தோப்பில் முகமது மீரானின் “ஒரு கடலோர கிராமத்தின் கதை”

அருணாவின் இன்னொரு புத்தக அறிமுகம். காலச்சுவடு வெளியீடு. விலை நூறு ரூபாய். ஜே போட்டு ரொம்ப நாளாச்சு, தோப்பிலுக்காக ஒரு தளம் நடத்தும் சுல்தானுக்கு ஒரு ஜே!

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். அவரது வார்த்தைகளில்:

மீரான் கி.ரா வகையிலான ஆர்ப்பாட்டமான கிராமியக் கதை சொல்லி. அவருடைய கூரிய பார்வையில் வரும் கிராமத்தின் அகமானது புறச்சித்தரிப்புகளுக்கு அகப்படாதது. அறியாமையும், அடிமைத்தனமும், சுரண்டலும் ஒரு பக்கம் சுயமரியாதைக்கான போராட்டம், களங்கமற்ற ஆர்வம், பிரியம் நிரம்பிய உறவுகள் என்று இன்னொரு பக்கம். இவற்றுக்கு இடையேயான ஓயாத போராட்டம்— மீரானின் கிராமம் இதுதான். அவருடைய எல்லா நாவல்களும் கடலோர கிராமத்தின் கதைகளே.

எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் வைக்கிறார்.

புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 150 ரூபாய்.

ஓவர் டு அருணா!

Thoppil Mohammad Meeranநாம் அறியாத உலகை, மொழியை, வாழ்க்கை முறையை ஒரு கதையில் படிக்கும் போது எனக்கு ஏற்படும் அலாதி மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. உலகம் திடீரென சிறிதே பெரிதாகியது போன்ற உணர்வு. ஆலிஸ் கண்ட அற்புத உலகை நானும் கண்டதைப் போன்ற பிரமிப்பு. ஆனால் அக்கதையின் உள்ளே செல்லும் போது நாம் சந்திக்கும் மனிதர்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சியமானவர்களாக இருக்கும் போது ஏற்படும் நெகிழ்ச்சி, அதன் பொதுமைதன்மை ஏற்படுத்தும் பச்சாதாபம் இவற்றை உருவாக்கும் படைப்புக்களை நான் மிக விரும்புகிறேன்.

தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை அத்தகைய ஒரு படைப்பு. நான் அறிந்திராத நாஞ்சில் நாட்டு கடலோர கிராமத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன் நிகழும் கதை. நாவலில் பயன்படுத்தப்படும் இஸ்லாமிய கடலோர கிராமத்தைச் சேர்ந்த வழக்கு மொழியை புரிந்து கொள்வது சிறிது கடினமாக இருந்தாலும் படிக்கப் படிக்க நமக்கே இயல்பாக வழக்குச் சொற்கள் பிடி கிடைக்கிறது.

மதம் மற்றும் நில உடமையாளர்களின் இறுகிய பிடியில் இருக்கும் ஒரு கிராமத்தின் கதை. மதத்தின் பெயரால் அரங்கேறும் மூட நம்பிக்கைகள், பாலியல் அத்துமீறல்கள், சுரண்டல்கள், நிலவுடமைக்காரர்களின் அதிகாரம், தொழுகையில் கூட நீளும் அந்த அதிகாரத்தின் கைகள், அந்த முதலாளியையே ஒரு நேரம் வரும் போது தன் வளர்ச்சிக்காக சுரண்டும் லெப்பை என தன் சுயநலத்தை மட்டுமே நினைத்து வாழும் கதைமாந்தர்கள். வறட்டு குடும்ப கெளவரத்தை காப்பாற்ற, ஊரையே சுரண்டி சேர்த்த சொத்தை அழித்து பின் பைத்தியமாகும் வடக்கு வீட்டு முதலாளி மேல் கடைசியில் பச்சாதாபம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சிதிலமடையும் இக்குடும்பத்தில் தலைமுறைகளாக எந்தவிதமான தேர்வுரிமையும் இல்லாத பெண்கள், பின்கட்டில் தன் காதல் சொல்லி பின் தன் வாழ்வை இழக்கிறார்கள்.

சுறாப்பீலி விற்கும் மஹ்முதும், பள்ளி ஆசிரியராக வரும் மெஹ்பூப்கானும் மட்டும் சுரண்டும், சுரண்டப்படும் இச்சமூகம் மாறும், மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் அச்சமூகத்தின் மன ஓட்டத்தை மீறி செயல்படுகிறார்கள். இயல்பான, உண்மையான மனித சித்தரிப்புக்கள். மர்கஸ்போஸ்டிற்க்கு அளித்திருக்கும் ஒரு பேட்டியில் மஹ்மது தனது உப்பா (தாத்தை)வின் ஆளுமையின் நீட்சி என்பதை தோப்பில் மீரான் பதிவு செய்கிறார். அந்த பேட்டியை படித்த பின் நாவல் இன்னும் மனதுக்கு பிரியமாக ஆகிறது.

தோப்பில் பற்றிய ஒரு கட்டுரையில் ஜெயமோகன் சொல்கிறார் – 20 வருடம் முன்பு சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டு சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய் படிஞ்சுடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்கு மேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்”. துல்லியமான நிர்ணயம்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அருணா பதிவுகள், தோப்பில் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
கதை உருவான கதை – தோப்பிலின் பேட்டி
தோப்பிலுக்கு ஒரு தளம்