டெட் சியாங்

ted_chiangஇந்த வருஷம் கண்டுகொண்ட நல்ல எழுத்தாளர்களில் டெட் சியாங்கும் ஒருவர்.

சியாங்கின் எழுத்துக்களை அதீதக் கற்பனைகள் (fantasy) என்றோ SF என்றோ சுலபமாக வகைப்படுத்த முடியவில்லை. என்னைப் பொறுத்த வரையில் அவை கேள்விகள். நம் புரிதலை, பழக்கத்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விஷயங்களை, இவை கேள்விக்குள்ளாக்குகின்றன. கேள்விகளுடன், நம்மை ஆஹா என்று வியக்க வைக்கும் விசித்திரக் காட்சிகள், சுவாரசியமான கதையோட்டம் எல்லாம் சேர்ந்திருக்கின்றன. (அசிமோவ் நல்ல கேள்விகளைக் கேட்பார், ஆனால் அவர் எழுத்தில் கடைசி வரை ஒரு அமெச்சூர்தனம் தெரியும்.) சுருக்கமாகச் சொன்னால் இலக்கியம் படைக்கிறார்.

உதாரணமாக நம் நினைவுகள் என்பது என்ன? Exhalation சிறுகதை இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறது. அந்தக் கதையில் இயந்திர மனிதர்களின் ஒரு உலகம். ஆனால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. நாம் ஹோட்டலுக்குப் போய் காஃபி சாப்பிடுவது போல, பெட்ரோல் நிலையங்களில் காருக்கு பெட்ரோல் போடுவது போல தினமும் போய் தன் மார்பில் உள்ள சிலிண்டரை எடுத்து வைத்துவிட்டு வேறு சிலிண்டரை பொருத்திக் கொள்கிறார்கள். ஒரு சின்ன பிரச்சினையால் கதையின் நாயகன் தன் தலையைத் தானே திறந்து தன் மூளையை ஆய்வு செய்கிறான். இந்த விசித்திரம் நிறைந்த பின்புலத்தில் கேட்கப்படும் கேள்வி இதுதான் – நினைவு, ஞாபகம் என்பது என்ன? மூளையின் ஒரு முடிச்சா? அது எப்படி பதியப்படுகிறது? அதை நாம் எப்படி மீட்கிறோம்? மறதி என்றால் என்ன? தகவல்கள் எப்படி அழிகின்றன? அந்த இயந்திர மனிதர்களுக்கு நினைவும், மறதியும் எப்படி செயல்படுகின்றன என்பதற்கான பதில்களை விட நமக்கு இதெல்லாம் எப்படி செயல்படுகின்றன என்று யோசிக்க வைக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை Truth of Fact, Truth of Feeling-தான். இரண்டு தளங்களில் கதை சொல்லப்படுகிறது. ஒரு தளத்தில் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் பதிவு செய்யும் கருவிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. மனைவி நீ அன்று அப்படிச் சொன்னாயே என்று சண்டை போட்டால் கணவன் அதை வீடியோவாக பார்த்து உண்மைதானா என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதனால் ஏற்படும் விளைவுகள் எழுத்து ஒரு ‘பழங்குடி’யினருக்கு அறிமுகம் ஆகும் காலத்தோடு ஒப்பிடப்படுகிறது. அந்த இரண்டாவது தளத்தில் ஏறக்குறைய பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசியாவில் ஐரோப்பியர்கள் ஆதிக்கம் ஆரம்பித்திருந்த காலம் மாதிரி. ஒரு பாதிரியார் எழுதப் படிக்கச் சொல்லித் தருகிறார். ஒரே ஒரு சிறுவன் மட்டும்தான் கற்றுக் கொள்கிறான். பிற்காலத்தில் அவனுடைய குடியினருக்கும் வேறொரு குடியினருக்கும் நடுவில் பிரச்சினை வரும்போது பழைய ரெகார்டுகளைப் புரட்டிப் பார்க்கிறான், தன் குடித்தலைவன் சொல்வது தவறு என்று தெரிகிறது. ஆனால் அது தவறா? எது உண்மை? எழுதி வைக்கப்பட்டிருப்பதால் மட்டுமே ஒரு விஷயம் உண்மை ஆகிவிடுமா? காந்தளூர்ச்சாலை களமறுத்தது உண்மைதானா இல்லை ஏதாவது கஞ்சா மயக்கமா என்று யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்? உண்மை என்றால் என்ன? பிரமாதமான சிறுகதை.

எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை Merchant and the Alchemist’s Gate. பாக்தாதின் 1001 இரவுகள் பின்புலம். கதையின் நாயகனுக்கு காலத்தில் பின்னால் சென்று வாழ்க்கை நிகழ்ச்சிகளை மாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. என்ன செய்யலாம்? அங்கங்கே இன்னொரு க்ளாசிக் சிறுகதையான “Monkey’s Paw”-வை நினைவுபடுத்தியது. குறிப்பாக பணம் நிறைய இருந்தும் வாழ்க்கையை அனுபவிக்க முடியாதவனின் கிளைக்கதை. இதை விவரிக்கவே எனக்கு இஷ்டமில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

நான் அவ்வளவாக ரசிக்காத சிறுகதை Lifecycle of Software Objects. கொஞ்சம் இழுவை. ஆனால் அது எழுப்பும் கேள்வியும் நம்மை யோசிக்க வைப்பதே. கதையின் பின்புலம் கணினி உலக ‘உயிரினங்கள்’. கதையில் அவை உயிரினங்களின் genome-ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகின்றன. அவற்றுக்கு ‘ஆன்மா’ இருக்கிறதா? நாய்களுக்கு, மற்ற செல்லப் பிராணிகளுக்கு இருக்கிறதா? குழந்தைகளை எவ்வளவு தூரம் பாதுகாப்பீர்கள்?

இன்னும் இரண்டு சிறுகதைகள் – Great Silence, What’s Expected of Us– இங்கே. என் கண்ணில் இவை சுமார்தான், ஆனால் இவையும் சுவாரசியமான கேள்விகளைத்தான் கேட்கின்றன.

Great Silence சிறுகதையை முத்துகிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்திருப்பதை இங்கே படிக்கலாம். அவனுக்கு ஒரு ஜே!

டெட் சியாங்கை கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: டெட் சியாங் பக்கம்

சிறுகதைகள்: