வண்ணதாசன்: ஒரு சிறு இசை

ஒரு சிறு இசை 2016-க்கான சாஹித்ய அகடமி பரிசு வென்ற சிறுகதைத் தொகுப்பு.

வண்ணதாசனின் எழுத்தில் எப்போதும் தெரிவது கனிவு; குறைநிறைகளைப் பற்றி எல்லாம் யோசிக்காமல் அடுத்தவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அன்பு. இதிலும் தெரிவது அதுதான். எந்தக் கதையும் நான் தமிழின் நல்ல சிறுகதைகள் என்று தொகுத்தால் வராது. சில சமயம் மிக எளிமையாக, ஊகிக்கும்படி இருக்கிறது. ஆனால் அவ்வப்போது நல்ல உணர்வுகளை (feel-good) ஏற்படுத்திவிடுகிறார்.

எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை பூரணம்தான். தனக்கும் தன் தங்கைக்கும் கருப்பட்டித் துண்டுதான் ஸ்வீட் என்று பூரணலிங்கம் மாமா சொல்லும் இடம், உடைந்த கண்ணாடிச் சில்லுகளில் ஒரு சில்லில் அத்தை பூ வைத்துக் கொண்டிருப்பாள், இன்னொன்றில் மாமாவை கிஸ் அடித்துக் கொண்டிருப்பாள் என்று சொல்லும் இடம் எல்லாம் கவிதை.

தண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் காந்தி டீச்சர், ஒரு சிறு இசை மூக்கம்மா ஆச்சி நல்ல பாத்திரப் படைப்பு. இரண்டுமே நெகிழ்ச்சி அளித்த சிறுகதைகள்.

எண்கள் தேவையற்ற உரையாடல்கள் சிறுகதையில் என்னையே கண்டேன். இறந்த சிலருக்கு நானும் ஃபேஸ்புக்கில் செய்தி அனுப்பி இருக்கிறேன். அந்த உணர்வைக் கொண்டு வந்துவிட்டார்.

பொழுது போகாமல் ஒரு சதுரங்கம் நல்ல சிறுகதை. சூரி மாமாவின் பொறாமை, திருமணம் பொருளிழந்து போவது இரண்டும் நன்றாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

கனியான பின்னும் நுனியில் பூ குறைகளோடு ஏற்பதை நன்றாகக் காட்டும் சிறுகதை.

மன்மத லீலையை நல்ல முடிவுள்ள சிறுகதை.

பாவண்ணன் இந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி இங்கே அலசுகிறார்.

தமிழின் 100 சிறந்த சிறுகதைகள் என்று நான் தேர்ந்தெடுத்தால் இதில் எதுவும் வராது. என் கண்ணில் வண்ணதாசன் இவற்றை விட நல்ல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அதனால் என்ன? நல்ல தொகுப்புதான். அவ்வப்போது மனம் நிறைகிறது, வேறென்ன வேண்டும்? படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணதாசன் பக்கம்

வண்ணதாசனின் ‘சமவெளி’

வண்ணதாசன் தமிழ் இலக்கிய உலகின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். சாஹித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர். 2016-க்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். கல்யாண்ஜி என்ற பெயரில் கவிஞராகவும் புகழ் பெற்றவர். பிரபல விமர்சகர் தி.க. சிவசங்கரனின் மகன். சொல்லப் போனால் இந்தக் காலத்தில் தி.க.சி.யைத்தான் வண்ணதாசனின் அப்பா என்று குறிப்பிட வேண்டும்.

அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது அவரது சிறுகதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். என் வாழ்வோ சாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றுதான் சில வருஷங்களாகப் போய்க் கொண்டிருக்கிறது. எதையும் நினைத்த உடனே செய்தாக வேண்டும் இல்லை என்றால் நடப்பதே இல்லை. ஏதோ இப்போதாவது முடிந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பு 1983-இல் விஜயா பதிப்பகம் வேலாயுதத்தால் முதல் முறை வெளியிடப்பட்டிருக்கிறது. நான் படித்தது சந்தியா பதிப்பகம் 2011-இல் வெளியிட்ட பதிப்பு. விஜயா வேலாயுதத்தைப் பற்றி வண்ணதாசன் முகவுரையில் எழுதி இருப்பதைப் படித்தபோது அந்தப் பதிப்பு கிடைக்காதா என்று இருந்தது. வண்ணதாசன் effect-ஏதானோ, படிக்கும் என் மனமும் நெகிழ்கிறதோ என்றும் தோன்றியது.

