Skip to content

பெருமாள் முருகனின் “கூள மாதாரி”

by

பெருமாள் முருகன் காட்டும் உலகங்கள் நம்பகத்தன்மை அதிகம் உடையவை. அந்த உலகங்களுக்கு வெளியே இருப்பவர்களுக்கு அதிகம் தெரியாதவை. அவரது பலம் பலவீனம் இரண்டுமே அந்த உலகங்கள்தான். மெய்யாகத் தோன்றும் வாழ்க்கை அனுபவத்தை நமக்குக் காட்டுகிறார். அதே நேரம் அந்த உலகங்கள் எல்லாருக்கும் சுவாரசியமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. நான் பண்ணையம் என்ற வார்த்தையையே நாலைந்து வருஷம் முன்னால்தான் முதல் முறையாக கேள்விப்பட்டேன். இந்த உலகம் எனக்கு முற்றிலும் அந்நியமானது.

பெருமாள் முருகன் காட்டும் உலகங்களில் வாழ்க்கை கொந்தளிப்பதில்லை, அநியாயங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்லை. வாழ்க்கை அது பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழாம் உலகத்தைப் படிப்பவர்களுக்கு அந்தப் போத்திக்கு தான் செய்வது பற்றி எந்த குற்ற உணர்ச்சியும் இல்லையே என்று நிச்சயமாகத் தோன்றும். அப்படி தோன்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மனமறிந்து யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலியே போன்ற வசனங்களையும், உருப்படிகள் போத்திக்கு ஏறக்குறைய அஃறிணைதான் என்று நமக்கு உணர்த்தும் காட்சிகளையும் ஜெயமோகன் உருவாக்கி இருக்கிறார். இங்கே கவுண்டருக்கு குற்ற உணர்ச்சி கிடையாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவருக்கு அப்படி குற்ற உணர்ச்சி இல்லையே என்பது படிப்பவர்களுக்கு தோன்றிவிடுமா என்பதே சந்தேகம்தான்.

நிழல் முற்றத்தில் ஒரு டெண்டுக் கொட்டாய் சூழல் என்றால் இங்கே பண்ணையம் பார்க்கும், அதுவும் குறிப்பாக ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர் சிறுமியரின் உலகம். பதின்ம வயதுகளில் அடி எடுத்து வைத்துக் கொண்டிருப்பவர்கள். ஏழ்மை மற்றும் ஜாதீய அடக்குமுறையை தினந்தோறும் சந்திப்பவர்கள். அது அவர்களுக்கு அடக்குமுறையாகத் தெரிகிறதா என்பதே சந்தேகம்தான். அவர்களுக்குத் தெரிந்த வாழ்க்கை அதுதான். அவர்களுக்கு கவுண்டரும் கவுண்டச்சியும் எஜமான் எஜமானி மட்டுமல்ல, வாழ்வாதாரமே அவர்கள்தான். சோறும் துணியும் கொடுப்பவர்கள். அப்பா, அம்மா, மற்ற உறவினர் எல்லாம் இரண்டாம் கட்ட பந்தங்கள்தான். அவர்கள் ஆடு மேய்ப்பதும் கிணற்றில் குதித்து நீந்துவதும் முனிக்கு பயப்படுவதும் ஆடுகள் விஷச்செடி சாப்பிட்டு இறக்கும்போது பயந்து ஊரை விட்டு ஓடிவிடுவதும் காமம் பற்றி புரிய ஆரம்பிப்பதும் தேங்காய் திருடுவதும் கவுண்டரிடம் அடி வாங்குவதும் முடியாதபோது வீட்டுக்கு ஓடுவதும் கவுண்டரின் மகனோடு ஒரு நட்பு உருவாக முயற்சிப்பதும், அந்த நட்பு உருவாகாமல் அவர்கள் அந்தஸ்து வித்தியாசம் தடுப்பதும்தான், கூளையன் கூள மாதாரி என்று அழைக்கப்படுவதும் கதை. இதில் கதை இல்லை என்றால் இல்லை. இருக்கிறது என்றால் இருக்கிறது. எனக்கு இருக்கிறது, அவ்வளவுதான்.

பெருமாள் முருகன் தமிழின் சாதனையாளர்களில் ஒருவர். இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்
நிழல் முற்றம்

பெருமாள் முருகனின் “நிழல் முற்றம்”

by

ஒரு பி சென்டர் – அதாவது ஒரு நடுவாந்தர ஊரின் (திருச்செங்கோடு) சினிமா தியேட்டர். தியேட்டர் கூட இல்லை, டெண்டு கொட்டாய். அதன் உப தொழில்களாய் ஒரு சோடாக்கடை, ஒரு டீக்கடை. அங்கே வேலை செய்யும் பதினைந்து சொச்சம் வயது இளைஞர்கள். இந்த சர்வசாதாரண பின்புலத்தை வைத்துக் கொண்டு என்னத்தை இலக்கியம் படைப்பது?

பெருமாள் முருகன் படைத்திருக்கிறார். அவர்களின் வாழ்க்கையை மிகுந்த நம்பகத்தன்மையோடு எழுதி இருக்கிறார். இத்தனைக்கும் இந்தியாவிலிருந்து வரும் வரைக்கும் இந்த மாதிரி டெண்டு கொட்டாய்கள் என் வாழ்க்கையின் ஒரு முக்கியப் பகுதி. எண்டத்தூர், மானாம்பதி, கூடுவாஞ்சேரி, கருப்பூர், கரக்பூர், திப்பசாந்திரா டெண்டு கொட்டாய்களில் நான் எக்கச்சக்க சினிமா பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி இளைஞர்கள்தான் சோடா விற்பார்கள். பெருமாள் முருகன் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாத என் போன்றவர்களுக்குக் கூட இப்படித்தான், இவ்வளவு குரூரமாகத்தான் இவர்கள் வாழ்க்கை இருக்கிறது என்று நம்ப வைக்கிறார். சாதித்திருக்கிறார்.

சின்னப் புத்தகம். 150 பக்கம் இருந்தால் அதிகம். நான் படித்த காப்பி காலச்சுவடு வெளியீடு. (2005) எப்போது எழுதப்பட்டது என்று தெரியவில்லை.

என்ன கதை? ஒன்றுமில்லை. இவர்கள் வாழ்க்கைதான் கதை. எம்ஜிஆர் படம் வந்தால் சோடா அதிகமாக விற்பதும் தூங்குபவனிடமிருந்து செருப்பு திருடுவதும் பாக்கெட் அடிப்பதும் கஞ்சா அடிப்பதும் குஷ்டரோகி அப்பனை தான் வேலை செய்யும் தியேட்டர் பக்கம் வராதே என்று விரட்டுவதும், அந்த அப்பன் தான் பிச்சை வாங்கி வந்த “சுவையான” உணவை தன் மகனுக்குத் தரத் துடிப்பதும் படத்துக்கு கஸ்டமரோடு வந்த வேசியைக் காலில் மயிர் கூட முளைக்காத இளைஞன் தடவிப் பார்ப்பவதும் அந்த கஸ்டமர் தூங்கும்போது கடைக்காரனிடம் வேசி போய் வருவதும் பெண்டாட்டியைப் பார்க்க முடியாமல் காய்ந்து கிடக்கும் படத்தின் கமிஷன் ஏஜென்ட் ஒரு இளைஞனுக்கு ஊற்றிக் கொடுத்து அவனோடு படுப்பதும்தான் கதை. ஓர் இடத்தில் கூட சின்ன நம்பிக்கை கூட வராமல் பார்த்துக் கொள்கிறார், ஆனாலும் கதையைப் படிக்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது, சிறந்த இலக்கியம் என்று தெரிகிறது. மனிதர் வித்தைக்காரர்தான்.

ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் சேர்க்கிறார். எஸ்.ரா.வும் இதை நூறு சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். ஜெயமோகன் இலக்கியத்தில் யதார்த்தம் என்பதை விளக்கும்போது

நல்ல படைப்பு முதலில் ஒரு மெய்நிகர் வாழ்க்கையனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் புற யதார்த்தத்தைக் கற்பனையால் மீறி இன்னும் பல யதார்த்தங்களில் அவன் வாழச் செய்கிறது. அதன் வழியாக அவனை அது ஒரு சுயதரிசனத்துக்கு, வாழ்க்கைத் தரிசனத்துக்கு, பிரபஞ்ச தரிசனத்துக்குக் கொண்டு செல்கிறது

என்று எழுதி இருந்தார். இது மெய்நிகர் வாழ்க்கை அனுபவத்தை அளித்தும், வேறு யதார்த்தத்துக்கு வாசகனைக் கொண்டு சென்றும், சுயதரிசனம், வாழ்க்கை தரிசனம், பிரபஞ்ச தரிசனம் இல்லை என்று கருதியே இதை இரண்டாம் பட்டியலில் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இவ்வளவு குரூரமான, வாழ்க்கையைப் பற்றி எந்த நம்பிக்கையும் உருவாக முடியாத நிலையிலும் அர்த்தமுள்ள வாழ்க்கை நடப்பது எனக்கு மன எழுச்சியைத் தருகிறது, தரிசனமாக இருக்கிறது. அவருக்கு அப்படி இல்லை போலும்.

சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

நண்பர் சிவ் ஒரு முக்கியமான பகுதியை நினைவுபடுத்துகிறார். அவரது வார்த்தைகளிலேயே:

ஓனரின் குழந்தையுடன் சோடா விற்கும் பையன் விளையாடுவதாக செல்லும் ஒரு அத்தியாயம் மிகவும் அருமையான ஒன்று. கரடு முரடாக செல்லும் கதையில் இனிமையான ஒரு அத்தியாயம்

தொடர்புடைய சுட்டிகள்:
பெருமாள் முருகனின் தளம்

இந்தியா டுடேயில் நாங்கள்

by

ஃபெப்ரவரி 29, 2012 தேதியிட்ட இந்தியா டுடேயில் சிலிகான் ஷெல்ஃபைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். செய்தியைப் பகிர்ந்துகொண்ட உப்பிலி ஸ்ரீனிவாசுக்கு மிக்க நன்றி!

அது என்ன “நேர்மறை அணுகுமுறை” என்று எனக்கு புரியவில்லை. ஒரு வேளை நேர்மையான அணுகுமுறை என்பதை அப்படி தப்பாக பிரின்ட் பண்ணிவிட்டார்களா?

யாரிடமாவது காப்பி இருந்தால் ஒண்ணு அனுப்புங்கப்பா/ம்மா!

எட்டயபுரத்துக்குப் போனவர்

by

எட்டயபுரத்தில் பாரதியாரின் நினைவு இல்லத்துக்குப் போன அனுபவத்தைப் பற்றி அடலேறு என்பவர் எழுதி இருக்கிறார். உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படும் பதிவு. சிறப்பான புகைப்படங்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சி. சுப்ரமணியத்தின் “திருப்புமுனை” – படிக்க விரும்பும் புத்தகம்

by

என்னை fascinate செய்யும் தலைவர்கள் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள்தான். சி. சுப்பிரமணியம் அவர்களில் ஒருவர். அவர் தன் சுயசரிதையை எழுதி இருக்கிறார் என்ற விஷயமே இந்தப் பதிவைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. திருப்புமுனை என்று பேராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் அதைப் பற்றி எழுதுங்களேன்!

புத்தகத்திலிருந்து சில பகுதிகளை இங்கே பதித்திருக்கிறார்கள் – பகுதி 1, பகுதி 2.

முல்லைப் பெரியார் பற்றி இத்தனை பிரச்சினை இருக்கும் இன்றைக்கு சி. சுப்பிரமணியம் பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்தை கேரளத்தின் ஒத்துழைப்பை திறமையாகப் பெற்று செயல்படுத்திய இந்த சம்பவம் “அந்தக் காலம் மாதிரி வருமா” என்று ஏங்க வைக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள்:
புத்தகத்திலிருந்து சில பகுதிகள் – பகுதி 1, பகுதி 2
முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமனைப் பற்றி சில பதிவுகள்
காமராஜைப் பற்றி சில பதிவுகள்

அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய “நான் கண்ட பெரியவர்கள்”

by

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கு முன்னால் நான் அ.ச.ஞா. என்ற பேரை மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். யார், எவர் என்று எந்த விவரமும் தெரியாது. ஏதோ கல்லூரிப் பேராசிரியராக இருக்கலாம், அவ்வப்போது காப்பியம், தேவாரம், திருவாசகம், கம்பன் என்று சொற்பொழிவு செய்வாராக்கும் என்று யூகித்திருப்பேன்.

இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் இதில் வ.உ.சி., திரு.வி.க. என்றெல்லாம் இருந்த பேர்கள்தான். என்னை fascinate செய்யும் தலைவர்கள் லிஸ்டில் இவர்கள் இருவரும் உண்டு. சரி என்னதான் எழுதி இருக்கிறார் என்று பார்க்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன்.

அ.ச.ஞா.வின் அப்பா சரவண முதலியார் சைவப் பாரம்பரியத்தில் வந்த தமிழறிஞர். சின்ன வயதிலேயே அ.ச.ஞா.வும் மேடைகளில் பேச ஆரம்பித்துவிட்டார். அப்படித்தான் வ.உ.சி.யை சந்தித்திருக்கிறார். பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிப்பு. படிக்கப் போனது இயற்பியல். சோமசுந்தர பாரதியார் சரவண முதலியார் பையனே தமிழ் படிக்கவில்லை என்றால் எப்படி என்று இவரைக் கட்டாயப்படுத்தி தமிழில் சேர்த்திருக்கிறார். இவர் வெறும் மாணவர் – ஆனால் இவர் கண்டிஷன் போட்டிருக்கிறார். ராகவையங்கார் பாடம் நடத்தினால் நான் தமிழில் சேர்கிறேன் என்று. அவரும் ஒத்துக் கொண்டு பாடம் எடுத்திருக்கிறார்! சரவண முதலியாரின் கீர்த்தி அப்படி! துணைவேந்தராக இருந்த வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரியார் இவருக்கு முழு சப்போர்ட். வேற்று ஜாதிப் பெண்ணைக் காதலித்து, அப்பாவை எதிர்த்து திருமணம். பிறகு திரு.வி.க.வுடன் நெருக்கம். பிள்ளைகள் இல்லாத திரு.வி.க. விருப்பப்படியே இவரும் மு.வ.வும் சேர்ந்துதான் கொள்ளியே போட்டிருக்கிறார்கள். தெ.பொ. மீனாட்சிசுந்தரம்தான் தமிழைப் பொறுத்த வரையில் தனக்கு குருநாதர் என்கிறார். பச்சையப்பா கல்லூரியில் பேராசிரியர், பிறகு வானொலி, பிறகு தமிழ்த்துறை என்று பதவிகள். சொற்பொழிவு, இலக்கிய விமர்சனம், சைவம் (வைணவமும் விலக்கு இல்லை) இவைதான் முக்கியமாக இருந்திருக்கிறது. மேல்மருவத்தூர் பங்காரு அடிகளுடன் நெருக்கம் இருந்திருக்கிறது.

