ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமாரின் சுயசரிதையைப் படித்தபோது அவரது சில புத்தகங்களையாவது படித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பத்து புத்தகம் என்று இலக்கு, ஒன்பதில் நிறுத்திவிட்டேன். இத்தனைக்கும் அவரது மாத நாவல்களை 10-15 நிமிஷத்தில் படித்துவிட முடிகிறது. 🙂

படித்த பிறகு ராஜேஷ்குமார் எனக்கான எழுத்தாளர் அல்லர் என்பது தெளிவாகத் தெரிந்தது. 12, 13 வயதில் படித்திருந்தால் ஒரு வேளை நானும் ரசித்திருக்கலாம். (அப்போது ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கதுரையை விரும்பிப் படித்தது போல). ஆனால் எனக்கு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் எப்படியோ அப்படி ராஜேஷ்குமார் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு என்பது தெளிவாகத் தெரிகிறது. எனக்கு சேஸ் நாவல்கள் மீது இன்றும் ஒரு soft corner இருக்கிறது, அது எனக்கு புதிய உலகங்களை அறிமுகம் செய்ததற்காக, ஆங்கிலப் புத்தகங்களை படிப்பதில் இருந்த மனத்தடையை குறைத்தற்காக. அது போலவே ராஜேஷ்குமாரின் புத்தகங்களும் பலருக்கும் புதிய உலகங்களை அறிமுகம் செய்து வைத்திருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. படிப்பதை இலகுவாக்க வாய்ப்பிருக்கிறது. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோரை விட அவரது தளம் இன்னும் விசாலமானது என்று தோன்றுகிறது. இதனால்தான் அவர் தமிழிம் முக்கிய வணிக எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஆயிரக்கணக்கில் நாவல்கள் எழுதி இருக்கிறாராம். மாத நாவல்தான், 70-80 பக்கம்தான் என்று வைத்துக் கொண்டாலும் லட்சம் பக்கமாவது எழுதி இருப்பார். சாதனைதான்.

நான் படித்த அவரது சில நாவல்களைப் பற்றி சிறு குறிப்புகள் கீழே:

உயிரோசை, வெல்டன் விவேக், விலகு விபரீதம் சரளமாகப் போகும் குறுநாவல்கள். உயிரோசையில் சுகாதாரமற்ற ஊசி போடப்பட்டதால் இளைஞனுக்கு எய்ட்ஸ் நோய். அவன் டாக்டர்களைக் கொல்ல வேண்டுமென்று அலைகிறான். கடைசியில் ஒரு திடுக்கிடும் திருப்பம். வெல்டன் விவேக்கில் ட்ரோன் தொழில் நுட்பத்தை வைத்து கொலைகள். விலகு விபரீதத்தில் ஊரில் வழிப்பறி, பின்னால் யார் என்று முடிச்சு.

ஊமத்தம் பூக்கள் கொஞ்சம் நன்றாக வந்திருக்கலாம். காட்சிகளுக்கு இடையே கட் செய்வது குழப்பத்தைத்தான் உண்டாக்குகிறது.

வணக்கத்துக்குரிய குற்றம், உதடுகள் சுடும், வெல்வெட் கில்லர், தொட்டவனை விட்டதில்லை எல்லாம் பஸ்ஸில் படிக்கும் அளவுக்குத்தான் வொர்த். அதுவே கொஞ்சம் தாட்சணியம் பார்த்துத்தான் சொல்கிறேன். வ. குற்றம் குறுநாவலில் பணக்காரப் பெண்ணை “காதலிக்கும்” கால்நடை மருத்துவருக்கு அந்தப் பெண்ணின் சித்தியோடு தொடர்பு. டகால் டகால் என்று கொலை செய்கிறார்கள். கடைசியில் மாட்டிக் கொண்டு இறக்கிறார்கள். உ. சுடும் குறுநாவலில் வைரங்களை விழுங்கி விமானத்தில் கடத்துகிறார்கள். வெ. கில்லர் குறுநாவலில் ஓட்டப் பந்தய வீராங்கனை ஒலிம்பிக்கில் பங்கு கொள்வதைத் தடுக்க சதி. தொ. விட்டதில்லை குறுநாவலில் சண்டிகருக்கு வேலைக்குப் போகும் நர்ஸ் இரண்டு கொலைகளில் சிக்கிக் கொள்கிறாள்.

படித்தவற்றில் மிகவும் மோசமானது திகில் ரோஜா. பக்கத்துக்குப் பக்கம் திடுக்கிடும் திருப்பம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டி: ராஜேஷ்குமார் விக்கி குறிப்பு

சங்கர்லால் (தமிழ்வாணன்)

ஆங்கில மர்மப் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும் முன் சங்கர்லால் எங்களுக்கு பெரிய ஹீரோ. அதுவும் எஸ்.எஸ். 66 என்ற நாவலை மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன். இன்றும் தேடிக் கொண்டிருக்கும் ஒரே தமிழ்வாணன் புத்தகம் அதுவே. ஆனால் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவாகத்தான் சங்கர்லால் இருந்திருக்க வேண்டும்.

சில சங்கர்லால் புத்தகங்கள் இணையத்தில் கிடைத்தன. நாஸ்டால்ஜியாவால் படித்துப் பார்த்தேன். பத்து வயதில் என் பெண்கள் பள்ளியில் Young Author போட்டிக்காக பள்ளியில் எழுதிய கதைகளே இதை விடப் பரவாயில்லை. ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் இவருக்கு எவ்வளவோ தேவலாம். சங்கர்லால் பின்தொடரும் ஒருவர் மறைந்துவிடுகிறாரா? பிரச்சினையே இல்லை, சங்கர்லால் எங்காவது தேனீர் அருந்தப் போனால் அங்கே அவரும் உட்கார்ந்திருப்பார். இதில் அந்தக் காலத்து பதின்ம வயதினரைக் கவர சங்கர்லால் ஹாங்காங், டோக்கியோ, நியூ யார்க் என்று ஊர் ஊராகப் போகிறார். அங்கே போய் ஒன்றும் கிழிக்கமாட்டார், தேனீர் பருகுவார், அவ்வளவுதான். அந்த ஊருக்கு மர்மத்துக்கும் (கதையில் என்ன மர்மம் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் பெரிய மர்மம்) தொடர்பே இருக்காது.

ஆனால் 40-45 வருஷங்களுக்கு முன் ஹாங்காங், டோக்கியோ பற்றி எழுதப்பட்டவை ஆவலைத் தூண்டின என்பதும் உண்மையே. கார்களை வாடகைக்கு எடுக்கலாம் (rental cars), எல்லா நாடுகளிலும் செல்லுபடியாகும் ட்ரைவிங் லைசன்ஸ் (International Driving License), ஸ்போர்ட்ஸ் கார்களின் பேர்கள் (ஃபோர்ட் மஸ்டாங்), நிர்வாண நடனம் (strip tease) போன்றவற்றை விவரிப்பது ஆர்வமூட்டியது.

தமிழ்வாணனுக்கு ஒரு முத்திரை உண்டு. பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப்பெயர் வைப்பார். இன்மொழி, மலையரசு, சொல்லழகன் மாதிரி. அவர்களும் நல்ல தமிழில் பேசுவார்கள் – “துன்பம் கொள்ள வேண்டாம்”, “தாழ்வில்லை” மாதிரி. இன்று கவர்வது அந்த ஒரு அம்சமே.

இருப்பதில் சுமாரான (குறு)நாவல்கள் என்று இருண்ட இரவுகள், டோக்கியோ ரோஜா ஆகியவற்றை சொல்லலாம். பிற படைப்புகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லையே தவிர, எந்த விதத்திலும் படிக்க வேண்டியதில்லை. ஆனால் ரொம்ப சின்ன வயதில் – ஒரு ஏழெட்டு வயதில் – அப்பீல் ஆகக் கூடும்.

நான் மீண்டும் படித்த தண்டமான சங்கர்லால் நாவல்களில் சில: ஆந்தை விழிகள்,  ஹலோ சங்கர்லால், இன்னொரு செருப்பு எங்கே?, கொலை எக்ஸ்ப்ரஸ், மர்ம மனிதன், மர்மத் தீவு (1974), நாற்பதினாயிரம் ரூபாய், ரகசியம், சங்கர்லால் வந்துவிட்டார், விடியாத இரவுகள் மற்றும் பெர்லினில் சங்கர்லால், ஜெனீவாவில் சங்கர்லால், ஹாங்காங்கில் சங்கர்லால் (1975), நேபிள்சில் சங்கர்லால், நியூ யார்க்கில் சங்கர்லால், பாரிசில் சங்கர்லால்.

பற்றாக்குறைக்கு சங்கர்லாலுக்கு அடுத்தபடி தமிழ்வாணனே துப்பறியும் கதைகள் வரத் தொடங்கின. எம்ஜிஆர் துப்பறியும் படங்களே தேவலாம். சிகாகோவில் தமிழ்வாணன், டயல் தமிழ்வாணன், ஃப்ராங்க்ஃபர்ட்டில் தமிழ்வாணன், ஹவாயில் தமிழ்வாணன் எல்லாம் உலக மகா தண்டம். தண்டங்களில் சிறந்தது கெய்ரோவில் தமிழ்வாணன்.

சங்கர்லால் வராத நாவல்களும் உண்டு. மணிமொழி நீ என்னை மறந்துவிடு போன்ற நாவல்களை நாம் மறந்துவிடுவது நலம். இரும்புக்கை மனிதன், கதவு திறந்தது கை தெரிந்ததுமருதமலைச் சாரலிலே, மலையில் மறைந்த மனிதன், முரட்டுப்பெண், நடுவிரல், ஒரு குரல், பேய், பேய் மழை, பெயர் இல்லாத தெரு, விலகி நில் ஆகியவை அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் மாதிரி இருக்கின்றன. என்னைத் தேட வேண்டாம் குற்றப் பின்னணி இல்லாத புத்தகம், இவர்தான் எழுதினாரா என்ற வியப்பைத் தவிர வேறு எதுவுமில்லை.

ஆனால் தமிழ்வாணன் எல்லாத் துறைகளிலும் முயற்சி செய்தது அந்தக் காலத்தில் கொஞ்சூண்டு inspiration ஆகவும் இருந்தது. கல்கண்டு என்ற பத்திரிகை நடத்தினார், திரைப்படம் தயாரித்திருக்கிறார், மணிமேகலை பிரசுரம் கண்ட மேனிக்கு எல்லா துறைகளிலும் புத்தகம் வெளியிட்டது – “தேனீ வளர்ப்பது எப்படி”, “தேள்கடிக்கு மருந்து” மாதிரி. உடலுறவு பற்றி கூட புத்தகம் எழுதி இருப்பதாக மூத்த மாணவர்கள் பேசிக் கொள்வார்கள்.

தமிழ்வாணன் தமிழ் வணிக எழுத்தின் வரலாற்றில் அடிக்குறிப்பாக வரக் கூடிய இதழாளர். ஆனால் பொருட்படுத்தப்பட வேண்டிய எழுத்தாளர் அல்லர். நாஸ்டால்ஜியாவுக்காக “எஸ்.எஸ். 66”-ஐயும், ஒரு வேளை ஏதாவது உருப்படியாக எழுதி இருப்பாரோ என்ற சந்தேகத்துக்காக “கட்டபொம்மன் கொள்ளைக்காரனா?” என்ற புத்தகத்தையும் தேடிக் கொண்டிருக்கிறேன். யாரிடமாவது மின்பிரதி இருந்தால் கொடுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: தமிழ் விக்கி குறிப்பு

புஷ்பா தங்கதுரை – எழுபதுகளின் வடுவூரார்

pushpa_thangaduraiபுஷ்பா தங்கதுரை பற்றி தனியாக ஒரு பதிவு எழுத முக்கிய காரணம் நாஸ்டால்ஜியா. பதின்ம வயதுகளில் சுஜாதாவுக்கு அடுத்தபடி அவரைத்தான் விரும்பிப் படித்தோம். ஒரே காரணம்தான். செக்ஸ் வர்ணனைகள். அந்தக் காலகட்டத்தில் அவர் எழுத்துக்கள்தான் நண்பர்கள் குழுவுக்கு கிளுகிளுப்பூட்டின. ஓரிரு வருஷமாவது புஷ்பா தங்கதுரை புத்தகம் கிடைக்குமா என்று தேடி அலைந்தோம், வீட்டுக்குத் தெரியாமல் மறைத்து வைத்துப் படித்தோம். கழுத்துக்கு கீழே கை என்று படித்தாலே மனம் கிளர்ச்சி அடையும் 13-14 வயது. இவர் பெண் ஓரினச் சேர்க்கை, மார்புக் காம்புகள், கஜுராஹோ சிற்பம் போல உறவு, விரல் போடுவது (fingering) என்றெல்லாம் எழுதி இருக்கிறார். ஏன் புத்தகம் கிடைக்காதா என்று தேடி அலைய மாட்டோம்?

புஷ்பா தங்கதுரையின் ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை ஜெயமோகன் சிறந்த வணிக நாவல்கள் வரிசையில் வைக்கிறார். வணிக நாவல்களைப் பொறுத்த வரை ஜெயமோகன் தன் கறாரான அணுகுமுறையை பெரிதும் தளர்த்திவிடுகிறார். நானோ வணிக நாவல்களை அவரை விட சீரியசாக எடுத்துக் கொள்பவன். இந்த நாவலின் மகா மோசமான கற்றுக்குட்டி நடை ரொம்பவும் படுத்துகிறது. தெய்வீகக் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழில் வணிக நாவல்கள் எப்படி எல்லாம் மாற்றம் அடைந்தன என்பதைப் பற்றி ஆர்வம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடலாம். ஆனால் அந்தக் காலத்தில் வெற்றி பெற்ற நாவல்தான். கமல், விஜயகுமார் நடித்து (தண்டமான) திரைப்படமாகவும் வந்தது.

நந்தா என் நிலா நாவலிலும் இப்படித்தான் காதல் காதல் என்று உருகிக் கொண்டே இருக்கிறார்கள். மஹா போர். விஜயகுமார், சுமித்ரா நடித்து திரைப்படமாகவும் வந்தது.

என் பெயர் கமலா என்ற நாவல்தான் செக்ஸ் வர்ணனைகள் வாரப் பத்திரிகைகளில் கூச்சமில்லாமல் பதிக்கபபட்டதற்கு ஆரம்பம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். விபச்சார விடுதியில் விற்கப்படும் கமலாவின் வாழ்க்கை. அன்று விபச்சாரம் என்றாலே ஆபாசப் புத்தகம் ஆகிவிடும் போலிருக்கிறது. அதே போல சிவப்பு விளக்கு எரிகிறது என்று விபச்சாரத் தொழில் செய்யும் பெண்களின் கதைகள் என்று ஒன்றும் உண்டு. ஆனால் எனக்குத் தெரிந்த வரை சாண்டில்யன்தான் இதற்கெல்லாம் முன்னோடி. ஆனால் சாண்டில்யன் இப்படி எல்லாம் எழுதும்போது எப்படா முடியும் என்று இருக்கும். இவர் எழுதியதையோ விரும்பிப் படித்தேன்.

இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் லீனா மீனா ரீனா, ராகினி ஒரு ஹிப்பி நீ போன்ற கதைகள் கொஞ்சம் பரவாயில்லை. நாங்கள் வளர்ந்த காலத்தில் சில நாவல்களாவது பிடித்திருந்தன. நன்றாக நினைவிருப்பது மங்களா சுபமங்களா என்ற நாவல். அருங்காட்சியக (museum) அதிகாரிகள் சிலர் பெண்களை அனுபவித்துவிட்டு கொலை செய்துவிடுவார்கள். அவர்களின் எலும்புக்கூடுகளை ஆதிச்சநல்லூர் எலும்புக்கூடுகள் என்று அருங்காட்சியகத்தில் மாட்டிவிடுவார்கள். காபரே இலவசம் என்ற சிங் துப்பறியும் கதையில் ஒரு பெண் தன் உள்ளாடையைக் கழற்றி விளையாடி போலீஸ் கண்காணிப்பை ஏமாற்றுவதாக வரும். அந்தக் காலத்தில் கிளுகிளுப்புக்கு கிளுகிளுப்பு, மர்மத்துக்கு மர்மம். துணிந்தபின் சுகமே குறுநாவலில் 12-14 வயது பெண்களைத் தேடும் மனநோய் கொண்டவனைக் கண்டுபிடிக்கும் சாக்கில் பாலியல் perversion-களை விவரிப்பார். வெள்ளி மோகினி குறுநாவலில் ஒரு கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பார். கிளுகிளுப்புக்கு இரண்டு இளம் பெண்கள் சிங்குக்கு மசாஜ் செய்துவிடுவார்கள்.

இவற்றைத் தவிர தாரா தாரா தாரா என்று ஒரு கதை கொஞ்சம் சுமாராக இருக்கும்

ஆனால் மீண்டும் படித்த அனேக துப்பறியும் கதைகள் – காதல் இல்லை காதலி, சரிதா சரிதா, துள்ளுவதோ இளமை, மன்மத மருந்து, துரோகம் துரத்துகிறது, இளமைக்கு ஒரு விசா, கடலுக்குள் ஜூலி – உப்பு சப்பில்லாத தண்டங்கள். மேலும் அடுத்த ரூம் பெண், என்றும் இரவுப் பூக்கள், கடைசி வரை காதல் எல்லாம் உலக மகா தண்டம். ஆனால் அந்த வயதில் எது கிளுகிளுப்பாக இருந்தது என்று தெளிவாகவே புரிந்தது.

ஒரு காமிக்ஸ் கதை கூட முயற்சித்திருக்கிறார் –ஹைவே 117.க்ரீச் க்ரீச் க்ரீச் என்ற சிறுவர் நாவலும் உண்டு.

ஸ்ரீவேணுகோபாலன் என்ற பேரிலும் புஷ்பா தங்கதுரை கதைகள் எழுதினார். அனேகமாக வைணவப் பின்புலம் உள்ள சரித்திரக் கதைகள். அந்தப் பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலா, மதுரா விஜயம் நாவல்கள் மட்டுமே எதிர்காலத்திலும் படிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெகு சில இன்ஸ்பெக்டர் சிங் துப்பறியும் நாவல்கள் தமிழ் வணிக நாவல்களில் பொருட்படுத்தப்படலாம். மற்றபடி அவர் எழுதியதெல்லாம் குப்பை என்றேதான் வகைப்படுத்துவேன். ஆனால் ஒரு காலத்தின் தேவையை அவர் ஓரளவுக்கு பூர்த்தி செய்தார் என்பதை மறுப்பதற்கில்லை – எழுபதுகளின் வடுவூரார்.

ஜெயமோகன் திருவரங்கன் உலா நாவலை நல்ல historical romances வரிசையில் வைக்கிறார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது நாவலை நல்ல social romances வரிசையில். முன்னதை ஏற்கிறேன். பின்னதோடு 100% வேறுபடுகிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

Guest Post – ரா.கி. ரங்கராஜன், குமுதம் பற்றி சந்திரபிரபா

சந்திரபிரபா சமீபத்தில்தான் சிலிகன் ஷெல்ஃப் பக்கம் வந்திருக்கிறார். அவர் எழுதிய மறுமொழி சிலவற்றில் ரா.கி.ர. பற்றி அலசி இருந்தார், அதையே ஒரு பதிவாகப் போட்டிருக்கிறேன். சில இடங்களை தமிழில் paraphrase செய்திருக்கிறேன். Over to Chandra!


ரா.கி.ர.வுக்கு ஆர்வியும் ஒரு விசிறி என்பதில் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தேன். உங்களுக்குப் பிடித்திருந்த இரண்டு நாவல்கள் எனக்கும் பிடித்தவையே. ராத்திரி வரும் நாவலை நான் சிறு வயதில் படித்திருக்கிறேன். ஆர்த்தி தங்கச்சிலையாக மாறிவிடுவது உண்மையிலேயே திகில் ஏற்படுத்தும் காட்சி.

மனுஷன் நல்ல ரீல் விட்டிருக்கிறார் என்று பின்னாளில் புத்தகத்தை சயனில் ஒரு கண்காட்சியில் வாங்கிய போது புரிந்து கொள்ள முடிந்தது. பிர்ஜு மகாராஜ் அப்படி இப்படி என்று நல்ல கதை விட்டு இருக்கிறார். அப்போது கொஞ்சம் சஸ்பென்ஸ் ஆக இருந்தது. இப்போது மனுஷன் நன்னா பூ சுற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த நாவலில் பிடித்த விஷயம் அவர் சென்னையையும் அடையாறையும் விவரித்து இருந்ததுதான். அடையாறில் அப்படி ஒரு கட்டிடம் இருக்குமா என்று ஆவல் எனக்குள் உண்டானது என்னவோ வாஸ்தவம்.

ஜனா என்பவன் ஆர்த்தியின் தங்கையை கைப்பிடிப்பதாக முடிவு. வில்லன் பிர்ஜு மகாராஜ் என்று எண்ண வைத்து ஏமாற்றி விடுவார் மனுஷன். ஆனால் அந்த காலத்து சென்னையை நம் கண் முன்னே நிறுத்தியதால் நாவல் மனதை விட்டு நீங்கவில்லை.

கையில்லாத பொம்மையை நான் அப்போது படிக்கவில்லை. ஆனால் சயனில் நடந்த புத்தக கண் காட்சியில் வாங்கினேன். அந்த முதல் அத்தியாயம் நெஞ்சை அப்படியே உலுக்கி விடும். மாட்டுப்பெண் மாமனார் ஜெயிலில் விடுதலை ஆகி வந்திருப்பார் – அவருக்கு அப்படி பசிக்கும். ஆனால் குக்கர் வைக்கும் மருமகள் மாமனாரை சாப்பிடுங்கள் என்று சொல்லமாட்டாள். இத்தனைக்கும் அவர் பண்ணிய குற்றம் ஃபோர்ஜரி பண்ணியது. ஆனால் வயத்துக்கு வஞ்சனை பண்ணலாமா, சொல்லுங்கள்.

அவர் பிள்ளை மணிகண்டனை செருப்பால் அடித்தால் என்ன என்று கூட தோன்றும். ஆனால் நடுநடுவே நீங்கள் சொல்வது மாதிரி கதை எங்கேயோ போய் விடும். ரீல் நிறைய சுற்றி இருப்பார். பக்கத்தை நிரப்புவதுதான் நோக்கமோ?

அதுவும் செங்கம் என்கிற பாத்திரம். மனுஷன் சும்மா extramarital affair-ஐ நியாயப்படுத்துவார். ரொம்பவே இழுத்து இருப்பார். சென்னை பாஷையை ஒரு ஐயங்கார் எப்படி சரளமாக எழுதினார் என்று புரியவில்லை.

கதையில் பிடித்தது

  1. அந்த மூன்று கைதிகளுக்கும் இடையே இருந்த அன்யோன்யம்
  2. அந்த வயதானவரை ஒருவர் எதிர்பாராத விதமாக காப்பாற்றும் இடம் – அவரது மகனும் மருமகளும் திருந்துவதாக காட்டுவார்கள்.
  3. கதைக்கு ஏன் கையில்லாத பொம்மை என்று பெயர் வைத்தார்? Only for effect என்றே எண்ணுகிறேன். இத்தனைக்கும் அந்த வயதானவர் பேத்தி ரேகாவின் மேல் வைத்திருக்கும் பாசம் மனதை நெகிழ செய்யும்.
  4. பிடித்த கேரக்டர் என்றால் ஆளவந்தார். அவரது மென்மையான காதல் கதை அனுபமாவுடன். இன்னிக்கும் ஆளவந்தாரின் பங்களா சென்னையில் எங்கே இருக்கிறது என்று பார்க்க ஆசை. ஆளவந்தார் வரும் இடமெல்லாம் சுவாரஸ்யம்தான்.
  5. முடிவுதான் சற்றே ஏமாற்றம். ஆளவந்தார் மறுபடியும் ஜெயிலுக்கு போவார். உள்ளே ஒரு கிராதகன் அவரை பழி வாங்க காத்துக்கொண்டு இருப்பான். மற்ற எல்லார் முகத்திலும் கலவரம் இருக்கும். என்னதான் அவர் செங்கத்தை காப்பாற்றினாலும் போலி டாக்டர் போலி டாக்டர்தானே.

கையில்லாத பொம்மையின் முன்னுரையில் ரங்கராஜன் எழுதி இருந்தார் –

எப்படி இந்தக் கதையை எழுதினேன் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக உள்ளது. பல கிரைம் நாவல்களைப் படித்ததன் விளைவாக இருக்கலாம்.

ஆனால் கையில்லாத பொம்மை ஒரு சுவாரஸ்யமான நாவல் என்பதை மறுப்பதற்கு இல்லை.

இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் தர்மங்கள் சிரிக்கின்றன. ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை தெரியவில்லை. அதில் காமராஜர் மாதிரி ஒரு பாத்திரப்படைப்பு. இந்து, பாசு மற்றும் இந்துவின் ஏழை அத்தை பையன். கொல்கத்தா முதல் அமைச்சர் பேரை கதாநாயகனுக்கு வைத்துவிட்டார்.

இந்த இரண்டு கதைகளும் தொலைக்காட்சி தொடராக பண்ணலாம். பூனைக்கு யார் மணி கட்டுவது? அதுவும் லக்ஷ்மியின் தேடிக்கொண்டே இருப்பேன் கூட திரைப்படமாக ஆகி இருக்கலாம். தமிழ் தயாரிப்பாளர்கள் கோட்டை விட்டுவிட்டார்கள்.

செல்லப்பா என்றொரு சினிமா நிருபர் இருந்தார். அவர் தான் சினிமா தகவல்களை ரங்கராஜனுக்கு கொடுப்பார். இவர் அதை வினோத் என்ற பெயரில் எழுதி வந்தார். குரு பட ஷூட்டிங் போது கமலஹாசனுக்கு அடிபட்டது என்று ஏதோ எழுதப்போக கமலுக்கும் அவருக்கும் மனஸ்தாபம் உண்டானதாம். பின்னாளில் மகாநதி படத்தின் திரைக்கதையை எழுத கமல் ரங்கராஜனைத்தான் அணுகினார் என்று எண்ணுகிறேன். ஆனால் பாவம் இவர் ஒரு staunch குமுதம் loyalist (அபிமானி) போல.

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் ரங்கராஜன் எழுதி வந்தார். எதற்காக இத்தனை புனைப்பெயர்கள் என்றே புரியவில்லை. மார்க்கெட்டிங் உலகில் சொல்வது போல் தனித்தனியாக பிராண்டிங் பண்ணுவதற்காக எஸ்ஏபிதான் புனைபெயரை பிரயோகம் பண்ணச் சொன்னாரோ?

எஸ்ஏபி ரொம்ப கண்டிப்போ என்று கூடத் தோன்றியது.

குமுதம் அவருக்கு பொன் விலங்கு மாட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். அவரே ஹிந்துவில் கொடுத்த பேட்டியில் நிறைய விருதுகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் புனைபெயர்களில் எழுதியதுதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மறைவு எனக்குள் ஒரு சொல்ல முடியாத சோக உணர்வைத்தான் ஏற்படுத்தியது.

இவர் பாலகுமாரன் மாதிரியோ தேவிபாலா மாதிரியோ பணம் பண்ணவில்லை என்றே தோணுகிறது. சுஜாதாவும் “என் கதைகளை கொலை பண்ணி விட்டார்கள்” என்று மூக்கால் அழுதாலும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தனது கதையை விற்று க்கொண்டு தான் இருந்தார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் கூட தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதி துட்டு பார்த்து விட்டார். இந்திரா சௌந்தரராஜன் நன்றாக எழுதினாலும் கதையை ரம்பம் மாதிரி இழுத்து ஒரு வழி பண்ணி விடுவார்.

ரங்கராஜன் நல்ல மனிதர். பிழைக்கத் தெரியாதவர் என்று கூட கூறலாம். மன்னிக்கவும் – இப்படி கூறியதற்கு.

எஸ்ஏபியின் மகன் இவர்களை சரியான முறையில் நடத்தினாரா என்று தெரியவில்லை. பாவம் – பத்திரிகை உலகில் என்ன பெரிதாக சம்பாதித்து இருக்க முடியும் என்று தோன்றியது. பல வருடங்கள் குமுதத்தில் வேலை பார்த்து விட்டு வெளியே வந்தபோதும் அவரது ஆசிரியர் மீது நன்மதிப்பையே வைத்து இருந்தார் ரங்கராஜன். எல்லோராலும் குமுதத்தில் வேலை பார்த்திருக்க முடியாதுதான். பிரபஞ்சன் ஒரு முறை எழுதியிருந்தார் – காலையில் குமுதம் ஆசிரியக்குழு அமரும் – பகவத்கீதையை பற்றி பேசிவிட்டு, பிறகு அட்டையில் எந்த பெண்ணின் கவர்ச்சி புகைப்படத்தைப் போடலாம் என்று ஆலோசனை செய்வார்கள் என்று.

