தமிழ் பெண் எழுத்தாளர்கள்

நாலைந்து முறை எழுதியதுதான், இன்னும் ஒரு iteration.

ராஜம் கிருஷ்ணனின் புத்தகம் பற்றி எழுதியது நான் பெரிதும் மதிக்கும் அம்பையை கோபப்படுத்தி இருக்கிறது. வெறும் “பெண் எழுத்தாளர்” என்று ஒருவரை அடையாளப்படுத்துவது பெண்களை அவமானப்படுத்துவது என்கிறார்.

“பெண்” என்ற அடைமொழி இந்த எழுத்துக்களின் முக்கிய இலக்கையும் (target audience) குறிக்கிறது. அழ. வள்ளியப்பா, பூவண்ணன், வாண்டு மாமா போன்றவர்கள் குழந்தை எழுத்தாளர்கள். “குழந்தை” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டி இருக்கிறது.

இருந்தாலும் அப்படி “பெண் எழுத்தாளர்”  என்று வகைப்படுத்துவது பெண்களை இழிவுபடுத்துகிறதா? இருக்கலாம், அதைப் புரிந்து கொள்ளும் உணர்திறன் (sensitivity) எனக்கு கம்மிதான். என் உணர்திறன் குறையாகவே இருக்கலாம். நான் அந்த முத்திரையைப் பயன்படுத்துவது சுருக்கமான குறிப்பாக (shorthand), நான் வளர்ந்து வந்த காலங்களிலிருந்து பயன்படுத்தப்படும் முத்திரை, எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட முத்திரை, குறைந்த பட்சம் என் தலைமுறைக்காரர்களுக்கு சுலபமாகப் புரியும் முத்திரை என்பதனால். வேறு முத்திரை யாருக்காவது தெரிந்தால், அது அனைவருக்கும் புரியக் கூடியதாக இருந்தால், சொல்லுங்கள், அதைப் பயன்படுத்துவதில் எனக்கு எந்த மனவிலக்கமும் இல்லை. ஹரிஜன் என்றுதான் என் இளமைக் காலத்தில் சொன்னோம், அதை தலித் என்று மாற்றிக் கொள்ளவில்லையா என்ன? படிப்பவர்களுக்கு விளக்கங்கள் இல்லாமல் புரிய வேண்டும், அவ்வளவுதான்.

நான் சின்ன வயதில் குமுதம் விகடன் படித்து வளர்ந்தவன். அப்போதெல்லாம் பெண் எழுத்தாளர்களின் கதைகள்  genre அவற்றில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி போன்றவர்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். குடும்பச் சச்சரவுகள், மாமியார்-மருமகள் சண்டை, நாத்தனார் கொடுமை, வரதட்சிணை கேட்கும் “கோழைகள்”, வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சினைகள் என்று பெண்களின் உலகத்தைப் பற்றி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.  Wannabe பெண்ணிய எழுத்து (feminist writing). இந்த genre-இன் இலக்கு அனேகமாக பெண்கள்தான். எனக்கு “பெண் எழுத்தாளர்கள்”-இன் வரையறை அந்த மாதிரி எழுத்துக்கள்தான், சிவசங்கரி போன்றவர்கள்தான். “பெண்” என்ற அடைமொழி இல்லாமல் அவர்களை எழுத்தாளர்கள் என்று பொதுவாக சொல்லிவிட முடியாது, அப்படி வகைப்படுத்தத்தான் வேண்டி இருக்கிறது.

என் இளமைக் காலத்தில் சிவசங்கரிதான் இந்த genre-இன் ராணி. இந்துமதி கொஞ்சம் மேல்தட்டு குடும்பங்களைப் பற்றி எழுதி பிரபலமாக இருந்தார். லக்ஷ்மிக்கு ஒரு பெரிய வாசகர் கூட்டம் இருந்தது. ஆனால் மெதுமெதுவாக அவரது பாணி கதைகள் கலைமகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. அப்போது சூடுபட்டதால் பொதுவாக தமிழ் பெண் எழுத்தாளர்களைத் தவிர்த்தே வந்திருக்கிறேன்.

சுழலில் மிதக்கும் தீபங்கள் பதிவில் நான் சொல்ல வந்தது இதைத்தான். ஒரு புத்தகத்தை வைத்து உறுதியாகச் சொல்லிவிட முடியாது, ஆனால் ராஜம் கிருஷ்ணன் சிவசங்கரி பாணி எழுத்தாளர் என்றுதான் தோன்றுகிறது. குறைந்த பட்சம் சு.மி. தீபங்கள் சிவசங்கரி பாணி எழுத்துதான். என் வார்த்தைகள் சரியாக வராமல் இருக்கலாம், ஆனால் சொல்ல விரும்புவது இதைத்தான்.

எழுதும் பெண்கள் எல்லாரும் பெண் எழுத்தாளர்கள் அல்ல.  கிருத்திகா, ஹெப்சிபா ஜேசுதாசன், பாமா போன்றவர்கள் எழுத்தாளர்கள், அவ்வளவுதான். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு பூமணி தலித் எழுத்தாளர் அல்ல, தலித் பின்புலத்தை வைத்து எழுதி இருக்கும் எழுத்தாளர். மலர்வதி (தூப்புக்காரி) பெண்தான், ஆனால் அவர் எனக்கு “பெண் எழுத்தாளர்” அல்லர், (நல்ல எழுத்தாளரும் அல்லர், ஆனால் அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும், சிறப்பாக எழுத வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.) அவர் சோலை சுந்தரப்பெருமாள் பாணி எழுத்தாளர். அனுராதா ரமணனும் கமலா சடகோபனும் ரமணிசந்திரனும் (ரமணிசந்திரனின் நாவல் ஒன்றில் பாதி மட்டுமே படித்தேன், அதற்கு மேல் தாண்டமுடியவில்லை) பெண் எழுத்தாளர்கள்தான். வாஸந்தியை வாரப் பத்திரிகைகளை விடாமல் படித்த காலத்தில் பெண் எழுத்தாளர் என்றுதான் வகைப்படுத்தி இருந்தேன், பிற்காலத்தில் சில புத்தகங்களைப் படித்த பிறகு என் எண்ணம் மாறிவிட்டது, அவரும் எனக்கு அடைமொழி தேவைப்படாத “வெறும்” எழுத்தாளர் மட்டுமே.

நான் விரும்பிப் படிக்கும் ஒரே பெண்ணிய எழுத்தாளர் (பெண் எழுத்தாளர் அல்லர், பெண்ணிய எழுத்தாளர்) அம்பை. அவர் பெண்களைப் பின்புலத்தில் வைத்து இலக்கியம் படைக்கிறார். இருபத்து சொச்சம் வயதில் முதன்முறையாக “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பைப் படித்தபோது உண்மையிலேயே அது ஒரு revelation ஆக இருந்தது. ஒரு battered copy இன்னும் என் அலமாரியில் எங்கோ இருக்கிறது.

ஆர். சூடாமணி, அனுத்தமா, ராஜம் கிருஷ்ணன், திலகவதி போன்றவர்களைப் படிப்பதை நான் தள்ளிப்போட்டுக் கொண்டு இருப்பதற்கு அவர்கள் “பெண் எழுத்தாளர்களோ” என்ற சந்தேகம்தான் காரணம். ஒரு வழியாக மனவிலக்கைத் தவிர்த்து சூடாமணியின் சில பல சிறுகதைகள் படித்த பிறகு அவருக்கு என் மனதில் “எழுத்தாளர்” என்ற அடையாளம்தான்; “பெண் எழுத்தாளர்” என்ற அடையாளம் இல்லை.

படித்த வெகு சில கதைகள் மூலம் என் ஆர்வத்தை அதிகரித்திருக்கும், நான் படிக்க விரும்பும் (பெண்) எழுத்தாளர்கள் வை.மு. கோதைநாயகி அம்மாளும், குமுதினியும்தான். வை.மு.கோ. ஒரு முக்கியமான முன்னோடி என்று தோன்றுகிறது. குமுதினியின் எழுத்தில் என்னவோ ஒரு special charm இருக்கிறது.

பிற மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் பிரச்சினையே இல்லை. நமக்குத் தெரிவதே, நம் காதில் விழுவதே பல முறை வடிகட்டிய பின்தான் நம்மை வந்தடைகிறது. ஜேன் ஆஸ்டெனும் எமிலி ப்ராண்டேயும் உர்சுலா லே க்வின்னும் ஷிர்லி ஜாக்சனும் மஹாஸ்வேதா தேவியும் அம்ரிதா ப்ரீதமும் இஸ்மத் சுக்டாயும் நமக்குத் தெரிவதே பத்து பேர் பரிந்துரைப்பதால்தான். அவற்றில் நான் குறைகள் கண்டுபிடிக்கலாம், ஆனால் ஏதாவது நிறைகள் இருப்பதால்தான் என் கவனத்துக்கே வருகிறது.

இந்த மாதிரி வகைப்படுத்தல் எல்லாம் வசதிக்காகத்தான். “பெண் எழுத்தாளர்”, “கரிசல் எழுத்தாளர்”, “வணிக எழுத்து”, “pulp writer” எல்லாம் வசதிக்காகப் பயன்படுத்தும் முத்திரைகள்தான். உண்மையில் ஜாதி இரண்டொழிய வேறில்லை. நன்றாக எழுதுபவர் எழுத்தாளர், மற்றவர் வெட்டி ஆஃபீசர்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பெண் எழுத்தாளர்கள்

ஸ்டாலின் பரிசளித்த ராஜம் கிருஷ்ணன் புத்தகம்

சமீபத்தில் ஜனாதிபதிக்கு ஸ்டாலின் சில தமிழ்ப் புத்தகங்களை பரிசாக அளித்திருந்தார். அதில் ஒன்று ராஜம் கிருஷ்ணன் எழுதிய சுழலில் மிதக்கும் தீபங்கள். மின்பிரதி இங்கே.

பொதுவாக எனக்கு பெண் எழுத்தாளர்கள் என்றால் கொஞ்சம் அலர்ஜி. சிறு வயதில் சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி போன்றவர்களின் தொடர்கதைகளைப் படித்து ஏற்பட்ட விளைவு. எழுத்தாளர் ஆணா பெண்ணா, தலித்தா தேவரா என்பதெல்லாம் வெறும் தகவல்தான். ராஜம் கிருஷ்ணன் பெண் எழுத்தாளர் என்றுதான் எனக்கு ஒரு பிம்பம், அதனால் அவரைத் தவிர்த்தே வந்திருக்கிறேன். சரி இந்தத் தகவல் தந்த உந்துதலால் படித்துப் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன்.

