ராட்சசனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

வெண்முரசு முடிந்துவிட்டது. 7-8 வருஷம். இடைவிடாத எழுத்து. மகாபாரதத்தின் இண்டு இடுக்குகளில் எல்லாம் கற்பனையை ஓடவிட்டிருக்கிறார். ஏழெட்டு வருஷம் கை சலிக்காது எழுதுவதே பெரிய விஷயம். என்னென்னமோ மன உளைச்சல்களில் மனம் சலித்துப் போய் என்னால் முழுவதுமாக படிக்கக் கூட முடியவில்லை. இவர் மனம் சலிக்காது எழுதி இருக்கிறார். Quantity ஒன்றை மட்டுமே வைத்து இது அவருடைய சாதனை என்று சொல்லிவிடலாம். இந்த ராட்சசனைப் பற்றி பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

Quality-யும் உயர்தரத்தில்தான் இருக்கிறது (நான் படித்த வரையில்). குறிப்பாக – தமிழ் எழுத்தாளர்களில் 3 பேர் மேதைகள், அதில் ஜெயமோகன் ஒருவர் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவராலேயே இனிமேல் அவர் நீலம் பகுதியில் தொட்ட உச்சத்தை மீண்டும் தொட முடியுமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் நீலம் பகுதியை நான் முழுவதாகப் புரிந்து கொண்டுவிட்டேன் என்று சொல்லமுடியாது. நீரில் மூழ்கி இருக்கும் பனிப்பாறை, எனக்குத் தெரிவது நீருக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் பகுதிதான். அடியில் பெரும்பாறை இருக்கிறது என்று தெரியும், ஆனால் எவ்வளவு பெரிது என்று சரியாகத் தெரியாது.

என் கண்ணில் முதற்கனல் ஒரு சாதனை. அதை மழைப்பாடலில் மிஞ்சினார். வண்ணக்கடல் அதையும் தாண்டியது. நீலம் இன்னொரு படி மேலேறி வேறு லெவலுக்குப் போனது. அதற்குப் பிறகு அந்த உச்சத்தை அவராலேயே மீண்டும் அடையமுடியவில்லை என்றுதான் கருதுகிறேன்.

நான் மீண்டும் மீண்டும் படிப்பது வண்ணக்கடல். மன உளைச்சல் அதிகமாக இருக்கும்போது மீள்வதற்காக ஏதாவது ஒரு அத்தியாயத்தை படிப்பேன்.

என் மன உளைச்சல்களாலோ, இல்லை மகாபாரதப் பாத்திரங்களைப் பற்றி என் பிம்பங்களிலிருந்து அவர் அவ்வப்போது சற்று விலகுவதாலோ, இல்லை எனக்கு தர்க்கரீதியான முரண்பாடுகள் சில அவ்வப்போது தெரிந்ததனாலோ நீலத்துக்குப் பிறகு நான் அவ்வப்போதுதான் படித்தேன். என் காக்காய்கடி படிப்பில் குறிப்பாக துரோணரை தேவையில்லாமல் குறைக்கிறார், கர்ணனுக்கு அளவுக்கு அதிகமான பில்டப் கொடுக்கிறார், இருமை/ஆடிப்பாவை என்ற கருத்தை எல்லா இடங்களிலும் வலிந்து புகுத்துகிறார் (அர்ஜுனன் கர்ணன், பீமன் துரியோதனன் என்றால் சரிதான், கண்ணன் கணிகர், சாத்யகி கிருதவர்மன் என்று பல…) என்று தோன்றியது. சில சமயம் எனக்கு மெகாசீரியல் போல இழுக்கிறார் என்றும் தோன்றத்தான் செய்தது. தினமும் படிக்காமல் ஒரே மூச்சில் படித்தால் இழுக்கிறார் என்று தோன்றாது என்று நினைக்கிறேன்.

ஆனால் மனிதன் கரப்பான் பூச்சியாக எப்படி மாறமுடியும், Metamorphosis-ஐ சிறுகதையாக எழுதி இருந்தால் போதாதா, நாவலாக இழுக்க வேண்டுமா என்றும் கேட்கலாம். Guernica ஓவியத்தில் இடது மூலையில் இரண்டு விரலை வரைந்தால் போதாதா, ஐந்தும் வேண்டுமா மாதிரி எண்ணம்தான் அது. மேதைகளின் படைப்பில் நாம் கண்டுபிடிக்கும் குறைகள் நம்மைத்தான் நமக்கு அடையாளம் காட்டுகின்றன.

குறைகளே அற்ற படைப்பு, விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட படைப்பு என்று நான் சொல்ல வரவில்லை. இத்தனை பெரிய நாவலில் குறைகள் இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் பொருட்படுத்தக் கூடிய குறைகள் இருக்கும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் எழுதுவதில் சிறு உறுத்தல் இருந்தாலும் எனக்கு பூதாகாரமாகத் தெரியும் என்பதும் உண்மைதான்.

படிப்பதற்கு நிறைய இருக்கிறது. அது ஒரு சின்ன சந்தோஷம்…

ராட்சசனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: வெண்முரசு பக்கம்

வெண்முரசு விழாவுக்கு வாழ்த்துக்கள்

venmurasu_release_function

நண்பர் செந்தில்குமார் தேவன் வெண்முரசுவுக்குநீ ஒரு வாழ்த்து அனுப்பலாமே என்று கேட்கும்வரை எனக்காகத் தோன்றவே இல்லை. என்னையும் என் மகாபாரதப் பித்தையும் ஜெயமோகனுக்கு ஓரளவு தெரியும், இந்த வரிசையை மிகவும் ரசித்துப் படித்திருப்பேன், படிப்பேன், இது தொடர வேண்டும் என்று முழு மனதுடன் விரும்புவேன், ஒவ்வொரு நாளும் அடுத்த பகுதியைப் படிக்க ஆவலோடு காத்திருப்பேன் என்பதை எல்லாம் அவர் நன்றாகவே அறிவார். இதில் வெளி உலகத்துக்காக ஒரு வாழ்த்தைப் பதிவு செய்ய வேண்டுமா, ஊரறிந்த பார்ப்பானுக்கு பூணூல் எதற்கு என்று கொஞ்சம் யோசித்தேன். வாழ்த்து அவர் பூரித்துப் போய்விடுவார் என்பதற்காக அல்ல, என் மன நிறைவை வெளிப்படுத்த என்று புரிந்த அடுத்த கணம் எழுத ஆரம்பித்துவிட்டேன்.

மகாபாரதமே உலகின் ஆகச் சிறந்த காவியம் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். உண்மை மனிதர்களால், ஆனால் அசாதாரண மனிதர்களால் நிறைந்தது, அந்த மனிதர்கள் முன் எப்போது இருக்கும் இரண்டு வழிகள், அவர்கள் தேர்வுகள் அந்தப் பாத்திரங்களை என் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாற்றி பல வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கு மூன்று வயது இருக்கும்போது இறந்து போன என் பாட்டியின் மடியில் அமர்ந்து பீமனைப் பற்றி கதை கேட்டதே இன்னும் மறக்கவில்லை. பீமனும் கர்ணனும் சகுனியும் துரோணரும் பூரிஸ்ரவசும் பகதத்தனும் கடோத்கஜனும் எனக்கு அண்டை வீட்டு மனிதர்கள் மாதிரிதான், அடிக்கடி அந்தப் பக்கம் போய் வருவேன்.

மகாபாரதத்திற்கு சிறந்த மறுவாசிப்புகள் இருக்கின்றனதான். ஆனால் அவற்றுள் பல பாரதத்தின் ஒரு சிறு கிளைக்கதையை எடுத்துக் கொண்டு விரிக்கின்றன. (காண்டேகரின் யயாதி, எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி). பாரதத்தின் மொத்தக் கதையையும் பேச முற்படுபவையும் தங்களை ஒரு கோணத்தில் குறுக்கிக் கொள்கின்றன. (பர்வாவின் யதார்த்தச் சித்தரிப்பு, ரெண்டாமூழமில் பீமனின் கோணம், யுகாந்தரில் ஐராவதி கார்வேயின் சில பல கேள்விகள்). பாரதத்தின் அகண்ட வீச்சு பெரும் எழுத்தாளர்களைக் கூட பயமுறுத்தி இருக்க வேண்டும், அவர்களின் மொத்த வாழ்நாளும் ஒரே தளத்தில் கழிந்துவிடுமோ என்ற பயம் காவியங்கள் படைக்கும் திறம் படைத்தவர்களைக் கூட மகாபாரதத்தின் முழுமையான மறுவாசிப்பு முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருக்கச் செய்திருக்க வேண்டும்.

மேலும் ஜீனியஸ் எழுத்தாளர்களுக்குக் கூட ஒரு காவியத்தை மறு ஆக்கம் செய்வது என்பது சுலபமல்ல. புதுமைப்பித்தனோ, அசோகமித்ரனோ இதை முன்னெடுக்க முடியாது. அவர்களால் இதன் ஒரு (சிறு) பகுதியை இலக்கியம் ஆக்க முடியலாம். புதுமைப்பித்தன் செய்தும் இருக்கிறார். (சாப விமோசனம்) ஆனால் முழு பாரதத்தின் மறுவாசிப்பு என்பதற்கு வேறு மாதிரியான mindset வேண்டும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் எழுதும் திறம் வேண்டும்!

jeyamohanஜெயமோகன் தன் வாழ்வின் சரியான நேரத்தில் சரியான தளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார். விஷ்ணுபுரத்தையே இது வரை வந்த தமிழ் நாவல்களில் சிறந்ததாகக் கருதுகிறேன். இந்த முயற்சி அதையும் விஞ்சும் அறிகுறிகள் தெரிகின்றன. (குறிப்பாக நீலம் பகுதி). ஜெயமோகனுக்கு இறைவன் நீண்ட ஆயுளும் தளராத உற்சாகமும் சோர்வடையாத மனமும் அருளி இந்த முயற்சி பாரதத்துக்கும் ஜெய்மோகனுக்கும் பெருவெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஆனால் ஒன்று – பாற்கடலைக் குடிக்க வந்த பூனை என்று கம்பன் தன்னைப் பற்றீ சொல்லிக் கொண்டானாம். பாரதமும் பாற்கடல்தான், ஜெயமோகனாலும் கரைத்து குடித்துவிட முடியாது. உதாரணத்துக்கு ஜெயமோகன மகாபாரதத்தில் ஒரு சின்ன “முரண்பாடு”; துருபதனின் வீழ்ச்சியை கண்டதும் எழும் துரோணரின் புன்னகை அர்ஜுனனின் மனதில் இருக்கும் பீடத்திலிருந்து துரோணரை இறக்கிவிடுகிறது. ஆனால் கர்ணன் அவரது குருகுலத்தில் அவமதிக்கப்படும்போதோ, அல்லது ஏகலைவனின் கட்டை விரல் வெட்டப்படும்போதோ அர்ஜுனனுக்கு அவரிடமோ, பீமனிடமோ, எவரிடமும் மனவிலக்கம் ஏற்படுவதில்லை!

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், வெண்முரசு பக்கம்

ஜெயமோகனின் ‘வெண்முரசு’

மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்
10 வருடங்கள் – தினமும் இணையத்தில்
2014 புத்தாண்டு முதல்…

Venmurasu

வியாசனின் பாதங்களில் – ஜெயமோகன் .

இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன்.
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
 இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனதுவியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்

ஜெயமோகன்

www.jeyamohan.in