எஸ்ஏபியின் மறைவுக்கு பிறகு அவரது மகனும் பார்த்தசாரதியின் மகனும் சண்டை போட்டு நாறியது எல்லாருமே அறிந்ததுதான். புதிதாக வந்தவர்கள் குமுதத்தின் தரத்தை தரை மட்டத்துக்கு ஆக்கிவிட்டார்கள் – குமுதத்தின் தரம் ஒன்றும் ஒசத்தி இல்லைதான். ஆனால் பிரியா கல்யாணராமன் போன்றோர் வந்த பிறகு கழுதை கெட்டால் குட்டிச்சுவார் கேஸ் என்றாகி விட்டது. தவிர brand extensions வேறு – பக்தி, சிநேகிதி என்று…

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

ஜே.ஆர். ரங்கராஜு

ரங்கராஜுவை இன்று படிப்பது கஷ்டம். உத்தம நாயகிகள், அவர்களின் கற்பை சூறையாட நினைக்கும் அயோக்கியர்கள், அயோக்கியர்களுக்கு உதவும் பிற பெண்கள், அப்பாவி நாயகர்கள், லட்சாதிபதி ஜமீந்தார்கள், சோரம் போகும் பெண்கள், பெண்ணுக்கு அலையும் கிழவர்கள், தாசிகள், துப்பறியும் கோவிந்தன் என்று சில டெம்ப்ளேட் பாத்திரங்களை வைத்து சுலபமாக ஊகிக்கக்கூடிய திடுக்கிடும் திருப்பங்களோடு கதை புனைவார். அதையும் வளவளவளவள்வளவளவளவள என்று நீட்டி முழக்கி எழுதுவார். பல நாவல்களில் துப்பறியும் கோவிந்தன் என்ற துப்பறியும் நிபுணர் வருகிறார்.

இந்த நாவல்களின் பலம் சரளமான நடை ஒன்றே.  புத்தகங்கள் போரடிக்காமல் காப்பாற்றுவது அந்த நடைதான். ஆனால் curiosity value-க்காகத்தான் படிக்க வேண்டி இருக்கிறது. இவரது நாவல்களின் முக்கியத்துவம் அன்று படிப்பை வளர்ப்பதில் உதவி செய்திருக்கும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

க.நா.சு. ரங்கராஜுவின் தாக்கம் பற்றி இலக்கிய சாதனையாளர்கள் புத்தகத்தில் எழுதியது –

(ஆயிரத்து தொளாயிரத்து) இருபதுகளில் ஒரு தமிழ் வாசகர்கள் பரம்பரையை உருவாக்க முயன்றவர்கள் இருவரென்று ஜே. ஆர். ரங்கராஜு என்பவரையும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் என்பவரையும் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தைக் கல்கி தெரிந்து செய்தாரென்றும், இவர்களிருவரும் தங்களையறியாமலேயே காரணமாக இருந்தார்கள் என்றும் சொல்லலாம்.

ஜே.ஆர்.ஆரின் ஐந்தாறு நாவல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றாக 1916 முதல் 1923 வரை வெளி வந்தன.பிரஸ் சொந்தக்காரரான ரங்கராஜு மொத்தம் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டு ஒவ்வொரு ஐநூறு பிரதிகளையும் ஒரு பதிப்பாகக் குறிப்பிட்டு பத்து பதிப்புகள் வரை தன் நாவல்களை வெளியிட்டார். ராஜாம்பாள், ராஜேந்திரன், சந்திரகாந்தா, ஆனந்தகிருஷ்ணன் என்று ஒவ்வொரு நாவலும் வெளியாகும்போது வாசகர்கள் மிகவும் பரபரப்பாக வாங்கிப் படித்தனர்.

வரதராஜன் என்ற நாவல் இரண்டு பாகங்கள் வெளிவரும் வரையில் ஒன்றும் தடங்கல் இல்லை. அந்த நாவலின் பல பகுதிகள் இலக்கியத் திருட்டு என்ற ஒரு வழக்குப் பதிவான பின், மேலே எதுவும் எழுதிப் பிரசுரிக்கக் கூடாது என்றும், ஆறு மாதம் ஜெயில் வாசம் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அவருக்குத் தண்டனை விதிக்கப் பட்டதாக எண்ணுகின்றேன்.

ஜெயிலில் இருந்து விட்டு எழுதுவதை நிறுத்தி விட்டார் ரங்கராஜு. நாற்பதுகளின் ஆரம்பத்தில் எழுத்தாளர் சங்கக் கூட்டம் ஒன்றில் நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். தாடி வளர்த்துக் கொண்டும், நாமம் போட்டுக் கொண்டும் (அவர் வைஷ்ணவ நாயுடு என்று எண்ணுகிறேன்) பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தார்.

இவரது படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

ரங்கராஜுவின் நாவல்களுக்கு பாய்ஸ் கம்பெனி நாடக உலகில் நிறைய மவுசு இருந்திருக்கிறது. ரங்கராஜு ரொம்பவும் கெடுபிடியானவராம். நாடகங்களின் ஒத்திகையைப் பார்த்துத்தான் அனுமதி தருவாராம். ராஜாம்பாள் நாடகத்துக்கு 25 ரூபாய் ராயல்டியாம்; ராஜேந்திரன், சந்திரகாந்தா, மோகனசுந்தரம் மூன்றுக்கும் முப்பது ரூபாயாம். இதெல்லாம் ஒரு சீசனுக்கா, அல்லது ஒரு காட்சிக்கா என்று தெரியவில்லை. டி.கே. ஷண்முகம் தன் குழுவினர் பத்தாண்டுகள் அவரது நாடகங்களை நடித்ததில் பல ஆயிரங்கள் ராயல்டி கொடுத்தோம் என்று எழுதுகிறார். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களுக்கு அப்போது பத்து ரூபாய்தான் ராயல்டியாம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கு கறாராக மறுத்துவிட்டாராம். மனஸ்தாபம் ஆகி ஷண்முகம் குழுவினர் ரங்கராஜுவின் நாடகங்களைப் போடுவதை நிறுத்திவிட்டார்களாம், வசூல் குறைந்தது என்று எழுதுகிறார்.

ராஜாம்பாள், ராஜேந்திரன், ஜெயரங்கன் ஆகிய மூன்று நாவல்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

ரங்கராஜுவின் படைப்புகளில் சிறந்ததாக நான் கருதுவது ராஜாம்பாள். (1906). 1906-க்கு அது மிகச் சிறந்த புத்தகம். அந்த காலகட்டத்தில் படித்திருந்தால் என் மனதைக் கவர்ந்த நாவல்களில் ஒன்றாக நிச்சயமாக இருந்திருக்கும். கல்கி அதை இரவு பகல் கண்விழித்துப் படித்தாராம். சிறப்பாக ஒரு மதிப்புரை எழுதி இருக்கிறார். க.நா.சு.வின் மனதையும் கவர்ந்திருக்கிறது. அதுதான் மிகவும் பிரபலமானதும் போலிருக்கிறது, 26 வருஷங்களில் 26 பதிப்புகள் வந்தன. அதைப் பற்றி விரிவாக இங்கே.

ராஜாம்பாளைத் தவிர மோகனசுந்தரம் (1911), ஆனந்தகிருஷ்ணன் (1921), வரதராஜன் (1925), சந்திரகாந்தா (1936), ராஜேந்திரன், பத்மராஜு, ஜெயரங்கன் ஆகிய நாவல்களை எழுதி இருக்கிறார்.  ராஜாம்பாள், மோகனசுந்தரம், சந்திரகாந்தா (சவுக்கடி சந்திரகாந்தா என்ற பேரில்) திரைப்படமாக வந்திருக்கின்றன. சவுக்கடி சந்திரகாந்தா அந்த காலத்தில் புகழ் பெற்ற திரைப்படம். காளி என். ரத்னம் போலி சாமியாராக வருவார் போலிருக்கிறது. சாமிகள் யோகத்தில் இருக்கிறார் என்றால் சிஷ்ய கோடிகள் புரிந்துகொண்ட அந்த பக்கம் போக மாட்டார்களாம். இதில் பி.யூ. சின்னப்பா நாயகன். ராஜாம்பாளில் ஆர்.எஸ். மனோகர் நாயகன். மோகனசுந்தரத்தில் டி.ஆர். மஹாலிங்கம்.

ராஜேந்திரன் அவரது டிபிகல் நாவல் என்று நினைக்கிறேன். பல திடுக்கிடும் திருப்பங்கள். ருக்மிணிக்கும் ராஜேந்திரனுக்கும் பால்ய விவாகம். இன்று அடையாளம் தெரியாது. வரதட்சிணை பிரச்சினையால் ருக்மிணி இன்னும் கணவன் வீட்டுக்குப் போக முடியவில்லை. சித்தி வீட்டுக்குப் போகும் ருக்மிணியைக் காணும் கல்லூரி மாணவன் ராஜு அவளை ஒரு நாளாவது அனுபவிக்க வேண்டும் என்று துடிக்கிறான். வில்லன் கோபண்ணா அவளுக்கு மயக்கமருந்து கொடுத்து ராஜுவிடம் சேர்க்கிறான். ருக்மிணியைக் கெடுத்த பிறகு ராஜு திருந்திவிடுகிறான். இது வரைக்கும் ராஜுதான் ருக்மிணி கணவன் ராஜேந்திரன் இன்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் நீங்கள் தமிழரே அல்லர். மாமனார் வீட்டுக்குப் போகும் ருக்மிணி ராஜேந்திரனை விட்டுப் பிரிந்துவிடுகிறாள். ராஜேந்திரன் பாங்க் வைத்து நடத்துகிறான். ருக்மிணியின் மகன் என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீனிவாசன் ராஜேந்திரனிடம் வந்து சேர்கிறான். பாங்கில் பல லட்சம் கொள்ளை போகிறது. காஷியர் ரங்கநாதன் மீது சந்தேகம் விழுகிறது. ஸ்ரீனிவாசன் அறையில் ஒரு பிணம், அடையாளம் தெரியவில்லை. காஷியர் ரங்கநாதன் மீது பழி. துப்பறியும் கோவிந்தன் எல்லா மர்மங்களையும் கண்டுபிடிக்கிறார்.

ஜெயரங்கன் நாவல் ஜேம்ஸ் பாண்ட் படங்களையே விஞ்சிவிடுகிறது. சுந்தரராஜு சத்தமே போடாத ஆகாயவிமானத்தில் அங்குமிங்கும் பறக்கிறார். சமயத்தில் விமானம் காராகவும் மாறுகிறது. எல்லாரும் லட்சங்களில் புரள்கிறார்கள். மகா சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது. எனக்கு சுவாரசியப்பட்டது அவர் சுயமரியாதை கட்சியைத் தூற்றுவதும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதும்தான்.

ரங்கராஜூ காலாவதி ஆகிவிட்ட வணிக எழுத்து முன்னோடி. வணிக எழுத்து எப்படி பரிணமித்தது என்பதில் ஆர்வம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் தவிர்த்துவிடுவது உத்தமம். ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ராஜாம்பாளை படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

கொத்தமங்கலம் சுப்பு

சமீபத்தில் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் கொத்தமங்கலம் சுப்புவை நினைவு கூர்ந்து ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். அவரது பதிவுக்கு ஐம்பது அறுபது மறுமொழிகள் வந்தன. எனக்கு ஆச்சரியம்தான், இத்தனை பேர் கொ. சுப்புவை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஐம்பது வயதுக்கு இளையவர்களாக இருப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் அவரை நினைவு வைத்திருப்பவர்களுக்கு நாஸ்டால்ஜியா என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை.

Aside: ஒரு காலத்தில் – அறுபது-எழுபதுகளில் என்று நினைக்கிறேன் – அமுதசுரபியின் பப்ளிஷராக இருந்த பி.எஸ். விஸ்வநாதன் என்னுடைய தங்கையின் மாமனார்.  அப்போதெல்லாம் விக்ரமன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு…

thiruppur_krishnanகிருஷ்ணனின் மதிப்பீட்டில் இருந்து நான் மாறுபடுகிறேன். என் கண்ணில் தி. மோகனா நல்ல நாவல் அல்ல, ஆனால் ஆவண முக்கியத்துவம் உள்ள வணிக நாவல். இன்று தி. மோகனா நினைவிருப்பதே அதன் திரைப்பட வடிவத்தால்தான் என்றே கருதுகிறேன். அதனால் என்ன? என் தலைமுறையினருக்கு சுஜாதாவின் லாண்டிரி லிஸ்டையும் ஒரு காலத்தில் படிக்கத் தயாராக இருந்தது போல, அடுத்த தலைமுறையினருக்கு பாலகுமாரன் மீது ஒரு soft corner இருப்பதைப் போல, தி. மோகனா வெளிவந்த காலத்தில் அடுத்த விகடன் இதழ் எப்போது வரும் என்று காத்திருந்தவர் அனேகர். அவர்களின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் இந்த மதிப்பீடு முக்கியமானது.

கிருஷ்ணனின் மதிப்பீடும் என் ஒரிஜினல் பதிவும் கீழே.

திருப்பூர் கிருஷ்ணனின் வார்த்தைகளில்:

கொத்தமங்கலம் சுப்பு என்றதும் உடனே நினைவுக்கு வருகிற படைப்பு தில்லானா மோகனாம்பாள். ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களைக் கொள்ளைகொண்ட நாவல் அது.

நடனமணி மோகனாம்பாள், நாதஸ்வரக் கலைஞன் சண்முக சுந்தரம் இருவரின் காவியக் காதலைச் சொன்ன அந்த நாவல், கூடவே நம் பாரம்பரியக் கலைகளான நாட்டியம், சங்கீதம் போன்றவற்றின் உன்னதங்களையும் சேர்த்துச் சொல்லிற்று. தமிழ் வாசகர்களைப் பித்துப் பிடித்துப் படிக்கச் செய்த தொடர் அது.

பிரபல நாவலாசிரியை வசுமதி ராமசாமி அவர்களிடம் ஒருமுறை பேட்டியெடுக்கச் சென்றிருந்தேன். அவரது நாவலான காப்டன் கல்யாணம் பற்றி அவரிடம் கேட்டேன்.

“என்னுடைய அந்த நாவல் விகடனில் தொடராக வந்தபோது கூடவே தில்லானா மோகனாம்பாள் நாவலும் வந்தது. அதைப் பல்லாயிரக்கணக்கான பேர் ரசித்து வாசித்தார்கள். அதே இதழில் என் தொடர்கதை வந்ததால் அதை வாசித்த அத்தனை வாசகர்களும் என் கதையையும் வாசித்தார்கள் என்பதில்தான் எனக்குப் பெருமை. நான் கொத்தமங்கலம் சுப்பு எழுத்துக்களின் தீவிர ரசிகை!” என்று பண்பட்ட அடக்கத்துடன் தெரிவித்துக் கொண்டார் அவர்.

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் செம்மொழி மாநாடு விமரிசையாக நடைபெற்றது. அதில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டிமன்றம் ஏற்பாடாகியிருந்தது. பட்டிமன்றத்தில் நான் ஓர் அணியில் கலந்துகொண்டு பேசினேன்.

அப்போது தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரைப் பற்றிக் குறிப்பிட்டபோது தில்லானா மோகனாம்பாள் புகழ் கொத்தமங்கலம் சுப்பு பெயரையும் குறிப்பிட்டேன்.

பட்டிமன்றம் முடிந்தபிறகு என்னை ஏராளமான பேர் தொலைபேசியில் அழைத்து நான் கொத்தமங்கலம் சுப்பு பெயரைச் சொன்னது பற்றிக் கூறி, அதன் பொருட்டாகவே என்னைப் பாராட்டினார்கள். நானும் அவரது ரசிகன்தான் என்றாலும் அவருக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன்.

விமர்சகர்கள் வலியத் தூக்கிப் பிடித்து நிறுத்துகிற எழுத்தாளர்கள் கொஞ்சம்பேர் உண்டு. கால வெள்ளத்தில் மக்களால் அவர்கள் மறக்கப்பட்டு விடுவார்கள். தன் எழுத்தின் வலிமையை நம்பாமல், விமர்சகர்களது வாதத்தின் வலிமையை நம்பி இலக்கியம் படைப்பவர்களுக்கு அந்த கதி நேர்வது ஆச்சரியமல்ல.

ஆனால் எழுத்தின் தரத்திலேயே முக்கிய கவனம் செலுத்தி, சமுதாய உணர்வோடு எழுத்தைப் படைத்து, அதன்பொருட்டு வாசகர்களின் ரசனையை மட்டுமே நம்பி வேறு செல்வாக்கைத் தேடாத எழுத்தாளர்களும் சிலர் இருக்கிறார்கள். அவர்களை மக்கள் என்றும் மறப்பதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் கொத்தமங்கலம் சுப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாசகர்கள் ஒருபோதும் அவரை மறக்க மாட்டார்கள்.

தமிழில் எழுதப்பட்ட ஓர் எழுத்து திரைப்படமாகவும் வந்து, எழுத்து பெற்ற அதே வெற்றியைப் பெற்றது என்றால் அந்தப் பெருமை தில்லானா மோகனாம்பாள் நாவலுக்கு மட்டும்தான் உண்டு என்று தோன்றுகிறது. நாட்டியப் பேரொளி பத்மினியையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் மோகனாம்பாளாகவும் சண்முகசுந்தரமாகவுமே மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

தில்லானா மோகனாம்பாளின் இன்னொரு பெருமை கோபுலுவின் கண்ணைக் கட்டி நிறுத்தும் அழகிய சித்திரங்கள். ராவ்பகதூர் சிங்காரம், பந்தநல்லூர் பாமா போன்ற கொத்தமங்கலம் சுப்புவின் மற்ற நாவல்களுக்கும் கோபுலுவே ஓவியம் வரைந்தார் என்றாலும், தில்லானா மோகனாம்பாள் நாவலில் கோபுலு பெற்ற புகழ் அலாதியானது.

என்னதான் சிறப்பாக இருந்தாலும் தில்லானா மோகனாம்பாள் நாவல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு வாசகர் சாவியிடம் கேட்டாராம். அதற்கு சாவி சொன்ன பதில்:

“குரங்குக்கு வால் நீளமாக இருந்தால் சங்கடம். மயிலுக்குத் தோகை நீளமாக இருந்தால் அழகுதானே? எவ்வளவு வாரம் வருகிறதோ அவ்வளவு வாரங்களும் ரசியுங்களேன்!”

தமிழ் நாவல் வரலாற்றில் தில்லானா மோகனாம்பாள் ஒரு மைல்கல். இந்த ஒரு மைல்கல் மட்டுமல்ல, இன்னும் கவனிக்கப்படாத எத்தனையோ மைல்கற்கள் கொத்தமங்கலம் சுப்பு இலக்கியத்தில் உண்டு. அவற்றில் ஒன்றுதான் அவரது தமிழ் நயம் கொஞ்சும் கவிதைகள்.

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை ஆகியோரைப் போல எல்லோருக்கும் புரிகிற எளிய வார்த்தைகளையே சுப்பு தம் கவிதைகளில் பயன்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால், நாட்டுப்புற மக்கள் பேசுகிற பேச்சு வழக்கு வார்த்தைகளையெல்லாம் அவர் தம் கவிதைகளில் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து உலவவிட்டார்.

பேச்சு வழக்கு என்பது உரைநடையில்தான் இருக்க வேண்டுமா என்ன? கவிதையிலும் இருக்கலாம்தானே? ஒரு குறத்தி பேசுகிற தமிழ், இலக்கணத் தமிழாகவாக இருக்கும்? கவிதையில் குறத்தியைக் கொண்டு வருகிறபோது கொஞ்சம் அவள் வழியாகப் பேச்சுத் தமிழையும் கொண்டு வந்தால்தானே அவளது பாத்திரப் படைப்பு ஜீவனோடு இருக்கும்? இப்படி யோசித்தார் குற்றாலக் குறவஞ்சியை எழுதிய திரிகூட ராசப்பக் கவிராயர்.

தலைவி பார்வதிக்குக் குறி சொல்ல வந்த குறத்தி, மாலையில் தலைவன் சிவபெருமான் வருவான் என்பதைச் சொல்லி “கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும்காண் அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?” என்று சொல்வதாக அமைத்து “அப்போ, கக்கம்” முதலிய பேச்சு வழக்குச் சொற்களை இலக்கணம் பிசகாமல் மரபுக் கவிதையில் இணைத்தார். மரபுக் கவிதையில் பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டுவந்த முன்னோடிக் கவிஞர் திரிகூட ராசப்பக் கவிராயர்தான்.

அவர் மரபைத்தான் பின்பற்றினார் கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு. தம் மரபுக் கவிதைகள் பலவற்றில் மிக இயல்பாகப் பேச்சு வழக்கைக் கலந்து அவற்றைப் பரிமளிக்க வைத்தார். இலக்கணம் பிசகாத சந்தக் கவிதைகள் தான். ஆனால் பேச்சு வழக்குச் சொற்கள் சுப்புவுக்குக் கைகட்டிச் சேவகம் செய்தன.

அவர் மேடையில் தாம் எழுதிய காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டாகப் பாடிய போது பல்லாயிரக்கணக்கான பாமரர்களும் அதை வியந்து ரசித்தார்களே, அதற்குக் காரணம் அதில் இழையோடிய மக்களின் பேச்சு மொழிதான். அந்தப் பேச்சுமொழி அவர் கவிதையோடு பாமரர் முதல் பண்டிதர் வரை எல்லோருக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியது.

பழந்தமிழை அதிகம் பயலப் பயில எளிமையாக எல்லோருக்கும் புரியும் நடையில் எழுதும் ஆற்றல் வரும்! இது முரண்பாடாய்த் தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. பழந்தமிழ்ப் பயிற்சி தமிழின் ஜீவன் எது என்பதை இனங்காட்டும். பழந்தமிழ்ப் புலவர்கள் எழுதிய தமிழ் அந்தக் காலப் பேச்சுத் தமிழாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

உண்மையான தமிழ்ப் பண்டிதர்கள் எளிய தமிழைத்தான் பயன்படுத்துவார்கள் என்பதற்கு எடுத்துக் காட்டு தமிழ்த் தாத்தா உ.வே.சா.! அவரை மிஞ்சிய பண்டிதர் உண்டா? பழந்தமிழ்ப் புதையலை நமக்குத் தோண்டியெடுத்துத் தந்தவரே அவர் தானே?

ஆனால் அவரது என் சரிதம் நூலைப் படித்தால் தெரியும், தமிழை எத்தனை எளிமையாக அவர் கையாண்டிருக்கிறார் என்பது. பண்டிதர்களுக்கு மட்டுமே புரியக் கூடிய வார்த்தையாக ஒன்று கூட அதில் இருக்காது.

கொத்தமங்கலம் சுப்புவின் கவிதைகளின் சிறப்பு அவர் கையாண்ட தமிழ் நடையில் உள்ள எளிமை. எந்தச் சொல்லையும் அகராதியைப் பார்க்காமல் எட்டாம் வகுப்பு மாணவன் கூடப் புரிந்து கொள்ள முடியும். உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும். பாரதி வாக்கு மெய்தான். கொத்தமங்கலம் சுப்புவின் உள்ளத்து ஒளி அவர் வாக்கில் பளிச் பளிச் என மின்னுகிறது.

ராதா ஜயலட்சுமி சகோதரிகள் பாடி, மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெற்று எம்.எஸ். விஸ்வநாதன் இசையால் பெரும்புகழ்பெற்ற மனமே முருகனின் மயில்வாகனம் என்ற பாடலை யாரும் மறந்திருக்க இயலாது. அந்தப் பாடல், கொத்தமங்கலம் சுப்பு இயற்றியதுதான். திரையில் ஒலித்தது பாடலின் முதல் நான்கு வரிகள் மட்டுமே. அந்த நான்கு வரிகளைத் தாண்டியும் முழுக் கவிதையில் இன்னும் அற்புதமான பல வரிகள் உண்டு.

கொத்தமங்கலம் சுப்புவின் ரத்தத்தில் ஊறிய தேச பக்தி, அவரது பேனா வழியே காகிதத்தில் ஊறாதிருக்குமா? “இந்நாட்டு மன்னவனே என்மகனே தாலேலோ” என்கிற தாலாட்டுப் பாடலில் அவர் குழந்தையை எப்படியெல்லாம் தாலாட்டுகிறார் பாருங்கள்:

“ஆளடிமையாய் நாங்கள் அன்னியனின் கால்வருடி
காலம் கழிக்கிறப்போ கருவாக வெறுத்தாயோ?
அடிமை முறிகிழித்து அன்னியனைச் சிறகொடித்து
குடிமை நிமிர்ந்த பின்னே குலந்தழைக்க வந்தாயோ?

திலகர் பிறந்தாரோ சிதம்பரனார் வந்தாரோ
செந்தமிழ் பாரதிதான் திரும்ப வந்து பிறந்தாரோ?
ஆதியாய்த் தன் மைந்தன் ஆளுவதைக் கண்காண
மோதிலால் நேரு வந்து முன்னே பிறந்தாரோ?

தன்னரசு நாடாகி தமிழ் முரசு கொட்டுவதை
தன்னுடைய கண்காண சத்தியமூர்த்தி வந்தாரோ?`
கோட்டையதன் மேலே கொடிக்கம்பத் துச்சியிலே
நாட்டிவைத்த கொடிகாண நம் குமரன் வந்தானோ?”

தன்னுடைய ஆற்றல் சார்ந்த கர்வத்தின் சின்ன ரேகை கூடக் கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்ததில்லை. அவர் எழுத்தில் எங்குமே கர்வம் தென்பட்டதில்லை. கர்வமே இல்லாமல் வாழ்ந்த கு. அழகிரிசாமி, வல்லிக்கண்ணன் போன்றோர் வரிசையில் வைக்க வேண்டிய இன்னொரு மகான் அவர்.

என் ஒரிஜினல் பதிவு.

இது கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டாம். (நவம்பர் 1910-இல் பிறந்திருக்கிறார்.) 64 வயதில், 1974-இல் மறைந்திருக்கிறார்.

அவர் வாழ்ந்த வீடு – லாயிட்ஸ் ரோடு என்கிற அவ்வை சண்முகம் சாலையில்தான் இருக்கிறது என்று நினைவு, என் அபார்ட்மெண்டிலிருந்து ஒரு நடை போகும்போது எப்போதோ பார்த்திருக்கிறேன். இப்போது அதுவும் அடுக்குமாடி குடியிருப்புதான். அன்றைய எஸ்.எஸ். வாசனின் வீட்டிலிருந்து (ம்யூசிக் அகடமி எதிரில் இருந்தது, இன்று அது ஒரு பளபளக்கும் அலுவலகக் கட்டிடம்) அரை மைல் தூரம்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

சுப்பு ஜெமினி படங்களில் பல பணிகளை வகித்திருக்கிறார் – நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார், கதை-வசனம்-பாடல்கள் எழுதி இருக்கிறார். வில்லுப்பாட்டை உயிர்ப்பித்தவர் அவர்தான் என்று கேள்வி. காந்தி மகான் கதை என்ற வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமாக இருந்தது. பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது. ஆனால் சிலிகான் ஷெல்ஃபில் அவர் படைப்புகளைப் பற்றி மட்டும்தான் பேசமுடியும்.

தில்லானா மோகனாம்பாள் என்ற ஒரே ஒரு நாவலால்தான் அவர் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொஞ்சமாவது நினைவு வைத்துக்கொள்ளப்படுவார் என்று நான் கருதுகிறேன். அதுவும் என் தலைமுறையிலேயே நாவலை விட சினிமாதான் நினைவிருக்கிறது.

தி. மோகனாம்பாள் அப்படி ஒன்றும் பிரமாதமான நாவல் இல்லை. வளவளதான். ஆனால் நாவல் தொடர்கதையாக வந்த காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிக்கல் ஷண்முகசுந்தரம் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையை மூலமாக வைத்து உருவாக்கப்பட்டதாம். இன்றைக்கு ராஜரத்தினம் பிள்ளையே நமது பிரக்ஞையில் இல்லைதான், ஆனால் அன்று அந்த விஷயம் கதையின் கவர்ச்சியை அதிகரிக்கத்தான் செய்திருக்கும்.

தி. மோகனாம்பாள் காட்டும் உலகம் – தாசி என்ற ஒரு பாரம்பரியம், கலைகளை ஆதரித்த சந்தடி சாக்கில் தாசிகளோடு ஜாலியாக இருக்கும் பெரும் பண்ணையார்கள், கர்னாடக இசையை ரசித்த சாதாரண மக்கள், நாதசுரம், பரதம் இல்லை இல்லை சதிர், திருவிழாக்கள், தஞ்சாவூர் பின்புலம் எல்லாம் கொஞ்சம் அன்னியமாகத்தான் தெரிகிறது. ஆனால் படித்தால் அதற்காகத்தான் படிக்க வேண்டும்.

