பி.ஜி. உட்ஹவுசின் இக்கன்ஹாம் நாவல்கள்

என் பதின்ம வயதுகளின் பெரிய சந்தோஷங்களில் உட்ஹவுஸ் நாவல்களும் ஒன்று. 14-15 வயதில்தான் ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். 16 வயது வாக்கில் படித்த முதல் உட்ஹவுஸ் புத்தகம் – Leave it to Psmith – எனக்குப் பெரிதாகப் பிடிக்கவில்லை. ஆனால் தற்செயலாக அடுத்த புத்தகத்தை – Right Ho, Jeeves – படிக்க ஆரம்பித்தேன், கீழே வைக்கவே முடியவில்லை. பல முறை பஸ்ஸிலும் ரயிலிலும் அவரது எழுத்துக்களைப் படித்துவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் கெக்கெபிக்கே என்று சிரித்திருக்கிறேன். இது யாரடா கிறுக்கு என்று எல்லாரும் திரும்பிப் பார்த்தாலும் கட்டுப்படுத்த முடிந்ததில்லை.

ஆங்கிலமே அப்போதுதான் அறிமுகம் ஆகியிருந்த நேரம் அது. உட்ஹவுசின் வார்த்தை விளையாட்டுக்களை பெரிதும் ரசித்திருக்கிறேன். சக உட்ஹவுஸ் ரசிகன்/ரசிகை என்ற காரணத்தால் சிலரிடம் நட்பு உண்டாகி இருக்கிறது.

சில வருஷங்களில் உட்ஹவுசின் ஃபார்முலா தெரியத் தொடங்கியது. ஒரே கதையைத்தான் திருப்பி திருப்பி எழுதி இருக்கிறார் என்று புரிந்தது. ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி அது குறையாகத் தெரியவில்லை, அதனால் என்ன என்றுதான் தோன்றுகிறது. அவரே ஒரு முன்னுரையில் சொல்லி இருக்கிறார் – ‘என் போன புத்தகத்தைப் படித்தவர்கள் பழைய காரக்டர்களையே வேறு பேர்களில் புகுத்தி இருக்கிறார் என்று குறை சொன்னார்கள். அதனால் இந்தப் புத்தகத்தில் ஒரிஜினல் பேரிலேயே வருகிறார்கள்!’

உட்ஹவுசின் உலகம் இன்று ஆங்கிலேயர்களுக்கே அன்னியமானதுதான். 1920-30களின் சமூக அந்தஸ்துள்ள மேல்தட்டு பிரபு குடும்பங்களின் உலகம். அது 1920-30களில் இருந்ததா என்பதே எனக்கு சந்தேகம்தான். ஆனால் உட்ஹவுசை யாரும் பாத்திரங்களின், கதைகளின் நம்பகத்தன்மைக்காகப் படிப்பதில்லை. அந்த உலகத்தை, அதன் எழுதப்படாத விதிகளை, கலாச்சாரக் கூறுகளை நம்மை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் அவரின் வெற்றி.

அந்த உலகத்தினர் ஏறக்குறைய ஒரு கல்லூரி விடுதி மாணவர்களின் மனநிலையில்தான் இருக்கிறார்கள். அதன் நாயகர்கள் எல்லாருக்கும் juvenile மனநிலைதான். அவர்கள் திடீரென்று வந்து உங்கள் லுங்கியை உருவிவிடலாம். தண்ணி அடித்துவிட்டு உளறலாம். பெர்டி ஊஸ்டரும், ஸ்மித்தும், போங்கோ ட்விஸில்டனும், மாண்டி பாட்கினும் உக்ரிட்ஜும் கஸ்ஸி ஃபிங்க்-நாட்டிலும், ஸ்டிஃப்பி பிங்கும், மாடலைன் பாஸ்ஸெட்டும், ஹொனொரியா க்ளாசப்பும் அப்படிப்பட்டவர்கள்தான். மாணவர்கள் மட்டுமல்ல, வாத்தியார் மாதிரியும் சில பேர் உண்டு. ஆள விடுங்கப்பா என்று நினைக்கும் வாத்தியார் மாதிரி சில பேர், மாணவர்களை, அவர்கள் அடிக்கும் லூட்டியை சப்போர்ட் செய்யும் வாத்தியார் மாதிரி சில பேர் என்று ஒரு உலகம்.

உட்ஹவுஸ் என்றால் எல்லாருக்கும் நினைவு வருவது ஜீவ்ஸும் பெர்டி ஊஸ்டரும்தான். ஆனால் அவர்களை விட என்னை அதிகமாக கவர்ந்தவர்க்ள் ஸ்மித் (Psmith), லார்ட் இக்கன்ஹாம் மற்றும் எம்ஸ்வொர்த்.

இக்கன்ஹாம், சர் காலஹாட் எல்லாரும் ஒரே அச்சுதான். வயதானாலும், மனதளவில் இளைஞர்கள் juveniles-தான். இன்றைய இளைஞர்களை சப்போர்ட் செய்பவர்கள். கொஞ்சம் மறை கழன்றவர்கள். அடுத்தவர்களை மாட்டிவிடுவார்கள். அதுவும் இக்கன்ஹாமுக்கு வேறு பெயரில் ஒரு வீட்டுக்குப் போய் தங்குவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி.

Uncle Fred Flits By (1935) என்ற சிறுகதையில்தான் இக்கன்ஹாம் அறிமுகம் ஆகிறார். முதல் கதையிலேயே ஒரு மணி நேரத்துக்குள் மிருக வைத்தியராகவும், வீட்டு சொந்தக்காரர் ராடிஸ் ஆகவும் ஆள் மாறாட்டம். இதையெல்லாம் விவரிக்க முடியாது. சிறுகதையை இங்கே படிக்கலாம், தவற விடாதீர்கள்!

Uncle Fred in the Springtime (1939) இக்கன்ஹாம் எம்ஸ்வொர்த் வசிக்கும் ப்ளாண்டிங்க்ஸ் மாளிகைக்கு தான்தான் மனநல மருத்துவர் ராடரிக் க்ளாசப் என்று ஆள் மாறாட்டம் செய்கிறார். கதை எல்லாம் விஷயமே இல்லை, ஆனால் அவர் கட்டமைக்கும் காட்சிகள்! இக்கன்ஹாம் ப்ளாண்டிங்க்சுக்குப் போக ரயில் ஏறும்போது உண்மையான க்ளாசப்பும் அதே மாளிகையின் அழைப்பை ஏற்று அதே ரயிலில் ஏறுகிறார். அதை சமாளித்துவிட்டு ப்ளாண்டிங்க்சில் இறங்கினால் அவரை மாளிகைக்கு அழைத்துப் போக வந்திருக்கும் போஷம்மை நேற்றுதான் இக்கன்ஹாம் ஜாலிக்காக ஏமாற்றி இருக்கிறார். போஷம்மை சமாளித்து வீட்டுக்குப் போனால் இவரை நன்றாகத் தெரிந்த ஹொரேஸ் டேவன்போர்ட் அங்கே விருந்தாளியாக வந்திருக்கிறான். டேவன்போர்ட்டுக்கு மனப்பிரமை என்று சமாளித்துவிட்டு நிமிர்ந்தால் க்ளாசப்பை நன்றாகத் தெரிந்த பாக்ஸ்டர் வந்து இவரைப் பிடிக்கிறான்! பிரமாதமாக கட்டமைக்கப்பட்ட சம்பவங்கள். ஒரு கட்டத்தில் நம்மை தலையை பிய்த்துக் கொள்ள வைத்துவிடுவார்! இன்றைய காலகட்டத்தில் எனக்குத் தெரிந்து கிரேசி மோகன் ஒருவரால்தான் இந்த மாதிரி சம்பவங்களை அமைத்து கலக்க முடியும். என்ன, உட்ஹவுசின் கேளிக்கை எழுத்து கேளிக்கை எழுத்தின் எல்லைகளை தாண்டிவிடுகிறது, இலக்கியத்தின் மிக அருகிலாவது வருகிறது. கிரேசி மோகனால் கேளிக்கை எழுத்தை உருவாக்க முடியும், ஆனால் இலக்கியத்தின் எல்லைகளைத் தொட அவர் இன்னும் நெடுந்தூரம் போக வேண்டும்…

Uncle Dynamite (1948) நாவலில் மீண்டும் ஆள் மாறாட்டம். ஆள் மாறாட்டம் செய்கிறார் என்று தெரிந்தும் அதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் போலீஸ்காரர் பாட்டர் மிகச் சிறப்பான பாத்திரம். ஒரு கட்டத்தில் தான்தான் மேஜர் ப்ளாங்க் என்று இக்கன்ஹாம் ப்ளாங்கிடமே அறிமுகப்படுத்திக் கொள்கிறார்!

Cocktail Time (1958) நாவலில் பாரிஸ்டர் பாஸ்டேபிள் சர்ச்சையைக் கிளப்பும் ஒரு புத்தகத்தை புனைபெயரில் எழுதுகிறார். அவருக்கு தேர்தலில் நிற்க வேண்டும், இந்தப் புத்தகத்தை அவர்தான் எழுதினார் என்று தெரிந்தால் ஜெயிக்க முடியாது. இக்கன்ஹாமின் ஆலோசனையால் தன் உறவினன் காஸ்மோ விஸ்டத்திடம் பேசி அவனை இந்தப் புத்தகத்தை எழுதியது தான்தான் என்று சொல்ல வைக்கிறார். ஒரு ஏமாற்று கணவன் மனைவியின் ஆலோசனையில் காஸ்மோ பாஸ்டேபிளுக்கு தான் உண்மையைச் சொல்லிவிடப் போவதாக ஒரு கடிதம் எழுதி மிரட்டுகிறான். கடிதம் இக்கன்ஹாம் கையில் கிடைக்கிறது. இதற்கிடையில் புத்தகத்தை திரைப்படமாக்க நிறைய பணம் வருகிறது. காஸ்மோ அந்தக் கடிதத்தை திருப்பிப் பெற்றால்தான் தனக்கு அந்தப் பணம் வருமென்று அதைத் தேடுகிறான். ஏமாற்று கணவன் மனைவியும் தேடுகிறார்கள். பாஸ்டேபிளும் தேர்தலாவது மயிராவது பணம்தான் வேண்டும் என்று அதைத் தேடுகிறார். இக்கன்ஹாம் என்ன செய்கிறார் என்பதுதான் கதை.

Service with a Smile (1961) நாவலில் இக்கன்ஹாமையும் ப்ளாண்டிங்ஸ் மாளிகைக்கு அழைத்து வருகிறார். எம்ஸ்வொர்த்தின் பன்றியைக் கடத்தத் திட்டம், காதலர்களை இணைக்க ஆள் மாறாட்ட வேலைகள், எனக்கு மிகவும் பிடித்த ‘வில்லன்’ டன்ஸ்டேபிள் பிரபு என்று சிறப்பாக எழுதப்பட்ட நாவல்.

இக்கன்ஹாம் கதைகளில் உட்ஹவுஸ் தன் பாணி எழுத்தின் உச்சத்தை அடைந்திருக்கிறார். Uncle Fred Flits By சிறுகதையை மட்டுமாவது படித்துப் பாருங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உட்ஹவுஸ் பக்கம்