படம் இதுதானாம். சின்னப்பா நல்ல குண்டாக இருந்தாலும் முதலில் வரும் கத்திச் சண்டை பயிற்சிக் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். (கிட்டத்தட்ட ஐந்தாவது நிமிஷத்தில் வருகிறது) வசனமும் நன்றாக இருக்கும், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: மனோன்மணீயம் மின்னூல்

சுஜாதாவின் “ஊஞ்சல்” நாடகம் (மீள்பதிவு)

பத்து வருஷங்களுக்கு முன் (2010-இல்) எழுதிய பதிவு. என் எண்ணங்கள் இன்னும் மாறவில்லை. ஒரு எழுத்தை மாற்றாமல் மீள்பதித்திருக்கிறேன்.

தமிழின் சிறந்த நாடகங்களுள் ஒன்று.

பொதுவாகவே தமிழில் நல்ல நாடகங்கள் குறைவு. ஷேக்ஸ்பியரும், இப்சனும், பெர்னார்ட் ஷாவும், பெர்டோல்ட் ப்ரெக்டும், ஆர்தர் மில்லரும் இன்னும் தமிழில் இல்லை. அந்த விதத்தில் சுஜாதா ஒரு முன்னோடி. நல்ல நாடகங்கள் எழுத முயற்சி செய்திருக்கிறார். ஊஞ்சலில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஏறக்குறைய டென்னசி வில்லியம்சின் நாடகங்களை நினைவுபடுத்துமாறு அவர் இன்னும் சில நாடகங்களை – டாக்டர் நரேந்திரன், சரளா இப்போது நினைவு வருகிறது – எழுதி இருக்கிறார். குப்பைகளும் உண்டு. உதாரணமாக சிங்கமய்யங்கார் பேரன் எனக்கு தேறவில்லை.

கதை என்ன பிரமாதக் கதை? அப்பா வரதராஜன் ஒரு காலத்தில் பெரிய எஞ்சினியரிங் பிஸ்தா, கவர்னரே இவர் வீட்டுக் கல்யாணத்துக்கு வருகிறார். இன்று பெண்ணின் சம்பளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனிதனின் வீழ்ச்சியை, அப்பா ஒரு anachronism ஆக மாறிவிட்டதை, அருமையாக சித்தரித்திருக்கிறார். ஐயோ, திறமையான, பல வெற்றிகளை அடைந்த மனிதன் இன்று இப்படி சொதப்புகிறானே என்று நமக்கு ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்துவதில் சுஜாதா வெற்றி பெற்றிருக்கிறார். இந்த மாதிரி பெருங்காயம் வைத்த டப்பாக்களை அவரே நிறைய பார்த்திருப்பார். அதை அற்புதமாக கொணடு வந்திருக்கிறார்.

சுஜாதாவுக்கு நன்றாகத் தெரிந்த பிராமண milieu. வசனங்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன. அது இந்த நாடகத்தின் பெரிய பலம். அப்பா பாத்திரம் மட்டுமில்லை, ஒரு காலத்தில் அப்பாவின் உதவியாளனாக இருந்து இன்று பெரிய தொழிலதிபராக இருக்கும் மதி, பெண் கல்யாணி, அம்மா பாத்திரம், பெண்ணின் காதலனாக வருபவர் எல்லாமே ரத்தமும் சதையும் உள்ள நிஜ மனிதர்கள். சில காட்சிகள் – கல்யாணி பணத்தை அப்பாவுக்கு தருகிறேன் என்பது, வரதராஜன் பஸ் கம்பெனியில் ட்ரிப் ஷீட் எழுதப் போகும் சீன், மதியின் கம்பெனிக்கு சென்று அவனை சந்திக்கும் சீன், மதியின் உதவியாளர்கள் இவரது ப்ராஜெக்ட் தேறாது என்று மதியிடம் சொல்வது எல்லாம் மிக அருமையாக வந்திருக்கும்.

இந்த நாடகத்தை நான் வீடியோவில் பார்த்தேன். ஒரு நல்ல நடிகனுக்கு இந்த நாடகம் ஒரு பிரமாதமான வாய்ப்பு. பூர்ணம் விஸ்வநாதன் இந்த ரோலுக்கு பொருத்தமானவர்தான், ஆனால் ஓவர்ஆக்டிங் செய்து கொலை செய்துவிட்டார். உண்மையை சொல்லப்போனால் அவரது மிகை நடிப்பில் ஏற்பட்ட கடுப்பு எழுத்தின் திறமையையே மறைத்துவிட்டது. கடுப்பேற்றும் மிகை நடிப்புக்கும் இதற்குத் தேவையான ஆர்ப்பாட்டமான நடிப்புக்கும் ஒரு மயிரிழைதான் இடைவெளி, அந்த இடைவெளியை பூர்ணம் தவறவிட்டுவிட்டார். இதை இன்றைய நடிகர்கள் – பிரகாஷ் ராஜ் மாதிரி யாராவது நடித்தால் நன்றாக வரும். பூர்ணமே கூட இன்னொரு நாளில் அருமையாக நடித்திருக்கலாம். என் துரதிருஷ்டம், வீடியோ எடுக்கப்பட்ட அன்று அவர் சொதப்பிவிட்டார்.

ஊஞ்சல் நாடகத்தைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் சிலாகித்திருக்கிறார். உண்மையில் நான் தமிழில் நல்ல நாடகம் இல்லை என்று சொன்னபோது சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி அவர்தான் நினைவுபடுத்தினார். அதற்குப் பிறகுதான் நான் ஊஞ்சல் நாடகத்தை தேடிப் பிடித்து படித்தேன் – பூர்ணத்தின் மிகை நடிப்பால் இந்த நாடகத்தை ஒதுக்கிய நான் மறுவாசிப்பு செய்ய அவரே காரணம். இதைப் பற்றி எங்காவது எழுதி இருக்கிறாரா என்று நெட்டில் தேடிப் பார்த்தேன், தென்படவில்லை. இந்த பதிவு அவர் கண்ணில் பட்டால் ஏதாவது சொல்வார் என்று நம்பிக்கை…

ஜெயமோகன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார், எனக்குத்தான் தேடத் தெரியவில்லை. 🙂 அவரது விளிம்புகளில் ரத்தம் கசிய – சுஜாதா நாடகங்கள் பதிவிலிருந்து ஒரு excerpt:

அதிகமாக கவனிக்கப்படாத ஒரு உலகம் சுஜாதாவின் நாடகங்கள்.

