சூசன் க்ளாஸ்பெல் எழுதிய A Jury of Her Peers (1917) ஓரளவு பிரபலமான சிறுகதை. இணையத்தில் கிடைக்கிறது.
நான் அதை முதன்முதலாகப் படித்தது ஒரு துப்பறியும் சிறுகதைகள் தொகுப்பில். யாரடா இது அறிவுக் கொழுந்து இந்த சிறுகதையை துப்பறியும் சிறுகதை என்று வகைப்படுத்தி இருக்கிறாரே என்று சிரித்துக் கொண்டேன். கதையில் கொலை, ஏன் கொலை என்ற ஆய்வு எல்லாம் இருக்கிறதுதான், அதனால் அது துப்பறியும் கதை ஆகிவிடாது.
க்ளாஸ்பெல் ஒரு மெய்நிகர் அனுபவத்தை கண் முன் கொண்டு வருகிறார். சின்ன ஊர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்று வைத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு திருமணம், பிறகு குழந்தைகள், வீட்டு வேலைகள் தவிர வேறு எதுவும் வாழ்க்கை கிடையாது. ஆண்களுக்கும் பெரிய வாய்ப்புகள் இல்லைதான், என்றாலும் அவர்கள் உலகம் இன்னும் கொஞ்சம் விசாலமானது என்று சுலபமாக ஊகிக்க முடிகிறது. அந்த உலகத்தை சின்ன சின்ன அவதானிப்புகள் – பழங்களை வைத்து ஜாம் செய்வது, ரொட்டி (bread) உருவாக்குவது, திருமணத்துக்கு முன் சர்ச் இசைக்குழுவில் பாடும் பெண், அங்கங்கே உடைந்திருக்கும் நாற்காலி, தொலைபேசி தொடர்பு பெறுவதில் உள்ள பிரச்சினைகள் – மூலம் காட்டிவிடுகிறார்.
என்ன கதை? திருமதி ரைட் கணவனை கொன்ற குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்கை நடத்த வேண்டிய அரசு வக்கீல் ஹெண்டர்சன் இன்றுதான் கொலை நடந்த ரைட் இல்லத்திற்கு போகிறார். அவரோடு காவல்துறை அதிகாரி (sheriff) பீட்டர்ஸ், கொலை பற்றி விவரம் சொன்ன சாட்சி ஹேல். சிறையில் இருக்கும் அவருக்கு சில துணிகளை எடுத்து வர ஷெரிஃபின் மனைவி திருமதி பீட்டர்ஸும் போகிறார். திருமதி பீட்டர்ஸுக்கு துணையாக முக்கிய சாட்சியின் மனைவி திருமதி ஹேலும் வருகிறார். ரைட் இல்லம் அக்கம்பக்கத்தில், அருகில் யாரும் இல்லாத வீடு. கணவர் ஹேல் முந்தைய நாள் தொலைபேசி தொடர்பு பெறுவது விஷயமாக ரைட்டைப் பார்த்து பேச வந்திருக்கிறார். அப்போது திருமதி ரைட் வினோதமாக நடந்து கொண்டிருக்கிறார், சிரிக்கிறார், ஏதோ பேசுகிறார். தான் அருகில் படுத்திருக்கையிலேயே யாரோ தன் கணவன் கழுத்தில் கயிற்றை இறுக்கி கொன்றுவிட்டதாக சொல்கிறார். பிணத்தைப் பார்த்துவிட்டு ஹேல் அதிகாரிகளை வரவழைக்கிறார். திருமதி ரைட் சிறைப்படுத்தப்படுகிறார். அரசு வக்கீல் அடுத்த நாள் வந்திருக்கிறார். எதற்காக கொலை (motive) என்று இந்த ஆண் அதிகாரிகளுக்கு புரியவில்லை. அது தெரியாவிட்டால், வழக்கில் சரியாக விளக்கப்படாவிட்டால், பொதுமக்கள் பஞ்சாயத்தார் (jurors) திருமதி ரைட்டை விடுதலை செய்துவிட நிறைய வாய்ப்பிருக்கிறது.