வேண்டாவெறுப்பாக சிவசங்கரி தொடர்கதைகளை படித்த அந்தக் காலத்துக்கே கொண்டுபோய்விட்டார். நாற்பத்து சொச்சம் வயது கிரிஜா தன் மாமியார், கணவனின் ஆதிக்கத்துக்குக் கீழ். ஒரு நாள் கணவனின் சுடுசொல்லால் ஏதோ உடைந்துவிட, வீட்டை விட்டு வெளியேறி ஹரித்வார் போய்விடுகிறாள். ஐந்து நாள் கழித்து திரும்பினால் கணவன் ஓடுகாலி என்று கத்துகிறான். நிரந்தரப் பிரிவு.

கதை உண்மையில் நடக்கக் கூடியதுதான். நம்பகத்தன்மை உடையதுதான். ஆனால் நயம் இல்லை, தட்டையான கதாபாத்திரங்கள். எந்த விதத்திலும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் அல்ல. ஒரே ஆறுதல், சின்னப் புத்தகம், நூறு பக்கம் இருக்கலாம்.

புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த முகம் தெரியாத அந்த ஸ்டாலினின் செயலாளருக்கு ஒரு ஜே போட்டிருந்தேன். இந்தத் தேர்வுக்கு ஹாய் ஹாய் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சரி ஆறில் ஒன்றுதானே சோடை போயிருக்கிறது என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்.

ஒரு புத்தகத்தை வைத்து சொல்லிவிட முடியாதுதான். ஆனால் ராஜம் கிருஷ்ணனின் அடையாளம் பெண் எழுத்தாளர்தான் போலிருக்கிறது. பெண் என்ற அடைமொழி அவருக்கு தேவைப்படும் என்றுதான் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய பக்கம்: மின்புத்தகம்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

vai_mu_kothainayakiசுருக்கமாக: ஒரு நாள் கூட பள்ளிக்குப் போகாமால் 115 நாவல்களை எழுதிய அசாத்திய பெண்மணி. தமிழில் நாவல் எழுதிய முதல் பெண் இவர்தானாம். கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் தனி ஆளாய் ஜகன்மோகினி எனும் இதழை நடத்தியவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சுதந்திர போராட்ட வீரர், சமூக சேவகி, இசைக் கலைஞர் என பல பரிணாமங்களில் தன்னை நிறுவிக் கொண்டவர்.


வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள்

பிறப்பு: டிசம்பர் 1, 1901 இறப்பு: ஃபெப்ரவரி 20, 1960

சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்தவர். தந்தை நீர்வளூர் என்.எஸ். வெங்கடாச்சாரியார். தாயார் பட்டம்மாள். 1907ம் ஆண்டு கோதைக்கு ஐந்தரை வயது ஆனபோது அதே திருவல்லிக்கேணியில் ஏழு வயதான வை.மு. பார்த்தசாரதியுடன் திருமணம் நடைபெற்றது. வை.மு. என்பது பார்த்தசாரதி அவர்களது குடும்பப் பெயர். இதில் ”வை ”என்பது வைத்தமாநிதி எனும் அவர்களது குலதெய்வமான திருக்கோளூர் பெருமானின் பெயர். மு என்பது முடும்பை. அவர்கள் பூர்வீக கிராமத்தின் பெயர். பரம்பரையாக இந்தப் பட்டப் பெயர் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைத்துக் கொண்ட காரணத்தால் திருமணமான நாள்தொட்டு வை.மு. கோதைநாயகியானார். மாமனார் வீட்டிலிருந்தவர்கள் அனைவருமே தமிழையும் சமஸ்கிருதத்தையும் நன்கு கற்று கரை கண்டவர்கள். ஆழ்வார்கள் பாசுரங்களை மனப்பாடமாக ஒப்பிப்பவர்கள். மூத்த மாமனார் திருக்குறள் பரிமேலழகர் உரைக்கும், நன்னூலுக்கும் உரை எழுதியவர். அதனாலயே பள்ளிக்குக் கூட சென்றிராத வை.மு.வுக்கு வீட்டில் ஓரளவு கல்வியறிவு பெறும் வாய்ப்பு கிட்டியது.

சிறு வயது முதலே கதை சொல்வதில் ஆர்வம் கொண்ட கோதை வீட்டு வேலை போக இதர நேரங்களில் வீட்டிலுள்ள இதர சிறுவர் சிறுமியர்களுக்கு கதை சொல்வதில் ஈடுபட்டார். கோதை சொன்ன கதைகள் மெல்ல பெரியவர்களின் காதிலும் விழ அவர்களும் குறிப்பாக கணவரும் அவரை மிகவும் உற்சாகப்படுத்தினர்.இதன் காரணமாக கோதைக்கு கணவருடன் சேர்ந்து நாடகத்துக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. வை.மு.வுக்குள் நாடகங்கள் புதிய உலகை திறந்துவிட்டன. தானும் ஒரு நாடகம் எழுதிப் பார்க்க ஆவலுற்றார். கல்வியறிவில்லாத வை.மு.வுக்கு எழுதத் தெரியவில்லை. இச்சமயத்தில் அவர் சொல்லச் சொல்லத் தான் எழுதித் தருவதாக வந்தார் பட்டம்மாள் எனும் தோழி.

jaganmohiniஅடுத்த சில நாட்களில் இந்திரமோகனா எனும் அவரது முதல் நாடகம் எழுத்தில் உருவானது. அப்போது அவருக்கு வயது 24. அவரது கணவர் அந்த நாடக நூற்பிரதிகளை அப்போது புகழ் பெற்ற நாடகாசிரியரான பம்மல் சம்பந்த முதலியார் மற்றும் துப்புறியும் கதைகளை எழுதி வந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் ஆகியோரிடம் காண்பிக்க அவர்களும் வை.மு.வுக்கு பாராட்டும் உற்சாகமும் தெரிவித்தனர். அடுத்தாக அவர் எழுதியது வைதேகி எனும் நாவல். அதனை வெளியிட எந்த அச்சகமும் முன் வராத காரணத்தால் கணவர் மூலம் அப்போது பாதியில் நின்ற ஜகன்மோகினி எனும் இதழை வாங்கி அதனை மாத இதழாக அச்சிட்டு அதிலேயே தன் முதல் நாவலை தொடர்கதையாக வெளியிட்டார். ஜகன்மோகினி இதழ் அன்று துவங்கி தொடர்ந்து 35 ஆண்டுகள் வெளியாகி சாதனை படைத்தது. வைதேகி தொடர்கதை பெரும் வரவேற்பினை பெற கோதைநாயகி தொடர்ந்து நாவல் எழுதத் துவங்கினார்.உடன் கல்வியறிவிலும் தன்னை தயார்படுத்திக் கொண்டார்.

தமிழ் பண்டிதரான தன் சிறிய தகப்பனார் திருத்தேரி ராகவாச்சாரியிடம் திருக்குறள், நாலடியார், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி மற்றும் கம்ப ராமாயணம் ஆகியவற்றைக் கற்றார். பிற்பாடு அவர் எழுதிய நாவல்களுக்கு இது பெரிதும் உதவியது.

தொடர்ந்து அவர் எழுதிய நாவல்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற கோதைநாயகியின் பெயர் அப்போதைய பிரபலங்களில் ஒன்றாக மாறியது. பல முக்கிய பிரமுகர்களோடு நட்பு கிடைத்தது. ராஜாஜி தான் பேசும் கூட்டங்கள் எல்லாவற்றிலும் இவரைப் பேசச் சொல்வாராம். இதனால் ஒரு முறை காந்தியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்ட அது முதல் தன்னை விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபடுத்திக் கொண்டார். அரசுக்கெதிரான போராட்டம் காரணமாக ஆறு மாதம் வேலூரில் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். சிறையில் சோதனையின் கொடுமை என்ற நாவலை எழுதினார்.

சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த பிராமண வைதீக சூழலில் வாழ நேர்ந்தாலும் வை.மு. தன் கதைகளில் அவை அனைத்தையும் உடைத்தெறிந்தார். அவர் எழுதிய 115 நாவல்களில் பெரும்பாலானவை துப்பறியும் வகையை சார்ந்தவை என்றாலும் அவற்றிலும் பெண்ணடிமை, பெண் கல்வி, வரதட்சிணை ஒழிப்பு, விதவை மறுமணம், தேவதாசி ஒழிப்பு போன்ற நல்ல பல கருத்துக்களை சொல்லி உள்ளார்.

இவர் எழுதிய சில கீர்த்தனைகள் இசை மார்க்கம்‘ என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. ராஜ்மோகன், தியாகக் கொடிஅனாதைப் பெண், தயாநிதி ஆகிய இவரது நாவல்கள் திரைப்படங்களாக  வெளிவந்தன. பத்மினி நடித்த ‘சித்தி‘ படத்தின் கதையும் இவருடையதுதான்.

1948-ல்  பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துகாக மகாத்மாஜி சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவி சமூக சேவையும் புரிந்திருக்கிறார்.

அவருடைய தபால் வினோதம் என்ற குறுநாவலை இங்கே படிக்கலாம். (பகுதி 1, 2, 3)

அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டிருக்கின்றன.

அவரது படைப்புகள் இலக்கியத் தகுதி அற்றவை. ஆனாலும் விடுதலைக்கு முன்பான இந்தியாவின் அறிவு நிலை உயர்ந்திராத அக்காலத்தோடு அதுவும் ஒரு பெண்ணாக பொருத்தி வைத்து பார்க்கும்போது அவரது வாழ்க்கை தமிழ்ச் சூழலில் சாதனை மிக்க ஒன்றாகவே கருதத் தோன்றுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழில் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதத்தில் வை.மு.கோ. பற்றி
விகடனில் வை.மு.கோ. பற்றி
அவரது எழுத்துக்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது சேதுராமன் எழுதிய குறிப்பு
தபால் வினோதம் குறுநாவல் (பகுதி 123)

தரையில் இறங்கும் விமானங்கள்

indumathiஇது ஒரு guest post. தோழி சாரதாவை இப்போதெல்லாம் இணையத்தில் பார்க்க முடிவதில்லை. சந்திரபிரபா எழுதிய பின்னூட்டம் ஒன்றிலிருந்து தாவித் தாவிப் போய் இதைப் பிடித்து பதித்திருக்கிறேன். ஓவர் டு சாரதா!