சுஜாதா தன் அனேகமான நாடகங்களில் தோற்று காலாவதியாகும் ஒரு தலைமுறையை தன் கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பாரதி இருந்த வீடு, சிங்கமய்யங்கார் பேரன், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, அன்புள்ள அப்பா , ஊஞ்சல் போன்ற பெரும்பாலான நாடகங்களில் மையக் கதாபாத்திரம் புதிய காலகட்டத்தால் கைவிடப்பட்டிருக்கிறது. வீம்புடன் தன் காலாவதியான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. அல்லது மெல்ல மெல்ல சமாதானம் செய்து கொள்கிறது. அந்த வீம்பின் பரிதாபம், அதை விட அந்த சமரசத்தின் பரிதாபம். அதன் வழியாக அந்நாடகங்கள் மேலும் முக்கியமான வினாக்களை எழுப்புகின்றன.

சுஜாதாவின் நாடகங்கள் வாசிப்புக்கும் சரி, மேடைக்கும் சரி, எல்லாரையும் ஈர்த்து ரசிக்க வைக்கும் தன்மை கொண்டவை.

ஜெயமோகனின் மறுமொழியையும் இங்கே இணைத்திருக்கிறேன். ஜெயமோகன் இந்த தளத்தை அனேகமாக தினமும் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. (குறிப்பாக இந்த பதிவை ஜெயமோகனின் கவனத்துக்கு கொண்டு போன உத்தம் நாராயணனுக்கு நன்றி!)

சுஜாதா அவரது நாடகங்களில் அவருக்குச் சாத்தியமான முழுமையான கலைவெற்றியை அடைந்திருக்கிறார் என்பது என் எண்ணம். இன்றும் இந்த தளத்தில் அவரது ஆக்கங்களுடன் ஒப்பிட ஜெயந்தன் [நினைக்கப்படும்] மட்டுமே இருக்கிறார்.

இந்திரா பார்த்தசாரதி [மழை,போர்வை போர்த்திய உடல்கள், ஔரங்கசீப்] முக்கியமான நாவலாசிரியர். ஆனால் யதார்த்த நாடக ஆசிரியரல்ல. யதார்த்தத்தை மேடையில் இயல்பாக நிகழ்த்துவதில் ஜெயந்தனின் நினைக்கப்படும் வரிசை நாடகங்களே வெற்றிபெற்றன. ஆனாலும் அவற்றில் உள்ள ’சாட்டையடி’த்தன்மை கொஞ்சம் அதிகம். சுஜாதா இன்னமும் தெளிவான யதார்த்தத்தை முன்வைத்தார். ஆகவே இப்போதைக்கு அவரே முதலிடம் பெறுகிறார்.

சுஜாதாவின் சிறுகதைகளுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. நடுத்தர வர்க்க வாழ்க்கையை கச்சிதமாகச் சொன்ன கதைகள் அவை. அவற்றின் கச்சிதமே கலைவெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அந்த இயல்பு தன் கவர்ச்சியை இழக்கிறதோ என இப்போது ஐயப்படுகிறேன். அவரது கதைகளில் தூய நகைச்சுவை கதைகளான குதிரை போன்றவை மேலும் முக்கியமானவை என நினைக்கிறேன்.

ஆனால் நாடகங்கள் நகைச்சுவையும் யதார்த்தமும் இயல்பாக இழைபின்னி வெற்றியடைகின்றன. இயல்பான உரையாடல்கள கச்சிதமாக அமைப்பதில் அவர் ஒரு மேதை. உரையாடல்கள் இயல்பாக இருந்தால் கச்சிதமாக இருக்காது, கச்சிதமாக இருந்தால் இயல்பாக அமையாது. இந்த இக்கட்டை சுஜாதா இயல்பாகத் தாண்டிச் சென்று வெல்கிறார். அது இந்நாடகங்களை வெற்றிகரமாக ஆக்குகிறது.

இந்நாடகங்களின் குறை என்னவென்றால் உணர்ச்சி உச்சமோதல்களும் கவித்துவமும் இல்லை என்பது. ஆனால் அது இந்த வகையான யதார்த்த நாடகங்களின் இயல்பும் அல்ல.

அருமையான தீம், பாத்திரப் படைப்பு, வசனங்கள், powerful காட்சி அமைப்பு எல்லாமே இந்த நாடகத்தின் பெரிய பலங்கள். கட்டாயமாகப் படியுங்கள், முடிந்தால் (பூர்ணம் சொதப்பிய வீடியோவாக இருந்தாலும் சரி) பாருங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள், சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி:
சுஜாதாவின் நாடகங்களைப் பற்றி ஜெயமோகன் – விளிம்புகளில் ரத்தம் கசிய
சிமுலேஷனின் விமர்சனம்

அண்ணாதுரையின் நாடகம் – வேலைக்காரி

(மீள்பதிவு, சில திருத்தங்களுடன்)

A Raisin in the Sun நாடகம் பற்றி போன பதிவில் எழுதி இருந்தேன். என் கண்ணில் இது இரண்டாம் வரிசை நாடகம் மட்டுமே. ஆனால் இந்தத் தரத்தில் இருக்கும் நாடகம் கூட எதுவும் தமிழில் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

தமிழில் பொருட்படுத்தக் கூடிய நாடகங்களை எழுதியவர்கள் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, ஜெயந்தன், சோ ராமசாமி, அண்ணாதுரை, மெரீனா மட்டுமே. (ஜெயமோகன் நாடகங்கள் எதுவும் நடிக்கப்படவில்லை, அதனால் நான் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எடுத்துக் கொண்டாலும் அவரது நாடகங்களையும் ஷேக்ஸ்பியர், செகாவ், இப்சன், ஷா, ப்ரெக்ட் வரிசையில் வைக்க வேண்டியவையாக நான் கருதவில்லை.) நான் படித்த வரையில் இவற்றில் வெகு சிலவே இந்த இரண்டாம் வரிசைத் தரத்தை எட்டுகின்றன.