என்னை மிகவும் கவர்ந்த பகுதி அவரது அண்ணாமலைப் பல்கலைகழக வாழ்க்கைதான். உண்மையிலேயே நல்ல மாணவன், புத்திசாலியான மாணவன் வேண்டுமென்று பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் அலைந்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கே உரிய வேகத்தோடு பரிமேலழகர் கண்றாவியாக உரை எழுதி இருக்கிறார் என்று ராகவையங்கார் முதன்முதலாக எடுத்த தமிழ் வகுப்பில் இவர் நீட்டி முழக்கி பேசி இருக்கிறார். ஐயங்காருக்கோ பரிமேலழகர் மேல் அபார மரியாதை. ஆனால் இவர் இப்படி எடுத்தெறிந்து பேசுவதைக் கேட்டு, புத்திசாலிப் பையன்தான், நான் பாடம் எடுக்க சம்மதிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். மாணவர் சபையின் தலைவராக இருந்தபோது துணைவேந்தர் சாஸ்திரியார் பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்துகொண்டு மற்ற மாணவர்களை அப்படி கேள் இப்படி கேள் என்று சொல்லிக் கொடுத்து குறும்பு செய்வாராம். ஒரு முறை இங்கே இரண்டு மின்விசிறி சுழலவில்லையே, தலைவர் கவனிக்க வேண்டாமா என்று ஒரு மாணவனைத் தூண்டிவிட்டு கேள்வி கேட்க செய்தாராம். அ.ச.ஞா.வின் பதில் – “இந்த அற்ப வேலைகளை கவனிப்பது இந்த மாபெரும் மன்றத் தலைவரின் பணியன்று. இதற்கெனவே பெருந்தொகையைச் சம்பளமாகக் கொடுத்து, துணைவேந்தர் என்ற பெயரையும் கொடுத்து ஒருவரை நியமித்துள்ளார்கள். அவருக்குத் தகவல் அனுப்பி இவற்றை கவனிக்குமாறு செய்கிறேன்.” இந்த நக்கல் பேச்சைக் கேட்டு எல்லாரையும் விட விழுந்து விழுந்து சிரித்தது சாஸ்திரியார்தானாம்.

சில பல அதிசயங்களை விவரித்திருக்கிறார். அதுவும் ஒரு இலங்கைச் சாமியார் இரண்டு இடங்களில் இருந்ததை தானே பார்த்ததாக எல்லாம் சொல்கிறார். நம்ப முடியாத சம்பவங்கள்தான், ஆனால் அவரது எழுத்து முறை இப்படியும் நடந்திருக்குமோ என்று யோசிக்க வைக்கிறது.

அ.ச.ஞா.வுக்கு கம்பன் – ஒரு புதிய பார்வை என்ற புத்தகத்துக்காக 1985-இல் சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. நிறைவாழ்வு வாழ்ந்திருக்கிறார். 1916-இல் பிறந்தவர் 85 வயதில் 2002-இல் இறந்திருக்கிறார். பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர், வானொலியில் பதவி, தமிழ்த்துறையில் பதவி வகித்திருக்கிறார்.

மின்னூல் எனக்கு ஓபன் ரீடிங் ரூம் தளத்தில் கிடைத்தது. ஓபன் ரீடிங் ரூமில் அவரது பல புத்தகங்கள் pdf வடிவில் கிடைக்கின்றன. தளத்தை நடத்தும் ரமேஷுக்கு வாழ்த்துக்கள்! நான் இன்னும் இரண்டு புத்தகத்தை படிக்க முயற்சி செய்தேன். தமிழ் நாடக வரலாறும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற புத்தகம் எனக்கு கொஞ்சம் போரடித்தது. சாகித்ய அகாடமி விருது பெற்ற கம்பன் – ஒரு புதிய பார்வை புத்தகத்தை என்னால் படிக்க முடியவே இல்லை. முதலில் கம்பனைப் படித்து பிடித்தால்தான் இந்த மாதிரி புத்தகங்களுக்குள் நுழைய முடியும்.

மிகவும் சுவாரசியமான memoirs. கட்டாயம் படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொடர்புடைய சுட்டிகள்:
நான் கண்ட பெரியவர்கள் மின்னூல்
விக்கி குறிப்பு
ஓபன் ரீடிங் ரூமில் அ.ச.ஞா. பக்கம்

மூன்று வருஷங்களுக்கு முன் – என் டாப் டென் தமிழ் நாவல்கள், தமிழ் எழுத்தாளர்கள்

by

மூன்று வருஷங்களுக்கு முன்னால் எழுதிய ஒரு பதிவு சமீபத்தில் கண்ணில் பட்டது. சுஜாதாவையும், பாலகுமாரனையும், கல்கியையும் அப்போது தி.ஜா.வுக்கும் அழகிரிசாமிக்கும் மேலாக மதிப்பிட்டிருந்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

கல்கியின் பேரைச் சொல்லப் போகும் ஒரே புத்தகம் பொன்னியின் செல்வன். அதுவும் இப்போது எனக்கு மூன்றாம் படியில் இருக்கும் இலக்கியமே. இதை எழுதும்போது எனக்கு எக்கச்சக்க நாஸ்டால்ஜியாவாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு இரண்டு மூன்று வார காலகட்டத்தில் பாலகுமாரனின் ஆறேழு சிறந்த புத்தகங்களைப் – பந்தயப்புறா, ஆனந்த வயல், கரையோர முதலைகள், மெர்க்குரிப் பூக்கள், இரும்புக் குதிரைகள், அகல்யா என்று சில – படித்த நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் எழுதப்பட்ட பதிவாக இருக்க வேண்டும். :-) இப்போது நன்றாகவே தெரிகிறது – பாலகுமாரன் அழகிரிசாமி, தி.ஜா. அருகே நிற்கக் கூட முடியாது.

சுஜாதா நிற்கலாம். :-) இந்த லிஸ்டைப் போடும்போது சுஜாதா சொதப்பிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை – இல்லை, இதை வேறு மாதிரி சொல்ல வேண்டும். வாரப் பத்திரிகை எழுத்துகளில் சுஜாதாவின் தரம் மிகவும் உயர்ந்தது, அதனால் அவரது குறைகள் ரெஜிஸ்டர் ஆகவே இல்லை. மீண்டும் அவர் புத்தகங்களை புரட்டும்போதுதான் குற்றம் குறை எல்லாம் தெரிகிறது. சில சமயம் எழுத்தின் தரம் மட்டும் இல்லை, அதன் தாக்கமும் இந்த மாதிரி லிஸ்ட்களில் இடம் பெற ஒரு முக்கியமான காரணி. அப்படித்தான் சுஜாதா has sneaked in. இன்றும் டாப் டென் என்று ஒரு லிஸ்ட் போட்டால் சுஜாதா எப்படியாவது முண்டியடித்து உள்ளே வந்துவிடுவார் என்று நினைக்கிறேன்.