திருமதி ரைட் தன் வீட்டை வைத்திருக்கும் நிலையைப் பற்றி ஆண்கள் நக்கல் அடிக்கிறார்கள். பெண்களை இயல்பாக மட்டம் தட்டுகிறார்கள். திருமதி ஹேல் ஒரு காலத்தில் திருமதி ரைட்டின் தோழி. சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணாக அவரை திருமதி ஹேல் நன்றாகவே அறிவார். மகிழ்ச்சி இல்லாத திருமணம், குழந்தைகள் இலலாமை, மனைவியை ஒரு பொருட்டாக மதிக்காத கணவன் என்று திருமதி ரைட்டின் வாழ்க்கை ஒளியே இல்லாத வெறுமையாக மாறிவிட்டது அவருக்கு தெரியும். திரு ரைட் திருமதி ரைட வளர்த்த பாடும் பறவையை கழுத்தைத் திருகி கொன்றுவிட்டது அவர்கள் கண்ணில் படுகிறது. அது தெரிந்தால் எதற்காக கொலை என்று புரிந்துவிடும். திருமதி பீட்டர்ஸ் ஏறக்குறைய சட்டத்தின் மனைவி. திருமதி ஹேலுக்கு தான் நாலு முறை வந்து தன் தோழியைப் பார்க்கவில்லையே, பார்த்திருந்தால் அவளுக்கு கொஞ்சமாவது மனச்சாந்தி கிடைத்திருக்குமே என்ற குற்ற உணர்வு இருக்கிறது. அடுத்தது என்ன?
கதையின் பலமே பத்து பக்கத்தில் ஆண்களின் உலகம், பெண்களின் உலகம் என்று இரண்டு உலகம் இருப்பதை காட்டிவிடுவதுதான். ஆண்கள் பெண்களை மட்டம் தட்டுவது அவர்களை இழிவுபடுத்த அல்ல, அவர்கள் கொஞ்சம் குறைவு என்று ஆழ்மனதில் பதிந்திருப்பதால்தான். நாம் நமது வளர்ப்புப் பிராணிகள் மேல் எத்தனை பிரியம் வைத்திருந்தாலும் அவர்கள் நமது அறிவுத்தரத்தில் (intellectual) இல்லை என்று நமக்குத் தெரியும், அவற்றைக் கொஞ்சும்போதும் அது வெளிப்படும், அது போலத்தான். திருமதி ரைட்டின் உலகம் வெறுமையானது. அது வெறுமையானது என்று அனேகமாக அவரது கணவனுக்கு புரிந்து கூட இருக்காது. அதில் அந்தப் பாடும் பறவை கொண்டு வரும் சிறு வெளிச்சம். இவற்றை அருமையாக சித்தரித்திருக்கிறார்.
கதையில் குறியீடுகள் நிறைய. கொல்லப்பட்ட பாடும் பறவை திருமதி ரைட்டேதான் என்பது தெளிவு. ஜாம் செய்ய பழம் வைத்திருந்த புட்டிகள் குளிரில் வெடித்துப் போவது ரைட் குடும்பத்தில் வெறுமையால் மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே போவதைத்தான் குறிக்கிறது. சிறுகதை எழுதப்பட்ட காலத்தில் பெண்கள் ஜூரியாக இருக்க முடியாது. சிறுகதையின் தலைப்பும் திருமதி ரைட்டின் Peers – சக பெண்கள் – என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைப் பற்றித்தான். பொதுவாக குறியீடுகள் எனக்கு துருத்திக் கொண்டுதான் தெரியும், செயற்கையாக இருக்கும். ஆனால் இந்தச் சிறுகதையில் பாந்தமாக இருக்கிறது.
க்ளாஸ்பெல் முதலில் இந்தக் கதையை ஒரு ஓரங்க நாடகமாக – Trifles – எழுதி இருக்கிறார். பிறகு இதையே 1917-இல் சிறுகதையாக மாற்றி இருக்கிறார்.
க்ளாஸ்பெல் பத்திரிகை நிருபராக பணி ஆற்றியவர். பிற்காலத்தில் ஒரு நாடகத்துக்காக புலிட்சர் பரிசு வென்றவர். வாழ்ந்த காலத்தில் பிரபலமாக இருந்திருக்கிறார். ஒரு கதையை வைத்து சொல்லிவிட முடியாதுதான், ஆனால் அவர் மறந்துவிட வேண்டிய எழுத்தாளர் அல்லர் என்றுதான் தோன்றுகிறது.
க்ளாஸ்பெல் இதைப் போலவே ஒரு வழக்கை பற்றி – 1900-இல் நடந்த ஜான் ஹொஸ்ஸாக் கொலை – பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி இருக்கிறார். முதலில் ஹொஸ்ஸக்கின் மனைவி மார்கரெட்தான் கொலைகாரி என்று பொருள் கொள்ளும்படிதான் எழுதிக் கொண்டிருந்தாராம். ஆனால் நாடகத்தில் வருவது போலவே ஹொஸ்ஸாக்கின் வீட்டுக்குப் போய் ஒரு முறை பார்த்த பிறகு அவரது அறிக்கைகளின் (reports) தொனி முழுவதாக மாறிவிட்டதாம்.
சிறுகதையைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்
தொடர்புடைய சுட்டிகள்:
இணையத்தில் A Jury of Her Peers சிறுகதை
சூசன் க்ளாஸ்பெல் – விக்கி குறிப்பு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...