வண்ணநிலவன்: ரெயினீஸ் ஐயர் தெரு

ரெயினீஸ் ஐயர் தெருவைப் படிக்க சரியான மனநிலை வேண்டும் என்று நினைக்கிறேன். படிக்கக் கூடிய நாவல்தான், ஆனால் இந்த வயதில், இந்த மனநிலையில் எனக்கு கொஞ்சம் போரடித்தது. ஆனால் ஏன் இந்தப் படைப்பு பொதுவாக பாராட்டப்படுகிறது என்பதும் புரிந்தது. 20-25 வயதில் படித்திருந்தால் எனக்கும் இன்னும் பிடித்திருக்க வாய்ப்புண்டு.

நாவலின் பின்புலம் பெண்கள். அதுவும் “அடுக்களைப் பெண்கள்”.  சில பெண்கள் டீச்சர் வேலைக்குப் போனாலும் அவர்களும் “அடுக்களைப் பெண்களே”. அன்பானவர்கள். ஆண்களுக்குக் கூட கொஞ்சம் பெண்தனம் உண்டு. குடிகார தியோடோராக இருந்தாலும் சரி. மெல்லிய சோகம் எல்லாருக்கும் உண்டு. சில சமயம் காரணம் உண்டு – நோயாளி கணவன், பெற்றோரை இழந்த டோரதி போல. ஆனால் காரணம் தேவையே இல்லை. மீண்டும் மீண்டும் இந்த template ரெயினீஸ் ஐயர் தெருவின் ஒவ்வொரு வீட்டுப் பெண்கள் மூலமும் விவரிக்கப்படுகிறது. கதை என்றோ நிகழ்ச்சிகள் என்றோ பெரிதாக எதுவும் கிடையாது.

கதையின் பலம் நெகிழ்ச்சிதான். அதை உருவாக்க வேண்டும் என்றுதான் வண்ணநிலவன் முயன்றிருக்கிறார், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். நோயாளி கணவன் மேல் பாசம் குறையாத மனைவி, வயதான தம்பதிகளுக்கு உதவும் தியோடர் என்று அது பல பாத்திரங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. பதின்ம வயது ஈர்ப்பும் நன்றாக விவரிக்கப்படுவது

நாவலின் சிறந்த இடம் வயதான தம்பதிகளுக்கு குடிகார தியோடர் உதவி செய்வது. ஃபிலோமிக்கு அத்தான் மேல் உள்ள ஈர்ப்பு விவரிக்கப்படும் விதம்.

நாவலில் வரும் கல்யாணி அனேகமாக வண்ணதாசனாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எஸ்ரா இந்த நாவலால் கவரப்பட்டிருக்கிறார். ஜெயமோகன் இதை சிற்றிதழ் மொழியில் எழுதப்பட்ட பாலகுமாரத்தனமான நாவல் என்று நிர்தாட்சண்யமாக நிராகரிக்கிறார். நான் எங்கோ நடுவில். கம்பாநதி, கடல்புரத்தில் இரண்டோடும் ஒப்பிட்டால் இதற்கு மேலான இடத்தை நிச்சயமாகத் தருவேன்.

கறாராகச் சொன்னால் படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லை. ஆனால் தமிழிலக்கியத்தில் ஒரு டிக்மார்க் அளவுக்கு முக்கியத்துவம் உண்டு.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்

வண்ணநிலவன்: கம்பாநதி

கம்பாநதி ரொம்ப நாளாக படிக்க வேண்டும் என்று நினைத்திருந்த புத்தகம், எப்படியோ விட்டுப் போய்விட்டது. ஆனால் படித்த பிறகு இத்தனை நாள் படிக்கவில்லையே என்று வருத்தம் ஏற்படவில்லை. தமிழில் ஒரு டிக்மார்க், எனக்கு அவ்வளவுதான்.

கதை மிகவும் எளிமையானது. திருநெல்வேலி பக்கத்தில் எழுபதுகள் காலகட்டத்தில் ஒரு சிறு உலகத்தின் (microcosm) சித்தரிப்பு. வேலை இல்லா இளைஞர்கள், வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவர் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் தன் தேவைகளையும் சமாளிப்பது, காதல், உறவுகள், நண்பர்கள். மெய்நிகர் சித்தரிப்பு. அவ்வளவுதான். ஒரு விதத்தில் பார்த்தால் அன்பான, கனிவான, பலவீனங்கள் நிறைந்த போரடிக்கும் மனிதர்கள். ரஜோகுணம் இல்லாமல் ரொம்ப சாத்வீகமாக இருந்தால் புனைவுகள் சுவாரசியப்படுவதில்லை. இதுவும் எனக்கு அப்படித்தான் இருந்தது.