எழுத்தாளர் இந்துமதியின் பல்வேறு நாவல்களில், என் மனதை மிகவும் கவர்ந்த ஒன்று என்றால் என் மனதில் பளிச்சென்று நினைவுக்கு வருவது ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ தான். (அவரது பல நாவல்கள் எனக்குப்பிடிக்காது என்பது வேறு விஷயம்)

பொதுவாக நாவல்கள் என்றால் கதாபாத்திரங்கள் வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். அல்லது கதாசிரியர் தனது வார்த்தைகளில் காட்சிகளை விவரித்துக்கொண்டு போவார். இது இன்னொரு ரகம். அல்லது கதாசிரியர் தனது கற்பனை வளத்தைக்காட்ட, எல்லை தாண்டி அதீதமாக வர்ணித்துக்கொண்டு போவார். இவையெல்லாம் இல்லாமல் கதாபாத்திரங்களின் மன உணர்வுகள் மூலமாகவே ஒரு கதையை, நாவலை நகர்த்திக்கொண்டு போக முடியுமா? அப்படி அபூர்வமாக அமைந்த ஒரு நாவல்தான், இந்துமதி எழுதிய “தரையில் இறங்கும் விமானங்கள்”.

இதில் வரும் கதாபாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். அவர்கள் மன உணர்வுகள் நம்முடன் பேசும். மிகக் குறைந்த அளவே பாத்திரங்கள். பரமு என்கிற பரமசிவம் அண்ணன். அவனுக்கு விஸ்வம் என்றொரு தம்பி. விஸ்வத்துக்கு பாசமே உருவான ஒரு அண்ணி, ரொம்ப கண்டிக்காமல் பொறுப்பை உணர வைக்க எத்தனிக்கும் அப்பா. பாதியில் மறைந்துவிடும் அம்மா. விஸ்வம், வாழ்க்கையை எந்திரமாக அல்லாது கலையாக ரசித்து வாழத் துடிப்பவன். அவனுக்கு காதல், திருமணம் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் கூட இல்லை, பல பட்சங்களுக்கு கீழே. படிப்பு, படித்த பின் வேலை, வேலை கிடைத்ததும் திருமணம், திருமணத்தைத் தொடர்ந்து குழந்தைகள், பின் அவர்களை ஆளாக்க போராட்டம்….. இவ்வளவுதான் வாழ்க்கையா? இதுக்கு பிறக்காமலேயே இருந்திருக்கலாமே என்று ஆதங்கப்படும் வித்தியாசமான வாலிபன்.

அவனுடைய உலகமே வேறு. அதனுள் தனக்குத் தானே மனக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு அதிலேயே சஞ்சரித்துக் கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வாழும் அவனுக்கு முதல் இடியாக வந்தது அம்மாவின் மறைவு. ஆனால் அதையும் கூட பேரிழப்பாக தோன்றாதவாறு அவனுக்கு இன்னொரு தாயாய் அண்ணி இருந்து ஈடு கட்ட, அவன் தொடர்ந்து தன் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது இன்னொரு தாக்குதலுக்கு ஆட்பட்டது அண்ணனின் வேலை மாற்றலின் போது. இனியும் அவன் கற்பனை உலகில் உலவிக்கொண்டிருக்க முடியாது என்று அப்பா பக்குவமாக எடுத்துச் சொல்லி குடும்பப் பொறுப்புக்களை சுமக்க வைக்க, அதுவரை வானத்திலேயே பறந்து கொண்டிருந்த விமானம் தரையிறங்குகிறது.

எவ்வளவுதான் வானத்திலேயே பறந்துகொண்டிருந்தாலும், அது அங்கேயே பறந்து கொண்டிருக்க முடியாது ஒரு சமயத்தில், குறைந்தபட்சம் எரிபொருள் தீரும் நிலையிலாவது அது தரையிறங்கியே தீர வேண்டும். இறங்கிய பின்னும் அது தன் பழைய நினைப்பில் சிறிது தூரம் மூச்சிரைக்க ஓடி ஒரு நிலைக்கு வந்தே தீர வேண்டும் என்ற ய்தார்த்த உண்மையை விளக்கும் அருமையான நாவல்.

இதில் மனதை கொள்ளை கொள்ளும் விஷயம், நான் முன்பே குறிப்பிட்டது போல உரையாடல்கள் மிகக் குறைவாக, உள்ளத்துக்குள்ளே தோன்றும் எண்ண ஓட்டங்களையே அதிகமாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால், இந்துமதியின் மற்றைய நாவல்களினின்றும் இது தனித்து நிற்கிறது. கதையில் வரும் வர்ணனைகள்தான் எவ்வளவு யதார்த்தமானவை, எவ்வளவு ஜீவனுள்ளவை. வேலைக்காக இண்டர்வியூவுக்குப் போகும் விஸ்வம், அந்த அலுவலக வெளி வராந்தாவில் காத்திருக்கும் நேரத்தில் பார்த்து ரசிக்கும் மரக் கூட்டமும், அதில் துள்ளி விளையாடும் அணிலும் அப்படியே தத்ரூபமாக நம் கண் முன்னே தோன்றுகின்றன. மீண்டும் அதே அலுவலகத்துக்கு இண்ட்டர்வியூவுக்குப் போகும்போது விஸ்வத்தின் மனம் குதூகலிக்கிறது, வேலை கிடைக்கும் என்பதை எண்ணி அல்ல, மறுபடியும் அந்த காம்பவுண்டில் நிற்கும் மரக் கூட்டத்தையும் அதில் விளையாடும் அணிலையும் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில். அந்த அளவுக்கு இயற்கையை நேசிக்கும் அவன் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக யதார்த்த எந்திர வாழ்க்கைக்கு ஆட்படுகிறான் என்பதை இந்துமதி விவரிக்கும் அழகே தனி.

மனதைக் கவரும் பல இடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் தெருப் பக்கம் விளக்கை அணைத்து விட்டு விஸ்வமும் அண்ணியும் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தூரத்தில் மெல்ல ஒலிக்கும் வண்டி மாடுகளின் கழுத்து மணிச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து, மாட்டு வண்டிகள் வரிசையாக தங்கள் வாசலைக் கடந்து போகும்போது மணல் நறநறவென்று அரைபடுவதும், மெல்ல மெல்ல மணிச் சத்தம் தூர தூரமாகப் போய் அடங்கிப்போக, ஏதோ ஒரு கிராமத்தில் இருந்த்து போல விஸ்வம் நினைத்துக் கொண்டிருக்க, ‘விஸ்வம் கொஞ்ச நேரம் எங்கேயோ ஒரு கிராமத்தில் இருந்தது போல தோன்றியதில்லையா?’ என்று அண்ணி கேட்க அவன் அதிர்ச்சியடைவது.

ஒரு அண்ணிக்கும் கொழுந்தனுக்குமான உறவை தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போல சித்தரிப்பதில் கதாசிரியை பெரும் வெற்றி கண்டுள்ளார். விஸ்வம், அண்ணன் பரமு, அண்ணி, அப்பா, அம்மா என்று எல்லோருமே கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத, நம் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கும் கள்ளம் கபடமில்லாத வெகுளியான பாத்திரங்கள். அது மட்டுமல்ல இக்கதையில் வரும் எல்லோரும் நல்லவர்கள். யாரும் யாருக்கும் குழி பறிக்காதவர்கள். அதனால் இக்கதையில் திடீர் திருப்பம் போன்ற சுனாமிகள், சூறாவளிகள் எதுவுமின்றி, சம்பவங்கள் மனதை தென்றலாய் வருடிப் போகும். கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க மனம் வராது.

இக்கதை தூரதர்ஷன் சேனலில் தொலைக்காட்சித் தொடராகக் கூட வந்ததாகச் சொன்னார்கள். பார்க்கவில்லை, பார்க்காததற்கு வருந்தவுமில்லை. காரணம், நான் படித்திருந்த சில நல்ல நாவல்கள் தொடராகவோ, திரைப்படமாகவோ உருவானபோது அதன் ஜீவன் பலமாக சிதைந்து போனதைப் பார்த்து வேதனை அடைந்தவள் நான்.

‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை பலர் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் வாய்ப்பு கிடைத்தால் படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் பெண் எழுத்தாளர்கள், தமிழ் நாவல்கள், விருந்தினர் பதிவுகள்

தொடர்புடைய சுட்டி: ஆர்வியின் பதிவு

 

இந்துமதி

indumathiஇந்துமதியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை – தரையில் இறங்கும் விமானங்கள் தவிர. எப்படியோ தெரியாத்தனமாக ஒரு நாவல் இலக்கியமாக இருக்கிறது. அவரது மிச்சக் கதைகள் எல்லாம் தண்டம்தான். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஒரு முறை கூட இலக்கியம் படைக்காத சிவசங்கரி, இல்லை முயற்சியே செய்யாமல் எப்படியோ ஒரே ஒரு முறை இலக்கியம் படைத்திருக்கும் இந்துமதி இருவரில் யார் ஒசத்தி என்று தீர்மானிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்களுக்கு ஒரே தீம்தான் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்”. இதையே வைத்துக் கொண்டுதான் காலம் காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கொண்டு வரும் மாபெரும் மாற்றம் எல்லாம் பத்தினிக்கு இன்னல் வரும் ஆனால் தீராது, இல்லாவிட்டால் கல்யாணம் ஆகாத இளம்பெண்ணுக்கு வரும் இன்னல் தீரும்/தீராது, ஏழைப் பத்தினிக்கு இன்னல் வரும், மேல்தட்டுப் பெண்ணுக்கு இன்னல் வரும் இந்த மாதிரிதான். இந்துமதி மேல்தட்டுப் பெண்களுக்கு இன்னல் வரும் என்ற template-ஐ வைத்து எழுதித் தள்ளி இருக்கிறார். நாயகிக்கு வெள்ளை நிறம் மிகவும் அவசியம். அவரது target audience எழுபதுகளின் பெண்கள். எண்பது தொண்ணூறுகளிலும் அதே target audience-ஐ குறி வைத்து எழுதிக் கொண்டிருந்தது ஏற்கனவே தண்டமாக இருக்கும் அவரது படைப்புகளை உலக மகா தண்டமாக்குகிறது. இவர் எப்படிப் பிரபலமானார் என்று எனக்குப் புரியவே இல்லை.

எப்படி த.இ. விமானங்கள் மட்டும் இந்த template-இலிருந்து மாறி இத்தனை உச்சத்தை அடைந்தது என்று பல முறை வியந்திருக்கிறேன்.

வெள்ளை நிற நாயகிகளும் உயரமான நாயகன்களும் – அனேகமாக ரிம்லெஸ் கண்ணாடி அணிந்தவர்கள் – எப்போதும் வருவார்கள். ஓரளவு விவரம் தெரிந்தபின் இந்த obsession கொஞ்சம் வினோதமாக இருந்தது.

த.இ. விமானங்களை கொஞ்சமாவது நினைவுபடுத்தும் நாவல் மலர்களிலே ஒரு மல்லிகை. நாயகி வித்யா இலக்கிய ரசனை இல்லாத ரமணியை மணக்கிறாள், ரசனை உள்ள சங்கரிடம் நட்பு.

அவரது பிற புத்தகங்களில் தொட்டுவிடும் தூரம் என்ற புத்தகத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதில் சினிமா, இலக்கியத்தில் ஆர்வம் உள்ள நாயகன், நாயகி. அவர்கள் விவாதிக்கும் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஜெயமோகன், விமலாதித்த மாமல்லன்

அன்பே ஆருயிரே என்ற நாவலையும் குறிப்பிட வேண்டும். எத்தனைதான் முயன்றாலும் இந்த மாதிரி கற்பனை “வளம்” எனக்கு வரப் போவதில்லை. வழக்கமான முக்கோணக் காதல். இரண்டு ஆண்களும் உயிர் நண்பர்கள். ஒரு உணர்ச்சிகரமான கணத்தில் காதலன் தான் விவாகரத்தான ஒரு பெண்ணைத்தான் மணப்பேன் என்று சபதம் செய்கிறான். தியாகச்சுடர் நண்பன் காதலியை மணந்து, அவளைக் கொடுமைப்படுத்தி, அவள் விவாகரத்து வாங்கி, காதலனை மணந்து, சுபம்! இதெல்லாம் எப்டியம்மா யோசிக்கறீங்க?

மிச்ச நாவல்களும் தண்டம்தான், ஆனால் நாளை மறந்து போய் ஒரு நப்பாசையில் படித்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்த பாரா.

அவளுக்கும் அமுதென்று பேர் என்ற குறுநாவலில் பதின்ம வயதுப் பையன் காதல் நிராகரிக்கப்படுவதால் கொலையே செய்கிறான். ஏன் எப்படி என்று குறுநாவலில் பதினாறு வயதுப் பெண்ணுக்கு சக்தியை மீறி கல்யாணம் செய்தால், பத்து நாளில் மாப்பிள்ளை வீட்டார் அவளைக் கொன்றுவிடுகிறார்கள். என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில் தன் தோழியிடம் அவள் காதலனை மயக்குவேன் என்று பந்தயம் கட்டும் தோழி. என்று புதிதாய் பிறப்போம் என்ற நாவலில் விவாகரத்தான கணவன் மனைவி நடுவில் மாட்டிக் கொள்ளும் சிறுவன். கனகாம்பரம் குறுநாவலில் உடலுறவைத் தவிர்க்க வேண்டிய பெண்ணை ஏமாற்றி ஒருவன் தலையில் கட்ட அவன் அவளை சேர்த்துக் கொள்கிறான். காதல் போயின் நாவலில் அழகுத் திமிரில் இருக்கும் பெண்ணுக்கு அம்மை போட்டு திருந்துகிறாள். கீதமடி நீ எனக்கு என்ற நாவலில் அழகான குடும்பம் இருந்தும் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்படும் கணவன். கண் சிமிட்டும் மின்மினிகள் என்ற நாவலில் அழகான, பணக்காரக் குடும்பத்தில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஏங்கும் இளம் பெண். மணல் வீடுகள் வாடகைத்தாய்க்கும் கணவனுக்கும் நடுவில் காதல் என்ற கரு. நினைவே இல்லையா நித்யா மில்ஸ் அண்ட் பூன் காதல் கதை. அந்தத் தரத்துக்கு நல்ல கதை. ஓடும் மேகங்களே என்ற நாவலில் காதலனோடு மனைவியை இணைத்து வைக்கும் கணவன். பறப்பதற்கு முன் கொஞ்சம் என்ற நாவலில் மறுமணம் செய்து கொள்ளும் தாய். தூண்டில் மீன்கள் என்ற நாவலில் மனைவியை ஏமாற்றி இன்னொருத்தியையும் மணம் செய்து கொள்ளும் ஒருவன்; அடுத்த பெண்ணைத் தேடும்போது இந்த இரு பெண்களும் அவனைப் பிரிந்து குடும்பமாக வாழ்கிறார்கள். துள்ளுவதோ இளமை என்ற நாவலில் பிறந்த வீட்டில் அன்பு கிடைக்காத பெண் புகுந்த வீட்டின் பழக்கங்களை ஏற்க சிரமப்படுகிறாள். வீணையில் உறங்கும் ராகங்கள் குறுநாவலில் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் ஏமாற்றப்பட்டு திரும்பி வரும்போது அப்பாவும் தங்கையும் அவளை சுலபமாக ஏற்றுக் கொள்கிறார்கள். விரல்களை மீட்டும் வீணை குறுநாவலில் விவாகரத்தான மனைவிக்கு மறுமணம் ஆன பிறகு முதல் கணவன் தன் குழந்தைக்குப் போராடுகிறான். விரலோடு வீணை குறுநாவலில் ஏழைப் பெண், பணக்காரக் கதாநாயகன், அத்தை பெண்ணோடு கல்யாணம். அசோகவனம், நெஞ்சின் நெருப்பு, நிறங்கள், நிழல்கள் சுடுவதில்லை, ஒரு நிமிடம் தா, பூ மலரும், திசை தேடும், விஷம் மாதிரி குறுநாவல்களெல்லாம் ஒரு வரி கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்குக் கூட வொர்த் கிடையாது, மகா தண்டம்.

த.இ. விமானங்களைத் தவிர்த்த இந்துமதியை முழுமையாக நிராகரிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து, தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

லக்ஷ்மி

லக்ஷ்மி ஒரு காலத்தில் ஸ்டார் எழுத்தாளர். ஒரு பத்து வருஷங்களாவது பெண்களின் மன நிலையை உண்மையாக எழுத்தில் கொண்டு வந்தார். அவரும் ஒரு சிம்பிள் ஃபார்முலாவை பயன்படுத்தினார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்” – இந்த ஃபார்முலாவை அவர் ஐம்பதுகளின், அறுபதுகளின் மத்திய தர வர்க்க, வேலைக்கு போக ஆரம்பித்த பெண்களின் மனம் கவரும் வண்ணம் சித்தரித்தார். அவரும் சில சமயம் புரட்சி செய்து கல்யாணம் ஆகாதபோதும் இன்னல் வரும் (ஆனால் பழையபடி தீரும்) என்று ஃபார்முலாவை மாற்றுவார், அதுவே அவருக்கு அதிகபட்சம். ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்தார் என்பதற்கு மேல் அவரைப் பற்றி சொல்ல எதுவுமே இல்லை. அவர் நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய (வணிக) எழுத்தாளர் இல்லை.

ஒரு காவிரியைப் போல என்ற நாவலுக்கு சாஹித்திய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகத்துக்கு விருது கொடுத்து தமிழ் இலக்கியத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, பெண் மனம் போன்ற புத்தகங்கள் அவர் எழுதியவற்றில் சிறந்தவை என்று சொல்லலாம். ஆனால் அவை எல்லாமே வீண்தான். அவருடைய எழுத்துகளை 2009-இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது, ஆனால் அவரது வாரிசுகள் இதை மறுத்துவிட்டார்கள். (இன்னும் புத்தகங்கள் விற்று நல்ல ராயல்டி வருகிறது போலும்!)

ஜெயமோகன் அவரது காஞ்சனையின் கனவு, அரக்கு மாளிகை ஆகியவற்றை தன் பரப்பிலக்கிய லிஸ்டில் சேர்த்திருக்கிறார். இந்தப் பதிவையே ஜெயமோகன் சொன்னார் என்பதால் “அரக்கு மாளிகை” பற்றி எழுதலாம் என்றுதான் ஆரம்பித்தேன். ஜெயமோகன் தனது seminal பட்டியலில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு நாவலையும் பற்றி நாலு வரி எழுத வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை. ஆனால் என் கண்ணில் அவ்வளவு worth இல்லை. எண்ணி நாலே நாலு வரிதான் எழுத முடியும். அதனால் இதை லக்ஷ்மியைப் பற்றிய பதிவாக மாற்றிவிட்டேன்.

ஒரே ஒரு புத்தகம் படிக்க வேண்டுமென்றால் ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகை, இருவர் உள்ளம் திரைப்படமாக வந்த பெண் மனம், மிதிலாவிலாஸ், ஸ்ரீமதி மைதிலி, மிதிலாவிலாஸ் இவற்றில் ஏதாவது ஒன்றைப் படிக்கலாம்.

ஜெயமோகன் பரிந்துரைக்கும் அரக்கு மாளிகையில் வழக்கமான நாயகி. தாத்தா அவுட். பணக்கார பெரியப்பாவுக்கு அவளை வீட்டில் வைத்துக் கொள்ள இஷ்டமில்லை. வேலைக்குப் போன இடத்தில் முதலாளியம்மாவின் கணவன் அசடு வழிகிறான். அதாவது வழக்கமான பிரச்சினைகள். இன்னொரு வீட்டில் governess மாதிரி ஒரு வேலை. அங்கே வழக்கமான அழகான இளைஞனோடு வழக்கமான காதல். சதி செய்யும் அவன் சித்தி. இதற்கு மேலும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?

பெண் மனம்: ஏழைப் பெண் சந்திராவை தன் பண பலத்தால் ஜகன்னாதன் மணக்கிறான். அவள் தன்னை விரும்பவில்லை என்று தெரியும்போது ஒதுங்கிப் போக பார்க்கிறான். கடைசியில் இருவரும் இணைகிறார்கள். “உங்களுக்கு என் உடல்தானே வேண்டும்? எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் என் உள்ளம் கிடைக்காது” என்று சந்திரா முதல் இரவில் சொல்வது அந்நாளில் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. சிவாஜி, சரோஜாதேவி, எஸ்.வி. ரங்காராவ், எம்.ஆர். ராதா நடித்து கருணாநிதி வசனத்தில் இருவர் உள்ளம் என்று சினிமாவாகவும் வந்தது.

ஒரு காவிரியைப் போல: இந்த முறை தென்னாப்பிரிக்கப் பெண். அவளுக்குப் பல இன்னல்கள். கடைசியில் காதல் நிறைவேறுகிறது. இதற்கெல்லாம் சாகித்ய அகாடமி பரிசா?

மிதிலாவிலாஸ்: மாமன் வீட்டில் வளரும் தேவகி ஏறக்குறைய வேலைக்காரிதான். அவளுக்கு மாமன் மகன் ஈஸ்வரன் மேல் ஈர்ப்பு, ஈஸ்வரனோ கிரிஜா பின்னால். தேவகியின் நல்ல குணம் எல்லார் மனதையும் மாற்றி, பிறகென்ன, சுபம்! சரளமாகப் போகும் நாவல், எந்த வித முடிச்சும் இல்லாவிட்டாலும் படிக்க முடிகிறது.

ஸ்ரீமதி மைதிலி அவரது வழக்கமான கதைதான். மைதிலியை அடக்கி ஆளும் எல்லாரும் கடைசியில் மைதிலியிடம் உதவி பெறுகிறார்கள்.

அவருடைய இன்னும் சில புத்தகங்கள் பற்றி:

அத்தை: அந்தக் காலத்து தொடர்கதை ஃபார்மட்டுக்கு நன்றாகவே பொருந்தி வரும்.இந்த முறை பணக்கார அண்ணனை எதிர்த்து ஏழையை மணக்கும் பத்தினிக்கு பல இன்னல்கள்.

நாயக்கர் மக்கள்: பெரிதாக சொல்ல ஒன்றுமில்லை. நாயக்கரின் மகன் அவரது எதிரியின் பெண்ணை காதலிக்கிறான். நாயக்கரின் மகளும் மாப்பிள்ளையும் சேராமல் இருக்க மாப்பிள்ளையை ஒரு தலையாக காதலித்த பெண் சூழ்ச்சி செய்கிறாள். கோர்வையாக இருக்கிறது, தொடர்கதை ஃபார்மட்டுக்கு பொருந்தி வரும், அவ்வளவுதான்.

பண்ணையார் மகள்: பண்ணையாரும் மனைவியும் பிரிகிறார்கள். மகள் ஏழ்மையில் வளர்கிறாள், அப்பா பெரிய பண்ணையார் என்றே தெரியாது. அம்மா இறக்க, பெண் சொத்துக்கு வாரிசாக, மானேஜர் சொத்தை ஆட்டையைப் போடப் பார்க்க… இதற்கு மேல் கதையை யூகிக்க மாட்டீர்களா என்ன? தொடர்கதை ஃபார்மட்டுக்கு ஐம்பது அறுபதுகளில் பொருந்தி வந்திருக்கும், அவ்வளவுதான்.

சூரியகாந்தம்/strong> வழக்கமான அவரது நாவல்தான், இருந்தாலும் வந்த காலத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும். இந்த முறை கஷ்டப்பட்டு வளர்க்கும் அத்தையை வில்லியின் மயக்கத்தில் எதிர்த்துப் பேசிவிட்டு திருந்தும் மருமகன். அவனுக்கு ஊனமுற்ற ஒரு முறைப்பெண், சதி செய்யும் மாற்றாந்தாய் என்று வழக்கமான பாத்திரங்கள்.

அவள் ஒரு தென்றல், ஜெயந்தி வந்தாள், கை மாறியபோது, கூறாமல் சன்யாசம், குருவிக்கூடு, மோகனா மோகனா, மோகினி வந்தாள், நீதிக்கு கைகள் நீளம், நிகழ்ந்த கதைகள், ராதாவின் திருமணம், சீறினாள் சித்ரா, உறவு சொல்லிக் கொண்டு, உயர்வு, வசந்தத்தில் ஒரு நாள், வேலியோரத்தில் ஒரு மலர், விடியாத இரவு போன்ற குறுநாவல்களையும் சமீபத்தில் படித்தேன். இவையெல்லாம் இன்று தண்டமாகத தெரிந்தாலும் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கங்கையும் வந்தாள்: ஹீரோவை ஏமாற்றும் ஹீரோயினின் அப்பா. ஹீரோ-ஹீரோயினுக்கும் தமிழ் நாவல் வழக்கப்படி காதல், ஆனால் வெளியே சொல்லவில்லை. அப்பாவை பழிவாங்க ஹீரோயினை மணந்து பிறகு தள்ளி வைக்கிறான். குழந்தை. குழந்தை முகம் பார்த்து அவன் மனம் மாறுகிறது. சுத்த வேஸ்ட்.

காஷ்மீர் கத்தி: தவறான முறையில் பிறந்த பையன் குப்பத்தில் வளர்கிறான், அவனது பிரச்சினைகள். படிக்கலாம்.

கூண்டுக்குள்ளே ஒரு பச்சைக்கிளி: வேஸ்ட். பெரிய மனிதர் தேவநாதன் உண்மையில் குரூரமானவர். தன்னை மணந்து கொள்ள மறுக்கும் இளம் பெண்+காதலனை உயிரோடு ஒரு அறையில் பூட்டிவிடுகிறார். ஆனால் வேலைக்காரன் வைரவன் தப்ப வைக்கிறான்.

முருகன் சிரித்தான்: பணக்கார, திமிர் பிடித்த டாக்டர் கணவன், மாமியார்; விவாகரத்து வரை விஷயம் போய்விடுகிறது. தற்செயலாக ஒரு விபத்து ஏற்பட, குடும்பம் இணைகிறது. வேஸ்ட்.

ரோஜா வைரம்: வேஸ்ட் என்ற ஒரு வார்த்தைக்கு மேல் இதைப் பற்றி எழுதும் எதுவும் வேஸ்ட். For the record, தென்னாப்பிரிக்காவில் வைர வியாபாரம் செய்ய முயற்சிக்கும் ஒரு குடும்பம்.

உயிரே ஓடி வா: இன்னொரு வேஸ்ட். பணக்காரப் பெண் ரேவதியை அவள் எழுதிய காதல் கடிதங்களை வைத்து முகுந்தன் ப்ளாக்மெயில் செய்கிறான். ரேவதியை மனம் செய்து கொள்ளப்போகும் சிவகுருவும், சிவகுருவின் அம்மாவும் அவனை பரவாயில்லை போ என்று துரத்துகிறார்கள்.

வீரத்தேவன் கோட்டை: தண்டம். இரண்டு குடும்பங்கள் எதிரிகள், வழக்கம் போல வாரிசுகளிடம் காதல், அப்புறம்தான் தெரிகிறது காதலன் வீரத்தேவன் எதிரி குடும்பத்தில் பிறந்து இங்கே வளர்கிறான் என்று.

விசித்திரப் பெண்கள்: சிறுகதைத் தொகுப்பு. எதுவும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை இல்லை. ஆனால் மொத்தமாகப் படிக்கும்போது பழைய விகடன்/கல்கி/கலைமகள் இதழ்களைப் புரட்டுவது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

அவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே.


சேதுராமன் தரும் புதிய தகவல்: “அண்மையில் லக்ஷ்மியின் சகோதரர் திரு. ராகவனுடனும், மருமகள் திருமதி மகேஸ்வரனிடமும் பேசினேன். லக்ஷ்மியின் வாரிசுகள் தமிழ் நாடு அரசின் நாட்டுடைமைக்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்”.

சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)

சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.

தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.

முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:

ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.

டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.

1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.

பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. பெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.

லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:

வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”

சொல்லும்போதே திருமதி பட்டம்மாள் வாசனின் குரல் தழுதழுத்துக் கண்கள் பனித்தன.

லக்ஷ்மியின் படைப்புகள் வருமாறு:
அழகின் ஆராதனை — அவள் தாயாகிறாள் — அசோகமரம் பூக்கவில்லை — அடுத்த வீடு — அரக்கு மாளிகை — அதிசய ராகம் — அத்தை — அவளுக்கென்று ஒரு இடம் — அவள் ஒரு தென்றல் — இரண்டாவது மலர் — இவளா என் மகள் — இரண்டு பெண்கள் — இரண்டாவது தேனிலவு — இனிய உணர்வே என்னைக் கொல்லாதே — இருளில் தொலைந்த உண்மை – இன்றும் நாளையும் – உறவுகள் பிரிவதில்லை — உயர்வு — உறவின் குரல் — ஊன்றுகோல் — என் வீடு — என் மனைவி — ஒரு காவிரியைப் போல (சாகித்திய அகாதெமி பரிசு 1984) — ஒரு சிவப்பு பச்சையாகிறது

கடைசி வரை — கங்கையும் வந்தாள் — கதவு திறந்தால் — கதாசிரியையின் கதை (இரண்டு பாகங்கள்) — கழுத்தில் விழுந்த மாலை — கணவன் அமைவதெல்லாம் — காஷ்மீர் கத்தி — காளியின் கண்கள் — கூறாமல் சன்னியாசம் — கூண்டுக்குள்ளே ஒரு பைங்கிளி — கை மாறிய போது — கோடை மேகங்கள் — சசியின் கடிதங்கள் — திரும்பிப் பார்த்தால் — துணை — தை பிறக்கட்டும் — தோட்டத்து வீடு — நதி மூலம் — நல்லதோர் வீணை — நாயக்கர் மக்கள் — நிற்க நேரமில்லை – நியாயங்கள் மாறும்போது — நிகழ்ந்த கதைகள் — நீலப்புடைவை — நீதிக்குக் கைகள் நீளம் — பண்ணையார் மகள் – பவளமல்லி — பவானி (முதல் நாவல்) — புனிதா ஒரு புதிர் — புதை மணல் — பெயர் சொல்ல மாட்டேன் — பெண் மனம் (தமிழ் நாடு அரசு பரிசு) — பெண்ணின் பரிசு — மரகதம் — மனம் ஒரு ரங்க ராட்டினம் — மண் குதிரை — மருமகள் — மறுபடியுமா? — மாயமான் — மீண்டும் வசந்தம் – மீண்டும் ஒரு சீதை — மீண்டும் பிறந்தால் — மீண்டும் பெண் மனம் – முருகன் சிரித்தான் — மோகத்திரை

ராதாவின் திருமணம் — ராம ராஜ்யம் — ரோஜா வைரம் — வனிதா — வசந்திக்கு வந்த ஆசை — வடக்கே ஒரு சந்திப்பு — வாழ நினைத்தால் — வீரத்தேவன் கோட்டை — வெளிச்சம் வந்தது — ஜெயந்தி வந்தாள் — ஸ்ரீமதி மைதிலி

தகவல் ஆதாரம்:
1. தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
2. லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
3. ஆனந்த விகடன் கட்டுரை (11-3-2009)
4. வலைத்தளக் கட்டுரைகள்


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
காஞ்சனையின் கனவு

இந்துமதியின் “தரையில் இறங்கும் விமானங்கள்”

சின்ன வயதில் விரும்பிப் படித்த நாவல். இப்போதும் பிடித்திருக்கிறது. விஸ்வத்தின் நிலையில் என்னை பொருத்தி வைத்துப் பார்த்துக் கொள்ள முடிவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

அனேகமாக என் ஜெனரேஷன்காரர்கள் அனைவரும் படித்த நாவல். விகடனில் தொடர்கதையாக வந்தது என்று நினைக்கிறேன். பைண்ட் செய்யப்பட்ட புத்தகமாகத்தான் முதல் முறை படித்தேன்.

கதைச்சுருக்கம் எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். கீழ் மத்தியதரக் குடும்பங்கள் எல்லாவற்றிலும், அதுவும் பிராமணக் குடும்பங்களில் எழுபதுகளில் இருந்த சூழ்நிலை நன்றாக வந்திருக்கிறது. பரசு பெண் பார்க்கப் போகும்போது ருக்மணி வீட்டில் இரண்டு அறைதான் என்று வரும். அப்படித்தான் எக்கச்சக்க ஒண்டுக் குடித்தன வீடுகள் இருந்தன. இருநூறு சதுர அடியில் இரண்டு அறை, பொதுவான குளியலறை, கிணறு என்று சென்னையில் எக்கச்சக்க குடும்பங்கள் வாசித்தன. இன்ஜெக்ஷன் பாட்டில் தேர், எம்ப்ராய்டரி செய்யும் வயதுப் பெண்கள், ட்ரான்சிஸ்டர், அங்கும் இங்குமாக ஹக்ஸ்லி, சார்த்ரே என்று பேசிக் கொண்டு யு.எஸ்.ஐ.எஸ்., பிரிட்டிஷ் கவுன்சில் என்று போய் வரும் சில இளைஞர்கள், குடும்ப பாரத்தை சுமக்கும் இருபத்து சொச்சம் வயதினர், ரிடையர் ஆன தாத்தாக்கள், என்று தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறார்.

கதையில் பல மனதைத் தொடும் இடங்கள் உண்டு. அவற்றின் சாதாரணத் தன்மையாலேயே, அடிக்கடி நடப்பதால் பழகிவிடுவதாலேயே, அவை மனதைத் தொடுகின்றன. மேலே படிக்க விரும்பும் பரசுவை டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ளச் சொல்லும் அப்பா, தங்கை தம்பிகள் பாரம் சுமப்பதை முடிந்த வரைக்கும் தள்ளிப் போடப் பார்க்கும் பரசு இரண்டும் குறிப்பாகச் சொல்லக் கூடியவை. பரசுவை அடைய தனக்கு தகுதி இல்லை என்று ருக்மணி மருகுவது சாதாரணம் இல்லை என்றாலும் மனதைத் தொடுகிறது.

பலவீனங்கள்? இந்துமதிக்கு வெள்ளைத் தோல், உயரம், அழகு இதிலெல்லாம் இருக்கும் obsession அலுப்பைத் தருகிறது. அவரது எல்லா ஹீரோக்களும் வெள்ளையாக உயரமாக இருப்பதும் எல்லா ஹீரோயின்களும் ஏதோ தேவலோகத்திலிருந்து அழுக்குப் படியாமல் வந்து போவதும்… இந்த வர்ணனையைப் பார்க்கும்போதெல்லாம் கிளம்பிட்டாய்யா கிளம்பிட்டா என்று தோன்றுகிறது. கடைசியில் எல்லாரும் அவ்வளவு தெளிவாக பல நாள் யோசித்து எழுதி வைத்ததைப் படிப்பது போல பேசுவது படிக்க நன்றாக இருந்தாலும் ரியலிஸ்டிக்காக இல்லை.

ஜெயமோகன் இதை சிறந்த வணிக எழுத்து என்று பட்டியல் இடுகிறார். குறை எல்லாம் சொன்னாலும் எனக்கு இது வணிக எழுத்து இல்லை, இலக்கியம். கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

இந்துமதி ஒரு காலத்தில் பிரபல வாரப் பத்திரிகை எழுத்தாளர். லக்ஷ்மி, சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி என்று பெண்களுக்காக பெண்கள் வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதும் பாரம்பரியத்தை சேர்ந்தவர். எல்லா கதையிலும் ஹீரோ வெள்ளை வெளேரென்று உயரமாக ரிம்லெஸ் கண்ணாடியோடு வருவான். அப்படி என்னையும் நினைத்துக் கொள்ள ஒரு காலத்தில் பிடித்திருந்தது. 🙂 த. இ. விமானங்கள் ஒன்றுதான் அவர் பேரைக் காப்பாற்றும் என்று நினைக்கிறேன்.

நண்பர் விமல் மின் புத்தகத்துக்கான சுட்டியைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி! (காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்)

அனுபந்தம் – படித்த பிற கதைகள்

படித்த வேறு சில கதைகளைப் பற்றி எழுத இனி மேல் கை வராது, அதனால் இங்கேயே எழுதிவிடுகிறேன்.

இன்று புதிதாய் பிறப்போம்: அழகான அம்மா மேல் சந்தேகப்பட்டு விவாகரத்து வாங்கும் அப்பா; நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கும் எட்டு வயது பையன். பையனின் கண்ணோட்டத்தை நன்றாகவே எழுதி இருக்கிறார்.

நிழல்கள் சுடுவதில்லை: டிபிகல் தொடர்கதை. ஹரிணிக்கு நேசமான எல்லாரும் இறக்கிறார்கள். காதலிக்கும் தீரேந்தருக்கும் கான்சர். இன்னும் மூன்று மாதம் இருக்கிறதே, உன்னை மணந்து கொள்கிறேன் என்கிறாள் ஹரிணி.

தொடுவான மனிதர்கள்: கஷ்டப்படும் குடும்பத்தின் மூத்த பெண். அவளுக்கும் ராம்குமாருக்கும் காதல். ராம் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறான். அவளை காதலிக்கும் கார்த்திக்குக்கு இப்போது டூ லேட், சொல்ல முடியவில்லை. ஆனால் ராம் விபத்தில் இறந்துவிட கார்த்திக்குக்கு ஒரு சான்ஸ் கிடைக்கிறது. கார்த்திக் கஷ்டம், உதவி வேண்டும் என்று கேட்டால்தான் உதவி செய்யும் டைப், ராம் மாதிரி இல்லை. அதனால் இவள் நீ வீண்டாம் என்று கார்த்திக்கிடம் சொல்ல, கார்த்திக் நீ உன் காலில் நிற்பதையே விரும்புகிறேன், நீ independent ஆக இருக்க வேண்டும், ஆனால் தேவைப்படும்போது உதவிக்கு நான் எப்போதும் உண்டு என்று சொல்கிறான். அதை அவளும் யோசித்து ஏற்றுக் கொள்கிறாள். நல்ல தீம், ஆனால் கதை சுமாராகத்தான் வந்திருக்கிறது.

விஷம்: சிறு வயதிலிருந்து காதலிக்கும் பெண்ணை கெடுத்தவனை கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போகிறான் ஹீரோ. வேஸ்ட்.

யார்?: இந்துமதி த்ரில்லர் எழுதிப் பார்த்திருக்கிறார். தண்டம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்

எழுத்தாளர் அனுத்தமா மறைவு

என்னைப் பொறுத்த வரையில் ஒரு எழுத்தாளருக்கு ஆபிச்சுவரி என்றால் அவரது எழுத்துகளை அலசுவதுதான். அனுத்தமாவின் புத்தகங்களை நான் படித்ததில்லை, அதனால் விட்டுவிட வேண்டியதுதான் என்று நினைத்தேன். அவரது ஒரு பேட்டியையும் அவர் புத்தகங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தையும் பதிவு செய்து வைப்போமே என்றுதான் இந்த பதிவை எழுதுகிறேன்.

அனுத்தமா, சமீபத்தில் மறைந்த ஆர். சூடாமணி போன்றவர்களை கலைமகள் எழுத்தாளர்கள் என்று சொல்லலாம். அவர்கள் உலகம் குடும்பப் பெண்களின் உலகம். பெண்களின் மன உளைச்சல்களைப் பற்றியே அதிகம் எழுதுவார்கள். அதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது.

தன் தோழி ஆர். சூடாமணியைப் பற்றி அனுத்தமாவே நினைவு கூர்ந்தார், அதை இங்கே படிக்கலாம்.

சிறந்த ஆபிச்சுவரி என்றால் அது ஜெயமோகன் எழுதியதுதான். திருப்பூர் கிருஷ்ணன் கல்கியில் எழுதிய அஞ்சலியை உப்பிலி ஸ்ரீனிவாஸ் தன் தளத்தில் பதித்திருக்கிறார்.

ஹிந்து பத்திரிகையில் அவரைப் பற்றி இரண்டு கட்டுரைகள் வந்திருக்கின்றன, அவற்றை இங்கே மற்றும் இங்கே படிக்கலாம். முதல் கட்டுரை அவரை எடுத்த ஒரு பேட்டி. இரண்டாவது கட்டுரையில் அவரது சில புத்தகங்கள் பற்றி எழுதப்பட்டிருகிறது.

300 சிறுகதைகள், 21 நாவல்களை எழுதி இருக்கிறாராம். என்றாவது அவரது கேட்ட வரம் மட்டுமாவது நாவலைப் படிக்க வேண்டும். ஜெயமோகன் அதை சிறந்த social romance-களில் ஒன்றாக குறிப்பிடுகிறார்.

ஆர். சூடாமணி

நண்பர் விஜயன் பெண் எழுத்தாளர் ஆர். சூடாமணியைப் பற்றி எழுதலாமே என்று கேட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக நான் சூடாமணியின் இரண்டு கதைகளை மட்டுமே படித்திருக்கிறேன். ஒன்று இணைப்பறவை (நல்ல சிறுகதை), இன்னொன்று பூமாலை. அந்தக் கதைகளை வைத்து அவர் கொஞ்சம் பழைய காலத்து எழுத்தாளர், கலைமகள், பழைய கல்கி, விகடன் பத்திரிகைகளில் எழுதக் கூடியவர், குமுதத்தில் கூட அவர் கதைகள் வராது என்று யூகிக்க முடிந்தது. பெரிதாக ஒன்றும் எழுத முடியவில்லை.

ஜெயமோகன் அவரது டாக்டரம்மா அறை சிறுகதையையும் தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். எஸ்.ரா. அவரது அன்னியர்கள் சிறுகதையை தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக குறிப்பிடுகிறார். சரி இது இரண்டும் நெட்டில் கிடைக்குமா என்று தேடினேன். பத்து நாளைக்கு முன்தான் அவர் இறந்து போனார் என்று தெரிய வந்தது. வருத்தமாக இருக்கிறது.

எழுத்தாளர் பா. ராகவன் அவருக்கு ஒரு நல்ல அஞ்சலி எழுதி இருக்கிறார். அம்பை சூடாமணியைப் பற்றி இங்கே நினைவு கூர்கிறார். எழுத்தாளர் அனுத்தமா தன் தோழி சூடாமணியைப் பற்றி இங்கே எழுதுகிறார். பேராசிரியை எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி இங்கே. நண்பர் ஜீவி சூடாமணியைப் பற்றி ஒரு அருமையான அறிமுகத்தை எழுதி இருக்கிறார். எழுத்தாளர் பாவண்ணன் அவரது ரயில் என்ற சிறுகதையை இங்கே அலசுகிறார்.

சூடாமணி 10.01.1931-இல் சென்னையில் பிறந்தாராம். கிட்டத்தட்ட எண்பது வயதில் இறந்திருக்கிறார். பாட்டி ரங்கநாயகி அம்மாள், சகோதரி ருக்மணி பார்த்தசாரதி ஆகியோரும் எழுத்தாளர்களாம். இளம் வயதிலேயே அம்மை நோயால் தாக்கப்பட்டு வளர்ச்சி குன்றியதாம். பள்ளிக்கல்வி நிறைவு செய்யவில்லை. 1954 முதல் தமிழில் சிறுகதைகள் எழுதி வருகிறாராம். 1957-இல் அவரது முதல் சிறுகதையான காவேரி கலைமகள் வெள்ளி விழாப் பரிசை வென்றது. 1959-இல் மனதுக்கு இனியவள் என்ற நாவலுக்கு கலைமகள் ஸ்ரீ நாராயணஸ்வாமி ஐயர் விருது கிடைத்திருக்கிறது. 1961-இல் இருவர் கண்டனர் என்ற நாடகம் ஆனந்த விகடன் நாடகப் போட்டியில் இரண்டாம் பரிசு வென்றிருக்கிறது. இலக்கியச் சிந்தனை ஆண்டு விருதை தமது நான்காவது ஆசிரமம் என்ற சிறுகதைக்காகப் பெற்றார். 2001-இல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது. 2009-இல் கலைஞர் பொற்கிழி விருது வென்றிருக்கிறார். அது பற்றி திண்ணை தளத்தில் வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார் –

ஐந்தாம் விருது ஆர். சூடாமணி அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர் கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன உளைச்சல்கள். நான் படித்த வரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள் அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும் இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர். சூடாமணியைப் பற்றி என்ன கவலை? அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம்தான்.

பிற்சேர்க்கை: நண்பர் விஜயன் எழுத்தாளரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான திலகவதி குமுதத்தில் எழுதி இருக்கும் அஞ்சலியைப் பற்றி சொல்லி இருக்கிறார். அங்கே அவரது ஃபோட்டோ ஒன்றும் கிடைத்தது. திலகவதியின் வார்த்தைகளில்:

ஆர்.சூடாமணி அமைதியானவர். அவரது அப்பா ஒரு ஐ.சி.எஸ். அதிகாரி. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் வேலை பார்த்தவர். இவரது வீடும் பிரிட்டீஷ் காலத்தில் உறைந்துவிட்ட வீடு மாதிரி இருக்கும். வீட்டில் ஒவ்வொரு பகுதியும் அவ்வளவு சுத்தமாக இருக்கும். அந்தக் காலத்து மர அலமாரிகள். அதில் 50 ஆண்டுகளுக்கு முந்தைய புத்தகங்கள். சமீப காலங்களில் வந்த ஒரு புத்தகத்தைக்கூட அதில் பார்க்க முடியாது. அவர் வைத்திருந்த கார் கூட அந்தக் காலத்து மாடல்.

அவரது இயல்புகளில் மறக்கமுடியாதது, பார்வையற்றவர்களுக்கென்று நேரம் ஒதுக்கி தான் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கும் படித்துக் காட்டுவார்.

வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்.

நன்றி, குமுதம்!

யாரிடமாவது ஏதாவது புஸ்தகம் இருந்தால் இரவல் கொடுங்கப்பு!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
சூடாமணி பற்றி ஜெயமோகன்
விக்கி குறிப்பு
பா.ரா.வின் அஞ்சலி
சூடாமணியைப் பற்றி அம்பை
சூடாமணியைப் பற்றி அனுத்தமா
எம்.ஏ. சுசீலாவின் அஞ்சலி
சூடாமணி பற்றி பிரபஞ்சன்
ஜீவியின் அறிமுகம்
விமலா ரமணியின் அஞ்சலி
பாவண்ணன் ரயில் சிறுகதையை அலசுகிறார்
சூடாமணி கதைகளைப் பற்றி கோபி ராமமூர்த்தி
அழியாச்சுடர்கள் தளத்தில் இரண்டு சிறுகதைகள் – இணைப்பறவை, பூமாலை

அனுராதா ரமணன்

ஜெயகாந்தனைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருந்தாலும், வாரப் பத்திரிகையில் எழுதி புகழ் பெற்றவர்களைப் பற்றி கொஞ்ச நாளைக்கு ட்ராக்கை மாற்றப் போகிறேன்.

அனுராதா ரமணன் ஓரளவு பாப்புலரான, குறிப்பாக பெண்களிடம் பாப்புலரான எழுத்தாளர். சில மாதங்களுக்கு முன் அவரது மறைவு செய்தியை படித்தபோது அவருக்கு ஆபிச்சுவரி எழுத வேண்டுமென்று நினைத்தேன். என்னைப் பொறுத்த வரையில் ஒரு எழுத்தாளருக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி பேசுவதுதான். ஆனால் அனுராதா ரமணனை வாரப்பத்திரிகைகளில் இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால் ஏதோ போகிற போக்கில் படித்ததுதான். எதுவும் சரியாக நினைவில்லை. அவரது புத்தகங்களை கொஞ்சமாவது படித்த பின்தான் அஞ்சலி என்று ஒன்று எழுதுவது என்று நினைத்திருந்தேன். என் அதிர்ஷ்டமோ, துரதிருஷ்டமோ சில புத்தகங்களும் கிடைத்தன.

அ. ரமணன் லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, ரமணி சந்திரன் என்று பெண்களுக்காக பெண் எழுத்தாளர்கள் எழுதும் ஒரு நீண்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர். பொதுவாக இந்த மாதிரி எழுத்தாளர்களை நான் படிக்க விரும்புவதில்லை. 🙂 லக்ஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி ஆகியோரைத்தான் ஓரளவாவது படித்திருக்கிறேன். லக்ஷ்மியின் கதைகள் எல்லாம் பத்து பனிரண்டு வயதிலேயே அலுத்துவிட்டன. இந்துமதியின் எல்லா கதைகளிலும் வரும் வெள்ளை வெளேர், உயரமான, ரிம் இல்லாத கண்ணாடி ஹீரோவாக என்னை நினைத்துக் கொள்ள டீனேஜ் பருவத்தில் பிடித்திருந்தது. ஆனால் நானோ கறுப்பு, குள்ளம், டீனேஜில் கண்ணாடி தேவை இல்லை. எத்தனை நாள்தான் இந்த கனவை காணமுடியும்? தரையில் இறங்கும் விமானங்கள் என்ற ஒரு நாவல் மட்டும் மிகவும் பிடித்திருந்தது. வாசந்தியின் எல்லா நாவல்களிலும் ஓ என்று யாராவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கொஞ்ச நாளில் வாஸந்தி என்றால் “ஓ!” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட ஆரம்பித்தேன். அவர் மிஜோரத்தின் பின்னணியில் எழுதிய ஒரு கதை மட்டும் இன்னும் நினைவிருக்கிறது, நன்றாகவும் இருந்தது. பேர் நினைவு வரவில்லை. சிவசங்கரி என்றால் அப்போதே ஒரு aversion. சிவசங்கரியை விழுந்து விழுந்து படிக்கும் அக்கம்பக்கத்து பெண்களிடம் ஜொள்ளு விட மட்டுமே படித்தேன். அதுவும் விகடனில் ஒரு தொடர்கதை வந்தது. அதில் அருண் என்று “ரொம்ப நல்லவரு” ஒருவன் வருவான். இவன் காதலிக்கும் பெண்ணை இவன் உயிர் நண்பன் மணந்துகொள்வான். முன்னாள் காதலிக்கும் உயிர் நண்பனுக்கும் உதவி செய்துகொண்டே போவான். அவனை எங்காவது பார்த்தால் இரண்டு அறை விடவேண்டும் போல இருக்கும். ஆனால் அவனைத்தான் இந்த பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்ன செய்வது? இப்படி இந்த “பெண்” எழுத்தாளர்கள் வெறுத்துப் போய்க்கொண்டிருந்த காலத்தில்தான் அ. ரமணன் பிரபலமாகத் தொடங்கினார். அதனாலேயோ என்னவோதான் அவரை படிப்பதில் ஒரு ஆர்வமே ஏற்படவில்லை. ஆனால் இப்போது கூட படிக்காவிட்டால் எப்போதுமே படிக்கப் போவதில்லை. இந்தப் பதிவை எழுதவாவது அவரது நாலைந்து புத்தகங்களை படிக்க வேண்டுமே!

அனுராதா ரமணனின் “சிறை” அவரை புகழ் பெற வைத்தது. சிறை லக்ஷ்மி, ராஜேஷ் நடித்து பெரிய ஹிட்டான திரைப்படம். சினிமாவாக பார்த்ததால் கதை ஓரளவு நினைவிருக்கிறது. சினிமாவுக்கு எங்களை வற்புறுத்திக் கூட்டிக் கொண்டு போன ஸ்ரீதரை நாங்கள் எல்லாரும் அழுமூஞ்சி படத்துக்கு கூட்டிக் கொண்டு வந்தாயே என்று திட்டியதும் நினைவிருக்கிறது. ஆச்சாரமான பிராமண மனைவியை ஊர் ரவுடி கற்பழித்துவிடுகிறான். கணவன் கைவிட்டுவிடுகிறான். போக்கிடம் தெரியாமல் அந்த ரவுடியின் வீட்டுக்கு போய் அவனுடனேயே தங்குகிறாள். ரவுடிக்கு குற்ற உணர்வு, அவளுக்கு பாதுகாப்பாக (மட்டும்) இருக்கிறான். வருஷங்கள் போய் ரவுடியும் இறந்த பிறகு கணவன் மீண்டும் தன்னுடன் வாழ அழைக்க மனைவி மறுத்துவிடுகிறாள்.

அ. ரமணனின் சொந்த வாழ்க்கையைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. கணவனை இழந்தவர், இரண்டு குழந்தைகளை கஷ்டப்பட்டு வளர்த்தார், பெண்கள் வயதாகிவிட்டது என்று தன் தோற்றத்தில் அக்கறை இல்லாமல் இருக்கக் கூடாது என்று சொல்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயேந்திரர் தன்னுடன் தவறாக நடக்க முயன்றார் என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அது உண்மையோ, பொய்யோ, ஜெயேந்திரரின் இமேஜ் கெட்டதற்கு, நெருப்பில்லாமல் புகையாது என்று பலரும் நினைப்பதற்கு இவரும் ஒரு காரணம்.

விகடன் உதவி ஆசிரியர் ரவி பிரகாஷ் அவரை நன்கு அறிந்தவர் போலத் தெரிகிறது. அவரது அஞ்சலி இங்கே.

சில புத்தகங்களும், அவற்றைப் பற்றிய என் சிறு விமர்சனங்களும்:

முதல் காதல்: இதுதான் பெஸ்ட். கொஞ்சம் செயற்கையான மெலோட்ராமாதான். ஆனால் மெலோட்ராமாவைத் தாண்டி ஏதோ இருக்கிறது. ஆச்சாரமான சங்கீதக் குடும்பத்தில் பிறக்கும் ஹரி தன் வீட்டு “புழக்கடையை” சுத்தம் செய்யும் தோட்டிப் பெண் சின்னியின் சங்கீத ஞானத்தை கண்டு வியக்கிறான். அவளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறான். விஷயம் தெரிந்த ஆசாரசீலரான அப்பா அவனை அடிக்கிறார். சின்னியின் இசை முயற்சி அதோடு நின்றுவிடுகிறது. ஆனால் ஹரியின் பரம ரசிகையாக இருக்கிறாள். கடைசியில் இறந்தும் போகிறாள். ஹரியால் வருத்தப்படுவதைத் தவிர ப்ராக்டிகலாக ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் இறந்த நாளில் வருஷா வருஷம் அஞ்சலி செலுத்துகிறான்.

இன்னமும் படிக்கலாம்: வழக்கம் போல செயற்கையான சம்பவங்கள். ஆனால் படித்ததில் கொஞ்சம் சுமாரான நாவல். இரண்டு நண்பர்கள். ஒருவன் வீட்டுக்கு தெரியாமல் ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்கிறான். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று நண்பனை மனைவுக்கு காவல் வைத்துவிட்டு ஊருக்குப் போகிறான். அங்கே அவனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன. இவன் நழுவ முடியாமல் பேசாமல் இருக்கிறான். இதில் காவல்கார நண்பனுக்கு காதல் என்று கதை போகிறது.

ரகசிய ராகங்கள்: அவரது “பத்தினிக்கு இன்னல் வரும்” ஃபார்முலாவிளிருந்து கொஞ்சம் தள்ளி வந்திருக்கிறார். வாழ்ந்து கெட்ட குடும்பம். சின்னத் தங்கைக்காக கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் இரண்டு அக்காக்கள். தங்கை பெரியவளாகி அக்காக்களை அவர்கள் விரும்புபவர்களோடு சேர்த்து வைக்கிறாள். டைம் பாஸ்.

ஓவியம்: மிராசுதார் மகன் நந்து இன்பாவை விரும்புகிறான். திருமணத்துக்கு முன் இன்பா மிராசுதார் வீட்டுக்கு வந்து சில நாள் தங்குகிறாள். அங்கே மிராசுதாரின் “ஓடிப் போன” முதல் மனைவியின் ஆவி, அந்த முதல் மனைவியின் மரணம் பற்றிய ரகசியம் எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறாள். தவிர்க்கலாம்.

புருஷ சிகாமணிகள்: புருஷனைக் குறை சொல்லும் பெண்டாட்டிகள். வேஸ்ட்.

கனவு பிரதேசங்கள்: கல்லூரி மாணவிகளுக்கு போதை மருந்து பழகிக் கொடுத்து பணக்கார இளைஞர்களிடம் கூட்டிக் கொடுக்கும் ஒரு பெண். வேஸ்ட்.

சொந்தமென்று நீ இருந்தால்: சின்னப் பெண்ணை பார்த்து ஒரு டாக்டர் ஆசைப்படுகிறார். ஜாதி வேறுபாட்டால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். கல்யாணம் ஆனா பிறகு குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் டாக்டரை அந்த பெண் தன கணவனோடு பார்க்கிறாள். நல்ல கணவனும் டாக்டரை அவர் வீட்டுக்கு கொண்டு போய்விடுகிறான். கணவன், மனைவி, டாக்டருக்குள் நல்ல நட்பு உருவாகிறது. கணவன் குடும்பம் இந்த நட்பை தவறாக பேச டாக்டரை வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்கள். டாக்டர் இன்னும் குடிக்க ஆரம்பிக்கிறார். வேஸ்ட்.

நாளைக்கு நேரமில்லை: இன்னும் ஒரு தண்டம். கேடு கெட்ட கணவன், உத்தம பத்தினி. இருவரையும் அவர்கள் வளர்ப்பு மகள் இணைக்கிறாள்.

தொட்டதெல்லாம் பெண்: பக்கத்து வீட்டு நர்மதா-செல்வம் காதல். இதில் அனந்து என்ற ஆன்மீகவாதி நுழைந்து நர்மதாவை அடையப் பார்க்கிறார். நர்மதாவின் முறைப்பையன் ராஜாராமன், அனந்துவின் தம்பி மனைவி ருக்கு என்று பாத்திரங்கள். வேஸ்ட்.

தென்றலே ஓடி வா: தன் சுயநலக் குடும்பத்துக்காக உழைக்கும் பெண். மனைவியால் உதாசீனப்படுத்தப்படும் மேலதிகாரியை இரண்டாம் தாரமாக மணந்துகொள்கிறாள். முதல் மனைவி பயந்துபோய் “திருந்திவிடுகிறாள்”. இவள் அம்போ! வேஸ்ட்.

காதல் கைதி: கல்யாணத்துக்கு முன் புருஷன் ஸ்திரீலோலன் என்று தெரிந்ததும் மனைவி டைவர்ஸ் செய்துவிடுகிறாள். கணவன் தான் திருந்திவிட்டேன் என்று எத்தனை சொன்னாலும் கேட்கவில்லை. எட்டு வருஷம் கழித்து தற்செயலாக சந்திக்கும்போது உறவு கொண்டு பிள்ளையும் உண்டாகிறாள். இன்று தான் திருந்திவிட்டேன் என்று சொன்னதை கேட்பவள் அன்று ஏன் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு அ. ரமணனின் கதை உலகம் இன்னும் பிடிபடவில்லை என்று பொருள். அப்புறம் புருஷன் பழி வாங்க, பெண்டாட்டி பழி வாங்க என்று கதை போகிறது. வேஸ்ட்.

கனவுக் கணவன்: பத்தினிக்கு இன்னல் வரும் ஃபார்முலாதான். இந்த முறை இன்னல் NRI கணவன் மூலம் வருகிறது. வேஸ்ட்.

மதிப்பீடு:

புத்தகங்களைப் படித்த பிறகு இதுதான் தோன்றுகிறது. பாரதிதாசன் ஒரு கவிதையில் அன்றைய தமிழ் சினிமாவை இப்படி விவரித்திருப்பார் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்“. அ. ரமணன் இந்த ஒன் லைனர் நமக்கு கதை எழுதப் போதும், ஆனால் எதற்கு இவ்வளவு நீளக் கதை என்று அதில் “பத்தினிக்கு இன்னல் வரும்” என்பதை மட்டும் தன் ஸ்டாண்டர்ட் ஃபார்முலாவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்புறம் பத்தினி மட்டும் எதற்கு, கல்யாணம் ஆன, ஆகாத பெண்கள் எல்லாருக்கும் இன்னல் வரும் என்று தன் ஃபார்முலாவை கொஞ்சம் தாண்டியும் இருக்கிறார். எல்லாவற்றிலும் ஒரே கதைதான் – ஒரு பெண், அவளை எல்லாரும் தெரிந்தோ தெரியாமலோ கொடுமைப்படுத்துவார்கள், சில சமயம் தீரும், பல சமயம் தீராது. எனக்கு நான் படித்தவற்றில் ஒரு கதை கூட தேறவில்லை. இதற்கு மேல் படிப்பதாகவும் இல்லை. (“கூட்டுப் புழுக்கள்” என்று ஒரு தொடர்கதையில் சில பகுதிகள் என்னை இம்ப்ரஸ் செய்த ஞாபகம் இருக்கிறது. அந்த நாவலும், சிறை சிறுகதையும் கிடைத்தால் படிப்பேன் என்று நினைக்கிறேன்.)

அ. ரமணனின் பலம் அவரது சுலபமான, சரளமான நடை. பிராமணக் குடும்ப பின்புலங்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கின்றன. அவர் தன் ஃபார்முலாவை விட்டு வெளியே வந்திருந்தால் இந்த நடை அவரை கொஞ்சம் மேலே கொண்டு போயிருக்கலாம்.

ஒரு வாசகன் என்ற முறையில் அ. ரமணனை நான் முழுமையாக நிராகரிக்கிறேன். ஆனால் ஒரு (ஆரம்ப நிலை) எழுத்தாளன் என்ற நிலையில் அவரது output என்னை வியக்கவைக்கிறது. எனக்கு நாலு பக்கம் எழுதவே ததிங்கிணத்தோம், இவர் நாற்பதாயிரம் பக்கம் எழுதி இருப்பார் போலிருக்கிறது! இப்படி எழுத திறமை வேண்டும். இந்த திறமை வீணாகப் போனது வருந்த வைக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்