மேலும் இந்தப் பதிவை எழுதும்போது நான் காடு, வாசவேஸ்வரம், ஆழிசூழ் உலகு, பொய்த்தேவு மாதிரி பல புத்தகங்களைப் படிக்கவில்லை. இன்று டாப் டென் நிறைய மாறி இருக்கும். இன்றளவு படிக்காதபோதே பத்துக்குள் அடக்கமுடியவில்லை என்றால் இன்று மிகவும் கஷ்டம், அதனால் நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை.

ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. என் ரசனை கொஞ்சம் முன்னேறி, சரி வேண்டாம் மாறி இருப்பதற்கு ஜெயமோகனின் பழக்கம், பரிந்துரைகள், அவர் இங்கு வந்தபோது பரிச்சயமான நண்பர்கள் ஒரு முக்கிய காரணம். அவரது பரிந்துரைகள், விளக்கங்கள் பல புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்தன (ஆழிசூழ் உலகு…), சில புத்தகங்களை மீண்டும் படிக்க வைத்தன (பதினெட்டாம் அட்சக் கோடு…) அவருக்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்வதில் அர்த்தமில்லை; இருந்தாலும் நன்றி!

Curiosity value-வுக்காக மீள்பதித்திருக்கிறேன்.

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

 1. பின் தொடரும் நிழலின் குரல்
 2. விஷ்ணுபுரம்
 3. பொன்னியின் செல்வன்
 4. என் பெயர் ராமசேஷன்
 5. கரைந்த நிழல்கள்
 6. சாயாவனம்
 7. கோபல்ல கிராமம்
 8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
 9. வெக்கை
 10. ஜேஜே சில குறிப்புகள்
 11. மோகமுள்

 
எனக்குப் பிடித்த டாப் டென் ஆசிரியர்கள்: (வரிசைப்படி அல்ல)

 1. ஜெயமோகன்
 2. சுந்தர ராமசாமி
 3. புதுமைப்பித்தன்
 4. அசோகமித்ரன்
 5. கல்கி
 6. சுஜாதா
 7. பாலகுமாரன்
 8. தி. ஜானகிராமன்
 9. கி. ராஜநாராயணன்
 10. கு. அழகிரிசாமி
 11. பூமணி
 12. சா. கந்தசாமி

எண்ணத் தெரியாத குறையால் இது டாப் ட்வெல்வ் ஆகிவிட்டது. :-) ரொம்ப யோசித்து கு. அழகிரிசாமியையும், தி. ஜானகிராமனையும் கழித்துக் கொள்கிறேன்.

ஜெயகாந்தனை இந்த லிஸ்டில் புகுத்த முடியாமல் போனது கொஞ்சம் வருத்தம்தான்.

நா.பா.வின் “பொன்விலங்கு”

by

பி.ஜி. வுட்ஹவுஸ் ஒரு புத்தக முன்னுரையில் விமர்சகர்கள் தான் போன நாவலில் அதே பாத்திரங்களுக்கு பேரை மட்டும் மாற்றி மீண்டும் அரைத்த மாவையே அரைத்திருப்பதாக விமர்சித்ததாகவும், அந்த விமர்சனத்தைத் தான் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த முறை அதே பாத்திரங்களை பேரைக் கூட மாற்றாமல் அரைத்த மாவை அரைத்திருப்பவதாகவும் எழுதி இருப்பார். நா.பா.வின் புத்தகங்களும் அப்படித்தான். அதே பாத்திரங்கள் அதே சூழல்களில் மீண்டும் மீண்டும் வேறு வேறு பேர்களில் வருகிறார்கள். பொன் விலங்கின் சத்தியமூர்த்தி, பாரதி, மோகினி, குமரப்பன், கண்ணாயிரம், பூபதி, கல்லூரி முதல்வர் எல்லாரும் குறிஞ்சி மலரிலும், மூலக்கனலிலும் சமுதாய வீதியிலும் வந்தவர்கள்தான். இன்றைக்கு எதைக் கண்டு பொங்கலாம், சமுதாயத்தின் குறைகளைச் சாடலாம் என்று சிந்திப்பவர்கள்தான்.

பொன்விலங்கு 700 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைச்சுருக்கத்துக்கு 7 வரி கூட தேவைப்படாது. வழக்கம் போல சமுதாயச் சிறுமைகளைக் கொண்டு பொங்கிக் கொண்டே இருக்கும் ஹீரோ சத்தியமூர்த்தி, அவனைக் கூட இல்லை, அவன் பாதங்களைப் பார்த்ததும் காதல்வசப்படும் பாரதி, அவனால் தற்கொலை செய்து கொள்வதிலிருந்து காப்பாற்றப்பட்டு பின்னர் அவனைக் காதலிக்கும், அவன் காதலிக்கும் தாசி குலப் பெண் ஆட்டக்காரி மோகினி, கொஞ்சம் ஈகோ உள்ள, ஆனால் திறமையாளர்களைத் தேடிப் பிடித்து தன் கல்லூரியில் வேலை தரும் பணக்காரர் பூபதி, காதலுக்கு எதிரியாக வரும் ஜமீந்தார், கல்லூரி மாணவர்களிடையே அவன் பாப்புலாரிடியைக் கண்டு அசூயைப்படும் கல்லூரி பிரின்சிபால் என்று சொன்னாலே கதை எப்படிப் போகும் என்று யூகித்துக் கொள்ளலாம். ஜமீந்தார், மற்றும் அவரது மதியூக மந்திரி கண்ணாயிரம் சூழ்ச்சியால் சத்தியமூர்த்தி மோகினி மேல் சந்தேகப்படுகிறான், மோகினி தற்கொலை, சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் போவதோடு கதை முடிந்துவிடுகிறது.

கதை எழுதப்பட்ட காலத்தில் நாடு சுதந்திரம் பெற்றவுடன் தேனும் பாலும் பெருக்கெடுத்து ஓடும் என்ற கனவுகள் கலையத் தொடங்கிவிட்டன. அப்போது இப்படிப்பட்ட லட்சியவாத வெளிப்படுத்துதல் செயற்கையாக இருந்தாலும் அது அந்தப் பொற்காலம் போச்சே என்று புலம்புபவர்களிடம், லட்சியவாதம் உள்ள இளைஞர்களிடம் நல்ல தாக்கத்தை உண்டு பண்ணி இருக்கும். இன்றைக்கும் நா.பா.வை படிக்கச் சொல்பவர்களுக்கு ஒரு நாற்பது வயதாவது இருக்கும். ஐமபது வயதுக்காரரான ஜெயமோகன் இதை சிறந்த வணிக நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார். :-)

ஜெயமோகன் சிபாரிசு செய்த நா.பா. நாவல்கள் எல்லாவற்றையும் பற்றி எழுதிவிட்டேன். (ராணி மங்கம்மாள், மணிபல்லவம், சமுதாய வீதி, குறிஞ்சி மலர், பொன்விலங்கு) இதற்கு மேல் நான் படிக்க விரும்புவது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது அதற்கு எழுந்த எதிர்ப்பைப் பின்புலமாக வைத்து அவர் எழுதிய ஒரு நாவலும் (என்ன பேர் என்று யாருக்காவது நினைவு வருகிறதா? ஹீரோயின் பேர் கண்ணுக்கினியாள், ஒரு சைக்கிள் கடை அண்ணாச்சி முக்கிய பாத்திரம்), மூவரை வென்றான் என்ற சிறுகதைத் தொகுப்பும் மட்டுமே. சிறு வயதில் இவை இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன.