அண்ணாதுரையின் முக்கியத்துவம் அவருடைய முன்னோடித்தனம்தான். தன் இயக்கத்தின் நோக்கங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலிருந்தால் அவரால் இன்னும் நல்ல நாடகங்களை எழுதி இருக்க முடியும் என்று நம்மை நினைக்க வைப்பதுதான். அவரது நாடகங்களில் மிகச் சிறந்ததாக நான் கருதுவது ஓரிரவைத்தான். ஆனால் 
வேலைக்காரிதான் அண்ணாதுரை எழுதிய நாடகங்களில் சிறந்தது என்று சொல்கிறார்கள். படிப்பதை விட பார்க்க நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திராவிட இயக்கத்தினர் – குறிப்பாக அண்ணாதுரை, கருணாநிதி – எழுதிய நாடகங்கள் எல்லாமே பிரச்சார நாடகங்கள்தான் என்று நினைக்கிறேன். பிரசார நோக்கம் வரிக்கு வரி தெரிந்தாலும் பார்த்த, படித்த வரையில் அண்ணாவின் எழுத்துகளில் செயற்கைத்தனம், அலங்காரத் தமிழ் ஓரளவு குறைவாக இருக்கிறது. அடுக்குமொழி வசனங்களைக் காணோம். அதெல்லாம் கருணாநிதி ஸ்பெஷல் போலிருக்கிறது. நாடகத்தில் அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் மிக அதிகம் – ஆனால் அது அந்த நாளைய நாடகங்களில் சகஜம் என்று நினைக்கிறேன்.

நாடகம் எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக சர்ச்சையை எழுப்பி இருக்கும். குறிப்பாக தன் பகைவனுக்கு மேலும் மேலும் வெற்றி என்று தெரிந்து கதாநாயகன் பேசும் வசனங்கள் மிக நன்றாக இருந்தன. நல்லவர்களுக்கு கஷ்டங்கள் ஏன் என்பது பைபிளின் ஜாப் காலத்திலிருந்தே கேட்கப்படும் கேள்விதான் என்றாலும் இங்கே ஆவேசம் வார்த்தைகளில் அப்படியே தெறிக்கிறது. காளி கடவுள் இல்லை, வெறும் கல்தான் என்று சொல்லும் இடத்தில் அந்நாளில் விசில் பறந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

வட்டிக்கு பணம் தரும் வேதாசல முதலியார். அவர் மகள் சரசா, மகன் பெயர் மறந்துவிட்டது மூர்த்தி. அவரது ஏச்சு தாங்கமுடியாமல் ஆனந்தனின் தந்தை தூக்கில் தொங்கிவிடுகிறார். ஊரிலிருந்து திரும்பி வரும் ஆனந்தன் காளிக்கு பூஜை செய்து அப்பாவின் சாவுக்கு காரணமான முதலியாரை தண்டிக்குமாறு வேண்டுகிறான். முதலியாரோ ஜமீந்தார் ஆகிவிடுகிறார். ஆனந்தன் காளியை ஏசுகிறான். நண்பன் மணியின் உதவியோடு வெகு நாள் முன் ஊரை விட்டுப் போன ஒரு அந்தஸ்தான குடும்ப வாரிசு என்று சொல்லி திரும்பி வருகிறான், எல்லாரும் நம்பிவிடுகிறார்கள். சரசாவை மணக்கிறான், பிறகு முதலியாரை தண்டிப்பதற்காக சரசாவை கொடுமைப்படுத்துகிறான். குடி, கூத்தி என்று அலைகிறான். முதலியார் வீட்டு வேலைக்காரி அமிர்தத்துக்கும் அவர் மகனுக்கும் காதல். வீட்டை விட்டு துரத்திவிடுகிறார். அமிர்தம் இறந்துவிட்டாள் என்று நினைத்து மூர்த்தி ஒரு ஆசிரமத்தில் சேருகிறான். அங்கே வழக்கம் போல சாமியாரின் சல்லாபம். சாமியாரைக் கொன்றுவிடுகிறான் மூர்த்தி. அவனுக்காக மாறுவேஷத்தில் கோர்ட்டில் வாதாடி ஆனந்தன் அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறான். இதற்குள் அமிர்தம் ஒரு பணக்காரருக்கு மகளாக போகிறாள். அமிர்தம்-மூர்த்தி திருமணம், ஆனந்தனின் க்ளைமாக்ஸ் பேச்சு, முதலியாரின் மனம் திருந்துதல், சுபம்!

இதில் நடக்கும் பல சம்பவங்கள் இன்று cliche-க்கள் ஆகிவிட்டன. ஆனாலும் கோர்வையாகத் தொகுத்திருப்பது தெரிகிறது. நண்பன் மணி நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரம்.

வேலைக்காரி 1949இல் ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு தயாரிப்பில் திரைப்படமாகவும் வந்தது. கே.ஆர். ராமசாமி ஆனந்தன்; பாலையா மணி; நம்பியார் மூர்த்தி; எம்ஜிஆரை மணந்து கொண்ட வி.என். ஜானகிதான் கதாநாயகி அமிர்தம். இயக்கம் ஏ.எஸ்.ஏ. சாமி.

தமிழ் நாடகங்கள் எப்படி இருந்தன என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நாடகம். முக்கியமான நாடகம். நல்ல ஆவணம். மற்றவர்கள் படிப்பதை விட திரைப்பட வீடியோ கிடைத்தால் பார்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:

நாடக ஆசிரியர் மெரினா: அஞ்சலி

 அறுபது-எழுபதுகளின் ஸ்டார் எழுத்தாளர்களில் ஒருவரான மெரினா மறைந்தார்.

நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 95 வயதாம்.