வண்ணநிலவன் சித்தரிக்கும் உலகம் – வேலை இல்லா இளைஞர்கள், பணப்பற்றாக்குறையால் தடுமாறும் குடும்பம் எனக்கு பரிச்சயமானதுதான், நான் பார்த்தது/அனுபவித்ததுதான். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து பல வருஷம் ஆயிற்று. இப்போதெல்லாம் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடுவதில்லை, பணப்பற்றாக்குறை வேறு லெவலில் இருக்கிறது. 🙂 ஆனால் இப்படி தேங்கிக் கிடப்பதின் சித்தரிப்பை பார்க்கும்போது இத்தனை தடுமாறினால் அதை நீயேதான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

புத்தகத்தின் பலம் மெய்நிகர் சித்தரிப்பு. பலவீனம் சுவாரசியமின்மை. சிறந்த பகுதி பாப்பையாவும் கோமதியும் நடந்து போய் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பது.

அது என்ன கம்பாநதி? தேங்கி, மறைந்தே போய்விட்ட நதியாம். இவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் என்று சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

கம்பாநதி எஸ்ராவின் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. ஜெயமோகன் பட்டியலில் இல்லை. அவர் இதை அற்பமான நாவல் என்று விமர்சித்திருக்கிறார். ஞாபகம், சரியாக நினைவில்லை. என் ஞாபகம் தவறாக இருக்கலாம். அவரே  இந்தப் புத்தகத்தை பரிந்துரைக்கவும் செய்திருக்கிறார்.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை. என்னைக் கேட்டால் வண்ணநிலவனின் சிறுகதைகளே – குறிப்பாக எஸ்தர் – அவரை தமிழ் வாசகனின் நினைவில வைத்திருக்கும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்

வண்ணநிலவன்

வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானது என் இருபத்து சொச்சம் வயதில் – கடல்புரத்தில் நாவல் மூலமாக. அன்று நாவல் மிகவும் பிடித்திருந்தது. இத்தனை அன்பு காட்டும் ஃபிலோமி போன்ற ஒரு பெண் கிடைப்பாளா என்று ஏக்கம் எழுந்தது. பல வருஷம் கழித்து மீண்டும் படித்தபோது எல்லாருக்கும் எப்போதும் பாசம் பொங்கி வழிந்து கொண்டே இருக்கிறது என்றால் கதாசிரியர் எந்த உலகத்தில் இருக்கிறார், அவர் கால் எப்போதுதான் மண்ணில் படப்போகிறது என்றுதான் தோன்றியது. எனக்கிருந்த பிம்பம் உடைந்துவிட்டாலும் கடல்புரத்தில் இலக்கியமே என்ற கணிப்பில் மாற்றமில்லை, என்ன மனதில் அது இரண்டாம், மூன்றாம் வரிசைக்குப் போய்விட்டது.

பிற்காலத்தில் வண்ணநிலவன் துக்ளக்கில் உதவி ஆசிரியராக இருந்தார், துர்வாசர் என்ற பேரில் எழுதினார் என்று தெரிந்தது. அவள் அப்படித்தான் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியவர் (திருத்திய  சுந்தரராமன் சிந்தாமணிக்கு நன்றி!) என்றும் தெரிந்தது. அவள் அப்படித்தான் நல்ல திரைப்படம், எழுபதுகளுக்கு அபாரமான திரைப்படம். இவை எல்லாம் அவருக்கு இருந்த கவர்ச்சியை அதிகப்படுத்தின.

ஆனால் அன்றும் இன்றும் அனேகமாக என்றும் உயர்ந்த இடத்தில் இருக்கும் சிறுகதை எஸ்தர்.பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு போகும் குடும்பம்; வயதான பாட்டியை என்ன செய்வது? கதையை மேலும் விவரித்து உங்கள் வாசிப்பு அனுபவத்தை கெடுக்க விரும்பவில்லை, படிக்கவில்லை என்றால் அதிர்ஷ்டசாலிகள், படித்துக் கொள்ளுங்கள்!