நா.பா. பெரிய கனவுகள் கண்டு அதில் ஒரு சிறு பகுதியைக் கூட செயல்படுத்த முடியாமல் போனவர். மணிபல்லவம் போன்ற பெரிய கனவுகளுக்காக அவரைப் பாராட்டினாலும் ஒரு எழுத்தாளராக அவரை நிராகரிக்கத்தான் வேண்டி இருக்கிறது. அவரது சிறந்த நாவலாக நான் கருதுவது ராணி மங்கம்மாளைத்தான். ஆனால் குறிஞ்சிமலர்தான் மிகவும் பாப்புலரான நாவலாக இருக்க வேண்டும்.

நா.பா.வின் உணர்ச்சிகள் உண்மையானவை. அவரிடம் எந்த போலித்தனமும் இல்லை. அவர் உண்மையிலேயே லட்சியவாதத்தில் நம்பிக்கை உள்ளவர். ஆனால் அவர் படைப்புலகம் எதிர்பார்த்தபடியே நடக்கும் ஃபார்முலா பாத்திரங்களால் நிறைந்தது. செயற்கையான சம்பவங்கள், பாய்ஸ் கம்பெனி நாடகம் போன்ற கதைப்பின்னல் ஆகியவற்றை அவரால் தாண்ட முடியாதது துரதிருஷ்டமே.

தொடர்புடைய சுட்டிகள்:
சென்னை லைப்ரரி தளத்தில் நா.பா.வின் நூல்கள்
ராணி மங்கம்மாள்
மணிபல்லவம்
சமுதாய வீதி
குறிஞ்சி மலர்

சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் அல்லது துரோணரும் அர்ஜுனனும்

by

ஜேஜே சில குறிப்புகள் படித்தபோது எனக்கு ஒரு 25 வயது இருக்கலாம். என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். எங்கே நிஜம் முடிகிறது, கற்பனை ஆரம்பிக்கிறது என்று கூட சொல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு சுந்தர ராமசாமி என்று தேடிப் பிடித்து படித்தேன். புளியமரத்தின் கதை அற்புதமாக இருந்தது. பல சிறுகதைகள் – கோவில் காளையும் உழவு மாடும், புகழ் பெற்ற ரத்னாபாயின் ஆங்கிலம், புகழ் பெறாத சீதை மார்க் சீயக்காய்த் தூள், எனக்கு மிகவும் பிடித்த சிறுகதையான விகாசம், சிரிக்காமல் படிக்க முடியாத பிரசாதம் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கிறது.

ஆனால் எனக்கு பிடித்த நாவல் ஜேஜேதான். அது ஒரு tour de force. அதே நேரத்தில் இதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். நான் சாதாரணமாக புத்தகங்களை நாலைந்து முறை படிக்கும் வழக்கும் உடையவன். சு.ரா.வின் சிறுகதைகளை மட்டுமே நான் மீண்டும் மீண்டும் படித்திருக்கிறேன். இன்று மீண்டும் அவரது நாவல்களை படித்தால் என் மதிப்பீடு மாறலாம்.

மூன்று தமிழ் எழுத்தாளர்களை நான் ஜீனியஸ் என்று கருதுகிறேன். ஜெயமோகன் காலத்தால் மூன்றாமவர். அவருக்கும் மேலிருக்கும் ஒரே தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்தான் என்பது என் எண்ணம். விஷ்ணுபுரம், ஏழாம் உலகம், பின் தொடரும் நிழலின் குரல், காடு ஆகியவை என்றும் நிற்கும் நாவல்கள். சிறுகதைகளிலும் நிறைய தேறும். இலக்கிய, பண்பாட்டு, அரசியல் விமர்சனக் கட்டுரைகளில் அவரது வீச்சு அகலமானது. ஆழமும் அதிகம்தான், ஆனால் ஆழத்தைப் பற்றிய மதிப்பீடு எதிர்காலத்தில் மாறலாம். (ஒரு காலத்தில் சுஜாதாவின் கட்டுரைகள் மிக ஆழமானவை என்று நினைத்திருந்தேன், இன்று இல்லை.)

சு.ரா.வை ஜெயமோகனின் ஒரு குரு என்று சொல்லலாம். அவரோடு பேசிப் பேசி விவாதித்து கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இதை ஜெயமோகனே சொல்லி இருக்கிறார். ஆனால் சு.ரா.விடம் அவருக்கு சில கசப்புகளும் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிந்தது. அவருடைய கருத்துப்படி அவர் குருவை மிஞ்சிவிட்ட சிஷ்யர். என் கருத்தும் அதுதான். துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் உள்ள உறவுதான் நினைவு வருகிறது.

சு.ரா. இறந்ததும் ஜெயமோகன் தன் சு.ரா. நினைவுகளை ராப்பகலாக உட்கார்ந்து எழுதி இருக்கிறார். அது நினைவின் நதியில் என்று புத்தகமாக வந்திருக்கிறது. நண்பர் ராஜன் வீட்டில் பார்த்தேன். எல்லாரும் என்னை சுற்றி பேசிக் கொண்டிருந்தபோது நான் மானர்ஸ் இல்லாமல் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். வீட்டுக்கு கொண்டு வந்து படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை.

சுருக்கமாக: இளமை, அனுபவம் இன்மை, இயல்பு, சொந்த வாழக்கையில் கடுமையான பாதிப்புகள், முதிர்வின்மை(immaturity), ஈகோ எல்லாம் சேர்ந்து ஜெயமோகனை ஒரு வழி செய்து கொண்டிருந்த நேரம். ஜேஜே சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா.விடம் போய் சேர்ந்திருக்கிறார். சு.ரா.விடம் எதிர்வாதம் செய்தே வளர்ந்திருக்கிறார். ஒரு கால கட்டத்தில் சு.ரா.வின் நவீனத்துவம் இவருக்கு போதவில்லை. குருவை மிஞ்சும் படைப்புகள் – விஷ்ணுபுரம் – வர ஆரம்பித்திருக்கிறது. குருவுக்கு ஈகோ, தன் புகழ் நிற்க வேண்டும் என்ற எண்ணம், குடும்ப பாசம், எந்த நெருங்கிய உறவிலும் வரும் சில பிரச்சினைகள் – இருவருக்கும் நடுவில் பிரிவு.