மெரீனா விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவர். விகடன் அறுபது-எழுபதுகளில் பிரபலமாக இருந்ததற்கு இவரும் ஒரு முக்கிய காரணம். பரணீதரன் என்ற பேரில் ஆன்மீகப் பயணக் கட்டுரைகள் எழுதினார். ஸ்ரீதர் என்ற பேரில் கார்ட்டூன்கள் வரைந்தார். மெரினா என்ற பேரில் நாடகங்கள் எழுதினார். மூன்று அவதாரங்களுக்குமே நல்ல மார்க்கெட் இருந்தது. அவரது நாடகங்கள் அனேகமாக விகடனில் தொடராக வந்தன. அதுவும் அவற்றின் பிராபல்யத்துக்கு ஒரு காரணம். (விகடனில் பேச்சு மூச்சையே காணோம்!)

ஒரு காலத்தில் மெரினாவின் நாடகங்கள் சென்னை சபா சர்க்யூட்டில் பிரபலம். தனிக்குடித்தனம், கால்கட்டு, ஊர் வம்பு போன்ற நாடகங்கள் புகழ் பெற்றவை. அனேகமாக கூத்தபிரானுக்கு ஒரு பாத்திரம் இருக்கும். (கூத்தபிரான் ரேடியோ அண்ணா என்றும் புகழ் பெற்றிருந்தார்.) தனிக்குடித்தனத்தின் வெற்றி அதை சினிமா உலகுக்கும் கொண்டு போனது.

பொதுவாக மெரீனா நகர்ப்புற – அதுவும் சென்னை நகர, மத்தியதர வாழ்க்கையை, குறிப்பாக பிராமணக் குடும்பங்களின் வாழ்க்கையை சித்தரித்தார். அன்றைய சபா நாடகங்களைப் பார்த்த பெருவாரியானவர்கள் பிராமணர்களே. இவர்களில் பெரும்பாலோர் விகடன் வாசகர்களும் கூட. அவரது எழுத்துக்கு இப்படி ஒரு மார்க்கெட் இருந்தது அவருக்கு பெரிய பலம். அதுவே அவரது பலவீனமும் கூட. குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வரமுடியவில்லை. நாடகங்களில் பிற ஜாதியினரை சித்தரித்தாலும் (தனிக்குடித்தனம் குடை நாயுடு) அவையும் ஒரு பிராமணரின் கண்ணோட்டமாகவே இருந்தது. இவற்றைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே.

தமிழில் இன்னும் ஷேக்ஸ்பியரும் ஷாவும் இப்சனும் அவதரிக்கவில்லை. நாடகங்களில் தெரியும் அவரது உண்மையான சித்தரிப்புகள் இதனாலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. சில இலக்கியத்துக்கு அருகிலாவது வருகின்றன. தமிழ் நாடகங்கள் வரலாற்றில் அவருக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவனது படைப்புகளைப் பற்றி எழுதுவதுதான். அவரைப் பற்றிய என் எண்ணங்களை மாற்றிய மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தைப் பற்றி எழுதியதை கீழே (சில திருத்தங்களுடன்) மீள்பதித்திருக்கிறேன்.

நான் மெரினாவின் நாடகத்துக்கு எல்லாம் சிலிகான் ஷெல்ஃபில் விமர்சனம் எழுதுவேன் என்று நினைத்ததில்லை. வெறும் fluff என்று ஒரு எண்ணம் இருந்தது. சில வருஷங்களுக்கு முன்னால் படித்த மாப்பிள்ளை முறுக்கு நாடகம் என் மனதை மாற்றியது. இதில் வரும் பாத்திரங்கள் உண்மையானவர்கள். அவர்கள் நடத்தை, பேசும் விதம், பழகும் விதம் எல்லாம் என் அத்தைகளிடமும் மாமாக்களிடமும் அத்தான்களிடமும் அத்தங்காள்களிடமும் சித்தப்பாக்களிடமும் பெரியம்மாக்களிடமும் நான் கண்டவையே. நான் வளர்ந்த சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலித்திருக்கிறார். மாமியார்-மருமகள் தகராறுகள், ஷட்டகர்களின் (சகலபாடிகள்) ஈகோ பிரச்சினைகள், சென்னைக்கு வந்தாலும் மாமனார் வீட்டில் தாங்காமல் ஹோட்டலில் தங்கும் மாப்பிள்ளை, பக்கத்து வீட்டில் மைசூர்பாக் வாசனை பிடிக்கும் பாட்ராச்சாரி, டிரான்சிஸ்டரில் கமெண்டரி கேட்டுக்கொண்டே இருக்கும் இளைஞன், பொருளாதார காரணங்களுக்காக வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கும் பெண்கள், அவர்களுக்கு வீட்டிலும் வெளியிலும் இருக்கும் பிரச்சினைகள், பாத்திரச் சீட்டு, நகைச் சீட்டு, புடவை வாங்கிவிட்டு பணம் தரப் படும் அவதி எல்லாம் என் குடும்பத்திலும் உறவினர் நண்பர் குடும்பங்களிலும் அனுபவித்தவையே, பார்த்தவையே. அந்தக் காலகட்டத்தை கண் முன்னால் கொண்டு வந்திருக்கிறார். இதை நாகம்மாள், தலைமுறைகள், கோபல்ல கிராமம் genre படைப்பு. ஆனால் இரண்டாம் வரிசைப் படைப்பு.

என்ன கதை? ஒரு வழக்கமான அப்பா, அம்மா; ஒரு பெண் ரமா பணக்கார மாப்பிள்ளை கிருஷ்ணமூர்த்திக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். இன்னொரு பெண் சாரு சொந்தத்தில் (மத்திய தரக் குடும்பம்) தியாகுவை மணந்து கொண்டிருக்கிறாள். சாருவுக்கும் மாமியாருக்கும் தகராறு. மாமியார் தியாகுவை smother செய்கிறாள். கிருஷ்ணமூர்த்தி மாமனார் வீட்டுக்கு வருவதே இல்லை. வழக்கமான பூசல்கள், சண்டைகள், நேற்று வரை கரித்துக் கொண்டிருந்தவர் நோய்வாய்ப்படும்போது ஆறுதலாக இருப்பது என்று போகிறது. கதாபாத்திரங்கள் உண்மையானவை. கதை? அதைத்தான் காணோம். மெரீனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை.