ஆனால் பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதை எனக்கு பெரிதாக அப்பீல் ஆகவில்லை. பஞ்சம் என்பதை நான் second-hand கூட அனுபவித்ததில்லை. அனுபவித்திருந்தால் ஒரு வேளை என் எண்ணம் மாறுமோ என்னவோ. ஆனால் நாயைக் கொல்ல முயலும் தருண சித்தரிப்பில், வீட்டுக்குள் ஒடுங்கி இருக்கும் சித்தரிப்பில் அவரது திறமை தெரிகிறது.

அதே போல பலாப்பழம் சிறுகதையையும் நான் பெரிதாக ரசிக்கவில்லை. ஒரு காலத்தில் கடைசி வரிகள் புரிய வேறு இல்லை, கணவன் மட்டும் பலாச்சுளையை சாப்பிட்டானோ என்றே தோன்றியது. இன்று படிக்கும்போது அந்த ஏக்கம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது, ஆனால் நிச்சயமாக என் டாப் தமிழ் சிறுகதைகளில் வராது.

துன்பக்கேணி சிறுகதையும் அப்படித்தான். கணவன் சிறையில் இருக்கும்போது கூலி கிடைக்குமே என்று சாராயம் கடத்த வரும் கர்ப்பிணிப் பெண்ணை சித்தரிக்கிறது. சாரதா சிறுகதையில் உலகம் அறியாத பெண் விபச்சாரக் கேஸில் மாட்டிக் கொள்ள ஒரு வேசி அவளை விடுவ்க்கிறாள். அவரது திறமை தெரிந்தாலும் ஒன்ற முடியவில்லை.

ஜெயமோகன் எஸ்தர், பலாப்பழம், மிருகம், துன்பக்கேணி ஆகிய சிறுகதைகளை தன் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா. பட்டியலில் எஸ்தர், பலாப்பழம், மிருகம் இடம் பெறுகின்றன.

வண்ணநிலவனின் சிறுகதைகள், நாவல்கள் அனேகமாக ஏழ்மை, அதிலும் ஐந்துக்கும் பத்துக்கும் – சில சமயம் உணவுக்கே – ஆலாகப் பறக்கும் ஏழ்மையைப் பின்புலமாக வைத்து அதில் அன்பையும் ஏழ்மையையும் சித்தரிக்கின்றன. சில சமயம் திகட்டிவிடுகிறது. அவர் இலக்கியம்தான் படைத்திருக்கிறார், ஆனால் என் கண்ணில் இரண்டாம், மூன்றாம் வரிசையில்தான் இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்

வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’

கடல்புரத்தில் பல வருஷங்களுக்கு முன் படித்த குறுநாவல். படித்தபோது மனம் கனமாக இருந்ததும் பிலோமி போன்ற பெண் கிடைப்பாளா என்று ஏக்கப்பட்டதும் இன்னும் நினைவிருக்கிறது.

தான் விரும்பும், தன்னை விரும்பும் சாமிதாசுக்கும் தனக்கும் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தும் அவன் மீது மாறாத அன்பும் – அன்பு அல்ல, அன்பைத் தாண்டி, ஏறக்குறைய விசுவாசம் என்றே சொல்லலாம் – காதலும் கொண்ட பிலோமி. தான் காதலிப்பனின் பலவீனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பிலோமி. அவளது மங்கிய நகல்களாகவே மற்ற பாத்திரங்கள். தான் காதலித்த வாத்தி மீது இன்னும் மாறாத அன்பு கொண்ட அவள் தாய். இன்னும் ஒருவரை ஒருவர் மறக்காத பிலோமியின் தோழி ரஞ்சியும் பிலோமியின் அண்ணனும். வாத்தி மீது மனைவி அன்பு கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்கும் குருசு (பிலோமியின் அப்பா). எல்லோருமே காதல் கைகூடாது என்று தெரிந்தும் காதலை கைவிடுவதில்லை. வேறு இடத்தில் வாழ்க்கைப்பட்ட போதும் காதலை மறப்பதில்லை.