ஜெயமோகனின் கண்ணில் நவீனத்துவத்தின் உச்சம் ஜேஜே சில குறிப்புகள்தான். (என் கண்ணில் அசோகமித்ரனேகரைந்த நிழல்கள், பல சிறுகதைகள், மானசரோவர், தண்ணீர்….) சு.ரா. தன் வார்த்தைகளை கச்சிதமாக செதுக்க வேண்டும் என்ற ஆசையில் தன் படைப்பூக்கத்தை இறுகப் பிடித்திருந்தார் என்றும் அப்படிப் பிடிக்கவில்லை என்றால் அவர் இன்னும் பெரிய படைப்பாளியாக உயர்ந்திருப்பார் என்றும் கருதுகிறார். சு.ரா. தன் குருநாதரான க.நா.சு.வை விஞ்சினார் என்றும் தான் சு.ரா.வை விஞ்சிவிட்டோம் என்றும் நினைக்கிறார். நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

சு.ரா.விடம் ஈகோ உண்டு என்றும் ஒரு படைப்பாளி சு.ரா.வை தாண்டாத வரை அவருக்கு பிரச்சினை இல்லை என்றும் அப்படி தாண்டிவிட்டால் அவரது படைப்புகளை பற்றி நல்ல வார்த்தை சொல்லமாட்டார், சமயத்தில் கொஞ்சம் அமுக்கப் பார்ப்பார் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அப்படி இருந்தால் ஆச்சரியம் இல்லை. சு.ரா. என்ன தெய்வமா? மனிதர்தானே? சு.ரா.வை அப்படி எத்தனை பேர் தாண்டிவிட்டார்கள்? ஜெயகாந்தனுக்கு கிடைத்த பிரபலம் மீது அவருக்கு கொஞ்சம் மனத்தாங்கல் உண்டு, ஆனால் ஜெயகாந்தனை மிகவும் மதித்தார் என்றும், அசோகமித்ரனுக்கும் அவருக்கும் வெளியில் அறிவிக்கப்படாத பனிப்போர் உண்டு என்றும் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகனுக்கும் தன் எழுத்து பற்றி ஈகோ – சரி பெருமிதம் – உண்டு என்பதை பதிவு செய்கிறேன்.

சு.ரா.வை பற்றி அவர் தரும் ஒரு படிமம் நன்றாக இருந்தது – பட்டுத் துணியில் சுற்றப்பட்ட இரும்புத் தடி. கொஞ்சம் மேட்டிமைத்தனம், மனிதர்களை எடை போடும் திறமை, இளைஞர்களை, ஒரு பட்டாளத்தையே விருந்தோம்பி கட்டி மேய்த்து அவர்களை அடுத்த படி ஏற வைக்கும் திறமைசாலி. Gentleman with a bit of ego என்ற படிமத்தை உண்டாக்குகிறார்.

சுத்த வெஜிடேரியன் ஆன சு.ரா. மீன் சாப்பிட்ட நிகழ்ச்சியை ஜெயமோகன் ஒரு பதிவில் எழுதி இருக்கிறார் – A true gentleman.

ஜெயமோகன் இந்த புத்தகம் எழுதும்போது நெகிழ்ந்த மன நிலையில் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். (சு.ரா. மறைந்த ஓரிரு வாரங்களில் எழுதப்பட்ட புத்தகம்) என் அப்பாவின் குறைகள் எனக்கு தெரியும். ஆனாலும் அவர் மீது எனக்கு உயிர்தான். அதே போன்ற ஒரு உணர்வை சு.ரா. மீது அவர் வைத்திருப்பது தெரிகிறது.

எனக்கு இசைவில்லாத விஷயங்கள் சில: ஜெயமோகன் கருத்தில் ஒரு படைப்பு ஒரு தரிசனத்தை காட்டும்போது மட்டுமே உச்சத்தை அடைகிறது. தரிசனமே இல்லை என்று சொல்லும் படைப்புகளும் உச்சத்தை அடையலாம். ஜே ஜே அப்படிப்பட்ட ஒரு படைப்புதான். மாக்பெத் மாதிரி நாடகங்கள் மட்டுமே உச்சத்தை அடையலாம், ஆனால் சீசர் அண்ட் கிளியோபாட்ரா மாதிரி நாடகங்கள் அடைய முடியாது என்று சொல்வது எனக்கு இசைவில்லை. விஷ்ணுபுரம் எனக்கு மனித உணர்ச்சிகளை வேறு ஒரு மாபெரும் தளத்தில் காட்டுகிறது. நயாகரா போன்ற பிரமாண்டம். அதற்காக பத்து நொடியில் உடையும் சோப்பு குமிழிகளின் நிறங்களில் எனக்கு நிறைவு ஏற்பட முடியாதா? சு.ரா.வின் படைப்புகள் எனக்கு ப்ரூகலின் ஓவியங்களை நினைவுபடுத்துகின்றன. விஷ்ணுபுரம் குயர்னிகா ஓவியத்தை நினைவுபத்துகிறது. இரண்டும் கலையின் உச்சங்கள்தான். என்ன, எனக்கு குயர்னிகாவை விட விவசாயியின் திருமண விருந்து ஓவியம் பிடித்திருக்கிறது. ஆனால் ஜேஜேவை விட விஷ்ணுபுரம் பிடித்திருக்கிறது.

அப்புறம் கட்டுரைகள் எழுதும்போது யாராலும் மறுக்க முடியாத விஷயங்களையே எழுதுகிறார், அதனால் அதில் சாரம் இருப்பதில்லை என்றும் ந. பிச்சமூர்த்தி பற்றி ஒரு bland கட்டுரை எழுதினர் என்றும் ஜெயமோகன் சொல்கிறார். அவரது நினைவோடை சீரிஸ் புத்தகங்கள் அப்படி இல்லை – குறிப்பாக ஜீவா பற்றிய புத்தகம் ஒரு கிளாசிக்.

சு.ரா. மாதிரி ஒரு பெரிய எழுத்தாளரை பற்றிய முக்கியமான ஆவணம் இது. அது மட்டும் இல்லை, ஜெயமோகனைப் பற்றிய முக்கியமான ஆவணமும் கூட. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

பிற்சேர்க்கை: நான் இந்தப் பதிவை எழுதி பல மாதங்கள் ஆயிற்று. ஜெயமோகனை சந்தித்த புதிது. எப்படி சார் இருக்கிறது என்று அவரிடம் கேட்டேன். அவர் சகிக்கவில்லை என்பதை மிக நாகரீகமாகச் சொன்னார். தூக்கி பரணில் போட்டுவிட்டேன். பழைய draft மீண்டும் கண்ணில் பட்டபோது நாகரீகத்துக்கும் இங்கிதத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று பதித்துவிட்டேன்.

தொடர்புடைய பதிவுகள்:
சுந்தர ராமசாமி மீன் சாப்பிட்ட இரவு
ஒரு புளிய மரத்தின் கதை – பக்சின் விமர்சனம்
நினைவோடை – ஜீவா

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் – ராஜன் கொலை வழக்கு

by


இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியின் மோசமான விளைவுகள் தென்னிந்தியாவில் அதிகமாக உணரப்படவில்லை. இந்திரா தேர்தலில் தோற்றதும்தான் விஷயம் எல்லாம் வெளியே வர ஆரம்பித்தது. அப்படி வந்தவற்றில் முக்கியமானது ராஜன் கொலை வழக்கு.