வண்ணதாசனின் எழுத்தை நான் ஒரே வார்த்தையில் கனிவு என்றுதான் சுருக்குவேன். அவரது கதைகளில் – அனேகமாக எல்லாக் கதைகளிலுமே – கனிவும் நெகிழ்ச்சியும் அன்பும் ஒருவரை ஒருவர் எல்லா குறை நிறைகளோடும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும்தான் வேறு வேறு கோணங்களில் காட்டப்படுகின்றன. சில சமயம் இது பக்குவம் இல்லை, கையாலாகாத்தனத்தை பூசி மெழுகும் முயற்சி என்று கூடத் தோன்றுகிறது. அவரது கதைகளில் ரஜோகுணம் நிறைந்த மனிதர்கள் அபூர்வமாகவே தென்படுகிறார்கள். விசையும் பலமும் ஆக்ரோஷமும் கோபமும் இழிகுணங்களும் காணப்படுவதே இல்லை. ஆனாலும் அந்தக் கதைகள் தன்னளவில் முழுமையாகவே இருக்கின்றன. அதுவே அவரது பலம்.

வண்ணதாசனை பலரும் திருநெல்வேலி எழுத்தாளர் என்று சுருக்கிவிடுகிறார்கள். என்னைப் பொறுத்த வரையில் அவர் மனிதர்களை திருநெல்வேலி பின்புலத்தில் சித்தரித்திருக்கிறார், அவ்வளவுதான். அவரது கதைகளில் தாமிரபரணிக்கு பதிலாக தேம்ஸ் நதி ஓடினால் ஒரு வித்தியாசமும் இருக்காது. அவரது எல்லைகள் மனிதர்களின் குணங்களைப் பொறுத்த வரை குறுகியவையே. ஆனால் புவியியல் ரீதியாக திருநெல்வேலி என்று வருவது தற்செயலே, அது ஒரு விஷயமே இல்லை.

வண்ணதாசனின் கதைகளில் மாபெரும் வரலாற்று தரிசனங்களோ தத்துவ விசாரங்களோ மனிதர்களை தோலுரித்துக் காட்டிவிடுவதோ இல்லைதான். ஆனால் அதெல்லாம் எனக்கு ஒரு குறை அல்ல, அவர் என்ன எழுத முனைந்தாரோ, அதை மிகச் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

வண்ணதாசனின் சிறுகதைகளைப் பற்றி எழுத உட்கார்ந்தபோது அவரது சிறுகதைகளை விவரிப்பது மகா கஷ்டம் என்பதை உணர்ந்தேன். அன்பையும் கனிவையும் பற்றி திருப்பி திருப்பி என்ன எழுத? உணர்ந்து கொள்ள வேண்டியதுதான்!

வண்ணதாசனை இத்தனை ரசித்தாலும் பாராட்டினாலும் அவர் எனக்கான எழுத்தாளர் இல்லை. எல்லாரும் ரொம்ப நல்லவராக இருந்துவிட்டால் எனக்கு அது ஒட்டுவதில்லை. கர்ணனும் பீமனும் கிருஷ்ணனும் துரியோதனனுமே எனக்கு மகாபாரதத்தை மாபெரும் காவியமாக்குகிறார்கள், ரொம்ப நல்லவனான யுதிஷ்டிரன் அல்ல. Of course, இது வண்ணதாசனின் குறை அல்ல. என் வாசிப்பின் குறையேதான்.

சமவெளி சிறுகதைத் தொகுப்பில் 12 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றில் மிகச் சிறப்பானதாக நான் கருதுவது ‘நிலை‘. கதை முக்கியமே இல்லை, அதில் வெளிப்படுத்தும் உணர்வு மட்டுமே முக்கியம். நான் விவரிக்கப் போவதில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

ஜெயமோகன் தேர்ந்தெடுத்த இன்னொரு சிறுகதையான சமவெளி இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது. என் கண்ணில் சமவெளி சிறப்பான கதை அல்லதான். இந்தச் சிறுகதையைப் படித்தபோது அட இதை நான் கூட எழுதுவேனே என்று தோன்றியது. என்னாலேயே ஒரு சிறுகதையை எழுத முடியும் என்று தோன்றினால் அதை நான் சிறப்பானதாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அதை ஏன் ஜெயமோகன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

மற்ற சிறுகதைகளில் எனக்குப் பிடித்தவை சில பழைய பாடல்கள், விசாலம், வருகை. சில பழைய பாடல்கள், வருகை போன்ற சிறுகதைகளை எல்லாம் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் என்னால் ஒரு நாளும் எழுத முடியாது. சிறுகதை எழுதுவதை விடுங்கள், கதைச் சுருக்கம் கூட எழுத முடியவில்லை. இதை எல்லாம் எழுத ஒரு மாஸ்டரால்தான் முடியும். இது வரை படித்ததில்லை என்றால் நேரடியாக படித்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

வருகை சிறுகதையில் இரண்டு தோழிகள் சந்திக்கிறார்கள். அப்புறம் என்ன? அன்புதான்!

விசாலம் அவரது ட்ரேட்மார்க் சிறுகதை. விரும்பிய மாமாவின் பெண்ணோடு திருமணம் நடக்கவில்லை. மாமாவின் குடும்பம் நொடித்துப் போய் அந்தப் பெண்ணுக்கு திருமணமே நடக்கவில்லை. அதனால் ஒருவருக்கொருவர் அன்பு விட்டுபோய்விடுமா என்ன? – அதுவும் வண்ணதாசனின் உலகத்தில்?

தாகமாய் இருக்கிறவர்கள் சிறுகதையும் விசாலத்தின் இன்னொரு வடிவம்தான். ஆனால் சில வலுவான பாத்திரங்களை வைத்து தாளிப்பு வேலை செய்திருக்கிறார்.

அவருக்கு வரும் போகும் சிறுகதை பிடித்தமான ஒன்று என்று தோன்றியது. அவருக்கு கொஞ்சம் நீளமான சிறுகதை. கணவன்-மனைவிக்குள் சிறு மனஸ்தாபம் என்று சுருக்குகிறேன்.

உதிரி இன்னொரு நல்ல சிறுகதை. இறந்தவர் மேல் நெகிழ்ச்சி என்று சுருக்கலாம்.

கூறல் இன்னொரு நல்ல சிறுகதை. ஆனால் விவரிப்பது மகா கஷ்டம். படித்துக் கொள்ளுங்கள்!

பளு சுமாரான சிறுகதைதான். வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர் மணம் முறிந்த பெண்ண மணக்கிறேன், வேலை கிடைக்குமா என்று பார்க்கிறார். வெளியேற்றம், பூனைகள் சிறுகதைகளும் என் பார்வையில் சுமார்தான். நொண்டிக்கிளிகளும் வெறிநாய்களும் ஓவர் குறியீடாக இருக்கிறது

இந்தப் பதிவை எழுதுவதற்கு முன்னால் அவரது தளத்தில் சிறுகதைகளைத் தேடிக் கொண்டிருந்தேன். என் பதிவு ஒன்றை அங்கே எடுத்துப் போட்டிருப்பதைக் கண்டு அப்படியே ஷாக்காயிட்டேன். என்னை எல்லாம் ஒரு பொருட்டாக நினைத்தார் (நினைத்தது அவரா அல்லது சுல்தானா என்று நிச்சயமாகத் தெரியாது) என்றால் அது அவர் கதைகளில் நிரம்பி இருக்கும் கனிவின் இன்னொரு வெளிப்பாடுதான்.

ஜெயமோகனின் seminal சிறுகதைத் தேர்வுகளில் வண்ணதாசனின் ஆறு சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

  1. தனுமை – அவரது மிகச் சிறந்த சிறுகதைளில் ஒன்று. இதை விவரிப்பது கஷ்டம், படித்துக் கொள்ளுங்கள்!
  2. நிலை
  3. சமவெளி
  4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் படியுங்கள் என்பதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
  5. போய்க்கொண்டிருப்பவள் Moving on என்பதை சிறப்பாக காட்டிவிடுகிறார்.
  6. வடிகால் – இன்னும் ஒரு சிறந்த சிறுகதை. படியுங்கள் என்பதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும் என்ற சிறுகதையும் மனதைத் தொடுகிறது. மனிதர்கள் கஷ்டத்தில் இருக்கும் சூழ்நிலை சிறப்பாக வந்திருக்கிறது. ஒட்டுதல் சிறுகதையும் துக்கத்தை, நட்பை சிறப்பாக விவரிக்கிறது. போர்த்திக் கொள்ளுதல் மனம் வெறுத்துப் போகும் ஒரு தருணத்தை நன்றாக விவரிக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணதாசன் பக்கம்

வண்ணதாசனுக்கு சாஹித்ய அகாடமி விருது

Vannadasanவண்ணதாசன் தனது ‘ஒரு சிறு இசை‘ சிறுகதைத் தொகுப்புக்காக 2016க்கான சாஹித்ய அகாடமி விருதை வென்றிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தேர்வுக்குழு உறுப்பினர்கள் டி. செல்வராஜ், கே.எஸ். சுப்ரமணியம், எம். ராமலிங்கம் ஆகிய மூவருக்கும் தகுதி உள்ள எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்ததற்காக ஒரு ஜே!(டி. செல்வராஜ்தான் ‘தோல்‘ நாவலுக்காக சாஹித்ய அகாடமி விருதை வென்றவரா? ‘தேனீர்‘, ‘மலரும் சருகும்‘ நாவல்களை எழுதியவரா?)

