பாசர்: மகாபாரத நாடகங்கள்

பாசரின் மகாபாரத நாடகங்கள் எனக்கு தெருக்கூத்துகளை நினைவுபடுத்துகின்றன. நேரடியான, எளிமையான பாத்திரப் படைப்பு. சில சமயம் அவரது கற்பனையில் எழுந்த சம்பவங்கள். எனக்கு மகாபாரதப் பித்து உண்டு; என்னை இவை கவர்வதில் என்ன வியப்பு?

பாசர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்காரராக இருக்கலாம். காளிதாசர் அவரைப் பற்றி குறிப்பிடுவதால் காளிதாசருக்கு முந்தையவர் என்பது தெளிவு. பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திரத்தின் விதிமுறைகள் இவரது நாடகங்களில் மீறப்படுகின்றன, அதனால் இவர் பரத முனிவருக்கும் முந்தையவராக இருக்கலாம்.

பாசரின் நாடகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை சுவாரசியமான நாவலாகவே எழுதலாம். கணபதி சாஸ்திரி பாசரின் 13 நாடகங்களை ஏட்டுச்சுவடி வடிவில் கேரளத்தின் ஏதோ ஒரு கிராமத்தில் கண்டெடுத்திருக்கிறார். இவை கொடியெட்டம் (சமஸ்கிருதத் தெருக்கூத்து வடிவம் போலிருக்கிறது) நிகழ்ச்சிகளில் நடிப்பதற்காக எழுதப்பட்டவையாம். பாசரின் மூலவடிவத்தை நடிப்பதற்கேற்ப மாற்றி இருக்கலாம் என்கிறார்கள். சாஸ்திரிதான் இவை பாசரின் நாடகங்கள் என்று நிறுவி பதித்திருக்கிறார். பிற்காலத்தில் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை பதித்தவரும் இவரேதானாம். சாஸ்திரிக்கு முன்னால் ஸ்வப்னவாசவதத்தம் நாடகம் மட்டும் கிடைத்திருக்கிறது.

13-இல் ஆறு மகாபாரத நாடகங்கள். மத்யமவியயோகம், பஞ்சராத்ரம், தூதவாக்கியம், தூதகடோத்கஜம், கர்ணபாரம், உறுபங்கம்.

பாசரின் நாடகங்கள் பொதுவாக அளவில் சிறியவை. ஓரிரு காட்சிகள்தான். அவருடைய திறமை வெளிப்படுவது பாத்திரப் படைப்பில் அவர் காட்டும் வேறுபாடுகள்தான். உறுபங்கத்தின் துரியோதனன் அவலச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்துகிறான். தொடை உடைந்து வீழ்ந்தாலும் அவன் மேன்மை தெரிகிறது. தூத கடோத்கஜம் நாடகத்தில் கடோத்கஜனின் வீரம் பிரமாதமாக வெளிப்படுகிறது. தூதவாக்கியத்தில் கிருஷ்ணனும் துரியோதனனும் பேசும் காட்சிகளில் நெருப்பு பறக்கிறது. மத்யமவியயோகத்தில் மத்யமன் என்ற வார்த்தையை வைத்து விளையாடுகிறார். அதிலும் கடோத்கஜன் பாத்திரம் அருமை.

எல்லாமே நல்ல நாடகங்கள்தான். ஏதாவது ஒன்றைப் படித்துப் பார்க்க வேண்டுமென்றால் நான் பரிந்துரைப்பது உறுபங்கம். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது பஞ்சராத்ரம். படிப்பதை விட பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

நாடகங்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே.


மத்யமவியயோகத்தின் ஆரம்பம் பகாசுரன் கதையை நினைவுபடுத்துகிறது. பகாசுரனுக்கு பதில் கடோத்கஜன். தன் அன்னை இடும்பியின் பசி தீர்க்க அவனுக்கு ஒரு மனித உடல் வேண்டும். ஒரு பிராமணக் குடும்பத்தைப் பிடித்துக் கொள்கிறான். அதில் ஒருவர் மாற்றி ஒருவர் நான் போகிறேன் நான் போகிறேன் என்கிறார்கள். கடைசியில் போவது நடுமகன் – மத்யமன். மத்யமனைக் கூப்பிட்டால் மத்யம பாண்டவன் – பீமன் – வருகிறான்!


பஞ்சராத்ரத்தின் முதல் வரி அருமை.

May he protect us all: he whose names are Bhishma and Drona, Karna and Arjuna, Duryodhana and Bhima, Yudhishthira and Shakuni, Uttara, Virata as well as Abhimanyu.

எல்லா நாடகமும் ஒரே மாதிரி ஆரம்பிக்கிறது. நாடகத்தின் “தயாரிப்பாளர்” கடவுளரை வாழ்த்துவார்; என்னவோ சத்தம் கேட்கிறதே என்பார். அந்த சத்தம்தான் நாடகப் பாத்திரங்களின் அறிமுகக் காட்சி. இரண்டாவது, மூன்றாவது முறை படிக்கும்போது தானாக புன்னகை வருகிறது.

எனக்கு மிகவும் பிடித்த நாடகம் பஞ்சராத்ரம். அது கதையையே மாற்றுகிறது. அஞ்ஞாதவாசம் நடந்து கொண்டிருக்கிறது. துரோணர் துரியோதனனிடம் குருதட்சிணை கேட்கிறார் – என்ன குருதட்சிணை? பாண்டவர்களுக்கு நாட்டை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்! துரியோதனனுக்கு மனமில்லை. ஆனால் துரோணரை மறுக்க முடியாது. அதனால் ஐந்து நாட்களுக்குள் பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் கொடுத்துவிடுகிறேன் என்கிறான். துரோணர் அது எப்படி ஐந்து நாளில் கண்டுபிடிக்க முடியும் என்கிறார். அப்போது கீசகன் இறந்த செய்தி கிடைக்கிறது. பீஷம்ர் இதை பீமன்தான் செய்திருப்பான் என்று புரிந்து கொள்கிறார். துரோணரை ஒத்துக் கொள்ளச் சொல்கிறார். விராடன் மீது படையெடுக்கச் சொல்கிறார். துரியோதனன் தரப்பில் போரிடும் முக்கிய வீரன் அபிமன்யு! காண்டீபத்தின் ஒலி கேட்டதும் துரோணரும் பீஷ்மரும் திரும்பிவிடுகிறார்கள். கௌரவப் படை தோற்கிறது. ஆனால் சாதாரண வீரன் தோற்றத்தில் இருக்கும் பீமன் அபிமன்யுவை “சிறைப்பிடிக்கிறான்” – உண்மையில் பாசத்தால் அவனைத் தூக்கிச் சென்றுவிடுகிறான். அபிமன்யு சிறைப்பட்டான் என்றதும் துரியோதனன் என் சகோதரர்களோடு நான் சண்டை போடலாம், ஆனால் அபிமன்யுவை வெளியாட்கள் சிறைப்பிடிப்பதை ஒரு நாளும் ஏற்க முடியாது என்று பொங்கி எழுகிறான். சகுனியும் கர்ணனும் அவனை முழுமனதாக வழிமொழிகிறார்கள். பீஷ்மர் ஓடும் தேரின் குதிரைகளை சாதாரண வீரன் கையால் பிடித்து நிறுத்தினான் என்றதும் அது பீமன் என்று கண்டுகொள்கிறார். அதற்குள் உத்தரனே அபிமன்யு-உத்தரை திருமணச் செய்தியோடு வருகிறான். துரியோதனனும் பாண்டவர்களுக்கு அவர்கள் ராஜ்யத்தை திரும்பித் தருகிறான்!

இந்த நாடகத்தின் முதல் காட்சியில் பீஷ்மரும் துரோணரும் பேசிக் கொள்வது மிகச் சிறப்பாக வந்திருக்கிறது.


தூதவாக்கியம் கண்ணன் தூது. துரியோதனனும் கண்ணனும் பொங்குவது நன்றாக வந்திருக்கிறது.


தூதகடோத்கஜம் வியாச பாரதத்தில் கிடையாது. அபிமன்யு வதத்திற்குப் பிறகு கடோத்கஜன் அர்ஜுனன் சபதத்தைப் பற்றி கௌரவர்களுக்கு அறிவிக்கிறான். கடோத்கஜன் பாத்திரம் அருமையாக வந்திருக்கிறது.


கர்ணபாரம் கர்ணன் இந்திரனுக்கு கவச குண்டலங்களைத் தானம் தரும் காட்சி. அதை 17-ஆம் நாள் போரின் ஆரம்பத்தில் வடிவமைத்திருக்கிறார்.


உறுபங்கம் சிறப்பான நாடகம். விரிவாக இங்கே.

மின்பிரதிகள்: மத்யமவியயோகம், உறுபங்கம்

தொகுக்கப்பட்ட பக்கம்: மகாபாரதப் பக்கம்

திரைப்படம்: மார்ஷல்

மார்ஷல் திரைப்படம் (2017) அமெரிக்க வரலாற்றின் ஒரு கணத்தை காட்டுகிறது. சாட்விக் போஸ்மன், ஜோஷ் காட் நடித்து ரெஜினால்ட் ஹட்லின் இயக்கியது.

தர்குட் மார்ஷல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கறுப்பர் இன நீதிபதி. Brown vs Board of Education என்ற புகழ் பெற்ற வழக்கில் வாதாடி Separate But Equal என்பது இனவெறிக் கருத்தாக்கம் என்று புரிய வைத்தவர்.

திரைப்படம் காட்டும் காலத்தில் மார்ஷல் NAACP (National Association for the Advancement of Colored People) அமைப்பின் ஒரே வக்கீல். கறுப்பர்கள் மேல் அநியாயமான வழக்குகள் போடப்படும் இடங்களில் சென்று அவர்களுக்காக வாதாடுகிறார். கனெக்டிகட் மாகாணத்தில் ஒரு கறுப்பர் – ஜோசஃப் ஸ்பெல் – வெள்ளைக்காரப் பெண்ணை – திருமதி ஸ்ட்ரூபிங் – கற்பழித்து கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. மார்ஷல் வாதிடச் செல்கிறார்.

திருமதி ஸ்ட்ரூபிங் பண்க்கார, மேல்தட்டு குடும்பத்தவர். ஸ்பெல் அவரது கார் டிரைவர். கணவர் ஸ்ட்ரூபிங் வெளியூர் சென்றிருக்கும் ஒரு இரவில் ஸ்பெல் கத்தி முனையில் தன் எஜமானியைக் கற்பழித்து பிறகு அவரை ஒரு பாலத்தின் மீதிருந்து தண்ணீரில் தூக்கி எறிந்து கொலை செய்ய முயன்றதாக வழக்கு. ஸ்பெல் அன்று இரவு முழுவதும் தான் பழக்கம் இல்லாத சிலரிடம் சீட்டாடிக் கொண்டிருந்ததாக சொல்கிறார், ஆனால் அவரிடம் அதை நிரூபிக்க சாட்சியங்கள் இல்லை.

நீதிமன்ற முறைமைகளின்படி மார்ஷலுக்கு ஒரு உள்ளூர் வக்கீலின் உதவி தேவைப்படுகிறது. ஃப்ரீட்மன் என்ற வக்கீல் மாட்டுகிறார். ஆனால் நீதிபதி மார்ஷல் நீதிமன்றத்தில் வாயையே திறக்கக் கூடாது, ஃப்ரீட்மன்தான் வாதிடலாம், விசாரணை செய்யலாம் என்று உத்தர்விட்டுவிடுகிறார். ஃப்ரீட்மனுக்கு இது போன்ற கிரிமினல் வழக்குகளில் அனுபவமில்லை. மேலும் அவர் வெள்ளையர். இந்த வழக்கு தன் எதிர்காலத்தை பாதிக்கலாம் என்று பயப்படுகிறார். ஆனால் மார்ஷலின் தாக்கத்தால் தொடர்கிறார். ஃப்ரீட்மன் யூதரும் கூட. இனவெறி அவரால அடையாளம் காணப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அரசு தரப்பு வழக்கு வலுவாக இருக்கிறது. நீதிபதியும் வெள்ளையர் பக்கம் மனச்சாய்வு கொண்டவர். முழுக்க முழுக்க வெள்ளையர்களால் நிறைந்த ஜூரி குழு. டாக்டர் கற்பழிப்பு நடந்திருக்கிறது, திருமதி ஸ்ட்ரூபிங்கின் நகங்களில் கறுப்புத் தோல் துணுக்குகள் இருந்தன என்று சாட்சி சொல்கிறார். சில ஓட்டைகள் தெரிந்தாலும் வழக்கு அரசு தரப்பிற்கு சாதகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது.

ஸ்பெல், திருமதி ஸ்ட்ரூபிங் இருவருமே பொய் சொல்கிறார்கள் என்பதை மார்ஷல் உணர்கிறார். திருமதி ஸ்ட்ரூபிங் தாற்காலிக பலவீனத்தால் ஸ்பெல்லுடன் விரும்பியே உறவு கொண்டார், பிறகு வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயத்தால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார், தான் தப்பிப்பதற்காகவே ஸ்பெல் மீது குற்றம் சாட்டுகிறார் என்று யூகிக்கிறார். ஸ்பெல்லை அதட்டி கேட்கும்போது ஸ்பெல்லும் வெள்ளை இனப் பெண்ணோடு பரஸ்பர சம்மதத்தோடு உறவு என்ற சொல்லப் பயந்துதான் இரவு முழுவதும் வெளியே சீட்டாடிக் கொண்டிருந்தேன் என்று வாக்குமூலம் கொடுத்தேன் என்று ஒத்துக் கொள்கிறார்.

குற்க்கு விசாரணையில் திருமதி ஸ்ட்ரூபிங் ஒரு போலீஸ்காரரை உதவிக்கு சுலபமாக கூப்பிட்டிருக்கலாம், ஆனால் அவர் கூப்பிடவில்லை என்பது நிரூபிக்கப்படுகிறது. வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு ஸ்பெல் குற்றமற்றவர் என்று ஜூரி குழு தீர்ப்பளிக்கிறது.

உண்மையான ஃப்ரீட்மன்தான் வழக்கை நடத்தினார், மார்ஷல் அவருக்கு ஆலோசகராக இருந்தார் என்று எங்கோ படித்தேன். திரைப்படத்தில் மார்ஷலின் திட்டங்கலை ஃப்ரீட்மன் நிறைவேற்றுகிறார், அவ்வளவுதான். ஆனால் மார்ஷல் இது போன்ற பல வழக்குகளை நடத்தி இருக்கிறார். அவரது வழக்கு அனுபவங்களின் பிரதிநிதியாக இந்த வழக்கை திரை வடிவமாக்கினார்களாம்.

திரைப்படம் அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஃப்ரீட்மனாக நடித்திருக்கும் ஜோஷ் காட் கலக்கி இருக்கிறார். மார்ஷலாக நடிக்கும் சாட்விக் போஸ்மனையே தூக்கி சாப்பிட்டுவிடுகிறார். நடிப்பு, திரைக்கதை இரண்டுக்காகவுமே பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

லா.ச.ரா.: ஜனனி

ஜனனி சிறுகதைத் தொகுப்பு. க.நா.சு. தன் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்று. மின்புத்தகமாகக் கிடைக்கிறது.

லா.ச.ரா.வின் புத்தகங்களில் எனக்கு மிகவும் பிடித்தது பாற்கடல். என்றாவது ஒரு நாள் என் குடும்பத்தினரைப் பற்றி எழுத வேண்டும்.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கதை யோகம். விவரிப்பது கஷ்டம். ஒரு கல். அதன் மேல் புகையிலை துப்பப்படுகிறது. அதன் அருகே கணவன் மனைவி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒரு விதவை தன் தோழியின் கணவனோடு உறவு கொள்கிறாள். என்னென்னவோ நடக்கிறது. அந்தக் கல் ஒரு சுயம்புலிங்கம்.

இதே பாணியில் அமைந்த சிறுகதை ரயில். ஒரு ரயில் பெட்டி பிரயாணிகளின் விவரிப்பு. கதை சுமாராகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அதன் முத்தாய்ப்பில் (denouement) வயசாளி கணவர் மனைவியிடம் பேசுவது நன்றாக வந்து விழுந்திருந்தது.

அக்காவை விரட்டிக் கொண்டு ஜன்னலின் வெளியே வேடிக்கை பார்க்கும் சின்னப் பையனாக நான் இருந்திருக்கிறேன். இன்னமும் மாப்பிள்ளை கருக்கு கழியாமல் வண்டியே தனக்காகத்தான் ஓடுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் வயசுப் பிள்ளையாகவும் இருந்திருக்கிறேன். ஏண்டாப்பா இத்தனை பெரிய குடும்பத்தைப் படைத்தோம் என்று ஏங்கும் அந்தச் சம்சாரியாகவும் இருந்திருக்கிறேன்….

உப்புமில்லை புளியுமில்லாதற்கு எல்லாம் உறுமிக் கொண்டும் கருவிக் கொண்டும் குலாவிக் கொண்டும் கொக்கரித்துக் கொண்டும் இருந்திருக்கிறோம் – இருக்கிறோம்.

அக்காவை சின்னத் தம்பி மிரட்டுவதும் புன்னகைக்க வைக்கிறது.

டேய் சொன்னத்தைக் கேளு. நீ ரொம்ப எட்டிப் பாக்கறே, காலை வாரி விட்டுடப் போறது…

நீ என் காலைப் பிடிச்சுக்கோ, அதை விட உனக்கு என்னடி வேலை?

ஜனனி, புற்று, அரவான், பூர்வா, கணுக்கள், கொட்டுமேளம் சிறுகதைகள் அவர் பாணி சிறுகதைகள். படிக்கலாம்.

ஜனனி சிறுகதையை கல்கியின் முன்னாள் ஆசிரியர் சீதா ரவி சூடாமணியின் ஒரு சிறுகதையோடு ஒப்பிட்டு எழுதிய ஒரு கட்டுரை இங்கே.

புற்று சிறுகதையில் அம்மா மகனை நீ அழிந்து போவாய் என்று சாபம் விடும் காட்சி வருகிறது. இந்தக் காட்சிதான் பிற்காலத்தில் புத்ர நாவல் ஆனதோ?

அரவானில் பணக்கார வீட்டுக் குழந்தைக்கு பாலூட்டும் வேலை பார்க்கும் மனைவியும் தங்கள் குழந்தைக்கு பாலில்லையே என்று உளைச்சல்படும் கணவனும் நல்ல சித்தரிப்பு. பூர்வாவில் ஒரு வரி புன்னகையை வரவழைத்தது. எந்த ஜன்மத்தில் பார்த்தாரோ!

வீட்டின் பின்புறத்தில் அடையாறு அழுக்கற்று அமைதியாக ஓடுகிறது

கொட்டுமேளம் உணர்ச்சிப் பிரவாகம். அண்ணனும் விதவையாகிவிட்ட தங்கையும் பயங்கர அன்னியோன்யம். மனைவி சந்தேகப்பட்டு, கணவன் வீம்பாய் நின்று என்று கதை போகிறது. எனக்குப் பிடித்தது சில வரிகள்தாம்.

அவள் விழுங்கியது ஜலமா, அந்த நாதத்தின் விறுவிறுப்பா?

நாயனத்தின் வாசிப்பை விட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து கல்யாணக்கூடம் முழுதும் சிதறி ஓடி உருண்டு பந்துகள் போல எகிறி எழும்பியது.

அண்ணனுக்கு இள வயதிலேயே தலை நரைத்துவிட தங்கை பார்ப்பவர் முடியை எல்லாம் நோட்டம் விடுகிறாள். வழுக்கைத்தலையனனான நானும் அப்படித்தான்.

கதைகள் சோடை போகவில்லை. ஆனால் இந்தத் தொகுப்பின் சிறந்த சிறுகதையான யோகத்தை விட நல்ல சிறுகதைகளை லா.ச.ரா. எழுதி இருக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
மின்பிரதி
சீதா ரவி கட்டுரை

வையாபுரிப் பிள்ளை: தமிழ்ச் சுடர்மணிகள்

பத்து பக்கம் படிப்பதற்குள் வையாபுரிப் பிள்ளை எத்தனை சிறந்த ஆராய்ச்சியாளர் என்பது புரிந்துவிட்டது. பிள்ளைக்கு முன்முடிவுகள் இல்லை. தமிழே ஆதிமொழி, தமிழ்க் குரங்கே முதல் குரங்கு என்று நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. தன் கண்ணில் என்ன பட்டது, அதை வைத்து தனக்குத் தோன்றுவது என்ன, என்ன முடிவுகளுக்கு வந்தேன் என்று விவரிக்கிறார். அந்த அணுகுமுறையே பெரிய நிம்மதியாக (relief) இருக்கிறது.

தமிழ்ச் சுடர்மணிகள் (1949) க.நா.சு. படித்திருக்கிறீர்களா? புத்தகத்தில் போட்ட பட்டியலில் இடம் பெறும் புத்தகம். மின்பிரதி இங்கே. பல நாளாகத் தேடிக் கொண்டிருந்தேன். க.நா.சு.வுக்கு ஒரு ஜே!

பிள்ளைவாளின் நடையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அது ராகவையங்கார் போன்றவர்களின் பண்டித நடை அல்ல; சேதுப்பிள்ளை, திரு.வி.க. போன்றவர்களின் எளிமைப்படுத்தப்பட்ட பண்டித நடையும் அல்ல.எந்த விதமான style-உம் இல்லை. அதனால் நடை காலாவதியாகவில்லை. சொல்ல வருவதை தெளிவாக நேரடியாக சொல்கிறார்.


தொல்காப்பியர் இன்றைய கேரளத்தில், அதுவும் திருவிதாங்கூரில் பிறந்தவர் என்கிறார். அதங்கோட்டாசான் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப்படுவது, இன்றும் மலையாளத்தில் (மட்டுமே) பழக்கத்தில் உள்ள சொல்வடைகளை தொல்காப்பியத்தில் பயன்படுத்தி இருப்பது, அதுவும் அந்த சொல்வடைகள் சங்கப் பாடல்களில் கூட இல்லாமல் இருப்பது வலிமையான வாதங்கள்தான்.

சொல்லாராய்ச்சியின் அடிப்படையிலும் சமண சமயத்தில் மட்டும் காணப்படும் கருத்துக்கள் சில தொல்காப்பியத்தின் இருப்பதையும் சுட்டிக் காட்டி தொல்காப்பியர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்று வலுவாகச் சொல்கிறார்.

ஆனால் தொல்காப்பியத்தின் காலம் பற்றி அவர் முன் வைக்கும் வாதங்கள் எனக்கு பலவீனமாகத் தெரிகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் வந்த ஒரு புத்தகத்தில் – எடுத்துக்காட்டாக, மனுஸ்மிரிதியில் – காணப்படும் கருத்து தொல்காப்பியத்தில் இருக்கிறது என்றால் தொல்காப்பியம் இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்டிருக்க முடியாது என்பது வலுவற்ற வாதம். இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் வந்த வேறு புத்தகத்திலும் அந்தக் கருத்துக்கள் இருந்திருக்கலாம். என்ன எல்லா பழைய புத்தகங்களும் நமக்கு கிடைத்துவிட்டனவா? அதற்கு முன் அந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்படவில்லை என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? வாய்வழியாகக் கூட அவை பல நூறாண்டுகளாகத் தொடர்ந்திருக்கலாம் இல்லையா? மனுஸ்மிரிதி முற்றிலும் மனுவின் மூளையிலிருந்து மட்டுமே உதித்ததா என்ன? அதற்கு முன் இருக்கும் பல கருத்துக்களை அவர் தொகுத்திருக்கமாட்டாரா?

தொல்காப்பியம் பாணினி பற்றி குறிப்பிடவில்லை என்பதை மட்டும் வைத்துக் கொண்டு பாணினிக்கு தொல்காப்பியர் முந்தையவர் என்று உறுதியாக சொல்வதற்கில்லை என்று வாதிடும் பிள்ளைவாள் ஒரு புத்தகத்தின் கருத்து தொல்காப்பியத்தில் இருப்பதால் தொல்காப்பியம் பிந்தையது என்று மட்டும் எப்படி உறுதியாகச் சொல்கிறார்? அதுவும் தொல்காப்பியம்தான் தமிழில் கிடைத்த மிகத் தொன்மையான நூல் என்று கருதப்படுகிறது. தொல்காப்பியமே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் என்றால் குறள் தொல்காப்பியத்துக்கு 200 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டதா? (குறளின் காலம் கி.பி. 600 வாக்கில் என்று இன்னொரு கட்டுரையில் சொல்கிறார்.) எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அத்தனை குறுகிய காலத்தில் – 150, 200 ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டுவிட்டனவா? எனக்கு எங்கேயோ உதைக்கிறது.

ஆனால் ஒன்று. சங்கக் கவிதை சிறப்பாக இருக்கிறது என்றால் என் தாய்மொழியில் அருமையான கவிதை என்று பெருமைப்படலாம். சங்கக் கவிதை 2000 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன பெருமை, 200 ஆண்டுக்கு முந்தையது என்றால் என்ன இழிவு என்று எனக்கு விளங்கவில்லை. கறாராகப் பார்த்தால் இலக்கியத்தின் காலம் என்பது வெறும் தகவல்தான். ஷேக்ஸ்பியர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதி இருந்தால் அவரது நாடகங்கள் சோபை இழந்துவிடுமா என்ன? அது என்னவோ தமிழகத்தில் தமிழ் எத்தனை பழைய மொழி என்று சொல்வதில் ஒரு பெருமை. வையாபுரிப் பிள்ளை தொல்காப்பியம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வாதிட்டால் அவர் தமிழ் துரோகி ஆகிவிடுகிறார். அவர் வாதங்கள் வலுவற்றவை என்றால் மறுக்கலாம், பிரதிவாதங்களை முன்வைக்கலாம். தமிழுக்கு என்ன துரோகம் என்பது புரியவில்லை.


வள்ளுவரின் காலம் கி.பி. 600 வாக்கில் இருக்க வேண்டும் என்று சொல்லாராய்ச்சியின் அடிப்படையில் ஊகிக்கிறார். சொல்லாராய்ச்சி மிக அருமை. சில சொற்கள் பழக்கத்தில் எப்போது வந்தன என்பதை வைத்து இப்படி ஊகிக்கிறார். வள்ளுவர் சமணர் என்கிறார்.


மாணிக்கவாசகர் கிறிஸ்துவர்களை மதம் மாற்றி சைவர்கள் ஆக்கினார் என்று பலரும் பிள்ளைவாள் காலத்தில் கருதி இருக்கிறார்களாம். அதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டுவது ஒரு கேரள (சேர?) அரசன் மணிக்கிராமம் என்று ஒரு செப்பேட்டில் குறிப்பிட்டிருப்பதும், சிரியன் கிறிஸ்துவர்களிடம் இப்படி மதமாற்றம் நடந்தது என்று இருக்கும் ஒரு கர்ணபரம்பரைக் கதையும். இதெல்லாம் ஜுஜூபி ஆதாரங்கள், பத்தாது என்று வெகு சுலபமாக நிறுவுகிறார்.


கம்பரின் கால ஆராய்ச்சி அருமை. 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று நிறுவியேவிட்டார், மறுவாதமே இருக்க முடியாது. இந்தப் புத்தகத்தின் மிக அருமையான கட்டுரைகள் என்று தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதைத்தான் சொல்வேன்.


கபிலர், புகழேந்திப் புலவர், நன்னூல் இயற்றிய பவணந்தியார், பரிமேலழகர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, சி.வை. தாமோதரம் பிள்ளை, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, கனகசபை பிள்ளை, உ.வே.சா., ரா. ராகவையங்கார், பாரதியார், தேசிகவிநாயகம் பிள்ளை பற்றியும் நல்ல கட்டுரைகள். ஆனால் என் மனதைக் கவர்ந்தவை தொல்காப்பியர், வள்ளுவர் மற்றும் கம்பரைப் பற்றி எழுதியதுதான். அதுவும் கால ஆராய்ச்சியில் பிய்த்து உதறுகிறார். இவர் மாதிரி யாரிடமாவது தமிழ் கற்கும் பாக்கியம் இருந்திருந்தால் இளமையிலேயே தமிழின் அருமை பெருமை புரிந்திருக்கும்.

பிள்ளைவாளின் தொல்காப்பிய கால ஆராய்ச்சி, அதற்கு சீனி. வேங்கடசாமி போன்றவர்களின் மறுப்பு ஆகியவற்றை இன்னொரு முறை படித்துப் பார்க்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்
தொடர்புடைய சுட்டி: மின்பிரதி

அசோகமித்ரன்: இந்தியா 1944-48

2017-இல் காலச்சுவடு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவர் எழுதிய கடைசி நாவலோ என்னவோ.

அசோகமித்ரன் இந்த நாவலில் கி.ரா. பாணி கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார். அத்தைப்பாட்டியோ, வயதான மாமாவோ தங்கள் சென்ற காலத்து வாழ்வைப் பற்றி கதையாக சொன்னால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது. யுத்தங்களுக்கிடையில் புத்தகம் படித்தபோதும் இப்படியேதான் உணர்ந்தேன். அவர் எழுத்தில் எப்போதும் சொல்லப்படுவதை விட சொல்லாமல் விடப்படுவதே அதிகம். ஆனால் இதில் அப்படி சொல்லாமல் விடப்பட்டது எதுவுமில்லை. எழுதியவர் யாரென்று தெரியாமல் படித்திருந்தாலும் இது அசோகமித்ரன் எழுத்து என்று தெரிந்திருக்கும், ஆனாலும் இது அவரது பாணிதானா என்று சில சமயம் தோன்றியது. மேலும் அவரது மெல்லிய, சில சமயம் குரூரமான, நகைச்சுவையும் இதில் குறைவாகத்தான் தெரிகிறது.

எப்படி இருந்தாலும் கதை நன்றாகவே இருந்தது, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

என்ன கதை? கணவன் இறந்து, மனைவியின் அண்ணா ஆதரவில் வளரும் குடும்பம். மூத்த மகன் சுந்தரத்தின் விருப்பம் கேட்கப்படாமல் மாமா பெண் பார்வதியோடு திருமணம். மாமா துறவி ஆகிவிட, சுந்தரம் குடும்பப் பொறுப்பை ஏற்கிறான். தம்பி மணியைப் படிக்க வைக்கிறான். 1944 வாக்கில் பம்பாய்க்கு குடிபெயர்கிறான். அம்மா வாழ்க்கையில் முதல் முறையாக குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறாள். மணி வேலைக்குப் போவதில் சில சிக்கல்கள். மணிக்கு குஸ்தி பயில்வான் வினாயக், அவன் தங்கை நிர்மலாவோடு நட்பு. இரு குடும்பங்களும் நெருக்கமாகின்றன. குடுமப்த்தின் உண்மையான தலைவியான அம்மாவே மணியை நிர்மலாவை மணந்து கொள்ளேன் என்கிறாள். மன்னி பார்வதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நடக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் சுந்தரம் பயிற்சிக்காக அமெரிக்கா அனுப்பப்படுகிறான். அங்கே பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஹார்வர்டில் உயர்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் பால்ய விதவை லட்சுமியை சந்திக்கிறான், அவளை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான், குடும்பத்திற்குத் தெரியாது. திரும்பி வருவது 1948-இல். விடுதலை கிடைத்தாயிற்று. சுந்தரத்தின் பதவி உயர்கிறது. மணிக்கு திருமணம் நடக்கிறது. ஆனால் இரண்டாம் திருமணம் பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறான். கடைசியில் தன் துறவி மாமாவிடம் சொல்ல, மாமா இரண்டு மனைவிகளோடு வாழ் என்று ஆலோசனை சொல்கிறார். இதற்கிடையில் பார்வதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்துவிடுகிறது. லட்சுமி அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து உங்கள் சுகதுக்கம் என் சுகதுக்கம் என்று அம்மாவிடம் சொல்வதோடு கதை முடிகிறது.

மணியின் சிக்கல்கள் முதல் பகுதி, சுந்தரத்தின் சிக்கல்கள் இரண்டாம் பகுதி.

அசோகமித்ரன் பல இடங்களில் தெரிகிறார். எத்தனை பிரச்சினை என்றாலும் அதை கூச்சல் போடாமல் எதிர்கொள்ளும் பாத்திரங்கள். உண்மையான நட்பின் சித்திரம், வினாயக் குடும்பத்துக்கு செய்யப்படும் உதவிகள். சுந்தரத்தின் இரண்டாவது திருமணம் பற்றி ரிஷிகேஷில் தெரிந்து கொள்ளும் பார்வதி ஒன்றுமே சொல்லாமல் இருந்துவிட்டு இரண்டு நாள் கழித்து பம்பாய்க்கு திரும்பிய பிறகு சுந்தரத்தின் அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறுவது. குழந்தை இறந்த செய்தி தெரிந்ததும் வந்து பார்க்கும் லட்சுமி உங்கள் சுகதுக்கம் என்னுடையவை என்று சொன்னதும் அது வரை பெரிதாக அழாத அம்மா லட்சுமியைக் கட்டிக் கொண்டு கதறுவது. லட்சுமியின் வீடு காந்தி வீட்டின் பக்கத்துத் தெருவில் இருப்பதும், லட்சுமி பத்து வயதில் விதவை ஆனதும் காந்தியின் அம்மா – ஆம் மகாத்மா காந்தியின் அம்மாவேதான் – அவளிடம் மொட்டை அடித்துக் கொண்டு ஜபம் செய்துகொண்டு வாழ்க்கையைக் கடத்தாதே என்று சொல்வது. சுந்தரம் அமெரிக்கா போகும்போது மடி ஆசாரம் பார்க்கும் அம்மாவை நிர்மலா இயல்பாகக் கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்வது. ஆசாரமான அம்மா மராத்திப் பெண்ணை மணம் செய்து கொள் என்று மணியிடம் சொல்வது. சொல்லிக் கொண்டே போகலாம்.

1944-48 பம்பாயில் வாழ்கிறார்கள். ஆனால் உலகப்போர், சுதந்திரப் போராட்டம் நடக்கிறது என்பதே இந்தக் குடும்பத்தின் பிரக்ஞையில் இல்லை என்பது மிகச் சிறப்பான சித்திரம். உப்பு புளி மிளகாய், ரேஷன், வாடகை, காலி செய்யமாட்டேன் என்று அட்டூழியம் செய்யும் குடித்தனக்காரர், அலுவலகத்துக்கு செல்ல ரயில், பஸ் இதுதான் மீண்டும் மீண்டும் பேசப்படுகிறது. போரால் அரிசி பருப்பு கிடைப்பதில் ஏற்படும் தட்டுப்பாடு விவரிக்கப்படுகிறது. பம்பாய் துறைமுகத்தில் கப்பலில் வெடிமருந்து வெடித்து ஏற்படும் நாசம் விவரிக்கப்படுகிறது, அவ்வளவுதான். அதாவது நேரடி பாதிப்பு மட்டுமே. அது ஒரு மாஸ்டர் டச்.

இதை தண்ணீர், மானசரோவர், கரைந்த நிழல்கள், ஒற்றன் போன்ற நாவல்களுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன். அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம்

நாஞ்சில்: சூடிய பூ சூடற்க

சூடிய பூ சூடற்க 2010-க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு.

நாஞ்சிலுக்கே அவர் எழுதியவற்றில் பிடித்தது யாம் உண்பேம் சிறுகதைதான் என்று அவரே சொல்லி இருக்கிறார். நல்ல கதைதான், ஆனால் என் அரைகுறை ஹிந்தியால் எனக்கு ஒரு சின்ன சந்தேகம். “ஹமி காணார்” என்று சொன்னதை – சில வட்டாரங்களில் தன்னை பன்மையில் சொல்லிக் கொள்வார்கள் – அதை நாஞ்சில் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டாரோ என்று சந்தேகம். நாஞ்சிலுக்கு எனக்குத் தெரிந்ததை விட நன்றாகவே ஹிந்தி/மராத்தி தெரியும் என்பதும் உண்மைதான், தவறாக நான் புரிந்து கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

எனக்கு மிகவும் பிடித்தது கதை எழுதுவதின் கதை என்ற கும்பமுனிக் கதை. Tour de force. மனிதருக்கு நக்கல் அதிகம், அதுவும் ஜெயமோகன் எழுதியதை நாஞ்சில் தன் பெயரில் போட்டுக் கொள்கிறார் என்கிறார் பாருங்கள், நான் வாய்விட்டு சிரித்துவிட்டேன்.

தன்ராம் சிங் நல்ல சிறுகதை. நாம் பலரும் பார்த்த, வீடுகளையும், கடைகளையும் ராக்காவல் காக்கும் கூர்க்காவை உயிர் பெற வைத்திருக்கிறார்.

வளைகள் எலிகளுக்கானவை இன்னொரு நல்ல சிறுகதை. மஹாராஷ்டிரத்திலிருந்து பாரதத்தில் பல மூலைகளுக்கு தீர்த்தயாத்திரை செல்லும் கிழவ்ர்கள், பத்து மைல் தூரம் கூட பயணிக்காத தமிழர்களை அழகாக வேறுபடுத்திக் காட்டுகிறார்.

பிற கதைகளும் படிக்கக் கூடியவைதான். ஆனால் கதை எழுதுவதின் கதை, யாம் உண்பேம், தன்ராம் சிங் இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில் பக்கம்

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு விஷ்ணுபுரம் விருது

இந்த வருஷத்துக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!

தமிழ் கூறும் நல்லுலகில் விஷ்ணுபுரம் விருது முக்கியமானது. ஆரம்பித்த நாளிலிருந்து தரம் உணர்ந்து விருதுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. விக்ரமாதித்யனும் விஷ்ணுபுரம் விருதும் இந்த விருதளிப்பால் பரஸ்பரம் தங்களை கௌரவித்துக் கொண்டிருப்பார்கள்.

கொண்டிருக்கிறார்கள் என்று எழுதாமல் கொண்டிருப்பார்கள் என்று எழுத ஒரே காரணம்தான். நற்றிணை, குறுந்தொகை என்று ஆரம்பித்திருந்தாலும் எனக்கு இன்னும் கவிதைகள் உலகம் கொஞ்சம் தூரம்தான். ஆனால் சமகாலக் கவிஞர்கள் வரை ஒரு நாள் வந்துவிடலாம் என்று நம்பிக்கை வந்திருக்கிறது.

அழியாச்சுடர்கள் தளத்திலும் எழுத்து தளத்திலும் அவரது சில கவிதைகள் கிடைக்கின்றன. எனக்கே இன்னும் படித்துப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. எனக்கு மிகவும் பிடித்திருந்த கவிதை தட்சிணாமூர்த்தியான…

மாமிசம் தின்னாமல்
சுருட்டு பிடிக்காமல்
பட்டையடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடை வராதது பொறாமல்
பதினெட்டாம் படி விட்டிறங்கி
ஊர் ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்த காலக் கைத்த நினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

கவிஞருக்கு ஒரு தளம் இருந்தாலும் அது செயல்படவில்லை. கடைசி பதிவு 2009-இல்.

விக்ரமாதித்யன் கவிஞர் என்றே அடையாளம் காணப்படுகிறார். ஆனால் அவர் சில சிறுகதைகளையும் எழுதி இருக்கிறார். அங்கே இருந்து ஆரம்பிப்பது என் போல கற்பூர வாசனை தெரியாதவர்களுக்கு கொஞ்சம் சுலபமாக இருக்கலாமோ என்னவோ. நேர்ந்தது என்ற சிறுகதை இங்கே கிடைக்கிறது.

கவிஞருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

எஸ்ரா: சஞ்சாரம்

சஞ்சாரம் 2018க்கான சாஹித்ய அகடமி விருது பெற்ற நாவல். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஆனால் இது எனக்கு முதல் வரிசை நாவல் இல்லை.

சஞ்சாரத்தின் பலம் அது காட்டும் உலகம். நாதஸ்வரக் கலைஞர்களின் உலகம். மறைந்து கொண்டிருக்கும் உலகம். எப்படி இருந்தது, எப்படி மாறிக் கொண்டிருக்கிறது என்பதை சிறப்பாகக் காட்டுகிறார். திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலத்தின் உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதையும் புரிய வைக்கிறார். அவர்களின் லெவலில் இருப்பவர்களின் அழிச்சாட்டியங்கள் எப்படி பொறுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன, குடி, இஷ்டப்படும்போது வாசிப்பது, வாசிப்பில் மயங்கிக் கிடக்கும் கூட்டம் எல்லாவற்றையும் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். அங்கங்கே தொன்மம்தான். கண் தெரியாத நாதஸ்வர வித்வான் தன்னாசி அத்தியாயத்தை குறிப்பிட்டு சொல்லலாம்.

தொன்மமாக்கல் ஒரு பலவீனமும்தான். எஸ்ரா அவ்வப்போது வலிந்து தொன்மத்தன்மையை புகுத்த முயற்சி செய்வார். சில சமயம் அது செயற்கையாக இருக்கும். இந்த நாவலில் பல இடங்களில் வெற்றி அடைந்தாலும் சில இடங்களில் செயற்கையாக இருக்கிறது. உதாரணமாக மாலிக் காபூர் கல் யானையை இசையை கேட்க வைக்கும் நாதஸ்வரக் கலைஞனை டெல்லிக்கு அழைத்துச் செல்வது அருமை. ஆனால் டெல்லியில் தன் இசையால் மாலிக் கபூரை அலாவுதீன் கில்ஜிக்கு துரோகம் செய்ய வைப்பது செயற்கையாக இருக்கிறது.