குறைகள் இல்லாத படைப்பு என்றெல்லாம் இல்லை. முக்கியமான குறை என்றால் இது நாடகமே இல்லை, நாவலை உரையாடல் வழியாக சொல்கிறார் அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால் இந்த நாடகத்தைப் பார்க்க வேண்டியம் அவசியம் இல்லை, படித்தாலே போதும். கதை என்று ஒன்று இல்லை. திடீரென்று ஒரு முப்பது முப்பத்தைந்து வருஷம் பின்னால் போய் ஒரு ஃபோட்டோ எடுத்த மாதிரி இருக்கிறது. ஃபோட்டோவில் உண்மை வந்திருக்கிறது, ஆனால் கலை அம்சம் குறைவு. அதுவும் இருந்திருந்தால்!

மாப்பிள்ளை முறுக்கு டிவி சீரியலாகவும் வந்ததாம். அதைக் கண்டு மெரீனா வெறுத்துப் போய் இனி மேல் டிவி சீரியலுக்கு நாடகங்களைக் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டாராம்.

மெரினாவின் நாடகங்களை மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று வைத்திருக்கிறேன். வளர்ந்த சூழ்நிலையை விட்டு வெளியேறிய பிறகுதான் அதைப் பிரதிபலிக்கும் படைப்புகளை take it for granted ஆக எடுத்துக் கொள்ளும் மனநிலை மாறுகிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

மெரீனா ஒரு தளம் நடத்துகிறார். அவரைப் பற்றி மேலே தெரிந்து கொள்ள விரும்பினால் அங்கே போகலாம். இப்போது இந்தத் தளம் செயல்படவில்லை.

மெரினாவின் நாடகங்கள் எதையாவது பார்த்திருக்கிறீர்களா? படித்திருக்கிறீர்களா? பரணீதரனின் பயணக் கட்டுரைகள்? ஸ்ரீதரின் கார்ட்டூன்கள்? உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்!

தொடர்புடைய சுட்டிகள்:
மெரினாவின் தளம்
மெரினாவுக்கு நாடக சூடாமணி விருது
தனிக்குடித்தனம் நாடக விமர்சனம் மற்றும் மெரினாவுக்கு பாராட்டு
மெரினாவைப் பற்றிய ஒரு கட்டுரை

தமிழறிஞர் வரிசை 25: வெ. சாமிநாத சர்மா: பாணபுரத்து வீரன், அபிமன்யு

சாமிநாத சர்மாவை இப்போது மறந்தே போய்விட்டோம். பல மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் எழுதி கலக்கி இருக்கிறார். ஒரு நாற்பது வருஷத்துக்கு முன் கூட அவருடைய தாக்கம் உள்ளவர்களை பரவலாகப் பார்க்க முடிந்தது. அவர் கார்ல் மார்க்ஸ் பற்றி எழுதிய புத்தகம் ஓரிரு தலைமுறைகள் முன்னால் மிகவும் முக்கியமான ஒன்று. நான் கண்ட நால்வர் ஒரு அருமையான memoir.

சர்மா அந்த காலத்துக்கு powerful நாடகங்களை எழுதினார். உண்மையில் இவரை விடப் புகழ் பெற்ற அண்ணா, கருணாநிதி போன்றவர்கள் பாணியில் இவர் தாக்கம் தெரிகிறது. இவருடைய நடையை, கதை சொல்லும் விதத்தைத்தான் வேலைக்காரி, ஓரிரவு, சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம், பராசக்தி, மனோகரா திரைப்படங்களில், நாடகங்களில் பின்பற்றி இருந்தார்கள். நீள நீள உணர்ச்சி பொங்கும் வசனம், ஒரு அஜெண்டாவை வைத்து எழுதப்படும் நாடகங்கள் எல்லாமே சர்மாவில் நாடகங்களில் இருந்து பெறப்பட்டவையே.

சிறு வயதில் பாணபுரத்து வீரன் நாடகத்தைப் பற்றி ரேடியோவில் ஏ.பி. நாகராஜன் பேசக் கேட்டிருக்கிறேன். நாகராஜன் அதில் ஸ்திரீபார்ட்டாம். எஸ்.வி. சஹஸ்ரநாமம் வாலீசனாக நடிப்பாராம். வாலீசன் என்றால் வில்லியம் வாலஸ் (பிரேவ்ஹார்ட் திரைப்படம் வில்லியம் வாலசைப் பற்றித்தான்.), கதாநாயகன் புரேசன் என்றால் ராபர்ட் ப்ரூஸ் (சிலந்தி மீண்டும் மீண்டும் வலை பின்னுவதைப் பார்த்து inspire ஆகி ஏழாவது முறையும் போரிட்ட ஸ்காட்லாண்டு மன்னன்) அவர்களை இந்தியாவுக்கு குடி பெயர்த்து எழுதப்பட்ட நாடகம். ஐம்பதுகளில் சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். மாதிரி யாரையாவது வைத்து சினிமா எடுத்திருந்தால் ஓடி இருக்கும்.

டி.கே. சண்முகம் இந்த நாடகத்தை நடத்த விரும்பினார். நாடகத்தில் வாலீசனும் புரேசனும் தேசபக்தி பொங்கும் வசங்களை பேசுவார்கள், அதனால் நாடகம் தடை செய்யப்பட்டிருந்தது. என்ன செய்வது? நாடகத்தின் பேரை “தேசபக்தி” என்று மாற்றினார்கள், பாணபுரத்து வீரனுக்குத்தான் தடை, தேசபக்திக்கு இல்லை! அப்படி நடத்தப்பட்ட நாடகம் மக்களிடையே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று சண்முகம் அண்ணாச்சி குறிப்பிடுகிறார். சஹஸ்ரநாமம் சொல்கிறார்:

அப்போது நான் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபையில் டி.கே.எஸ். அவர்களோடு இருந்தேன். அவர் நடத்திய ‘தேசபக்தி’ நாடகத்தில் வாலீசன் என்ற பாத்திரத்தை நான் ஏற்றேன். அது ஏறக்குறைய பகத்சிங்கைப் பிரதிபலிப்பதுதான். நான் வாலீசனாக மேடையில் தோன்றினாலே, ஜனங்கள் எல்லாம் ‘பகத்சிங்குக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள். முதல்முதலாக இந்த நாடகத்தில்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், காந்திஜியின் வரலாற்றை வில்லுப் பாட்டாகப் பாடி அரங்கேற்றினார்.

அபிமன்யு கதை தெரிந்ததுதான். அதைத்தான் வீரம் என்ற ஃபார்முலாவை வைத்து எழுதி இருக்கிறார்.

உண்மையை சொல்லப் போனால் இரண்டுமே நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய நாடகங்கள் இல்லை. ஆனால் முன்னோடி நாடகங்கள். பாட்டை அடிப்படையாக வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட நாடகங்கள் பெரிய தாகத்தை உண்டாக்கி இருக்கும் என்று நினைக்கிறேன். முன்னோடி என்பதற்காக, அதுவும் அண்ணா-கருணாநிதி ஸ்டைல் நாடக/திரைப்பட எழுத்துக்கு முன்னோடி என்பதற்காகத்தான் படிக்க வேண்டும். எனக்கு பா. வீரன் மீது கொஞ்சம் நாஸ்டால்ஜியா உண்டு, அதனால்தானோ என்னவோ எனக்கு அந்த நாடகம் பிடித்திருக்கிறது.

அபுனைவுகள் விளக்கக் கட்டுரைகள் என்று எழுதித் தள்ளி இருக்கிறார். தான் அறிந்த அனைத்தையும் தமிழில் எழுதி தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்துவிட வேண்டும் என்ற பெரும் ஆவல் இருந்திருக்கிறது, அதற்காக தளராமல் முயற்சித்திருக்கிறார். அவருடைய சரளமான நடை இந்த முயற்சிகளுக்கு பெரிய பலம்.

ஆனால் அவற்றில் பலவற்றை இன்று படிக்கவே முடிவதில்லை. காந்தியும் ஜவஹரும், காந்தி யார்? போன்றவை இன்று காலாவதி ஆகிவிட்டன். சுதந்திர முழக்கம் என்று ஒன்று எழுதி இருக்கிறார், அய்யோ அய்யய்யோ! இக்கரையும் அக்கரையும், மனிதன் யார்? போன்ற புத்தகங்களை புரட்டிப் பார்க்கவே தம் கட்ட வேண்டி இருக்கிறது. இவற்றை எல்லாம் அந்தக் காலத்தில் படித்தார்களா என்று வியந்தேன். ஆனால் பார்லிமெண்ட், நமது தேசியக்கொடி, ஐக்கிய தேச ஸ்தாபனம், அரசாங்கத்தின் பிறப்பு போன்றவற்றுக்கு ஒரு காலத்தில் தேவை இருந்திருக்கும். ரூஸ்ஸோ, ருஷ்ய சரித்திர வரலாறு, சோவியத் ரஷ்யா, கிரீஸ் வரலாறு போன்றவற்றை இன்னும் படிக்கலாம். இவை சிறந்த அறிமுகப் புத்தகங்கள்.

சர்மா எழுதுவதற்காகவே வாழ்ந்தவர். அவர் மனைவி இறந்த பிறகு அவளைப் பற்றி பத்து கடிதங்கள் எழுதி அதையும் “அவள் பிரிவு” என்ற புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பின்னால் புத்தகமாக வெளியிடப் போகிறோம் என்ற பிரக்ஞையுடன் கடிதம் எழுதி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

சாமிநாத சர்மாவைப் பற்றி உங்கள் யாருக்காவது ஏதாவது நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டி: சாமிநாத சர்மா பற்றி தினமணியில்

அண்ணாவின் “ஓரிரவு”

(மீள்பதிவு) இந்த முறை மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன்.

அண்ணாவின் நாடகங்கள் கல்கியை மிகவும் impress செய்திருக்கின்றன. ஓரிரவு நாடகத்தைப் பார்த்துவிட்டு அண்ணாவுக்கு அவர் தமிழ்நாட்டு பெர்னார்ட் ஷா என்றெல்லாம் பட்டம் கொடுத்திருக்கிறார். ஆனால் இதை திரைப்படமாக பார்த்தபோது ஒன்றும் பிரமாதமாக இல்லை. இதை விட வேலைக்காரி திரைப்படம் சிறப்பாக இருந்தது. அனல் பறக்கும் வசனங்கள்! என்னடா போயும் போயும் இவ்வளவு சுமாரான ஒரு நாடகத்தைப் பார்த்து கல்கி இப்படி பூரித்துப் போய்விட்டாரே என்று நினைத்திருந்தேன்.

நான் நாடகத்தை அப்படியே எடுத்து பாட்டுகளை மட்டும் சேர்த்து படமாக்கி இருக்கிறார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டேன். படிக்கும்போதுதான் ஓரிரவின் சிறப்பு புரிந்தது. திரைப்படத்தில் கதையின் மெயின் கதைக்கு தேவை இல்லாத பகுதி என்று கட் செய்துவிட்ட பகுதிகள்தான் நாடகத்தை உயர்த்துகின்றன. அண்ணா இதை ஓர் இரவில் நடக்கும் காட்சிகளாக கற்பனை செய்திருக்கிறார். மெயின் கதை வழக்கமான பாய்ஸ் கம்பெனி நாடகக் கதைதான். ஆனால் இரவில் நடக்கும், கதைக்கு நேரடியாக தொடர்பில்லாத காட்சிகள்தான் இதை குறிப்பிடப்பட வேண்டிய நாடகமாக மாற்றுகின்றன. எனக்குத் தெரிந்து இப்படிப்பட்ட ஒரு முயற்சி இதற்கு முன்னால் தமிழில் நடந்ததில்லை, இதற்கு அப்புறமும் வெகு நாள் நடந்ததில்லை. (சோ ராமசாமி மெட்ராஸ் பை நைட் என்று ஒரு நாடகத்தை தன் வழக்கமான பாணியில் எழுதி இருக்கிறார், அதுவும் சென்னையில் ஒரு இரவுக் காட்சிகள்தான்.)