Sahitya Academy Awardதென்னவோ தெரியவில்லை, விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டால் சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்துவிடும் போலிருக்கிறது! அடுத்த விருது தேவதேவன், தேவதச்சன் இருவரில் யாருக்கோ? (ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார், தெளிவத்தை ஜோசஃப் இலங்கைக்காரர், அவருக்கு கொடுப்பார்களா என்று தெரியவில்லை)

மற்ற மொழிகளிலிருந்து விருது வென்றவர்கள் ஒருவர் பேரைக் கூட எனக்குத் தெரியவில்லை. தெலுங்கு மொழிக் கவிஞரான பப்பிநேனி பாபிநேனி சிவசங்கரைப் (திருத்திய ராமச்சந்திர ஷர்மாவுக்கு நன்றி!) பற்றி கௌரி கிருபானந்தன் ஏதாவது சொன்னால் உண்டு.

யுவ புரஸ்கார் விருது லக்ஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதைப் படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

பால் சாஹித்ய புரஸ்கார் விருது குழ. கதிரேசன் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யாரென்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசன் தளம்
‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பு பற்றி பாவண்ணன்

வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது

Vannadasanவிருது அறிவிக்கப்பட்டு பத்து நாள் இருக்கும் என்று நினைக்கிறேன். அன்றே எழுதிய பதிவை வோர்ட்பிரஸ் தின்றுவிட்டது, மீண்டும் எழுத இத்தனை நாள்.

விஷ்ணுபுரம் விருது சாஹித்ய அகாடமி விருது, அல்லது ஞானபீடம் போன்று இன்னும் பிரபலம் அடையாமல் இருக்கலாம். ஆனால் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் – நல்ல இலக்கியம் படைப்பவர்களுக்கு மட்டும்தான் விருதை அளிக்கிறது. இந்த முறையும் அப்படித்தான் வண்ணதாசனுக்கு விருதளித்து தன்னையும் வண்ணதாசனையும் ஒருசேர கௌரவித்துக் கொண்டிருக்கிறது.

மற்றவர்கள் எப்படியோ எனக்கு எப்போதும் வண்ணதாசனுக்கும் வண்ணநிலவனுக்கும் நடுவே ஒரு குழப்பம் உண்டு. யார் எஸ்தர் எழுதியது, யார் கிருஷ்ணன் வைத்த வீடு எழுதியது என்றால் இந்த இரண்டு பேரில் ஒருவர் என்றுதான் சொல்ல முடியும்.

ஜெயமோகனின் சிறுகதைத் தேர்வுகளில் ஆறு வண்ணதாசன் சிறுகதைகள் – தனுமை, நிலை, சமவெளி, தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள், போய்க் கொண்டிருப்பவள், வடிகால். தனுமை, நிலை இரண்டும் எஸ்.ரா.வால் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை தனுமைதான்.

வண்ணதாசனின் புகழ் பெற்ற கவிஞர் அவதாரம் கல்யாண்ஜி. கவிதைகளை நான் பொதுவாகத் தவிர்த்துவிடுவதால் அந்த அவதாரத்தைப் பற்றி எனக்கு சொல்ல எதுவுமில்லை.

தமிழ் விக்கிபீடியாவில் வண்ணதாசனைப் பற்றித் தேடினேன். கால ஓட்டத்தில் தமிழறிஞர்கள் என்ற பக்கத்தில் வண்ணதாசனைக் கொன்றேவிட்டார்கள். 1976-இலேயே போய்விட்டாராம்! பாவம், அவருக்கே தெரியுமோ தெரியாதோ. உடனடியாக விக்கிபீடியாவில் உறுப்பினன் ஆகி அதைத் திருத்தினேன். 🙂

வண்ணதாசனுக்கும் விஷ்ணுபுரம் பரிசுக் குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், வண்ணதாசன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு
வண்ணதாசனின் தளம்

வண்ணதாசன் தளம்

வண்ணதாசன் தளம் என்று ஒன்று இயங்குவது தெரியுமா? இதையும் நாஞ்சில் நாடன் தளம் நடத்தி வரும் சுல்தான் ஷரீஃப்தான் நடத்துகிறார். அங்கே நாஞ்சில் நாடன், இங்கே வண்ணதாசன் எழுத்துகளைத் தொகுக்கும் முயற்சி! சுல்தான், கலக்கறீங்க!

வண்ணதாசனின் சிறுகதைகள் சில – தனுமை, நிலை – மட்டுமே நினைவு வருகின்றன. அவர் நாவல் கீவல் எழுதினாரா என்று தெரியவில்லை. அழியாச்சுடர்கள் தளத்தில் பல சிறுகதைகள் இருக்கின்றன. புஸ்தகங்களும் எங்கேயோ இருக்கின்றன. தேட வேண்டும்…

வண்ணதாசன் கல்யாண்ஜி என்ற பெயரில் கவிதைகளும் எழுதுபவர். அதை எல்லாம் பற்றி பேச எனக்கு அறிவு பத்தாது.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்