நேரடியாக சொல்லப்படும் கதை. உண்மையில் கதை, கதைப்பின்னல் என்று எதுவும் இல்லை. எனக்கு அதெல்லாம் ஒரு குறையும் இல்லை. காட்சிகளின், சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே. காட்சிகள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனக்கு வரவர உண்மையான சித்தரிப்பு பத்தவில்லை, ஏதாவது தரிசனம் கிடைக்குமா என்று தேடுகிறேன். ஆனால் இது உண்மையான சித்தரிப்பைத் தாண்டிய படைப்பு.

வயிற்றுப் பிழைப்புக்காக அரசியல்வாதி தேர்தலில் நிற்கும்போது ஏற்படும் அவமானங்கள், லண்டனுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றும் இடை, கல்யாணத்தில் ஏற்படும் அவமானங்கள் எல்லாவற்றையும் சிறந்த காட்சிகளாகக் கொண்டு வந்திருக்கிறார். கலைக்கு மதிப்பு குறைந்துகொண்டே போனாலும் இன்னும் எச்சங்கள் இருக்கின்றன என்று காட்டுகிறார். குறிப்பாக ஊமை ஐயர் போன்ற ஒரு ரசிகர். நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் வெள்ளைக்கார ஹாக்கின்ஸ். இசையை விரும்பிக் கற்றுக் கொள்ளும் முஸ்லிம் அபு ஆறுமுகம். இசை தெரிந்தாலும் கற்றுக் கொடுக்க முடிந்தாலும் சிறப்பாக வாசிக்க முடியாத ராகவையா. பழைய ஜமீந்தார், வானொலி நிலையத்து அதிகாரி வரும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கலைஞனுக்கு மதிப்பு இல்லை, ஜாதி குறுக்கே நிற்கிறது.

வ.ரா. தமிழ் பெரியார்கள் புத்தகத்தில் சத்தியமூர்த்தியைப் பற்றி விவரிப்பார்; சத்தியமூர்த்தி நேருவுக்கு இணையான அரசியல் அறிவுள்ளவர்; ராஜாஜிக்கு இணையான தர்க்க அறிவுள்ளவர். சட்டசபை விவகாரங்களில் நிபுணர். யார் என்ன சொன்னாலும் மனச் சோர்வடைவதில்லை. சிறந்த தேசபக்தர். ஆனாலும் அவரிடம் ஏதோ குறை இருக்கிரது, மக்கள் அவரை நம்புவதில்லை என்பார்.

எஸ்ராவும் அப்படித்தான். எல்லாம் உண்டு, ஆனாலும் என்னவோ குறைகிறது. எனக்கு மகாபாரதப் பித்து அதிகம், கவிதையைக் கண்டால் ஓடுபவன்தான், கம்பனைக் கூட படிக்க முடியாமல் கஷ்டப்படுபவன்தான், ஆனால் வில்லிபாரதம், அல்லி அரசாணி மாலை எல்லாம் கூட படித்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கு உபபாண்டவம் நினைவில் தங்கவே இல்லை. என்ன படித்தோம் என்பது தெரியவே இல்லை. அதே மாதிரிதான், ஏதோ ஒன்று இந்தப் புத்தகத்தையும் அடுத்த படிக்கு போகமுடியாமல் தடுக்கிறது.

எஸ்ராவின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது உறுபசி. அதில்தான் அவரது உச்சத்தை அடைந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். நான் படித்த சிறந்த நாவல்களில் ஒன்று. என்றாவது அதைப் பற்றி எழுத வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: எஸ்ரா பக்கம்

கல்கி: சிவகாமியின் சபதம்

சிவகாமியின் சபதம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு நன்றாகத் தெரிந்த நாவல். கல்கி மறைந்த பிறகும் கல்கியின் பழைய தொடர்கதைகளில் ஏதோ ஒன்று – பார்த்திபன் கனவு, சி. சபதம், பொன்னியின் செல்வன், அலை ஓசை – கல்கி பத்திரிகையில் மாற்றி மாற்றி வந்து கொண்டே இருக்கும். நான்கும் மீண்டும் மீண்டும் விரும்பிப் படிக்கப்பட்டன, கல்கி பத்திரிகை விற்றது. அந்த அளவுக்கு பிரபலமான நாவல்.

கதையின் பலம் பாத்திரங்கள் – குறிப்பாக நாகநந்தி. நாகநந்தி கற்பனைப் பாத்திரம். புலிகேசியின் இரட்டை சகோதரர். அதே உருவம். புத்த பிக்ஷுவாக சாளுக்கிய அரசுக்கு ஒற்று வேலை பார்ப்பவர். நாகநந்தியின் பாத்திரம்தான் கதையை ஒருங்கிணைக்கிறது, கதையின் சுவாரசியம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது. இரண்டாவதாக மகேந்திரவர்மர். புலிகேசியின் படையெடுப்பை தடுக்க மகேந்திரவர்மர் செய்யும் தந்திரங்கள் சுவாரசியமானவை. சிவகாமி, நரசிம்மவர்மர், நரசிம்மவர்மரின் படைத்தளபதியாக பரிணமிக்கும் பரஞ்சோதி, சிவகாமியின் அப்பா ஆயனச் சிற்பி எல்லாருமே பலமான பாத்திரங்கள்.

இரண்டாவது பலம் கதைப்பின்னல். அதிசயத் தற்செயல் நிகழ்ச்சிகள் குறைவு. ஒரு சம்பத்திலிருந்து இன்னொரு சம்பவத்துக்கு சரளமாகச் செல்லும் கதை. என் கண்ணில் வெகு சில தமிழ் சரித்திர நாவல்களே இப்படி கட்டுக்கோப்புடன் எழுதப்பட்டிருக்கின்றன.

பலவீனம்? இது பொழுதுபோக்கு நாவல்தான், வணிக நாவல்தான், இலக்கியம் அல்ல. கல்கியே அப்படித்தான் எழுத விரும்பி இருப்பார். பெரிய மானுட தரிசனங்களை எதிர்பார்க்க முடியாது. நல்ல அரண்மனைச் சதி நாவல், அவ்வளவுதான். பாத்திரங்கள் – நாகநந்தி உட்பட – caricatures மட்டுமே. வாசகர்கள் விரும்பிப் படிக்க வேண்டும், அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று வாசகர்கள் காத்திருந்து படிக்க வேண்டும் என்று எண்ணியே கல்கி இதை எழுதி இருப்பார். கட்டுக்கோப்பான கதை, முடிச்சு, சாகசம், ஒரு “பயங்கர” வில்லன், மாமல்லபுரம் பற்றிய பெருமிதம், ஆகியவையே இவற்றின் பலம். 10-11 வயதில் படித்தால் மனதில் நீங்காத இடம் பெறும்.

சி. சபதத்தை விரும்பிப் படித்த தலைமுறைக்கு வயதாகிவிட்டதால் கதை சுருக்கமாக: சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ அரசர் மகேந்திரவர்மர் மீது படையெடுத்து வந்ததும், ஆரம்பத்தில் வெற்றி பெற்றதும் மகேந்திரவர்மர் புலிகேசியை வென்று தன் ராஜ்யத்துக்கு திரும்பச் செய்ததும், பின்னாளில் மகேந்திரவர்மரின் மகனான நரசிம்மவர்மர் புலிகேசி மீது படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றி சாளுக்கியத் தலைநகரான வாதாபியை அழித்ததும் வரலாறு. இந்தப் பின்புலத்தில் இளைஞரான நரசிம்மவர்மர் – நடனப் பெண் சிவகாமி காதல், புலிகேசி திரும்பிச் செல்லும்போது சிவகாமியைக் கடத்திச் செல்லுதல், சிவகாமி வாதாபி அழிக்கப்பட்டாலொழிய காஞ்சி திரும்பமாட்டேன் என்று சபதம் செய்தல், காதல் முறிவு, நாகநந்திக்கு சிவகாமி மீது ஏற்படும் காதல் – obsession, சபதப்படி வாதாபி அழிக்கப்படல் என்று கதை.

கல்கி போட்ட கோட்டில்தான் ஓரிரண்டு தலைமுறைக்கு தமிழ் சரித்திர நாவல்கள் எழுதப்பட்டன – அரண்மனைச் சதிகள். அது அவரது தவறு இல்லைதான். ஆனால் அப்படி சரித்திர நாவல்கள் வெறும் அரண்மனைச் சதி நாவல்களாக குறுகிவிட்டது பா. கனவு, சி. சபதம், பொ. செல்வன் நாவல்களின் துரதிருஷ்டமான விளைவு என்று கருதுகிறேன்.

ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த சரித்திர பொழுதுபோக்கு நாவல்கள் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்ரா பட்டியலில் இந்த நாவல் இடம் பெறவில்லை.

ஆயிரம் நொட்டை சொன்னால் என்ன, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கல்கி பக்கம்

முதல் சாஹித்ய அகடமி விருது

1955-இல் சாஹித்ய அகடமி விருதுகள் ஆரம்பித்திருக்கின்றன. தமிழுக்கான முதல் விருது ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய தமிழின்பம் என்ற புத்தகத்துக்கு கொடுக்கப்பட்டது. மின்புத்தகம் இங்கே.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள். தமிழின்பம் பிள்ளைவாள் ஆற்றிய பல உரைகள், பத்திரிகைகளில் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு. பிள்ளை தமிழறிஞர். அவரது தமிழ் அலங்காரத் தமிழ். சுகமான நடை. கேட்பதற்கு சுவையாக இருந்திருக்கும். ஆனால் அங்கும் இங்கும் பாடல்களை எடுத்து விளக்குவதற்கு எதற்கு விருது?

தமிழ் சாஹித்ய அகடமி விருதுகளின் பிரச்சினையே இதுதான். படைப்புகளை விட அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளுக்குதான் பரிசு அதிகமாகக் கிடைத்தது. அதுவும் முதல் 25 வருஷங்களில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்தது. விமர்சனங்கள், விளக்கங்கள், அறிமுகங்கள் முக்கியமானவைதான். ஆனால் அறிமுகத்தை விட படைப்பல்லவா முக்கியம்?

என் கண்ணில் சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியமானவை. அதுவும் இந்தியா போன்ற பல மொழிகள் பழக்கத்தில் இருக்கும் நாட்டில் ஒரு மொழியில் இலக்கியம் வேற்று மொழிக்காரர்களுக்கு பரிச்சயம் ஆவதற்கு சாஹித்ய அகடமி விருதுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. புத்தகத்துக்கு விருது என்றால் அடுத்தபடி மொழிபெயர்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். வேற்று மொழியினரைப் போய்ச் சேரும் என்று நப்பாசைப்படலாம். நம்மூரில் ராமலிங்கம் எழுதிய உரைநடை வளர்ச்சி, தண்டாயுதம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு என்றெல்லாம் சாஹித்ய அகடமி விருது கொடுக்கிறார்கள். உரைநடையை நன்றாகப் படித்த வேற்றுமொழியினருக்கு உரைநடை எப்படி வளர்ந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வமிருக்கலாம். வேதநாயகம் பிள்ளை முதல் நாவலை எழுதினார் என்று தெரிந்து கொண்டு என்ன லாபம்? என்ன சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதவா வேற்று மொழியினர் இந்த மாதிரி புத்தகங்களை படிக்கிறார்கள்? பிரதாப முதலியாரின் சரித்திரத்தைப் படித்தால்தானே தமிழ் இலக்கியம், உரைநடை எப்படி பரிணமித்தது என்று புரிந்து கொள்ளலாம்? நம்மூரில்தான் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் புத்தகத்துக்கு முதலில் விருது கொடுத்துவிட்டு நாலைந்து வருஷம் கழித்துத்தான் புதுக்கவிதை புத்தகம் ஒன்றுக்கு முதன்முதலாக விருது கொடுக்கும் முட்டாள்தனம் எல்லாம் நடக்கிறது.

சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காகவும் விருது கொடுக்கப்படலாம். அதுவும் முக்கியமே, ஆனால் என் கண்ணில் அது இரண்டாம் பட்சம்தான். தமிழில் பல முறை அப்படி நடந்துவிடுகிறது. பாரதிதாசனுக்கு கொடுப்போம், சமீபத்தில் என்ன புத்தகம் வந்ததோ அதற்குக் கொடுத்துவிடுவோம், அது பிசிராந்தையார் மாதிரி வெட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடக்கிறது.

சேதுப்பிள்ளைக்கு அப்படித்தான் விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் அவரது வானொலி உரைகள், கூட்டத்தில் பேசியவை, தீபாவளி மலருக்காக எழுதியவை என்று பலதையும் கலந்து கட்டி ஒரு புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். அதற்கு விருது வேறு.

ஆனால் ஒன்று. பிள்ளைவாளிள் புத்தகம் ஆங்கிலத்தில், பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அது பயனுள்ளதாக இருந்திருக்கும். சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம், தேவாரம், கம்பன், குற்றாலக் குறவஞ்சி, பாரதி என்று பலருக்கும் நல்ல அறிமுகமாக இருந்திருக்கும். ஏன், இன்றைய தமிழனுக்குக் கூட பயனுள்ளதாக இருந்திருக்கும். ஒரு வேளை அப்படி நினைத்துத்தான் பரிசு கொடுத்தார்களோ என்னவோ.

பிள்ளைவாள் அவரது trademark பாணியில் இயற்கைக் காட்சிகள், சிலம்பின் காலம், வள்ளல்கள், கர்ணன்-கும்பகர்ணன், குகன்-கண்ணப்ப நாயனார், பாரதி பாடல்கள் என்று பல தலைப்பில் பேசி எழுதி இருக்கிறார். நிச்சயமாகப் படிக்கலாம். இப்படி சுகமான தமிழில் சுவையாக விடாமல் பேசியதும் எழுதியதும்தான் அவரது முக்கியப் பங்களிப்பு. இதற்கு பரிசு ஏன் என்பதுதான் விளங்கவில்லை. புதுமைப்பித்தன் போய் சில வருஷம் ஆகிவிட்டதுதான், ஆனால் கு.ப.ரா., தி.ஜா., க.நா.சு. எல்லாரும் எழுதிக் கொண்டிருந்தார்களே? குறைந்த பட்சம் கல்கி, பாரதிதாசனுக்காவது கொடுத்திருக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: தமிழின்பம் மின்பிரதி