ஓரிரவின் கதை ஒன்றும் பிரமாதமில்லை. சில பல ஸ்டீரியோடைப் பாத்திரங்கள், நம்பக் கஷ்டமான தற்செயல் நிகழ்ச்சிகள், செயற்கையான மெலோட்ராமா காட்சிகள் நிறைந்ததுதான். நாயகி வீட்டில் இரவு திருட வருபவன் யார்? அவளுடைய மாற்றாந்தாய் சகோதரன். திருடனைக் கண்டதும் நாயகி என்ன செய்கிறாள்? வில்லன் என்னை வற்புறுத்தி திருமணம் செய்ய முயற்சிக்கிறான், அப்பாவால் தடுக்க முடியவில்லை, நீ என் கள்ளக் காதலனாக நடி என்கிறாள். கள்ளக் காதலனாக நடிக்கும்போது யார் வரவேண்டும்? கரெக்ட், நாயகன், அவளுடைய உண்மையான காதலன் வருகிறான். என்னாகும்? சந்தேகப்படுகிறான். கதை முடியும்போது என்னாகும்? நல்லவர்கள் எல்லாம் ஒன்று சேர்கிறார்கள். அப்புறம்? சரியாகச் சொல்லிவிட்டீர்கள், வில்லனை முறியடிக்கிறார்கள். சுபம்!

அண்ணா ஒரு பாய்ஸ் நாடகக் கதையை தன் பாணி வசனங்களை மாட்டும் ஒரு சட்டமாக (framework) எப்போதுமே பயன்படுத்துவார். இந்தக் கதையில் சமுதாய இழிவுகளை – விபசாரிகள், மைனர்கள், திருடர்கள், கீழ்மட்டத்து மக்கள் இத்யாதி – காட்டுகிறார். வழக்கம் போல பிரசார நோக்கத்துக்குத்தான். ஆனால் அந்தக் காட்சிகளில் ஓரளவு உண்மை, ரியலிசம் தெரிகிறது. இது அந்தக் காலத்துக்கு பெரிய புரட்சியாக இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக ஒரு முன்னோடி நாடகம். கல்கிக்கு அந்த வித்தியாசம் புரிந்திருக்கிறது, அதனால்தான் பாராட்டி இருக்கிறார்.

கல்கி எழுதியது:

தற்கால நாடகக் கலையை பற்றி பேசும்போதெல்லாம் ஆங்கிலம் படித்த மேதாவிகள் பெர்னார்ட் ஷாவுடன் இப்சனையும் நினைத்து ஒரு குரல் அழுவது வழக்கம். நாடகம் கீடகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு பெர்னார்ட் ஷாவுக்கு ஒரு இப்சனுக்கு எங்கே போவது? திருடப் போக வேண்டியதுதான்! என்று சொல்லுவார்கள். அப்படியெல்லாம் திருடவும் கிருடவும் போக வேண்டாம், தமிழ் நாடு நாடகாசிரியர் இல்லாமல் பாழ்த்துப் போகவில்லை என்று சமீபத்தில் தெரிந்து கொண்டேன்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சிராப்பள்ளியில் ‘ஓரிரவு’ என்னும் நாடகத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்ததன் பயனாக “இதோ ஒரு பெர்னார்ட் ஷா தமிழ் நாட்டில் இருக்கிறார்! இப்சனும் இருக்கிறார்! இன்னும் கால்ஸ்வொர்த்தி கூட இருக்கிறார்!” என்று தோன்றியது.

ஓரிரவு என்னும் நாடகத்தின் ஆசிரியர் திரு சி.என். அண்ணாதுரை.
   – (கல்கி இதழ் 07-12-47)

எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் ஒன்றான “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ” பாட்டு கீழே. காதலர்கள் நெருங்குவதை காட்ட தமிழில் பூக்கள் ஒன்றை ஒன்று நெருங்குவதாக காட்டும் cliche அனேகமாக இந்த பாட்டில்தான் ஆரம்பம் ஆகி இருக்க வேண்டும். அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த cliche-க்காகவாவது இந்த வீடியோவை கட்டாயம் பாருங்கள்.

தொடர்புடைய சுட்டிகள்:
ஓரிரவு திரைப்படம் பற்றி ஆர்வி
ஓரிரவு திரைப்படம் பற்றி ராண்டார்கை

டி.கே. சண்முகத்தின் “எனது நாடக வாழ்க்கை”

(மீள்பதிவு, முதல் பதிவு நவம்பர் 2014-இல்)

kaaviyath_thalaivanமுதல் பதிவு வசந்தபாலன் இயக்கி, ஜெயமோகன் வசனம் எழுதி, சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, நாசர் நடித்த காவியத் தலைவன் திரைப்படம் வெளியான தருணத்தில் எழுதப்பட்டது. படம் ஓடவில்லை என்று நினைவு. திரைப்படத்தின் களன் 1940களின் நாடக உலகம்.

எனக்குத் தெரிந்த வரையில் அந்தச் சூழலைப் பற்றிய மிகச் சிறந்த புத்தகம் டி.கே. ஷண்முகம் எழுதிய “எனது நாடக வாழ்க்கை“தான். பழைய பதிவை இங்கே மீள்பதித்திருக்கிறேன். மின்னூலுக்கும் சுட்டி இருக்கிறது, படித்துப் பாருங்களேன்!

டி.கே. சண்முகம் யாரென்று தெரியாதவர்களுக்கு: தமிழ் நாடகத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவர் நடித்த அவ்வையார் போன்ற நாடகங்கள் பெரும் வெற்றி பெற்றன. நாடக பாரம்பரியம் உள்ள குடும்பம். அப்பா, இரண்டு அண்ணன்கள், ஒரு தம்பி எல்லாருமே நாடக நடிகர்கள், பாடகர்கள், நிர்வாகிகள் இத்யாதிதான். சினிமாவிலும் இவரும் தம்பி டி.கே. பகவதியும் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் சுப்பிரமணிய சிவாவாக நடித்தார். எம்.எல்.சி.யாக இருந்திருக்கிறார். கமலஹாசன் இவரை கவுரவப்படுத்தத்தான் ஒரு திரைப்படத்துக்கு “அவ்வை ஷண்முகி” என்று பேர் வைத்தார். சென்னையில் ஒரு காலத்தில் லாயிட்ஸ் ரோட் என்று அழைக்கப்பட்ட சாலை இன்று அவ்வை சண்முகம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

எனது நாடக வாழ்க்கை சமீபத்தில் ஜெயமோகன் பரிந்துரைத்த தமிழ் தன் வரலாறுகளில் ஒன்று.

புத்தகம் ஒரு லூப் மாதிரி போகிறது. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை

  • சண்முகம் நடிக்கும் ஒரு நாடகக் குழு ஒரு ஊருக்குப் போகும்.
  • நாடகத்துக்கு துட்டு வரும்/வராது.
  • அடுத்த ஊர்

அவ்வளவுதான் புத்தகம். டி.கே.எஸ். மீண்டும் மீண்டும் இதையேதான் எழுதுகிறார்.

பிறகு எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா? நிகழ்ச்சிகள் முக்கியமே இல்லை. அந்த நிகழ்ச்சிகள் வழியாக சித்தரிக்கப்படும் அன்றைய நாடகச் சூழல்; மற்றும் சில ஆளுமைகள் மட்டுமே புத்தகத்தில் முக்கியமானவை.

அன்றைய நாடகச் சூழல் இன்றைய சினிமா சூழலை ஓரளவு ஒத்திருக்கிறது. நாடகத்தை எழுதுபவர்கள், பாடி நடிக்கும் ஸ்டார்கள் ஆகியவர்களுக்குத் தேவை இருந்திருக்கிறது. நாடகம் தயாரிக்க, நாடகக் குழு நடத்த நிறைய முதலீடு தேவைப்பட்டிருக்கிறது. ரிஸ்க் அதிகம், ஆனால் நல்ல லாபம் வரலாம். நடிகர்களைச் சுற்றி கொஞ்சம் ஒளி வட்டம் இருந்திருக்கிறது. ஸ்டார்களை ஒரு சபையிலிருந்து இன்னொரு சபைக்குக் ஹைஜாக் செய்ய முயற்சிகள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. நிர்வாகிகள் நினைத்தால் ஏமாற்றலாம், ஏமாற்றுகிறார்கள். ஆசிரியர்/ஸ்டார்களின் ஈகோ எப்போதும் பிரச்சினை. (ஜே.ஆர். ரங்கராஜு ராயல்டி விஷயத்தில் பயங்கர கறாராக இருக்கிறார்) எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் திடீரென்று வசூல் ஆகாமல் போகலாம், சாப்பாட்டுக்கே திண்டாடலாம். புராணக் கதைகள், பாட்டுகளுக்குக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து கொண்டே போய் சமூக நாடகங்கள் முக்கியத்துவம் பெறுவது, சினிமா அலையில் நாடகம் அழியத் தொடங்குவது ஆகியவையும் சொல்லப்படுகின்றன. இந்த சூழலை genuine ஆக சித்தரித்திருக்கிறார். பழைய சினிமா ரசிகர்கள் பல நடிகர்களின் பேர்களை – எம்.கே. ராதா, ஃப்ரென்ட் ராமசாமி, புளிமூட்டை ராமசாமி, எம்.ஆர். சாமிநாதன், எம்.ஆர். ராதா, எஸ்.எஸ்.ஆர்., கே.ஆர். ராமசாமி, எஸ்.வி. சஹஸ்ரநாமம், பி.டி. சம்பந்தம் இத்யாதி – இங்கே recognize செய்யலாம். பொதுவாக எல்லாரும் சினிமாவுக்குப் போக முயற்சித்திருக்கிறார்கள்.

பல ஆளுமைகளைப் பற்றி பேசினாலும் தனியாக நிற்பது இரண்டு. ஒன்று சங்கரதாஸ் சுவாமிகள். சுவாமிகள் அபார திறமை உள்ளவர். அனேகமாக எல்லா நடிகர்களிடமும் அவரது தாக்கம் உண்டு. கடைசி காலத்தில் வாத நோயால் பாதிக்கப்பட்டு பேசக் கூட முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார். பாட்டும் வசனமும் எழுதுவதும் சொல்லித் தருவதுமே வாழ்க்கையாக இருந்தவர் பேச, எழுத முடியாமல் கடைசி நாட்களைக் கழித்தது சோகம்தான். இரண்டு என்.எஸ்.கிருஷ்ணன். என்.எஸ்.கே. எவ்வளவோ உயர்ந்த நிலைக்குப் போன பின்னும் இவர்கள் கம்பெனியைத்தான் தன கம்பெனியாக கருதி இருக்கிறார், கடைசி வரை நட்போடு இருந்திருக்கிறார். அவரது விசுவாசம் மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது.

இது முதல் பகுதியே. 1950-களின் முற்பாதி வரை cover செய்திருக்கிறார். அதற்கப்புறமும் இருபது வருஷம் இருந்திருக்கிறார். அந்தக் கால கட்டத்தைப் பற்றி இரண்டாம் பகுதி எழுதத் திட்டம் இருந்திருக்கிறது, அதைப் பற்றி பல இடங்களில் சொல்லவும் சொல்கிறார். ஆனால் எழுதுவதற்கு முன் இறந்துவிட்டார்.

புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

இதைத் தவிரவும் நாடகக் கலை, நாடகச் சிந்தனைகள், சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்கள் கிடைக்கின்றன. விஷயங்கள் இவற்றில் ஓரளவு ரிபீட் ஆகின்றன. எல்லா புத்தகங்களும் தமிழ் Virtual பல்கலைகழகத்தில் (Tamil Virtual University) மின் புத்தகங்களாகக் கிடைக்கிறன.

படிக்கலாம் என்ற அளவில்தான் மதிப்பிடுவேன். Genuineness, ஒரு தொழில் சூழலின் சித்தரிப்பு இரண்டும்தான் இதன் பலம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்