சாண்டில்யன்

sandilyanசாண்டில்யனின் எல்லா புனைவுகளையும் படித்து டிக் மார்க் போட்டுவிட வேண்டும் என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. தனியாக பதிவு போடும் அளவுக்கு வொர்த் இல்லாத புத்தகங்களைப் பற்றி இங்கே சிறு குறிப்புகள் எழுதி இருக்கிறேன்.

ராஜயோகம்: ராஜ யோகம், சேரன் செல்வி ஆகியவற்றோடு சேர்த்து ஒரு trilogy. தமிழில் இது அபூர்வமான முயற்சி. வாசப் என்ற (யுவன் சுவாங், மார்க்கோ போலோ, இபின் பதூதா மாதிரி) ஒரு சரித்திர ஆசிரியன் மற்றும் பயணி குலசேகரப் பாண்டியனுக்கு பின் எழுந்த வாரிசு சண்டையை பார்க்கிறான். பஸ்ஸில் படிக்கலாம். யார் இந்த வாசப்?

நிலமங்கை: மாலிக் காஃபூர் படையெடுத்த காலத்தில் பாண்டிய அரியணைப் போட்டியைப் பற்றிய கதை. வீரபாண்டியனை சேர அரசன் ரவிவர்மனின் மகள் நிலமங்கை பல அபாயங்களிலிருந்து காப்பாற்றி மணம் செய்து கொள்கிறாள்.

சேரன் செல்வி: மாலிக் காஃபூர் திரும்பினாலும் அமீர் குஸ்ரோ கான் இன்னும் தென்னிந்தியாவில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ முயற்சிக்கிறான். அவன் முயற்சிகளை முறியடிக்கும் சேரன் ரவிவர்மனின் சாகசங்கள். ரவிவர்மன் தன் மருமகன் வீரபாண்டியனோடும் இந்த முயற்சியில் போரிட வேண்டி இருக்கிறது.

அவனிசுந்தரி: கோவூர் கிழாரின் சில பாடல்களை வைத்து நலங்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் ஆகியோரை வைத்து ஒரு குறுநாவல். தவிர்க்கலாம்.

இந்திரகுமாரி: கதம்ப குல மன்னன் ரவிவர்மன் பலாசிகா நகரத்தைக் கைப்பற்றுகிறான். தவிர்க்கலாம்.

கடல் ராணி: கனோஜி காலத்தில் அரபிக் கடலில் நடந்த ஒரு சிறு போரை மையமாக வைத்து ஒரு கதை. டைம் பாஸ்.

கடல் வேந்தன்: கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்ற மன்னன் ஒரு கடல் போரில் யவனர்களை தோற்கடித்தானாம். அந்தப் பின்னணியில் ஒரு கதி. தவிர்க்கலாம்.

கவர்ந்த கண்கள்: ராமானுஜர் பற்றிய குருபரம்பரை கதைகளில் வில்லிதாசன் கதையும் ஒன்று. வில்லிதாசன் தன் மனைவி பொன்னாச்சியின் கண்களின் அழகில் மயங்கி இருந்தாராம்; ராமானுஜர் உனக்கு அதை விட அழகிய கண்களை காட்டுகிறேன் என்று அரங்கனின் கண்களைக் காட்டி, வில்லியை வைஷ்ணவ மார்க்கத்தில் திருப்பினாராம். இந்த legend-ஐ சாண்டில்யன் கதையாக எழுதி இருக்கிறார். டைம் பாஸ்.

மங்கலதேவி: கொஞ்சம் நீளமான கதை ஒன்று (மங்கலதேவி – பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் ஒரு கோட்டையை கைப்பற்றுகிறான்), கொஞ்சம் சின்னக் கதைகள் மூன்று (ஒன்று பாஜிராவ்-மஸ்தானி காதல் பற்றி, ஒன்று கதம்ப ராஜ வம்சத்தை ஸ்தாபித்த மயூர சன்மன் பற்றிய ஒரு தொன்மக் கதை, இன்னொன்று ஆமூர் மல்லனை ஒரு சோழ இளவரசன் வீழ்த்தியதைப் பற்றி நக்கண்ணையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை வைத்து எழுதியது). டைம் பாஸ்.

மாதவியின் மனம்: சமுத்திரகுப்தன் காஞ்சி பல்லவன் விஷ்ணுகோபன் மேல் படையெடுத்து வந்த வரலாற்றுப் பின்புலம். என்னவோ பிரமாத சதி என்று பில்டப் எல்லாம் கொடுத்து உப்பு சப்பில்லாத ஒரு சதியைக் கொடுத்திருக்கிறார்.

மோகனச் சிலை: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்த சம்பவத்தை வைத்து ஒரு சாகசக் கதை. டைம் பாஸ்.

மூங்கில் கோட்டை: மாந்தரஞ் சேரல் இரும்பொறை தலையாலங்கானத்து செரு வென்ற நெடுஞ்செழியனின் சிறையிலிருந்து தப்பினான் என்று ஏதோ ஒரு சங்கப் பாடல் இருக்கிறது. அதை கதையாக்கி இருக்கிறார்.

நாகதேவி: சாண்டில்யன் நல்ல நாளிலேயே தில்லைநாயகம். இதில் இரண்டு நாயகிகள். இரட்டைப் பிறவிகள். அவள் என்று நினைத்து இவளைத் தடவுவதும் இவள் என்று நினைத்து அவளைத் தடவுவதும் அவள் என்று சொல்லிக் கொண்டு இவள் வருவதும் இதேதான் கதை பூரா. படுத்துகிறார்.

நீலரதி: களப்பிரர் காலம். அச்சுத விக்ராந்தன் ராஜா. அதைத் தவிர வேறு ஒரு வரலாறும் இல்லை. ஒரு கறுப்பு வெள்ளை எம்ஜிஆர் ராஜா ராணி படம் பார்ப்பது போல ஒரு கதை.

நீலவல்லி: முத்துக் களவை துப்பறியப் போகும் பாண்டிய இளவரசன் வீரநாராயணன் சேரன் மகளையும் சந்தித்து மணக்கிறான். நடுவில் இரண்டு மூன்று அத்தியாயம் அந்தக் காலத்துக்கு போர்னோவாக இருந்திருக்க வேண்டும்.

நீள்விழி: நந்திவர்ம பல்லவனுக்கும் பாண்டிய மன்னன் ஜடிலனுக்கும் பெண்ணாகடத்தில் போர் நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு வழக்கமான கதை. தவிர்க்கலாம்.

பல்லவபீடம்: பல்லவ அரசன் சிவஸ்கந்தவர்மனின் சாகசங்கள். தவிர்க்கலாம்.

பல்லவ திலகம்: பல்லவ அரசன் தந்திவர்மன் நான் வளர்ந்த கிராமம் ஒன்றின் அருகே மிகப் பெரிய ஏரி ஒன்றை வெட்டியவன். அதனால் அவனைப் பற்றி கொஞ்சம் தேடிப் பிடித்து படித்திருக்கிறேன். ராஷ்டிரகூடர்களிடம் அவன் தோற்றது வரலாறு. ஆனால் சாண்டில்யனின் கதாநாயகன் தோற்கலாமா? அதனால் தந்திவர்மன் வென்றதாகவும் ஆனால் ராஷ்டிரகூட அரசனிடம் நீயே ஜெயித்ததாக கல்வெட்டு வெட்டிக் கொள் என்று சொன்னதாகவும் எழுதி இருக்கிறார். மனிதர் ரூம் போட்டு யோசித்திருக்கிறார்!

ராஜபேரிகை: சந்தாசாஹிப் நாயக்கர் வம்ச கடைசி ராணி மீனாட்சியை பொய் சத்தியம் செய்து கொடுத்து ஏமாற்றினார் என்று சொல்வார்கள். ராணியின் வளர்ப்பு மகன் விஜயகுமாரன் அவனைப் பழிவாங்குவதாக கதை. பின்புலத்தில் ராபர்ட் கிளைவ், டூப்ளே, ஆங்கில அரசு அமைவதின் முதல் படி. ராணி மீனாட்சியின் ஆவி கிளைவுக்கு உதவுவதாக கதையை அமைத்திருக்கிறார். ரொம்ப பேச்சு. எல்லாரும் என்னவோ டீக்கடைப் பேச்சு போல அடிவெட்டு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில்தான் உள்ளே போவது ரொம்ப சிரமம் என்று கப்பலைப் பற்றி நாயகன் பேச படிப்பவர்களுக்கு எங்கே உள்ளர்த்தம் புரியாமல் போய்விடப் போகிறதோ என்று நாயகி வெட்கப்படுவாள். டைம் பாஸ்.

ராஜதிலகம்: பல்லவர் சாளுக்கியர் போர்கள் மிகவும் குழப்பமானவை. புலிகேசி தான் மகேந்திரவர்மனைத் தோற்கடித்தேன் என்றும் மகேந்திரவர்மன் தான் புலிகேசியைத் தோற்கடித்தேன் என்றும் கல்வெட்டி இருக்கிறார்கள். புலிகேசியின் மகன் விக்ரமாதித்தன் மகேந்திரவர்மனின் பேரன் பரமேஸ்வரவர்மன் போரும் இப்படித்தான் இருவருமே வென்றதாக இருக்கிறது. சாண்டில்யன் முதலில் விக்ரமாதித்தன் வென்றான், பிறகு பரமேஸ்வரவர்மன் என்று தன் கதையை எழுதி இருக்கிறார். விறுவிறுப்பாகப் போகிறது. தொடர்கதையாக நிச்சயம் படிக்கலாம்.

ராஜ்யஸ்ரீ: ஹர்ஷர் தன் தங்கை ராஜ்யஸ்ரீயின் கணவர் கிருகவர்மனை வஞ்சகமாகக் கொன்றவர்களை பழி தீர்த்து வட இந்தியாவின் சக்ரவர்த்தி ஆனார் என்பது சரித்திரம். முக்கால்வாசி நேரம் கிருகவர்மன் ராஜ்யஸ்ரீயைத் தடவுவதை விலாவாரியாக விவரிக்கிறார், கடைசி கால் பாதியில் சரித்திரத்தை சேர்த்து முடித்து விடுகிறார். தவிர்க்கலாம்.

சித்தரஞ்சனி: கௌதமிபுத்ர சதகர்ணி சாகர்களின் தலைவனான நாகபாணனை வென்று சாதவாகன அரசை நிறுவினான் என்பதை அடிப்படையாக வைத்து ஒரு கதை. சுமார்.

துறவி: தவிர்க்கலாம். ராஜா-ராஜா சண்டை, அவ்வளவுதான்.

வசந்தகாலம்: பெருஞ்சேரல் இரும்பொறை அதியமான் நெடுமான் அஞ்சியைத் தோற்கடித்தான் என்ற பின்னணியை வைத்து போலி சாமியார் கோஸ்வாமி, ஒரு வழக்கமான காதல் எல்லாம் சேர்த்து கதையாக்கி இருக்கிறார்.

மதுமலர்: சாண்டில்யன் எழுதிய அபூர்வமான சமூகக் கதை. ஐம்பதுகளில் எழுதப்பட்டிருந்தால் நல்ல சினிமாக் கதையாக இருந்திருக்கும். ஜமீந்தார் பதவி+பணத்துக்காக மனைவியை மறக்கும் அப்பா, மூத்த தாரத்து மகன், இளைய தாரத்து மகன், இரண்டு பேரும் விரும்பும் ஹீரோயின் என்று சில ஸ்டாண்டர்ட் சினிமா காரக்டர்களை வைத்து எழுதப்பட்டது. இன்றைக்கு ஒரு curiosity value-வுக்காக மட்டுமே படிக்கலாம்.

நங்கூரம்: இன்னொரு சமூகக் கதை. ஸ்டீரியோடைப் பாத்திரங்கள். தவிர்க்கலாம்.

புரட்சிப்பெண்: தீவிரவாதி சரபசாஸ்திரி, காந்தி பக்தர்கள், சுதந்திரப் போராட்டப் பின்னணியில் ஒரு சமூகக் கதை. ஒரே ஆச்சரியம் இதற்கு சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி முன்னுரை எழுதிப் பாராட்டித் தள்ளி இருப்பதுதான். சத்தியமூர்த்தியின் ரசனை இவ்வளவு மோசமாக இருக்க வேண்டாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திரப் புனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
சாண்டில்யனின் “ஜலதீபம்”
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
சாண்டில்யன் நூற்றாண்டு

சாண்டில்யனின் ராஜபுதனக் கதைகள்

sandilyanசாண்டில்யனின் மனதுக்கு நெருக்கமான புத்தகம் Colonel James Tod எழுதிய Annals and Antiquities of Rajasthan என்றுதான் தோன்றுகிறது. ravi_varma_painting_of_rana_pratapமீண்டும் மீண்டும் இந்தப் புத்தகத்திலிருந்து ஒரு வரியை எடுத்து அதை ஒரு சின்ன கதையாக எழுதுவார். ராஜபுத்திர வீரர்கள், ராணாக்கள், ராணிகளைப் பற்றி எழுதும்போது அவரே மிகவும் என்ஜாய் செய்து எழுதுவது போலத் தெரியும். சிறு வயதில் சேரன் சோழன் பின்புலக் கதைகளை விட நீண்ட அங்கிகளும் இடையில் தொங்கும் வாள், கச்சையில் ஒரு குறுவாள், தலைப்பாகை அணிந்த வீரர்களும் பெருத்த மார்புகளை சரியாக மூடாத இளவரசிகளும் நடை போடும் இந்தக் கதைகள் exotic ஆக இருந்தன, இவற்றின் கவர்ச்சியை மேலும் அதிகரித்தன. நன்றாகப் புரியக்கூடிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மாதிரி பேர்களை விட கேள்விப்பட்டே இருக்காத சந்தாவத், ஜாலா மாதிரி பேர்கள் வேறு இந்தக் கவர்ச்சியைக் கூட்டின. அதுவும் ஜீவபூமி, மஞ்சள் ஆறு, நாகதீபம் போன்ற நாவல்களை மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். ராணா சங்காவும் ராணா அமர்சிங் ஜஹாங்கீரோடு சமரசம் செய்து கொண்டதும் நினைவிருப்பது இந்தப் புத்தகங்களின் மூலம்தான். இன்று கூட மேவார் அரசுதான் ராஜபுதன அரசுகளில் first among equals என்ற பிம்பம் இருக்கிறது!

அவரது ராஜபுதனக் கதைகளைப் பற்றி இங்கே சின்ன சின்ன குறிப்புகளைத் தந்திருக்கிறேன். இவற்றைத் தொகுத்து ஒரு omnibus ஆகப் போடலாம்.

ராணா ஹமீர்: மேவார் ராணா வம்சம் அழியும்போது தூரத்து சொந்தமான ராணா ஹமீர் ஒரு palace coup மூலம் முடிசூடினான் என்ற வரலாற்றை கதையாக எழுதி இருக்கிறார். தவிர்க்கலாம்.

rajasthan-mapமலை அரசி: ராவ் ஜோடா ஜோத்பூர் நகரத்தை உருவாக்கினார், மார்வாரின் அரசர் என்பது வரலாறு. அதை அடிப்படையாக வைத்து ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். ராவ்ஜோடா பல ராஜபுதன வம்சாவளிகளுக்கு மூதாதையர். விக்கி குறிப்பைப் படித்துப் பாருங்கள்.

மஞ்சள் ஆறு: ராணா சங்கா பட்டமேற்பதில் இருந்த பிரச்சினைகள், பாபரோடு போர். தவிர்க்கலாம்.

மண்மலர்: ராணா பிரதாப் அக்பரை தனியாக எதிர்த்து நின்றார் என்பது வரலாற. அவருக்கும் ராஜா மான்சிங்குக்கும் இருந்த பூசல்களைப் பின்புலமாக வைத்து எழுதி இருக்கிறார். படிக்கலாம்.

நாகதீபம்: ராணா பிரதாப்பின் காலத்துக்குப் பிறகு ஜஹாங்கீரிடம் ராணா அமர்சிங் சமாதானம் செய்துகொண்டான் என்பது வரலாறு. அந்த சமாதானத்தின் பின்புலத்தில் ஹரிதாஸ் ஜாலா என்ற வீரனை ஹீரோவாக்கி, அவன் மேவாரின் ஒரு ரத்தினத்தை ஜஹாங்கீரிடம் சேர்த்தான் என்று கதை. டைம் பாஸ்.

ஜீவபூமியில் எவ்வளவு தூரம் சரித்திரம் என்பது தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் ஒரு ராஜபுத்திர வீரனை வைத்து எழுதி இருக்கிறார்.

உதயபானு: அவுரங்கசீப்பின் தளபதி நூர் அலியை உதயபானு தோற்கடித்தான் என்ற ஒரு வரியை கதையாக்கி இருக்கிறார். தவிர்க்கலாம்.

மோகினி வனம்: ராணா பீம்சிங் என்ற பிற்கால ராணா காலத்தில் மேவார் அரசு உள்நாட்டுப் பூசல், மராத்தியர் ஆதிக்கம் காரணமாக மெதுமெதுவாக செயலிழந்ததை வைத்து ஒரு கதை. கதாபாத்திரங்கள் consistent ஆக இருக்க வேண்டும் என்றெல்லாம் சாண்டில்யன் கவலைப்படவே இல்லை. முதல் அத்தியாயத்தில் அதிகார வெறி உள்ளவளாக வரும் ராஜமாதா இரண்டு மூன்று அத்தியாயங்களில் நாட்டு நலனுக்காக தன் மரியாதையை விட்டுக் கொடுத்து அடுத்தவரிடம் கெஞ்சுகிறாள். பல துணைப்பாத்திரங்களின் நிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

இளையராணி: இன்னொரு ராஜபுதனக் கதை. இளவரசன் அமரன் சித்தியின் சூழ்ச்சிகளை முறியடித்து அம்பர் ராஜகுமாரி ரஜனியை மணக்கிறான்.

ராணியின் கனவு: ராஜபுதன பின்புலத்தை வைத்து கதைகள். டைம் பாஸ்.

சந்திரமதி: ராணா அமரசிம்மனை வைத்து ஒரு கதை.

இதைத் தவிரவும் நிறைய எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. உங்களுக்குப் பிடித்த ராஜபுதனக் கதைகள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

அகிலனின் “வெற்றித் திருநகர்”

அகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். அதுவும் சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.

அகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂

கிருஷ்ணதேவராயரை தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு மன்னராக – அதுவும் ஒன்றான பாரத நாடு என்ற எண்ணம் உடையவராகவும், ராஜபுதன நாடுகளோடு சேர்ந்து முகலாயரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவும் சித்தரித்திருக்கிறார். அவரது சபையில் இருக்கும் பிரபுக்கள் அதை உணர முடியாததால் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராயரால் அவர்களின் மனதை மாற்ற முடியவில்லை.

அமைச்சராக இருக்கும் சாளுவர் ராயருக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிற்காது என்பதை உணர்கிறார். மதுரையைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு தன் மாப்பிள்ளையை மன்னராக்க பல சதிகளை செய்கிறார். விஸ்வநாதனுக்கும் தன் மகள் லக்ஷ்மிக்கும் உள்ள ஈர்ப்பை ஊக்குவிக்கிறார். நாகமரைத் தூண்டிவிடுவதே அவர்தான். ராயர் விஸ்வநாதனையே மதுரை மன்னன் ஆக்கிய பிறகும் அவரது சதிக்கு பொருளே இல்லாமல் போய்விடுகிறது. இருந்தாலும் தான் வில்லன், அதனால் சதி செய்தாக வேண்டும் என்று தொடர்ந்து சதி செய்து கொண்டே இருக்கிறார். அவர் கடைசியில் லக்ஷ்மியை மணக்கக் கூடாது என்று விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொள்வது ஒன்றுதான் உருப்படியான வில்லத்தனமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வருவது போல (ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவகுமாரும் முத்துராமனும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதாக எனக்கு மங்கலான ஒரு நினைவு) நாகமரும் விஸ்வநாதனும் படைகளை மோதவிடாமல் தாங்கள் இருவரும் தனியாக கத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எதற்கு வீண் சண்டை என்று கோலி பம்பரம் ஏதாவது விளையாடி அதில் வெல்பவருக்கு தோற்றவர் அடிமை என்று சொல்லி இருக்கலாம். அகிலனுக்கு அது தோன்றாமல் போய்விட்டது.

கிருஷ்ணதேவராயரிடம் பல இன்றைய விழுமியங்களை – ஒன்றான பாரத நாடு இத்யாதி – ஏற்றி இருக்கிறார். ஜெயமோகனிடம் சமீபத்தில் இப்படி இன்றைய விழுமியம் அன்றைய மனிதர்களிடம் இருக்கிறதே என்று கமென்ட் அடிப்பதைப் பற்றி கொஞ்சம் இடி வாங்கினேன். நடக்கவே முடியாத விஷயம் என்று ஒன்றுமில்லை, அதற்கான சாத்தியக் கூறு இருந்தால் அது ஆசிரியரின் கற்பனை என்று விட்டுவிட வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கான சாத்தியக் கூறு உண்டு என்று நிறுவ கொஞ்சம் வலுவான ஆதாரம் வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. ராயர் ராணா சங்காவுக்கு உதவி செய்தார் என்று ஏதாவது இருந்தால் சரி, இல்லாவிட்டால் இப்படி எழுதுவது எனக்கு உறுத்தத்தான் செய்கிறது.

வெற்றித் திருநகர் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

ஆனால் என்ன குறை சொன்னாலும் இதுதான் எனக்கு அகிலனின் சிறந்த சரித்திர நாவல். இது மட்டுமே எனக்கு கொஞ்சமாவது அப்பீல் ஆகிறது.

வெற்றித் திருநகர் ஜெயமோகனின் வணிக சரித்திர நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுகிறது. என் கண்ணில் அது முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேங்கையின் மைந்தனை விட நல்ல நாவல்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

சாண்டில்யனின் “ஜலதீபம்” – 70% காமம், 25% சாகசம், 5% சரித்திரம்

ஒரு பத்து வயது வாக்கிலேயே சாண்டில்யன் புத்தகங்கள் அலுத்துவிட்டன. ஆனால் சாண்டில்யன் புத்தகங்களின் வழியாகத் தெரிந்து கொண்ட சரித்திரம் மறந்து போவதே இல்லை. ஒரு வேளை சரித்திரம் குறைவாகவும் சாகசம் அதிகமாகவும் இருப்பதாலோ என்னவோ. சரித்திரத்தை விடுங்கள், சம்பவங்களே ரொம்பக் கம்மி.

ஜலதீபமும் அப்படித்தான். மூன்று பாகம் கதையில் உள்ள சரித்திரம் மூன்று வரி கூட இருக்காது. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், அபிசீனிய சித்திகள் போன்றவர்களின் போட்டி இருந்தாலும், கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலின் முடி சூடா மன்னர், மகாராஷ்டிர அரண்மனைப் பூசலில் முதலில் ஷாஹுவுக்கு எதிராகப் போராடினாலும் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் முயற்சியால் ஷாஹுவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டார் என்பதுதான் சரித்திரம். அதை வைத்தே ஆயிரத்துச் சொச்சம் பக்கம்.

கதைச்சுருக்கமும் சில வரிகளில் எழுதிவிடலாம். தமிழன் இதயசந்திரன் தஞ்சையில் ராஜாராமின் ரகசிய மனைவிக்குக் கொடுத்த வாக்குக்காக ஒரு ஆளைத் தேடி மகாராஷ்டிரம் வருகிறான். அப்போது ஷாஹு-தாராபாய் அரசுரிமைப் போட்டி. ஷாஹுவின் தரப்பில் இருக்கும் பானுதேவியிடம் மயங்குகிறான். பானு அவனால் ஈர்க்கப்பட்டாலும் ஷாஹு ஜெயிப்பதற்கு அவனை எப்படி பயன்படுத்தலாம் என்றுதான் சதா சிந்திக்கிறாள். சித்திகள் தலைவனிடம் ஒரு பூசல், அதிலிருந்து கனோஜியின் வளர்ப்பு மகள் மஞ்சுவால் காப்பாற்றப்படுவது, மாலுமி ஆவது, ஜலதீபம் கப்பலின் உபதளபதி, சில ஆங்கிலக் கப்பல்களைக் கைப்பற்றுவது, அங்கே காதரினோடு உறவு, ஷாஹுவின் தளபதியோடு தரையில் போர், வெற்றி, ஆனால் திடீரென்று தேடி வந்தவன் அவனாகவே மாட்டிக் கொள்வது, பாலாஜி விஸ்வநாத்தின் சமரசம், மஞ்சுவோடு திருமணம் என்று கதை போகிறது.

காமம் (சாண்டில்யன் கண்ணில்) 70%, சாகசம் 25%, சரித்திரம் 5% என்ற கலவையில் நிறைய காகிதத்தை வேஸ்ட் செய்திருக்கிறார். ஆங்கிலக் கப்பல்களை கைப்பற்றுவது ஒரு சாப்டர் என்றால் காதரினோடு குலாவுவது ஐந்து சாப்டர் வருகிறது. அவர் எழுதியது அந்தக் காலத்துக்கு கிளுகிளுப்பான வர்ணனையாக இருக்கலாம். இன்று போரடிக்கிறது. எல்லாரும் இதயசந்திரனுக்கு வசதியாக தமிழ் கற்றிருக்கிறார்கள். இதயசந்திரனும் மற்றவர்களும் ஆண்டுகளையும் மாதங்களையும் ஆங்கிலக் கணக்குப்படிதான் – டிசம்பர் 1712 என்றெல்லாம்தான் கணிக்கிறார்கள், இந்திய மரபுப்படி இல்லை. போரைப் பற்றி சாண்டில்யன் வர்ணிப்பது சின்னப்பிள்ளைகளுக்கு கதை சொல்வது போலத்தான் இருக்கிறது. பாலாஜி விஸ்வநாத் சொல்வதை எல்லாரும் அப்படியே கேட்கிறார்கள். முதல் பக்கத்திலேயே அவரை பேஷ்வா ஆக்கி இருந்தால் நாவல் சின்னதாக இருந்திருக்கும்.

சாண்டில்யனின் பலவீனங்கள் தெரிந்தவையே. அவரது பலம் என்ன, ஏன் அலுத்துவிட்டன என்று குறை சொல்லிக் கொண்டே ஜலதீபம் போன்ற புத்தகங்களை இன்னும் படிக்கத் தோன்றுகிறது, நாஸ்டால்ஜியாவைத் தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த நாவலைப் பொறுத்த வரையில் எனக்குத் தெரிவது அவர் தேர்ந்தெடுத்த பாத்திரங்கள் – கனோஜி, பாலாஜி விஸ்வநாத் மற்றும் அபிசீனிய சித்திகள், ஜன்ஜிரா கோட்டை ஆவலைத் தூண்டும் பாத்திரங்கள்+தளங்கள். அவர்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள ஆவலைக் கிளப்பி விடுகிறார். ஜன்ஜீரா கோட்டை இன்னும் இருக்கிறதாம், அதைப் பார்க்க வேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது. இடது பக்கம் இருக்கும் படத்தைப் பாருங்கள், தீவு ஒரு பெரிய மரகதப் பதக்கம் போல ஜொலிக்கிறது! இரண்டாவதாக சாண்டில்யனின் பாத்திரங்கள் caricatures-தான் என்றாலும் ஒரு ஜெகசிற்பியனை விட, அகிலனை விட உயிருள்ள பாத்திரங்களைப் படைத்திருக்கிறார்.

ஜெயமோகன் இதை historical romances-இன் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். சாண்டில்யனின் படைப்புகளில் இது நல்ல நாவல்தான். சரித்திர நாவல் விரும்பிகள் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வரலாற்றுப் புனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
சாண்டில்யன் நூற்றாண்டு
சாண்டில்யனின் “கன்னி மாடம்”
கனோஜி ஆங்க்ரே பற்றி விக்கி குறிப்பு
பாலாஜி விஸ்வநாத் பற்றி விக்கி குறிப்பு
ஜன்ஜிரா கோட்டை பற்றி விக்கி குறிப்பு
சித்திகள் பற்றி விக்கி குறிப்பு

பிரபஞ்சனின் “வானம் வசப்படும்”

Chronologically, மானுடம் வெல்லும் புத்தகத்தின் தொடர்ச்சி. இரண்டு புத்தகங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே கருத்து, ஒரே பின்புலம், ஏறக்குறைய அதே மனிதர்கள். மா. வெல்லும் நாவலின் அநேக பலங்களும் இதிலும் உண்டு. ஒரு பலவீனம் இல்லை. அதிலே கொஞ்சம் rambling, தொடர்பில்லாத பல துணைக் கதைகள் உண்டு. இது இன்னும் கொஞ்சம் கோர்வையாக இருக்கிறது. அப்படி கோர்வையாக இருப்பதே ஒரு விதத்தில் பலவீனமாகவும் இருக்கிறது. சுவாரசியமான துணைக் கதைகள் இதில் கொஞ்சம் குறைவு.

பாண்டிச்சேரிக்கு ஒரு புது கவர்னர் – டூப்ளே. ஆனந்தரங்கம் பிள்ளைக்கு இன்னும் தலைமை துபாஷ் வேலை கிடைக்கவில்லை என்றாலும் அவர்தான் தமிழர்களில் முக்கியஸ்தர். பெரிய வியாபாரி, நிர்வாகி, துபாஷ் எல்லாம் அவர்தான். ஒரே ஒரு பிரச்சினை. டூப்ளேயின் மனைவி பிள்ளையின் நலம் விரும்பி இல்லை. டூப்ளேக்கு பிள்ளையின் அருமை பெருமை எல்லாம் தெரிந்தும், பிள்ளை எத்தனையோ உண்மையாக உழைத்தும், பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய பதவி, நிலை முழுதாகக் கிடைப்பதில்லை. அவரை மையமாக வைத்து அன்றைய சமுதாயம், வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

அரண்மனைச் சதி genre-இல் என்னதான் சுவாரசியம் இருந்தாலும், மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் புத்தகங்களைப் படிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சி வருவதில்லை. தமிழர்-பறையர்-துருக்கர்-பரங்கியர் வாழ்க்கை, கிருஸ்துவப் பாதிரியார்கள் ஜாதி பார்ப்பது, (ஜாதி கிடையாது என்று பறையர்-மேல் ஜாதியாருக்கு நடுவில் இருக்கும் சுவரை உடைக்கும் பாதிரியாரும் உண்டு) வேதபுரீஸ்வரர் கோவிலை உடைக்க முயல்பவர்கள், டூப்ளேயின் மனைவி அப்பட்டமாகத் திருடுவது, தாசிகள், லஞ்சம் வாங்குவது அதிகார வர்க்கத்தின் சாதாரண நிகழ்ச்சியாக இருப்பது என்று பல நிகழ்ச்சிகளை அருமையாகக் கோர்த்திருக்கிறார்.

நாவலுக்கு 1995-ஆம் ஆண்டு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. தகுதி உள்ள நாவலே, ஆனால் மா. வெல்லும் என் கண்ணில் இன்னும் கொஞ்சூண்டு பெட்டர். எந்த வருஷம் வெளியானது என்று தெரியவில்லை. உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை இருநூறு ரூபாய்.

ஜெயமோகன் இதைத் சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் (பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள்) சேர்க்கிறார்.

என்னதான் மா. வெல்லும் கொஞ்சம் rambling என்றாலும் எனக்கு இதை விட அதுதான் ஒரு மாற்று ஒசத்தி. இருந்தாலும் சிறந்த வரலாற்று நாவல், சிறந்த நாவல். நிச்சயமாக தமிழின் டாப் மூன்று வரலாற்று நாவல்களில் ஒன்று. (மற்றவை, மானுடம் வெல்லும் – obviously. மற்றும் பொன்னியின் செல்வன். இதைப் படிப்பதற்கு முன்னால் மூன்றாவது இடத்தில் இருந்தது சிவகாமியின் சபதம்.) படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டி: பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்”

அகிலனின் “வேங்கையின் மைந்தன்”

மாற்றங்கள் வரும், இனி நல்ல புத்தகங்கள் என்று நான் கருதுபவை பற்றியே focus செய்யப் போகிறேன் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுத வேண்டுமா என்று ஒரு முறைக்கு இரு முறை யோசித்தேன். ஜெயமோகனின் நாவல் சிபாரிசுகள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை; சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் புத்தகங்கள் அத்தனையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆசை இரண்டும் எழுத வைக்கின்றன.

வேங்கையின் மைந்தன் பேப்பருக்குப் பிடித்த கேடு. உலக மகா போர். இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி விருது கொடுக்கப்பட்டிருப்பது மானம் போகும் விஷயம். நாவலில் சரித்திரமும் இல்லை, நாவலும் இல்லை. நல்ல பாத்திரப் படைப்பு, ஒரு காலகட்டத்தைச் சித்தரிப்பது, தகவல்கள், நுண்விவரங்கள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. கல்கி எழுதிய கொஞ்சம் குழந்தைத்தனமான பார்த்திபன் கனவு இதை விட பல மடங்கு பெட்டர். எப்படி அகிலன் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பெருவெற்றி பெற்றார் என்பது எனக்கு மர்மமாகவே இருக்கிறது. அதே காலத்தில் வெற்றி பெற்ற, இன்றைக்கு மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மு.வ., நா.பா., தேவன் மாதிரி “வணிக எழுத்தாளர்களில்” ஏதோ கொஞ்சமாவது இருக்கிறது. இவரது வெற்றி புரியவே இல்லை. இதில் ஞானபீடம், சாகித்ய அகாடமி என்று விருது வாங்கிக் குவித்திருக்கிறார். எப்படி? அந்தக் காலத்தின் இலக்கியத்தின் வால்யூ சிஸ்டம் என்ன என்று ஜீவி, ஜெயமோகன் மாதிரி யாராவது கொஞ்சம் விளக்குங்கள்!

வேங்கையின் மைந்தனில் உள்ள சரித்திரம் ராஜேந்திரச் சோழர் காலத்தில் இலங்கையை வென்று பாண்டியர்களின் கிரீடம், ஆரம் ஆகியவற்றைக் கைப்பற்றியது, கங்கை கொண்டது அவ்வளவுதான். இதில் கொடும்பாளூர் இளவரசன் இளங்கோ, அவனோடு love-hate உறவுள்ள இலங்கை இளவரசி ரோஹிணி, அவனைக் காதலிக்கும் ராஜேந்திரரின் மகள் அருண்மொழி என்று சில பல கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து உலாவ விட்டிருக்கிறார்.

புத்தகத்தைப் படிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்தது. தம் கட்டித்தான் படித்தேன். இளங்கோ-ரோஹிணி சந்திக்கும்போதெல்லாம் அய்யய்யோ என்றுதான் மனம் போனது. எண்ணூறு பக்க நாவலில் இவர்கள் இருவரும் ஒரு இருநூறு முன்னூறு பக்கத்துக்கு சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கொடுமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்து பகல் கனவு கண்டபோது கூட இளங்கோவை விட வீர சாகசங்கள் புரிந்திருக்கிறேன். உண்மையில் கல்கி, சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என் இன்னும் பாப்புலராக இருக்கின்றன என்று புரிந்து கொள்ளத்தான் இந்தப் புத்தகம் உதவியது.

ஜெயமோகன் இதில் என்னத்தைக் கண்டார் என்று எனக்கு கொஞ்சம் கூடப் புரியவில்லை. சித்திரப்பாவையிலாவது அகிலன் முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இது மெகாசீரியலுக்குக் கூட லாயக்கில்லை. நாவல் சிபாரிசுகளில் இன்னும் நாலு அகிலன் புத்தகங்களை ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறாரே (கயல்விழி, வெற்றித்திருநகர், பெண், பாவை விளக்கு) என்று பயமாக இருக்கிறது.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 350 ரூபாய். நூலகம் தளத்தில் மின்னூலும் இலவசமாகக் கிடைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்: அகிலனின் “சித்திரப்பாவை

அரு. ராமநாதனின் “வீரபாண்டியன் மனைவி”

வீரபாண்டியன் மனைவி என் படித்தே ஆக வேண்டிய நாவல்கள் லிஸ்டில் வராது. ஆனால் நான் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த லிஸ்டில் இருந்தது. அதனால்தான் மாற்றங்கள் நடக்கும் என்று சொன்ன பிறகும் இதைப் பற்றி எழுதுகிறேன்.

தமிழில் சரித்திர நாவல்கள் என்று ஆரம்பித்த ஒரு சீரிஸ் இந்த தளத்தின் நல்ல பதிவுகள் பலவற்றைக் கொண்டது. நான் படிக்க வேண்டிய சரித்திர நாவல்கள் என்று சில பல நாவல்களை குறிப்பிட்டிருந்தாலும் உண்மையிலேயே படிக்க விரும்பியவை நான்குதான் – வீரபாண்டியன் மனைவி, டணாய்க்கன் கோட்டை, உடையார் மற்றும் காவல் கோட்டம். இந்த வருஷம் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புனைவுகளில் ஒன்று.

வீரபாண்டியன் மனைவி புத்தகத்தில் முதல் ஐம்பது பக்கம் தாண்டியதும் இது அரண்மனைச் சதி genre லெவலைத் தாண்டப் போவதில்லை என்று புரிந்தது. இன்னும் எத்தனை பக்கம் படிக்க வேண்டும் என்று சோர்வு வந்தது. ஆனாலும் விடாமல் படித்தேன். ஓரளவு ஜவ்வுதான், ஆனால் அகிலன், ஜெகசிற்பியன் மாதிரி பேப்பருக்குப் பிடித்த கேடு என்று சொல்லமாட்டேன். கல்கி, சாண்டில்யன் ரேஞ்சில் இருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம். தமிழின் நல்ல சரித்திர நாவல்களில் ஒன்று. ஆனால், in absolute terms, இது சில நல்ல கூறுகள் கொண்ட சுமாரான நாவல் மட்டுமே.

புத்தகத்தில் நினைவிருக்கப் போவது ஜனநாதக் கச்சிராயன் பாத்திரப் படைப்பு மட்டுமே. எந்த விதமான போலித்தனமும் இல்லாத சிந்தனையாளனாக, முடியாட்சியின் குறைகளை உணர்ந்து அதற்கு மாற்று தேடும் ஒருவனாக, உருவாக்கி இருக்கிறார். நிச்சயமாக எழுதப்பட்ட காலத்தில் பெரிய அளவு ஹிட் ஆகி இருக்கும். இன்று வாய்ச்சவடால் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது, இருந்தாலும் ரசிக்கக் கூடிய பாத்திரப் படைப்புதான்.

ஜனநாதனைக் கழித்தால் புத்தகத்தில் வேறு ஒன்றுமே இல்லை. தட்டையான பாத்திரப் படைப்பு, போரடிக்கும் தெய்வீகக் காதல், எதிர்பார்க்கக் கூடிய திருப்பங்கள் என்றுதான் போகிறது. அதுவும் வீரபாண்டியனின் மனைவியை சிறை மீட்க நடக்கும் முயற்சிகள், அவற்றின் தோல்வி எல்லாம் ஒரு ஆயிரம் பக்கத்துக்கு மேல் இழு இழு என்று இழுக்கிறார். தொடர்கதையாகப் படித்தால் தெரிந்திருக்காது, புத்தகமாகப் படிக்கும்போது எப்படா கடைசிப் பக்கம் வரும் என்று திருப்பிப் திருப்பிப் பார்த்தேன்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் வீரபாண்டியனை முறியடித்து விக்கிரம பாண்டியனை பாண்டிய அரியணையில் அமர்த்தினான் என்பது வரலாறு (என்று நினைக்கிறேன்). அந்தப் பின்புலத்தில் சோழ அதிகாரிகள் – ஒற்றர் படைத்தலைவன் ஜனநாதன், மதுரையைப் பிடித்ததில் பெரும் பங்கேற்று அதிகாரியாக உயர்ந்த வீரசேகரன் -, அவர்களது அதிகாரச் சண்டைகள், வீரசேகரன்-பாண்டிய “சதிகாரி” ஊர்மிளா காதல், வீரபாண்டியனின் மனைவியைப் பிடித்து சிறையில் வைத்தல், அவளை மீட்க வீரபாண்டியனின் முயற்சிகள், ஜனநாதன் அவற்றை தோற்கடித்தல், தொடர்கதைகளுக்கு வேண்டிய திடுக்கிடும் திருப்பங்கள், அசாதாரண நிகழ்ச்சிகள் என்று கதை போகிறது.

எவ்வளவு வரலாறு, எவ்வளவு கற்பனை என்று தெரியவில்லை. குறிப்பாக ஜனநாதன் என்று ஒரு அதிகாரி இருந்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. ஆதாரங்கள் பற்றி அரு. ராமநாதன் எதுவும் குறிப்பிடவில்லை.

1940களில் எழுதப்பட்ட கதை. வருஷம் சரியாகத் தெரியவில்லை. அவரே நடத்திய காதல் இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

ஜெயமோகன் இதை நல்ல வரலாற்று romances லிஸ்டில் சேர்க்கிறார். எஸ்.ரா. இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் கருதுகிறார். எனக்கு இதை சிறந்த தமிழ் சரித்திர நாவல்களில் ஒன்றாகச் சேர்க்கலாம், ஆனால் சுமாரான நாவலே.

அரு. ராமநாதன் ராஜராஜ சோழன் என்ற நாடகத்தையும் எழுதி இருக்கிறார். இதை டி.கே.எஸ். சகோதரர்கள் அரங்கேற்றினர். பிற்காலத்தில் சிவாஜி கணேசன் நடித்து ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் நாடகமாகவும் வந்தது. இவரைப் பற்றி மேலும் தகவல்களுக்கு தோழி அருணாவின் அப்பா கிருஷ்ணன் வெங்கடாசலம் எழுதிய கட்டுரையைப் பார்க்கலாம்.

புத்தகத்தை மீனாட்சி கல்லூரி எதிரில் உள்ள பிரேமா பிரசுரத்தில் வாங்கினேன். இது அரு. ராமநாதன் ஏற்படுத்திய நிறுவனம். இன்றும் அவரது மகன் ரவிதான் நடத்தி வருகிறார். பார்த்தால் அசப்பில் அப்பா மாதிரிதான் இருக்கிறார். விலை 225 ரூபாய்.

அரு. ராமனாதனின் அசோகன் காதலி என்ற சிறு நாவலையும் படித்தேன். அதே பாணி. அசோகனை புத்த மதத்தின் பக்கம் திருப்பியது அவன் காதலி காரூவகி என்று எழுதி இருக்கிறார். நான் ரசித்தது சாணக்யனின் பேச்சுக்களை மட்டுமே.

நாயனம் சௌந்தரவடிவு என்ற இன்னொரு நாவலும் கிடைத்தது. நாதஸ்வரம் வாசிக்கும் நாயகன், நாயகி அவர்களுக்குள் காதல், போட்டி என்று போகிறது. பாய்ஸ் கம்பெனி நாடகம் பார்ப்பது மாதிரி இருக்கிறது.

பொன்னியின் செல்வன்

”பொன்னியின் செல்வன்” மூன்றரை வருடங்கள் தொடராக வந்த ஒரு சரித்திர புனைவு. அமரர் கல்கியின் வெற்றி பெற்ற கதைகளுள் ஒன்று. இதை பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும், ”அடித்தலும், துவைத்தலும்” நடந்து விட்டன. இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை எழுதப்பட்டு கிட்டதட்ட 60 வருடங்களாகியும் வாசகர்கள் மத்தியில் இன்னும் அதனிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டுதானிருக்கிறது. வாசகர்கள் பல தளங்களில் இருந்தாலும் இன்னும் வாசிக்கப்படுவதால் நாவலை பொறுத்தவரையில் வெற்றிதான்.

கதையின் அமைப்பு – நல்ல கதை. பிரமிக்க வைக்கும் கதை பின்னல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த உறுதியான காரணங்கள் பின் வருகின்றன. அவை சில சமயம் உடனே வந்து விடுகின்றன. சில சமயங்களில் ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் வருகின்றது. வாசகர்களுக்கு நிகழ்வுகளின் காரணங்களை தொடர்வதே ஒரு சிறிய அறைகூவல்தான். கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக் குலையாமல் கொண்டு செல்கிறார் அமரர் கல்கி. ஆரமபம் முதல் குழப்ப சிந்தனையுள்ள நந்தினி கடைசி வரை ஆதித்த கரிகாலன் “கொலை” வரை குழம்பிக் கொண்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் தன்னை சூழ்ந்துள்ளவர்களிடம் கடைசி வரை விஷ வார்த்தைகள் கக்கிக்கொண்டே இருக்கிறான். அருள்மொழிவர்மன் கடைசி வரை அன்பை பொழிகிறார்.  நாவலின் பரபரப்பும், சஸ்பென்ஸும் துணைக்கு வருகிறது. வாசகர்களைக் வணிக எழுத்தை ஒத்த பரபரப்புடன் கட்டிப் போடுகிறது. முக்கியமாக ரவிதாஸனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும், சுந்தர சோழரையும் ஒரே பொழுதில் ஒரே சமயத்தில் கொலை செய்ய முயலுவதும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் இன்றும் தீவிரவாதிகளும் (9/11 இரட்டை கோபுரம், பெண்டகன் மற்றும் இதர இடங்களில் நாசவேலைகள்), பல அரசுகளும் பின் பின்பற்றும் யுக்தியாக (coordinated effort) இருப்பதை நாம் பார்க்கும் பொழுது கல்கி கதையில் போர் முறைகளையும், சதிகளையும் கையாண்ட விதம் பாராட்டுக்குறியதே.

வரலாற்று சம்பவங்களை வைத்து கதை வளர்ந்திருக்கிறது. மேல் கூறிய கதை சொல்லும் விதத்தை மறந்து விட்டால் நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றும் உறுதி செய்ய முடியாத ஒரு பெரிய புதிர். கதையிலும் அப்படியே அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. திருவாலங்காடு செப்பேடுகள் ”அருள்மொழியே முடிச்சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் ஆனால் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டினான் அருள்மொழி” என்று சொல்வதை வேறு அர்த்தம் கொள்கிறார்கள் சில சரித்திர வல்லுனர்கள். உடையார்குடி கல்வெட்டை ஆதாரமாக வைத்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “சோழர்கள்” என்ற ஆய்வில் மதுராந்தக உத்தம சோழன் தான் சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டு சிம்மாசனத்தில் ஏறினான் என்று கூறுகிறார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் என்ற ஆய்வாளர் இப்படி நடக்க வாய்பில்லை என்கிறார். ஆனால் 1971ல் விவேகானந்தா கல்லூரி மலரில் வந்த ஆர்.வி. சீனிவாசனின் கட்டுரையில் ஆதித்த கரிகாலனுடைய கொலையில் சதி செய்தது அருள்மொழிவர்மனும், குந்தவையும் தான் என்கிறார். ரவிதாசன் சோழ அரசில் முக்கிய பதவி வகித்து வந்தானென்றும், அவனுக்கு அருள்மொழி அளித்த தண்டனை மிகவும் சிறியது (சோழ நாட்டின் உள்ளேயே ரவிதாஸன் “நாடு” கடத்தப்பட வேண்டும்) என்றும் கருத்துக்கள் நிலவுவதே அதன் காரணமாக இருக்கலாம். இதை ஆய்வாளர் டாகடர். க.த.திருநாவுக்கரசு வன்மையாக மறுக்கிறார். ரவிதாஸன் பஞ்சவன் பிரம்மாதிராஜனும் அவன் சகோதரன் சோமன் சாம்பவனும் பிராமணர் குலத்தில் தோன்றியவர்களாதலால் அவர்களுக்கு மனு தர்மத்தின் படி மரண தண்டனை அளிக்க முடியாது என்பதால் தான் ரவிதாஸனுக்கு சிபி, மனுநீதிச் சோழன் குலத் தோன்றலாகிய அருள்மொழிவர்மன் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை என்று கூறிகிறார்.

ஒருவேளை அருள்மொழிவர்மனும், குந்தவையும் மதுராந்தகத் உத்தமச் சோழன், ரவிதாஸன் இவர்களுடன் சேர்ந்து சதி செய்திருப்பார்களா? ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா? ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா? இது பற்றி சமகால் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயமோகனும் கருத்துகள் வைத்திருக்கலாம்.

எது எப்படியோ இந்த வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது மிகக் கடினம். அதனால் அமரர் கல்கியின் கருத்துக்களோடு ஒன்றிப் பார்த்தால் தான் பொன்னியின் செலவன் ஒரளவேனும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ராஜராஜனின் மேல் குற்றமிருக்கும் என்று நம்பினால் பொன்னியின் செல்வன் படைப்பு அமரர் கல்கியின் ஆத்மாவிலிருந்து உருவாக மிகவும் கடினமாக இருந்திருக்கும். அவரைப் பொறுத்தவரையில் அருள்மொழிவர்மன் அறம் நிறைந்த ஒழுக்க சீலனாகவே இருந்திருக்கிறான். அதை நில நாட்டப் பாடுபடுகிறான்.

அமரர் கல்கி பழந் தமிழகத்தின் விழுமியங்களை இன்றையமக்கள் அறியவேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. “விமோச்சனம்” பத்திரிக்கை கட்டுரைகள், மது ஒழிப்பு பற்றிய கதைகள் போன்றவை மூலமாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொன்னியின் செல்வனிலும் அந்த தரிசனம் கிடைக்கிறது. சோழ நாட்டுக்கு சதி செய்யும் கூட்டம் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் அறத்தை கடைபிடிக்கிறது. நந்தினி – பாண்டிய நாட்டிற்கு உண்மையாக இருப்பதற்க்காக சதி திட்டம் தீட்டினாலும் பெரிய பழுவேட்டறையருக்கு துரோகம் செய்யாமலிருக்கிறாள்; ரவிதாஸன் குழுவினர் – நந்தினியை அரசியாக ஏற்றுக் கொண்டபிறகு அவள் கூறுவதை மீறக்கூடாது என்று சூளுரைக்கினறனர்; ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்த பிரம்மராயரிடம் உண்மையாகவே இருக்கிறான்; பழுவட்டரையர்கள் சதி திட்டம் தீட்டினாலும் சுந்தர சோழ சக்ரவர்த்தியிடமும் சோழ நாட்டை பாதுகாப்பதிலும் நேர்மையாகவே இருக்கிறார்கள்; தவறுவதால் தன்னை தானே பெரிய பழுவேட்டரையர் மாய்த்துக் கொள்கிறார்; அருள்மொழிவர்மன் அறமே வாழ்க்கை என்று வாழ்கிறான். ஏன், ”மதுராந்தகன்” கூட சோழ நாட்டை போரிட்டே பிடிக்கவேண்டுமென நினைத்து செம்பியன் மாதேவியை விட்டு பிரிகிறான். கதை முழுக்க வரும் சதிகளும், வஞ்சங்களுக்குமிடையில் அமரர் கல்கி நிலைநாட்டும் விழுமியங்களை வாசகர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சோழ நாட்டு இயற்கை காட்சிகளை பற்றி கல்கி விவரிப்பது ஒரு ரொமான்ஸ் தான். அப்படிபட்ட வளம், தேனும் பாலும் ஓடியதாக சொலவதெல்லாமே மிகைப்படுத்தல் வகையிலே தான் பார்க்கமுடிகிறது. வானதியும் குந்தவையும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் காணும் கனவுகள் வாயிலாக சோழ நாட்டு வளத்தை விவரிக்கிறார். இந்த விவரிப்புகளை தனித்து எடுத்துப் பார்த்து பரிசீலிப்போமானால் சங்க கால் இன்பவியல இலக்கியம் சாயல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பலருக்கு ஒரு ஐயமிருக்கிறது. மொத்தமாக நோக்கும்பொழுது இது இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்ல முடியும். இலக்கிய கூறுகள் ஆங்காங்கு வெளிப்படுகிறதே தவிர, இது வரலாற்றை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு ரொமான்ஸாகத்தான் பரிணமித்திருக்கிறது. அதாவது அமரர் கல்கியின் சோழ நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற அபிலாஷை வெளிவந்திருக்கிறது. இது ஏன் இலக்கியமல்ல? நான் புரிந்துக் கொண்ட கோட்பாடின் படி இலக்கியம் சமகாலங்களின் அல்லது கடந்த காலங்களின் இயல்பான நிலை, சூழல், மற்றும் மக்களின் வாழ்க்கை, நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை புதினம் அல்லது பிற இலக்கிய கருவிகள் மூலம் மிகையில்லாமல் அல்லது பெரிதும் மிகைப்படுத்தாமல் சொல்வது ஆகும். இந்தக் கோட்பாடின் படி அமரர் கல்கி அவற்றை ஆழமாக சொல்லவில்லை.  மேலும் 1950ல் உள்ள தொல்பொருள் அறிதலின் படி, ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தில் (அதாவது 900 முதல் 1100ஆம் ஆண்டு வரை) கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் வெளியிடப்பட்ட சோழ நாட்டு வாழ்க்கை முறை தகவல்கள் இவற்றையெல்லாம் சொல்லும் வகையில் விவரமானதாக அமைந்திருக்கவில்லை என்பது நம்மால் ஊகிக்கமுடிகிறது. கிடைத்த செப்பேடுகள் பெரும்பாலும் அரசு மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையே அனேகமாக கூறி வந்தது. இந்த தகவல்களைக் கொண்டு வாழ்க்கை அனுபவங்களும் நிலைகளும் சூழலும் முழுமையாக கொடுக்க இயலாது. அமரர் கல்கி அந்த முயற்சியில் இறங்கவுமில்லை. உதாரணத்திற்கு தல்ஸ்த்யோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் பக்கத்துக்கு பக்கம் புதிய தரிசனங்களை கொடுத்துக் கொண்டே போகிறது. அதை பொன்னியின் செல்வனுடன் ஒப்பு நோக்கினால் இந்த வித்தியாசங்களை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும்.

என்றாலும் கல்கி சில வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அகன்ற வாழ்க்கையை எடுத்துரைக்க முற்படுகிறார். அரபு நாடுகளுக்கும் சோழ நாட்டுக்கும் வணிகம் வளர்ந்து வந்தது. முன்னதாக மூன்று நூற்றாண்டுகளாக இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சேர நாட்டில் (அன்றைய கேரளாவில்) இஸ்லாம் தன்னை ஸ்தாபித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அரபிக்கடலில் வணிக போக்குவரத்து பெருகியிருந்தது. கப்பல் கொள்ளையர்களும் வளர்ந்து வந்தனர். ஈழ நாட்டுவரை அரபு கப்பல் கொள்ளையர்களும் புழங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிகழ்வுகளாக கதையில் சேர்த்திருக்கிறார். வட நாட்டுக் கோவில்களை எல்லாம் இஸ்லாமியர்கள் இடித்து தள்ளிக் கொண்டிருந்ததை ஒரு முரட்டு மதம் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். (ராஜபுட்ததான மன்னர் ராஜா தாஹீரின் கடல் கொள்ளையர்களின் ஊக்குவிப்பே இஸ்லாமியர்கள் முதன் முதலில் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருந்தது என்பது வரலாறு – இஸ்லாமிய தரப்பு வாதம்).

குறை என்று பார்க்கப் போனால் இது ஒன்று தான் – கதையின் நடை (ஓட்டமும் தான்) சில சமயங்களில் ஏதோ குழந்தைகளை வைத்து கதை சொல்வது போலிருக்கிறது. உதாரணத்திற்கு வந்தியத்தேவன் வம்பில் மாட்டும் பொழுதெல்லாம் அவனை காப்பாற்றுவதற்க்காகவே அனைத்து நிகழ்வுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பது, தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ஆள் மாற்றம் சுலபமாக நடப்பது, ”இருளாக இருக்கிறதே, எப்படி போவது” என்று ஒரு கதாபாத்திரம் சிந்தனை செய்து கொண்டிருக்கும்பொழுதே ”இதோ வெளிச்சம்” என்று இன்னொரு பாத்திரம் உதவி செய்வது, அல்லது ”தண்ணீரில் விழுந்து விட்டோமே, படகு வேண்டுமே” என்றால் யாரவது ஒருவர் அந்தப் பக்கம் படகுடன் வருவது, போன்ற முதிர்வு பெறாத நடைகள் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் சராசரி வணிக எழுத்திற்கும் கீழே போய்விடுகிறது. அதுவும் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து கிளம்பி புயலில் சிக்கி கோயிலில் படுத்து பின்னர் பாண்டிய நாட்டு ரவிதாஸன் ஒற்றர் கும்பல்கள் லவ்ட்ஸ்பீக்கர் இல்லாத குறையாக அவர்கள் திட்டத்தை விவரிப்பதை “ஒட்டு” கேட்பது – ஒரு வேளை நேரத்தை விரயம் செய்கிறோமோ என்ற சோர்வை உண்டாக்குகிறது. விதியே என்று முன்னகர்ந்தால் ஒரு கதாபாத்திரத்திற்கு பிற கதாபாத்திரங்கள் உதவி செய்வது போதாதென்று கல்கி நினைத்தாரோ என்னவோ – ”வந்தியத்தேவன் அராபியக் கொல்லையர்களிடம் கட்டுண்டு கிடக்கிறானே. அய்யய்யோ! எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ? ஆம் அப்படி தான் இருக்கவேண்டும்” என்று கூறி தன் பங்குக்கு கடலில் குதித்து, கப்பலில் சென்று கட்டுகளை லூஸ் பண்ணிவிட்டுவிட்டு மாயமாக மறைகிறார். கொடுமையே என்றிருக்கிறது. ”ஆபத்தா, இதோ வருகிறேன்” என்று திடீர், திடீரென்று தோன்றும் எம்ஜியார் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அல்லது இன்றைய விஜய் சினிமாக்களை. ஒருவரும் வராவிட்டால் ஆசிரியரே வந்துவிடுவார். இதெல்லாம் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் போன்றவர்களுக்குதான். இருப்பதிலேயே வீரமான, புஜபல பராக்கிரம் நிறைந்த ஆதித்த கரிகாலனிடம் உதவிகளெல்லாம் பலிக்கவில்லை. ”அப்பாடா” என்றிருந்தது. 60 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால் இந்தக் குறையை கண்டுக் கொள்ளாவிட்டால் கதை காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு இனிய பயணமே.

பொன்னியன் செல்வன் கதையை பதின்ம வயதில் படிப்போருக்கு அனேகமாக பரவசம் கொடுத்திருக்கும். காலம் கடந்து படிப்போருக்கும் பரவசம் தரக்கூடிய கதைதான். முதிர்ந்த வாசகர்களுக்கு தகவல்களும் சில சிறிய பிரமிப்புகளும் காத்திருக்கின்றன. ஆனால் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புதினமே.

மின்னூலை விமல் தரவேற்றி இருக்கிறார்.

மணிபல்லவம்

சரித்திர நாவல்கள் என்று ஆறேழு பதிவுகள் எழுதியபோது ஜெயமோகன் ஒரு மறுமொழியில் சொல்லி இருந்தார் –

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும். அக்கால அறிவுலகம் பதிவாகிய நாவல் அது

அவரது கருத்தைப் படித்ததிலிருந்து இந்த நாவலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. நண்பன் பக்சிடம் புத்தகமும் இருந்தது. ஆனால் அறுநூறு பக்கத்துக்கு மேல் இருந்தது, அதுதான் பிரச்சினை.

எப்படியோ ஒரு நாள் தம் கட்டி ஆரம்பித்தேன். சும்மா கிடுகிடுவென்று படிக்க முடிந்தது. ஏதாவது stuff இருந்தால்தானே நேரமாகும்? கல்கியின் தளத்திலிருந்து மாறுபட்டவை என்று அறுநூறு பக்கத்து நாவலில் ஒரு ஆறு பக்கம் தேறலாம். நா.பா.வுக்கு அரண்மனைச் சதி என்ற genre-ஐத் தாண்டியும் எழுதலாம் என்ற பிரக்ஞை இருந்திருக்கிறது, அப்படி எழுதவேண்டும் என்று ஆர்வமும் ஆசையும் இருந்திருக்கிறது, என்ன எழுதலாம் என்ற ஐடியாவும் இருந்திருக்கிறது, ஆனால் எழுதத்தான் தெரியவில்லை/முடியவில்லை.