இன்று தி. மோகனாம்பாளைப் படிப்பவர்கள் நாஸ்டால்ஜியா, சினிமாவால் வந்த curiosity, அந்தக் கால mores பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம், எந்த மாதிரி நாவல்கள் வெற்றி பெற்றன என்று ஆராய்ச்சி மாதிரி காரணங்களுக்காகத்தான் படிக்க வேண்டும்.

தி. மோகனாம்பாள் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.

தி. மோகனாம்பாளை ஜெயமோகன் தமிழின் சிறந்த சமூக romance-களில் ஒன்றாக மதிப்பிடுகிறார். எனக்கு இதை அந்த அளவில் வைப்பது கஷ்டம்.

சுப்பு எழுதிய மிஸ் ராதா என்ற ஒரு நாவல், மஞ்சிவிரட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் படித்திருக்கிறேன். எதுவும் சுகப்படவில்லை. மஞ்சிவிரட்டு சிறுகதைத் தொகுப்பை வ.ரா. ஆஹா ஓஹோ என்று புகழ்ந்திருக்கிறார். வ.ரா.வின் ரசனை பற்றி சந்தேகமாக இருக்கிறது. 🙂

ராவ்பகதூர் சிங்காரம் என்ற நாவலும் வெற்றி பெற்றது என்று கேள்வி. அது சிவாஜி கணேசன் நடித்து விளையாட்டுப்பிள்ளை என்று சினிமாவாகவும் வந்ததாம்.

நண்பர் விஜயன் தி. மோகனாம்பாள் பின்புலத்தை பந்தநல்லூர் பாமா என்ற புனைவிலும் வைத்து எழுதி இருக்கிறார் என்று தகவல் தருகிறார்.

என் கண்ணில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கொத்தமங்கலம் சுப்பு ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம். காலாவதியாகிவிட்ட எழுத்து என்றுதான் கணிக்கிறேன்.

தொடர்புடைய சுட்டி:
தில்லானா மோகனாம்பாள் திரைப்பட விமர்சனம்
சுப்புவின் ஒரு கட்டுரை
தென்றல் மாத இதழில் சுப்பு பற்றி (Registration Required)

எடிட்டர் எஸ்.ஏ.பி. (குமுதம்)

(திருத்தங்களுடன் மீள்பதிவு)

மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!)

குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சுஜாதாவிடம் அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார்.

குமுதத்தில் அவரது சொந்தப் பங்களிப்பான அரசு பதில்கள் பெரும் வெற்றி அடைந்தது. சிறந்த டீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் அவருக்கு கைகளாக இருந்திருக்கிறார்கள். ஜ.ரா.சு. எழுத்தாளராக உருவானதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு – குறிப்பாக அப்புசாமி கதைகளில் ஜ.ரா.சு.வை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்குவாராம். அவர்களை மிகச் சரியாக பயன்பதயவ்டுத்தினார். அறுபதுகளில் அவரும், ரா.கி.ர.வும் நிறைய கதைகள் எழுதினார்கள். அவர்கள் பாணி எழுத்துகளுக்கு வரவேற்பு குறைகிறது என்று புரிந்துகொண்டார். அவர் எழுபதுகளில், எண்பதுகளில், அவருக்கு அரசு பதில்கள், ரா.கி.ர.வுக்கு லைட்ஸ் ஆன், ஜ.ரா.சு.வுக்கு அப்புசாமி என்று தயவு தாட்சணியமே இல்லாமல் மாற்றிவிட்டார். ரா.கி.ர.வின் மாஸ்டர்பீஸான நான், கிருஷ்ணதேவராயன் விகடனிலோ கல்கியிலோதான் வெளிவந்தது.

சாண்டில்யன், சுஜாதா, ஜெயராஜ் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தினார். சுஜாதாவை சூப்பர்ஸ்டாராக ஆக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ப்ரியா தொடர்கதையாக வந்தபோது, ப்ரியா இங்கிலாந்தில் நடக்கிறது, இங்கிலாந்தைப் பார்த்துவிட்டு வாருங்கள், பின்புலத்தை இன்னும் சிறப்பாக எழுதலாம் என்று சுஜாதாவை இங்கிலாந்துக்கு அனுப்பினாராம்.

அவருக்குப் பிறகு குமுதம் பெருங்காய டப்பாதான். அவருக்கும் அந்தக் கவலை இருந்திருக்கிறது. Transition plan-ஐ உருவாக்கி இருக்கிறார். பிரபஞ்சன் உட்பட்ட பலரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் காலமும் மாறிக்கொண்டிருந்தது. பத்திரிகைகளின் பொற்காலம் போய்விட்டது. ஆனானப்பட்ட சுஜாதா கூட குமுதத்தின் ஆசிரியராக வெற்றி பெறவில்லை.

குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன், லா.ச.ரா. ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. உண்மையை சொல்லப்போனால் அவரைப் பற்றி யாரும் எதிர்மறையாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. குமுதத்தின் வணிக வெற்றி அவரது எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது.

பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார் – பகவத்கீதையும் பலான படங்களும். ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.

ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!

எஸ்.ஏ.பி.யின் பங்களிப்பு என்பது குமுதமும் அதன் பெருவெற்றியும்தான். ஆனால் அவரும் ஓரளவு எழுதி இருக்கிறார். அவரது சில நாவல்களை ஜெயமோகன் தனது குறிப்பிடத் தக்க வணிக நாவல்கள் பட்டியலில் பரிந்துரைத்துமிருக்கிறார். அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romances என்று குறிப்பிடுகிறார்.

பொதுவாக அவரது நாவல்கள் அறுபதுகளின் உணர்ச்சி பொங்கும் திரைப்படங்கள் போன்ற உணர்வை அளிக்கின்றன. பரிச்சயமான ஒரு சமையல் குறிப்பைப் படித்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களைச் சேர்த்து சமைப்பது போலத்தான் இருக்கிறது. சமையல் குறிப்பை சரியாக செயல்படுத்தினாலும் கலையம்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

அவரது சமையல் குறிப்பு அணுகுமுறைக்கு சரியான உதாரணம் ‘உன்னையே ரதியென்று‘. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படும் சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, பிறகு ஒன்றன்பின் ஒன்றாக அவை அவிழ்கின்றன. அதுவும் தொடர்கதை வடிவத்துக்கு நன்றாகவே ஒத்துவரும். சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருப்பதும் சரளமான நடையும்தான் கதையின் பலங்கள். இளம் பெண் சிவராணி; பணக்காரத் தோழி லேகா; லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சுந்தரப் பிரசாத். பிரசாத் அவ்வப்போது மது அருந்துபவன். நிச்சயம் ஆனதும் முதல் ஆனதும் மதுவை நிறுத்துகிறான். ஆனால் மது அருந்துபவர்களை வெறுக்கும் லேகாவுக்கு சிவராணி மூலம் சுந்தரப் பிரசாத் மது அருந்துபவன் என்று தெரிகிறது. திருமணம் நிற்கிறது. சிவராணி மேல் ஆசைப்படும் மணிகண்டன் பணம் சம்பாதிக்க திருட ஆரம்பிக்கிறான். சிவராணி மேல் பிரசாத்துக்கும் லேசான ஈர்ப்பு. மணிகண்டனால் சுடப்பட்டு இறக்கும்போது சிவராணிக்கு மணிகண்டன் ஏறக்குறைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்று தெரிந்து மணிகண்டனைக் காப்பாற்றிவிடுகிறான். கதைச்சுருக்கம் எழுதும்போதுதான் சம்பவங்கள் இத்தனை செயற்கையாக இருந்தனவா என்று தோன்றுகிறது. 🙂

நீ சுமாரான வணிக நாவல். எனக்கு அன்றைய வணிக நாவல்கள் மேல் curiosity இல்லாவிட்டால் படித்திருக்கமாட்டேன். இன்று எழுதப்பட்டிருந்தால் புரட்டி இருக்கக்கூட மாட்டேன். காதலி வேறொருவனை மணக்க, காதலன் நீ கன்னியாகவே வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதில் எத்தனை செயற்கையாக மூவரும் ஏறக்குறைய ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்!

பிரம்மச்சாரி போன்ற நாவல்கள் எல்லாம் எல்லாம் குமுதத்தின் பக்கங்களை நிறைக்க எழுதப்பட்டவை.

பூவனம் தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர் திலகம் என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
பிரபஞ்சனின் கட்டுரை – குமுதத்தின் கதை

நாடோடியின் நகைச்சுவை எழுத்துக்கள்

ஒரு தலைமுறைக்கு முன்னால் தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பு படித்தவர்களுக்கு ஆங்கில நூல்களில் ஈ.வி. லூகஸ், ஏ.ஜி. கார்டினர், ஸ்டீஃப்ன் லீகாக் போன்றவர்களின் நகைச்சுவைக் கட்டுரைகள் பாடமாக இருக்கும். லீகாக் பரவாயில்லை, லூகசின் பாணி மிக மெல்லிய நகைச்சுவை. அதை ரசிக்கும் பக்குவம் பதின்ம வயதினருக்கு இல்லை என்றுதான் நினைக்கிறேன். ரசிப்பதை விடுங்கள், அதை ஆராய்ந்து தேர்வில் பதில் எழுதுவது மகா கடியாக இருந்தது.

ஓரளவு வயதான பிறகு இவர்களை எல்லாம் படிக்க, ரசிக்க முடிந்தது. தமிழில் கல்கி மட்டுமே இவர்கள் பாணியில் (ஆனால் இவர்களை விட சிறப்பாக) எழுதுபவர் என்று நினைத்திருந்தேன். எஸ்விவி, குமுதினி கொஞ்சம் அருகில் வருகிறார்கள். பாக்கியம் ராமசாமி, நாடோடி, சாவி, துமிலன், கடுகு-அகஸ்தியன் ஆகியோர் இந்தப் பாணியில் முயற்சி செய்தார்கள் என்று நினைத்திருந்தேன். சிறு வயதில் விரும்பிப் படித்தவை பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளும் கடுகு-அகஸ்தியனின் கமலா-தொச்சு கதைகளும் மட்டுமே. நாடோடி போன்றவர்கள் நான் தமிழ் பத்திரிகைகள் படித்த காலத்தில் எழுதியதும் குறைவு, அவை பெரிதாக அப்பீலும் ஆகவில்லை.

சமீபத்தில் நாடோடியின் சில பழைய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகமே உலகம் (1943), ஒரு நாள் கூத்து (1945), அட பரமசிவா (1946), ஹேய் அனுராதா (1946) பிழைக்கும் வழி (1946), முடியாத யுத்தம் (1947). லூகசின் வாரிசு இவரே. மெல்லிய நகைச்சுவை. அந்தக் காலத்து மத்தியதர, பிராமண குடும்பங்களின் வாழ்க்கைக்கு ஒரு ஜன்னல். Charming. ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் நாடகமே உலகம் புத்தகத்தை பரிந்துரைக்கிறேன்.

ஆனால் படித்த பெண் வேண்டாம் (1946) போன்றவற்றைப் படித்தால் பெண்ணியவாதிகள் கொதித்தெழ் வாய்ப்புண்டு. படித்த பெண்களை மணம் செய்வதில் நிறைய கஷ்டம் உண்டு, அவர்களுக்கு சமைக்கத் தெரியாது போன்று நீட்டி முழக்குவார்.

இந்தப் புத்தகங்களில் இதுவும் ஒரு பிரகிருதி புத்தகத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். வ.ரா.வின் நடைச்சித்திரம், சாவியின் கேரக்டர் போன்ற புத்தகம். என்ன, அவர்கள் புத்தகங்களில் தொழிலை வைத்து அடையாளப்படுத்துகிறார்கள். நாடோடி பிராமண வட்டாரத்தை விட்டு வெளியே போவதில்லை.

நாடோடி ஒரு முறை சின்ன அண்ணாமலையிடம் எனக்கு ஏதாவது பிழைக்கும் வழி காட்டக்கூடாதா என்று கேட்டாராம். சி. அண்ணாமலை அப்போதுதான் தமிழ்ப்பண்ணை என்ற பதிப்பகத்தை ஆரம்பித்திருந்தார். அவரது கட்டுரைகளை தொகுத்து பிழைக்கும் வழி என்ற பேரிலேயே போட்டாராம். (சி. அண்ணாமலையின் ‘சொன்னால் நம்பமாட்டீர்கள்‘ புத்தகத்தில் படித்தது.)

நாடோடியின் புத்தகங்கள் இன்று கிடைக்குமா என்று தெரியவில்லை. அல்லையன்ஸ், வானதி யாராவது போட்டால் உண்டு. ஆனால் புத்தகங்களை இங்கே (‘தேடு’ பெட்டியில் அவர் பெயரைப் போட்டால்) படிக்கலாம்/தரவிறக்கிக் கொள்ளலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய பக்கங்கள்:
நாடோடி பற்றி டோண்டு ராகவன்
பசுபதி தளத்தில் நாடோடி பற்றி – 1, 2, 3, 4, 5

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூரார் ஒரு காலத்திய சூப்பர்ஸ்டாராம். இன்று அவர் எழுதியதைப் படிக்க கொஞ்சம் பொறுமை வேண்டும். ஒவ்வொரு பக்கத்தைத் திருப்பும்போதும் திடுக்கிட வேண்டி இருக்கிறது, அத்தனை திடுக்கிடும் திருப்பங்கள்.

பல வார்த்தைகளில் சொல்லக் கூடியதை ஒரே ஒரு வார்த்தையில் சொல்லக் கூடாது என்பதே அவரது தாரக மந்திரம். ஒரு பக்கத்தில் எழுதக் கூடிய கதைக் கருவை வெகு அனாயாசமாக ஐநூறு அறுநூறு பக்கம் எழுதிவிடுகிறார். அந்த ஐநூறு பக்கங்களில் நானூறு பக்கங்களில் தாசிகளும் “மாமாப்பயல்களும்”, மாறுவேஷப் பரதேசிகளும் நிறைந்து கிடக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி ஊருக்கு ஊர், தெருக்குத் தெரு இத்தனை தாசிகள் இருந்திருப்பார்களா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தொடுப்பு வைத்துக் கொள்ள அலைபவர்கள் நிறைய. உதாரணமாக மேனகா நாவலில் இரண்டு விதவை – இல்லை இல்லை இரண்டு முண்டை நாத்தனார்கள் தங்களுக்குப் பிடிக்காத தம்பி மனைவியை ஏமாற்றி ஒரு முகமதியனுக்கு விற்கிறார்கள். இதெல்லாம் இத்தனை சுலபமாக இருந்ததா?

கதையின் போக்கு வெகு சுலபமாக புரிந்துவிடுவதால் பழைய காலத்து நாடகம் பார்ப்பது போல இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் பழைய எழுத்தில், நடையில் ஒரு special charm-ஐ உணர முடியும். இவர் எழுத்தில் எனக்கு அப்படித்தான் ஒரு charm தெரிகிறது. மிகச் சரளமாகச் செல்லும் கதையோட்டம். இதையெல்லாம் இன்று கூட பொழுதுபோக்காகப் படிக்கலாம் என்றால் நூறு வருஷம் முன்னால் படித்தவர்கள் எத்தனை ரசித்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. ராஜேஷ் குமாரை விட, இந்திரா சௌந்தரராஜனை விட, சுபாவை விட சுவாரசியமாகத்தான் எழுதி இருக்கிறார்.

நடைக்கு ஒரு எடுத்துக்காட்டு: (மேனகா நாவலிலிருந்து)

டிப்டி கலெக்டருடைய காரியங்களெல்லாம் பெண்ணின் கவலையின்றி நடைபெற்று வந்தன. எஜமானரும், எஜமானியம்மாளும் சுற்றுப்பிரயாணம் போவதும், அவரது பைசைக்கிளுக்கு ஆசார உபசாரங்கள் நடப்பதும், கோர்ட் குமாஸ்தா கோபாலையர் எஜமானனிடம் நடுநடுங்கிப் பல்லிளித்து நிற்பதும், ஆர்டர்லி அண்ணாமலை பிராது மனு கூப்பிடுவதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பல நாடார் பொய்க் கேஸ் கொண்டு வருவதும், கண்டாகோட்டை கணக்கன் மகளைச் சுண்டாக்கோட்டை ஜெமீந்தார் கற்பழித்துக் கச்சேரிக்கு வருவதும், பஞ்சாங்கம் குப்புசாமி ஐயருடைய பசுமாட்டை நஞ்சாப்பட்டி காளிங்கராயன் பிடிப்பதும், வல்லம் கிராம முன்சீப்பு செல்லப்பையர் டிப்டி கலெக்டருக்கு வாழைத்தார்களை அனுப்புவதும், கங்கா ரெட்டி என்னும் சேவகன் பங்காவை இழுத்துக் கொண்டே தூங்கி விழுவதும், பட்டாமணியம் சட்டைநாதப் பிள்ளை சர்க்கார் பணத்தை வட்டிக்குக் கொடுப்பதும், தாலுகா குமாஸ்தா தங்கவேலுப் பிள்ளை தோட்டி தலையாரிகளை ஆட்டி வைப்பதும், அவர் மனைவி உண்ணாமுலையம்மாள் “எண்ணிக் கொள்” என்று ஒன்பது மாதத்திற்கொரு பிள்ளையை ஒழுங்காகப் பெறுவதும், தாசில்தார் தாந்தோனிராயர் பருப்பு சாம்பாரில் நீந்தி தினம் தெப்ப உற்சவம் செய்வதும், கோடி வீட்டுக் குப்பம்மாள் தெருளுவதும், ஊளை மூக்கு சுப்பனுக்கு உபநயனம் நடத்துவதும், உளறுவாய் ஜானகிக்கு ஊர்வலம் நடத்துவதும், எதிர்வீட்டு நாகம்மாள் எமலோகம் போகிறதும், பிரிந்தோர் கூடுவதும், கூடினோர் பிரிவதும் ஒழுங்காய் நடைபெற்று வந்தன.

(தெருளுவது என்றால் என்ன?)

நான் ரசித்த இன்னொரு வரி –

அவன் தனது தகப்பன் வீட்டில் சோற்றுக்கு மல்லுக் கட்டினான்; அக்காள் வீட்டிலோ இடுப்பிற்கு மல்லுக் கட்டினான்.

(மல் வேஷ்டி கட்டிக்கொண்டானாம்!)

நாவல்களின் விழுமியங்களோ! இந்தக் காலத்தை விடுங்கள், அன்றைக்கே அதிசயமாகத்தான் இருந்திருக்க வேண்டும். உதாரணமாக கையில் கணவன் போட்ட சூட்டைப் பற்றி மேனகா தான் கணவனுக்கு எழுதும் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறாள் –

என் கையிலுள்ள சூட்டுத் தழும்புகளைப் காணும்போதெல்லாம் என் மனம் வருந்தித் தவிக்கிறது. சூட்டைப் பெற்றதற்காக அன்று, என்னை உங்களுடைய உரிமைப் பொருளாக மதித்து முத்திரை போட்ட தேவரீர் இப்போது என்னை உரிமையற்றவளாக்கி விலக்கியதே என் மனசைக் கலக்குகிறது.

அம்மா தாயே, நீ எங்கியோ போயிட்டே!

மேனகா எந்த மேல்நாட்டு நாவலையும் தழுவாமல் அவரே சொந்தமாக எழுதிய கதையாம். அதில் ஏறக்குறைய இரண்டு மூன்று நாட்களில் தஞ்சாவூர் டெபுடி கலெக்டர் சாம்பசிவத்துக்கு ஏற்படும் சோதனைகள் ஆஹா, ஓஹோ, சிவாஜி கணேசன் அழுவாச்சிப் படங்களையே மிஞ்சிவிட்டது. அவர் மகள் மேனகா ஏமாற்றப்பட்டு ஒரு முகமதியனுக்கு விற்கப்படுகிறாள், பெண்ணைக் காணோம் என்று இவர் அலைகிறார். அதே நேரத்தில் பொய்ப்புகாரில் அவரது வேலை போய்விடுகிறது. திருடர்கள் அவர் வீடு புகுந்து எல்லாவற்றையும் கொள்ளையடிக்கிறார்கள். அந்தக் கொள்ளையில் அவர் மனைவிக்கு படுகாயம் ஏற்படுகிறது. எல்லா பணமும் போய்விட்டதால் டாக்டருக்கு ஃபீஸ் தர முடியவில்லை, அவர் ஆபரேஷன் செய்ய மாட்டேன், செய்யாவிட்டால் மனைவிக்கு உயிர் போய்விடும் என்கிறார். கிராமத்தில் இருக்கும் வீடு, நிலத்தை அடகு வைத்து அநியாய வட்டிக்கு வாங்கி வரும் பணம் திருடு போய்விடுகிறது. நமக்கெல்லாம் பைத்தியம் பிடிக்கிறதோ இல்லையோ, சாம்பசிவத்துக்கு மூளை கலங்கிவிடுகிறது!

திகம்பர சாமியார் என்ற பேரைக் கேட்டிருக்கலாம். திரைப்படம் யூட்யூபில் கிடைக்கிறது. எம்.என். நம்பியார்தான் ஹீரோ.

மாயாவினோதப் பரதேசி கும்பகோணம் வக்கீலின் தொடர்ச்சி. சட்டநாதம் பிள்ளை ஜெயிலிலிருந்து தப்பிவிடுகிறார். மாசிலாமணி பழி வாங்கத் துடிக்கிறான். கண்ணப்பாவின் தம்பி கந்தசாமிக்கும் கலெக்டர் பட்டாபிராமம் பிள்ளையின் மகள் மனோன்மணிக்கும் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனோன்மணியின் “படித்த” ஆங்கில மோகம் கந்தசாமிக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை. மனோன்மணியைக் கடத்த, திகம்பர சாமியாரைக் கொல்ல, கந்தசாமி குடும்பத்தை அங்கஹீனம் செய்ய மாசிலாமணி போடும் திட்டங்கள் எப்படி தோல்வி அடைகின்றன என்பதுதான் கதை. கதை இன்று கொஞ்சம் போரடிக்கிறது. அதுவும் வாயைத் திறந்தால் போதும் எல்லாரும் பத்து பக்கத்துக்குக் குறையாமல் பேசுகிறார்கள், அதற்கு எதிராளி ஒரு பத்து பக்கத்துக்கு பதில் சொல்கிறான்(ள்). ஆயிரம் பக்கம் புத்தகத்தில் ஒரு இருநூறு முன்னூறு பக்கம் பெண்களுக்கு ஆங்கிலக் கல்வி கூடாது, அவர்கள் அடுப்பங்கரையில் இருக்க வேண்டும் என்று லெக்சர்கள். இவை எல்லாம் சேர்ந்து ஒரு சுவாரசியமான சாகசக் கதையை மழுங்க அடித்துவிடுகின்றன. ஆனால் சரளமான நடை, கிடுகிடுவென்று போகும் கதை. இன்றைய ராஜேஷ்குமார் கதைகளுக்கு இதையே நான் விரும்புகிறேன்.

திவான் லொடபடசிங் பஹதூர்: காவல் கோட்டத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி – ராஜா திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைக்கும் கழுவனுக்கு காவல் பொறுப்பு தரப்படுகிறது. இங்கும் அப்படித்தான். திவானாக நடித்து வரி வசூல் செய்து ஏமாற்றுபவனுக்கு திவான் பதவி அளிக்கப்படுகிறது. தவிர்க்கலாம்.

வித்யாசாகரம் நாவலைப் பற்றி ஒரு பதிவு இங்கே.

வசந்தமல்லிகா என்ற நாவலில் காணாமல் போன உயில், கதாநாயகி வெகு சுலபமாக நாடகக் கம்பெனியில் சேர்ந்து புகழ் பெறுவது என்ற வழக்கமான முத்திரைகள் இருக்கின்றன. படிக்கலாம்.

சௌந்தரகோகிலம் நாவலில் இரண்டு சரடுகளை – மனைவி மேல் சந்தேகப்பட்டு பரதேசியாகத் திரியும் முன்னாள் திவான், பணக்காரப் பெண்ணின் ஏழைக் காதலன் மீது விழும் திருட்டுப்பழி – அவர் விவரிக்கும் விதமும் சரி, இணைக்கும் விதமும் சரி யூகிக்க முடிந்தாலும் சுவாரசியமாகச் செல்கிறது.

மதனகல்யாணி நாவலில் காணாமல் போன ஜமீன் வாரிசுகள், ஆள் மாறாட்டங்கள். படிக்கலாம்.

இவற்றைத் தவிர பாய்ஸ் கம்பெனி நாடகம் மாதிரி ஒன்றை – சுந்தராங்கி – எழுதி இருக்கிறார்.

வடுவூராரின் படைப்புகள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இவரது சில புத்தகங்கள் அல்லையன்ஸ் பதிப்பகத்தாரால் 2007 வாக்கில் மறுபதிப்பு செய்யப்பட்டன. அப்போது சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையை இந்தப் பதிவுக்கு அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.

தமிழில் நாவல்கள் தோன்றிய ஆரம்ப கால கட்டத்தில் இவர் எழுதிய புத்தகங்களைப் படிக்காதவர் இருந்திருக்க முடியாது. புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித் தனக்கென பெரியதொரு வாசகர்கள் வட்டத்தை அமைத்துக் கொண்டவர். ரெய்னால்ட்ஸ் போன்ற நாவலாசிரியர்களைத் தழுவி எழுதியதோடு, சொந்தமாகவும் பல நாவல்கள் எழுதியவர்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை கிருஷ்ணசாமி ஐயங்கார். பி.ஏ. பட்டம் பெற்று, அன்றைய அரசில் தாசில்தாராக விளங்கியவர். எழுத்து மோகத்தால் வேலையை விட்டவர், தம் நாவல்களைத் தாமே அச்சிட ஒரு அச்சகமும், “மனோரஞ்சனி” என்ற மாத இதழும் தொடங்கி மாதம் ஒரு கதை நூல் என எழுதிக்குவித்தவர்.

நடுத்தர உயரம், ஒல்லியான உடல், சற்றே கறுத்த மேனி, கழுத்து வரை பொத்தான் போட்ட கோட்டு, சரிகை அங்க வஸ்திரம், பஞ்சகச்ச வேஷ்டி, தலையில் ஒரு குல்லா, காலில் ஹாஃப் ஷூ, கையில் தடி, நெற்றியை எப்போதும் அலங்கரித்த திருமண், வாய் நிறைய வெற்றிலை, புகையிலை. மொத்தத்தில் கை நிறைய சம்பாதித்த கவலை இல்லாத உல்லாச மனிதர்.

துணைவியார் பெயர் நாமகிரி அம்மாள் – இவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு பிள்ளைகளும். இவரது சம காலத்தவர்களான ஜே.ஆர். ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், பம்மல் சம்பந்த முதலியார், எஸ். எஸ். வாசன், வை.மு. கோதைநாயகி ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். (1)

தமது இலக்கியச் சாதனையாளர்கள் என்ற படைப்பில், க.நா.சுப்பிரமணியம் இவரைப் பற்றி எழுதுவது:

** ரங்கராஜுவிற்கு அடுத்து வாசகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். 1923 முதல் 1927 வரை தஞ்சை கல்யாண சுந்தரம் ஹைஸ்கூலில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது, கலர் அட்டையில், டெமி சைஸில் அவரது நாவல்களை, அப்பாவுக்குத் தெரியாமல், ரெயில்வே ஸ்டேஷன் ஹிக்கின்பாதம்சில் வாங்கிப் படித்த நினைவிருக்கிறது. கலைப் ப்ரக்ஞையுடன், சுலபமாகப் படிக்கக் கூடிய நடையுடன், விரசமான விஷயங்களையும் கூட அதிக விரசம் தட்டாமல் எழுதியதில் வல்லவர். ரெயினால்ட்சின் மட்டமான நாவல்களைத் தழுவி எழுதியவர் என்றாலும், விக்டர் ஹ்யூகோவின் Les Miserables என்ற நாவலை அற்புதமாகத் தமிழில் தழுவி எழுதியிருக்கிறார். அதே போல கிரேக்கப் புராணக் கதையான Eros and Psyche என்ற கதையை வசந்த கோகிலம் என்ற நாவலாகப் படைத்திருக்கிறார்.