இன்று மீள்வாசிப்பில் கடல்புரத்தில் மிகுகற்பனை நாவல் என்று தோன்றுகிறது. அவ்ளோ நல்லவனா(ளா) நீ என்று மனதில் ஒரு கேள்வி ஓடிக் கொண்டே இருக்கிறது. வாத்தியை நினைத்துக் கொண்டே குருசோடு படுத்தாளா பிலோமியின் அம்மா (அது என் கண்ணில் தவறில்லை) என்ற கேள்வி நாவலில் ஏன் கேட்கப்படவே இல்லை, அது கதையில் பெரிய ஓட்டையாக இருக்கிறதே என்று தோன்றுகிறது. எல்லோரும் எல்லா காலங்களிலும் நல்லவரே, எப்பப் பார்த்தாலும் அன்பும் பாசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும் என்றால் இந்த எழுத்தாளர் எந்த உலகில் இருக்கிறார், what is he smoking என்றுதான் தோன்றுகிறது. எக்கச்சக்கமாக நெஞ்சை நக்குகிறார்கள் என்று தோன்ற வைக்கிறது. இது நாவலின் குறையா, இல்லை எனக்கு வயதாகிவிட்ட குறையா என்று தெரியவில்லை.

கடல்புரத்தைப் பற்றி பேசும்போது நம்மூர் விமர்சகர்கள் இது மீனவர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது என்றெல்லாம் பிலிம் காட்டுவார்கள். வல்லமும் லாஞ்சியும் வலையும் கருவாடும் கதையில் பேசப்பட்டால் அது மீனவர் வாழ்க்கை அல்ல. இது முற்றிலும் அகத்தளத்தில் நடக்கும் நாவல். இந்தக் கதையை சென்னையின் அடுக்குமாடிக் கட்டிடப் பின்புலத்தில் எழுதலாம்; கும்பகோணம் அக்ரஹாரப் பின்புலத்தில் எழுதலாம்; மும்பையின் தாராவிப் பின்புலத்தில் எழுதலாம். கருவாட்டுக்கு பதிலாக தயிர் சாதம், வடா பாவ் என்று எதையாவது போட்டுக் கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.

குறைகள் இன்று தெரிந்தாலும் கடல்புரம் இலக்கியம்தான். பிலோமி நல்ல படைப்புதான். தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிட வேண்டிய நாவல்தான். ஆனால் எனக்கு இருந்த பிம்பம் அளவுக்கு உயர்ந்த இலக்கியம் அல்ல. நாவல் வெளிவந்த காலத்தில் – சரோஜா தேவியும் கே.ஆர். விஜயாவும் தமிழ்ப் பண்பாட்டை, காதலி/மனைவி என்றால் என்ன என்று தாங்கள் ஏற்று நடித்த பாத்திரங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில் – மணமானாலும் காதலித்தவனை மறக்காத பெண்கள் என்பது பெரிய புரட்சியாக இருந்ததோ, நாவலில் அங்கங்கே பறையன் என்று சொல்லிக் கொள்வது அந்தக் காலத்தில் politically incorrect ஆக இருந்து நாவலின் நம்பகத்தன்மையை அதிகரித்ததோ என்று சந்தேகம் வருகிறது.

ஜெயமோகன் தன் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை இரண்டாம் நிலை பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். எஸ்.ரா.வும் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலில் கடல்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

படியுங்கள் என்று இன்னும் பரிந்துரைக்கிறேன் – எனக்கு இருந்த பிம்பம் கொஞ்சம் உடைந்துவிட்டாலும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வண்ணநிலவன் பக்கம்

வண்ணநிலவன் பற்றி எஸ்.ரா.

உயிர்மையில் வண்ணநிலவனைப் பற்றி எஸ்.ரா. ஒரு அருமையான கட்டுரை எழுதி இருக்கிறார். படித்துப் பாருங்கள்.

எஸ்.ரா. சொல்வது போல எஸ்தர் ஒரு அருமையான சிறுகதை. கடல்புரத்தில் மாதிரி சில புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நல்ல புத்தகங்கள்தான், ஆனால் திருப்பி ஒரு முறை படித்துப் பார்க்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். மறுவாசிப்பில் சூப்பர்டூப்பர் எல்லாம் இல்லை என்றுதான் தோன்றியது. கம்பாநதி, ரெயினீஸ் ஐயர் தெரு (அது என்னங்க ரெயினீஸ் ஐயர்? ஒரு காலத்தில் என் அம்மாவின் பி.ஏ. பாடப் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன், தமிழுக்கு ஏதாவது சேவை செய்தால் போதும் அவரை ஐயர் என்று சொல்லிவிடுவார்கள். எல்லிஸ் ஐயர், கால்டுவெல் ஐயர் என்றெல்லாம் பார்த்திருக்கிறேன்.) போன்ற பேர்களை கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் அவள் அப்படித்தான் படத்தில் வேலை செய்திருக்கிறார் என்பது தெரியாத விஷயம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எஸ்தர் பற்றிய ஒரு பதிவு