அரண்மனைச் சதி என்ற பாணியிலிருந்து விலகி எழுதவேண்டும் என்று நினைத்த நா.பா. அந்தச் சதி வேலைகளை சிம்பிளாக ஒரு செல்வந்தர்-வில்லன் வீட்டுக்கு மாற்றிவிடுகிறார். இதையெல்லாம் வேறுபாடு என்று எப்படி அவரால் நினைக்க முடிந்ததோ தெரியவில்லை. சரித்திர நாவலில் சரித்திர மனிதர்கள் யாருமில்லை. (ஆனால் பூம்புகாரின் geography பற்றி – இங்கே இந்த வனம், அங்கே அந்தக் கோவில் – என்று சில விவரங்கள் தருகிறார்.) மனிதர்கள் இருந்தால் நாவலின் காலம் உறுதியாக நிர்ணயப்படுத்தப்படும். இப்போது நாவல் ஒரு நூறு இருநூறு வருஷங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு பாத்திரமாவது caricature என்ற அளவுக்கு மேல் போகவில்லை. ரஜினி, விஜய், அஜீத் மாதிரி என்ட்ரி கொடுக்கும் அழகான ஹீரோ இளங்குமரன் (நா.பா.வின் ஹீரோக்கள் எப்போதுமே அழகாக இருப்பார்கள், அவர்களைப் பார்த்து பெண்கள் தெருவில் சொத்சொத்தென்று மயங்கி விழுந்து கொண்டே இருப்பார்கள்) ஓபனிங்கில் ஒரு யவன மல்லனை வீழ்த்துவது, அவனைப் பார்த்தவுடனே காதல் கொள்ளும் ஹீரோயின் சுரமஞ்சரி, திமிராக அவளை மறுக்கும் ஹீரோ (நா.பா.வின் முக்கால்வாசி ஹீரோக்கள் அப்படித்தான் – திமிராக இருப்பதுதான் ஆண்மை என்பது நா.பா.வின் நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு motif), இளங்குமரனை காதலிக்கும் இரண்டாவது ஹீரோயின் முல்லை, இளங்குமரனின் பிறப்பில் ஒரு உப்புச்சப்பில்லாத மர்மம், எம்ஜிஆர் படத்தில் வரும் அசோகன்-நம்பியார் மாதிரி வில்லன்கள் (நகைவேழம்பர், பெருநிதிச்செல்வர்), அதே படத்தில் வரும் மேஜர் சுந்தரராஜன் மாதிரி இளங்குமரனை வளர்க்கும் ஒரு முனிவர் என்று மோசமான cliches நிறைந்த ஒரு நாவல்.

லாஜிக் என்பது துளியும் இல்லை. ஒரே ஒரு உதாரணம் தருகிறேன். இளங்குமரன் போகும் கப்பலை நகைவேழம்பரின் கப்பல் தாக்குகிறது. ஹீரோவின் கப்பல் காப்டன் தீயம்புகளை வீசி வில்லனின் கப்பலைத் தீப்பிடிக்க வைக்கிறார். கப்பல் எரிகிறது, கப்பலில் இருக்கும் ஏறக்குறைய அனைவருக்கும் உயிரிழப்பு, படுகாயம். அப்போது ஒருவர் நகைவேழம்பரைக் கொல்ல வேலை எடுத்து வீசப் போகிறார். கப்பல் காப்டன் தடுக்கிறார் – புனிதமான புத்த பூர்ணிமை தினம் அன்று ஒரு உயிரை கொலை செய்ய வேண்டாமாம். ஒரு வரி முன்னால் காப்டன் எறிந்த தீயம்பு அந்தக் கப்பலில் அடுப்பு மூட்டி சமைக்கவா?

கதையின் ஒரே நல்ல விஷயம் – இளங்குமரன் தர்க்க முறைய கற்று “ஞானி”யாகிறான் என்பதுதான். ஒரு ஆறேழு பக்கத்துக்கு தர்க்கங்கள் – விஷ்ணுபுரத்துக்கு முன்னால் இப்படி ஒரு விஷயம் எந்த தமிழ் புனைவிலும் சொல்லப்பட்டதில்லை. ஆனால் வாதங்களில் எனக்கு லாஜிக் குறைவாகவே தெரிந்தது. நா.பா. வாசகனுக்காக oversimplify செய்தாரா என்று தெரியவில்லை.

அதிலும் இதே மாதிரிதான் – ஆசையும் ஆணவமும் அற்றவனாக, சாந்த சொரூபியாக, உலகில் அனைவர் மீதும் அன்பே உருவானவாக பரிணாமித்திருக்கிரானாம். அவன் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள் உலகின் எல்லா மதத்தவரையும் “ஞானிகளையும்” தர்க்கப் போரில் வென்று நாவலோ நாவல் என்று தன் கொடியை நாட்டுவதுதானாம். அன்பே உருவான சாந்த சொரூபிக்கு எதுக்கய்யா போட்டியும் வெற்றியும்? இதில் உள்ள முரண்பாடு நா.பா.வுக்கும் அப்போது படித்தவர்களுக்கும் தெரியவே இல்லையா? ஹீரோவை எதிர்த்து வாதிடுபவர்கள் ஆணவம் நிறைந்தவர்கள், அவர்களை எதிர்க்கும் ஹீரோ தியாகச் சுடர். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு” என்று பாடாததுதான் பாக்கி.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை முன்னூறு ரூபாய். சென்னை லைப்ரரி தளத்தில் இலவசமாக மின்புத்தகம் கிடைக்கிறது.

நா.பா.வின் நோக்கம் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்த நாவல் குப்பை. இதை விட நல்ல நாவல்களை நா.பா.வே எழுதி இருக்கிறார். குறிஞ்சி மலர் போன்றவை இதை விட பல மடங்கு பெட்டர். இதில் அவரது தன்னைப் பற்றியே கொண்டிருக்கும் பகல் கனவுதான் தெரிகிறது. ஜெயமோகனின் ரசனையும் என் ரசனையும் ஓரளவு ஒத்துப் போகும். இந்த நாவல் விஷயத்தில் மட்டும் ஏனோ எங்கள் கருத்து முற்றிலும் எதிரும் புதிருமாக இருக்கிறது.

தமிழின் முதல் வரலாற்று நாவல்

இந்த சீரிஸின் முதல் பதிவில் தமிழின் முதல் வரலாற்று நாவல் மோகனாங்கி என்று சொல்லி இருந்தேன். படிப்பதை விடுங்கள், நான் இந்த சீரிசை எழுத ஆரம்பிக்கும் வரை இந்த நாவலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. மேலும் சில தகவல்கள்.

1895-இல் இலங்கை (திரிகோணமலை) எழுத்தாளரான த. சரவணமுத்துப் பிள்ளை என்பவர் மோகனாங்கி என்ற ஒரு நாவலை எழுதினாராம். இது மதுரை-தஞ்சையில் சொக்கநாத நாயக்கர் ஆட்சியை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட நாவலாம். பிள்ளை சென்னை மாநிலக் கல்லூரியில் சரித்திர ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தாராம். அப்போது கிடைத்த தகவல்களை வைத்தே இந்த நாவலை எழுதினார் என்று தெரிகிறது.

சோ. சிவபாதசுந்தரம் இதைப் பற்றி 1972-இல் “தமிழில் வெளிவந்த முதலாவது சரித்திர நாவல்” என்ற பேரில் ஒரு ஆய்வுப் புத்தகம் எழுதி இருக்கிறாராம்.

இந்நாவலில் வரலாற்றுச் சூழல் ஓரளவு இடம்பெற்ற போதும் சொக்கநாதன், மோகனாங்கி ஆகியோருக்கிடையிலான காதல் நிகழ்ச்சிகளும் அது சம்பந்தமான சூழ்ச்சிகளும் சீர்திருத்தக் கருத்துக்களும் மேலோங்கி நிற்கின்றன. நாவல் என்ற பெயருடன் வெளிவந்த போதும் நாவலுக்குரிய குணாம்சங்களைக் கொண்டு விளங்கவில்லை. ஆசிரியரால் கையாளப்பட்ட நடை சிற்சில இடங்களில் எளிமையும் பேச்சுவழக்குச் சொற்களும் காணப்பட்டாலும் நாவலிற் பெரும்பகுதி வாசகர் எளிதிற் புரிந்து கொள்ள முடியாத கடின சந்தி விகாரங்களுடன் கூடிய சிக்கல் நிறைந்த நீண்ட வசனங்களையும் கடினமான சொல்லாட்சிகளையும் கொண்டு விளங்குகிறது.

என்று கலாநிதி க.அருணாசலம் சொல்கிறாராம். யார் இந்த கலாநிதி க. அருணாசலம்? யாருக்குத் தெரியும்? நாவலைப் படித்திருக்கிறார், அதுவே பெரிய விஷயம். 🙂

மேலும் சுட்டிகள்:
ஸ்ரீதரனின் பதிவு
மோகனாங்கி பற்றிய விக்கி குறிப்பு
மின்னூல் – சில்லையூர் செல்வராசன் எழுதிய “ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி” (1967)

சீரிஸின் முந்தைய பகுதிகள்:
தமிழில் சரித்திர நாவல்கள்: 1. கல்கி பாணி, 2. கல்கியின் வாரிசுகள், 3. படிக்க விரும்புபவை

4. பிரபஞ்சனின் மானுடம் வெல்லும், 5. பாலகுமாரனின் சரித்திரக் கதைகள்