சுப்பு ரெட்டியார் திருப்பதி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியவர். தூரனுக்குப் பிறகு கலைக் களஞ்சியம் தொகுப்பு பணியில் இருந்தவர். கஷ்டப்பட்டு முட்டி மோதிதான் பதவிகளைப் பெற்றிருக்கிறார் என்று தெரிகிறது. அதனால்தானோ என்னவோ, அவர் பொதுவாக யாரைப் பற்றியும் குறை சொல்வதில்லை. அடக்கியே வாசிக்கிறார்.
ரெட்டியார் சம்பிரதாயமான – அதாவது அந்தக் காலகட்டத்தின் politically correct கருத்துக்களை பிரதிபலிக்கிறார். பாரதியார் மகாகவி, பாரதிதாசனும் நல்ல கவிஞர் (பாண்டியன் பரிசுக்கெல்லாம் மதிப்பீடு எழுதி இருக்கிறார்), ராஜாஜியும் காமராஜும் நல்ல தலைவர்கள், ஈ.வே.ரா. வாழ்க, தான் வேலை செய்த பல்கலைக்கழகத்துக்கு மானியம் வழங்கிய கலைஞர் நல்ல முதல்வர். ஆனாலும் அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் உண்மை இருக்கிறது, அந்தக் காலகட்டத்தின் – 1915 வாக்கில் பிறந்தவர் – 1935இலிருந்து 1980 வரையான காலகட்டத்தின் சித்திரம் கிடைக்கிறது. என்ன, அவரது வாழ்க்கையைப் பற்றி நிறைய விவரங்களும் இருக்கின்றன. அதில் பல எனக்கு சுவாரசியமாக இல்லை.
நீங்காத நினைவுகள் புத்தகம் அவரது வாழ்க்கையில் அவர் சந்தித்த முக்கிய ஆளுமைகளைப் பற்றி பேசுகிறது. பிரபலமானவர்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் காலத்து கல்வி அமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார், மற்றும் நெ.து. சுந்தரவடிவேலு. சுந்தரவடிவேலுக்கு ஈ.வே.ரா.வின் முழு ஆதரவு இருந்திருக்கிறது, அது அவருக்கு பதவி உயர்வு பெற உதவி இருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த ஏ.எல். முதலியார் உதவி செய்யவே மாட்டாராம், பணக்கார வீட்டுப் பையன்களுக்கு மட்டும்தான் உதவுவாராம். ந. சஞ்சீவி இவரை விட ஜூனியராம், ஆனால் ஏ.எல். முதலியார் பரிந்துரையில் கல்லூரி விரிவுரையாளர் ஆனாராம். சஞ்சீவியே ஒரு முறை என்னை விட அதிக தகுதி இருந்தும் ரெட்டியாருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டாராம்.
பல்சுவை விருந்து அவர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு. ராஜாஜி, காமராஜைப் பற்றி விதந்தோதுகிறார். கி.ஆ.பெ. விஸ்வநாதம் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். எனக்கு இன்னும் கி.ஆ.பெ.யின் பங்களிப்பு என்ன என்று சரியாகப் புரியவில்லை. ஹிந்தியை எதிர்த்து நிறைய போராடி இருக்கிறார் போல.
பட்டினத்தடிகள் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். பட்டினத்தார் என்பவர் ஒருவர் அல்ல, மூன்று பேர் பட்டினத்தார் என்று அறியபப்டுகிறார்கள் என்று நிறுவுகிறார். பரணி பொழிவுகள் நல்ல விளக்கம். தமிழறிஞர் என்று தெரிகிறது.
வடவேங்கடமும் திருவேங்கடமும் புத்தகத்தில் அவர் எழுப்பும் கேள்வி மிக சரியானது. எனக்கும் ரொம்ப நாளாகவே இந்தக் கேள்வி உண்டு. எங்கோ தமிழகத்துக்கு வடகிழக்கு மூலையில் இருக்கும் ஒரு சிறு ஊர் எப்படி தமிழகத்தின் வட எல்லையாக இருக்க முடியும்? திருப்பதிக்கு நூறு கிலோமீட்டர் கிழக்கே எது வட எல்லை? மேற்கே? பழவேற்காடுதான் தமிழகத்தின் வட எல்லை, அல்லது மதனபள்ளிதான் தமிழகத்தில் வட எல்லை, அல்லது உடுப்பிதான் தமிழகத்தின் வட எல்லை என்றால் எப்படி உணர்வோம்? இதையேதான் அவரும் கேட்கிறார். இன்றைய திருப்பதி வேறு, வட எல்லையாக சொல்லப்பட்ட திருவேங்கடம் வேறு என்று நிறுவுகிறார்.
வடநாட்டு திருப்பதிகள், மலைநாட்டு திருப்பதிகள், பாண்டிநாட்டு திருப்பதிகள் புத்தகங்களை தமிழிற்கு நல்ல பயண இலக்கியப் பட்டியலில் சேர்க்கலாம்.
வைணவ புராணங்கள் என்ற புத்தகத்தைப் படித்தபோது இந்த மாதிரி அரிய புத்தகங்களைத் தேடுவது அந்தத் தலைமுறையோடு போய்விட்டதோ என்ற வருத்தத்தை உண்டாக்குகிறது.
அவரது உழைப்பு வியக்க வைக்கிறது. இன்றும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அ.கா. பெருமாள், ஆ.இரா. வேங்கடாசலபதி மாதிரி இரண்டு மூன்று பேரைத்தான் தெரிகிறது.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர் வரிசை