ராஜன் கேரள மாணவன். கம்யூனிஸ்ட் அனுதாபி. போலீஸ் ஸ்டேஷன் மேல் தாக்குதலில் ராஜன் என்ற பேருடைய ஒருவன் ஈடுபட்டான் என்று யாரோ இன்ஃபார்மர் போலீசுக்கு செய்தி கொடுத்தாற்போலத் தெரிகிறது. ஹாஸ்டலுக்கு வந்து வேறு கல்லூரி கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பி வந்து ஹாஸ்டல் வாசலில் இறங்கிய ராஜனைத் தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். சித்திரவதை முகாமுக்குள் கொண்டு போகப்பட்ட ராஜனை அவன் நண்பர்கள், குடும்பத்தினர் யாரும் அதற்கப்புறம் பார்க்கவே இல்லை. ராஜன் கைதுக்கு ரெகார்டுகளே இல்லை போலத் தெரிகிறது.

ராஜனின் அப்பா ஈச்சர வாரியர் சாதாரணர் இல்லை. அன்றைய முதல்வராக இருந்த அச்சுத மேனன் போலீசிடமிருந்து தப்பி ஒளிந்து கொண்டிருந்த காலத்தில் இவர், இவர் குடும்பத்தினர் அவரை பல நாட்கள் ஒளித்து வைத்திருந்திருக்கிறார்கள். வாரியர் இன்னொரு கல்லூரியில் பேராசிரியர். அன்றைக்கு எம்.பி., அமைச்சர் லெவலில் இருந்த பலரை அவருக்கே நேரடியாகத் தெரியும். வயலார் ரவி போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாம். அன்றைய உள்துறை அமைச்சர் கருணாகரனின் நெருங்கிய நண்பர்களுக்கு இவர் நெருங்கிய நண்பர். நெருக்கடி நிலை காலம் முழுதும் மனு மேல் மனு கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கருணாகரன், அச்சுத மேனன் போன்றவர்கள் தன் உயிரை வாங்கும் எதிரியாக இவரைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நெருக்கடி நிலை முடிந்ததும் கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் போடப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வராகிவிட்டிருந்த கருணாகரன் தனக்கு இப்படி ஒரு கைது நடந்ததே தெரியாது என்று சொல்லி இருக்கிறார். அது பொய் சாட்சி என்று தீர்ப்பாகி அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. கைது செய்த ஜெயராம் படிக்கல் போன்றவர்களுக்கு முதலில் தண்டனை கிடைத்தாலும் (ஜஸ்ட் ஒரு வருஷம் சிறைத் தண்டனை) அது பின்னால் தள்ளுபடி ஆகிவிட்டிருக்கிறது. பின்னால் கருணாகரன் பல முறை முதல்வராகி சவுக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்.

தன் நினைவுகளை ஈச்சர வாரியர் எழுதி இருக்கிறார், குளச்சல் மு. யூசுஃப் மொழிபெயர்ப்பு. படைப்பு என்ற விதத்தில் ஒன்றும் பிரமாதம் இல்லை. ஆனால் உண்மை சம்பவத்தின் குரூரம் முகத்தில் அறைகிறது. இவ்வளவு தொடர்புகள் உள்ள ஒரு பெரிய மனிதருக்கே இந்த கதி என்றால் அரசு எந்திரம் ஒரு சாதாரணனுக்கு எதிராக செயல்பட்டால் என்னாகும் என்ற எண்ணம் முதுகெலும்பை உறைய வைக்கிறது.

புலிநகக் கொன்றை நாவலில் இப்படி ஒரு தவறான கைது, சித்திரவதை, மரணம் என்ற காட்சி வந்தபோது இந்த சம்பவத்தைத்தான் நினைத்துக் கொண்டேன். பி.ஏ. கிருஷ்ணனே ராஜன் படுகொலையை வைத்துத்தான் நம்பியின் மரணத்தை எழுதியதாக உறுதிப்படுத்துகிறார்.

தமிழ்நாட்டிலும் ஒரு ராஜன் உண்டு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்குவதை எதிர்த்துப் போராடிய உதயகுமார் என்ற மாணவன் “மர்மமான” முறையில் இறந்து போனான். (பேர் என்ன உதயகுமாரா?) இறப்பில் எந்த மர்மமும் கிடையாது, ஆனால் அப்படித்தான் அதிகாரபூர்வமான தகவல். அதைப் பின்புலமாக வைத்து நா.பா. ஒரு நாவல் கூட எழுதி இருக்கிறார்.

நண்பர் ரமணன் இந்த நாவலை எழுதியதால்தான் நா.பா.வுக்கு பி.ஹெச்டி ஆய்வு மூலம் டாக்டர் படம் கிடைப்பது தாமதம் ஆயிற்று என்று சொல்கிறார். நா.பா.வுக்கு அவர் இறந்த பிறகுதான் டாக்டர் பட்டம் கிடைத்ததாம். ஆனால் தி.மு.க.வும் கருணாநிதியும் ஆட்சியை விட்டு இறங்கிய பிறகு அவர் ஒரு ஏழெட்டு வருஷமாவது உயிரோடு இருந்தார், அதனால் இது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

தோழி அருணா எழுதுகிறார்:

எளிமையாக ஆனால் மிக உணர்வுபூர்வமாக ஒரு தந்தையால் எழுத பட்டிருக்கிறது. எங்கிருந்து கண்டு பிடித்தீர்கள்? அவர் தினமும் காணாமல் போன மகனுக்காக எடுத்து வைக்கும் சோறும், இலையும் என்னவோ பண்ணுகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய ஷாஜி கருணின் முதல் படமான பிறவி என்ற ஒரு மிக அருமையான படம் பார்த்திருக்கிறேன். அர்ச்சனா அக்காவாகவும் ப்ரேம்ஜி என்பவர் வயதான அப்பாவாகவும் மிக சிறப்பாக நடித்திருப்பார்கள். 1989 ல் இப்படத்திற்காக ப்ரேம்ஜிக்கு தேசிய விருது கிடைத்தது என விக்கி சொல்கிறது.

இந்த வழக்கில் Habeas Corpus போட்ட எஸ். ஈஸ்வர ஐயர் என் பெரியப்பாவின் அண்ணா. அவர்களின் கூட்டு குடும்ப வீட்டில் வஞ்சியூரில் என் 1 1/2 வயதில் இருந்து 6 வயது வரை நான் வளர்ந்தேன்!

ஜெயமோகன் இந்த சோக சம்பவத்தைப் பற்றி ஒரு சிறப்பான பதிவு எழுதி இருக்கிறார். அவரது பதிவிலிருந்து சில பல பகுதிகள்:

கேரள அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த நிகழ்ச்சி இது. கொல்லப்பட்ட இளைஞரின் தந்தையின் பிடிவாதமான நீதி தேடல் இப்போது ஒரு சமகாலத் தொன்ம அந்தஸ்தை அடைந்துள்ளது.

ராஜன் ஓர் இடதுசாரித் தீவிரவாதக் குழுவில் இருந்தார். இடதுசாரிகளை ஒடுக்கும்படி அரசு ஆணையிட்டதற்கேற்ப போலீஸார் இளைஞர்களைப் பிடித்து வதைத்துத் தகவல்களைக் கறந்தனர். அதில் ராஜன் மரணமடைந்தார். அவரது தந்தை தன் மகனின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசையும் நீதிமன்றத்தையும் நாடினார். ஆனால் எந்தப் பயனும் விளையவில்லை.

ஏனென்றால் ராஜன் கொல்லப்பட்டது அரசின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக. எல்லா அரசுகளும் அடக்குமுறை மேல்தான் அமர்ந்திருக்கின்றன. அடக்குமுறையின் அளவும் அதற்கான மீளும் வழிகளும்தான் அரசுக்கு அரசு வேறுபடும். இந்திய அரசியலமைப்பில் உள்ள மீளும் வழிகள் எல்லாம் அடைபட்ட காலகட்டம் நெருக்கடி நிலைக்காலம்.

ராஜன் கொல்லப்பட்ட காலகட்டத்தில் வங்கத்திலும் பீகாரிலுமாகக் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களைக் கொன்று அழித்தது இந்திய அரசு. அவர்களில் முக்கால்வாசிப்பேர் நிரபராதிகளாகவே இருப்பார்கள். எவருக்கும் நியாயம் வழங்கப்பட்டதில்லை. அரசைப் பொறுத்தவரை ராஜன் அவர்களில் ஒருவர்.

கொடுமைதான், ஆனால் உலகின் எந்த அரசும் இதை விட மேலானதல்ல என்பதும் உண்மை. சொந்த மக்களைக் கொன்று குவிக்காத அரசுகளே இல்லை. குறைவாகக் கொல்வது நல்ல அரசு, அவ்வளவுதான். இன்று பயங்கரவாத எதிர்ப்பின் ஒரு பகுதியாக இந்த அடக்குமுறை உலகநாடுகளெங்கும் இன்னும் அதிகரித்துள்ளது.

ராஜன் கொலையை வைத்து ஷாஜி என். கருண் இயக்கிய பிறவி என்ற திரைப்படம் வெளிவந்தது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற கலைப்படம் அது. ஈச்சர வாரியராக நடித்த பிரேம்ஜி சிறந்த நடிப்புக்கான தேசிய விருது பெற்றார்.

ராஜனைக் கொலை செய்ய ஆணையிட்டவராகக் கருதப்பட்ட காவல் அதிகாரி ஜெயராம் படிக்கல் பொதுச்சமூகத்தின் புறக்கணிப்புக்கும் கசப்புக்கும் ஆளானார். அவரது வாழ்க்கையை மையமாக்கி ‘ஆவநாழி’ என்ற படம் வெளிவந்தது. டி. தாமோதரன் எழுத ஐ.வி. சசி இயக்கிய படம். ஜெயராம் படிக்கலாக [இன்ஸ்பெக்டர் பல்ராம்] மம்மூட்டி நடித்திருந்தார். அது பெரும் வெற்றி பெற்று ஜெயராம் படிக்கலுக்கு மீண்டும் ஒரு சமூக இடத்தைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழில் (சத்யராஜ் நடித்து) “கடமை கண்ணியம் கட்டுப்பாடு” என மறு ஆக்கம் செய்யப்பட்டது.

ராஜனைக் கொலைசெய்தவர் என நம்பப்பட்ட காவலர் புலிக்கோடன் நாராயணன் சமூகப்புறக்கணிப்பால் மன உளைச்சல் அடைந்து குடிநோயாளியாக ஆனார். அவருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு கிடைத்தாலும் அவரது குடும்பம் புறக்கணிப்பின் நிழலிலேயே இருந்தது. தன் செயலைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டே இருந்தார்.

ஜெயராம் படிக்கல் வாழ்நாள் இறுதியில் ஆன்மீகச் சொற்பொழிவாளராக உருவானார். ஆனாலும் கடைசிவரை அவரை அந்த நிழல் துரத்தியபடியேதான் இருந்தது.

ஆனால் அரசியல்வாதிகள் தப்பித்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் அதிக நாள் இந்தக் குற்றத்தின் சுமையை தாங்க நேரவில்லை. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியை சேர்ந்த முதல்வரான சி. அச்சுத மேனன் கொஞ்சம் கூடக் குற்றம் சாட்டப்படவில்லை.

ஏனென்றால் மக்களுக்கு ஒன்று தெரியும். இந்த அரச வன்முறை மக்களின் மௌன ஆதரவுடன்தான் நிகழ்கிறது. நக்சலைட்டுகள் வேட்டையாடப்பட்டபின் கேரளத்தில் காங்கிரஸ்தான் வென்று அரசமைத்தது. ஆகவே தங்கள் மௌன ஆணையைச் செயல்படுத்தும் அரசியல்வாதிகளைத் தங்கள் பிரதிவடிவங்களாகவே மக்கள் நினைத்தார்கள்

மக்களின் கோபம் ஏன் போலீஸ்காரர்கள் மேல் வந்தது என்றால் அவர்கள் செய்ததை மக்கள் தனிப்பட்ட பாவச் செயலாக எடுத்துக் கொண்டார்கள். கே. கருணாகரன் பொதுவான ஒரு கொள்கை முடிவை எடுத்தார், ஆகவே அவர் குற்றவாளி அல்ல. ஆனால் புலிக்கோடன் அவரது கையாலேயே ராஜனைக் கொன்றார். ஆகவே அவர் பாவி.

இந்த முரண்பாட்டை விரிவாகவே யோசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு தீவிரமான புனைகதை வழியாகவே இந்த நுட்பமான மன நாடகத்தைத் தொட்டு விளக்க முடியும்.

நெருக்கடி நிலைக்கால அரசியல் படுகொலைகளில் ராஜன் கொலை மட்டுமே இன்றும் சமூக மனசாட்சியை உலுக்குவதாக, அடிப்படை அறக் கேள்விகளை கேட்கச் செய்வதாக உள்ளது. அதற்குப் பின்னர் கேரள காவல்துறை அரசியல் கைதிகளைக் கையாளும் விதம் முழுமையாகவே மாறியது. எளிதில் தப்பிவிட முடியாதென்ற அச்சம் அவர்களிடம் உருவாகியது. இப்போது தெருப்படுகொலைகள் செய்த மார்க்ஸிய-ஆர்.எஸ்.எஸ். அரசியல் தொண்டர்கள் கூடக் காவலர்களால் மிக மரியாதையுடன் கையாளப்படுகிறார்கள். ராஜன் கொலையின் ஒட்டுமொத்த சாதக விளைவு அது எனலாம்.

அதைச் சாதித்தது ராஜனின் தந்தை ஈச்சர வாரியர் மொழியைக் கையாளத் தெரிந்தவராக, இலக்கியமறிந்த பேராசிரியராக இருந்தார் என்பது மட்டுமே.

தொடர்புடைய சுட்டிகள்:
ஆங்கிலத்தில் மின்னூல்
ராஜன் கொலை வழக்கு பற்றி விக்கியில்
ஜெயமோகன் பதிவு

Developer Resources

Create cool applications that integrate with WordPress.com

butterfliesinspacetime

Just another WordPress.com weblog

யுவகிருஷ்ணா

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

பாலகுமாரன் பேசுகிறார்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

முரளிகண்ணன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

நந்தவனம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழ் பேப்பர்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

தமிழிலே எழுதுவோம்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கண்ணோட்டம்- KANNOTTAM

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

கணிதம்

ஜாலியாக...

கடுகு தாளிப்பு

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

எழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

என் ஜன்னலுக்கு வெளியே...

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

உங்கள் ரசிகன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

அன்புடன்

புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்

%d bloggers like this: