PS 2

இது திரைப்படத்தைப் பற்றிய பதிவு அல்ல.

கண்ணன் மகேஷ் எழுதிய நீலமதியின் காதல் என்ற புத்தகத்தைப் படித்தேன். புத்தகம் சுமார்தான். சுவாரசியமாக இருந்தது ஒரே விஷயம்தான். பொன்னியின் செல்வனை அப்படியே 60 வருஷத்துக்குப் பிறகு நடந்த வரலாற்றுக் கதையாக நகல் எடுத்து எழுதியது போலிருந்தது.

கதை ராஜராஜ சோழனின் பேரனும் ராஜேந்திர சோழனின் மகனுமான ராஜாதிராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் நடைபெறுகிறது. ராஜாதிராஜ சோழனின் தம்பி இரண்டாம் ராஜேந்திரன் பட்டத்து இளவரசன். இன்னொரு தம்பி வீரராஜேந்திரனுக்கு ஆதித்த கரிகாலன் போல முறிந்துபோன காதல். நந்தினி எதிரி வீரபாண்டியனைத் தன் கணவன் என்கிறாளா, இங்கே காதலி சங்கபை எதிரி சோமேஸ்வர சாளுக்கியனுக்கு ராணி.

முதல் காட்சியில் நாயகன் பூரணசந்திரன் – அதாவது வந்தியத்தேவன் – காஞ்சியிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருக்கிறான். நடுவில் கடம்பூரில் ஒரு நாள் இரவு தங்குகிறான். அங்கே சிற்றரசர்கல் இரண்டாம் ராஜேந்திரனுக்கு பதிலாக ராஜாதிராஜனின் மகன் விஜயாலயனை மன்னனாக்க வேண்டும் என்று சதி செய்வதைத் தெரிந்து கொள்கிறான். ரவிதாசன் முதலான ஆபத்துதவிகள் நாடு முழுதும் ஊடுருவி இருப்பதைப் போல இங்கே சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனின் ஆட்கள் ஊடுருவி இருக்கிறார்கள். குடந்தையில் ஒரு ஜோதிடர் கூட இருக்கிறார். அருண்மொழிவர்மன் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டுவதைப் போல இரண்டாம் ராஜேந்திரன் த்ன் பதவியைத் துறந்து விஜயாலயனை பட்டத்து இளவரசனாக்குகிறான். ஆதித்த கரிகாலனின் இறப்பு போல இங்கே விஜயாலயனின் தம்பி கொல்லபப்டுகிறான். அந்தப் பழியை கங்கவரையர் ஏற்றுக் கொள்கிறார். நடந்த வரலாற்றை விடமுடியவில்லை, அதனால் ராஜாதிராஜன், விஜயாலயன் இருவரும் போரில் இறந்து இரண்டாம் ராஜேந்திரன் அரசனாகிறார்.

பொன்னியின் செல்வனுக்கு தமிழகத்தில் இருந்த தாக்கத்தைக் கண்டு வியப்பாக இருக்கிறது. அனுஷா வெங்கடேஷ் (காவிரிமைந்தன்), விக்ரமன் (வந்தியத்தேவன் வாள்), பாலகுமாரன் என்று பலரும் பொ.செ.வை. வரலாறாகவே கொண்டு அதை நீட்டித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதைத் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். என் தலைமுறையைக் கூட அது கட்டிப் போட்டிருந்தது, ஐம்பதுகளின் வாசகர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்றைய இளைஞர்களும் திரைப்படத்தின் தாக்கத்தினால் அதை மீண்டும் படிக்க வாய்ப்பிருக்கிறது. மிக அதிகமாக விற்ற தமிழ் நூல் இதுதான் என்று எங்கோ படித்தேன்.

பொ. செல்வன் நல்ல நாவல்தான்; என் கண்ணில் இலக்கியம்தான் (நான் மதிக்கும் வாசகர்கள் பலர் இதை வணிக நாவல் மட்டுமே என்றுதான் மதிப்பிடுகிறார்கள்.) ஆனால் புதுமைப்பித்தனுக்கும் அசோகமித்ரனுக்கும் சுந்தர ராமசாமிக்கும் ஜெயமோகனுக்கும் இல்லாத தாக்கம் எப்படி இந்த நாவலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று புரியவில்லைதான். குறிஞ்சி மலர் பத்து பதினைந்து வருஷம் பொதுப் பிரக்ஞையில் இருந்திருக்குமா? மு.வ. ஒரு பத்து வருஷம் தாக்குப் பிடித்திருப்பாரா? ஏன் சுஜாதா கூட 20-25 வருஷம்தான் என்று நினைக்கிறேன். ஆனால் இதன் தாக்கம் ஐம்பது அறுபது வருஷமாக நீடிக்கிறது…

கண்ணன் மகேஷ் என்ற பேரை நான் ஜெயமோகனின் வணிக நாவல் பரிந்துரைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். வாழ்வென்னும் மகாநதி என்ற நாவலை ஜெயமோகன் பரிந்துரைத்திருக்கிறார். எனக்கு கண்ணன் மகேஷைப் பற்றி அதிகம் தெரியவில்லை, இவரது புகைப்படமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

நக்கலின் உச்சம்

கண்ணில் மீண்டும் பட்டது. இபோது வெடிச்சிரிப்பு இல்லைதான், ஆனால் புன்முறுவல் நிச்சயம் உண்டு.

நகுபோலியன்‘ எழுதிய ‘மழநாட்டு மகுடம்‘ சிறுகதையை எப்போது முதலில் படித்தேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் படித்தபோது வாய்விட்டு வெடிச்சிரிப்பு சிரித்தேன் என்று நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் சாண்டில்யனும், ஜெகசிற்பியனும், நா.பா.வும் குறிப்பாக கோவி. மணிசேகரனும் எழுதிய பாணியை அநியாயத்துக்கு நக்கல் அடித்திருக்கிறார். அவர் எழுத்து வேறு ஏதாவது கிடைக்குமா என்று தேடி இருக்கிறேன், இது வரை கிடைத்ததில்லை.

கணையாழியில் வந்த சிறுகதைகளில் தனக்கு மிகவும் பிடித்தது என்று அசோகமித்திரன் இக்கதையை தேர்ந்தெடுத்தாராம்.

நகுபோலியனின் நிஜப் பெயர் பாலசுப்ரமணியனாம். டெல்லிக்காரராம். அவரது புகைப்படத்தை பசுபதி சாரின் தளத்தில் இருந்த ஒரு படத்திலிருந்து வெட்டி ஒட்டி இருக்கிறேன்.

வசதிக்காக சிறுகதையை இங்கே வெட்டி ஒட்டி இருக்கிறேன். தவறாமல் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒரிஜினல் பதிவை இங்கே படிக்கலாம். நகுபோலியனைப் பற்றி சில விவரங்களும் தருகிறார்.

மழநாட்டு மகுடம்
அத்தியாயம் 303

கோப்பெருந்தேவி எங்கே?

அலறும் ஆந்தைகளும் அயர்ந்து வாயடைக்கும் அந்த அர்த்தயாம நள்ளிரவின் அந்தகாரக் காரிருளைக் கிர்ரெனத் கிழித்துக் கொண்டு குளவனூர்ச் சாலையிலே கோழியூர்க் கோட்டத் திருப்பத்தின் திசையை நோக்கிக் காற்றெனக் கடுகிக் கொண்டிருந்தது ஒரு கருங்குதிரை. அரச இலைகளும் அசையாது நிற்கும் அந்த அப்பிராகிருத மெளனச் சுடுகாட்டமைதியிலே, வெள்ளியென வீசும் வேனில் முழுமதியின் தண்ணொளி மிருதுமையின்பத்துவத்தையும் நுகராது, சிந்தையே உருவாய், சிற்சாண்டில்யமாய், மண்ணில் வரைந்த மாயா ஜெகசிற்பாகாரமாய் அப்புரவிமீது வீற்று விரைந்தேகும் அவ்வீரவுருவம் யார்? யாரா? வேறு யாருமில்லை – பொன்னியூர்ச் சதுக்கத்திலே காளிக்கோட்டம் காத்தவராயன் கையில் கடிவாளத்தைத் திணித்துவிட்டு அவனுடைய பொன்னிறச் சிங்களப் பரியைப் போக்குக் காட்டியழைத்துக் கொண்டோடியதாய்ப் போன அத்தியாயத்தில் சொன்னோமே, அதே திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிதான் இப்போது அந்தக் (ஆச்சரியக்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்து நடத்துகிறார்!

சுற்றிச் சுழன்றடித்துக் கொண்டிருந்த சூறாவளியின் பேரிரைச்சலையும், சாலையின் இருமருங்கும் அளாவி நின்ற பாலைநிலத்தினூடே அந்தக் கிருஷ்ணபக்ஷப் பின்னிரவில் நொடிக்கொரு முறை மிதந்து வந்த வன விலங்குகளின் காட்டுமிருக ஓலத்தையும் மீறிக்கொண்டு அவர் நெஞ்சில் எழுந்து ஓங்கி நின்ற கேள்வி ஒன்றே ஒன்றுதான் – ”கோப்பெருந்தேவி எங்கே?”

கங்கைகொண்ட சோழபுரம் கலங்கரை விளக்கத்தின் பண்டகசாலையருகே நான்கைந்து நாட்களுக்கு முன் வீரவள்ளாள ஹொய்சலனைக் கண்டதிலிருந்தே இந்தக் கேள்வி அவரை வெகுவாக வாட்டி வதைத்தது; ”கோப்பெருந்தேவி எங்கே?” – அந்தக் கஹனாந்தகார இருட் செறிவினூடே அக்கேள்வி சுழன்று சுழன்று எதிரொலித்தது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியின் பேருள்ளத்துள்தான்.

அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு விதத்தில் ஒன்றுமே பிடிக்கவில்லை போலவும் பட்டது. பின்? கட்டுண்ட கைகாலனாய்க் கூலவணிகர் தெருமுனையில் வீர வள்ளாள வெண்கலநாதனை ஏன்தான் கண்டோம் என்றுகூட ஒரு நொடிப்பொழுது தோன்றியது நம்பிக்கு. அவனை அந்நிலையில் கண்டிராவிட்டால் அத்தனை அவசரமாய்க் கோப்பெருந்தேவியைத் தேட வேண்டிய பிரமேயமே ஏற்பட்டிராதே! ஆழ்வார் திருநகரியில் அலைச்சலைப் பெருமானின் மடைப் பள்ளியில் அமர்ந்திருக்க வேண்டிய அவருக்கு, அவளைத் தேடிக்கொண்டு பொன்னியூர் செல்லும்படியும் நேர்ந்திருக்காது; அங்கே சற்றும் எதிர்பாராத விதமாய்ப் புனைப் மொழிமடந்தையின் சீனக் காதலனை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியும் வந்திருக்காது.

அவனைக் கண்ட அதிர்ச்சியில்தானே அப்படிக் காத்தவராயன் குதிரையைக் கடிவாளமில்லாமலேயே ஓட்டி வர வேண்டியதொரு நிர்ப்பந்தம் ஏற்¡ட்டது? (பின் என்ன, தலைவிதியா?) அவருக்கே ஒரு கணம் சிரிப்பு வந்தது – பீறிட்டுக் கொண்டு!

அது போகட்டும் – அந்தச் சீனத்து ஆள் அங்கேயெப்படி முளைத்தான்? அப்படியானால் புனைமொழி மடந்தை தன்னிடம் முந்தாநாள் கூறியதெல்லாம்-? மண்ணகரம் மடவளாத்தில் மலங்குவிழி மங்கையைச் சந்தித்தபோதே தோன்றியிருக்க வேண்டும் தனக்கு!

அதற்காகத் தவறு ஒன்றும் தன்னதில்லை என்று தமக்குத் தாமே புரிந்து கொண்டார் சைவ நம்பி. எந்தக் கேள்விக்கு விடை முதலில் கண்டிபிடிப்பது? எதை ஒதுக்குவது? ஒரே குழப்பமாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் அந்தப் புத்த பிக்ஷுதான் காரணம்!
திடீரென்று ஏதோ முடிவுக்கு வந்தவராய் – இவ்வாறு அவர், அதுவும் இப்போது, இந்த அர்த்தராத்திரித் தனிமையிலே செய்வார் என்று நாம் சற்றும் எதிர்பார்த்திருக்க முடியாத திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி, இடக்கையிலிருந்த குத்துவீச்சுக் கத்தியைச் சடாரென்று வலக்கைக்கு மாற்றித் தலைக்குமேல் உயர்த்தி மூன்று சுழற்றுச் சுழற்றிக் குவிந்து கிடக்கும் கும்மிருட்டிலே குருட்டிலக்காக வீசுபவர் போல வீசினார். வீசியவர் அதே சூட்டில் டக்கென்று கீழே குதித்துக் குதிரையையும் இழுத்துக்கொண்டு குத்து வாளை எறிந்த கோணத்திலேயே வேகமாக ஓடலானார்.

என்ன வந்துவிட்டது திடீரென்று திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பிக்கு? ஹ! அது என்ன அவ்வளவு எளிதில், அவ்வளவு விரைவில், விளக்கிவிடக்கூடிய விஷயமா? அதை உடனுக்குடன் அறிய வேண்டிய ஆர்வமிருப்பின் (நேயர்களே) நாமும் அவரைத் தொடர்ந்தோடுவதுதான் தலைசிறந்த வழி.

அத்தியாயம் 304
மரணவறையில் சமண சுந்தரி!

மாறவர்மன் படுத்துக் கிடக்கிறான்! மன்னன் மணிமாற வர்மன் மாயக்கிடக்கிறான்! மழநாட்டு மணிமுடி மன்னன் மரகததமனவேள் மணிமாற மார்த்தாண்டவர்மன் மரணபடுக்கையிலே கிடக்கிறான்! ”மண்ணையும் விண்ணையும் சாடிப்பிடித்து மாடப் பிறையில் மாவிளக்கேற்றிடுவேன்” என்று மார்தட்டியெழுந்து மாவட்டம் முழுவதும் மழக்கொடியுயர்த்தி நின்றானே, அந்த மாண்டமிழ் வீரன் மல்லாந்து கிடக்கிறான்!

திருமழபாடியிலே திரண்டெதிர்த்து வந்துநின்ற தண்டை நாட்டுத் தனி மன்னன் திருத்தக்கத் (ததிகிட) தாண்டவனைத் தேர்க்காலிலே கட்டி, அவன் தளபதி தடுமாறனைத் தெருத்தெருவாய்த் துரத்தித் தின்னனூர் வரை சென்று அங்கு அவன் தங்கை தீஞ்சுவைக்கோதையைத் திருமணம் கொண்டு திரும்பித் ‘திண்ணைக் கடந்த தீஞ்சுவைக் கிழான்’ என்னும் தீரவிருது பெற்றவனன்றோ இவன்!

(இந்நினைவையொட்டிய திருவிழாவின் சிதைந்த உருவந்தான், இன்றும் தேரழுந்தூரில் வருடாவருடம் வைகாசிப் பெளர்ணமியன்று அறுபது வயது தாண்டிய கிழவர்கள் திண்ணைகளைத் தாண்டிக் குதிப்பதென்னும் வழக்கம். ஆனால். பிள்ளையில்லா வீட்டு வயோதிகர்தாம் இவ்விழாவில் அனுமதிக்கப்படுவதென்று இப்போது ஏற்பட்டிருக்கும் சம்பிரதாயம். வேறொரு முதுமொழியிம் குழப்பத்திலே உண்டான சரித்திர ஆதாரமற்ற விளைவேயாகும்.)

சேர்ந்து தண்டுகொண்டு வந்த சேரனையும் சோழனையும் சேத்துப்பட்டிலே சிறைப்பிடித்துச் சேர்த்து முதுகோடு முதுகாய்க் கட்டச் செந்தமிழ் மானங்காத்த ”முதுகுராய்வித்த முத்தமிழ்ப் பாண்டியன்” இவன் மூதாதையன்றோ! பவளந்தர மறுத்த பாண்டியனையும், சேர்ந்து இளித்த சேரனையும் வென்று பாண்டமங்கலம் வீதிகளிலே பானைவனைய வைத்துப் பண்டைத் தமிழ் மரபு காத்த (பத்தாம்) பராந்தகச் சோழன் இவனுக்குப் பாட்டன்தானே! மூவேந்தர் படைகளையும் முதுகு காட்டியோட வைத்துக் கோலாலம்பூர் வரை சென்று கோழிக் கொடியை நட்டு மூவுலகும் தமிழ் மணக்கச் செய்த ”முக்குடுமி கொண்ட முதுபல்லவன்” இவனுடைய முப்பாட்டன்தான்!
மலர்க் கண்களை மூடியவாறு மஞ்சத்திலே சயனித்திருந்தான் மணிமாறன். மண்ணுலகப் பிரக்ஞையற்று மயங்கிக் கிடந்த அவனுக்கு இந்தப் பிரகிருதிப் பிரபஞ்ச நினைவேயில்லை. மஞ்சத்தைச் சுற்றி மழநாட்டின் பொறுக்கியெடுத்த பிரதானிகள் ஐம்பத்தைந்தே பேர் வீற்றிருந்தனர். இந்தச் சமயத்திலும், அறிவிக்கப்பட்டிருந்தும், இன்னும் அங்கு நாட்டின் முன் மந்திரி பேரமைச்சர் வெளிநாடு கண்ட வெற்றுவேட்டரையர் மட்டும் வந்து சேராதது ஒரு மாதிரியாகத்தான் பட்டது. இது ஒரு புறம், தொண்டியிலே தோரணத் திருவிழா பார்க்கச் சென்றிருந்த, நாட்டின் முதற்கிழவியாம் ராஜமாதா முதுகொங்கைப் பிராட்டியாருக்கும் இளவரசி ஸப்ரகூட மஞ்சரிக்கும் இன்னும் விஷயம் தெரியப்படுத்தப்படவில்லை. இவ்வாறு குழம்பிக்கொண்டு எல்லோரும் மோனாகரமாய், வடிக்கப்பட்ட சிலையாய், வார்க்கப்பட்ட விக்கிரகமாய், வரையப்பட்ட சித்திர ஓவியமாய்ச் சமைந்து அமர்ந்திருக்கையில், திடீரென்று நுழைவாயிலிலே ஒரு சலசலப்பு ஏற்பட்டது. ‘எக்ஸ்’ போட்டுத் தடுக்கும் எஃகு ஈட்டிகளை யவன வாயிலோர் கையிலிருந்து அனாயாஸமாய்ப் பிடுங்கி அகழிப்பக்கம் வீசியெறிந்துவிட்டுத் தடதடவென்று உள்ளே – சமணசுந்தரி! (ஆம்! என்ன, திகைக்கிறீர்களா? – சமணசுந்தரியேதான்!!)

அத்தியாயம் 305

திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பி திடுமென எறிந்த வாளையும் அதன் பின்னே அவிழ்த்துவிட்ட குதிரையுடன் அதிவேகமாய் திருநம்பியையும் தொடர்ந்தோமல்லவா? மீண்டும் தொடர்வோம். (தொடரும்)

பத்திரிகை ஆசிரியருக்கு
வணக்கம். என் தொடர்கதையின் இந்தக் கந்தாயத்தை அனுப்ப இவ்வளவு தாமதமானது பற்றி வருந்துகிறேன். என்னிடமிருந்து வீரமழ நாட்டுச் சரித்திர வரலாற்று ஏட்டுப் பிரதிகளை என் இரண்டாவது பையன் தொலைத்துவிட்டு, அவனையும் பிரதியையும் கண்டுபிடிக்க இரண்டு மூன்று தினங்களானது தான் காரணம்.

தமிணாட்டின் தலைசிறந்த சரித்திரத் தொடர் நாவலாளனான என் இந்த அறுபத்து மூன்றாம் படைப்பாம் ”மழநாட்டு மகுடம்” – வாரா வாரம் 200 வாரங்களாக உங்கள் வாரப் பத்திரிகை வாசக மக்களைத் துடிதுடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்நவீனம், ஐந்தே வாரங்களில் மகத்தான முடிவு பெற்றுவிடப் போகிறதென்பதை முன்கூட்டியே இக்கடித மூலம் நினைவுபடுத்த விரும்புவதன் நோக்கம், இக்கதை முடிந்தவுடன் இது பற்றி எங்கங்கிருந்து எத்தனையெத்தனை நேயர் பாராட்டுக் கடிதங்கள் வந்தால் அவற்றைப் பிரசுரிப்பது மட்டுமின்றி என் அடுத்த படைப்பான (இப்போதே பாதி தயார் செய்து வைத்துள்ள) ”அரபு நாட்டு அரசுரிமை”யை, அத்தலைப்பு பிடிக்காவிட்டால் ”கடாரத்துக் கன்னி” என்றாவது மாற்றிப் போட்டு வெளியிட ஏற்றுக் கொள்வீர்கள் என்று தெரிந்து கொண்டு அதற்காவன செய்வதுதான்.
தங்கள் ”நகுபோலியன்”

பி.கு.: இவ்வாரமாவது திருவிளக்கப் பெருஞ்சைவ நம்பியை உங்கள் சைத்திரிகர் சரியாக வரைவாரெண்று நம்புகிறேன். அவர் பெயரைப் பார்த்தாவது நினைவிருக்க வேண்டாமா, அவர் ஆழ்வார்க்கடியானுக்கும் அப்பருக்கும் கிராஸ் ஆன ஆசாமி, அவர் நெற்றியிலும் உடலெங்கும் விபூதிக்கீற்றும் நாமக்கீற்றும் சேர்ந்த (18-ஆம் புள்ளி ஆடுபுலி விளையாட்டுக்) கட்டங்கள் காணப்பட வேண்டுமென்று? மலங்குவிழி மங்கை படத்தையும் மறக்காமல் ‘லா.சு.ர.’ வைப் போடச் சொல்லுங்கள். – பாலு

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

ஸ்ரீவேணுகோபாலன்: திருவரங்கன் உலா+மதுராவிஜயம்

டில்லி சுல்தான்களின் படைகள் முதலில மாலிக் காஃபூர் தலைமையில் ஒரு முறை, முகம்மது பின் துக்ளக் தலைமையில் ஒரு முறை தமிழகம் வரை படையெடுத்து வந்ததும், இரண்டாவது படையெடுப்பின்போது ஸ்ரீரங்கத்து ரங்கநாதனின் உற்சவமூர்த்தி ஊர் ஊராக மறைத்து எடுத்துச் செல்லப்பட்டதும் நாற்பது ஐம்பது வருஷம் கழித்து மீண்டும் விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா முயற்சியால் மூர்த்தி ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டதும் வரலாறு. திருவரங்கன் உலா, மதுரா விஜயம் என்று இரண்டு நாவல்களாக இந்த நிகழ்ச்சிகளை ஸ்ரீவேணுகோபாலன் எழுதி இருக்கிறார்.

ஒரு சாதாரண சிலை; உற்சவமூர்த்தி, அவ்வளவுதான். அதை ஏன் ஊர் ஊராக காப்பாற்றி கொண்டு போக வேண்டும்? தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் அது சிலைதான். எனக்கு சிலையாகத் தெரிவது அந்த பக்தர்களுக்கு தெய்வம். படையெடுத்து வந்த “துருக்கரிடம்” தெய்வம் சிக்கிவிடக் கூடாது என்ற ஆவேசம், பரபரப்பு, மீண்டும் திருவரங்கத்தில் அரங்கனை குடி கொள்ளச் செய்ய வேண்டும் என்ற வெறி (obsession) நன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. மிச்ச குறைகளை எல்லாம் அது பின்னால் தள்ளிவிடுகிறது.

எனக்கு முதல் பாகமான திருவரங்கன் உலாவை விட இரண்டாம் பாகமான மதுராவிஜயம் இன்னும் பிடித்திருந்தது. இரண்டையும் தனி நாவல்களாகவும் படிக்கலாம். மதுரா விஜயம் விஜயநகர இளவரசர் குமார கம்பணரின் மனைவி கங்காதேவி எழுதிய வடமொழிக் காவியம். இந்த நாவலின் கடைசி பக்கங்களில் கம்பணர் முயற்சியால் மதுரையில் மீனாட்சி மீண்டும் குடிகொண்டது வந்தாலும் நாவல் அரங்கனின் மீட்பைத்தான் சுற்றி சுற்றி வருகிறது. கோபண்ணா கம்பணரின் தளபதி, மதுரை சுல்தான் ஆட்சியை அழிக்காமல் இரண்டும் நடக்காது என்பதுதான் மதுராவிஜயத்துக்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு.

மதுராவிஜயம் ஆரம்பத்தில் வல்லபன் என்ற இளைஞன். போன தலைமுறையில் அரங்கன் சிலையை திருவரங்கத்திலிருந்து தூக்கி வந்தவர்களில் முக்கியமான குலசேகரன், அவனை உருகி உருகி ஒருதலையாகக் காதலித்த தேவரடியாள் வாசந்திகா இருவரின் மகன். அம்மாவின் கட்டளைப்படியும், அப்பாவின் ஆசையை நிறையவேற்றவும் அரங்கன் சிலையைத் தேடிக் கிளம்புகிறான். துணைக்கு நண்பன் தத்தன். நாட்டில் பொதுவாக பழைய நிலைக்கு நாடு திரும்பாதா, சுல்தான் ஆட்சி ஒழியாதா, அரங்கர் திருவரங்கம் திரும்பாரா என்ற வேட்கை பரவி இருக்கிறது. விஜயநகர அரசின் ஆரம்ப காலம்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி மேல்கோட்டையில்தான் சிலை இருக்கிறது. விசாரித்து விசாரித்து கடைசியில் திருப்பதி சென்றடைகிறான். அங்கே அந்தக் காலத்தில் மூன்று “கொடவர்கள்” – அரங்கனின் பணியாளர்கள் – சேர்ந்து மலையிலிருந்து குதித்து உருண்டு புரண்டு எப்படியோ காட்டிற்குள் சிலையை பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். காப்பாற்றும் முயற்சியில் இருவர் இறந்து போகிறார்கள். ஒருவருக்கு சித்தம் கலங்கிவிடுகிறது. வல்லபனும் தத்தனும் எப்படியோ சிலையைக் கண்டுபிடிக்கிறார்கள். திருப்பதியில் அரங்கன் இப்போது. இன்றும் திருமலை கோவிலில் அன்றைய சந்திரகிரி சிற்றரசர் யாதவராயர் அரங்கனின் உத்சவ மூர்த்தியை வைக்கக் கட்டிய ரங்கமண்டபம் இருக்கிறது. விஜயநகர அரசின் தளபதி கோபண்ணா தான் திருவரங்கத்திற்கு அரங்கனைக் கொண்டு செல்வேன் என்று சபதம் எடுக்கிறார்.

காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சம்புவராயர்களின் சிற்றரசு வெல்லப்படுகிறது. மதுரை மீனாட்சி கம்பணரை தன்னை மீட்கும்படி கனவில் உத்தரவிடுகிறாள். (இது மதுராவிஜயம் காவியத்தில் வருவது, அதற்கு யதார்த்தமாக விளக்கம் தந்துவிடுகிறார்.) சுல்தான் மீது படையெடுப்பு, வெற்றி, வேதாந்த தேசிகர் முன்னிலையில் அரங்கனை திருவரங்கத்தில் வைக்கிறார்கள், கம்பணரும் கங்காதேவியும் மதுரையில் மீனாட்சியை மீட்கிறார்கள்.

அரண்மனை சதிகள் இருந்தாலும் இது தமிழின் வழக்கமான அரண்மனை சதி வரலாற்று நாவல் அல்ல. நாவலின் வளவள பக்கங்களிலும் அரங்கனை மீட்க வேண்டும் என்ற் தணியாத வேட்கையை ஸ்ரீவேணுகோபாலன் அடிநாதமாக காட்டுகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா நாவலில் அரங்கர் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பி மதுரை, திருவனந்தபுரம், கோழிக்கோடு, மேல்கோட்டை வழியாக திருப்பதி காடுகளை சென்றடைந்திருக்கிறார். மதுராவிஜயத்தில் அவர் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டு திருமலை கோவில், செஞ்சி அருகே உள்ள சிங்கவரம், சமயபுரம் வழியாக ஸ்ரீரங்கம் வந்தடைகிறார்.

முதல் பாகமான திருவரங்கன் உலா விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. ஆரம்ப கட்டங்களில் திருவரங்கம் முற்றுகை இடப்படுவதும் அதைக் காக்க நூறு பேர் ஆயிரக்கணக்கானவரை எதிர்க்கும் போரும் சிறப்பாக சித்தரிக்கப்படுகின்றன. குலசேகரன் தற்செயலாக டில்லி படையைப் பார்த்து செய்தி கொண்டு வர, அவனுக்கு பாதுகாப்பில் முக்கிய ஸ்தானம் கிடைக்கிறது. போரில் பஞ்சுகொண்டானுடன் இணைந்து கடும்போர் புரிகிறான். ஆனால் அரங்கரோடு தப்பி ஓட வேண்டிய நிலை. நடுவே வாசந்திகாவுக்கு குலசேகரன் மீது காதல். குலசேகரனோ தற்செயலாக சந்திக்கும் ஹேமலேகாவை விரும்புகிறான். அரஙகர் பழமுதிர்சோலையில் இருக்கும்போது திருவண்ணாமலை ஹொய்சள அரசரின் உதவியை நாடுகிறான். அரசரின் இளம் மனைவி நியோகமுறைப்படி குலசேகரனை கூட விரும்புகிறாள். அதற்கு ஒத்துக் கொண்டு படை பெற்று போரிட்டாலும் முழுத்தோல்வி. குலசேகரன் இறப்போடு முதல் பாகம் முடிகிறது.

குறைகள் இல்லாமல் இல்லை. தெய்வீகக் காதல்கள் பல பக்கங்களில் வருகின்றன, அது நாவலின் வடிவ கச்சிதத்தை குலைக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் மீறித் தெரிவது அரங்கரை மீட்க வேண்டும் என்ற வெறி. அன்று சிலராவது இபபடி உணர்ந்திருக்க வேண்டும். அதைச் சித்தரிப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது.

தினமணி கதிர் பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருக்கிறது.

ஸ்ரீவேணுகோபாலன்தான் புஷ்பா தங்கதுரை என்ற பேரில் சில பல கிளுகிளு நாவல்களையும் எழுதினார் என்பது தெரிந்திருக்கலாம். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரில் வரலாற்று நாவல்கள், புஷ்பா தங்கதுரை என்ற பேரில் கிளுகிளு கதைகள்.

வரலாற்று நாவல்கள் அனேகமாக வைணவப் பின்புலம் உள்ளவை. ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். நண்பர் விஷ்வேஷ் ஓப்லா இந்தப் புத்தகங்களைப் பற்றி எழுதியது இங்கே மற்றும் இங்கே.

இந்த நாவல்கள் தந்த ஊக்கத்தில் படித்த வேறு சில வரலாற்று நாவல்களைப் பற்றியும் இங்கேயே எழுதிவிடுகிறேன். தெய்வீகக் காதல் இரண்டை வைத்து மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவானதை மோகவல்லி தூது என்ற நாவலாக எழுதி இருக்கிறார். சின்னப் பிள்ளைகளுக்கு எழுதிய மாதிரி இருக்கும். மிகை உணர்ச்சி (melodrama) நிறைந்த தென்மேற்குப் பருவம் (இளம் பெண்ணுக்கு இன்னல்) ஒரு காலத்தில் வாசகர்களைக் கவர்ந்திருக்கலாம். கள்ளழகர் காதலிக்கு அதற்குக் கூட வாய்ப்பே இல்லை. மன்மத பாண்டியன் புஷ்பா தங்கதுரை பாணியில் – அதாவது பாலியல் வர்ணனைகள் நிறைய புகுத்தி எழுதப்பட்ட நாவல். இதில் விரல் போடுவது (fingering) எல்லாம் விவரிக்கப்படுகிறது, ராணி பத்திரிகையில் எழுதி இருக்கிறார், எப்படி அனுமதித்தார்களோ!

இந்த இரண்டையும் – குறிப்பாக மதுராவிஜயத்தை – படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: விஷ்வேஷ் ஓப்லாவின் அறிமுகக் கட்டுரை

ஜெகசிற்பியன்: பத்தினிக் கோட்டம்

சிறு வ்யதில் ஜெகசிற்பியன் ஓரளவு பரிச்சயமான பெயர்தான். ஆனால் அதிகம் படித்ததில்லை. அவர் கல்கியில் எழுதும்போது நாங்கள் விகடன் வாங்கினோம், விகடனில் எழுதும்போது குமுதம் வாங்கினோம் என்று நினைக்கிறேன். 🙂

ஜெயமோகனின் நாவல் பட்டியலைப் பார்த்தபோது – பத்து வருஷத்துக்கு முன்னால் – சில புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்தேன். திருச்சிற்றம்பலம், நாயகி நற்சோணை. இவை இரண்டும் காகித விரயமே. என்ன இவருக்கு காகிதம் இலவசமாகக் கிடைத்ததா, இத்தனை வளவளவளவளவளவளவளவளவென்று எழுதுகிறாரே என்றுதான் தோன்றியது. ஜெயமோகனின் பட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் படிக்க வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை உண்டு. ஆனால் ஜெகசிற்பியன் என்றால் பயந்தேன்.

பல வருஷம் கழித்து கொஞ்சம் தைரியம் வந்து பத்தினிக் கோட்டம் நாவலைப் படிக்க ஆரம்பித்தேன். இதுவும் வளவளதான். நகுபோலியனின்மழநாட்டு மகுடம்” சிறுகதையை நினைவுபடுத்தும் பாணிதான். தற்செயல் நிகழ்ச்சிகள் நிறைந்ததுதான். ஆனால் திருச்சிற்றம்பலத்துக்கு பரவாயில்லை.

சாளுக்கிய அரசன் விக்ரமாதித்தன் பல்லவ அரசன் பரமேஸ்வரவர்மனைத் தோற்கடித்ததையும் பரமேஸ்வரவர்மன் மீண்டும் எழுந்து வந்ததையும் விவரிக்கிறது. இதில் வழக்கமான அரண்மனைச் சதிகள். அவ்வளவுதான் கதை. ஆயிரம் பக்கமாவது இருக்கும். கதையைக் காப்பாற்றுவது சம்பவங்களின் தொடர்ச்சி. ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. அது நடக்கக் கூடியதுதானா, அதிசயத் தற்செயல் நிகழ்ச்சியா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

பத்தினிக் கோட்டம் ஜெயமோகனின் பட்டியலில் இரண்டாம் வரிசை வரலாற்று நாவல்களில் இடம் பெறுகிறது.

தமிழ் வணிக/வரலாற்று நாவல்கள் எப்படி பரிணமித்தன என்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிந்துரைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

கமல் பரிந்துரை: அடிமையின் காதல்

எனக்கு வணிக நாவல்களில் கொஞ்சம் விருப்பம் உண்டு. அதுவும் சரித்திர நாவல்களில் விருப்பம் உண்டு. வாண்டு மாமாவைத் தாண்டி பெரியவர் புத்தகங்களுக்கு வந்தபோது சாண்டில்யனைத்தான் முதலில் விரும்பிப் படித்தேன். சாண்டில்யனே குழந்தை எழுத்தாளர்தானே என்று நக்கல் அடிப்பவர்களுக்கு பிடி சாபம்! ஜெகசிற்பியனையும் அகிலனையும் படிக்கக் கடவது!

கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார். நான் கேள்விப்பட்டிராதது ரா.கி. ரங்கராஜன் எழுதிய அடிமையின் காதல் ஒன்றுதான். என்னடா இது, எனக்குத் தெரியாத வணிக நாவலா, அதிலும் நானும் ரா.கி.ர. எழுதிய முப்பது நாற்பது புத்தகமாவது படித்திருப்பேன், கேள்வியே பட்டதில்லையே, அதுவும் சரித்திர நாவலா என்று வியந்தேன்.

இணையத்தில் எங்கோ கிடைத்தது. படித்துப் பார்த்ததும் இன்னொரு வித வியப்பு. ஜெயமோகனையும் அசோகமித்ரனையும் சுந்தர ராமசாமியையும் கி.ரா.வையும் பரிந்துரைத்த அதே கமலா இதையும் பரிந்துரைத்தாரா என்று வியப்பு. மிகச் சராசரியான, குமுதத்தின் பக்கங்களை நிரப்புவதற்காகவே எழுதப்பட்ட நாவல். போயும் போயும் இதைப் பரிந்துரைத்தாரா என்று ஆச்சரியப்பட்டேன். என் கண்ணில் ரா.கி.ர.வே எழுதிய நான், கிருஷ்ணதேவராயன் இதை விடச் சிறந்த நாவல்.

பிறகு ரா.கி.ர. இந்த நாவலை 1966-67 வாக்கில் எழுதி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. அப்போது கமலுக்கு பனிரண்டு வயதிருக்குமா? இளமைப் பருவத்தில் வாசிப்பின் சாத்தியங்களை நம்மை உணர வைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் நம் மனதில் ஒரு soft corner இருக்கிறது. கல்கியும் க.நா.சு.வும் ஜே.ஆர். ரங்கராஜு எழுதிய ராஜாம்பாளை விதந்தோதி இருக்கிறார்கள். நான் சாண்டில்யனை எத்தனை குறை சொன்னாலும் அவர் எழுதி நான் படிக்காமல் விட்ட நாவல் கிடைத்தால் (நாலைந்து இருந்தால் அதிகம்) தவறாமல் படிப்பேன். இரும்புக் கை மாயாவி, அலிஸ்டர் மக்ளீன் என்று எனக்கு ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஜெயமோகன் வணிக நாவல்கள் பரிந்துரைகளில் பலவும் அவரது கறாரான விமரிசனப் பாணியில் பார்த்தால் படு சுமாரான வணிக நாவல்களாக இருக்கும். கமலுக்கும் இந்த நாவல் அப்படித்தான் என்று யூகிக்கிறேன்.

நாவல் வெளிவந்தபோது விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். ஐம்பதுகளில் எழுதி இருந்தால் எம்ஜிஆர் அனேகமாக திரைப்படமாக்கி இருப்பார். அவருக்கேற்ற கதைதான். நாயகன் கத்திச் சண்டை, குதிரை ஏற்றம், யானை சவாரி, எழுபது அடி கொடிக் கம்பத்தில் ஏறுதல், முடி திருத்துதல், நாதசுரம் வாசித்தல், குரல் மாற்றிப் பேசுதல் (ventriloquism) என்று ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கரைத்துக் குடித்திருக்கிறான். அவனுக்கு என்ன வேண்டுமென்றாலும் யாராவது வந்து உதவி செய்துவிடுகிறார்கள். வெள்ளைக்காரர்களின் சிறையிலிருக்கும் சிவசிதம்பரத்தைப் பார்க்க வேண்டுமா? உடனே ஒரு வெள்ளைக்காரக் குழந்தை வந்து வழிகாட்டுகிறது. பாதாளச் சிறையிலிருக்கும் நாயகியை விடுவிக்க வேண்டுமா? சிறைக்குப் போகும் ரகசிய வழி என்று அவனுக்காகவே தெளிவாக அவன் சாயும் கல்லில் எழுதி இருக்கிறது. ஏறக்குறைய வீட்டுச் சிறையிலிருக்கும் அரசியைப் பார்க்க வேண்டுமா? உடனே நாதசுரம் வாசிக்க வேண்டியவனுக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது, அவனுக்கு பதில் இவன் போகிறான். ஏதோ தற்செயலாக ஒரு சம்பவம் நடந்தால் பரவாயில்லை, பத்து பக்கத்துக்கு ஒரு தற்செயல் சம்பவம் மூலம்தான் கதையை முன் நகர்த்துகிறார்.

அதுவும் நாயகன் மகா முட்டாள்தனமாக காரியம் செய்வது கடுப்பைக் கிளப்புகிறது. நாயகி தாமரை பூந்தமல்லி பெருவணிகர் பெத்தபெத்துவின் அடிமை. நாயகன் அவளைத் தப்புவிக்கிறான். இதோ உணவு கொண்டு வருகிறேன், இங்கேயே இரு என்று மயிலாப்பூரில் சொல்லிவிட்டுப் போகிறான். பத்து நிமிஷத்தில் திரும்பிவந்து பார்த்தால் என்ன நடக்கும்? கரெக்ட், அவளைக் காணோம். அவளைக் கண்டுபிடிக்க நாயகன் என்ன செய்வான்? பூந்தமல்லிக்குப் போய் பெத்தபெத்துவிடம் அடிமையாகச் சேர்கிறான்! பத்து நிமிஷத்தில் எப்படிப்பா பூந்தமல்லிக்கு போவாள்?

நாவலின் உண்மையான பலம் நுண்விவரங்கள் நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதுதான். நாவலின் காலம் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதி. அவுரங்கசீப் தென்னிந்தியாவில் தன் ஆதிக்கத்தை நிறுவ ஜூல்ஃபிகார் கானை அனுப்பி இருக்கிறார். சென்னையில் ஜார்ஜ் யேல் கவர்னர். செஞ்சியில் சிவாஜியின் இரண்டாவது மகன் ராஜாராம். மதுரையில் ராணி மங்கம்மா. இந்தக் காலகட்டத்தின் பல நுண்விவரங்களை நாவலில் போகிறபோக்கில் சொல்கிறார். அடிமை வியாபாரம், அது ஆங்கிலேயரால் சென்னையில் தடை செய்யப்படுவது. பெரிய வியாபாரி இறந்ததற்கு சென்னையில் ஐந்து குண்டுகள் போடப்படுவது; ஆங்கிலேயப் பெண்கள் சென்னையின் சூடு தாங்காமல் மொட்டை அடித்துக் கொள்வது; பொற்கொல்லர்கள் வெள்ளையர்களுக்கு நாணயம் செய்து தருவது என்று பல. ஆனால் இதை விட சிறப்பாக நான், கிருஷ்னதேவராயன் நாவலில் நுண்விவரங்களைப் புகுத்தி இருக்கிறார்.

இதைத் தவிர ரா.கி.ர.வின் வழக்கமான பலங்கள் – சரளமான நடை, gimmicks – உதாரணமாக 66-67-இல் திமுகவும் அண்ணாவும் பாப்புலராக இருந்த நேரம், நாயகனைக் காஞ்சிபுரத்துக்காரனாக சித்தரித்து, அவனை நாவல் முழுவதும் பேர் வைக்காமல் காஞ்சிபுரத்தான் என்று அழைப்பது, சுலபமாக படிக்கக் கூடிய, சாகசங்கள் நிறைந்திருப்பது இருக்கவே இருக்கின்றன. ஆனால் பல இடங்களில் எனக்கு கடுப்புதான் கிளம்பியது.

இந்த நாவல் எல்லாம் அப்படி என்னதான் இந்த நாவலில் இருக்கிறது என்று பார்க்க நினைப்பவர்களுக்குத்தான். தவிர்த்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சாண்டில்யனின் “மூங்கில் கோட்டை”

மூங்கில் கோட்டை உண்மையில் தனிப்பதிவுக்கு தேவை இல்லாத புத்தகம். சாண்டில்யனைப் பற்றி எழுதும்போது ஒரு வரி எழுதினால் போதும். தனிப்பதிவாக எழுத ஒரே காரணம்தான் – ஜெயமோகன் தன் வரலாற்று மிகுபுனைவு நாவல் பட்டியலில் இதைக் குறிப்பிட்டிருப்பது. அவர் தனது பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு நப்பாசை.

மூங்கில் கோட்டையில் உள்ள வரலாறு தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தப்பியதுதான். அதைப் பற்றி கோவூர் கிழார் என்ற புலவர் பாடி இருக்கிறார். அதை அடிப்படையாக வைத்து ஒரு உப்புசப்பில்லாத கதையை எழுதி இருக்கிறார்.

சேர வீரன் இளமாறனை சேர மன்னனை தப்புவிக்க நெடுஞ்செழியனின் ஆசிரியரும், ஆனால் சேர மன்னனை விடுவிக்க விரும்புபவருமான கோவூர் கிழார் ரகசியமாக அழைக்கிறார். என்ன நடக்கும்? கோவூர் கிழாரின் வீட்டில் இளமாறன் ஒரு அழகியை சந்திக்கிறான். ரகசிய அழைப்பாயிற்றே, அடுத்தது என்ன? வந்த இரவே நெடுஞ்செழியனை இளமாறன் சந்தித்து வாட்போர் வேறு புரிகிறான். அழகி யார்? வழக்கமாக நெடுஞ்செழியனின் மகளாக இருக்க வேண்டும், ஆனால் நெடுஞ்செழியனுக்கு இருபது வயதுதான், அதனால் சகோதரி. அடுத்தது என்ன? அழகியும் வீரனும் மதுரையை விட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் சித்தர் என்ற நெடுஞ்செழியனின் இன்னொரு ஆசிரியரிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்தான் போர்த்திட்டங்களை வகுத்து சேரமானைத் தோற்கடித்தவர். அவருக்கு சேரமானிடம் பகை என்று பின்னால் வருகிறது. சேரமானை பகைக்கும் அவர் என்ன செய்வார்? கரெக்ட், அவரே சேரமானை விடுவிக்க முயற்சி செய்யும் இளமாறனைக் கொண்டுபோய் சேரமான் சிறை இருக்கும் மூங்கில் கோட்டைக்கு அருகில் விட்டுவிடுகிறார். பகைவனுக்கருளும் நன்னெஞ்சு அவருக்கு. இதற்குள் முக்கால்வாசி புத்தகம் முடிந்துவிடுகிறது. பிறகு இளமாறன் கோட்டைக்குள் புகுந்து மன்னனைத் தப்புவித்து (எப்படி என்றெல்லாம் சாண்டில்யன பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.) ஆனால் தான் மாட்டிக் கொள்கிறான். இதற்குள் இன்னொரு திடுக்கிடும் திருப்பம் – சித்தர்தான் இளமாறனின் அப்பா!

இதைவிட நல்ல கதைகளை சாண்டில்யன் எழுதி இருக்கிறார். ஏதோ சிறு வயதில் ஜெயமோகனுக்குப் பிடித்திருந்திருக்கும், அவ்வளவுதான். தவிர்க்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சாண்டில்யனின் “ராஜமுத்திரை”

சாண்டில்யனின் ராஜமுத்திரை சிறு வயதில் (எட்டு, ஒன்பது வயதில்) என்னைக் கவர்ந்த நாவல். செண்டாயுதத்தின் விவரிப்பு இன்றும் நினைவிருக்கிறது. இப்போதும் படிக்கக் கூடிய பொழுதுபோக்கு நாவலே. தமிழுக்கு நல்ல சரித்திர நாவல். வணிக நாவல்களின், வாரப்பத்திரிகை தொடர்கதைகளின் பொற்காலத்தில் எழுதப்பட்ட நாவல். குமுதத்தில் தொடராக வந்தது.

சாண்டில்யனை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டது என்பதால் கதை (ரத்தினச்) சுருக்கம்: சேர மன்னன் உதயரவி மீண்டெழுந்து வரும் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் பாண்டிய நாட்டை ஒடுக்க முத்துக்களை களவாடுகிறான். அது அப்படியே சுதி ஏறி இளவரசி முத்துக்குமரியையும் சிறைப்பிடிக்கிறான். சுந்தரபாண்டியனின் தம்பி வீரபாண்டியனின் தலைமையில் அவன் காதலி இளநங்கை, நட்பு நாட்டு இளவரசன் இந்திரபானு முத்தையும் இளவரசியையும் மீட்கின்றனர், வீரரவி போரில் இறக்கிறான். வீரரவியின் களவுச் செயலை கண்டிக்கும் சேரநாட்டு குருநாதர் பரதபட்டன் என்று ஒரு பாத்திரம், பட்டன் போரில் முழு மனதாக ஈடுபடாதது சேரர்களை பலவீனப்படுத்திவிடுகிறது.

மீள்வாசிப்பில் வழக்கமான பலங்களும் பலவீனங்களும் தெரிகின்றன. திடுக்கிடும் திருப்பங்களைத் தர வேண்டும் என்ற விழைவு பல இடங்களில் செயற்கையாக முடிகிறது. உதாரணமாக சேரநாட்டு கோட்டை அதிபன் மகள் குறிஞ்சி பாண்டியருக்காக உளவறிகிறாள், பாண்டியர் படையில் உபதளபதியாகவே ஆகிறாள். ஏன்? வீரபாண்டியன் கண்ணில் மட்டும் கரெக்டாக பாதையில் கிடக்கும் கோடரி தென்படுகிறது. இந்திரபானு நினைத்தால் எதிரி அரண்மனைக்குப் போய்விடமுடிகிறது. ஸ்பீட்ப்ரேக்கர் போல காதல்/காம வர்ணனைகள் அவ்வப்போது எரிச்சலையே மூட்டுகின்றன. அதே நேரத்தில் மிகச் சரளமாக செல்லும் கதை ஓட்டம். நல்ல சாகசக் கதை. பதின்ம வயதில் படிக்க ஏற்றது. உண்மையைச் சொல்லப் போனால் சாண்டில்யன் மூலம் தெரிந்து கொண்ட வரலாறுதான் பள்ளிக் காலத்தில் தேர்வுகளுக்குப் பிறகும் நினைவிருந்தது. இதைப் படித்துத்தான் முத்துதான் பாண்டியரின் சொத்து, அதை வாங்க அன்றைய ரோமானியர் பெரும் பணம் கொடுத்தனர், சோழ அரசு பலவீனமானபோது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் வலிமைப்படுத்தினான் என்று தெரிந்துகொண்டேன்.

ஜெயமோகன் இதை சரித்திர வணிக நாவல்களின் இரண்டாம் வரிசையில் வைக்கிறார். நானும் அதில்தான் வைப்பேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்று நாவல்கள்

சாண்டில்யன் எழுதிய யவனராணி

சாண்டில்யனின் நாவல்களில் மிகவும் பிரபலமானவை யவனராணியும் கடல் புறாவும்தான். எனக்கு முந்தைய தலைமுறையினர் பலரும் யவன ராணியையே ஒரு மாற்று அதிகமாக எடை போட்டார்கள், சாண்டில்யனின் மாஸ்டர்பீஸாக கருதினார்கள்.

யவனராணியைப் படிக்கும்போது எனக்கு எட்டு, ஒன்பது வயதிருக்கலாம். அந்த வயதில் என்னை வெகுவாகக் கவர்ந்த படைப்பு. குறிப்பாக கடலில் மூழ்கும் நாயகன் கடல் ஆமையோடும் சுறாக்களோடும் சண்டையிடும் காட்சி. பிறகு ஆயுதங்களை வீசக்கூடிய யவனப் பொறிகள் என்ற ஐடியாவே த்ரில்லிங் ஆக இருந்தது. பற்றாக்குறைக்கு ஒன்றுக்கு மூன்று பெண்கள், சதிக்கு மேல் சதி என்று அடுக்கிக் கொண்டே போனார். இன்றும் இளவயதினர் படிக்க ஏற்ற புத்தகம், காமிக்ஸாக வெளியிட்டால் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது.

சாண்டில்யனைப் படித்த தலைமுறைகளுக்கு வயதாகிவிட்டதால் கதைச்சுருக்கத்துக்கு தேவை இருக்கலாம். சோழ அரசன் இளஞ்சேட்சென்னி சதியால் கொல்லப்பட்டவுடன் வாரிசு சண்டை. இளவரசன் கரிகாலனைக் கொல்ல சதி நடக்கிறது. அவன் பக்கம் இருக்கும் படைத்தலைவன் இளஞ்செழியன். இதற்கிடையில் புகார் நகரத்தை யவனர் டைபீரியஸின் தலைமையில் கைப்பற்ற முயல்கிறார்கள். அவர்களின் ராணிக்கு இளஞ்செழியன் மேல் காதல். டைபீரியஸ் இளஞ்செழியனை கப்பலில் ஏற்றி கிரேக்கத்துக்கு அனுப்பிவிடுகிறான். அங்கே தப்பி, அடிமையாக விற்கப்பட்டு, அரேபிய சிறு நாடு ஒன்றில் மாட்டிக்கொண்டு, மீண்டும் தப்பி, தமிழகம் வந்து, டைபீரியஸை சமாளித்து, கரிகாலனை மன்னனாக்க உதவுகிறான்.

இன்று யோசித்துப் பார்த்தால் என்ன இத்தனை பூ சுற்றுகிறாரே என்று தோன்றுகிறது. இளஞ்செழியனை மயக்கமருந்து கொடுத்து கப்பலில் ஏற்றி, அங்கேயே முடிந்தால் கொன்றுவிடுமாறு டைபீரியஸ் உத்தரவிடுகிறான். இவனே கூட கொஞ்சம் விஷத்தைக் கொடுத்திருக்கலாம். தமிழகம் திரும்பும் இளஞ்செழியன் தான் டைபீரியஸுக்கு உதவ வந்திருக்கும் யவனக் கப்பல் படைத்தலைவன் என்று சொல்லிக் கொண்டு டைபீரியஸை பல முறை சந்திக்கிறான். ஆனால் எப்போதும் முகத்தில் கவசத்துடன், அதனால் டைபீரியஸுக்கு இவன்தான் இளஞ்செழியன் என்று தெரியவில்லையாம். கழட்டுடா என்று ஒரு முறை கூடவா சொல்லமாட்டான்? எல்லாவற்றையும் விடுங்கள், எந்த யவனன் (கிரீஸ் நாட்டுக்காரன்) டைபீரியஸ் என்று பேர் வைத்துக் கொள்வான்? டைபர் ஆறு ஓடுவது ரோம் நகரத்தில். சாண்டில்யன் தமிழர்களுக்கு பிற நாடுகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் ரோமாபுரிக்காரர்களைத்தான் யவனர் என்று குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

குமுதம் பத்திரிகையின் பெருவெற்றிக்கு சாண்டில்யனின் தொடர்கதைகள் ஒரு முக்கிய காரணம். யவன ராணி, கடல் புறா போன்றவையே அந்த தொடர்கதைகளில் மக்கள் மனதை அதிகம் கவர்ந்தவை என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

இலக்கியம் அல்லதான்; குறைகள் உள்ள வணிக நாவல்தான். ஆனால் இள வயதினருக்கு படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய நாவல். பதின்ம வயதினரைப் படிக்க வையுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

(மீள்பதிவு, முதல் பதிவு ஜனவரி 2011-இல்)

பிரபஞ்சனுக்கு அஞ்சலியாக இந்தப் பதிவை மீள்பதித்திருக்கிறேன்.

பிரபஞ்சன் இந்த புத்தகம் பற்றி சொல்கிறார் –

தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது!

மேலும் சொல்கிறார் –

முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப் பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலேயாகும்.

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. சரித்திர நாவல் என்றால் எல்லாருக்கும் முதலில் ஞாபகம் வரும் பேர் சாண்டில்யன்தான். சாண்டில்யன் கதைகள் நமக்கு தரும் அனுபவம் எம்ஜிஆர் படங்கள், காமிக்ஸ் சாகசம் மாதிரிதான். அவர் கொண்டு வரும் வரலாறு எல்லாம் ராஜா ராணி இளவரசன் இளவரசி பற்றிதான். தமிழில் இது வரை வந்த சரித்திர நாவல்களில் மிக சிறந்ததாக நான் நினைப்பது பொன்னியின் செல்வன். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட பொ. செல்வனில் அன்றைய வாழ்க்கை முறை – ஜாதி, விவசாயம், குறுநில மன்னர்கள்-மைய அரசு பற்றிய உறவு, படை எப்படி திரட்டப்பட்டது – பற்றி எல்லாம் ஒரு வரி கூட கிடையாது. அதைப் படித்து சுந்தர சோழனுக்கு அப்புறம் உத்தம சோழன் பட்டத்துக்கு வந்தார் என்று தெரிந்து கொள்ளலாம். பொ. செல்வனின் சிறப்பு அதன் கதைப் பின்னல் மட்டுமே.

நம் எல்லாருக்கும் வரலாறு என்றால் அசோகன், விக்ரமாதித்தன், நரசிம்மவர்மன், ராஜராஜன், அக்பர் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. படிக்கும்போது எனக்கு இந்த கேள்வி உண்டு – பாபருக்கு பிறகு அக்பர் வந்தால் என்ன, இல்லை அக்பருக்கு பிறகு பாபர் வந்தால் என்ன, இந்த இழவை எல்லாம் எதற்கு படிக்க வேண்டி இருக்கிறது என்று. தமிழ் வரலாற்று நாவல்கள் இந்த ராஜா-ராஜா சண்டைகளை தாண்டவே இல்லை.

பிரபஞ்சன் தாண்டி இருக்கிறார். தகவல்களை தேடி எடுத்து அதை சுவாரசியமான கதை ஆக்கி இருக்கிறார். கோழி திருடியவன் எப்படி பிடிபட்டான், அடிமைக்கு என்ன விலை, பாண்டிச்சேரியின் ஃப்ரெஞ்சு கவர்னர் கடலோரமாக உட்கார்ந்துகொண்டு கக்கூஸ் போகக் கூடாது என்று போட்ட சட்டம், என்று நிறைய வாழ்க்கை முறை தகவல்களை நாவல் ஆக்கி இருக்கிறார்.

ஆனால் அவராலும் ராஜா கதையை முழுதாக தாண்ட முடியவில்லை. நாவலில் பெரும் பகுதி சந்தாசாஹிப், தஞ்சை அரசர்கள், ஆட்சி உரிமைக்கான தகராறுகள் பற்றி பேசுகிறது. இவை பெரும்பாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன. ராஜராஜ சோழன் கதையை முதலமைச்சர் அநிருத்த பிரம்மராயர் கண்ணோட்டத்தில் விவரிப்பது போல. கதை நடப்பது 1730-களின் பிற்பாதியில். டூமா என்பவர் புதுச்சேரியின் ஃபிரெஞ்சு கவர்னர். துபாஷிகள் மூலம்தான் எல்லாம் நடக்கிறது. அடுத்த துபாஷாக வருவோம் என்று எதிர்பார்த்த ஆனந்தரங்கம் பிள்ளைக்கு ஏமாற்றமே. தஞ்சையில் மராத்திய அரசுக்கு பெரும் போட்டி, பணம் கொடுத்து சந்தாசாஹிப் முதலியோரின் ஆதரவை நாடும் போட்டியாளர்கள். பணம் கொடுக்க வரி நிறைய கொடுக்க வேண்டி இருக்கிறது. இந்த mercenary படைகள் சர்வசாதாரணமாக வயல்களை, கிராமங்களை சூறையாடுகின்றன. நிலையான ஆட்சி இல்லை. டூமா ஓரளவு நியாயமாக நடந்துகொள்கிறார். சந்தாசாஹிபின் மனைவிக்கு அடைக்கலம் கொடுக்கிறார். நாட்டில் ஜாதி, மதமாற்றப் பிரச்சாரம், கலவரங்கள் என்று பல உரசல்கள் ஏற்படுகின்றன. பிள்ளை இவை எல்லாவற்றையும் தன் நாட்குறிப்புகளில் எழுதி இருக்கிறாராம். அதை வைத்து இலக்கியம் படைத்திருக்கிறார் பிரபஞ்சன்.

அரசு சண்டைகள் பற்றி நிறைய வந்தாலும் கதையின் focus சாதாரண மக்களின் வாழ்வு முறையே. அதுவே இந்தக் கதையின் பெரிய பலம்.

நாவலில் குறைகள் இல்லாமல் இல்லை. பெரிய பிரச்சினை கதை கோர்வையாக இல்லாததுதான். உதாரணமாக ஒரு முதலியார் தன் சம்பந்தியிடமிருந்து அடிமைகளை வாங்குவது ஒரு பகுதியில் விவரிக்கப்படுகிறது. இது ஒரு தனி கிளைக்கதை. ஒரு பத்து பக்கம் போகிறது. முன்னேயும் பின்னேயும் அதை பற்றி வேறு பேச்சு இல்லை. அதில் வரும் பாத்திரங்கள் வேறு எங்கும் வருவதும் இல்லை. ஒரு வருஷம் பேப்பர் தலைப்பு செய்திகளை சேகரித்து அதை ஒரு கதை ஆக்குவது போலத்தான். தொடர்பில்லாத பல கிளைக்கதைகளை தொகுத்திருப்பது போல இருக்கிறது.

ஆனால் மிக அருமையான முயற்சி. கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ் நாவல். தமிழின் மூன்று சிறந்த வரலாற்று நாவல்களில் ஒன்று. (பொ. செல்வன், சிவகாமியின் சபதம் மற்ற இரண்டு) கல்கி போட்ட கோட்டிலிருந்து வெளியே வெற்றிகரமாக வந்திருக்கிறார். ஒரு புதுப் பாணியை உருவாக்கி இருக்கிறார். கல்கி நமக்கு காட்டுவது ஒரு fantasy உலகம். இவர் காட்டுவதுதான் நிஜமாக இருக்கிறது.

ஜெயமோகன் இதை தமிழின் பத்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடுகிறார். அவரது சிறந்த தமிழ் இலக்கிய லிஸ்டில் இடம் பெறும் ஒரே சரித்திர நாவல் இதுதான். அவரது வார்த்தைகளில்:

வரலாறு என்றால் ஐதீகம் என நம்பிய சமூகம் நாம். ஐதீகங்களை மறு ஆக்கம் செய்து வரலாற்று நாவல் என்றோம். தமிழில் தகவல்களினால் சமநிலைப்படுத்தப்பட்ட வரலாற்று சித்திரத்திலிருந்து உருவாக்கப்பட்ட முதல் நாவல் இது. வரலாற்றின் அபத்தமான, ஒருங்கிணைவில்லாத, சம்பவ நகர்வையும்; அதன் களத்தில் நிகழும் தீவிரமான அதிகாரப் போட்டியையும் காட்டும் நாவல் இது. ஐரோப்பிய ஒழுங்கு இந்தியனை ஆட்படுத்துவதும் நெறிப்படுத்துவதும் ஒரே சமயம் இந்நாவலில் தெரிகிறது. வரலாற்று மாந்தர் அதிமானுடர்களாக இல்லாமலிருப்பது அளிக்கும் தரிசனம் தமிழுக்கு மிகமிக முக்கியமானது.

எஸ். ராமகிருஷ்ணன் நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாக இதை குறிப்பிடுகிறார்.

பிரபஞ்சன் வானம் வசப்படும் என்றும் இன்னொரு நாவல் எழுதி இருக்கிறார். அது இன்னும் கிடைக்கவில்லை…

ஆனந்தரங்கரின் டைரி இணையத்தில் எங்காவது கிடைக்கிறதா? (பத்ரி சேஷாத்ரி கொடுத்திருக்கும் லிங்க் இப்போது வேலை செய்யவில்லை) நண்பர் ராஜ் சந்திரா ஒரு சுட்டியைக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த பகுதி – பாலகுமாரனின் சரித்திர நாவல்கள்

தொடர்புடைய பதிவுகள்:
மானுடம் வெல்லும் புத்தகத்திலிருந்து ஒரு excerpt – மதுவிலக்கு உத்தரவு
இன்னொரு excerpt – காலைக்கடன் உத்தரவு

பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவல்

ஆனந்தரங்கரின் டைரி

ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய விக்கி குறிப்பு
ஆனந்தரங்கம் பிள்ளை பற்றி கிழக்கு பதிப்பகம் தலைவர் பத்ரி சேஷாத்ரி

தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி), பகுதி 2 (கல்கியின் வாரிசுகள்), பகுதி 3 (படிக்க விரும்புபவை)