அவர் பேசிய பல விஷயங்களிலே என் நினைவில் இருக்கும் முக்கியமானதொன்று – எகிப்தில் தலைமுறை தலைமுறையாக அரசாண்ட ஃபாரோக்கள், தென்னாட்டிலிருந்து மிசிர தேசத்துக்குச் (எகிப்து) சென்ற வடகலை அய்யங்கார்கள்தான் என்றும், அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதைப்பற்றித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.. அந்த நம்பிக்கையில் ஆங்கிலத்தில் Long Missing Links என்று ஒரு 900 பக்கப் புத்தகம் எழுதி, தன் சொந்தச் செலவிலேயே அச்சிட்டு விற்க முயன்றார். புத்தகம் விற்கவில்லை. அவர் தன் பழைய பாணியில் எழுதிய கடைசி முயற்சி காங்கிரஸ் கமலம் – அதன் பிறகு அவர் பழைய வேகத்தையோ சாதனையையோ எட்டவில்லை..

தமிழுக்கு அவர் சேவை சரியானபடி கணிக்கப்படவில்லை – புரிந்து கொள்ளப் படவில்லை என்று தான் சொல்ல வேண்டும் *** (2)

இவர் எழுதிய நாவல்களில் சினிமாவாக வெளி வந்தவை மேனகா, வித்யாபதி (1946) – திகம்பர சாமியார் (1950) முதலியவையாகும். வில்லன் நம்பியாரின் திரையுலகப் பிரவேசம், வித்யாபதியில் தான். பின்னர் அவர் திகம்பர சாமியாரிலும் நடித்துள்ளார் (3)

தகவல் ஆதாரம்
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது. ச.விமலானந்தம்
2. இலக்கியச் சாதனையாளர்கள் – க.நா.சுப்பிரமணியம் — நன்றி வடுவூராரின் ‘வசந்த மல்லிகா’ என்ற ‘ஜெனரல் பப்ளிஷர்ஸ் / அல்லயன்ஸ் புத்தகத்தின் பதிப்புரை/முன்னுரை பக்கங்கள்
3. சினிமா சரித்திராசிரியர் ராண்டார்கை ஹிந்து பத்திரிகையில் சில வருஷங்களுக்கு முன் எழுதிய கட்டுரைகளிலிருந்து
————————

வடுவூர் துரைசாமி ஐயங்கார் – படைப்புகள்

மங்கையர் பகட்டு (1936 – 2)
கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)
மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)
டாக்டர் சோணாசலம் (1945)
நங்கை மடவன்னம் (1946 – 3)
பாவாடைச் சாமியார் (1946)
முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )
பச்சைக்காளி (1948)
மருங்காபுரி மாயக் கொலை (1948)
திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)
இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)
சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)
சௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)
நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)
பூஞ்சோலையம்மாள் (1951)
பூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)
மாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)
மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)
வித்தியாசாகரம் (1951 – 6)
சொக்கன் செட்டி (1952 – 2)
துரைராஜா (1952 – 3)
கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)
சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)
பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)
தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)
வசந்தகோகிலம் (1954 – 7)
சிவராமக்ருஷ்ணன் (1955-3)
மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)
சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)
நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)
மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)
திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்
கனகாம்புஜம்
காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் புதையல்
திகம்பரசாமியார் பால்யலீலை
தில்லை நாயகி
திவான் லொடபடசிங் பகதூர்
துரைக் கண்ணம்மாள்
பன்னியூர் படாடோப சர்மா
பாலாமணி
மன்மதபுரியின் மூடு மந்திரம்
மாய சுந்தரி
மிஸிஸ் லைலா மோகினி
லக்ஷ்மிகாந்தம்

முதற்பதிப்பு வெளியான வருஷமும் மொத்தப் பதிப்புகளும் அடைப்புக் குறிக்குள் உள்ளன. தொடர்ந்து வரும் நாவல்கள் அனைத்தும் எப்போது முதலில் வெளியாயின என்று தெரியவில்லை.

(ஆதாரம் – தமிழ் நாவல் வளர்ச்சி (1900-1940) புதிய ஒளியில் இருண்ட காலம் — முனைவர் சுப. சேதுப்பிள்ளை தமிழ் இணைப் பேராசிரியர் – அரசு கலைக் கல்லூரி – சேலம் — நவம்பர் 2003 பதிப்பாளர் – தி பார்க்கர் – இராயப் பேட்டை சென்னை)

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
“திகம்பர சாமியார்” திரைப்படம் பற்றி ராண்டார்கை
“வித்யாசாகரம்” நாவல் பற்றிய பதிவு

ரா.கி. ரங்கராஜன்

எனக்கு ரா.கி.ர.வைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. அவரது பங்களிப்பு என்பது குமுதத்தை சுவாரசியமான வாரப் பத்திரிகையாக வைத்திருந்த ஒரு குழுவில் முக்கியப் பங்காற்றியதே. உதாரணமாக அவர் வாராவாரம் எழுதி வந்த “லைட்ஸ் ஆன்” சினிமா பத்தி. To state this uncharitably, அவர் குமுதத்தின் பக்கங்களை நிரப்பினார் என்று சொல்லலாம், அவ்வளவுதான்.

அவர் எழுத்திலே எனக்கு மிகவும் பிடித்த அம்சம் கச்சிதம்தான் – ஒரு நல்ல ஆர்க்கிடெக்ட் போடும் ப்ளானைப் போல. முடிவை நோக்கி சீராகப் போகும் கதைகள். சரளமான நடை. அனாவசியமாக இழுப்பதில்லை. ஆனால் பொழுதுபோக்கு எழுத்து என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தாலும், கதைக்கரு பல சமயம் மிக சிம்பிளாக இருக்கிறது. இப்படி அவரது படைப்புகளின் முடிச்சுகள் சிம்பிளாக இல்லாமல் இருந்தால் இந்த கச்சிதம் அவர் எழுத்தை உயர்த்தி இருக்கும். இன்றோ அவரது சிறந்த எழுத்துக்கள் நல்ல தச்சன் செய்த நாற்காலி போல இருக்கின்றன. நாற்காலி சவுகரியமாக இருக்கிறது, ஆனால் கலை அபூர்வமாகத்தான் தென்படுகிறது.

அவர் எழுதியவற்றில் நான் பரிந்துரைப்பது நான், கிருஷ்ணதேவராயன். சுலபமாகப் படிக்கக் கூடிய, தமிழுக்கு நல்ல சரித்திர நாவல்.

ஆனால் குமுதம் குழுவில் – இவர், எஸ்ஏபி, பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன், சுந்தர பாகவதர் என்ற புனிதன் – இவர்தான் சிறந்த எழுத்தாளர்.

அவரது தொடர்கதைகளில் – குறிப்பாக அறுபது, எழுபதுகளின் தொடர்கதைகளில் – ஆணும் பெண்ணும் காதல்வசப்படுவது ரசமாக இருக்கிறது. ரொம்ப சிம்பிள், அழகான நாயகி, ஸ்மார்ட்டான நாயகன், இருவரும் ஓரிரு முறை சந்தித்தால் காதல்தான். 🙂

சிறு வயதில் அவர் எழுதிய படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா, ஒளிவதற்கு இடமில்லை, கையில்லாத பொம்மை, உள்ளேன் அம்மா, ராத்திரி வரும் என்று சில கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். அவர் மறைந்தபோது நினைவிருந்தது கையில்லாத பொம்மை (போலி டாக்டர் ஆளவந்தார் என்று ஒரு ஹீரோ) ஒன்றுதான். பிறவற்றை மீண்டும் படிக்கும்போதுதான் இதை எப்போதோ படித்திருக்கிறோமே என்று தோன்றியது. ஜெயமோகன் அவரது படகு வீடு, ப்ரொஃபசர் மித்ரா ஆகிய நாவல்களை நல்ல social romances பட்டியலில் சேர்க்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் ப்ரொஃபசர் மித்ராவில் ஹிப்னாடிச வல்லுநர் மித்ராவுக்கு தன் மனைவி மீது சந்தேகம். அவளை ஹிப்னாடிசம் செய்து உண்மையை வரவழைக்க வேண்டும் என்று பார்க்கிறார். சரளமாகப் போகும் நாவல். ஆனால் என் கண்ணில் இதை விட நல்ல வணிக நாவல்களை ரா.கி.ர. எழுதி இருக்கிறார்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் இன்னொரு நாவலான படகு வீட்டில் அத்தை மகளை விரும்பும், அவளால் விரும்பப்படும் வாலிபன் ராதாகிருஷ்ணன் திடீரென்று சாமியாராகிவிடுகிறான். ஏன் என்பதுதான் கதை. சரளமாகப் போகும் நாவல்.

சிறு வயதிலும் சரி, இப்போதும் சரி எனக்குப் பிடித்திருந்த கையில்லாத பொம்மையில் மூன்று முன்னாள் கைதிகள்; ஜெயிலில் அவர்கள் எதிரி அவர்கள் திரும்பி வந்தால் தீர்த்துவிட காத்திருக்கிறான். போலி டாக்டர் ஆளவந்தார் சாகக் கிடக்கும் ஒரு பெண்ணுக்கு ஆபரேஷன் செய்து பிழைக்க வைத்து மீண்டும் ஜெயிலுக்குப் போகிறான். சரளமாகப் போகும் நல்ல வணிக நாவல்.

அப்போதும் இப்போதும் பிடித்திருந்த இன்னொரு வணிக நாவல் உள்ளேன் அம்மா. இதை வந்த நேரத்திலோ, இல்லை பத்திரிகையை கிழித்து பைண்ட் செய்யப்பட புத்தகமாகவோ படித்திருக்கிறேன். ஆசிரியைகளை வம்புக்கு இழுத்து ‘கொடுமைப்படுத்தும்’ ஒரு பெண், அவளது புது ஆசிரியை, ஆசிரியையின் காதலன் என்று ஒரு முக்கோணம். இதுவும் சரளமாகப் போகிறது.

சிறு வயதில் பிடித்திருந்த இன்னொரு நாவல் ராத்திரி வரும். ரசவாதத்தை வைத்து ஒரு கதை. ரா.கி.ர.வின் வழக்கமான பலம் – சீராக முடிவை நோக்கிப் போவது; வழக்கமான பலவீனம் – கதை ஒன்றும் பிரமாதமில்லை. ஆனால் கதை வந்த காலத்தில் நாயகியின் தலை தங்கமாக மாறும் இடம் பயங்கர உணர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கிறது. நான் அப்போது சின்னப் பையன் என்பதாலோ என்னவோ.

சிறு வயதில் நான் மிகவும் விரும்பிப் படித்த இன்னொரு நாவல் ஒளிவதற்கு இடமில்லை. எட்டு ஒன்பது வயதில் படித்த நாவல். வைரமுருகன், சீன வில்லன்கள், நாலு மாதத்தில் கொல்லும் மருந்து, ஆபாச புகைப்படங்கள் என்று போகும் நாவல். அந்த வயதில் மிக த்ரில்லிங் ஆக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும்தான். ஆனால் இன்று திரும்பிப் படித்துப் பார்த்தால் அறுபதுகளின் ஜெய்ஷங்கர் படம் பார்ப்பது போலத்தான் இருக்கிறது.

பின்னாளில் படித்தவற்றில் ராசி குறிப்பிட வேண்டிய நாவல். வழக்கம் போலவே சரளமாகச் செல்கிறது. ஒரே கோத்திரம் என்று ஒரு காதல் தடைப்படுகிறது. நாயகி கல்யாணம்தானே பண்ணிக் கொள்ளக் கூடாது, சேர்ந்து வாழ்கிறோம் என்று கிளம்புகிறாள். முடிவு என்று ஒன்றை எழுதாதது இந்தக் கதையை உயர்த்துகிறது.

நான் படித்த மற்றவற்றில் அழைப்பிதழ், சின்னக் கமலா, க்ரைம், கோஸ்ட், இன்னொருத்தி, கன்னாபின்னா கதைகள், குடும்பக் கதைகள், மூவிரண்டு ஏழு, ஒரு தற்கொலை நடக்கப் போகிறது, வாளின் முத்தம், வயசு 17 எல்லாமே படிக்கக் கூடிய, சுவாரசியமான, சரளமாகச் செல்லும் கதைகள். தொடர்கதையாக வந்தபோது இன்னும் சுவாரசியம் அதிகரித்திருக்கும். ஆனால் இலக்கியம், தரிசனம் என்ற பேச்சே கிடையாது. முடிச்சுகள் பல சமயம் பலவீனமாக இருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும் சம்பவங்களை கச்சிதமான நடையில், குமுதத்தில் நிரப்ப வேண்டிய பக்கங்களுக்குத் தேவையான வார்த்தைகளில் எழுதி இருக்கிறார். வாசகர்களுக்கு அலுப்புத் தட்டாமல், அவர்கள் மூளைக்கு ரொம்ப வேலை கொடுக்காமல் குமுதத்தின் பக்கங்களை நிரப்புங்கள் என்று எஸ்ஏபி அவரைப் பணித்திருக்கிறார், கொடுக்கப்பட்ட வேலையை இவர் திறமையாக செய்திருக்கிறார், அவ்வளவுதான்.

ஆனால் அவர் எழுதியதில் கணிசமானவை வணிக எழுத்து என்ற அளவில் (கூட) வெற்றி பெறவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன். திக் திக் கதைகள், காதல் கதைகள் என்ற தொகுப்புகளில் உள்ள சிறுகதைகள் தண்டம். தர்மங்கள் சிரிக்கின்றன, ஹேமா ஹேமா ஹேமா, மறுபடியும் தேவகி, முதல் மொட்டு எல்லாம் உப்புசப்பில்லாத கதைகள்.

சில படைப்புகளைப் பற்றி ட்விட்டர் ஸ்டைல் குறிப்புகள்:

அழைப்பிதழ்: ஒரு ஏப்ரல் ஃபூல் ஜோக்கில் ஒரு வாலிபன் தற்கொலை செய்துகொள்கிறான். அது தற்கொலையா கொலையா என்று துப்பறியும் கதை. சரளமாகப் போகும் இன்னொரு கதை.

சின்னக் கமலா: சிற்பக் கலைஞர் பிரபு கலை ஊக்கம் இல்லாது சோர்ந்து கிடக்கிறார். அவருக்கு திடீரென்று அப்பாத்துரை என்ற மறைந்த தொழிலதிபருக்கு ஒரு சிலை செய்யும் வாய்ப்பு வருகிறது. அப்பாத்துரைக்கு சிலை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய கும்பலே ரகசியமாக வேலை செய்கிறது. கும்பலின் பிரதிநிதியாக இருப்பவள்தான் சின்னக் கமலா. குழந்தை எம்.எஸ்ஸின் சித்தரிப்பு ரசிக்கும்படி இருந்தது.

க்ரைம்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகள் போலீஸ் அதிகாரி தான் துப்பறிந்த கேஸ்களை புத்தகமாகக் கொண்டு வரக்கூடாது என்று மிரட்டப்படுகிறாள்.

கோஸ்ட்: பேய் பிசாசுக் கதைகள். டைம் பாஸ்.

இன்னொருத்தி: உடல் உறவில் விருப்பம் இல்லாத மனைவி மனம் மாறுகிறாள். சரளமாகப் போகும் இன்னொரு கதை. மாலைமதி மாத நாவல்கள் வர ஆரம்பித்த காலத்தில் எழுதப்பட்டது என்று நினைவு.

கன்னாபின்னா கதைகள் சிறுகதைத் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் கடிதங்களின் தொகுப்பாக எழுதப்பட்டிருக்கிறது. நல்ல பொழுதுபோக்குச் சிறுகதைகள்.

குடும்பக் கதைகள் சிறுகதைத் தொகுப்பு. குறிப்பிடும்படி எதுவும் இல்லை என்றாலும் வாரப் பத்திரிகை சிறுகதைகளின் நல்ல பிரதிநிதி.

மூவிரண்டு ஏழு புத்தகத்தில் தன்னை வளர்த்து ஆளாக்கின ஹோட்டல் முதலாளி தன் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பவே அப்படி செய்தார், தன் அப்பாவுக்கு கிடைத்த தூக்குத்தண்டனை அந்த முதலாளிக்கு கிடைத்திருக்க வேண்டியது என்பதை உணரும் ஹோட்டல் மானேஜர் சேது. இன்னுமொரு சரளமான, ஆனால் பலமில்லாத கதை.

ஒரே ஒரு வழி நாவலில் அண்ணன் காதல் தோல்வியால் பைத்தியம் ஆகிவிட, தம்பி அந்தப் பெண்ணை பழி வாங்குகிறான். சுமாரான தொடர்கதை.

ஒரு தற்கொலை நடக்கப் போகிறது நாவலில் ஒரு ஜோசியர் தற்கொலை நடக்கப் போகிறது என்று ஆரூடம் சொல்கிறார். நடக்கிறது. அது கொலை என்று நாயகன் கண்டுபிடிக்கிறான்.

வாளின் முத்தம் சரித்திர நாவல். அக்பர்தான் நாயகன். இன்னுமொரு சரளமான கதை.

வயசு 17 நாவலில் குற்றவாளி மூர்த்தி. அவனை நிரபராதி என்று நம்பி அவன் விடுதலைக்குப் போராடும் அவன் தங்கை மாயா. மாயா மீது உள்ள ஈர்ப்பில் மனைவி கல்யாணியைப் புறக்கணிக்கும் வக்கீல் பத்மநாபன். கல்யாணிக்கும் பத்மநாபனுக்கும் நெருங்கிய நண்பனான அருண். கல்யாணிக்கும் அருணுக்கும் உள்ள நட்பின் சித்திரம் இந்த நாவலில் குறிப்பிட வேண்டிய அம்சம்.

அவரது மொழிபெயர்ப்புகள் நிறைய பேசப்பட்டன. Papillon, Rage of Angels மாதிரி சில. ஒரிஜினல்களே சுமார்தான்.

அவரால் சிறப்பாக எழுதி இருக்க முடியும், இன்னும் நல்ல வணிக எழுத்தாளராக வந்திருக்க முடியும், குமுதத்தின் பணிகள் அவரை முடக்கிவிட்டன, குமுதம் அவருக்குப் பொன் விலங்குதான் என்று தோன்றியது.

இலக்கியம் படைக்க வேண்டும் என்று ரா.கி.ர. முயலவில்லை. அவர் எழுதியது எதுவும் இலக்கியமும் இல்லை. ஆனால் குமுதத்தை மாபெரும் வெற்றி அடைய வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. தமிழின் இரண்டாம் வரிசை வணிக எழுத்தாளர்களில் முக்கியமானவர். ஒரு தலைமுறைக்கு முந்தைய குமுதம் வாசகர்களில் நினைவில் அவர் எப்போதும் இருப்பார்.

அவருடைய ஒரு சிறுகதை – 1947-இல் எழுதியது, துரையிடம் லீவ் கிடைக்காது என்றெல்லாம் பிரச்சினை – இங்கே. அவருடைய எழுத்து முறைக்கு ஒரு சாம்பிள் கீழே. இன்னும் படிக்க விரும்புபவர்கள் இங்கே, இங்கே மற்றும் இங்கே படிக்கலாம்.

சந்தனக் கடத்தல் வீரப்பர்

ஆளுக்கு ஆள் சந்தனக் கடத்தல் வீரப்பரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், நான் கிட்டத்தட்ட அவரை சந்தித்திருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். (ஒரு படா கெள்ளைக்காரனுக்கு, மகா கடத்தல்காரனுக்கு, பயங்கரக் கொலைகாரனுக்கு ‘அவர்’ என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தமிழ் டிவிக்களும், தமிழ் தினசரிகளும் முதலில் இரண்டு வரிகள் ‘அவன்’ என்று குறிப்பிட்டு விட்டு, உடனே மாபெரும் தவறு செய்து விட்ட மாதிரி ‘அவர்’ என்று மாற்றிக் கொள்கின்றன. (தூர்தர்ஷனில் மட்டும் ‘அவன்’ என்றே கடைசி வரை சொல்லிவருவதாக ஒரு நண்பர் சொன்னார்.)

எனக்கு இந்த மாதிரியான ‘அவன்’ ‘அவர்’ குழப்பமெல்லாம் கிடையாது. கன்னட நடிகர் ராஜ்குமார் நல்லபடி வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்ட பின், வீரப்பரை அவர் என்றே இங்கு குறிப்பிடுகிறேன்.

முன்னொரு காலத்தில் நான், புனிதன், ஜ.ரா. சுந்தரேசன் மூவரும் சேர்ந்து சினிமா பார்க்கப் போவது வழக்கம். குமுதத்தில் விமர்சனம் எழுதுவதற்காக. அனேகமாக கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களாகத்தான் இருக்கும். ஒரு நாள் நான் நண்பர்களிடம் “கிராமத்து நடுவில் சளசளவென்று சிற்றோடை ஓடுகிறது. இளம் பெண்கள் இடுப்பில் குடத்தைச் சுமந்துகொண்டு அங்கே போய் நீர் மொண்டு கொண்டு ஒய்யாரமாக வருகிறார்கள். ஆகாயத்தில் ‘S’ எழுதுகிற மாதிரி கையை வளைத்துக் கொண்டு ஒய்யார நடைபோடுகிறார்கள். இது போன்ற கிராமம் நிஜமாகவே இருக்கிறதா? இருந்தால் நேரில் பார்க்க வேண்டும்” என்றேன்.

அடுத்த ஒரு வாரத்தில் பல சினிமா நிருபர்களை நாங்கள் பேட்டி கண்டோம். சத்தியமங்கலத்துக்கு அருகே (கவனியுங்கள்: சத்தியமங்கலம்!) ஷுட்டிங்குகள் நடைபெறுகின்றன என்றும் அங்கே உண்மையிலேயே இது போன்ற கிராமங்கள் இருக்கின்றன என்றும் பேட்டியில் தெரிய வந்தது. சத்தியமங்கலத்துக்கு எப்படிப் போவது என்று கேட்டோம். ஈரோடுக்கு ரயிலில் போனால் அங்கிருந்து பஸ்ஸில் போகலாம் என்றார்கள்.

அடுத்த வெள்ளிக்கிழமை இரவு ரயிலேறினோம். சனி, ஞாயிறு தங்கிவிட்டுத் திங்கள் காலை திரும்பி விடுவதாகத் திட்டம். (நாங்கள் மூவரும் இப்படித்தான் பல ஊர்களுக்கும் போய் வந்திருக்கிறோம். திங்கள் காலையில் கொள்ளை வேலை காத்திருக்கும். அரை நாள் தாமதமானால் போச் போச்!)

ஈரோடில் சுந்தரேசனுடைய உறவுக்காரர் ஒருவர் இருந்தார். சிறிய கைத்தறி மில் நடத்தி வந்தார். அவர் வீட்டில் குளித்து சாப்பிட்டுவிட்டு சத்தியமங்கலம் பஸ்ஸில் புறப்பட்டோம். தமிழ் நாட்டில் எந்த ஊருக்கும் முன்னறிவிப்பு இல்லாமல் போக எங்களுக்கு ஒரு வசதி இருந்தது. அதாவது மூலை முடுக்கெல்லாம் குமுதம் விற்பனையாளர்கள் இருப்பதால் அவர்களைப் பிடித்தால் அந்த ஊரில் தங்குவதற்கான வசதிகளை செய்து கொடுப்பார்கள். (செலவுகள் எங்களுடையதுதான்.)

அந்த தைரியத்தில்தான் சத்தியமங்கலம் போனோம். விற்பனையாளரின் கடையை விசாரித்து அறிந்து அங்கே சென்றோம். அந்தோ! அவர் ஈரோடுக்குப் போயிருப்பதாகவும் வருவதற்கு இரண்டு மூன்று நாட்களாகும் என்றும் கடையிலிருந்த பையன் சொன்னான்.

ஆளுக்கொரு ஜோல்னாப் பையை மாட்டிக்கொண்டு அந்தக் கடைத் தெருவில் அசட்டு விழி விழித்துக்கொண்டு நின்றோம். “மெட்ராசிலிருந்து வந்திருக்கிறோம். சினிமா ஷூட்டிங் நடக்குமாமே, எங்கே?” என்று யாரையும் கேட்கவும் கூச்சமாக இருந்தது. தோல்வி முகத்துடன் ஈரோடு திரும்பத் தீர்மானித்து பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தபோது, “ஸார்! இங்கே எங்கே வந்தீங்க?” என்ற குரல் கேட்டது.

“அட! நீயா?” என்றார் சுந்தரேசன். (எப்போதும் அவருக்கு அந்த ராசி உண்டு. ஸஹாரா பாலைவனத்திற்குப் போனால் கூட, ஒட்டகத்தின் பின்னாலிருந்து ஒரு ஆள் எட்டிப் பார்த்து “ஸார்! நீங்களா!” என்று கேட்பான்!)

கூப்பிட்டவர் இளைஞர். சென்னையில் ராஜேந்திரன் என்ற டாக்டரின் தம்பி. அந்த ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவுக்குக் போய்க் கொட்டி முழக்கிக் கொண்டிருந்தார். (இப்போதும் கொட்டி முழக்கிக் கொண்டுதான் இருப்பார்!) ராஜேந்திரனை நானும், புனிதனும் பார்த்திருக்கிறோம். அவர் தம்பியைப் பார்த்ததில்லை. சுந்தரேசன் பார்த்திருக்கிறார், பழகியிருக்கிறார்.

கொஞ்சம் கூச்சத்துடன் நாங்கள் ஷூட்டிங் பார்க்க வந்த சிறுபிள்ளைத்தனத்தைச் சொன்னோம், “அதற்கு நீங்கள் கோபிசெட்டிப் பாளையம் போயிருக்க வேண்டும். பரவாயில்லை என்னோடு வாருங்கள். கார் இருக்கிறது. என் வீட்டுக்குப் போய்விட்டு மற்றதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம்” என்று அழைத்தார். இந்த மட்டில் துணை கிடைத்ததே என்று ஆண்டவனுக்கு நன்றி சொல்லியபடி காரில் ஏறினோம். “எங்கே உங்கள் வீடு?” என்று புனிதன் கேட்டார்.

“அந்தியூர்” என்றார் அவர் (மறுபடியும் கவனியுங்கள்: அந்தியூர்!) “ஒரு வேலையாக இங்கே வந்தேன். ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த சமயம் நல்ல வேளையாக உங்களைப் பார்த்தேன்” என்றார்.

அந்தியூர் அழகான ஊர். மரங்கள் நிறைந்த ஒரு சாலையில் அவருடைய பெரிய வீடு. வீட்டைவிடப் பெரிய மனது டாக்டர் ராஜேந்திரனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும். அருமையான சாப்பாடு போட்டார்கள். அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஒரு கிரிக்கெட் மேட்சை டி.வி.யில் பார்த்தேன்.

“வாருங்கள், பன்னாரி அம்மன் கோவிலுக்குப் போகலாம்” என்று காரில் எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் ராஜேந்திரனின் தம்பி. (மறுபடியும் கவனியுங்கள்: பன்னாரி!)

பிள்ளையார் கோவில் மாதிரி சின்னக் கோவில். (அந்த நாளில்). அம்மனை தரிசித்து, கோவிலை வலம் வந்தோம். “அடிக்கடி ஷூட்டிங் நடக்கிற இடம் ஒன்று அருகில் இருக்கிறது. பார்க்கலாம் வாருங்கள்” என்றார் நண்பர்.

போனோம், பார்க்கவில்லை. ஏனெனில் அங்கே அன்று எந்த ஷூட்டிங்கும் நடைபெறக் காணோம். நீளமாய்ப் பாலம் மாதிரி குறுக்கே ஒன்று தெரிந்தது. ஆற்று நீர் அதன் மீதாக மெதுவே ஓடி வழிந்து கொண்டிருந்தது. அங்கே பல டூயட் காட்சிகள் எடுத்திருப்பதாக நண்பர் சொன்னார்.

அவருடன் திரும்பி ஈரோடுக்கு பஸ் ஏறினோம். அது என்ன ரூட்டோ தெரியாது. நல்ல தூக்கம். வழியில் கண்டக்டர், “சார்! இதுதான் பாக்யராஜின் ஊர். வெள்ளங்கோவில். அதோ அப்படிப் போனால் அவருடைய வீடு” என்றார்.

ஏதோ சிவன் கோவிலைப் பற்றிச் சொல்கிறார் என்று அரைத் தூக்கத்தில் எண்ணி ஹர ஹர மகா தேவா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

(“வீரப்பனைப் பற்றி ஸாரி, வீரப்பரைப் பற்றி இந்தக் கட்டுரையில் ஒன்றும் காணோமே?!” என்று கேட்காதீர்கள். நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே, ‘கிட்டத்தட்ட சந்தித்தேன்’ என்று? நான் அன்று சுற்றிய வட்டாரங்களில்தான் வீரப்பர் ஒரு காலத்தில் சுற்றியிருக்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து

தொடர்புடைய சுட்டிகள்:
எஸ்ஏபி
பாக்கியம் ராமசாமி என்ற ஜ.ரா. சுந்தரேசன்
சுந்தர பாகவதர் என்ற புனிதன்
ஹிந்து குறிப்பு
சுஜாதா தேசிகனின் அஞ்சலி
ரா.கி.ர.வுடன் ஒரு சந்திப்பு